Tag Archives: புத்தர்

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9

Standard

பூத்துக்குலுங்கும் கொடியொன்று 

ருபுறமும்  படர்ந்துயர்ந்துமேவும் 

தருவினடியில்  தவத்திலமர்ந்தோனை

நரகம்  அண்டாது – எண்ணுவாய்!

                                                              (ஆத்மோபதேச சதகம் – பாடல்  9)

இதற்கு முந்தைய பாடலிலும் மரம் பற்றிய குறிப்பு வந்தது.  அதில் ஐவகை பழங்கள் இருந்தன. ஐம்புலன்களைக் குறிக்கும் ஐந்து பறவைகள் அதைச் சுற்றிப் பறந்து கனிகளை அருந்தி மகிழ்ந்திருந்தன. அம்மரத்தைச் சார்ந்த வேடனொருவனின் கொடும்செயலால் பறவைகள் அடித்து வீழ்த்தப்பட்டன. ‘பறவைகளின் கிடைமட்ட விழைவுகளை செங்குத்தாக்குவதற்கான’ ஒரு மாற்றத்தை இது குறிக்கிறது.

இங்கே அதே சித்தரிப்பு அமைதியான, சிந்தையிலாழ்த்தும் விதத்தில் தரப்படுகிறது.  ஒட்டுமொத்த வாழ்வெனும் நிகழ்வு மீண்டும் மரத்தால் உருவகப்படுத்தப்படுகிறது.  விழிப்பு, கனவு, ஆழ்உறக்கம், கடந்தநிலை எனும் நான்கு நனவுநிலைகளை நாமறிவோம்.  விழிப்பும் கனவும் கிடைமட்டமாக பார்க்கப்படும்போது, ஆழ் உறக்கத்திலிருந்து கடந்தநிலைக்குச் செல்வதை செங்குத்தாகக் காண்கிறோம்.  ஆழ் உறக்கத்தில் நாம் எதையும் அறிவதில்லை; கடந்தநிலையோ நம் கவனத்திற்குள் வருவதேயில்லை.  விழிப்புநிலைக்கும் கனவுக்கும்  இடையே நிகழும் மாற்றங்களே எஞ்சுகின்றன.

ஆக, நம் அன்றாட வாழ்க்கை எனும் வெளி விழிப்பிலும் கனவிலும் வரும் அனுபவங்களால் நிறைந்திருக்கிறது.  புறப்பொருள்களின் பயன்மதிப்பை நம் அகத்தோடு பொருத்திப்பார்த்துக் கொள்ளாதவரை நம் விழிப்புநிலை அனுபவங்கள் பொருளற்றவையாகவே இருக்கக்கூடும். கதிரவன் எழுவதைப்பார்த்து “ஆஹா” என வியக்கிறீர்கள்.  கதிரவன் வெளியில் இருக்கும்போது வியப்பு அகத்தே நிகழ்கிறது.  பேரழகின் மீதான நம் விருப்பு நம்மில் பதியப்பட்டுள்ளது.  அழகிய பொருளெதுவும் நம் கவனத்திற்கு வராதபோதுகூட அழகுபாராட்டும் இயல்பு நம்மில் உறைகிறது. விழிப்பு நிலையில் நிகழும் எதுவும் அதற்கிணையான ஒரு வேட்கையை, ஆர்வத்தை, தரிசனத்தை ஆழ்நனவில் கொண்டிருக்கிறது.  அனுபவத்தை சாத்தியமாக்கும் இக்காரணியே சுஷுப்தி அல்லது சுப்தம் எனப்படுகிறது.

சுப்தம் என்பது நனவிலிநிலை என்றாலும் அது ஒருபோதும் வெற்றிடம் அல்ல.  விதைகள் கொண்ட காய் போல அதில் பல விதைகள் பதிக்கப்பட்டுள்ளன.  அவை மணங்கள் (வாசனா) என அழைக்கப்படுகின்றன. அவற்றில் சில சுழற்சியாய் நிகழ்பவை.  அல்லியில் சில வகைகள் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே மலர்வது போல.  அதன் கிழங்கை எப்போது வேண்டுமானாலும் தோட்டத்தில் புதைத்துவைக்கலாம். ஆனால் உரிய பருவம் வரும்வரை அது செயலற்று இருந்து பின் பூக்கத்தொடங்கும். ஆனால் வேறு சில வகைகள் எப்போதும் பூப்பவை.  பருவம் சார்ந்ததோ சாராததோ, நம் அனுபவங்கள் என்னும் எல்லா விதைகளும் நம் நனவிலி என்னும் தோட்டத்தில் புதைந்து கிடக்கின்றன.

அடுத்ததாக கனவு நிலையை பார்ப்போம்.  நாம் கனவில் காணும் படிமங்கள் எங்கிருந்து வருகின்றன? தொன்மத்தை உருவாக்க விழையும் நம் அகம் ஒரு தேவதைக் கதையின் மொழியை உருவாக்கக்கூடிய குறியீடுகளைக் கண்டறியும் திறன் கொண்டது.  விழிப்பு நிலையின் வேட்கைகள் உறையும் அதே இடத்தில்தான் இதுவும் புதைந்திருக்கிறது.  விழிப்பு நிலை வாழ்வும் கனவும் நிகழ்வதற்குத் தேவையானவற்றை இதுவே தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது. விழிப்பும் கனவும், மெய்யான அனுபவமாகவோ அது சாத்தியமாகாதபோது கனவனுபவமாகவோ நிகழ்த்தப்படுவதெற்கென காத்துநிற்கும் விதைகள் உறையும் ஆழ்நனவிலியுடன் காரணத்தொடர்புடையவை. ஃபிராய்ட் முதலானோர் கனவென்பது முடிவுறா விழிப்புநிலை அனுபவம், அவா-நிறைவு, வருவதுரைத்தல், முன்னெச்சரிக்கை என்றெல்லாம் கூறுவர்.

இவையெல்லாவற்றிலும் ஒரு ரகசியம் உண்டு. இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன?  நனவின் தனித்தன்மையில் இவை எல்லாம் நிகழ்கின்றன.  தனித்த நனவு தனிப்படுத்தப்படா நனவிலிருந்து வருகிறது.  தனிப்படுத்தப்படா நனவென்பது காலமற்றது; அகத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டின் பகுதியாக வருவதே காலமென்பது.  மனிதமனம் தொடர் உசாவல் (மனஸ்) மூலமாக மட்டுமே இயங்கக்கூடியது.  ‘மனஸை’ தொடர்பவை ‘சித்தம்’ (நினைவுடனான தொடர்பு), ‘புத்தி’ (கருத்து முடிவு), ‘அகங்காரம்’ (மதிப்பீட்டின் அடிப்படையிலான உணர்ச்சி மறிவினை) ஆகியவை.  இவையெல்லாம் சேர்ந்தது அகச்செயல்பாட்டின் ஒரு அலகாகிறது.  இதைத் தொடர்ந்து உடனடியாக அடுத்த அலகு வருகிறது.  இரு அலகுகளை நம்மால் ஒரே சமயத்தில் கையாளமுடியாது. ஒன்றிலிருந்துதான் மற்றொன்றிற்கு செல்லமுடியும்.  இதனால் மனம் ஒரு தொடராகிறது. இதனால் காலஅளவு என்னும் கருத்துருவாக்கம் நிகழ்கிறது.  அடிப்படையில் நேரம் என்பது நனவு மனத்தின் நகர்வை அவதானிப்பதற்கான ஒரு வழி.  நாம் உருவாக்கி வைத்திருக்கும் கடிகாரங்கள், நிழற்கடிகைகள் எல்லாம் கருவிகள்தானே ஒழிய நேரமல்ல.  ஒருவகையான நினைவுமுடிச்சு அல்லது மனிதமனத்தால் மட்டுமே புனையப்படும் ஒரு துணைக்கருவியே நேரம் என்பது.

பொருட்களை ஏதோவொரு பின்னணியில் பொருத்திப்பார்க்கும் இயல்பு மனதிற்கு தேவைப்படுகிறது.  நமக்கெதிரே மூன்று பொருட்கள் இருக்குமென்றால், ஒரு குறிப்பிட்ட முறையில் வைக்கப்பட்டால்தான் அவை தனித்தனியானவை என்பது நமக்குப் புலனாகிறது. கூட்டமைவு என்பது அகத்தின் மற்றுமொரு செயல்பாடு.  ஒரு ஓவியன் அசையாப் பொருட்களை வரைவதற்கு அவற்றை ஒரு ஒழுங்கில் அமைப்பது போன்றது அது.  அவன் பூச்சாடியையும், பூக்களையும் மேசைமீது பிறபொருட்களுடன் ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக்கொள்கிறான்.  அவை ஒரு குவியலாக இருந்தால் பொருட்களின் உருவரைகளை பிரித்துக்காண்பது எளிதாக இருக்காது.  எனவே ஒவ்வொன்றையும் இடம்சார்ந்து பிரித்துவைக்கவேண்டியிருக்கிறது.  ஒரு காட்டையோ அழகிய நிலக்காட்சியையோ வரைய எண்ணும்போதும் – இயற்கையே அக்காட்சியை ஒழுங்கமைத்திருக்கும் என்றாலும் – அவன் சில தெரிவுளை மேற்கொள்ள வேண்டும். குறுஞ்செடிகளையும் மரங்களையும் தவிர்த்து ஒரே ஒரு பெரிய மரத்தையும், பின்னர் வேறு இரு மரங்களையும், ஒரு அடிக்கட்டையையும், ஏரியையும், மலையின் ஒரு பகுதியையும் அவன் தேர்ந்தெடுக்கலாம்.  பல கூறுகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு சிலவற்றை தவிர்த்து தன் உணர்திறனுக்கேற்றவாறு அவன் அதை வடிவமைக்கிறான்.  இதைப்போலவே மனமும் தன் வசதிக்கேற்ப தன் புரிதலுக்கொப்ப தன்னுடைய இடம்சார்-உணர்வுசார் கூட்டமைவுகளை கட்டமைத்துக்கொள்கிறது.

