Tag Archives: நடராஜ குரு

நடராஜ குருவும் நானும் – 6

Standard

அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது.  உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது.  குரு மிகவும் மகிழ்ந்துபோனார்.  இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார்.  சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன்.  பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார்.  ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம் இருக்கவில்லை.  நான் சென்னையை அடைந்தபோது என் உடல் முழுக்க கரி அப்பியிருந்தது.  தலைமுடி சிடுக்கடைந்து போயிருந்தது.  இயக்குநர் குழுவில் உறுப்பினர்களாயிருந்த சென்னையின் மிகப்பெரிய கனவான்களின் முன்னால் என்னை ஒரு நாகரிக மனிதனாகக் காட்டிக்கொள்ள விரும்பினேன்.  இரு நாட்கள் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன்.  அரை அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன்.  எண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு குளித்துவிட்டு என்னிடம் இருந்த உள்ளதிலேயே நல்ல உடையை அணிந்துகொண்டேன்.  அந்த எண்ணெய் வாசனை கலக்கப்பட்டது. மயிலாப்பூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தபோது வாசனை தாங்கமுடியாதபடி அடித்தது.  என் தலைமுடியிலிருந்து வரும் வாசம் தெரியாதபடி குழு உறுப்பினர்களுக்கு மூக்கடைப்பு இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது.  மின்விசிறிக்குக் கீழ் என் தலை இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தேன்.  நல்ல வேளையாக, என்னைப் பணியிலமர்த்துவது என்று ஏற்கனவே இயக்குநர் குழு முடிவெடுத்திருந்தது.  விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதோடல்லாமல் விவேகானந்தா கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளராகவும் நான் நியமிக்கப்பட்டதால் என்னை அதிர்ஷடக்காரனாக உணர்ந்தேன்.

நம்பியார்மகராஜ் என்று மற்ற துறவிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி நிஷ்ரேயசானந்தா கல்லூரியின் தலைவராக இருந்தார்.  ராமகிருஷ்ண மடத் துறவிகளின் பெயருடன் அவர்களின் ஜாதிப் பெயர் ஒட்டிக்கொண்டேயிருந்தது.  மிகச் சிறந்த இந்தியத் துறவிகளுக்கு எடுத்துக்காட்டானவர் சுவாமி நிஷ்ரேயசானந்தா.  குறைவில்லா அறிவும் சுத்தமான பழக்கவழக்கங்களும் கொண்டவர்.  அவர் என்னை விடுதிக்கு வரவேற்றார்.  அந்நாட்களில், கல்லூரி விடுதியில் அரிஜன மாணவர்களுக்கென்று சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பெரும் பிரிவினை இருந்தது.  இந்தப் பிரிவினையை திறமையாகக் கையாண்டு ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று நிஷ்ரேயசானந்தா சுவாமி என்னிடம் கேட்டுக்கொண்டார்.  தவறாக நடந்துகொள்ளும் மாணவனை அரிஜன மாணவர்கள் அறைக்கு மாற்றிவிடுவேன்.  அதைத் தொடர்ந்து ஒரு அரிஜன மாணவனை மற்றவர்கள் அறைக்கு மாற்றுவேன்.  புத்திசாலித்தனமாக இப்படி மாறுதல்கள் செய்ததில் ஒரு வாரத்திற்குப் பிறகு அரிஜன மாணவர்களுக்கென தனி அறையே இல்லாமல் போனது.  முழுக்க முழுக்க பிராமண சார்புடைய நிர்வாகம் இதற்கான பழியை நம்பியார்மகராஜ் மீது போட்டது. இதை நான் குருவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் அரசியல் எதுவும் எனக்குத் தெரியாததுபோல் இருந்துவிடும்படி கூறினார்.

