சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன். பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது. அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன். அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது. அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார். அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார். அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் ரூமி என்னை பெரிதும் கவர்ந்தார். ரூமியைப் போலவே நானும் என் ஏழ்மையை பெருமையாகக் கருதினேன்; மறைவாழ்வே என் புகலிடம் என்றெண்ணினேன்.
ஜியா-உல்-ஹக் என்ற புனைபெயரில் பல குழந்தைகளுக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். அவர்களெல்லாம் வளர்ந்த பின்னர், ‘யுவலோகம்’ என்ற அமைப்புக்கு என்னை தலைமைதாங்க கேட்டுக்கொண்டனர். மதிகெட்டுப்போன தருணத்தில் பெங்களூரில் இருந்து ஒரு இதழை பதிப்பிக்க ஒப்புக்கொண்டேன். இந்த ‘கர்மா’வில் நான் ஆழ்ந்துபோவதற்கு முன்பாக குரு மீண்டும் தோன்றி, சமூக-பொருளாதார வலையெதிலும் நான் சிக்கிக்கொள்வதிலிருந்து என்னை மீட்டார்.
விடுதலை என்னும் விழுமியத்தின் உயர்வை குரு சொல்லச்சொல்ல, மீண்டும் அனைத்தையும் உதறிச் செல்லும் எண்ணம் என்னுள் முகிழ்த்தது. ஆனால் இம்முறை எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. எனவே, பிரெய்லி முறையை கற்பதற்கு எனக்குதவும்படி கோரி பம்பாயிலிருந்த என் நண்பருக்கு எழுதினேன். என் நண்பர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பதைக் கேட்டபோது, இத்தகைய தந்திரங்களை தான் அறிந்தே இருப்பதாகக் கூறினார் குரு. ஒருவிதத்தில் இது தவறான தேர்வு என்பது அவரது எண்ணமாக இருந்தபோதும் எனக்குத் தடையாக இருக்கவில்லை. பெங்களூரிலிருந்து பாம்பே விக்டோரியா டெர்மினஸுக்குச் செல்வதற்கான கட்டணத்தை மட்டும் எனக்குத் தந்தார். வழியில் உண்பதற்கென மேலும் பத்து ரூபாய் கொடுத்தார். கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு ரூபாய் தந்தார். அவர் பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றபோது மேலும் 25 காசுகள் தந்தார்.
அமைதி திகழும் சோமனஹள்ளியைத் துறந்து, பாம்பே எனும் பித்து நகரத்தின் அருவருக்கத்தக்க சேரிப்பகுதியான தாதரில் வாழச்சென்றது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது. நடராஜ குருவின் பழைய மாணவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று தன் இல்லத்தில் தங்க வைத்தார். ஒரே ஒரு அறை கொண்டது அவர் வீடு. அவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த ஒரே அறையில் வசித்தார். அறையின் ஒரு மூலையே சமையலறையாகவும் குளியலறையாகவும் இருந்தது. அங்கிருந்த ஒரே படுக்கை என்பது ஒரு மர பெஞ்சு மட்டுமே. பெருந்தன்மையுடன் அது எனக்கு வழங்கப்பட்டது. அவர் மனைவி அந்த பெஞ்சின் அடியில் உறங்குவார். மிச்சமிருந்த இடம் அக்குழந்தைகளுக்கு மட்டும் போதுமானதாயிருந்தது. நண்பர் வாசலில் படுத்துக்கொள்வார். அவர் தலை உள்ளேயும் கால் வெளியிலும் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம் இருந்தது. எங்களுடையது ஒற்றைக் குடும்பம். பிற அறைகளில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. நைல் நதிக்கரையில் நிலக்குடைவில் வாழ்ந்த தன் ஞானகுருவை விட்டுச்சென்று ரோமாபுரியின் கிளர்ச்சிமிகு வாழ்வை ருசிக்கச் சென்ற ஃபிலோமினின் இக்கட்டை அப்போது நானும் உணர்ந்தேன். பாம்பே மக்களின் பேச்சு உளறலாகவே எனக்குக் கேட்டது. நாள் முழுவதும் குருவின் ஒவ்வொரு சொல்லும் என் நினைவிலெழுந்துகொண்டே இருந்தது. மீண்டும் மேய்ப்பனைப் பிரிந்த ஆடுபோலானேன் நான்.
