Tag Archives: நாராயண குரு

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

Standard

இருளில் இருப்பவனே யார் நீ?

என்றொருவன் கேட்க – நீயும்

அவனிடம் நீ யார்? என்கிறாய்

இரண்டிற்கும் விடை ஒன்றே!

                    (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10)

கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது  என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம்.  ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின் வெளிப்புற எல்லையை உங்களால் உள்ளிலிருந்து காணமுடியாது.  முற்றிருள் போன்ற ஒன்றில் எல்லாம் கலந்து விடுகின்றன.  ஆயினும் உங்கள் இருப்பு குறித்த கருத்தாக்கம் சற்றும் பாதிக்கப்படுவதில்லை.  அது அப்படியே இருக்கிறது.  நமது புலன்கள் மூலம் பெறப்படும் அனைத்து தரவுகளையும் நாம் கேட்கும் குரலாக குறுக்கிக் கொள்ளும் ஒரு சூழலை கற்பனை செய்துகொள்ளும்படி கோரப்படுகிறோம்.  தீண்டல், மணம், சுவை, பார்வை – எல்லாம் நம் மனதில் இருந்து நீக்கப்படவேண்டும்.

அத்தகைய சூழலில் உங்கள் இருப்பைக் குறித்து நீங்கள்  முழுமையான அறிதலுடன் இருக்கிறீர்கள். ‘நான்’ என்பதன்மூலம் அதை அடையாளம் காண்கிறீர்கள்.  இத்தகைய நிலையில் இன்னொருவனும் உண்டு என்று நீங்கள் உணர்வதாய் வைத்துக்கொள்வோம். உறுதிப்படுத்திக்கொள்ள ‘யாரங்கே?’ என்று வினவுகிறீர்கள்.  ‘நான்’ என்பதே நீங்கள் பெறும் விடை.  அதை நீங்கள் எங்ஙனம் புரிந்துகொள்கிறீர்கள்?  ‘நான்’ என்பது குறித்த உங்களுக்கேயான கருத்தாக்கத்தை வைத்தே அதை புரிந்துகொள்கிறீர்கள்.  அடுத்தவனும் உங்களது ‘நான்’ என்பதை தனது அனுபவத்துடன் ஒப்பிட்டே புரிந்துகொள்கிறான்.  இப்புரிதல் மூலம் நீங்கள்  அறிவுபூர்வமாய் புதிதாய் ஏதும் பெறுகிறீர்களா? உறுதியாக இல்லை.

நமது ஐம்புலன்கள் வழியாக நம்முன் வைக்கப்படும் எந்தவொரு கருத்தாக்கமுமாகவே திரியவும் மாறவும் வேண்டிய கட்டாயம் நம் நனவுக்கு எப்போது இருந்துகொண்டே இருக்கிறது. ‘அழகிய நீலத்தாமரை ஒன்றை நான் கண்டேன்’ என்று நான் சொல்வதை கேட்கும்போது நீங்கள் ஒரு தாமரை மலரையும் நீல வண்ணத்தையும் எண்ணித்தீர வேண்டியுள்ளது.  உங்களுக்கு  ஏற்பட்ட அனுபவத்தை நினைவில் மீட்டியெடுத்து அதனை பிற கருத்துக்களோடு சேர்த்துப்பார்க்கும் தேவை ஏற்படுகிறது.  உங்கள் மனதில் அனைத்தையும் ஒருங்கிணைத்து பின்னர் நீலத்தாமரை எனக்களித்த அனுபவத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்கவேண்டும்.  அப்போதுதான் ‘ஆம், அது மிக அழகாக இருந்திருக்கும்’ என்று உங்களால் சொல்ல முடியும்.

இது ஒரு அறிவுச்செயல்பாடாகத் தோன்றினாலும், இதிலுள்ள அக நோக்கு முழுவதும் அறிவுசார்ந்ததல்ல.  கல்வியைப்போல இது புறத்திருந்தல்லாமல் அகவயமாக அணுகப்படவேண்டும்.  அனைவருக்கும் பொதுவான அனைத்தையும் அறியும் அனைத்தையும் காணும் அனைத்தையும் உணரும் அகத்தில் தன்னை கரைத்துக்கொண்டால் மட்டுமே இதனை முழுதுணரமுடியும்.  அன்பெனும் பெருவெள்ளம் மடைதிறக்க, நீங்கள் அனைத்துடனும் ஒன்றுகிறீர்கள்.  கதவுகளை மூடி, சிலவற்றை சேர்த்து சிலவற்றை விலக்குதல் இதன் எதிரிணையாகும்.

குழந்தை தாயிடம் வந்து, ‘அம்மா, என் காது நோகிறது’ என்று சொல்லும்போது அன்னை புரிந்துகொள்கிறாள்.  எப்படி? அவளது காதில் நோவில்லை.  ஆனால் அதுபோன்ற வலியை அவள் முன்னர் அனுபவித்திருக்கிறாள்.  குழந்தை ‘எனது’ என்னும்போது தாய் கனிவுடன் தன் மனதுக்குள் ‘எனது’ என்று சொல்லிக்கொள்கிறாள்.  அந்த ‘எனது’ என்பதற்குள் வலி என்னும் அவளுடைய கருத்தாக்கத்தை நுழைக்கிறாள்.  அந்தப்புரிதலை குழந்தையின் வலியுடன் பொருத்திப்பார்க்கிறாள்.  நம் புரிதலில் உள்ளேற்றமும் வெளிக்காட்டலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.  இரண்டுமே முழுமையாக நம்முடைய ‘நான்’ என்னும் நனவையே சார்ந்தவை.  பல நினைவுத்தொடர்கள் மீட்டெடுக்கப்பட்டு இந்த ‘நான்’ எனும் நனவைச்சுற்றி கட்டமைக்கப்படுகின்றன.  இவ்வாறு மட்டுமே தாயானவள் குழந்தையின் வலியை புரிந்துகொள்ள முடியும்.  குழந்தையின் உணர்வை புரிந்துகொள்வதற்கென அவளால் தன்னிலிருந்து வெளியே நோக்குவதென்பதே இயலாது.

தாய் காணும் குழந்தையே அவளது புலன்காட்சித் தரவுகளுடன் கருத்துருவ நினைவுகள் கலந்த கலவைதான் என்பதை எளிதில் உணரலாம். செயல்நிகழ் உலகில் வலியுடனிருக்கும் சேயும், தன் உணர்திறனுடன் கூடிய தாயும் – குழந்தையைப் பேணும் தாயும் , அன்னையிடம் முறையிடும் சேயும் – வேறு வேறு பொருண்மைகள்.  இவை எல்லாம் ஏற்கக்கூடியவைதான் என்றபோதும் தத்துவரீதியாக இச்சூழலை ஆராய்வோமேயானால் தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நோக்கிநிற்கும் நனவாக குறுக்கியேயாகவேண்டும்.

இந்த நோக்கிநிற்கும் நனவு முந்தைய பாடலில் வாழ்வெனும் தருவினடியில் வைக்கப்பட்ட அதே நனவுதான்.  நமது பன்முகப்பட்ட அனுபவங்கள் அடங்கிய ஒரு முழுமையான கொள்கையாக இப்பாடலில் அது மீண்டும் தோன்றுகிறது.  நீங்கள் என்னை ‘நீ’ என்றழைக்கும்போது அதை ‘நான்’ என்று நான் புரிந்துகொள்கிறேன்.  நான் உங்களை ‘நீ’ என்றழைக்கும்போது நீங்கள் அதை ‘நான்’ என்று புரிந்துகொள்கிறீர்கள்.  ‘நீ’ ‘நான்’ என்று நாம் சொல்வதெல்லாம் கருத்தாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன.  இதுவே ‘மாயை’ எனப்படும் ஒரு புதிர்.  ஒரே ஒரு நனவு மட்டுமே செயல்படுகிறது.  ஆனால் அது தன் பகுதிகளை தன்னிலிருந்து பிரித்தறிந்து, ஆளுமைகளையும், பொருட்களையும், கருத்துக்களையும், நிகழ்வுகளையும் கட்டமைத்து அவற்றிலிருந்து தன்னை ஒரு தனி மெய்மையாக்கிக் கொள்ளும் இயல்புடையது.  பின்னர் தன்னால் உருவாக்கப்பட்டவற்றுடன் அது ஊடாடுகிறது.

ஒரு தாய் தன் சேயை தான் புரிந்துகொள்வதாக நினைக்கிறாள்.  உண்மையில் அவள் தன்னுடையதேயான  ஒரு இயல்பைத்தான் புரிந்துகொள்கிறாள்.  இதில் தவறொன்றுமில்லை.  இதுவே உண்மையான இயல்பும்கூட. நம் உயிரிகளின் ஊடாக செயல்படும் நனவு வேறாய் இருந்தால்தான் ஒருங்கிணைந்த முழுமை இல்லாமலாகும்.  பரஸ்பர புரிதலும் மானுட பரிவர்த்தனைகளும் சாத்தியமில்லாமலாகும்.  நாம் புரிந்துகொள்கிறோம் என்பதே நாம் ஒன்றுதான் என்பதற்கான சான்று.  அதேபோல் தாயும் சேயும் ஒன்றே.  நம் அனுபவங்கள் எல்லாம் ஒன்றே.

நோக்கிநிற்கும் அகத்தை நாம் இப்போது இன்னும் அருகாமையில் காண்கிறோம்.  அது பாதிப்படைவதும் அடையாமலிருப்பதும் எவ்வாறு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ‘என் காது நோகிறது’ என்று குழந்தை சொல்லும்போது தாய்க்கு அந்த வலியில்லை.  ஆனால் ‘இது என் குழந்தை’ என்ற எண்ணம் அவளுக்கிருக்கிறது.  என் உடல், என் கை, என் கண்கள், என் மனம், என் குழந்தை என ஒவ்வொன்றிலும் ‘எனது’ என்பதே விழிப்புணர்வு என்னும் வட்டத்தின் மையமாகிறது.  அவ்வட்டத்தின் உட்புறம் உள்ளதே நமக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.  ஏனென்றால் அது ‘நமது’.  வெளியிலிருப்பது ‘பிறிது’ என்றாகிறது.  ஆக, நான், பிறிது என்றும் எனது, எனதல்லாதது என்றும் நான், நானல்லாதது என்றும் நாம் பிரிக்கிறோம்.  இது தாந்தோன்றித்தனமானது. அவ்வட்டத்தை நீங்கள் சுருக்கலாம், விரிக்கலாம்; எவரையும் சேர்க்கலாம், விலக்கலாம்.  சேர்ப்பது அன்பெனப்படுகிறது, விலக்குவது அன்பற்றதெனப்படுகிறது.  வெறுப்பு என்பதும் ஒரு வகை சேர்த்தலே – ‘எனது எதிரி’ என்பதைப் போல.

சேய்க்கு வலி ஏற்படும்போது தாய்க்கு சடுதியில் அச்சம் ஏற்படுகிறது.  ‘இது ஆபத்தானதோ?  மருத்துவரிடம் செல்லவேண்டுமோ?’ குழந்தைகளுக்கு வரக்கூடிய கொடும் நோய்களையெல்லாம் அவள் எண்ணிப் பார்க்கிறாள்.  அவள் இயல்பிலேயே அச்சம் கொள்பவள் என்றால் அதுகுறித்து மீபதற்றம் கொள்ளக்கூடும்.  அமைதியானவள் என்றால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை உள்ளுணர்வால் அறிகிறாள். ஒருபுறம் நனவில் நம் இருப்பு அனைத்திலும் நம்மைக் காணும் விடுதலை உணர்வை வழங்கக்கூடும்.  நோக்கிநிற்கும் நனவு என்பது அனைத்திலும் ஒன்றே என அறிவது பெரும் திறப்பை நமக்களிப்பது. ஆனால், ‘எனது’ என்பதன் மீது நாம் கண்மூடித்தனமாக  பற்று கொள்ளும்போது  சிக்கல்கள் தோன்றுகின்றன. அப்பற்று முந்தைய பாடலில் சொன்ன அகப்புறக் கிளைத்தலான இருபுரிக் கொடியென எல்லா பிணைப்புகளையும் உண்டாக்குகிறது.  புறவயமாக தேவையற்ற பல செயல்களில் ஈடுபடுவதன் மூலம் பல சிக்கல்களும் வேதனையும் உங்களுக்கு ஏற்படுகின்றன.  அகவயமாக, உங்களை குழப்பத்திலாழ்த்தி பெரும் துயரை தோற்றுவிக்கும் திரிபுக்கற்பனைகளும் அச்சம்தரும் எண்ணங்களும் உண்டாகின்றன.

குரு இப்போது நம்மை எல்லா பரிமாணங்களிலும் பரவி அனைத்தையும் தன்னுள் அடக்கவல்ல நம் நனவின் கருவருகே கொண்டுவந்து நிறுத்துகிறார்.  நாம் மொத்த அனுபவத்தையும் முழுவிழிப்பின் அனுபவமாக காணலாம்.  அல்லது, புலன்தரவுகளால் உண்டாகும் கருத்தியல் அறிவின் நிறமாற்றங்களின் பாதிப்புக்குள்ளாகிய ‘நான்’ என்னும் நனவின் சாயம் பூசப்பட்ட அனுபவமாகவும் காணலாம்.  நாம் மீண்டும் மீண்டும் தூயதான நோக்கிநிற்கும் நனவை நோக்கியே செல்லவேண்டும்.  அப்போதுதான் மேலோட்டமான இருப்பின் அவஸ்தைகளால் பாதிப்படையாமல், அதே நேரத்தில் வாழ்வின் இன்றியமையா கூறுகளில் பங்கெடுப்பதற்கு எப்போதும் தயாராக நம்மால் இருக்கமுடியும்.

நோக்கிநிற்கும்போதே செயல்படுவதும், விலகியிருக்கும்போதே புலன்கள்மூலம் பெறும் தரவுகளை ஆராய்வதுமான இரு எதிரிடைச் செயல்பாடுகளில் ஒரு சமநிலையைப் பேணுவது என்பது எளிதல்ல.  நம் அகத்தே இரு ஆளுமைகளாக – ஒன்று அமைதியாக இருக்க மற்றொன்று செயல்களில் ஈடுபடுவதாக – பிரிவது போன்றது இது.  உளவியலாளர் இதை பேதப்பித்து (schizophrenia) நோயாக்க் காண்பர்.  ஒரு வேதாந்திக்கு இது ஒரு நோயல்ல; வெகு இயல்பான ஒன்று.  நம்மில் இரு மடிப்பிலான செயல்பாடு உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.  அகத்தின் செயல்பாடுகள் குறித்து நம் உளவியலாளர்களுக்கு சரியாக கற்பித்தோமேயானால், மக்களை அவர்கள் பேதப்பித்து நோயாளிகள் என்று சொல்லி வதைக்காமலிருப்பர்.  இதுபற்றி பின்னால் விரிவாக நாம் காணலாம்.  தற்போதைக்கு இப்பாடலின் பொருளிலிருந்து விலகிச்செல்ல வேண்டாம்.  ஆத்மோபதேச சதகம் குறித்து ஒரு பதங்க(sublime) திட்டம் நாராயணகுருவிற்கு இருந்தது.  நாம் முடிந்தவரை அதை ஒட்டியே செல்வோம்.

‘நீ’ ‘நான்’ என்பதை இரண்டாகக் காணும் நம் அறியாமையின் ரகசியம் குறித்து நாமறிந்திருக்கவேண்டும் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்.  ‘நீ’யும் ‘நானு’ம்  ஒன்றுதான் என்ற ஞானத்தின் ரகசியத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும் என்கிறது.  இவ்விரு ரகசியங்களையும் நாமறிந்திருக்காவிடில், அபத்தமான சூழல்களில் நாம் சிக்க நேரிடும்.  ஒருங்கிணைந்த புரிதல் என்பது செயல்நிகழ் உலகிலிருந்து தாவி வேறேதோவாக மாறுவதல்ல.  அனைத்திலும் உறையும் ‘நான்’ என்பதை நீங்கள் உணர்ந்ததும் உலகம் ஆவியாகிப் போவதில்லை.  அது அப்படியேதான் இருக்கிறது.  எனவே,  அதனோடு ஒத்துவாழ்ந்துதான் ஆகவேண்டும்.

அதே சமயத்தில், உங்களுடையதேயான கருத்தாக்கங்கள் கொண்டு நீங்கள் கட்டமைக்கும் உலகைத்தாண்டி வேறொன்றும் இல்லை என்பதே உண்மை.  இது, ஒரு நாவலாசிரியனோ நாடகாசிரியனோ தன் கற்பனையில் படைக்கும் கதைமாந்தர்களின் எல்லையை சில அத்தியாயங்களுக்குப் பின் உணர்வது போன்றது.  கதைமாந்தர்களிடம் அவனுக்கு ஏற்படும் கடப்பாடு எந்த மாற்றத்தையும் செய்ய அவனை அனுமதிப்பதில்லை.  ஆசிரியனின் நோக்கோ தரிசனமோ விரிவடைய கதைமாந்தர் ஒப்புவதில்லை.  அது அவனது படைப்புதான் என்றாலும் அவனால் படைக்கப்பட்டவையாலேயே அவன் ஆதிக்கம் செய்யப்படுகிறான்.  அதேபோல், நாம் நம்முடையதேயான உலகை படைக்கிறோம், பின் அதைக்கண்டு அஞ்சுகிறோம்.  அல்லது அதில் அகப்பட்டுக்கொண்டு அதை எப்படி கையாள்வது என்பதறியாமல் திகைக்கிறோம்.  இது ஒரு பெரும் புதிரான சூழ்நிலை.

நோக்கிநிற்கும் நனவின் மூலம் நீங்கள் அறியவந்த ஒருமை குறித்தும் உங்களால் படைக்கப்பட்ட உலகினாலேயே உங்களுக்கு இன்னல்கள் வரும் அதிசயம் குறித்தும் தியானிக்க வேண்டும் என்பதே இப்பாடலில் கூறப்படுகிறது.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

Standard

ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும்
குழலில் புகுந்து மாறிமாறியாடும்
கிளிகளைந்தையும் வீழ்த்தி
வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும்
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 8)

ஆத்மோபதேச சதகத்திற்கு அறிமுகம் போல் அமைந்துள்ள முதல் பத்து பாடல்களில் எட்டாவது மிகவும் முக்கியமானது. இதில், நிமித்தவியல் (teleological) இலக்குடன் ஓர் இருத்தலியல் (ontological) மதிப்பீடு செய்யப்படுகிறது. அழகியலும் அறவியலும் மெய்விளக்கவியலுடன் இணைகின்றன. அத்துடன், நூலின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மாதிரியாக விளங்குகிறது இப்பாடல். மனிதன் அடையும் இன்பதுன்பங்களின் ரகசியத்தை விளக்கும் உள உணர்ச்சியின் ஆற்றல் சுழற்சியை ஒரு கூர்ந்த வாசகனால் அவதானிக்கமுடியும். விடுவிக்கப்படவேண்டிய புதிர்களும் பல உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.

முதலில், இப்பாடலில் உள்ள உருவக முழுமையை அறிவோம். கிளைகளைச் சுற்றி பறவைகள் அலைய வேடன் ஒருவன் அடியில் நின்றிருக்கும் மரமொன்றுதான் உருவகம். மேலுள்ள பழங்களும் கீழுள்ள வேடனும் செங்குத்து அளவுருவை குறிப்பவை. மரத்திலுள்ள ஐவகை கனிகள் ஐம்புலன் ஆர்வங்களை குறிப்புணர்த்துபவை. பறவைகள் பொருந்தியிராமல், புலன் கனிகளை நுகர்ந்தபடி, இங்குமங்கும் பறந்தலைகின்றன. பறவைகளின் நகர்வின் வீச்சை இருத்தலியல் நிலையில் வாழ்வின் வேட்கைகள் கைகூடும் கிடை நிலை அளபெல்லையாக கொள்ளவேண்டும். இங்கே ஒரு கலப்பு உருவகத்தை கையாள்கிறார் குரு. மரமொன்றையும் உணவுக்குழாயை நினைவுறுத்தும் துப்பாக்கிக் குழலையும் மாறி மாறி பயன்படுத்துகிறார். இவ்வுருவகத்தினை மேலும் கூர்ந்து கவனிக்கும்போது அருகருகே வைக்கப்பட்டிருக்கும் முரண்கள் பளிச்சிடுவதை காணலாம். வாழ்வு, வளர்ச்சி, கனிதல் என்பனவற்றின் குறியீடு மரம். அதற்கெதிரானதாக நிச்சயமின்மை, அழிவு ஆகியவற்றின் குறியீடு துப்பாக்கி. இவ்விரு தன்மைகளும் மெல்லிய கோட்டுச்சித்திரமாக இணைத்துக் காட்டப்படுகின்றன. மரத்தின் கீழ் நிற்பவன் சுவைப்பவன்; ஐந்து பறவைகளும் அவனது புலன் தேடல்கள். அவன் தனது புலன் வேட்கைகளுக்கு எதிராக செயல்படவேண்டியவனாகிறான். ஆக, இரு உளக்குறிப்புகளும் மரத்தடியில் நிற்பவனுக்கும் பறந்தலையும் பறவைகளுக்கும் இடையேயான உறவின் மூலம் ஓரிடத்தில் வைக்கப்படுகின்றன. இதிலிருந்து புலன்களை ஒறுத்தல் ஒருவனை பேரிருளில் ஆழ்த்திவிடும் என்ற தோற்றம் உருவாகிறது. ஆனால், ஐந்து பறவைகளை வீழ்த்துவதன் மூலம் ஒருவனில் ஒளி நிறைகிறது என்பதும் சுட்டப்படுகிறது. ஆக, இவ்வுருவகத்தில் பறவைகளும், பழங்களும், மரமும், துப்பாக்கிக் குழலும், அழிவும், ஒளிர்தலும் என ஆறு கூறுகள் உள்ளன.

இந்த நூலில் விரியும் அழகியலுக்கும் அறவியலுக்குமான அடித்தளத்தை இப்பாடலில் இடுகிறார் குரு. அழகியலானது முதலில் Kantian நோக்கிலும் பின்னர் அக்கருத்து வரலாற்று ரீதியாக அடைந்த மாற்றங்களின் அடிப்படையிலும் கையாளப்படுகிறது.

நம் அறிவு இரு கூறுகளை கொண்டது. ஒன்று நமது உள்ளுணர்வின் மூலம் நாம் அடையப்பெறுவது; மற்றொன்று நம் உணர்திறன் நமக்களிக்கும் அனுபவம். பெரும்பாலும் இவை இணைந்தே இருக்கின்றன. ஒரு உணர்வின் பொருளை உள்ளுணர்வின் உதவியுடன் அறியும்போது அனுபவம் ஒன்றை பெறுகிறோம். பெயர்களும் வடிவங்களும் கொண்ட பொருட்களுடனேயே நாம் பொதுவாக உணர்ச்சிகளை தொடர்புறுத்திக்கொள்கிறோம். காரண காரியத் தொடர்புகளில் உள்ள பொருட்களுக்கும் கருத்துகளுக்கும் இடையேயான தொடர்பின் தர்க்க ரீதியான பொருத்தப்பாட்டினை மனம் அறிய உதவும் இயற்கையான கருவியாகவே உள்ளுணர்வு கருதப்படுகிறது. கான்டை பொறுத்தவரை உள்ளுணர்வையும் உணர்திறனையும் குறித்த முன் கூற்று (a priori) கோட்பாடுகள் உண்டு. தூய உணர்திறனை தூய உள்ளுணர்வு என்றே அவர் கருதுகிறார்.

Thus, if I take away from our representation of a body all that the understanding thinks as belonging to it, as substance, force, divisibility, etc., and also whatever belongs to sensation, as impenetrability, hardness, colour, etc., yet there is still something left us from this empirical intuition, namely, extension and shape. These belong to pure intuition, which exists a priori in the mind, as a mere form of sensibility, and without any real object of the senses or any sensation.

The science of all the principles of sensibility a priori, I call transcendental aesthetic. There must, then, be such a science forming the first part of the transcendental doctrine of elements, in contradistinction to that part which contains the principles of pure thought, and which is called transcendental logic.

In the science of transcendental aesthetic accordingly, we shall first isolate sensibility or the sensuous faculty, by separating from it all that is annexed to its perceptions by the conceptions of understanding, so that nothing be left but empirical intuition.

(Great Books of the Western World, ed. Robert Maynard Hutchins)

கான்ட் தனது Critique of Pure Reason எனும் நூலில் விளக்கும் புலனறிவின் அடிப்படை இயல்பை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. ஒரு அனுபவத்தை விளங்கிக்கொள்வதில் ஒருவரது அகச்சார்பு எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை அது தெளிவாக்குகிறது.

In order to prevent any misunderstanding, it will be requisite, in the first place, to recapitulate, as clearly as possible, what our opinion is with respect to the fundamental nature of our sensuous cogitation in general. We have intended, then to say that all our intuition is nothing but the representation of phenomena; that the things which we intuit, are not in themselves so constituted as they appear to us; and that if we take away the subject, or even only the subjective constitution of our senses in general, then not only the nature and relations of objects in space and time, but even space and time themselves disappear; and that these, as phenomena, cannot exist in themselves, but only in us. What may be the nature of objects considered as things in themselves and without reference to the receptivity of our sensibility is quite unknown to us. We know nothing more than our own mode of perceiving them, which is peculiar to us, and which, though not of necessity pertaining to every animated being, is so to the whole human race. With this alone we have to do. Space and time are the pure forms thereof; sensation the matter. The former alone can we recognise a priori, that is antecedent to all actual perception; and for this reason such cogitation is called pure intuition. The latter is that in our cognition which is called cognition a posteriori, that is, empirical intuition. The former appertain absolutely and necessarily to our sensibility, of whatsoever kind our sensations may be; the latter may be of very diversified character. Supposing that we should carry our empirical intuition even to the very highest degree of clearness, we should not thereby advance one step nearer to a knowledge of the constitution of objects as things in themselves. For we could only, at best, arrive at a complete cognition of our own mode of intuition, that is, of our sensibility, and this always under the conditions originally attaching to the subject, namely, the conditions of space and time, while the question: ‘What are objects considered as things in themselves?’ remains unanswerable even after the most thorough examination of phenomenal world.

முதல் வரியில் உள்ள ‘ஒளிமுதலாய’, ‘பழமைந்தும்’, ‘உண்டு’ என்னும் மூன்றிற்கும் இடையே உள்ள அழகியல் தொடர்பை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒளி என்பது உணர்ச்சியுடன் தொடர்புடையது. அது தனி கருத்தாக இருப்பதில்லை. ஒளியால் கவரப்படும் ‘நான்’ என்னும் அதன் இணையை குறிப்புணர்த்துகிறது. ஒளியைக் கண்டவுடன் தோற்றுவிக்கப்படும் ஒரு சங்கிலி நிகழ்வைக் குறிப்பது ‘முதலாய’ என்பது. அதைத் தொடர்வது உண்ணத்தக்க பழம். ஒளியும் பழமும் அருகருகே வைக்கப்படும்போது இனிய சூழல் ஒன்று உருவாக்கப்படுகிறது. சொல் அளவிலேயே, காண்ட் கூறும் கடந்தநிலை அழகியல் (transcendental aesthetics) – முன்கூற்று – பேணப்படுகிறது.

இப்பாடலில், மெய்ப்பொருள் அவாவின் மேல் ஒரு உள இயல் நிகழ்வு (psychological phenomenon) எழுகிறது. ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பாங்கு அதை தொடர்கிறது. மிக நுண்மையாக இங்கே குறிப்புணர்த்தப்படுவது ஒருவர் தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ள விழையும் நினைவுகளைத் தூண்டும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. துப்பாக்கி வெடிப்பதுபோல சடுதியில் மரணம் நினைவுறுத்தப்படுகிறது. சர்க்கஸ் கோமாளியின் கவனத்தை திடீரென கொலைக்களத்தின் இயல்புக்குத் திருப்புவது போன்றது இது. வெளித்தோற்றத்திற்கு பெரு மகிழ்வுடன் வாழ்வின் எளிய விஷயங்களில் மூழ்கியிருப்பவன் எந்நேரமும் நிகழக்கூடிய பெருந்துயர் பற்றி அடிக்கடி நினைவுறுத்தப்படுகிறான். இது தனித்துவம் வாய்ந்த தருணம் என்றாலும் வாழ்வில் மிகவும் இயல்பாய் நிகழ்வது. எதிரெதிர் வரும் தவிர்க்க இயலாதவை இரண்டு தன்முனைப்பால் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கின்றன. அத்தன்முனைப்பு ஆதி நினைவுகளின் அறுதியிடப்பட்ட வற்புறுத்தல்களுக்கும் நிகழ்வுச் சங்கிலியின் துயரத்தை அதிகரிக்காமல் தாண்டிச்செல்ல முடியாத அறம்சார் இச்சைகளுக்கும் நடுவே சிக்கிக்கொண்டிருக்கின்றது. ஒன்று ”இன்பமாய் இரு” என்கிறது; இன்னொன்று “அனைத்தையும் துற” என்கிறது. இது இடையறா குழப்ப நிலை.

