ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

அடிமுடியற்றடிதொட்டு மௌலியந்தம்

ஸ்ஃபுடமறியுன்னது துர்ய போதமாகும்;

ஜடமறிவீலது சிந்த செய்து சொல்லு

ன்னிடையிலிருன்னறிவல்லறிஞ்ஞிடேணம்

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 28)

அடிமுடி இல்லாது, அடி முதல் முடி வரை

தெள்ளென அறியப்படுவது துரிய நனவு

ஜடம் அறிதலற்றது; இது புரிந்தபின்

இடையில் இருப்பது அறிவல்ல என்றறிக!

*

முந்தைய பாடலில் அகம் என்பது, தன்னிலிருந்து தோன்றியதும் முழுமையான இருளில் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுமான தூய நனவென வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து, தன்னையறியாத இருளொன்றும் தன்னை அறிந்ததாக முழுதறியும் ஒரு அறிவும் இருப்பதாக நாம் உணர்கிறோம்.

நம்முடைய தனித்த இருப்பில் இந்த இருமை உள்ளதை நம்மால் தெளிவாக காணமுடியும். சிலவற்றைப் பற்றிய சிற்றறிவு மட்டுமே நம்மிடம் உள்ளது. வடிவம் கொண்ட உலகில், நமது பார்வை தொடுவானம் வரை மட்டுமே நீளமுடியும். அதைத்தாண்டி உள்ளதை நாம் காண முடியாது. நாம் விண்வெளியில் செலுத்தும் விண்கலத்தை குறிப்பிட்ட தொலைவு வரை மட்டும்தான் பார்வையால் தொடரமுடியும். பின்னர் அது மறைந்துபோகும். ஒரு புள்ளிக்கும் குறைவான அளவு கொண்ட பொருளை நம்மால் காண முடியாது. அதையும் தாண்டி பார்க்க வேண்டுமெனில் நமக்கு நுண்நோக்கி தேவை. அதில் தெரியக்கூடியதைவிட குறுகிய ஒன்றை நம்மால் ஒருபோதும் காண இயலாது. ஆக, நமது அறிவுக்கு வெளி சார்ந்த ஒரு எல்லை உண்டு (spatial limitation). வெளியில் உள்ள வடிவங்களைக் காணும் நமது பார்வை ஒரு எல்லைக்குட்பட்டது.

நாமறியாத அரபு அல்லது சீன மொழியில் ஒரு சொற்றொடரை பிறர் சொல்கையில் நம்மால் அதை கேட்க முடியுமே தவிர அச்சொற்கள் நமக்கு பொருள்படுவதில்லை. உலகில் உள்ள அனைத்துமொழிகளின் பேரகராதிகளையும் ஒன்றாக சேர்த்துவைத்துப் பார்த்தால், சொல்லென நமது இனம் பயன்படுத்தும் ஒலிகளில் பத்து விழுக்காடு கூட நமக்குத் தெரிந்திருக்காது. அப்படியிருக்க, மற்ற விலங்குகள் செய்யும் ஒலிக் குறியீடுகள் பற்றி சொல்லத் தேவை இல்லை. பெயர்களைப் பொறுத்தவரையும் நமது அறிவு எல்லைக்குட்பட்டதே.

நமது கடந்தகாலத்தைப் பார்க்கையிலும், நேற்று நாம் என்ன செய்தோம் என்பதுகூட நமக்கு தெளிவாக தெரிவதில்லை. பொதுவாகவே, மிகப் பழையதை நாம் மறந்திருப்போம். இன்றைய நமது நிரல் என்ன என்பது குறித்தும், யாரை சந்திக்கப் போகிறோம் அவர்களோடு என்ன பேசப் போகிறோம் என்பது குறித்த தெளிவும் நமக்கு இருப்பதில்லை. ஆக, நமது நனவு இயங்குவதே ஒரு எல்லைக்குட்பட்ட காலவெளியில்தான். நம்மில் பயணம் செய்பவர்களுக்கும் வெளி சார்ந்த எல்லை ஒன்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பெயர், வடிவம், காலம், வெளி என அனைத்து தளங்களிலும் நாம் எல்லைக்குட்பட்டவர்களாக் உள்ளதை நம்மால் உணரமுடிகிறது.