பின்னர் குரு வந்து என்னுடன் தங்கினார். குருவின் மொத்த நேரத்தையும் நானே எடுத்துக்கொள்ளலாம் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது.  ஒருநாள் பிற்பகலில், இரவுணவுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டபோது வர்க்கலையில் செய்வது போல கஞ்சி தயாரிக்கச் சொன்னார் குரு.  கஞ்சி தயாரித்துவிட்டு கறி செய்யத் துவங்கும்போது, குருவின் பழைய நண்பரான டாக்டர் ஏ. தியாகராஜன், இரவுணவுக்கு குருவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார்.  நானும் அவருடன் வர வேண்டும் என்று குரு கட்டாயப்படுத்தினார்.  செய்திருந்த கஞ்சியை பத்திரமாக வைத்துவிட்டு வரச்சொன்னார்.  டாக்டர் தியாகராஜனின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.  அவரைப் பார்ப்பவர்கள் இருபதாம் நூற்றாண்டின் கார்கி என்றே அவரைக் கருதுவார்கள். அவர் குருவிடம் பகவத் கீதையைப் பற்றி குறைந்தது நூறு கேள்விகளாவது கேட்டிருப்பார்.  அடுத்த இரண்டு வருடங்களில் குரு சென்னைக்குப் பலமுறை வந்து சென்றார்.  திருமதி தியாகராஜனுடனான சொற்போர் அடிக்கடி நிகழும்.  உண்மையில் அந்த அம்மையாருக்குப் பதில் அளிக்கும் முகமாகவே கீதை உரையை குரு எழுதினார்.  அன்றிரவு, உணவும் விவாதமும் முடிந்த பின் என் அறைக்குத் திரும்பிய குருவும் நானும் நன்றாக உறங்கினோம்.

காலை நான்கு மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொள்வது குருவின் வழக்கம்.  குரு விழித்திருக்கும்போது நாம் உறங்குவது நாகரிகமல்ல என்பதால் நானும் எழுந்துவிடுவேன்.  பகவத் கீதைக்கான அறிமுகத்தை குரு ஏற்கனவே தன் மனதில் உருவாக்கி வைத்திருந்தார்.  அதைச் சொல்ல ஆரம்பித்தார்; நான் பதிவு செய்தேன்.  குருவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இப்படித்தான் தொடங்கின.  சொல்லி முடித்த பிறகு, நேற்றிரவு தயாரித்த கஞ்சியை நான் என்ன செய்யப்போகிறேன் என்று கேட்டார் குரு.  யாராவது ஏழை ரிக்‌ஷாக்காரனுக்குக் கொடுத்துவிடுவேன் என்றேன்.  “எந்த ரிக்‌ஷாக்காரனாவது உப்பும் வெங்காயமும் இல்லாமல் அதை அப்படியே சாப்பிடுவானா?” என்று கேட்டார் குரு. “உப்பும் வெங்காயமும் சேர்த்துக் கொடுப்பேன்” என்றேன்.  அவற்றைக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்ட குரு உப்பைத்தூவி வெங்காயத்தை கஞ்சியில் கலக்கினார்.  “நான்தான் அந்த ரிக்‌ஷாக்காரன்” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கஞ்சியைக் குடித்தார்.  பெரும் துயரத்துடன் பார்த்துக் கொண்டே நின்றேன் நான்.  அவருக்காக நான் தயாரித்த கஞ்சியை வீணாக்கினால் நான் வருத்தப்படுவேன் என்று குரு நினைத்தார் போலும்.  இம்மாதிரி மறக்கமுடியாத பாடங்களைக் கற்பிக்கும் குருவை நான் வேறெங்கு கண்டடைவேன்?

அந்நாட்களில் நான் இன்டர்மீடியட் வகுப்பிற்கு தர்க்கமும், இளங்கலை மாணவர்களுக்கு காண்டின் (Kant) தத்துவமும், முதுகலை மாணவர்களுக்கு எஃப்.ஹெச்.ப்ராட்லியும் கற்பித்தேன்.  நான் நடத்த வேண்டிய பாடப்பகுதிகளை என்னைப் படிக்கச் செய்து அவற்றில் பல கேள்விகளைக் கேட்பார் குரு.  இது அப்பாடங்களில் எனது ஆர்வத்தை மேலும் வளர்த்தது.  குருவுடன் விவாதம் முடிந்தபின்னர், உடனே, அப்புதிய பாடங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பொறுமையின்றித் தவிப்பேன்.