இப்பாடலில் எளிமையாக கூறப்படும் சிக்கல் பின்னால் 69 & 70-ஆம் பாடல்களில் விரிவாக பேசப்படும். 69-ஆம் பாடலில் புலனுறுப்புகள் இன்பத்தேரொன்றில் பிணைக்கப்பட்ட குதிரைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. அதில் பயணிக்கும் தன்முனைப்பு எப்போதும் இன்ப நுகர்வையே தேடும் ஆன்மாவின் நிழலாக விவரிக்கப்படுகிறது. அந்த ரதம் சிற்றின்பங்களைத்தேடியே பயணிப்பதை தடுக்கமுடிவதில்லை. 70-ஆவது பாடலில் அவ்வின்ப நுகர்வு மாயத்திறன் கொண்ட இயல் நிகழ்வாய் சுட்டப்படுகின்றது. அவ்வியல் நிகழ்வு உள்ளுறுப்பாகவும், புலன்களாகவும், உடலாகவும் அதன் பலவகைப்பட்ட இன்ப நாட்டங்களாகவும் விரிகிறது. புலனழகு போன்ற பழங்களை ருசிக்கும் ஐந்து பறவைகளை எண்ணும்போது நாம் இவ்விவரிப்புகளை மனதில் கொள்ளவேண்டும்.

பறவைகளின் இயக்கம் – ‘நயேன’ – நழுவுதலை குறிக்கிறது. ‘நய’ என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டது. அது அரசுசூழ்தலையும் குறிக்கும். புறத்தோற்றத்திற்கு ஒருவன் அறம்வழி நிற்பதுபோல் தோன்றினாலும் மனதளவில் கபடம் நிறைந்தவனாக இருப்பதை இது சுட்டுகிறது. தீவிர காமவேட்கையின் தடுப்பாற்றலாக உள்ளது ‘நய’. புனித குரானில் இத்தகைய கபடத்தைப் பழிக்கும் நூற்றுக்கணக்கான வரிகளை காணலாம். ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள நினைப்பவன் கபடமற்ற எளிமையுடன் இருத்தல் அவசியம்.

தன்முனைப்பின் (ego) நரம்பியல் செயல்பாட்டில் புலனாகும் ஆழ்மனதிற்கும் மீதன்முனைப்புக்கும் இடையேயான மோதல் பற்றி ஃபிராய்ட் கூறுவது ‘நய’ என்பதை புரிந்துகொள்ள உதவும். மீதன்முனைப்பின் ஒழுக்க அதிகாரத்தின் இயக்கம் என்பது பிறரது எதிர்பார்ப்புகளின் பொய்யான வடிவத்தை அகத்தில் ஆடிப்பாவையாகக் காண்பது போன்றது. அதன்பின்னர் ஒருவன் அப்பாங்கின் தேவைகளுக்கேற்ப நடந்துகொள்ள முயல்வதோடு தடைசெய்யப்பட்ட இன்ப நாட்டங்களில் ரகசியமாய் திளைக்கிறான். அவற்றிற்கு தியாகப் பூச்சையும் தீட்டி ஒளிரக்கூடியதாய் பிறர் ஏற்றுக்கொள்வதாய் ஆக்குகிறான். தன்னையும் பிறரையும் ஒரே சமயத்தில் நிறைவடையச் செய்ய முயல்வதென்பது ஸ்ஃபிங்க்ஸ்(Sphinx)-ஐப் போலவே புதிரானது. இத்தகைய அற உணர்வையே ஹென்றி பெர்க்ஸன் மூடியதும் நிலைத்த தன்மை கொண்டதுமான உணர்வு என்பார். இது திறந்ததும் இயங்கிக்கொண்டேயிருப்பதுமான தற்சார்பியலாளரின் அற உணர்வுக்கு எதிரானது. மெய்யுணர்வுடையவனின் அறம் என ஈசாவாஸ்ய உபநிடதம் சொல்லும் ‘சத்ய தர்மத்தை’யே நாம் பின்பற்ற வேண்டும் என்பது நாராயண குருவின் அவா.

புலன் அவாக்களான ஐந்துகிளிகளால் மகிழ்ந்துண்ணப்படும் உணர்வுகளென முதலிரு வரிகளில் காட்டப்பட்ட இன்பநுகர்ச்சிகளில் உள்ள ஆவலை அழித்தலே இப்பாடலில் இறுதி அறிவுரையாக கூறப்படுகிறது.  ‘கீழ்மறிக்கும்’ என்பதன் நேர்பொருள் குறைத்தல் என்பது.  ‘தலைகீழாக்குதலும்’ குறிப்புணர்த்தப்படுகிறது.  ஃபிராய்டின் கருதுகோள்களான நனவிலி, உள்ளுணர் நனவு, உணர்நிலை இவற்றைக்குறித்த சொல்கோளவியல் மற்றும் கிடைநிலையாகவும் செங்குத்தாகவும் நிகழும் அகஆற்றல் நகர்வு மூலம் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம். இவ்விடத்தில், ஃபிராயட் கூறும் ஆழ்மனம் (id) என்பதை, வெவ்வேறு முதிர்வுநிலைகளில் உள்ள ‘கர்மா’க்களின் ஆற்றல்களை தன்னுள் கொண்ட துவக்கநிலை நினைவுகள் என்றே கொள்ளல்வேண்டும்.

நனவு நிலையின் இருப்பிடம் பற்றி ஃபிராய்ட் பேசுகிறார்.  ஆனால் நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது.  ஒன்றின்மீது ஒன்று பற்றுகொண்ட இரு வகை ஆற்றல் இங்கே பேசப்படுகிறது.  ஒன்று மகிழ்விக்கும் பொருளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒளி.  இதனை நடத்தையியலாளர் உணர்வுகளைத் தூண்டும் ஊக்கி என்பர்.  இன்னொன்று ஆற்றலின் அளவு. இதனை ஃபிராய்ட், தனியரின் நனவிலி ஆழத்திலிருந்து தோன்றி உடல்சார் ஊக்கியின் ஊற்றுமுகம் நோக்கிச் செல்லும் இன்ப இயல்பூக்க மன அவா என்று அடையாளம் காட்டுவார்.

இதனை எளிதில் புரிந்துகொள்ள தென்னிந்தியாவில் பயிரிடப்படும் ஒரு வகை எள்ளுச்செடியை உதாரணமாகக் கூறலாம்.  பொதுவாக பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்படும் அது ஏப்ரலில் பூக்கும். தவறுதலாக இவ்வகையை மே மாதத்தில் பயிரிட்டுவிட்டால் அது பூப்பதற்கு அடுத்து வரும் ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டியதுதான்.  எனவே, ஒரு விதை தனது பண்புகளை வெளிப்படுத்த இயற்சூழல் மட்டுமே காரணியல்ல என்பது தெளிவு.  அதனுள் அதன் தகவமைப்பின் மரபியல் குறியாக்கம் உறைகிறது.  அதேபோல், ஒவ்வொரு துவக்கநிலை நினைவும் அதற்கேயுரித்தான புலனின்ப அவாவை வெளிவிடுவதில் ஒரு ஒத்திசைவு உள்ளது.

இது நிகழ்கையில் – ஆர்வம் ஒன்றை எதிர்கொள்ளும்தோறும் ஆற்றல் குறைகிறது.  ஒரு குறிப்பிட்ட பரப்பிலிருந்து ஆற்றலை எடுக்கும்போது அவ்வளவுடைய ஆற்றலை அது இழக்கிறது. இவ்வகையில் நோக்கும்போது, மிகையான இன்ப நுகர்வு தொடர்ந்து ஒருவரது ஆற்றலிருப்பை குறைத்து சோர்வடையச் செய்கிறது.  ஆக, இதில் சுயஅழிவு என்னும் புதிர்த்தன்மை உள்ளது.

சில சமயங்களில் இன்ப இயல்பூக்க ஆற்றலின் வெளிப்பாடு வெளியில் உள்ள பொருள் எதன்மீதுமாக அல்லாமல் உள்ளுக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கிறது.  சில நோயாளிகள் சுயஇன்பத்தில் ஈடுபடும்போது மட்டுமே இது நிகழ்வதை ஃபிராய்ட் கண்டார்.  இதில் அவர் உடல் உள்ளம் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார். இது சாதாரணமான பிழைபுரிதல்தான். ஆயினும், இன்பநுகர்வை சுயதூண்டல் மூலம் மட்டுமே பெறுவது என்பதும் ஒரு புறவய வெளிப்பாட்டை நோக்கி ஆற்றலை செலுத்துவதுதானே தவிர ஒருவரது அகத்தை நோக்கி செலுத்துவதல்ல.  ஆக, ஃபிராய்டினுடையது முழுமையான பார்வை அல்ல.

அகத்தே உறையும் எல்லா ஆர்வங்களையும் ஒருமுகப்படுத்தி, ஆற்றலை பாதுகாத்து அதை உள்நோக்கி செலுத்தும் ஒரு ஆரோக்கியமான வழிமுறையை இங்கே நாராயண குரு பரிந்துரைக்கிறார். இது ஒரு உன்னதமயமாக்கலை நிகழ்த்துகிறது.  உளவியலாளர்கள் இது குறித்து பெரிதும் ஆராயாமல் விட்டது துரதிருஷ்டமே.  இதன் ஆழம் பற்றி அறிந்திருந்த ஆல்ஃபிரட் ஆட்லர், தாஸ்தயேவ்ஸ்கியின் நுண்ணுணர்வை ஆராய்ந்து கூறும்போது இதுபற்றி குறிப்பிடுகிறார்.

இன்ப மயக்கம் ஒன்று தன்னை வாழ்வுணர்வின் எல்லைக்கே இட்டுச் சென்றதாகவும் அங்கே தான் இறைக்கு மிக அருகே இருந்ததாக உணர்ந்ததாகவும் இன்னும் ஒரு அடி எடுத்துவைத்திருந்தாலும் தான் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கக்கூடும் என உணர்ந்ததாகவும்  அவர் விளக்குகிறார்.  அவரது கதாநாயகர்கள் அனைவருக்கும் இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகமிக முக்கியமானது.

இத்தகைய ஆழத்திற்குச் செல்வது வலிப்புநோய் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்; அல்லது புறநனவு பெரும் அகஎழுச்சியாக மாறி உடலை அதிரச்செய்யும் அளவுக்கான உயர் ஆன்மீக ஈர்ப்பாக இருக்கலாம்.  வெள்ளைநாரைகள் கருமேகங்களின் பின்னணியில் ஒரே சீராக பறப்பதைக்கண்ட ராமகிருஷ்ணர் மெய்மறந்து நின்றார்.  இத்தகைய அனுபவத்தில் ஆற்றல் புறப்பொருளிடம் செல்வதில்லை.  மாறாக, அது ஆன்மாவின் சுழியில், அகத்தில் உள்முகமாக ஈர்த்துக்கொள்ளப்படுகிறது.  புற ஊக்கியின் மூலம் பெறப்படும் புலனுணர் அனுபவத்திற்கு பதிலாக, மொத்த அகப்பரப்பும் ஒருவரது மீஅடிநனவின் மையம் நோக்கி சுருண்டு குவிகிறது. ஒருவரது அகமும் புறமும் பேரின்ப சுயத்தின் நீட்சி என்ற உணர்வேற்படுகிறது.  Face of Silence எனும் நூலில் தன் கோபால் முகர்ஜி, ராமகிருஷ்ணரின் மற்றொரு அனுபவத்தை விவரிக்கிறார்:

பார்த்த இடமெல்லாம் ராமகிருஷ்ணர் ஒளியையே கண்டார். ‘நான் உன்னை கண்டடைந்தேன்’ என மீண்டும் மீண்டும் கதறியபடி அவர் கோவிலின் வெளியே ஓடிவந்தார்.  சென்ற இடமெல்லாம் ஒளியையன்றி பிறிதொன்றை அவர் காணவில்லை.  கங்கை ஒரு தங்க அரிவாள் போல தெரிந்தது.  அவர் நின்ற கரை ஒரு சுடர்ப்பாறையாக ஆனது. தொலைவிலிருந்த மரங்கள், நதியின் நடுவே சென்றுகொண்டிருந்த படகுகள், அதை செலுத்தியவர்கள், வானில் ஊர்ந்த பறவைகள் எல்லாம், ஏன் அவ்வானமே கூட இறையொளியால் கைக்கொள்ளப்பட்டு ‘நான் உன்னை கண்டடைந்தேன்’ என இசைத்தன. அவர் தொல்முனிவரின் பாடலைப் பாடினார்:

அழிவில்லாமையின் மைந்தரே, என்சொல் கேளீர்!

அனைத்திலும் உயர்ந்த அவனை நான் கண்டடைந்தேன்

வானுறை தெய்வங்கள் கூட எளியனவாகிவிட்டன இப்போது

கதிரவன் தழுவிய ஒருவனை நான் கண்டடைந்தேன்!

தன் கோபால் முகர்ஜியின் இவ்வரிகள் ஞானியின் அகம் கொள்ளும் வியப்பினை கவித்துவமிகையுடன் கூறுவதாக இருந்தாலும் இது ஒரு ஆன்மீக மாற்றத்தின் மெய்யனுபவ விவரிப்பே! இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் நாராயண குரு.  ஆர்வம் தூண்டும் பொருளுக்கும் அகத்தின் இன்ப அனுபவத்திற்கும் இடையில் ஒரு விகுதி/பகுதி உறவுண்டு. ஆர்வப் பொருள் என்பது விகுதி, இன்பம் நாடும் தன்முனைப்பு சார்ந்த அகமாக நனவிலியில் மறைந்திருப்பது பகுதி. மீயுயர் அகமே அனைத்தின்பத்திற்கும் அடிப்படையாக மாறும்போது சுயம் விகுதியாக முன்னால் நிறுத்தப்படுகிறது.  தொடக்கத்தில் சுயத்தையும், அதன் அறிதலையும், பேரின்ப இயல்பையும் ஒருங்கிணைந்த முழுமையாக நிமிர்த்துவதற்குக் காரணமாக இருந்த பொருள் தன் தனித்தன்மையை ஒழித்து, சாரத்திற்கு முந்தைய இருப்பு என்னும் பகுதியாகிறது.

நடராஜ குருவும் நானும் – 14

Standard

மத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார்.  தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகைய அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார்.  பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர்.  குரு வருவதைப்பற்றி அவர்களிடம் சொன்னதால் அவர்கள் ஒரு வரவேற்பு விழாவை ஒருங்குசெய்தனர்.  அதில் பேசிய குரு நாராயண குருவின் பெயரை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே பார்ப்பதோடு ஒரு பழங்குடித்தலைவராகக் கருதுவதாகவும் கடிந்துகொண்டார்.

நடராஜ குரு என்னுடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு ஒப்புக்கொண்டது பிற சன்னியாசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. ஆங்கிலம் அறியாத அவர்களுடன் ஹிந்தியில் பேசி சமாளித்தார் குரு.  பொருத்தமான ஹிந்தி சொல் தெரியாத இடங்களில் சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தினார். அவர்களின் புலமையையும் மரபான முறையில் வேதாந்தத்தைக் கற்பித்தலையும் கண்டு மகிழ்ந்த குரு அவர்களிடமிருந்து அனைத்து செவ்வியல் ஆக்கங்களையும் கற்க என்னை ஊக்குவித்தார்.

நான் தங்கியிருந்த ‘பிரேம் குடீர்’ ஆசிரமத்தில் முதலில் என்னை வரவேற்ற நண்பர், நான் நினைத்ததுபோல ஒர் மேலாளர் அல்ல; ‘தேவிதயாள் கேபிள்ஸ்’ எனும் நிறுவனத்தின் தலைவரான பெரும் செல்வந்தர். அவர் குருவால் பெரிதும் கவரப்பட்டார்.  குருவுக்கான பணிவிடைகள் அனைத்தையும் அவரே செய்தார்.  குருவுக்கு ஆங்கிலமும் ஃபிரெஞ்சும் தெரியும் என்பதால் பல இடங்களில் அவரது சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார்.  அது எனக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.  ஒவ்வொருநாளும் புதிய பொருள் குறித்து தனித்துவம் வாய்ந்த உரைகளை ஆற்றினார் குரு.  தத்துவமும் உளவியலும், நவீன அறிவியலும் தொல் ஞானமும் கச்சிதமாகக் கலந்து வழங்கப்பட்ட உரைகளைக் கேட்டவர்கள் குருவுடன் அதிக நேரம் செலவிட விரும்பினார்கள்.  பஞ்சாபியரும் குஜராத்தியரும் மராட்டியரும் வங்காளத்தவரும் கலந்த ஒரு பெருநகரத்திற்கு குருவை வரவழைத்ததில் என்பங்கு குறித்து மிகவும் மகிழ்ந்தேன்.

நான் உறுப்பினனாய் இருந்த டாடா நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் இருந்து பல நூல்களை எடுத்துவந்து குருவிடம் அளித்து, மிகக்குறுகிய நேரத்தில் ஒரு நூலின் சாரத்தைப் பெறுவது எப்படி என்பதை கற்றேன். பின்னாட்களில் லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கும் நான் பணியாற்றிய பல்கலைக்கழக நூலகங்களுக்கும் சென்றபோது இது எனக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது.  நான் பம்பாயில் தொடர்ந்திருக்க குரு என்னை அனுமதித்தார்.  விழியற்றோருக்கு சேவை செய்வதாக பசப்புவதைவிட்டு நாராயணகுருவின் கொள்கைகளைப் பரப்புவதில் கவனம் செலுத்தக்கோரினார்.  அந்நாட்களில் பம்பாயில் இருந்த பல விழியற்ற மாணவர்களுக்கு படிப்பாளனாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தேன்.  அவர்கள் எல்லோரையும் குரு மகிழ்வுடன் சந்தித்தார்.  ஆக, விழியற்றோருடனான என் உறவு அவ்வளவு மோசமாக இருக்கவில்லை.

நான் பம்பாயில் இருந்தபோது, குறுகிய காலம் திரு மங்கள்தாஸ் பக்வாஸா பம்பாயின் ஆளுநராக இருந்தார்.  அவர் ஓய்வுபெற்றபோது திரு ஶ்ரீபிரகாசா ஆளுநர் பொறுப்பேற்றார்.  அவர்கள் இருவருமே என்னிடம் பெரிதும் நட்பு பாராட்டினர்.  அப்போது நடராஜ குருவின் ‘Education Manifesto’ எனும் நூல் வெளியாகி இருந்தது. ஆளுநர் தலைமைதாங்கிய ஒரு கூட்டத்தில் நான் குருவின் கல்விக் கொள்கைகளைப் பற்றி பேசினேன். ஆளுநரை அது பெரிதும் கவர்ந்தது.  கூட்டம் முடிந்தபின் ராஜ்பவனில் தன்னுடன் விருந்துண்ண அழைத்தார் ஆளுநர்.  அப்போதும் குருவின் கொள்கைகள் பற்றி பேசினோம்.  பம்பாயில் ஒரு பள்ளியைத் தொடங்கி அதில் குருவின்  கொள்கைகளை சோதனை செய்துபார்க்க வேண்டும் என்றார்.  நான் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

பள்ளியை நடத்துவதற்காக திரு ஹரிகிஷன்தாஸ் அகர்வால் ஐந்து அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை எனக்களித்தார்.  பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளும் ஒன்றாகப் பயிலவேண்டும் என்பதே எங்கள் திட்டம்.  பம்பாயின் செல்வந்தர்கள் கட்டணம் குறைந்த பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை.  எனவே, மற்றெந்தப் பள்ளியைவிடவும் அதிகமான அளவில் கட்டணம் நிர்ணயித்தோம்.  ஆனால் ஏழை மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு நாங்கள் வடிவமைத்த சீருடையும் இலவசமாக வழங்கப்படும்.  செல்வந்தர் வீட்டு அன்னையர் ஏழை மாணவர்களுக்கான சீருடையை வழங்க ஒப்புக்கொண்டனர்.  பள்ளியைப் பற்றி விளம்பரம் அளித்தபோது ஒரு செல்வந்தரின்  – இங்கிலாந்தில் பயின்ற, பிரித்தானிய மனப்பாங்கு கொண்ட – மனைவி பள்ளியில் கற்பிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.  நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்பிய குருவின் கொள்கைகளை அவருக்கு விளங்கவைப்பது பெரிதும் சிரமமாக இருந்தது.  எனது சிக்கல்களை குருவுக்கு எழுதியபோது, கொள்கைகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்றார் குரு.  ஆசிரியை எதிர்ப்புடன் வெளியேறிய இக்கட்டுடன் பள்ளி செயல்படத் துவங்கியது.  பின்னர் ஒரு மராட்டியப் பெண்மணியையும் இளைய சிந்திப் பெண் ஒருவரையும் ஆசிரியைகளாக நியமித்தோம்.  அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர்.  மரீன் டிரைவ் பகுதியில் நல்ல பள்ளி என்ற பெயர் கிடைத்தது.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

Standard

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்!
அவ்வாறிருப்பது கைகூடாதென்றால்
ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும்
முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்!

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 7)

முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப் பகுப்பை நம் நனவிலிருந்து பிரித்து அலுங்காது சுடர வைக்கமுடியுமா?

அறிவென்னும் சொல்லை முதற்பாடலிலிருந்தே  மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார் குரு. பெரும்பாலும் தகவல் துளிகளையே நாம் அறிவெனக் கொள்கிறோம். இத்தவறான எண்ணத்தை முதலிலேயே சரிசெய்யவேண்டுமென்பதற்காகவே இவ்வறிவு அறிவனைத்தையும் கடந்தது (அறிவிலுமேறி) என்கிறார். மேலும், அது புறஉலகில் காணப்படுவதாகவும் ஒருவனது அகவய விழிப்பென உணரப்படுவதாகவும் விவரிக்கப்படுகிறது.

முந்தைய ஆறு பாடல்களிலும், ஒருவனது அனுபவ எல்லைக்குள் சாத்தியமான ஆறு வகைமைகள் குறித்த மறைமுகக் குறிப்புகள் உள்ளன. முதற்பாடலில் அது அக உலகாகவும் புற உலகாகவும் இரண்டையும் அறியும் அறிவாகவும் கூறப்பட்டது. இரண்டாவது பாடலில், உள ஆற்றல், புலன்கள், உடல் மற்றும் அறியும் பொருட்கள் என தரப்படுத்தப்பட்ட படிநிலை வரிசை ஒன்றைத் தருகிறார் குரு. இவையெல்லாம் இணைந்து அனுபவமாகிறது.

மூன்றாவது பாடலில் ஒவ்வொரு புலன் அனுபவமும் ஒரு மன பிம்பத்தை ஏற்படுத்தும் மீத்தெளிவு பேசப்பட்டது. அனுமானித்து மட்டுமே அதன் இருப்பை உணரக்கூடிய மூல ஒப்புருவுடன் நேரடியான தொடர்பு அந்த பிம்பத்திற்கு உள்ளதா என்பதை உய்த்தறிவது எளிதல்ல. நான்காவது பாடலில், நனவென்பது அறிபவன், அறியப்படுவது, அறிவு என்னும் மூன்று அடிப்படைக்கூறுகளாக பிரித்துக் காட்டப்பட்டது. இவை, அடிப்படையில் முதல் பாடலில் சுட்டப்பட்ட பிரபஞ்சவியல் அமைப்பின் உளவியல் வடிவம்.

ஐந்தாம் பாடலில் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையேயான நனவின் ஊசலாட்டத்தையும், விழிப்பு நிலையில் அகத்தின் இயல்பான சிதறும் தன்மையையும் நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.  நம் ஆர்வம் தொடர்ச்சியாக ஒரு பொருளிலிருந்து இன்னொன்றிற்குத் தாவுவதை ஆறாவது பாடல் சுட்டிச்செல்கிறது.

மனதை பாதிக்கும், பிறழச்செய்யும் இவற்றையெல்லாம் பற்றி பேசியபிறகே, தேடலுடையவன் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள இரு ஒழுக்கங்களை முன்வைக்கிறார் குரு. ஒன்று “இனி விழிக்காதே, உறங்காமல் அறிவாகவே இரு” என்பது. முதல் ஆறு பாடல்களில் கூறப்பட்ட வெவ்வேறு ஆற்றல்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தூய அறிவாக இருப்பது எவ்வளவு அரிதானது என்பது விளங்கும். அப்படியென்றால் விழித்தல் உறங்குதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபடுவது பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்நூல் முழுவதும் நம் ஒவ்வொருவரின் உள்ளிருக்கும் அகம் நோக்கியே நாராயண குரு பேசுகிறார். அதன் சாத்தியமான வேறுபாடுகளை விளக்கும்போதுகூட அதன் அடிப்படை ஒருமையை கவனத்துடன் சிறப்பிக்கிறார். அனைத்தையும் ஊடுருவும் அறிவும் அதைத் தேடுபவனின் அகமும் வேறுவேறல்ல என்பதை அவன் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதே அவரது முதல் ஆர்வமாக இருக்கிறது.

முதல் பாடலில், தன்னை அறிதலின் முதல் படியாக, புலன்களை அடக்கியபடி, பக்தியுடன் ஒளிரும் கருவின் முன் பணியச் சொல்கிறார். வெளியில் உள்ள ஒரு கடவுள் அல்லது படைத்தவன் முன்பாக விழுந்து வணங்குவதல்ல அவர் கூறுவது. இங்கே இப்போது அனைத்தையும் நிறைத்திருக்கும் அறிவாய் உள்ள முழு மெய்ம்மைக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் அது. வெளியேறும் ஆர்வத்தையும் உள்புகும் தூண்டலையும் சமன் செய்வதன் ரகசியம், ஐம்புலன்களையும் அகவயமாக்கி, போற்றற்குரிய முழுமுதல் குறித்த வியப்பைக்கொண்டு அகத்தை நிரப்புவதில் உள்ளது என்றறிய வேண்டும். தனது மெய்யான முழுமை நோக்கித் திரும்புவதே இங்கு ஒப்புக்கொடுத்தல் எனப்படுகிறது.

இரண்டாவது பாடலில், ஒளிரும் ஆன்மாவின் பெருமையைப் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கிறார். அனைத்துப் பொருட்களிலும் உள்ளுறையும் ஒருமையாகவும், எல்லாப் பெயர்களும், வடிவங்களும், நனவு நிலைகளும் சார்ந்த அறிவாகவும் அந்த ஆன்மா ஞானியரால் போற்றப்படுகிறது. ஒருவன் தன் தேடலில் தீவிரமாக இருத்தல் வேண்டும் என்பதை குரு அழுத்தமாகக் கூறுகிறார். சிறு சமரசமும் மனதை வேறு கோணத்தில் இழுத்துச் செல்லும். நூற்றாண்டுகளாக உருவாகிவந்திருக்கும் பல்வேறு ‘வாதங்களும்’ கருத்தியல்களும் இதற்கு வரலாற்றுச் சான்றுகளாக இருக்கின்றன. ஒருமை என்னும் அதிசயத்தை ஊழ்கத்தின்மூலமே புரிந்துகொள்ளமுடியும் என்று எச்சரிக்கிறார். லட்சத்தில் ஒருவரே இதில் வெற்றிபெறுகிறார். அதுவும் பல சறுக்கல்களுக்குப் பின்பே நிகழும். மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல்களால் தூண்டப்படும் நினைவுகளின் அடிப்படையில் துவங்கும் தேடலுக்குக் காரணமான ஆளுமை அமைப்பியலே இதில் நம் தோல்விக்குக் காரணம் என்பதை குரு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.

பித்துநிலை, மனத்தடைகள், கிலி, மட்டுமீறிய ஆவல் இவற்றின் மூலம்தான் நாம் ஒரு அக அழுத்தத்தால் ஒரு திசையில் தள்ளப்படுவதை உணர்கிறோம். ஆயினும், ஆரோக்கியமான மனம் என்பது நாம் நம்ப விழையுமளவுக்கு விடுதலை கொண்டதாக இல்லை. நேர்மையுடன் நிகழ்வுகளை அவதானிக்கும் ஒரு அறிவியலறிஞன் கூட நேர்மறை அவதானிப்புகளால் ஊக்கம் பெறும்போது எதிர்மறை தரவுகளை காணமுடியாமல் போகலாம்.

குரு பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனிக்காவிடில் அவர் பரிந்துரைக்கும் ஒரு முக்கியமான கருத்தை தவறவிட்டுவிடுவோம். அக ஆற்றல், புலன்கள், மெய், புலன்காட்சிக்குட்பட்ட பல உலகுகள் இவற்றைத்தாண்டி, உள்ளுறைவதாகவும் அறிவெல்லைகடந்ததாகவும் ஆன்மாவைக் குறிப்பதான கதிரவனைப் பார்க்கிறார்.  எட்மண்ட் ஹுசேர்ல் Edmund Husserl செய்வதுபோல மடக்குதல், இடைநிறுத்தல், நனவனுபவக் குறுக்கம் இவற்றின் நெறிமுறைகளை குரு விரிவாக விளக்குவதில்லை. ஆனால், ‘இங்கே, இப்போது’ என்பதை ‘எங்கும், எப்போதும்’ என்பதற்கு எதிராக வைத்து நடைமுறைக்கேற்ற ஒரு முனைவாக்கத்தை உருவாக்குகிறார். இதற்கு அவர் பயன்படுத்தும் ஒப்புமைக்கு, ஸ்பினோசாவின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் விளக்கவுரையாகக் கொள்ளலாம்.

