ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஜடமறிவீலறிவின்னு சிந்தையில்லோ

திடுகயுமில்லறிவென்னறிஞ்ஞு ஸர்வம்

விடுகிலவன் விஶதாந்தரங்கனாய் மே

லுடலிலமர்ன்னுழலுன்னதில்ல நூனம்

                              (ஆத்மோபதேச சதகம் – பாடல் 30)

அசைவற்றது அறிவதில்லை; அறிவுக்கோ எண்ணமில்லை

அது ஏதும் உரைப்பதுமில்லை; அறிவே அனைத்துமென்றறிந்தபின் 

அகம் எல்லையிலாது விரிகிறது 

அகம் விரிந்தவன் உடலுள் சிறைப்பட்டுழலுவதில்லை

*

தாயின் கருவறைவிட்டு இவ்வுலகிற்கு வரும் குழந்தை அளவுக்கதிகமான வெப்பத்தையும், தண்மையையும், ஒளியையும்தான் முதலில் எதிர்கொள்கிறது. பிறவி என்பதே வலிமிக்கது. குழந்தை பெரும் அழுகையுடன்தான் இந்த உலகிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. குழந்தையின் தொடக்ககால நடத்தைகளில் பெரும்பாலானவை மகிழ்வை ஏற்றல் அல்லது வலியை தவிர்த்தல் என்பதன் அடிப்படையிலேயே அமைகின்றன. புறத்துடன் தொடர்புறுவதோடு அகத்தில் சுருங்கவும் செய்கிறது அது. வலி-மகிழ்ச்சி, பிணக்கம்-இசைவு என்ற கொள்கைகளே உடலில் இயங்குகின்றன.

உடல் வலிகளில்தான் எத்தனை வகை! உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியை உணர்கிறது, சிறு எரிச்சல் முதல் பெரும் வலி வரை. உடல் என்பதே வலிகளின் தொகுதிதான். அந்த வலிகளுக்கு மாற்றாக பல இன்பங்களும் உண்டு. ஆனால், இன்பத்தை உணரக்கூடிய உடற்பகுதிகளோடு ஒப்புநோக்க வலிகளுக்கான சாத்தியம் கொண்ட உறுப்புகளே உடலில் அதிகமாக உள்ளன. 

நம்மில் இரு துருவக்கூறுகள் உண்டு. ஒன்று நாம் காணக்கூடிய, அடக்கம் செய்யப்படுவதற்காக சவப்பெட்டியில் வைக்கப்படும் உடலின் செயலற்ற தன்மை. மற்றொன்று தூய ஆன்மா அல்லது அகம். இவ்விரண்டாலும் நமக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இறந்த உடல் எரிக்கப்படுகையில் அதற்கு எந்த வலியும் கிடையாது. உடல் தன்னளவில் வலியேதுமற்றது. தூய அகமும் வலியற்றது. இவ்விரண்டிற்கும் நடுவே வலியாலும் இன்பத்தாலும் நிறைந்த ஒரு பகுதி உள்ளது.

ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. அவர் எதுவும் உணர்வதில்லை. உடலின் அந்தப் பகுதிக்கென வலி இருப்பதாகவே தெரிவதில்லை. பல் மருத்துவர் மரத்துப்போவதற்கான மருந்தை ஊசிமூலம் செலுத்திய பின் பல்லை பிடுங்கினாலோ, பல்லை குடைந்தாலோ ஒலியை வைத்தே ஏதோ நடக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். செயலற்ற பொருளுக்கு வலியோ இன்பமோ தெரிவதில்லை. மயக்கமருந்தின் விளைவு என்ன? செயலற்ற பொருளின் விழிப்புணர்வு இல்லாமல் செய்யப்படுகிறது. அப்படியானால் வலி எங்கு உள்ளது? பல்லிலோ, கண்ணிலோ, வயிற்றிலோ, கழுத்திலோ இல்லை. சில புலனுணர் பகுதிகள் தூண்டப்பட்டு அந்த அதிர்வுகளோடு நனவும் சேரும்போதுதான் வலியை உணர்கிறோம். வாழ்வுடனான நமது பிணைப்பும் விடுதலையும் இந்தப் பகுதியில் மட்டுமே உள்ளது.