குருவுடன் படித்தவர் ஒருவர் பேராசிரியராக இருந்தார்.  அவர், குரு விவேகானந்தா கல்லூரிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். குரு மாநிலக் கல்லூரியில் படித்தபோது G.D.G.D. (“Get Drunk and Go to the Dogs”) Club என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை தான் தொடங்கியது பற்றி என்னிடம் கூறியிருந்தார்.  எனது மூத்த பேராசிரியரும் அதில் ஒரு உறுப்பினர்.  குரு ‘அண்ணா’ என்றழைத்த அப்பேராசிரியர் மூலமாக தன்னுடன் படித்தவர்களை எல்லாம் குரு கண்டுபிடித்தார்.  சென்னையில் மூத்த வக்கீலாக இருந்த திரு கோபாலசுவாமி, சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியின் முதல்வராக இருந்த  திரு டி.பி. சந்தானகிருஷ்ணன நாயுடு ஆகியோர் அதில் அடங்குவர்.  அவர்களையெல்லாம் குரு அவ்வப்போது சிறு கூட்டங்களுக்கு அழைப்பார்.  கூட்டம் டாக்டர் தியாகுவின் வீட்டிலோ எனது அறையிலோ நடைபெறும்.  குருவின் மாணவப் பருவக் கதைகள் பலவற்றையும் நாராயண குரு அவரைப் பார்க்க வந்த நிகழ்ச்சிகளையும் அறிய இந்தக் கூட்டங்கள் எனக்குப் பெரிதும் உதவின.

ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சித்தேஶ்வரானந்தாவும் சுவாமி சித்பவானந்தாவும் மாணவப் பருவத்தில் குருவின் நெருங்கிய தோழர்களாக இருந்தவர்கள்.  இவ்விரு துறவியரும் நாராயண குருவின் பக்தர்கள்.  ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டதிலிருந்தே குரு அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார்.  குருவும் நானும் அம்மடத்திற்குச் சென்றோம்.  சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் வசிக்கத் தேவையான நிதியைத் திரட்டியவர்கள் பெயரையெல்லாம் குரு எனக்குச் சொன்னார்.  தன் பன்னிரண்டு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ முகவரி தனக்கு மனப்பாடம் என்றார் குரு.  இதுபோல் பலவிதங்களில் ராமகிருஷ்ண மடத்துடன் நெருக்கமாக இருந்தபோதும், அம்மடத்தில் இருந்த சாதிப் பாகுபாடுகள் அதற்கு ஒருவிதமான மேட்டிமை உணர்வை அளிப்பதாக நடராஜ குரு எண்ணினார்.  மடத்தை அவர் அணுகிய விதம் எனக்குப் புரிய ஆரம்பித்தபோது, நான் வெகு நாட்கள் அங்கு இருக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரிந்தது.

நடராஜ குருவும் நானும் – 5

Standard

அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார்.  ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர்.  ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும்.  ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன்.  ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார்.  ஜானுக்கும் குருவுக்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதல்கள் எங்களுக்கு வரமாகவே அமைந்தன.  அவ்வாறில்லையென்றால், எங்களிடையே அவ்வளவு ஆழமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.  குரு சொல்லத்தயங்கும் உன்னத ஞான வாக்குகளை அவரிடமிருந்து வரவழைப்பதில் ஜானுக்கு இருந்த திறமை எப்போதும் என்னை வியப்பிலாழ்த்தும்.  மாதம் தவறாமல் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை குருவுக்கு உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ‘வால்யூஸ்’ மாத இதழைத் தொடங்கி தொடர்ந்து நடத்தினார் ஜான். அவ்விதழில் பதினெட்டு வருடங்கள் குரு எழுதியவை இன்று நம் முன்னே பெரும் ஞானக் களஞ்சியமாக உள்ளன.

நல்ல வேளையாக நடராஜ குருவுக்கு பன்னிரண்டு சீடர்களில்லை.  ஆயினும், அவர் தேர்ந்தெடுத்த மூவரும் வெவ்வேறு வகையானவர்கள்.  மங்களானந்தா சுவாமி அச்சு அசலாக ஒரு இந்திய குருவின் இந்திய சீடர்; முழு முற்றாக தன்னை குருவுக்கு அர்ப்பணம் செய்துகொண்டவர்;  குரு சொல்வதை இம்மி பிசகாமல் பின்பற்றுபவர்.  இன்னொரு புறம் ஜான் ஸ்பியர்ஸ் – எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பவராக, கருத்துக்களை மறுப்பவராக, ஆணைகளைத் திருத்துபவராக.  ஒரு பெரிய நாடகத்திற்குப் பிறகே பிரச்சினை தீரும்.  மழுப்பலாக இருந்துவிடுவதே என் தந்திரம்.  பின்னணியில் மறைந்துகொண்டு, இயற்கை எனக்கு வாரி வழங்கியிருந்த தற்காப்பு முறைகளை எல்லாம் பயன்படுத்துவது என் வழி.  நான் தொட்டாற்சுருங்கி என்பது குருவுக்குத் தெரியும்.  எனவே, பொதுவில் என்னைச் சீண்டுவதைப் பொதுவாகத் தவிர்த்துவிடுவார்.