முரணியக்கம் நிகழும் இரு துருவங்களிடையே ஒரு பொது விழுமியம் எப்போதும் உண்டு. தாய்-சேய், ஆசிரியர்-மாணவன், ஆள்பவன்-குடிமகன், அன்பு செலுத்துபவன்-அன்புக்குப் பாத்திரமானவன் இவையெல்லாம் முரணியக்க இருதுருவங்களுக்கான எடுத்துக்காட்டுகள். இவையெல்லாவற்றுக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஆர்வம் மகிழ்வுடன் இருத்தல் மட்டுமே என்று சொல்லலாம். இருவருமே ஒருவரோடொருவர் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் இப்பாடலில் காணப்படும் இருமை இரு தனியர்களுக்கிடையேயானதல்ல. இது அறிவு பற்றிய ஒருவரது தனிப்பட்ட புரிதல் மற்றும் அறிவின் முழுமை எனலாம். இரண்டில் ஒன்று மனித அகம் சாராதது என்பதால் பரிமாற்றம் ஏதும் இங்கு நிகழ்வதில்லை. புற – அகச் சவ்வூடு போல, ஒன்றன் சாரம் மற்றொன்றுக்குச் செல்வது இருவழியிலும் நிகழ்ந்தால் மட்டுமே இருதுருவத்தன்மை பொருளுடையதாக ஆகிறது.

அலையையும் கடலாழத்தையும் பிரிக்கமுடியாது என்ற உவமை மூலம், முழுமை என்பது மனிதஅகம் சாராதது என்றபோதும் ஒருவன் தன் சாரத்தை முழுமையுடன் பகிர்ந்துகொள்ளும் ரகசியத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார் குரு. அலை தனித்துத் தெரிந்தாலும் ஆழியுடனான அதன் உறவை பிரிக்கமுடியாது என்பதை அழுத்தமாகக் கூறவே நம் இருப்பு அலையோடு உவமிக்கப்படுகிறது. ஆழம்பற்றிய இடையறா விழிப்புணர்வே முழுமுதலுடனான நம் பிணைப்பை நிறுவுகிறது.

நான்காவது பாடலில், எந்த உவமையுமின்றி ஒருவனது மெய்யிருப்பை தூய அறிவாகவே கூறுகிறார் நாராயண குரு. அதனுடன் ஒன்றும்படி ஆணையிடுகிறார். மாறிக்கொண்டிருக்கும் நம் நிலைகளைக் கடந்தது தூய அறிவு. எனவேதான், விழிப்பு-உறக்கம் என்னும் உடல்சார் நிலைகளால் பாதிக்கப்படாமல் தூய அறிவாகவே இரு என்று சொல்லப்படுகிறது.

முழுமுதலோடு தன்னை தொடர்புறுத்திக் கொள்வது பெரும்பாலானவர்க்கு எளிதல்ல என்பதை அறிந்த குரு, விடைகள் தேரும் வினாக்கள் இல்லாத, எந்த பாதிப்பும் அடையாமல் பிரபஞ்ச நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் முனிவர்களின் சேவையில் ஈடுபடச் சொல்கிறார்.  ஏழாம் பாடலில், இருதுருவ உறவின் நுழைவாயிலில் வந்துநிற்கிறோம். நாம் யாருடன் இருதுருவ உறவை நிறுவிக்கொள்ள விழைகிறோம் என்பதை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும். அது ’சொல்’ நிகழக்கூடிய உடல்கொண்ட ஒரு மனிதராக இருக்கலாம். உடலிலியுடன் உறவாட நம்மால் ஆகுமென்றால் ‘வாழும் சொல்’ நம் அகத்திலேயே எப்போதுமிருக்கும். நம்மைப் பொறுத்தவரை பொறுப்பை ஏற்றுக்கொள்வதே முக்கியம்.

விதைக்கப்படும் விதை முளைத்து வளரவேண்டுமெனில் அது ஓரிடத்திலேயே இருக்கவேண்டும். தினமும் பிடுங்கி வேறிடத்தில் நட்டால் அது பிழைப்பதில்லை. இருதுருவத்தன்மையின் ரகசியமும் அதுவே. தொடர்ச்சியான இயற்கையொழுக்கு ஒன்று இருக்கவேண்டும். ஒரு மரத்தின் உயிர்ச்சாற்றின் மேல்-கீழ் ஒழுக்குபோல, ஆசிரியர்-மாணவனுக்கிடையிலும் – தேடுபவனுக்கும் தேடப்படும் ஒளிக்கும் இடையேயான –  ஒரு ஒழுக்கு இருத்தல்வேண்டும்.

ஆசிரியரின் அருகிலிருந்து சேவை செய்யும்போது விழிப்புநிலையின் பல்வேறு கூறுகளுக்கு அவர் எங்ஙனம் எதிர்வினையாற்றுகிறார் என்பதை கவனிப்பதன் மூலம் விழிப்புணர் உலகின் பொருளை உணர உங்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அவரது சொற்களில் திளைக்கும்போது அக உலகின் கருத்துருவங்களை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். நடுவுநிலையான அவரது மௌனத்தை அவதானிப்பதன்மூலம் தொடக்கநிலை நனவுகளைக் களையும் ரகசியத்தைக் கற்கலாம். கடந்தநிலையில் ஒன்றிய ஆசிரியரின் அடையாளத்திலிருந்து நாமனைவரும் சார்ந்திருக்கும் கடந்ததன் இருமையற்ற பண்பை கண்டறியலாம்.

காலமெனும் பெருவெளியில், ஆழ்ந்த புரிதலும் எல்லையிலா பெருங்கருணையும் கொண்ட ஒளிமிகு ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். மானுடகுலத்தை உய்விக்க வந்தவர்களாக நன்றியுடன் அவர்களை அண்ணாந்து நோக்குகிறது உலகு. நடுப்பகலில் ஒளிரும் கதிரவன் போன்ற அவர்கள் உடல் மறைந்தபின்னும் மனிதனின் நல்லூழாய் திகழ்வதாகக் கூறுகிறார் ரோமெய்ன் ரோலண்ட். மாறிக்கொண்டே இருக்கும் மானுடவரலாற்றிலும், தங்கள் மறைவுக்குப் பின்னரும் மக்களின் அகத்தையும் வாழ்வையும் வடிவமைத்துக் கொண்டிருக்கும் புத்தரும், சாக்ரடீஸும், யேசு கிறிஸ்துவும், முகம்மது நபியும் அத்தகு பேரான்மாக்களே.

இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குறுநில மன்னனுக்கு சித்தார்த்தன் என்னும் இளவரசாகப் பிறந்தவர் புத்தர். தன் குழந்தைப்பருவத்திலும், இளமைப்பருவத்தின் தொடக்கத்திலும் அவரும் எல்லோரையும்போல விழித்து உறங்கி அகக்குழப்பத்தில் சிக்குண்டவராகத் திரிந்தார். அரசரான தந்தையால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் தன்னைச்சுற்றியிருந்த மக்களின் இன்னல்களைக்கண்டு பெருந்துயரில் ஆழ்ந்தார். முதுமை, வறுமை, நோய், மரணம் என்பவையெல்லாம் பெரும்பாலான மக்களால் இயல்பானவையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கருணையுள்ளம் கொண்ட இளவரசனுக்கு அவையெல்லாம் அவமானகரமான தவறுகளாகத் தோன்றின. மனிதகுலத்தைப் பீடித்துள்ள இக்கேடுகளுக்குத் தீர்வு காண்பது தன் கடமை என்றெண்ணினார். துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய தன் மாளிகையை, காதல் மனைவியை, அருமைக் குழந்தையை எல்லாம் துறந்து பேருண்மையைத் தேடி அலைந்தார். தினசரி வாழ்வின் விழிப்புநிலையிலிருந்து விழித்துக்கொள்வதே அதற்கான தீர்வு. அரசபோக வாழ்வைத் துறந்து அதன் எதிர் துருவமான துறவை நாடிய அவர் கண்டதென்னவோ துயரம் மட்டுமே. இறுதியில், இருத்தலென்னும் கொடுங்கனவிலிருந்து விழித்துக்கொள்ளுதலும், ‘கர்ம’த்திலிருந்து தப்பித்தலும் இயலாதவொன்றென்று உணர்ந்தார். அதிசயத்திலும் அதிசயமான விநோதமான சமநிலை அவருள் நிகழ்ந்தது. நன்மையும் தீமையும், வலியும் இன்பமும், விழிப்பும் உறக்கமும், ஒளியும் இருளும் ஒன்றையொன்று சமன் செய்யும் புள்ளிக்கு அவரை இட்டுச் சென்றது. அந்தப்புள்ளியில் அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்ட ‘புத்தர்’ என்பதை உணர்ந்தார். விழிப்போ-உறக்கமோ, நோற்றலோ-விருந்தோ இல்லாத பொன்னொளிர் நடுவு நிலைப் பாதையை அவர் கண்டறிந்தார். ஸ்வேதஸ்வதார உபநிடதத்தில் கூறப்படும், இச்சைக்கு ஆட்படாமல் தன் இணையை நோக்கி நிற்கும் பறவையைப் போலானார்.

விழிப்பு நிலையை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக விளக்குகிறது. புறப்பண்புகளில் அவற்றுள் ஒற்றுமை இருப்பதில்லை. விழிப்படைந்தவனின் நிலையை கீதை பின்வருமாறெல்லாம் குறிப்பிடுகிறது:

ஸ்திதப்ரக்ஞன் (பகுத்தறிவாளன்)
ஞானி
பிராஹ்மிஸ்திதி (முழுமுதலில் இருப்பவன்)
பக்தன்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விவேகன் (களம்பற்றி அறிந்தவன்)
குணாதீதன் (முக்குணங்களைக் கடந்தவன்)
பிரஹ்மபூதன் (ஆழ்சிந்தனையாளன்)

இவையெல்லாம், ‘ஓம்’ எனும் பிரணவத்தில் மறைபொருளாய் பொதிந்துள்ள, நனவின் இருநிலைகள் பற்றிய ரகசியத்தை ஐயமற உணர்ந்த சிந்தனையாளனை சுட்டுகின்றன.

தன் சொந்த ஊரிலிருந்து, கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேறொரு நகருக்குக் கடத்தப்படும் ஒருவன் விடுவிக்கப்படும்போது தன் ஊருக்குத் திரும்புவதற்கான வழியை அவனால் கண்டடையமுடியும் என்கிறது சாந்தோக்ய உபநிடதம். எதிர்ப்படுவோரிடம் வழியை கேட்டறியலாம். அதேபோல், இப்பாடலில் குறிப்பிடப்படும், தன் மெய்யியல்பைக் கண்டடையச்செய்யும் இருதுருவத்தன்மை பிறர் உதவியால் நிகழக்கூடும். மெய்யான இருதுருவத்தன்மை என்பது ஒருவரது அறிவு நலனில் உள்ளது. இங்கு சுட்டப்படுவது பிரணவத்தின் மறைபொருளை உணர்ந்த அறிவு. பிரணவத்தை வேதங்களின் ‘மீச்சாரம்’ என்கிறது கீதை. கிருஷ்ணர் அதை முழுமுதல் என்கிறார். சாந்தோக்ய உபநிடதம் ‘ஓம்’ என்பதை உத்கீதை என்கிறது.

இங்கே, ‘ஓம்’ என்பது சம்மதத்தைக் குறிக்கும் ‘அனுக்ஞ’ எனப்படுகிறது. கதிரவன் எழும்போது மக்கள் விழித்தெழுகின்றனர். எல்லோரும் எழுவதற்கு கதிரவன் தரும் சம்மதமாக அது காட்டப்படுகிறது. நன்மையும் தீமையும், வலியும் இன்பமும், மெய்யும் பொய்யும் கலந்தே திகழும் உலகில் ஒருவர் பிறரோடு ஒத்துப்போக முடியாமலாகிறது. இவ்விருமைகளைக் கடந்த முழுமுதலாளனுக்கு எந்தத் தடையும் இருப்பதில்லை. அவன் எல்லோருக்கும் தன் சம்மதத்தை அளிக்கிறான். ஞானியைப் போல் உலகோடு ஒத்துப்போவது எவருமில்லை.

முழுமுதலை அறிய உதவும் கருவியாக பிரணவத்தைக் கூறுகிறது முண்டக உபநிடதம்.

பிரணவமே வில்லாக ஆன்மாவே அம்பாக
பிரம்மம் இலக்காக
கவனம் சிதறாதவனால் துளைக்கப்படவேண்டியது

முழுமுதலை தியானிப்பதற்கான வழி ‘ஓம்’ எங்கிறது ஸ்வேதஸ்வதார உபநிடதம்.

உடல் கீழ் அரணிக்கட்டையாக
ஓம் எனும் பிரணவம் மேல் அரணிக்கட்டையாக
தியானம் எனும் உரசல் மூலம்
உள்ளுறையும் இறைவனைக் காணலாம்

மைத்ரீ உபநிடதம் பிரணவத்தை பின்வரும் மும்மைகளின் தொகுதியாகக் காட்டுகிறது:

அ உ ம் என்னும் ஆன்மாவின் ஒலிவடிவம்
பெண் ஆண் அலி என்னும் பால் வடிவம்
தீ காற்று கதிரவன் என்னும் ஒளிவடிவம்
ருத்ரன் பிரம்மா விஷ்ணு என்னும் இறைவடிவம்
ரிக் யஜுர் சாமம் என்னும் அறிதல் வடிவம்
புவி வெளி வான் என்னும் உலக வடிவம்
கழி நிகழ் எதிர் என்னும் காலவடிவம்
சுவாசம் தீ கதிரவன் என்னும் அனல்வடிவம்

இவை எல்லாம் பிரணவத்தின் கூறுகளாக சிறப்பிக்கப்படுகின்றன.

பிரணவத்தை அறிந்தவன் போற்றத்தக்க ஞானி என்கிறார் கௌடபாதர், மாண்டூக்ய உபநிடதத்திற்கு தான் எழுதிய காரிகை(உரை)யில். மாண்டூக்யர் அ, உ, ம் என்னும் மூன்று ஒலிகளும் அவற்றைத் தொடர்ந்து வரும் மௌனமும் சேர்ந்ததே ‘ஓம்’ என்கிறார். ‘அ’ – ‘விஸ்வ’மென்னும் பெயரும் வடிவும் கொண்ட அனுபவ உலகைக் குறிக்கிறது. ‘உ’ ‘தைஜஸ’மென்னும் கனவுலகை – தன்னொளியும் தன்னொழுங்கும் கொண்ட அகவய நனவைக் குறிக்கிறது. ‘ம்’ என்பது ஒருவர் தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அறியும் ‘பிரக்ஞை’யை – திரிபில்லா நனவை – குறிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் மௌனம் கடைசிக் கூறு. இதனை –

‘நான்காவது கூறுகளற்றது.
எதுவும் அதனுடன் உரையாட முடியாது.
வளர்ச்சியற்றுப் போவது – அருள் கொண்டது – பிறிதொன்றில்லாதது
ஓம் என்பதே ஆன்மா
இதை அறிபவனின் அகம் ஆன்மாவில் இணைகிறது’

என்கிறது உபநிடதம்.

இம்மந்திரத்திற்கு உரையெழுதும் கௌடபாதர், ‘பிரம்மத்தை அறிபவன் – பேருண்மையை உணர்ந்தவன் – மறைதன்மை என்னும் மூன்றாம் நிலையை எரித்து ஆன்மாவில் இணைகிறான்; எனவே, அவன் மீண்டும் பிறப்பதில்லை (பிறப்பறுக்கிறான்). ஏனென்றால், துரீயம் படைப்பின் மறைதன்மை எதுவும் அற்றது’ என்கிறார்.

மௌனமாய் சிந்தனையில் ஆழ்ந்து, பிரணவத்தை அறிந்து பிறப்பறுக்கும் உயர்ந்தோர் என்று நாராயணகுரு குறிப்பிடும் ஞானியை இதனுடன் ஒப்பிடலாம். பிரணவத்தை அறிவதால் என்ன பயன் என்பதைத் தெரிந்துகொள்ள மாண்டூக்ய உபநிடதத்தை கௌடபாதரின் உரையுடன் கற்கவேண்டும். உத்கீதையால் வரும் பலனைப் பற்றி சாந்தோக்ய உபநிடதம் கூறுவதையும் நினைவில் நிறுத்தவேண்டும்.

பிரணவம் கீழ்-மேல் என இரண்டு வடிவங்கள் கொண்டது என்பர். நம் விழிப்பு நிலையையும் கனவனுபவத்தையும் கொண்டது கீழ் வடிவம். இது நனவுடனான நம் பந்தத்தை கிடைநிலையாக்க முயல்கிறது. இதன் விளைவாக, நம் புலன்களும் மனமும் வலி-இன்பம், நன்மை-தீமை எனும் இருமைகளால் தாக்கப்படுகின்றன. பிரக்ஞையையும் துரீயத்தையும் கொண்ட மேல் வடிவம் நனவை நிமிர்நிலையாக்கும் ஆற்றல்கொண்டது. எல்லா தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள வல்லது இது.

அடுத்த பாடலில் நிமிர்நிலையாக்கத்தின் ரகசியத்தை விளக்குகிறார் நாராயண குரு.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

Standard

எழவேண்டும் பின் உறங்கவேண்டும்
உண்ணவேண்டும் இணையவேண்டும்
என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது
மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?

                                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 6)

‘மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?’ எனும் அழுத்தமான கேள்வியுடன் முடிகிறது இப்பாடல்.  இனிவரும் பாடல்களில் விவரிக்கப்படவிருக்கும் பிரச்சினையும் தீர்வும் இங்கே முன்வைக்கப்படுகின்றன.  ஆன்மீக உலகில் கடவுள்-சாத்தான், நன்மை-தீமை, அநிகழ்வு-நிகழ்வு, கடந்தது-உள்ளுறைவது, பிரம்மம்-தர்மம், தனித்தது-சார்புடையது என பல முரண்கள் உண்டு.  மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வவாக்கள் (விழைவுகள்) மற்றும் முழுமுதலின் மாறாவடிவம் ஆகியவையே இப்பாடலில் முன்வைக்கப்படும் முரண்கள்.

எந்த ஒரு உசாவலிலும் நம்மைக் கவர்வது நாமறிந்ததும் நிச்சயமானதும் தெளிவற்ற உணர்வும் கொண்ட உலகை நோக்கி பின்நகரும் புதிர்.  சர் ஆர்தர் எடிங்டன் இதற்கு உதாரணமாக ஒரு மேசையைக் கூறுவார்.  ஒரு மேசையைப் பயன்படுத்தும் இயற்பியலாளர் முன் இரண்டு மேசைகள் உண்டு என்பது அவரது கூற்று.  ஒன்று இயல்நிகழ்வானது, மற்றொன்று மெய்யானது.  இயல்நிகழ்வான மேசையை பார்க்கவும், தொட்டுணரவும், பயன்படுத்தவும் முடியும்.  அதே சமயத்தில் ஒரு இயற்பியலாளனாக அது மெய்யானதல்ல என்று அவனுக்குத் தெரியும்.  அவனைப் பொறுத்தவரை, கண்ணுக்குப் புலப்படாததும் சுழலும் இயல் ஆற்றலுடன் எப்போதும் அசைந்துகொண்டிருக்கும், பாய்ம நிலையிலிருக்கும் வேகமாக நகரும் மூலக்கூறுகளின் திரளே மெய் என்பது.  எனவே, ஒருவன் தான் அறிந்த பொருளான மேசையின் மெய்மையை முனைப்புடன் மதிப்பிட முயலும்போது அம்மேசை தற்கோள்களாலான புரிந்துகொள்ளமுடியாத உலகில் மறைந்துபோகிறது.

வேதாந்தியின் நிலை இயற்பியலாளனின் நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல.  தோற்றமும் மெய்மையும் தம்முள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புதிரை அவரும் கையாள வேண்டியிருக்கிறது.  புலன்கள் தோற்றத்தால் எளிதில் பாதிப்படைகின்றன.  ஆனால், மெய்யானது நழுவிச் செல்வதாக (மழுப்பலானதாக), அதை உயிர்ப்புடன் தொடரும் மனதின் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.  என்னதான் நம்பிக்கை தராததாக இது இருந்தாலும், ஒருவனால் தேடலை விட்டுவிட்டு, தோற்றத்தை முன்முடிந்ததாக ஏற்க முடியாது.

நாம் உலகியல்புடையவர்கள்.  தனது அச்சில் சுழன்று கதிரவனைச் சுற்றி வருவது பூமியின் செயல்சார் இயல்பு.  இதன் விளைவாய் நாம் பகல்-இரவு மாற்றத்தை துய்த்துணர்கிறோம்.  பூமிக்கு ‘தரா’ என்றொரு பெயருண்டு.  தரா என்றால் தாங்குவது. அவ்வவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களால், அவற்றின் அறத்தால் தாங்கப்படும் பல பொருட்களும் பூமியில் உள்ளன.  தர்மம் (அறம்) என்பது தனித்துவத்தின் அனைத்து வடிவத்திலும் அமைப்பு மற்றும் செயல்சார் மறையாக இருப்பது. தனியனில் உள்ள அமைப்பு மற்றும் செயல்சார் அமைவு (system) என்பது தன்னாளுகை கொண்ட அலகுதான் என்றாலும் அது சிக்கலான ஒரு அமைவின் பகுதியே.  வானில் ஒளிரும் விண்மீனுக்கும் பெருமகிழ்வுடன் அதை உற்றுநோக்கும் கண்ணிற்கும் இடையிலான இயல்சார் இணக்கத்தை அவ்வளவு எளிதாக விளக்கிவிட இயலாது.

முந்தைய பாடலில் பகல்-இரவு ஏற்படுத்தும் உள உடலியல் செயல்வினை பேசப்பட்டது. நாம் விழித்திருந்தாலும் உறங்கிக்கொண்டிருந்தாலும் மாறாத சாரம் ஒன்று நம்முள் உள்ளது.  உபநிடதங்கள் இதை, அனைத்தும் தழுவிய ஒருமைக் கொள்கை – பிரம்மம் – என்று குறிப்பிடுகின்றன.  நாம் உறங்கும்போதுகூட உடலின் முக்கிய செயற்பாடுகள், தனித்துவ அமைவை அதன் உச்சபட்ச ஒருங்கிணைவு நோக்கி சீரமைக்கும் நுண்ணறிவால் கண்காணிக்கப்படுகின்றன; இயங்கிக் கொண்டிருக்கும்படி செய்யப்படுகின்றன.  இந்த ஒருங்கிணைவு அமைதி, மகிழ்ச்சி, ஒருமை என உணரப்படுகிறது.  முந்தைய பாடலில் ஏற்றப்படாத விளக்கின் நோக்கும் ஒளி எனக் கூறப்பட்ட இந்த மாற்றமில்லா சாரமே நம் அடிப்படை இயல்பு.

அறமெனப்படுவது நமது உள்ளார்ந்த இயல்பு (second nature).  மாற்றமில்லாததையும் மாறிக்கொண்டேயிருப்பதையும் இணைக்கும் புதிர்த்தன்மை கொண்டது. தனியாக்கப்பட்ட உயிருருக்கள் என்ற வகையில் அறத்தின் பண்பேற்றங்களே நாம்.

நம் இயல்பின் சிக்கலான இயங்கமைவில் முதன்மையான பல இருமைச் செயல்பாடுகளில் ஒன்றுதான் விழித்தல்-உறங்குதல் என்பது.  நாம் விழித்திருக்கையில் உடலூட்டம் மற்றும் மனமகிழ்வுக்கான தேவைப்பாடு கூர்மையாக உணரப்படுகிறது.  உணவையும், சலிப்புணர்விலிருந்து தப்பிக்க உதவும் கேளிக்கைகளையும் தேடுவதே பலருக்கும் வாழ்வின் முக்கிய நாட்டமாக உள்ளது. (இக்கருத்தை உணர்த்த) உண்பதைக்குறிக்க மலையாள மொழியில் பல சொற்கள் இருந்தபோதும் குரு கவனமாக ‘புஜிச்சிடேணம்’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘பூ’ என்பது வெளிப்படுவது.  ‘புஜ்’ வெளிப்பாட்டை நிகழ்த்துவது.  அது போகத்துடனும் (துய்ப்பதுடனும்) தொடர்புடையது.

துய்ப்பவன் ‘போக்தா’ எனப்படுகிறான்.  நாம் ஒரு புலன் முகமையை அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்ற மூன்று வழிகளில் உணர்கிறோம்.  முதலிலிருந்து நான்காம் பாடல் வரை நமது கவனம் அறிபவனில் குவிந்திருந்தது.  ஐந்தாவதில் செய்பவனை நோக்கி திருப்பப்பட்டது.  இப்பாடலில் நம் கவனம் துய்ப்பவனை நோக்கி நகர்கிறது.

உடலுக்கான ஊட்டத்தைத் தேடுவதென்பது வாழ்வவாக்கள் பலவற்றுள் ஒன்று மட்டுமே.  மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல என்பதையே ‘மனிதன் அப்பத்தால் மட்டுமே பிழைப்பதில்லை’ என்றார் யேசு.  அறியும், எண்ணும், நுணுகிக்காணும், மதிப்பிடும் திறன் கொண்ட ஒரு ஆற்றலால் உடல் இயக்கப்படுகிறது.  இவ்வியற்பாடே ஆன்மா அல்லது ஆவி எனப்படுகிறது. பரவுதலே ஆவியின் இயல்பு.  ஆவியின்/ஆன்மாவின் தனிப்பண்பே அது சார்ந்திருக்கும் பிரபஞ்ச ஆன்மாவின் தூய இருப்பை நோக்கி மீண்டும் மீண்டும் செல்வதே.  உடலின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டிருக்கும்போது அது இயல்பாய் இருப்பதில்லை.  தன் மட்டத்தைத் தேடும் (கண்டடையும்) நீர்போல, ஆன்மாவானது எப்போதும் எல்லையற்றதை நாடிக்கொண்டேயிருக்கிறது.  உடலின் தேவைகளை நிறைவுசெய்ய முயலும் தனியனின் செயல் அறச்சார்புடையது.  ஆனால், தனியனின் உடல், குடும்பம், குலம், குழு, நாடு இவற்றின் எல்லைகளைக் கடக்கவேண்டும் என்ற ஆன்மாவின் தேவையோ அதன் முழுமுதல் அறமேயாகும்.

முழுமுதலுக்கான ஆன்மாவின் நாட்டம், சேய் தாயிடம் கொள்ளும் பற்றுக்கு ஈடானது.  ஒருவருடன் ஒருவர் தொடர்புறுத்திக் கொள்வதற்கான கட்டாயத் தேவை இருவருக்குமே உள்ளது.  சேயும் தாயும் தனித்தனி உடலைப் பெற்றிருந்தாலும் ஒன்பது மாதங்கள் இருவரும் ஒன்றாக இருந்தவர்கள்.  தாயின் கருப்பையில் சேயிருக்கும் பேறுகாலம் ஆவி மற்றும் அதன் இயல்வெளிப்பாடு ஆகியவற்றின் பல மறைசெய்திகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.  கரு உருவாவதன் முன்பே, பல யுகங்களாக – பிரபஞ்சத் தோற்றம் முதற்கொண்டே – சேயின் ஒரு பகுதியும் தாயும் ஒன்றாகவே இருக்கின்றனர்.  தாயெனும் நாற்றங்காலில் தன் கழுவாயை (‘at-one-ment’) மீளப்பெறும்போதுதான் சேய் தன் இயல்புடன் இருப்பதாக உணர்கிறது.  தாயும் அதேபோல் உணர்கிறாள்.  சேய்க்கு பாலூட்டுகிறாள், அணைத்து முத்தமிடுகிறாள். இருவரும் இணைந்திருக்கும்போது தங்களையே மறக்கின்றனர்.  விரிவாக்கம் மூலம் தன் விடுதலையைத் தேடும் ஒவ்வொரு முயற்சியும் ஆன்மாவை கட்டுக்குள் அடைக்கிறது.  இது ஒரு புதிர்தான்.  சேயை தந்தைக்கு அறிமுகம் செய்கிறாள் தாய். அத்தந்தையிடமிருந்தே சேய் தன் காலமற்ற மறுபாதியைப் பெறுகிறது.  சேயின் அன்பு தந்தையிடமும் பின் சகோதர சகோதரிகளிடமும் விரிகிறது.  இவ்வாறாக, அன்பு ஆர்வ எல்லையத்தை விரிவாக்குவதோடு புதிய பிணைப்புகளையும் உருவாக்குகிறது.

தனியனின் சிறப்பியல்புகளை வளர்க்கும், உயிராற்றலைப் பேணும், அவனது வளரும் ஆளுமையாக மலரும் அறம் பல்நிலை உருவாக்கமும் பல்நிறக் கருத்தும் கொண்டது.  தனித்துவத்தின் ஒரே அடிப்படை என்ற நிலையில் அது முழுமுதலிலிருந்து வேறுபடுத்தப்படாதது.  இயல் உருத் தோற்றத்தின் முதற்காரணமான அதுவே இடம்சார் நீட்சிப்புலத்திற்கு இயக்கத்தைக் கொடுக்கும் காலம்சார் செயற்பாடாகும்.  தனித்துவத்தின் புறமெய்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அது, இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனித அளவில் உளவியல் நாட்டங்களுடன் செயலாற்றக்கூடிய அமைப்புசார் இணக்கத்தின் அறுதியான வடிவங்களை மேற்கொள்வதற்கென தெளிவில்லாததும், வேறுபடுத்தப்படாததுமான ஆற்றலை வழிப்படுத்துவதும் ஒழுங்கமைப்பதுமான பரிணாம நிகழ்முறை. வாழும் உயிரியின் இயங்கியல் என்ற வகையில், உயிரியின் தற்பேணலுக்கும் நிலையான அமைவாக அதன் வாழ்நாளை நீட்டிக்கவும் உகந்த வினையையும் எதிர்வினையையும் முடிவெடுக்க உதவும் கணிப்புப்பட்டி போல் உதவும், தக்கவைத்துக்கொள்ளப்படும் நினைவுகளின் கிடங்கு அது. வாழ்வவாக்களின் நாட்டமான அது, இன்பநாட்டம் கொண்ட தொகுவிருப்பின் கலவை; ஒவ்வொரு குருட்டு இயக்கத்திலும் தன்னிலை உணர்ந்த முயற்சியிலும் அதன் நீளவாட்ட வரலாற்றால் கட்டுப்படுத்தப்படுவதும் அறுதியிடப்படுவதுமான ஒரு தொடர் நிகழ்முறை.  நேரடியான இடைவினை முகமையாக தன்னை நான் என்னும் உணர்நிலையில் சுய-விழிப்புடன்  அடையாளப்படுத்திக்கொள்ளும் அது தன்வய மற்றும் உள் உணர் நடத்தை, பெறப்பெற்ற பழக்கங்கள், தகவமைவு, தன் நெகிழ்வான சமநிலையை பாதுகாத்துக்கொள்வதில் கருத்தாக இருக்கும் – தன்னைத்தான் ஒழுங்கமைத்துக்கொள்ளும் அமைவுக்கு உதவும் விருப்பச்செயல்கள் ஆகியவற்றைப் பேணும் சமநிலை.

