சௌந்தர்யலஹரீ – 2

Standard

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹப*வம்

விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்

வஹத்யேனம் சௌரி: கத*மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்

ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப*ஜதி ப*ஸிதோத்தூ*லன விதி*ம்

பாடல் – 2

உன் தாமரை இணையடிக் கீழிருந்து மென்பொடி சேர்த்தெடுத்து

இவ்வுலகெலாம் படைக்கிறான் பிரம்மன்

அவை தம்மில் கலந்து குழம்பிவிடாமல் 

அனந்தனின் ஆயிரம் தலைகொண்டு காக்கிறான் விஷ்ணு

அப்பொடியை மேலும் நுண்ணிதாக்கி

உடலெங்கும் பூசி அணிசெய்துகொண்டு 

ஊழ்கத்திலிருக்கிறான் சிவன்.

இந்திய மதச் சடங்குகளிலும் பக்தி வழிபாடுகளிலும் இறைவனின் திருவடிகளை வணங்குவதே தொடக்கமாக இருக்கும். அதேபோல், சீடன் குருவை சந்திக்கையில் அவர் பாதம் பணிகிறான். இங்கே பாதம் என்பது ஆன்மீகப் பாதையை குறிக்கிறது. குரு நடப்பது பிரம்மத்தின் பாதையில். வடமொழியில் ‘சர்ய’ என்பது பாதையை குறிக்கும் சொல். ஆக, பிரம்மத்தின் பாதையில் நடப்பது பிரம்மசர்யம், குருவானவர் ஒரு பிரம்மசாரி. மெய் மண் பட விழுந்து வணங்குவதன் மூலம், பாதம் பணிவதன் மூலம் குரு செல்லும் பாதையை தான் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறான் சீடன். இங்கு பிரபஞ்ச அன்னையின் பாதங்கள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் ஊற்றுமுகமாக வணங்கப்படுகின்றன. இந்தப் பாடலோடு தியானிப்பதற்கென பரிந்துரைக்கப்படும் யந்திரம் பிரம்மன், விஷ்ணு, மஹேச்வரன் ஆகியோரின் இம்முத்தொழில்களின் குறியீடாக உள்ளது. தலைகீழ் முக்கோணமாக இது வரையப்படுகிறது. இதில் ஏறுமுகமான இடதுபுறம் பிரம்மனையும், அடித்தளம் விஷ்ணுவையும், ஏறுமுகமான வலதுபுறம் ருத்ரனையும் குறிக்கின்றன.

‘ஹ்ரீம்’ என்பது இங்கே பீஜ (கரு) மந்திரம். இந்த யந்திரத்தின் துணையோடு, ஒருவரது கீழ்மை நிறைந்த வேட்கைகளை மேன்மையான தளமொன்றிற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்படும் தாந்த்ரீக தியானத்தில், அண்டம் முழுதும் பரவியிருக்கும் இயல்நிகழ்வுகள் அனைத்தும் பிரபஞ்ச அன்னையின் திருவடிகள் மீது படிந்த மென் துகள்களாக உருவகிக்கப்படுகின்றன. தேவியின் இணையடிகள் ஒரு தாமரையெனவும், துகள்கள் அத்தாமரையடிகளின் மகரந்தமெனவும் கொள்ளப்படுகின்றன. பூந்தாது செழிப்பை குறிப்பது. அதன் மிகுதி இனப்பெருக்க வளமையை சுட்டுவது. அண்டத்தில் உள்ள உலகுகள் முடிவற்றவை என்பதால் அவை பாதம் மீது படிந்த எண்ணற்ற துகள்களாக கொள்ளப்படுகின்றன. அவற்றை தியானிப்பது மனதை முடிவற்ற பிரபஞ்ச வெளியிலிருந்து மிக நுண்ணிய புள்ளியை நோக்கி நகர்த்துவது. குறுக்கல்-விரித்தல் என்ற செயல்முறை வழியாக இயல் உலகில் உள்ள தனிப்பட்ட பண்புகள் எல்லாம் மெய்யானவை அல்ல, அவை வெறும் தோற்றங்களே என்பது உணர்த்தப்படுகிறது.

வினைமுதல் மிகமிகச் சிறிதாக இருந்தாலும் விளைவு கால-இட வெளியில் அனுபவத்தால் அறியப்படக்கூடியதாக இருக்கிறது. நடைமுறை தளத்தில் செல்லுபடியாகும் தகுதி அதற்கு ஏற்படுகிறது. ஆகவே, அனைத்து செயல்களும் பொருட்களின் நடைமுறை இருப்பை உண்டாக்காவும் அத்தகுதியை தக்கவைப்பதற்கெனவுமே நடைபெறுகின்றன. இங்கு, விஷ்ணு மிகுந்த இன்னல்களுக்கிடையே, தன் ஆயிரம் தலைகள் கொண்டு ஒருவாறாக இந்த உலகுகளை பாதுகாக்கிறான் என்பது வலியுறுத்தப்படுகிறது. தனிப்பண்பு எதுவும் முழுமுதலின் இயல்பல்ல. எனவே, இயல்நிகழ்வுகள் மாற்றம் பெறாமல் இருப்பதும் இயல்பானதல்ல. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்பதோடு, அது முழுமையான இன்மையில் போய் முடிவதும் கூட. எனவேதான், அண்டங்கள் எல்லாம் ஓரிடத்தில்  சேர்க்கப்பட்டு, அழிக்கும் கடவுளான ருத்ரன் தன் நெற்றியில் அணிந்துகொள்வதற்கென பொடியாக்கியதைவிட, நுண்ணிய துகள்களாக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரபஞ்ச அன்னையின் காலடியிலிருந்து எடுக்கப்பட்ட, தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும் பூந்தாது இறுதியில் சிவனின் – முழுமுதலின் – நெற்றியில் மாற்றமில்லா நிலையை அடைகிறது.

முதல் பாடலுக்கான உரையில் பட்டியலிடப்பட்ட வகைமைகள் இந்த தியானம் மூலம் முறையான மீள்பார்வைக்கு உள்ளாகின்றன. அத்தகைய ஒரு உளப்பயிற்சி மூலம் புலன் சார்ந்த, உளரீதியான கவனச்சிதறல்களை களைய முடியும். இந்த தியானத்தின் நோக்கம் நிறைவேற பிரபஞ்ச அன்னை மீதான முதல் துதியின் நடு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. முதல் துதி என்பது இங்கே ‘பாலா’ என்பதை குறிக்கிறது. பாலா என்றால் சிறுமி என்று பொருள். முதலில் பிரபஞ்ச அன்னையானவள் ‘ஐம் ஹ்ரீம் சௌம்’ என்ற சிறப்பு மந்திரம் மூலம் சிறுமியாக துதிக்கப்படுகிறாள். இந்த மந்திரத்தை முறையாக குருவிடமிருந்து பெற்ற பிறகு, ‘ஹ்ரீம்’ என்ற பீஜ மந்திரத்தைக் கொண்ட யந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மெய்த்தேட்டம் கொண்டவன் எளிதாக தன்முனைப்பை அழித்து கால-இட பரிமாணங்கள் அற்ற நனவு நிலைக்குள் அனைத்தையும் அடக்கிவிடும் நிலை ஏற்படும் வரை இதை பயில வேண்டும். இதன் உடனிகழ்வாக, அனைத்திலும் திகழும் பிரபஞ்ச ஆன்மாவோடு அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வும் செறிவடைகிறது.

ஹ்ரீம்

ஶ்ரீ சக்ர தியானம்

அ: ஶரீராகர்ஷிணீ

முப்புரங்களையும் எழிலூட்டுபவளே! உயிர் ஒவ்வொன்றிற்கும் உடலொன்றை அளித்து இவ்வுலகைப் படைத்து ஒவ்வொன்றையும் காப்பவள் நீ. என்றென்றைக்கும் நன்றியோடு உன்னை பணிகிறேன். உன் கருணை மகத்தானது. சிவ-சக்தி இணைவின் மையமான பிந்துவில் வெறும் இயல்கைகளாக இருந்த விந்துவும் கருமுட்டையும் உன் கவர்ச்சியின் ஆற்றலால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்படுத்தப்படுகின்றன. புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், அக உறுப்பின் நான்குநிலைகளிலான இயக்க ஒழுங்கமைவும் கொண்ட உடலுடன் கூடிய உயிராக வளரும் நல்லூழை ஒரு உயிரணுவுக்கு அளித்தாய். இந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உடல், உன் விருப்பப்படி, உன் வழிகாட்டலில் அருமையான நலன்கள் கொண்ட எனது இவ்வுயிரென மலர்ந்துள்ளது.

விரிஞ்சி (பிரம்மன்) உன் தாமரயடிகளிலிருந்து எடுத்த துகள்களைக் கொண்டு அக்கறையோடு இந்த அண்டத்தின் உடல்களை இடையறாது படைத்துக்கொண்டிருக்கிறான். தன் கருணையால் அவன் தன் படைப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டதால் இவ்வுலகில் வாழவந்த பல்லாயிரம் உயிர்களில் ஓர் எளிய உயிரியாக நானும் இருக்கிறேன். எவ்விதத் தூண்டலுமின்றி, என்னையறியாமல் தன்னுணர்வற்ற ஆழ் மௌனத்தில் என் தாயின் கருவில் நான் கிடந்தேன். அந்நாட்களில் என் புலன் நலன்களை என்னுள் ஒருங்கமைத்தவள் நீ. என் செயலுறுப்புகளின் இயக்கத்தை கச்சிதமாக ஒருங்கமைத்தவள் நீ. இவ்வுடலை அடைகையில் நான் தன்னந்தனியனாய் இருந்தேன். நீ என்னை ஒரு மானுடனெனப் படைத்து இக் கால-இட வெளியில் சேர்த்து, உன் படைப்புக் காட்சியகத்தை அலங்கரிக்கும் எண்ணிறந்த பிற உயிரிகளுடன் என் மகிழ்வையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ளும்படி செய்திருப்பது பெருவிந்தைதான். 

முடிவிலா வெளியில், நனவின் ஆழுறக்கத்தில் ஒரு அசைவை நீ உண்டாக்கினாய். அந்த அசைவு தொடர்ந்து ஒலிக்கும் அலையானது. ஆதி படைப்பியக்கமானது. பருவெளியின் அதிர்வுகள் இன்னிசையோடு தோன்றின. ஒன்றன் அலைவரிசை மற்றொரு அதிர்வின் அலைவரிசையிலிருந்து வேறுபட்டது. இப்படியாக, ஒலிக்கோவையாலான உலகில் நான் வந்து பிறந்தேன். சுதி வேறுபாடுகளையும் ஒலிதரும் பொருள்களையும் உணரும் மதிநுட்பத்தை விரைவிலேயே நீ எனக்கருளினாய். ஒலிகள் ஒவ்வொன்றின் பொருளும் இருத்தலியல் மெய்மை கொண்ட கருத்தாக்கங்களாக என்னுள் தங்கிவிட்டன.

ஆக, பிரம்மனுடன் நானும் ஒரு படைப்பாளி ஆகிவிட்டேன். படிமங்களையும் குறியீடுகளையும் படைத்து இவ்வுலகை மேலும் சிறப்புறச் செய்கிறேன். இதனால் நான் வாழும் இவ்வுலகு ஒவ்வொரு கணமும் கவிதையாக, பாடலாக ஆகிறது. கருத்துக்கள் பெருகி என் நினைவு செழிப்படைகிறது. நான் இயங்கும் நினைவின் இறைவனான விஷ்ணுவுக்கு உதவும் கருவியாகிறேன்.

என் மனதில் நான் சேமித்து வைத்திருக்கும் பயனற்ற உதிரி எண்ணங்களையும் உருவங்களையும் ஒரு நாள் உன் பேரிறையாகிய பரமேச்வரன் சாம்பலென ஆக்கி தன் உடலில் பூசிக்கொள்வான். அப்பேரழிவு நாளில் அனைத்தும் மறைந்த பின்னரும் உன் இறைவனின் நெற்றியில் நான் தூசாக எஞ்சுவேன். அதன் மூலம் நான் மாயையிலிருந்து மெய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் செல்வேன்.

ஆகவே, அன்னையே, உன்னுடனான எனது அணுக்கம் ஒருபோதும் மறையப்போவதில்லை. படைப்புச் சுழற்சியின் ஊழிப்பெருக்கிலும் உன்னுடன் சேர்ந்து நானும் உனது மெய்யான இருப்பான ஆழ் நனவிலிக்குள் செல்வேன்.

|| அ: ஶரீராகர்ஷிணீ ||

சௌந்தர்யலஹரீ – 1

Standard

ஶிவ: ஶக்த்யா யுக்தோ யதி ப*வதி க்த: ப்ரப*விதும்

ந சேதேவம் தேவோ ந க*லு குல: ஸ்பந்திதுமபி

அதஸ்த்வாமாராத்*யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபி*ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத*மக்ருதபுண்ய: ப்ரப*வதி

(பாடல் – 1)

சக்தியுடன் இணைகையில்தான் சிவன் உருக்கொள்ளும் ஆற்றல் பெறுகிறான்

தனியனாக துடிக்கும் ஆற்றலும் அவனுக்கிருப்பதில்லை என்றால்

அரி அரன் அயன் முதலானோர் போற்றும் உன்னை

சிறப்பொன்றும் அடையாதோர் வணங்குதலும் போற்றுதலும் எங்ஙனம்?

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலின் உருவகங்களே கடவுளர் மூவர். இச்செயல்பாடுகள் தோற்றம், அறியக்கூடிய இருப்பு, இறுதி இணைவு என்ற மூன்றின் வெளிப்பாடாகவும் கருதப்படுகின்றன. இவை இந்தியத் தொன்ம மரபில் பிரம்மன், விஷ்ணு, மஹேச்வரன் என்று அழைக்கப்படுபவை. இப்பாடலில் பிரம்மன் விரிஞ்சி என்றும், விஷ்ணு ஹரி என்றும், மஹேச்வரன் ஹரன் என்றும் சுட்டப்படுகின்றனர். இந்த முக்கூறுகளும் காலச் சுழற்சிக்குள் இருப்பதால் மூன்று கடவுளருக்கும் கால வரையறை ஒன்றுண்டு. இவர்களை ‘முழுமுதல்’ அல்லது ‘சிவம்’ என்பவற்றோடு குழப்பிக்கொள்ளுதல் கூடாது.

சௌந்தர்யலஹரீயின் ஒவ்வொரு பாடலுக்கும் இணையான ஒரு மந்திரமும், யந்திரமும் உண்டு. மந்திரமாவது அண்டம் தோன்றுவதற்கு முதற்காரணமான ஆதி ஒலி எனும் நாதத்தின் பெயர், சொல், ஒலி எனும் மூன்றோடு தொடர்புடைய கூறு. யந்திரம் என்பது குறிப்பிட்ட களத்தில் மந்திரம் உருப்பெறுவதற்கான இயல்கையை வரையறை செய்யும் வடிவம். கட்புலம் சார் குறியீடு. இவற்றுக்கு மேலாக, மந்திரத்தையும் யந்திரத்தையும் தொடர்புறுத்தி இரண்டிலும் உறையும் உள ஆற்றலைப் பெறுவதற்கு உதவும் இன்னொரு கருவியும் உண்டு. மந்திரம் குறிக்கணக்கியல் (algebraic) கூறாகவும், யந்திரம் வடிவியல் (geometric) கூறாகவும் கருதப்படுகையில், இவ்விரண்டையும் இணைத்து பயன்பாட்டு முழுமை ஒன்றை உருவாக்கக்கூடிய உயிர்ப்பிக்கும் விசையியக்கவியல் (activating dynamics) கூறாக தந்திரம் அமைகிறது.

மூல வடமொழிப் பாடல் ஓவ்வொன்றிற்கும் அனைவருக்கும் பொதுவாக எளிதில் விளங்கக்கூடிய பொருள் ஒன்றும், மறைபொருள் ஒன்றும் இருக்கும். பாடல் குறிப்புணர்த்தும் மந்திரமே மறைபொருளாக இருக்கும் ஒவ்வொரு யந்திரத்திற்கும் அதற்கேயான அக இயக்காற்றல் ஒன்றுண்டு. மெய்த்தேடல் கொண்டவர் அந்த வடிவத்தை விடாது நோக்கிக் கொண்டிருக்கையில் நுட்பமாக செயல்படுவது அது. அண்டத்தின் கருத்தாக்கக் களம் பொருட்களின் ஒலிஒளி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைவது போல, ஒருவரது நனவு நிலையை பாதிக்கும் ஆற்றல் எல்லா வடிவங்களுக்கும் உண்டு. யந்திரத்தின் குறிப்பிட்ட அக இயக்காற்றல் யந்திரசைதன்யம் என்றும், மந்திரத்தின் அக இயக்காற்றல்ல் மந்திரசைதன்யம் என்றும் அழைக்கப்படுகின்றன. சைதன்யம் – தூய நனவு – என்பது பிரபஞ்ச ஆன்மாவிலும், தனிப்பட்ட ஆன்மாவிலும், ஒலிஒளிக்கூறுகளிலும் காணப்படும் பொதுவான ஒருமைப் பண்பு. ஒரு மந்திரத்தை அதற்கிணையான யந்திரத்தோடு முதன் முதலாக விளக்குபவர் அதன் ரிஷியாக கருதப்படுகிறார்.

இம்முதற்பாடலுக்கான யந்திரம் 

க்லீம்

‘க்லீம்’ என்பதே பீஜமந்திரம். சிவ-சக்தி இணைவாக அது தியானிக்கப்பட வேண்டும். தியானிக்கப்பட வேண்டிய ரிஷி கோவிந்தன். அருள்வேண்டி வணங்கப்பட வேண்டிய இறையாக மஹாத்ரிபுரசுந்தரி வீற்றிருக்கிறாள். இசைக்கப்பட வேண்டிய சந்தம் அனுஷ்டுப்பு (சுரத்தின் மேற்பாலை). அமிழ்தெனும் ஆழியால் சூழப்பட்டிருப்பதாக உணர்வதே இதன் அக இயக்காற்றல். சிவனையும் சக்தியையும் மெய்மையின் கூறுகளாக, நன்மையின் கூறுகளாக, அனைத்திலும் நிறைந்திருக்கும் அழகை மகிழ்ந்து போற்றும் பண்புகளாகக் காண்பதே ஆன்மீக வளர்ச்சியாக உணரப்பட வேண்டும்.

சௌந்தர்யலஹரீயில் சிவ-சக்தி இணைவென்பது பின்வரும் இருபத்தைந்து வகைமைகளால் வடிவமைக்கப்படுகிறது:

ஐந்து மூலக்கூறுகள்
நிலம்நீர்தீகாற்றுவெளி
ஐந்து புலன்கள்
முகர்தல்ருசித்தல்நோக்குதொடுகைகேட்டல்
ஐந்து புலனுறுப்புகள்
மூக்குநாக்குகண்தோல்காது
ஐந்து இயக்க முகமைகள்
பிறப்புறுப்புகள்வெளியேற்ற உறுப்புகள்கால்கள்கைகள்பேச்சு
சிவனின் ஐந்து வடிவங்கள்
மனம்மாயம்அறிவுமுழுமுதற் கடவுள்(மஹேச்வரன்)தூய முழுமுதல் (சதாசிவன்)

ஶ்ரீ சக்ர தியானம்

அம் காமாகர்ஷிணீ

படைக்கும் தொழிலை பேரன்புடன் நிகழ்த்துபவளே! அன்னையே,  ஒத்திசைவு விதியென தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும், பரமேச்வரன் எனப்படுவதுமான முழுமுதலுக்கும் தொடர்ந்து எய்தப்பெறும் நலன்களுக்கும் இடையிலான பிணைப்பை உன்னில் நான் காண்கிறேன்.  நலன்கள் ஒவ்வொன்றும் உன் மனம் மயக்கும் தொடுகையால் அருளப்படுகின்றன. உன் தொடுகை கழி நிகழ் எதிர்வென்னும் முக்காலங்களையும் எழில்பெறச் செய்கிறது.

மாறிக்கொண்டே இருக்கும் உருவங்களை உயிர்ப்பூட்டும் மீ ஆன்மாவே, பேரொளியே, உன் தாமரையடிகளுக்கு என் வணக்கம். நான் அப்பாவிதான், அறிவிலிதான் என்றாலும் பேரிறை மேல் நீ கொண்ட பற்றில் நான் ஒரு கனல்பொறி என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன்.

கைலாயத்தின் சோலையில் எல்லா விருப்புகளையும் ஈடேற்றும் தருவாக இறைவன் உருவகிக்கப்படுகிறான். அந்த மரத்தை பற்றிப் படரும் பொற்கொடியாக நீ விளங்குகிறாய். அப்பேரின்பக் கொடியில் மலரும் ஒரு  மொட்டாக நான் இருக்கிறேன்.

‘அம் காமாகர்ஷிணீ’ எனும் மந்திரத்தை நான் ஓதுகையில், விரும்பத்தக்க  நாட்டங்கள் மட்டுமே என் உளத்தை நிறைப்பதாக! அந்த நாட்டங்கள் அறத்தொடு பொருந்தியவையாக, உன் அருளால் ஈடேற வேண்டும் என நான் எண்ணும் எனது விழைவுகளுக்கெல்லாம் மீபொருள் அளிக்கக்கூடியவையாக அமையட்டும். அவ்விருப்பங்கள் ஒவ்வொன்றும் உள்ளார்ந்த அன்போடும் பக்தியோடும் நான் உன்னை அர்ச்சிக்கும் புதுமலர்களாக இருக்கட்டும்.

என்னுள்ளிருக்கும் அறங்களெல்லாம் பேரன்போடும் அக்கறையோடும் நீ என் அகத்தில் விதைத்த உன் விருப்பமெனும் விதைகள். தீயவை எனும் முட்புதர்கள் பெருகி, நன்மைகள் என்னும் அவ்விதைகள் முளைத்து வளர்வதை தடுத்துவிடாமல் பாதுகாப்பாயாக! என்னை உன்னிடமிருந்து அயன்மைப் படுத்தும் எதுவும் என்னில் தோன்றினால், அவற்றை என் எண்ணங்களிலிருந்தும், வாக்கிலிருந்தும், செயல்களிலிருந்தும் களைய எனக்கு உதவிபுரிவாயாக! ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும் என் தேர்வை செயல்படுத்த உன் அறிவாற்றல் எனக்கு எப்போதும் வழிகாட்டட்டும். நான் ஆற்றவேண்டியவை ஒவ்வொன்றும் நேர்வழியில் நான் செல்வதற்கான ஊர்தியாய், என் வாழ்வை நிறைவடையச் செய்வதாய் அமையட்டும்.

என் அறியாமையால், சுயநலத் தேட்டத்தால் நீ ஏற்காத ஒன்றை நான் விழையக்கூடும். அங்ஙனம் ஒரு பின்னடைவு நிகழ்கையில், என் விழைவுக்கு உன் அருள் இல்லை என்பதை நான் உடனடியாக உணரும்படி செய்வாயாக! அப்போதுதான் நான் என்னை திருத்திக்கொள்ளவும், ஒழுங்கமைத்துக்கொள்ளவும் இயலும். உன் ஒளியின் ஒரு பொறி என் விழிக்கு ஒரு மின்னை தருகையில், உன் தூண்டல் என் சொற்களுக்கு உண்மைத்தன்மையை அளிக்கையில், நீ என்னுள் பாய்ச்சும் ஆற்றல் என் செயல்களை சால்புகொண்டவையாக ஆக்குகையில் மட்டுமே நான் உன் அருளைப் பெற்றவனாக, அதை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு கடத்தும் தகுதிகொண்டவனாக ஆகிறேன். என்றென்றும் உனது கருவி என நான் போற்றப்படவேண்டும். இந்த ஒரு விழைவு மட்டுமே என் அகத்தில் திகழும்படி அருள்வாயாக!

மெய்ப்பொருளும் நீயும் இணைகையில் தோன்றும் உருவ வெளிப்பாடே என் தாய்தந்தையர் என நான் கண்டுகொள்ள, சிவ-சக்தி இணைவில் தோன்றும் அன்பு எனக்கு அருளட்டும். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேனாக!

உன் தாமரை இணையடிகளிலிருந்து எடுத்த நுண்ணிய தூசித் துகளினைக் கொண்டு எனது இந்த உடலை படைத்திருக்கிறான் பிரம்மன். என் கூரையென அவன் படைத்துள்ள இந்நல்லுலகு எனது இப்பிறவியின் சரணாலயமாகத் திகழ்கிறது. நீ வழங்கும் அறிவின் உறுதிப்பாட்டோடும், நீ அருளும் அச்சமின்மை எனும் பாதுகாப்போடும், நீ விழையும் காலம் வரை நான் இங்கு வாழ்ந்திருப்பேனாக!

|| அம் காமாகர்ஷிணீ ||

வடமொழி உச்சரிப்பு வழிகாட்டி

க – ka

க* – kha

– ga

க* – gha

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

Standard

அவனிவனென்னறியுந்நதொக்கெயோர்த்தா

லவனியிலாதிமமாயொராத்மரூபம்;

அவனவனாத்மசுகத்தினாசரிக்கு

ந்நவயபரன்னு சுகத்தினாய் வரேணம்

                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 24)

அவன் இவன் என அறிபவையெல்லாம்

அவனியில் ஒற்றை ஆதி வடிவாம்

அவனவன் தன் நலனுக்காற்றுவதெல்லாம்

அயலவன் நலனும் உவப்பின் உயர்வாம்

நம்மைச் சுற்றிலும் நம்மைப் போன்றே உள்ள மாந்தரை பார்க்கிறோம். மானுடரின் சில பண்புகளைக் கொண்ட பிற உயிரினங்களையும் காண்கிறோம். நம்மைப் போன்றே அவையும் உண்ண, அருந்த, உறங்க, பெருக விழைபவை. இவற்றில் மனிதன் விதிவிலக்கல்ல. அவன் சில இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டவன்.

இந்த இயற்கை விதிகளைப் பற்றி சற்று கூடுதலாக நம்மால் அறியமுடிகிறது. பருண்ம இருப்பு கொண்டவறை நம்மால் கட்டுப்படுத்த இயல்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் மொத்தப் பிரபஞ்சமும் வெடித்துச் சிதறி  அதன் மூலமுதல் நிலைக்குச் சென்றுவிட்டால் ஹைட்ரஜன் மட்டும் எஞ்சும் என்பது அறிவியலாளர் கருத்து. ஒரே ஒரு புரோடானும் ஒரே ஒரு நியூட்ரானும் கொண்டிருப்பதால் ஹைட்ரஜன்தான் அடிப்படை முலப்பொருளாகக் கருதப்படுகிறது. உள்ளார்ந்த விதியொன்றால் அவை இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்திருக்க அவற்றின் எலக்ட்ரான் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கிறது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவோடு இணைந்து ஒரு நீர்ம மூலக்கூறாக ஆகும்போதும் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் தங்கள் தனிப்பண்புகளை இழந்துவிடுவதில்லை. அடிப்படையில், உள்ளார்ந்த விதிகளின் இயக்கம் மூலமாகவே ஒரு பொருளின் பண்புகளை இயற்கை கட்டுப்படுத்துகிறது.

இயற்பொருள்வாதத்தின்படி, ஆதிமுதற் பொருள் தொடங்கி மனிதன் வரை உள்ள பரிணாம வளர்ச்சிநிலைகளில் நாம் காண்பது இயற்பியல் விதியின் இயக்கத்தையே. பரிணாம வளர்ச்சி அளவுகோலில் மனிதனை நெருங்குகையில்  விருப்பத் தேர்வுக்கான உரிமை (freedom in choosing between options) அதிகரிப்பதை காணமுடிகிறது. ஒரு நத்தையைவிட குரங்கின் தேர்வுரிமைக்கான பரப்பு (greater range of choices) விரிந்தது.