பொதுமக்கள் எனக்கு எதிராக இருந்தால், குரு என் பக்கமே நிற்பார்.  சிவகிரி உயர்நிலைப் பள்ளி குருகுலத்திற்கு எதிரில் இருக்கிறது.  மதிய இடைவேளையில் பெரும்பாலான மாணவியர் குருகுலத்திற்கு வந்து என்னைச் சூழ்ந்து அமர்ந்து கதை கேட்பது வழக்கம்.  மாணவியரைச் சுற்றி மாணவர்களும் அமர்வார்கள்.  அவர்களில் சிலர் கதையும் கேட்பார்கள்.  ஒன்றிரண்டு மாணவிகள் தேவைக்கு அதிகமாக நெருக்கமாக அமர்ந்து பிறரை பொறாமை அடையச் செய்வர்.  எப்படியோ, சிவகிரி பள்ளியின் ஆசிரியர்கள் ஒரு மாணவிக்கும் எனக்கும் தொடர்பிருப்பதாகக் கதைகட்டிவிட்டார்கள்.  இதன்பின் பள்ளி மாணவியர் குருகுலம் பக்கமே வராமல் தடுக்கப்பட்டனர்.  இது என்னை அவமானத்திற்குள்ளாக்கியது. குருவுக்கு இது தெரிந்தபோது, என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்.  மாணவியர் குருகுலத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதற்கு நாங்கள் எந்த விதத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டோம் என்று நிரூபிக்கும்படி தலைமையாசிரியருக்கு சவால் விடுத்தார்.  குரு தலைமையாசிரிடம் கத்திக்கொண்டிருக்கும்போதே எல்லா ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் அங்கு குழுமிவிட்டனர்.  வம்பிற்கு ஆளான அந்த மாணவியும் அதிலிருந்தாள்.  அவளை தன்னை நோக்கி இழுத்து, “உனக்கு இவன் மேல் காதலா? எதுவாயிருந்தாலும் அதை எல்லாருக்கும் தெரியும்படி சொல்!” என்றார்.  தைரியமான அந்தப் பெண், மற்றவர்களைப் போல தானும் குருகுலத்தின் அழகான சூழலை விரும்பியே அங்கு சென்றதாகவும், பொறாமை கொண்ட ஒரு ஆசிரியர்தான் அந்தக் கதையைக் கட்டிவிட்டவர் என்றும் சொன்னாள்.  (இரண்டு மாதங்களுக்குப் பிறகு அப்பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.)  குருவின் துணிச்சலான இந்த நடவடிக்கையையும் முழு ஆதரவையும் கண்ட தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் திகைத்துப் போயினர்.  பின்னர் அவர்கள் குருகுலத்திற்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்லத் துணியவில்லை.  தனி மனிதர்களை மட்டுமல்ல, குழுக்களையும் ஒழுங்குபடுத்துவது குருவுக்கு கைவந்த கலை.

மாநாடு முடிந்தபின் குரு ஊட்டிக்குத் திரும்பினார்.  மங்களானந்தா சுவாமி தொடர்ந்து பயணத்தில் இருந்தார்.  ஆகவே, வர்க்கலையில் ஜி.என்.தாஸுடன் தனியாக இருக்கவேண்டி வந்தது.   எப்போதும் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார் அவர். பெரும் உற்சாகத்துடன் இருப்பவர் திடீரென்று சோர்ந்து போவார்.  தென்னிந்தியக் கோயில்கள் பற்றி நாராயண குரு அறிந்திருந்தவற்றைப் படித்தபின் சுற்றியலையும் ஆர்வம் என்னுள் மீண்டும் தோன்றியது.  பழையபடி யாசகனாகி ஒவ்வொரு கோயில் நகராக அலைந்தேன்.

