Tag Archives: யுங்

இருப்பும் அறிதலும் – 1

Standard

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை சிந்தனை மரபில் இருந்து வந்துள்ளது.

விஞ்ஞானமானாலும் தத்துவமானாலும் ஒவ்வொரு தரிசனமும் சில தனி மனிதர்களின் கண்டுபிடிப்புகளாகவே வெகுகாலமாக இருந்து வந்துள்ளன.  அவை சமூகத்தை மிகவும் மறைமுகமாகவே பாதிக்கின்றன.  பல சமயம் குறியீட்டு ரீதியாகவும் ஆழ்மன ரீதியாகவுமே இப்பாதிப்பு உள்ளது.  அத்தரிசனங்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவுத்தளத்தையோ எதிர்ப்பு இயக்கத்தையோ உருவாக்குவதும், அதன் மூலம் அவற்றை சமூகத்தில் நிலைநாட்டவோ தகர்த்தழிக்கவோ முனைவதும் கம்யூனிஸ்டு சிந்தனை முறையின் விளைவாக உருவான வழிமுறையாகும்.  சோவியத் ருஷ்யாவில் ஒரு தத்துவ தரிசனத்தின் உடனடியான நேரடி விளைவாக ஒரு அரசமைப்பும், சமூக அமைப்பும் உருவாகிறவரை இது சாத்தியமென்ற நம்பிக்கையே பரவலாக உலகில் இருந்ததில்லை.

மார்க்ஸும் எங்கல்ஸும் விஞ்ஞான ரீதியான அறிதல் முறைகளில் உள்ள வர்க்கக் கண்ணோட்டங்களுக்கு அழுத்தம் தந்ததன் வழியாக ‘அறிதல்’ என்ற செயலில் இருப்பதாக நம்பப்பட்டு வந்த புறவயத் தன்மையை கேள்விக்குரியதாக்கினர்.  விஞ்ஞானத்தை ஒரு முதலாளி அணுகுவதும் ஒரு பாட்டாளி அணுகுவதும் வேறுவேறு அடிப்படைகளை வைத்தேயாகும் என்றனர்.  எனவே அவ்விஞ்ஞானத்தின் மூலம் உருவாகும் வழிகளும் கண்டுபிடிப்புகளும்கூட அதற்கேற்ப மாறுபடும் என்றனர்.  முதலாளித்துவ அறிவியலுக்கு எதிராக, பாட்டாளி வர்க்க அறிவியலை உருவாக்க வேண்டியதன் அவசியம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது.  இயந்திரவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் கூட இவ்வாறு வர்க்க ரீதியான நோக்கங்கள் உள்ளுறைந்துள்ளன என்பது சோவியத் விஞ்ஞானிகளின் எண்ணம்.  அப்படியிருக்கையில் விஞ்ஞானத்தின் தூய தர்க்கம் சார்ந்த தளங்களில் கேட்கவே வேண்டாம்.  இவ்விவாதம் நுண் அலகு இயற்பியலில் (Quantum Physics) பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி வருகிறது.  சொல்லப்போனால் இருப்புக்கும் அறிதலுக்கும் இடையிலான ஆகப் பெரிய பிரச்சினைகளும் இந்நூற்றாண்டில் இங்குதான் உருவாகின்றன.

ஐன்ஸ்டீன் வழியாகவே விஞ்ஞானமும் கவிதையும் தழுவிக்கொண்டன.  1933-இல் ஓர் உரையில் அவர் கூறினார், “பிரபஞ்சப் பேரியக்கம் சார்ந்து உருவாக்கப்படும் எல்லா கண்டுபிடிப்புகளும் உண்மையில் மனித மனதின் சாத்தியங்களுக்கு உட்பட்ட கற்பனைகள் மட்டுமே.  அவை மானுட மனதிற்கு வெளியே உள்ள பொருண்மை வெளியின் இயங்கு முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டவை மட்டுமே என்று கருதலாகாது.  கடிகாரத்தின் இயங்குமுறையை அறிய ஆவல் கொண்ட குழந்தையைப் போன்றவர்கள் நாம்.  இக்கடிகாரத்தை திறந்து பார்க்க நம்மால் முடியாது.  அதன் ஓரிரு சலனங்கள் மட்டுமே நமது கண்ணில் படுகின்றன.  அவற்றை கூர்ந்து கவனித்து அவற்றின் இயங்குமுறையை உருவகித்துக் கொள்கிறோம்.  அதன் அடிப்படையில் நாம் ஒருபோதும் காண முடியாதவையும், நாம் காணும் இயக்கங்களுக்கு முன்னும் பின்னும் விரிந்து கிடப்பவையுமான பிற இயக்கங்களின் இயங்குமுறையை கற்பனை செய்து கொள்கிறோம்.  இக்கற்பனையை ஒருபோதும் முழுமையாக சரிபார்த்துவிட முடியாது.  ஆனால் கற்பனையும் பொருண்மையின் அடிப்படையில் அதை சரிபார்த்துக் கொள்ள இயல்தலும் இரு இணை கோடுகளாக வெளியின் முடிவுவரை நீண்டு செல்கின்றன.  அறிதல் சாத்தியங்களின் தொடுவானையே எல்லையெனக் கொண்டுள்ளது.  ஐன்ஸ்டீன் இதை அறிதலின் இலட்சியப் புள்ளி (ideal limit of knowledge) என்கிறார். (Albert Einstein and Leopold Infield – The Evolution of Physics)

