Tag Archives: மொழி

மொழியும் பிரபஞ்சமும் – 2

Standard

வேதத்தினூடாக அடையும் நன்மைகள் உலகியல் சார்ந்தவை.  அவற்றை சம்சாரம் என்று கூறுகிறோம்.  இவை சார்பு நிலையானவை.  இவற்றையெல்லாம் வார்த்தைகளினூடாக மானுடன் அறிகிறான்.  ஆனால் வார்த்தையில் அடங்கியுள்ள வேறு ஒரு ரகசியம் உண்டு.  அதை நாதம் எனலாம்.  மூதாதையர் சொல்லை இணைத்து செய்யுள் உருவாக்கினர்.  வேத மந்திரங்கள் நான்கு வரிகளினாலானவை.  அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் அவை நான்கு நான்கு எழுத்துக்களாகும்.  அதை ‘அனுஷ்டுப்பு சந்தம்’ என்பர்.  சொல் இவ்வாறு பற்பல சந்தங்களில் நிறுவப்பட்டுள்ளது.  சந்தமொன்றில் நிறுவப்படாத சொல் இல்லை.  இந்த ஒலியொழுங்கு மூலமே சொல் முழுமையடைய முடியும்.  சொல்லுக்கு அது பரவச நிலையை (sublime) அளிக்கிறது.  அதனூடாகவே நாம் மொழியின் உச்சங்களை அடைய முடியும்.

உலகியலின் மூலம் உருவாகும் சிறப்பம்சங்கள் ஏதுமில்லாத மெய்மையின் சாரத்தில் நம் பிரக்ஞை திரும்பிச் சென்று அங்கு தங்கி நிற்பதை பிரக்ஞையின் முழுமை எனலாம்.  அப்போது வேறுபாடுகளின் மூலம் கற்பிதம் செய்யப்பட்டுள்ள இவ்வுலகிலிருந்து மீண்டு ஒருமையின் உலகினை அடைகிறோம்.  அவ்வாறு அடைபவனை யோகாரூடன் என்று தியான மரபு குறிப்பிடுகிறது (புத்தர் அமர்ந்திருக்கும் தோற்றமே யோகாரூடம்.  அது யோகாரூட புத்தன்) அந்நிலையில் முக்குண விளையாட்டு அவனைத் தொடுவதில்லை.  எனவே எதற்கும் சிறப்பியல்புகள் இல்லை.  எனவே அவனுக்கு வெளியுலகாக விரிந்துள்ள பிரம்மாண்டம் இல்லை.  (அதாவது பாஸம், பாஸ்யம் என்ற இருவகை மயக்கங்களும் இல்லை.  பாஸம் புற உலகத்தோற்றம்.  பாஸ்யம் அகத்தில் அதன் பிரதிபலிப்பு – மொழிபெயர்ப்பாளர்)  அதை கேவலம் (முதல் நிலை எளிமை) என்று குறிப்பிடுகிறோம்.  அந்நிலையே கைவல்யம்.

இந்த உயிரே

பிராமணஸ்பதியும் ஆகிறது

சொல்லே பிரம்மம்

அதற்கு இவன் அதிபன்

எனவே இவன்

பிராமணஸ்பதியும் ஆகிறான்

நாம் ஒன்றை அறிய மூன்றுவிதமான திண்ணங்கள் தேவை என்று மேற்கு மரபு வகுக்கிறது.  அறிபடு பொருள் அல்லது ஆய்படு பொருள் முதல் திண்ணம்.  இதை அறிவுக் கூறு (Epistime) என்றும் இதை வகுத்துக் கொள்வதை அறிவுக்கூறியல் (Epistomology) என்றும் கூறுகிறார்கள்.  அவ்வறிதலினூடாக நாம் அடைவது என்ன, அது எதற்குப் பயன்படும் என்பது சார மதிப்பீடு (axiom) எனப்படும்.  அந்த ஆய்வுமுறை மதிப்பீட்டியல் அல்லது சாராம்சவியல் (axiology).  படிப்படியாகத் தொகுத்தும் பகுத்தும் தியானித்தும் அறியும் முறைமை (metodology) மூன்றாவது திண்ணம்.  இவ்வுபநிடத வரிகளில் சொல்லும் பிரபஞ்சமும் ஆய்படு பொருளாகவும் அவற்றின் உறவை அறிவதனூடாக நாம் அறியும் ஒருமைநிலை சாரமதிப்பீடாகவும் இருக்கிறது.  படிப்படியாக ஆய்வுமுறை விரிவடைந்து செல்கிறது.

