சௌந்தர்யலஹரீ – 27

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

தி: ப்ராக்ஷிண்யக்ரமணமஶனாத்யாஹுதிவிதி*:

ப்ரணாம: ஸம்வேஶ: ஸுக*மகி*லமாத்மார்பணத்ருஶா

ஸபர்யாபர்யாயஸ்தவ ப*வது யன்மே விலஸிதம்

பாடல் – 27

என் பிதற்றல்கள் உன் போற்றுதல்களாகட்டும்

என் செய்கைகள் உன்னை வழிபடும் சடங்குச் சைகைகளாகட்டும்

என் இயக்கம் உன்னை வலம் வருவதாகட்டும்

என் உணவு உன் வேள்விப் படையலாகட்டும்

நான் படுப்பது உன்னை வீழ்ந்து வணங்குவதாகட்டும்

நான் துய்ப்பதெல்லாம்

என்னில் இருப்பவையெல்லாம்

உனக்குப் படையல்களாகட்டும்

**

காகம் கரைகிறது, பூனை மியாவ் என்கிறது, நாய் குரைக்கிறது, சிங்கம் உறுமுகிறது, கழுதை கனைக்கிறது, மனிதர் பேசுகின்றனர். இவையெல்லாமே, பால்வீதி எனும் வான்மண்டலத்தின் விளிம்பில் ஒரு சிறிய விண்மீனென இருக்கும் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் ஒன்றான பூமி எனப்படும் ஒரு மண்ணுருளையில் ஊரும் உயிரிகள். எத்தனை விண்மண்டலங்கள் உள்ளன என்பதை எவரும் அறியார். அப்படியிருக்க, மிகமிகச் சிறிய ஏதோ ஓர் உயிரி, பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் என்ன செய்துகொண்டிருந்தாலென்ன? அண்டம் எதிலிருந்து தோன்றி விரிகிறது என்பதை, அந்த ஊற்றுமுகத்தின் முழுமை எத்தகையது என்பதை எவரும் எண்ணி அறிந்துவிட முடியுமா?

என்றபோதும், மனிதர் பல்வகை ஒலிகளை எழுப்புகின்றனர். அவற்றை பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பெயரடைகள், வினையடைகள் என்றெல்லாம் பகுக்கின்றனர். சில சொற்கள் போற்றுதலுக்குரியவையாய், புனிதமானவையாய், எழுச்சியூட்டுபவையாய், மறைவெளிப்படுப்பவையாய் அமைகின்றன. பிற சொற்கள் சந்தைப் பயன்பாட்டுக்கென அன்றாடப் புழக்கத்தில் இருக்கின்றன. இன்னும் சில சொற்கள் கீழ்மையானவையாக, நயமற்றோரால் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பாசாங்கு செய்கையில், தான் பாசாங்குசெய்வதை மறந்துவிடுகிறது. அதேபோல், போலி தெய்வங்களை படைத்து, அத்தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டி, சில ஒலிகளை எழுப்பி, படைப்பு இறையை போற்றுவதற்கான கருவிகள் அவை என நம்பத் தலைப்படுகின்றனர் மனிதர். மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதோடு, மதவெறியர்களாகவும் ஆகிவிடுகின்றனர். சட்டி பானைக்கும், நாய் பூனைக்கும் பெயரிடுவது போலவே பெயரிடப்பட முடியாததற்கும் பெயரிடுகின்றனர். அப்பெயர்களின் பேரில் சண்டையிட்டு சகமனிதரை கொல்லவும் துணிகின்றனர்.

