குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார். அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம். குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது. சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி. வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு. என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார். வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம். எங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கால் கழுதைகளைப் போலிருந்தது. “புனித ஃப்ரான்சிஸ் தன் உடலை ‘என் சகோதரக் கழுதை’ என்று சொல்வது வழக்கம். அதையே நாம் நம்மைப்பற்றி இப்போது எந்த மிகையும் இல்லாமல் சொல்லிக் கொள்ளலாம்” என்றார் குரு. சோமனஹள்ளியின் மண், களியும் மணலும் கலந்த கலவை. ஈரமாயிருக்கும்போது தளர்ந்தும், காய்ந்துவிட்டால் உலோகம் போல் கடினமாகவும் இருக்கும். மேஸ்திரி இல்லாமல் ஒரு சுவர் எழுப்புவது எப்படி என்று குரு செய்து காண்பித்தார். தினமும் காலையிலும் மாலையிலும் ஓரிரு மணி நேரம் சமையலறை சுவர் கட்டும் வேலையை நாங்கள் செய்தோம். சிறிய திறப்புகளில் உடைந்த கண்ணாடியைப் பதித்து எப்படி ஜன்னல்களை அமைக்கலாம் என்பதை செய்து காட்டினார். ஒவ்வொரு முறையும் கல்லையும் மண்ணையும் வைக்கும்போது குமரன் ஆசானின் ‘துராவஸ்தை’யில் வரும் இவ்வரிகள் என் நினைவுக்கு வந்தன:
குன்றின் மேல் நிற்கும் குடைசாய்ந்த குடில்
வெளிறிய நாய்க்குடை போல
அருகே செல்லச் செல்ல
கண்ணை இன்னும் உறுத்துகிறது
வட்டமாக இல்லை
கோண வடிவில் இல்லை
சதுரமாகவும் இல்லை
கட்டடக் கலையின் எந்த அம்சமும் இல்லை
சுற்றிலும் ஓரடி உயரத்தில்
கோரமான மண் சுவர்
யாருக்கும் அதை பூச வேண்டும் என்று தோன்றவில்லை
கட்டியவனின் கைரேகை கூட அதில் பதிந்திருக்கிறது
பாதி சுவரைக் கட்டி முடித்தபோது, குருவுக்கு எங்கோ செல்ல வேண்டும் என்று தோன்றியது. அதற்குள் மண் சுவர் எழுப்புவதில் நான் தேறியிருந்தேன். குரு கிளம்புவதற்கு இரு நாட்களுக்கு முன்பு புஷ்பாங்கதன் என்னும் சிறுவன் வந்து சேர்ந்திருந்தான். வேலையை முடிப்பதற்கு எனக்குத் துணை இருந்தது.
குரு என்னுடன் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு மாலைப் பொழுதும் காதலர்களின் மாலையைப் போல் அமைந்தது. தெருவோரமாக இருந்த ஆல மரத்தினடியில் ஒரு கற்பலகை இருந்தது. அதன்மீது இரவு ஒன்பது மணிவரை கூட அமர்ந்துகொண்டிருப்போம். சீரகமும் வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீர் எப்போதும் இருக்கும். எங்கள் சீரகத் தேநீரை சிறிது சிறிதாக இடைவிடாது பருகிக்கொண்டிருப்போம். ஒவ்வொரு மாலையும், குரு தான் நாராயண குருவுடன் கழித்த நாட்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார். நாராயண குருவின் மகத்தானதும் அதே சமயம் பரிதாபகரமானதுமான பின்புலத்தைப் புரிந்து கொள்ள அது எனக்கு மிகவும் உதவியது.
நாராயண குருவின் எழுத்துக்களில் உள்ள பல மறைபொருட்களை குரு என்னுடன் பகிர்ந்துகொண்டார். பிற பெரும் அறிஞர்களுடைய போதனைகளுக்கு ஈடானதும் அவற்றை விஞ்சக் கூடியதுமான அவை, குருவின் பெருமையை உணர்த்தின. நாராயண குருவுடன் ஒட்டிக்கொண்டிருந்த சாதியினரின் முரட்டுத்தனம், கீழ்மைகள் மற்றும் முட்டாள்தனத்தைப் பறைசாற்றும் பல சம்பவங்களை குரு விவரித்தார். இவர்கள் நாராயண குருவின், ‘ஒரே குலம், ஒரே மதம், ஒரே தேவன்’ என்ற மந்திரத்தை அடிக்கடி சொன்னாலும், தங்களது சாதியுணர்வில் மூழ்கியவர்களாகவே இருந்தனர். அவர்களது சாதிப் பித்தினால் பிற சாதியினரில் எவரையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. மொத்த சாதியுமே ‘அடக்குமுறைப் பித்து’ கொண்டதாய் இருந்தது போலும். தங்கள் வாழ்வில் நிகழும் எதையும், ‘சவர்ணத்தவர்’ என்று அவர்கள் இழிவாகக் குறிப்பிடும் மக்களால் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறையாகவே கண்டனர். அது தீர்க்கப்படமுடியாத கூட்டு நனவிலி நோய் என்று குரு கருதினார். குரு தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை பெருமையுடன் நினைத்தவர்களே, கள்ளிறக்குதலும், பதநீர் காய்ச்சலும் இழிவான தொழில் என்று கருதினர். கேரளத்தவர்கள் எப்போதும் ‘கர்மபூமி’யைச் சேர்ந்தவர்கள். ஆன்மீகத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சங்கரரே, இதனால்தான் இந்தியாவின் வடவெல்லைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
எங்களது மாலைகள் மூன்று மணிநேர இரவு வகுப்புகள் போலிருந்தன. சமூகவியல், இந்திய கலாசார பாரம்பரியம், இந்திய குருமார்களின் சிலுவையேற்றம் – இவற்றிலெல்லாம் நான் புதிய புதிய பாடங்களை கற்றபடி இருந்தேன். குருமார்கள் தோற்கடிக்கப்படுவது சிலுவையில் அறையப்படுதல் மூலமல்ல; முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருவராக பீடத்தில் ஏற்றப்படுவதன் மூலம். நாராயண குரு மீதான பக்தி வழிபாட்டிற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், ஒரு உண்மையான ஞானி என்ன சொல்கிறார் என்பதை அறிவுபூர்வமாக கேட்டுக்கொள்ள எவரும் இல்லை. எஸ்.என்.டி.பி. யோகம் – அது அவரது தந்தையால் துவங்கப்பட்டதாக இருந்தபோதும் – முழுக்க முழுக்க ஒர் சாதீய நிறுவனம் என்பதை குரு எனக்கு விளங்க வைத்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நாராயண குருவைப் பற்றிய என் புரிதல் விரிந்துகொண்டே சென்றது.