அரிஸ்டாடில் தன் நிகோமகியன் நீதிநெறிகளில் (Nicomachean Ethics) வாழ்வின் பொருள் என்ன என்ற கேள்வியை ஆராய்கிறார். “மனிதனை பிறவற்றிலிருந்து பிரித்துக்காட்டுவது எது, அவன் வாழ்வின் பொருளை நிர்ணயிப்பது எது?” என்ற கேள்வியோடு தொடங்குகிறார்.  கவிதைகள் எழுதும், பள்ளிகளும் கல்லூரிகளும் எழுப்பும், புத்தகங்களை எழுதி அவற்றை சேமிக்கும், பல கருத்துக்களையும், எல்லாவற்றையும் பொருள்கொள்ளச் செய்யும் பல்லாயிரக்கணக்கான சொற்களை உள்ளடக்கிய சொற்குவையை உருவாக்கியதுமான ஒரே விலங்கு நாம்தான். இதுவே நம்மை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. சுருங்கச் சொன்னால், அறிவில் சிறந்தவன் மனிதன் எனலாம். ஒரு வகையில் அவனே அறிவென்றும் சொல்லலாம்.

அடுத்ததாக, ஒரு அழகிய கருத்தை முன்வைக்கிறார் அரிஸ்டாடில். நன்மை என்றால் என்ன என்று நாமெல்லோரும் அறிவோம் என்றாலும் “நன்மை” (good) என்ற சொல்லுக்கு தன்னளவில் எந்தச் சிறப்புப் பொருளும் இல்லை என்கிறார் அவர். ஆங்கில “is” என்ற சொல் போன்றதுதான் அது. “Is” என்பதன் பொருள் என்ன? ஏதோ ஒன்றை அது எப்படி இருக்கிறது அல்லது அது எப்படி இல்லை என்பதை தீர்மானிக்கும் சொல் அது. ஏதோ ஒன்று இருக்கிறது என்று சொல்ல வேண்டுமானால் அதன் இருப்பை கண்டுகொள்ளும் ஒளி உங்களுள் இருக்க வேண்டும். அடிப்படையில் ஒரு இருப்பை கண்டுகொள்ளும் ஆற்றல் அது. அதை உங்களால் கண்டுணர முடியாது என்றால் அந்த மெய்மையாக உங்களால் வாழ இயலாது. (கிரேக்கக் கவிஞர்) ஹெசியதின் (Hesiod) கவிதை ஒன்றின் பொருளை மேற்கோள் காட்டுகிறார் அரிஸ்டாடில் – ‘எவ்விதக் குழப்பமும் இல்லாமல் செயலாற்றும், எப்போதும் சரியான மதிப்பீடுகளை செய்யும் மனிதன் சிறந்தவன். அவ்வாறு செயலாற்ற முடியாதவர்கள் அத்தகைய சான்றோனிடம் ஆலோசனையாவது பெறவேண்டும். சான்றோனையும் நாடாதவர்கள் எதற்கும் பயனற்றவர்கள்’.

உங்களுக்கு பகுத்தறிவு இருந்தால் மட்டுமே உங்களுக்கு நீங்கள் நலம்பயப்பவராக இருக்க முடியும். பகுத்தறிவு உங்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கக்கூடியது. அது உங்களுக்கு தெளிவாகிறது. அப்போதுதான் அது இருக்கிறது என்று உங்களால் சொல்லமுடியும். நமக்கு ஏற்படும் இந்த தன்னிலைத் தெளிவுதான் ஹைட்ரஜன் அணுவில் ஒரு உறுதிப்பாடாக இயங்குகிறது. நான் ஒரு ஹைட்ரஜன் அணு என்றால் என்னில் ஒரு எலெக்ட்ரானும் ஒரு புரோடானும் மட்டுமே இருக்க வேண்டும். அணு எடை சரியானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பண்புகள் இருக்க வேண்டும். நான் ஒரு மனிதன் என்றால் என்னிடம் விழிப்புணர்வும் பகுத்தறிவும் இருக்க வேண்டும்.

இதனை நிறுவிய பிறகு அரிஸ்டாடில் ஓரடி முன்னே செல்கிறார். ஒருவர் தான் குழலிசைக் கலைஞராகவோ யாழிசைக் கலைஞராகவோ ஆகவேண்டும் என்று முடிவெடுத்தால்  அக்கலையில் இயலக்கூடிய உச்சபட்ச தரத்தை அடைவதைத்தானே தன் குறிக்கோளாகக் கொள்வார்? ஒருவர் தச்சுத்தொழிலை தேர்ந்தெடுத்தால் தச்சுத்தொழிலில் உன்னத நிலையை அடையத்தானே முயல்வார்? ஆனால் இந்த எண்ணம் ஒரு போலித்தனமான முடிவின் தேவையற்ற நீட்சிதான் என்பது தீயூழ். தன்னை அறிதலே முதன்மையான உண்மை. முழுமையான மனிதனாகவேண்டும் என்று நீங்கள் எண்ணினால் தூய அறிவை அடைவதற்கான உச்சபட்ச தரத்தை அடைவதே உங்கள் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். உன்னத மெய்மை என்பது இடையறாததாகவும் ஆதிமுதல் மெய்மையின் தொடர்ச்சியானதாகவும் இருத்தல் வேண்டும். அது முழுமையானது, பகுதிகளாக பகுக்கமுடியாதது. இது ஒருவரை சகமனிதர்கள் அனைவருடைய சகோதரராக ஆக்குவதுடன் எல்லா இருப்புகளுடனும் ஒரு பண்புத்தொடர்பையும் (kinship) ஏற்படுத்துகிறது.

தோன்றியவை எல்லாமே நாம்தான் என்றானபிறகு நாம் கருதும் தன்னலம் நம் இயற்கையோடு இணைந்ததாக இருக்கிறது. நம் உடல்நலத்துடனான இணைவு துண்டிக்கப்பட்டால் நாம் நோயுறுகிறோம். நம் அறம் சார்ந்த நேர்மை பாதிக்கப்பட்டால் அறநோயால் அவதிப்படுகிறோம். உள்ளம் சரியாக இயங்காமல் ஆகி, மனநோய்க்கு ஆளாகிறோம். நம் புரிதல் தெளிவை இழக்கையில் நாம் முட்டாளாகிறோம்.

ஆகச்சிறிய அணுவிலிருந்து முதன்மையான தத்துவம் வரை அனைத்திலும் இயற்கையான ஒரு ஒருங்கிணைவு அவற்றின் இருப்பை தக்கவைக்கிறது. ஒவ்வொன்றும் தன்னுடன் ஒரு இணக்கத்தையும் பிறவற்றுடனான உறவில் ஒரு இணக்கத்தையும் கொண்டிருக்கிறது. இயற்கை தன் இணக்கத்தை இழப்பதே இல்லை. அதற்கு நாம் அயலவர்கள் இல்லை. இதில் அற்புதமான கூறு என்னவென்றால், இயற்கை நனவின் தன்மலர்வாக தன்னை வெளிப்படுத்துகிறது என்பதுதான். அதுவே நம் நனவாக தோற்றம் கொள்கிறது. இயற்கையை அறியும் நாமே உண்மையில் இயற்கையை அறியும் இயற்கை. 

நாம் இயற்கையை அறிபவர்கள் என்பதால், ஒரு அணுவின் அமைப்பை நம்மால் அறியமுடிகிறது. ஓரணுவை எப்படி பிளக்கச் செய்வது, வெடிக்கச் செய்வது என்பதையும் நாம் அறிவோம். அறிவு, இணக்கத்தை போற்றிப் பராமரிக்கவும் அதே சமயம் அதை அழிக்கவும் பயன்படுவது. ஒரு மெய் நிகழ்வைப் பற்றி நான் அறிந்திருந்தால், அதை பிறர் அறியா வண்ணம் திரிக்கவோ மறைக்கவோ என்னால் முடியும். முழு உண்மையை அறிந்த என்னால் அதை திரிக்க முடியும். கொலை ஒன்றை செய்துவிட்ட ஒருவன், கொலை நிகழ்ந்த சூழல், பயன்படுத்திய ஆயுதம், உடலை அப்புறப்படுத்திய இடம், ஆயுதத்தை எறிந்த இடம் என அனைத்தையும் அறிவான். அதைப் பற்றிய முழு அறிவே சாட்சிகளை திரிக்கவும், குற்றத்தை மறைக்கவும் அவனுக்கு உதவுகிறது. அவற்றை கச்சிதமாக செய்துவிட்டால் அவன் குற்றத்தை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஆக, அறிவு என்பது ஒரு விவேகிக்கு நல்லவனாக இருப்பதற்கான சிறந்த கருவி; ஆனால் ஒரு தீயவனுக்கு பெரும் அழிவை ஏற்படுத்துவதற்கான ஆயுதம். 

எனில், அறிவு தன்னளவில் அறமற்ற ஒன்று. நடைமுறை அறிவு, பகுத்தறிவு என்பதற்கு மேலாக அதில் வேறு பலதும் உள்ளன. நீங்கள் கண்டறிய விழையும் அறிவு வெறும் பகுத்தறிவு மட்டுமல்ல, அது அன்பால் நிறைந்த ஒரு மெய்மை. நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். உங்களைப் பற்றிய அறிவு இருப்பதோடு உங்கள் மீது பேரன்பும் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அகம் என்பது அனைவரின் அகமும்தான் என்றால் அதே கொள்கைப்படி உங்கள் அன்பு அனைவர் மீதும் செலுத்தப்பட வேண்டும். “நீதான் என் அகம் என்று நானறிவேன், ஆனால் எனக்கு உன்மீது அன்பில்லை” என்று நீங்கள் சொல்ல முடியாது.

ப்ரோதகரஸ் (Protagoras) அறிவு என்பது ஒரு நல்லொழுக்கமாக/நற்கூறாக (virtue) இருக்கவேண்டுமென்பதில்லை என்ற வாதத்தை முன்வைத்தார். சாக்ரடீஸ் அறிவை நற்கூறு என்றார். “இல்லை. மெய்மையை அறியும் ஒருவன் அதை திரிக்கவும் முடியும்” என்று பதிலிறுத்தார் ப்ரோதகரஸ். சாக்ரடீஸ் ”அப்படியென்றால் அவன் உண்மையை அறியவில்லை என்பதே பொருள். அவன் மெய்யாகவே அறிந்திருந்தான் என்றால் அவன் அறத்தோனாகவே இருக்க வேண்டும். தான் அறிந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அறத்தோடு நிற்காதவன் ஒரு கூறை மட்டுமே அறிந்திருக்கிறான்” என்றார். உபநிஷதங்கள் இதை ஒரு காலில் நடக்கும் உண்மை என்கின்றன. அறிவும் அன்பும் இருந்தால் மட்டுமே ஒருவனது அகம் இரண்டு கால்களிலும் நடக்க இயலும். எதன் மீதான் அன்பு? தன்மீதேயான அன்பு. மானுட அகத்தில் இயற்கை தன்னை வெளிப்படுத்துவதே, அந்த அகம் தானே எல்லாம் என்றோ அல்லது தான் அனைத்திற்கும் உரிய ஒன்று என்றோ அறியவேண்டும் என்பதற்காகத்தான். தன் நலம் குறித்த அக்கறை உங்களுக்கு இருக்குமென்றால் அதுவே எப்போதும் அனைவரின் நலனுக்கென வாழும் பொறுப்போடு உங்களை பிணைத்துவிடுகிறது.

தன்னறம் என்னும் கருதுகோளை முன்வைக்கிறது இப்பாடல். தன்னறம் என்பது உங்கள் மெய்யியல்புக்கேற்ற உங்கள் செயல்பாட்டை குறிப்பது. இந்த இயல்பை நிர்ணயிப்பதில் இரண்டு கூறுகள் உள்ளன என்பதை குரு நம் கவனத்திற்கு கொண்டுவருகிறார். ஒன்று நமது தனிப்பட்ட இயல்பு, இன்னொன்று நமது பொது இயல்பு. மனிதர்களாக உங்களுக்கும் எனக்கும் பொது இயல்பு ஒன்றே. சமூகத்தில் வெவ்வேறு விதமாக நாம் செயல்படுவது நமது தனிப்பட்ட இயல்பின் அடிப்படையில். என்னுடைய தனிப்பட்ட இயல்பு ஒரு ஆசிரியனுடையது, என் பொது இயல்பு ஒரு மனிதனுடையது. ஒரு ஆசிரியனாக நான் கற்பிக்கிறேன், நீங்கள் ஒரு மாணவனாக கற்கிறீர்கள். இப்படி நம் பரஸ்பர உறவில் ஒன்றையொன்று நிரப்பும் கூறு உள்ளது. உள்ளிலிருந்து பார்க்கையில் நீங்களும் நானும் வெறும் மனிதர்கள் மட்டுமே. இதையே அனைத்து உயிரினங்களுக்கும் நீட்டித்தால் நம் பொது இயல்பு என்பது உயிர் மட்டுமே. நாம் எந்த இனத்தைச் சேர்ந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் சிறப்பியல்பு அமைகிறது.

அரிஸ்டாடிலும் இதை மிக முக்கியமானதாகக் கருதுகிறார். நீங்கள் தனித்த ஒரு மனிதன் மட்டுமல்ல, ஒரு அரசியல்-சமூக உயிரினம். ஒரு சமூக உயிரியாக நீங்கள் குழுக்களோடு வாழ வேண்டியிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ சொல்ல முடியாது. ஏனென்றால் பிற எவரோடும் அவர் உறவாடும் வாய்ப்பே அமைவதில்லை. பிறரோடு தொடர்புறுகையில் அவர் எப்படி வெளிப்படுகிறாரோ அதை வைத்தே அவர் நல்லவரா தீயவரா என்பதை நாம் முடிவுசெய்யக்கூடும். தான் என்பது வெறும் இருப்பாக மட்டுமல்லாமல் செயல்படுவதாகவும் இருக்கவேண்டும் என்கிறார் அரிஸ்டாடில். அது சேமிக்கப்படும் அறிவு அல்ல, செயல்படும் அறிவு. செயல்படும் அந்த அறிவு ’நீங்கள்’ எனப்படுவது அனைவரையும் உள்ளடக்கியது என்பதே. பிறர் நலனே உங்கள் அக்கறை என்பது. நீங்கள் செய்யும் எதுவும் பிறர் நலனையும், உங்கள் நலனையும் உறுதிசெய்வது. நீங்கள் எந்த ஒரு சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் உங்களுடைய அன்றாட வாழ்வு உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நலனைப் பேணுவதாக இல்லையென்றால் நீங்கள் செயல்படவே இல்லை என்பதே பொருள்.

எத்துணை அழகிய அவதானிப்பு! நன்றாகப் பாடக்கூடிய ஒரு இசைக்கலைஞரை எடுத்துக்காட்டாக சொல்கிறார் அரிஸ்டாடில். அனைவரும் அவர் இசையில் மகிழ்ந்து அவரை சிறந்த இசைக்கலைஞன் என்கிறார்கள். காலம் கடக்கையில் அவர் குரல்வளையில் ஏதோ நோய் வந்து அவர் குரலை இழந்துவிடுகிறார். இப்போது அவர் பேசினால் கூட அருகிருந்து கேட்கமுடியாமல் ஆகிவிடுகிறது. ஆனால் அவர் இப்போதும் சிறந்த இசைக்கலைஞனாகவே மதிக்கப்படுகிறார். அம்மனிதருக்கு முக்கியத்துவம் அளித்து, இப்போது, அது உண்மையில்லை என்றாலும், அவர் இசைக்கலைஞர் இல்லை என்று நாம் சொல்வதில்லை. கடந்தகாலத்தின் சான்றாக நாம் அவரை மதிக்கிறோம். அம்மனிதரின் பெருமை அவரில் இல்லை, அந்த மதிப்பை அளிப்பவரிடம் இருக்கிறது என்கிறார் அரிஸ்டாடில். அவரை புகழ்பவர் அந்தப் பெருமையை அவருக்கு அளிக்கிறார். அது உண்மையில் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்றால் அவரால் இப்போது பாட முடியவேண்டும்

ஒருவர் ஐம்பது அல்லது அறுபது வயதிலும் சிறந்த கவிஞராக இருக்கமுடியும். அவரே எழுபது வயதை எட்டும்போது முதிர்ந்து மனம் பிறழ்ந்தவராக ஆகிவிடலாம். என்றாலும் அவர் கடந்தகாலத்தில் படைத்தவற்றின்பொருட்டு இன்றும் அவரும் பெரும் கவிஞர் என்றே அழைக்கப்படுகிறார். ஆனால் இத்தகைய பெருமையை ஒருவர் நல்லவராக இருந்தார் என்பதற்காக நாம் கொடுக்க மாட்டோம் என்கிறார் அரிஸ்டாடில். ஒருவர் இன்று தீயவராக இருந்தால், ஒரு காலத்தில் அவர் நல்லவராக இருந்தார் என்பதற்காக, அவரை நாம் நல்லவர் என்று சொல்ல மாட்டோம். ஒற்றை தூக்கணாங்குருவியோ, வெயில் திகழும் ஒற்றை நாளோ ஒரு வசந்தகாலமாகி விடாது. ஒவ்வொரு நாளும் காலையில் இசைக்கும் பறவையின் பாடல் கேட்டால் மட்டுமே அது வசந்தகாலம். அதுபோல, நன்மை என்றால் அது தொடர்ந்து நல்லதாகவே இருத்தல் வேண்டும்.

மாற்றம் இல்லாத நல்லவராக எப்படி ஆக முடியும்? எப்போதும் உங்களைப் பற்றிய முழு அறிதல் இருக்கும் என்றால். இதில் விடுமுறைக்கே அனுமதி இல்லை. உங்களுக்கான உன்னத மகிழ்ச்சி குறித்து உங்களுக்கு அக்கறை இருக்குமென்றால் அது எந்த விதிவிலக்கும் இல்லாமல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். எப்போதும் எது செய்தாலும் நீங்கள் உறவாடும் அனைவருக்கும் நலம் பயப்பதாக அது இருந்தாக வேண்டும். அது குறைந்தபட்ச தேவை. இறுதியில் உங்களை நீங்கள் மொத்த பிரபஞ்சத்துடனும் தொடர்புறுத்திக்கொள்ள வேண்டும். அங்கே உங்களுக்கு வெளியே எதுவும் இருப்பதில்லை. குறைந்தபட்சம் நீங்கள் புழங்கும் சமூகத்தில், உங்களை ஒப்புக்கொடுத்த சமூகத்திலாவது இந்த அங்கீகாரம் வெளிப்பட வேண்டும். 

குழந்தைக்கு நோய் வந்தால் அன்னையால் உறங்க முடியாது. “எனக்கு ஒன்றுமில்லை, குழந்தைக்குதான் உடல் நலமில்லை. நான் எதற்கு விழித்திருக்க வேண்டும்?” என்று அவளால் சொல்ல முடியும். ஆனால் அப்படி நடப்பதில்லை. தாயின் உள்ளுணர்வே அவளை இரவு முழுக்க விழித்திருக்கச் செய்கிறது. குழந்தைக்கு எவ்வளவு சௌகரியம் செய்து கொடுக்க முடிகிறதோ அவ்வளவையும் செய்கிறாள். அதை செய்யாமல் அவளால் தூங்கவே முடியாது. அன்னையரைப் பொறுத்தவரை ‘தான்’ என்பது தன் உடலினும் பரந்த ஒன்று என்ற தன்னுணர்வு ஓரளவு உண்டாகிவிடுகிறது எனலாம். அவர்களுடைய ‘தான்’ என்பது குழந்தையையும் உள்ளடக்கியது. குழந்தை நோயுற்றால் அவர்களும் நோயுறுவது போலவே ஆகிவிடுகிறது. ‘தான்’ என்பதன் நீட்சி உடலைக் கடந்தது – அந்த அளவுக்கு அன்னையானவள் மெய்யறிந்தவளாகிறாள். பிரபஞ்சத்தின் முழுமையை அறிவதில் அது ஒரு சிறிய படியேற்றம்தான் என்றாலும் அதுவும் ஒரு படிநிலையே.

காதலரிடையே நிகழ்வதும் இதுவே. சற்றும் முன்பின் அறியாதவர்கள் சந்திக்கின்றார்கள், ஒருவரால் ஒருவர் கவரப்படுகிறார்கள், காதலில் வீழ்கிறார்கள். அதன்பிறகு ஒருவர் உணர்வதையே மற்றவரும் உணர்கிறார். பால் ரெப்ஸ் எழுதிய Zen Flesh, Zen Bones என்ற ஜப்பானியக் கதையில் வரும் மனிதன் ஒரு நல்ல இசைக்கலைஞன். அவன் யாழிசைக்கும்போது அவனது உயிர்நண்பன் “ஆஹா, நீ வாசிப்பது என்னவென்று தெரிகிறது. பட்டாம்பூச்சியின் பறத்தல் இது” என்பான். ஒரு முறை “ஆ, இது நீரூற்று” என்பான். அல்லது “இது வசந்தகாலம்” என்பான். இசைக் கலைஞன் வாசிக்கும்போதெல்லாம் நண்பன் பாராட்டுவான், அதில் திளைப்பான். ஒரு நாள் அந்த நண்பன் நிமோனியாவால் பீடிக்கப்பட்டு இறந்துபோனான். இசைக்கலைஞன் தன் யாழை எடுத்து சுக்குநூறாக உடைத்தெறிந்தான். “என்னால் இனிமேல் வாசிக்க முடியாது. கேட்டு பாராட்ட இங்கே என் உயிர்நண்பன் இல்லை. அவனில்லாமல் வாசிப்பதில் எனக்கு என்ன இன்பம் இருக்க முடியும்?” என்றான்.

இந்தத் தொன்மத்தின் அடிப்படையில் இன்றும் ஜப்பானில் நல்ல நண்பன்  இறந்துவிட்டால் ஒரு இசைக்கருவியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்தக் கதை அழகிய ஒன்று. நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவருடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள விழைகிறீர்கள். உங்களை அதிகம் விரும்புவது நீங்களேதான். உங்களை நீங்கள் மெய்யாகவே அறிவீர்கள் என்றால் அது உங்கள் உடலோடு நின்றுவிடுவதிலை, அனைத்தையும் அது ஊடுருவுகிறது.  அனைவரின் மகிழ்ச்சிக்குமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட உங்கள் வாழ்வு புனிதமாகிறது. அப்படிப்பட்ட ஒருவர் ஆரோக்யமானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பகலும் இரவும் அவர் செய்யும் அனைத்தும் பிறர் வாழ்வை சிறிதேனும் ஒளிரச் செய்கின்றன, மறைந்துள்ளவற்றின்மீது அதிக வெளிச்சம் பாய்ச்சுகின்றன, குழப்பமும் சீர்குலைவும் உள்ள இடங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தான் இதற்கு முந்தைய பாடல் சொல்கிறது. இதுவே நாராயண குருவின் அடிப்படை சமூக அறம். இந்த அறம் தன்னறிதலை அடிப்படையாகக் கொண்டது. தன்னை அறிதலும், நல்லன ஆற்றலும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றேதான்.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

Standard

அபரனுவேண்டியஹர்ன்னிசம் ப்ரயத்னம்

க்ருபணதவிட்டு க்ருபாலு செய்திடுந்நு

க்ருபணனதோமுகன்னாய்க்கிடந்நு செய்யு

ந்நபஜயகர்ம்மமவன்னுவேண்டி மாத்ரம்

                                      (ஆத்மோபதேச சதகம் – பாடல் 23)

பிறனுக்காக பகலிரவும் வினைபுரிபவன்

தன்னலம்துறந்த அருளாளன்

தனக்கென மட்டும் பயனற்றதை செய்பவன்

தன்னலத்தில் அமிழ்பவன்

ஒருவர் தன் வாழ்வை நோக்குகையில், அதில் கட்டமைப்பு சார்ந்த சில வரம்புகள் இருப்பதை பார்க்கிறார். தான் எனும் இருப்புணர்வைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து அதன் நடுவில் தன்முனைப்பை குறிக்கிறார். தனக்கு மிக நெருக்கமானவற்றை அந்த வட்டத்திற்குள் வைத்து அவற்றை ‘நான்’, ‘எனது’ என்று அழைக்கிறார். இருத்தலியல் உளவியலாளர்கள் இந்த வட்டத்தையே தன்முனைப்பு வட்டம் (ego boundary) என்கிறார்கள்.

தன்முனைப்பு வட்டங்களில் பல வகைமைகள் உண்டு. உங்களுடைய ‘வீடு சார்ந்த’ வட்டத்தில், உங்கள் அண்டைவீட்டாரைப் பற்றிய உறுதிப்பாடு உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் வலுவான தடுப்புச் சுவர் ஒன்றை எழுப்புகிறீர்கள். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல, எந்த அளவுக்கு நீங்கள் பிறனை வெளியில் தள்ளுகிறீர்களோ அந்த அளவு உங்களை வேலிக்குள் அடைத்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. அந்நியமான ஒரு உலகை வெளியில் நிறுத்துவதாக நீங்கள் எண்ணிக்கொண்டாலும், உண்மையில் அந்தச் சுவரை எழுப்பி உங்களை நீங்களே சிறைவைத்துக் கொள்கிறீர்கள்.

ஆக, உங்களுக்கென ஒரு தனிப்பட்ட ஒரு வட்டமும் உங்கள் வீட்டுக்கென ஒரு வட்டமும் இருக்கின்றன. அவற்றுக்கு மேலாக உங்களது முன்முடிவுகளுக்கென வலுவான வரம்பொன்றை அமைத்துக் கொள்கிறீர்கள். அத்தகைய வரம்பொன்றை ஏற்படுத்திக் கொண்டவருக்கு மதம் எந்த விதத்திலும் பொருள்படுவதாக இருக்க முடியாது. வெறிகொண்ட பிடிவாதமே அவர் மதம் என்றாகிறது. அந்த மதத்தில் அதே நம்பிக்கையை கொண்டிராத எவருமே எதிரிதான், பகைவர்தான். அவர்கள் அவருடை நம்பிக்கைகளின் வட்டத்திற்கு வெளியே தள்ளப்படுகிறார்கள்.

ஃபிரெஞ்சு மக்களில் சிலர் தமக்குத் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அதற்குக் காரணம் ஒருவகையான மொழிசார்ந்த தேசியப்பற்று. அத்தகையவர்களில் ஒருவரோடு நீங்கள் பாரிஸிலிருந்து மார்செய்ல்ஸுக்கு பயணம் செய்தீர்கள் என்றால் அவர்கள் ஒரு சொல்கூட ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். ஆனால், பெல்ஜிய எல்லையைத் தாண்டிய உடனேயே அவர்கள் எளிதாகி உங்களுடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குவார்கள். இத்தகைய வெறி, மொழி எல்லைகளை மேலும் வலுப்படுத்துகின்றன. இப்படி மக்கள் பல கட்டமைப்பு வரம்புகளைக் கொண்டு தங்களை தளையிட்டுக் கொள்கின்றனர். இத்தகைய தன்மைய வரம்புகளில் சிக்கிக்கொண்டவர்களை நாராயண குரு ‘கிருபணன்’ என்கிறார்.

மாறாக, தன் எதிரிணையை வரம்புகளற்றவராகப் பார்க்கக்கூடியவருக்கு உலகமே தன்வசமாகிறது. குல, இன வேறுபாடுகள் எதையும் அவரால் ஏற்கமுடியாது.  பிறருடன் தொடர்பு கொள்கையில் ‘நான்’ என்பதை அவர் பயன்படுத்தினாலும் அவர் அகத்தில் அதற்கு ‘நாம்’ அல்லது ‘நாமனைவரும்’ என்பதுதான் பொருள். அத்தகைய ஒருவர் இங்கே அருளாளன் ‘க்ருபாளு’ எனப்படுகிறார்.

நாமனைவரும் – அருளாளனோ, தன்னலமியோ – வினையாற்றிக் கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது. மூச்சுவிடுதல் கூட செயல்தான். எவரொருவரும் செயலில் ஈடுபடாமல் ஒரு கணமும் இருப்பதில்லை என்கிறது பகவத் கீதை. நம் செயல்கள் மூன்று வகையானவை. நம் வாழ்வை பராமரிக்க நாம் அன்றாடம் செய்பவை நித்ய கர்மங்கள். காலையில் எழுவது, உடலை சுத்தம் செய்வது, உண்பது, கழிவகற்றுவது இவற்றையெல்லாம் நாம் செய்தே ஆகவேண்டும். உங்களுக்காக இவற்றை பிறிதொருவர் செய்ய முடியாது. அவை தவிர்க்கமுடியாதவை, ஏனென்றால் அவற்றை நீங்கள்தான் செய்தாக வேண்டும்.

