நாராயண குரு
நாராயண குரு இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள். அவரது முக்கியமான சீடர் நடராஜ குரு. நடராஜ குருவின் மாணவர்தான், நாராயண குருவின் செய்தியை கேரள சமூகவாழ்வில் ஆழ வேரூன்றச் செய்தவரும் உலகமெங்கும் எடுத்துச் சென்றவருமான நித்ய சைதன்ய யதி.
நடராஜ குரு
1924 நவம்பர் 2-இல் கேரளத்தில் பத்தனம்திட்டா என்ற ஊர் அருகே உள்ள ‘முறிஞ்ஞகல்’ என்ற சிற்றூரில் நித்ய சைதன்ய யதி பிறந்தார். அவரது இயற்பெயர் ஜெயசந்திரன். அவரது தந்தை மூலூர் ராகவப் பணிக்கர் முக்கியமான கவிஞராக அன்று அறியப்பட்டிருந்தார். பந்தளம் பணிக்கர்கள் என்று புகழ் பெற்றிருந்த யதியின் குடும்பம் ஈழவர்களுக்கிடையே இருந்த ஓரிரு நிலப்பிரபுக் குடும்பங்களில் ஒன்று. அவர்களுடைய வரலாறு தமிழ்நாட்டில் பெளத்தம் தழைத்திருந்த ஒரு காலகட்டத்தை தொடக்கமாகக் கொண்டது. அவர்கள் இல்லத்து நிலவறைகளில் பல முக்கியமான பெளத்த பாலிமொழிச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யதியின் தாய்வழித் தாத்தா ஒரு பாலி மொழி அறிஞர்.
இளவயதிலேயே நித்ய சைதன்ய யதியை ஆட்கொண்ட இரு ஆளுமைகள் காந்தியும், நாராயண குருவும். சிறுவனாக இருந்தபோதே இவர்கள் இருவரையும் அவர் பார்த்திருக்கிறார். அந்நினைவு அவரில் ஆழப்பதிந்தும் இருந்தது. பின்பு அவரது தேடல் அவர்களைச் சார்ந்ததாக மாறியது. 1952-இல் நடராஜ குருவின் நேரடிச் சீடராக யதி மாறினார். நித்ய சைதன்ய யதி என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1956 முதல் 1959 வரை பம்பாய், காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் முதலிய இடங்களில் பல்வேறு குருகுலங்களில் தங்கி மரபான இந்திய தத்துவக் கல்வியைப் பெற்றார்.
1963 முதல் 1967 வரை டெல்லியில் சைக்கிக் அன்ட் ஸ்பிரிச்சுவல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இந்தியாவை விட்டுச் சென்று ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு பல்கலைகளில் ஆசிரியராக பணியாற்றினார். 1984-இல்தான் நித்ய சைதன்ய யதி இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பி வந்தார்.
ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் உள்ள நாராயண குருகுலத்தில் தங்கியிருந்தார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக ஏறத்தாழ 200 நூல்களை எழுதியிருக்கிறார்.
1999-இல் நித்யா ஃபெர்ன்ஹில் நாராயண குருகுலத்தில் மறைந்தார்.
(அனுபவங்கள் அறிதல்கள் என்னும் புத்தகத்தில் ஜெயமோகன் எழுதிய முன்னுரையிலிருந்து)
Dear sir,
I think I am very blessed to know about guru nithya. Beautiful and useful site . Pl send the books name and its publications (english and tamil)
which were written by guru nithya.
Thanks.
S.Subramanian,
Valanadu.
Dear Sir, Some books are available here – http://dkprintworld.com/authorbooks.php?authorName=Guru Nitya Chaitanya Yati http://www.dcbookshop.net/authors/nitya-chaithanya-yati
In Tamil there are only two books – அனுபவங்கள் அறிதல்கள் & அன்பும் ஆசிகளும் (They are out of print)
Regards, Srinivasan