ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

இருளிலிருன்னறியுன்னதாகுமாத்மா

வறிவதுதானத நாமரூபமாயும்

கரணமொடிந்த்ரிய கர்த்த்ருகர்மமாயும்

வருவது காண்க! மஹேந்திரஜாலமெல்லாம்

(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 27)

இருளிலிருந்தபடி தன்னையறியும் அகம்

அதறியும் அதன் பெயர் வடிவம்

செயல் புலன் வினையென அனைத்தும்

பெரும் மாயாஜாலம்

சீட்டுக் கட்டில் முதலில் உள்ளது கோமாளியை குறிக்கிறது, இறுதியாக உள்ளது மந்திரவாதியை. கோமாளியில் தொடங்கி மந்திரவாதியில் முடிவதற்குள் நீதிபதி, மரணம் என வாழ்வின் பல கூறுகளைக் குறிக்கும் சீட்டுகளை நாம் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வும் கற்றறியா கோமாளியில் துவங்கி மாயமெனும் வியப்பில் – ஜாலத்தில் முடிகிறது.

இந்தப்பாடலில் குரு அகத்தையும் உலகையும் ஒரு பெரும் மாயத்துடன் ஒப்புவைக்கிறார். இங்கே மாயம் என்பது பொருள்களை உணர்வதில் உள்ளது. பொருள்களை நாம் உணர்கையில் அவை அங்கே உள்ளன; நாம் உணராதபோது அவை அங்கில்லை. இறுதியில் அவை உள்ளனவா இல்லையா என்று நம்மால் கூறமுடிவதில்லை. அவை உள்ளன – இல்லையெனில் நம்மால் அவற்றை உணரமுடியாது. ஆனால் அதே சமயம், அவை இல்லை – மெய்யாகவே அவை இருக்கும் எனில் அவை தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவை இருப்பதில்லை. இது ஒரு மாபெரும் மாயம்தான்.

ஒரு கணம், காதலர் இருவர் கட்டியணைத்து ரகசியம் பேசுகின்றனர். ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறோம்; என்ன ஒரு இனிமையான காதல் என்று மகிழ்கின்றனர். அடுத்த கணமே இருவரும் ஒருவரையொருவர் அறியாதவர் போல் நடந்துகொள்கின்றனர். அதுவரை சொல்லப்பட்ட எதற்கும் எந்தப் பொருளும் இல்லாமலாகிறது. அவர்கள் நினைவில் கூட அது எஞ்சுவதில்லை. மீண்டும் அவர்களது மனப்பாங்கு மாறுகிறது. பழையவற்றை எல்லாம் புதைத்து புதிய ஆடலுக்கு அவர்கள் தயார்!  இப்படியாக மீண்டும் மீண்டும், மாறி மாறி.

மனமெனும் மந்திரவாதி மகிழ்விப்பதற்கென புலன்களெனும் தனது ஐந்து குழந்தைகளுடன் வருகிறான். அவர்கள் எல்லோரும் சேர்ந்து பெரும் மாய வித்தைக் காட்சியை தொடங்குகின்றனர். புலன்களை குழந்தைகள் என்பதைவிட தேவர்கள் என்றே சொல்லலாம். அதனால்தான் அவை, ஒளிரும் இந்திரன் என்பதிலிருந்து பெறப்படும், இந்திரியங்கள் என்ற சொல்லால் சுட்டப்படுகின்றன. கண் எனப்படுவது தோல், நீர், நரம்புகள் போன்ற தமக்கென எதையும் அறியும் ஆற்றலில்லாத ஜடப் பொருள்களால் ஆனது என்றாலும், அதனால் சூரிய ஒளியை உணரமுடிகிறது, எல்லாவற்றையும் தெளிவாக காணமுடிகிறது. ஒளிரும் தேவனைப் போன்றது அது. ஆகவேதான் ஐம்புலன்களும் இந்திரியங்கள் அல்லது தேவர்கள் எனப்படுகின்றன.