இரண்டாவது வகை செயல்கள் நியத கர்மங்கள். சமூகத்தில் உங்கள் இடத்தை, உங்கள் தொழில் சார்ந்து நீங்கள் ஏற்றெடுத்துள்ள பங்கை குறிப்பது இது. நீங்கள் ஒரு மருத்துவராக, வழக்கறிஞராக, பொறியாளராக, தொழிலதிபராக, ஆசிரியராக அல்லது வேறேதுமாக இருக்கலாம்; உங்கள் தேர்வின் அடிப்படையிலோ அல்லது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ உங்களுக்கென பணி ஒதுக்கப்படுகிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு நேரம் அதை நீங்கள் அதை செய்யவேண்டியுள்ளது. இல்லையெனில் அது ஒப்பந்த முறிவாகிறது, அல்லது யாராவது பாதிக்கப்படுகிறார்கள். அது உங்களால் செய்யப்பட வேண்டும் என்று நீங்களும் பிற அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். இவ்வகையான அன்றாட, எதிர்பார்க்கப்படும் செயல்கள் நியத கர்மங்கள்.

மூன்றாவது வகை செயல்கள் நைமித்திக கர்மங்கள். இவை தற்செயலானவை. அதில் எந்த வழமையும் கிடையாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் நடை செல்கையில் ஒருவர் மயங்கி விழுவதை பார்க்கிறீர்கள். இது அன்றாட நிகழ்வல்ல. நீங்கள் அருளுடையவர் என்றால் நின்று என்ன நடந்தது என்று பார்ப்பீர்கள். உதவிக்கு யாரையாவது அழைப்பீர்கள், அவரை மருத்துவமனைக்கோ அவரது வீட்டிற்கோ கொண்டுசெல்ல முயல்வீர்கள். உங்களது கோட்டைக் கழற்றி அவருக்கு போர்த்திவிட்டு, முதலுதவி செய்வீர்கள். இவை எல்லாமே தற்செயலாக நிகழும். எந்தப் பரிந்துரையும் கிடையாது. இவை நைமித்திக கர்மங்கள்.

இந்த மூன்றில் நித்ய கர்மங்கள் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. ஒவ்வொரு ஜீவனுக்கும் தேவையான நலம் பயப்பவை. அவற்றில் நன்மை தீமை என எதுவும் கிடையாது. உண்பது பெரும் விழுமியம் என்பதற்காக நீங்கள் உண்பதில்லை. இன்னொருவர் சுவாசிக்கிறார் என்பதற்காக அவர் ஒழுக்கமானவரா இல்லையா என்பதை நீங்கள் ஆராய்வதில்லை. அவர் சுவாசித்தே ஆகவேண்டும்.

இவ்வகை செயல்களை தவிர்த்துவிட்டால் இரண்டுவகை செயல்களே எஞ்சுகின்றன – நியத கர்மங்கள், நைமித்திக கர்மங்கள். இவ்வகைச் செயல்களுக்கான தூண்டுதல்கள் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அடிப்படைகளிலிருந்து வரக்கூடும் – தன்னலம், கருணை. இங்குதான் உங்கள் வாழ்க்கை முறையே நிர்ணயிக்கப்படுகிறது. அடிப்படையில் தன்னலவாதியானவர் தன்னை காத்துக்கொள்ள தன் உலகை சுருக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் எவ்வளவு அதிகமாக தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறாரோ அந்த அளவுக்கே அவர் அல்லாத பிறவற்றிலிருந்து தான் விலகிச் செல்கிறார். புற உலகு குறித்து அவர் ஐயம் கொள்கிறார், அதனால் அவரில் பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்குகிறது. ஐயமும், பாதுகாப்பின்மையும் அவர் தன்னைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிக்கொள்ளத் தூண்டுகின்றன. இது பலமடங்கு பெருகுகையில் அவர் வெறியராகிறார். அவர் எல்லாவற்றையும் மறைக்கவேண்டி வருகிறது. எல்லாவற்றையும் ரகசியமாகவும் கணக்கிட்டும் செய்யவேண்டியிருக்கிறது. எதையும் பிறரிடமிருந்து மறைக்கிறார். ஒவ்வொருவரும் அடையக்கூடிய லாபத்தை ரகசியமாக கணக்கிடுகிறார். எப்படி லாபமடைவது என்பதே குறியாக இருப்பதால் தந்திரங்களை கையாள்கிறார். அவர் பிறரை நம்புவதில்லை, அதனால் பிறரும் அவரை நம்புவதில்லை. தனக்கு பாதுகாப்பில்லை என்று உணர்வதால் பிறரிடம் அவரால் வெளிப்படையாக நடந்துகொள்ள முடிவதில்லை. அதனால் அவரை பிறர் ஏற்பதில்லை. ஆக, ஒவ்வொரு நாளும் அவரது இழப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. பிறரிடமிருந்து விலக விலக அவரது வாழ்வு மேலும் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது. இறுதியில் அவர் வாழ்வு மிகவும் மேலோட்டமானதாக ஆகிவிடுகிறது. அவருக்கென மெய்மைகளோ, பெரும் பண்பாடோ, மரபோ இல்லாமல் போகிறது. அவர் அடைவதற்கென மேன்மைகள் எதுவும் இருப்பதில்லை. அவரது ஆர்வம் பெரிதும் தடைப்படுகிறது.

இத்தகைய மாந்தர் லட்சக்கணக்கானோரை நாம் நம்மைச் சுற்றிலும் காண்கிறோம். இது பெரும் கொடுமை. அவர்கள் தங்களுடைய தன்னலத்தாலேயே தங்களுடைய சிறைகளுக்குள்ளேயே சிக்கவைக்கப் படுகிறார்கள். இப்படி ஒரு இழிவான வாழ்க்கையை வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை நான் பார்க்கிறேன் – அவர்கள் வாழ்வுக்கு எந்தப் பொருளும் இல்லை, அவர்களுக்கு முன் எந்த விழுமியங்களும் இல்லை. பகலும் இரவும் அவர்களுடைய எண்ணமெல்லாம் உணவு, குடி, அவர்கள் குடும்ப நலன் என்பவற்றைப் பற்றி மட்டுமே. மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எப்போதும் சிக்கலில் உழல்பவர்களே. ஒவ்வொரு நாளும் அவர்கள் புற உலகுடனான தங்கள் முக்கிய தொடர்புகளை அறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். மிக மிக பரிதாபத்துக்குரியவர்கள்.

அவர்கள் தலை குனிந்தே இருக்கிறது, அவர்களால் உலகை நேருக்கு நேர் பார்க்க முடியாது என்கிறார் குரு. அவர்கள் அவமானத்தில், அநாகரீகத்தில், பேராசையில் வாழ்பவர்கள். அவர்கள் செய்யும் எதுவும் பலனளிக்காதவை. தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள். நீங்கள் முயன்றால் கூட அவர்களுக்கு உதவிசெய்துவிட முடியாது. அவர்களை ஒரு புதைகுழியிலிருந்து மீட்டீர்கள் என்றால் அடுத்த நொடியில் அவர்கள் மற்றொன்றில் விழுந்திருப்பார்கள். இத்தகைய ஒரு கொடுமையான சூழலில்தான் அன்றாடச் செயல்களும் தற்செயல்களும் தன்னலத்தால் கண்காணிக்கப்படுகின்றன.

இதை அருள் நிரம்பிய ஒருவருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவரது வாழ்வின் நோக்கம் “நாமெல்லோரும் ஒருவரே. நான் உங்கள்மேல் அக்கறையுடன் இருக்கிறேன். நீங்கள் யார் என்பது ஒரு பொருட்டல்ல, உங்கள் நலன் மட்டுமே முக்கியம்” என்பதுதான். விக்டர் ஹ்யூகோவின் ‘லெ மிசரபிள்ஸி’ல் மானுடம் மீது அன்பு செலுத்துவதன்றி வேறொன்றும் அறியாத ஒரு பாதிரி வருவார். எல்லோருக்காகவும் வாழ்பவர். தன் அலுவலகம், தன் பதவி, எல்லாவற்றையும் பிறர் துயர்துடைக்க பயன்படுத்துவார். ஹ்யூகோவின் இப்பெரும் படைப்பைப் படித்து அந்தப் பாதிரியாரின் ஆன்மாவுக்குள் நுழைவதென்பது பெரும் மதநூல்களைப் படிப்பதைவிட மிகமிக மேலானது. என்னவொரு கதாபாத்திரம், எவ்வளவு அழகான வாழ்க்கை! அவருக்காக கண்ணீர் சிந்துவோம். அவருடன் வாழ நினைப்போம். அதுபோன்ற ஒரு மனிதரை, நம் வாழ்வை என்றென்றைக்குமாக மாற்ற வழிகாட்டும் அத்தகைய ஒருவரை ஒருமுறையாவது வாழ்வில் சந்திக்க விழைவோம். 

அருளாளர். அவருக்கு எந்தத் தன்மைய வரம்பும் இல்லை என்பதால், ‘நான்’ என்ற சொல்லை எண்ணங்களையும் அவையோடு தொடர்புடைய கருத்துக்களையும் மையப்படுத்த மட்டும் பயன்படுத்துவார். அது வெறும் தத்துவார்த்த தொடர்புறுத்தல் மையம், நனவை குவிப்பதற்கான புள்ளி மட்டுமே. அறுதியான சமூகக் கட்டமைப்பு அல்ல. அது தன்முனைப்பு அல்ல. எனவே அவரால் எதையும் ‘நான்’ என்பதோடு மெய்யாக தொடர்புறுத்த இயலும். அவர் தன்னைச் சுற்றிலும் சுவர் எதையும் எழுப்பிக் கொள்வதில்லை. அதனால் அவரால் மொத்த மானுடத்துடனும், எல்லா விலங்குகளுடனும், பறவைகளுடனும், தாவரங்களுடனும் உறவாட முடியும்.

ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதைகளை படிக்கையில் அவரால் ஒரு பறவையுடன், மலருடன், மரத்துடன், புதருடன், ஓடையுடன், கல்லுடன், சாலையுடன் உரையாட முடிகிறது என்பதை அறிந்து சிலிர்த்துப் போகிறோம். அவர் திரும்பிய பக்கமெல்லாம் நட்பை மட்டுமே காண்கிறார். மொத்த உலகமுமே அவருக்கென திறந்துகிடக்கிறது. எத்தனை ஆச்சரியமான வாழ்வு!

நாம் புனிதர்களை மட்டும் எண்ணிப் பார்க்கத் தேவையில்லை. நம்மைச் சுற்றியும் புனிதர்கள் வாழ்கிறார்கள். ஒருவர் மிக எளியராக இருக்கக்கூடும். ஆனால் அவரால் பல சாளரங்களை திறக்க முடியும். வாழ்வின் மீதான ஆர்வத்தால் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் ஒவ்வொருவருடனும் உறவாட முடியும். மக்கள் வருவதற்கென அவர் தன் வாயிலை திறந்தே வைத்திருக்கிறார். அவர் அடுப்பை பற்றவைப்பது தனக்கென மட்டுமல்ல, பசித்திருக்கும், விடாய் கொண்டிருக்கும் அனைவருக்காகவும்தான். “வருந்துபவர்களே, என்னிடம் வாருங்கள். உங்கள் சுமைகளை என் தோள்களில் இறக்குங்கள்” என்றார் யேசு. அத்தகைய அருளாளர் எளிதில் தன்னை பிறரோடு தொடர்புறுத்திக்கொள்கிறார். அவரது சொல்லில் உலகம் ஆறுதல் கொள்கிறது. அவரே அவர்களின் ஒளியும் ஊக்கமும் ஆகிறார். அத்தகையவரை எதிர்கொள்ளும் எவரும் எளிதில் தன்னை அவரோடு பிணைத்துக்கொள்கின்றனர். இயல்பாகவே அவரது அடித்தளம் தன்னலமியுடையதைவிட வலுவானதாகிறது. “நான் உன்மீது அன்புகொண்டுள்ளேன்; நீ இன்னொருவர் மீது அன்பு கொண்டிருக்கிறாய். ஆகவே உன் நண்பர் என் நண்பராகிறார்.” இப்படியாக அவரது தாக்கம் நாளும் பெருகுகிறது, அவரது நட்பு பரந்துவிரிகிறது. அவர் பெருந்தன்மையோடு, எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லாவற்றையும் பிறருக்கு அளிக்கிறார்.

அதை ஈடுசெய்யும் முகமாக, ஒவ்வொன்றும் அவரில் சென்று நிறைய விழைகின்றன. அவர் அளிப்பதெல்லாம், பத்து மடங்காக, நூறு மடங்காக அவரிடமே திரும்பி வருகின்றன. அவர் எப்போதுமே வென்றவராகிறார். அவருடைய செல்வாக்கு மாறுவதே இல்லை. அவரது சொல் வணக்கத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர்கள் அவரை நம்புகிறார்கள். அவரிடம் தன்னலம் ஏதுமில்லை. அதனால் அவர் சொல்வது மெய்யாகவே ஒலிக்கிறது. அத்தகைய ஒருவருடைய சொல்லை ஏற்காமல் இருப்பது எளிதல்ல.

நம் செயல்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவன இந்த இரண்டு மாறுபட்ட கொள்கைகள்தான். ஒன்று தன்முனைப்பு மிக்கவரின் தன்னலம், மற்றொன்று பிறரை கைவிரித்து ஏற்கும் ஆன்மீகவாதியின் கருணை. நம் முன் இருப்பவை இவ்விரு இயல்கைகளே. அவற்றில் எதை ஏற்பது என்பது நம் கையில்தான் உள்ளது. பெரும்பாலானவர்கள் தன்னலத்தை தேர்ந்தெடுத்து தங்களையே தொலைத்துவிடுகிறார்கள் என்பதுதான் துயரம் தருவது. கருணையோடும் திறந்த உள்ளத்தோடும் இருப்பதுகூட அதே அளவு எளிய செயல்தான். 

நமது மகிழ்ச்சி பிறருடைய மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்பதை முன்பே பார்த்தோம். இங்கு அதையே இன்னும் ஆழமான தளத்திற்கு கொண்டுசெல்கிறோம். உங்கள் வாழ்வில் உள்ள இணைகளை கவனிக்கத் தொடங்குங்கள். நான் ஒரு ஆசிரியன் என்றால் கற்க விழைபவர்கள் என் இணைகள். தொழிலதிபன் என்றால் நான் வழங்கும் பொருட்களால் பயனடைபவர்கள் என் இணைகள். கணவன் என்றால் என் மனைவி; நண்பன் என்றால் இன்னொரு நண்பன் என் இணை. எல்லோர் வாழ்விலும் அவரவர் இணைகள் உண்டு. மற்றொருவர் மட்டுமல்ல, பலரும் பல துறைகளும் உண்டு. கருணையின் மூலம் நமக்கும் நம் இணைகளுக்கும் இடையே கொண்டுகொடுக்கும் உறவுகளின் மடையை திறக்க முடியும். 

நீங்கள் ஒரு கறாரான வணிக பேரத்தில் ஈடுபட்டிருக்கும்போதுகூட மற்றவரை ஒரு மானுடனாகக் கருதி திறந்த உள்ளத்தோடு ஏற்க முடியும். அவரிடமிருந்து லாபம் அடைவதற்கான வழியை மட்டும் கருதாமல் அவர் நிலையில் நீங்கள் இருந்தால் எப்படி நடத்தப்படுவதை விரும்புவீர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி செய்கையில் நுகர்பவருக்கு எவ்விதமான பாதுகாப்பு தேவை அவருக்கு என்ன லாபங்கள் கிடைக்கக்கூடும் என்று பார்ப்பது எளிதாகிவிடுகிறது. தொழில் நிர்வாகி-நுகர்வோர் என இருவரது கோணங்களிலிருந்தும் பார்க்கமுடிந்தால் இருவருக்கும் சாதகமான புள்ளியை வந்தடைய முடியும். இந்த அணுகுமுறையில் உங்கள் செயல் பற்றி உங்களுக்கு எந்த ஐயமும் இருக்காது. அதில் சகோதரனின் நலன் நோக்கும் மாபெரும் தார்மீகம் உள்ளது. நுகர்வோர் உங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார். எதிர்காலத்திலும் தன் தேவைக்கு உங்களையே நாடுகிறார். இந்த நன்மதிப்பு பெருகிக்கொண்டே செல்வது.

எந்தத் துறையிலும் இந்த அணுகுமுறை தோற்பதில்லை. தன்னிடம் வரும் நோயாளியை பணவரவாக இல்லாமல் சக மனிதனாக ஒரு மருத்துவர் பார்ப்பார் என்றால் அவரது ஒரு நோக்கோ, ஒரு சொல்லோ, ஒரு தொடுகையோ அமுதாகிவிடுகிறது. மருந்து கொடுப்பதற்கு முன்பே நோயாளி குணமாகிவிடுகிறார். இவ்வகையில் நாம் அனைவருமே புனிதர்கள்தான், இங்கு இப்போது நம் அன்றாட வாழ்வில் நாம் புனிதராகத் திகழ முடியும். நாம் இன்று தியானிப்பதற்கு நாராயண குரு அளித்துள்ள பெரும் பாடம் இது: தன்னலத்திலிருந்து கருணை நோக்கி செல்வதற்கான, நம்மைச் சூழ்ந்துள்ள வரம்புகளை உடைத்தெறிவதற்கான பாடம்.

பின்குறிப்பாக சிலவற்றை சொல்ல விழைகிறேன். மிக அழகிய மனிதர்களிடமிருந்து எனக்கு வரும் சில கடிதங்கள் இருள் நிரம்பியவையாக இருக்கின்றன. அவர்களது இருளுக்கான ஒரே காரணம் அருளின்மையும் தன்மையமான தன்முனைப்பும். கடந்த சில நாட்களில் இரு குடும்பங்கள் பிளவுபட்டத்தை அறிகிறேன். இரு தம்பதியருக்கும் இரண்டு குழந்தைகள். ஆண்களால் அப்பெண்களுடன் குடும்ப வாழ்வை தொடரமுடியவில்லை. பெண்கள் இருளுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெற்றோரிடம் கருணை இல்லாத காரணத்தால் அப்பாவியான குழந்தைகள் பெரும் துயருக்கு ஆளாகிறார்கள்.

மக்களை பிணைக்கும் அன்பு என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லவே இல்லையோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. காதல் என்பது இங்கே எவ்வளவு மேலோட்டமானதாக, அருவருக்கத்தக்கதாக, சீரழிந்ததாக இருக்கிறது! தன்னலம் மட்டுமே நிரம்பியது! இருண்ட ஆன்மாக்கள், அவர்களுக்கு தங்கள் நலன் தவிர வேறெதைப்பற்றியும் அக்கறை இல்லை. ஆனால் அவர்கள் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்! பார்க்கவே வேதனையாக இருக்கிறது.

இன்று காலையில்தான் என் இளைய நண்பன் ஒருவனுக்கு எழுதினேன். உடனே சென்று மனைவியோடும் மக்களோடும் சேர்ந்துகொள்ளும்படி. இது மிகவும் அவமானகரமான நிலைமை. இவர்களெல்லாம் வருடக்கணக்காக சாமியார்கள் பின்னாலும் குருமார் பின்னாலும் அலைந்தவர்கள். ஆன்மீக வாழ்வு நடத்துவதாக பறைசாற்றிக்கொண்டவர்கள். தங்களை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் அக்கறையே காட்டாதவர்கள். எவ்வளவு வேதனையான, அவமானகரமான விஷயம்! அவர்களில் கருணை எங்கே? அன்பைப் பற்றி அவர்கள் ஏன் பேசுகிறார்கள்? அன்பு என்றால் என்னவென்று அவர்களுக்கு புரியுமா?

“எனக்கு அந்தக் குழந்தையைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை” என்று சொல்லி ஒரு தகப்பன் ஆறுமாதங்கள் கூட ஆகாத குழந்தையை உதறுவான் என்றால் அவன் எப்படி ஒரு தந்தையாக முடியும்? இந்த இடமே மிக மிக சீரழிந்துள்ளது. மிக மிக அருமையான ஒன்றை இந்த நாடு இழந்துவிட்டதென்றே நினைக்கிறேன். கருணை என்னும் புதையலை இதயத்திற்குள் தேடிக் கண்டடைய வேண்டிய நேரம் இது. ஆனால் நாம் உண்மையை உதறி கற்பனைகளைத் தேடி ஓடுகிறோம். நான் இங்கு எதையும் தத்துவப்படுத்த விரும்பவில்லை. வாழ்வின் யதார்த்தங்களை, முகத்திலறையும் உண்மைகளைப் பற்றி பேசுகிறேன்.

எஸ்கிமோக்களையும், திமிங்கிலங்களையும் காப்பாற்றும் புனிதர்களாக ஆகும்படி உங்களை நான் கோரவில்லை. முதலில் உங்கள் குழந்தையை காப்பாற்றுங்கள். அருகிவரும் உயிரினம் ஒன்றை காப்பாற்றும் கருணை உங்களிடம் இருக்கிறது. உங்கள் குழந்தையும் ஒரு அரிய உயிரினம்தான். அவளிடம் ஏன் நீங்கள் கருணை காட்டக்கூடாது? வீனஸ் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டறியும் அளவுக்கு அறிவாளிகள் அமெரிக்கர்கள். ஆனால் என்ன, தங்கள் குழந்தையின் உள்ளத்தில் இருப்பதென்ன என்றுதான் அவர்களால் கண்டறிய முடிவதில்லை!

இது உங்கள் ஆழ்மனதில் ஊறிச் செல்லட்டும். தீவிரமான சுயபரிசோதனை செய்துபாருங்கள். உங்கள் வாழ்வை பலமடங்கு அருமையானதாக, வாழத்தகுந்ததாக மாற்றிக்கொள்ள முடியும்.

தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி

Standard

தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி

(ஒரு க்யோஜன் ஜப்பானிய நாடகம்)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் உருப்பெற்ற நகைச்சுவை நாடக வடிவம் க்யோஜன். மறைத் தன்மையே இதன் தனிச்சிறப்பு. 1380 முதல் 1460 வரையிலான முரோம்மாச்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. நோஹ் என்னும் துன்பியல் நாடகங்களே ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் நாடகங்கள். க்யோஜன் நாடகங்கள் தேசிய மரபுப்படி எழுதப்பட்டவை. அவற்றின் உள்ளோட்டம் கிண்டலை அடிப்படையாகக் கொண்டது. மாந்தரிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை கிண்டல்செய்து அதன் மூலம் அவற்றை களைய முற்படுபவை. உளவியல் அடிப்படையில் சொல்வதென்றால், பாசாங்குகள் மனிதனில் உண்டாக்கும் அவலத்தைக் களைந்து ஆறுதல் அளிக்க முயன்றவை இந்நாடகங்கள்.

நாடகமாந்தர்:

  1. க்ஷைட்டி – பூசகன்
  2. எடோ – சீடன்
  3. முதல் கோடோ – முதல் வணிகன்
  4. இரண்டாம் கோடோ – இரண்டாம் வணிகன்

இடம்:

எனோஷிமா தீவில் (தற்போதைய டோக்யோ) பெண்டன் தேவதையின் குகை

காலம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம்

 

காட்சி – 1

(பூசகன் அரங்கில் நுழைகிறான்)

பூ: நான் பெண்டன் கோயிலின் பூசகன். இங்கு பதிட்டை செய்யப்பட்டுள்ளது ரதிதேவி. இங்கு அனைத்தையும் நடத்துவது நானே. நீங்கள் தேவதையை பார்க்க விரும்புகிறீர்கள் அல்லவா? அது எளிதில் நிறைவேறக்கூடிய ஒன்றுதான். தேவியின் சிலை மிக அழகானது என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. தேவியை காண்பதற்கு ஒரு சிறு கட்டணம் கொடுத்தால் போதும். தேவி அம்மணமானவள். அப்படித்தானே இருக்க வேண்டும்? காதலின் தேவி அல்லவா அவள்? இந்தச் சிலையைப் பற்றி எத்தனையெத்தனை கதைகள்! தேவியை ஒரு முறை பார்த்துச்செல்ல இங்கு வருபவர்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதனால் எங்களுக்கு செல்வம் பெருகியிருக்கிறது. அதற்குக் காரணம் புனிதமான இத்தேவியின் அருள் மட்டுமல்லவா? உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். அதில் எனக்கு வருத்தம் இல்லாமலில்லை. கண்ணியம் சார்ந்த விஷயம். அது வேறொன்றுமில்லை. இப்போது சிலையை காணவில்லை. கதவுகளெல்லாம் நன்றாக பூட்டப்பட்டுதான் இருந்தன. இது எப்படி நடந்திருக்க முடியும் என்று என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை. ஒன்று தேவி ஓடிப்போயிருக்க வேண்டும். அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதில்லையென்றால் யாராவது திருடியிருக்க வேண்டும். அதற்குமட்டுமே வாய்ப்பு. அதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த தேவியைக் குறித்து ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. அவளை ஒரு முறை தடவினால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது. அந்த எண்ணத்தோடு யாரும் அவளை எடுத்துசென்று விட்டார்களோ? என்னுடைய முதல் சந்தேகம் இங்குள்ள சீடன் மேல்தான். அவனுக்கு ஆள் வேறு சிலை வேறு என்பதுகூட தெரியாது. ஒருமாதிரியான அவனுடைய மோகத்தை நான் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறேன். அவனை கேட்பதில் எந்தப் பயனும் இல்லை. வாயைத் திறந்து உண்மை சொல்வதென்பதே கிடையாது. நல்லவேளை என்றே சொல்லவேண்டும். இன்று பக்தர் கூட்டம் இ ல்லை. இல்லையென்றால் என்னாகியிருக்கும்!

(மேடையின் இடதுபுறத்திலிருந்து சீடன் நுழைகிறான்)

சீ: இரண்டு யாத்ரீகர்கள் வருகிறார்கள்.

பூ: அய்யய்யோ! இப்போது என்ன செய்வது? அவர்களுக்கு எதை காட்டுவது? அவர்களை எப்படியாவது ஊருக்குள் அனுப்பிவிடு.

சீ: அதெல்லாம் நடக்காது. வாட்டசாட்டமாக இருக்கிறார்கள். எங்கோ தொலைவிலிருந்து புனிதப் பயணமாக வந்திருக்கிறார்கள். நம்முடைய திறமையெல்லாம் செல்லுபடியாகாது. அவர்கள் தேவியை பார்த்துவிட்டுத்தான் போவார்கள். பணம் எவ்வளவு கேட்டாலும் தருவார்கள்.

பூ: உண்மையிலேயே பணம் கொடுக்கக் கூடியவர்கள்தானா? அப்படியென்றால் உடனே போய் தேவியை கொண்டு வா முட்டாளே. அவள் நீ சரசமாடுவதற்கானவள் இல்லை.

சீ: நான் ஒன்றும் அவளை எடுக்கவில்லை. நானெடுக்க முயன்றாலும் அவள் வருவதில்லை. எல்லாம் மோசமாகிவிட்டதே! பயணிகள் வந்தே விட்டார்கள்.

பூ: ஏதாவது செய்தே ஆகவேண்டும. தடி போல பார்த்துக்கொண்டு நின்றால் பயனில்லை. உடனே எப்படியாவது ஒப்பேற்ற வேண்டும். ஆகா! நான் அறிவுள்ளவன்தான். வழி கண்டுபிடித்துவிட்டேன். ஏய் கழுதை, அங்கே போய் ஒளிந்துகொள், நான் உன்னை அழைக்கும் வரை அங்கேயே இரு.

(இடப்புறமாகச் சென்று சீடன் மறைந்துகொள்கிறான். மறுபுறத்திலிருந்து இரண்டு வணிகர்கள் வருகிறார்கள்)

முவ: இதுதான் புகழ்வாய்ந்த ரதிதேவி மண்டபம்!

இவ: இந்த இடத்தின் அழகைப் பார்த்தாலே அது தெரிகிறது.

முவ: அப்படியென்றால் சிலை எங்கே?

இவ: இது அற்புதங்கள் நிறைந்த அசாதாரணமான குகை, இல்லையா?

முவ: ஆகா! இதோ ஒருவன் நிற்கிறானே. அவனிடம் கேட்போம். ஐயா, மன்னிக்க வேண்டும். பெண்டன் நிர்வாணதேவி சிலை எங்கே இருக்கிறது?

