மரணத்தைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் ‘கதா உபநிஷத்’. அந்த அற்புதக் கதையில் ஒரு சிறுவன் மரணத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறான். ஒரு புறம், இடைவிடாத ஆக்கம், வாழ்க்கையின் இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியான அச்சிறுவன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கண்ணுறுகிறான். திடீரென்று இந்தப் புலன் சார்ந்த விளையாட்டு சுவாரஸ்யமற்று இருப்பதாக அவன் கருதுகிறான். இதற்கு மாறாக அவன் புலன்களைக் கடந்த நிலையைப் பற்றி சிந்திக்கிறான். எனவே, வாழ்வும் மரணமும் ஒரு பக்கம், கடந்த நிலைக்கான சாத்தியம் இன்னொரு பக்கம். கடந்த நிலை பற்றிய விஞ்ஞானம் (மோட்ச வித்யா) உபநிஷத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ‘மோட்சம்’ என்பதற்கு வாழ்க்கை, மரணம் என்ற இரட்டை நிலையிலிருந்து ‘விடுதலை’ என்று பொருள். நீங்கள் பெளதீக இறப்பைப் பெறமாட்டீர்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. சரியாகச் சொன்னால், நீங்கள் உடல் ரீதியாக இறக்கிறீர்களா, இலலையா என்பதே ஒரு பொருட்டாக இருக்காது. மரணம் பற்றிய பயமும், அது தரும் துன்பமும் மறைந்துவிடும். இந்த நிலையை நீங்கள் அடையும்போது நீங்கள் உயிருடன் இருக்கும்போதேகூட, நீங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதைப் போலத்தான்.
வாழ்க்கையையும், மரணத்தையும் கடந்துவிட்ட ஒருவருக்கு, வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நபர் விரும்பும் உடல் ரீதியான வாழ்க்கை, சக்தி, பெளதீக அமைப்பு முறைகள் மற்றும் நுட்பத்திறமைகள் ஆகியவற்றால் எந்தப் பயனும் இல்லை. இருந்தாலும் அவற்றைக் குழந்தைகள் விளையாடுவதைப்போல ஒருவர் பயன்படுத்த விரும்புகிறார். வாழ்க்கை ஒரு லீலையாக, அதாவது தெய்வீக விளையாட்டாக மாறுகிறது. அங்கு உலகத்தைப் படைத்தவர் யாராக இருந்தாலும் அவரோடு இந்த மகத்தான லீலையைப் பங்கிட்டுக் கொள்கிறார். மணல் வீடுகள் கட்டி அவற்றை அழித்து மீண்டும் கட்டும் ஒரு குழந்தையின் மனநிலைக்கு ஒப்பான மனநிலையை உடையவரே இந்த உலகைப் படைத்தவரும். வாழ்க்கையையும், மரணத்தையும் கடந்தவரும் ஒரு குழந்தையைப் போல ஆகிறார். ‘நீங்கள் ஒரு குழந்தையைப் போல ஆகாவிடில் தேவனின் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது’ என்று ஏசு சொன்னது இந்த அர்த்தத்திலாகத்தான் இருக்கும்.
இந்தக் கருத்தே உங்களுக்கு விடுதலையை அளிக்கும். நான் ஆல்வாய் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது, என்னுடைய தர்க்கவியல் பேராசிரியர் ஒருநாள் “என்னிடம் ஒரு பெரிய ரகசியம் உள்ளது. இன்று என்னுடன் பகலுணவு சாப்பிட வருகிறாயா?” என்று கேட்டார். நான் போய் அவருடன் பகலுணவு சாப்பிட்டேன்; பிறகு அவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டு சொன்னார், “இந்த உலகம் ஒரு லீலை, ஒரு விளையாட்டு என்று இந்துக்கள் சொல்வதுதான் இந்த உலகத்திலேயே மிக அற்புதமான விஷயம்.”
எல்லாமே நாம் விளையாடும் ஒரு விளையாட்டின் பகுதிதான் என்று ஒத்துக்கொள்வதே, ‘கடந்த நிலை’ என்பதன் அர்த்தம். அது உங்களுக்குத் தெரிந்து விட்டால், வாழ்க்கையையும் மரணத்தையும் வெல்வதற்கு கடந்த நிலை உதவி புரிவது மட்டுமன்றி, எல்லா மக்களுடனான எல்லா உறவுகளையும் தாண்டிப் போகவும் அது உதவும். உடனடியாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கிறீர்கள். யாரோ ஒருவர் ஒழுக்கக் கேடானவர் என்று தோன்றுகிறது. யார் கவலைப்படப் போகிறார்கள்? நீங்கள் ஒழுக்கமுள்ளவராக இருந்தாலும் சரி, ஒழுக்கக் கேடானவராக இருந்தாலும் சரி, இது ஒரு விளையாட்டுதான். விளையாட்டு தொடர்ந்து நடைபெறுகிறது. நீங்கள் விரக்தி அடைவதில்லை. துயரம் இங்கே இருக்கிறது; என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள் சிலர், “இன்னார் ஒரு நயவஞ்சகச் செயலைச் செய்கிறார்; என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள். ஆனால், நீங்கள் விடுதலை அடைந்தவராக இருந்தால் இது ஒரு விளையாட்டு என்பதை ஏற்றுகொண்டவராக இருந்தால், வெறுமனே ‘ம்’ என்று சொல்வீர்கள்.