மீயொளிர் மனமானது கண்கள் பார்ப்பதை தானும் காண்கிறது, காதுகள் கேட்பதை கேட்கிறது, கைகள் தொடுவதை தொடுகிறது, நாசி முகர்வதை முகர்கிறது, நாவு சுவைப்பதை சுவைக்கிறது. அதோடு, கனவுநிலையில் போல, புலன்கள் செயல்படாதபோதும் அதனால் இந்த உணர்வுநிலைகளை உண்டாக்க முடிகிறது. எனவேதான் மனம் மகேந்திரன் எனப்படுகிறது – இந்திரன் என்றால் எண்ணத்தை உருவாக்குபவன் என்பது ஒரு பொருள். நம்மில் உள்ள இந்த மகேந்திரன் – மனமும் புலன்களூம் – உலக மாயத்தை, கண்கட்டுவித்தையை நிகழ்த்துகிறது.

நாம் உணரும் அனைத்தும் இந்த மந்திரவாதத்திற்குள் அடங்கிவிடும். மாயமெனும் காரியத்திலிருந்து பின்னோக்கிச் சென்று அதன் காரணத்தை அடைந்தோமென்றால் தொடக்கமாக அங்கிருப்பது மாயமேதான். அதன் பின்னால் நாம் காண்பது புலன்களையும் மனதையும். மனதை ஆராய்ந்தால், எல்லாவற்றையும் ஒரு நிகழ்வுத் தொடர்ச்சியாகவே நாம் காண்கிறோம். அனைத்துவிதமான செயல்பாடுகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஒருவர் ஓடிக்கொண்டிருக்கிறார், ஒருவர் நடந்துகொண்டிருக்கிறார், ஒருவர் அமர்ந்திருக்கிறார், ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார், உங்களிடம் வருகிறார் ஒருவர், உங்களை விரும்புகிறார், உங்களை வெறுக்கிறார். முடிவிலாச் செயல்பாடுகளான வினை (கர்மம்) என்பது இந்த மாயத்தின் ஒரு முக்கிய கூறாக உள்ளது.

ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பின்னால் செயலாற்றுபவராக நீங்கள் இருப்பதை காணலாம். நான் பேசுகிறேன்; நான் பார்க்கிறேன், நான் செய்கிறேன். இவையெல்லாம் ஒன்று உங்களை மகிழ்விக்கிறது அல்லது வெறுக்கச் செய்கிறது. “இதைக் காண்கையில் மகிழ்கிறேன்; இதற்காக வெட்கப்படுகிறேன்; இது மோசமானது; வெறுமையாய் உணர்கிறேன்; எனக்கெதுவும் தேவையில்லை; இவையெல்லாம் எனக்கு வேண்டும்.” யாரோ ஒருவன் செயல்படுபவனாக, அறிபவனாக, உணர்பவனாக ‘நான், நான், நான்’ என கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறான். இந்த ‘நான்’ என்பது எப்போதும் ஒன்றேதான். ஆனால் கோணம் மாறுகையில் அதற்கு கொடுக்கப்படும் அழுத்தமும் மாறுகிறது.

செயலாற்றுபவனுக்கு, அறிபவனுக்கு, உணர்பவனுக்கு எதிர்மறைக் கூறுகளும் உண்டு. ‘நான் செய்யவில்லை, நானறியேன், இதை நான் விரும்பவில்லை’. ஆக, ‘நான்’ என்பது பங்கேற்கிறது, பங்கேற்க மறுக்கிறது. இந்தச் செயல் இனம்காண்பது குறித்த கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு செயல்பாட்டில் ஒன்று நீங்கள் உங்களை அதனோடு இணைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் அல்லது அதிலிருந்து உங்களை விலக்கிக் கொள்கிறீர்கள்.

இத்தனை ஆரவாரம் செய்யும் இந்த ‘நான்’ என்பது யார்? இதை நீங்கள் ஆழ்ந்து நோக்கினால் அதன் இயல்பு தன்னுணர்வு என்பதையும், எப்போதும் அதன் மையம் ‘நான்’ ‘நான்’ என அதிர்ந்துகொண்டிருப்பதையும் உணர்வீர்கள். நிகழ்பவை அனைத்தும் அந்த ‘நான்’ என்னும் தன்னுணர்வை, அஹம்வ்ருத்தியை பாதித்துக்கொண்டே இருக்கின்றன. இப்பெரும் மாயத்தில் உணர்வுசார்ந்த தன்முனைப்பொன்று, ‘நான்’ எனும் தன்னுணர்வொன்று இயங்கிக்கொண்டே இருக்கிறது.

