பிரித்தானிய தத்துவவியலாளர் பிஷப் பெர்கீலி, ‘கற்றறிந்தாரோடு சிந்தனை செய்; பொதுமக்களோடு உரையாடு’ (Think with the learned and speak with the vulgar) என்ற கோட்பாட்டைக் கொண்டவர் என்பர். தத்துவார்த்தமாக சிந்திக்காத மக்களையே அவர் பொதுமக்கள் என்றார். அதுபோல், வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள் இல்லாத உயர் விழுமியங்களைப் பற்றி சிந்திக்காதவர்களையே இங்கே நாராயண குரு ‘உலகர்’ என்கிறார். பொருளீட்டி, செலவு செய்து, விழித்து, பின் உறங்கி, மனம்போன போக்கில் வாழ்வோரே பெரும்பான்மையினர்.
ஆர்வங்கள் பலவும் வந்து போகும் ‘ஜகத்’தைப் பற்றி இரண்டாவது பாடலில் பேசினார் குரு. அதே பொருளில், ‘கடந்துசெல்லும் ஆர்வங்கள்’ என்ற பொருளிலேயே நாம் ‘லோகம்’ என்பதை கொள்ளவேண்டும். உலகில் உள்ள பல் உயிரிகளைப் போலவே, மனிதர்களும் புவியீர்ப்புச் சாய்வுக்கும் (geotropism) ஒளிநோக்கிய சாய்வுக்கும் (heliotropism) இடையில் சிக்கியுள்ளனர். கதிரவன் மறைந்ததும் நம் ஆற்றல் மங்குகிறது; நாம் உறங்கச் செல்கிறோம். சூரியன் எழுகையில் நம் ஆற்றல் திரும்பி, நாம் விழித்தெழுந்து நமது பகற்செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம்.
நம்மை உறங்க வைப்பது யார்? விழிக்கச்செய்வது யார்? என நாமறியோம். நம் ஊக்கம் எங்கிருந்து வருகிறது? மனம் நினைப்பதை செய்யத்தேவையான ஆற்றலை நமக்கு அளிப்பது யார்? நாம் செய்யும் அனைத்தையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஒளியைக் குறிப்பிடுகிறார் குரு. மைத்ரீ உபநிடதத்தில், ஒரு புராணக்கதைக்குப் பின், இத்தகைய ஒளி ஒன்றைப் பற்றிய அழகான குறிப்பு வருகிறது:
தேவரும் அசுரரும் ஆன்மாவை விரும்பியவர்களாய் பிரம்மாவிடம் சென்றனர். அவரை வணங்கி, ‘ஐயா, நாங்கள் ஆன்மாவை (ஆத்மன்) விரும்புகிறோம் (வேண்டுகிறோம்). எங்களுக்கு அருளுங்கள்” என்றனர். நீண்ட சிந்தனைக்குப் பின் அவர் தனக்குத்தானே கூறிக்கொண்டார், ‘இந்த அசுரர்கள் உண்மைக்கு மாறான ஆன்மாவை விரும்புகின்றனர்’. ஆகவே, அவர்களுக்கு மிக மாறுபட்ட கொள்கை ஒன்று கூறப்பட்டது. அதனடிப்படையில், இங்குள்ள மதியற்றோர் அதீதப் பற்றுடன், ஆபத்தில் உதவும் மிதவையை அழித்து, மெய்யல்லாததை புகழ்ந்து வாழ்கின்றனர். செப்படிவித்தையில் நடப்பது போல், பொய்யே அவர்களுக்கு உண்மையாய் தெரிகிறது.
பல உபநிடதங்களிலும், நம் வாழ்வை மாறுதலுக்குட்படுத்தும் இரு வகையான அறிவு மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றது. ஒன்று அவித்யா (அறியாமை); மற்றொன்று வித்யா (அறிவு). ஒருவன் தனது தன்முனைப்பின் ஆர்வத்தின் அடிப்படையில் வாழ்வது அவித்யா. அத்தகையோர் இருளில் வாழ்கின்றனர் என்கிறது ஈசோபநிடதம். ஒருவன் தனது கவனத்தை அறிவெல்லை கடந்த கருத்துக்களில் செலுத்துவதே வித்யா எனப்படுகிறது. முரணுரையாக, அதே உபநிடதம், அறிவெல்லை கடந்த கருத்துக்களுடன் தன்னை பிணைத்துக்கொண்டோர் இன்னும் ஆழ்ந்த இருளில் வாழ்கின்றனர் என்கிறது.
