சௌந்தர்யலஹரீ – 38

ஸமுன்மீலத்ஸம்வித்கமலமகரந்தைகரஸிகம்

ப*ஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம்

தாலாபாஷ்டாகுணிதவித்*யாபரிணதிர்

தாதத்தே தோஷாத் குணமகி*லமப்*த்ய: பய இவ

பாடல் – 38

மானஸ ஏரியில் வாழும்

பேரான்மாக்களின் நனவில் மலரும்

அறிவெனும் தாமரைகளின் தேனை அருந்தி மகிழும் 

அவ்விரு அன்னங்களை தியானிக்கிறேன்

நீரிலிருந்தெடுத்த பால்போன்ற

தீயதிலிருந்து பிரித்தெடுத்த நன்மை நிரம்பிய

பதினெட்டு கலைகளும்

அவற்றின் உரையாடலிலிருந்து முகிழ்த்தவையே

**

எங்கும் பரந்த முடிவிலியில், இங்கு-இப்போது என்ற இரண்டும் நுழைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறியனவாகிய, கட்புலனுறுப்பாகிய நமது கண்கள் மூளையில் உள்ள புதிர்ப்பொருளில் திணித்து வைக்கப்பட்டுள்ளன. மொத்த உலகும் ஒரு பனித்துளியில் பிரதிபலிப்பது போல, பரந்த அண்டப்பெருவெளி நம் கட்புலனில் எதிரொளிக்கப்படுகிறது. புலன்களுக்கும், அனைத்தையும் பொருள்கொள்ளும் மனத்திற்கும் இடையே அந்தரங்கமான உறவொன்று உள்ளது. புலன்வழி அறியப்படும் உலகும், எண்ணம்வழி அறியப்படும் உலகும் இரு சகஊழியர்கள் போன்றவை; ஒரு ஏரியில் ஒரே தாமரையின் தேனை அருந்தி வாழும் இரண்டு அன்னங்கள் போன்றவை. அல்லது, ஒரே மரத்தில் அமர்ந்து அதன் இனிய ஊட்டம் நிறைந்த கனிகளை உண்ணும் இரண்டு பறவைகள் போன்றவை. புலன்கள் அறிவதை எல்லாம் நம் மனம் பொருள்கொள்ள முயல்கிறது. மனம் கருதுவதை எல்லாம் புலன்கள் கண்டடைகின்றன. ஆக, நனவெனும் ஏரியில் நீந்தும் இரு அன்னங்களே நாம்; வாழ்வெனும் மரத்தில் வாழும் இரு பறவைகளே நாம்.

ஒவ்வொரு அறிவியலையும் நிறைவுறச் செய்யும் தொழில்நுட்பம் ஒன்று உண்டு. அறிவும் செயலும் இணைந்தே நிகழ்பவை. வாழ்வெனும் பள்ளிக்கு நாம் வருவதே அதிலிருந்து இரண்டு பாடங்களை கற்கத்தான். ஒன்று பருண்மையானது. இன்னொன்று பொருளையும் அதன் நோக்கங்களையும் கடந்த ஞானம். இந்தக் கணம் அமைதியும் இன்பமும் நிரம்பியதாக இருக்கலாம். அல்லது அச்சமும் அருவருப்பும் தருவதாக இருக்கலாம். நம்மைச் சுற்றி வாழ்வின் அவலமும் நகைச்சுவையும் அருகருகே அரங்கேறுவதை காண முடிகிறது. அச்சத்தோடும், அவமானத்தோடும், வலியிலும், துன்பத்திலும் வாழ எவரும் விரும்புவதில்லை. அனைத்து இதயங்களும் தேடுவது அமைதியையும், இன்னதென்று அறிந்துவிட இயலாத களிப்பையுமே. 

இவ்வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்டவர்களுக்கு ஒரு கடமை உள்ளது. ஏங்கும் இதயம் ஒவ்வொன்றிற்கும் அமைதியும் இன்பமும் அளிக்கப்பட வேண்டும். முன்னொரு காலத்தில், இவ்வுலகின் துயர் கண்டு, அதன் பஞ்சம், ஏழ்மை, நோய், முதுமை, மரணம், சமூக அநீதி இவற்றிற்கெல்லாம் வருந்திய இளவரசன் ஒருவன் தன் முடி துறந்து, உலகை மீட்பதற்கென வழிப்போக்கனென ஆனான். அவன் மெய்யற்றதிலிருந்து மெய்மையை, நிலையற்றதிலிருந்து நிரந்தரத்தை சலித்தெடுத்தான். அருள் எனும் அறத்தை உலகுக்கு கற்பித்தான். இளவரசன் சித்தார்த்தன் வாழ்த்தப்பட்ட புத்தனானான். முழுமையாக உயிர்த்தெழுந்தான். அதே போல், ஜோர்டான நதிக்கரையில் வனாந்தரத்தில் ஒரு தீர்க்கதரிசி தோன்றினான். மக்களை இருளிலிருந்து ஒளி நோக்கி வரும்படி அழைத்தான். தீமைகளை உதறி இறையுணர்வு கொள்ளச் செய்தான். நதியில் அவர்களுக்கு அறிவுமுழுக்களித்தான். அங்கு இப்புனித தீர்க்கதரிசி ஜானை வந்தடைந்த, நசரத்தைச் சேர்ந்த அப்பழுக்கற்ற யேசு அவனிடம் ஞானஸ்நானம் பெற்றான். இறைவன் யேசுவில் மகிழ்ந்தான். விண்ணிலிருந்து தூய ஆன்மாவாக யேசுவில் இறங்கி அவனை மீட்பரென ஆக்கினான்.

