ஹ்ரீம்
அறுதி மீட்பளிக்கும் அன்னையே! பிறப்பும் இறப்பும் வாழ்வெனும் நாடகத்தின் இரண்டு புறக்கோடிப் புள்ளிகளை குறிக்கின்றன. திரை விலக, முதற்காட்சியாக, குழந்தை இவ்வுலகில் வந்து பிறக்கிறது. தோற்றம் எனும் மிகச்சிறந்த நிகழ்வாக இது அமைகிறது. புலனுணர்வும், மதிப்பீடும், செயலாற்றும் உறுதிப்பாடும் கொண்டு, எண்ணற்ற சாத்தியங்களை உள்ளடக்கிய முழுமையான வடிவுகொண்ட ஒருவர் காலமும் வெளியும் கொண்ட உலகில் வந்து பிறக்க நீ என்னென்ன முன்னேற்பாடுகளை செய்கிறாய்? அறிவிற்சிறந்த மானுடர் பல்லாயிரம் வருடங்களாக இந்த ரகசியத்தை கண்டுவிட முயன்றுகொண்டிருக்கின்றனர்.
வாழ்வின் இறுதிக்காட்சியோ மிக அமைதியாக நடந்தேறுகிறது. ஆற்றல் எல்லாம் வடிந்தவர், செயலற்று, இறுதி மூச்சு அடங்குவதற்கென காத்து, தரையில் கிடத்தப்பட்டிருக்கிறார். இறுதி சுவாசம், வாழ்நாள் நிரலொன்றுடன் பிணைக்கப்பட்டிருந்த உடலைவிட்டு ஒரு அதிசயமென பறந்தெழுகிறது.
இயல் உலகில் நிகழ்த்தப்பெறும் ஆகப்பெரிய இந்நாடகத்தின் பரிமாணத்தையும், சிக்கலையும் காண்கையில் புறவயமான அதன் நோக்கமும் அகவயமான தோல்வியும் எம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. வாழ்வும் விடுதலையும் என வாழ்வெனும் நாடகத்தின் இரண்டு பக்கங்களாக அவை அமைகின்றன. இறுதியாக கைவிடப்பட்டு, வடிவிழந்து, எரிசிதையில் இடப்படுவதற்கென்றே சிறந்த அடித்தளத்தின் மீது ஒரு பேரமைப்பு கட்டி எழுப்பப்படுகிறது என்பதை சிறிதும் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அதன் தோற்றத்திலும் அழிவிலும் நீ உடனிருக்கிறாய் – முதலில் நிறைவேற்றுபவளாக, பின்னர் பரிவுகொண்ட ஒரு சாட்சியாக.
தன் பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கென அரங்கில் விடப்படுற்கு முன்பு, ஒப்பனை அறையில் தயாராகிக் கொண்டிருக்கையில் குழந்தைக்கென எந்த செயல்நோக்கமும் இருப்பதில்லை. ஆனால், அன்னையின் கருப்பை விட்டு முழு வடிவுகொண்ட ஒரு உயிரியாக உலகெனும் அன்னையின் உயிர்மண்டலத்தில் உள்ளமும், உடலும், சமூகமும் கொண்ட சூழலில் நுழைந்த உடனேயே செயல்நோக்கம் உருவாகிவிடுகிறது. முதல் எதிர்வினையாக ஆதி அழுகை எழுகிறது. இவ்வுலகில் நுழைந்த கணம் தனியர் உணரும் பேரச்சத்தைக் குறிக்கிறது அந்த அழுகைக்குரல். பெற்றோரும் உற்றாரும் தன் இருப்பை உணரும்படி தன் வரவை அறிவிக்கிறது குழந்தை. கேட்கும் செவிகளும் காணும் விழிகளும் மிக அண்மையில் இருக்கின்றன. அகம்-புறம் என்பவற்றிற்கிடையேயான தொடர்பை மகவின் முதல் அழுகுரலும் அதற்கு அளிக்கப்படும் கவனமும் போல் ஐயத்திற்கிடமின்றி உணர்த்துவது வேறேதும் இல்லை. குழந்தையை பராமரிக்கும் கடமைகொண்டோர் அனைவரையும் நோக்கி எழும் கோரிக்கை அந்த அழுகை. கடமை உணர்வும் அளவுக்கதிகமான பாசமும் நிறைந்த சட்டகம் ஒன்றில் அமைந்த பெற்றோரின் காதுகளை அந்தக் கூக்குரல் கூரிய அம்பெனத் துளைக்கிறது.
