Tag Archives: ஸீனோ

நேர்காணல் – 9

Standard

அறிவு எப்படி உள்முரண்கள் கொண்டதாக இருக்கிறது?

யதார்த்தத்திற்கும் பரமார்த்தத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது.  உலகில் எங்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது இந்த இடைவெளிதான்.  இடையே பாலங்கள் இல்லை.  அறிவென்பது அப்படியொரு பாலத்தைக் கட்டும் முயற்சிதான்.  ஒருவன் அறிவையே தன் இறுதி இலக்காகக் கொள்வானானால் அவன் அடைவது ஏதுமில்லை.  ஆகவே ‘அறியாமையை வழிபடுபவன் இருளில் இருக்கிறான்; அறிவை வழிபடுபவன் அதைவிடப் பெரிய இருளில் இருக்கிறான்’ என்று நாராயண குரு சொன்னார்.  யதார்த்தமும் பரமார்த்தமும் மோதும்போது புதிர்கள் பிறக்கின்றன.  ஒபன்ஹியுமரின் பிரபலமான புதிர் ஒன்று உண்டு: இந்த உடல் சக்தி.  இந்தச் சுவரும் சக்தி.  ஏன் உடல் சுவர் வழியாக ஊடுருவவில்லை?  யதார்த்தத்தை அறிய அறிய ஒவ்வொரு அறிவும் பரஸ்பரம் முரண்படுகிறது.  ஸீனோ எனும் தத்துவ ஞானியின் முரண்புதிர்கள் முக்கியமானவை.  உதாரணம் கூறுகிறேன்: இருவர் ஓடுகிறார்கள்.  ஒருவரைவிட மற்றவர் பத்தடி தூரம் பின்னாலிருக்கிறார்.  பின்னாலிருப்பவர் முந்த முயல்கிறார்.  பத்தடி தூரத்தின் பாதியை அவர் ஓடிக்கடந்தால் மீதி பாதி மிச்சமிருக்கும்.  அதில் பாதியை ஓடிக்கடந்தால் மீண்டும் பாதி மிச்சமிருக்கும்.  அந்த மிச்சத்தில் பாதியை ஓடிக்கடக்கும்போது மீண்டும் அதில் பாதி எஞ்சுகிறது.  அதாவது எப்போதும் சிறிது தூரம் மிச்சமிருக்கும்.  ஆகவே முதலாமவனை இரண்டாமவன் ஒருபோதும் தாண்டமுடியாது.  இது உண்மையா?

ரஸ்ஸல் இந்த விஷயத்தை மேலும் ஆராய்கிறார்.  ரஸ்ஸல் கேட்டார்: இருவர் விருந்துக்கு வருகிறார்கள்.  அவர்களுக்கு உடைகள் எடுத்து வைக்கத் தகவல் வந்தது.  ஆனால் அவர்கள் வந்தபோது ஒரு உடை பயன்படவில்லை.  ஏன்?  காரணம் வந்தவர்களில் ஒருவர் பெண்.  அதாவது தகவல் உண்மை வேறு, தருக்க உண்மை வேறு.  ஒருவன் லண்டனில் இருந்து பாரீஸுக்குப் போகிறான்.  போக்ஸ்டோன் வரை ரயில்.  கலய் வரை கப்பல்.  பிறகு பஸ்.  இங்கு ஓர் அமைப்புக்குள் மூன்று அமைப்புகள் செயல்படுகின்றன.  ரயிலில் அவன் தன் காதலியைச் சந்தித்து அழைத்துச் சென்றான்.  அவர்கள் உறவு ஒரு சண்டையோடு முறிந்தது.  இது அவ்வமைப்பிற்குள் நிகழும் சம்பந்தமில்லாத இன்னொரு அமைப்பு.  அமைப்பு என்பதே தவறு.  இது அமைப்புகள் நிகழ்ந்தபடியே இருக்கும் ஒரு பிரவாகம்.  அறிவு என்பது எப்போதும் அந்த அமைப்புகளில் ஒன்றைப் பற்றியது மட்டும்தான்.  எனவேதான் அது இன்னொரு அமைப்பில் தவறு ஆகிறது.  நான் பின்னோக்கி நடந்தேன், ஆனால் முன்னால் சென்றுகொண்டிருந்தேன்.  காரணம் நான் நடந்தது ஓடும் ரயிலில்.  கணிதத்தன்மையுள்ள அறிவுகள் எல்லாமே அவற்றின் தளத்திற்கு வெளியே தவறாகிவிடும் என்றார் ரஸ்ஸல்.