உடலளவில் நாம் பாதிக்கப்படும்போது உடலில் வாழ்கிறோம். பிற சமயங்களில் பெரும்பாலும் நம்முடைய சமூக பிம்பத்திலேயே வாழ்கிறோம். நல்ல உணவு உண்கையில் உடலில் வாழ்கிறோம். உணவுண்ணும்போது நல்ல உரையாடலில் ஈடுபடுவோமென்றால் நமது சமூக பிம்பத்திலேயே நம் கவனம் குவிகிறது; என்ன உண்கிறோம் என்பதைக்கூட கவனிப்பதில்லை.

“நான் இன்னார்… உடன் பணிபுரிபவரின், நண்பரின், எதிரிகளின் பார்வைக்கு என்னுடைய இந்த பிம்பமே தெரிய வேண்டும்” என்கிறது நமது சமூக அடையாளம். ஒரு வகையில் இந்த பிம்பமே பிறரது எதிர்பார்ப்புகளால் உண்டாவதுதான். நீங்கள் இப்படி உடுத்த வேண்டும், இந்த வடிவில் இருக்க வேண்டும், கண்ணியமாக பேச வேண்டும் என்றெல்லாம் பிறர் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சமூக எதிர்பார்ப்புகளையெல்லாம் நீங்கள் கவனிக்கிறீர்கள்; அதற்கேற்றபடி நடந்து கொள்ள ரகசியமாக முயல்கிறீர்கள். ஆக, ஒரு இருபது வருடங்களில் ஒரு ஆளுமையை – உங்களது சமூக பிம்பத்தை – வளர்த்தெடுக்கிறீர்கள். அதன்பின் அதில் சிறு உடைவு ஏற்பட்டாலும் அஞ்சுகிறீர்கள். எனது சமூக பிம்பம் சீராக இல்லை, நான் மறுதலிக்கப்படுவேன் என்று எண்ணுகிறீர்கள். பிறர் உங்கள் மீது சேற்றை வாரியிறைக்க முடியும், உங்களை மிரட்ட முடியும். ஒருவர் மீதான மதிப்பு தாக்கப்படும் என்றால் அது உடலை கொல்வதற்கு இணையானதுதான். ஒருவர் தற்கொலை செய்துகொள்ளக் கூடும். இவ்வகையான சமூக பிம்பத்துடன் அகம் என்பதை, ஆன்மா என்பதை நீங்கள் குழப்பிக்கொள்ளக் கூடாது. அது சமூக தன்முனைப்பு (social ego) மட்டுமே.

தலைவலியோ வயிற்றுவலியோ இல்லாதபோது, அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், இன்னொருவர் மீதான நமது நம்பிக்கை என்னாயிற்று, பிறர் ஏன் நம்மை நம்புவதில்லை, நம்மீது அன்பு செலுத்துவதில்லை என்றெல்லாம் எண்ணி வருந்துகிறோம். உண்மையில் இது உடல்வலியைக் காட்டிலும் கொடியது. மனிதர்களால் உடல் வலியை பொறுத்துக்கொள்ள முடியும்; ஆனால் சமூக பிம்பம் அடிபடும்போது அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதையே 28-ஆவது பாடலில் இடைப்பட்ட அறிவு என்றார் குரு. உடல் என்ற கூறுக்கும் ஆன்மா என்ற கூறுக்கும் இடையே நனவு நிலைகள் சார்ந்த அறிவொன்று உள்ளது. இந்தப் பகுதியில்தான் நாம் வலியையும் இன்பத்தையும் உணர்கிறோம். 