பூ: என்ன இது? இப்படி கேட்கிறீர்களே? மரணிக்கும் மனிதருடைய பார்வைக்கு அவள் தெரிவாளா என்ன?

இவ: சரி சரி. அவனை தொந்தரவு செய்ய வேண்டாம். நாமே தேடிப் பார்ப்போம்.

முவ: உளறாதே. அவனுக்கு பணம் வேண்டும். அதுதான் விஷயம். இதை பராமரிக்கும் பூசகன் அவன்.

(பணம் கொடுக்கிறார்கள். பூசகன் வாங்கி முடிந்துகொள்கிறான்)

பூ: நாம் முயற்சி செய்து பார்ப்போம். கருணை நிறைந்தவள் தேவி. சில நேரம் முகம் சுளித்தபடியாவது காட்சி தருவாள். உங்களுக்கு ஊழ் இருந்தால் உங்களை அவள் ஏற்பாள். தேவியைப் பற்றி ஏதும் அறுதியிட்டு சொல்லிவிடமுடியாது.

(இன்னும் பணம் தருவார்களா என்று பார்க்கிறான்)

முவ: (இரண்டாமவனை நோக்கி) இவன் பூசகனேதான். பணத்திற்கு என்னமாய் பறக்கிறான்!

(பூசகனுக்கு மேலும் பணம் கொடுக்கிறார்கள். அவன் சிந்தித்துவிட்டு பேசுகிறான்)

பூ: நீங்கள் நல்லூழ் படைத்தவர்கள்தான். தேவி கனிந்து உங்களை ஏற்பது போல் தெரிகிறது.

இவ: இது என்ன மடத்தனம்? உடையுடுத்தாத ஒரு சிலையைப் பார்க்கவா இவ்வளவு பணம் கொடுப்பது? எனக்கு குகைகளை பார்க்கவேண்டாம். உள்ளே போனால் சளி பிடிக்கும். நாம் வீட்டிற்கு திரும்பிச் செல்வோம்.

முவ: இதென்ன பிடிவாதம்? எப்படியோ இதுவரை வந்துவிட்டோம்.

பூ: ஆகா! இன்னொரு விஷயம். வேண்டுதல் என்னவென்று தெரியுமல்லவா?

இவ: என்ன வேண்டுதல்?

பூ: மரணமுள்ளவர் காதுகளுக்கு அது கேட்காது.

முவ: ஆகா! அப்படியென்றால் இன்னும் பணம் கொடுக்க வேண்டும். (மேலும் பணம் தருகிறான். பூசகன் மறைவாக அதை எண்ணிப்பார்க்கிறான்)

பூ: தேவி பேரழகிதான் என்றாலும் எவ்வளவு கோபக்காரி தெரியுமா? வேண்டுதலில் சிறு பிழை ஏற்பட்டாலும் அவ்வளவுதான்!

முவ: இன்னும் பணம் கொடுக்கவேண்டும் என்று பொருள். (மேலும் பணம் கொடுக்கிறான்)

பூ: கவலை வேண்டாம், கவலை வேண்டாம். வேண்டுதலை நான் சொல்லுகிறேன்

டயபென செய்ற்றன்

டயபென செய்ற்றன்

யோ…யா…

டயபென செய்ற்றன்

முவ: அவ்வளவுதானா?

இவ: அதை நான் சொல்லலாமென்றிருந்தேன்.

பூ: மறக்க வேண்டாம். கோவிலில் நுழையும்போது இதை சொல்லிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு எவ்வளவு கோபம் வரும் தெரியுமா? பின்பு அவள் முகத்தை பார்க்கவே முடியாது.

முவ: நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்? நாங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இங்கு வந்தது அவளுடைய கோபத்தை காண்பதற்கா? அவளொரு நிர்வாணதேவி என்று அறிந்ததனால்தான் வந்தோம்.

இவ: மெல்ல, மெல்ல… இந்த தேவதைகளுக்கு எல்லாம் தெரியும்.

முவ: (சிறிது ஏமாற்றத்தோடு) போதும், போதும். தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்தாயிற்று. இந்தப் பணம் விழுங்கும் தேவியை கொஞ்சம் காட்டுவீர்களா?

பூ: இதோ இந்த சுரங்கப்பாதையில் நுழைந்து செல்லுங்கள். பிறகு வலதுபுறம் திரும்பி முன்னே போகவேண்டும். பிறகு மீண்டும் வலதுபக்கம் திரும்பி முன்னால் செல்லவேண்டும். கடைசியில் அந்த இடத்தை அடைவீர்கள்.

இவ: அவ்வளவு பணம் வாங்கிக்கொண்டீர்களே, எங்களோடு வரக்கூடாதா?

பூ: அதை தேவி விரும்பமாட்டாள். அவள் பக்தர்களுக்கு தனிமையில் அருள நினைப்பவள். நீங்கள் கொடுக்கும் தானம் எதையும் நாங்கள் வாங்க மறுப்பதில்லை. வேண்டுதலை மறக்க வேண்டாம்.

இவ: என்ன தானம்?

முவ: ஓ, இன்னும் பணம் பிடுங்க வழி.

பூ: மந்திரம் நினைவிருக்கிறதல்லவா? அதில் ஒரு மாத்திரையும் பிசகக் கூடாது.

(வணிகர்கள் ஒரு பக்கம் சென்று மறைகிறார்கள்)

பூ: இது நல்ல கூத்துதான். இந்தச் சுரங்கம் ஒரு சுழல்பாதை என்று அவர்களுக்கு தெரியாது. வீரர்கள் சுற்றிச்சுற்றி இப்போது இங்கே வந்துவிடுவார்கள். மந்திர ஒலி கொண்டு அவர்கள் எங்கே வருகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எப்படியென்றாலும் எனக்கு வந்தது நல்ல யோசனைதான். (சீடனை அழைக்கிறான்) ஷோஸோ…

சீ: (தனக்குள்) நான் சரியான மடையன். இவளுக்காக எவ்வளவு நேரத்தை வீணடித்துவிட்டேன்! வெறுமனே பெயர்த்தெடுத்தேன். அப்போதுதானே தெரிகிறது அது வெறும் கல்லென்று.

பூ: வீணாய் போனவனே, பிறகு அழலாம். எனக்கு சடுதியில் புத்தி தெளிந்ததால் சிறிது பணம் கிடைத்தது. உனக்கு நல்ல பாடம் புகட்ட இதுதான் நேரம். வாடா. கழுதை, (ஒரே இழுப்பில் சீடனின் வேட்டியை கழற்றி அதில் கொஞ்சம் கிழித்து அவன் முன் பக்கத்தை மறைக்கிறான்) இங்கே இந்தப் பீடத்தின் மேல் அசையாமல் இரு. தேவியைப் போலவே இரு, ஹ, ஹ!

(ஒசை கேட்கிறது)

டயாபென செய்ற்றன்

டயாபென செய்ற்றன்

யோ…யா…

டயபென செய்ற்றன்

சீ: எனக்கு குளிர்கிறது. என்னால் முடியாது

பூ: எடோ, இது குளிர்காலம். நீ கண்ணை மூடினாலோ, இமையசைத்தாலோ அடி விழும். அவர்கள் இப்போது வந்துவிடுவார்கள். கையை தூக்கி பிடியடா! இதோ வந்துவிட்டார்கள். இனி அசையாமல் இரு.

(பூசகன் மறைகிறான்)

முவ: அற்புதம்! அற்புதம், அப்படியே உயிருள்ளதுபோலவே இருக்கிறது பார்!

இவ: தெய்வமே! என்னவொரு கலைநயம்!

முவ: அய்யோ! தேவி மூச்சு விடுகிறாள்!

இவ: இது நிச்சயம் ரதிதேவிதான். என்னவொரு அழகு!

முவ: மெல்ல… மெல்ல…

இவ: அடேய், நான் இதை சிலையென்றுதானே சொன்னேன்?

முவ: என்ன ஒரு கலைச் சிறப்பு! ஒவ்வொரு முடியும் தெரிகிறது.

இவ: எனக்கு கைரேகைகள் தெரிகின்றன.

முவ: பேசாமல் இரு. சட்டென கோபம் கொள்ளும் தேவி.

இவ: எப்படியோ, நேரில் பார்த்துவிட்டோம். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!

முவ: நல்ல கலைப்படைப்புகளை பார்ப்பது நல்லூழ்.

இவ: கலைப்படைப்பென்றால்…!

முவ: ஆ! அதென்ன?

இவ: இந்த தேவியை எங்கேயோ தடவினால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்று சொல்கிறார்கள்.

முவ: எங்கே தடவ வேண்டும்?

இவ: அது எனக்கு தெரியவில்லை

முவ: அடேய், கூடாத இடத்தில் தடவி நமக்கு உள்ள பிள்ளைகளும் இல்லாமல் ஆகிவிட்டால்?

இவ: எப்படியானாலும் கன்னத்தை தடவிப் பார்ப்போம் (கன்னத்தை தடவுகிறான்)

முவ: என்ன, புத்ரவீரியம் உண்டாகிறதா?

இவ: சை! அதொன்றுமில்லை!

முவ: அப்படியானால் நீ தொட்டது தவறான இடத்தை. நான் நெஞ்சை தடவிப் பார்க்கிறேன்.

இவ: எப்படி இருக்கிறது?

முவ: சிறப்பாக ஒன்றுமில்லை.

இவ: அப்படியென்றால் எங்கே?

முவ: நான் சற்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

இவ: எனக்கொன்று தோன்றுகிறது.

முவ: ச்சே! நாம் பெரிய தவறு ஏதும் செய்து தேவி கோபித்துக்கொண்டுவிடுவாளோ? (முதல் வணிகன் மெல்ல தட்டிப் பார்க்கிறான்) இது வெறும் சிலைதான். தட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மனிதனை தட்டுவதுபோலவே இருக்கிறது. நீ ஒருமுறை தட்டிப் பார்.

இவ: வேண்டாம், வேண்டாம்.

முவ: அவள் என்ன கடித்துவிடுவாளா?

(இரண்டாம் வணிகன் மெல்ல விரலை மூக்குத் துளையில் நுழைக்கிறான். அவன் நுழைப்பதும் சீடன் தும்முவதும் ஒரே நேரம் நடக்கிறது. இரண்டுவணிகர்களும் பயந்துபோய் ஓட்டமெடுக்கிறார்கள்.)

(பூசகன் தோன்றுகிறான்)

பூ: (சிலையாக அமர்ந்திருக்கும் சீடனிடம்) நீ கெடுத்தாயடா. எல்லாம் போச்சு. அந்த வணிகர்கள் இதற்குள் பட்டணத்திற்கே போயிருப்பார்கள். அங்கெல்லாம் சென்று தேவியின் சினம் பற்றி சொல்லிக்கொண்டு திரிவார்கள். பிறகு நாம் எப்படி வாழ்வது? ஒரு மனிதனும் இந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. தேவி உனக்கு நல்ல தண்டனை கொடுக்கட்டும்.

சீ: ஆ! அதை நீங்கள் சொல்லவும் வேண்டுமோ? இப்போதே சளிபிடித்துவிட்டது. வெறுமனே குகையில் நுழைந்தாலே காய்ச்சல் வரும். வேட்டியையும் பறித்துவிட்டபின் கேட்கவும் வேண்டுமா? அவர்களுக்கு பார்த்தால் போதாதாம். கண்ட இடத்திலும் தொட்டுப் பார்க்க வேண்டுமாம். மூக்கில் கோலை நுழைத்தால் தும்மாமல் யாரால் இருக்க முடியும்?

பூ: எடோ, நீ தும்மியதல்ல சிக்கல். அவர்களுக்கு தேவி காட்சி கொடுத்துவிட்டுப் போவதற்கு நீ நேரம் கொடுக்கவில்லை அல்லவா? உன் குளிரை நான் போக்குகிறேன். (பூசகன் சீடனின் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு வலப்புறம் மறைகிறான். இடப்புறத்திலிருந்து வணிகர்கள் நுழைகிறார்கள்.)

இவ: டயாபென் செய்ற்றன்

டயாபென் செய்ற்றன்

யோ…யா…

டயாபென் செய்ற்றன்

முவ: நிறுத்தடா, போதும். இனி பயப்பட ஒன்றுமில்லை.

இவ: என்ன இருந்தாலும் இது ஒரு நல்ல வேண்டுதல்தான்.

டயாபென் செய்ற்றன்

டயாபென் செய்ற்றன்

யோ.. யா…

டயாபென் செய்ற்றன்

முவ: சற்று பேசாமலிரு. அந்த தீயதெய்வத்திடமிருந்து எப்படியோ தப்பிவிட்டோம்.

இவ: நான் அப்போதே சொன்னேன். கண்ட இடத்திலும் தொடவேண்டாம் என்று. தேவியர்க்கு அது பிடிக்காது.

முவ: அடேய், நாம் இங்கிருந்துதானே இப்போது சென்றோம். தேவியை காணவில்லையே. பீடம் காலியாகக் கிடக்கிறது. தேவி நாம் சென்ற வழியில் நம்மை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடியிருப்பாள். எல்லாம் கெட்டது. அந்தப் பூசகன் வந்தால் நம்மைப் பிடித்து சிறையிலடைக்கப் போகிறான். நாம் தேவி சிலையை திருடிவிட்டோம் என்று வழக்கு சொல்லப் போகிறான்.

இவ: சிறைக்குச் சென்றால் நல்லதுதானே! காவலர் இருப்பதால் தேவியர் அங்கு வர மாட்டார்கள்.

முவ: அய்யோ, யாரோ வருகிறார்கள். நம்மை பிடிக்கப் போகிறார்கள். தேவி போனது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் அங்கே போய் நிற்கிறேன்.

இவ: எங்கே?

முவ: பீடத்தில்

இவ: அய்யோ வேண்டாம். அது அசுத்தமாகிவிடும். தேவிக்கு இன்னும் கோபம் வரும். 

முவ: நீதான் முதலில் வேண்டாத இடத்தில் தடவியது. ஏறி நில். கையைத் தூக்கு. (வேட்டியை பற்றி இழுக்கிறான்)

பூ: ஆ…போகவில்லையா?

முவ: டயாபென் செய்ற்றன்

டயபென் செய்ற்றன்

யோ… யா…

டயாபென் செய்ற்றன்

(இரண்டாவது வணிகண் தேவியாக நடிப்பது பூசகனுக்கு புரிகிறது. என்றாலும் அறியாதது போலிருக்கிறான்)

பூ: என் தேவி! தாயே திரும்பி வந்துவிட்டாயா? சொர்க்கங்களே நீங்கள் கனிந்தீர்களே!

முவ: என்ன ஒரு சிலை! உயிருள்ளதுபோலவே இருக்கிறது!

பூ: பெரும் அற்புதம்தான்

டயாபென் செய்ற்றன்

டயாபென் செய்ற்றன்

யோ… யா…

டயாபென் செய்ற்றன்

இந்தச் சிலை இங்கே எப்படி வந்தது?

இந்தச் சிலை இங்கே எப்படி வந்தது? வண்ணம் பூசிய ஒரு கற்சிலையைத்தான் நான் இங்கே வைத்திருந்தேன். அது மறைந்து இப்போது உயிருள்ள ஒரு வடிவம் வந்திருக்கிறது. நான் இவளை ரகசியமாக பரிசோதிக்க வேண்டும். நான்தான் சொன்னேனே, தேவி உங்கள் முன் தோன்றுவாள் என்று. நல்ல சன்மானம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களுடைய மணம் தேவிக்கு பிடிக்கவில்லை.

(முதல் வணிகன் பூசகனுக்கு மேலும் பணம் கொடுக்கிறான். பூசகன் வெறுப்படைந்தவனாக பணத்தை தேவியின் முன் வைக்கிறான்.) ஐயா, நீங்கள் வள்ளல்தான், வணக்கம்.

முவ: ஐயா, எனக்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

பூ: முன்னால் சென்று வலதுபுறம் திரும்பி, பிறகு முன்னே சென்று வலப்புறம்…

முவ: அது வேண்டாம். அது மீண்டும் இங்கேயே கொண்டுவிட்டுவிடும்.

பூ: அப்படியென்றால் நானும் வருகிறேன்.

(பூசகன் முதல் வணிகனை கூட்டிச்செல்கிறான்)

இவ: யாரும் அறியாமல் இதை ஆழ்ந்து ஆராய வேண்டும். அந்த மனிதன் கண்டுபிடிப்பது என்னவாகத்தான் இருக்கும்? நான் இங்கு குளிர்ந்து விறைத்துபோய் நின்றிருக்கிறேன். அந்த தேவி எப்போது வந்து பிடரியை பிடிக்கப்போகிறாளோ? இங்கிருந்து வெளியே போய் என் தோழனோடு சேர்ந்து தப்பித்துவிடவேண்டும். வெளியே போகும் வழி தெரியவில்லையே! ஐயா, இங்கு யாராவது இருக்கிறீர்களா?

(சீடன் வருகிறான்.)

சீ: உங்களுக்கு என்ன வேண்டும்?

இவ: எனக்கு உங்களைப் பார்த்த நினைவில்லையே.

சீ: எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கு என்னதான் வேண்டும்?

இவ: எனக்கு வழிகாட்டித் தருவீர்களா?

சீ: மரணமுள்ள மனிதர்கள் காலைக்கொண்டு நடக்கமுடியாத வழி இது

இவ: அப்படியானால் இதோ இந்த பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.

சீ: (பணத்தை வாங்கி முடிந்துகொண்டு) வாருங்கள் ஐயா, இவ்வழி செல்வோம்.

(மறுபுறத்திலிருந்து முதல் வணிகன் நுழைகிறான்)

முவ: அந்தக் கள்ளன் என் பணத்தையும் எடுத்துக்கொண்டு போயிருப்பான் என்று நினைத்தேன். பணம் பீடத்தில்தான் இருக்கிறது. என்னதான் சொன்னாலும் என் தோழன் அப்படியே தேவிபோல் மாறித்தான் போனான். மடையர்கள் ஹா! ஹா! இந்தப்பணத்தையும் எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேறிவிட வேண்டும். ஹ! இம்முறை நிச்சயம் மாட்டிக்கொண்டோம். காவலர்தான் வந்து பிடிக்கப் போகிறார்கள். நான் என்ன செய்ய? (எவரோ வரும் ஒலி கேட்டு முதல் வணிகன் வேட்டியைக் கழற்றிவிட்டு பீடத்தில் ஏறி தேவியைப்போல நிற்கிறான். கைகளை தூக்கி வைத்துக்கொள்கிறான்)

சீ: அந்த மடையர்கள் விட்டுவிட்டுப் போன பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பூசகன் வந்து கேட்டால் தேவி எடுத்துக்கொண்டாள் என்று சொல்லிவிடுவேன். அந்தப் பெரிய சிலையையே எடுத்துச்செல்ல முடிந்த தேவியால் பணத்தையா எடுக்க முடியாது?

(சீடன் தேவதையை பார்க்கிறான்.)

என் தாயே! என்ன ஒரு அழகு! எனக்கு இதோ நம்பிக்கை வந்துவிட்டது. வெறும் கற்சிலைக்கு பதிலாக குருதியும் நீருமுள்ள தேவதை எனக்கு கனிந்திருக்கிறது. ஏ… கை எங்கே போனது?

(அதைக் கேட்டு வணிகன் கையை தூக்கிப் பிடிக்கிறான்)

அப்படி வரட்டும். தேவிக்கு செவிகளும் கேட்கின்றன. அப்படியென்றால் என் வேண்டுதல்களை எல்லாம் தேவி கேட்டிருப்பாள். (ஒரு விரலால் தேவியின் தொடையை தொட்டுப் பார்க்கிறான்) என் தேவி பேரழகி. நீ எனக்காகவே வடிவெடுத்திருக்கிறாய். (சிறிது நாணத்தோடு சிலையாய் நிற்கும் வணிகனை கட்டிப் பிடிக்கிறான்)

சீ: இதற்கு முன்னால் உனக்கு ஓராயிரம் கணவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரையும்விட நான் உன்னை விரும்புகிறேன்.

(வணிகனை இறுக கட்டிப்பிடிக்கிறான்)

(பூசகன் கடும் சினத்தோடு அரங்கில் நுழைகிறான்)

பூ: ச்சீ! விடடா! நாணங்கெட்ட பிணமே! புனிதமான தேவதையை நீ அசுத்தமாக்குகிறாயா?

சீ: இவளை நான் ஒருவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எனக்கெனவே இவள் சொர்க்கத்திருந்து உருவெடுத்து வந்தவள்.

பூ: நான்தான் இவ்விடத்து பூசகன். தேவி என்னுடையவள். என்னுடையவள் மட்டுமே. (பூசகன் வணிகனின் ஒரு கையைப் பிடித்து இழுக்கிறான். சீடன் ஒரு கையைப் பிடித்து மறுபக்கம் இழுக்கிறான்.)

பூ: விடடா, அறிவுகெட்டவனே, தேவியின் கோபம் உன் மேல் விழும்.

சீ: கோபம் உங்கள்மேல்தான் விழும். தேவி என்னவள்.

தேவி காப்பாயாக

டயாபென் செய்ற்றன்

டயாபென் செய்ற்றன்

யோ… யா…

டயாபென் செய்ற்றன்

(பூசகன் சீடனை துரத்திக்கொண்டு மேடையின் வலதுபுறம் மறைகிறான். முதல் வணிகன் அவசரமாக பீடத்தைவிட்டு இறங்கி தன் வேட்டியை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். அரைகுறையாக வேட்டியை உடுத்திக்கொண்ட அவன் மீண்டும் ஓடிவந்து பீடத்தில் ஏறி நிற்கிறான். பூசகனும் சீடனும் வந்து இருபக்கமும் நின்றபடி வணிகனின் கையைப் பிடித்து ஆளுக்கொரு பக்கமாக இழுக்கிறார்கள். அப்போது மேடையின் இடப்புறத்திலிருந்து உண்மையான வணிகன் ஏறி வருகிறான். பீடத்தின் மேல் நின்றிருப்பவனின் முகத்தை அவர்கள் கூர்ந்து பார்க்கிறார்கள். என்ன மாயம்! அது வணிகனல்ல!)

எல்லோரும்: இது யார்?

தேவி: உண்மையான தேவி. நானே பெண்டன் தேவி. பல நாட்களாக என்னுடைய இந்த குகையை பணத்தாசை பிடித்தவர்களும், கஞ்சர்களும், காமவெறியர்களுமான நீங்கள் தீயசெயல்களால் மலினப்படுத்தி விட்டீர்கள். உங்களில் எவரையும் நான் விடப்போவதில்லை. எல்லோருக்கும் தண்டனை உண்டு. நான் வழங்கும் தண்டனை நீதிப்படி இருக்கும்.

பூ: பெண்டன் தேவி, எல்லா தவறுகளையும் மன்னித்தருள வேண்டும். (என்று சொல்லி பணத்தை அவள் காலடியில் வைக்கிறான்)

சீ: என்னுடையதும் ( சீடனும் பணத்தை காலடியில் வைக்கிறான்)

முவ: என்னுடையதும் (வணிகணும் பணத்தை காலடியில் வைக்கிறான்)

தேவி: நான் உங்களுடைய உலகை சேர்ந்தவள் அல்ல. இவையெல்லாம் என் பார்வையில் மதிப்புள்ளவை அல்ல. உங்களுக்கு தண்டனை இல்லாமல் மீட்பும் இல்லை. உங்களைப் போல உள்ள பணத்தாசை பிடித்தவர்களும், உடல்வெறி கொண்டவர்களும், தீய எண்ணம் கொண்டவர்களும் என்னைப் போன்ற தீய தேவதைகளை உண்டாக்கி பூசனை செய்கிறீர்கள். இதில் எனக்கு சிறிதும் சம்மதமில்லை. நீங்கள் எவ்வளவு கேவலமான எண்ணத்துடன் ஒரு பெண்ணை கற்பனை செய்கிறீர்களோ அந்தத் தீமைகளையெல்லாம் கொண்டு ஒரு உருவம் செய்து என்னை படைத்திருக்கிறீர்கள். உண்மையில் ஒரு பெண்ணில் இருக்கும் ஞானமும் அறிவும் உங்கள் கண்களில் படுவதில்லை. அதை நான் உங்களுக்கு காட்டுவேன். காமம் கொண்டும், பணத்தாசை பிடித்தும் கண்ணிழந்த உங்களில் ஒருவன் உரக்க அலறிக்கொண்டு இந்த குகையில் அலைகிறான்.

முவ: தேவி கருணை காட்டவேண்டும்! நானொரு குடும்பி. ஒரு மனைவியும் மூன்று நிரபராதிகளான குழந்தைகளும் உண்டு.

தேவி: சற்றுமுன்பு நான் தண்டித்தவனும் அதையேதான் கூறினான். நான் உன்னை ஒரு நல்ல தாயாக்குவேன்.

பூ: ஓ! பெண்டன் தேவி, நான் உன்னைப் போற்றிவணங்கி பிரபலமாக்கியவனல்லவா? ஒருபோதும் என் மனதில் ஒரு கெட்ட எண்ணமும் வந்ததில்லை.

தேவி: தண்டனையை பெற்றபிறகு உன் மனதில் உள்ளது கடந்துபோகட்டும்.

சீ: என் தேவி, நான் உன்னை உளமார விரும்பினேன். என்னுடையவை எல்லாம் உனக்கே.

தேவி: உன் வயதிற்கு ஒவ்வாதது இது. உன் குற்றத்தை நான் திருத்துவேன்.

(மூன்றுபேரும் தேவியின் முன் குனிந்து நிற்கிறார்கள்)

தேவி: ஏ மானுடரே! ஒரு அம்மணமான தேவியை உருவாக்கி மகிழ்ந்திருக்கலாம் என்றுதானே உங்களுக்கு தோன்றியது? அப்படியென்றால் ஒரு பெண்ணில் நீங்கள் காணும் சிறப்பு அது மட்டுமே. பெண் உங்களுக்கு வெறும் களியாட்டம் மட்டுமே அல்லவா? உங்கள் ஆசைப்படி நீங்கள் என்னை படைத்தீர்கள். அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். நீயும், நீயும். 

(பெண் வடிவில் மாறிய அவர்கள் மூவரும் தங்களுடைய உடலில் தோன்றிய மாற்றங்களைப் பார்த்து வியப்பும் அச்சமும் கொண்டு நடுங்குகிறார்கள்.)

தேவி: நான் உங்களை இயல்பான பெண்களாக ஆக்கவில்லை. பெண்ணைக் குறித்து எவ்விதமான புனிதமற்ற எண்ணம் உங்களிடம் உள்ளதோ அந்த வடிவத்தையே உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். 

(தேவி மறைகிறாள். விகாரமான உருவம் கொண்ட பெண்கள் நெஞ்சிலடித்துக்கொண்டும் தலைமுடியை பற்றி இழுத்தும் கீழ்மையான சைகைகளோடு அழுகின்றனர்.)

திரை

 

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

Standard

ப்ரியமபரன்றெயதென் ப்ரியம்; ஸ்வகீய
ப்ரியமபரப்ரியமிப்காரமாகும்
நயமதினாலெ நரன்னு நன்ம நல்கும்
க்ரியயபரப்ரியஹேதுவாய் வரேணம்

(ஆத்மோபதேச சதகம் : பாடல் 22)

பிறன்நலம் என்நலமாகும்
தன்நலம் பிறன்நலமாகும்
தன்நலம் பயக்கும் செயலெல்லாம்
பிறன்நலம் கருதல் வேண்டும்

ஒரு புழுவானாலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியானாலும் ஒரு ஜீவராசியின் வாழ்வை கவனித்தால் அதன் அனைத்துச் செயல்களும் இன்ப வேட்கையால் தூண்டப்படுபவையே என்பது தெரியும். தூண்டல்கள் தன்னுணர்வுடனும் தோன்றலாம், நனவிலி நிலையிலும் தோன்றலாம். இங்கு அமர்ந்திருக்கையில் நிலைமாறி அமர்வதுகூட இன்னும் வசதியுடன் இருப்பதற்காகத்தான். நீங்கள் இருமுவதும் ஒரு எரிச்சலைநீக்கி ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகத்தான். நமது சிறு அசைவுகூட மேலும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால், வாழ்வின் முக்கிய இலக்கே மகிழ்ச்சிதான்.