இறையியலில், கடவுளின் இருப்பு காரண-காரிய வாதத்தின் அடிப்படையில் விவாதிக்கப்படுகிறது: எந்த ஒரு விளைவுக்கும் ஒரு காரணம் உண்டு; உலகம் என்பது விளைவு, அதற்குக் காரணம் கடவுள். சில எளிய காரண-காரியங்களுக்கு இடையேயான உறவு நமக்கு புரிகிறது. ஆனால் ஆதிமுதல் காரணத்தை நோக்கி செல்லும்போது முட்டி நிற்கிறோம். கடவுளுக்குக் காரணமானது எது என்றால் நம்மிடம் விடை இல்லை. கடவுள் தானாகத் தோன்றிய ஒன்றென்றால் காரண-காரிய வாதமே தேவை இல்லை. உலகும் தானாகத் தோன்றியது என்று சொல்லிவிடலாம். இந்தப் புள்ளியில் இறையியலாளர் காரண-காரிய வாதத்தை முற்றாகக் கைவிடுகின்றனர். ஆதிமுதல் குறித்து நம்மிடம் அறுதிப்பாடு ஏதுமில்லை.   

இதுவரை, காலம், வெளி, பெயர், வடிவம், காரண-காரியம் இவற்றில் உள்ள எல்லைகளை பார்த்தோம். தொடர்ந்து, நமது அறிவு குறித்து ஆராய்ந்தால், அது நமது ஐம்புலன் உணர்வுகளோடு, நமது நினைவுமீட்டலோடு, நமது கருத்தாக்கங்களோடு தொடர்புடையதாக இருப்பதை காணலாம். இதனால்தான், புலனுணர்வுகளாலும் கருதுகோள்களாலும் ஆனது இவ்வுலகு என்றார் Schrodinger. நமது புலன்கள் ஐந்து, அவற்றின்வழி நாம் அறியும் பண்புகளும் ஐந்து வகையானவை. நமக்கு பத்து புலன்கள் இருந்திருந்தால் நாம் பத்து பண்புகளை அறிந்திருக்கக்கூடும். இதிலிருந்தே, ஐந்து பண்புகளோடு சாத்தியமான எல்லா அறிவும் முற்றுப்பெற்றுவிடவில்லை என்பதை நாம் உணரலாம். நமது புலன்சார் அறிவென்பதே, தனிப்பட்ட இருப்பு உருவாக்கும் நமது புலன்களுடைய பண்புகளின் புறத்தெறிவு (a projection of the properties of our sensory system, a projection that is made by the individuated being) மட்டும்தான்.

தனியர் ஒருவரை உமிழ் பூச்சியுடன் (spit bug) ஒப்பிடத் தோன்றுகிறது. கொத்துமல்லி விதையைவிட சிறிய இப்பூச்சி எப்போதும் தன்னைச் சுற்றி நுரைபோன்ற ஒன்றை உமிழ்ந்தபடியே இருக்கும். காலையில் இலைகளிலும் புல்லிலும் இந்த உமிழ்நீரை காணலாம். எச்சில் போலவே தோன்றினாலும் உற்றுப்பார்த்தால் அதனுள் அப்பூச்சி மறைந்திருப்பதை காணமுடியும்.