அத்தகைய சிக்கலான ஒரு நோக்கிலேயே அறத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த அறமே ஒருவனில் உள்ள அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்பனவற்றின் நேரிணைகளாக காலந்தோறும் புறவயப்படுத்தப்படும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பொருளை (அர்த்தத்தை) முடிவு செய்கிறது.  ஒரு சூழலுக்கு பொருள் கற்பித்தல் என்பது ஒரு வாழ்வவாவை உயர்த்திப்பிடிப்பதற்கும் தாக்குதலிலிருந்து அமைப்பைக் காத்தலுக்கும் இணையானது.  பொருளென ஒருவன் காணும் மீத்தெளிவு இழைவே ஒரு திரளின் இணைவையோ அல்லது முழுக்காட்சியையோ உண்டாக்குகிறது.  ஒரு முழுக்காட்சியை வகுத்தல் என்பதை இந்திய உளவியலாளர் ‘அர்த்தத்தை’ உருவமைத்தல் என்பர்.  அறமும் பொருளும் இணையும்போது ஒரு தனியனை அவை இன்பநாட்டத்தை நோக்கி உந்துகின்றன. இன்பநாட்டம் இணைவுக்கானதாகவோ (ராகம்) பிரிவுக்கானதாகவோ (துவேஷம்) இருக்கலாம்.  இவ்விருமுக கட்டாயப்படுத்தல் என்பது அடிப்படையில் இன்ப இயல்பூக்கம் சார்ந்தது.

பகவத் கீதையின் பதின்மூன்றாவது அத்தியாயம் நம் வாழ்வின் பாதையை பாதிக்கும் ஏழு மாற்றமைவுகளை கோடிட்டுக் காட்டுகிறது.  அவை இச்சை (அவா), துவேஷம் (வெறுப்பு), சுகம் (இன்பம்), துக்கம், சம்ஞாதம் (நாட்டங்களின் தொடர்பின்மை), ஜீவன் (உயிர்க்கொள்கை), ஸ்தைர்யம் (உயிர்வாழ் விருப்பு) ஆகியன.

இத்துடன் தொடர்புடைய பிறிதொரு குறிப்பு பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் காணக்கிடைக்கிறது.  அதில் ஆன்மீக இணைவுக்குத் தடையான ஐந்தை பட்டியலிடுகிறார் பதஞ்சலி.  யோகி விழையும் தனிமையும் (கைவல்யம்) முழுமுதலுடன் ஒன்றுவதற்கான வேதாந்தியின் விழைவும் கோட்பாடு ரீதியில் வேறுவேறானவை அல்ல.  அணுகும் நெறிமுறைகளில் மட்டும் வேறுபாடு உண்டு. பதஞ்சலி கூறும் தடைகளை ஆராய்வதன் மூலம் கீதை கூறும் ஏழு மாற்றமைவுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.  பதஞ்சலியின் ஐந்து தடைகள் – கிலேசங்களாவன: அவித்யா (அறியாமை), அஸ்மிதம் (தன்முனைப்பு), ராகம் (ஈர்ப்பு), துவேஷம் (வெறுப்பு), அபினிவேசம் (வாழ்வைப் பற்றல்).

கீதையைப் பொறுத்தவரை, இயற்கையின் (பிரக்ருதி) மும்மை நடைமுறை மற்றும் ஆவியின் (புருஷன்) தனிப்பண்பான நனவு இவை இரண்டுமே நம் வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள்.  காரணகாரியத்தின் திரளுக்கு இயற்கை பொறுப்பாகிறது. அதேபோல் இன்பநாட்டத்திற்கு ஆவியின் நனவு பொறுப்பாகிறது.  ஆவியானது இயற்கையால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெய்யில் சிறையுண்டிருப்பதால், இன்பத்திற்கான நாட்டம் ரஜோ தமோ குணங்களின் திரித்தல் மற்றும் மறைப்புக் கொள்கையால் மாசுபடுகிறது.  சத்வகுணமே கூட இன்பம்தரும் எதனுடனும் தன்னை இணைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது.

இக்குறைகளைக் கண்டறிவதிலும், அவற்றைக் களைவதிலும் யோகிகளுக்கும் வேதாந்திகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு.  பதஞ்சலியின் யோகசூத்திரம் (பகுதி-2, சூ-17) காண்பவனும் காணப்படுவதும் ஒன்றாவதன் காரணம் தவிர்க்கப்படவேண்டும் என்கிறது. நாம் காணும் உலகிலிருந்து விலகிச் செல்வதையோ ஒதுங்கலையோ கீதை பரிந்துரைப்பதில்லை.  மாறாக, எல்லாவற்றிலும் உறைவதாக முழுமுதலைக் காணும் தெளிவான தரிசனத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றே கூறுகிறது.  எல்லாவற்றிலும் தன்னை (ஆன்மாவை) அறிந்துகொள்வதே உயர் குறிக்கோள் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்:

அனைத்துயிரையும் தனதன்றி பிறிதொன்றாக எண்ணாதவனும்
தன் ஆன்மாவையே அனைத்திலும் உறைவதாகக் கொள்பவனும்
எதையும் வெறுப்பதில்லை.
அனைத்திருப்பிலும் ஒருமையைக் காண்பவனுக்கும்
அனைத்தையும் தன் ஆன்மாவாக அறிபவனுக்கும்
துயரம் ஏது?

நாராயண குரு தன் ‘யோக தரிசனத்தில்’ வேதாந்திகள் மற்றும் யோகிகளின் நிலையை பின்வருமாறு ஒன்றிணைக்கிறார்:

மனதை எப்போதும் ஒருமுகப்படுத்துவதும்
பகுத்தறியும் ஆன்மாவுடன் இணைப்பதும்
தன்னடக்க வடிவாய் இருப்பதுமே யோகமெனப்படும்.
காண்பவனும் காட்சியும் காணப்படுவதும் இல்லாமலாகும் இடத்தில்
இருதயம் ஒன்றிணைக்கப்படவேண்டும்
உள்ளுறை நினைவுக்கூறுகள் உள்ளவரை
யோகமறிந்தவன் அதையே யோகமென்பான்.

விடுதலை கோருவதே நனவின் இயல்பென்றாலும் அதற்குக் கிடைக்கும் கருவி அதன் குறிக்கோளை தோற்கடிப்பதாகவே இருக்கிறது. முதலில் விழிப்புநிலை; அதைத் தொடர்ந்து ஒரு பக்குவப்படுத்தலாக மொத்த விளைவின் தொகுப்பு என்பதே அனுபவம் நிகழும் வரிசை முறை.  அத்தகைய பக்குவப்படுத்தல் எதிர்காலத்தில் அதே அனுபவம் மீண்டும் ஏற்படவே நிச்சயம் வழிவகுக்கும்.  அவ்வனுபவம், அதையொட்டி வரும் உளப்பாடு வலிமிக்கதாயிருந்தால் விட்டோடுதல் அல்லது எதிர்த்துப்போரிடும் எதிர்வினை என்பதாக இருக்கிறது. அல்லது அந்த உளப்பாடு இன்பமளிப்பதாயிருந்தால் கவர்ச்சியால் நிரம்பியிருக்கிறது.  நனவை நடைமுறைகளுடன் அடையாளப்படுத்துதல் ஒருவனது மெய்யான இயல்பை மறக்கச்செய்கிறது.  இப்பாடலில் குரு வருந்துவது இதற்காகவே!

 

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

Standard
உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும்
எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும்
ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமான
விலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.
                                                                      (ஆத்மோபதேச சதகம் – பாடல் 5)

பிரித்தானிய தத்துவவியலாளர் பிஷப் பெர்கீலி, ‘கற்றறிந்தாரோடு சிந்தனை செய்; பொதுமக்களோடு உரையாடு’ (Think with the learned and speak with the vulgar) என்ற கோட்பாட்டைக் கொண்டவர் என்பர்.  தத்துவார்த்தமாக சிந்திக்காத மக்களையே அவர் பொதுமக்கள் என்றார்.   அதுபோல், வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள் இல்லாத உயர் விழுமியங்களைப் பற்றி சிந்திக்காதவர்களையே இங்கே நாராயண குரு ‘உலகர்’ என்கிறார்.  பொருளீட்டி, செலவு செய்து, விழித்து, பின் உறங்கி, மனம்போன போக்கில் வாழ்வோரே பெரும்பான்மையினர்.

ஆர்வங்கள் பலவும் வந்து போகும் ‘ஜகத்’தைப் பற்றி இரண்டாவது பாடலில் பேசினார் குரு.  அதே பொருளில், ‘கடந்துசெல்லும் ஆர்வங்கள்’ என்ற பொருளிலேயே நாம் ‘லோகம்’ என்பதை கொள்ளவேண்டும். உலகில் உள்ள பல் உயிரிகளைப் போலவே, மனிதர்களும் புவியீர்ப்புச் சாய்வுக்கும் (geotropism) ஒளிநோக்கிய சாய்வுக்கும் (heliotropism) இடையில் சிக்கியுள்ளனர்.  கதிரவன் மறைந்ததும் நம் ஆற்றல் மங்குகிறது; நாம் உறங்கச் செல்கிறோம்.  சூரியன் எழுகையில் நம் ஆற்றல் திரும்பி, நாம் விழித்தெழுந்து நமது பகற்செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம்.

நம்மை உறங்க வைப்பது யார்? விழிக்கச்செய்வது யார்? என நாமறியோம்.  நம் ஊக்கம் எங்கிருந்து வருகிறது?  மனம் நினைப்பதை செய்யத்தேவையான ஆற்றலை நமக்கு அளிப்பது யார்?  நாம் செய்யும் அனைத்தையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஒளியைக் குறிப்பிடுகிறார் குரு.  மைத்ரீ உபநிடதத்தில், ஒரு புராணக்கதைக்குப் பின், இத்தகைய ஒளி ஒன்றைப் பற்றிய அழகான குறிப்பு வருகிறது:

தேவரும் அசுரரும் ஆன்மாவை விரும்பியவர்களாய் பிரம்மாவிடம் சென்றனர். அவரை வணங்கி, ‘ஐயா, நாங்கள் ஆன்மாவை (ஆத்மன்) விரும்புகிறோம் (வேண்டுகிறோம்).  எங்களுக்கு அருளுங்கள்” என்றனர்.  நீண்ட சிந்தனைக்குப் பின் அவர் தனக்குத்தானே கூறிக்கொண்டார், ‘இந்த அசுரர்கள் உண்மைக்கு மாறான ஆன்மாவை விரும்புகின்றனர்’.  ஆகவே, அவர்களுக்கு மிக மாறுபட்ட கொள்கை ஒன்று கூறப்பட்டது.  அதனடிப்படையில், இங்குள்ள மதியற்றோர் அதீதப் பற்றுடன், ஆபத்தில் உதவும் மிதவையை அழித்து, மெய்யல்லாததை புகழ்ந்து வாழ்கின்றனர்.  செப்படிவித்தையில் நடப்பது போல், பொய்யே அவர்களுக்கு உண்மையாய் தெரிகிறது.

பல உபநிடதங்களிலும், நம் வாழ்வை மாறுதலுக்குட்படுத்தும் இரு வகையான அறிவு மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றது.  ஒன்று அவித்யா (அறியாமை); மற்றொன்று வித்யா (அறிவு).  ஒருவன் தனது தன்முனைப்பின் ஆர்வத்தின் அடிப்படையில் வாழ்வது அவித்யா.  அத்தகையோர் இருளில் வாழ்கின்றனர் என்கிறது ஈசோபநிடதம்.  ஒருவன் தனது கவனத்தை அறிவெல்லை கடந்த கருத்துக்களில் செலுத்துவதே வித்யா எனப்படுகிறது.  முரணுரையாக, அதே உபநிடதம், அறிவெல்லை கடந்த கருத்துக்களுடன் தன்னை பிணைத்துக்கொண்டோர் இன்னும் ஆழ்ந்த இருளில் வாழ்கின்றனர் என்கிறது.

ஒருவன் எப்போது விவேகத்துடன் நடந்துகொள்கிறான்? எப்போது நடந்துகொள்வதில்லை? என்பதை அறுதியிட்டுக்கூறுவது அவ்வளவு எளிதல்ல. இவ்வியல்பைக் கூறும் குறிப்புகள் கதா, முண்டக, மைத்ரி உபநிடதங்களில் வருகின்றன:

அறியாமையின் நடுவே உறைவோர்
பார்வையற்றவனால் வழி நடத்தப்படும் குருடர்களைப் போல
தங்களை கற்றறிந்தோராகக் கருதிக்கொண்டு
மனம் புண்பட்டு ஏமாற்றத்துடன் சுற்றிச்சுற்றி வருகின்றனர்

“உறங்கி, விழித்து, பலதையும் எண்ணும் உலகத்தோர்” என குரு சொல்வதை, இவ்வுபநிடத வாக்கியங்களைக் கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றப்படாததும், அதே சமயம் புரியாத வகையில் ஒளிர்வதுமான ஒர்  விளக்கைப்போல் நம் எண்ணங்களையும் செய்கைகளையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றை நோக்கி நம் கவனத்தை திருப்புகிறார் குரு.  மைத்ரீ உபநிடதத்தில் பின்வரும் விவரணை இடம்பெறுகிறது:

இதய வெளியில் உறையும் ஆன்மாவின் பண்பு ஒளிரும் மீஆற்றலுடையதைப் போன்றதேதான். 
அது தீயிலும், கதிரவனிலும், வாழ்க்கை சுவாசத்திலும் தோன்றுகிறது. 
அதேபோல், இதயவெளியில் உறையும் ஆன்மாவின் பண்பு ஓம் எனும் ஒலியைப் போன்றதே.
 
இங்கே தீயென்றும், கதிரவன் என்றும், சுவாசம் என்றும் கூறப்படுபவை தனித்தனிப் பொருட்களல்ல.  ஏனெனில் அதே உபநிடதத்தில்:
 
எல்லாவற்றிலும் உறைபவனே, அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவனே, ஓ பிரம்மா! எனக்கு எல்லா வரங்களையும் தா!
 
மெய்ம்மையின் முகம் பொற்கலசத்தால் மூடப்பட்டுள்ளது
ஓ புஷன்! அதை அகற்றுவாயாக!
அனைத்திலும் உறையும் முடிவற்ற மெய்மையை காட்டுவாயாக!

தொலைவில் அங்கே கதிரவனில் இருக்கும் புருஷன் – நானே அவன்

சூரியனில் இருக்கும் சூரியத்துவமே நிலைபேறான மெய். அது தூயது, தனிப்பட்டது, பாலற்றது (அலிங்க)

வானில் பரவி இருக்கும் செவ்வொளி – கதிரவனின் நடுவே, கண்ணில், நெருப்பில் இருக்கும் ஒரு பகுதி மட்டுமே.

அதுவே பிரம்மம். அதுவே அழிவற்றது.  அதுவே பிறங்கொளி கொண்டது. அதுவே நிலையான மெய்மை.

உள்ளுறையும் நினைவுகளால் தூண்டப்படும் இயற்கையின் மூன்று முறைகளால்  நம் மனம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை முந்தைய பாடல்களுக்கான உரைகளில் பார்த்தோம். இம்முறைகளைக் கடந்துசெல்வது என்னும் சிக்கலை இப்பாடல் பேசுகிறது.  பகவத் கீதையின் பதினாறாவது காண்டத்தில் அர்ஜுனன் இதே சிக்கலை எதிர்கொள்க்கிறான்.  கிருஷ்ணனை அவன் கேட்கிறான்:

அம்மூன்று முறைகளையும் ஒருவன் கடந்துவிட்டான் என்பதை எப்படி அறிவது? அவனது நடத்தை எப்படியிருக்கும்?  அவன் எவ்வாறு அம்முறைகளை கடக்கிறான்?

இதற்கு

அவன் ஒளியும், செயலும், மாயமும் உள்ளபோது மனக்குறை கொள்வதில்லை; அவை இல்லாதபோது அவற்றுக்காக ஏங்குவதுமில்லை

என்று பதிலிறுக்கிறான் கிருஷ்ணன்.

முதல் பாடலில் சொல்லப்பட்ட கரு என்பதை பகவத் கீதை பூதாத்மன் என்கிறது.  அறிவின் அறிவாய் சுயம் பிரகாசமாய் இருப்பது, ஒருவனை செயல்படச்செய்யும் உள்ளாற்றலாய் இருப்பது, அறிபவனுக்கு காட்டப்படும் உலகாய் இருப்பது – இம்மூன்றூமே கருவின் பண்புகள்.  இம்மூன்று குணங்களையும் கீதை ஒளி (பிரகாசம்), செயல் (ப்ரவ்ருத்தி), மயக்கம் (மோகம்) என்கிறது.  முழுமுதல் எந்த மாற்றத்திற்கும் ஆளாவதில்லை என்றாலும், முழுமுதலின் எதிர்மறைக் கொள்கை இம்மூன்று பண்புகளும் ஒன்றன்மீது ஒன்றாய் வைக்கப்படுவதற்குக் காரணமாகிறது.

வேதாந்தத்தில், இம்மாதிரியான் மாறுதல் நிர்விகாரம் எனப்படுகிறது.  ஏழாவது பாடலில் தான் கூற இருக்கும் மாறுதலில்லா முழுமுதல் எனும் கருத்தை நாம் வந்தடைய நம்மை தயார் செய்கிறார் நாராயண குரு.  இப்பாடலில் நனவின் தமக்குள் ஒன்றுடன் ஒன்று மாறுபடும் நிலைகளை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார்.  முழுமுதலின் இயல்பு நிலை என்பது தானே பெற்ற பிரகாசம்.  இதனை, ஏற்றப்படாததும் அணையாததுமான ஒரு விளக்குடன் ஒப்பிடுகிறார் குரு.  சாதாரண மனிதன் சிக்கிக்கொள்ளும், மாறிக்கொண்டே உள்ள உலகம் செயலாலும் மயக்கத்தாலும் ஆனது.  இவை உருக்காட்டும் சுயத்திலும், கீதை கூறும் பூதாத்மனிலும் உண்டு.

போதியஸின், ‘The Consolation of Philosophy’—இல் ம னிதனின் இரங்கத்தக்க நிலையை ஃபிலசோஃபியா விவரிக்கிறான்:

‘ஓ! பேராழத்தில் மூழ்கும் இம்மனம்தான் எப்படி உற்சாகமிழக்கிறது!  இயல்பான தன் ஒளியில்லாமல் புற இருட்டில் திரிந்தலைகிறது.  உலகாயதக் காற்றுகளால் நிரப்பப்பட்டு எண்ணங்கள் வெடித்துச் சிதறும் அளவிற்கு ஊதிப்போகிறது’

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் உள்ளொளியைக் காண்பதே இந்த சோகத்திற்கு மருந்தென்கிறார் குரு.

இணைபிரியா பறவைகளிரண்டு
ஒரே மரத்தில் நெருங்கி அமர்கின்றன
இரண்டில் ஒன்று இனிக்கும் பழமொன்றைப் புசிக்க
மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது
 
அதே மரத்தில் ஒருவன் துயரத்துடன்
தன் இயலாமைக்கு வருந்திச் சோர்கிறான்
பிறிதொன்றை, இறையைப் பார்க்கும்போது
அதன் உன்னதத்தை உணரும்போது துயரங்களிலிருந்து விடுபடுகிறான்
 
காண்பவன் படைப்பவனை, ஒளிரும் இறையை
பிரம்மத்தைப் பார்க்கும்போது
அறிபவனாகி , நன்றையும் தீதையும் உதறி
மாசற்றவனாய் மீயுயர் தன்மையை அடைகிறான்.

என்கிறது முண்டக உபநிடதம்

உணரக்கூடியதான புலன்-மன அணைவும், நம்முள் உறையும் உயிரூட்டும் ‘தானும்’ ஒரே கொள்கையில் பிறப்பவை. இவ்விரண்டும் ஒருவரோடொருவர் பிணைத்துக்கொண்ட ஆத்ம நண்பர்கள்போன்ற இரு பறவைகளாக விளக்கப்படுகின்றன.  அவை தனியனில் உள்ள ஆத்மாவும் கடவுளும் என்பது சங்கரர் கூற்று. ஆசை, அறியாமை, செயல் இவற்றால் உருவாகும் பாங்குகள் மற்றும் பாதிப்புகளை தன்னுள் கொண்ட நமது நுண்ணிய உடலில் அவை உறைகின்றன.

இரண்டில், தனியனின் ஆன்மா செயலின் பலனை அனுபவிக்கிறது.  இயல்பிலேயே காலமற்றதும், தூயதும், ஞானமுள்ளதும், கட்டுப்பாடுகளற்றதும், எங்கும் நிறைந்திருக்கும் மாயையே வரம்பிடும் அடையமாகக் கொண்டதுமான இறை எதையும் ருசிக்காமல், வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.

சம்சாரமென்னும் மாய உலகில் முற்ற மூழ்கிய தனியனின் ஆன்மா மீண்டும் மீண்டும் சோர்வடைகிறது.  அத்தகைய ஆன்மா தனது தவறான அடையாளத்தால் மீண்டும் மீண்டும் சிறுமைவாய்ந்த கருப்பைகளில் பிறப்பதாக நம்பப்படுகிறது.  ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவனின் கருணைபொங்கும் வழிகாட்டலால் தனியன் ஒருநாள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒழுக்கமான பயனுள்ள வாழ்வின்மூலம் தன்னுள் ஒளிரும் மெய்யொளியை கண்டுகொள்ளும் தரிசனத்தை ஒருவேளை அடையக்கூடும்.  அப்போது எல்லாவற்றிலும் ஒன்றேயாக உறையும் ஆன்மா எனும் ஒளிரும் தனியன் நானே என்று உணரக்கூடும்.  அப்போது சிறப்பு-குற்றம் எனும் இருமையும், பிணைப்பை உருவாக்கும்  இருவகைச் செயல்களும் ஒருவரிடமிருந்து உதிர்ந்துபோகும்.  அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுபட்டபின், எல்லா இருமைகளையும் கடந்த முழுச்சமநிலையை ஆன்மா அடையும்.  அத்தகைய ஒரு நிலையை கீதை கூறுகிறது.

அஞ்ஞானம் அழிக்கப்பட்ட ஆன்மாவைக்
கொண்டவருக்கு முழுமுதல் போல் ஒளிதருகிறது ஞானம்
 
காரண ஆய்விற்கு அம்முழுமுதலைக் கொண்டோரும்
ஆன்மாவிற்கும் முடிபான ஒழுக்கத்திற்கும்
உயர் இலக்குக்கும் அதைக்கொண்டோரும்
மீளுதலில்லா இறுதிநிலைக்குச் செல்கின்றனர்
மண்டியவை எல்லாம் ஞானத்தால் ஒழிக்கப்படுகிறது. (பா 16, 17)

மேலுள்ள இரண்டாவது பாடலை ‘உலகர் உறங்கி’ எனும் இப்பாடலுடன் ஒப்புநோக்குங்கள்.  ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுமையே அதன் பொருண்மைத்தன்மை, புறமெய்மை மற்றும் இழப்பு என்கிறார் மார்டின் ஹெய்டெகர்.  ஆனால், கீதையில் ஒருவனது காரண ஆய்வு ஒருமையுடையதாய் இருந்தால் இழப்பு என்பதே இல்லை என்பது தெளிவாகக் கூறப்படுகிறது.

ஆர்வச்சிதறலுடன் வரும் காரண ஆய்வைப் போலல்லாமல், ஒருமைவாத ஆய்வு பகுத்தறிவு சார்ந்தது, நெறிப்படுத்தப்பட்டது, அதன் குறிக்கோளை நோக்கி செலுத்தப்படுவது.  நடராஜ குரு, தனது கீதை உரையில், ‘அத்தகைய காரண ஆய்வு அதன் தேடலுக்கான குறிக்கோளுடனான ஒரு நேரடி இருமுனை உறவை நிறுவுகிறது.  முடிவில்லா கிளைத்தல்களில் அவை தொலைந்துபோவதில்லை.  இருமுனைமை நிறுவப்பட்டபின் அதே போக்கில் மேலும் காரண ஆய்விற்கு உதவுவதாக அமைகிறது’ என்கிறார். நம்முள் ஏற்றப்படாத ஒளியென எப்போதும் விழிப்புடன் பார்த்துக் கொண்டேயிருக்கும், சொற்களுக்கப்பாற்பட்ட அரியதான முழுமுதலுடன் இருமுனைமையொன்றை நிறுவிக்கொள்ளவேண்டும் என்பதே, நாராயண குரு இப்பாடலில் அளிக்கும் அறிவுரை.  அதே சமயத்தில், நெறிப்படுத்தப்படாத ஒருவன் முழுமுதலுடனான செம்மையான இசைவுகொண்ட மீயுயர் நிலையை அடைவது எவ்வளவு அரிதானது என்பதை அறிந்தவரே குரு.  அடுத்த பாடலில் மனிதனின் சோகமான நிலைக்காக வருந்துகிறார் அவர்.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

Standard

அறிவும் அறிந்திடும் பொருளும் அறிபவன்
தன்னறிவும் எல்லாம் முழுமுதல் மட்டுமேயாம்
மயக்கம் நீங்கி விளங்கிடும் உயர்வாம்
அறிவிலமர்ந்து அதுமட்டுமாதல் வேண்டும்

                                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 4)

நனவு என்பது நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை போன்றது. காரணத்தை ஒதுக்கி விளைவில் மட்டுமே நம் கவனம் குவிவதால், எப்போதும் நம்மால் அதன் முழுமையை உணரமுடிவதில்லை. ஆற்றுப்படுகையின் உருவரைகளை (contours) நாம் காண்பதே இல்லை. மேல்தளத்தில் அது உருவாக்கும் விளைவுகளை மட்டுமே பார்க்கிறோம். இது குறிப்பிட்ட அகப்பாட்டெல்லையில் இடர் ஏதும் விளைவிப்பதில்லை. ஆனால், சில சமயங்களில் ஒரு நதி மலையிடுக்கில் நுழைந்து காணாமல் போகக்கூடும். நம் அனுபவமும் அதையொத்ததே.

‘இதோ என் குழந்தை’ என்று தாய்க்கு அவளறியாமல் தோன்றும் எண்ணம் வெறும் எண்ணம் மட்டுமல்ல. அது அவளை பேரின்பத்தில் ஆழ்த்துகிறது. ‘இவ்வனுபவத்தை நான் ஒரு உயர் விழுமியமாய் கருதுகிறேன்’ என்று அவள் சொல்லாவிட்டாலும் உண்மையில் அதுதான் நிகழ்கிறது. இந்த எடுத்துக்காட்டில் மூன்று நிலைகள் உள்ளன. அறிதல் (cognition), இணைவைத்தல் (connation) உணர்ச்சிமேலிடல் (affection). தாயின் விழிப்புணர்வில் குழந்தை பற்றிய எண்ணம் பதிவாவதை ‘அஸ்தி’ எனலாம். அதைத் தொடர்ந்து தன் குழந்தை என அவள் அறிவதை ‘பாதி’ எனலாம். சொல்லப்படாத, இயல்பான அவள் இன்பம் அறிவாகவும் பொருளாகவும் இருக்கிறது.

இவ்விடத்திற்குப் பொருந்தக்கூடியதாய் அமைவது. சமஸ்கிருத ‘அர்த்தம்’ என்னும் சொல். அது விழுமியம் மற்றும் பொருள் என்ற இரண்டையும் குறிக்கும். ஒருவனுக்கு உடனடியாகத் தோன்றுவது உள்ளுணர்வால் அறியப்படும் விழுமியம். பின்னர் அனுபவத்தையும் அதன் பொருளையும் நிதானமாய் அசைபோடும்போதுதான் அதன் காரண காரியத் தொடர்பு புரிகிறது. இணைவைத்தலை தொடர்ந்தே உணர்ச்சி மேலிடும் என்று உளவியலாளர் கூறினாலும் அந்த வரிசையை மாற்றி வைக்கிறார் குரு. ‘அறிஞ்ஞிடுமர்த்தவும்’ என்ற (விழுமியத்தின் கவர்ச்சி) சொல்லாட்சியில், ஒரு அனுபவத்தின்போது ஒருவன் எதிர்கொள்ளும் பொருளையும் விழுமியத்தையும் இணைக்கிறார். இங்கு அவர் குறிப்பது ‘பாதி’யை மட்டுமல்ல; அத்தருணத்தில் ஏற்படும் உணர்ச்சி கூடிய நனவு மின்னலையும்தான். அதன் பிறகு அவன் அமைதியடைகிறான். ஒருவனது தனிப்பட்ட அறிவு எனும் தூய அறிதலை இங்கு வைக்கிறார் குரு. அன்பு சமஸ்கிருதத்தில் ‘ஆனந்த(ம்)’ எனப்படுகிறது. அது தனித்து நிற்பதில்லை, அதனால்தான் அதை விழிப்புநிலையில் ஏற்படும் அனுபவம் என்கிறார்.

