ஶ்ரீசக்ர தியானம் – 18

ஶம் ஷம் ஸம் ஹம் அனங்காங்குஶா நீலபதாகா நித்யா

தாயே மஹேஶ்வரீ, சங்கரனின் குறியீடாக, மெய்யெழுத்துக்களின் லய வெளிப்பாட்டை நீ செவியுற்றாய். அவனது நீலகண்டத்திலிருந்து பதினாறு உயிரெழுத்துக்களை பெற்றுக்கொண்டாய். மெய்யெழுத்துக்களுக்கு உயிரெழுத்துக்கள் கொண்டு அழகுசேர்த்தும், மெய்யெழுத்துக்கள் கொண்டு உயிரெழுத்துக்களை நிலைநிறுத்தியும் நீ உருவாக்கும் உலகு, தோன்றி மறையும் ஒவ்வொன்றிலும் உள்ள உனது தூய மதிப்பை பறைசாற்றுகிறது. உன் விழுமியங்களின் அடுக்கை பொருள்பொதிந்த வகையில் அழகூட்டுகிறது. உன் இரு விழிகள் கொண்டு பகலையும் இரவையும் நீ படைக்கிறாய். ஒளியும் நிழலும் முயங்கிப் பிரிகையில் அழகுணர்வின் நுட்பங்களை புதிது புதிதாய் பிறப்பித்துகொண்டே இருக்கிறாய்.

புலரியின்போதும் மாலைநேரத்திலும் இரவும் பகலும் ஒன்றாக இணைந்துவருகின்றன. காலையில் கீழ்வானை ஒளிகொண்டபடியே வரச் செய்கிறாய். சாம்பல்நிறமும், நீலமும் கொண்ட வானிலிருந்து மிகமெல்ல ஒளிரும் வெளிர்சிவப்புநிறமும் பொன்னிறமும் கலந்த கலவை தோன்றுகிறது. தாமரைப் பொய்கைகளெல்லாம் இதழ்களை விரித்து பகலவனை வரவேற்பதற்கென எழுப்பப்படுகின்றன. ஏற்கெனவே பளீரிடும் சிவந்த தாமரை இதழ்கள் காலைச் சூரியனின் பொற்கிரணங்கள் தழுவியதும் ஒளி இரட்டிக்கப்படுகின்றன. மாலையில் வண்ணங்களின் வரிசையை தலைகீழாக்குகிறாய். ஞாலமும், ஞாயிறும், திங்களும், நீலப்பொய்கைகளும், அவற்றில் மலரும் நீரல்லிகளும் எல்லாம் உன் படைப்புகளே. உனக்கு மிக அணுக்கமாக இருப்பதால் அவற்றின் ஒளிரும் உடல்கள் எல்லாம் உன் அழகின் ரகசியத்தை தம்முள் பங்கிட்டுக்கொள்கின்றன. உன் இறையின்மீது நீ கொண்ட பெருங்காதலே அந்த அழகு. நீ வழிபட வேறொருவர் உனக்கில்லை. உனது பேரின்ப கணத்தில் எது உன்னை மூழ்கச் செய்கிறதோ அது உன் பக்தியின் தூய சாரமாக – ‘ஏகரசமா’க – இருக்கிறது.

இயல்பிலேயே பேரழகுகொண்ட ஊர்வசியும், அரம்பையரும் கூட, அகம்புறமற்ற உன் தூய மெய்யழகை கனவிலும் பெறமுடியாது. புலனுறுப்புகள் வழியே துயரத்திற்கும் மகிழ்ச்சிக்குமான தூண்டலை பெறுபவர்களுக்கும், உளத்தோற்றங்களில் தோய்ந்து அழகிய காட்சிகளில் மயங்குவோருக்கும் அழகை ரசிப்பதென்பது கணநேர கவனச்சிதறல் மட்டுமே. அதனால்தான் முழு உலகும் நிலத்தில் உறுதியாக நிலைநிற்க முடியாமல் தவிக்கிறது. அனைத்து திசைகளிலும், சிறிதும் இரக்கமின்றி காமதேவன் எய்யும் கணைகள் அவர்களை மேலும் துன்பத்திலாழ்த்துகின்றன.