சொல் ஒரு வாகனம்.  அது ஒலியலையில் நகரும்.  ஒலியலை வாயுவில் நகர்வது.  வாயுவே உயிர்களில் பிராணன்.  நாம் கேட்பது உயிரின் அலைகளை.  உயிரின் சலனமே சொற்களாக காற்றில் நகர்கிறது.  எல்லா அனுபவங்களிலும் சம்பந்தப்பட்ட புலன்கள் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதைக் காணலாம்.  உயிர் புலன்களை ஆள்கிறது.  புலன்களினூடாக அது தன்னை வெளியில் சாத்தியப்படுத்திக் கொள்கிறது.  ஒரு காக்கை நம்முன் வந்தமர்ந்து ‘கா’ எனும்போது காதால் கேட்டு கண்ணால் கண்டு அதை அறிகிறோம்.  மனதில் அதன் படிமம் ஒன்று எஞ்சுகிறது.  அது காகமெனும் புலனறிதலின் தொகுப்பாகும்.  காகம் பறந்துபோன பிற்பாடு மனதில் அந்த பிம்பம் எஞ்சுகிறது.  அந்த பிம்பத்திற்குத்தான் நாம் ஒலியடையாளம் தருகிறோம்.  அந்தப் பெயர் பிறகு காகத்தின் பதிலியாகிறது.  அப்பெயரே காகமெனும் அனுபவத்தைத் தரமுடியும்.  இவ்வாறு உள்ளூர ஒரு பிரதியுலகம் உருவாகிறது.  அகப்படிமங்களினாலான இவ்வுலகம் மரபில் ‘பிரதிபா’ எனப்படுகிறது.  அது பொருண்மையற்றது.  ஆனால் பொருளின் அனுபவத்தைத் தருகிறது.  உடலால் நாமறியும் அனுபவம் பிரத்யம்.  அவ்வனுபவத்தை நாம் அறியும் முன்பே அறியப்பட்டு பிரதிபாவில் தொகுக்கப்பட்டுள்ள முன்னறிதல் தேவையாகிறது.  (இதை பெளத்த மரபிலிருந்து வேதாந்த மரபு பெற்றுக் கொண்டது.  அறிதல் என்பது பிரத்யம்.  முன்னறிதல் சமாந்தர பூர்வ பிரத்யம்.  முன்னறிதல் இன்றி அறிதல் சாத்தியமல்ல – மொழிபெயர்ப்பாளர்)  இவ்வாறு நிகழும் அறிதலெனும் நிகழ்வை நாம் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