செயலில் ஈடுபடும் இந்த ‘நான்’ எனும் தன்னுணர்வை இன்னும் ஆராய்ந்தால் அது இயக்கமற்ற, ஒரேமாதிரியான ஒரு ஒற்றைத் தன்னுணர்வு மட்டுமல்ல என்பதை உணர்ந்து வியக்கிறோம். அது ஒரு நீரோடை போன்றதாய் உள்ளது.  நனவோடையில் ‘நான்’ எனும் தன்னுணர்வு எதையும் முடிவெடுக்கும் முன்பாக பல வாதங்களை முன்வைக்கிறது. அதனுள்ளே முடிவற்ற வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. “இது இவ்வாறானது; இது அதனோடு தொடர்புடையது, ஆகையால் அத்தகையது.” கருத்துரைக்கும் இயல்பு அதற்குள்ளது. அதற்குப் பின்னரே அதன் தொடர்ச்சியாக உணர்வு தோன்றுகிறது. ஒரு பொருளை அது என்ன என்று முடிவெடுப்பதற்கு முன்னர் அது ஏற்படுத்தக்கூடிய உணர்வு நிச்சயிக்கப்படுவதில்லை. அது நேர்மறையானதாக இருக்குமா அல்லது எதிர்மறையானதாக இருக்குமா, துயர் தருமா அல்லது இனிமையானதாக இருக்குமா என்பது (தற்காலிகமாக) நிறுத்திவைக்கப்படுகிறது. 

இந்த நனவோடை பகுத்தறிய உதவுவது. தற்போதைய சூழலைப் புரிந்துகொள்வதற்காக, அதில் நாம் நூற்றுக்கணக்கான நினைவுகளையும், தொடர்புடைய எண்ணங்களையும், கடந்தகாலத்தில் நிகழ்ந்த அனைத்தையும் காண்கிறோம். இவற்றை மீட்டெடுத்து ஏதோவொன்றை இனம்காணப் பயன்படுத்தியபின் அவை மறைந்துவிடுவதில்லை. அவை பின்னோக்கிச் சென்று முன்பிருந்த அதே இடத்தில், மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒளிந்துகொள்கின்றன. ஆக, பகுத்தறிவதன் விளைவாக உணர்வுரீதியான கருத்து உருவாகிறது. நினைவுகளின் வரிசையாலும் அவற்றை மீட்டெடுப்பது வழியாகவும் பகுத்தறிதல் நிகழ்கிறது. நினைவுகளின் இந்த மீட்டலை, இந்தக் கேள்விகளை, உணர்வை ஏதோ ஒன்று தூண்டுகிறது. ஒரு கருத்தை உருவாக்க, ஒப்பிட, நினைவை மீட்ட, ஆராய ஏதோ ஒரு வற்புறுத்தல் உள்ளது. அந்த வற்புறுத்தலே மனம் எனப்படுகிறது. 

இந்த வற்புறுத்தல் எங்கிருந்து வருகிறது. சீட்டுக்கட்டில் கோமாளி போன்றது அது. கோமாளி எதையும் அறிவதில்லை, ஆனால் அறிய விரும்புகிறான். நாம் மந்திரவாதியின் மாயத்திலிருந்து தொடங்குவதில்லை; ‘இது என்ன? எனக்கெதுவும் தெரியாது. என்னவென்று சொல்லுங்களேன்!’ என்று கதறும் கோமாளியிடமிருந்தே தொடங்குகிறோம். தன்னுணர்வின் மேல்தளத்தில் ஒரு உசாவல் வடிவில் தோன்றுகிறான் கோமாளி. நனவென்பதே சின்னஞ்சிறு குமிழிகளால் ஆன வெண் நுரையெனப் பொங்குகிறது. குமிழிகள் நனவிலியின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வருகின்றன. நனவிலெழும் இந்தக் குமிழிகளுக்கு அப்பால் நாம் பார்க்க முயற்சித்தோமென்றால், அங்கே எதுவும் தெளிவாக இல்லை என்பதைக் கண்டு குலைந்துபோவோம். ஒரு எண்ணம் குழிழியென எழுகிறது, ஆராயப்படுகிறது, மறைந்துபோகிறது. அது மறைவதற்கு முன்னரே மனதில் இன்னொரு எண்ணம் விரிந்து செயலாக, உணர்வாக வளர்கிறது. அதுவும் மறக்கப்படுகிறது. இவை ஒரு வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக வருவதால், இருந்தது, இருப்பது, வரப்போவது என்று உங்களால் பிரித்தறிய முடிகிறது. ஒரு கால வரிசையில் அது நிகழ்வதால் அங்கே மனம் மட்டுமல்லாமல் காலமும் உள்ளது.