இது பல மனங்களின் தொகுதிக்குள்ளும் நிகழ்கிறது.  பலமனங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான நிகழ்வாகவே உலகம் இருக்கிறது.  இவ்வுலகம் என்னும் மரத்தையே நாம் தேர்கிறோம்.  அதன் முன் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து தற்சார்புடையதும் அற்றதுமான இரு கொடிகளையும் வளர்ச்சிப்பாதையில் மரத்தைச் சுற்றி வளரவிடுகிறோம்.

ஆறு நிலைகளைப்பற்றிய குறிப்புடன் குரு பாடலை தொடங்குகிறார்.  அவை – பிறப்பிற்கு முந்தைய நிலை, பிறப்பு, வளர்ச்சி, மாற்றம் அல்லது பரிணாம வளர்ச்சி, சிதைவு, இறுதி அழிவு. ஒவ்வொன்றும் அழிவற்ற நிலையில் இருந்து வெளிவருகிறது.  தனித்ததாய் பிறக்கிறது; வளர்ந்து, மாறி, மூப்படைந்து இறுதியில் இறந்து காணாமல் மறைகிறது.  இது விழிப்புநிலையில் நிகழும் அனைத்திற்கும் பொருந்தும்.  கனவுகளுக்கும் இது பொருந்தும்.  கனவு தோன்றுவதற்கு முன் அதன் கூறுகளும் அதற்கான காரணமும் விதைநிலையில் இன்றியமையாதனவாக புதைந்திருக்கின்றன.  அவ்விதை கனவாக வெளிப்படும்போது பொருளார்ந்த பேரெழில் வடிவங்களாய் முளைவிடுகிறது.  சிறிதுநேரத்தில், இன்னொரு விதை வெளிப்படத் துடிக்கையில் முந்தையதன் மீதான ஆர்வம் குறைந்து அது காணாமலாகிறது.

நம் விழிப்புநிலையில், சாத்தியமான பல தேவைகளில் ஒரு குறிப்பிட்ட தேவை மட்டும் மேலெழுகிறது.  அது ஒரு மெய்மையை, குறிப்பிட்ட வடிவத்தை கொள்கிறது.  அந்நிலையில் அத்தேவை உறுதிபெற்று தவிர்க்கமுடியாததாகி நம்மை செயலாற்றத் தூண்டுகிறது. இறுதியில் அது நிறைவேறுகிறது. அல்லாது தன் முக்கியத்துவத்தை இழந்து மெதுவாய் கரைந்துபோய் இல்லாமலாகிறது.

இப்பாடலில் ஒரு கொடி விழிப்புநிலை-கனவுநிலை அனுபவங்களாய் இரண்டாகக் கிளைவிட்டு மலர்கிறது.  ஆழ்உறக்க நிலை என்பது பெரும் சாத்தியங்கள் கொண்ட விளைநிலமாய் நம்முள் மறைந்துள்ளது. அது ஒரு நனவிலிப் பொருண்மை.  பண்டோராவின் பெட்டி(Pandora’s Box) போல அதிலுறையும் நல்லவை அல்லவை நமக்குத் தெரிவதில்லை.  வாழ்வு செயல்படத் துவங்கிய உடனேயே கொடி விதையைவிட்டு வெளியே வருகிறது. இங்கிருக்கும் தேவாவைப் போன்ற ஒரு குழந்தை ‘இன்னும் எனக்கான நேரம் வரவில்லை.  பலதும் அதிலேயே புதைந்திருக்கட்டும். ஒவ்வொரு நாளும் சிறிதுசிறிதாக நான் வெளிப்படுத்துவேன்’ என்கிறாள்.  இரண்டு நிமிடத்துக்கு ஒரு புன்சிரிப்பை அவள் நிரலமைக்கிறாள்.   ஒரு பெரும் கூப்பாடு; மீண்டும் புன்னகை.  பின் பதினைந்து நிமிடங்களுக்கு கூச்சல்கள், பலவகையான உணர்ச்சிகளுடன் திரும்ப உறக்கம். அடுத்த வருடமோ அவள் யார் மடியிலும் அமரப்போவதில்லை.  எல்லோரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு ஆராய்ந்துகொண்டிருப்பாள்.

அகத்தை அறியும் செயலில் கடந்தநிலையை அடைவதற்கே நாம் எப்போதும் முயல்கிறோம். கடந்தநிலை அல்லது நோக்கிநிற்றல் இங்கே மரத்திலிருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது.  அதனை, நிகழ்தல் என்னும் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் ஒரு யோகியாக உருவகிக்கிறார் குரு.  அவரைச் சுற்றி பலதும் நிகழ்கின்றன.  இவையெல்லாம் நிகழ்வதை அவர் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். அவர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர் போல் வெறுமனே அமர்ந்திருக்கிறார்.  ஆனால் அவர் ஒரு பொறுப்பற்ற பயணி போல அங்கே அமர்ந்திருக்கவில்லை.  ஏனெனில் கொடிகள் எல்லா திசைகளிலும் வளர்ந்து அனைத்தையும் மூடிக்கொண்டேயிருக்கின்றன.  விலகலுடன் இருக்கும் அவர் அவரைச் சுற்றி நிகழ்வனவற்றை நன்றாகவே உணர்கிறார்.  எதனுடனும் தன்னை பிணைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்.  அங்கமர்ந்திருக்கும்போது நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால், சரியான முறையில் அமராவிட்டால் நீங்களும் மாட்டிக்கொள்வதோடு அவற்றால் மூடப்படுவீர்கள்.  ஆனாலும் அதிலிருந்து நீங்கள் தப்பித்து ஓடுவதில்லை. அதனடியிலேயே அமர்ந்து தவம் செய்கிறீர்கள்.

தவம் என்பது என்ன?  பகவத் கீதையில் தவத்திற்கு உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.  எனது இக்கையால் பெரும் அழிவுகளை ஏற்படுத்தமுடியும்.  அதைக்கொண்டு பயனுள்ளவற்றை உருவாக்கமுடியும்.  பிறருக்கு உதவமுடியும்.  எனது செயல்களெல்லாம் எதிர்மறையானவற்றை தவிர்க்கும்போது, எனது இயல்கைகள் உலக நலனுக்கென செயல்படும்போது, வாழ்வின் நித்தியமான விழுமியங்களை உயர்த்த பயன்படும்போது அது ஒரு தவமாகிறது; உடலின் தவ ஒழுக்கமாகிறது.

அதேபோல எனது நாவினைக்கொண்டு பல பொய்களை உருவாக்கலாம்; மனிதமனங்களை திரிபடையச் செய்யலாம்; இன்னல்தரும் சூழல்களை உருவாக்கலாம்; பிறருக்கு துன்பம் விளைவிக்கலாம்; இருவரிடையே சண்டை மூளச் செய்யலாம்; குழுக்களிடையே பூசலை உண்டாக்கலாம்.  தெருக்களின் கல்வியாளனாகலாம்; பேரியக்கங்களை தோற்றுவிக்கலாம், புரட்சிகளையும் ரத்தப்பெருக்கையும் ஏற்படுத்தலாம், இரு நாடுகள் தம்மிடையே போரிடச் செய்யலாம், உலகப்போரை துவக்கலாம்.

பலர் பலியான மகாபாரதப் பெரும்போர் ஒரு தனி மனிதனால் தொடங்கப்பட்டது.  யுதிஷ்டிரன். அவன் சூதாட்டத்திற்கு அறைகூவி அழைக்கப்பட்டான்.  ‘நான் சூதாடப்போவதில்லை’ என்ற சரியான நிலைப்பாட்டை அவன் மேற்கொண்டிருக்கலாம்.  ஆனால் அவன் ‘சரி’ என்றான்.  அச்சிறு துவக்கத்தில் போர் தொடங்கியது.  ஒரு பெண் சூதாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டாள்.  தன் கொழுநன் அர்ஜுனனிடம் ‘என்னைப் பழித்தவனின் குருதியை நீ அள்ளிப் பூசும்வரை என் கூந்தல் முடியேன்’ என்றாள்.  அவன் அவளுக்கு சொல்லளித்தான்.   அச்சொல்லுக்காக அந்தப் பெரும்போர் நடந்தது.

ராமாயணம் இதே போன்றது.  ஒரு பொன்மானை ராமனிடம் வேண்டினாள் சீதை.  அவளைப் பாதுகாத்து நின்றிருந்த இலக்குவனை அவள் அவமதித்து துரத்தினாள்.  ராவணன் வந்து அவளை கடத்திச் சென்றான்.  பெருங்காவியம் நிகழ்ந்தது.