எனது நண்பர் நடராஜ குருவின் முன்னாள் மாணவர் மட்டுமல்ல; குருவின் உயர் விழுமியங்களுடன் வாழ விரும்பியவர். ஆனால், ஒரு யோகியின் குணம் சிறிதும் கொண்டவரல்ல. மனிதகுலம் பெரிதாகப் போற்றும் எந்த விழுமியத்தாலும் எளிதில் கவரப்படும் இளகிய நெஞ்சம் கொண்டவர். அவரது குணத்துடன் ஒத்துப்போகாத எந்த ஒரு சொல்லும் நடத்தையும் அவரை முரடனாக்கிவிடும். அன்பு என்பது அவருக்கு ஒரு பெரும் சவால்; அந்த சவாலை சந்திக்க எந்தத் தியாகத்தையும் செய்ய அவர் சித்தமாயிருந்தார். பெரும்சீற்றத்துடன் தன் எதிரியைத் தாக்கவும் அவரால் முடியும். நல்ல வாசிப்பு கொண்ட அவர் இந்திய-உலக அரசியல் இயக்கங்கள் பற்றி அறிந்திருந்தார். நான் கையில் காசில்லாமல் இருந்ததை அவர் அறிந்திருந்தார். பணம் பற்றியும் எனது தேவைகள் பற்றியும் ஒருபோதும் நான் யாருடனும் பேசியதில்லை. நான் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதையும் சலவைசெய்த உடைகளை எனக்களிப்பதிலும் கவனம் எடுத்துக்கொண்டார். அந்த ஒற்றையறை வீட்டில் ஒருவர் குளிக்கும்போது மற்றவர்கள் வெளியே செல்லவேண்டும். கடைக்குச் செல்வது போன்ற சில வேலைகளை இந்த நேரத்தில் செய்துகொள்வது வழக்கம். ஒவ்வொரு நாளும் காலையில் சலவைவேட்டியை நான் உடுத்துவதற்குத் தரும்போது அதன் ஒரு முனையில் ஐந்து ரூபாய் முடியப்பட்டிருக்கும். எனக்குத்தேவைப்பட்டால் முடிச்சை அவிழ்த்து எடுத்துக்கொள்ளலாம். அவர் அப்போதுதான் வியாபாரம் தொடங்கியிருந்ததும் அவருக்கே பணமுடை இருந்ததும் எனக்குத் தெரியும். தெள்ளிச்சேரியைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு மந்திரவாதி! மொத்த குடும்பத்திற்கும் தேவையானதை ஈட்டியவர் அவரே. விடிகாலையில் கணித வகுப்புகள் எடுப்பார். நான் குளித்து சிற்றுண்டி அருந்திய பிறகு அதே அறையில் சில குழந்தைகளுக்கு மராத்தி சொல்லிக் கொடுப்பார். மாலைகளில் ஆங்கிலமும் இந்தியும் கற்றுத்தருவார். எல்லாவேளையும் குற்றவுணர்வுடனேயே அங்கே உணவருந்தினேன்.
ஒரு நாள் காலையில் கால்போனபோக்கில் நடந்து, பாம்பே நகரின் செல்வந்தர்கள் வாழும் மெரீன் ட்ரைவை சென்றடைந்தேன். சில துறவியர் ஒரு மாளிகைக்குள் செல்வதைக்கண்டு, என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே என நானும் சென்றேன். ஆன்மீக சொற்பொழிவுக்காக மக்கள் அங்கே குழுமியிருந்தனர். நான்கு துறவிகள் மேடையில் படாடோபமாக அமர்ந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் தரையில் நன்றாக விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அமர்ந்திருந்தனர். நான் அவர்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன். பாம்பேயில் துறவிகள் சம்சாரிகளுடன் சேர்ந்து வாழ்வதோ அவர்களுடன் அமர்வதோ வழக்கமில்லை என்பதால், என்னருகே அமர்ந்திருந்தவர் துணுக்குற்று என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக மேடையருகே கொண்டு சென்றார். அமைதி தவழும் முகம்கொண்ட புனிதர்களுடன் அமர்த்தப்பட்டேன். யாரும் யாரையும்விட புனிதராக இருக்கமுடியாது என்பதை நான் நடராஜ குருவிடம் கற்றிருந்தேன். ஆனால் அது ஒரு பாரம்பரியமான ஆசிரமம். தலைமைத் துறவி தனது ‘ப்ரஹ்மாஸ்மிமாலா’ என்ற நூலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
உரை முடிந்தபின் அரங்கைவிட்டு வெளியே வந்துபார்த்தபோது என் நண்பர் புதிதாய் வாங்கிக் கொடுத்திருந்த காலணிகளை காணவில்லை. நான் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, மரியாதைக்குரிய தோற்றம் கொண்ட ஒரு மனிதர் என்னவென்று விசாரித்தார். என் காலணிகளை காணவில்லை என்று நான் சொன்னதும், தன் சப்பாத்துகளை கழற்றி என்னை அணிந்துகொள்ளும்படி சொன்னார். வட இந்தியாவில் ஒரு துறவி ஆங்கிலத்தில் பேசுவதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவே, நான் ‘Sir, I should not step into your shoes’ என்று சொன்னபோது அவருக்கு வியப்பாயிருந்தது.