அதே போல் தனித்தது தன்னைச் சுற்றி உமிழ்நீராலான கட்டடங்களை எழுப்பியபடியே உள்ளது. மிகச்சிறிய, அச்சம்கொண்ட தன்முனைப்பு, தான் அற்பமெனும் எண்ணத்தை மறைத்துக்கொள்ள, குழப்பமெனும் நுரை மேகங்களை உமிழ்ந்தபடியே இருக்கிறது. ஆனால் அதைக் கடந்துசெல்வோருக்கு அந்த போலிப் பெருமை அருவருக்கத்தக்கதாக தோன்றுகிறது.  சினை முட்டை செய்வதும் இதையேதான். கருவென உருக்கொள்ளும் வரை தன்னைச் சுற்றி செல்களை உமிழ்ந்தபடியே இருக்கிறது. அந்தக் கரு குழந்தையாகி வளர்கிறது. நம்மைச் சுற்றி உமிழ்நீரை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். நமது இயல்கைகளை உமிழ்கிறோம். நம்மில் உள்ள இயல்கைகள் எப்போது வேண்டுமானாலும் மெய்யாகலாம். நமது அன்றாட விழிப்புநிலை அனுபவங்கள் எல்லாம் ஆதி நிரல் ஒன்றிலிருந்து உமிழப்பட்டதில் புதைந்துள்ள தூண்டுதல்களின் வெளிப்பாடுகளே.

மரபணுவியலாளர் சொல்வதை நம்புவதென்றால், மூல செல்லின் குரோமோசோம்களில் பதியப்பட்ட மூலநிரலோடுதான் நாம் இந்த உலகிற்கு வருகிறோம். அந்த நிரல் மேலும் மேலும் மூடியிடப்பட்டு பல செல்கள் கொண்ட உடலென பெருகுகிறது. ஒவ்வொரு செல்லின் உள்ளும் அதே மூலநிரல்தான் உள்ளது. அந்த நிரலின் சீரான அமைப்பு காரணமாக செல்களின் இடையே ஒரு ஒருங்கிணைவு அமைகிறது.

சுய அதிர்வு கொண்ட ஒரு அமைப்பு நம்மில் உள்ளது. நம்மில் ஒளி ஊடுருவுகையில், ஒருவகை அதிர்வு நம்மில் உண்டாகிறது. ஒலி அதிர்வொன்று நம் மேல் படர்கையில் வேறுவகையில் நாம் அதிர்கிறோம். வளிமண்டல அழுத்தத்திற்கு, புவியீர்ப்பு விசைக்கு என ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையில் நம்மில் அதிர்வுண்டாகிறது. இதற்கான எளிய எடுத்துக்காட்டுகளை நாம் நுண்ணிய ஓரணு உயிரில் கூட காணலாம். நுண்நோக்கியில் மட்டுமே காணக்கூடிய செதிள்களற்ற, தலையும் வாலும் மட்டும் கொண்ட ஒரு மீனை கற்பனை செய்து பாருங்கள். அதற்கு கண்கள் இல்லை, பின்னர் அதில் தோன்ற வாய்ப்புள்ள ஒரு அடிப்படை நரம்பு மட்டுமே உள்ளது. அதன் மீது ஒளி பட்டால அதை அதிரச் செய்ய முடியும். ஒளி அதன் மீது படுகையில் தலை உள்ள பக்கத்தை உதறியபடி அது நகர்ந்து செல்லும். வேறொரு பொருளின் மீது மோதினால் அது வேறு திசையில் திரும்பும். 

நமது நடத்தையே கூட, மிக சிக்கலானதாகத் தெரிந்தாலும், இதே போன்றதுதான் – குறிப்பிட்ட தூண்டலுக்கு எதிர்வினையாக நிகழும் ஒரு வகை அதிர்வுதான். ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழும் அதிர்வை பதிவு செய்தாலே அது பல நூல் தொகுதிகளாகக் கூடும். அதிர்வுகள் பெருகப் பெருக கலைக் களஞ்சியங்கள் பெருகுகின்றன. நாம் ஏற்கனவே பல கலைக்  களஞ்சியங்களை, சொல்லகராதிகளை, வரலாறுகளை, புவியியல்களை நிரப்பி வைத்திருக்கிறோம். புலன்சார் அதிர்வுகள்; நினைவுமீட்டல், கனவுகள் போன்ற மூளை அமைப்புசார் அதிர்வுகள்; சினம் கொள்ளச் செய்யும், அச்சுறுத்தும், இணங்கச் செய்யும், அன்பு கொள்ளச் செய்யும் பல சுரப்பிக் கசிவுகள் –  இவை எல்லாமே சில கசிவுகளால் உண்டாகும் மாயம்.  

