ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

அனுபவமாதியிலொன்னிரிக்கிலல்லா

தனுமிதியில்லிது முன்னமக்ஷியாலே

அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டெ

ன்னனுமிதியாலறிவீலறிஞ்ஞிடேணம்

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 31)

[அனுபவம் ஆதியில் ஒன்னிரிக்கிலல்லாதெ

அனுமிதியில்ல இதுமுன்னமக்ஷியாலே

அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டென்னு

அனுமிதியால் அறிவில் அறிஞ்ஞிடேணம்]

முன்னனுபவமின்றி அனுமானமில்லை

முன்னம் இதை கண்டதில்லை என்பதனால்

தர்ம்மி அனுமானத்தால் அறியப்படுவதில்லை

என்பதறிந்திடல் வேண்டும்

*

இனி நாம் காண இருக்கும் மூன்று பாடல்கள் நமது மெய்த்தேட்டத்தில் நமக்கு உதவக்கூடிய வழிமுறையை அளிப்பவை.

நாமிருக்கும் உலகு குறித்து மூன்று அடிப்படை கேள்விகள் நமக்கு எழக்கூடும்? ‘பொருள் என்பது என்ன?’ என்பது முதல் கேள்வி. அது எப்படி தோன்றுகிறது, எப்படி செயல்படுகிறது? பருவடிவமாக நமக்கு வெளியில் திகழும் பொருட்களை நாம் காண்கிறோம். அவை நமது அனுபவத்தின் ஒரு பகுதியாக உள்ளவை. அவற்றை தொடமுடியும், கேட்கமுடியும், சுவைக்க முடியும், முகர முடியும். ஏதோ ஒரு புள்ளியில் அவை தோன்றியிருக்க வேண்டும். அது எங்கு? எப்போது? நாம் பொருள் என்று அழைப்பதன் சாரம் என்ன? காற்றும் பூமியும் மிகவும் வேறுபட்டவை. ஆனால் அவற்றை எப்படி இந்த ஒரு வகைமையில் அடக்க முடியும்? உயிருள்ளதும் உயிரற்றதும் எப்படி பொருள் என்பதில் அடங்கக்கூடும்?

‘வாழ்வு என்றால் என்ன?’ என்பது இரண்டாவது அடிப்படைக் கேள்வி. அது எப்படி தோன்றுகிறது? ஒரு உயிரியல் கூறுக்கும் உயிரற்ற பொருளுக்கும் இடையே வேறுபாடு காண்பதெப்படி? பொருளில், அதை வாழும் ஒன்றாக ஆக்கும் குறிப்பிட்ட பண்பு எது? பரிணாம வளர்ச்சி என்பது ஏதோ ஒரு குறிக்கோளுடன், தனி விதிகளின் படி நிகழ்கிறதா? அவற்றிற்கு நோக்கம் எதுவும் உண்டா? உலகு தானாக இயங்குகிறதா அல்லது ஏதோ ஒன்றால் வழிநடத்தப்படுகிறதா?

‘நனவு என்பது என்ன?’ என்பதே மூன்றாவது முக்கிய கேள்வி. அது எப்படி தோன்றுகிறது? அது வாழ்விலிருந்து எப்படி வேறுபடுகிறது? நனவென்பதன் பரப்பு என்ன? எத்துணை ஆழமானது? எதுவரை விரிக்கப்படக்கூடியது? அதன் அடித்தளங்கள் என்னென்ன? இவற்றைத் தொடர்ந்து, நனவல்லாதது எது? என்பதும் இயல்பாக எழக்கூடிய கேள்வி.

உளவியலின் மொத்தப் பரப்பும் ‘நனவு என்பது என்ன?’ என்ற கேள்வியின் கீழ் வருவது. மொத்த உயிரியலும் ‘வாழ்வு என்பது என்ன?’ என்ற கேள்வியின் கீழ் அடங்கும். ‘பொருள் என்பது என்ன?’ என்ற வினாவின் கீழ் வருவது மொத்த இயற்பியலும் வேதியியலும். இந்த மூன்று வினாக்களுமே நமது ப்ரபஞ்சத்தின் இயல்பைக் குறித்த தேட்டத்திற்கு இட்டுச் செல்பவை.