கனிவுடன் என்னை ஆசிரமத்தின் அறை ஒன்றிற்கு அழைத்துச்சென்றார். வசதியான இருக்கையில் என்னை உட்கார வைத்து நான் மெட்ரிகுலேஷன் தேறியிருக்கிறேனா என்று கேட்டார். நான் ஆமென்று சொன்னதும் நான் பட்டதாரியா என்று கேட்டார். அதற்கும் நான் ஆம் என்று சொன்னபோது அவரது ஆவல் பெருகியது. நான் முதுகலைப் பட்டம் பெற்றவனா என்றார். அதற்கும் ஆம் என்றேன். நான் எதற்காக பாம்பே வந்தேன் என்று கேட்டார். பார்வையற்றோருக்கு உதவுவதற்காக நான் பிரெய்லி முறையை கற்க விழைவதையும், முடிந்தால் சமூக உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் விருப்பத்தையும் கூறினேன். இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் அந்த ஆசிரமத்தின் மேலாளராக இருக்கவேண்டும் என்று தோன்றியது. நான் அங்கேயே தங்கவேண்டும் என்றும் பார்வையற்றோருக்கான டாடா பள்ளியில் நான் பிரெய்லி கற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். டாடா சமூகவியல் நிறுவனத்தில் முனைவர்பட்டப் படிப்புக்கும் உதவுவதாகக் கூறினார். ஒரு மந்திரவாதியைப் போல சொன்னதையெல்லாம் செய்தும் தந்தார்.
அந்த ஆசிரமத்தில் நான்கு துறவிகள் தங்கியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் வசதியான தனியறையும் ஏவல் செய்ய பிரம்மசாரிகளும் இருந்தனர். ஏழ்மையிலிருந்து செல்வச்செழிப்பிற்குச் சென்றது போலிருந்தது. இவையெல்லாம் பற்றி குருவுக்கு எழுதியபோது அங்குள்ள அறிஞர்களிடம் வேதாந்தம் பயிலும்படி என்னை ஊக்குவித்தார். ஆனால், பார்வையற்றோருக்கு சேவை செய்தல் என்ற என் பெரிதுபடுத்தப்பட்ட எண்ணத்தை அவர் பாராட்டவில்லை. எவரையும் ஏழை என்றோ பாவப்பட்டவர் என்றோ சொல்வதை அவர் விரும்பியதில்லை. ‘நாமும் எல்லோரையும் போல ஏழைதான்; பாவப்பட்டவர்தான்’ என்பார். பார்வையற்றோருக்காக நான் செய்யவிருந்த தியாகத்தை குரு ஊக்குவிக்கவில்லை என்பது இரக்கமற்ற செயலாகத் தோன்றியது. எழுத்தாளர் வேத் மேத்தா அக்காலகட்டத்தில் டாடா பார்வையற்றோர் பள்ளியின் மாணவராக இருந்திருப்பார் போலும். அந்நாட்களில் எத்தனை கொடுமையான முறையில் அப்பள்ளி நடத்தப்பட்டது என்பதைக் கூறும் புத்தகம் ஒன்றை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
பிரெய்லி முறையை கற்ற பின், பாஸ்டனில் ஒரு வருடப் பயிற்சி பெறுவதற்காக பெர்கின்ஸ் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தேன். இதை குருவுக்கு தெரிவித்தபோது, ஒரு துறவி தன் வாழ்க்கைக்கான் ஏற்பாடுகளை செய்துகொள்ளும் முறை இதுவல்ல என்றார். அமெரிக்காவிற்கோ பிற நாடுகளுக்கோ நான் செல்வேன் என்பது ஊழாக இருந்தால் தானாகவே அந்த வாய்ப்பு தேடி வரும் என்றும், அத்தகைய வாய்ப்புகளுக்காக நான் பாசாங்குகள் ஏதும் செய்யத்தேவையில்லை என்றும் எழுதினார். அவரது சொற்கள் அப்போது கடுமையானவையாக தோன்றின. எந்த சூழ்ச்சியும் பாசாங்கும் இல்லாமலேயே உலகை குறைந்தது ஆறுமுறையாவது சுற்றிவருவேன் என்றோ மேலும் பலமுறை அரைச்சுற்றுகள் வருவேன் என்றோ அப்போது நான் அறிந்திருக்கவில்லை. குரு வாக்கு பிழைக்காது என்பது இந்தியப் பழமொழி அல்லவா?