இங்கு நுண் அலகு இயற்பியல் பற்றி மிக எளிய ஓர் அறிமுகம் செய்து விவாதிப்பது உதவியாக இருக்கும்.  பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்ற வினாவுக்கு இன்றைய இயற்பியலாளர் தரும் இறுதிக்கட்ட விடை – கற்பனை – நுண் அலகு இயற்பியலில் உள்ளது.  பருப்பொருட்கள் என்பவை அணுக்களினாலானவை.  அணுக்கள் பல்வேறு வகையான மின்னூட்டம் கொண்ட துகள்களினாலானவை.  துகள்கள் அதிநுண்துகள்களினாலானவை.  இத்துகள்கள் ஒரே சமயம் துகள்களாகவும் சக்தியாகவும் நமக்குக் காட்சி தருபவை.  இதை இரட்டை நிலை இருப்பு (dual existence) என்கிறார்கள்.  ஆகவே சக்தி துகளாக மாறுவதன் மூலமே பிரபஞ்ச ஆக்கம் நிகழ்கிறது.  எப்பொருளும் ஒளி வேகம் பெறும்போது சக்தியாகிவிடும் என்பது ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு.  எனவே சக்தி துகளாக ஆகும் மாற்றம் என்பது வேகத்தைப் பொறுத்த விஷயம் அன்றி வேறல்ல.  இவ்வேக மாற்றம் நிகழும் மிக நுண்ணிய அலகையே குவாண்டம் என்கிறார்கள்.  இவ்வலகுகள் நிகழும் வேக மாற்ற இயக்கங்களைப் பற்றிய அறிவுத் துறையையே பொதுவாக நுண் அலகு இயந்திரவியல் (Quantum Mechanics) என்கிறார்கள்.

நுண் அலகு இயந்திரவியலின் விரிவான விவாதங்களுக்குள் புக இது இடமல்ல.  ஆனால் நாம் சகஜ வாழ்வில் பிரபஞ்சத்தின் இயங்கு முறையை அறியவும் அளக்கவும் பயன்படுத்தும் எந்த விதியும் அங்கு செல்லுபடியாகாது என்று மட்டும் புரிந்துகொள்ளவேண்டும்.  நுண் அலகு இயந்திரவியலின் வடிவமைப்பாளர்களில் ஒருவரான வெர்னர் ஐசன்பர்க் கூறுகிறார்: நுண் அலகு இயந்திரவியலின் இயங்கு முறைகளை கூர்ந்து கவனிக்கும்போது ஒன்று தெரியும், நாம் சாதாரணமாகக் கண்டறிந்து நனவிலி மனதின் இயல்பாக மாறியுள்ள இயங்குமுறைகள் எதுவும் அங்கு இல்லை.  பொருட்களை நாம் சாதாரணமாக அறியும் வழிமுறைகளான இடம், எடை, வேகம், நிறம், அளவுகள் முதலிய எவையுமே நுண் துகள்களின் விஷயத்தில் பொருந்தி வராது.  அங்குள்ள பிரச்சினைகளே வேறு (Werner Heisenberg – Across the Frontiers).

மிக எளிய அளவில் இதை மீண்டும் தெளிவுபடுத்தியபடி முன்னகரலாம்.  நாம் அறியும் புற உலகு பற்றிய பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட விதிகளை உருவாக்கியவர் சர் ஐசக் நியூட்டன் என நாம் அறிவோம்.  ஆற்றல், ஈர்ப்பு விசை, இயக்க நிலைகள் பற்றிய நியூட்டனின் விதிகள் எவையுமே நுண்ணலகு இயந்திரவியலில் செல்லுபடியாகாது.  ஒரு நுண்துகள் நகரும்போது ஒரு குறிப்பிட்ட இயங்குவிதியை உருவகித்து அது எங்கிருக்கும் என ஊகிப்பது சாத்தியமேயல்ல.  அதன் எடை, வேகம், மின்னூட்டம் உட்பட எதைப் பற்றியும் பொதுவிதிகளின் அடிப்படையிலான கணிப்புகளைச் செய்ய முடியாது.  நியூட்டனின் ‘பிரபஞ்ச இயங்குமுறை தரிசனம்’ பிரபஞ்சத்தைக் கட்டிப்போட முயன்றது.  அந்த விதிகளின் அனைத்துக் கட்டுகளிலுமிருந்து நுண்துகள் இயந்திரவியல் பிரபஞ்சத்தை விடுவித்துவிடுகிறது.  ‘ஒரு எலக்ட்ரானின் இடம் மாறாதிருக்கிறதா என்று கேட்டால், அதற்கு பதிலாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.  ஒரு எலக்ட்ரான் அசைவற்றிருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்’ என்கிறார் ஃபிஜோ காப்ரா (Fritjof Capra – Tao of Physics) இதுவே ஐசன்பர்க்கின் நிச்சயமின்மைக் கொள்கை (Uncertainty Principle) என்ற பெயரில் அறியப்படுகிறது.  இவ்விடத்தை வந்தடைந்ததும் நுண் அலகு இயந்திரவியல் பெளத்த மதத்தின் பிரதீத சமுத்பாதம் (அனைத்தும் ஒரே சமயம் பிறந்தபடியும் இறந்தபடியும் உள்ளன) இந்து மரபின் மாயாவாதம் (அனைத்தும் பார்ப்பவனின் உருவகங்களே) ஆகியவற்றைப் பெரிதும் நெருங்கி வருகிறது.

