ஶ்ரீசக்ர தியானம் – 37

ம் ஸர்வமந்த்ரமயீ

ஞானத்தின் அன்னையே, இப்போது, இங்கிருந்தபடி அங்கே, அனைத்தையும் அரவணைத்திருப்பதை நாங்கள் காண்கிறோம். எல்லையிலா தெளிந்த வானை உன்னுடன் ஒப்பிடத்தோன்றுகிறது. நாங்கள் இருக்கவும் இயங்கவும் தேவையான வெளி அதில்தான் அருளப்பட்டிருக்கிறது. வானும் அதன் வெறுமையும் அனைத்தையும் ஒளிரச்செய்யும் ஒளியையும், தூயதாய் இருக்கையில் ஒளியின் ஊடுருவும் தன்மையையும் எண்ண வைக்கின்றன. தூய ஒளிர்வையும் (illumination) தூய ஒளிவின்மையையும் (transparency) கருதும்போதெல்லாம் சூரியனின் தூய ஒளியே எங்கள் எண்ணத்தில் இயல்பாக எழுகிறது. இதனால், அறிவு ஒளியுடனும் அறியாமை இருளுடனும் ஒப்பிடப்படுகின்றன. இத்தகைய ஒப்புமைகளால், இருள் முதல் அரை ஊடுருவல் (opaque to translucent) வரை, அரை ஊடுருவல் முதல் ஊடுருவல் (translucent to transparent) வரை  உள்ள ஒளியின் மாற்றுப் படிநிலை வரிசைகளை (gradations of light), முழுமையான உறுதிப்பாடு (absolute certitude), நிகழ்தகவு (idea of the probable), பல்வகை குழப்பங்கள் (confusions of various sorts) என்பவற்றோடு ஒப்பிடுவதும் இயல்பே. 

இவை எல்லாம் அறிவில் அடங்குபவை. மெய்மையின் தூய தரிசனங்களாகத் தோன்றும் கருத்துக்களையும் அகஒளிர்வையும், அறிவே காட்டித் தருகிறது. அறிந்தது, அறியாதது, நனவு, நனவிலி என அனைத்தையும் உள்ளடக்கிய அறிவியங்கியலின் பரப்பை அறியவேண்டி நாங்கள் முழுமுதல் குறித்து சிந்திக்கிறோம். முழுமுதல் என்பது அகஉருவிற்கு இணையானதென்றால் அதன் எதிரிணையாக இருப்பது புறஉரு. எளிய மக்களுக்கு அறிவின் வாயிலாக இருப்பது மொழியப்பட்ட அல்லது எழுதப்பட்ட சொல். முன்வரையறை செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கத்தை அல்லது முழுமையை முன்வைப்பதால், சொல் என்பது குறியீடென்ற அளவில் குறைவுடையது. ஒலிக்கும் அர்த்தத்திற்கும் இடையிலான உறவு ஒரு வண்ணம் அல்லது சாயல் போலுள்ளது. அது, எதிரொளிக்கப்பட்ட அகஉருவுக்கும் தொடர்புடைய புறஉருக் கூறுகளுக்கும் உள்ள தெளிவில் குறுக்கிடுகிறது. இரண்டிலும், முன்நிறுவப்பட்ட அர்த்தம் கொண்ட சொற்களின் வலிமையும் நயமும் எமக்கு தெரியவருகின்றன. அனைத்துச் சொற்களும் தொண்டைப் பகுதியிலிருந்து (விஶுத்தி) எழுவதால், அது எமக்கு மொழிகளின் அன்னை தன் எழில்கொஞ்சும் நடனத்தை (லாஸ்யம்) நிகழ்த்தும் ஆடற்களனாகத் தோன்றுகிறது. அர்த்தத்தின் பலவண்ணச் சாயல்களை, ரசனையின் நயங்களை எமக்கது கற்பிக்கிறது.  

நனவெனும் முழு வெளியையும் (சிதம்பரம் அல்லது சிதாகாசம்) உன் இறைவன் நிறைத்துள்ளான் என்பது நன்கறியப்பட்டதே. அகஉருவும் சிவன் நிறைந்திருக்கும் வெளியும் இணைபிரிக்கமுடியாதவை. தூய நனவின் தெளிமையும், அனைத்தையும் நிறைத்திருக்கும் அதன் அமைதியுமே, இறையை எம்மால் தரிசிக்க முடியாதபடி செய்கின்றன. ஞானத்தின் அன்னையான சரஸ்வதியின் குறியீடாகக் கருதப்படும் ஜபமாலை எழுத்துருக்களால் ஆனதாக சொல்லப்படுகிறது. மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் எல்லாம் தூய படிகம் போல தெளிமை கொண்டுள்ளன. அவற்றிற்கேயான நிறமென எதுவும் இல்லை. ஆயினும், பன்முகப் படிகம் ஒன்றன் மேல் ஒளி விழுகையில் அந்தத் தெளிமை நீங்கி மயக்கும் வண்ணக்கலவை தோன்றுகிறது. அதை காண்பவர் வியந்து நிற்கிறார். அவ்வண்ணக் கதிர்க்கோட்டம் என்னதான் இன்பம் தருவதாக இருந்தாலும், எம்மை அது தூய-தெளிந்த அக தரிசனத்திலிருந்து இயல் உலகின் வண்ண மாயத்திற்கு கடத்திச் செல்கிறது. ஆக, விஶுத்தி எம்மை ஒலியின் இசைமையும், கருத்துக்களால் மலரும் அர்த்தமும், அதன் கவித்துவமும் உருவாக்கும் சிக்கலான அக அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது. அது எம்மை மகிழ்விப்பதாகவும் இருக்கலாம், குழப்புவதாகவும் இருக்கலாம்.  