இவற்றின் நீட்சியாக வரும் நான்காவது கேள்வி ஒன்றுண்டு. ‘நீங்கள் எதை கண்டடைய விழைகிறீர்கள்?’ நீங்கள் தேடுவது மெய்யை என்றால், அதை எப்படி உய்த்துணர்வீர்கள்? ஏதோ பேருண்மை ஒன்றைத் தேடி உங்கள் பயணத்தை தொடங்குகிறீர்கள். மெய்மையை நேருக்கு நேர் காண நேர்ந்தால் அதை உங்களால் அடையாளம் காணமுடியுமா? கனவில் நீங்கள் காணும் பலபொருட்கள் இருப்பதாகத் தோன்றுகின்றன. ஆனால் கண்விழித்ததும் அவை காணாமலாகின்றன. நனவு நிலையில் நீங்கள் உணர்பவை எதுவும் உங்களது கனவுகளில் இருப்பதுமில்லை. அப்படியானால் இவற்றில் எது மெய் என்று நீங்கள் எவ்வாறு அறியக்கூடும்? 

ஒரு ஆரஞ்சுப் பழத்தை பாருங்கள். அது ஒரு ஆரஞ்சு என்று எப்படி அறிகிறோம்? உண்மையில் இருப்பது என்ன? அதன் மெய்மை என்ன? உருண்டை வடிவம், ஆரஞ்சு வண்ணம், ஒருவகையான புறத்தோல். அதை உரித்தால் உள்ளே சாறு. அதற்கென ஒரு மணம், ஒரு சுவை. இந்தப் பண்புகள் உண்மையில் இருப்பதாக நம்புகிறோம். ஒன்றே ஒன்றுதான் இல்லை – ஆரஞ்சுப் பழம். நமது சோதனை வடிவம், சுவை, வண்ணம், தொடுகை, மணம் இவற்றையே எதிர்கொள்கிறது. அதை தொடுகையில் நாம் ஆரஞ்சை உணர்வதில்லை, தொடுகையை மட்டுமே உணர்கிறோம். அல்லது வண்ணத்தையோ வடிவத்தையோ உணர்கிறோம். அப்படியென்றால் ஆரஞ்சு எங்கே? அதன் பண்புகளை எல்லாம் கணக்கில் கொண்டு நம் மனதில் நாம் ஏற்படுத்திக்கொண்ட தொகுதி மட்டுமே அது.

இப்படியாக, பல்வேறுபட்ட கூறுகளை ஒன்றாக்கி ஒன்றை தொகுத்து அறிகிறோம். ஒரு பொருளின் கூறுகளை நுணுகிப் பார்க்கையில் அவை பல அடிப்படைப் பண்புகளின் தொகுதியாக இருப்பதை அறிகிறோம். ஆக, நீங்கள் காண்பது ஒரு பொருளில் உள்ளதை அல்ல, அதைப் பற்றி ஊகிக்கப்படுவதையே.

அடிப்படை மெய்மைகளைக் கண்டறிவதற்குத் தேவையான வழிமுறைகள் குறித்து Paramenides, Zeno போன்ற பழம் தத்துவவாதிகள் ஆராய்ந்துள்ளனர். நமது பகுத்தறிவின் எல்லைகளை சுட்டிக்காட்ட Zeno முன்வைத்த முரண்பாடுகள் புகழ்பெற்றவை. கணக்கியல் தர்க்கம் (mathematical logic) சில சமயங்களில் எப்படி புலனறிவின் மூலம் அறியப்படுபவற்றோடு மாறுபடும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். Descartes-இன் காலம் வரை மேலை மெய்யியலில் வழிமுறைகள் குறித்த பெரும் போராட்டம் இருந்தது. சரியான நெறிமுறைகள் இல்லையெனில் மெய்யியல் ஒருபோதும் ஒரு அறிவியலாக ஆக முடியாது என்றும் அது தனித்தியங்க முடியாது என்றும் அவர் கருதினார். இவ்வகையில் ஒரு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவரது முக்கியமான பங்களிப்பு. ஆனால், Cartesian நெறிமுறை கூட தன்னளவில் முழுமையான ஒன்றல்ல. அதன் பின்னர் Immanuel Kant தூய தர்க்கம் குறித்தும் நடைமுறை தர்க்கம் குறித்தும் ஆய்ந்து தனது பார்வையை வெளியிட்டார். ஒரு கருத்தாக்கம் என்பது நடைமுறை சாத்தியம் கொண்டதாக, மனதால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவேண்டும் என எண்ணினார் அவர். 