ஒருவன் எப்போது விவேகத்துடன் நடந்துகொள்கிறான்? எப்போது நடந்துகொள்வதில்லை? என்பதை அறுதியிட்டுக்கூறுவது அவ்வளவு எளிதல்ல. இவ்வியல்பைக் கூறும் குறிப்புகள் கதா, முண்டக, மைத்ரி உபநிடதங்களில் வருகின்றன:
அறியாமையின் நடுவே உறைவோர் பார்வையற்றவனால் வழி நடத்தப்படும் குருடர்களைப் போல தங்களை கற்றறிந்தோராகக் கருதிக்கொண்டு மனம் புண்பட்டு ஏமாற்றத்துடன் சுற்றிச்சுற்றி வருகின்றனர்
“உறங்கி, விழித்து, பலதையும் எண்ணும் உலகத்தோர்” என குரு சொல்வதை, இவ்வுபநிடத வாக்கியங்களைக் கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றப்படாததும், அதே சமயம் புரியாத வகையில் ஒளிர்வதுமான ஒர் விளக்கைப்போல் நம் எண்ணங்களையும் செய்கைகளையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றை நோக்கி நம் கவனத்தை திருப்புகிறார் குரு. மைத்ரீ உபநிடதத்தில் பின்வரும் விவரணை இடம்பெறுகிறது:
இதய வெளியில் உறையும் ஆன்மாவின் பண்பு ஒளிரும் மீஆற்றலுடையதைப் போன்றதேதான். அது தீயிலும், கதிரவனிலும், வாழ்க்கை சுவாசத்திலும் தோன்றுகிறது.அதேபோல், இதயவெளியில் உறையும் ஆன்மாவின் பண்பு ஓம் எனும் ஒலியைப் போன்றதே.
எல்லாவற்றிலும் உறைபவனே, அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவனே, ஓ பிரம்மா! எனக்கு எல்லா வரங்களையும் தா!
மெய்ம்மையின் முகம் பொற்கலசத்தால் மூடப்பட்டுள்ளது ஓ புஷன்! அதை அகற்றுவாயாக! அனைத்திலும் உறையும் முடிவற்ற மெய்மையை காட்டுவாயாக!
தொலைவில் அங்கே கதிரவனில் இருக்கும் புருஷன் – நானே அவன்
சூரியனில் இருக்கும் சூரியத்துவமே நிலைபேறான மெய். அது தூயது, தனிப்பட்டது, பாலற்றது (அலிங்க)
வானில் பரவி இருக்கும் செவ்வொளி – கதிரவனின் நடுவே, கண்ணில், நெருப்பில் இருக்கும் ஒரு பகுதி மட்டுமே.
அதுவே பிரம்மம். அதுவே அழிவற்றது. அதுவே பிறங்கொளி கொண்டது. அதுவே நிலையான மெய்மை.
உள்ளுறையும் நினைவுகளால் தூண்டப்படும் இயற்கையின் மூன்று முறைகளால் நம் மனம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை முந்தைய பாடல்களுக்கான உரைகளில் பார்த்தோம். இம்முறைகளைக் கடந்துசெல்வது என்னும் சிக்கலை இப்பாடல் பேசுகிறது. பகவத் கீதையின் பதினாறாவது காண்டத்தில் அர்ஜுனன் இதே சிக்கலை எதிர்கொள்க்கிறான். கிருஷ்ணனை அவன் கேட்கிறான்:
அம்மூன்று முறைகளையும் ஒருவன் கடந்துவிட்டான் என்பதை எப்படி அறிவது? அவனது நடத்தை எப்படியிருக்கும்? அவன் எவ்வாறு அம்முறைகளை கடக்கிறான்?
இதற்கு
அவன் ஒளியும், செயலும், மாயமும் உள்ளபோது மனக்குறை கொள்வதில்லை; அவை இல்லாதபோது அவற்றுக்காக ஏங்குவதுமில்லை
என்று பதிலிறுக்கிறான் கிருஷ்ணன்.