என்றென்றும் மனித குலத்தின் அடிப்படைத் தேடலாக உள்ளது ‘அறிதல் என்றால் என்ன?’ என்ற வினா அல்லது ‘அறிதலுக்கு அப்பாலுள்ளது என்ன?’ என்ற வினா.  இன்று வெவ்வேறு தளங்களில் இயற்பியலிலும் மொழியியலிலும் அவ்வினா முதன்மைப்பட்டுள்ளது.  ஜைன மதத்தின் சியாத்வாதம் (ஆனால் வாதம்) இன்றைய நுண் அலகு இயந்திரவியலின் இயங்கு முறைகளுடன் பெரிதும் பொருந்துகிறது.  இங்கு முதன்மைப்பட்டு வரும் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  இன்றைய நுண் அலகு இயந்திரவியல் பொருண்மையைப் பற்றி ஆராயும்போது ‘பார்ப்பவனின்’ பார்வைக்கு வெளியே பொருண்மை என்ற ஒன்று உண்டா என்ற வினாவை எதிர்கொள்ள நேர்கிறது.  பார்ப்பவனின் பார்வைக்கு ஏற்ப மாறுபாடு அடையாது எதுவும் காட்சிப்படுவதில்லை.  ஒரு நுண்துகள் அப்படி ஒரு தோற்றத்தை நமது ஆய்வின் வழிமுறைகளுக்கு ஏற்பதான் மேற்கொள்கிறது என ஏன் கூறலாகாது?  நமது ஆய்வு உபகரணங்களுக்கு அப்பால் அது சக்தியா இல்லை துகளா என்று எப்படி நிர்ணயிப்பது? பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிபுணரான ஜான் வீலர் எழுதுகிறார் ‘இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தில் பங்கு வகிக்கும் ஒரு தரப்பால் உருவகிக்கப்பட்டதுதானா இப்பிரபஞ்சமே?  இங்கு நடக்கும் முக்கியமான செயல் அனுபவத்தின் பங்கு பெறுதல் ஆகும்.  நுண் அலகு இயற்பியல் மூலமே தெரியவரும் ஓர் உண்மை ‘ஆய்வாளன் ஆக்கத்தில் பங்கு பெறுபவன்’ என்பதாகும்.  செல்லியல் இயற்பியல் கூறும் வெற்றுப் பார்வையாளன் இங்கு இல்லை.  பெரியதோர் கண்ணாடிச் சுவருக்கு அப்பால் அமர்ந்து அவன் அனைத்தையும் பார்த்து மதிப்பிடுவதில்லை.  அனைத்திலும் அவன் பங்கு பெறுகிறான்.  அவன் பங்கு அனைத்தையும் மாற்றுகிறது.  அவன் இல்லாதபோது அங்கு என்ன நடக்கிறது என்று அறிவது சாத்தியமே அல்ல” (J.A. Wheeler, K.S. Thorne C.Minor – Gravitation) பழைய இயற்பியலாளர் மனிதப் பிரக்ஞைக்கு வெளியே பிரபஞ்சம் சுதந்திரமாக தன் பிரம்மாண்டத்துடன் இருக்கிறது என்று நம்பினர்.  அதில் ஒரு சிறு அணுத்துளியான மானுடன் அதற்கு ஒரு பொருட்டேயல்ல என்றனர்.  அந்த நம்பிக்கையை நுண் அலகு இயற்பியல் தகர்த்து விட்டிருக்கிறது.  மனிதனை ‘நான் உண்டு’ என அது உணர வைத்திருக்கிறது.

ஆழமான இந்த சுயப் பிரக்ஞை அறிவின் அனைத்துத் துறைகளிலும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது.  உளவியலில் நிகழ்ந்த மாறுதல்களை நான் விரிவாக அறிவேன்.  உளவியல் அறிஞர் யுங்கும், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரான வுல்ப்காங் பெளலியும் இணைந்து எழுதிய நூல் ஒன்றில் அறிதல் பற்றிய விஷயங்களில் இயற்பியலும் உளவியலும் சந்திக்கும் புள்ளிகள் பற்றிய அநேக குறிப்புகள் வருகின்றன.  ஆழ்மனத்தில் உள்ள ஒரு விஷயத்தை நனவு மனதிற்கு மேலெழுப்பிக் கொண்டுவந்து தெளிவடையச் செய்ய முடியாது போனால் அவ்விஷயம் புற உலகில் ஒரு நிகழ்வாக மாறிவிடும் என்பது உளவியல் ரீதியான ஓர் அறிதலாகும்.  ஒருவன் தன்னுள் அழுத்தமாக மோதிக்கொள்ளும் முரண்களைப் பற்றி ஏதுமே அறியாமல் தூய்மையான மேல்மனத்துடன் இருப்பானானால் அவனுடைய புற உலகம் இரண்டாகப் பிளந்து பரஸ்பரம் மோதி பல்வேறு சிதைவுகளுக்கு ஆளாவதைக் காணலாம்’ என்கிறார் யுங்.  அதே நூலில் பெளலி ‘அகப்பிரக்ஞையில் பிறக்கும் தோற்றம் மெல்ல புற விஷயங்களில் பரவி வெளியுலகமாக மாறித் தெரிகிறது’ என்கிறார். (Carl G. Jung and Wolfgang Pauli – The Interpretation of Nature and Psyche)