சொற்கள் ஏற்படுத்திய பிழைபுரிதல்களுக்கும் பெரும் சோகங்களுக்கும் இவை எடுத்துக்காட்டுகள். மறுபுறம் ஞானத்தின் கடவுளாய் சோஃபியாவும் சொல்லின் செல்வியாய் வாக்தேவி என்னும் சரஸ்வதியும் உண்டு.  அவர்கள் துணையுடன் சொற்கள் பயன்படுத்தப்படுவது எப்போதாவதுதான் நிகழ்கிறது.  ஆதரவாக, தூண்டலாக, நற்கருத்தை விளக்க, அழகான ஒன்றைக் கொணர, நட்பார்ந்த உறுதிமொழிக்கு, துணிவுகொள்ளும்படி ஊக்குவிப்பதற்கு என பலவகையில் சொல் பயன்படுகிறது. இவற்றிற்கென மட்டும் சொற்களை பயன்படுத்தி பிறபொழுதுகளில் மௌனமாய் இருப்பதன்மூலம் நாம் நம் நாவினைக்கொண்டு நம் சொல்லால் தவம் செய்பவர்களாகிறோம்.

வாழ்வின் கிடைநிலைகளிலிருந்து விலகி, உயர் மீயுண்மையை அவதானிக்கவும் அதன் அழகை உணரவும் செய்யும்போது நம் மனம் கொண்டு நாம் தவம் புரிகிறோம்.  மரத்தடியில் அமைதியாய் அமர்ந்திருக்கும் யோகி தன் பொழுதை வீணடிக்கவில்லை.  கவலையற்றவராய் தோற்றமளித்தாலும் அவர் எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் நல்லன விழைகிறார். இயல்பூக்கத்துடன் இருக்கிறார்.  அன்பும் கருணையும் நிறைந்தவர் அவர்.  கொடியால் பிணைக்கப்படாமலிருந்தால் – தன்னை விலக்கிகொண்டார் என்றால் மட்டுமே அவரால் பிறரை உய்விக்க முடியும்.

மூழ்கிக்கொண்டிருக்கும் மூவரை காப்பாற்ற விழையும் நாலாமவன் நீந்தி அம்மூவர் நடுவே சென்றானானால் மூவரும் அவனைப் பிடித்திழுக்க நால்வரும் மூழ்கவேண்டியதுதான்.  எனவே, அவன் அறிவுபூர்வமாக சிந்தித்து, முதலில் ஒருவனை கரைசேர்த்து அடுத்தவனை காப்பதற்குச் செல்லவேண்டும்.  மூவரையும் அவனால் காப்பாற்ற முடியும் என்பது உறுதியில்லை என்றாலும் அவர்களோடு சேர்ந்து அவனும் மூழ்க நேராது.

கருணை என்ற பேரில் நீங்கள் ஒரு வலையில் போய் சிக்கிவிடக்கூடாது.  உங்களை நீங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும்.  நீங்கள் உயிரையும் துறக்க சித்தமாயிருக்கும் ஒரு காரணம் பற்றி மார்டின் லூதர் கிங் பேசினார்.  நாம் அதை உயிர்வாழ்வதற்கான காரணமாக மாற்ற விரும்புகிறோம். இறப்பது என்பது போற்றத்தக்க விழுமியமன்று.  வாழ்வதே – இப்போது மட்டுமல்ல; என்றென்றுக்குமாய் வாழ்வதே – பெரும் விழுமியம்.

கனவு காணும்போது நீங்கள் கனவுகாண்கிறீர்கள் என்பதை உணர்ந்தே இருக்கும் கணங்களை கவனித்திருக்கிறீர்களா? ஆனால் அந்த உணர்வு கனவு நிகழ்வதை தடுப்பதில்லை.  கனவு முடியும் வரை,  நீங்கள் காண்பது கனவு என்று நீங்கள் உணர்ந்தாலும், அதிலிருந்து நீங்கள் வெளியே வர முடியாது. கனவு கவர்ச்சிகரமானதாய் இருக்கலாம்; அல்லது இயல்புக்கு மாறானதாய் இருக்கலாம்.  அதில் எதுவும் நிகழலாம்.  ஆனால் அது நம்மை அயரச் செய்வதில்லை.  ஏனெனில், நாம் விழித்ததும் அது மறைந்துவிடும் என நாமறிந்திருக்கிறோம்.  நம் விழிப்புநிலை வாழ்வும் இதேபோலிருக்கும்.  பலவும் முக்கியம் வாய்ந்தவையாய் தோன்றும்.  ஆனால் மற்றொரு நனவு ‘இதுதான் உலகம், இதுவும் கடந்துபோகும், நம்மால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை’ என்று சொல்லும்.

நனவு என்னும் கூறு மரத்தினடியில் அமர்ந்திருக்கும் மனிதனாக உருவகிக்கப்பட்டுள்ளது.  நாமே மரம், பிறிதொன்றில்லை.  இம்மரத்தில் காலமும் இடமும் ஒருபுறம் நம் விழிப்புநிலை அனுபவத்தாலும் மற்றொருபுறம் கனவுகளாலும் நிரப்பப்படுகின்றன. இரண்டுமே நம் ஆழ் நனவிலியிலிருந்தே தோன்றுகின்றன.  இது நிகழும்போதே, நனவின் அவதானிக்கும் கூறு அதிலிருந்து பிரிக்கப்பட்டு அதே மரத்தினடியில் சிந்தையில் ஆழ்த்தப்பட்டு வாழ்வின் பல நிகழ்வுகளையும் அவதானிக்கும்படி செய்யப்படுகிறது.

இதுவே இப்பாடலின் படிமம்.  உங்கள் அகத்தில் விழிப்புநிலை வாழ்வாய் கணம்தோறும் மலரும் கொடியை கவனியுங்கள்.  மற்றொரு திசையில் மலரும் உங்கள் பகற்கனவுக் கூறை நோக்குங்கள். உங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் இவற்றின் வேர்களை, விதைகளை கவனியுங்கள். இவ்விரு செயல்பாடுகளிலும் எத்துணையளவு நீங்கள் பங்கெடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் ஈடுபாடு அளவுக்கதிகமானால் அது உங்களை துன்புறுத்தும்.  அத்துன்பமே இங்கே நரகம் எனப்படுகிறது.

இப்போது அகம்நோக்கித் திரும்பி நனவிலியின் மௌனமான ஆழத்தை கவனியுங்கள்.  நம்மால் துளைக்கமுடியாத அந்த ஆழத்திலிருந்து, எண்ணங்கள் எப்படி எழுகின்றன, கருத்துகள் எப்படி உளக்காட்சிகளாக விரிகின்றன என்பதை நோக்குங்கள்.  நாம் எவ்வளவு முயன்றாலும் இவை தோன்றும் ஆழத்தை ஒரு எல்லைக்கு மேல் நம்மால் தாண்ட முடியாது. அந்நனவிலியின் ஆழத்தைப்போலவே, உடலில் தன்னிச்சையாய் நிகழும் செயல்பாடுகள் பற்றியும் நாம் ஏதும் அறியோம்.  அறிவியலறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிறுநீரகம், கணையம் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகள் என்று கருதுவதையே நாம் பாடநூல்களிலிருந்து அறிகிறோம்.  அச்செயல்பாடுகள் குறித்து நாம் உண்மையில் ஏதும் அறியாதவர்களாகவே இருக்கிறோம்.

ஆனால் நாம் நம் சுவாசம் குறித்த நனவுடையவர்களாக இருக்கிறோம்.  நம்மையறியாமலே சுவாசம் பெரும்பாலும் நடந்தேறுகிறது என்றாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு நம்மால் சுவாசிக்க முடியும்.  ஆனால் நீண்ட நேரம் நம்மால் மூச்சை அடக்க முடியாது.  நம் நனவைக் கடந்த ஏதோ ஒன்று அம்முயற்சியை கைவிடுமாறு வற்புறுத்துகிறது.  வாழ்வா சாவா என்ற போராட்டம் நிகழ்கிறது – நாம் வாழும்படி நிர்பந்திக்கப்படுகிறோம்.

நம்முள் உள்ள நனவிலியுடன் அறியாதனவற்றை சேர்க்கும்போது அவற்றின் மொத்தம் காரணமூலத்தில் அமைகிறது.  நமது நனவுநிலை அனுபவங்களும் நடத்தைக்கூறுகளும் அதன் இணைப்பகுதியாக உள்ளன.  மேலும் அகமெய் உயிரியின் (psychophysical organism) கூறுகளும், நனவுநிலை தர்க்கமும், உணர்ச்சியும், அறிதல் திறனும் உள்ளன.  நனவையும்  அறிந்தவற்றையும் நனவிலியுடனும் அறியப்படாதனவற்றுடனும் இணைக்கும்போது நம் தனித்தன்மை (individuation) குறித்த ஒரு முழுமைச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

இன்னும் ஒரு படி மேலே செல்வோம்.  உங்கள் வாழ்வை திரும்பி நோக்குங்கள். உங்களது பெற்றோருடையதைப் போன்றதேயான உங்களது சில உணர்ச்சி வகைமைகளை, நம்பிக்கைகளை, வாழ்வு குறித்த நோக்குகளை கவனியுங்கள்.  அவர்களிடமிருந்து நீங்கள் கற்ற திறன்களை எண்ணுங்கள். பின்னர், உங்கள் பெற்றோரின் உடலமைப்புகள், குரல்கள், தனிப்பட்ட உடலசைவுகள் மற்றும் திறன்களை நினைவுகூருங்கள். உங்களுக்கு பொருள்படாத அவர்களது நடத்தை வகைமைகள், நம்பிக்கைகள், முன்முடிவுகள் சிலவற்றை எண்ணிப்பாருங்கள்.  அவர்கள் வேறு விதமாக நடந்துகொள்ளவேண்டும், சிந்திக்கவேண்டும், வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கவேண்டும் என்று நாம் எண்ணுகிறோம்.  ஆனால் நாம் பொருட்படுத்தும் வகையில் அவர்கள் நடந்துகொள்வதில்லை.  அவர்களைத் தூண்டுவது எது என்றும் அவர்களின் உள்ளே நிகழ்வதென்ன என்றும் நாமறியோம். நம் மூதாதையருக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள மரபொற்றுமை குறித்தும் நாமேதுமறியோம்.