ஒருவன் ஒருத்தி மேல் காமம் கொள்கையில், அந்த உணர்வு எதனால் உண்டாகிறது என்பதை அவன் அறிவதில்லை. அவனை மீறி அது நிகழ்கிறது. அவன் அவளைத் தீண்டுவதற்கு முன்பே அவனில் உள்ள பாலியல் சுரப்பிகள் தூண்டப்பட்டுவிடுகின்றன. இதே போல் ஒரு பெண்ணிலும், அவள் ஒரு ஆணை நினைத்த கணமே நிகழக்கூடும். இது ஒரு எண்ணம் மட்டுமே; என்றாலும் அந்த எண்ணம் திரவங்களை, ரசாயனங்களை உண்டாக்க முடியும். இந்த உடலமைப்பு ஒரு பெருவியப்பு; எவ்வளவு செலவழித்தும் எத்துணை நவீன கருவிகள் கொண்டும் வணிகமயமாக உற்பத்தி செய்துவிடமுடியாத பல அரிய நொதிகளை (enzymes) அது உற்பத்தி செய்கிறது. 

இவை எல்லாம் எங்கு நிகழ்கின்றன? ஒளிக்கும் இருளுக்கும் நடுவே நிகழ்கின்றன. நாம் இங்கே ஒளி என்று சொல்வது எதனை? விழிப்புநிலையில் உணரக்கூடிய பருண்ம உலகையும், கனவுகளின் நுண்ணுலகையும்,  உயிர்ப்பிக்கப்படாத ஆழ்துயில் இயல்கைகளையும் கடந்த தூய ஒளி அது. இருளின் சாயல் படிந்த இந்த மூன்று நிலைகளையும் புறந்தள்ளினால் எஞ்சும் தூய நனவு பிற மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருப்பது. இந்த நனவு முதலோ முடிவோ அற்றது; எதனாலும் கட்டுப்படுத்தப்படாதது. அதனுள் நிகழ்வதே அனைத்தும். அதுவே துரியம் எனப்படும் நான்காவது நிலை. அது மற்ற மூன்றோடு வருவதல்ல. என்றபோதும், நான்காவதன் ஒளியன்றி மற்ற எதுவும் இயங்க முடியாது. 

நமது நனவு இரண்டு பொருள்களால் (entities) ஆனது – மூன்று நிலைகளும் சேர்ந்தது ஒன்று, சாட்சியாக இருப்பது மற்றொன்று. நோக்கிநிற்கும் மெய்மை அல்லது தூய நனவு மட்டுமே நிபந்தனைகளற்றது. ஏதொன்றையும் சார்ந்தது அல்ல அது – முழுமையான சுதந்திரம் கொண்டது. மத்வாசாரியர் அதனை ‘ஸ்வதந்த்ர’ என்றே அழைப்பார். ‘ஸ்வ’ என்றால் தனது என்பது பொருள் – தனதே ஆன கருவி (‘தந்த்ர’) அது. தானே இயங்கும் மெய்மை துரியம் எனப்படுகிறது; மற்ற மூன்று நிலைகளும் ‘பரதந்த்ர’ – சார்புடைய கூறுகள் – எனப்படும்.

தடித்த நூல்களைச் சுமந்தபடி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சுற்றித் திரிகிறோம் நாம். ஏதோ ஒன்றை நாம் கற்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், நாம் கற்பதெல்லாம் நமது நரம்பியல் அதிர்வுகளெனும் உலகிற்குள் அடங்கியதாக உள்ளது. அதைத் தாண்டி நாம் செல்வதே இல்லை. இது தூய இருளுக்கும் தூய ஒளிக்கும் இடையில் நிகழும் அறிவு; அறிவு என்று சொல்லத்தக்கதே அல்ல இது என்கிறார் நாராயண குரு. இதை அறிவென்று சொல்வீர்கள் என்றால், தாயைக் காண முடியாமல் தளைக்கப்பட்டிருக்கும் நாய்க்குட்டியின் விநோதமான குரைப்பும் பேரறிவுதான். நாம் அந்தத் தவிப்பை, நிறைவின்மையை சற்று விரிவாக பண்படுத்தி வைத்திருக்கிறோம். அவ்வளவே!