ஒருவனது நனவு நிலையில் எண்ணற்ற அவாக்கள் புதைந்திருக்கின்றன. இங்கு நாம் கூறும் ‘காரணகாரிய’ நனவு என்பது யுங் கூறும் தனிப்பட்ட நனவிலியை ஓரளவு ஒத்துள்ளது எனலாம். ‘நனவின் ஒளியைத் தேடும் நனவிலியின் தீரா விருப்பு’ குறித்து அவர் பேசுகிறார். நம் அவாக்கள் எல்லாம் இன்பம் தருபவை அல்ல. அவற்றுள் பல அச்சத்தால் தோன்றுபவை. தவிர்த்துச் செல்லவும். விட்டோடச் செய்யவும் நம்மை தூண்டுபவை. மீதமுள்ளவை எளிய புலனின்பம் முதல் யோகிகளின் உச்ச அனுபவமான பேரின்பம் வரையான இன்ப நாட்டம் கொண்டவை.

அறிவியங்கியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று கேள்விகளை இப்பாடலில் நாம் எதிர்கொள்கிறோம். முதலில், மன நாட்டத்தில் ஏற்படும் மாற்றத்தைத் தூண்டுவது எது என நாம் அறியவேண்டும். யுங் கூறும் தனிப்பட்ட நனவிலி மற்றும் அதன் ஊக்குவிப்புடன் நாம் ஒப்பிடும் உள்ளார்ந்த அவா அல்லது உள்ளுறையும் நினைவுகள் இவற்றால்தான் ஆர்வ நாட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்பது வேதாந்திகள் தரப்பு. ‘உள்ளார்ந்த அவாக்கள் நனவுக்குள் நுழைவதெப்படி?’ என்பது இரண்டாவது கேள்வி. இங்கு ‘மஹஸ்’ என்னும் ஆதிப்பொருளின் தொடக்கத்தை தேடிக்கண்டடைகிறார் குரு. மூன்றாவதாக, நனவு ஏன் அறிபவன், அறிபொருள், அறிவு என மூன்றாக உடைந்திருக்கிறது? ஆர்வக் குறைவு நனவு சிதறுவதற்கு காரணமாகிறது என்பதை பாடலின் இரண்டாவது பகுதியிலிருந்து நாம் கண்டறியலாம். இதையே, மனம் முழுமையாக குவிவதன் மூலம் இணைவு ஏற்படுகிறது என்றும் கூறலாம். தீவிரம் தளரும்போது மனமானது, அறிபவன் அறிபொருளைக் குறித்த அறிவைப் பெறுவது என்னும் தனது வழமையான பாங்கிற்குத் திரும்புகிறது.

இவற்றுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம். தனிப்பட்ட தன்முனைப்பு தனக்கென ஒரு இருப்பை கொண்டிருப்பதில்லை. ‘அவன்’ அல்லது ‘அவள்’ எனப்படுபவை ஒப்புமைக்கூறுகளே. சத், சித், ஆனந்தம் என்று வேதாந்தம் வரையறுக்கும் முழுமுதல் மட்டுமே தனி மெய்ம்மை கொண்டது. சத் என்பது (இயற்பியல் மற்றும் உளவியல் சார்ந்த) அனைத்துப் பொருட்களின் நிலைக்களம். சித் என்பது ஒளியின் தோற்றுவாய். அதில் ஒளிரும் தன்மையும் ஒளியூட்டப்பட்டதும் அடங்கும். ஆனந்தம் எல்லா விழுமியங்களுக்கும் நிலைக்களம். முழுமுதலாகக் கருதப்படும்போது, வசதிக்காக பெயரிடப்பட்டிருந்தாலும் இப்பண்புகளின் இடையே எந்தப் பிரிவினையும் இல்லை. அதே போல். இருத்தலின் நிலைக்களம், நனவு மற்றும் விழுமியத்தின் நிலைக்களம் எனும் இம்மூன்று கூறுகளுக்குள்ளேயும் உள்ளார்ந்த பிரிவுகள் ஏதும் இல்லை.

முதலில் இருந்த இணைவு பற்றிய தெளிவு மறையும்போது தனியன் என்னும் உணர்வு தோன்றுகிறது. வேதாந்தத்தில் முழுமுதலுக்கு எதிரிணையாக ஒரு எதிர்மறை கருத்து முன்வைக்கப்படுகிறது. மாயை எனும் இந்த எதிர்மறைக்கும் முழுமுதலுக்கும் இடையேயான உறவு, ஒளிக்கும் நிழலுக்கும் இடையேயான உறவைப் போன்றது. நிழலுக்கென தனி இருப்பில்லை; ஒளியின் இருப்பில் தன்னை இருத்திக்கொள்ள முடிவதில்லை. ஆயினும், நிழல் என்பது, ஒளியைப் போலவே, எல்லோராலும் உணரப்படுகிறது.

இங்கு நிழல் என்று கூறப்படுவதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் செயல்பாடு என்ன என்பதை நம்மால் உணரமுடியும். கண்ணுக்குப் புலனாகும் உலகு என்பது அறிவுக்குப் புலனாகும் உலகில் உள்ள முன்மாதிரிகளின் நிழல்தான் என்று ப்ளேடோ கூறியபோது அவர் ஏதோ உருவகப்படுத்துகிறார் என்று நினைத்தனர் மக்கள். ஆனால் நமது காலத்தில், இயற்பியலாளரும் உடலியல்-உளவியலாளரும் (physiological psychologists) நமது அனைத்து புலன் அனுபவங்களும் அகம்சார் உணர்ச்சிகளும் முன்னிறுத்தப்படும் படிமங்களின் தொடரால் ஆனவை என்று வலியுறுத்துகின்றனர். இவை நிழல்களுடன் ஒப்பிடத்தக்கவை. எடுத்துக்காட்டாக, பைபிள் என்று நாம் அடையாளப்படுத்தும் ஒரு தடிமனான நீல வண்ண புத்தகத்தை நாம் பார்க்கும் அனுபவத்தை எடுத்துக்கொள்ளலாம். இவ்வனுபவத்தின் மூலத்தை நாம் இரண்டு பக்கங்களிலிருந்து அணுகலாம். புத்தகம் எனும் பொருள் என்ற முறையிலும் அணுகலாம். அல்லது அது யேசு கிறிஸ்து மற்றும் சில தொல் யூத அருட்போதகர்களின் போதனைகள் என்று அறியும் நனவின் வழியாகவும் அணுகலாம். வேதாந்திகள் நனவின் கோணத்தில் பார்க்க விழையும்போது, அறிவியலாளர் அளவிடக்கூடிய புறவயத் தரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

முதலில் அறிவியலாளர் சொல்வதை கேட்போம். இயற்பியலாளரைப் பொறுத்தவரை நீலம் என்றோ சிவப்பு என்றோ நிறங்கள் ஏதும் இல்லை. ஒளியூட்டப்பட்ட பருப்பொருள்களை மட்டுமே நாம் காண்கிறோம். ஃபோடான்களால் ஆனது என நம்பப்படும் மின்காந்த ஆற்றல்தான் ஒளி. ஆற்றல்கொண்ட இந்த ஃபோடான்கள் முரண்பட்ட கூறுகளையுடையதாகவோ அல்லது ஒரே மாதிரியான கூறுகளையுடையதாகவோ இருக்கலாம். ஒளியின் தன்மை அதன் அலைகளின் நீளம், வீச்சு மற்றும் அதன் தூய்மை ஆகியவற்றைப் பொருத்து அமையும். கட்புலன் உணர்வுகள் ஒளியின் இம்மூன்று பண்புகளுடன் நேரடித் தொடர்புடையவை – நீளம் வண்ணத்தை முடிவு செய்கிறது, வீச்சு பொலிவை உண்டாக்குகிறது, தூய்மை நிறைவை அளிக்கிறது. உதாரணமாக, ஒரேமாதிரியான கூறுகளைக் கொண்ட அதிக ஃபோடான்கள் ஒன்றாகச் சேரும்போது, ஒளி தூயதாகக் கருதப்படுகிறது. அலைநீளத்தில் உள்ள வேறுபாடுகளைப் பொருத்து அது நீலமாகவும், சிவப்பாகவும், பிறவாகவும் தோன்றுகிறது. வீச்சு ஃபோடான்களின் செறிவைப் பொருத்து உருவாகிறது. ஒளியலைகள் மில்லிமைக்ரான்களில் கணக்கிடப்படுகின்றன. அப்பாலூதா நிறத்தின் (ultraviolet) எல்லையைக் குறிக்கும் 280 மில்லிமைக்ரான்களுக்கும் அப்பாற்சிவப்பு நிறம் (ultra red) தொடங்கும் 760 மில்லிமைக்ரான்களுக்கும் இடைப்பட்ட அலைவரிசைகளை மட்டுமே மானுடக் கண்கள் காணமுடியும். இப்பரிமாணங்களுக்கு வெளியே உள்ள எக்ஸ்ரே மற்றும் காமா ரேக்கள் போன்ற அலைகள் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் இயந்திரங்களால் கணக்கிடப்படக் கூடியவை.

கட்புலன் அனுபவத்தில் ஆற்றலை ஆற்றுப்படுத்தும் மூன்று தனித்தனி நிலைகள் உள்ளன. முதல் நிலையில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதலாவது ஒரு பொருளை ஒளியூட்டும் சூரியன் முதலான வெளிப்புற ஒளி. அடுத்ததாக, பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால் பாதிக்கப்பட்டு சூரியக் கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன. இதில் அசல் ஒளியின் நீளம், வீச்சு மற்றும் தூய்மை ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடுகின்றன. இந்நிலையிலேயே ஒளியானது ஒரு நிழலாக மாறிவிடுகிறது எனக் கூறலாம். மாற்றத்திற்குள்ளான, கட்டுப்பாட்டிற்குள்ளான ஒளி எல்லா திசைகளிலும் ஒளிர்கிறது. அதன் மிகச் சிறிய கூறு கண்ணில் உள்ள ஆடியில் விழுகிறது. கட்புலன் வீச்சுக்குள் நுழையும் ஒளி விழியின் பின்திரையில் குவிகிறது. இதற்குப் பிறகு ஒளி பற்றி நாம் எதுவும் குறிப்பிடுவதற்கில்லை. பின்திரை தாண்டி ஒளி செல்வதில்லை.

பின்திரையின் வெளிச்சுற்றில் கோல்களும் நடுவே கூம்புகளும் வரிசையாக உள்ளன. இவற்றிலிருந்து ஒளி மின் அதிர்வுகளை உண்டாக்கி மூளைக்குக் கடத்துகிறது. இது இரண்டாம் படிநிலை. இந்நிலையில் ஒளி நரம்புத்தூண்டல்களாக தனது நிழலை படியச்செய்கிறது. இத்தூண்டல்கள் மூளையின் வெளிப்புறத்தை (cortex) அடைந்தவுடன் மேலும் மாற்றத்திற்குள்ளாகி ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் அனுபவ நிரலோடு தொடர்புறுத்தப்படுகின்றன. மூளையில் ஏற்படும் ஒரு விசித்திரமான நிகழ்வு ஒரு பொருளை (ஒரு புத்தகத்தை) பார்க்கும் அனுபவமாக இதை கண்டறிகிறது.
மூளையின் இயக்கத்தால் தோன்றும் ஒரு பொருளின் மூன்றாம்நிலை திரிபுக்கும் அசலான பொருளுக்கும் இடையேயான சமனையோ, ஒன்றுடன் ஒன்றுக்குள்ள உள்ள தொடர்பையோ அறுதியிட்டுக் கூற முடியாது என்பது அறிவியலாளரின் தீர்ப்பிலிருந்து தெளிவாகிறது. ஏனெனில், நாம் ‘காண்பது’ ஒரு நிழலின் நிழலுடைய நிழலையே.

இப் படிநிலைகள் தொடர்பாக, இயற்பியலாளரும், உயிரிவேதியியலாளரும், நரம்பியலாளரும், உடற்கூறியல் உளவியலாளரும் ஒன்றிணைந்து, பார்வை என்பதை விளக்க, நூற்றுக்கணக்கான கருதுகோள்களை முன்வைத்து, கிரேக்க லத்தீன் மொழிச் சொற்களில் கவர்ச்சிகரமான பல கலைச்சொற்களை உருவாக்கியுள்ளனர். அனைத்தையும் தாண்டி, ஒரு புத்தகத்தைக் காண்பது எனும் சாதாரண நிகழ்வு இன்றும் ஒரு புதிராகவே, ஒரு அதிசயமாகவே இருக்கிறது.

புலன்கள் மூலம் அறிதல் எனும் இயக்கம் குறித்து அறிவியலாளர் மிக விரிவாகவே ஆராய்ந்துள்ளனர். ஆனால் நாம் எவ்வாறு அறிகிறோம் என்பதை அவர்களால் கூற முடிவதில்லை. இதற்காகவே மரபணுவியல் எனும் புதிய அறிவியல் துறையே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பாலியன்டாலஜியுடன் இணைந்து உள்ளுறையும் நினைவுகளை விளக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லோக்கி (Locke) சுட்டிக்காட்டியது போல மனம் ஒரு ‘தபுலா ரசா’ (tabula rasa) இல்லை என்ற கருத்து இப்போது முன்வைக்கப்படுகிறது. நடத்தையியலாளரின் கூற்றுப்படி, மனம் என்று நாம் குறிப்பிடுவது மைய நரம்பியல் அமைப்பின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டினால் ஏற்படும் ஒரு நிகழ்முனை மட்டுமே. மனித மூளையில் பத்து பில்லியன் நியூரான்கள் உள்ளன. இவை, வேதிப்பொருட்கள் பரவும் குளகங்களால் இணைக்கப்பட்டுள்ளன. வேதிப்பொருட்களின் பரவல் ஒரு உயிரணுவிலிருந்து இன்னொன்றிற்கு தகவலைக் கடத்த உதவுகிறது. கார்ல் சகனின் கூற்றுப்படி ஒரு சாதாரண மனித நியூரானில் 1000 முதல் 10000 வரையிலான குளகங்கள் உள்ளன. மனித மூளையில் சுமாராக 1013 குளகங்கள் இருக்கின்றன என்கிறார். மேலும், ஒரு மனித மூளையின் வெவ்வேறு நிலைகள் மொத்தப் பிரபஞ்சத்திலும் உள்ள அடிப்படைக் கூறுகளையும் விட எண்ணிக்கையில் அதிகம் என்றும் கற்பனைக்கெட்டா இந்த எண்ணிக்கையே மானுட நடத்தையின் முன்னறிந்து கூறமுடியாத தன்மைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.
(The number of different states of a human brain is 2 raised to this power – i.e. multiplied by itself ten trillion times. This is an unimaginably large number, far greater, for example, than the total number of elementary particles (electrons and protons) in the entire universe…. These enormous numbers may also explain something of the unpredictability of human behavior – Carl Sagan, The Dragons of Eden)

ஒவ்வொரு நியூரானும், பிற உயிரணுக்களைப் போலவே, திருகுசுழல் வடிவத்தில் (helix) அமைந்த ஒரு டிஎன்ஏ அணுத்திரண்மத்துடன் கூடிய, ஐந்து பில்லியன் இணை நியூக்ளியோடைடுகளால் ஆன ஒரு குரோமோசோமை கொண்டுள்ளது. இந்நியூக்ளியோடைடுகள் நான்கு பில்லியன் வருடங்கள் பழமை கொண்ட அறிவின் கிடங்காகக் கருதப்படுகின்றன. மேலும் கார்ல் சகன், ‘ஒரு மானுட குரோமோசோமில், ஒவ்வொரு பக்கத்திலும் 300 சொற்கள் அடங்கிய ஐநூறு பக்கங்கள் கொண்ட நாலாயிரம் புத்தகங்களில் கொள்ளக்கூடிய தகவல்கள் அடங்கியுள்ளன’ என்கிறார்.
(The information content of any message is usually described in units called bits, which is short for ‘binary digits which is short for ‘binary digits’ … Since there are four different kinds of nucleotides, the number of bits of information in DNA is four times the number of nucleotide pairs. Thus, if a single chromosome has five billion (5 x 109) nucleotides, it contains twenty billion (2 x 1010) bits of information… How much information is twenty billion bits?… If a typical book contains five hundred such pages (300 words), the information content of a single human chromosome corresponds to some four thousand volumes.)

இவையெல்லாம் ஊகங்கள்தான் என்றாலும், புலனனுபவங்களின் அடிப்படைக் கூறுகளை உடனுக்குடன் அறியும் திறனை மனம் பெற்றிருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு தனியனின் உடலிலும் கணக்கிட முடியாத பழமை வாய்ந்த சில புதிரான கூறுகள் இருப்பதே என்பது அறிவியலாளர் முடிபு. அவர்கள் கூறும் பொருள் என்பது கற்பனைசெய்யக்கூடிய பொருண்மைக் கூறு எதையும் நமக்குக் காட்டுவதில்லை என்பதை எளிதாக அறியலாம். அவர்கள் அதை ஆன்மா என்று அழைப்பதில்லை. பெரும் வழக்காய்வாளருக்கும் (Grand Inquisitor) அறிவியலாளருக்கும் இடையே நிகழ்ந்த சச்சரவில், கலீலியோ போன்ற அறிவியலாளரும், ப்ரூனோ போன்ற முற்போக்குச் சிந்தனையாளரும் கத்தோலிக்க சபையால் தண்டிக்கப்பட்டதனால் ஏற்பட்ட முன்முடிவே இதன் காரணம். அறிவியலாளர் மரபுத் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதோடு, உள்ளார்ந்த நினைவுகள் ஒருவனது பரம்பரை படிநிலையில் ஒரு பாட்டனாருடையதாகவோ, பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குரங்குடையதாகவோ, இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கடற்பாசியுடையதாகவோ அல்லது நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிருமியுடையதாகவோ இருக்கலாம் என்கின்றனர். அறிவியல் கூற்றாக இவற்றை வாசிக்கும்போது இதை ஒப்புக்கொள்ள ஒரு நிர்பந்தம் உங்களுக்கு ஏற்படுகின்றது. ஏனெனில், அறிவியலின் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் நீங்கள் பெரிதும் கவரப்பட்டுள்ளீர்கள். ஆனால் இது கதையின் ஒரு பகுதி மட்டுமே.
‘நனவு என்பது என்ன?’ எனும் உண்மையான கேள்வி இன்னும் பதிலிறுக்கப்படவில்லை. இன்னும் துல்லியமாகக் கூறவேண்டும் என்றால், ஒத்தகூறுகள் கொண்ட மானுட அறிவினால் மிகச்சரியாகக் கண்டறிந்து உகந்தாற்போல் விளக்கம் தரக்கூடியதும் உலகில் எங்கிருந்தாலும் பகுத்தறிவுடையோர் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளக்கூடியதுமான, வடிவிலும் செயல்பாட்டிலும், கணக்கியல் ரீதியாக இழைபிசகாத தர்க்கமும் ஒழுங்கும் எதற்காக உள்ளது? இணைவான ஒரு மாதிரி கருத்துப்படிவத்திற்காக, அறிவியல் ஒரு புதிரான ‘பொருளை’ ஒப்புக்கொள்ளும் என்றால், தன்னையே ஒழுங்கமைக்கப்பட்ட பிரபஞ்சமாக மாற்றிக்கொள்ளக்கூடிய அறிவும், தன்னையே எப்போதும் போற்றிக்கொள்ளும் திறனும் கொண்டதான பல்வேறுபட்ட தெளிவும், போற்றும் நிலைகளும் கொண்ட தனிப்பட்ட நனவாக தன்னையே ஆக்கிக்கொள்ளக்கூடிய, அனைத்தையும் ஊடுருவக்கூடிய ஒரு நனவை முன்வைப்பதில் ஒரு வேதாந்திக்கு என்ன தடை இருக்கமுடியும்? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம்பகத்தன்மையுடன் இணைந்து நம் குளகங்களின் வழியே உயிரூட்டப்படும் தகவல் தொகுப்பை அறிவியலாளர் முன்வைக்கும்போது, கனவுகாணும் திறமையையும் கற்பனைத் திறனையும், கணக்கிடும் ஆற்றலையும், வடிவமைக்கும் திறனையும், நகைச்சுவை உணர்வையும் கொண்டு ஒரு பிரபஞ்ச விளையாட்டை நிகழ்த்தும் மூலாதார நனவை வேதாந்தி முன்னெடுக்கிறார். இவ்விரண்டுமே தொன்மங்கள் என்றால், நிச்சயமின்மையில் தொடங்கி அதிலேயே முட்டி நிற்கும், சோர்வளிக்கும் ஒரு கருதுகோளைத் தவிர்த்து, போற்றத்தக்கதும், இனிமையானதுமானதை ஏன் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

நம்முள்ளே பேரெண்ணிக்கையில் உள்ளார்ந்த அவாக்கள் உண்டென்பதையும் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றில் ஒன்று மட்டுமே மனதில் இடம்பெற முடியும் என்பதையும் வேதாந்தியும் அறிவியலாளரும் ஒப்புக்கொள்கின்றனர். ஒற்றை ஆர்வம் சிறிது நேரமே தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதை இதன் மூலம் அறியலாம். மார்டின் ஹெய்டெக்கரின் அனுபவம் பற்றிய மதிப்பீடு இந்நிலையில் ஒப்புக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. ஒவ்வொரு அனுபவமும், தனியன் ஒரு முன்வடிவமைக்கப்பட்ட தொடர்நிகழ் உலகில் இருப்பதைப் போல் தோன்றச் செய்கிறது. இதை அவர் ‘facticity’ என்றார். தனியன் செயல்படுவதற்கும் செயல்பட மறுப்பதற்கும், எதிர்வினையாற்றுவதற்கும் மரபுத்தொடர்ச்சியும் சூழலால் கட்டமைக்கப்படுவதும் காரணமாகின்றன. சவாலை ஒருவன் எதிர்கொள்ளும்போது, இருப்புசார் வடிவைப் (existential profile) பெறுகிறான்; ஒருவனது எதிர்ச்செயலாற்றல் இருப்பு ரீதியாக தூண்டப்படுகிறது. ஆழியின் ஒரு அலை அசையாமல் இருக்க முடியாது. ஏனெனில் பிற அலைகளின் அழுத்தங்கள் அதன் இடத்தைப் பெற விழைகின்றன். அதே போல், ஒரு ஆர்வம் திருப்தி மூலம் கரைந்துபோகிறது; அல்லது ஏமாற்றத்தால் உருகிப்போகிறது. இதையே ஹெய்டெக்கர் forfeiture என்கிறார். மொத்தத்தில் விளைவு என்பது, ஒரு ஆர்வம் இன்னொன்றிற்கு வழிவிடுவது. ஒருவனது இயல்பான மனச்சாய்வுக்கு ஏற்றாற்போல், புலனனுபவத்தில் தெரிவுசெய் அமைப்பியலை (selective structuralism) நாராயண குரு பரிந்துரைக்கிறார் என்பதை இரண்டாவது பாடலிலேயே நாம் பார்த்தோம்.

நமது அமைப்பில் உள்ளார்ந்த அவாக்கள் திணிக்கப்பட்டதை புரிந்துகொள்ள, ‘அறிஞ்ஞிடுமர்த்தம்’ எனும் சொல் உதவும். ‘அர்த்தம்’ என்பது பொருளையும் விழுமியத்தையும் குறிக்கும் என்பதை ஏற்கனவே கண்டோம். புலன் தரவுகளின் ஒழுங்கமைதியும், அதற்குப் பொருளேற்றுவதும், நனவின் அகப்புறக் கூறுகள் சினைமுதல் கடந்த உருவாய் (gestalt) தோன்றுவதன்மூலம் நடக்கின்றன. அர்த்தம் என்பதும் கெஸ்டால்ட் என்பதும் ஒன்றே. திருகுவெட்டுப் புதிரில் (jigsaw puzzle) தொக்கிநிற்கும் உருவம் போல, ஒழுங்கில்லா இவ்வுலகில் பொருட்களையும் எண்ணங்களையும் ஒழுங்கமைக்கும் பரந்துபட்ட ஒரு ஒழுக்கமுறை விதி உள்ளது.

ஒலியை எடுத்துக்கொள்வோமேயானால் நமது குரல் மற்றும் இசை வெளிப்பாடுகளுக்கென, இயலக்கூடியதான ஒலிகளின் முழுத் தொகுதியிலிருந்து, மறை இடைவெளிகள் கொண்ட அடிப்படை ஒலிக்குறியீடுகளை தேர்ந்தெடுக்கிறோம். இவையே, ராகங்களில் அமைந்து பல்வேறு ஸ்தாயிகளோடும் அலைவரிசைகளோடும் சேர்த்து சிக்கலான இசைக்கோர்வைகளை உருவாக்க உதவும் இசைக்குறியீடுகள். அவற்றின் அதிர்வுகளும், முரணதிர்வுகளும் பிரபஞ்ச ஒருமை கொண்டவை, காலம் கடந்தவை. அவற்றைக்கொண்டு நாம் அமைக்கக்கூடிய கோர்வைகளுக்கு எல்லையே இல்லை. அதிர்வெழுப்பும் ஒலிகளை கட்டமைத்தல் மூலமே நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பொருளும் விழுமியமும் உண்டாக்கக்கூடிய உள-மெய் அமைப்பின் சரியான எடுத்துக்காட்டை நாம் இசையில் காணலாம்.

ஒலி என்பது ஒரே சமயத்தில் இயற்பியல் சார்ந்த உள்ளடக்கமும் அழகியல் சார்ந்த ஆற்றலும் கொண்ட ஒரு கூறு மட்டுமே. பிரபஞ்சம் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட பல ஆற்றல்கள் நம்முள் உண்டு. நாம் எல்லோரும் சில அடிப்படை ஆற்றல்களுடனே பிறக்கிறோம். சூழல்சார் இயல்நிகழ்வும், தற்செயலாகவோ வேண்டுமென்றோ இவ்வாற்றல்கள் எய்தப்பெறுதலும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இதுவே நம் அனுபவத்தின் வரலாற்றை கட்டி எழுப்புகிறது. இங்கே அனுபவம் என்பதை இயற்பியல் ரீதியாக பல தலைமுறைகளாக கடத்தப்படும் அடுக்கமைப்பாகவும் உளவியல் ரீதியாக பல சுழற்சிகளாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றிலிருந்து பலதையும், மேலிருந்து கீழையும், இருளிலிருந்து ஒளியையும் வேறுபடுத்தி அறிய ஒரு குழந்தையால் முடிகிறது. இவை அதன் அடிப்படைக் குறிப்புகள் போன்றவை. தொடர்ச்சியான கோர்வைகள் மூலம் குழந்தை கருத்துக்களின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளமுடியும்; ஒரு அகராதியை, கலைக்களஞ்சியத்தை நிரப்பும் அளவுக்கான சொற்களையும் கருத்துக்களையும் அறிந்துகொள்ள முடியும். இச்செயல்பாட்டை, நடத்தையிலாளர் போல துணுக்குகளாகப் பிரித்து அணுகினால், ஒட்டுமொத்த அறிவனுபவம் சிதைந்து ஏடாகூடமான முடிவுகள் ஏற்படக்கூடும். அது பீத்தோவனின் சிம்ஃபொனி ஒன்றை புரிந்துகொள்ள வயலின் ஒன்றின் பாகங்களை நுணுகி ஆராய்வது போலிருக்கும். ஒரு காசோலை மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனையில் முக்கியமானது பரிவர்த்தனையின் நோக்கம்தானே ஒழிய, காசோலை அல்ல. காகிதத்தால் ஆன காசோலை பார்க்ககூடியது, புறவயமானது, கையாள எளிதானது. இதனால் மட்டும் நமது கவனம் அத்தியாவசியமானதிலிருந்து அத்தியாவசியமற்றதற்குத் தாவுவதில் நியாயம் இல்லை. ஏனெனில், காசோலையின் இயல்வடிவம் எந்த மதிப்பும் இல்லாதது. நாராயண குரு முன்வைப்பது முழுமுதல் பற்றிய அறிவியலை; ஆர்வத்தின் எல்லையில்லா பரப்பின் மீதான ஒரு மதிப்பீட்டை அல்ல.

நாம் மீண்டும் திரும்பிப்பார்க்க வேண்டிய மூன்றாவது கேள்வி, நனவு என்பது ஏன் அறிபவன், அறிபொருள், அறிவு என துண்டுகளாய் உள்ளது? வேண்டுமென்றோ, தன்னிச்சையாகவோ ஒழுங்கமைக்கப்பட்ட பல்லிணை தயாரிப்புகளே அனுபவங்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். வாழவேண்டும் எனும் அவா ஒருபோதும் முழுமையாக எய்தப்பெறுவதில்லை. ஒவ்வொரு அனுபவக்கூறிலும் தனியன் தான் எதிர்பார்க்கும் பொருளையோ அல்லது விழுமியத்தையோ அடைவதற்கான அழுத்தத்தைக் கொடுக்கிறான். கீழ்நிலை உயிர் வடிவங்களில் நோக்கம் பற்றிய கற்பனையாக்கம் இருப்பதில்லை; உள்ளார்ந்த தூண்டலே நிகழ்கிறது. மனிதர்களில் இது ஒரு தெளிவில்லா கூன்நோக்கில் தொடங்கி ஒரு தீர்க்கதரிசி அல்லது அறிவுத்தெளிவு பெற்ற ஒரு அறிவியலாளரின் தெளிவான தரிசனம் வரை எதுவாகவும் அமையலாம்.