இங்கு நம் பெற்றோரின் வாழ்வு நம்மில் தொடர்வது குறித்த ஒரு நனவுச் சித்திரம் நமக்கு கிடைக்கிறது. இவையெல்லாம் ஒன்றாக இணைக்கப்படும்போது உங்களில் உள்ள நனவிலிக் காரணிகளின் நீட்சியொன்றை நீங்கள் காணலாம்.  காலவெளியில், பல்லாயிரம் ஆண்டுகால பரிணாமவளர்ச்சியில்  அந்நனவிலியின் ஆழத்தை நீங்கள் காணலாம்.  இங்கு இப்போது நம் அகத்தில் நாம் உணரும் நனவிலியின் ஆழம் குறித்து நாமறிய இது உதவும்.

அடுத்ததாக, உலகம்பற்றிய ஒரு சித்திரத்தை எண்ணுங்கள்.  நாம் உலகு என்று எதை சொல்கிறோம்?  உலகவரைபடம் நினைவில் எழலாம்.  விண்கலம் அண்மையில் எடுத்த உலகின் புகைப்படம்  தோன்றலாம்.  வானவியல் புத்தகத்தில் பார்த்த நெபுலாக்களின் அமைப்பு, பால்வீதியில் உள்ள பல்வேறு விண்மீன்கூட்டங்கள், நமது சூரியமண்டலம், கோள்களமைப்பு இவற்றின் படங்களை நினைவில் மீட்டெடுக்கலாம்.  ஆழிகளும், மலைகளும், அரசியல்-தேச எல்லைகளுடன் கூடிய உலகை கருத்தில் கொள்ளலாம்.  பண்பாடுகள், பேரரசுகள், நாகரிகங்கள் ஆகியவற்றின் வரலாற்று எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் எண்ணலாம்.

நமது நிகழ்கணம் இவற்றால் எல்லாம் வடிவமைக்கப்பட்டது.  ஆனால், கருதுகோள்களைத் தாண்டி இப்படிமங்களின், சித்திரங்களின் பின்னால் உள்ள மெய்மையை நாம் அறிவதில்லை.

நாம் முதலில் நம் நனவிலியின் ஆழத்தை அறிந்தோம்.  இப்போது வரலாறு, புவியியல், தொன்மம் மற்றும் மரபுசார் கிடைநிலை அகலத்தின் புறநோக்கு நமக்குக் கிடைக்கிறது. நாம் கவிதையும் அழகியலும் கொண்டு நலம்பாராட்டுவதும், விரும்புவதும் வெறுப்பதும், அழிக்கவும் மாற்றவும் சீர்திருத்தவும் விழைவதும் இவ்வுலகையே. நம் வேர்களை உணர்வதும் இவ்வுலகிலேதான்.

இப்போது, பல கருத்துப்படிமங்களின் புற வடிவமும், உங்களில் தொடங்கி பிரபஞ்சத்தின் தொடக்கம் வரை நீளும் நனவிலியின் பெரும் ஆழமும் கொண்ட அவ்வுலகில் உங்களை ஒரு தனியனாக நிறுத்துங்கள்.  இப்போது நீங்கள் செய்வது அவதானிப்பது.  அமைதியாய், தேர்வுகளின்றி இந்த நனவுநிலையை அனுபவியுங்கள்.  வெறுமனே கவனியுங்கள்.  இச்சமநிலையை எதையாவது செய்யத்துடிக்கும் உங்கள் நனவுநிலையோடு ஒப்பிடுங்கள்.  அந்நனவு நிலையில் உங்களில் கூடும் ஆர்வத்தை, அதற்கு நீங்கள் அளிக்கும் ஆற்றலின் அளவை, உங்கள் அனைத்து அமைப்புகளும் எப்படி துடிப்பு பெறுகின்றன என்பதை நோக்குங்கள்.  நோக்கிநிற்கும் நனவிலிருந்து இதை பிரித்தறியவேண்டும்.  நாம் தன்னிரக்கம் கொள்ளும்போதும் மாறிக்கொண்டிருக்கும் மனநிலைகளை துய்க்கும்போதும் இந்நனவு எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறது.  அது ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.  நம்மில் உள்ள பிற கூறு பாதிக்கப்படுகிறது, நாம் எப்படி பாதிக்கப்படுகிறோம் என்பதை நோக்கிநிற்கும் அகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் பூக்கும் இரு கொடிகள் படரும் ஒரு மரத்தின் மூலம் விளக்கப்படுகின்றன.  ஒரு கொடி நம் நனவின் உய்த்துணர் நிலையை, விழிப்புநிலையில் நடைபெறும் செயல்பாடுகளை குறிக்கிறது.  மற்றொன்று நம் அகவயப்பட்ட மாயங்களை, கற்பனைகளை குறிக்கிறது. நாம் இங்கு குறிப்பிடும் ஆழம் என்பது கொடியின் விதையாகிறது.  நிரந்தர வெளிப்பாடுகளாகிவிட்ட நம் தனியனுபவங்கள், வரலாறு, கலை, இலக்கியம், மனிதனின் கைவண்ணங்களான நகரமைப்புகள், நினைவிடங்கள் போன்ற பதிவுசெய்யப்பட்ட மானுட அனுபவங்களிலிருந்து நாம் எடுத்துக்கொள்பவை – இவையெல்லாம் அக்கொடியின் மலர்கள்.

தன்னைச்சுற்றி மலரும் வாழ்வை நோக்கி நிற்கும் நனவில் ஒரு சிறிய கூறாக மரத்தினடியில் அமர்ந்திருக்கும் நபர் குறிப்பிடப்படுகிறார்.  அவற்றுடன் ஒப்பிடப்படும்போது, நோக்கிக்கொண்டிருக்கும் நனவு என்பது பிரபஞ்ச ஆழியில் தன்னை இழந்த ஒரு ஒளிவிடும் தாரகையாக இருக்கிறது எனலாம்.  அதை எந்நேரமும் நாம் தவறவிடக்கூடும்.  முக்கியமற்றதாகத் தோன்றினாலும், நம் வாழ்வின் அனைத்து செயல்பாடுகளுக்குமான நிலமாகவும் அவற்றிற்கு தூண்டுகோலாகவும் அது இருக்கிறது.

பண்டைநாட்களில் இந்திய கிராமப்புறங்களில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்பவர்களை காணமுடியும்.  இன்றோ இது ஆதர்சமான சூழல்களில் மட்டுமே நிகழமுடியும்.  அமைதிதவழும் அத்தகைய  இடத்தை நாம் தேடும்போது, நம்மைச்சுற்றி நிகழும் பேரோலத்தையும் அமைதியின்மையையும் உணர்கிறோம்.  நம் புலன்களிலும் மனதிலும் இத்தகைய தேவை உணரப்படும்போது, அது நம்முள் உறையும் ஆற்றல்களோடும் துவக்கநிலை நினைவுகளோடும் பிணைக்கப்பட்ட பல அதீத உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.  நம் ஆவல் தூண்டப்படுகிறது. நம் கவனம் சிதறுகிறது.  நம் சமன் குலையாமல் மையத்தின் மோனநிலையுடன் இயைதல் ஒரு போராட்டமாகவே இருக்கிறது.  ஐந்து நிமிடங்கள் நாம் அமர்ந்திருந்து ஓசையடங்குவதற்காக காத்திருக்கிறோம்.  நம் பொறுமை நம்மை கைவிடுகிறது.  எழுந்து விசாரணையில் இறங்குகிறோம், நிகழ்வனவற்றுடன் பிணைக்கப்படுகிறோம்.  ஆனால் அகத்தின் மெய்மைக்குள் இறங்க விழைபவன் இதனை ஒரு சவாலாக ஏற்கவேண்டும்.  உங்களால் எத்துணை பொறுமை காக்கமுடியும்?  சூழல் எதுவாயினும் சலனமில்லாமல் எப்படி இருக்க முடியும்?

ஏழாவது பாடலில் கவனச்சிதறல் ஏற்படுத்தும் ஆயாசம் குறித்து பார்த்தோம்.  அங்கே தூங்குதல், விழித்தல், உண்ணல், புணர்தல் போன்ற இயற்கைத் தேவைகள் நம்மை அணுகியவண்ணம் உள்ளன. இவற்றின் பெருக்கு அனைத்து மாற்றங்களையும் பிரதிபலிக்கும் மாற்றமில்லா மெய்மையை நாம் அறியமுடியாமல் செய்கிறது. புற உலகின் பல அதிர்வுகளால் நிரப்பப்பட்டாலும் ஆடி ஒரு போதும் பாதிப்புக்குள்ளாவதில்லை.  அதேபோல், தூய சாட்சியாய் இருக்கும் நனவு, மாற்றத்திற்குள்ளாவதாகத் தோன்றினாலும் உண்மையில் அதில் எந்த மாறுதலும் நிகழ்வதில்லை.  இப்பாடலில் வரும் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல ஒரு பெரும் நிலைத்தன்மையை தரக்கூடிய ஒரு கடுமையான மனப்பாங்கை குரு எட்டாவது பாடலில் பரிந்துரைத்தார்.