நாமறியும் பொருளுக்குரிய விசேஷத் தன்மையை (அல்லது சிறப்பியல்புகளை) மட்டுமே சார்ந்து பிரதிபா உருவாகிறது.  அதாவது அறிதல் என்பதே சாராம்சப்படுத்தி அறிதல்தான்.  சொற்களினூடாக நாம் உண்மையில் குறிப்பிடுவது பிரதிபாவையே (உதாரணமாக பசு என நாம் குறிப்பிடுவது அம்மிருகத்தையல்ல.  அதை உணர்வு ரீதியாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் நாம் சாராம்சப்படுத்தி வைத்திருக்கும் உள்ளறிவையேயாகும்.  பசு என்ற அந்தரங்கப் படிமம் குறிப்பிடப்படுகிறது.  பசு என்ற கலாசாரப் படிமம் தொடர்புறுத்தப்படுகிறது என்று நவீன குறியியல் கூறும் பசுவின் பல்லாயிரம் இயல்புகள் வெளியே உள்ளன – மொழிபெயர்ப்பாளர்) இந்த சாராம்சம் தனித்துத் தன்னை அறிய வைத்துக் கொள்ள் இயலாது.  எனவே இணையான பிற சாராம்சங்களுடன் அதைத் தொடர்புபடுத்துகிறோம்.  ஓடும் நீரில் ஆணியடிக்க முடியுமா?  இன்னொரு திரவத்தையே கலக்க முடியும்.  அதாவது பொதுத்தன்மை உடைய பிற அறிதல்களுடன் இணைத்துதான் ஒரு தனியறிதலை நாம் புரிந்து கொள்ளவும் புரியவைக்கவும் முடியும்.  இவ்வாறு பிரதிபா இயங்குவதில் ஒரு நியதி உள்ளது.  அதுவே மொழியின் நியதி ஆகிறது.  (ஒவ்வொரு சொல்லும் பிற சொற்கள் அனைத்தாலும்தான் அர்த்தப்படுத்தப்படுகிறது என நவீன மொழியியல் குறிப்பிடுகிறது – மொழிபெயர்ப்பாளர்)

மொழி பலவகைப்பட்டது.  நாவால் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல; குறியீடுகளினால் கூறப்படுவதும் மொழியே.  ஓவியம் நடனம் குறிகள் முதலியவையும் மொழிகளே.  நடராஜ நடனத்தில் சிவன் தன் உடலையே மொழியாக்கி நிற்கிறான்.  108 தாண்டவ முறைகள் உள்ளன என்பது சாஸ்திரம்.  மொழியின் பரிமாணங்களைக் கூறி முடிக்க முடியாது.  மொழியினூடாக இயங்கும் நாதம் இன்னொரு மொழி.  ஒரே சமயத்தில் பல்வேறு மொழியமைப்புகள் சேர்ந்து இயங்குகின்றன.  இவற்றின் இசைவைத் தீர்மானிப்பது எது?  அதை ஸ்தாபிக்கும் ஞானம் என ஒன்றை உருவகித்து அதற்கு ‘பிராமணஸ்பதி’ என்று உபநிடதம் பெயரிடுகிறது.  உயிர்கள் பிறப்பதற்கு முன்பு கருவறையில் இருந்தபடியே தன் உடலை இயற்கையிலிருந்து உருவாக்கியெடுத்துக் கொள்கின்றன.  அதுபோல நாம் கூறும் சொற்கள் ஒலி வடிவமோ வரி வடிவமோ பெற்று வெளி வருவதற்கு முன்னரே உள்ளூர கரு வடிவில் உள்ளன.  வெளிமொழியை உருவாக்கும் விளைநிலமாக இந்த கருப்பரப்பு நம்முன் உள்ளது.  சொல் வெளியே இருக்கிறது.  குறிப்பு உள்ளே உள்ளது.  இவையிரண்டும் இணையும் தருணத்தில் அடையாளமாக்குகையில் எழுத்துகள் உருவாகின்றன.  அதைப் பேசலாம் – உள்ளூர வைத்திருந்து அதனூடாக பிரக்ஞையை பிரவாகமெடுக்கச் செய்யலாம்.  வெளிவரும் ஒலியை நியதிகளில் நிறுத்தவும், உச்சப்படுத்திக் காட்டவும், மெளனப்படுத்திக் காட்டவும் தேவை எழுகிறது.  அதற்கு இலக்கணமும் ஒலியிலக்கணமும் தேவையாகிறது (வியாகரணம், சந்தஸ் சாஸ்திரம்).