எனவே, யோகசாதகர் இப்படி போற்றுகிறார்:

முழுமுதலே, நீ யாரென நானறியேன். என் குரல் நீ எனக்களித்த பேறு. எந்தப் பண் கொண்டு உன்னை பாடுவதென்று நானறியேன். என் சொற்திறனில் நான் இறுமாப்பு கொள்கிறேன். ஆனால், எண்ணிலடங்கா ஒலிகளில் ஒன்று மட்டுமே அது. உன்னை துதிப்பதும் போற்றுவதும் மட்டுமே என் விழைவு என்பதால், என்னிடமிருந்து வெளிப்படும் ஒலி எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்வாயாக! நீ எண்ணற்கரியவள்.

பூசகரும், சூன்யம் பயில்வோரும், மந்திரவாதிகளும் பல சடங்குகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். தங்கள் சைகைகள் மூலம், துதிப்பாடல்கள் மூலம் உன்னை வழிபடுவதாக எண்ணுகின்றனர். நான் மிக எளியவன்; என்னால் இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு கைகால்களை அருளியிருக்கிறாய். அன்றாடம், என் தேவைகளுக்கேற்ப அவற்றை நான் பயன்படுத்துகிறேன். அதைத் தவிர சடங்கெதுவும் நானறியேன். நான் சடங்குகளை பின்பற்ற வேண்டுமென்றால், என் ஒவ்வொரு செயலையும் சடங்குச் சைகை என ஏற்றுக்கொள்வாயாக! உன்னை ஒரு கல்லென எண்ணி, அவர்கள் கட்டிய கோயிலில் நீ அமர்ந்திருக்கிறாய் என்று நம்பி மக்கள் வலம் வருவதை நான் காண்கிறேன். நீ எங்கும் நிறைந்திருக்கும்போது, எல்லையற்றிருக்கும்போது உன்னை எப்படி என்னால் சுற்றி வர முடியும்? நீ அளித்த கால்கள் கொண்டு நான் சிறிது வளையவருகிறேன். அதுவே நான் உன்னை வலம்வருவதாகட்டும்!

உனக்கு நான் உணவூட்ட வேண்டுமென்பது கேலிக்குரியது. இவ்வுலகு உன்னுடையது; இதன் மூலக்கூறுகள் உன்னுடையவை; இவ்வுடல், இக்கைகால்கள் அனைத்தும் உன்னுடையவை. என்னால் உனக்கு எதை படையலிட முடியும்? நான் உண்ண வேண்டும், அருந்த வேண்டும் என்பதும், இவ்வுடலெனும் பொம்மை அழியும் வரை உறங்க வேண்டும், விளையாட வேண்டும் என்பதும் உனது கட்டளை. எனவே, நான் உண்பதும் அருந்துவதும் உனக்கான படையல்களாக அமையட்டும்!

உன் இணையடிகள் எங்கே? எத்திசை நோக்கி நான் வீழ்ந்து வணங்கினால் என் நெற்றியை உன் திருவடிகளில் வைக்க முடியும்? நானறியேன். ஏதும் நானறியேன். எனவே, நான் படுக்கும்போது அச்செயலையே உன் அடிகளை நான் வணங்குவதாகக் கொள்வாயாக! என் இழிநிலையைப் பார்!  நான் இறுமாப்பு கொள்ளும், என்னில் உள்ள ‘நான்’ என்பதுகூட நீ என்னில் வைத்து விளையாடும் ஒன்றுதான். என் பாசாங்குகளை, போலித்தனங்களை நீ கண்டுபிடித்துவிடுகிறாய். என் நேர்மையான விழைவுகளுக்கு சிறிது மதிப்பளிப்பாயாக! நானே உன் கொடைதான். அதையே முழுதளிப்பாக ஏற்றுக்கொள்க! சொல்லெழாமல் தவிக்கிறேன். நிலையற்ற, துணையிலா இவ்வுயிரியின் துடிப்பெனத் திகழும் நனவில் நன்றி பெருக்கெடுக்கட்டும். நான் உன்னவன். ௐ!

‘ஹ்ரீம்’ என்ற மந்திரம், ஒரு முக்கோணத்தின் உச்சியில் வைக்கப்பட்டு தியானிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s