மகிழ்ச்சியை தேடுவதிலும், அதை அடைவதிலும் நமது கருவிகளாக பயன்படுபவை புலன்களும், புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், மனமும். எதையாவது செய்யவேண்டும் என்று நம் கைகள் அரிக்கின்றன. எங்காவது வெகுநேரம் அமர்ந்துவிட்டிருந்தோமென்றால் எழுந்து நடக்கலாம் என்று தோன்றுகிறது. யாருடனாவது பேசாமல், நம் எண்ணத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் வெகுநேரம் மௌனமாக இருக்க நம்மால் இயலாது. ஐந்து செயலுறுப்புகளும் புலனுறுப்புகளும் எதிலாவது ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்வுறுப்புகள் செயல்படுவதன் மூலம் நாம் நம் மகிழ்ச்சியை அடைகிறோம்.

நமக்கு ஐம்புலன்கள் இருப்பதால் ஐந்து வகையான மகிழ்ச்சி இருக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமே பல்லாயிரக்கணகான வகையில் பொருட்கள் உள்ளன. மிகச்சிறிதாக உள்ளதை, மிகப்பெரிதாக உள்ளதை, ஒளியுடன் இருப்பவற்றை, இருண்டவற்றை, வண்ணமயமாக இருப்பனவற்றை, வண்ணமற்றவற்றை நாம் காண்கிறோம். அதே போல் ஒவ்வொரு புலனுறுப்பும் தன்னுடையதேயான பன்னிறம் கொண்ட உலகை கொண்டிருக்கின்றன. நமது உணர்ச்சி மறிவினை (affectivitiy) காணும் மனதிற்கும் பார்க்கப்படும் பொருட்களுக்கும் நடுவே அமைந்துள்ளது.

மகிழ்ச்சிக்கு மெய்யான இரு காரணிகள் உண்டு. ஒன்று வெளித் தெரிவது மற்றொன்று மறைந்திருப்பது. முதலில் வெளித்தெரிவது என்ன என்று பார்ப்போம். நம் மனதில் உள்ளுறையாக பல வேட்கைகள் உண்டு. அவை நிறைவேறுவதற்கு சாதகமான சூழலை எதிர்பார்த்து அவை காத்திருக்கின்றன. பசி என்பது இந்த வகையான ஓர் உயிரியல் வேட்கை. பசித்த ஒருவர் உணவு கிடைக்கும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார். அது ஒரு நனவிலித் தூண்டலாக தொடங்கி தன்னுணர்வாகலாம். அதனால் சமையலறையையோ அல்லது உணவகத்தையோ தேடிச் செல்கிறோம். உள்ளே இருப்பது பசி, வெளியில் உள்ளது உணவின் இருப்பு. இரண்டும் இணைகையில் நாம் நிறைவடைகிறோம்.

ஆனால் எதையோ வாயில் அடைத்துக்கொண்டால் போதும் என்று நாம் நினைப்பதில்லை. சுத்தமான மேசையில், நல்ல பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள உணவு அன்புடன் பரிமாறப்படவேண்டும் என எண்ணுகிறோம். பார்ப்பதற்கும் உணவு நன்றாக இருக்க வேண்டும், மணமும் இனியதாக இருக்க வேண்டும். இந்திய மக்கள் தம் கைகளால் உண்பதை ரசித்து செய்கிறார்கள். விரல்களால் உணவு பிசையப்படும்போது அதில் ஒரு தனி உணர்ச்சி உள்ளது. வாயை சென்றடைவதற்கு முன்னால் அதை தொடுவதில் மகிழ்கிறார்கள். பின் அது சுவைக்கப்படுகிறது. இறுதியில் உணவு சத்தாகிறது, நம்முள் வளர்சிதை மாற்றம் அடைந்து நமக்கு திருப்தியும் நிம்மதியும் ஏற்படுகிறது. பசியை போக்கிக் கொள்வதெனும் ஒரு சிறு செயலில் இத்தனை வகையான இன்பங்கள் உள்ளன.

ஒரு விழைவை நிறைவுபெறச் செய்வதில் பல தெரிவுகள் உள்ளன. அதன் மூலமே நாம் மெய்யான மகிழ்வை எய்துகிறோம். ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் உண்ண விரும்புகிறோம், ஒரு குறிப்பிட்ட சிலரால் பரிமாறப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட முறையில் உண்ண வேண்டும் என்றும் விழைகிறோம். சிலருக்கு உணவு கொதிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும், சிலருக்கு வேகவைத்தல் பிடிக்கும், சிலர் வறுக்கப்பட்டதை விரும்புவர். பொருளின் தரம் மகிழ்ச்சிக்கான நிபந்தனையாகிறது. இதனால் மகிழ்ச்சி என்பது நமக்குள் வரும் ஒரு புறவயக் காரணியாக கருதப்படுகிறது. இதனால் அது நிபந்தனைக்குரிய ஒன்றாகிறது. மகிழ்ச்சி ஒரு புறவயக் காரணி என்று நினைப்பதால் நாம் குழம்பிவிடுகிறோம் என்கிறார் நாராயண குரு.

தெளிவற்ற பொருளுடைய ‘அபரன்’ எனும் சொல்லைக் கொண்டு இப்பாடலை துவங்குகிறார் குரு. சிறிதும் அறிந்திராத ஒருவரை நீங்கள் காண்கையில் அவர் உங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறார். உங்களுக்கு உங்கள் உடல் இருக்கிறது, அவருக்கு அவருடையது. இருவரும் ஒருவரையொருவர் காண்கையில்  ஏதோ ஓர் இனிமையை நீங்கள் உணர்கிறீர்கள். அம்மனிதர் மகிழ்ச்சி தரும் பொருளாகிறார். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டு அண்மையை ரசிக்கிறீர்கள். இருவரும் நான் இன்னார் என்பதை சொல்லிக்கொள்கிறீர்கள். அங்கு இரண்டு ‘நான்’-கள் உள்ளன. நான் என்பதும் நீ என்பதும். நீ என்பதும் நான் என்பதும். இரு வேறு மனிதர்கள். பின்னர் “இப்படி உட்கார்ந்து நாம் பேசுவோம்” என்கிறீர்கள். இப்போது அந்த ‘நான்’ என்பது மாறிவிட்டது. இரண்டு ‘நான்’-கள் இருந்த இடத்தில் ‘நாம்’ இருக்கிறது. மற்றொருவர் இப்போது மற்றொருவரல்லாதாகிறார். பரன் என்பது வேறொருவர், அபரன் என்பது வேறொருவரல்லாதவர். நானும் நீயும் நாம் என மாறிய பிறகு வேறொருவர் பிறிதொருவரல்லாதவராகிறார். குரு பயன்படுத்தும் சொல்லின் உட்பொருள் இதுவே. நாம் இனி பிறிதொருவரல்லர்.

“நாமிருவரும் ஒரு உணவகத்திற்குச் சென்று ஏதாவது உண்போம்.” இருவரும் செல்கிறீர்கள். “உனக்கு என்ன வேண்டும்?” என ஒருவர் கேட்கிறீர்கள். “உனக்கு என்ன பிடிக்கும்?” “இல்லை, இல்லை. உனக்கு என்ன பிடிக்கும் சொல்.” “நாம் இதை சாப்பிட்டால் என்ன?” “சரி, இருவருமே அதையே சாப்பிடுவோம்.” அந்த உணவை வரவழைத்து இருவரும் உண்கிறீர்கள். ஒருவர் மற்றவரின் விருப்பத்திற்கேற்றார்போல் நடந்துகொள்கிறீர்கள். அடுத்தவருக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிய ஒரு ஐந்து நிமிடங்களாவது கடந்துவிடும். ஏனெனில் இங்கு காதலுக்கான தியாகிகளாக இருவரும் ஆகிவிடுகிறீர்கள். அழகிய விஷயமிது.

நடுத்தர வயதுடைய இரு பெண்கள் சேர்ந்து வாழ்வதைப்பற்றிய நாவலொன்றை நான் வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இன்னொருவர் காலையில் எழுவதற்கு முன்பாக எழுந்து அவருக்கு தேநீர் தயாரித்து கொண்டுசென்றுவிட வேண்டும் என்பதற்காக வெகு முன்னதாக எழுந்து சமையலறைக்கு செல்கிறார். அங்கு மற்றவர் ஏற்கெனவே இவருக்கென தேநீர் கலந்துகொண்டிருப்பதைப் பார்த்து வியக்கிறார். கதை முழுவதும் ஒருவர் மற்றவருக்கென இதுபோன்ற சிறுசிறு தியாகங்களை செய்துகொண்டே இருக்கின்றனர். இதுவே ஸ்வகீய ப்ரியம் எனப்படுகிறது. என் மகிழ்ச்சி உங்களுடையதாக இருக்கட்டும்; உங்களுடையது என் மகிழ்ச்சியாக. மகிழ்ச்சியின் இந்த பொதுத்தன்மையே இருவரை இணைக்கிறது; அதன் பிறகு அங்கு மற்றவர் என்பதே இல்லை.

உள்ளுறையும் விழைவால்தான் நாம் ஒன்றை வேட்கிறோம். இருவர் இணைவதில் அன்பு செலுத்துவதற்கான தேவையும் உள்ளது; அன்பு செலுத்தப்படுவதற்கான தேவையும் இருக்கிறது. உண்பதற்கும், ஏதோ ஒரு வேலையை செய்வதற்கும், துணையை கண்டடைவதற்கும் தேவை இருக்கிறது. இந்தத் தூண்டல்கள் அனைத்துமே விழைவுகளிலிருந்து எழுபவை. ஒரு விழைவு (urge) தீவிரமாகும்போது அது வேட்கையாகிறது (desire). வேட்கை அடுத்த நிலையில் விருப்பாகிறது (wish), விருப்பு மனத்திட்பமாகிறது (will). மனத்திட்பம் செயலாகிறது. ஆக, இது வேட்கையில் தொடங்கி செயலில் முடிகிறது. நமது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு தூண்டல் உள்ளது. புறத்தே உள்ள பொருட்களுடனோ பிற மானுடருடனோ தொடர்புடையது. ‘ப்ரியம்’ என்பது இம்முழுச்செயல்பாட்டையும் குறிப்புணர்த்துவது.

நமது செயலில் புறத்தே உள்ள பொருள்களும் மனிதர்களும் இருப்பார்கள் என்றால் அது ஒருதலைபட்சமானதல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். செயல் அமைப்பில் நாம் இருபக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஒரு விலங்கு தன் விழைவால் தூண்டப்படுகிறது; அது இருபக்க ஏற்பு குறித்தெல்லாம் எண்ணுவதில்லை. தனக்கு இன்பம் அளிப்பதை நோக்கி ஒருதலைபட்சமாக பாய்கிறது.

வன்புணர்பவர் தனக்கு பலியானவருக்கு செய்வதையே காதலரும் செய்கின்றனர். உடல்ரீதியாக அவர்கள் செய்வதில் எந்த வேறூபாடும் கிடையாது. ஒன்று ஒருதலைபட்சமானது மற்றொன்று இருபக்க ஏற்புடையது என்பதே இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது. வன்புணர்வில் மற்றவருடைய மகிழ்ச்சி கருத்தில் கொள்ளப்படுவதில்லை. தனது மகிழ்ச்சியை மட்டுமே ஒருவர் கருதுகிறார். எழிலான ஒன்று அருவருக்கத்தக்க குற்றமாகிறது, பலியானவரில் அச்சத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது.

மகிழ்ச்சிக்கு மறைந்திருக்கும் காரணி ஒன்றும் உண்டு. வெறும் புலன்களும், மனமும், உள்ளுறை விருப்புகளும் மட்டுமல்ல நாம் என்பது. இவற்றிற்கெல்லாம் பின்னால், அனைத்தும் நமக்கென உள்ளன என்று உறுதிகூறும் தன்னொளி ஒன்றுள்ளது. அதுவே உண்மையில் ஆதி இருப்பு. அனைத்திருப்புக்கும் அதுவே நிலமாக உள்ளது. இந்த இருப்பினால்தான் எதுவுமே இயல்கிறது. இருந்தும் நாம் ஒரு மனிதரின் இருப்பையோ பொருளின் இருப்பையோதான் காண்கிறோம். இருப்பு என்பதை அல்ல. பொது இருப்பில் நாம் பங்குபெறுவதனால்தான் நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இந்த இருப்பே அறிவின் இருப்பு, பெரும் நனவின் இருப்பு, ஒளிரும் இருப்புணர்வின் இருப்பு; அறிபவர், அறியப்படுவது, அறிவு என அனைத்தையும் தன்னுள் கொண்டது.

ஒரு பொருளின் இருப்புக்கும் மற்றொரு பொருளின் இருப்புக்கும் இடையே ஒருமை ஒன்றுள்ளது. உணவில் உங்களுக்கு நான் ஒரு ஆப்பிளையோ, ஒரு பேரிக்காயையோ உங்களுக்கு அளிக்கலாம். ஏனெனில், ஆப்பிள் இருக்கிறது, பேரிக்காய் இருக்கிறது, உணவு இருக்கிறது. உங்களிடம் கவித்துவமாக “இதோ உங்களுக்கு ஒரு ஆப்பிள், ஒரு பேரிக்காய், எனது அன்புடன்” என்று நான் கூறுகையில் நீங்கள் பழத்தை காண முடியும். உணவில் உள்ள ‘அன்பு’ எனப்படுவதை நீங்கள் பார்க்க முடியாது. “நான் உங்களுக்கு என் அன்பை அளிக்கிறேன்” என்பது ஒரு கருத்து. உணர்வுபூர்வமாக இதைக் காணும் பிறிதொருவர் தன்னகத்தே அதற்கு எதிர்வினையாற்றுகிறார். அதே உணர்வுடன் “ஆம், இது அன்புடன் வழங்கப்படுகிறது” என்கிறார். பேரிக்காயின் இருப்பும் அன்பின் இருப்பும் ஒரே தளத்தில் உள்ளவை அல்ல. ஆனால் உங்களிலும் பிறிதொருவரிலும் உள்ள அன்பு குறித்த அறிதல் காரணமாக ஓர் ஒருமை அங்கிருக்கிறது.

பேரிக்காயும் ஆப்பிளும் தூய இருத்தலியல் அறிவாக ஒன்றிணைந்து வரலாம், அவற்றுடன் அளிக்கப்படும் அன்பு நனவனுபவமாக. இருத்தலும் நனவும் வெவ்வேறானவை என்றாலும் அவை ஒன்றாகின்றன. நீங்கள் பார்க்கும் எதிலும், உணரும் எதிலும் உங்களது அனைத்துக் கருத்துக்களும், எண்ணங்களும், சமூக-ஒழுக்க-ஆன்மீக வரலாறும் உங்களது பார்வையுடன் சேர்ந்துகொள்கின்றன. எனவே, அனைத்து இருத்தலியல் அனுபவங்களும் தானாகவே நனவனுபவங்களாக மாறிவிடுகின்றன.

இதில் மற்றொரு அம்சமும் உள்ளது. ஒட்டுமொத்த இருப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய அறிதலெனும் இவ்வுணர்வு, ஒரு மகிழ்ச்சி எவ்வாறு அனைத்தையும் ஊடுருவுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. கதிர்மறைவை காண்பதில், நல்ல காலையுணவை உண்பதில், கவிதை வாசிப்பதில், எழுதுவதில், ஓவியம் வரைதலில், இனிய இசை கேட்பதில் ஐம்புலன்கள் மூலமும் ஐந்து செயலுறுப்புகளைக் கொண்டு செய்பவற்றின் மூலமும் நாம் அடையும் மகிழ்ச்சி மகிழ்வெனும் பிரபஞ்ச உணர்வின் பகுதிகளே. நீங்களே அதுவாகிறீர்கள். உங்களது மெய்யான இயல்பை அகத்திலிருந்து நீங்கள் உணர்கையில் பிறிதென்றொன்று இருக்கவியலாது. ஏனெனில், பிறிதெனத் தெரிவது புறவய விரிவால் தோன்றுவது. உண்மையில் அதுவும் ஒரே இருப்பின், ஒரே இருப்புணர்வின், ஒரே மகிழ்வின் பகுதியே. ஆகவே, பரன் என்பது – பிறிதொன்றென்பது – இல்லாமலாகிறது. பிறிதென்பது ஏதுமில்லை, அது என்பது மட்டுமே உள்ளது. இதை நம் கவனத்திற்குக் கொண்டு வரும் குரு “அது நீயே” என்கிறார்.

தன்னை அறிவதன் மூலம் பிறிதொன்றில்லை என்பதை நாம் அறிகிறோம். எனது இடது கையை என் வலது கையால் கிள்ளிவிட்டு, இரண்டும் வெவ்வேறு என்பதால் அதை உணராமல் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாது. வலியை நான் உணரவே செய்வேன். என் வலக்கையில் எனது இடக்கையை பற்றிக்கொள்கையில் தோன்றும் மெல்லுணர்வும் மகிழ்ச்சியும் ஏதோ ஒரு கையுடையது அல்ல; என்னுடையது. ஆக, உள்ளிருந்து அனைத்திலும் உள்ள ஒருமையை காண்கையில் என் மகிழ்ச்சி பிறர் மகிழ்ச்சியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதில்லை. தன்னை உணர்ந்த ஆன்மாவுக்கு, உயிர்த்தெழுந்த ஒருவருக்கு அவர் செய்யும் எதுவும் சுய அன்பின் வெளிப்பாடே. தன்முனைப்பை மையப்படுத்திய அன்பல்ல அது; முழுமுதல் அகம் தன்மீது கொண்ட அன்பு அது.

இறையால் படைக்கப்பட்டது பிரபஞ்சம் என்றால், அது இறை தன்னுடைய இன்பத்திற்காக படைத்துக்கொண்டது, பிற எவருடைய மகிழ்ச்சிக்காகவும் அல்ல. இதனால்தான் பிருகதாரண்யக உபநிடதம், “எக்கணவனும் தன் மனைவியை மனைவி என்பதால் விரும்புவதில்லை, ஆன்மாவின் இன்பத்திற்காகவே விரும்புகிறான். எந்த மனைவியும் கணவனை விரும்புவது கணவன் என்பதற்காக அல்ல, ஆன்மாவின் இன்பத்திற்காகவே. எந்தப் பெற்றோரும் குழந்தையை குழந்தை என்பதால் அல்ல, ஆன்மாவின் இன்பத்திற்காகவே விரும்புகின்றனர். எம்மனிதனும் செல்வத்தை செல்வம் என்பதால அல்ல, ஆன்மாவின் இன்பத்திற்காகவே விரும்புகிறான்” என்கிறது. இதில் எங்கும் தன்முனைப்பு ஆன்மாவாக கூறப்படவில்லை. அனைத்திலும் உறையும் பிரபஞ்ச ஆன்மாவே குறிப்பிடப்படுகிறது.

அப்படியென்றால், இரண்டு விஷயங்கள் நம்மை ஒன்றாக இணைக்கக் கூடும். ஒன்று நம்மில் உள்ள ஏதோவொரு விருப்பமோ விழைவோ நிறைவேறுவது, மற்றொன்று ஆன்மாவின் பிரபஞ்சத்தன்மை. யேசுவோ புத்தரோ உலகில் தோன்றி செயலில் இறங்குகையில் மானுடத்தின் பெருந்துயர் அவர்களில் நிறைகிறது. அவ்வலியையும் துயரையும் போக்க அவர்கள் செயலாற்றுகிறார்கள். இதனை ஒருவர் தன்னைச் சார்ந்து ஆற்றும் செயல்களுடன் ஒப்பிட்டும் முரண்படுத்தியும் காணலாம். ஒருவர் மருத்துவராவதில் அடையும் இன்பத்தை எடுத்துக்கொள்வோம். அது அவருள் உள்ள செயலூக்கத்தை நிறைவடையச் செய்து பிறருக்கு சேவை செய்வதன் மூலம் தன் சுயவெளிப்பாடை கண்டடையச் செய்கிறது. அத்துடன் அது அவரது பிழைப்புத் தொழிலாகவும் தன் திறனை வெளிப்படுத்தும் வழியாகவும் இருக்கிறது. ஆன்மா குறித்த ஆழ்ந்த அகநோக்கு இல்லாத எளியவரான ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஊக்க விழைவு நிறைவடைதல் மட்டுமே நிகழ்கிறது.

இன்னொருவர் நோயுற்றவர், அவருக்கு நோய்நீங்கி குணமடைய வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவரிடம் வரும் அவர் “என்னை குணப்படுத்துங்கள். நான் நோயால் அவதியுறுகிறேன்” என்கிறார். அதற்கு மருத்துவர் “உமக்கு சேவை செய்வதே எனக்கு பெருமகிழ்ச்சி. நீங்கள் நலம் பெறுவதையே விழைகிறேன். நீங்கள் அவதியுறக்கூடாது” என்கிறார். இதனால், குணமடைவதற்கான நோயாளியின் உடல்ரீதியான தேவையும் சேவைபுரிய வேண்டும் என்ற மருத்துவரின் தேவையும் இருவரையும் ஒன்றிணைக்கின்றன. அவர்கள் ஒரு இருதுருவமுனைப்பில் நுழைகின்றனர். இனி அவர்கள் இரு வேறு பருண்மைகள் அல்ல, இருவரும் பயன்பெறும் சிகிச்சை எனும் ஒரு பொது நிகழ்வை சேர்ந்தவர்களாகின்றனர். சேவை புரிவதால் மருத்துவரும் சேவையை பெறுவதால் நோயாளியும் மகிழ்வடைகின்றனர்.

கிறித்துவைப் போல், புத்தரைப் போல், கிருஷ்ணனைப் போல் மருத்துவருக்கெல்லாம் மருத்துவரானவரின் மனம் அம்மருத்துவருக்கு இருக்குமென்றால் அவர் தன் செயலை வாழ்வாதாரத்திற்கான தொழிலாகவோ திறன் வெளிப்பாடாகவோ மட்டும் பார்க்க மாட்டார். நோயுற்ற தன் உடலை, பிரபஞ்ச உடலை, குணப்படுத்தும் செயலாகவே காண்பார். அவர் தன்னைத் தானே நோயிலிருந்து குணப்படுத்திக் கொள்கிறார். நோயாளியும் இதே உளப்பாங்கு கொண்டிருந்தால் பிரபஞ்சக் கருணையே மருத்துவராக வடிவம் கொண்டு செயல்படுவதை காண்பார். மருத்துவர்பால் மட்டுமன்றி இவ்வுலகெனும் உருவம் கொண்டெழுந்த பிரபஞ்சக் கருணையின்பால் கொண்ட நன்றியால் நிறைந்தவராகிறார்.

ஒரு பொறியாளருக்கு அவரது திறனும் அதை செயல்படுத்தும் தேவையும் இருக்கிறது. அவர் ஒரு எந்திரத்தை வடிவமைக்கிறார். அதை செய்து விற்கிறார். ஒருவர் செய்ய வேண்டிய வேலையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டி அவருக்காக அதை நிறுவுகிறார். அந்த நபர் பொறியாளரின் சேவையால் மகிழ்கிறார், பொறியாளர் தன் பணியை செம்மையாகச் செய்ததில் மகிழ்கிறார். தச்சரோ, கொல்லரோ, குழாய் பணியாளரோ, ஆசிரியரோ எவராக இருந்தாலும் நாம் ஆற்றுவதில் இருதுருவ முனைப்பு ஒன்றுள்ளது. அந்த இருதுருவ நிலையில் முரணியக்க இணையர்களாகிறோம். அதில் நமது பொது விருப்பம் நம்மை ஒன்றிணைக்கிறது. பின், பிறிதொருவர் என்பதில்லாமலாகி ஒரு பிணைப்பு நிகழ்கிறது. ஆக, உள்ளுறை விருப்புகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல் அவை நிறைவேறுவதன் அடிப்படையிலும் நாம் இணையலாம்

அறிவரான நாராயண குரு “ஓ மானுடனே! பிறிதொன்றுளது என்று எண்ணாதே. அது ஒரு தோற்றமே. உனது அனைத்துச் செயல்களும் பிரபஞ்ச மகிழ்வை, மகிழ்வின் பிரபஞ்ச ஈடேற்றத்தை நோக்கியே செய்யப்படுவதாக!” என்கிறார். ஒரு செயலில் ஈடுபடுகையில் உன் இணையை தேடு என்கிறார். அது மேலிருந்து வருகிறது. அந்த இணை நீயேதான் என்று கீழிருந்து நீ உணர்கிறாய். இவ்வாறாக நீ இரட்டிப்புத் திருத்தம் அடைகிறாய், அனைவருக்குமான மகிழ்ச்சி உறுதியளிக்கப்படுகிறது.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

Standard

ப்ரியமொரு ஜாதியிதென்ப்ரியம் த்வதீய
ப்ரியமபர ப்ரியமென்னநேகமாயி
ப்ரியவிஷயம் ப்ரதி வன்னிடும் ப்ரமம்; தன்
ப்ரியமபர ப்ரியமென்னறிஞ்ஞிடேணம்

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 21)

ஒன்றென இருக்கும் விருப்பை 
எனதென உனதென பிறனதென
பிரிக்கையில் வருவது குழப்பம்
தன்விருப்பே பிறன் விருப்பும் 

அனுபவம் என்பது அக அனுபவம் புற அனுபவம் என்று இருவகைப்படும். புற உலகில் நாம் பொருட்களுடனும், மக்களுடனும், பல்வேறு வகையான நிகழ்வுகளுடனும் இடைவினையாற்றுகிறோம். அகத்தில் எண்ணங்களை ஓம்புகிறோம்; நினைவுகளை மீட்டெடுக்கிறோம்; சில புலனனுபவங்களை பெறுகிறோம். இவ்வெல்லா அனுபவங்களையும் அனுபவம் எனும் வகைமையில் தொகுக்க முடியும்.

ஒவ்வொன்றிலும் எழுவாய் என்பது ‘நான்’ எனப்படுவதே. வெளியில் இந்த ஆரஞ்சை நான் காண்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கொரு எண்ணமுண்டு; அது எனக்கு மிகவும் அணுக்கமானது. இங்கே எண்ணம் என்பது அகத்தில் இருக்கிறது; ஆரஞ்சு எனக்கு புறத்தே உள்ளது. ஆயினும் இரண்டிலும் எனக்கு பற்று உண்டு. புறத்தே உள்ள ஒரு பொருளை நான் விரும்பலாம்; அதை நீங்கள் விரும்பாமலிருக்கலாம். எனக்குப் பிடித்த என் எண்ணமொன்று நீங்கள் விரும்பத்தகாததாய் இருக்கலாம். உங்களுக்கு வேறொரு எண்ணம் பிடித்திருக்கலாம். தற்சார்புடைய உணர்விலோ கருத்திலோ புறப்பொருளிலோ உங்கள் பற்று இருக்கலாம். இப்போது நம்மிடம் உள்ளவை மூன்று – நான், என் எண்ணம், நானல்லாதது (அ) எனக்குப் புறத்தே உள்ளது.

இன்னுமொரு கூறும் உண்டு. நம்முள் ஒரு தூய ஒளி, தூய அகம் உண்டு. அது இப்படைப்பில் பல விதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. முதல் பாடலில் அது அனைத்துமாக உருமாற்றம் பெறும் அண்டக் கருவாக கூறப்பட்டது. பிறகு அது இருப்புணர்வு எனும் வான்விரிவில் ஒளிரும் தூய அறிநிலை என்னும் கதிரவனுடன் ஒப்பிடப்பட்டது. பின்னர் அது ஆழிக்கருவூலம் போன்றது எனப்பட்டது. அறிபவனையும், அறியப்படுவதையும், அறிவையும் ஒன்றாக்கும் அனைத்து அறிவிற்கும் பின்னால் இருக்கும் அறிவெனப்பட்டது. தொடர்ந்து அது ஒருபோதும் ஏற்றப்படாத இனி அணைக்கப்பட மாட்டாத விளக்கெனப்பட்டது. ஒளிதருவது மட்டுமன்றி பொருட்களை ஒளிரச்செய்யும் அது எப்போதும் முடிவிலா சாட்சியாக பார்த்துக்கொண்டே இருக்கிறது.