வாழ்வை, பேரவா கொண்ட ஒரு இசைக்கலைஞன் எளிதாகக் கையாள முடியாத ஒரு கருவியை இசைப்பதுடன் ஒப்பிடலாம். இசைக்கோர்வை ஒன்றை உருவாக்கிவிடக்கூடிய சாத்தியம் அவனை இசைக்கத் தூண்டுகிறது. அவன் இசைக்கையில் மனிதனும், கருவியும், இசையும் தனித்தனியாக பிரிக்கமுடியாதவை ஆகிவிடுகின்றன. இசைத்து முடித்தபின் அவன் கருவியை நகர்த்தி வைக்கிறான். தான் அடைந்ததை எண்ணிப்பார்க்கிறான். இப்போது அவனும், அவன் கருவியும், இசையும் தனித்தனி இருப்பை கொண்டிருக்கின்றன. இதுபோலவே, நாம் எல்லா நேரங்களிலும் ஒரு உச்ச அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க முடியாது. விழுமியம் மங்கும்போதும், நீர்த்துப்போகும்போதும் அறிபவனும் அறிபொருளும் அறிவும் தனித்தனியாகப் பிரிகின்றன.

பேரின்பத்தில் ஆழ்த்தும் சிம்ஃபொனி ஒன்றை உருவாக்கும் திறன் ஒருவனை இசைக்கலைஞனாக்குகிறது. அதே போல், ஆன்மாவை அறிய விழைவோர், அறிபவன், அறிவு, அறிவின் பொருள் அல்லது நோக்கம் என்ற பேதமில்லா ஒட்டுமொத்த அறிவை உணரும் திறன் பெற்றிருக்கவேண்டும்.

Read the rest of this entry

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

Standard
புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான
வெளி முதலான பூதங்களைந்தும்
ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல
தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்
                                                                                 [ஆத்மோபதேச சதகம் – பாடல் 3]

இசையின் ஒத்திசைவும், வண்ணங்களின் விருந்தும், உயிர்த்தோழனின் அன்பான அரவணைப்பும், சுவைமிக்க உணவுகளும், இனிய மணங்களும் எல்லாம் இவ்வுலக வாழ்வை மறக்கவொண்ணா அனுபவமாக ஆக்குகின்றன.   இவ்வுலகின் இசையைக் கேட்கவும், அதன் அழகைப் பார்க்கவும், மணங்களில் மயங்கவும், அது தரும் சாத்தியங்களின் இனிமையைப் பருகவும், அதை அப்படியே அன்போடு அணைத்துக் கொள்ளவும் இப்பேருகில் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்று விரும்பாதவர் இருக்க முடியுமா?  ஆனால் இவை மட்டுமல்ல வாழ்வு.  தலைவலி ஏற்படும்போது, கைகால் சோர்ந்துபோகும்போது, இதயம் அமைதியிழக்கும்போது, மனம் குழம்பும்போது, ஆன்மாவை மந்திரத்தால் மயக்க, இனிய ஆதரவாய் தூக்கம் மெல்ல கவிழ்கிறது.  உலகு பற்றிய மனப்பதிவுகள் எல்லாம் மங்கித் தேய்கின்றன.  ஆழமான கனத்த மெளனம் நிலவுகிறது.  எந்த அசைவும் இல்லை.  எதுவும் அறியப்படுவதில்லை.  அமைதி கோலோச்சுகிறது.  அவ்வமைதி நிரந்தரமாக நிலவும் என்றால் யாரும் வருந்தப்போவதில்லை.  பல்வகைச் செல்வங்கள் நிரம்பிய உலகிலிருந்து ஆழ்ந்த மௌனமும் அமைதியும் நிலவும் உலகுக்கு நம்மால செல்ல முடிகிறது என்பது எத்தனை பெரிய வரம்!

சரி-தவறுகளை பிரித்தறிய முடியாத சிறு மக்களின் மனங்கள் அருமையான இவ்வுலகை கலக்கி விடுகின்றன.  மனித ஊழில் ஒரு புதிரான கரும்புள்ளி உள்ளது.  அது அவனை தடுமாறச் செய்கிறது.  அவனுக்கு நிகழ்பவை எல்லாம் தவறானவையாகின்றன.  அவன் கொண்டாடி மகிழ்வதற்கென வரும் உலகம் பெரும் பயங்கரவெளியாகிறது. தன்னைச்சுற்றி, அவனது நோக்கங்களை ஏளனம் செய்யும், இரக்கமில்லா இதயம் கொண்ட கேடு நினைக்கும் மக்களையே அவன் காண்கிறான்.  இயற்கையின் உச்சங்கள் அவனுக்கு எதிராக இருக்கின்றன.  எல்லா வகையான நோய்களும் அவன் உடலையும் மனதையும் தாக்குகின்றன.  அவன் குடம் குடமாய் கண்ணீர் சிந்துகிறான்.  துன்பம் நிறைந்த பிறவிக்காக விதியை நோகிறான்.  அடியாழமில்லா நனவிலியில் தன் பெருந்துன்பங்களை மூழ்கடிக்கத் துடிக்கிறான்.  துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.  “‘தங்களைத் தாங்களே வதைத்துக்கொள்ளும்’ இலக்கில்லாமல் திரிபவர்கள், குருடாக்கும் இருளால் சூழப்பட்ட கொடும் சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள்” என்கிறது உபநிடதம்.

இதோ, கூர்மையான தர்க்கத் திறமை கொண்ட, இலக்கண விதிகளையும் அணி இலக்கணங்களையும் நன்கறிந்த மெய்யியலாளர்கள் இருக்கிறார்கள். அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றையும் நுணுகி ஆய்வு செய்ய விழைகிறார்கள். பேரறிஞரான சங்கரர், விளைவின் மெய்ம்மைக்கும் காரணத்தின் மெய்ம்மைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று அறிவிக்கிறார்.  நீங்களும் அவருடன் சென்று வறுத்த கோழிக்கு பதில் முட்டையை உண்ணப்போகின்றீர்களா?  முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வருகிறதென்பது யாருக்குத்தான் தெரியாது?  விளைவுகளின் நிகழ் உலகில் மட்டுமே சாத்தியமான, கற்பனைக் கோழியை விருந்தாக உண்ணுவது போல பகற்கனவுகாணும் பரிதாபத்துக்குரியவனை அவர் இகழ்ச்சியுடன் பார்க்கிறார் என்று நினைத்தால், தர்க்கத்தின் வலுவான விதிகளை சரியாகப் பயன்படுத்துவதில் மீமெய்யியலாளர் (transcendentalist) எந்தத்தவறும் செய்வதில்லை என்று யாரால்தான் சொல்ல முடியாது?

மெய்யியலாளர் மிகைப்படுத்துவது போல தோன்றக்கூடும்.  அவசரப்படாதீர்கள்!  இவ்விஷயத்தில் அவரது இறுதித்தீர்ப்பை அவர் வழங்கும்வரை அவருடன் செல்வோம்.  இரண்டு மெய்ம்மைகள் இருக்க முடியுமா? தர்க்க ரீதியாக அதற்கு வாய்ப்பேயில்லை.  உண்மை என்பது பகலில் ஒன்றாகவும் மாலையில் வேறாகவும் இருக்க முடியுமா?  நிச்சயம் முடியாது.  ஓர் உண்மை பிறிதொன்றில்லாமல், மாற்றமில்லாமல் இருக்கும் என்றால் அதற்கு முதலோ முடிவோ இருக்க முடியாது என்பதை கொள்கையளவிலாவது நாம் ஒப்புக்கொள்ளலாம்.  அதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பிறிதொன்று இல்லையெனும்போது, உண்மையின் எந்தப் பண்பையும் பயனிலைப்படுத்த முடிவதில்லை.  ஏனெனில், பயனிலைப்படுத்துவதென்பதே ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.  ஒப்பிட முடியாதபோது உங்களால் மதிப்பிட முடியாது.  மேலும், அத்தகைய உண்மை, அறிபவன்-அறியப்படுவது போன்ற இருமைகளை அனுமதிப்பதில்லை.  ஆகவே, ஒளியின் மூலத்தின் மீதே ஒளி பாய்ச்ச முயலும் சங்கரரை நாம் மன்னிக்க வேண்டும்.  இந்த இடத்தில் அறிபவன்-அறிபொருள் எனும் இருமையை மறுதலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், சங்கரரும் அவரது வாதமும் ஒன்றுமில்லாமல் மங்கிப் போகின்றன.  நடக்கப்போகும் மிச்சத்தை அறிய நாமும் அங்கில்லை.

பிறகென்ன?  ….

இல்லை, இன்னும் நம்பிக்கை இருக்கிறது.  இதோ வருகிறார் ராமானுஜர் என்னும் மெய்யிலாளர்.  உண்மையை அவர் பார்க்கும் பார்வையில் கோழி நடக்கிறது, ஒலியெழுப்புகிறது, தலையை ஆட்டுகிறது, இங்குமங்கும் பார்க்கிறது, குப்பையைக் கிளறுகிறது, தானியத்தை கொத்துகிறது, புழுவை முழுங்குகிறது.  இச்செயல்களை எல்லாம் முட்டையில் காணமுடியாது. காரணமே முழு மெய்ம்மை அல்ல என்பதே அதன் பொருள்.  முழுமை அல்லது மொத்தம் என்பது முட்டையையும் கோழியையும் மட்டும் உள்ளடக்கியதல்ல.  கோழியினத்தின் மொத்த மரபையும், மதிப்பிட முடியாத எதிர்காலப் பெருக்கத்தையும் தன்னுள் கொண்டது அது.  அவரைப் பொறுத்தவரை, உண்மை என்பது அனுபவத்தை ஒத்தது; தருக்கத்தின் எல்லைகளைக் கொண்டு அதை கெடுத்தல் கூடாது.  அப்பாடி!  இது நன்றாக இருக்கிறதே!  உலகம் மீண்டும் அதன் ஆனந்தத்துடனும், கொண்டாட்டத்துடனும் வண்ணங்களுடனும் மீட்கப்பட்டுவிட்டதே!  மீண்டும் நாம் மேசையைச் சுற்றி அமர்ந்து நல்லுணவுகளை சுவைக்கலாம்!

ஆனால், ராமானுஜர் நம்மை வேறுவகையான இன்னல்களுக்கு ஆளாக்குகிறார்.  தொலைதூர விண்மீன்களிலிருந்து நம் விரல்நகங்கள் வரை வியாபித்திருக்கும் இம்மொத்தப் பிரபஞ்சமும் முழுமுதல் இறையின் உடலாகப் பார்க்கப்படவேண்டும்.  அதன் ஒவ்வொரு அணுவும் நாராயணன் என்னும் தெய்வக்கூறால் ஆட்டுவிக்கப்படுகிறது.  நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவராய் இருப்பீர்கள் என்றால், இந்தத் தத்துவம் உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும் – எப்படி உங்களால் கெட்டிலை அடுப்பிலேற்றி அதிலிருக்கும் இறைமையை கொதிக்க வைக்க முடியும்?  மனிதனைத் தின்னும் மனிதனை தன்னின உண்ணி (cannibal) என்கிறோம்.  இறைவனை உண்பவனை என்னவென்றழைக்க?

அவசரப்படாதீர்கள்…  அது உண்மையாய் இருக்க முடியாது.  திடமான ஒரு கல்லை யாரும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்று மயங்கப்போவதில்லை.  அனுபவ உலகம் என்பது ஓரிய (homogeneous) முழுமையாக இருக்கமுடியாது.  நகத்தின் மேல் ஊசியால் குத்தினால் அதை நீங்கள் கவனிக்கக் கூட மாட்டீர்கள்.  ஆனால், நகக்கண்ணில் அதே ஊசியால் குத்தும்போது அலறுவீர்கள்.  நகத்தில் இருக்கும் உணர்ச்சி நிலைக்கும் தோலின் நரம்புமுனைகளிலும் தசைகளிலும் இருப்பதற்கும் பண்படிப்படையில் வேறுபாடுண்டு என்பதே இதன் பொருள்.  நம் மூளையைக் கொண்டே நாம் சிந்திக்கிறோம்; கால்களைக் கொண்டல்ல.  மூளையின் மென்பொருள், அழகு போன்ற நுட்பமான விழுமியங்களை உருவாக்கவும் அவற்றைப் பாராட்டவும் கூடிய அற்புதமான ஒரு அமைப்பு.

ஒருமை மீது நாம் கொண்டுள்ள பற்று வெறியாக மாறக்கூடாது.  அறிவதற்கு ஒரு ஆன்மாவும் அறியப்படுவதற்கு ஒரு பொருளும் உள்ளன என்பது சிந்திப்பதற்கு வசதியாக இருக்கிறது.  அறிபவனையும் அறியப்படுவதையும் தனித்தனியாக பிரித்து வைத்துக்கொள்ளலாம்.  உணவை செரித்துக்கொள்ள ஒரு தன்னிச்சையான அமைப்பும், பிறர் புகுந்து பார்த்துவிடாமல் நமக்கேயான எண்ணங்களை எண்ணிக்கொள்வதும் ஒரு வசதியான ஏற்பாடு.  எல்லா பெயர்களையும், வடிவங்களையும், செயல்பாடுகளையும் – அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்ற நிலையில் – குறிப்பதற்காக இயங்கும் வகைதிரிபுப் பண்புகளின் (differentiae) எண்ணிலடங்கா தனித்தன்மைகளால் சமரசம் செய்துகொள்ளப்படாமல், உண்மை என்பது எதையும் சாராமல் சுதந்திரமாய் இருப்பதை மத்வர் என்னும் மெய்யியலாளர் ஒப்புக்கொள்கிறார்.

என் நண்பன் மாட்டிறைச்சியை சமைத்துக்கொண்டு பியர் அருந்தும்போது, நான் தனியாளாக எனக்கான காய்கறியை வேகவைத்துக்கொண்டு ஆப்பிள் ரசத்தை அருந்தமுடியும்.  நம் மனம் விரும்புவதை செய்துகொள்ள நமக்குள்ள சுதந்திரத்தை இது தெளிவாகக் காட்டுகிறது.  நான் வளராமல் இருப்பதற்கும், காலத்தை எப்போதைக்குமாக நிறுத்திவைக்கவும், ஆன்டாயின் டி செயின்ட் எக்ஸ்யூபெரியின்  (Antoine de Saint-Exupery) குட்டி இளவரசனைப்போல எனக்கேயான சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் நிகழ்த்திக் கொள்ளவும் இதே சுதந்திரம் எனக்கிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!  ஆனால், எல்லாவற்றிற்கும் எல்லை ஒன்று உள்ளதே!  என் சுதந்திரத்தை நான் அவ்வளவு தூரம் நீட்டிக்க முடியாது.  ஆதலால், எனக்கு நான் எஜமானன் அல்ல.  அப்படியென்றால் யார் எஜமானன்?  இந்த இடத்தில், நாராயணன் என்றும் விஷ்ணு என்றும் அவர்கள் அழைக்கும் சார்பிலா முழுமுதலே இவ்வுலகம் என்னும் நாடகத்தை நடத்துகிறது என்று ராமானுஜர் சொல்வதை மத்வர் ஏற்றுக்கொள்கிறார்.  இறைவனது மெய்யின் எண்ணிலடங்கா இறைமை, உளவியல், அறம் மற்றும் இயற்பண்புகளை விபூதி என்கிறார் ராமானுஜர்.  இதையே சார்பிலா முழுமுதலின், ஒன்றையொன்று சார்ந்த கூறுகளான ‘தத்வ’ என்கிறார் மத்வர்.

இப்போது சங்கரர் ஒரு புன்னகையுடன் தோன்றுகிறார்.  அவர் எதுவும் பேசுவதில்லை.  அவரது கனத்த மௌனம் மத்வரின் “அது ஒன்றே” எனும் கூற்றை அங்கீகரிக்கிறது.  இத்தருணத்தில் நாராயண குரு தனது மென்மையான குரலில் நம்மிடம் ரகசியமாய் கூறுகிறார்: “நனவின் மேற்பரப்பில் எழும் பொன்னொளிர் அலைகள் ஒவ்வொன்றும், சார்பில்லாததாக இருக்கும் அதே நேரத்தில்  சார்புள்ளதாகவும், ஆன்மாவாக இருக்கும் அதே நேரத்தில் உடலாகவும், காரணமாக இருக்கும் அதே நேரத்தில் விளைவாகவும் இருக்கும் ஆழிக் கருவூலத்திலிருந்து பிரித்துணரமுடியாதது என்பதை அறிவாயாக!.  அப்பாடா எவ்வளவு நிம்மதியாய் இருக்கிறது!  இப்போது பெரும் ஞானிகள் சொல்வதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.  அதே சமயம், தன்னிலைகடந்ததும் அகம்சார்ந்ததுமான அனுபவ உலகுபற்றிய நம் தனிப்பட்ட நிலைப்பாட்டையும் மெய்நிலைகடந்ததன் இருமையற்ற மெய்ம்மையையும் நம்மால் உணரவும் முடிகிறது.

இப்பாடலில், வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் எனும் பஞ்சபூதங்களால் ஆன புற உலகு எனும் செவ்வியல் கருத்தமைவை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார் நாராயண குரு.  இவை புற மெய்ம்மைகள் மட்டுமல்ல நாம் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்தின் குறியீடுகளும்தான்.

பஞ்சபூதங்களில் நிலமே அதிகமும் பருண்மை கொண்டது.  உண்மையில் திகழும் திடத்தன்மை கொண்ட நிலத்தைக் குறிக்கும் அது குறியீட்டுத் தளத்தில் வாழ்வின் இயற்பியல் மற்றும் பருண்மைக் கூறுகளையும் சுட்டுகிறது.  ஆங்கிலத்தில் சில மனப்பாங்குகளை ‘earthy’’ என்றும் “down to earth” என்றும் கூறுவதுண்டு.

நீரானது நிலத்தைப்போல இறுகியும் அசையாமலும் இருப்பதில்லை.  ஓடுவதே அதன் பண்பு  அது இருக்கும் கொள்கலனின் வடிவை அது எடுத்துக்கொள்கிறது.  தன்னைப்போன்ற பிற நீர்மங்களுடன் எளிதில் கலக்கிறது.  நீரின் உண்மையான கூறையும் ஆதாரமான நீர்மங்களையும் அது சுட்டுகிறது.  நம் உணர்ச்சிமேலிடும் வாழ்க்கை சிலசமயங்களில் நீருடன் ஒப்பிடப்படுகிறது.  பேராழியின் அடியாழங்களைக் கொண்டது நம் வாழ்வு; அதில் எழும் அலைகளைப் போல நம் உணர்ச்சிகள் ஊசலாடுகின்றன.  வாழ்வின் நீர் பற்றி, முடிவற்ற தாகத்தை தீர்க்கும் நீர் பற்றி யேசு விளக்கினார்.  ஆறு மட்பாண்டங்களில் இருந்த நீரை அருமையான திராட்சை ரசமாக யேசு மாற்றிய பிரபலமான கதை, உருமாற்றம் பற்றிய சிறந்த குறியீட்டுச் சிந்தனை.

நீருக்கு அடுத்தபடியாக நெருப்பைப் பார்ப்போமேயானால், இன்னும் அடர்வு குறைவான கூறை எதிர்கொள்கிறோம்.  நம் வாழ்வில் இன்றியமையாதது நெருப்பு.  கண்ணுக்குப் புலப்படும் மெழுகுச் சுடரையும் வானில் ஒளிரும் கதிரவனையும் தவிர, வெப்ப இயக்கவியல் எனும் ரசவாத நெருப்பில் மொத்தப் பிரபஞ்சமுமே உருமாற்றம் பெறுகிறது.  தன் வழியில் எதிர்ப்படும் எதையும் விழுங்கும் நெருப்பைப் போலவே நம் அடி மனமும் எல்லாவற்றையும் சுவைக்கும் ஆவலில் துடிக்கிறது.  அடி மனம் நனவிலியை விடாமல் நக்கி நனவு வடிவங்களை உருவாக்குகிறது.  உணவை செரித்துக்கொள்ள ஜடராக்கினியை நம் வயிற்றிலும் இதயபூர்வ அன்பெனும் தெய்வீக நெருப்பையும் நம்முள் வைத்திருக்கிறோம்.

வரிசையில் அடுத்து வருவது காற்று.  நீரில் வாழும் மீன்போலவே, காற்றென்னும் ஆழியில் நாம் நீந்திக்கொண்டிருக்கிறோம்.  நமக்கு வாழ்வளிக்கும் ப்ராணன் எனும் சுவாசத்தை அது சுமந்தலைகிறது.  நம் அக வாழ்வின் குறியீடே காற்று.  தொட்டுணர்வது அதன் பண்பு.  காற்றின் இந்த அடிப்படைப் பண்பை எல்லா இயற்கைக்கூறுகளும் கொண்டிருக்கின்றன.   மூக்கைத்தூண்டும் தொடுகை மணம், வாயில் உள்ள சுவைமொட்டுக்களை கிளர்த்துவது சுவை, விழித்திரையின் கம்பிகளையும் கூம்புகளையும் ஒளி தீண்டுவதே பார்வை.  செவிப்பறைகளை ஒலி அதிர்வுகள் தொடுவதே கேட்டல்.  தொடுகை அளவுக்கு பரந்துபட்ட வீச்சு வேறெந்தப் பண்புக்கும் இல்லை.  நம் உடற்பரப்பு முழுவதும் அதை உணர்கிறோம்.

காற்றைக் கடந்து விசும்பிற்குச் செல்லும்போது நாம் ஒரு மறைமெய்ம்மையில் நுழைகிறோம்.  உள்ளதும் இல்லதும் அது.  ஒரு வகையில் பொருட்கள் தனித்தனியாகவும் தனித்தன்மையோடும் திகழ அனுமதிக்கும் வெளி அது.  எல்லாம் ஒரே சமயத்தில் நிகழ்வதைத் தடுக்க நேரம் என்ற ஒன்றை இயற்கை ஏற்படுத்தியது போலவே, எல்லா பொருட்களும் ஒன்றாகத் திரண்டு பரிமாணமற்ற ஒற்றைப் புள்ளியாக ஆகிவிடாமல் தடுக்கிறது வெளி.  மிகல்சன் – மார்லி (Michelson-Morley) ஆய்வால் விசும்பு ஒரு இயற்கூறாகத் திகழ்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியாமல் போனது.  ஆயினும், வெளி என்ற ஒரு கருத்தமைவு இல்லாமல் நம்மால் பொருட்களை எல்லைக்குட்படுத்தி அவற்றை அடுத்தடுத்து வைத்து கண்கவர் ஒத்திசைவை உருவாக்க முடிவதில்லை.  அக உலகின் ஒலி ஒத்திசைவுகளின் ஒழுங்கமைவுக்கும் புற உலகின் அதிர்வுகளுக்குமிடையேயான இணைப்பை நாம் ஆகாயம் எனப்படும் விசும்பில் காண்கிறோம்.

நிலம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் வெளி இவற்றின் இயல் வெளிப்பாடுகள் எல்லாம் இயல்பான புற நிகழ்வுகளாகவே கருதப்படுகின்றன.  நாம் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதும், ஒருவரோடொருவர் பேசும்போதும் அதைக் கேட்கும்போதும், அன்புடன் அணைத்துக்கொள்ளும்போதும், வெறுப்புடன் தள்ளும்போதுமெல்லாம் புறவயமான ஒரு இயல் உலகுடன் நாம் உறவாடிக்கொண்டிருக்கிறோம் என்பதில் நமக்கெந்த ஐயமும் எழுவதில்லை.  ஆனால், அறிவியலை சிறிதளவே கற்போம் என்றால் இந்த வழமையான எண்ணங்கள் சடுதியில் குலைகின்றன.  இனிமையாகவும் கடுமையாகவும் ஒலிக்கும் நாம் கேட்பதாகக் கருதப்படும் பல்வகை ஒலியும் உண்மையில் நம் செவிப்பறைகளைத் தீண்டும் அதிர்வுகளுக்குக் கொடுக்கப்படும் விளக்கமாக நம் மூளையின் அகத்தே உருவாக்கப்படுவதுதான்.  ஆக, ஒலி அதிர்வை, மூளையின் உளவேதியியலுடனான அதன் குறுக்கீட்டை ஒதுக்கிவிட்டு, நம்மால் ஆராய முடியாது.   ஒலியின் இந்தப் பண்பு பிற நான்கு புலன்களுக்கும் பொருந்தும்.  எந்த வெளியில் வைத்து எல்லா பொருட்களையும் நாம் கண்டும் கேட்டும் உய்த்தறிகிறோமோ அந்த வெளியே நம் அகத்தால் உருவாக்கப்படுவதுதான்.  மொத்த நடவடிக்கையும், ஊகிக்க மட்டுமே முடிந்த ஒரு பிடிமானமில்லாத தளத்தில் அகம் உருவாக்கும் படிவங்களை மேன்மேலாக அடுக்கிக் கொள்வதே.  இது விவர்த்தம் எனப்படுகிறது.  பெரும்பாலான நிகழ்வுகளில் இந்த ஊகம் வெறும் உத்தேசம் மட்டுமே.

ஒவ்வொரு தனியனின் பிரத்யேகமான அகத்திற்குச் சொந்தமான நிகழ்வுகளின் அகவயத்தன்மையைத் தாண்டி, உலகம் என்று நாம் உணர்வதன் ஒருமை பற்றி வியக்கத்தக்க ஒரு பொதுமையான கருத்து உடன்பாடு உள்ளது.  நான் எதைப் பார்ப்பதாக நினைக்கிறேனோ அதை நீங்கள் பார்ப்பதுபோல் தோன்றுகிறது; இதனால் உலக செயல்முறைகள் எல்லாம் பாழாய்ப் போகாமல் காப்பாற்றப்படுகின்றன.  இந்தப் பொதுமையை விளக்குவதற்கு மெய்யியலாளர்கள் எல்லா தனியர்களின் மனமும் ‘சிந்திக்கும் பொருள்’ என்று ஸ்பினோசா குறிப்பிடும் பொருளால் ஆனது என்று கற்பித்துக்கொள்கிறார்கள்.

இயல்கடந்த மயிர்பிளக்கும் தருக்கத்தை கூறுபோடும் ஆய்வுகளுக்கு நம்மை இட்டுச் செல்லாமல் அறியப்படாததன் மீது பெருமதிப்பும் பக்தியும் தோற்றுவிக்கும் வியப்புணர்ச்சியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் குரு.   அறியப்படாதது, வண்ணமயமான காட்சிகளாலும் களிப்பூட்டும் இன்னிசையாலும் விடாமல் நிரப்பப்படும் நம் நனவாகவே நம்மிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.  முழுமுதலை விளக்க இங்கே பயன்படுத்தப்படும் முதன்மைச் சொல், எண்ணவொண்ணா மதிப்புள்ள ஆழிக் கருவூலத்தைக் குறிக்கும், ஜலநிதி என்பது.  சங்கரரின் அத்வைதத்தை ஆதரித்தாலும், நாராயண குரு இந்த இடத்தில் முழுமுதல் பற்றி கூறும் கருத்து, புனித விழுமியங்கள் அனைத்தும் இருக்குமிடமான மீஉயர் இறை (Supreme) என்னும் ராமானுஜரின் கருத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறது.

அகத்தால் உணரப்படுவதும், அதே சமயம் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படும் செயலால் புறத்தே இருப்பதாக கண்டுணரப்படுவதுமான ஐம்பூதங்களால் ஆன உலகத்தை, பிரபஞ்ச நனவின் புனிதமான ஆழிக் கருவூலத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாய் எழும் நனவு மாற்றங்களின் அலைகளின் தொடராகவே உணரவேண்டும்.  அத்தகைய இனங்காணல் மூலம் நம் ஆன்மீக அகத்தைத் தொடும் விவரிக்க இயலாத ஒரு கவித்துவ ரசனையை நாம் நிச்சயம் பெறுவோம்.

உலகைப் படைப்பதில் நமது பங்கு ஒன்றும் குறைவானது அல்ல.  இறையுடன் சேர்ந்த கூட்டுப் படைப்பாளிகள்தாம் நாமும்.  நாமில்லாமல் இவ்வுலகில் வண்ணமில்லை, ஒலியில்லை, நாமறிந்த புலன்சார் பண்புகளே இல்லை.  பொருளற்ற அசையா பிண்டமாகவே அது இருக்கும்.  ஆயினும், தனித்தனியாகப் பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் யாருமே அல்ல. நாம் அனைவரும் பங்கெடுக்கும் ஒரு கூட்டு நனவின் சாத்தியக்கூறு, அறியப்படாததும் அதே சமயம் அறியப்பட்ட ஒன்றேயாகவும் திகழ்வதன் மீது ஆழ்ந்த பெருமதிப்பும் பக்தியும் நிச்சயம் நம்மில் நிறையும்படிச்செய்யும்.