முன்னொரு காலத்தில், அறிவியலாளர் அறுதியான அறிவை பெறமுடியும் என்று நம்பினர். பின்னர், மிகை எழுச்சியற்ற ஐன்ஸ்டைன், ஹெய்சன்பெர்க் போன்ற நேர்மையான உள்ளம் கொண்டோர் தோன்றி, “பொறுங்கள்! அவ்வளவு தூரமெல்லாம் சென்றுவிடாதீர்கள். நாமறிந்ததெல்லாம், தனது புலன்களையும் மனதையும் பயன்படுத்தும் ஒரு தனியரின் நிலையிலிருந்தபடி அறியக்கூடியவை மட்டுமே. நமது புலன்கள் வழியாகவும், நமது கணக்கிடும் திறன் வழியாகவும் உண்டாகும் தரவுகள் மட்டுமே நம்மிடம் உள்ளன. இந்தப் புரிதலே தனியர் சார்ந்த ஒன்றுதான். அடிப்படைக் கேள்விகளுக்கு விடைதரக்கூடிய தகுதி நமக்கில்லை” என்றனர். இது “நமது மனப்பதிவுகளை துண்டு துண்டாக இணைப்பது” என்கிறார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். அவ்வளவே. ஒளிக்கும் இருளுக்கும் நடுவே அமர்ந்தபடி நாம் பேசுவது இது; நாம் தேடும் மெய்யான அறிவு இதல்ல என்கிறார் நாராயண குரு. அப்படியானால், அறுதியான அறிவைத் தேடி எங்கு செல்வது?

இங்குதான் ஆழ் உறக்கம், கனவு, விழிப்புநிலை என்ற மூன்று நிலைகளை கடக்க வேண்டியதன் அவசியம் எழுகிறது. கடந்துவிட்டோம் என்று எப்படி அறிவீர்கள்? கழி, நிகழ், எதிர் என்ற முக்காலங்களினூடாக காணக்கூடிய படிகத்தன்மை கொண்ட ஒரு புதிய தெளிவு உண்டாகும்போது உங்களது பார்வை எந்தவிதமான எல்லைகளுமற்று விரிகிறது. பெயர்-வடிவம், காரண-காரியம் என எதற்குள்ளும் அது அடங்குவதில்லை. அது தொடக்கமா முடிவா என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. நாம் பயன்படுத்தும் சொற்களும் நமது எண்ணங்களும் பயனற்றுப் போகின்றன. இந்த முடிவிலா மௌனப் பெருவெளியில் நம்மால் இரண்டறக் கலக்கமுடிகிறது. இப்போது இங்கு நமக்குப் பயன்படும் இயல்வலிமை எதுவும் அங்கு நமக்கு உதவுவதில்லை. 

இப்படியாக, நமது புரிதலில் ஒரு சிக்கலான இடத்தை வந்தடைகிறோம். இதுவரை நாம் கற்றது என நாம் எண்ணுவதெல்லாம் பாவ்லோவின் நாய்களில் சுரக்கும் உமிழ்நீர் போன்றவை மட்டுமே. கல்வி என இது வரை நீங்கள் பெற்றதெல்லாம் மணியடித்த உடன் உங்களில் உமிழ்நீர் சுரக்க உதவுபவை. அவ்வளவே. இதைவிட மேலான ஒன்று உங்களுக்குத் தேவையில்லையா? 

அறியாமையில் திளைப்பவன் இருளில் வாழ்கிறான்; ஆனால் அறிவில் திளைப்பவனோ பேரிருளில் வாழ்கிறான் என்கிறது ஈஶாவாஸ்ய உபநிடதம். அறியாமை எனும் உலகின் மறைபொருளை அறிபவன் மரணத்தை கடக்கிறான் என்று அது தொடர்கிறது. மரணத்தை நாம் கடக்கவேண்டுமென்றால், வாழ்வின் அனைத்து நகைச்சுவைகளும் சோகங்களும் அடங்கிய அறியாமை எனும் உலகை நாம் முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யவேண்டும். பழமையான கிரேக்க நாடகாசிரியர்களும், ஷேக்ஸ்பியரும், ஜார்ஜ் பென்ர்னார்ட் ஷாவும் இதனை மிக சுவாரசியமாக கையாண்டிருக்கிறார்கள். 