முதல் பாடலில் சொல்லப்பட்ட கரு என்பதை பகவத் கீதை பூதாத்மன் என்கிறது. அறிவின் அறிவாய் சுயம் பிரகாசமாய் இருப்பது, ஒருவனை செயல்படச்செய்யும் உள்ளாற்றலாய் இருப்பது, அறிபவனுக்கு காட்டப்படும் உலகாய் இருப்பது – இம்மூன்றூமே கருவின் பண்புகள். இம்மூன்று குணங்களையும் கீதை ஒளி (பிரகாசம்), செயல் (ப்ரவ்ருத்தி), மயக்கம் (மோகம்) என்கிறது. முழுமுதல் எந்த மாற்றத்திற்கும் ஆளாவதில்லை என்றாலும், முழுமுதலின் எதிர்மறைக் கொள்கை இம்மூன்று பண்புகளும் ஒன்றன்மீது ஒன்றாய் வைக்கப்படுவதற்குக் காரணமாகிறது.
வேதாந்தத்தில், இம்மாதிரியான் மாறுதல் நிர்விகாரம் எனப்படுகிறது. ஏழாவது பாடலில் தான் கூற இருக்கும் மாறுதலில்லா முழுமுதல் எனும் கருத்தை நாம் வந்தடைய நம்மை தயார் செய்கிறார் நாராயண குரு. இப்பாடலில் நனவின் தமக்குள் ஒன்றுடன் ஒன்று மாறுபடும் நிலைகளை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார். முழுமுதலின் இயல்பு நிலை என்பது தானே பெற்ற பிரகாசம். இதனை, ஏற்றப்படாததும் அணையாததுமான ஒரு விளக்குடன் ஒப்பிடுகிறார் குரு. சாதாரண மனிதன் சிக்கிக்கொள்ளும், மாறிக்கொண்டே உள்ள உலகம் செயலாலும் மயக்கத்தாலும் ஆனது. இவை உருக்காட்டும் சுயத்திலும், கீதை கூறும் பூதாத்மனிலும் உண்டு.
போதியஸின், ‘The Consolation of Philosophy’—இல் ம னிதனின் இரங்கத்தக்க நிலையை ஃபிலசோஃபியா விவரிக்கிறான்:
‘ஓ! பேராழத்தில் மூழ்கும் இம்மனம்தான் எப்படி உற்சாகமிழக்கிறது! இயல்பான தன் ஒளியில்லாமல் புற இருட்டில் திரிந்தலைகிறது. உலகாயதக் காற்றுகளால் நிரப்பப்பட்டு எண்ணங்கள் வெடித்துச் சிதறும் அளவிற்கு ஊதிப்போகிறது’
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் உள்ளொளியைக் காண்பதே இந்த சோகத்திற்கு மருந்தென்கிறார் குரு.
இணைபிரியா பறவைகளிரண்டு ஒரே மரத்தில் நெருங்கி அமர்கின்றன இரண்டில் ஒன்று இனிக்கும் பழமொன்றைப் புசிக்க மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது அதே மரத்தில் ஒருவன் துயரத்துடன் தன் இயலாமைக்கு வருந்திச் சோர்கிறான் பிறிதொன்றை, இறையைப் பார்க்கும்போது அதன் உன்னதத்தை உணரும்போது துயரங்களிலிருந்து விடுபடுகிறான் காண்பவன் படைப்பவனை, ஒளிரும் இறையை பிரம்மத்தைப் பார்க்கும்போது அறிபவனாகி , நன்றையும் தீதையும் உதறி மாசற்றவனாய் மீயுயர் தன்மையை அடைகிறான்.என்கிறது முண்டக உபநிடதம்
உணரக்கூடியதான புலன்-மன அணைவும், நம்முள் உறையும் உயிரூட்டும் ‘தானும்’ ஒரே கொள்கையில் பிறப்பவை. இவ்விரண்டும் ஒருவரோடொருவர் பிணைத்துக்கொண்ட ஆத்ம நண்பர்கள்போன்ற இரு பறவைகளாக விளக்கப்படுகின்றன. அவை தனியனில் உள்ள ஆத்மாவும் கடவுளும் என்பது சங்கரர் கூற்று. ஆசை, அறியாமை, செயல் இவற்றால் உருவாகும் பாங்குகள் மற்றும் பாதிப்புகளை தன்னுள் கொண்ட நமது நுண்ணிய உடலில் அவை உறைகின்றன.
இரண்டில், தனியனின் ஆன்மா செயலின் பலனை அனுபவிக்கிறது. இயல்பிலேயே காலமற்றதும், தூயதும், ஞானமுள்ளதும், கட்டுப்பாடுகளற்றதும், எங்கும் நிறைந்திருக்கும் மாயையே வரம்பிடும் அடையமாகக் கொண்டதுமான இறை எதையும் ருசிக்காமல், வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.