எப்போதும் தூய, கருத்துசார் அறிவுடன் செயல்முறை அறிவும் இருக்க வேண்டும். அறிவின் தூய தன்மை என்பது ஒரு அனுமானம் மட்டுமே. செயல்முறை அறிவியல் என்பது அந்த மெய்மையின் அடிப்படையில் ஒன்றை நிகழ்த்துதல். ஒரு சான்று இருந்தால் மட்டும், கண்களால் அதை காண முடிந்தால் மட்டுமே ஒரு தகவலுக்கு நம்பகத் தன்மை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, காலையில் இயற்பியல் வகுப்பில் ஆசிரியர் முன்வைக்கும் இயற்பியல் விதியை பிற்பகலில் செயல்முறைப்படுத்திக் காட்ட வேண்டும்.

இந்தப் பாடலில் நாராயண குரு, ப்ரம்மத்தை, முழுமுதலை மெய்யாக அறிய வேண்டுமென்றால் ஒரு முறையாவது அதனை உணர்ந்திருக்க வேண்டுமென்கிறார். உள்ளங்கை நெல்லிக்கனி போல அது மெய்யானதாக இருக்க வேண்டும். அதை உணர்ந்தவர் மட்டுமே முழுமுதலை மெய்யாக அறிந்தவராக முடியும்.

இதற்கு முந்தைய பாடலில் ஜடப்பொருளுக்கு அறிவில்லை, தூய அறிவு எண்ணுவதோ உரைப்பதோ இல்லை என்ற தரிசனம் முன்வைக்கப்பட்டது. ஜடத்தின் மௌனத்திற்கும் அறியப்படாத, அணுகவியலாத மெய்மையின் மௌனத்திற்கும் இடையில் நாம் அகப்பட்டிருக்கிறோம். இவ்விரண்டுமே மூடப்பட்ட வாயில்களுக்குப் பின்னால் இருக்கின்றன எனலாம். இரண்டிற்கும் இடையே அந்தியொளிப் பகுதி ஒன்றுள்ளது. அதில்தான் நாம் வாழ்கிறோம், நடமாடுகிறோம், கருத்துரைக்கிறோம், கூச்சலிடுகிறோம். இதை ஏற்கெனவே அறிவல்லாதது என்று குரு ஒதுக்கிவிட்டிருக்கிறார். 

அறியாமையில் மூழ்கியவரிடையே எப்போதும் சச்சரவுகள் இருக்கும். காரணம், அனுமானங்களே அவர்களது வழியாக இருப்பதுதான். எதையும் முழுமையாக அவர்கள் அறிவதில்லை. மிகச் சிறிதளவே அறிந்துகொண்டு எஞ்சியதை அனுமானிப்பார்கள். நமது பல்கலைக்கழகங்களிலும், பள்ளிகளிலும், தேவாலயங்களிலும், பிற சமூக நிறுவனங்களிலும் உள்ள கல்வியாளர்கள் தமது முன்முடிவுகளுடன் கூடிய அனுமானத்தின் அடிப்படையில்தான் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் எதிலும் ஒரு பகுதியையே கவனிக்கிறோம், எஞ்சியதை கற்பனை செய்துகொள்கிறோம். முழுமையாக ஒன்றை நாம் கவனித்துவிட்டதாக எண்ணுபவற்றில் கூட நாம் அரைவாசியே கவனித்திருப்போம். முன்முடிவுகளால் தூண்டப்படும் நமது கற்பனையே காலியிடங்களை நிரப்புகிறது. இத்தகைய ஒரு நெறிமுறை முழுமுதலை அறிவதற்கு உதவக்கூடுமா என்ன? 