நனவில் நான்கு நிலைகள் உண்டு. பிறரோடு, பொருட்களோடு, நிகழ்வுகளோடு நம்மை தொடர்புறுத்திக் கொள்ளும் விழிப்புநிலை ஒன்று. கனவுகளும் நமக்கு உண்டாகின்றன. நனவென்பது விழிப்புநிலைக்கும் கனவுக்கும் இடையே ஊடாடுகிறது. இவ்விரண்டு பகுதிகளும் வலியாலும் இன்பத்தாலும் நிறைந்துள்ளன. இது நனவின் கிடைமட்ட நகர்வு (horizontal movement of consciousness).

நனவு செங்குத்தாகவும் நகரக்கூடும். அது நனவெல்லை கடந்து உயரே செல்ல முடியும், அதேபோல் ஆழுறக்கத்தில் மூழ்கவும் கூடும். ஆழுறக்கத்தில் என்ன நடக்கும் என்பதை நாம் அறிவதில்லை. வலியோ, இன்பமோ, நோயோ எந்த வகையான மானுடத் துயரமும் அங்கில்லை. நாம் இயற்கையோடு ஒன்றிணையும் நிலை அது.

இயற்கை (ப்ரக்ருதி) சத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் கொண்டது.  சத்வம் தூய எதிரொளிப்பை கொண்ட நிலை; ரஜஸ் என்பது திரிபு கொண்ட கொந்தளிப்பான நிலை; தமஸ் என்பது நனவை பிற அனைத்திலிருந்தும் திரையிட்டு மறைக்கும் ஒளிபுகா நிலை. பொருளின் இயக்கமற்ற தன்மையே ஆழுறக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவது; இங்கு மனதின் கொந்தளிப்பான இயங்கியல் கூறும் அதன் எதிரொளிக்கும் திறனும் தமஸ் எனும் இருளால் மூடப்பட்டுள்ளது. நீங்கள் எதையும் அறிவதில்லை. ஓரளவு அறிதிறன் இருக்கையில் மட்டுமே ஒரு பண்புடன் உங்களால் தொடர்புறுத்திக்கொள்ள முடியும். உறக்கத்தில் புலன்வழி அறிதல் இருக்காது என்பதால் நமது அனுபவங்களுக்கு பண்பேதும் இருப்பதில்லை. ஒன்றை பார்க்காத வரை அது அழகானதா அழகற்றதா என்று சொல்ல முடியாது. மௌனத்தில் முரணோ அதிர்வோ இருப்பதில்லை. ஒருவர் பேசாத வரை அவர் சொல்வது பொருளற்றதா அல்லது பொருள்பொதிந்ததா என்று கூற முடியாது. தமஸ் எனும் குணத்தால் முழுமையாக மூடப்பட்டிருக்கும்போது நீங்கள் ஆழுறக்க நிலையில் இருக்கிறீர்கள். அங்கு உங்களுக்கு வலியோ இன்பமோ சிறிதும் இல்லை.

ஆழுறக்க நிலை என்பது நனவின் செங்குத்து இயல்கையின் எதிர்மறைக் கூறு (negative aspect of the vertical potential of consciousness). இயற்கையின் முக்குணங்களை கடந்தநிலையாக ஆவது நேர்மறைக் கூறு. அங்கு நீங்கள் இருப்பது நனவிலி நிலையில் அல்ல: முழு நனவுடன் இருக்கிறீர்கள், தூய நனவாக ஆகிறீர்கள். முக்குணங்களைக் கடந்த இந்த நனவுநிலையே துரியம் எனப்படுகிறது.  ஆக விழிப்புநிலை, கனவு, ஆழுறக்கம், கடந்தநிலை என நான்கு நிலைகள் உள்ளன.