இது ஒரு விளையாட்டு என்று நான் சொல்லும்போது, அமெரிக்காவில் விளையாட்டுகள் விளையாடப்படும் அர்த்தத்தில் சொல்வதில்லை. அமெரிக்காவில் விளையாட்டுகளைக்கூட மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு சிறு குழந்தையோடு ஒருவர் விளையாடும் விளையாட்டை நான் சொல்கிறேன். சில சமயங்களில் ஒரு பெண் குழந்தையோடு நான் சீட்டு விளையாடி இருக்கிறேன்; அவளுக்கான சட்டங்கள் அவளுக்கு, எனக்கான சட்டங்கள் எனக்கு. அவள் சொன்னாள், “நீங்கள் அதை இழந்துவிட்டீர்கள்.” அதை எடுத்துக்கொண்டு “மீண்டும் போடுங்கள்” என்றாள். நான் போட்டேன். “அது உங்களுக்கு” என்றாள். அது எப்படி என்னுடையது ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. அவள் சொன்னாள், “நான் ஜெயித்து விட்டேன்.” நீங்கள் மரணத்தைக் கடந்திருந்தால்தான், இப்படி ஒரு மனப்பான்மை வாழ்க்கையில் சாத்தியம். என்னுடைய விளையாட்டுத் தோழிக்கு மரணமும் தெரியாது, வாழ்க்கையும் தெரியாது. இரண்டையும் கடக்கும் அப்பாவித்தனம் அவளிடம் உள்ளது. “இந்த உலகின் எல்லா முட்டாள்தனமான அறிவுக்கும் நீங்கள் பரிச்சயப்பட்ட பிறகுதான், மீண்டும் நீங்கள் மறுபக்கத்தின் விளையாட்டுக்கு வந்து மீண்டும் ஒரு குழந்தையாக ஆக முடியும்.”
மரணத்தை முழுமையாக அறிந்து அதனுடன் தோழமை கொள்வதுதான் இந்த உலகத்திலேயே மிக இனிமையான அற்புதமான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. அது நம்முடன் எப்போதும் இருக்கிறது. அதனுடன் இணக்கத்துக்கு வந்து அதைக் கடந்து சொல்லும் ரகசியத்தையும் அறிய வேண்டும். அதற்கு பயப்படுவதன் மூலம் நாம் அதைக் கடக்க முடியாது. மாறாக அது ஒரு நகைச்சுவை என்பதை அறிவதன் மூலம்தான் அதைக் கடக்க முடியும். மரணம் மக்களுக்கு ஒரு நகைச்சுவை போலத்தான் வருகிறது. பல மண்டை ஓடுகளையும், இன்ன பிறவும் போட்டு, மரணம் குறித்து பல பீதியூட்டும் மிகையான படங்களை வரைந்துள்ள கிறிஸ்தவர்கள் மீது எனக்கு நிறைய கோபம் உண்டு. மண்டை ஓட்டை தூக்கி எறிந்த பிறகுதான் நீங்கள் இறந்துபோனவர்கள் ஆகிறீர்கள். அதன்பிறகு, நீங்கள் எப்படி ஒரு மண்டை ஓடாக இருக்க முடியும்? மரணத்தில், மண்டை ஓடு கிடையவே கிடையாது. கண்கள் இல்லாத, பற்கள் தெரியும் மண்டை ஓட்டை ‘மரணம்’ என்று காட்டும் படம் தவறான எண்ணத்தை உண்டாக்குகிறது. மரணத்துக்குப் பற்கள் கிடையாது. “நான் மரணத்தைப் பார்த்திருக்கிறேன், அதற்குப் பற்கள் கிடையாது. அது மிக அழகானது. அது மல்லிகையின் நறுமணம்” என்று கூட நீங்கள் சொல்லலாம்.
மரணத்தின் இனிமையான, நறுமணத்தை, மரணத்தின் அழகான பாடலை, மரணத்தின் ஆன்மீகக் குரலை குறிப்பிட்டுப் பேசுவது இயல்பாகத் தெரியும் அளவுக்கு, மரணம் பற்றிய கருத்தை நாம் திருத்தி அமைக்க வேண்டும். அதை நீங்கள் ஆன்மீகமயமாக்கிவிட்டால் அது பற்றிய நோயுற்ற, கீழ்த்தரமான படிமம் மறைந்துவிடும்; அதன் தனிச்சிறப்பு நறுமணமாகப் பரவும். மரணம் இங்கு ஒரு சம்பவம் அல்ல. நாம் மெதுவாகக் கலந்து, மறைந்து, ஒன்றாக ஐக்கியமாகிவிடும் ஒரு பெரும் பரப்பு அது. அந்தக் கருத்தே நமக்கு ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது. இந்தப் பெரும்பரப்பில் ஐக்கியமாவதும், இந்தக் கரைதலும்தான் உங்களுக்கு விளையும் வெகுமதியும், பயனும். கண்ணுக்குப் புலப்படாத ஒளிபோல நீங்கள் மாறுகிறீர்கள். எல்லா ஒளிகளுக்குமான ஒளி.
அறியப்படாததிலிருந்து
உதயசூரியன்போல
வாழ்க்கை வருகிறது.
பகலின் பன்னிரண்டு மணி நேரத்தின்
எல்லா வண்ணங்களையும் அது கொண்டுள்ளது.
மரணம் நம்மிடம் வருவதில்லை
நாம்தான் அதனுடன் கலக்கிறோம்.
ஆன்மாவின் அழிவுறாத் தோட்டத்தின்
மிக அண்மைத் தோட்டப்பகுதிக்கு
அது ஒரு சிறிய வீடு திரும்பல்.
(தமிழில் : ஆர்.சிவகுமார்)
-‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து