ஒருவர் தன்னைப் பிறருக்கு உணர்த்தும் மொழியானது தருணம் சார்ந்தும் பொதுச் சூழல் சார்ந்தும் தர்க்கத் தன்மை (logical relevancy) உடையதாக உள்ளது.  இந்தத் தர்க்கத்தை உதறிவிட்டு மனம் காரிய காரண உறவுடன் ஒரு கருத்திலிருந்து அடுத்ததற்கு நகர்ந்து ஓர் இலக்கு நோக்கிச் செல்வது சிந்தனை.  மொழியின் புறவய இயக்கத்திலிருந்து விலகி அடுத்த தளத்திற்கு நகர்ந்து சொற்களின் குறிப்புத் தளங்களை அறிய முயல்வது மனனம்.  மனனத்தின் இறுதியில் அறிபவனுக்கும் அறிபடு பொருளுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமலிருக்கிறது.  லயம் கைகூடுகிறது.  இதுவே தியானம்.  தியானம் என்பது ஒரு பயிற்சி அல்ல  மாறாக பயிற்சிகளின் இறுதியில் கைகூடும் முழுமை நிலையாகும்.

இந்த பிராணனே ஸாமம்

ஸா என்பது சொல்

ஆமம் மூச்சு

ஸா என்பதும் ஆமம் என்பதும்

இணைந்ததே ஸாமம்

எதனால் இது

கரையானுக்கு சமானமாகவும்

கொசுவுக்கு சமானமாகவும்

யானைக்கு சமானமாகவும்

மூவுலகுக்கு சமானமாகவும்

இவையனைத்துடனும் இணைந்தும்

உள்ளதோ அதுவே சாமத்துவம்

யார் இவ்வாறு

இதை அறிகிறானோ

அவனே சாமத்தின் முழுமையையும்

சாமத்தின் தனியுலகையும்

அடைகிறான்

பிராணனே சாமம் என்கிறது உபநிடதம்.  பிராணனும் சொல்லும் இரண்டறக் கலந்து உருவாகும் தருணமே சாமம்.  அது மூவுலகங்களுக்கும் அதில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் சமமானது.  சமம் என்பதால் அது சாமம்.  இந்த சமானத்தன்மையை உணர்பவரே சாமத்தை அறிகிறார்.

அக வார்த்தையை புறவார்த்தையாக ஆக்குவது.  பிராணனை ஆணாகவும் கூறுவதுண்டு.  அவர்கள் இணையும்போது பிறப்பதே மொழி.  பிராணன் வார்த்தையின் கருவில் விழுந்து முளைத்தெழுகிறது.  அந்தக் கூடலில் பிரிவினையுணர்வுக்கு இடமில்லை.  சாமம் என்னும் இது பிரபஞ்சத்திற்கு சமமானது.  அதில் உள்ள ஓர் அணுவிற்கும் சமமானது.  இந்த பேதமின்மையையே ரிஷிகள் ஆதிமகஸ் என்றார்கள் (அறிவும் அறியும் பொருளும் அறிபவனும் ஓர் ஆதிமகஸ் மட்டுமே – நாராயண குரு – ஆத்மோபதேச சதகம்)  இந்த ஒருமையில் உள்ள எந்த ஒரு துளியை எடுத்துக்கொண்டாலும் அது முடிவற்ற ஆனந்தத்தைத் தன்னுள் கொண்ட ஒரு முழுமையாகும்.  அதற்கு முடிவற்ற தனித்தன்மைகள் உண்டு.  அவற்றைப் பிரித்தறிந்து வியந்து துதிக்கும்போது பிரக்ஞை ரிக் ஆகும்.  அவற்றுடன் பரிபூரண சமானத் தன்மையை உணர்கையில் அப்பிரக்ஞை சாமம் ஆகிறது.  ரிக்கும் சாமமும் ஒன்றையொன்று பூரணப்படுத்துகின்றன.  இது எவ்வாறு மொழியும் அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பிரம்மாண்ட பதியாகிறது என்பதை விளக்குகிறது.

மொழியும் பிரபஞ்சமும் – 1

Standard

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும்.

பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி உருவானான். (உடல் வடிவான மானுடம்)  அந்த பிரஜாபதி பிறகு பிராணஸ்பதியானான் (உயிர் வடிவான மானுடம்).  பிராணஸ்பதி பிறகு பிராமணஸ்பதி – பிரபஞ்சத்தின் மகத்தான ஒருமையை உணர்ந்து சாமத்திற்குரியவன் – ஆனான்.  சம பாவனையே சாமம்.  பிரகதாரண்யக உபநிடதத்தில் ஒன்றாம் அத்தியாயத்தில் மூன்றாம் பிராம்மணத்தில் இருபத்துமூன்று வரையிலான நான்கு மந்திரங்களில் இந்தப் பரிணாமத்தின் சித்திரம் உள்ளது.

இதுவே பிரஹஸ்பதி

சொல்லே பிரம்மாண்டம்

அதற்கு இதுவே அதிபதி

எனவே இது பிரஹஸ்பதி

மானுடத்திற்குள் பிராணன் இயங்குகிறது.  பிராணன் என்றால் உயிர் மூச்சு.  அந்த பிராணனே பிரம்மாண்டத்திற்கு அதிபன்.  அந்த பிராணனே சொல்லாகவும் ஆகிறது.  எனவே சொல்லே பிரம்மாண்டத்தை ஆளும் பிருஹஸ்பதியாகும் (பிருஹத் என்றால் பிரம்மாண்டம்.  பதி என்றால் அதிபன்).

பிறப்பெடுப்பதை ‘பிரஜனம் செய்தல்’ என்று கூறுவோம்.  பிறப்பவன் பிரஜை.  ஆணின் விந்து முதல் பெண்ணின் கருவறை வரை விந்துவில் உள்ள உயிர்த்துளி நகர்ந்தாக வேண்டும்.  அதற்கு வழிகாட்டிகள் இல்லை.  துணை இல்லை.  தடைகள் உண்டு.  அவற்றைத் தாண்டி அது தன் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கண்டடைய வேண்டும்.  வாழ்க்கை பூரணமான தனிமையில் தொடங்குகிறது, முடிகிறது.  பிறந்தெழும் உயிரில் அதன் சிருஷ்டிகர்த்தனும் உள்ளடங்கியுள்ளான்.  அவனே பிரபஞ்சத்தின் பருப்பொருட்களிலிருந்து தன் சுய இச்சையினால் தன்னை பிறக்கச் செய்தான் என்கிறது உபநிடதம்.

பிரபஞ்சத்தில் நிரம்பியுள்ள உயிர் நிகழ்வில் மூன்று அம்சங்கள் உள்ளன.  ஒன்று, படைப்பாக்கம்.  இரண்டு, அதனூடாக தன்னைப் படைத்துக்கொள்ளும் பிரஜாபதி.  மூன்று, படைப்புக்கும் பிறகு உருவாகும் அனைத்து உயிர்ச்சிக்கலுக்கும் அடிப்படையாக அமையும் சிருஷ்டியின் விளையாட்டு (லீலை).  பிரஜாபதி தன் உள்ளார்ந்த இச்சையால் பிறந்தவன்.  ஆனால் மாறாதவன் அல்ல.  முடிவடையாதிருக்க வேண்டுமெனில் அவன் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கவும் வேண்டும்.  மரணமும் பிறப்புமாக ஒரு தொடரை அவன் உருவாக்க வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் பிரஜாபதியில் மாறாதிருப்பது பிராணன்.  அதை அங்கிரீசன் என்று உபநிடதம் குறிப்பிடுகிறது.  உடல் எனும் விளக்கிலெரியும் சுடர் அன்னத்தை (பருப்பொருளை) ஆக்கி உண்டு அவன் வாழ்கிறான்.  அவனே பிராணஸ்பதி.