அனைத்து வகையிலும் விஞ்ஞானத்தை மனிதனின் பிரக்ஞையே வடிவமைக்கிறது.  மனிதனின் அகப்பிரக்ஞை திட்டவட்டமான காரண காரிய உறவு உடையதோ, தெளிவான இயங்கு விதிகள் உடையதோ அல்ல என நாம் அறிவோம்.  உள்ளுணர்வுகள், சந்தர்ப்பங்கள், சூழலின் படிம ரீதியான அகப்பதிவுகள் இப்படி எத்தனையோ கூறுகள் அதைத் தீர்மானிக்கின்றன.  அறியப்படுவதும் அறிவதும் அதுவேயாகும்.  ஐசக் நியூட்டன் ‘இயற்கையின் கணித தத்துவங்கள்’ (Philosophiae Naturalis Principia Mathematica) என்ற நூலில் தனது கண்டுபிடிப்புகள் எந்தவிதமான முன் ஊகங்களும் இன்றி இயற்கையை எதிர்கொண்டதன் மூலம் உருவானவை என்கிறார்.   ‘நான் எந்த ஊகமும் செய்யவில்லை’ (hypotheses non fingo) என்ற அவருடைய கூற்று பிரபலமானது.  ஆனால் உண்மையில் அது சாத்தியம்தானா?  விஞ்ஞானத்தைப் பற்றிய நவீன தத்துவ ஆய்வுகள் அது சாத்தியமேயில்லை என்கின்றன.  ஊகங்கள் மானுடப் பிரக்ஞையின் இயல்புகள்.  முதலில் வினா, பிறகு ஊகங்கள், அவ்வூகங்களில் ஒன்றுக்குப் பொருண்மை ரீதியான நிரூபணமோ தர்க்கரீதியான அங்கீகாரமோ உருவாக்கப்படுதல்.  இதுவே விஞ்ஞானத்தின் இயங்குமுறையாக உள்ளது.  இவற்றில் ஊகங்கள் (hypotheses) மானுடக் கற்பனையின் எல்லையையும், சாத்தியங்களையும் சார்ந்தவை.  இதைப் பற்றிய ஆய்வையே விஞ்ஞானத்தின் தத்துவ வாதம் (Philosophism in Science) என்கிறார்கள்.  கார்ல் பாப்பரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் தருக்கம் (Karl R. Popper – The Logic of Scientific Discovery) என்னும் நூல் இது பற்றிய விரிவான ஆய்வாகும்.  ஊகங்கள் வலைகள். வீசுபவர்களே பிடித்துவிடுகிறார்கள் என்கிறார் நோவாலிஸ் (Hypotheses are nets.  Only he who casts will catch – Novalis).

இருப்பும் அறிதலும் – 2

இருப்பும் அறிதலும் – 3

இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

Standard

வரலாற்றின் தொடக்கம் முதல் கதை, கவிதை, இலக்கியங்கள் உள்ளன.  மத்திய தரைக்கடல் நாடுகளான சுமேரியா, பைசான்டியா போன்றவற்றிலும் மேலும் மேற்குப் பக்கமாக நகர்கையில் ஸ்லாவிக், ஜெர்மன் நாடுகளிலும் அதிபுராதன இலக்கியப் படைப்புகள் உண்டு.  ஆனால் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முன்பு எழுதப்பட்ட சரியான இலக்கியப் படைப்புகள் எவையும் நமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.  காலத்தால் மிகப் புராதனமான ரிக், யஜுர் வேதங்களும் பிறவும் இலக்கியங்களல்ல.  புராதன வாழ்வின் அடிப்படைகளாக அமைந்த தோத்திரங்கள், வழிபாட்டு முறைகளைப் பற்றிய விதிகள், சடங்குகளைப் பற்றிய சட்டங்கள் முதலியவற்றின் பெருந்தொகுப்புகள் அவை.  அவற்றின் புராதன இயல்பைக் கருத்தில்கொண்டு அவற்றை ஆன்மீக இலக்கியம் என்று கூறுவது தவறல்ல, ஆயினும் இந்திய இலக்கியத்தின் தொல்படிமங்களைப் பற்றிய ஆய்வுக்கு அடிப்படைகளாக நாம் வேதங்களையும் இதிகாசங்களையும் உபநிடதங்களையும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை.  ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள்.  நாம் ஆராய வேண்டியது இதைத்தான்.

ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும்.  கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம்.  ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது.  அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம்.  அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை.  நெருப்பில், மேகத்தில், சூரியனில், காற்றுவெளியில், மூச்சு வெம்மையில், சொல்லில், சிந்தனையில் எல்லாம் ஒரே அக்னியை அவர்கள் கண்டார்கள்.  வேத காலத்தில் இயற்கை சக்திகளுக்கு மனிதத்தன்மை தரப்பட்டது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் பெரும்பாலானவர்கள் எழுதுகிறார்கள்.  அவர்கள் வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவில்லை.  கிறிஸ்தவ மதம் சார்ந்த முன் தீர்மானமும் தன்னகங்காரமும் அவர்களுடைய அறியாமைக்குக் காரணமாகின்றன.  சாதாரண இந்தியனுக்கு ஒன்றை சமஸ்கிருதத்தில் சொன்னால் மாறாத உண்மை ஆகிவிடுகிறது.  அதை மாற்ற வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் சொல்லியாக வேண்டும்.  வியாசனும் யாஸ்கனும் சொன்னது சரியா என்று சாம் கோல்ப்ரூக்கிடமோ, வின்டர்னிட்ஸிடமோ, கீத்திடமோ, மாக்ஸ்முல்லரிடமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்திய ஆய்வு மனம் இயங்கும் முறை மேற்கத்திய ஆய்வு மனம் இயங்கும் முறையிலிருந்து நேர்மாறான ஒன்று.  காரணத்தில் இருந்து சூட்சுமத்திற்கும் சூட்சுமத்தில் இருந்து தூலத்திற்கும் அதன் ஆய்வு விரிகிறது.  நேர்மாறாக மேற்கத்தியர் தூலத்திலிருந்து தொடங்குகிறார்கள்.  நமது தூலப் ப்ரக்ஞையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சில சூட்சுமத் தத்துவங்களும் அவற்றை நிகழ்த்தும் அதிநுட்பமான ஒரு காரணப்புலமும் இருக்கக்கூடும் என்று மேற்கத்திய மனம் யோசிக்கத் தொடங்கியதே ஃப்ராய்டுக்குப் பிறகுதான்.  அதாவது தூலப் பிரக்ஞையைத் தாண்டி அறிதலைக் கொண்டுசெல்ல முடிந்த முதல் ஐரோப்பியர் ஃப்ராய்டுதான்.  ஜெர்மன் மொழி நான்கு கால்களில் நடக்கத் தொடங்குவதற்கு முன்பே தூலம், சூட்சுமம், காரணம், துரியம் என்று நான்கு பேரடுக்குகளைக் கற்பனை செய்து அறிய மாண்டூக்ய உபநிடதத்தை எழுதியவனால் முடிந்திருக்கிறது.  தூலம் ஸ்வப்னத்தில் இருந்தும், ஸ்வப்னம் காரணத்தில் இருந்தும், காரணம் இவையனைத்தையும் தன்னுள் அடக்கிய முழுமையான துரியத்தில் இருந்தும் உதிக்கிறது என்று அது விளக்கும்,  காரணத்திற்கு அதீதமான இந்த முழுமையே, பிரம்மாண்டமான பேரிருப்பே ரிஷிகள் அறிந்த முழுமுதல் தொல்படிமம்.

இத்தொல்படிமத்தின் இலக்கணம் வடிவமில்லாமையும், பெயரில்லாமையும் ஆகும்.  அதை அவர்கள் முழுமை என்று பொருள் பெறும் ‘பிரம்ம’ என்ற ஒலியால் அடையாளம் செய்தார்கள்.  அந்த அக அறிதலின் முதற்புள்ளியிலிருந்து அவர்களுடைய பிற அறிதல்கள் விரிவடைந்தன.  அவை பற்பல தொல்படிமங்களாயின.  அந்த உருவமின்மையில் இருந்து முதல் அறிதல் நிகழ்ந்தபோது அவர்கள் அடையாளப்படுத்தியது ஓர் ஒளியையும் இருளையும் ஆகும்.  இருள் அல்லது இன்மை என்று இங்கு குறிப்பிட்டது ஒரு எதிர்நிலை அல்லது மறுப்பை.  அவ்வெதிர்நிலைக்கு எதிர்நிலையாகவே நேர்நிலை உருவாயிற்று.  (அப்படியொரு தருக்கம் சாத்தியம் உண்டு என மேற்கத்தியர் கண்டடைந்தது ஹெகலின் காலகட்டத்தில்தான்.  ஹெகல் அதை மறுப்பின் மறுப்பு (Negation of Negation) என்று கூறினார்.  அதை கார்ல் மார்க்ஸும் ஏற்றுக்கொண்டார்.)  முதல் எதிர்நிலை அல்லது மறுப்புநிலை மரணம்.  அம்மறுப்புநிலையை மேலும் விரிவுபடுத்தினால் பசி என்றாகிறது.  நிரந்தரத்துவமும் இன்மையும் கொண்ட மரணமே பசி.  ஆகவே பசியே முதல் தொல்படிமம் ஆயிற்று.  பசியிலிருந்து அடுத்த தொல்படிமம் பிறந்தது, நெருப்பு; அக்னி.

நாமறிவதில் மிகத் தீவிரமான பசி அக்னிதான்.  எதையும் அது உண்ணும்.  உண்ணுதலே அதன் பணியும் இருப்பும்.  இந்த எதிர்மறையான தொல்படிமத்திலிருந்து தேடல் விரிவடைகிறது.  உலகம் முழுக்கப் பரவி இடையறாது எரியும் நெருப்பை ரிஷி ‘வைஸ்வாநரன்’ என்று பெயரிட்டு அடையாளப்படுத்துகிறார்.  இந்த ‘உலகப் பசி’ அல்லது ‘பிரபஞ்சப் பசி’யே முதல் தொல்படிமம்.  அதற்கு நேர் நிலையாக அடுத்த தொல்படிமம் உருவாயிற்று.  அப்பசியில் ஆகுதியாக வேண்டியவன், அன்னமானவன், பிரஜை.  அதாவது உலக மனிதன் அல்லது பிரபஞ்ச மனிதன் தன் இருப்பின் மூலம் அவன் நெருப்பை உண்கிறான்.  நெருப்பு அவனை உண்கிறது.