வரிசையாக வருபவை எல்லாம் ஒரு பெரும் பரப்பில் ஒன்றன் மேல் ஒன்றாகவோ, ஒன்றன் அருகில் ஒன்றாகவோ, அல்லது ஒரு முக்கோண உறவிலான அமைப்பிலோ, ஒன்றோடொன்று பின்னியபடியோ, தனித்தனியாகவோ அமைக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் வெளி தேவைப்படுகிறது. காலச் செயல்பாடு வெளியில் நடைபெறுகிறது. 

எனவே, கால-வெளித் தொடர்பம் (continuum) ஒன்றுள்ளது. அந்தத் தொடர்பத்திற்குள்ளாக தனித்தனி கருத்துக் குமிழிகள் தோன்றி பொருளாக வெடிக்கின்றன. பொருளானது ஒரு பெயரைப் போல மொழிக் குறியீடாக பதிவாகிறது. நாம், கோமாளி எனும் புதிதாகப் பிறந்த நிலையைத் தாண்டி வருகையில் ஒரு பெயரல்லாமல் எந்தக் கருத்தும் நம் மனதில் எழுவதில்லை. ஒரு பெயரைச் சொல்கையில் அதற்கிணையான வடிவம் ஒன்றும் மனதில் எழுகிறது. பெயர்கள்-வடிவங்கள், காலம்-வெளி, வினையாற்றுபவர்-வினை, செயல்புரிபவர், அறிபவர், உணர்பவர், உசாவும் புலன், நினைவு, கருத்து, உணர்வு – இக்கூறுகளெல்லாம் எங்கிருந்து என்று சொல்லமுடியாதபடி வந்துநிற்கின்றன. 

இவற்றையெல்லாம் உண்டாக்கிய ஆதி மூலத்திற்கு செல்வோம். இவை எங்கிருந்து வருகின்றன என்பதை நாமறியோம். ஆதலால் இந்த அறிவெல்லாம் அறிவல்லாத ஒன்றில் நிற்கின்றன. அல்லது, எப்போதோ ஒருவர் விளக்கியது போல, அறியப்படாத மேகம் ஒன்றுள்ளது. அந்த மேகத்தின் மையத்திலிருந்து இந்த அறிதல்களெல்லாம் நிகழ்கின்றன. அது முழுமையான அறியப்படாமையா? நம்மால் சொல்ல முடியாது. முழுமையான அறிவின்மை இருக்கும் என்றால், இவையெல்லாம் எப்படி வந்திருக்க முடியும்? அவற்றை நாம் தெளிவாக பார்க்கிறோம். எனவே எந்த ஒளி கொண்டு நாம் அவற்றையெல்லாம் அறிகிறோமோ அந்த ஒளி அந்த அறியப்படாத மேகத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அந்த மேகத்திற்குப் பின்னால் அனைத்தையும் அறியும் அடிப்படை மெய்மை ஒன்றுள்ளது. அது ஒரு போதும் தானாக அறியப்படுவதில்லை, இவையெல்லாமாக அறியப்படுவது அது. இப்படி விசித்திரமாக அது விரிகையில், சூதுவாதற்ற கோமாளியின் கேள்வியில் தொடங்கி மந்திரவாதியின் இறுதி விளக்கம் வரை, அனைத்தையும் நாம் உணர்கிறோம். 