அப்படியானால் ஏன் ரஸ்ஸல் போன்றவர்கள் கணித ரீதியான கூட்டல் கழித்தல்களில் ஈடுபடுகிறார்கள்?  கணிதம் தன் தருக்கத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பிரத்யட்ச உலகை ஒட்டி நிற்க முனைகிறது.  ஆகவே அது அடையும் உண்மைகள் பொதுவானவையாக உள்ளன.  அமைப்புகளின் அடுக்குகளாகச் செயல்படும் இப்பிரபஞ்சத்தில் அவற்றுக்கிடையேயான இசைவே முக்கியமான விஷயம்.  இசைவுகள் தொகுக்கப்பட முடியுமா என நாம் ரஸ்ஸலைக் கேட்கலாம்.  பிரபஞ்ச ஆக்கமும் தனிமனித ஆக்கமும் ஒருங்கே நிகழும் பொது அமைப்பின் தருக்கத்தைப் புரிந்து கொள்வதே அந்த அடிப்படையாக அமையும்; அந்த அறிவே ஆதாரமான மதிப்பீடுகளை உருவாக்க உதவும் என்பார் அவர்.  அறிவின் பக்கமிருந்து பொருளைப் பார்த்தாலும் பொருளின் பக்கமிருந்து அறிவைப் பார்த்தாலும் மாறாமலிருக்கிறது பிரபஞ்சம்.  இதையே சார்பற்ற ஒருமை (Natural Monism) என்கிறார் ரஸ்ஸல்.

அடிப்படையானதோர் ஒழுங்கு ஒன்று உள்ளது என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

இதோ எனது அறை.  இங்கு புத்தகங்கள், கம்ப்யூட்டர், எழுதுபொருட்கள், ஓவியங்கள், இசைக்கருவிகள் இன்னும் பல பொருட்கள் உள்ளன.  சிதறிக் கிடக்கின்றன அவை.  ஆம், அப்படித் தோற்றம் தருகின்றன.  ஆனால் இது ஒரு அமைப்பு.  இதில் ஒவ்வொரு பொருளையும் இன்னொன்றுடன் சம்பந்தப்படுத்தியபடி ஒரு நோக்கம் சரடுபோல ஊடாடுகிறது.  அதை நாம் அறிந்தால் இது ஒழுங்கு ஆகிவிடுகிறது.  அழகு ஆகிவிடுகிறது.  இந்த அமைப்பு என்பது பல்வேறு உள்ளமைப்புகளினாலானது.  கம்ப்யூட்டரைச் சுற்றி அதற்கான பொருட்கள்.  மேஜை மீது எழுது பொருட்களின் வரிசை.  நூலடுக்குகளில் நூல்களின் வரிசை.  ஒழுங்கின்மை என்பது நாமறியாத ஒழுங்கு.  ரஸ்ஸல் அதை ‘சொபிஸ்டிகேஷன்’ என்றார்.  ஐன்ஸ்டீன் சொன்னார், கூறுகளில் சிக்கலும், மொத்தத்தில் எளிமையும் கொண்டு விரியும் ஒரு அமைப்பே இப்பிரபஞ்சம் என்று.  பெரிய மனங்களெல்லாம் முழுமையின் ஒழுங்கையும், நோக்கத்தையும் பிரபஞ்சத்தில் உணர்ந்துள்ளன.