அறியாமையின் மந்தணத்தை அறிவது தேவையான ஒன்றுதான். ஆனால் அந்த அறியாமையிலேயே மூழ்கிவிட்டால் நீங்கள் இருளில் வாழ்கிறீர்கள் என்று பொருள். அதைப்பற்றிய அறிதல் உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. நம்மில் பலரும் முழுஅறியாமைக்கும் முழுஅறிவுடைமைக்கும் இடையில் எங்கோ ஊசலாடிக் கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டு உலகங்களுக்கு நடுவில் சிக்கியவர்களிடம் ‘உயிரியல் பூங்காவுக்கு நீங்கள் செல்வது அங்குள்ளதைக் கண்டு வியக்க மட்டுமே, கூண்டுக்குள் அடைபடுவதற்கு அல்ல’ என்று நான் சொல்வதுண்டு. உயிரியல் பூங்காவுக்குச் சென்ற நண்பரொருவர் திரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவரைத்தேடி நாம் அங்கு போனால், அவர் கூண்டு ஒன்றில் இருந்தபடி வித்தை காட்டினால், ‘இங்கே என்ன செய்கிறாய்?’ என்று அவரை கேட்போம். ‘இந்த இடத்தை அனுபவிக்கிறேன்’ என்று அவர் சொல்வாரென்றால் ‘அறிவுகெட்டவனே, வெளியே வா. விதவிதமான விலங்குகளைப் பார்க்கதான் உன்னை இங்கு அனுப்பினோம். அவற்றோடு சேர்ந்திருக்க அல்ல’ என்போம். அவர் மற்றொரு குரங்கு போல ‘நான் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வாழைப்பழம் தா’ என்றால் நாம் என்ன செய்வது! இரக்கப்பட்டு ஒரு பழத்தை கொடுத்துவிட்டு வரவேண்டியதுதான்.

இன்னொரு நண்பர் பல்பொருள் அங்காடிக்கு போனார். வாங்கிக் குவிப்பதற்கு ஆர்வமூட்டும் பொருட்கள் பல இருந்தன. விரைவில், தன் பொழுதையெல்லாம் அங்கேயே கழிக்கத் துவங்கினார். ‘சிலவற்றை வாங்கத்தான் அங்கே சென்றாய். போதும். அதை விட்டு வா. உனது இயல்பு வேறெங்கோ இருப்பது’ என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால்,  அங்கு அவர் செல்லும்போதெல்லாம் அவர் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்கள் புதிதாக முளைத்துக்கொண்டே இருந்தன.

புத்தர் என்னும் கருணைவடிவானவர் தோன்றி, ‘அறியாமையெனும் இவ்வுலகிலிருந்து வெளியே வாருங்கள்’ என்றார். சிலர் அவருடன் வெளியேறினர். அதற்குப் பிறகு இன்னொரு அருளாளர் வந்தார். அவர் உலகின் வேறொரு பகுதியில் பிறந்தது தீவினை காரணமாக. ‘வெளியேறுங்கள்’ என்று அவர் சொன்னபோது மக்கள் கொதித்தெழுந்து அவரை சிலுவையில் அறைந்தனர். ‘நாங்கள் இப்படித்தான் வெளியேறுவோம்’ என்றனர். இன்றும் அருளாளர்கள் மீள மீள தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றனர், ‘இந்த உயிரியல் பூங்காவில் அடைபட்டிருந்தது போதும், வெளியேறுங்கள், விட்டு விடுதலையாகுங்கள்’ என்று சொல்லியபடியேதான் உள்ளனர்.

ஆக, நீங்கள் எப்படி ஒரு பொறியில் சிக்கி உள்ளீர்கள் என்பதையும் அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் அறிந்தே தீர வேண்டும். 

Leave a comment