இங்குள்ள சவால் மெய்யானது, அதே சமயத்தில் பொய்யானதும் கூட.  வந்து பின் மறைவதால் பொய்யானது. ஆனால் தனியர்களாய் நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்குக் காரணமான மரபியல்கைகளைக் (genetic potentialities) கொண்டது என்பதால் மெய்யானது.  அறியப்படாததால் ஒரு கருவியாக பாவிக்கப்படும் அகமெய் உயிரி நிச்சயமாக மாற்றத்திற்குள்ளாகிறது.  தனியனின் வாழ்நாளைத் தாண்டியும் எஞ்சுகிறது.    உயிரியல் ரீதியாக அது தலைமுறை தலைமுறையாக கையளிக்கப்படுகிறது.  இதனால்தான், “அகத்தின் மாற்றமில்லாத நிலையை அறிய யாருளர்?” என்கிறார் குரு.

பின்னர் நம்மை இரண்டு உறுதியான மாற்றுகள் கொண்ட புதிர்நிலைக்கு இட்டுவந்தார் குரு.  மாறிக்கொண்டே இருக்கும் இவற்றைத் தாண்டி மாற்றமில்லா அறிவாகவே மாறவேண்டும்.  ஏழாவது பாடலில் சொன்னதுபோல, நம்மில் பெரும்பான்மையோருக்கு இது எளிதே அல்ல.  நம்மால் முடியாதபோது, அதில் வெற்றிபெற்றவர்களிடம் இருமுனைப் பிணைப்பை (bipolarity) ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் மாற்றமில்லா நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்.

எட்டாவது பாடல் ஒரு கடும் மனப்பாங்கை கைக்கொள்ளும்படி கூறுகிறது. தெருவில் அலையும் நாயைப்போல உங்கள் மனதை விடக்கூடாது.  அதன் தலைவனாக நீங்கள் ஆக வேண்டும். வெறுமனே நோக்குதல் என்னும் இந்தச் சிறு விழிப்புணர்வில் அனைத்துமறிதலுக்கான இயல்கை உள்ளது.  நம்மில் பலரில் உள்ள இந்த அனைத்தறிதல் என்னும் நோக்கும் கூறு ஐ.நா.வைப் (United Nations) போல் உள்ளது. ஐ.நா. உலகம் முழுவதிலும் நிகழ்வனவற்றை நோக்குகிறது.  ஆனால் எந்த நாடும் மடமையில் ஈடுபடும்போது அதைத் தடுக்கும் அதிகாரம் எதுவும் அதற்கிருப்பதில்லை. ‘செய்யாதே’ என அறிவுரை மட்டுமே அதனால் வழங்கமுடியும்.  நம்மில் உள்ள அனைத்தறி நோக்கிலும் (omniscient witness) எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு ஐ.நா. உள்ளது.  அதை சரியாக வளர்த்தெடுப்போமென்றால் – அதன் இச்சைப்படி நடக்க அதிகாரம் அளித்தோமென்றால் – அது உலகில் உள்ள அனைத்துப் படைகளையும் ஐ.நா.-விடம் ஒப்படைத்து தனி நாடுகளின் இறையாண்மையை காக்கும்படி கூறுவதற்கு ஒப்பாகும்.  அதனால் கொடுமைகளை தடுக்க இயலும்.

இது நடக்கக்கூடும்.  ஆனால் இப்போது நிகழவில்லை.  அதை பயிலும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.  அவர்கள் தங்களது நோக்கிநிற்கும் நனவை தமது இச்சை நனவுடன் இணைத்துக்கொள்கின்றனர்.  நோக்கிநிற்கும் நனவானது அனைவருக்கும் நலம் நாடல், உன்னத அழகு, பேருண்மை, எல்லையற்ற உறுதிப்பாடு இவற்றிற்கான நெறியில் செல்லுமேயானால் இது பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும்.

முன்தீர்மானங்களோடு கூடிய வடிவமைக்கப்பட்ட வாழ்வை எதிர்கொள்ளும்போது அதில் போலித்தனமும் ஏமாற்றலும் இருக்கிறது.  அதன் உண்மைத்தன்மையை அது மறைக்கிறது. சூழலும் மனிதர்களும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது வேடமணிகின்றனர் என்றும் நாம் முழுதாக வாழவிரும்பினால் அவற்றை கிழித்தெறிய வேண்டும் என்றும் கூறிய ஃபிராய்ட் போன்றோர் மனிதகுலத்துக்கே பெரும் நன்மை செய்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  நோக்கிநிற்கும் நனவில் நீங்கள் மையம்கொள்ளும்போது மக்களும் நிகழ்வுகளும் அணியும் முகத்திரைகளை நீங்கள் நன்றாக பார்க்கலாம்.  அவற்றின் பின்னால் உள்ள உண்மையின் தன்மையை வெகு சிலரே அறிகின்றனர்.

முகத்திரைகளுக்குப் பின்னால் உள்ளதை அறியவே நாம் இங்கு கூடியிருக்கிறோம்.  வாசனைகள் எனப்படும் துவக்கநிலை நினைவுகள் எனும் பல வேட்கைகள் அவற்றின் பின்னால் உள்ளன. இவ்வாற்றல்களுக்கும் தற்காப்பு மிகவும் தேவையான ஒன்று.  முகத்திரையே தற்காப்புக் கவசம். துரதிருஷ்டவசமாக, இத்திரைகள் சமூகத்தைக் காக்கும் அதே சமயத்தில் தனியன் தன்னுடைய மெய்மையையே நோக்கமுடியாமல் செய்துவிடுகிறது.

இந்த ஏமாற்றுச் சூழல்களிலிருந்து வெளியேறி அமர்ந்து ஆடலை அவதானிக்கும்படி நம்மிடம் மன்றாடுகிறார் குரு. உங்களது முகத்திரை அகன்றபின், நோக்கிநிற்கும் நனவால் பிரபஞ்ச உண்மை, பிரபஞ்ச நன்மை, பிரபஞ்ச அழகு போன்ற முழுமுற்றான நிலையில் தன்னை நிலத்தில் நிறுவிக்கொள்ள முடிகிறது. அதனால்தான் அச்சம்தரும்  அம்மரத்தின் கீழமர்ந்தவரால் தவம் செய்ய முடிகிறது என்கிறார் குரு.  ஏற்கெனவே, எட்டாவது பாடலில் சிக்கனத்தின் அவசியம் குறிப்புணர்த்தப்பட்டது.  இங்கே அச்சிக்கனம் ஒரு தனிப்பட்ட செயலாக இல்லாமல் நிரந்தரமான ஒன்றாக ஆக்கப்படுகிறது.  பறவைகளை வீழ்த்தும் ஒரு தனிச்செயல் வழமையான தவச்செயலாக வளர்கிறது.

அச்சுறுத்தும் கொடிகளிலிருந்து விலகிநிற்கவும், மீமெய்மைக்கும், நலனுக்கும், அழகுக்கும் உதவுபவனாய் தனியனை மாற்ற உதவும் முழுமுற்றான தரிசனத்தை வளர்த்தெடுக்கவும் பல வழிகளை சான்றோர் கற்பித்துச் சென்றுள்ளனர்.  பார்வை, சித்தம், பேச்சு, நடத்தை, உணர்ச்சி என அனைத்திலும் நாம் சரியான நிலையை மேற்கொள்ளவேண்டும் என்றார் புத்தர்.  எது சரியென எப்படி அறிவது? புத்தனை, நால்நிலை மெய்மையை சரணடைந்து ஐந்து விழுமியங்களை வளர்த்துக்கொள்வது மூலம்  அறியலாம்.  ஒரு புத்தபிட்சுவானவர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து ‘நான் புத்தனை சரணடைகிறேன்; தர்மத்தை சரணடைகிறேன்; சங்கத்தை சரணடைகிறேன்’ என மும்முறை ஓதுகிறார்.   பின்னர் ஐந்து உறுதிமொழிகளை மேற்கொள்கிறார்;

இக்கைகளால் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யேன்

இயற்கை கருணையுடன் எனகென தரும் பங்கையன்றி எதையும் பறிக்கேன்

பொருளில்லா பேச்சிலும் வம்பிலும் ஒரு கணத்தையும் நான் வீணாக்கேன்

அவாக்கள் என்னை நல்வழியிலிருந்து விலக்க ஒப்பேன்;

போதைப்பொருட்கள் என் அறிதிறனை மாசுபடுத்த விடேன்

பின்னர் தன் சக பிட்சுக்களுடன் அமர்ந்து சமயநூல்களை கற்கிறார்.  புத்தரின் வாழ்வையும் சொற்களையும் ஆழ்ந்து ஆய்கிறார்.  உலகப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு விடுதலை பெற இது ஒரு வழி.  இதுபோல் பலவழிகள் உள்ளன.

இயேசு கிறிஸ்துவின் விரிந்த கைகளுக்குள் அடைக்கலம் புகுந்து அவரது அன்பின் கதகதப்பை உணர்வது இன்னொரு வழி.  என் பிதாவின் சொற்களை கேளுங்கள், ஆறுதலளித்துக்காக்கும் சொற்களை கேளுங்கள் என்கிறார் இயேசு.  கடவுளின் அரசாங்கம் எப்படிப்பட்டது என்றும் அதை அடைய ஒருவன் தகுதிபெறுவது எங்ஙனம் என்பதையும் விளக்குகிறார்.  வழியையும் இலக்கையும், ஒளியையும் வாழ்வையும், இறப்பையும் புத்துயிர்ப்பையும் நான் காட்டுகிறேன் என்று வாக்களிக்கிறார்.