ஒரு எரிமலை வெடிப்பென எழும் முதல் கூக்குரலின் ஊற்றுமுகத்தை நோக்கி கண்கள் திரும்புவதே, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முதல் அடிவைப்பாக அமைகிறது. குரல் குழந்தையிடமிருந்து எழுகிறது என்பதை பார்த்த கணமே அதன் தேவை என்னவாக இருக்கும் என பெற்றோரில் யோசனை எழுகிறது. இங்கே செவிக்கும் விழிக்கும் இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்பு பிரிக்கமுடியாத ஒரு தொடர்ச்சியாக வெளிப்படுகிறது. இந்தச் சூழலில் குழந்தையும் பெற்றோரும் சமமான இயங்கியல் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதல் குரலும், அதற்கு எதிர்வினையென குழந்தைக்கு அளிக்கப்படும் ஊட்டமும் தாயைப் பொறுத்தவரை ஒரு கடமை நிறைவேற்றத்தை குறிக்கிறது; குழந்தைக்கோ, தான் நூறாண்டுகள் வாழப்போகும் உலகு கருணை நிரம்பியது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
தொடக்கத்தில் செவிக்கும் விழிக்குமான – பெயருக்கும் வடிவுக்குமான – ஊடாட்டங்கள் வாழ்வின் முக்கிய கண்ணிகளாக அமைகின்றன. குறிப்பிட்ட தருணத்தின் விழுமியக் கூறுகளை இனம் கண்ட உடன் நேரடிச் செயல் துவங்குகிறது. பெற்றவர் தம் கரங்களில் குழந்தையை ஏந்தி அன்னையின் முலைக்காம்பை அதன் வாயில் அடைப்பது தேவையின் வாயை அடைப்பதை குறிக்கிறது. முதல் அழுகைக்கும், ஊட்டத்தை உட்கொள்ளவும் ஒரே வாய்தான் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் அழுதுகொண்டே உண்ண முடியாது. இரண்டும் மாறி மாறிதான் நிகழவேண்டும். பசி என்பது துன்பம், உணவுண்ணுதல் இன்பம்; இவை இரண்டும் அடுத்தடுத்து வைக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு புதிராகவே வாழ்வென்பது தொடங்குகிறது. இறுதியில் ஒருவர் இறக்கையில் அமைப்புக்கான வாயில்கள் எல்லாம் உள்ளிருந்து அடைக்கப்படுகின்றன. உணவு ஏதும் தேவைப்படுவதில்லை. உண்ணத்தக்க பொருட்கள் எதையும் உட்கொள்ள முடியாது. கடைசியில் உயிர் மூச்சும் மறுக்கப்படுகிறது. உயிரிக்கு எந்தத் தேவையும் இல்லை. பிணத்தை எரிப்பதன் மூலம், பிரதிவாதிகள் தம் கடமைகளிலிருந்து விடுபடுவதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
முதல் அழுகைக்கும் இறுதி அமைதிக்கும் இடையே, வளரும் தனியர் பல படிகளிலாக முதிர்ச்சி அடைகையில், பல வகையான பசிகளையும் தாகங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தை பிறந்த உடன், அதனை தாயிடமிருந்து துண்டிக்கும்படி தொப்புள்கொடிதான் முதலில் அறுக்கப்படுகிறது. ஆயினும் மேலும் வலுவான் ஓரு பிணைப்பு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுகிறது. தாயின் முலைக்காம்புகள் எவ்வளவுதான் நொய்மையானவையாக இருந்தாலும், குழந்தை அதை உறிஞ்சவும் அன்னை பாலூட்டும் கடமையை ஏற்கவும் முற்படுகையில், உடல்ரீதியாக அவர்கள் பிரிந்திருந்தாலும் அவர்களிடையே மிக வலுவான பிணைப்பு உண்டாகிறது. இதேவகையான இறுக்கமான பிணைப்பொன்று குழந்தையின் கருத்தாக்கப் புலத்திற்கும் அதன் கண்ணில் படும் பொருட்களுக்கும் இடையில் ஏற்படுகிறது. இவ்வாறாக, அன்னையின் கருவறை நீங்கும் குழந்தை நனவிலும், நனவிலியிலும் பல்லாயிரம் உறவுக் கரங்களால் இவ்வுலகை பற்றிக்கொள்கிறது.