சம்சாரமென்னும் மாய உலகில் முற்ற மூழ்கிய தனியனின் ஆன்மா மீண்டும் மீண்டும் சோர்வடைகிறது. அத்தகைய ஆன்மா தனது தவறான அடையாளத்தால் மீண்டும் மீண்டும் சிறுமைவாய்ந்த கருப்பைகளில் பிறப்பதாக நம்பப்படுகிறது. ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவனின் கருணைபொங்கும் வழிகாட்டலால் தனியன் ஒருநாள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒழுக்கமான பயனுள்ள வாழ்வின்மூலம் தன்னுள் ஒளிரும் மெய்யொளியை கண்டுகொள்ளும் தரிசனத்தை ஒருவேளை அடையக்கூடும். அப்போது எல்லாவற்றிலும் ஒன்றேயாக உறையும் ஆன்மா எனும் ஒளிரும் தனியன் நானே என்று உணரக்கூடும். அப்போது சிறப்பு-குற்றம் எனும் இருமையும், பிணைப்பை உருவாக்கும் இருவகைச் செயல்களும் ஒருவரிடமிருந்து உதிர்ந்துபோகும். அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுபட்டபின், எல்லா இருமைகளையும் கடந்த முழுச்சமநிலையை ஆன்மா அடையும். அத்தகைய ஒரு நிலையை கீதை கூறுகிறது.
அஞ்ஞானம் அழிக்கப்பட்ட ஆன்மாவைக்கொண்டவருக்கு முழுமுதல் போல் ஒளிதருகிறது ஞானம்காரண ஆய்விற்கு அம்முழுமுதலைக் கொண்டோரும்ஆன்மாவிற்கும் முடிபான ஒழுக்கத்திற்கும்உயர் இலக்குக்கும் அதைக்கொண்டோரும்மீளுதலில்லா இறுதிநிலைக்குச் செல்கின்றனர்மண்டியவை எல்லாம் ஞானத்தால் ஒழிக்கப்படுகிறது. (பா 16, 17)
மேலுள்ள இரண்டாவது பாடலை ‘உலகர் உறங்கி’ எனும் இப்பாடலுடன் ஒப்புநோக்குங்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுமையே அதன் பொருண்மைத்தன்மை, புறமெய்மை மற்றும் இழப்பு என்கிறார் மார்டின் ஹெய்டெகர். ஆனால், கீதையில் ஒருவனது காரண ஆய்வு ஒருமையுடையதாய் இருந்தால் இழப்பு என்பதே இல்லை என்பது தெளிவாகக் கூறப்படுகிறது.
ஆர்வச்சிதறலுடன் வரும் காரண ஆய்வைப் போலல்லாமல், ஒருமைவாத ஆய்வு பகுத்தறிவு சார்ந்தது, நெறிப்படுத்தப்பட்டது, அதன் குறிக்கோளை நோக்கி செலுத்தப்படுவது. நடராஜ குரு, தனது கீதை உரையில், ‘அத்தகைய காரண ஆய்வு அதன் தேடலுக்கான குறிக்கோளுடனான ஒரு நேரடி இருமுனை உறவை நிறுவுகிறது. முடிவில்லா கிளைத்தல்களில் அவை தொலைந்துபோவதில்லை. இருமுனைமை நிறுவப்பட்டபின் அதே போக்கில் மேலும் காரண ஆய்விற்கு உதவுவதாக அமைகிறது’ என்கிறார். நம்முள் ஏற்றப்படாத ஒளியென எப்போதும் விழிப்புடன் பார்த்துக் கொண்டேயிருக்கும், சொற்களுக்கப்பாற்பட்ட அரியதான முழுமுதலுடன் இருமுனைமையொன்றை நிறுவிக்கொள்ளவேண்டும் என்பதே, நாராயண குரு இப்பாடலில் அளிக்கும் அறிவுரை. அதே சமயத்தில், நெறிப்படுத்தப்படாத ஒருவன் முழுமுதலுடனான செம்மையான இசைவுகொண்ட மீயுயர் நிலையை அடைவது எவ்வளவு அரிதானது என்பதை அறிந்தவரே குரு. அடுத்த பாடலில் மனிதனின் சோகமான நிலைக்காக வருந்துகிறார் அவர்.