சூஃபிக்கள் சொல்லியிருப்பதைப் போல அல்லாவை நம் பிரியத்துக்குரியவனாக ஆக்கிக்கொள்ளும் இஸ்லாத்தின் வழியை மேற்கொள்ளலாம்.  நடுநிலை பூஜ்யத்தில் இருக்கும் நோக்கிநிற்கும் அகத்தினை விளக்குகிறார் லாவோட்சு.  வாழ்வின் முரண்களை ஆராய்ந்து அவற்றின் உள்ளுறையும் இணக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்வது ஒரு அருமையான வழி.

ரிஷிகள் கற்பித்த வழியும் ஒன்றுண்டு.  பண்டைக்காலம் தொடங்கி நம் காலத்தில் ரமணர் வரை அவர்கள் எல்லோருமே ‘நான் யார்?’ என்ற கேள்வியை தளர்வில்லாது பின்தொடர்ந்தனர். அந்தப்பாதை மேலோட்டமான தடைகளிலிருந்து அவர்களை விடுவித்து இப்போது நாம் மரத்தடியில் வைத்திருக்கும் தியானத்திலமர்ந்த சாட்சியான தூய ஒளிக்கு அவர்களை இட்டு வந்தது.  திரைகளிலும் மேலோட்டமானவைகளிலும் கவனம் செலுத்துபவர்கள் அத்தகை ரிஷியை கடமை தவறியவர் எனலாம்.  ஆனால் ஒருபோதும் அது உண்மையாகாது.  பயன்மதிப்பு ரீதியாக நோக்கினால், மிகுவேலை கொண்டவர்களைவிட அவருடையது கடுமையான – அதிகம் பயன்தரக்கூடிய – உழைப்பு.  மாபெரும் தூய்மையாக்கத்தை அவர் பயில்கிறார், அனுபவிக்கிறார்.

விழிப்பு, கனவு, நனவிலி என்ற மூன்று நிலைகளே மெய்யானவை.  நோக்கிநிற்றல் தன்னளவில் ஒரு நிலை (அவஸ்தை) கிடையாது.  பிற நிலைகளைக் காணும் ஒன்று அது.  அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு வினையூக்கி எனலாம்.  இனி, நனவின் மூன்று கூறுகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தூயதாய் எஞ்சுகின்ற நோக்கிநிற்கும் அகத்தைப்பற்றி நன்கு அறிவதில் நாம் நம் கவனத்தை செலுத்துவோம்.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

Standard

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்!
அவ்வாறிருப்பது கைகூடாதென்றால்
ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும்
முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்!

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 7)

முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப் பகுப்பை நம் நனவிலிருந்து பிரித்து அலுங்காது சுடர வைக்கமுடியுமா?

அறிவென்னும் சொல்லை முதற்பாடலிலிருந்தே  மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார் குரு. பெரும்பாலும் தகவல் துளிகளையே நாம் அறிவெனக் கொள்கிறோம். இத்தவறான எண்ணத்தை முதலிலேயே சரிசெய்யவேண்டுமென்பதற்காகவே இவ்வறிவு அறிவனைத்தையும் கடந்தது (அறிவிலுமேறி) என்கிறார். மேலும், அது புறஉலகில் காணப்படுவதாகவும் ஒருவனது அகவய விழிப்பென உணரப்படுவதாகவும் விவரிக்கப்படுகிறது.

முந்தைய ஆறு பாடல்களிலும், ஒருவனது அனுபவ எல்லைக்குள் சாத்தியமான ஆறு வகைமைகள் குறித்த மறைமுகக் குறிப்புகள் உள்ளன. முதற்பாடலில் அது அக உலகாகவும் புற உலகாகவும் இரண்டையும் அறியும் அறிவாகவும் கூறப்பட்டது. இரண்டாவது பாடலில், உள ஆற்றல், புலன்கள், உடல் மற்றும் அறியும் பொருட்கள் என தரப்படுத்தப்பட்ட படிநிலை வரிசை ஒன்றைத் தருகிறார் குரு. இவையெல்லாம் இணைந்து அனுபவமாகிறது.

மூன்றாவது பாடலில் ஒவ்வொரு புலன் அனுபவமும் ஒரு மன பிம்பத்தை ஏற்படுத்தும் மீத்தெளிவு பேசப்பட்டது. அனுமானித்து மட்டுமே அதன் இருப்பை உணரக்கூடிய மூல ஒப்புருவுடன் நேரடியான தொடர்பு அந்த பிம்பத்திற்கு உள்ளதா என்பதை உய்த்தறிவது எளிதல்ல. நான்காவது பாடலில், நனவென்பது அறிபவன், அறியப்படுவது, அறிவு என்னும் மூன்று அடிப்படைக்கூறுகளாக பிரித்துக் காட்டப்பட்டது. இவை, அடிப்படையில் முதல் பாடலில் சுட்டப்பட்ட பிரபஞ்சவியல் அமைப்பின் உளவியல் வடிவம்.

ஐந்தாம் பாடலில் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையேயான நனவின் ஊசலாட்டத்தையும், விழிப்பு நிலையில் அகத்தின் இயல்பான சிதறும் தன்மையையும் நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.  நம் ஆர்வம் தொடர்ச்சியாக ஒரு பொருளிலிருந்து இன்னொன்றிற்குத் தாவுவதை ஆறாவது பாடல் சுட்டிச்செல்கிறது.

மனதை பாதிக்கும், பிறழச்செய்யும் இவற்றையெல்லாம் பற்றி பேசியபிறகே, தேடலுடையவன் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள இரு ஒழுக்கங்களை முன்வைக்கிறார் குரு. ஒன்று “இனி விழிக்காதே, உறங்காமல் அறிவாகவே இரு” என்பது. முதல் ஆறு பாடல்களில் கூறப்பட்ட வெவ்வேறு ஆற்றல்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தூய அறிவாக இருப்பது எவ்வளவு அரிதானது என்பது விளங்கும். அப்படியென்றால் விழித்தல் உறங்குதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபடுவது பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்நூல் முழுவதும் நம் ஒவ்வொருவரின் உள்ளிருக்கும் அகம் நோக்கியே நாராயண குரு பேசுகிறார். அதன் சாத்தியமான வேறுபாடுகளை விளக்கும்போதுகூட அதன் அடிப்படை ஒருமையை கவனத்துடன் சிறப்பிக்கிறார். அனைத்தையும் ஊடுருவும் அறிவும் அதைத் தேடுபவனின் அகமும் வேறுவேறல்ல என்பதை அவன் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதே அவரது முதல் ஆர்வமாக இருக்கிறது.

முதல் பாடலில், தன்னை அறிதலின் முதல் படியாக, புலன்களை அடக்கியபடி, பக்தியுடன் ஒளிரும் கருவின் முன் பணியச் சொல்கிறார். வெளியில் உள்ள ஒரு கடவுள் அல்லது படைத்தவன் முன்பாக விழுந்து வணங்குவதல்ல அவர் கூறுவது. இங்கே இப்போது அனைத்தையும் நிறைத்திருக்கும் அறிவாய் உள்ள முழு மெய்ம்மைக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் அது. வெளியேறும் ஆர்வத்தையும் உள்புகும் தூண்டலையும் சமன் செய்வதன் ரகசியம், ஐம்புலன்களையும் அகவயமாக்கி, போற்றற்குரிய முழுமுதல் குறித்த வியப்பைக்கொண்டு அகத்தை நிரப்புவதில் உள்ளது என்றறிய வேண்டும். தனது மெய்யான முழுமை நோக்கித் திரும்புவதே இங்கு ஒப்புக்கொடுத்தல் எனப்படுகிறது.

இரண்டாவது பாடலில், ஒளிரும் ஆன்மாவின் பெருமையைப் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கிறார். அனைத்துப் பொருட்களிலும் உள்ளுறையும் ஒருமையாகவும், எல்லாப் பெயர்களும், வடிவங்களும், நனவு நிலைகளும் சார்ந்த அறிவாகவும் அந்த ஆன்மா ஞானியரால் போற்றப்படுகிறது. ஒருவன் தன் தேடலில் தீவிரமாக இருத்தல் வேண்டும் என்பதை குரு அழுத்தமாகக் கூறுகிறார். சிறு சமரசமும் மனதை வேறு கோணத்தில் இழுத்துச் செல்லும். நூற்றாண்டுகளாக உருவாகிவந்திருக்கும் பல்வேறு ‘வாதங்களும்’ கருத்தியல்களும் இதற்கு வரலாற்றுச் சான்றுகளாக இருக்கின்றன. ஒருமை என்னும் அதிசயத்தை ஊழ்கத்தின்மூலமே புரிந்துகொள்ளமுடியும் என்று எச்சரிக்கிறார். லட்சத்தில் ஒருவரே இதில் வெற்றிபெறுகிறார். அதுவும் பல சறுக்கல்களுக்குப் பின்பே நிகழும். மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல்களால் தூண்டப்படும் நினைவுகளின் அடிப்படையில் துவங்கும் தேடலுக்குக் காரணமான ஆளுமை அமைப்பியலே இதில் நம் தோல்விக்குக் காரணம் என்பதை குரு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.