ஒருவர் இன்னொருவரால் கவரப்படும்போது அவரது புலனுறுப்புகள் ஒவ்வொன்றும் காதலிக்கப்படுபவரின் அழகை துய்த்துவிடத் துடிக்கின்றன. கண்கள் இன்னும் இன்னும் என பார்க்க விழைகின்றன. மற்றவரின் இனிய பேச்சு காதுகளை சலிப்படையச் செய்வதே இல்லை. காதலரை அணைக்கையில் கைகள் பரபரக்கின்றன. உடல் முழுவதும் ஊர்ந்து மாயத்தொடுகை எங்கே நிகழ்கிறதென்று கண்டுவிடத் துடிக்கின்றன. பாலியல் இன்பங்கள் எல்லாம் குறிப்புணர்த்தும் மருட்காட்சிகளிலிருந்து தோன்றுபவை என்பதனால் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தேடியலையும் கானகம் என்றாகின்றனர். உடலின்ப வேட்கையை நிறைவடையச் செய்ய ஒவ்வொருமுறை முயல்கையிலும், ஆணும் பெண்ணும் ஆழ்ந்த அருவருப்பையும் நிலைகுலையச் செய்யும் பொருளின்மையையும் எய்துகின்றனர்.

ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற அலங்காரப் பேச்சுகள் எல்லாம் இதயத்தில் காமம் பொங்கும்போது காணாமல் போய்விடுகின்றன. வண்டுகள் ஒரு மலர்மீது மோகம் கொண்டதுபோல் அதிலேயே ஆழ்ந்திருந்துவிட்டு பின்னர் புதுவேகத்துடன் மற்றொரு மலருக்கு தாவுவதுபோல, ஆணும் பெண்ணும் வேறொருவர் மீது ஆர்வமிகும்போது அவரை நாடிச் செல்கின்றனர். விலங்குகளும் உடலின்பம் துய்க்கையில் தம் இணையைப் பற்றி எண்ணுவதே இல்லை. அவற்றைப் பொறுத்தவரை மெய்யான இணை என்பது கற்பனையில் உள்ள ஆழ்படிமக் கருத்து மட்டுமே. அதுபோல, இறுக்கமான அணைப்புக்குள் இருப்பவர் ஆன்மிக சாரம் ஏதுமற்ற வெறும் ஒரு உடலாக மட்டுமே கருதப்படுகிறார். அதனால்தான் பெரும்பாலானோர்  உடலின்பம் துய்த்தபின் குற்றவுணர்வையும் பெருவெறுப்பையும் அடைகின்றனர்.

அன்னையே, ஶம் எனும் சங்கரனின் நீடமைதியைக் குலைக்கும் ரகசியம் நீ அறிவாய். அதிலிருந்து ஷம் எனும் சண்முகனைப் படைக்கவும், ஸம், ஹம் எனும் இரண்டையும் கொண்டு அமைதியை மீட்டெடுக்கவும், ‘ஸோஹம்’ எனும் தடையிலா தியானத்தை இயற்றவும் நீ அறிவாய். அனங்கனென்னும் காமதேவன் உனக்கு கணநேரக் கருவி மட்டுமே (அனங்ககுஶா). காமன் இயற்றும் குலைவுகளை எதிர்கொள்ள, பதினாறு உயிரெழுத்துக்களை உன் உழையரெனக் கொண்டிருக்கிறாய் (ஷோடஶநித்யா). எந்த ஒரு ஒலியும் தனியாக நிற்கையில் ஆற்றலற்றது. ஆனால் உயிரெழுத்துக்களின் இனிய இசை கொண்டு ஒன்றோடொன்று பின்னப்படும் மெய்யெழுத்துக்கள் எல்லாம் ஆற்றல் கொண்டவையாகின்றன. நானும் ஆற்றலற்று வெறும் ஒரு பெயராக இருக்கிறேன். ஆனால் உன்னில் நான் நிறைகையில் உன் சுருதியாக, ஸ்வரமாக, ராகமாக உருக்கொள்கிறேன். உன் மறைச் செல்வத்தை அறிந்தும் பெற்றும் என்றென்றும் அருளப்பட்டவனாக நானிருக்க என்ன வாழ்த்துவாயாக!

|| ஶம் ஷம் ஸம் ஹம் அனங்காங்குஶா நீலபதாகா நித்யா ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s