இவற்றையெல்லாம் ஒரு மொத்த விளைவாக கொள்வோமெனில், அதன் காரணம் அதை முழுமை பெறச் செய்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணமாக இருப்பது எது? தன்னொளி கொண்ட ஆத்மன் அல்லது அகம். தன்னொளி கொண்ட ஆன்மா அறியப்படுவதில்லை. அதன் விளைவை மட்டுமே – பல்கிப் பெருகும் இயல்உருத் தோற்றங்களையும் மாற்றங்களையும் மட்டுமே – நாம் காண்கிறோம். எது இருப்பதோ அது அறியப்படுவதில்லை; எது இல்லையோ அதுவே அறியப்படுகிறது. ஆகவேதான் அது பெரும் மாயாஜாலம் எனப்படுகிறது.

ஆன்மிகத் தேடல் கொண்டவர்கள் இந்த மாயாஜாலத்தை எல்லாம் தகர்த்து மாயவித்தைக்காரனை கண்டடைய பெருமுயற்சி செய்கின்றனர். ஆனால் மாயவித்தை அழிக்கப்பட்ட பின்னரும் உங்களால் மாயாவியை பார்க்க முடிவதில்லை. மாயாவி இருக்கிறான். அது ஐயுறவிலா உண்மை. ஆனால் அவன் மாயாவியாக தன் பங்கை ஆற்றாதபோது அவனை நீங்கள் மாயாவியாக அறிவதில்லை. ஆக, நாம் உணரத்தக்கதை மறுதலிப்பதன் வழியாகவே மூலத்தை அறியும் இயல்கையை நாம் இல்லாதாக்குகிறோம். இருத்தல் என்பது ஆதலில் அறியப்பட வேண்டும். ஆதல் அறியப்படுவதே அதன் இருத்தலால்தான்.

இருமையற்ற மெய்மையின் இரண்டு கூறுகளை குரு இங்கே தந்திருக்கிறார். அது இருமையற்றது, என்றாலும் அதில் ஒரு இருமை உள்ளது. அறியப்படாத இருப்பாக இருளில் மறைந்திருக்கும் தூய அகம் (pure Self) ஒன்று. பெயரும் வடிவும் கால-வெளியில் அமைந்துள்ள இப்பெரும் மாய உலகை தன்னுள் கொண்ட அகமல்லாதது (non-Self) மற்றொன்று. அவ்வுலகில் ‘நான்’ எனும் அடையாளம் மையமாக அமைந்து கேள்விகள் கேட்கிறது, நினைவுகளை மீட்டெடுக்கிறது, கருத்துக்களை உருவாக்குகிறது, பங்குகளை ஏற்று பற்பல புற அடையாளங்களைப் பெறுகிறது.

இது மிகப்பெரும் முரண்மெய்மை. அகமல்லாததுதான் அறியப்படாததாக இருக்க வேண்டும். ஆனால் அதுதான் அறியப்பட்டதாக உள்ளது. அகம், அனைத்தையும் அறிவது, ஆனால அது அறியப்படுவதில்லை. அது இருளில் அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. எப்போதாவது சில முறையேனும் உங்கள் வாழ்வெனும் பெரு மாயத்திலிருந்து விலகி, அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து சிந்தியுங்கள். அறியப்படாத மேகத்திற்கு அப்பால் ஊடுருவிப் பார்க்க முயலுங்கள். அங்கிருந்து ஒளிர்ந்தபடி தனது நிழல்களை பல வகையிலும் இங்கு வீழ்த்திக் கொண்டிருக்கும் ஒன்றை அறிய முயல்வீர்கள். என்றென்றைக்கும் ஆழ்சிந்தனையாளனுக்கான பொருள் இது. அவ்வப்போது அவன் மாயவித்தையில் திளைக்கிறான்; அதே சமயம் அது மாயம்தான் என்பதையும் அறிந்திருக்கிறான். அதில் முழுவதாக அமைந்துவிடுவதில்லை. திரைக்குப் பின் இருக்கும் மந்திரவாதியை (அது அவனும்தான்) அறியும்போதுதான் அவன் அமைகிறான். இதுவே இப்பாடலின் பெரும் பேசுபொருள்.  

Leave a comment