இதிலிருந்து அடுத்த தொல்படிமம் உருவாகிறது.  ஆண் பெண்.  பெண்ணின் யோனியில் ஆணைத்தின்னும் பசி உள்ளது.  ஆண் விந்தில் பெண்ணை உண்ணும் பசி உள்ளது.  நெருப்பும் அன்னமும் அவர்களே.  அவை ஒன்றையொன்று வளர்க்கின்றன.  பின்பு அவற்றை உண்டு வளர்கின்றன.  இவ்வாறாக செயல் என்ற அடுத்த தொல்படிமம் உருவாகிறது.  வைஸ்வாநரன் பெண் யோனியிலிருந்தபடி கூறுகிறான்: இந்தப் பிரஜை ஆண் பீஜத்தில் இருப்பவன்.  மிகச் சிறியவன்.  இவன் வளர்வதாக!  அது மிகச் சிறியதாகையால் அதை உண்டு பெரும் பசியினை ஆற்ற முடியாது.  எனவே வைஸ்வாநரனை உண்டு பிரஜை வளரத் தொடங்குகிறது.  முடிவில்லாது பிரஜை பூமியெங்கும் பிறந்து பிறந்து வளர்ந்தபடி உள்ளது.  அது மீன்களாக, மிருகங்களாக, பறவைகளாக, கிருமிகளாகப் பெருகுகிறது.  அனைத்திலும் பிரபஞ்சப் பசியும் அதே போல மூண்டு பரவியபடி உள்ளது.  வாழ்வியக்கத்தின் தொல்படிமமாகவே இதை நாம் வேதங்களில் காண்கிறோம்.  பூமி முழுக்க எண்ணற்ற உயிர்களாகப் பிறந்து நிரம்பிய உயிர்களின் முதல் கருவை வேதம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என்று குறிப்பிடுகிறது.  அதில் பிறந்த முதல் பிரஜையை வைஸ்வாநரன் எனும் பிரபஞ்சப்பசி பாய்ந்து பிடித்துத் தின்ன முயல்கையில் அது ஃபாண் என்று கூவி அழுததாம்.  அதுவே முதல் அழுகை.  (Primal Scream)  இது இன்னொரு தொல்படிமம்.  இவ்வாறு தொல்படிமங்கள் பிறந்து விரிந்து ஒரு பெரிய வலைபோலப் பரவியுள்ளன.  வேதகால வாழ்க்கைத் தரிசனங்களை இந்தத் தொல்படிமங்களினூடாகவே நாம் அறியமுடியும்.  (இங்கு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு.  தொல்படிமங்கள் கவித்துவக் கற்பனைகள்.  கவிதையென அவற்றை வாசிக்கும்போதுதான் அவற்றின் வாசல்கள் திறக்கின்றன.  அவை கவிதையாகவே எழுதப்பட்டன.  எழுதியவன் அல்லது பாடியவன் தன்னைக் கவிஞன் என்றே கூறிக்கொள்கிறான்.  அவை கவித்துவத் தளத்திலேயே இதுவரை அறியப்பட்டும் வந்தன.  தகவல்ரீதியான ஆய்ந்தறிதலுக்கும் இதற்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு என்பதைக் கூற வேண்டியதில்லை.  கண்டிப்பாக இந்தத் தொல்படிமங்களுக்கு அக்கால வாழ்வியலுடனும் வழிபாட்டு முறைகளுடனும் தொடர்பு உண்டு. தகவலாய்வுமுறை நம்மை அதுவரை மட்டுமே கொண்டு சேர்க்கும்.)

இந்திய இலக்கிய மரபின் தொல்படிமங்களைத் தொகுத்து அடையாளப்படுத்த முயன்றால் அதுவே ஒரு பெரும்நூலாக அமையும்.  அத்தொல்படிமங்கள் எவ்வாறு ஓர் அக அறிதலின் மையத்திலிருந்து பிரிந்து பரவி உருவாகின்றன என்பதை மட்டுமே இங்கு சுட்ட விரும்புகிறேன்.  இவ்வியக்க முறையைப் புரிந்துகொள்ளாமல் சி.ஜி.யுங் போன்ற ஜெர்மானிய உளவியல் அறிஞர்கள் ‘பிரக்ஞா பாரமிதா போன்ற சில நூல்களை மேலோட்டமாகப் பயின்றுவிட்டு சில அவசர முடிவுகளுக்கு வருகிறார்கள்.  பெளதிகமான புறவயமான விஷயங்களை அகவயமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலினூடாக தொல் படிமங்கள் உருவாகின்றன என்பது அவரது புரிதல்.  அன்னை, மறுபிறப்பு, மந்திரவாதி, தந்திரசாலி என்ற நான்கு தொல்படிமங்கள் உலகளாவியவை என்பது அவர் கணிப்பு.  தொல் படிமங்கள் என்ற கருதுகோளுக்கு கீழை மரபின் அடையாளங்களை ஏற்றியே முன்வைத்தார்.  அவர் பார்வையில் முதல் தொல்படிமம் தந்தைதான்.  கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைத்தளமான யூத மதத்தில் பிரபஞ்ச உருவகம் ஒரு குடும்பம் போல,  அவனுடைய குடும்பம் தந்தைவழி மரபு கொண்டது.  எனவேதான் அவனது முழுமுதல் கடவுள் பிதாவாக இருக்கிறார்.  அவருடன் இணையும் எதிர்சக்திதான் அன்னை.  அன்னையே பிதாவை ஒப்புநோக்க உலகளாவிய தொல்படிமம் என்று யுங் ஒப்புக் கொள்கிறார்.  படைப்பு முடிவற்ற விசித்திரங்களினாலானது.  அதை விளக்கவே மந்திரம் அல்லது மாயாவி.  அடுத்து சரிதவறுகள் உருவாகி படிப்படியாக தவறு கவர்ச்சிமிக்கதாக ஆனபோது தவறுநோக்கி இட்டுச் செல்லும் தந்திரக்காரன் தோன்றினான்.  பிந்தைய இருவரும் இணைந்து சாத்தான் உருவெடுத்தான்.  இந்த எளிய யூத தரிசனத்தை தன் நூலில் யுங் சாமர்த்தியமான வாதங்களால் மானுடக் கூட்டு ஆழ்மனத்தின் அடிப்படைகளை உருவாக்கும் ஆதாரமான நான்கு தொல்படிமங்களாக நிறுவுகிறார்.