சில அடிப்படைக் கருத்துப்படிவங்களை தெளிவாக புரிந்துகொள்வதற்குத் தேவையான மனப்பாங்கை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக, நாமிருப்பது ஒரு உடலில். அகம் அல்லது நனவுக் கூறு ஒன்று இந்த உடலை ஒளிரச் செய்கிறது. உடல் சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் கொண்டதாக இருப்பது தவிர்க்க இயலாதது. ஒலி, வடிவம், தொடுகை, சுவை, மணம் ஆகியவற்றை உணர்வதன் வழியாக தமது பண்பை வெளிப்படுத்தும் ஐம்பெருங்கூறுகளால் ஆனது இந்த உடல். முக்குணங்களும் ஐங்கூறுகளும் தம்முள் கலந்தியங்குகின்றன. சத்வ குணம் செயல்படுகையில் நீங்கள் செவியுறுவது இசைமை கலந்ததாக உங்களை மேன்மையுறச் செய்வதாக இருக்கிறது. ரஜோ குணம் இயங்குகையில் கொந்தளிக்கச் செய்வதாகவும் தமோ குணம் செயலாற்றுகையில் மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. சத்வ குணம் நீங்கள் காண்பதை ஒளிர்வதாகவும் ஊக்கமளிப்பதாகவும் ஆக்குகிறது. உற்சாகமூட்டும் வடிவங்களைக் காண்கையில் உங்களை கொதிப்படையச் செய்கிறது ரஜோ குணம். தமோ குணமோ நீங்கள் எதையும் தெளிவாகக் காணமுடியாதபடி இருளடையச் செய்கிறது. இப்படி, மூன்று குணங்களும் ஐந்து மூலக்கூறுகளுடன் இணைந்தியங்குகின்றன.  

உடலென உருக்கொண்ட நமது வடிவத்தில் ஐம்புலன்களும், மனமும், அறிவாற்றலும், நினைவும், தன்முனைப்பும் உள்ளன. இவற்றில் எந்த ஒன்றிலும் பிழைகளோ குறைகளோ இருக்கலாம்.  புலனறி திறன்கள் குறைவுபடலாம், மனப்பிறழ்வு தோன்றலாம். சிலருக்கு ஒரே சமயத்தில் எண்ணற்ற நினைவுகள் தோன்றலாம். பொருத்தமற்ற நேரங்களில் தேவையற்ற விஷயங்கள் நினைவுக்கு வரலாம். அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். நினைவுக்கும் பேச்சுக்கும் இடைப்பட்ட கதவு திறந்துகொள்ளும்போது நினைவுகள் தொடர்பற்ற சொற்றொடர்களாக முடிவே இல்லாமல் பெருகக் கூடும்.   கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த கவலைகள் மனதில் எழக்கூடும். அறிவாற்றல் சார்ந்த அமைதியின்மை தோன்றக்கூடும். இவை நிகழ்கையில் உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. உங்கள் மனதுக்குள் நீங்கள் வாதிட்டு ஒரு முடிவுக்கு வருகையில் எதிர்வாதம் ஒன்று தோன்றும். இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட முடிவுகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

ஆக, கேள்விகளை எழுப்பும் மனதிலோ (மனஸ்), மீட்டெடுக்கும் மனதிலோ (சித்தம்), முடிவெடுக்கும் மனதிலோ (புத்தி) – எங்கு வேண்டுமானாலும் சிக்கல் எழலாம். இறுதியாக தன்முனைப்பில் பிரச்சனை எழக்கூடும். இதனால் நீங்கள் தன்னுணர்வு மிக்கவராகக் (personally self-conscious) கூடும். எல்லோரும் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விழையத் தொடங்குவீர்கள். அங்கீகாரத்துக்காக பெரிதும் ஏங்குவீர்கள். “யார் என்னை மதிக்கப் போகிறார்கள்? யார் என்னை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்?” என்று சுற்றிலும் நோக்குவீர்கள். ‘நானும்-பிறரும்’, ‘நானும்-உலகும்’, நானும்-மக்களும்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பீர்கள். ‘நானும்-பிறரும்’ என்பதே உங்களது தீராத பிரச்சனை என்றால், கொடிய வாழ்க்கை அல்லவா அது? இந்த நோய்களில் இருந்தெல்லாம் நீங்கள் மீண்டாக வேண்டும். இல்லையென்றால் வாழ்வே பெரும் அச்சமாக மாறிவிடும்.