இவ்வாறு பூமியில் நிரம்பியுள்ள பிராணஸ்பதி தன்னையும் உணர்வது எண்ணங்களின் மூலமே.  எண்ணங்களுக்கு சொற்கள் தேவை.  இவ்வாறு மொழி உருவாயிற்று.  பிராணஸ்பதிக்கு காரணமாகிய சாரமே சொல்லுக்கும் மூலம்.  எனவே சொல்லை பிரஹஸ்பதி என்று கூறலாம்.  பிரக்ஞையின் செயல்பாட்டில் ஆகச் சிறிய அலகு ‘வேறுபடுத்தியறிதல்’ ஆகும்.  இதை துண்டுபடுத்தியறிதல் (De-limitation) என்று மேற்கு குறிப்பிடும்.  வேறுபடுத்தியறிந்ததை அடையாளப்படுத்துதல் அடுத்த கட்டம்.  ‘இது இன்னது – ஆனால் இன்னதல்ல’ என்று பிரக்ஞை பிரபஞ்சத்தை அறிந்து அளக்கத் தொடங்குகிறது.  ஐம்புலன்களும் மனமும் உயிரும் இணைந்த ஓர் ஆளுமையாக தன்னை உணரும்போது பிரஜாபதி தன்னைச் சுற்றி வடிவங்களைக் காண்கிறது.  உடல்கள், பிற பருவடிவங்கள், தோற்றங்கள் என பலவகை வடிவங்கள்.  ஒவ்வொரு வடிவத்திற்கும் அது ஓர் ஒலியடையாளத்தை அளிக்கிறது.  அது நாமம் (அல்லது பெயர்).  ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விசேஷம் (அல்லது சிறப்பியல்பு) உள்ளது.  அவ்வியல்பு நேர்நிலையானதோ எதிர்மறையானதோ ஆகலாம்.  ஆகவே பெயர்களுக்கிடையில் சிறப்புக் குறிப்பும், வேறுபடுத்தும் குறிப்பும் தேவை.  இரண்டு பெயர்கள் எதிர்எதிராக நிற்கையில் தன்னிலையும் படர்க்கையும் உருவாகிறது.  இப்பெயர்களிலிருந்து செயல்கள் தனித்தறியப்படுகின்றன.  செல்களையும் இருப்புகளையும் இணைக்கும் பொருட்டு இணைப்புச் சொற்களும் வினைச்சொற்களும் பிறக்கின்றன.  இவ்வாறு பற்பல கூறுகளுடன் மொழி விரிந்து வருகிறது.  மொழியை அனைவருக்கும் பொதுவாக ஆக்கும்பொருட்டு இலக்கணம் உருவாகிறது.

குழந்தை மொழியினூடாக உலகை அடையாளப்படுத்துகிறது.  மொழியினூடாக வியவகார (புழக்க) உலகிற்குள் வருகிறது.  இந்தப் பரிணாமத்தின் விளைவாக அதன் சித்தம் மூன்று தளங்கள் உடையதாக ஆகிறது.  அவை ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ் மனநிலை).  விழியும் மனமும் திறந்திருக்கும் நிலையே விழிப்பு நிலை.  இதை ‘அ’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தலாம்.  கனவு நிலையில் தூல உலகம் சூட்சுமம் ஆகிவிடுகிறது.  அதற்கு ‘உ’ என்ற சொல்லை குறிப்பிடலாம்.  ஆழ்மனநிலையில் நாமறிந்தவையெல்லாமே உட்சுருங்கி எங்கோ மறைகின்றன.  அவை தங்கள் விதை வடிவுக்குத் திரும்புகின்றன.  மெளன வடிவமான ‘ம்’ எனும் அரைச் சொல் இதைக் குறிக்கும்.  இந்நிலையில் உலகம் அதன் காரண நிலையில் உள்ளது.  அந்தக் காரணம் தன்னுள் முடிவற்ற சாத்தியங்களை உள்ளடக்கியுள்ளது.  அதில் ஒரேயொரு சாத்தியமே நாமறியும் தூலப் பிரபஞ்சமாக ஆகியுள்ளது.  நமது மன இயக்கம் முதலிரு தளங்களில் மாறிமாறி அலைவதாக உள்ளது.  மூன்றாவது தளம் மெளனமாக கூடவே உள்ளது.  இதையே ‘ஓம்’காரம் சுட்டுகிறது – விரிவாக இதை மறுபடியும் பேசலாம்.

