ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும்

மனுஜனு மற்றொரு வேல செய்திடேண்ட

வனமலர் கொய்துமதல்லயாய்கில் மாயா

மனுவுருவிட்டுமிரிக்கில் மாய மாறும்

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 29)

மனமலர் கொண்டு இறைபோற்றுபவர்

பிறிதொரு  வினையாற்ற வேண்டியதில்லை

கான்மலர் கொய்க; இல்லையெனில்

மாயையின் மந்திரம் ஓதவே மாயை மறையும்

*

முதல் பாடலிலேயே இரண்டு எதிரெதிர் உலகங்களை கண்டோம் – ஒன்று பொருட்களால் நிரம்பிய புற உலகு; மற்றொன்று எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் நிறைந்த நனவோடை போன்ற அக உலகு.  காலையில் கதிரவன் எழுந்து நாளை ஒளிரச் செய்கையில் எண்ணற்ற பொருள்கள் உள்ளது போல் தெரிகிறது. எங்கோ அக ஆழத்தில் ஒளிந்திருக்கும் விழைவொன்றை நிறைவேற்றிக்கொள்ள ஏதோ ஒரு செயலில் மூழ்கிவிடுகிறோம். சில நேரங்களில் நாம் முனைப்புடன் தவிர்க்க எண்ணினாலும் சிலவற்றை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். பகலும் இரவும் மாறிமாறி வருவதற்கேற்ப நமது உளநிலையும் மனப்பாங்கும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

நமது தொடக்கம் தெய்வீகமானது என்பதையும் முழுமுதலின் இயல்பே நமது தூய இருப்பு நிலை என்பதையும் நம்மால் நினைவில் கொள்ள முடிவதில்லை. இன்பம் துய்த்தலே நமது புலன்களின் நோக்கமாக இருப்பதால் நமது இருப்பின் மையத்திலிருந்து விலகிச் சென்றபடியே இருக்கிறோம். இன்ப விழைவு நமது முழு இருப்பையும் ஒரு கொடி போல மூடிக்கொள்கிறது. அந்தக் கொடி எப்போதும் உளமாற்றங்களால் மலர்ந்தபடியே உள்ளது. நம் உள்ளில் வெகு ஆழத்தில் எங்கோ நனவின் பொறி எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அறியாமையெனும் பேரிருளால் அது மறைக்கப்பட்டுள்ளது. மழுங்கிய நமது ஒளியை நமது தன்முனைப்பு மேலும் மங்கலாக்குகிறது. அகம் என்பதே நமது தன்முனைப்பென தவறாகக் கொள்ளப்படுகிறது. 

உள்ளுறை விழைவுகளால் நமது தன்முனைப்பு தூண்டப்படுகிறது. பொருண்மையான உலகில் விழைவுகள் நிறைவேறுகின்றன. அங்கே பொருள்களே இன்பநுகர்வுக்கு ஊற்றுமுகமாக அமைகின்றன. இதனால் அனைத்திருப்பின் மெய்யான மூலத்திலிருந்து நம்மை துண்டித்துக்கொண்டு சிதைந்த உலகொன்றை படைத்துக்கொள்கிறோம். பாலையில் விடப்பட்டவரைப் போல ஒரு கானலில் இருந்து இன்னொன்றிற்குச் செல்கிறோம். நம் வாழ்வின் விடாய் தீர்க்கும் நீர் நமக்கு வெளியே இருப்பதாகவே நாம் எப்போதும் எண்ணுகிறோம். எவ்வளவு தேடியலைந்தும் நாம் அதை அடைவதே இல்லை. 

ஒரு பொருளே இன்பத்தின் ஊற்று என நாம் மயங்குகையில், அனைத்தும் ஒன்றே என்ற அக தரிசனத்தை இழக்கையில் நம் உடன் பிறந்தோரிடம் கூட பகை கொள்கிறோம். பொருட்களின் எண்ணிக்கை எல்லைக்குட்பட்டது என்பதால் நாம் போட்டி போட்டுக்கொண்டு பாதையில் எதிர்ப்படுபவரையெல்லாம் விலக்கி, முழுமையாக தன்னலம் மட்டுமே கொண்டவர்களாகிறோம்.