ஸர்வமந்த்ரமயீ என நீ தோன்றும் ஒவ்வொரு ஒலியின் படிகத் தூய்மையையும் மீண்டும் மீண்டும் தியானிப்பதன் மூலமே பகற்கனவிலிருந்து எங்கள் மெய்த்தேட்ட மனங்களுக்குள் நாங்கள் செல்ல முடியும். சொல்லென மொழியப்படுவதும் அர்த்தம் என்னும் பரந்த உலகை விரிக்கும் கருத்தாக்கமும் எம்மை கால-இட உலகில் உள்ள விழுமியங்களுக்கு இட்டுச் செல்கின்றன. கருத்துக்களிலிருந்து யதார்த்தத்திற்கு இறங்குதலுக்கு எதிரிணையாக புலன்கவர் உலகிலிருந்து தூய வெளியான கடந்தநிலைக்கு மேலேறுவது உள்ளது. அங்கு சிவனுக்கும் சக்திக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. ஆக, உலகென்பது தளைக்கும் கொள்கையாகவும் விடுதலைக்கான திறவுகோலாகவும் உள்ளது.  

ஒவ்வொரு தனி உயிரும் தனது அடிப்படை இயல்போடு (ஆனந்தம்) தொடர்புறுத்திக்கொள்ள தனக்கேயான ஒரு தனி வழிமுறையை கொண்டுள்ளது. பருண்ம உலகில், இன்பம் தரும் பொருளை அனுபவிப்பது அது. அகவய உலகில், கருத்தாக்கம் வழியே ஏற்படும் தரிசனங்களும் முழுமையுணர்வுமே இன்பம் பயப்பவை. ஒருவர் சொற்களையும் எண்ணங்களையும் கடக்கையில், புறவய பரிமாற்றங்களும் அகவய தரிசனங்களும் தம் இயக்கத்தை நிறுத்திக்கொள்கின்றன; தனியர் ஆன்மாவின் தூய இயல்புக்குள் செல்கிறார். அது ஒருவரது தூய பேரானந்த நிலை – சர்வரூபானந்தம். தொன்மத்தில், சகோரப் பறவை நிலவொளியின் அழகைப் பருகியே தன் பசி தாகத்தை தீர்த்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. நிலவுக்கு தனக்கென ஒளியில்லை; சூரியனின் ஒளியையே அது எதிரொளிக்கிறது. ஆனந்தத்தின் குறியீட்டுத் தன்மை இந்த ஒப்புமை மூலம் மிக அழகாக விளக்கப்படுகிறது. விழிப்புநிலையிலும் கனவிலும் மேலீட்டுப் பண்பே (nature of superimposition) அனுபவிக்கப்படுகிறது. என்றாலும், தற்காலிகமாகவேனும் ஒருவரது தூய விழுமியம் சார்ந்த இன்பநிறைவு ஏற்படுகிறது. 

ஒருவர் தன் தியானத்தை ஆஞாவிலிருந்து விஶுத்திக்கு கொண்டுவருகையில், கருத்தாக்க உலகிலிருந்து விலகி பிரபஞ்ச இசைநோக்கி (நாதபிரம்மம்) திரும்புவதன் மூலம் பேரின்பம் எய்த முடியும். சிதாகாசம் அல்லது பராகாசத்தின் தூய அதிர்வுக்கு தன்னை பழக்கிக்கொள்வதன்மூலம் இதை அடையலாம். தூய ஞான நுழைபுலத்தை குறிப்பது அன்னப் பறவை. இதனால் சிவனும் சக்தியும் இங்கு இரு விண்ணக அன்னங்களாக கருதப்படுகிறார்கள். ஆக, இவ்வுலகக் கொண்டாட்டத்தில் இருந்தபடியே ஒருவர் முழுமையான கடந்தநிலை எனும் பேரின்பத்தையும் அடைகிறார். வாழ்த்தப்பட்ட அந்த நிலையை அடையவே உன் அருளை வேண்டி நிற்கிறோம் நாங்கள். அன்னையே, உனது தூய தெளிமைக்கு எம்மை இட்டுச் செல்லும் அனைத்து மந்திரங்களையும் எமக்கு காட்டித்தருவாயாக! உனக்கு எமது வணக்கம்.

|| டம் ஸர்வமந்த்ரமயீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s