இது ஒரு வாழ்நாளுக்கு மட்டுமல்ல. சின்னஞ்சிறு குழந்தையிலும் எதிர்கால நிரலொன்று ஒளிந்துள்ளது. ஆணென்றால், எதிர்காலப் பெண்ணொருத்தியை கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் அதில் பொதிந்துள்ளது. பெண்ணென்றால், அதனால் முழுமையான வடிவுகொண்ட மனித உயிரைப் பெற்றெடுத்து வாழ்வெனும் நாடகத்தை தொடர முடியும். மிக அடிப்படையான, ஆற்றல்மிக்க உள்ளுணர்வு என்பது சந்ததியைப் பெருக்குவதே. எனவே, அதற்கான தூண்டல் செவிக்கும் விழிக்கும் இடையிலான உறவு மூலம் உண்டாகிறது. செவிக்கும் விழிக்கும் இடையிலான உறவென்பது அகத்திற்கும் சோமனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. செவியால் கேட்கப்படும் நுண்ணிய சொல் கேட்பவரின் நனவில் உள்ள ஆழமான அடுக்குகளில் பொருளெனும் உருவரையை எழுப்புகிறது. இவ்வாறாக உள்நுழையும் தூண்டல், தூண்டலை ஏற்படுத்தும் பொருளைப் பார்த்து சரியாக மதிப்பிடுவதன் மூலம் அகத்தால் மறுதலையாக்கப்படுகிறது. இவ்வகையான பரஸ்பர கொண்டுகோடல் வாழ்நாள் முழுவதும் நிகழ்கிறது. இதில் ஒரு தனியருக்கும் உலகிற்கும் இடையிலான உணர்வுபூர்வமான உறவை ஏற்படுத்தும் தீவிரக் காதல் ஒன்று உள்ளது. தேவை குறித்தும் பற்று குறித்தும் அதே அளவு தீவிரமான விலக்கமும் அச்சமும் உள்ளன. அத்தகைய பற்றுகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற தீவிர வேட்கையும் உள்ளது. ஆக, வாழ்வு குறித்த ஆர்வமும், அதிலிருந்து மீட்படைவதற்கான உறுதிப்பாடும் எப்போதும் ஒன்றையொன்று சமன்செய்தபடி, ஒன்றையொன்று இல்லாமலாக்கியபடி இருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் காமம் என்பதை மிகுந்த ஆற்றல் கொண்ட தூண்டலாக கருதவேண்டியுள்ளது. காதலரின் கடைக்கண் வழியே வீசப்படும் மிக எளிய ஒரு பார்வை, திட்டமிட்ட போர்ப்படை ஒன்றின் அணிவகுப்பை விட ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. புரிதலுக்கு அப்பாற்பட்ட, விழுமியங்கள் சார்ந்த உறவுகளை எல்லாம் கடந்தநிலையிலிருந்து வரும் அமைதி ஒன்றால் அது சமன் செய்யப்படுகிறது. அன்னையே, வாழ்வின் தேவைகளையெல்லாம் கடந்து நிற்கும் உன் இறைவனோடு இணைவைத்து, இந்த நடுநிலைப் பூஜ்யத்தில்தான் உன்னை இப்போது நாங்கள் காண்கிறோம். அமைதி நிலைபெறட்டும்!
|| ஹ்ரீம் ||