பிரபஞ்ச உற்பத்தி பற்றிய இந்தியப் புரிதலை வேத உபநிடதங்களின் தொல்படிமங்களினூடாக புரிந்து கொள்ள முயலலாம்.  ஒன்றுண்டு; ஒவ்வொரு உபநிடதமும் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு தரிசனத்தையே முன்வைக்கின்றன.  இவையனைத்திற்கும் இடையே ஒரு பொதுப் புரிதலை நாம் உருவகித்தால்தான் தொல்படிமங்களை அர்த்தப்படுத்திக்கொள்ள – ஒரு பொது தொல்படிமத்தை உருவாக்கி எடுக்க முடியும் என்றால், அது ‘ஆதிசிருஷ்டி முட்டையிலிருந்து உருவாயிற்று’ என்ற தொல்படிமம்தான்.  ஐதரேய உபநிடதத்தில் நான்கு தொல்படிமங்கள் உள்ளன.  தலைக்கு மேல் சூட்சும வடிவில் உள்ள நீரான ‘அம்பஸ்’.  அடியில் தூல வடிவில் உள்ள நீரான ‘அப்’.  அம்பஸில் ஒளி உருவாக்கும் தற்காலிகமான வண்ண உலகம் ‘மரீசி’.  அப்பில் ஒளியின் விளைவாக உருவாவது ‘மரம்’ (அதாவது உடனடியான பொருளில் நீரில் ஒளியின் விளைவாக உருவாகும் தாவரங்களைக் குறிக்கும் இச்சொல் விரிவான தொல்படிமமாக இயற்கையையே சுட்டி நிற்கிறது).  அடுத்து அழிவாகவும் மாற்றமாகவும் ஒரே சமயம் பொருள்படும் மரணத்தின் குறியீடாக ‘அப்’பை உருவகித்துக் கொண்டார்கள்.  இந்த நான்கு அம்சங்களையும் தன்னுள் கொண்ட ஒன்றாக உயிரண்டத்தை உருவகித்தார்கள்.  அந்த உயிரண்டத்தின் அறிவுச் செயற்புலன்கள் (ஞானகர்ம இந்திரியங்கள்) மேற்குறிப்பிட்ட நான்கு அடிப்படை சிறப்பம்சங்களுடனும் தொடர்புகொண்டு உருவாகி வருபவை.  அந்த அண்டத்தின் முட்டையின் மேற்பகுதி உடைந்து கண்ணாகிறது.  அக்கண்னில் இருந்து ஆதித்யன் பிறக்கிறான்.  புராதன மக்களின் நகைப்பிற்கிடமான மூடநம்பிக்கை என்று இதை உடனடியாக சிலர் கூறிவிடக்கூடும்.  ஆனால் இதை ஒரு கவித்துவப் படிமமாகக் கொண்டால் இதன் தரிசனம் அனுபவமாகும்.  வானில் உள்ள சூரியன் நமக்குக் கண்திறந்த பிறகே இருப்பு ஆகிறான்.  அவன் ஒளி நம் கண்ணில் புகுந்து காட்சிகள் பிறக்கின்றன.  ஒவ்வொரு புலன்கருவியும் இவ்வாறு நம்மிலிருந்தே தொடங்குகிறது.  அந்தக் கருமுட்டையிலிருந்து இவ்வாறு ஐந்து அறிபுலன்களும் ஐந்து செயற்புலன்களும் உருவாகி வருவதை ஐதரேய உபநிடதம் உருவகமாகக் காட்டுகிறது.  (அகத்தில் தொடங்கி புறத்திற்கு விரிந்து மீண்டும் அகம் நோக்கிக் குவியும் தொடர் செயல்பாடாகவே அனைத்து அறிதல்களையும் இந்திய மரபு காண்கிறது)  இத்தனை கவித்துவ விரிவும் ஆழமும் கொண்ட தொல்படிமத்தை உலக இலக்கியத்தில் மிக அபூர்வமாகவே காண முடியும்.  பழைய ஏற்பாடு பைபிளில் வரும் எசக்கீயல் தீர்க்கதரிசியின் தொல்படிம தரிசனத்தையே இதற்கிணையானதாகக் காணமுடியும்.