அந்தத் தேடலும் அருள் பெறுதலும் இன்றும் தொடர்பவை. நீங்களும் மெய்த்தேட்டம் கொண்டவர்தான். உங்களுக்கும் அதே அருள் கிட்டும். பிரிக்கமுடியாத இணையாக நம்மில் உறையும் மானுடனும் இறையுமே ஏரியில் வாழும் அவ்விரு அன்னங்கள்; வாழ்வெனும் மரத்தில் உறையும் அவ்விரு பறவைகள். ஒன்றிலிருந்து தூய விருப்பு எழுகிறது, இன்னொன்று அதை நடைமுறைப்படுத்துகிறது. இறைவனின் சாம்ராஜ்யம், நெல்லையும் உமியையும் காற்றில் புடைக்கும் உழவனின் ஞானத்தோடு ஒப்பிடப்படுகிறது. உமியை எரித்து நெல்லை களஞ்சியத்தில் சேமிக்கிறான் உழவன். இது நமது அன்றாட வழமையாக உள்ளது. புலன்களின் வாயில் வழியே பல்லாயிரம் உருவங்கள் நம்முள் நுழைகின்றன. அவற்றில் சில மெய்யானவை, சில மெய்யல்லாதவை. அன்னங்கள் பாலை நீரிலிருந்து பிரித்தெடுப்பதில் பெயர்பெற்றவை. அதே போல், நமது அன்றாட வாழ்வில் நாமும், மெய்யற்றதிலிருந்து மெய்மையை, நிலையற்றதிலிருந்து நிரந்தரத்தை, தீயவற்றிலிருந்து நன்மைகளை, இருளிலிருந்து ஒளியை பிரித்தெடுக்கவேண்டியுள்ளது. இதயமும் மூளையும் இரண்டு கண்கள் போல; ஒன்று உண்மையைக் காண்பதற்கு, மற்றொன்று நன்மையை பார்ப்பதற்கு. மெய்மையில் மகிழவும், விரும்பத்தக்கதையே விழையவும் ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஆக, நம் அறிவாற்றலை முழுமையடையச் செய்வதற்கென உணர்ச்சிபூர்வமான வாழ்வொன்று நமக்குள்ளது. 

வாழ்க்கை அழகியதாகத் தேவையான ஞானத்தைப் பெற நாம் பதினெட்டு கலைகளை உருவாக்கியிருக்கிறோம். நமது அமைதியின் ஆழத்திலிருந்து மொழியப்படாத சொல் எழுகிறது. அதற்குள் ஒரு விழைவும் ஒரு தரிசனமும் உள்ளன. உருவகிக்கப்பட்ட சொல் ஒரு வடிவை அடைந்து மொழியப்படக்கூடியதாக ஆகின்றது. மொழியப்பட்ட சொல் பேசுபவரிடமிருந்து கேட்பவருக்கு, ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு செல்கிறது. பாதையை அறிவிக்கும் ஆற்றல் சொல்லுக்குண்டு. அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்களது இலக்கு நோக்கி செல்லும்படி தூண்டும் இயக்காற்றல் அந்தச் சொல்லுக்குண்டு. வாழ்க்கைக்கென நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளும் அனுபவிப்பதற்கான சுதந்திரமும் உண்டு. எனவே, தேவைகளின் நிறைவேற்றத்திற்காக ஒன்பது வகை கலைகளும், மனிதனை தேவைகளின் இறுகிய உலகிலிருந்து விடுதலை எனும் துறக்கம்நோக்கி கொண்டுசெல்வதற்கென ஒன்பது வகை கலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மனிதன் தங்கிவாழ அவனுக்கு ஒரு கூரை தேவைப்படுகிறது. மனிதன் கட்டியெழுப்பும் எளிய குடிசையில்கூட கட்டடக் கலை உள்ளது. அதுவே, இறைவனுக்கென ஆலயம் எழுப்புகையில் அழகின் மிகச்சிறந்த வெளிப்பாடாக உருவெடுக்கிறது. ஆலயம் என்பது உணவு சமைத்து, குழந்தைகள் பெற்று, குடும்பம் வளர்ப்பதற்காக அல்ல. மக்கள் தோழமையுடன் ஒன்றுகூடி, அறியப்படாததை வணங்குவதற்கான இடம் அது. ஆக, மானுடன் தேவைக்கானதில் தொடங்கி விடுதலைக்கானது வரை கட்டடக் கலையை வளர்த்தெடுக்கிறான். பயன்பாடு அழகுடன் இணைகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் உலகின் மொத்தப் பண்பாட்டையும், உடல்-ஆன்மா, மெய்மை-யதார்த்தம் என்பவற்றின் கூட்டமைப்பாகக் காண முடிகிறது. இது, சொல்லும் இறையுமென இருக்கும் மீஅறிவைப் போற்றும் முகமாக இறைவனின் இரு கரங்களும் இணைந்து அழகைப் படைப்பது போலுள்ளது. 

ஒரு வட்டத்திற்குள் அமைந்த ‘கம்’ எனும் ஒற்றை மந்திரம் தியானிக்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s