இந்த உடலையும், சமூக தன்முனைப்பையும் தவிர்த்து நமது தூய அகத்தையே நாம் சார்ந்திருக்க வேண்டும் என்பதே நாராயண குருவின் பரிந்துரை. தூய அகம் பேசுவதில்லை, எண்ணுவது கூட இல்லை என்றுதான் இந்தப் பாடலை தொடங்குகிறார் –  ‘டமறிவீலறிவின்னு சிந்தயல்ல’. பல்திசையில் பெருகும் உங்கள் மன ஓட்டம் என்பது உங்கள் அகமல்ல. R.D. Laing போன்றோர் அகம் என்று குறிப்பிடுவது எண்ணுகின்ற இந்த மனதையே. குரு இதனையே அகமல்லாதது என்கிறார். மேற்கில் அகமல்லாததே (Not-Self) அகம் (Self) எனப்படுகிறது. பௌத்தர்கள் அதனை அநாத்மன் – ஆன்மா அல்லாதது – என்கின்றனர்.

நிச்சயமாக உடல் வலி என்று ஒன்று உள்ளது. ஆனால் அது இருப்பது உடலில்தான், அகத்தில் அல்ல.  பழக்கப்படுத்தப்பட்ட நனவின் கூறுகளால் (fragmentary aspect of consciousness which is coloured and conditioned) உடல் என்பது வலியை உணர்கிறது. நாள் செல்லச்செல்ல இதுவே உங்கள் பெருங்கவலையாக மாறுகிறது. அதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போகிறது. 

உடல் சார்ந்த, தன்முனைப்பு சார்ந்த நிலைகளில் மூழ்கிவிடாமல் காத்துக்கொள்ள நீங்கள் பழகவேண்டும். முழுவதுமாக விடுபட்ட நிலையிலும், ஓரளவு பற்றின்றி இந்நிலைகளில் உங்களால் இயங்க முடியும். உங்களது காரோ, கணினியோ, வானொலிப் பெட்டியோ, தொலைக்காட்சிப் பெட்டியோ பழுதாகும்போது ‘போகட்டும்’ என்று அவற்றை நீங்கள் ஒதுக்கிவிடுவதில்லை. அவற்றை பழுதுபார்த்து சரிசெய்ய நினைக்கிறீர்கள். அதைப் போலவே, உடலையும் பராமரிப்பது அவசியம். ஊழின்படி நடப்பவை நடந்தே தீரும். ஆனால் எதையெல்லாம் சீராக்க முடியுமோ அதையெல்லாம் செய்தே ஆக வேண்டும்.

மூன்றாவதாக நீங்கள் உங்களை இணைத்துக்கொள்வதற்கு உங்களது தூய அகம் உள்ளது. இதை அறிவதே இன்றியமையாதது. அகத்துடன் உங்களை இணைத்துக்கொண்டபின் தன்முனைப்பையும், உடலையும் இயல்பான மனப்பாங்குடன் நீங்கள் அணுகலாம். இதைச் செய்தால், உடல்வலி போன்ற  அற்பமானவற்றில் முடங்கிப் போகாமல் பரந்த நனவு கொண்ட ‘விஷதாந்தரங்கனாக’ நீங்கள் ஆவீர்கள் என்கிறார் குரு. அந்த நிலையிலும் உடல்வலியை நீங்கள் உணர்வீர்கள். என்றாலும் அதுவே உங்களது முழு இருப்பையும் ஆக்ரமித்துக்கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள். வலியிலும்,  மகிழ்விலும் உங்களது அகத் தெளிவு மாறாமலிருக்கும்.