பித்துநிலை, மனத்தடைகள், கிலி, மட்டுமீறிய ஆவல் இவற்றின் மூலம்தான் நாம் ஒரு அக அழுத்தத்தால் ஒரு திசையில் தள்ளப்படுவதை உணர்கிறோம். ஆயினும், ஆரோக்கியமான மனம் என்பது நாம் நம்ப விழையுமளவுக்கு விடுதலை கொண்டதாக இல்லை. நேர்மையுடன் நிகழ்வுகளை அவதானிக்கும் ஒரு அறிவியலறிஞன் கூட நேர்மறை அவதானிப்புகளால் ஊக்கம் பெறும்போது எதிர்மறை தரவுகளை காணமுடியாமல் போகலாம்.

குரு பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனிக்காவிடில் அவர் பரிந்துரைக்கும் ஒரு முக்கியமான கருத்தை தவறவிட்டுவிடுவோம். அக ஆற்றல், புலன்கள், மெய், புலன்காட்சிக்குட்பட்ட பல உலகுகள் இவற்றைத்தாண்டி, உள்ளுறைவதாகவும் அறிவெல்லைகடந்ததாகவும் ஆன்மாவைக் குறிப்பதான கதிரவனைப் பார்க்கிறார்.  எட்மண்ட் ஹுசேர்ல் Edmund Husserl செய்வதுபோல மடக்குதல், இடைநிறுத்தல், நனவனுபவக் குறுக்கம் இவற்றின் நெறிமுறைகளை குரு விரிவாக விளக்குவதில்லை. ஆனால், ‘இங்கே, இப்போது’ என்பதை ‘எங்கும், எப்போதும்’ என்பதற்கு எதிராக வைத்து நடைமுறைக்கேற்ற ஒரு முனைவாக்கத்தை உருவாக்குகிறார். இதற்கு அவர் பயன்படுத்தும் ஒப்புமைக்கு, ஸ்பினோசாவின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் விளக்கவுரையாகக் கொள்ளலாம்.

முரணியக்கம் நிகழும் இரு துருவங்களிடையே ஒரு பொது விழுமியம் எப்போதும் உண்டு. தாய்-சேய், ஆசிரியர்-மாணவன், ஆள்பவன்-குடிமகன், அன்பு செலுத்துபவன்-அன்புக்குப் பாத்திரமானவன் இவையெல்லாம் முரணியக்க இருதுருவங்களுக்கான எடுத்துக்காட்டுகள். இவையெல்லாவற்றுக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஆர்வம் மகிழ்வுடன் இருத்தல் மட்டுமே என்று சொல்லலாம். இருவருமே ஒருவரோடொருவர் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் இப்பாடலில் காணப்படும் இருமை இரு தனியர்களுக்கிடையேயானதல்ல. இது அறிவு பற்றிய ஒருவரது தனிப்பட்ட புரிதல் மற்றும் அறிவின் முழுமை எனலாம். இரண்டில் ஒன்று மனித அகம் சாராதது என்பதால் பரிமாற்றம் ஏதும் இங்கு நிகழ்வதில்லை. புற – அகச் சவ்வூடு போல, ஒன்றன் சாரம் மற்றொன்றுக்குச் செல்வது இருவழியிலும் நிகழ்ந்தால் மட்டுமே இருதுருவத்தன்மை பொருளுடையதாக ஆகிறது.

அலையையும் கடலாழத்தையும் பிரிக்கமுடியாது என்ற உவமை மூலம், முழுமை என்பது மனிதஅகம் சாராதது என்றபோதும் ஒருவன் தன் சாரத்தை முழுமையுடன் பகிர்ந்துகொள்ளும் ரகசியத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார் குரு. அலை தனித்துத் தெரிந்தாலும் ஆழியுடனான அதன் உறவை பிரிக்கமுடியாது என்பதை அழுத்தமாகக் கூறவே நம் இருப்பு அலையோடு உவமிக்கப்படுகிறது. ஆழம்பற்றிய இடையறா விழிப்புணர்வே முழுமுதலுடனான நம் பிணைப்பை நிறுவுகிறது.

நான்காவது பாடலில், எந்த உவமையுமின்றி ஒருவனது மெய்யிருப்பை தூய அறிவாகவே கூறுகிறார் நாராயண குரு. அதனுடன் ஒன்றும்படி ஆணையிடுகிறார். மாறிக்கொண்டிருக்கும் நம் நிலைகளைக் கடந்தது தூய அறிவு. எனவேதான், விழிப்பு-உறக்கம் என்னும் உடல்சார் நிலைகளால் பாதிக்கப்படாமல் தூய அறிவாகவே இரு என்று சொல்லப்படுகிறது.

முழுமுதலோடு தன்னை தொடர்புறுத்திக் கொள்வது பெரும்பாலானவர்க்கு எளிதல்ல என்பதை அறிந்த குரு, விடைகள் தேரும் வினாக்கள் இல்லாத, எந்த பாதிப்பும் அடையாமல் பிரபஞ்ச நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் முனிவர்களின் சேவையில் ஈடுபடச் சொல்கிறார்.  ஏழாம் பாடலில், இருதுருவ உறவின் நுழைவாயிலில் வந்துநிற்கிறோம். நாம் யாருடன் இருதுருவ உறவை நிறுவிக்கொள்ள விழைகிறோம் என்பதை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும். அது ’சொல்’ நிகழக்கூடிய உடல்கொண்ட ஒரு மனிதராக இருக்கலாம். உடலிலியுடன் உறவாட நம்மால் ஆகுமென்றால் ‘வாழும் சொல்’ நம் அகத்திலேயே எப்போதுமிருக்கும். நம்மைப் பொறுத்தவரை பொறுப்பை ஏற்றுக்கொள்வதே முக்கியம்.

விதைக்கப்படும் விதை முளைத்து வளரவேண்டுமெனில் அது ஓரிடத்திலேயே இருக்கவேண்டும். தினமும் பிடுங்கி வேறிடத்தில் நட்டால் அது பிழைப்பதில்லை. இருதுருவத்தன்மையின் ரகசியமும் அதுவே. தொடர்ச்சியான இயற்கையொழுக்கு ஒன்று இருக்கவேண்டும். ஒரு மரத்தின் உயிர்ச்சாற்றின் மேல்-கீழ் ஒழுக்குபோல, ஆசிரியர்-மாணவனுக்கிடையிலும் – தேடுபவனுக்கும் தேடப்படும் ஒளிக்கும் இடையேயான –  ஒரு ஒழுக்கு இருத்தல்வேண்டும்.

ஆசிரியரின் அருகிலிருந்து சேவை செய்யும்போது விழிப்புநிலையின் பல்வேறு கூறுகளுக்கு அவர் எங்ஙனம் எதிர்வினையாற்றுகிறார் என்பதை கவனிப்பதன் மூலம் விழிப்புணர் உலகின் பொருளை உணர உங்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அவரது சொற்களில் திளைக்கும்போது அக உலகின் கருத்துருவங்களை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். நடுவுநிலையான அவரது மௌனத்தை அவதானிப்பதன்மூலம் தொடக்கநிலை நனவுகளைக் களையும் ரகசியத்தைக் கற்கலாம். கடந்தநிலையில் ஒன்றிய ஆசிரியரின் அடையாளத்திலிருந்து நாமனைவரும் சார்ந்திருக்கும் கடந்ததன் இருமையற்ற பண்பை கண்டறியலாம்.

காலமெனும் பெருவெளியில், ஆழ்ந்த புரிதலும் எல்லையிலா பெருங்கருணையும் கொண்ட ஒளிமிகு ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். மானுடகுலத்தை உய்விக்க வந்தவர்களாக நன்றியுடன் அவர்களை அண்ணாந்து நோக்குகிறது உலகு. நடுப்பகலில் ஒளிரும் கதிரவன் போன்ற அவர்கள் உடல் மறைந்தபின்னும் மனிதனின் நல்லூழாய் திகழ்வதாகக் கூறுகிறார் ரோமெய்ன் ரோலண்ட். மாறிக்கொண்டே இருக்கும் மானுடவரலாற்றிலும், தங்கள் மறைவுக்குப் பின்னரும் மக்களின் அகத்தையும் வாழ்வையும் வடிவமைத்துக் கொண்டிருக்கும் புத்தரும், சாக்ரடீஸும், யேசு கிறிஸ்துவும், முகம்மது நபியும் அத்தகு பேரான்மாக்களே.

இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குறுநில மன்னனுக்கு சித்தார்த்தன் என்னும் இளவரசாகப் பிறந்தவர் புத்தர். தன் குழந்தைப்பருவத்திலும், இளமைப்பருவத்தின் தொடக்கத்திலும் அவரும் எல்லோரையும்போல விழித்து உறங்கி அகக்குழப்பத்தில் சிக்குண்டவராகத் திரிந்தார். அரசரான தந்தையால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் தன்னைச்சுற்றியிருந்த மக்களின் இன்னல்களைக்கண்டு பெருந்துயரில் ஆழ்ந்தார். முதுமை, வறுமை, நோய், மரணம் என்பவையெல்லாம் பெரும்பாலான மக்களால் இயல்பானவையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கருணையுள்ளம் கொண்ட இளவரசனுக்கு அவையெல்லாம் அவமானகரமான தவறுகளாகத் தோன்றின. மனிதகுலத்தைப் பீடித்துள்ள இக்கேடுகளுக்குத் தீர்வு காண்பது தன் கடமை என்றெண்ணினார். துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய தன் மாளிகையை, காதல் மனைவியை, அருமைக் குழந்தையை எல்லாம் துறந்து பேருண்மையைத் தேடி அலைந்தார். தினசரி வாழ்வின் விழிப்புநிலையிலிருந்து விழித்துக்கொள்வதே அதற்கான தீர்வு. அரசபோக வாழ்வைத் துறந்து அதன் எதிர் துருவமான துறவை நாடிய அவர் கண்டதென்னவோ துயரம் மட்டுமே. இறுதியில், இருத்தலென்னும் கொடுங்கனவிலிருந்து விழித்துக்கொள்ளுதலும், ‘கர்ம’த்திலிருந்து தப்பித்தலும் இயலாதவொன்றென்று உணர்ந்தார். அதிசயத்திலும் அதிசயமான விநோதமான சமநிலை அவருள் நிகழ்ந்தது. நன்மையும் தீமையும், வலியும் இன்பமும், விழிப்பும் உறக்கமும், ஒளியும் இருளும் ஒன்றையொன்று சமன் செய்யும் புள்ளிக்கு அவரை இட்டுச் சென்றது. அந்தப்புள்ளியில் அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்ட ‘புத்தர்’ என்பதை உணர்ந்தார். விழிப்போ-உறக்கமோ, நோற்றலோ-விருந்தோ இல்லாத பொன்னொளிர் நடுவு நிலைப் பாதையை அவர் கண்டறிந்தார். ஸ்வேதஸ்வதார உபநிடதத்தில் கூறப்படும், இச்சைக்கு ஆட்படாமல் தன் இணையை நோக்கி நிற்கும் பறவையைப் போலானார்.