மாயையின் இந்தத் தாக்குதலில் இருந்துதான் நாம் தப்பிக்க விழைகிறோம். பகவத் கீதை 12-ஆம் அத்தியாயத்தில் கிருஷ்ணன் ஒவ்வொரு இயல்கையாக கணக்கில் கொள்கிறார்: ‘இதைச் செய்ய முடியும் என்றால் இதை செய்க! இல்லையானால் அதை செய்க! உன்னால் அதுவும் முடியாதென்றால் வேறு பல மாற்றுகள் உள்ளன.’ பைபிளில் இறைவனின் ராஜ்ஜியத்தை விளக்க பல்வேறு உவமைகளை பயன்படுத்துகிறார் கிறிஸ்து. ஒன்று உங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையென்றால் இன்னொன்று. ஒற்றை குறிக்கோளை நோக்கிச் செல்லும் பல பாதைகளை அவர் கைக்கொள்கிறார். உணர்வு ரீதியாக உங்களுக்கு அவற்றில் ஒன்று உவப்பாக இல்லை என்றால் அதற்காக வருந்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாதை நிச்சயம் எஞ்சும்.

இந்தப் பாடலில் நாராயண குரு மூன்று பாதைகளை நமக்குக் காட்டுகிறார். ‘மனமலர் கொய்து மஹேஶ பூஜை செய்வது’ முதலாவது. இந்தத் தொடரில் ஒவ்வொரு சொல்லும் ஆழமான பொருள் கொண்டது. மெய்யறிதல் நிகழ்கையில் இந்த உலகு அச்சுறுத்துவதில்லை. அது தூய மகிழ்வால் நிரம்பியிருக்கிறது. அனைத்துமே இனியவையாய், அன்றலர்ந்த மலரென நறுமணத்துடன் கூடி அழகாகத் தோன்றுகின்றன. நேற்றிரவு இசை கேட்கையில் இங்கிருந்த அனைவரும் தத்தமது இன்னிசையில் மூழ்கியதாகத் தோன்றியது. கூடி அமர்ந்து இசை கேட்கையில் ஒவ்வொருவருக்குள்ளேயும் உள்ள இசை மேலெழுகிறது. சுற்றியுள்ளவர் எல்லோரும் பாடுகையில் சிறு குழந்தைக்கும் பாடத் தோன்றியது. அனைத்துமே இனித்திருந்தன.

மனமலர் என்பதற்கு இதுதான் பொருள். அத்தகைய நிலையில் உங்கள் உள்ளத்தில் நிகழ்பவை எல்லாம் மலரைப்போல அழகாக மாறுகின்றன. அவை எல்லாமே உங்கள் வாழ்வெனும் தோட்டத்தின் இறையை அர்ச்சிக்கத் தக்கவை. உங்களது மனம் உங்களது ஐயனால், பேரிறையால் போற்றி வளர்க்கப்படும் தோட்டம் போன்றதே. ‘மஹா’ என்பது பெருமை என்பதற்கும் மேலான ஒன்றை சுட்டுவது. ‘மஹிமை’ என்றால் பெருமை எனக் கருதத்தக்க அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தது போல. ஈசன் என்பதற்கு உங்களுள் ஒளிர்வது, வாழ்வுக்கான அனைத்து ஊற்றுமுகங்களையும் நில்லாது வழங்கி உங்களை உயிர்ப்பிக்கச் செய்வது, அறுதியான, தவிர்க்கவியலாத விதியாக இயங்குவது என்று பொருள்.

சிந்திக்கும் மனிதனை, ‘மனுஜனை’ அவனது எதிரிணையான பேரிறையோடு, ‘மஹேஶனோடு’  தொடர்புறுத்துகையில் மனிதனுக்கும் இறைக்கும் இடையில் இருமுனையம் (bipolarity) ஒன்றை நிறுவுகிறீர்கள். இங்கே இறை என்பதையும் மனிதன் என்பதையும் சாதாரண பொருளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இறை என்பது இங்கே உங்களது உள்ளொளியாக போற்றப்படுவது. அதனையே எப்போதும் சிந்திப்பவரே நீங்கள். இவ்வாறாக மட்டுமே ஒவ்வொரு கணமும் ஒரு மலரென மாறமுடியும். கடந்து செல்பவற்றையெல்லாம் அகமகிழ்வாக அனைவராலும் உணரமுடியும். மாறாக, நீங்கள் எப்போதும் அச்சங்களுக்கு ஆட்படுவீர்களென்றால் அவற்றை உங்களால் அழகிய மலர்களாகக் கொள்ளவியலாது.

இப்பாடலின் முதல் பகுதியில் ஒரு சீரிய நிலை சுட்டப்படுகிறது. இந்தப் பாதை ஆன்மிக வளர்ச்சியில் முதிர்ந்த ஒருவருக்கானது. தனது அகத்தில் தோன்றுபவை எல்லாம் பூசைக்கான மலர்கள் என்று அறிந்தவர் அவர். ‘மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும்’ என்ற தொடர், வழிபாட்டு நிலையிலேயே எந்நேரமும் திளைக்கும் ஒருவரது உணர்வை தருவது. அங்ஙனம் முழுநேரமும் திளைப்பவர் சமநிலை பேணுவதற்கென எப்போதும் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதில்லை.