நமது சிந்தனை, தியானம், ஒழுக்கம் என அனைத்துமே நம்மை உடல்சார் அடையாளத்திலிருந்தும், தன்முனைப்புசார் அடையாளத்திலிருந்தும் விடுவித்துக் கொண்டு நமது தூய ஆன்மாவுடன் அடையாளப்படுத்திக் கொள்வதற்குத்தான். அது ஒரு புனிதப் பயணம். நாம் நம்மிலிருந்து விலகி நடந்து நம்மையே வந்தடைகிறோம். நமது உடலின் தோல் எனும் சுற்றெல்லையிலிருந்தும், தன்முனைப்பு எனும் உணர்விலிருந்தும் விலகுகிறோம். நாம் சென்று சேர்வதோ நம்முள்ளே, மிக ஆழத்தில். நமது சுற்றெல்லையிலிருந்து நமது மையம் மிக அருகே உள்ளதாகத்தான் தென்படுகிறது. ஆனால், உண்மையில் மிக மிகத் தொலைவில் உள்ளது. இதனால்தான், உபநிடதங்கள் அது அருகிலும் தொலைவிலும் உள்ளது; அகத்தேயும் புறத்தேயும் உள்ளது; அதுவே மிக அகலேயும், மிக அருகேயும் உள்ளது என்கின்றன. உங்கள் மையம் அளவுக்கு எதுவும் உங்கள் அருகே இல்லை; ஆனால் அதைச் சென்றடைவதற்கான பயணம் போல நீண்டதான வேறொரு பயணமில்லை. அதைச் சென்றடைவது மிக அரிது; அடைந்துவிட்டாலோ அனைத்தும் மிகப் பரந்ததாகிவிடுகிறது. 

இவ்வுலகில் துன்பம் உள்ளது. ஆனால் அதையே எண்ணி எப்போதும் கலங்குவீர்கள் என்றால் உங்களது முழு வாழ்வையும் நீங்கள் இழக்க நேரிடும். துன்பத்தைத் தாண்டி, நோய்களைத் தாண்டி நீங்கள் வாழ்ந்தே ஆக வேண்டும். இந்த உடல் மண்ணில் விழட்டும். என்றோ ஒருநாள் விழப்போவதுதானே அது? உங்களது கார் ஓடாமல் நின்றுபோனால் என்ன செய்வீர்கள்? நீங்களாகவே சரிசெய்ய முயல்வீர்கள். இயலவில்லையெனில் பட்டறைக்கு கொண்டு செல்வீர்கள். பழுதுபார்ப்பவர் இனி பயன்படாது என்று சொல்லிவிட்டால் அது குப்பைக்கிடங்குக்கு போய்விடும். நம் உடலும் அது போன்றதே.

தன்முனைப்பை கையாள்வது மேலும் சிக்கலானது. இன்று சமூக அங்கீகாரம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உங்கள் ஆன்மாவை, உங்களுடைய மெய்மையை, உங்கள் மெய் இருப்பை அங்கீகரிப்பதே அதைவிட அத்தியாவசியமானது. உங்களுடைய முதன்மையான, மிக மதிப்புள்ள அடையாளம் கண்டுகொள்ளப்படுவதில்லை. உங்களது உடலுறுப்பு ஒன்றை இழப்பதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று கேட்டார் யேசு. உங்கள் உடலுறுப்பைக் காத்துக்கொள்வதற்காக உங்கள் ஆன்மாவை இழப்பீர்கள் என்றால் அதுவே பேரிழப்பு. இதை நாம் புரிந்துகொண்டால்தான், உடலளவில் பெரும் துன்பத்திற்கு ஆளான மகான்களின் ஆன்மிக வாழ்வு அமைதியானதாக இருந்தது எப்படி என்ற புதிரை அவிழ்க்க முடியும். 