நாம் உணரும் உலகம் அளவிடமுடியா செழுமையின் விருந்து போன்றது.  சராசரி மனிதன் அதில் கண்டுணரக்கூடிய வடிவங்களையும், போற்றத்தக்க உருவங்களையும், அழகிய வண்ணங்களையும், அவனது தேவைகளை நிறைவுசெய்ய வற்றாமல் வழங்கப்படும் பொருட்களையும் காண்கிறான்.  உலகின் நிகழ்காலத்தைத் தவிர, கடந்தகாலம் பற்றிய நம் நினைவுகளையும் எதிர்காலம் பற்றிய நம் கற்பனைகளையும் நாம் அனுபவிக்கிறோம்.  இது உலகிற்கு ஆழமும் உயரமும் கொண்ட செங்குத்துத் தன்மையை கொடுக்கிறது.  நீங்கள் ஒரு கவிஞரென்றால் அதில் வாழ்வின் வளமான பொருளை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படும் முடிவில்லாத வகைகளிலான குறியீடுகளையும் உருவகங்களையும், கருத்துக்குறியீடுகளையும் (ideograms) காணலாம்.   இயற்கை வழங்கும் அகத்தூண்டலால் கிடைக்கும் பேசுபொருள்கள் எல்லாவற்றையும் ஓவியர்களால் வரைந்து தீர்த்துவிடமுடியாது. மெய்யியலாளர்கள் உலகின் மறைகாரணத்தையும் அதன் புனைந்துருவாக்க நோக்கத்தையும் அசைபோட்டு மாளாது.  அறிவியலாளனுக்கு ஒவ்வொரு அணுவும் ஆய்வுக்கான ஒரு சவால்தான்.  அவர்களுடயதேயான வியக்கத்தக்க மூளையின் உள்ளே கருத்தியல்ரீதியாக உருவாக்கப்படுவதைத் தவிர வெறெதையும் உணரவோ நிருபிக்கவோ யாரும் அவர்களது அகத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்பதே உண்மை.  இவ்வுண்மையை அங்கீகரிக்கும் சர் ஆர்தர் எடிங்டன், ‘இயற்பியலாளன் ஆராய்வது பகுத்தறிவின்பாற்பட்ட பொருளாக கருத்தியலாக்கப்படக்கூடியதையே அன்றி எந்த இயற்பொருளையும் அல்ல’ என்கிறார்.

நியூடோடினிய இயற்பியலில், பருப்பொருளின் மூலாதார உள்பொருட்களாக இருந்தவை, கடற்கரையில் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டும் அதைத்தாண்டி ஒன்றையொன்று மேலும் நெருங்காமலும் உதிரியாய் கிடக்கும் மணல்மணிகளைப் போன்று தன்னிச்சையும் சுயகண்காணிப்பும் கொண்ட அணுக்களே.  தாவோ ஆஃப் ஃபிசிக்ஸில் (The Tao of Physics) ஃப்ரிட்ஜாஃப் காப்ரா (Fritjof Capra) சொல்வது போல:

எல்லா இயற்பியல் நிகழ்வுகளும் நிகழ்ந்த செவ்வியல் யூக்ளிடியன் ஜியோமிதியின் முப்பரிமாண வெளியே நியூடோனிய பிரபஞ்சத்தின் நிலை. எப்போதும் இயக்கமில்லாமலும் மாறாததுமான முழுமுதல் வெளி அது.  “முழுமுதல் வெளி அதன் இயல்பான பண்பில், புறப்பொருள் எதனோடும் தொடர்பில்லாத நிலையில், எப்போதும் ஒன்றேபோலும் அசையாமலும் இருக்கிறது” என்கிறார் நியூட்டன்.  இயற்பியல் உலகில் நிகழும் மாற்றங்கள் எல்லாம், ‘நேரம்’ என்னும் தனிப்பட்ட பரிமாணத்தைக் கொண்டு விளக்கப்பட்டன.  அதுவும் (நேரமும்) முழுமுதலானது; பொருட்களாலான உலகுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இறந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வழியாக எதிர்காலத்திற்கு மென்மையாக ஓடிச் செல்வது, “முழுமுதலான, உண்மையான, கணிக்கப்படக்கூடிய நேரம் தன்னியல்பில் ஒருசீராக, புறப்பொருள் எதன் தாக்கமும் இல்லாமல், ஓடிக்கொண்டிருப்பது” என்கிறார் நியூட்டன்.

இன்று நமக்குக் கிடைக்கும் வடிவம், ஆவியான உப்பார்ந்த நீர்மத்தில் இருக்கும் அரைகுறையாக உருகிய உப்புப் படிகங்களைப் போல் இருக்கிறது; ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே எல்லைக்கோடு எதையும் வரைய முடியாது.

துணை-அணு நிலையில் (subatomic level) பருப்பொருளானது நிச்சயத்தனமையோடு குறிப்பிட்ட இடங்களில் இருப்பதில்லை.  மாறாக ‘இருப்பதற்கான விழைவை” காட்டுகிறது.  அணு நிகழ்வுகளும் நிச்சயத்தன்மையோடு, குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட முறைகளில் நிகழ்வதில்லை; ‘நிகழ்வதற்கான மனப்பாங்கை” காட்டுகின்றன.  ஆற்றல் அலைவீச்சுக் கோட்பாட்டின் (quantum theory)  விதிமுறையில் இப்போக்குகள் நிகழ்தகவுகளாகக் (probabilities) கூறப்படுகின்றன.  அலைகளின், வடிவம் பெறும் கணிதவியல் பண்புகளுடன் தொடர்புறுத்தப்படுகின்றன.  இதனாலேயே அணுக்கூறுகளால் அலைகளாகவும் இருக்கமுடிகிறது.  அவை, ஒலியலைகளை அல்லது நீரலைகளைப் போல ‘மெய்’யான முப்பரிமாண அலைகள் அல்ல.  அவை நிகழ்தகவுடைய அலைகள், குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் காணக்கிடைக்கும் அணுக்கூறுகளின் நிகழ்தகவுகளோடு தொடர்புறுத்தப்படும் அருவமான கணிதவியல் பண்புகள்.  அணுவியலின் எல்லா விதிகளும் இந்த நிகழ்தகவுகளின் அடிப்படையிலேயே கூறப்படுகின்றன.  ஒரு அணு நிகழ்வை நாம் ஒருபோதும் நிச்சயமாய் ஊகிக்க முடியாது; அது அப்படி நிகழக்கூடும் என்று மட்டுமே கூற முடியும்.

பருப்பொருளின் உள்ளமைப்புக்கு மட்டுமல்லாமல் பருப்பொருளுக்கும் நனவுக்கும் இடையேயான எல்லைக்கும் இது பொருந்தும்.  ஒவ்வொன்றும் அதுவாக இல்லாமல் வேறொன்றாக இருப்பதைப் போலுள்ளது.  அத்தகைய ஒருங்கிணைந்த மெய்யியல் அல்லது அறிவியல் வழியாக நம் கவனத்தை போற்றத்தக்க முழுமுதலை நோக்கி ஈர்க்கிறார் நாராயணகுரு.

வாழ்வில் நாம் செல்வதற்கென இரு முக்கிய பாதைகள் நம் முன்னே உள்ளன.  ஒன்று, நம் நனவைத்துறந்து நனவிலியின் கற்பனைக்கெட்டா ஆழத்திற்குள் செல்லலாம்.  ஒவ்வொரு இரவிலும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் சிறிது நேரமாவது, முழுமையுடன் மீண்டும் இணையும் இன்பத்தைப் பெறுகிறோம்.  உண்மையில் இன்பம் என்ற சொல் பொருத்தமானதல்ல. ஏனெனில் அந்நிலையில் இன்பமும் இல்லை வலியும் இல்லை. இடையூறில்லா அமைதியே அந்நிலையின் தன்மை.  உறக்கம் என்பது அமைதியானது என்றால், மரணம் என்பது முடிவில்லா பேரமைதியாய் இருக்க வேண்டும்.  துரதிருஷ்டவசமாக, நாம் மரிப்பதற்கு அஞ்சுகிறோம்.  யோகிகள் மரணத்திற்கு மாற்று வைத்திருக்கிறார்கள்.  ஆழ் உறக்கத்தைப் போன்றதேயான ஒரு அழிவின்மையை நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள், ஒரு முக்கியமான வேறுபாட்டுடன். பருப்பொருளின் ஒட்டுமொத்த அசைவின்மைக்குள் செல்வது தூக்கம் என்றால், யோகியின் ஈடுபாடு ஆன்மாவின் மாறுதலுக்குட்படாத நனவின் எல்லையில்லா பரப்பில் நுழைவது எனலாம்.  உறக்கம், ஆன்மீக ஈடுபாடு இரண்டிலுமே உடலியல் செயற்பாடுகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

உலகியல்சார் விருப்பு கொண்ட மக்களைப் பொறுத்தவரை, உறக்கமும் ஆன்மீக ஈடுபாடும் புற உலகு அளிக்கும் சாத்தியங்களுக்கு ஈடாகா.  விழிப்பு நிலையில் உள்ள உலகில் நடைபெறுபவை பெரிதும் கவர்ச்சிகரமான காட்சிகளையும், பல்வகைப்பட்ட இன்னிசை லயங்களையும் கொண்டவை.  நம் உலகில் நம்முடன் சேர்ந்து வாழ்வோருடன் நம்மால் தோழமை பாராட்ட முடியும்.  நம்மை வருத்துவதன் மீதும் ஆபத்தை விளைவிப்பதன் மீதும் விருப்பத்தை வளர்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

முதல் பாடலில் நாராயண குரு புற உலகிலும் அக மெய்ம்மையிலும் என எதிலும் திகழும் ஒரு அச்சுடன் (வார்ப்பு) முழுமுதல் இறையை ஒப்பிட்டு அதை நோக்கி திரும்பும்படி கூறினார்.  காரணமாகவோ விளைவாகவோ இல்லாததும், அதே சமயம் விளைவாகவே மாறும் காரணாமவும் எப்போதும் இருக்கும் இருமையற்ற அந்த மெய்ம்மையின் முன் விழுந்து வணங்கும்படி கூறினார்.  இரண்டாவது பாடலில் அதை நனவின் வெற்றிடத்தில் ஒளிரும் வான்புகழ் கதிரவனுடன் ஒப்பிட்டார்.  இந்தப் பாடலில், கணக்கிடமுடியா மதிப்புறு முழுமுதலிலுடைய கருவூலத்தின் ஆழத்திலிருந்து அதன் உருத்தோற்றமாய், ஒரு அலையாய் நாம் எழுந்து மீண்டும் முழுமுதலுடன் ஒன்றாகக் கலக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும் என்கிறார் குரு.

வாழ்வை, ஆழியில் எழுந்து பின் அதனுடன் மீண்டும் கலக்கும் அலைத்தொடராகக் காண்பது ஒருவனது மனதை அழகாலும், அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிறைக்கும்.  உலகை இவ்விதம் பார்க்கவில்லையென்றால், பிறரெல்லாம் அச்சுறுத்தலின், பகைமையின் குறியீடுகளாக மாறிவிடுகின்றனர்.  ஒருமித்த பார்வை நம்மை நம் சகோதர சகோதரிகளின் காவலர்களாக ஆக்குகிறது.  நம் இதயங்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன; ஆன்மாக்கள் ஒன்று கலக்கின்றன.  நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் ஒரு புதிய சாத்தியத்தை, இயல்கையை, புதிய நட்புக்கான பாதையைக் காண்கிறோம்.  இப்பாடலில், பிரிவு எனும் உணர்விலிருந்து நம்மை மீட்கும் தியானத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் குரு. அகத்திற்கும் பிறிதிற்கும் இடையே எந்த எல்லைக்கோடும் இனி இல்லை.  வியத்தகு ஆழிக் கருவூலத்தில் பெருமகிழ்ச்சியுடன் குதித்து நம்மை மூழ்கடித்துக் கொள்ளலாம்.

இருப்புசார் பிரக்ஞையாலான உலகம் மற்றும் ஆன்மீகத்தில் தோயும் உலகு என நமக்கு இரு பாதைகள் உள்ளன.  நாம் ஒன்றில் இல்லாவிட்டால் பிறிதொன்றில் இருக்கிறோம்.  இருப்பதும், அதே போல் இறப்பதும், அழகானவையே.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

Standard
ஆன்மாவும் புலன்களும் உடலும்
தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை
பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின்
திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம்.
                                                                                                   [ஆத்மோபதேச சதகம் – பாடல் 2]

சில மணி நேரங்களுக்குமுன் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது நனவென்ற ஒன்று இருக்கவில்லை.  இதை உலகம் முழுவதும் இருளில் மூழ்குவதோடு ஒப்பிடலாம். விடியலில் பொருட்கள் சிறிதுசிறிதாக துலங்கத் தொடங்குகின்றன.  அதைப்போல, உங்கள் உள் உறையும் ஆழ்நனவிலி மெதுவாக நகர்ந்து, நனவின் தெளிவற்ற விழிப்புநிலை ஏற்படுகிறது.  அவ்விழிப்பு தீவிரமடையும்போது ‘இது காலையா?  இப்போது மணி என்ன? இன்று என்ன செய்யப்போகிறேன்?’ என கேள்விகள் தோன்றுகின்றன.  உங்கள் மனதில் கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.  நனவின் இந்த உசாவும் பண்பு ‘மனம்’ (மனஸ்) எனப்படுகிறது.

வேதாந்திகளை பொறுத்தமட்டில், விழித்திருக்கும் நனவில் நான்கு வகைகள் உண்டு. முதலாவது, நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்திற்கும் பொருள் தர முயலும் இந்த உசாவும் பண்பு.  புலன் பதிவுகளும், தொடர்பற்ற கருத்துக்களும் ஏற்கனவே அறிந்தவற்றுடன் தொடர்புறுத்தப்பட்டு பொருள் பெறுகின்றன.  ஒரு புதிய மனப்பதிவோ அல்லது கருத்தோ, ஏற்கனவே உணரப்பட்ட சூழல்களுடன் பொருத்திப் பார்க்கப்படுகிறது. இவ்வாறாக ஒரு மரபார்ந்த பொருத்தப்பாடு அளிக்கப்படும்போது, அது உங்கள் புரிதல் சட்டகத்தில் ஓரிடம் பெறுகிறது.  இதைச் செய்வதற்கு, உங்கள் புலன்களை அல்லது மனதை எதிர்கொள்பனவற்றோடு தொடர்புடைய நினைவுகளை நீங்கள் மீட்டெடுக்கின்றீர்கள்.  நினைவை மீட்டெடுக்கப் பயன்படும் இப்புலம் ‘சித்தம்’ எனப்படுகிறது.   இது நனவின் இரண்டாம் வகை.

பொருத்தமான நினைவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபின் அவை நிகழ் பதிவின்/எண்ணத்தின் தன்மையை முடிவு செய்ய பயன்படுகின்றன.  மூன்றாம் வகை நனவு எழுவாயை பயனிலையாக்கப் பயன்படும் புலம்.  இது ‘புத்தி’ எனப்படுகிறது.

புதிய தூண்டலின் மீதான உங்கள் மதிப்பை தீரிமானிக்கும் வரை ஒரு ஆர்வமடங்கா நிலையில் இருக்கின்றீர்கள். அதன் தன்மை முடிவானதும் ஒன்று திருப்தி அடைகின்றீர்கள், இல்லையெனில் அவதிக்குள்ளாகின்றீர்கள்.  இந்த உணர்ச்சி உங்கள் தனித்தன்மையை பல வகைகளில் பாதிக்கிறது.  ‘அஹங்காரம்’ என்னும் தன் முனைப்பின் உணர்ச்சியே நான்காவது வகை நனவு.  ‘அஹம்’ என்றால் ‘நான்’. வலியாலும், இன்பத்தாலும், இரண்டையும் பொருட்படுத்தாத தன்மையாலும் பாதிக்கப்படும், உங்கள் உள்ளுறையும் ‘நான்’ எனும் மைய நனவுடன் உங்கள் சொந்த அனுபவங்களை பொருத்திப் பார்க்கின்றீர்கள். இதனால், மனப்பதிவின் ஓரலகு, உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உடையது என்பதைப் பொறுத்து, சடுதியில் மாற்றத்திற்குள்ளாகிறது.  மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் என்ற நான்கும் ஒட்டுமொத்தமாக ‘கரணம்’ (உள ஆற்றல்) எனப்படுகிறது.

உசாவுதல், மீட்டெடுத்தல், காரணகாரிய ஆராய்ச்சி, பாதிப்புக்குள்ளாதல் ஆகியவை நிகழ்ந்த பின் சூழலுக்கு எதிர்வினையாற்றும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்கின்றீர்கள். இதற்கு உங்கள் அவதானிப்பு, செயல்படல் எனும் உறுப்புகள் தேவைப்படுகின்றன. புலன்கள், உடல் மற்றும் மனம் ஆகிய எல்லாம் கலந்தபின் முழுமைச் செயல்பாடாகிறது. இது உங்கள் வாழ்வின் குறிப்பிட்ட அத்தருணத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதன்மை இச்சை, செயலூக்கம் அல்லது ஆர்வத்தால் கண்காணிக்கப்படுகிறது.  ஒவ்வொரு ‘செயல்-செயலின்மை’ தொகுதியிலும் ஆர்வத்தின் முழுமை அடங்கியிருக்கிறது.  ஒரு ஆர்வம் நிறைவேறியபின் அல்லது குலைந்தபின் உங்கள் மனம் பிறிதொன்றை நாடிச் செல்கிறது. இப்படி, தொடர்ந்து நீங்கள் ஒரு ஆர்வத்திலிருந்து இன்னொன்றை நோக்கி போய்க்கொண்டே இருக்கின்றீர்கள். நனவிலியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இயல்பான இச்சைகள் விழிப்புறும்போது. இந்த ஆர்வங்கள் பாய்ந்தெழுகின்றன.

சூரியனாலோ, பிற ஒளியாலோ புற உலகம் உங்கள் கண்களுக்குப் புலப்படுத்தப்படுகிறது. நீங்கள் காணும் அனைத்து உருவங்களும்/பிம்பங்களும் ஒளியின் உருமாற்றங்களே. அதேபோல், இவ்வுருவங்களையும் பிற உளப்பதிவுகளையும் உணர, உங்கள் உள் உறையும் ஒர் ஒளி இருக்க வேண்டும்.  எப்படி கட்புலனுருவங்கள் ஒளியின் உருமாற்றம் எனப்படுகின்றனவோ, ‘பிறர்’ எனவும், பொருட்கள் எனவும், ஆர்வங்கள் எனவும் நீங்கள் உணர்வதெல்லாம் உங்கள் நனவின் உருமாற்றங்களே.

உங்கள் உள் உறையும் இச்சைகளையும், மறைந்திருக்கும் மனப்பாங்குகளையும், ஏன் அடிப்படை செயலூக்கத்தையுமே கண்டறிய நீங்கள் இப்பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம்.  உங்களது புலன்கள் எண்ணிலடங்கா தூண்டல்களால் தாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.  அவற்றுள் மிகச்சிலவற்றை மட்டுமே நனவால் அடையாளம் கண்டு, பொருள்தரக்கூடிய அமைப்புகளாய் வகைப்படுத்த முடியும்.  ஒரே சமயத்தில் பலவற்றை கவனிக்கும் திறன் நம் மனங்களுக்கு இல்லை.  பொதுவாக, ஒரு சமயத்தில் ஏதோ ஒன்று மட்டுமே நம் ஆர்வத்துடன் உறவாடுகிறது.  ஒவ்வொன்றையும் எதிர்கொள்ளும்போது, சூழலின் மையப்புள்ளியிலிருந்து விலகியிருக்க கற்றுக்கொண்டீர்களேயானால், வினையையோ எதிர்வினையையோ தூண்டும் ஆர்வத்தை நீங்கள் மனதில் குறித்துகொள்ள முடியும்.  உங்கள் மனதில் மறைந்துள்ள செயல் நோக்கங்களையும் தந்திரங்களையும் கண்டறிவது ஆர்வமூட்டும்/அறிவூட்டும் செயல்.  விழிப்புடன் தேர்வு செய்யும் உங்கள் திறன் மீது நனவிலியாகச் செயல்படும் மனச்சாய்வுகளின் பிடியை தளர்த்த இது உதவும்.  நினைவுகளை மீட்டெடுக்கும்போது தோன்றும் தொடர்புடைய எண்ணங்களின் சங்கிலி உங்களை அரித்தழிக்கும் குழந்தைப்பருவ அதிர்ச்சிகள் பலவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரக்கூடும். அசைக்கமுடியாத, அடக்கமுடியாத ஆற்றலுடன் மீண்டும் மீண்டும் ஒரு கவர்ச்சியோ, ஆர்வமோ எதிர்ப்படும் என்றால், அதுவே உங்கள் முக்கிய செயலூக்கம் என்பதை நீங்கள் அடையாளம் காணலாம்.

உங்கள் அடிப்படை செயலூக்கம் உங்களது ‘வாசனை’களின், முதிரா இளம் நினைவுகள் கொண்ட கருப்பையின் முக்கிய பண்புகளை வெளிப்படுத்துகிறது.  ‘சம்ஸ்காரங்கள்” எனப்படும் தொகுக்கப்பட்ட நினைவுகளின் சாரங்களே ‘வாசனை’கள் எனப்படுகின்றன. சம்ஸ்காரம் என்பது பதப்படுத்தப்பட்ட, பண்பட்ட ஒரு உளப்பதிவு.  வாழ்வில் பின்னெப்போதும் உங்களோடு தங்கி விடுவது அது.  John Locke கருதியது போல நீங்கள் பிறக்கும்போது எழுதப்படாத கரும்பலகையாக பிறப்பதில்லை.  மரபியலாளர் கூற்றுப்படி, நம் குரோமோசோம்களில் சுமக்கப்படும் பல மரபுக்கூறுகளே நம் வாழ்விற்கான முன்வரைவாகிறது (blue-print).  சம்ஸ்கிருதத்தில் இவை ‘வாசனா’ எனப்படுகின்றன.  வாசனை எனும் இந்தியக் கருத்து, மரபியலாளர் முன்வைக்கும் கருத்தைவிட சிக்கலானது.  வாசனை என்பது, உளவியலாளர் கூறும் உள்ளுணர்வோடு ஓரளவு ஒப்பிட்டுக் கூறத்தக்கது.  நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோரிடமிருந்து ஒரு உடலையும், முற்பிறப்பிலிருந்து முன்வரையறை செய்யப்பட்ட (pre-conditioned) ஒரு ஆன்மாவையும் பெறுகிறோம் என ரிஷிகள் நம்புகின்றனர்.  எனவே, மனப்பாங்குகள், உளநோய்கள், உடற்குறைகள் போன்ற பல வாசனைகள் பெற்றோர்களிடமுள்ளதையும், முற்பிறப்பின் சம்ஸ்காரங்களையும் -பதப்படுத்தப்பட்ட உளப்பதிவுகளையும் ஒத்திருக்கின்றன.  மரபணுக்கூறும், காரணகாரிய நனவும் நிகழ் ஆளுமையின் அடித்தளமாகின்றன.  மரபியல் ரீதியாக, ஒருவரது மரபுத்தொடர்ச்சி பல கோடி ஆண்டுகள் பழமையானது.  உளவியல் ரீதியாக மரபுத்தொடர்ச்சி காலமற்றது.  இப்பாடலில் வானத்திற்கப்பால் ஒளிரும் கதிரவனாக குறிப்பால் உணர்த்தப்படும், ‘சம்வித்’ எனும் பிரபஞ்ச நனவின் பிரிக்க முடியாத பகுதி அது.

தனியனின் சொந்த அனுபவம் பிரபஞ்ச நிகழ்வாக உருமாற்றம் பெறுவதை இப்பாடலில் தோன்றச் செய்கிறார் நாராயண குரு.  அவரது ‘தர்சனமாலா’ எனும் நூலின் முதல் பாடலுடன் இதை வாசிக்கும்போது அவரது குறிக்கோள் தெளிவாகிறது:

                                    ஆதியில் எதுவும் இல்லாமலிருந்தது

                                    கனவாலும் தன் விருப்பாலும்

                                    எல்லாவற்றையும் படைத்தான் அவன்

இங்கே, பிரபஞ்ச உருவெளிப்பாட்டை தெய்வ மனத்தின் உள்ளுறையும் ஆற்றலாகக் கூறுகிறார்.  தன் ‘தர்சனமாலா’வில் இறையியலையும் பிரபஞ்சவியலையும் இணைக்கும் நாராயணகுரு இப்பாடலில் பிரபஞ்சவியலை உளவியலோடு பொருத்துகிறார்.

இப்பாடலின் தொடக்கத்தில் வரும் உள ஆற்றலின் தோற்றத்தை ஆராய்ந்தால், அது இயற்கை அமைப்பின் அடித்தளத்தில் தன் மூலப்படிவத்தை கொண்டிருப்பதைக் காணலாம்.  பிரபஞ்சப் பரிணாமம் என்று நாம் சொல்வதில், தற்செயல் நிகழ்வுகளால் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயிரிகள் தோன்றின எனக்கருதாமல், பிரபஞ்ச விவேகம் ஒன்று செயல்படுவதைக் காண்கிறார் நாராயண குரு.  தேடலுடையவன், முதலிரு வரிகளில் சொன்னவற்றை, ஒளியாய் பிரகாசிப்பதும் அனைத்தும் உருப்பெறத்தேவையான சாரத்தை வழங்குவதுமான ஒரு பிரபஞ்சக் கொள்கையின் கூறுகளாகப் பார்க்கவேண்டும் என மூன்றாவது நான்காவது வரிகளில் கூறுகிறார்.

முதல் பாடலில் ‘கரு’ எனப்பட்டது இங்கே ‘பானுமான்’ எனப்படுகிறது.  ஒளிரும்/ பிரகாசமான எனப்பொருள் தரும் ‘பான்’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றுவது ‘பானுமான்’ (கதிரவன்).  ‘பானம்’ எனும் சொல் ‘ஒளி’, ‘அறிவு’ என்ற இரு பொருள்களையும் தருவது.  புனித ஜானின் நற்செய்தியில் ‘சொல்’ கடவுளுக்கு சமமானதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள உருத்தோற்றம் கொண்ட அனைத்திற்கும் பொருள்-செயல் காரணமாக அமைவது சொல் எனப்படுகிறது.  பிரபஞ்சத்தின் விவேக அமைப்பையும் (scheme), பிரபஞ்சத்தில் காணப்படும் எண்ணிலடங்கா வடிவங்களாய் விரித்தெடுக்கக் கூடிய புறநிலை மெய்ம்மையையும் தன்னுள் கொண்ட மூலமுதல் காரணமென்னும் கோட்பாட்டை குருவும் பயன்படுத்துகிறார்.  இறையியல் சுட்டும் கடவுளை அவர் சுட்டுவதில்லை என்பதுதான் வேறுபாடு.  அதற்கு பதிலாக, தங்கள் விகசிப்பிற்குத் தேவையான ஒரே மாதிரியான பாங்கும் அடவும் (pattern or design) கொண்ட ஒரு பிரபஞ்சவியலையும் ஒரு உளவியலையும் உள்ளடக்கிய முழுமுற்றான கொள்கை ஒன்றை அவர் கைக்கொள்கிறார்.  ஒவ்வொரு பாடலிலும் கொடுக்கப்படும் வழிகாட்டுதலின் நுண் விவரங்களைப் புரிந்துகொள்ள் மாணவன் தளர்வில்லாமல் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் குரு.

உள ஆற்றல் என்பது மனம், நினைவு, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகிய நான்கன் தொகுதியைக் கொண்டது என்பதை ஏற்கனவே கண்டோம்.  வானிற்கப்பால் ஒளிரும் கதிரவனின் அருட்பண்புருவாய் இவற்றைக் கொள்வோமேயானால், முதலில் நாம் ‘கதிரவன்’, ‘வானம்’, ‘அப்பால்’ எனும் இவற்றின் பொருளை அறுதியிட்டுக்கொள்ள வேண்டும்.  மலையாள மூலத்தில், சொல்வரிசையில் முதலில் வருவது ‘பர’ என்பது.  இதை ‘அப்பால்’ என்று நாம் மொழிபெயர்க்கிறோம்.  தனியாகப் பார்த்தால், ‘பிற’ என்றும் ‘அப்பால்’ என்றும் பொருள் தரும் இச்சொல், மீஉயர், மீச்சிறப்பு, மீப்பெரு, முழுமுதல் என்பனவற்றைக் குறிக்கும் ‘பரம்’ எனும் பொருளிலும் பயன்படுத்தப்படும். வானம் என்று பெயர்க்கப்பட்ட ‘வெளி’, ‘திறந்த வெளி’யையும் குறிக்கும்.  பரு வடிவக் கதிரவனை நாம் காணும் வானம் ஒரு மூடப்பட்ட அமைப்பு.  ஆனால் ‘வானம்‘, ‘வெளி’ என குரு குறிப்பிடுவது ‘எல்லையிலி’யை; ‘திறந்தவெளி’யை; முழுமுதலையும் அது ஒளிரும் வெளியையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தறிய முடியாத வெளியில்லா வெளியை. அவ்வெளி, விளைவிக்கப்பட்ட வெளியல்ல; புறவெளியை விளைவிக்கும் வெளி.  நம் மனம், நினைவு, அறிவாற்றல், தன்முனைப்பு இவற்றின் இறுதி வெளிப்பாட்டை இப்பொருட் காரணத்தில் வைத்தே காண வேண்டும்.