விழிப்பு நிலையை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக விளக்குகிறது. புறப்பண்புகளில் அவற்றுள் ஒற்றுமை இருப்பதில்லை. விழிப்படைந்தவனின் நிலையை கீதை பின்வருமாறெல்லாம் குறிப்பிடுகிறது:

ஸ்திதப்ரக்ஞன் (பகுத்தறிவாளன்)
ஞானி
பிராஹ்மிஸ்திதி (முழுமுதலில் இருப்பவன்)
பக்தன்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விவேகன் (களம்பற்றி அறிந்தவன்)
குணாதீதன் (முக்குணங்களைக் கடந்தவன்)
பிரஹ்மபூதன் (ஆழ்சிந்தனையாளன்)

இவையெல்லாம், ‘ஓம்’ எனும் பிரணவத்தில் மறைபொருளாய் பொதிந்துள்ள, நனவின் இருநிலைகள் பற்றிய ரகசியத்தை ஐயமற உணர்ந்த சிந்தனையாளனை சுட்டுகின்றன.

தன் சொந்த ஊரிலிருந்து, கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேறொரு நகருக்குக் கடத்தப்படும் ஒருவன் விடுவிக்கப்படும்போது தன் ஊருக்குத் திரும்புவதற்கான வழியை அவனால் கண்டடையமுடியும் என்கிறது சாந்தோக்ய உபநிடதம். எதிர்ப்படுவோரிடம் வழியை கேட்டறியலாம். அதேபோல், இப்பாடலில் குறிப்பிடப்படும், தன் மெய்யியல்பைக் கண்டடையச்செய்யும் இருதுருவத்தன்மை பிறர் உதவியால் நிகழக்கூடும். மெய்யான இருதுருவத்தன்மை என்பது ஒருவரது அறிவு நலனில் உள்ளது. இங்கு சுட்டப்படுவது பிரணவத்தின் மறைபொருளை உணர்ந்த அறிவு. பிரணவத்தை வேதங்களின் ‘மீச்சாரம்’ என்கிறது கீதை. கிருஷ்ணர் அதை முழுமுதல் என்கிறார். சாந்தோக்ய உபநிடதம் ‘ஓம்’ என்பதை உத்கீதை என்கிறது.

இங்கே, ‘ஓம்’ என்பது சம்மதத்தைக் குறிக்கும் ‘அனுக்ஞ’ எனப்படுகிறது. கதிரவன் எழும்போது மக்கள் விழித்தெழுகின்றனர். எல்லோரும் எழுவதற்கு கதிரவன் தரும் சம்மதமாக அது காட்டப்படுகிறது. நன்மையும் தீமையும், வலியும் இன்பமும், மெய்யும் பொய்யும் கலந்தே திகழும் உலகில் ஒருவர் பிறரோடு ஒத்துப்போக முடியாமலாகிறது. இவ்விருமைகளைக் கடந்த முழுமுதலாளனுக்கு எந்தத் தடையும் இருப்பதில்லை. அவன் எல்லோருக்கும் தன் சம்மதத்தை அளிக்கிறான். ஞானியைப் போல் உலகோடு ஒத்துப்போவது எவருமில்லை.

முழுமுதலை அறிய உதவும் கருவியாக பிரணவத்தைக் கூறுகிறது முண்டக உபநிடதம்.

பிரணவமே வில்லாக ஆன்மாவே அம்பாக
பிரம்மம் இலக்காக
கவனம் சிதறாதவனால் துளைக்கப்படவேண்டியது

முழுமுதலை தியானிப்பதற்கான வழி ‘ஓம்’ எங்கிறது ஸ்வேதஸ்வதார உபநிடதம்.

உடல் கீழ் அரணிக்கட்டையாக
ஓம் எனும் பிரணவம் மேல் அரணிக்கட்டையாக
தியானம் எனும் உரசல் மூலம்
உள்ளுறையும் இறைவனைக் காணலாம்

மைத்ரீ உபநிடதம் பிரணவத்தை பின்வரும் மும்மைகளின் தொகுதியாகக் காட்டுகிறது:

அ உ ம் என்னும் ஆன்மாவின் ஒலிவடிவம்
பெண் ஆண் அலி என்னும் பால் வடிவம்
தீ காற்று கதிரவன் என்னும் ஒளிவடிவம்
ருத்ரன் பிரம்மா விஷ்ணு என்னும் இறைவடிவம்
ரிக் யஜுர் சாமம் என்னும் அறிதல் வடிவம்
புவி வெளி வான் என்னும் உலக வடிவம்
கழி நிகழ் எதிர் என்னும் காலவடிவம்
சுவாசம் தீ கதிரவன் என்னும் அனல்வடிவம்

இவை எல்லாம் பிரணவத்தின் கூறுகளாக சிறப்பிக்கப்படுகின்றன.

பிரணவத்தை அறிந்தவன் போற்றத்தக்க ஞானி என்கிறார் கௌடபாதர், மாண்டூக்ய உபநிடதத்திற்கு தான் எழுதிய காரிகை(உரை)யில். மாண்டூக்யர் அ, உ, ம் என்னும் மூன்று ஒலிகளும் அவற்றைத் தொடர்ந்து வரும் மௌனமும் சேர்ந்ததே ‘ஓம்’ என்கிறார். ‘அ’ – ‘விஸ்வ’மென்னும் பெயரும் வடிவும் கொண்ட அனுபவ உலகைக் குறிக்கிறது. ‘உ’ ‘தைஜஸ’மென்னும் கனவுலகை – தன்னொளியும் தன்னொழுங்கும் கொண்ட அகவய நனவைக் குறிக்கிறது. ‘ம்’ என்பது ஒருவர் தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அறியும் ‘பிரக்ஞை’யை – திரிபில்லா நனவை – குறிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் மௌனம் கடைசிக் கூறு. இதனை –

‘நான்காவது கூறுகளற்றது.
எதுவும் அதனுடன் உரையாட முடியாது.
வளர்ச்சியற்றுப் போவது – அருள் கொண்டது – பிறிதொன்றில்லாதது
ஓம் என்பதே ஆன்மா
இதை அறிபவனின் அகம் ஆன்மாவில் இணைகிறது’

என்கிறது உபநிடதம்.

இம்மந்திரத்திற்கு உரையெழுதும் கௌடபாதர், ‘பிரம்மத்தை அறிபவன் – பேருண்மையை உணர்ந்தவன் – மறைதன்மை என்னும் மூன்றாம் நிலையை எரித்து ஆன்மாவில் இணைகிறான்; எனவே, அவன் மீண்டும் பிறப்பதில்லை (பிறப்பறுக்கிறான்). ஏனென்றால், துரீயம் படைப்பின் மறைதன்மை எதுவும் அற்றது’ என்கிறார்.

மௌனமாய் சிந்தனையில் ஆழ்ந்து, பிரணவத்தை அறிந்து பிறப்பறுக்கும் உயர்ந்தோர் என்று நாராயணகுரு குறிப்பிடும் ஞானியை இதனுடன் ஒப்பிடலாம். பிரணவத்தை அறிவதால் என்ன பயன் என்பதைத் தெரிந்துகொள்ள மாண்டூக்ய உபநிடதத்தை கௌடபாதரின் உரையுடன் கற்கவேண்டும். உத்கீதையால் வரும் பலனைப் பற்றி சாந்தோக்ய உபநிடதம் கூறுவதையும் நினைவில் நிறுத்தவேண்டும்.

பிரணவம் கீழ்-மேல் என இரண்டு வடிவங்கள் கொண்டது என்பர். நம் விழிப்பு நிலையையும் கனவனுபவத்தையும் கொண்டது கீழ் வடிவம். இது நனவுடனான நம் பந்தத்தை கிடைநிலையாக்க முயல்கிறது. இதன் விளைவாக, நம் புலன்களும் மனமும் வலி-இன்பம், நன்மை-தீமை எனும் இருமைகளால் தாக்கப்படுகின்றன. பிரக்ஞையையும் துரீயத்தையும் கொண்ட மேல் வடிவம் நனவை நிமிர்நிலையாக்கும் ஆற்றல்கொண்டது. எல்லா தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள வல்லது இது.

அடுத்த பாடலில் நிமிர்நிலையாக்கத்தின் ரகசியத்தை விளக்குகிறார் நாராயண குரு.