யேசு, புனித ஃப்ரான்சிஸ், புனித ஜான், ரமண மகரிஷி, ஶ்ரீ ராமகிருஷ்ணர், நாராயண குரு என பலரது வாழ்வு நம்முன் உள்ளது. உடலளவில் அவர்கள் எல்லோரும் பெருவலியால் அவதியுற்றவர்கள். சிலரை மொத்த சமூகமுமே கேலி செய்தது. யேசு வசைபாடப்பட்டார். ஶ்ரீ ராமகிருஷ்ணரை பைத்தியக்காரன் என்றனர். பெரும் ஞானியான மகாத்மா காந்தியே நாராயண குருவை சந்தித்துவிட்டுச் சென்றபின், அவரது பெருமையை அங்கீகரித்தாலும், அவரை ஒரு சூத்திரனாக மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்று எழுதினார். உலகம் அத்தகையதுதான். நாம் சமூகத்தால் பழக்கப்படுத்தப்படுகிறோம். உடல்சார் நோவுகளையும், சமூக அவதூறுகளையும் தாண்டி இத்தகைய பெரியோரிடமிருந்துதான் உலகில் அமைதி பரவுகிறது. மானுடனுக்கு கிடைக்கக்கூடிய ஆகப்பெரிய ஆறுதல் அதுவே. அவர்களே நம்மை தேற்றவந்தவர்கள், அவர்களிடமே அமைதியை, அகத்தூண்டலை நாம் பெறுகிறோம்.

மகான்கள் தம்மை ஆன்மாவுடன் அடையாளப்படுத்திக்கொண்டனர். அதுவே நம்மை ஆன்மிகப் பாதையில் இட்டுச்செல்கிறது. யேசு ‘சுவர்க்கத்தில் உள்ள என் தந்தை’ என்று சொல்வார். உபநிடத ரிஷிகள், ‘இப்படி சொல்லக் கேட்டுள்ளோம்’, ‘இங்ஙனம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது’ என்றே கூறுவர். ‘நான் சொல்கிறேன்’ என்று அவர்கள் கூறுவதே இல்லை. ‘இதி சுஷ்ருமா’ – ‘இப்படி சொல்லக் கேட்டுள்ளோம்’ என்றே கூறுவர். இப்படி எவ்வித சமூக தன்முனைப்பையும் சாராமல் இருப்பதே மிக முக்கியமானது. 

உடலின் பிடியிலிருந்தும் சமூகத்தின் பிடியிலிருந்தும் விடுபடுவதற்கு நாம் கடந்துசெல்ல (transcend) வேண்டும். கடந்தநிலையில் உடல் வலி உங்களை வருத்துவதில்லை. சமூகம் உங்கள் மீது சுமத்தும் அவப்பெயர் உங்களை துன்புறுத்துவதில்லை. இரண்டடுக்குத் துன்பத்திலிருந்து விடுபட நமக்கு அளிக்கப்பட்டுள்ள வழிமுறை இது.

ஆத்மோபதேச சதகத்தின் மிக அழகிய பாடல்களில் இது ஒன்று. பல வருடங்களாக இதை என் தியானத்தின் பகுதியாக வைத்திருக்கிறேன். பலமுறை நான் எதிர்கொண்ட சிக்கல்களிலிருந்து இப்பாடல் என்னை மீட்டிருக்கிறது. உடல்சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு, சுற்றத்தார் வருந்த, மருத்துவர்கள் குழம்பிப்போய் எல்லாவித மருந்துகளும் கொடுத்தபோதும் இந்த ஒரு பாடலே ஆகச்சிறந்த மருந்தாக எனக்கு உதவியிருக்கிறது. “செயலற்ற இந்தப் பொருளுக்கு எதுவும் தெரியாது. எனது தூய அகம் எதையும் எண்ணி வருந்துவதில்லை. இந்த உடலென்பது நனவென்னும் பெருங்கடலில் மிதக்கும் ஒரு தக்கை மட்டுமே. அது சிலபோது மேலெழும், சிலபோது அமிழும்” என்று இந்தப்பாடல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. வலி இருக்கிறதா? ஆம், வலிக்கிறது. என்னை யாரும் வசை பாடுகிறார்களா? ஆம், என்னை தீயவன் என்றார் ஒருவர். ஓம். ஓம். “நீ தீயவன்தானே?” ஆம். அப்படியே. அதனால் என்ன?

இப்படித்தான் நீங்கள் மெய்யான விடுதலை பெறமுடியும். சாதிப்பதற்கு அதைவிடப் பெரியது எதுவுமில்லை.

Leave a comment