நீங்கள் ஒரு ஓவியர் என்றால் காண்பவற்றில் எல்லாம் பொருள் பொதிந்திருப்பதை உணர்கிறீர்கள். ஒவ்வொன்றும் இயற்றப்பட்டுள்ள முறையை கவனிக்கிறீர்கள். ஓவியருக்கு, அவர் திரும்பும் இடமெல்லாம் தம்மை அழிவற்றவையாக ஆக்க அழைப்பு விடும் ஓவியங்களே உள்ளன. இசைக் கலைஞரின் காதில் இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. புதிய இயல்கைகளை, இசைவெளிப்பாட்டுக்கான புதிய வழிகளை அவர் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஒரு கவிஞருக்கு வாழ்வென்பதே, மகிழ்வெனும் பொன்னிழைகளும் துயர் எனும் இருளிழைகளும் ஊடும் பாவுமாக நெய்யப்பட்ட பிரபஞ்சத்தைப் பாடுவதற்கான பல வித கவிதைக் கருக்கள்தான். ஒரு மருத்துவரைப் பொறுத்தவரை, இறை என்பது நோயிலும் வலியிலும் அவதியுறுவோருக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பை நல்குவதே. 

உங்களது தொழில் எதுவாக இருந்தாலும் நீங்கள் போற்றுவதற்கு ஒரு தெய்வம் உண்டு, அதற்கு இடுவதற்கென ஒரு மலரும் உண்டு. ஓவியர் தீட்டுவது மெய்யான ஒரு பூசைதான். இசைக்கலைஞர் இசைப்பதும் முழுமுதலுக்கான அரும் பூசையே. கவிஞரின் பேனாவிலிருந்து வெளிப்படும் ஓவ்வொரு சொட்டு மையும் பூசனையே. அழகென்றும், நன்மையென்றும், மெய்யென்றும், சேவை என்றும், கருணை என்றும் நாம் உணர்வதெல்லாம் முழுமுதலுக்கு நாம் செய்யும் பூசையே.

அங்ஙனம் உணரவில்லையென்றால் உடனடியாக நீங்கள் அடிப்படையிலிருந்து துவங்க வேண்டும். அழகையும், அன்பையும், சேவை மனப்பான்மையையும் உங்களில் வளர்த்துக்கொள்ள பழக வேண்டும். ஒருவர் தான் மதிக்கும் ஒருவரது சிற்பத்தையோ படத்தையோ தன்னிடம் வைத்திருப்பார் என்றால் அது வெறும் பொருளற்ற மூட நம்பிக்கையல்ல. வாழ்வின் மையமென அவரது கவனம் அதில் குவிகிறது. Les Miserables-ல் வரும் Jean Valjean பிஷப் அளித்த மெழுகுவர்த்தியை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பான். அவனைப் பொறுத்தவரை அது ஒளியின் குறியீடு; கிறிஸ்துவின் அன்பை, இறையை தன் வழிகாட்டியாக தேர்ந்தெடுத்த ஒருவரது துணிவை குறிப்பது. அவன் அந்த மெழுகுவர்த்தியை அவன் பலிபீடமாகக் கருதிய கணப்படுப்பின் மேல்தட்டில் வைத்திருப்பான். அங்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். அவனை வழிப்படுத்தும் மாயம் அதனிடம் இருந்தது. 

பயின்ற ஒருவருக்கு அது வெறிகொண்ட பற்றாகத் தோன்றக்கூடும். ஆனால் தொடக்கநிலையில் உள்ள ஒருவருக்கு அது வெறும் பற்று அல்ல; ஒரு ஆன்மிகத் தேவை. நீங்கள் செல்வதற்கு ஒரு தேவாலயம் தேவை; நீங்கள் உரையாட ஒரு ஆன்மிக குரு தேவை; புனிதமாகக் கருதி வழிபட ஏதோ ஒன்று தேவை – இந்த அன்றாடத்திலிருந்து வேறுபட்ட ஒன்று. பூக்கள் கொண்டு சென்று அங்கு வழிபடுகிறீர்கள். ஒரு படத்தின் முன் நின்று கைகூப்பி ‘ஓம்’ என்று சொல்வது அபத்தமானதாக, சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். ஆனால், அறியமுடியாத ஒன்றுடன் நீங்கள் உங்களை தொடர்புறுத்திக் கொள்வதற்காக இதை செய்கையில் அதில் அபத்தம் எதுவுமில்லை. அந்தப் படத்தில் யாரும் இல்லைதான், ஆனால் அதன் முன் நிற்கையில் படத்தில் கடவுள் இருப்பதாகவோ, தெய்வம் சிலையில் உறைவதாகவோ நீங்கள் எண்ணுவதில்லை