அடுத்து, அனைத்து மாற்றங்களுக்கும் பின்னால் உள்ள மாற்றமில்லா ஒற்றை மெய்மையாக அதை கண்டோம். ஓம் எனும் மந்திரத்தின் மறையை உணர்ந்து தியானிப்பவனுக்கு வெளிப்படுத்தப்படும் மெய்மை என புரிந்துகொண்டோம். வாழ்வின் எல்லா கிடைநிலை ஆர்வங்களையும் அனுபவத்தால் செங்குத்தாக்கும் வகையில் நம் அகத்தை நிறைக்கும் பேரொளியாக அது காட்டப்பட்டது.

தனித்தன்மை எனும் மலர்களால் நிறைந்த இயல்நிகழ்வான கொடியின் பற்றிழைகளால் பற்றப்படாமல் வாழ்வெனும் மரத்தினடியில் அமர்ந்த கண்டுகொண்டிருக்கும் அகத்தின் சார்புகொள்ளா விழிப்புநிலையாக அது விளக்கப்பட்டது. பிறகு அதனை ஒருமையாக, ஒருவர் பிறிதொருவரை புரிந்துகொள்ள வகைசெய்யும், வெவ்வேறு பொருட்களை இனம்காண்பதிலுள்ள சமச்சீர் மெய்மையாக விளங்குகின்ற இணைக்கும் கூறாக கண்டோம். மேலும், நமக்குள் ‘நான்’ எனும் ஒரு அடையாளத்திலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும் தொடர்ச்சியை கண்டோம். அனைத்து தனித்தனி ‘நான்’களின் கதம்பத்தினூடாகச் செல்லும் பொன்னூல் அது. இவ்வகையில் வெவ்வேறு மனிதர்களின் ‘நான்’ எனும் அறிநிலையில் உள்ள இணைக்கும் கூறு அது. பிறகு, உடல் வீழ்ந்து மட்கிய பின் அதனுடன் தொடர்புற்றிருந்த நனவு முழுமையும் கச்சிதமும் அடையும்பொழுது தோன்றும் மெய்மை என அதை கண்டோம். அது ஒருபோதும் அழிவதில்லை: கச்சிதம் அடைகிறது. இயற்கையின் முக்குணங்களால் பாதிக்கப்படாத  இறையைப் போன்றே அது இருப்பதை கண்டோம். அகத்தில் உதிப்பனவற்றையெல்லாம் அவ்விறைக்கே அளிக்கும் வகையில் அன்பும் பக்தியும் கொண்டு அதை சரணடையும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். இவ்வாறாக, மாறா மெய்மையுடன் நாம் ஒன்றென இணைந்திருக்கிறோம்.

நமக்கும் இம்முழுமை அனுபவத்திற்கும் இடையே வருவது எது? புறத்தே உள்ளவற்றின் மும்மடிப்புகள். முன், நிகழ், எதிர்; இங்கு, அங்கு, உலகில் அகலே உள்ள வெளியும் வானும்; எல்லாம் நம் அனுபவத்தை மூன்றாகப் பகுப்பதற்கென அறிமுகம் செய்யப்படுவன. அறிபவன், அறியப்படுவது, அறிவு என்றும்; துய்ப்பவன், துய்க்கப்படுவது, துய்ப்பு என்றும்; நடிகன், நடிப்பு, நடிக்கப்படுவது என மும்முனை அனுபவங்கள் உள்ளும் புறமும் நிகழ்கின்றன. ஒருங்கிணைந்த புரிதல் கொண்ட ஒருவரால் புறமும் அகமும் ஒன்றேபோல் இருப்பதை காணமுடியும். இந்த ஒருமையையே நாம் மீண்டும் மீண்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

நம் வாழ்வு கூறுபடுத்தப்பட்டு பொருளற்ற வகையில் துண்டுகளாக எங்கும் சிதறிக்கிடக்கையில், இந்த ‘ஒன்றின்’ ஒளி வெள்ளம் போல் பெருகி நம் பிரிவுகளை திணறடிக்கச் செய்து ஒவ்வொரு நிகழ்வையும் பெரும் பொருள்கொண்டதாக ஆக்கக்கூடும். ஒவ்வொரு மணல்துகளும் மதிப்பிடமுடியாத முத்தாகிறது. இதுவே மெய்யான மகிழ்வெனப்படுகிறது. இதையுணர்கையில் நீங்கள் காலம் எனும் ஒழுக்கை கடந்தவராகிறீர்கள். ஒவ்வொன்றும் காலமற்றதாக, நிரந்தர மெய்மையாகிறது.

அதே உலகில், பெரும் மெய்மை அடைந்தோர்கூட மெய்மையின் வெவ்வேறு கூறுகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதையும் நாம் கண்டோம். ஒருவர் காரணமே மெய்யென்றும், ஒருவர் காரியமே மெய்யென்றும், மற்றொருவர் இரண்டுமல்ல அதிலிருந்து நீங்கள் பெறுவதே மெய்யென்றும் கூறுவர். இவ்வாறான மாறுபட்ட அணுகுமுறைகளே மக்களிடையே பூசல் எழக் காரணமாகின்றன. நாராயண குரு இந்த ஆபத்தை நமக்குக் காட்டிய பிறகு இவ்வுலகு அச்சமூட்டக்கூடியதென்பதால் கவனமாக இருக்கும்படி எச்சரித்தார். இருண்டதாக, அச்சமூட்டுவதாக, சோர்வூட்டக்கூடியதாக இருக்கக்கூடும். அச்சத்தின் இருண்ட வர்ணங்களால் உங்கள் அகம் கறைபட்டிருக்கும் என்றால், அந்த அகத்தைக் கொண்டுதான் நீங்கள் உலகை பார்க்கிறீர்கள் என்பதால், இவ்வுலகும் பெரிதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும். மனதில் அத்தகைய கறையேதும் இல்லாதபோது இவ்வுலகை புத்தம்புது மலர்கள் கொண்டு அழகுறத் தொடுத்த மாலையாக காண்பீர்கள். அப்போது இதன் வடிவும், செயலும், விழுமியமும் இவ்வுலகை அன்பு நிறைந்ததாக பெரும் ஞானமெனக் கொண்டாடத்தக்க மெய்மை நிறைந்ததாக ஆகிறது.

ஆத்மோபதேச சதகத்தின் முதல் இருபது பாடல்களில் நாராயண குரு காட்டிய சில உவமைகள் இவை.

இப்போது மீண்டும் நம் அகத்தே உள்ள ஒளியை காணும்படி கூறுகிறார் குரு. அது எப்போதும் சிறிதும் குன்றாமல் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அதில் பற்சக்கரங்களில் உள்ளது போல் ஒரு இயங்கமைவு உள்ளது. ஒளி பிரகாசிக்கவோ மங்கவோ கூடும். சற்று நேரத்திற்கு அணைத்து வைக்கவும் படலாம். அவ்வாறு நிகழும்போது நீங்கள் தமோ நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்குள் ஒளி இருந்துகொண்டுதான் இருக்கிறது; எனினும் நீங்கள் இருளில் இருப்பதாகத் தோன்றுகிறது. கைவிடப்பட்டவராகிறீர்கள். பின்னர் சிறிதாக அதை ஏற்ற முடியும். அது உங்களுடையதேயான சிற்றொளி. அதை முழுமையாகவும் ஒளிரச் செய்ய முடியும்.

உங்களது ஒளியை நீங்கள் ஏற்றும்போது சுற்றியிருக்கும் கண்ணாடி மூலமாக செய்வதுபோல அது உங்கள் அக-புற உலகை ஒளிரச் செய்கிறது. அந்தக் கண்ணாடி என்பது உங்கள் அகம். தெளிந்த பார்வையை அளிக்க அது நம்பத்தகுந்த கருவி அல்ல; பல வழிகளிலும் அது மங்கலாக்கப்பட்டது. முந்தைய பதப்படுத்தல்களால் உங்களை அடைந்துள்ள உங்களது விருப்புகளால் அது ஏற்கெனவே பூச்சுகள் கொண்டது. இப்போது நீங்கள் எதிர்கொள்ளும் எதை குறித்தும் நீங்கள் ஏற்கெனவே இன்பமோ துன்பமோ அடைந்துள்ளீர்கள். எனவே அதை விரும்பவோ வெறுக்கவோ செய்கிறீர்கள். இத்தகைய பல முன்முடிவுகளும் முன்பதப்படுத்தல்களும் உங்களில் ஏற்கெனவே உள்ளன. பதப்படுத்தல்களும் முன்பே செய்யப்பட்டவையாக மட்டுமே இருக்கவேண்டுமென்பதில்லை. யார் வேண்டுமானாலும் ஒரு எதிர்பார்ப்பை உங்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவும் உங்களது மனதில் ஒரு பூச்சை உருவாக்கும். இவையெல்லாம் வேறுபாட்டை கொணர்வன.

மெய்மையை இணைக்கும் மூன்று கூறுகள் உள. ஒன்று சத் எனப்படும் இருத்தல். நான் இருக்கிறேன், நீங்கள் இருக்கிறீர்கள், இந்த இருக்கை இருக்கிறது, வீடு இருக்கிறது, வானம் இருக்கிறது, உலகு இருக்கிறது. இவையெல்லாம் இருத்தல் எனும் ஒற்றைத் தலைப்பின் கீழ் கொண்டுவரப்படலாம். இருப்பவை எல்லாம் இருக்கின்றன என்பது ஒரு மெய்யான இருத்தலை குறிப்பது – சத் எனப்படுவது.

என் இருப்பை, உங்களது இருப்பை, உலகின் இருப்பை நான் அறிகிறேன். ஆகவே எல்லாம் தழுவிய ஒரு இருப்புணர்வு என்னில் இருக்கிறது. அதில் இல்லாததை நான் ஒரு போதும் அறியப்போவதில்லை. நல்லது-தீயது, அகலே-அருகே, ஒன்று-பல, பெரிது-சிறிது என்பவை எல்லாம் அடங்கிய இந்த இருப்புணர்வு ஒரு அறிவு மட்டுமே – சித் எனப்படுவது. ஆக, அனைத்தும் உள்ளடங்கிய ஒரு இருப்பும், அனைத்தும் உள்ளடங்கிய ஒரு அறிவும் நம்மிடம் உள்ளது.

என் இருப்பை நான் மதிக்கிறேன், உங்கள் இருப்பை நீங்கள் மதிக்கிறீர்கள். ஏதோ ஒரு வகையில் எல்லாமே மதிப்புறுகின்றன. இவ்வெல்லா மதிப்புகளும் நம்முடையதேயான மகிழ்வால் அளக்கப்படுகின்றன. இது ஆனந்தம் எனப்படுவது. ஆக, நம்மிடம் சத் – இருப்பு, சித் – அறிவு, ஆனந்தம் – முதன்மையான மதிப்பு மூன்றும் உள்ளன. அனைத்தையும் சேர்த்து, மொத்த மெய்மையும் சச்சிதானந்தம் எனப்படுகிறது.

சச்சிதானந்தம் எனும் உணர்வு ஒருவருக்குள் ஊடுருவக் கூடும். வேறுபாடுகள் இல்லாதபோது அது பெருமகிழ்வை அளிப்பதாக இருக்கும். ஆனால இருத்தல், அறிதல், மதிப்பு என்பனவற்றின் பொது உணர்வில்லாமல் நாம் பொருட்களை தனிப்பட்டவையாக காண முனைகிறோம். அவை துண்டுகளாக்கப்படும்போது நமக்குக் கிடைப்பவை அஸ்தி-இது; பாதி – இதை நானறிவேன்; ப்ரியம்-இதை நான் விரும்புகிறேன். துண்டுக்கருத்துகளான அஸ்தி, பாதி, ப்ரியம் என்பனவற்றில் பெரும் குழப்பத்திற்கு இடமுள்ளது. ”இது, நான் இதை அறிவேன், இது எனக்கு விருப்பமானதல்ல” என்றும் “இது, இது ஏதென்பதறியேன், ஆகவே இது எனக்கு விருப்பமானதா இல்லையா என்பதறியேன்” என்றும் கொள்ளலாம். எப்போதைக்குமான ஒருமை உணர்வொன்றை வளர்த்துக்கொண்டால் மட்டுமே நாம் இக்குழப்பத்தை தவிர்க்க முடியும். தன்முனைப்போடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது இத்தகைய கூறுகளாக்கும் முறையிலேயே நாம் அனைத்தையும் காண்கிறோம்; சச்சிதானந்தத்தை உணர்வதேயில்லை.

தொடக்கநிலை நினைவுகளாலும், பெருகும் விருப்புகளாலும் கறைபடாத அனைத்தையும் காணும் சாட்சியின் பார்வையில் வாழ்வை அணுகும்போது நம்மால் அனைத்திலும் நன்மையை, பொது நன்மையை காண முடியும். நம்மை மகிழ்விப்பதும் அதிலடங்கும். ஒரு தனியனாக என்னை மகிழ்விப்பதை நான் முற்றாக உதறிவிட்டால் இந்நிலையை எய்திவிடலாம் என்று சிலர் கருதுவது தவறு.

நாம் விரும்புவது மற்றவரால் விரும்பப்படாதபோது நம்மில் நாமே குறைகாணத் தொடங்குகிறோம். என்றாலும், நாமெல்லோரும் மனித இனம் என்பதால், நாம் விரும்புவதற்கு அடிநாதமாக ஒரு மகிழ்ச்சி இருக்கவேண்டும். நான் விரும்புவது சைவ உணவு வகைகளை, எனது நண்பர்கள் சிலருக்கு அசைவ உணவு வகைகள் என்றால் விருப்பம். ஒருமை வேண்டும் என்பதற்காக நான் எனது சைவ உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டு பிறரது விருப்புக்கேற்றாற்போல் அசைவ உணவு உண்ண வேண்டுமா என்ன? கண்டிப்பாக இல்லை. நம் விருப்பு குறித்து பொதுவாக நாம் சிந்திக்க வேண்டும். சைவமும் அசைவமும் அடிப்படையில் உணவுதான். உண்பதில் எனக்கும் விருப்பம் உண்டு, என் நண்பர்களுக்கும் அவ்வாறே. இந்த தளத்தில் எங்களிடையே வேறுபாடு இல்லை. எனவே நான் என் நண்பர்களோடு உணவகத்திற்குச் செல்லலாம்; நான் எனக்கு விருப்பமானதை உண்ணலாம், அவர்கள் தங்களுக்கு விருப்பமானதை. எல்லோரும் உணவுண்கிறோம். அடிப்படையில் எமது தேவை ஒன்றே, அடையும் நிறைவும் ஒன்றே. குறிப்பிட்ட விவரங்களில் மட்டுமே வேறுபாடுகள் உள்ளன. வேறுபாடுகளும் முக்கியமானவையே, அவற்றை ஒதுக்கிவிட முடியாது. நானும் நீங்களும் பசியோடிருக்கும்போது, உங்களுக்காக சேர்த்து நான் உண்டுவிடுகிறேன் என்று நான் கூற முடியாது. உங்கள் வேலையை நீங்கள் பார்த்தாக வேண்டும்.

பொதுவான மகிழ்ச்சிக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதற்கும் அதன் குறிப்பிட்ட கூறுகளில் ஏற்படும் விளைவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடை நாம் கண்டறிய வேண்டும். ஒரு கணவன் – மனைவியிடையே பெரும் காதல் இருக்கலாம். அவர்களுடையது ஒருமை நிறைந்த வாழ்வாக இருக்கலாம். அதனால் அவர்கள் தனித்தனியாக பல்துலக்கி வைத்துக்கொள்ளவில்லை என்று பொருளாகாது. அவரவர்க்கென தனியாக பல்துலக்கி வைத்துக்கொள்வது அவர்களிடையே உள்ள நட்பை சிறிதும் குறைத்துவிடாது. குறிப்பிட்ட பொருள்களின் மீதான நமது கவனத்தை அகம் நோக்கி திருப்பினோமென்றால் இதில் நம் குழப்பங்கள் தீர்ந்துவிடும்.

இந்தக் கண்ணோட்டத்தில் நான்கு கூறுகள் உள்ளன: அகம், தன்முனைப்பு, பொருள்கள், அவற்றின் மீதான நம் விருப்பு. பொதுவாக தன்முனைப்புக்கும் பொருளுக்கும் நடுவே வருவது விருப்பு; உண்மையில் தன்முனைப்பிற்குப் பின்னால் பொதிந்திருக்கும் ஆர்வமே அதை பொருட்களை நோக்கி செலுத்துவது. இவையெல்லாம் நிகழ்வது அகத்தின் ஒளியிலேயே. துரதிருஷ்டவசமாக, ஒளி எனும் பகுதியையே நாம் முற்றிலுமாக மறந்துவிடுகிறோம். அகத்தின் இருப்பெனும் இவ்வொளியில்தான் நாம் பொருளின் இருப்பெனும் கருத்தையே பெறுகிறோம். அகம் குறித்த அறிவிலிருந்தே நாம் அறிவதன் கருத்தை பெறுகிறோம். அகத்தின் மதிப்பிலிருந்தே பொருளை துய்ப்பது குறித்து அறிகிறோம். நாம் பொருட்களை மட்டுமே எண்ணுகையில் இம்மூன்று உண்மைகளையும் மறந்துவிடுகிறோம்.

இம்மதிநலம் பெற்றபின்னரும், உலகில் இயங்குகையில் நம் வாழ்வை விருப்புகளே செலுத்துகின்றன. ‘நமது’ என்பதற்கு பதிலாக ‘எனது’ என்பது வருகிறது. “அவர் என் நண்பர், என் குரு. என் நண்பரைக் காக்கும் உரிமை எனக்குண்டு.” “இல்லை, இல்லை. அவர் என் நண்பர்; அவர் என் குரு. இப்படித்தான் நான் பார்க்கிறேன்.” அவர்களிடையே சண்டை மூள்கிறது. போர் நிகழ்வது தன்முனைப்புத் தளத்தில். அங்கிருந்து நீங்கள் ஆன்மாவின் தளத்திற்குச் செல்வீர்களென்றால் அது மிகவும் பரந்தது; அங்கு அனைத்திற்கும் இடமுள்ளது. ஆலிஸ் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள விரும்பியபோது விலங்குகளெல்லாம் “இடமில்லை! இடமில்லை!” என்றன. ஆலிஸ் விடுவதாக இல்லை. “இடம் தாராளமாக இருக்கிறது. ஏன் இடமில்லை என்கிறீர்கள்?”

ஏராளமான இடம் இருக்கிறது. அவர் இருப்பதால் உங்களுக்கு இடமில்லை என்று நீங்கள் சொல்லி சண்டையிடத் தேவையில்லை. உங்களது இடத்தை வேறெவரும் எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் புழங்கும் இடம் உங்களுக்கெனவே எப்போதும் உள்ளது, பிறரது இடமும் அவர்களுக்கெனவே உள்ளது. முழுமுதல் என்பது எல்லாவற்றையும் எல்லோரையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் அளவுக்கு பெரியது.

“மந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாதீர். மந்தைக்கு வெளியேயும் என் ஆடுகள் உண்டு. வேறொரு பள்ளியில் ஒருவன் இருப்பதற்காக நீங்கள் ஏன் வருந்துகிறீர்? நானே நல்ல மேய்ப்பன் என்றால், அவனிருக்கும் இடத்திற்கு நான் செல்வேன். கூட்டத்திலிருந்து அவன் விலகிச்சென்றால் அது ஒரு பொருட்டே அல்ல. என் தந்தையின் மாளிகையில் கூடங்கள் பல உண்டு” என்றார் யேசு. எத்தனை அழகான வசனம்! இறைவனின் மாளிகையில் ஒரே ஒரு கூடம் மட்டுமில்லை, அதில் அத்தனை வகைமைகள் உண்டு, எல்லையிலா இயல்கைகளுண்டு.

நம் வாழ்வை நாம் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்; நம் காட்சிகளை அகலப்படுத்திக் கொள்ளவேண்டும். அதிக விருப்புகள் அதை மேலும் வியப்புடையதாக ஆக்குகிறது. நீங்கள் ஓவியம் தீட்டுகிறீர்கள், நான் பாடுகிறேன், இன்னொருவர் நடனமாடுகிறார்: இது நம் வாழ்வை மேலும் செழுமையாக்குகிறது. எல்லோரும் ஒன்றையே ஏன் செய்யவேண்டும்? சோவியத் கம்யூனிஸ்டுகளுக்கு மாறாக, மா சேதுங் கூறியது, “ஒற்றை மலருக்கு பதிலாக பல்லாயிரம் மலர்கள் மலரட்டும். ஏன் சிவப்பு மலர் மட்டும் இருக்க வேண்டும்? பல்லாயிரம் வண்ணங்களில் பல்லாயிரம் மலர்கள் செழிக்கட்டும்.” பல்லாயிரம் வண்ணங்களில் பல்லாயிரம் மலர்கள் மலர்ந்தாலும் நாம் கொண்டாடுவது மலர்த்தன்மையை மட்டுமே. வெவ்வேறு மக்களின் வேறுபட்ட வாழ்க்கையின் இன்றியமையா விழுமியத்தை உணர்ந்து அதை கொண்டாடுவோமெனில், அது ஒன்றே. ஒருமையை நிரந்தரமானதாக்கும் அந்நுண்ணறிவை நாம் வளர்த்துக்கொள்வோமாக!

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

Standard

உலகினு வேறொரு ஸத்தயில்லதுண்டெ
ன்னுலகருரப்பது ஸர்வமூஹஹீனம்;
ஜளனு விலேசயமென்னு தோன்னியாலும்
நலமியலும் மலர்மால நாகமாமோ?
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 20)

இவ்வுலகன்றி பிறிதொரு மெய்மையில்லை
உண்டென்று உலகோர் உரைப்பது சிந்தனையின்மையால்
பாம்பென்று மூடனுக்கு தோன்றினாலும்
நன்மலர்மாலை நாகமாகுமோ?

சில நேரங்களில் நாம் வாழும் இவ்வுலகு இருண்டதாகத் தோன்றுகிறது. இதை துறந்து எங்காவது ஓடிவிடவேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்தும் எங்ஙனம் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கக்கூடிய பிறிதொரு உலகு இருக்கிறது என்று எண்ணுகிறோம்.

“பாழாய்ப் போன இவ்வுலகை விட்டு ஆன்மீகம் நிறைந்த ஓரிடத்திற்கு சென்றுவிடவேண்டும்” என்றெல்லாம் எண்ணி நரகங்கள் சொர்கங்கள் என்னும் கருத்துக்களை உருவாக்கியுள்ளனர் மாந்தர். இன்று எத்துணை துயருற்றிருந்தாலும் ஒருநாள் சொர்கத்திற்குச் செல்வோம் என்றும் அங்கு எல்லாம் சரியாகிவிடும் என்றும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கின்றனர். அதே நேரத்தில் வேறெங்கோ உள்ள ஒரு நரகம் குறித்த அச்சமும் அவர்களின் ஊக்கத்திற்கு காரணமாகிறது. பிளேட்டோவைப் போன்ற பெரும் மெய்யியலாளர்கள்கூட அனைத்துத் தொல்படிமங்களும் அவற்றின் நிழல்களாகவே இருக்கக்கூடிய – இந்நிழலுலகிலிருந்து வேறுபட்ட – அறிவுக்குப் புலனாகக்கூடிய – ஒரு உலகு குறித்து சிந்தித்தனர்.

இத்தகைய இருமை தேவையற்றது என்கிறார் நாராயண குரு. அதை நியாயப்படுத்தல் இயலாதது. இவ்வுலகு ஒன்றே உள்ளது.

நாம் உலகை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதே முதன்மையானது. துயர்நிறைந்த கண்ணீராலான கடலாக அதை கருதலாம் அல்லது விரும்பத்தக்க விழுமியங்களை எல்லாம் இயல்வதாக்கும் இடமாக காணலாம். சென்ற பாடல்களில் நாம் சில ஒப்புவமைகளை பார்த்தோம் – மேற்பரப்பில் நிலையிலா அலைகளைக் கொண்ட ஆழியில் மூழ்கினால் காணக்கிடைக்கும் புதையல்கள்; பாலையில் பொருளற்ற மணற்பருக்களாகத் தோன்றும் கணங்கள் புரிதலுக்குப் பின் விலையிலா அணிகலனாதல்.

இவ்வொப்புமைகளை ஆய்ந்தபிறகு, வாழ்வை அணுகி நோக்கி நாம் பொருட்களை அறியும் முறைமையில் இரட்டை அமைப்பொன்று இருப்பதை கண்டோம். புற உலகிலிருந்து ஒளி ஒலி போன்ற ஆற்றல் வடிவங்கள் நம் புலனுணர் அமைப்பை தூண்டும்போது அத்தூண்டலால் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் தன்னொளி கொண்ட அறிநிலை ஒன்று நம் அகத்திலிருக்க வேண்டும். இம்மாற்றம் தற்செயலாக நிகழ்வதில்லை. நம் உள்ளே உறையும் விழைவுகளால் இம்மாற்றம் கையாளப்படுகிறது. காலம் இங்கே சிறப்பிடம் பெறுகிறது. பல்லாண்டுகளாக, பல பிறவிகளிலாக நம்மில் புதைந்துகிடந்த ஒரு குறிப்பிட்ட பதிவு ஆற்றல் பெற்று நிகழ் கணத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு அக ஒளியையும் புறத்தூண்டலையும் ஒத்திசையச் செய்து ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துகிறது. அவ்விளைவு இன்பகரமானதாக இருக்கலாம் அல்லது துன்பகரமானதாக இருக்கலாம். ஈர்க்கக்கூடியதாக இருக்கலாம் அல்லது அச்சுறுத்தக்கூடியதாக இருக்கலாம். சிக்கலான இச்சூழல் ஒளியும் இருளும் உறையும் ஒரு முத்தைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தூய ஒளியை எதிரொளிக்கும் முத்து புகைபோன்ற ஒளிபுகு தன்மையும் ஒளிபுகா தன்மையும் ஒருசேரக் கொண்டது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள் எனும் இயற்கை நடைமுறைகளைப் போலவே ஒளிவின்மை, ஒளிபுகு தன்மை, ஒளிபுகா தன்மை ஆகிய மூன்றையும் அதில் நாம் காணலாம். நம் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு ஒளியை மட்டுமன்றி எளிதில் மதிப்பிட முடியாத ஒரு புதிரையும் நாம் காணமுடியும்.

கடந்துசெல்லும் ஒவ்வொரு நிகழ்வு குறித்த விழிப்புணர்வுக்கும் ஒரு வடிவம் கொடுத்த பின்னர் ஒவ்வொரு அனுபவத்தையும் பெருமதிப்புடைய வாழ்வுக்கணமாக மாற்றக்கூடிய இயல்கையை கண்டோம். இப்பாடலைப் பயிலும்போது இதனை நம் உள்ளத்தில் இருத்திக்கொள்ளல் வேண்டும்.

பாம்புக்கும் அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைக்கும் இங்கு ஒப்புமை கூறப்படுகிறது. வெளிச்சம் குறைந்த படுக்கையறையில் நுழையும் ஒருவன் படுக்கையில் அமர்ந்து கையை நீட்டும்போது சில்லென ஈரத்துடன் ஏதோ ஒன்று தட்டுப்படுகிறது. நடுங்கிப் போகிறான். அரையிருட்டில் ஏதோ ஒன்று நீளமாக மெல்லியதாக புள்ளிகளுடன் சுருண்ட பாம்புபோல் தெரிகிறது. அச்சத்தில் ஏறக்குறைய மயங்கியே போகிறான். விளக்கை போட்டு பார்த்தால் எழிலான மலர்களாலான பன்னீரில் நனைத்த மாலை! மணமானது, தண்ணியது, மிக அழகானது. அன்பின் அடையாளமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கள் கொண்டு கலைநயத்துடன் தொடுக்கப்பட்டது.

ஒருவனுக்கு வாழ்வைவிட மதிப்புமிகுந்தது ஏதுமில்லை. மாலையின் இயல்பு மறைந்திருந்த ஒரு கணம் அது உயிரைப் பறிக்கக்கூடிய ஒன்றாக காட்சியளித்தது. ஆனால் ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்தபின் வாழ்வின் மதிப்பையே உயர்த்துவதாக ஆனது அம்மாலை. மனமுவக்கும் வாழ்வும் மாலையும் அன்பென்ற உணர்வில் பிணைக்கப்பட்ட இரு நேர் விழுமியங்கள்.