இவ்வாறு பிரக்ஞை இயங்குவதற்கு பருவடிவ சக்தியும், ரசாயன சக்தியும், உயிர்சக்தியும் இணையவேண்டியுள்ளது.  அந்த இணைவு ஐந்து பருக்களும் உருமாற்றம் கொள்வதனூடாக நிகழ்கிறது. இவ்வகை மாற்றம் மூன்று குணங்களின் இணைவு விகிதங்களில் ஏற்படும் பற்பல சாத்தியங்களினூடாக நிகழ்கிறது.  அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.  (அமைதி நிலை, செயலூக்கநிலை, எதிர்இயக்க நிலை) இந்த மூன்று குணங்களின் அமைதியின்மையிலிருந்து அறிவின் தன்மைகளும் மாறிமாறி ஏற்படுகின்றன.

ஒருவனை நாம் அறிஞனாகவும் திடமானவனாகவும் உத்தரவிடும் வல்லமை கொண்டவனாகவும் அறியும்போது அவன்மீது மதிப்பு ஏற்பட்டு தலைவனாக ஆக்குகிறோம்.  அவனை துதிக்கவும் வழிபடவும் முற்படுகிறோம்.  அவ்வாறு வணக்கத்திற்கும் வியப்பிற்கும் உரிய மகிமைகளை மனம் திறந்து துதிப்பதே ரிக் வேதம்.  தன்னிடமிருக்கும் எளிய உடைமைகளை அம்மகிமைகளுக்கு முன் பூர்ண சமர்ப்பணம் செய்யவும் வணங்குபவன் முற்படுகிறான்.  எப்படி அந்த சமர்ப்பணத்தைச் செய்வது என்று விளக்குவதே யஜுர்வேதம்.  வணங்குபவனும் வணங்கப்படுபவனும் மகிழ்ந்து சமானமாக உணர்ந்து சேர்ந்திசைக்கும் ஆனந்த கீதமே சாம வேதம்.  அது ஒருமையின் லயத்தின் வேதமாகும்.

மூன்று வேதங்களினூடாக நாம் அடைபவை உலகியல் ரீதியான நன்மைகளும் ஆன்மீக ரீதியான சிறப்புகளும் மட்டுமேயாகும்.  இவற்றை சிரேயஸ், பிரேயஸ் என்று கூறுகிறார்கள். (செல்வமும் புகழும்)  இவையிரண்டுமே அழியக்கூடியவை.  மாறாததும் அழியாததுமான நன்மையானது ஞானத்தினூடாக இவ்விரு நாட்டங்களையும் ஒருவன் கடந்து செல்வதேயாகும்.  இதை நிஸ்ரேயஸ் (துறவு நிலை) என்கிறது உபநிடத மரபு.  அதை அளிக்கும் ஞானமே வேதாந்தம்.  அது வேதத்தின் இறுதியுண்மை.  அதைக் கூறுபவை உபநிடதங்கள்.  வேதாந்தம் வார்த்தையின் முடிவு.  எங்கு வார்த்தையும் பிரக்ஞையும் எதையும் கூறமுடியாது திரும்பி விடுகின்றனவோ அதற்கு அப்பால் வேதாந்த அனுபவம்.

நேர்காணல் – 3

Standard

1.1.1996

யதி தன் அறைக்கு எங்களை வரச் சொன்னார்.  சிறிய அறை.  அதன் ஒருபக்கச் சுவர் விரிந்த மலைச்சரிவைப் பார்க்கத் திறக்கக்கூடியது  இரண்டு கணினிகள்.  விசாலமான பெரிய மேஜை.  அதன்மீது எழுதுபொருட்கள்.  கலையழகுமிக்க சீசாக்கள்.  அறையின் இரு சுவர்களிலும் நூல்களின் அடுக்குகள்.  சுவர்களில் நடராஜ குரு, ரமணர், நித்யானந்தர் முதலியவர்களின் உருவப்படங்கள்.  தாகூரின் புகைப்படம்.

கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு என்ன?  கவிதை மொழியின் ஒரு விளைவு மட்டும்தானா?

கனவுக்கு மொழி இல்லையே.  கனவில் கவிதையில்லையா?  அதன் image கவிதையன்றி வேறென்ன?

ஆனால் மொழியை மீறிய தளம் கவிதைக்கு இல்லை என்று கூறப்படுகிறதே?

நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு.  அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும்.  அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது.  அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது.  பாறை விரிசலிடுகிறது.  உடைந்து சிறு ஓடையாக வழிகிறது.  அது பெரிய நீரோடையாகலாம்.  அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது.  ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது.  அது கங்கையாகலாம்.  மந்தாகினியாக நடைபோடலாம்.  ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான்.  காதுகளை உடைக்கும் பேரோசை.  பிறகு ரிஷிகேசம்.  நீர் மலினமடைகிறது.  காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன.  கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும்.  மறுகரை தெரியாது.  அதன்மீது கப்பல்கள் நகரும்.  கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது.  ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும்.  ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும்.  பனிப்பாறையின் அதே அமைதி.

நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது.  தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும்.  பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை.  அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும்.  மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல.  ஒரு பெரும் பொதுமை அது.  காலாதீதமானது.  நவீன உளவியல்கூட யுங்கிற்குப் பிறகு அதை உணர்ந்துள்ளது.

கவிதை என்பது ஒருவகை அடையாளம் மட்டுமே என்று கூறலாமா?

நிர்ணயிக்க முயலாதீர்கள்.  கேனோபநிடதம் ஆதி முழுமையின் ஒலிவெளிப்பாடாக ‘ஹ’ என்ற ஒலியைக் குறிப்பிடுகிறது.  அடிவயிற்றிலிருந்து எழும் வியப்பின் ஒலி அது.  அது மனிதனைப் பொறுத்தவரை ஈடிணையற்ற பெருவியப்பு மட்டுமே.  ‘அல்லா’ என்பதும் அதே போல ஒரு வியப்பொலி மட்டுமே.  அத்தகையதோர் வியப்பே கவிதையும்.  பனிப் படிவிற்குள் ஒரு காலடிச் சுவடைக் கண்டதும் டிபூசிக்குள் பேரானந்தம் நிறைந்தது.  அது அவர் காதலியின் காலடிச்சுவடு.  மெளனம் நிரம்பிய பனிவெளியில், வெறுமையின் பயங்கர அழகு நிரம்பிய தனிமையில், கால இடம் எனும் திரைவிலக்கி அவள் அவருக்குக் காட்சி தந்தாள்.  நினைவு எனும் வரத்திலிருந்து எழுந்து இறந்தகாலப் பேரழகை நித்திய நிகழில் நிறுத்தும் பெரும்படைப்பு டிபூசியின் ‘பனிப் படிவில் காலடித்தடம்’ எனும் செரனேட்.  குமார சம்பவத்தில் காளிதாசனும் பாதத்தடம் பற்றிச் சொல்கிறான்.  சிம்மபாதத் தடம் அது.  யானை மத்தகம் பிளந்து, உதிர மதுவருந்தி, தள்ளாடி நடந்து சென்ற மிருக ராஜனின் பாதத்தடம்.  சிதறிய உதிர மணிகள்.  கலைஞனும் கவிஞனும் நமக்குத் தருவது பாதத் தடங்கள் மட்டுமே.  காதலன் அல்லாத ஒருவனுக்கு அப்பாதத் தடம் ஏதும் அளிப்பதில்லை.  வேட்டைக்காரனுக்கும் கவிஞனுக்கும் சிம்மத்தடம் தருவது வேறு வேறு அர்த்தங்களை.