உலக இலக்கிய மரபில் ‘உளவியல் மாதிரிகள்’ (psychological types) பலவற்றை நாம் காணலாம்.  கிரேக்கத் துன்பியல் நாடகங்களில்தான் இவற்றுக்கான முக்கியமான முன்மாதிரிகள் உள்ளன.  பிறகு மேற்கத்தியப் பெருங்காவியங்களினூடாகவும் ஷேக்ஸ்பியரினூடாகவும் இவை விரிந்து வலுப்பட்டு நவீன இலக்கியத்தை அடைந்தன.  மேற்கத்திய நவீனப் புனைகதைகளின் கணிசமான கதாபாத்திரங்களை நாம் இந்த உளவியல் மாதிரிகளுடன் சாதாரணமாக ஒப்பிட்டு அறிய முடிகிறது.  (ஓர் உரையாடலில் காம்யூவின் ‘அன்னிய’னுக்கு ‘ஹாம்லட்டு’டனான தொடர்பு குறித்து குரு பேசியது இங்கு உதாரணமாகக் கருதப்படத்தக்கது – மொழிபெயர்ப்பாளர்)  சி.ஜி.யுங் உளவியல் மாதிரிகளைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதியவை இலக்கிய விமரிசனம் மீது பெரும் செல்வாக்கு செலுத்தின.  அதைப்போல மனிதனை எல்லாக் காலத்திலும் தொடரும் முக்கியமான படிமங்களைக் குறித்து மனிதனும் அவன் படிமங்களும் (Man and His Symbols) என்ற நூலில் யுங் ஆராய்வதும் கவனத்திற்குரியது.

இவ்வடிப்படைகளைச் சார்ந்து நமது பேரிலக்கியங்களை அணுகும்போது பற்பல சாத்தியக்கூறுகளை நாம் காண நேர்கிறது.  பெண்களில் எட்டு மாதிரிகளை ராமாயணம் காட்டுகிறது.  தேவி, மனிதப் பெண், அசுரப்பெண், மிருகங்களிலுள்ள பெண் என்று முதலில் நான்கு பெரும் பிரிவுகள்.  குணரீதியான இப்பிரிவினைகளை ஒன்றோடொன்று கலந்து எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்க முடியும்.  தேவியாகிய அன்னை, அசுரப் பெண்ணாகிய அன்னை என்று பலவிதமாகக் கூறலாம்.  இவற்றுக்குப் பலவகையிலும் உதாரணமாகும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் புராணங்களில் உள்ளன.  விரிவான ஆய்வுக்குரிய ஒரு தளம் இது.  இத்தகைய குணசித்திர மாதிரிகளுக்கு நவீனப் புனைகதைகளுடனான தொடர்பு இலக்கிய விமரிசனத்தில் பல புதிய பாதைகளைத் திறக்கும் விதத்தில் ஆராயப்பட வேண்டியதாகும்.

வால்மீகி சீதையை எந்தத் தருணத்திலும் தன் தெய்வீக இயல்பை இழக்காதவளாகத்தான் எப்போதும் காட்டுகிறார்.  ராமாயண கதாபாத்திரங்களில் கணிசமானவை துல்லியமான மாதிரி குணசித்திரங்கள்.  மாறாக மகாபாரதத்தில் குணசித்திரங்கள் தங்கள் நிலைபெயர்வு மூலமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.  (குணசித்திர மயக்கம்)  இதன்மூலம்  மனித குணத்தில் எத்தனை சாத்தியங்கள் உண்டோ எத்தனை பேதங்கள் உண்டோ கிட்டத்தட்ட அனைத்தையும் நாம் மகாபாரதக் கதைகளினூடாகக் காண முடிகிறது.  இத்தனை மகத்தான பேரிலக்கியம் இன்றும் இந்திய வாசக மனதுக்கு, நாய் பெற்ற தெங்கம்பழமாகவே உள்ளது.  சனாதனமாகிய அனைத்து தர்மங்களும் பேசப்படும் இக்கதையிலிருந்து ‘சனாதனதர்மம்’ என்ற பெயரை மட்டும் உருவியெடுக்கும் முயற்சிகளே நடக்கின்றன.  இலக்கிய விமரிசகனுக்கு பெரும் சவாலாக அமையும் படைப்பு இது.  இன்றைய அறிதல்களின் உபகரணங்களுடன் நாம் இதை அணுகினோம் என்றால் அறிவின் பெருவெள்ளமே உருவாகக் கூடும்.

தூலங்களில் மட்டும் ஈடுபட்டு ஆழ்ந்த அனுபவங்களை மறந்துபோன ஒரு தலைமுறையினர் நாம்.  துரியத்தின் தளத்தை நமது படைப்புலகில் நாம் அடைய முடியாது போகலாம்; காரணத்தின் தளத்தை தொடமுடியாது போகலாம்; குறைந்தபட்சம் பிரபஞ்ச சாரத்தின் ஒளி பரவிய கனவின் தளத்தையாவது தொட்டறிய முயல்வோம்.

(குரு நித்ய சைதன்ய யதியின் ‘கலாசாகித்ய சபர்ய’ என்ற மலையாள நூலில் உள்ள ஒன்பதாம் அத்தியாயத்தின் தமிழாக்கம்)

(இக்கட்டுரையைப் பொறுத்தவரை ‘ஆழ்படிமங்கள்’ என்ற சொல் மேலும் துல்லியமான பொருள் தரக்கூடும்)

மொழியாக்கம்: ஜெயமோகன்