உதவாது என்கிறார் நாராயண குரு. ஒன்றை நீங்கள் அறியவேண்டுமென்றால் அதை மெய்யாக நீங்கள் உணர வேண்டும். இங்கு நீங்கள் அறிய முற்படுவது அந்த வகைமையில் அடங்காது. அது ஒரு அறம் அல்ல, ஒன்றை அதுவாக வைத்திருக்கும் பண்பு அது. அல்லது அனைத்துப் பண்புகளையும் தன்னுள் கொண்டுள்ள தர்ம்மி. முழுமுதலை அடைவதென்பது மலைக்கச் செய்யும் சவால். நமது புரிதல் குறித்த, நாம் கற்றது குறித்த பெருமிதமெல்லாம் நம்மைவிட்டு விலக வேண்டும். இத்தடையை கடக்க, முன்னறிவிற்கும் பின்னறிவிற்கும் (a priori and posteriori) இடையேயான பகுப்பு குறித்த கருத்தை முன்வைத்தார் Kant. முன்னறிவு என்பது உங்களது அனுபவத்திற்கு அல்லது உணர்தலுக்கு முந்தையது. பின்னறிவு அனுபவத்திற்குப் பிறகு வருவது. ஒருவருக்கு முன்னறிவு எப்படி ஏற்படுகிறது? அது குறித்து பின்னர் கூறுவார் குரு. நமது அன்றாடம் வழியாக நமக்கு ஏற்படும் அறிவு அகத்தை அறிய உதவாது என்பதை மட்டும் இங்கு உணர்த்துகிறார். அகத்தை உணர்வதற்கு வேறு வகையான ஒழுக்கமும் புரிதலும் தேவை. 

அறியப்படாததை அடைவதற்கு உபநிடத ரிஷிகள் இரண்டு வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் பல மெய்மைகள் இருக்க முடியாது என்று அனுமானித்தனர். இப்போது ஒன்றாக இருப்பது பிறகு வேறொன்றாக ஆக முடியாது. அதற்கு முதலோ முடிவோ இருக்க முடியாது. மேலும், மெய்மைக்கு வெளியே சாட்சியென ஒருவரோ ஒன்றோ இருக்க முடியாது. அது இருமையை ஏற்படுத்துவது. இவை எல்லாமே கோட்பாடு சார்ந்த, கணக்கியல் சார்ந்த கருத்தாக்கங்கள். கோட்பாட்டு முறை வழியாக தத்துவார்த்த மெய்மையை சரியாக சென்றடைந்த பின்னர் நீங்கள் காண்பது ஒற்றை மெய்மையாக மட்டுமே இருக்க முடியும். அவ்வாறல்லாமல், அது மெய்யல்ல என்று நீங்கள் ஊகித்தீர்கள் என்றால், மெய்யென்பது பலவாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்கிறீர்கள்.

ரிஷிகளின் முதல் இரண்டு வழிமுறைகளும் எல்லாவற்றையும் உறுதிசெய்பவை. அவர்கள் அஸ்தி, அஸ்தி (இது, இது) என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ‘நான் காண்பதும் மெய்; நான் கேட்பதும் மெய்; நான் தொடுவதும் மெய்; நான் எண்ணுவதும் மெய்; நான் கற்பனை செய்வதும் மெய்; கற்பனை செய்ய முடியாததும் மெய்’ என்பார்கள். நனவின், விழிப்புநிலையின் சட்டகத்திற்குள் வரும் எதுவும் அவர்களால் மெய்யென உறுதிசெய்யப்படுகிறது. எந்த ஒன்றையும் உறுதி செய்யும்போதே தாம் உறுதிசெய்வது முழுமை ஒன்றின் ஒரு பகுதியை மட்டுமே என்று அவர்கள் அறிவார்கள். என்றோ ஒருநாள் முழுமையை கண்டடைவோம் என்ற எதிர்பார்ப்புதான் இது.     

அதற்கும் முன்பாகவே கோட்பாட்டு ரீதியாக முழுமை ஒன்றுள்ளது என்று நம்பினார்கள். அது எங்கிருந்து முளைத்தது? அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியது யார்? முதலில் கோட்பாடுகளின் மெய்மை வெளிப்படுத்தப்பட்டது எங்ஙனம்? நாமறியோம். ஆனாலும் நாம் அதை உணர்கிறோம். இதுவே உறுதிப்பாட்டு விவாதம் (argument of affirmation). மெய்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லாத, ஒரு கோட்பாட்டு வடிவாக வெளிப்படுவது எதுவோ அதுவே உறுதிப்பாட்டு விவாதத்திற்கான அடிப்படை.

