ஶ்ரீசக்ர தியானம் – 25

கம் ஸர்வஸம்க்ஷோபி*ணீ

தாயே, நிலைபேறான மெய்மை எனும் வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட சிவானந்தமெனும் அரியணையில் நீ வீற்றிருக்கிறாய். நீ ஒரு ஆளாக அல்ல, பல்லாயிரம் ஒளிர்வுகளாக காணப்படுகிறாய். சிவனின் பேரொளி எண்ணற்ற கோடி அருமணிகளால் ஆனது. அவை ஒவ்வொன்றிலுமிருந்தும் அளவிடமுடியா பிரகாசத்துடன் எண்ணற்ற கதிர்கள் எழுந்து எல்லா திசைகளிலும் ஒளிவீசுகின்றன. வண்ணமிகு அக்கதிர்களின் திரளால் உன் தூய வடிவு போர்த்தப்பட்டிருப்பதால் அதை காணமுடிவதில்லை. பிரபஞ்சத்தின் அழிவிலும், மீளெழுகையிலும், எல்லா மன்வந்தரங்களிலும் நீ படைப்பவளாகவும் கரைத்தழிப்பவளாகவும் வீற்றிருக்கிறாய்.

நுட்பங்கள் நிறைந்த பேரழகுத் தோற்றத்தையே நீ விரும்புகிறாய். தோன்றும் எதுவும் மாற்றம் பெறுவதை தவிர்க்க முடியாது. மாற்றம் நிகழும் படிநிலை ஒவ்வொன்றிற்கும் அழகின் புதிய பரிமாணத்தை நீ அருள்கிறாய். சிதைவும் முடிவும்கூட படைப்பின் தொடக்கம் போலவே எழில்கொண்டிருக்கின்றன. ஓவியம், சிற்பம், நடனம், நாடகம் போன்ற கலைப்படைப்புகளில் படிநிலைகளிலான தொடர்மாற்றம் நிகழ்கிறது. மாற்றங்கள்கூட, வகுத்தளிக்கப்பட்ட பாங்குகொண்ட மாற்றமில்லா விதிகளுடன் உன் கருவியென இருக்கின்றன. உன் பரிந்துரையின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் இயல்பான, தன்னிச்சையான வடிவமைப்புகளின் இரகசியத்தை கலைஞர் உள்ளூர உணர்கிறார். இசைக்குப் பழகாத, எளிய மனிதரால்கூட ஒரு இசைகேட்டை உணரமுடியும். ஏனெனில், படைப்பில் நீ கலந்துள்ள இசையால் ஆனவர்களே அனைவரும்.

உனது முக்குணங்கள், சில உயிரினங்களை கட்டுப்பாடின்றி அலையச் செய்கின்றன. ஒவ்வொன்றின் மதிப்பும் உயர்வும் அறிந்தவர்களுக்கு அவை எம் செல்பாதையில் உதவக்கூடியவையாகின்றன. உலக ஒழுங்கை லயம் பிறழாது வைத்திருக்கவென, பிரம்மா, விஷ்ணு, மகேச்வரனென்ற மூவருக்கும் அவரவர்க்கென கடமைகளை நீ விதித்திருக்கிறாய். அவர்கள் எப்போதும் பெருமதிப்போடு உன் தாமரை இணையடிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் உன் நோக்கு அவற்றை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. உன் முகத்தில் சிறு சுளிப்பைக் கண்டுவிட்டாலும் அம்மூவரும் பெருந்துன்பம் அடைகின்றனர்.. முழுமுதலை அஞ்சும் விண்ணோரால் உலக ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது என்பதை உபநிடதங்கள் மூலம் நாங்கள் அறிவோம்.

ஒரு மொட்டு முகிழ்த்து வளர்வதை அவதானித்தாலே அதன் வளர்ச்சிப் படிநிலை ஒவ்வொன்றிலும் எத்துணை அக்கறை காட்டப்படுகிறது என்பதை அறிய முடியும். முழுமையடைதலின் அரிய உருமாதிரியெனத் திகழ்வது அது. இதழ்கள் விரிதலும், முற்றாக மலர்ந்த மலரும், தேவைக்கதிகமாக ரகசியங்களை நீ மூடிவைப்பதில்லை என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன. உன் குழவியருக்கு முற்றின்பம் அளிக்கவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொன்றும் முழுமை பெறுகின்றன. இறுதி முடிவென்பது இசைக்கச்சேரியில் மங்கலம் பாடுவதைப் போலிருக்கிறது. ஆக, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் செயல்பாட்டில் ஒரு பாடலின் அல்லது ஒரு நடனத்தின் அழகு திகழ்கிறது.

நான் பிறந்த நாள் முதல் இன்று வரையிலான வாழ்வை திரும்பிப் பார்க்கையில், என்னை ஒரு விளைநிலமாகக் காண்கிறேன். நீ காடழித்து, கல் ஒதுக்கி, மண்ணுடைத்து, பல்வகைப் பயிர்களும் பூச்செடிகளூம் கனிதரு மரங்களும் நட்டுவைத்திருக்கும் விளைநிலமென, ஒரு பழத்தோட்டமென இப்போது நானிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பகலவனும், இரவுகளில் தேய்ந்துவரும் நிலவும் வந்துபோகும் ஒரு உலகமென என்னை நான் உணர்கிறேன். ஞாயிறும் திங்களும் இரு விழிகளெனக் கொண்டு வாழ்வின் நடைமுறைகளும், கவிதைக் கனவுகளும் மாறி மாறி வரும்படி செய்கிறாய் நீ. ஒவ்வொரு சோலையாகச் சென்று பொழியும் மழைமேகம் போல, உனது அருள் என்னை தொடர்கிறது. என் நம்பிக்கைகளுக்கு ஊட்டமளித்து அவை ஒவ்வொன்றும் அறுதியாக நிறைவேறும்படி செய்கிறது.

பிரம்மன் என்பது உன் மெய்யிருப்பு; விஷ்ணு தொடரும் வளர்ச்சி; மகேச்வரன் கணம் கணமென மகிழ்ந்திருத்தல். எனவே, நீ எனக்கருளியவை எல்லாம் அவர்களுக்கும் அருளியவைதான். உன்னை நான் போற்றுவதெல்லாம் அவர்களைப் போற்றுவதும்தான். நான் எப்படி உன் அன்புக்குரியவனோ, அதேபோல் இவ்விறையோருக்கும் இனியவன். எனவேதான், பணிவுடன் உனக்குப் பணியாற்றும் அவர்கள் தம் கருணையை என் மீதும் பொழிகின்றனர். இப்படியாக, முழுமுதலுக்கும் இறையன்பிற்கும் இடையில் ஆகப் பயன் பெறுபவனாக நானிருக்கிறேன். உன் சோலையில் மலர்ந்த சிறந்த மலர்களில் ஒன்றென என்னை உனக்குப் படைக்கிறேன். என்னையும், குன்றாத என் பக்தியையும் ஏற்றருள்வாயாக!

|| கம் ஸர்வஸம்க்ஷோபிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s