பாவ்லோவின் நாய்கள் மணியடித்ததும் உமிழ்நீர் சுரக்கும்படி பதப்படுத்தப்பட்டன. அதேபோல் நாமும் நம் சூழலில் உள்ள பல ஆபத்துகளாலும் ஈர்ப்புகளாலும் பதப்படுத்தப்படுகிறோம். இவ்வுலகின் இன்னல்களாலும் இன்பங்களாலும் பதப்படுத்தப்பட்ட மக்களைக் குறிக்கவே குரு உலகர் எனும் சொல்லை இங்கே பயன்படுத்துகிறார். அவரது மற்றொரு படைப்பான அத்வைத தீபிகையில்

     அறிஞனுக்கு இவ்வுலகு பொருளுடையது
அறிவு மகிழ்வெனும் விழுமிய வடிவம் கொண்டது

என்கிறார். பெரும்பாலான வேதாந்திகள் சொல்வதற்கு மாறானது இது. பொதுவாக அவர்கள் இவ்வுலகை மெய்யல்லாதது என்றே கருதும்போது நாராயண குரு இது ஒன்றே மெய்யானது என நிலைநாட்டுகிறார். வேறேதும் இல்லை என்கிறார்.

ரமண மகரிஷி சார்கோமா எனும் மிகுந்த வலி ஏற்படுத்தும் ஒரு வகை புற்றுநோய்க்கு ஆட்பட்டிருந்தார். அவரது இடதுபுறம் அவரது உடலில் இருந்து பிய்ந்துகொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் பெருந்துயருடன் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு புற்றுநோய் ஏதுமில்லை, உடல்வலி ஏதும் அவர்களில் இருக்கவில்லை. ஒரே ஒருவருக்கு மட்டுமே அக்கொடும்நோய் இருந்தது. ஆனால் எவரிலும் மகிழ்ச்சியில்லை. அனைவரும் துயர்கொண்டிருந்தனர். ஆசிரமத்தின் மயில் அகவியதுகூட அங்கிருந்த ஆயிரக்கணக்கானோரின் துயருக்கு குரல்கொடுப்பதுபோலிருந்தது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் அங்கிருந்தனர் – இந்துக்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், ப்ராடெஸ்டண்டுகள், குழந்தைகள், முதியோர், பிச்சைக்காரர்கள், பெரும் செல்வந்தர்கள், அரசாங்கத் தலைவர்கள், மருத்துவர்கள். பெருவலியின் கணத்தில் பல்வேறு வகையான மக்கள் ஒன்றாக இணைந்திருந்தனர்.

மகரிஷியின் சகோதரி அவரது படுக்கையருகே சென்று கதறத் தொடங்கினார். மகரிஷி அவரைப் பார்த்து “என்ன விஷயம்?” என்றார். “நீங்கள்… நீங்கள்தான்… நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள்!” என்றார் சகோதரி. அவருக்கு எந்த நோயும் இல்லை. ஆனால் ரமணர் அமைதியாய் சலனமின்றி அமர்ந்திருந்தார். “போகிறேனா? எங்கே? நான் எங்கே போக முடியும்? போவதற்கு இடமேது?” என்றார். போவதற்கு இடமேதும் அவருக்கு தெரியவில்லை. யாரும் எங்கும் செல்வதையும் அவர் காணவில்லை. இவ்விடம் மட்டுமே உள்ளது. போவதற்கு இடமேதும் இல்லை.

நான் மாணவனாயிருந்தபோது பெரும் துயருற்றேன். கல்லூரிச் சூழலே பொருளற்றதாய் தோன்றியது. நான் கல்லூரியை விட்டுச் செல்வதாக முதல்வருக்கு கடிதம் எழுதினேன். செல்வதற்கு முன் தன்னை வந்து பார்க்கச் சொல்லி அவர் ஒரு குறிப்பை எனக்கு அனுப்பினார். அவர் அலுவலகத்திற்குச் சென்றபோது அவருடனும் அவர் துணைவியாருடனும் உணவருந்த வரும்படி அழைத்தார். “இவ்விடம் பொருளற்றுப் போய்விட்டதாக நீ உணர்வதால் சென்றுவிட முடிவெடுத்தது நல்ல விஷயம். ஆனால் ஒன்று, நீ செல்லும்போது உன் உள்ளத்தை உன்னுடன் எடுத்துச் செல்லப்போகிறாயா? அல்லது இங்கேயே விட்டுவிட்டுச் செல்லப்போகிறாயா என்பதை மட்டும் சொல்லிவிட்டு செல்” என்றார்.

“நிச்சயமாக நான் செல்லுமிடத்திற்கெல்லாம் என் உள்ளத்தை எடுத்துக்கொண்டுதான் செல்வேன்” என்றேன்.

“அப்படியென்றால் அதே வருத்தத்தையும், ஐயங்களையும், துயரையும், அனைத்தையும் உன்னோடு கொண்டுசெல்லப்போகிறாய். நீ போகுமிடத்திலும் இதேபோல்தான் இருக்கப்போகிறது. ஏனெனில் நீ இவற்றையெல்லாம் உன்னோடு எடுத்துச் செல்லப்போகிறாய். உனது உள்ளத்தை இங்கே விட்டுவிட்டு ஓடிப்போகப் போகிறாய் என்றால் நல்லது.”

இது உண்மை. ஒவ்வொரு நாளும் மக்களிடமிருந்து ‘நான் விட்டுச் செல்ல வேண்டும், விலகி ஓட வேண்டும்’ என்று சொல்லி எனக்கு கடிதங்கள் வருகின்றன. எங்கு செல்வது? சிலரோடு சில சூழல்களில் இருப்பதால்தான் நாம் துயருறுவதாக எண்ணுகிறோம். விலகிச் சென்றால் மீண்டும் உலகம் சிறந்ததாகிவிடும் என்று தோன்றுகிறது. உங்களால் வேறு ஒரு இடத்தில் ஒரு இனிய உலகை உருவாக்க முடியும் என்றால் நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலும் அதை உருவாக்க முடியும்.

முடிவாக என்ன இருக்கிறது? உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும் உங்கள் உள்ளொளி மட்டுமே. ஒளிர்விக்கப்பட்டது வண்ணம் பெறுகிறது, உங்களுடையதேயான முந்தைய பதப்படுத்தல்களிலிருந்து வரும் நஞ்சினால் இருண்மை பெறுகிறது. உங்களது பதப்படுத்தப்பட்ட தவறான எண்ணங்களில் சிக்கிக்கொள்கிறீர்கள். ஆனால் ஒளிர்வுக்கான மூலத்தை திரும்பி நோக்குவோமெனில், நம்மைச் சுற்றியுள்ள இருண்மையிலிருந்து விலகலாம்.

நம் உலகை துயர்நிறைந்ததாகவோ அழகியதாகவோ ஆக்கிக் கொள்வது நம் கையில்தான் உள்ளது. உணர்வு நோக்கி நகரும்போது நாம் நிழலுக்குள் செல்கிறோம். மெய்மைக்கு சிறப்பிடம் கொடுக்கும்போது அழியா விழுமியங்களில் நம்மை மீட்டெடுக்கிறோம்; மறுவாழ்வு பெறுகிறோம். ஐயம், அச்சம், விளங்கா உணர்வு, தகவல் தொடர்பில் சிக்கல், மக்களின் உள்நோக்கத்தை புரிந்துகொள்ள முடியாமை ஆகியவற்றால் நாம் தாக்கப்படுகிறோம். இங்கே நாம் மையத்திலிருந்து, மெய்மையிலிருந்து அகற்றப்படுகிறோம்.

வாழ்வின் உணர்வுப் பக்கத்தில் – வாழ்வின் இயற்பியல், உயிரியல் கூறில் – தவிர்க்க முடியாத மாற்றங்கள் உண்டு என்பதை நாம் ஏற்க வேண்டும். பிறப்பு இறப்பென்றும். வளர்ச்சி சிதைவென்றும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டபின் எஞ்சுவது முற்றிலும் அழகானது.

மாற்றங்களிலேயேகூட நீங்கள் அழகை கண்டடையலாம். குழந்தைப்பருவத்திலிருந்தே நோய்வாய்பட்டிருந்த கார்ல் ஜஸ்பர்ஸின் வாழ்க்கை குறித்து படித்துக்கொண்டிருந்தேன். இருதய நோயாலும் மூச்சுக்குழாய் கோளாறுகளாலும் அவருக்கு எப்போதும் ஆபத்து இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. “இவையே என் எல்லைகள். சற்றைக்கொருமுறை படுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் என்னால் மீண்டும் எழுந்து பணியாற்ற முடிகிறது” என்றார். வாழ்வின் ஒளிமயமான பக்கத்தை, மெய்மையை அவர் கண்டார். முதலில் ஒரு அறிவியலறிஞன் பார்ப்பதுபோல் மெய்மையை கண்டவர் அவர். முதலில் சட்டம் படித்தார். தொடர்ந்து மருத்துவம், உளவியல், ஆய்வு நெறிமுறைகள், வாழ்வின் தூய மெய்யியல். இறுதியில் முழுநேர மெய்யியலாளரானார். வாழ்வின் ஒளிரும் பக்கத்தை முன் நிறுத்தி நோய்களை பின்புலத்திற்குத் தள்ளியதால் அவரால அது இயன்றது. ஜஸ்பர்ஸின் வாழ்வு மிக அழகானது. அவரிருந்த நிலையிலும் ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் உயரிய வாழ்க்கை வாழ்ந்தார். பேரழகின் உன்னத மெய்மையாக உலகைக் காண அவர் கற்றிருந்தார்.

ஜஸ்பர்ஸைவிட பரிதாபத்திற்குரியவர் பலர். காட்டாக ஃப்ரெட்ரிக் நீட்ஷே. அவருக்கு மைக்ரேன் தலைவலி, மிகக்குறைந்த பார்வை, உடல் முழுக்க தாளவொண்ணா வலி எல்லாம் இருந்தன. சுவையூட்டி எதையும் உண்ண முடியாது – மிகச்சிறிய அளவில் இருந்துவிட்டாலும் வயிற்றுவலி ஏற்பட்டு வாயுமிழ நேரிடும். பல நேரங்களில் அவரால் உறங்க இயலாது. படிப்பதற்கு அவர் கண்களை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் சொன்னபோதும் அவர் தொடர்ந்து பத்து மணி நேரம் அமர்ந்து உடல் உபாதை அவரை சாய்க்கும் வரை எழுதிக்கொண்டிருப்பார். பெருவலி அவர் வாழ்வை நிறைத்திருந்தது. ஆனால் அவர் அதை பின்னால் விழும் நிழலாகவே கருதினார்; தன் சுய ஒளியை முன்னால் பாய்ச்சினார். அவ்வொளியிலிருந்து பெரும் வலுவை பெற்றார்; பெருமளவில் சாதனை புரிந்தார்.

இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்கும்போது நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதை உணர்கிறீர்களா? நம் இன்னல்கள் அவ்வளவு மோசமானவை அல்ல. ஒப்பீட்டளவில் சிறந்த ஆரோக்கியம் கொண்டவர்களாயிருக்கிறோம். நாம் பெறும் மருத்துவ உதவி மனிதநேயம் கொண்டதாகவும் பெரும்பாலும் சரியானதாகவும் இருக்கிறது. நமது உணவும் நம் சூழலில் உள்ள வசதிகளும் இடைக்கால மன்னர்கள் கனவிலும் கண்டிராதவை. அப்படியென்றால் நாம் எதனால் நம்பிக்கை இழக்கிறோம்?

நம் வாழ்வின் கடந்து செல்லும் கணங்களெல்லாம் உயிர்த்துடிப்புடையவையாக வளமானவையாக ஆக்கப்படல் வேண்டும். எந்த ஒரு கணமும் மீண்டும் வராதது என்பதே நான் என் வாழ்வில் கற்றது. அது போனது போனதுதான். நம்மை நோக்கி கணம் வருவதை நீங்கள் காணலாம். விரித்த கரங்களுடன் அதை வரவேற்பீர்களாக! உமது மகிழ்ச்சி கொண்டு அதை செழுமையாக்கி அதற்கு புகழ் சேர்ப்பீராக! புதிய விழுமியத்தை, வாழ்விற்கான புதிய வழியை கண்டடைவீராக! விந்தை உணர்வை புத்தாக்கம் பெறச்செய்வீராக! அப்போது அக்கணம் உங்கள் வாழ்வில் அழியாத்தன்மை கொள்கிறது; எண்ணிப்பார்க்கத் தக்கதாக ஆகிறது; அக்கணத்தை நன்றாக வாழ்ந்துதீர்த்த பெருமையை அளிக்கிறது. பிறகு நீங்கள் அடுத்த கணம் நோக்கி நகரலாம்; இது உங்களில் ஏற்கெனவே அழியாமல் நிலைகொண்டுவிட்டது. அக்கணத்தில் நீங்கள் பெற்றது உங்களது அழிவில்லாக் களஞ்சியம். அருமை! நிறைவாக உணர்கிறீர்கள். நன்றியுணர்வு உங்களில் நிறைகிறது. “ஆஹா! இக்கணத்தை நான் நன்கு வாழ்ந்தேன்!” இங்கே இப்போது உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தனை நலன்களுடன் இவ்வுலகில் நீங்கள் வாழ்வது உங்களுடையதேயான வாழ்வு.

இந்தப்புரிதலுடன் நீங்கள் அடுத்த கணத்திற்கு செல்ல விழைகிறீர்கள். அது மேலும் சிறந்ததாக அழகியதாக இருக்கப்போகிறது. பெரும் நம்பிக்கையுடன் பொழுது புலர்கிறது. இவ்வாழ்வு போல் இனியது வேறொன்றில்லை; இங்கே நண்பர்களை ஈட்டலாம்; அழகியவற்றை படைக்கலாம்; அழகை பகிர்ந்துகொள்ளலாம்; பிறரை உங்களின் பகுதியாக கருதலாம். அன்பும் கருணையும் நிறைந்துவழியும் ஓருலகு.

ஆனால் நீங்கள் மெல்லமெல்ல இருளுக்குள் சென்றுவிடக்கூடாது. உலகை அருவருப்புடன் பார்க்காமல் அதன் ஒவ்வொரு துளியையும் அழகானதாய், தெய்வீகமானதாய் பாருங்கள். அப்போது நம் ஊழை நாமே தீர்மானிப்பவர்களாகிறோம். தன்முனைப்பு கொண்டல்ல, அனைத்தையும் வளமானதாக் ஆக்கும் அழிவிலா மீஇயல் ஒளிகொண்டு. அதுவே நமக்கு சூழலை கையாளும் வல்லமையை அளிக்கிறது. மலர்களின் இதழ்களில் வண்ணம் தீட்டிய, வண்ணத்துப்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் வடிவளித்த, மதிப்பச்சம் தரச்செய்வதாய் மலைகளை ஆக்கிய, ஆழியை பரந்ததாய் தோன்றச்செய்த, நளினமாய் மேகங்களை மேலே மிதக்கச் செய்த படைப்பின் அழகிலேயே நமது மெய்யான விடுதலை இருக்கிறது

அந்த அழகின் பகுதியே நீங்களும். அதில் பங்கெடுப்பது உங்களில் உள்ள தெய்வீகக் கலைஞனை, அறிஞனை, படைப்பாளியை, காதலனை, அமைதிகொணர்பவனை அடையாளம் காட்டும். இவ்வுலகில் பிறந்து வாழ்வதென்பது ஒரு பெரும் பேறு. மெழுகுவர்த்தியைப் போல நம் உடலும் மறைந்துபோகும். ஆனால் எரிந்து முடிவதற்கு முன் எத்துணை வெளிச்சம் அளிக்கிறது மெழுகுவர்த்தி! இறுதியில் அது அணையும் என்பதில் என்ன இருக்கிறது? தன் ஒளிரும் கணத்தை வாழ்ந்து முடித்துவிட்டதல்லவா? புகையும் இருளும் சூழ நாம் வாழ்கிறோம். இந்நாளை, இக்கணத்தை அதன் மதிப்பையும் அழகையும் உணர்ந்து வாழ்வேன், அனைவருடனும் பகிர்ந்துகொள்வேன் என்று முடிவெடுங்கள். இதுவே குரு நமக்கு அளிக்கும் உயர்ந்த கல்வி.

கலையின் பிறப்பு ரகசியம்

Standard

கலையின் பிறப்பு ரகசியத்தை தெரிந்துகொள்ள ஸ்ரீசக்ரத்தை நுட்பமாக நோக்கி அறிதல் வேண்டும். ஸ்ரீ சக்ரத்தில் நாம் முக்கியமாக காண்பது ஒரு புள்ளியும் அதைச் சுற்றி நிற்கும் ஒரு கலையும். புள்ளியிலிருந்துதான் ஒலி அலை பொங்கிப் பரவுகிறது. ஒரு புள்ளியில் தோன்றும் ஈர்ப்பே இணைப்பாகிறது. புள்ளியிலிருந்து பாயும் கதிரே ஒளிமழையாகி தொலைவுவரை நீண்டு செல்கிறது.  நூற்றுக்கணக்கான புள்ளிகளில் உண்டாகும் உராய்வே வாசனையாகிறது. ஒரு புள்ளியைச் சுற்றி உண்டாகும் விட்டமே கலை. ஒலியிலும் தொடுகையிலும் உருவிலும் ருசியிலும் மணத்திலும் இருப்பது ஆற்றலின் பரவல். அவ்வாறான கோடானுகோடி பரவலும் அதனால் உண்டாகும் கலை பொங்கிப் பரவி மாற்றுகளை உருவாக்கி மறைந்துபோவதும் புள்ளிக்கும் ஒலிக்கும் கலைக்கும் என்றும் அதீதமாயிருக்கின்ற இடைவெளியில்லாத உறைதலுக்காகவே.

ஆதிமஹஸ் நிச்சலனமானதென்றாலும் அதில் எப்போதைக்குமாய் இருப்பது சலனங்களை தாங்கியிருக்கும் முறைமையே. கூட்டுத்திரளில் உள்ள அந்த முறைமையை சிருஷ்டி அறிவது படைப்பவரில் படைக்கும் உணர்வு உண்டாகும்போதுதான். படைப்பாக்கத்தின் விதை கேட்கும் விருப்பு, தொடும் விருப்பு, காணும் விருப்பு, ருசிக்கும் விருப்பு, முகரும் விருப்பு என்ற இன்பம்சார் விருப்புகளில் உறைகிறது. விருப்பு ஒரு கனியைப் போன்றது. அதில் பற்றறுத்தலுக்கான கர்மத்தின் விதை தங்கியிருக்கிறது. விதையின் நடைபேறு (transaction) காலத்தில் நிகழ்கிறது. அதற்கு ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. முடிவு என்பது முழுமையான முடிவல்ல. விழிப்புநிலை-கனவு இவற்றுக்கிடையே வரும் ஆழ்நிலை உறக்கம் போலிருக்கும் ஒரு இடைநிறுத்தம். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஜீவன் கனவுக்குள் போகவில்லையென்றால் நடைமுறைக்கு திரும்பிவரும்.

விருப்பை ஒறுப்பதற்காக செயலில் ஈடுபடவிரும்பும் கலைஞனின் படைப்புத்திறன் கற்பனை வடிவில் ஒளிர்ந்துயர்கிறது. அதில் முதன்மையாக வெளிப்படுவது மகிழ்வை கண்டடைதல். அது அழகை கண்டடைவதாகலாம், பிரம்மத்தை கண்டடைவதாகலாம்.  புலனுகர்வின்வழி தோன்றும் வியப்புகள் மூலம் அழகையறிதல் நிகழ்கிறது. நீலவானில் தவழ்ந்து மறையும் மேகத்தைப் போலே, பாலையில் கானல்நீர் போலே, நீராவியில் ஒளிகொண்டு தோன்றும் வானவில் போலே அனைத்து ரசங்களும் தோற்றமயக்கங்களே. நொடிப்பொழுதே இருப்பவை. வானவில் மறைந்தாலும் வானவில்லின் ஏற்றம் மறைவதில்லை. பூ மலர்ந்து வீழ்ந்தாலும் பூவின் நினைவு நிலையானது. காதலன் கடந்துசென்றாலும் காதலிக்குக் கிடைத்த முதல் முத்தம் என்றும் அழியா நினைவிலிருக்கும்.  இவ்வாறாக அநித்யத்தின் இதயத்தில் நித்யத்துவம் என்றும் இருக்கும். அநித்யத்தின் முடிவிலா சாம்ராஜ்யமோ நித்யத்துவத்தின் மறைவிலிருந்து கனவுபோல வெளிப்படுவது.

இவற்றிலெல்லாம் நான்கு பெரு மறைகள் நிறைந்திருக்கின்றன. சதாசிவம், பரமேச்வரன், சுத்தவித்யை, மஹாமாயை என்ற நான்கும் சிவ தத்துவங்கள் என்று கூறப்படுகின்றன. மாற்றமில்லாது நிற்கும் மலைகளைப்போல் ஒன்றன்மேல் ஒன்றாக நான்கு முக்கோணங்களாக இந்த நான்கு சிவதத்துவங்கள் நிற்கின்றன.   அடித்தளமில்லாத, கற்பனையிலிருந்து பருவடிவுகொள்ளும் ஐம்பூதங்களைப் போன்றது சக்தி தத்துவம். வானின் மின்துளியாக, வளியின் தொடுதுளியாக, தீயின் உருத்துளியாக, நீரின் ருசித்துளியாக, பூமியின் உயிர்த்துளியாக சிவஜோதியில் அறிவொளியை ஸத்ரூபமாயும், சித்ரூபமாயும், ஆனந்தரூபமாயும் பிரித்தறிவது அது. ஒரு புள்ளியைச் சுற்றி இணைந்து நிற்கும் நான்கு சிவதத்துவங்களும் ஐந்து சக்தி தத்துவங்களும் எட்டு இதழ்களுக்கும் பதினாறு இதழ்களுக்குமிடையில் நிரத்தப்படும்போது அங்கு ஸ்ரீசக்ரம் தோன்றுகிறது. எந்தக் கலையையும் புரிந்துகொள்ள இந்த சக்ரத்தை பயன்படுத்த வேண்டும். பிரம்மானந்தத்தின் கலைஞன் ஈச்வரன்; கற்பனையுலகின் படைப்பாளி கலைஞன். கலையில் மறைந்திருக்கும் ஒரு விழுமியப் படிநிலை உண்டு. சிவனடியில் கிடக்கும் மனக்குழப்பத்தை, அறியாமையை குறிக்கும் அபஸ்மாரத்தில் தொடங்கி சிவன் தலையில் பொற்பிறை வரை அழகனுபவம் உயர்ந்துகொண்டே செல்கிறது. 

சிதம்பர நடராஜனின் பிறையிலிருந்து இறங்கியபடியே வந்து அவன் கால்களுக்கும் கீழாக கவிழ்ந்தபடி கிடந்து கேடொலி எழுப்பும் அபஸ்மாரம் வரை கீழிறங்கவும் கூடும். விழுமியங்களை கீழிறக்குவது நோயை குறிப்பது.  கலைஞர்களில் விழுமியங்களே அற்ற அறிவுக்குறையுடையோரை காண்கிறோம். அவர்களின் கலை கீழ்மையானது. அதுபோலவே, அறிவனுபவத்தை உயர்த்தி பேரின்பத்தில் மூழ்கச்செய்யும் பேரறிவாளர்களான யோகிகளையும் காண்கிறோம். அவர்களின் கலையே ஆகச்சிறந்ததாக இருக்கிறது. அத்தகைய படைப்புத்திறன் கொண்டவர்கள் வியாசனும் வால்மீகியும். அவர்கள் கைலாய மலையை அடைந்தவர்கள். அவர்கள் சென்ற தூரத்தை தாங்களும் சென்றடைய விரும்பி இமயத்தின் தாழ்வரையில் நிற்பவர்கள் காளிதாசனும், ஷேக்ஸ்பியரும், கதேயும். வியாசனும் வால்மீகியும் பேரழகின் பருவடிவை அறிந்துவிடத் துடிப்பது படைக்கும் இறையாகிய பிரம்மதேவனின் இதயத்தாமரையில் எதிரொளிக்கும் வாக்தேவியை எண்ணியே.

ஒரு புள்ளியிலிருந்து விரிந்து பரவி சிறியதோ பெரியதோ ஆன ஒரு மண்டலத்தில் நிறைந்திருக்கும் எதுவும் கலையே.  மண்டலம் ஒலியாலானதாக, தொட்டறிதலாக, உருவுடையதாக, நாப்புலன் சார்ந்ததாக, மணம் குறித்ததாக இருக்கலாம். இவையனைத்திற்கும் வெளியில் நின்று அறிதல் மற்றும் தியானம் மூலம் அடைவதாகவும் இருக்கலாம். ப்ராணனின் பாவங்களையும் அவ்வவற்றின் மண்டலத்தில் உட்படுத்த முடியும். மிகவும் பரந்துள்ள இம்மண்டலம் பல விகிதத்தில் ஒளியும், நிழலும், உருவும், பாவமும், வண்ண அழகுகளும் கலந்தது. ஒலியும் ஒளியும் வேறுபாடுகள் கொண்டவையெனினும் ஒன்று மற்றொன்றை அறியச்செய்ய முடியும் என்பதால் பல கலைகளும் காண்பதற்கும் கேட்பதற்குமானவையாக உள்ளன.

எந்தக் கலையின் வெளிப்பாட்டிலும் ஒரு படைப்பாளியும் ஒரு நுகர்வோனுமுண்டு  (creator and critique). பொருளில் தோன்றும் உருவப்பரிணாமம் கொண்டு வாசகனிலோ, காண்போனிலோ, விமர்சகனிலோ, ஒத்தமனம் கொண்டவனிலோ மாற்றத்தை உண்டாக்குவது கலை.  இயற்கை அறங்களே ஒலி, வண்ணம், பருப்பொருள், திரவம் முதலானவற்றை ஊடகமாக்கும் கலைஞன் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக இருக்கின்றன. இவ்வியற்கை அறங்கள் வான், வளி, தீ, மண் ஆகியவற்றின் மாற்றமில்லா நியமங்களின் அடிப்படையாகும். காட்டாக, ஒரு உருக்காட்சியை காண்பவனில் உண்டாக்க முயலும் ஓவியனுக்கும் சிற்பிக்கும் இரண்டுவிதமான திறன்கள் தேவை.  ஓவியரிலேயே நீர்ச்சாயம் கொண்டு வரைபவனது திறன் எண்ணைச்சாயம் கொண்டு வரைபவனது திறனிலிருந்து வேறுபட்டது. அதனினும் நுட்பமான வேறுபாடு கொண்டது நிழலின் உதவியில்லாமல் வரிகளைக்கொண்டு மட்டுமே உருவத்தைக்காட்டும் திறன்கொண்ட ஓவியனுடையது.

சொறசொறப்பான பாறையும் வெண்ணைக்கல்லும் சிற்பியின் உளிக்கு தன்னை முற்றாக ஒப்புக்கொடுப்பதில்லை. என்றாலும் கற்பனையில் இருக்கும் உருவத்தை கருங்கல்லிலோ, மார்பிளிலோ ஒரு சிறு துளியும் பிசகாமல் வடிவமைக்கும்போது அச்சிற்பத்தில் கல்லோ வெண்ணைய்க்கல்லோ எவருக்கும் தெரிவதில்லை.  மாறாக, வீனஸ்ஸையோ, அஃப்ரொடைட்டையோ, தாண்டவ நடராஜனையோதான் காண்கின்றனர். அச்சிற்பத்திற்கு ஈடானது காண்போனின் உள்ளம். அவ்வுள்ளத்தை எழுத்தாளனுடைய, கவிஞனுடைய, இசைக்கலைஞனுடைய, ஓவியனுடைய சிற்பியுடைய, யோகியுடைய பார்வையிலிருக்கும் அதே பாவத்தோடு ஒன்றிப்போகச் செய்யும்போது படைப்பாளனும் நுகர்வோனும் ஒரு பிறப்புக்கணத்தின் இரு பகுதிகளாகின்றனர். அவர்களிடையே ஒட்டுறவு நிகழ்கிறது. கலையுற்பத்தி செய்பவனுக்கு நேரே நின்றுகொண்டுதான் கலைவிமர்சகனும் எழுதுவதோ படைப்பதோ செய்துகொண்டிருக்கிறான். படைப்பாளியில் இருக்கும் ஒத்தமனமுடையவன் நூற்றுக்கணக்கான வாசகனில், விமர்சகனில் நுழையும்போது கலைஞன் வெற்றிபெறுகிறான். எண்ணற்ற விழுமியங்களை ஒற்றை உருவகத்தில் பொருத்தமாய் இணைப்பது பெரும் கற்பனையாளருக்கே இயலும். அவ்வாறுள்ள் ஒரு படிமம்தான் சிதம்பரத்திலிருக்கும் தாண்டவ நடராஜனுடையது. ஒழுங்கற்றது எனினும் வேறொரு வகையில் அதேயளவு முக்கியத்துவம் வாய்ந்ததே பிக்காஸோவின் குயெர்னிக. அதிலும் சாரமாக உள்ளது ப்ரணவத்தின் குறியீடே.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

Standard

அடிமுடியற்றமதுண்டிதுண்டதுண்டெ
ன்னடியிடுமாதிமஸத்தயுள்ளதெல்லாம்
ஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின்
வடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?