உண்மையில் இருப்பதை (actual) தெளிந்தறிவதைப் போல இயல்திறத்தை (potential) அறியமுடியாது.  ஒரு மரபணுவைப் பார்த்து அது கருவண்டாகப் போகிறதா, பார்லி பருப்பாகப் போகிறதா அல்லது கட்டுறுதியான நீர்யானையாகப் போகிறதா? என்று சொல்லிவிடமுடியாது.  அதைப்போன்றே எல்லா உளவியல் தோற்றப்பாடுகளுக்கும் முதற்காரணமாய் அமையும் மனமும் தெளிந்தறிய முடியா ஒன்று.

நினைவு குறித்து சொல்வதென்றால், ஒரு படிகம் தன் வடிவியல் அமைப்பை மறப்பதில்லை.  பல்லாயிரம் முறை அதை கரைத்து மறுவளர்ப்பு (re-culture) செய்தாலும் அது தன் முந்தைய வடிவத்தையே எடுத்துக்கொள்கிறது.  பிரபஞ்ச உருத்தோற்ற அமைப்பில் மீள் நிகழ்வுகள், ஏற்கனவே நிகழ்ந்த இயற்பியல் -வேதியியல் உருமாற்றங்களின் மொத்த வரிசையும் அனைத்தினுள்ளும் உறையும் நினைவு என்பதையே காட்டுகிறது.  வண்ணத்துப் பூச்சியின் சிறகிலுள்ள வடிவம், அது மீண்டும் மீண்டும் எந்தப் புழுவிலிருந்து வெளிவருகிறதோ அப்புழுவின் மரபணு அமைப்பைச் சார்ந்ததாகவே இருக்கும். இதைப் போன்றே மனிதமனமும் இயற்கையைச் சார்ந்ததே.  ஆக, நம்மில் செயல்படும் நினைவு, ஈட்டிய செய்முறை நுண்ணறிவென்னும் (acquired know-how) பிரபஞ்சக் கொள்கையின் தொடர்ச்சியே.

உறுதியான முடிவுகள் எடுத்தல் எனும் சிக்கலை அறிவாற்றல் எதிர்கொள்கிறது.  இயற்கையின் விதிகள் தவிர்க்கப்பட முடியாதவை.  அவை மிகத்துல்லியமானவை.  மனித விவேகத்தில் நாம் காணும் உறுதியின்மையும் பலதரப்பட்ட செயல்பாடும், அதி சிறப்பானதை சிறப்பில்லாததைக் கொண்டு விளக்க முடியாத நம் நெறிமுறையில் உள்ள போதாமைகளைக் காட்டுகின்றன. உயிர்வேதியியல், இயற்பியல்-வேதியியல், உளவியல்-இயற்பியல் தளங்களின் கீழ் படிநிலைகளில் செயல்படும் விவேகம் முன்வரையறை செய்யப்பட்ட தன்மையுடையது.  ஒரு உயர்நிலையில் சுயேச்சை காரணி எழுகிறது.  மனித மனத்தின் சுவாதீனமான வெளிப்பாட்டை, இயற்கையின் இறுதி விரிவின் சாரமாகவும், கழிவாகவும் பார்க்கவேண்டும்.  நாம் இங்கே குறிப்பிடுவது கீழ் இயற்கையை (infra-nature) அல்ல; மீஇயற்கையையும் (meta-nature) மேல் இயற்கையையும் (supra-nature) தன் கூறுகளாகக் கொண்ட பிரபஞ்ச இயற்கையை.

புலன்களிலிருந்து வரும் தரவுகளை வடிவமைப்பதை, ஒரு தனியனின் ஆர்வம் எப்படி முடிவுசெய்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். செல் பிளவை முடிவு செய்வதிலும், கருவிலிருந்து முதிர் மனிதனாக வளர்வதை நடத்திச் செல்வதிலும் ஒரு வழிவகை உள்ளது.  இவ்வழிவகையின்றி எதுவும் உருப்பெற முடியாது.  அதுவே ஒரு மனிதனின் தன்முனைப்பாக தொடர்கிறது.  ‘கரணம்’ எனும் உள ஆற்றலை, இப்பிரபஞ்சமாக உருமாற்றம் பெற்ற ஆதிமுதல் ஒளியின் அருட்பண்பாகக் காணவேண்டும். மெய்ப்பொருளியல் (ontological) ரீதியாக பிரபஞ்சப் பொதுமையும், இயல்திட்டவாத (teleological) ரீதியாக நோக்கம் ஒன்றையும் கொண்ட ஒரு விவேகம் பிரபஞ்ச உருமாற்றத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்ளாத பரிணாமவியல் தோன்றியபின் ‘பரிணாமம்’ என்ற சொல்லின் கருத்தெல்லைகள் சுருங்கிவிட்டதை நாம் அறிந்தேயிருக்கிறோம்.  ஆதலால், ‘பரிணாம வளர்ச்சி’ என்பதற்கு பதிலாக ‘உருமாற்றம்’ என்ற சொல்லையே நாம் பயன்படுத்துகிறோம்.

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

Standard
அறிவினையும் கடந்து அறிபவனின்
அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும்
கருவினை  புலனைந்தும் உள்ளடக்கி
மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம்
[ஆத்மோபதேச சதகம் – பாடல் 1]

‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப் புலனுணர்வு மூலமோ அறிவது.  உங்களது விழிப்புணர்வு ஒரு நனவோடை போல உங்களில் கடந்து செல்வதை கவனியுங்கள்.  உங்களை அறிபவனாக இனம் காணுங்கள்.  உதாரணமாக, “நான் அறிகிறேன்; நானே அறிபவன்” என்று சொல்லும்போது, உங்களில் உள்ள ‘நான்’ என்பதும் நீங்கள் அறியும் பொருளும் சேர்ந்ததே நீங்கள் என்பதை உணருங்கள்.

இதைப் படிக்கும்போதே, இங்கு எழுதப்பட்டுள்ளதன் பொருளை உங்கள் நனவு எப்படி ஊடுருவுகிறது என்பதை அவதானியுங்கள்.  ஓரறைக்குள் நுழையும்போதே அதில் உள்ள அனைத்துப் பொருட்களையும் நீங்கள் அறிவதற்கு ஒப்பானது இது. அதேபோல், சொல்லின் உள்ளடக்கத்திற்குள் நுழைந்து அது தரும் கருத்தை நீங்கள் அறிகின்றீர்கள்.  ஒரு பொருளை நீங்கள் பார்க்கும்போது அதன் வடிவை மட்டும் நீங்கள் காண்பதில்லை.  அதன் சாரத்திற்குள் செல்கிறீர்கள்; உங்களது நனவு அடையும் மாற்றமாகவும் அதை அறிகின்றீர்கள்.

ஆங்கிலத்தில் ‘experience’ என்ற சொல் அறிபவனுக்கும் அறிபொருளுக்கும் இடையே நிகழ்வதையே சுட்டி நிற்கிறது.  சமஸ்கிருதத்தில் ‘அனுபவ’ என்ற சொல் ‘அதுவாதல்’ என்ற பொருளைத் தருகிறது.  அறிபவனுக்கும் அறிபொருளுக்கும் இடையே நிகழ்வதல்ல; அறிபவனின் உருமாற்றம் அது.  அறிபவனான நீங்கள் அக்கணத்தின் நனவை அறிபொருளாகவே மாற்றுகின்றீர்கள்.  இந்நிகழ்வில், அனுபவம் என்பதை அறிபவனில் நிகழும் மாற்றம் என்றே கொள்ள வேண்டும்.

அறிவதில் ஒரு நிலை உண்டு.  அறிபவனாக உங்களது அந்தரங்க ஈடுபாட்டை நீங்கள் உணராத நிலை அது.  முற்றாக நீங்கள் ஒரு அனுபவத்தில் ஈடுபடும்போது நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதில்லை.  உங்கள் மனநிலை பற்றி நீங்கள் சிந்திக்கும்போதும் அதைப்பற்றி பிறருக்கு சொல்லும்போதும் மட்டுமே, “நான் அறிகிறேன், நான் மகிழ்கிறேன்” என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன.  இது இல்லாதபோது, வெறும் அறிதல் மட்டுமே நிகழ்கிறது.  நம் எண்ணங்கள் மொழி வடிவம் பெறும்போதுதான் எண்ணங்களுக்கும் பொருட்களுக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றுகின்றன.  உதாரணமாக, மரமொன்றில் ஒரு பறவையைப் பார்க்கும்போது, ‘அங்கே உள்ள’ பறவை ஒன்றைப் பார்ப்பதன்றி, உங்கள் தலைக்குள் நிகழும் அறிதலாக நீங்கள் அதை எண்ணுவதில்லை.  அப்போது அறிபொருளே அறிவதும் அறிபவனுமாகிறது.  அது அறிபவன் அறிபொருளுக்குள் செலுத்தப்படுவதைப் போன்றது.  அறிபொருளை உங்களுக்குள் செலுத்தவோ, அறிபவனை அறிபொருளுக்குள் சேர்க்கவோ நீங்கள் போராட வேண்டியதில்லை.  அனைத்தும் தானாக சடுதியில் நிகழ்ந்துவிடுகிறது.

இப்பாட்டில் நாராயணகுரு உள்ளுலகிற்கும் புறவுலகிற்கும் இடையே காணப்படும் இருமையைக் குறிப்பிடுகிறார்.  உங்கள் உள் உறையும் உலகை அறிய சிறந்த வழி, கண்களை மூடி மற்ற புலன்களை கட்டுப்படுத்துதல்தான்.  புலன்களை இயங்கவிடாமல் செய்யும்போது, உங்களது அக உலகின் பகுதிகளான கடந்துபோகும் எண்ணங்கள், அக நாட்டங்கள், நனவுநிலை விருப்பாற்றல் ஆகிய மென்னுணர்வுகளை மட்டுமே நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

“நானே அறிபவன்”, “இதுவே அறிவு”, “இதுவே அறிபொருள்” என்று சொல்லும்போது என்ன நிகழ்கிறது என்று கூர்ந்து கவனியுங்கள்.  உங்கள் அகத்திலுள்ள அறிபவன் என்பதிலிருந்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?  அறிவெனப்படும் தனித்த பொருள் எங்கே இருக்கிறது?  அறிபவனைத் தவிர்த்த அனைத்துமாக அறிபொருள் பார்க்கப்படலாம்.  இவை தனித்தனி பொருட்களாகத் தோன்றினாலும் நனவைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இவற்றிடையே இல்லை.  அத்தகைய தருணங்களிலெல்லாம் நீங்கள் உணர்வது ஒரு நனவுநிலையில் நிகழும் வெவ்வேறு மாற்றங்களைத்தான்.  இங்கே அறிபவன், அறிபொருள், அறிவு ஆகியவை உங்களது அந்தரங்கமான தனித்த அனுபவத்தையே குறிக்கின்றன.  அவை உங்களது விழிப்புநிலைக்குள் வெறும் மாற்றங்களாகவே நிகழ்கின்றன.

வரையறுக்கப்படக்கூடியதும் வரையறுக்கப்படமுடியாததுமான ‘கரு’வே இப்பாடலின் முதன்மைச் சொல்.  இறுதியில் அதுவே தனிமுதலாகவும், ஆதி காரணமாகவும், பிரபஞ்ச ஆன்மாவாகவும், இயற்கையை நடத்தும் இயற்கையாகவும் பொருள் கொள்ளப்படவேண்டும்.  அதன் நேர் பொருள் ‘அச்சு’ (mould) என்பது.    கொல்லன் ஒரு உருவத்தையோ அல்லது பாத்திரத்தையோ வடிவமைக்க உலோகத்தை உருக்கி ஒரு அச்சில் ஊற்றுகிறான்.  ஒரு பறவையின் முட்டையில் அதன் மரபணுச் செய்தியில் ஒரு வகையான அச்சு இருக்கிறது.  அந்த அச்சிலிருந்து வெளிவரும் பறவைக் குஞ்சு ஒரு பறவையாக உருப்பெறுகிறது.  மனித இனமும் இனக்கீற்றுகளின் (chromosomes) வரைபடம் கொண்ட ஒரு அச்சிலிருந்தே வருகிறது.  எந்த விளைவும் அதன் காரணம் என்னும் அச்சைக் கொண்டுள்ளது.  ஒரு மெய்ம்மையாக்கத்தின் அச்சு என்பது அதன் உள்ளார்ந்த ஆற்றல்.  அறிவின் அச்சு நனவுநிலை.  வெளியிடப்பட்ட எண்ணத்தின் அச்சு மொழி.  சொற்கள் அவை தரும் பொருளின் அச்சு.  பருப்பொருட்களின் அச்சு அவற்றில் உறையும் ஆற்றல்.  ஆற்றலின் அச்சு அதை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் விதி.  இவ்வாறாக, இவ்வுலகில் உள்ள, மிக நுட்பமானது தொடங்கி மிகவும் பெரிய பருப்பொருள் வரை ஒவ்வொன்றும் அவற்றுக்கேயான ஒரு அச்சைக் கொண்டிருக்கின்றன.  இவற்றின் பொதுமைப்படுத்தலே கரு எனப்படுகிறது.

மற்றொரு பொருளில், கரு என்பது நனவிற்கு மெய்ம்மையும் பொருளும் தந்து அதை நிரப்புவது.  உருக்கொள்வதாகவோ, இயற்கையை நடத்தும் இயற்கையாகவோ அதைப் புரிந்துகொள்ளும்போது, அது உள்ளுறையும் தன்மையுடையதாகிறது. எப்போதும் அச்சின் தனிக்கூறுகளை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால், அதை ‘எல்லாம் கடந்த’தாகக் கொள்ள வேண்டும்.  பிரபஞ்ச நனவில் அது உள்ளுறைகிறது; தனிப்பட்ட புரிதல்களைக் கடந்ததாகவும் இருக்கிறது.

ஒன்றைக்காட்டிலும் இன்னொன்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரே சமயத்தில் இவ்விரு பொருளிலும் கருவை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் குரு.  நம்மால் அதைச் செய்ய முடியும் என்றால், நாம் காணும் இந்நிலம் உண்மையிலேயே நிலமாகவும், நீர் நீராகவும், மனிதன் மனிதனாகவும், கண்ணீரும் புன்னகையும் அவையாகவேயும் இருக்கும்.  புறத்தே பிரகாசமாய் ஒளிர்வது என்று குரு சொல்வது இதையே.    இப்புற நிகழ்வுகள் எல்லாம் பிரபஞ்சப் பொருண்மையைச் சார்ந்தவை.  இமயமும், ஆல்ப்ஸும், ராக்கீஸும்  பல்லாயிரமாண்டுகளாக ‘அங்கே இருப்பதை’ப் போல இயற்பியல், வேதியியல், உயிரியல் மாற்றங்கள் பலகோடி ஆண்டுகளாக இடையறாமல் நிகழ்ந்துவருகின்றன.  ஒப்புநோக்க பிற்காலத்தைச் சேர்ந்த மரபுகளும் சமூகப் பழக்கவழக்கங்களும் அதே புற உண்மையின் பகுதிகளே.  செவ்வியல் அறிவியலாளர்கள் பருப்பொருளை புறவயமானது என்று சொன்னதே ஓரளவு உருவகப்படுத்தும் பொருளில்தான்.  ஆங்கிலத்தில் ‘matter’ என்பது லத்தீன் மொழியில் தாய் என்று பொருள் தரும் ‘mater’ என்பதிலிருந்து வந்தது.  தாய் என்பது கருவின் மற்றொரு வடிவம்.  அவள் புதிய இயல்கைகளைப் பெற்றெடுக்கிறாள்.

இந்த இடத்தில் “அச்சை அச்சாக்குவது – கருவை கருவாக்குவது எது?” என்று நாம் கேட்கலாம்.  நிகழ்வுகளின் வைப்பு முறையும் பொருளும், நம் தர்க்கம் செயல்படும் விதத்துடன் ஒத்துப்போவதைக் காணலாம்.  நம் தர்க்கத்திற்கு பொருள்படும் விதத்தை வைத்தே நாம் ஒரு அச்சை, ஒரு வார்ப்பை புரிந்துகொள்ள முடியும்.    கண்ணுக்குப் புலப்படுவதை கணக்கிடக் கூடியதாகக் குறுக்கும்போது, கச்சிதமான ஒத்திசைவு கொள்ளும் பிசிறில்லா தர்க்க ஒழுங்கைக் காண்கிறோம்.  நாம் அச்சு என்று கருதும் எல்லாவற்றிலும் ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கிறது என்று எண்ணவேண்டியிருக்கிறது.  பின்வரும் பாடல்களில், தன்னை ஒளிர்விக்க தன்னைத் தவிர வேறில்லாதபோதும், அறியும் அறிவே ஆன்மா என்ற வரையறையை காணப்போகிறோம்.  அந்தப் பொருளில் பார்த்தால், கரு என்பது ஆன்மாவே எனலாம்.

நாராயண குரு தன் குஹாஷ்டகத்தில் கருவை (1) அனைத்துலகிற்கும் ஆதாரமாய் அமைந்து தனக்கென வேறெந்த ஆதாரமும் இல்லாததாய் இருப்பது (2) அறிபொருளாகவும் அறிபவனாகவும் ஆகும் தொடரியக்கத்தின் பண்புகளை ஒழுங்கமைப்பது (3) தனக்கென ஒரு கருப்பை இல்லாத, அனைத்திற்குமான கருப்பையாக இருப்பது மற்றும் (4) கால ஒழுக்கை உற்பத்தி செய்யும் தூய காலவரையறையாக இருப்பது என்று வரையறை செய்கிறார்.

ஸ்பினோசாவின் தத்துவம் ஆத்மோபதேச சதகத்தின் முதல் பாடலுடன் பொருந்துவது.  கரு என்று நாராயண குரு சொல்வது, ஸ்பினோசாவின் தத்துவத்தில் ‘சாரம்’ எனப்படுகிறது.  ஸ்பினோசா கூறும் சாரம் தன்னைத் தானே தோற்றுவித்துக்கொண்டது; தன்னைத்தானே நிறுவிக்கொண்டது; காரணகாரியத்தின் அனைத்து அச்சுவார்ப்புருக்களை தன்னுள்ளே கொண்டது.  நீட்சி மற்றும் ஆழ்சிந்தனை என்ற இரண்டையும் சாரத்தின் பண்புகளாகக் கூறுகிறார் ஸ்பினோசா.  வேதாந்தத்தில் நீட்சி என்பது வியாப்தி எனப்படுகிறது.  ஸ்பினோசாவின் நீட்சி என்ற கருத்து குருவின் பாடலில் “புறம்’ என வருகிறது; அவரது ஆழ்சிந்தனை எனும் கருத்து இங்கே அறிவெனப்படுவதை ஒத்திருக்கிறது.  “பிரகாசமாய் ஒளிர்வது” ஸ்பினோசாவின் தத்துவத்தில் omnia எனப்படுகிறது.  மேலும் “அறிவிலுமேறி” என நாராயண குரு சொல்வது, ஸ்பினோசா கூறும் intellectus infinitus என்பதை ஒத்ததே; ‘உருவிலும்’ என்பது motus et quies; ‘புறத்து’ என்பது res partilulares; ‘ஒத்து’ என்பது facis totius universi.

இப்பாடலில் வெளிப்படும் ஒருங்கிணைந்த பார்வை என்பதை நவீன அறிவியலாளர்கள் பெரிதும் அங்கீகரிக்கத் துவங்கியுள்ளார்கள்.  ஹெய்சன்பெர்கும் நீல்ஸ் போரும் உருவாக்கிய ‘குவாண்டம் தியரியின் கோபன்ஹேகன் விளக்க”த்தை பெரிதும் ஒத்திருக்கிறது இது.  ஒரு தொடக்கமாக, பரு உலகை அவர்கள் அவதானிக்கப்படும் அமைப்பு என்றும், அவதானிக்கும் அமைப்பு என்றும் இரண்டாகப் பகுக்கின்றனர்.  இதில் அவதானிக்கப்படும் அமைப்பு என்பது குரு சொல்லும் ‘புற’த்தை ஒத்தது.  அவதானிக்கும் அமைப்பு என்பது குரு சொல்லும் ஊடுருவும் அறிவும், அகமும் சேர்ந்தது.  கோபன்ஹேகன் விளக்கத்தை மறுத்த டேவிட் பாம் கூட, நாராயண குரு இந்தப் பாட்டில் அளிக்கும் உலகப் பார்வையை ஒத்த ஒரு நிலையை வெளிப்படுத்துகிறார்:

உலகை தனித்தனியான ஒன்றையொன்று சார்ந்திராத பகுதிகளாகப் பகுத்துப் பார்க்கும் செவ்வியல் கருத்தை மறுக்கும் இடையறா முழுமைக்கோட்பாட்டை நோக்கி நாம் செலுத்தப்படுகிறோம்… உலகில் காணப்படும் தனித்தனியான ‘அடிப்படைக் கூறுகள்’ மூலாதார மெய்மை என்ற செவ்வியல் கோட்பாட்டையும், வெவ்வேறு தொகுதிகள் இக்கூறுகளின் குறிப்பிட்ட தற்செயல் வடிவங்களும் அமைப்பு முறைகளும் மட்டுமே என்பதையும் நாம் தலைகீழாக மாற்றிவிட்டோம்.  மாறாக,, மொத்தப் பிரபஞ்சத்தின் பிரிக்கமுடியா தொகுதிப் பிணைப்புதான் மூலாதார மெய்மை என்றும், மொத்தத்திற்குள், ஒப்புநோக்க, தனித்துச் செயல்படும் கூறுகள் குறிப்பிட்ட தற்செயல் வடிவங்கள்  மட்டுமே என்றும் சொல்கிறோம்.

“நான், நான், நான்” எனும் இடையறா விழிப்புநிலையின் குறுக்கீட்டால் இந்தத் தொடர் நிகழ்வை உங்களால் அறியமுடிவதில்லை.  வலியதான இந்த ‘நானை’ நீங்கள் அடக்கி பணிவானதாக்க வேண்டும்.  ஒரு சிறந்த கருவி என்பதற்கு மேல் அதற்கு எந்தப் பயன்மதிப்பும் இல்லை என எண்ணுங்கள்.  எதையும் படைப்பதற்கான ஆற்றல் ஏதும் அதனிடம் இல்லை. ஒட்டுமொத்த நனவில், தன்முனைப்பு (ego) கொண்ட ஒரு சிறு துகள் மட்டுமே அது.  அனைத்துமாகும் மீஉயர் அண்ட நனவின் முன் உங்களது ‘நான்’  மண்டியிட்டு வணங்கட்டும். அது உங்கள் நோக்கு இயல்பாய் அமைய உதவும்.

“மீஉயர் அறிவானது உள்ளுலகிலும் புறவுலகிலும் பேரொளியுடன் ஒளிர்கிறது” என்கிறார் நாராயணகுரு.  அது இப்பிரபஞ்சமாய், ஆன்மாவாய், அறிவாய், மனக்கிளர்ச்சியாய், மதிப்பீடுகளாய் சுடர்கிறது.  அப்பிரபஞ்சக் கருவை, உடன்பொருண்மையின் (consubstantiation) அண்ட முட்டையை நாம் பயபக்தியுடன் நோக்க வேண்டும்.

இப்பாடலை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க நினைத்தால், இந்நாளில் நடக்கும் எல்லாவற்றின்மீதும் அதன் ஒளியை பொருத்திப்பாருங்கள்.  மனதிற்குள் திரும்பத் திரும்ப பாடலை சொல்லிப்பாருங்கள்.  உங்களது நனவு வெளியுலகாகவும் அகச்சிந்தனையாகவும் இடையறாமல் இயங்கும் அதிசயத்தை உணருங்கள்.  பொருட்களை பார்க்கும்போதும், பிறருடன் பேசும்போதும், ஒரு நாளில் நீங்கள் ஈடுபடும்  அன்றாட அலுவல்களில் இதை செய்து பாருங்கள்.  அந்த அதிசயத்தை நீங்கள் உணரும்போது, உங்களின் உள் உறையும் பிரபஞ்சத்தின் மீதான பெரும் பக்தி உங்களுள் இயல்பாக ஏற்படும்.  உங்களால் யோசிக்க, பார்க்க, உணர, அறிய, செய்ய முடிகிறது என்பதும் அவற்றின் மூலம் முழுமுதலின் அண்ட வெளிப்பாட்டில் நீங்களும் பங்கேற்க முடியும் என்பதும் உங்களில் ஒரு நன்றி உணர்வை ஏற்படுத்தும்.  புறத்தே உள்ள மெய்வெளிப்பாட்டிற்கும் உங்களது அக ஆழத்தின் கனவுகளுக்கும் விருப்புகளுக்கும் இடையேயான பரஸ்பரத்தன்மை பெரிய அதிசயமல்லவா?

நமது இயல்பெளிமையை நாம் கைவிடும்போது நமது இயல்பான கரவின்மையை, அதிசயித்து நிற்கும் திறனை இழந்துவிடுகிறோம்.  வியப்பெய்தும் உணர்வை நாம் மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  சில மணி நேரங்களுக்கு முன் கட்டையாய் படுக்கையில் கிடந்த இவ்வுடல் இப்போது இங்கே அமர்ந்து தர்க்கம் செய்துகொண்டிருப்பது ஒரு அதிசயம்.  அவ்வுறக்கத்தின்போது இல்லாத பல்பரிமாணப் பிரபஞ்சத்தை அது இப்போது காண்கிறது என்பதும் ஒரு அதிசயம்.  நுட்பமான ஆழங்களில் இருந்து வரும் கனவுகள் கூட வியப்புக்குரியவைதான்.  உங்களிடம் என்னால் பேச முடிவதும், உங்களால் நான் சொல்வதைக் கேட்டு புரிந்துகொள்ளமுடிவதும் எல்லாம் அதிசயமே.

எதையும் பகுப்பாய்வு செய்வதும் முத்திரை குத்துவதுமே உங்கள் பழக்கமாகிப் போனதால் வியப்புணர்வென்பதையே தொலைத்துவிட்டீர்கள்.  சேமித்துவைத்த முத்திரைகளைக் கொண்டு உங்களது எண்ணமென்னும் புறாக்கூண்டை நிரப்பிவிட்டு, நீங்கள் மெய்யறிவு பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்கிறீர்கள்.  ஆனால் இம்முத்திரைகள் உங்களை மேலும் குருடாக்கும் தடைகளே.  பக்தியுணர்வே அற்றவர்களாகிவிட்டீர்கள்.  ‘கடவுள்’ என்று சொல்லும்போது உங்களில் எந்த உணர்வும் எழவில்லையென்றால், ‘முழுமுதல்’ எனும்போதே உணர்ச்சிப்பெருக்கில் நீங்கள் மூழ்கவில்லையென்றால், உங்களுக்கு ‘கடவுள்’ என்றால், ‘முழுமுதல்’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.  உங்கள் பக்தி சாரத்தை நீங்கள் சீரமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதையே இது காட்டுகிறது.

ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு கணமும் ஒரு அதிசயம்தான்.  தங்கள் வியப்பு நிறைந்த மனங்களால், சிறு குழந்தைகள் பேரழகைப் படைத்துக் கொள்கின்றன.  நாம் ஒருவரை ஒருவர் பார்க்கவும் தொட்டுக்கொள்ளவும் முடிகிறது என்பதே அதிசயமானதுதான், ஆனந்தமானதுதான்.  நான் குறிப்பிடும் போற்றுதல் என்பது அந்த வியப்பின் மெய்சிலிர்ப்பைத்தான். இவையெல்லாவற்றையும் நிகழ்த்தும், அறியப்படுபவனும் அறியப்படாதவனுமான அந்த மாயாவியின்பால் நீங்கள் பக்தியை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  ஒருவனுக்கு வீடுபேற்றை அளிப்பதில் பக்தியைப் போல் பிறிதொன்றில்லை என்கிறார் சங்கரர்.  விடுதலைக்கு மிகச்சிறந்த வழி அதுவே.  பக்தி என்பது இதயபூர்வமானது, முழுமையான அன்பு அது.

உங்களது அன்றாடக் கடமைகளிலிருந்து விலகாமல், உங்களைச் சுற்றியும், உங்கள் அகத்தேயும் இந்த அதிசயம் நிகழ்வதை கவனியுங்கள்.  உண்ணும்போதும் நடக்கும்போதும், வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும், உறங்கச் செல்லும்போதும், நாள் முழுவதும் இந்த அதிசயத்தைக் குறித்து பக்தியுடன் சிந்தியுங்கள்.  நீங்கள் பார்ப்பதையும் உணர்வதையும் குறிப்பெடுத்து வைப்பீர்கள் என்றால், மாலையில் அவற்றைப் படித்துப் பாருங்கள் – ஒரு நாளில் எத்தனை பொக்கிஷங்களைக் கண்டு போற்றியிருக்கிறோம் என்று வியந்துபோவீர்கள்.

இப்பாடல் மூலம் நீங்கள் ஒரு தீவிர ஆன்மீகப் புலத்திற்குள் நுழைகின்றீர்கள்.

….

[1977-இல் போர்ட்லாண்ட் நாராயண குருகுல மாணவர்கள், நாராயண குருவின் ஆத்மோபதேச சதகத்தின் மீதான ஒரு ஆழ்சிந்தனைக்கு இசைந்தனர்.  நாளொன்றுக்கு ஒரு பாடல் வீதம் கற்பதும் அதன் அடிப்படையில் புற நிகழ்வுகளையும் அக வாழ்வையும் கூர்ந்து அவதானித்து அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வது என திட்டமிடப்பட்டது.  ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு பாடல் மீதான சிந்தனைகளை மாணவர்கள் முன் வைத்தார் நித்ய சைதன்ய யதி.  அவை பதிவு செய்யப்பட்டு ‘That Alone, the Core of Wisdom’ என்ற நூலாக உருப்பெற்றது.]