“கண்ணை மூடி உங்கள் ஆழத்தை கவனியுங்கள்” என்று சொல்கிறோம். இதில் ஆழம் என்பது எது? வயிறா? அதுதான் நமது ஆழம் என்பதா? உடல் சார்ந்து நம்மில் ஆழம் எதுவும் கிடையாது. ஆன்மிகமாக நம்முள் ஆழ்ந்து நோக்குகையில் முடிவற்ற மெய்யான ஆழத்தை நாம் காண்கிறோம். ‘உன்னத உயரம்’ என்று நாம் சொல்கையில் நாம் எண்ணுவது ஆகாயத்தை அல்ல. நமது ஆன்மாவிற்குள் உயர்ந்து திகழும் உன்னதத்தை காண்கிறோம். நீங்கள் உங்களது கற்பனைச் சிறகை விரித்து அறிவிற்கப்பாற்பட்ட வெளியில் வானம்பாடியென எழ முடியும். இத்தகைய குறியீடுகள் நாம் தேடும் மனதின் புதிய பரிமாணங்களை அடைவதற்கு தேவைப்படுகின்றன. கண்டடையத் தொடங்குகையில் அக்குறியீடுகள் தேவையற்றுப் போகின்றன.

தீ மூட்ட வேண்டுமென்றால் இரண்டு கற்களை உரசி நெருப்பை எழ வைக்கலாம். அக்கற்கள் தண்மையாக இருப்பவை, உயிரற்றவை. ஆனால் உராய்வு காரணமாக தீ உண்டாகிறது. நெருப்புப் பொறி எழுந்து பற்றிய பின்னர் கற்களுக்கு எந்தப் பயனும் இருப்பதில்லை, அதை வீசிவிடுகிறோம்.

தண்ணீர் பம்ப் ஒன்றை இயக்கச் செய்ய முதலில் அதில் சிறிது நீர் ஊற்ற வேண்டும். பம்ப் நீரை இறைக்கத் துவங்கிய பின்னர் நீர் ஊற்ற வேண்டியதில்லை. இவற்றைப் போலவே, உங்களது பலிபீடமும் துவக்கத்திற்காக மட்டுமே. இது இரண்டாவது பாதை. 

மூன்றாவதாக ஒரு பாதையை இங்கே குறிப்பிடுகிறார் நாராயண குரு. ‘ஒரு படத்தையோ உருவத்தையோ வழிபடுவது எனக்கு ஒவ்வாதது. காட்டுமிராண்டிதான் அதை செய்வான், நான் பண்பட்டவன்’ என சிலர் எண்ணுகின்றனர். அப்படியே இருக்கட்டும். நீங்கள் அத்துணை பகுத்தறிவுவாதி என்றால் உங்களுக்கும் ஒரு பாதை உண்டு.

உங்களுக்கு மெய்யெனத் தோன்றுவது எது என்று பாருங்கள். நெருங்கிப் பார்ப்பதற்கு, ஏதோ ஒரு அடிப்படைக் கருத்து உங்களுக்கு தேவைப்படும். Descartes இதை முயன்று பார்த்தார். குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கும், ஐயத்திலிருந்து ஐயத்திற்கும் தான் செல்வதை உணர்ந்தார். முதல் அடிவைப்பு ஒன்று உங்களுக்கு தேவைப்படுகிறது. அங்கிருந்துதான் நீங்கள் முன்னேற முடியும். ‘நான் எண்ணுகிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்’ என்ற கருத்தை சென்றடைந்தார் அவர். எண்ணிப் பார்க்க ஏதோ ஒரு அடிப்படை தேவைப்படுகிறது. ‘நான் எண்ணுகிறேன்: நான் இருக்கிறேன்’. தனித்தன்மை கொண்ட நம் அனுபவத்தின் ரகசியத்தைக் கண்டறிய இது ஒரு வழி.