நேதி, நேதி (இதல்ல, இதல்ல) என எல்லாவற்றையும் மறுத்தபடி செல்வது இன்னொரு வழிமுறை. நான் என்பது இந்த உடலா? நேதி. புலன்களா? நேதி. மனமா? நேதி, கட்புலனாகக் கூடிய ஒன்றா? நேதி. அனுமானிக்கத் தக்க ஒன்றா? நேதி. கண்ணுக்குப் புலப்படாததா? நேதி. அனுமானிக்கப்படாத ஒன்றா? நேதி. மாண்டூக்ய உபநிடதத்தின் நான்காவது பகுதியில் இப்படி பல மறுப்புகள் உள்ளன. அனைத்தையும் மறுத்த பின்னர், ஒரு வகையான புதிரான மௌன நிலையை நீங்கள் அடைவீர்கள். அப்போது உங்களுக்கு மறுக்க எதுவும் இருக்காது. ஆனால் அந்த நிலையின் இருப்பை உங்களால் மறுக்க முடியாது. மறுக்கஇயலா உணர்வொன்றால் நீங்கள் சூழ்ப்படுவீர்கள்.

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் யாக்ஞவல்கியர் மறுப்பு வழிமுறையை கையாள்கிறார். சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணி உறுதிப்பாட்டு வழிமுறையை கைக்கொள்கிறார். இரண்டு வழியாலும் நீங்கள் சென்றடைவது ஒரே மெய்மையை.

மக்களில் அகவயச் சிந்தனை கொண்டவர்களும், புற உலகில் செயல்படுபவர்களும் (introverts and extroverts) உண்டு. அனைத்தையும் இதல்ல இதல்ல என்று மறுத்துச் செல்வது முதல் வகையினருக்கும் எல்லாவற்றையும் உறுதிப்படுத்திச் செல்லும் வழிமுறை இரண்டாவது வகையினருக்கும் பொருந்தும். இரு வகையினருமே, கண்டடைவதற்கு மெய்மை ஒன்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்பவர்கள்தான். மெய்மையின் முழுமையை உணராவிட்டாலும் அதன் இருப்பை அவர்கள் தம் உள்ளுணர்வால் அறிகிறார்கள். அத்தகைய உள்ளுணர்வுக்கு எந்தப் பகுத்தறிவும் உதவாது. உணர்ச்சிசார் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதல்ல அது. மெய்மையின் இருப்பு தன் இருப்பாலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்வது என்றுதான் சொல்லவேண்டும். 

இது நமது தேடலுக்கு ஒரு குறிப்பை, துப்பை கொடுக்கிறது. முதலில், தூய அறிவு எண்ணுவதில்லை, பகுத்தறிவதில்லை, பேசுவதில்லை என்று நமக்கு சொல்லப்பட்டபோது நாம் மனமுடைந்து போயிருக்கக் கூடும். எது எண்ணவியலாததோ அதை எண்ணம் வழியே அணுகுவது எப்படி இயலும்? நமது சிந்தனைகளாலான உலகை, நமது அகப் பகுத்தறிதல் வழியே காணும் உலகத்தை, மௌனமாக நமக்குள் நாமே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடலை எல்லாம் நிராகரித்தால் நம் தேடலுக்கான கருவியாக எது எஞ்சக்கூடும்? இந்த அகக் குரல்களும் உரையாடல்களும் சரியான மூலத்திலிருந்து தோன்றவில்லை என்றால், அவற்றை கைவிடுவோமென்றால் நாம் சொல்லிழந்து போகிறோம். ஒருவகையான குமைச்சலோடு கைவிடப்பட்டவர்களாக உணர்கிறோம். இருளால் சூழப்படுகிறோம். காலடியிலிருந்து நிலம் நழுவி, காற்றில் மிதப்பதாக உணர்கிறோம். மிதக்கும் பொருள் என்ற கருத்தையே நாம் நிராகரிக்க வேண்டியிருக்கும்: மிதப்பதற்கு எவருமில்லை, அறிவதற்கு எவருமில்லை என்பதால். 