                                                          (ஆத்மோபதேச சதகம் – பாடல் 19)

அடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது
என்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே உள்ளதாம்
இயங்காதவை எல்லாம் நிலையற்றவையாம்
நீரின் ஒரு வடிவேயல்லாமல் அலை வேறொன்றோ?

மலைப்பிரசங்கத்தில் யேசு சொன்னார் ‘அமைதி கொணர்வோர் அருளப்பெற்றவர்கள். அவர்கள் சொர்க்க ராஜ்யத்தை அடைவார்கள்’. இவ்வுலகத்தின் மிகப்பெரும் தேவையே அமைதிதான். எப்போதும் பூசலிடுவதே ஒரு போக்காக உள்ளது. விவிலியத்தில் உள்ள இன்னொரு அருமையான போதனை ‘உலகில் அமைதியும் மக்களிடையே நல்லெண்ணமும்’ என்பதாகும். நாம் அமைதியை இழந்து போரிடுவதற்கு பற்பல காரணங்கள் உள்ளதாக தெரிகிறது. மாபெரும் ஞானிகளின், இரட்சகர்களின் சொற்கள்கூட குருதிசிந்த காரணமாகியிருக்கின்றன. அப்பெரும் புகழ்பெற்றவர்களின் பெயரால் – அவர்கள் மீதான பெரும் பற்றால் – மனிதன் சிந்திய குருதி கொடுமையின் பெயரால் சிந்தியதைவிட அதிகம். அத்தகைய துன்பகரமான ஒரு நிலையை நாம் எட்டியுள்ளோம். ஆத்மோபதேச சதகத்திலிருந்து நாம் கற்கும் மெய்யியல் வாழ்வின் தத்துவம். அதன் நோக்கம் அமைதியால் இணைவதேயன்றி முடிவிலா விவாதங்களின் மூலம் பிளவுபடுதல் அல்ல.

முந்தைய பாடலில் பகிர்ந்துகொள்ளும்படி கோரப்பட்டோம். ஆனால் அதை நம் விருப்பம்போல் செய்ய விழைகிறோம். பிறர் விருப்பம் வேறுவிதமாக இருக்கும்போது பூசல்கள் எழுகின்றன. RO Laing ‘நான்-பிறர்’ என்பனவற்றைப் பற்றி பேசும்போது இதே கூறுகளை தொட்டுக்காட்டுகிறார். ‘நான்’ சுயவிருப்பு கொண்ட தனியனாக இறுகிவிடுகிறது. அவனும் அவன் விருப்பும் ஒன்றே. இந்தப் பொருளிலேயே இதை லெய்ங் அகம் என்கிறார். பிறன் என்பது அதே போன்று சுயவிருப்பு கொண்ட பிறிதொரு ஆள். அவன் அவனுடைய விழிப்புடனேயே அடையாளம் காணப்படுகிறான். எத்துணை குறுகலானதாக இருந்தாலும் இருவருக்கும் அவரவர் செய்கைகளை வழிநடத்தக்கூடிய அவரவருக்கான மெய்யியலும் தரிசனமும் உள்ளன.

நாராயண குரு ‘அடி’, ‘முடி’ என்பனவற்றோடு இப்பாடலை துவங்குகிறார். மதிநுட்பத்திற்கு முதலிடம் தரும் மெய்யியலாளர் பொதுவாக பொருட்களின் மூலத்தையே நோக்குகின்றனர். இந்த விளைவை உண்டாக்குவது எது? அடிப்படை கேள்வியே அவர்களுக்கு மிக முக்கியம். தேல்ஸ் முதல் ஹெராக்ளிடஸ் வரையிலான முற்கால கிரேக்க மெய்யியலாளர் அனைவரும் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது, அதன் இயல்பென்னவாக இருந்தது என்று ஆராய்ந்தனர். சாக்ரடீஸ் போன்ற மெய்யியலாளரும் ‘நான் யார்?’ என வினவினர். இந்தியப் பின்புலத்தில் சங்கரர் இவ்விளைவுகளெல்லாம் ஒரு காரணத்தால் விளைந்தவை என்றார். காரணத்தில் இல்லாத ஒன்று ஒருபோதும் விளைவாகாது. விளைவில் நாம் காண்பவை வேறுபாடுகளின் பல்வேறு கிளைத்தல்களும் விரிவாக்கங்களும். காரணத்தை நோக்கி செல்லும்போது எல்லா விரிவுகளையும் நீங்கள் காண்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு விதை தன்னிலிருந்து எத்தகைய இலைகளும், மலர்களும், வேர்களும், கிளைகளும் உண்டாகும் என்பதை காட்டுவதில்லை. வரவிருக்கும் அனைத்தையும் ஒன்றேயாக தன்னுள் கொண்ட ஒரு தனிப்பொருள் அது. ஆக, விளைவிலிருந்து காரணம் நோக்கி நீங்கள் செல்ல வேண்டும். அதாவது, நீங்கள் உங்களுடையதேயான ‘அடி’-க்கு, வேர்களுக்கு செல்லவேண்டும். சங்கரர் ‘அடி’ சார்ந்த மெய்யியலாளர்.

சங்கரருக்குப் பின் வந்த ராமானுஜர் தர்க்கரீதியாக காரணம் தேவை என்று கருதவில்லை. இங்கு இப்போது அன்பை உணரவும் இறையை மனிதனென நினைத்து அன்பு செலுத்தவுமான உயர்ந்த தேவை அவருக்கிருந்தது. மானுடத்தன்மையற்ற தூய இருப்பிலும் தூய அறிவிலும் அவருக்கு நாட்டமில்லை. இறைவன் என ஒருவனிருந்தால் அவனை தன் கண்களால் காணவும் கைகளால் தொடவும் அவனுக்கு பணிசெய்யவும் முடிய வேண்டும் என எண்ணினார்.

கிறித்தவத்தில் நமக்கு இறைவனும், சொல்லும், சதையாக மாறும் சொல்லும் உள்ளன. சொல்லானது யேசு கிறிஸ்துவைப் போல மனிதனாய் உருவெடுத்து நம்முன் நிற்கும்போதுதான் அவரது விழிகளுக்குள் நம்மால் நோக்க முடியும். அவரது புன்னகையை காணவும் அவர் தொட்டு வழங்கும் ஆசியை பெறவும் முடியும். அதன்பின் அவரது இனிய உருவை, அவரது மென்மையை, அமைதியை, மென்பேச்சை நம் மனதில் கொள்ளமுடியும். அதுகுறித்து நினைவுகளை மீட்டெடுக்க முடியும். ‘இதுவே எனக்கு வேண்டும்! என் கடவுள் விஷ்ணுவாக இருக்க வேண்டும்! அவனது தாமரைக்கண்களை, முத்துப்பற்களை, கோவைச் செவ்வாயை, மென் தொடுகையை, அவன் கைக்கொண்ட தாமரையை நான் காணவேண்டும்!’ என்றார் ராமானுஜர். அவரது விவரணை தொடருகிறது: ‘இதுவே நான் விழையும் இறுதிப்பொருள். என் இறையைக் கண்டு, பணிசெய்து அவனுடன் உறைதல் வேண்டும். என் இறை என்னுள்ளிலும் இருக்க வேண்டும். என் ஒவ்வொரு அணுவிலும் உள்ளுறையாக அழியா மெய்மையாக இறையை நான் உணரவேண்டும். மாயை என ஏதுமில்லை; எல்லாம் மெய்யே. இவ்விளைவுகள் எல்லாம் இறையின் விளைவுகளே. இது ஜடம் என்று சொல்லாதீர். ஜடப்பொருள் என ஏதுமில்லை. பொருள் என்பது அணுக்களால் ஆனது. ஒவ்வொரு அணுவும் இயக்கம் உடையது. அணுவின் இதயம் என்பது அகத்தில் உறையும் உயர்ந்தோன். இவ்வாறாக, எல்லாமே எனக்கு இறைத் தன்மை கொண்டதாகிறது.’ ஆக ராமானுஜருடையது ’முடி’ தத்துவம். இதில் காரணத்தைப் போலவே விளைவும் மெய்யானது.

‘உம் கடவுள் பேராற்றல் உடையவன், பேரறிவாளன், எங்கும் நிறைந்தவன் என்கிறீர். ஆனால், இவ்வுலகோ எல்லைகளுக்குட்பட்டது. எல்லையுடைய ஒன்றில் எல்லையற்றது எவ்வாறு இருக்க முடியும்?’ என்று கேட்கும் மெய்யியலாளர் உண்டு. பிளேடோவின் சீடரிடம் அரிஸ்டாடில் வினவினார் ‘நீங்கள் முன்மாதிரியான குதிரையை எப்போதேனும் கண்டதுண்டோ? நீங்கள் எங்கும் மூலப்படிவமான குதிரை எதையும் காண்பதில்லை. பொதுவான எதையும் நீங்கள் காண்பதில்லை. நீங்கள் அங்கே; நான் இங்கே. நீங்களும் நானும் தனிப்பட்ட மெய்மைகள். மொழிக்காக மட்டுமே நீங்கள் பொதுமைப்படுத்தி (கருத்தியலாக்கி) ‘நாங்கள்’ என்றும் ‘குதிரைகள்’ என்றும் கூறுகிறீர்கள். வெள்ளை குதிரைகள், கருப்பு குதிரைகள், நொண்டி குதிரைகள், பாய்ச்சல் குதிரைகள் என்று மட்டுமே வகைப்படுத்த முடியும். இவை எல்லாமே தனிப்பட்ட கூறுகள். எல்லையற்றது என்று நீங்கள் சொல்வது ஒரு கருத்தாக்கமே. ஒவ்வொன்றும் எல்லையுடையது; ஒரு முடிவு கொண்டது.’

செவ்வியற்பியலின்படி எல்லையிலா வெளியில் இவ் அண்டம் பொருத்தப்பட்டிருப்பதாக எண்ணியிருந்தோம். தற்போது பலவகை கோட்பாடுகள் உள்ளன. வெளி என்பது மிகப்பெரியது; ஆனால் அது எல்லையிலி அல்ல; ஒரு முடிவை கொண்டதாகவே இருக்கவேண்டும் என்பது பலரது கூற்று. பிறரோ எதையும் அறுதியிட்டுக் கூற இயலாது என்கின்றனர். நாம் பெருவெடிப்பில் இருக்கிறோமா அல்லது நிலையாக இருக்கிறோமா என்று விவாதிக்கலாம். ஒரு துகளா அல்லது அலையா? சிவப்பு நகர்வா? ஊதா நகர்வா? அல்லது கருந்துளையா? வெண்துளையா? நிச்சயமற்ற பூசல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஆக மெய்யியலாளர்களைப் போலவே அறிவியலாளர்களும் வாதிடுகின்றனர். வாழ்வுக்கான மெய்யியல் என்பதை, நம் வாழ்வை அமைத்துக்கொள்ள ஒரு சட்டகத்தை அளிப்பதே மெய்யியலின் பயன்பாடு என்பதை நாம் மறந்துவிடுகிறோம். Fritz Perls சில அடிப்படை உத்தேசங்களைக் கொண்டு ஒரு துதியை (வேண்டுதலை) இயற்றினார்: “எனக்கானதை நான் செய்கிறேன். உனக்கானதை நீ செய்கிறாய். உனது எதிர்பார்ப்புக்கேற்றபடி வாழ்வதற்கென நான் இவ்வுலகில் தோன்றவில்லை. நீயும் என்னுடையவற்றிற்காக இவ்வுலகில் இல்லை. நீ நீதான். நான் நானே. தற்செயலாக நாம் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றால் அது இனியது. இல்லையெனில், நாம் செய்வதற்கொன்றுமில்லை. சண்டையிடாமல் இருக்க இது ஒரு வழி. எனினும், வாழ்வை கருணையுடன் பார்க்கும் முறையல்ல இது.  நீங்கள் என்பது நீங்கள் மட்டுமல்ல, நானும்தான்.  நான் என்பது நான் மட்டுமல்ல, நீங்களும்தான். நான் உங்களுக்காக வாழவேண்டும். நீங்களும் என்னிடம் அக்கறை செலுத்தவேண்டும். இல்லையெனில் உலகம் சிதறிவிடும். எதிரெதிர் ஆர்வங்களும் கருத்துகளும் மோதிக்கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுவிடும். அடி-முடி பற்றியும் எல்லை-எல்லையிலி குறித்தும் நான்-பிற என்றும் நாம் பூசலிடுவோமெனில் Tower of Babel சொல்லும் மொழிக்குழப்பத்தையே அடைவோம். RD Laing சொன்னதுபோல பிளவுபட்ட அகம் கொண்டவர்களாவோம்; குடும்ப அரசியலில் சிக்கிக்கொள்வோம்.

இத்தகைய ஒரு நிலையிலிருந்து மீள வழி உண்டு என்கிறார் நாராயண குரு. நாம் உயிரியக்கக் கொள்கையை, தெய்வத்தன்மை கூடிய கூறை மட்டுமல்லாது ஜடத்தன்மை கொண்டதையும்-உயிரற்றதையும் நோக்க வேண்டும். ஜடப்பொருளானது வேறுபடுத்துவதற்கான அடிப்படை, உயிரூட்டும் அகம் என்பது இணைக்கும் கூறு. இயற்பியலாளர்கூட எண்ணற்ற தோற்றங்களைத் தவிர்த்து ஒரு இணைக்கும் பொருளைக் குறித்து எண்ண வேண்டும். அப்போது அவர்கள் ஒரு பொருளை அது இரும்புத்துண்டா அல்லது பாலடைக்கட்டியா என்று கருதவேண்டியதில்லை. அவற்றையெல்லாம் அவை எதிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமோ அந்த மூலப்பொருளாகவே – இயற்பொருட்கள் அனைத்திற்கும் தாயான ‘மாத்ரு’வாக குறுக்கமுடியும். Matter எனும் சொல் ‘மாத்ரு’ என்பதிலிருந்து தோன்றியது. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு கொள்கையாக குறுக்கவேண்டும், அல்லாமல் இயற்பியலோ, வேதியியலோ வேறெதுவுமோ இருக்க முடியாது.  அதுவே உயிரியக்கக் கொள்கை, மற்றெல்லா தனிப்பட்ட நிகழ்வுகளும் ஜடங்கள்.

நம் தனிப்பட்ட வாழ்விலும் அனைத்தும் நகர்ந்தும் மாறியும் கொண்டிருக்கும் ஓர் ஒழுக்கு இருக்கிறது. அமைதியாக நாம் அமர்ந்திருக்கும்போதும் நம்முள் குருதி ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளம்போல வளி நம் நுரையீரல்களில் உள்வெளியாக பாய்ந்துகொண்டிருக்கிறது. உடலின் உயிரணுக்கள் இறந்து மீண்டும் நிறைகின்றன. சுழற்சி மண்டலத்தின் ஆற்றல் ஊர்திகள் (Carriers of change)  உயிரற்றவற்றிற்கு பதிலியாக புதிய ஆற்றலை பெரும் வேகத்தில் காற்றுப்பையில் மாற்றிக்கொண்டிருக்கிறது. உடலில் பல்வேறு தனித்தனி உறுப்புகள், கூறுகள் இருந்தாலும் மொத்த உயிரியையும் ஒற்றைத் துண்டாக ஆளும், ஒருங்கிணைக்கும் அறிநிலை ஒன்றுளது. உடலில் உள்ள அனைத்தும் ஒன்று மற்றொன்றுக்கு உறுதுணையாக உள்ளன. மொத்த உயிரிக்கும் பயன்படும் வகையிலான கூட்டுச் செயல்நோக்கமான மனத்திட்பமும் அவ்வாறே உள்ளது. அதேபோன்று சமூகம் என்பது கூட்டுமுழுமை; ஒவ்வொரு தனியரும் அதை சேர்ந்தவர்; இயல் அண்டம் என்பதும் உலகில் வாழ்வு என்பதை பகுதியாகக் கொண்ட ஒரு கூட்டுக் கூறுதான்.

ஆன்மீக தளத்திலிருந்து இதை நோக்குவீர்களென்றால் அது எல்லாவற்றையும் இணைக்கிறது. இயல்நிகழ்வுத் தளத்திலிருந்து நோக்கும்போது அனைத்தையும் பிரிக்கிறது. அலைபாயும் நம் ஆர்வத்தையும் அகத்தையும் இறைமையம் நோக்கி திருப்ப நம்மில் ஒரு உணர்வுடை முயற்சி தேவை. அதன் பின் உலகில் உள்ள பிற அனைத்துடனுமான நம் உறவுகளிலும் ஒருமையே நோக்கமாக அமையும்.

கூட்டு வாழ்வில் பிறரது உளப்பாங்கு, நடத்தை குறித்து குற்றம் சொல்வதே நம் வழக்கமாய் இருக்கிறது. மக்களின் கருத்துகளில் அவர்களை சிக்கவைக்க முயல்கிறோம். தனிக்குழுக்களையும், உள்வட்டங்களையும் உருவாக்குகிறோம். அனைத்தையும் ஊதிஊதி பெரிதாக்கி ஒருவரை ஒருவர் எதிரியென நிறுத்துகிறோம். ‘இருவர் சேர்ந்தால் கூட்டு; மூவரானால் கூட்டம்’ என்றொரு சொலவடை உண்டு. இருவர் எளிதாக இருமுனைவுகளுக்குள் அமையலாம். ஆனால் மூன்றாமவர் வரும்போது குழப்பம் தானாக வருகிறது. கருத்துகள் விரைவாக பெருகுபவை (proliferate geometrically). எதை தேர்வது என்பதில் குழம்புகிறோம். உண்மையில் அது அவ்வளவு கடினமானதல்ல. மூன்றாவது கூறுக்கு – முக்கோணத் தன்மைக்கு இடமளிப்பது என்றும் எளிமையானதே.

நம் வாழ்க்கை நடைமுறைக்கு பெரிதும் உதவுவது இப்பாடல்.  இணைந்து வாழும் கலையை, முரண்பாடுகளை நீக்கும் கலையை, ஒத்திசைவெனும் கலையை இது செறிவாக சொல்கிறது. நாராயண குரு இதில் ஆழி-அலை எடுத்துக்காட்டை தருகிறார். அலையை நீரிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது எது? அது நீரின் பரப்பில் உருக்கொள்ளும் ஒரு முகடு மட்டுமே. அலையின் சாரம் என்பது அதே நீர்தான். வடிவுடன்தான் நம் போராட்டமே அன்றி சாரத்துடன் அல்ல. என்றும் எப்போதும் வடிவத்திலிருந்து விலகி சாரத்தை நோக்கி செல்வதற்கு நம்மை பழக்கிக்கொள்ளல் வேண்டும்.

அறிமுகம் இல்லாத இருவர் சந்திக்கின்றனர். இயல்பாக ஒருவரை ஒருவர் நோக்குகின்றனர். ஒருவர் மற்றவர்பால் ஈர்க்கப்படுகிறார்.  அதே ஈர்ப்பு அடுத்தவரின் இதயத்திலும் ஏற்படுகிறது. அவர்கள் அறியாமலேயே, காண்பதில் உள்ள மகிழ்ச்சி அவர்கள் இதயங்களில் நிறைகிறது; இருவரும் புன்னகை பூக்கின்றனர். ஏதோவொன்று அவர்களை பிணைக்கிறது. அறிமுகம் செய்துகொள்கின்றனர்; உரையாடுகின்றனர்; பொதுவான ஆர்வங்களை கண்டடைகின்றனர். பிரியும் வேளையில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்ளும் உணர்கொம்புகள் அவர்களில் தோன்றிவிடுகின்றன. முகவரிகளும் தொலைபேசி எண்களும் பரிமாற்றம் பெறுகின்றன. பிரிந்துசென்ற பின்பும் உண்மையில் அவர்கள் விலகிச்செல்வதில்லை. வீட்டிற்குச் சென்றபின்னர் எப்போதுமில்லா மகிழ்வில் திளைக்கின்றனர்; நேரில் உரையாடிக்கொண்டிருந்தபோதைவிட அண்மையிலிருப்பதாக உணர்கின்றனர். அந்த இருப்பு அவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; அது வளர்கிறது.  செல்லுமிடம்தோறும் ஒருவர் மற்றவர் குறித்த நினைவை ஏந்திச் செல்கின்றனர். தம் பிற நண்பர்களிடம் அவர் குறித்து பேசவும் அவரை அவர்கள் சந்திக்க வேண்டும் என்றும் விழைகின்றனர்.

இது எத்தகைய ஒரு வியப்பான இயல்நிகழ்வு? இந்த பரஸ்பர ஈர்ப்புதான் பல்லாயிரமாண்டுகளாக உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வுலகில் எண்ணற்ற மக்கள் பிறந்து வாழ்ந்து மடிந்தபோதும் மாந்தரின மரபு இச்சிறு பகிர்வாலேயே பேணப்பட்டு வருகிறது. புத்தரை நாம் கண்டதில்லை; யேசு கிறிஸ்துவை சந்தித்ததில்லை; சாக்ரடீஸை பார்த்ததில்லை. காண்டையோ ஸ்பினோசாவையோ, ஷேக்ஸ்பியரையோ ஷெல்லியையோ, காளிதாசனையோ, வால்மீகியையோ, சீன மெய்யியலாளரையோ நாம் கண்டதேயில்லை. பாக், மோட்சார்ட், பீதோவன் இவர்களெல்லாம் நம் புவியின் ஒரு சிறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். ஆயினும், நம் மனித மரபு உலகமெங்கிலும் கவிஞர்கள், கதைசொல்லிகள், தொன்மங்களையும் புராணங்களையும் உருவாக்கியவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், அறிவியலாளர்கள் என வாழ்ந்த அருமையான இம்மனிதர்களின் ஒளிர்மிகு எண்ணங்களால் வடிவமைக்கப்பட்டது. அவர்களின் பங்களிப்புகளெல்லாம் இன்றும் நம் வாழ்வில் நமக்கு வழிகாட்டியாக, கற்பிப்பவையாக ஒவ்வொரு கணமும் நமக்கு உதவுபவையாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் இங்கில்லை. அத்தகு அருமையான பண்புகளும் நுண்ணறிவும் கொண்ட உங்கள் நண்பர்தான் இங்கிருக்கிறார். பேராற்றல் வாய்ந்த இம்மரபுரிமைகளை நம்மிடையே பகிர்ந்துகொண்டு நம் வாழ்வை ஒரு பேரின்ப அனுபவமாக நம்மால் ஆக்கிக்கொள்ள இயலும்.

காபியோ தேநீரோ அருந்தும்போதுகூட நீங்கள் செய்வது என்ன என்று எண்ணிப்பாருங்கள். (அமெரிக்காவில் அமர்ந்து நீங்கள் அருந்தும்) உங்களது காலை தேநீர் எங்கோ தொலைதூர நாட்டில் தொடங்குகிறது.  அங்கு மிக்க ஏழ்மைநிலையில் இருக்கும் மக்கள் காலை நான்கு மணிக்கு துயிலெழுகின்றனர். நெரிசலான பேருந்தில் பயணித்து தோட்டங்களை நோக்கி நடந்து செல்கின்றனர். முற்றிய இலைகள் அவர்கள் விரல்களைக் கீறுவதற்கென காத்திருக்கின்றன.  அட்டைகள் அவர்கள் மேல் ஏறி குருதியை உறிஞ்சுகின்றன.  நாள்முழுவதும் இலைபறித்து தங்கள் கூடையை நிரப்பிக்கொண்டு எளிய உணவருந்த வீடுதிரும்புகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் பெரும் ஆலைகளுக்கு கொண்டுசெல்லப்படும் தேயிலைகள் கழுவப்பட்டும் உலர்த்தப்பட்டும் உங்களுக்குத் தேவையான கலவைகளில் தயாராகின்றன.  தகரடப்பாக்களிலும் பெட்டிகளிலும் நிரப்பப்பட்டு வண்டிகள் மூலம் மலையிலிருந்து கடற்கரைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. துறைமுகத்தில் பணியாற்றும் ஏழை கூலியாளர்கள் தேயிலையை கப்பலில் ஏற்றுகின்றனர். கடல்கடந்து உங்கள் துறைமுகத்தை அடைகிறது.  வினியோகஸ்தர்கள் சிப்பங்களாகவும் பொதியங்களாகவும் உங்கள் உள்ளூர் சந்தைக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து வாங்கி உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறீர்கள். ஆக, ஒரு கோப்பை தேநீரில் மொத்த உலகும் பங்கேற்கிறது. உங்கள் தேநீரில் சர்க்கரை சேர்த்துக் கொள்வீர்கள் என்றால் அந்த ஒரு கரண்டி வெள்ளைத் துகள்களுக்குப் பின்னால் வேறொரு உலகம் இருக்கிறது. இவ்வாறாக வெறும் ஒரு கோப்பை தேநீர் என்பதில் அடங்கியுள்ள இறைத்தன்மையை (numinous aspect) நாம் சிந்திக்கலாம்.

வாழ்வின் இறைத்தன்மையை அறியும் நுண்ணுணர்வை நீங்கள் பெறும்போது நன்றியுணர்வு உங்களை நிறைக்கிறது. ஒவ்வொரு கவளம் உணவுண்ணும்போதும், காபியோ தேநீரோ பருகும்போதும் சிறுமுயற்சி மூலம் நீங்கள் அடையக்கூடிய பெருநன்மைகளுக்காக இணைந்து வாழும் மனிதகுலத்தை நீங்கள் நன்றியோடு எண்ணிக்கொள்வீர்கள். உலகின் பல்வேறு வடிவங்களிடையே காணும் ஒருங்கிணைவே உங்களுக்கு புலப்படும். பகிர்வதிலும், அளிப்பதிலும், பெறுவதிலும் பேரின்பம் அடைவீர்கள்.  என் வீடு, என் குடும்பம், என்னுடையது எனும் தன்னார்வங்கள் மட்டுமே இருக்கும் இடத்தில்தான் பூசல் தொடங்குகிறது. தன்னார்வம் எனும் மேம்போக்கான வடிவம் பொதுநலன் எனும் கடலில் கரைந்து உலகத்தை உங்கள் நாடாக உங்கள் வீடாக பார்க்கவேண்டும். அந்த மனிதகுலம் என்பது உங்கள் உடன்பிறந்தோரால் நிரம்பிய உங்கள் குடும்பம் என்பதாகும்.

நாம் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்; அமைதியை கண்டடையவேண்டும்; அமைதித்தூதர்களாக இருக்கவேண்டும் என்று விழைகிறார் குரு. முதலில் நம் சொந்த வாழ்வில் நாம் அமைதித் தூதர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு நாமே அமைதியை கொணர்கிறோம்.  எல்லா அமைதிகளையும் இணைத்து, உலகுடன் அமைதிபாராட்டுகிறோம். அதை உடைப்பீர்கள் என்றால் நீங்கள் தோற்கிறீர்கள். ஆகவே, அமைதிகளை எல்லாம் ஒரே பொருளில் இணைப்போம்; அன்பு, கருணை, புரிதல் எனும் ஒற்றை இறைச்சரடில் கோப்போம்.