ஆசான்கள் இதுபோன்ற பல அடிப்படைகளை நமக்கு தந்து சென்றிருக்கிறார்கள். ‘துறக்கத்தின் ராஜ்ஜியத்தை தேடுங்கள்; மற்றவை எல்லாம் உங்களை வந்தடையும்’ என்றார் கிறிஸ்து. மிகத் தெளிவான வழிகாட்டல் இது. ‘சொர்க்க ராஜ்ஜியம் எது? அதை எப்படி நாடுவேன்? யார் எனக்கு வழிகாட்டுவார்?’ என்று நீங்கள் கேட்டால், ‘என்னிடம் வாருங்கள். என்னை அடைவோர் சொர்க்கத்தில் என் தந்தையை அடைவர். சொர்க்கத்தில் என் தந்தையை அடைவோர் என்னையும் அடைவர். நானே உமது ஒளியாகவும் வாழ்வாகவும் இருக்கிறேன். நானே வழியும் இலக்குமாக இருக்கிறேன்’ என்று பதில் கிடைக்கிறது. இதை எண்ணிப்பாருங்கள். இதையே ‘மாயாமனு உருவிட்டு’ என்கிறார் குரு. இதை உங்கள் மனதில் மீட்டிக்கொண்டே இருங்கள்.

The Cloud of Unknowing-இல் இத்தகைய பெருஞ்சொல் ஒரு சுத்தியல் என்று சுட்டப்படுகிறது. பைபிளில் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. The Cloud of Unknowing-இன் பெயரறியப்படாத ஆசிரியர் ‘இச்சொல்லை கொள்க! இதுவே அறியாமை எனப்படும் பெருஞ்சுவரை உடைப்பதற்கான சிறு சுத்தியல். இறுதியில் வழி கிடைக்கும்’ என்கிறார்.

வேதாந்திகள் பெருஞ்சொற்களை பயன்படுத்துவார்கள். குரு சீடனை அழைத்து ‘தத்வமஸி, அது நீயே. இதையே உன் திறவுகோலாகக் கொள். அதனையே சிந்தி’ என்பார். சீடன் ‘நான் எப்படி முழுமுதலாக இருக்க முடியும்? நான் இந்த உடலில் அல்லவா சிறைப்பட்டிருக்கிறேன்’ என்று சிந்திப்பான். அதுவே அவனது மாயை. அந்த மாயையிலிருந்து அவன் விடுபட வேண்டுமென்றால் , பெயர் கொண்டதற்கு பதிலாக பெயரற்றதையும், வடிவு கொண்ட ஒன்றிற்கு பதிலாக வடிவற்ற ஒன்றையும், அழியக்கூடியதற்கு பதிலாக அழிவற்ற ஒன்றையும், அருவருக்கத்தக்க அல்லது அழகிய ஒன்றிற்கு மாற்றாக வடிவற்ற அழகையும், வெறும் இன்பதுன்பத்திற்கு பதிலாக பேரின்பத்தையும் அவன் சிந்தனை செய்ய வேண்டும். இதை அவன் பல வழிகளில் செய்து பார்க்கிறான். மெல்ல மெல்ல நிலையற்றதை, விரைந்தழிவதை, தற்காலிகமானதை, அழியக்கூடியதை, மேலோட்டமானதை அவன் விலக்குகிறான். இறையை அடைகிறான்.

குரு காட்டியிருக்கும் இந்த மூன்று பாதைகளுக்கு இடையில் பல வகையான தேடல்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் உள்ள மையக்கருத்து ஒன்றுதான். கீழை மெய்யியலாளரும் மேலை தத்துவவாதிகளும் பக்கம் பக்கமாக எழுதிக்குவித்துள்ளவற்றை கூர்ந்து கவனித்தோமென்றால் அவை எல்லாமே ஒற்றைப் புள்ளியில் குவிவதை நாம் காணலாம்.

‘சாரத்திற்கு முந்தையது இருப்பு’ (existence precedes essence) என்பார் Sartre. இந்த ஒன்றையேதான் அவர் விரித்து விரித்து எழுதியிருக்கிறார். இந்த ஒரு பெருஞ்சொல்லையே, ஒற்றைக் கொள்கையையே அவர் சிந்தனை செய்கிறார். Jaspers-ஐ பொறுத்தவரை நம்முன் உள்ள இந்த உலகு நாம் வாழும் உலகு மட்டுமே. ஆனால்,மெய்மையின் பேராழமும், இசைமையுடன் கூடிய அழகும் விரைந்து அழியும் அனுபவமாக மட்டும் எஞ்சுவதல்ல. இவ்விரண்டையும் ஒன்றாக இணையச் செய்வதே அவரது மையக் கருத்து.

அந்த மையக்கருத்து அல்லது பெருஞ்சொல் எது என்று நாமே கண்டடைய வேண்டும். முடிவிலாது அதை சிந்திப்பதன் மூலம் புதிய திறப்புகளைப் பெறுவோம். அதன் வழியாக வாழ்வின் அனைத்துச் சூழல்களுக்குமான சாரத்தை சென்றடைவோம். 

Leave a comment