இந்தக் குலைவுகளையும் அழிவையும் தாண்டி ஏதோ ஒன்று எஞ்சுகிறது.  தேட்டம் கொண்டவர் அதற்குப் பெயரிடுவதில்லை, அதை ஒரு அனுபவமாகக் கூட கருதுவதில்லை. ஆனாலும், தானே அது என்று அவர் அறிகிறார். அதனுடன்தான் அவர் முதலில் உரையாடி இருப்பார். அதைக் கொண்டுதான் அனைத்தையும் அவர் முதலில் அறிந்திருப்பார். ஆகவே, அவரது புரிதலை எந்த வகையிலும் அவரால் கட்டுப்படுத்த இயலாது. அவரால் அதை பிரித்தறிய முடியாது, அதற்கு எந்தப் பெயரோ வடிவமோ இட முடியாது. அது அவரை மூழ்கடிக்கிறது, நிறைக்கிறது. அவரைப் பொறுத்தவரை ‘நான்’ என்ற ஒன்றில்லை. ‘அது மட்டுமே’ உள்ளது. பொதுவாக தெளிவற்றதாக, காணமுடியாததாக உள்ள இந்த ‘இது’வே வளர்ந்து பெருகி அனைத்தையும் நிறைக்கிறது. இப்போது ஒளியூட்டுவதற்கு எதுவும் தேவை இல்லை. ஏனெனில் இருளில் இருந்தபடி ஒளிரும் மெய்மை இதுவே. இது தன்னொளி கொண்டது, தன்னிருப்பை தானே பறைசாற்றிக் கொள்ளும் இருப்பு. முழுக்க அறிவாகவே இருக்கும் அறிவு – எதைப்பற்றிய அறிவும் அல்ல. அது ஆழமானது அல்ல, ஆழமே அதுதான். மதிப்புடையது அல்ல, மதிப்பே அதுதான். அது யாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதில்லை. ஏனெனில், ‘நான் மகிழ்வுடன் இருக்கிறேன்’ என்று சொல்ல அகம்/புறம் என்ற வேறுபாடே அங்கில்லை. என்றாலும், அதில் எந்தக் குழப்பமும் இல்லை. 

இந்தப் புரிதலை அடையும் ஒருவரை எந்த சந்தேகமும் பாதிக்காது. அங்குள்ளது வெறும் இருத்தல் மட்டுமே. ‘அது உள்ளது’ என்று மட்டுமே கூற முடியும். அதுவும் ஓரளவுக்கு தவறானதே. ஏனெனில் ‘அது உள்ளது’ என்பதே ஒருவகையான மதிப்பிடல்தான். ‘இது’ ‘உள்ளது’ என்பதை ஒன்றாக்கி, தூய இருப்பின் மௌனத்தில் ஆழ்ந்து, புலன்களும், மனமும், உங்கள் எதிர்பார்ப்புகளும், முன்முடிவுகளும் உண்டாக்கும் மதிப்பிடல்களை விலக்க முடியுமென்றால், அது மட்டுமே மெய்மை.

அந்தத் தூய நிலையை நீங்கள் அடையும்போது ‘நான்’ எனும் கருதுகோள் இல்லாமல் ஆகிறது. சொற்கள் பயனற்றுப்போகின்றன. மேன்மையின் உயரம், ஆழியின் ஆழம், முடிவிலியின் எல்லையற்ற தன்மை எல்லாம் புரியத் தொடங்குகிறது. அதை முழுமையாக அறிந்த பின்னர்தான் இவ்வுலகம் என்பது தற்காலிக நாடகம், பொருளற்ற நிழல் என்பது புரியும். அதே நேரத்தில், அதை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்ட பின் இந்திரனின் இவ்விளையாட்டை உங்களால் மகிழ்வோடு ஆட முடியும். இன்மையெனும் பெருவெளியில் வாழ்வெனும் ஆடலை மேற்கொள்ளும் குழந்தையென ஆகிறீர்கள். 

மெய்மையின் ஆழத்திற்குச் செல்ல இது முதல் அடிவைப்பு மட்டுமே. நாம் மேற்கொண்டு செல்வதெப்படி என்பதை அடுத்து வரும் சில பாடல்கள் சொல்கின்றன. அதற்கு மேலதிகமான சிந்தனையும் தியானமும் தேவைப்படுகின்றன. அதை மிக லேசாகத் தொட்டால் கூட போதுமானது. நீங்கள் அடைந்த பேரனுபவமாக அது இருக்கும். உங்களில் மாற்றம் நிகழும்.

Leave a comment