கடைசியில் சென்னைக்குச் சென்றேன்.  அங்கு உணவும் படுக்க இடமும் கிடைப்பது அரிது.  இரவில் நடைபாதைகளில் உறங்கினேன்.  உணவில்லாமல் இறக்கப் போகிறோம் என்று தோன்றியது.  ஒரு நாள் காலை நல்ல பசியுடன், தெம்பில்லாமல் குறிக்கோளின்றி நகரில் சுற்றியலைந்தேன்.  ஒரு சிலையைப் பார்த்து அது விவேகானந்தருடையது என்றெண்ணி அருகில் சென்றால், அது வேறு மனிதருடையதாக இருந்தது.  சோர்ந்து போய் சுற்றிலும் பார்த்தபோது பெரிய எழுத்துக்களில் “விவேகானந்தா கல்லூரி” கண்ணில் பட்டது.  அதில் ஏன் நாம் ஆசிரியராகக் கூடாது? என்று தோன்றியது.  யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பின்னாலிருந்து யாரோ அழைத்தார்கள்.  அழைத்தது ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி.  அவர் நான் யாரென்றறிவதில் ஆர்வமாயிருந்தார்.  பொய் கலவாமல், நான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றேன்.  நான் அவதியுற்றிருப்பதை சுவாமி எளிதில் கண்டுகொண்டார்.  ஒரு புறம் நல்ல பசி.  அதே சமயம் கழிவறை செல்ல வேண்டிய அவசரம்.  என்னிடம் அழுக்கான ஒரு வேட்டியும் துண்டும் மட்டுமே இருந்தன. சுவாமி என்னை வலிய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, சுத்தமான துண்டு, எண்ணெய், சோப்பு, கொஞ்சம் பற்பொடி எல்லாம் தந்தார்.  கழிவறையையும், குளியலறையையும் காண்பித்து நான் குளித்து, துணி துவைத்த பின்பு உடுக்க வெள்ளை வேட்டியும் துண்டும் கொடுத்தார்.  கடவுளிடமிருந்து சுவாமியிடம் அடைக்கலமானேன்.  மைசூரிலிருந்து என்னை கேரளத்திற்கு அனுப்பிய சுவாமி விமலானந்தரைப் போலவே, இவரும் என்னை வர்க்கலைக்குத் திரும்பிச் செல்லத் தூண்டினார்.  திருவல்லவாழில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் நான் சேரலாம் என்று கூறினார்.  சிரமம் பாராது என்னுடன் ரயில்நிலையத்திற்கு வந்து வர்க்கலைக்குப் பயணச்சீட்டு வாங்கித்தந்து என்னை ரயிலேற்றினார்.

நான் குருகுலத்திற்குத் திரும்பியபோது குரு அங்கிருந்தார்.  பிரார்த்தனை முடிந்த பின்னர் தன் இரவுணவான கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தார்.  அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் குருகுலத்தை விட்டுச் சென்று யாசகனாய் அலைந்ததற்கு என்னிடம் கோபம் கொள்வார் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால், நான் எங்கு போனேன் என்றெல்லாம் கேட்காமல், இன்னொரு பாத்திரத்தில் கஞ்சி கொண்டுவரும்படி தாஸிடம் கூறினார்.  நான் குருகுலத்திற்கு முதன்முறை வந்தபோது குரு சொன்னது என் நினைவுக்கு வந்தது.  கற்றலைப் பொறுத்தவரை அவர் குரு நான் மாணவன்; சமூக தளத்தில் அவர் சுதந்திரமானவர்; எனக்கு எதையும் செய்யக் கடன்பட்டவர் அல்ல; அதே போல் நானும் சுதந்திரமானவன் என்று அப்போதே கூறியிருந்தார்.  சுதந்திரம் என்று அவர் சொன்னதென்ன என்பதை அன்றிரவு நான் உணர்ந்தேன்.  எடுத்த எடுப்பில், நாராயண குருவின் சுப்ரமணிய கீர்த்தனையில் தான் கண்டடைந்த நுணுக்கங்களைப் பற்றிய தத்துவ விவரிப்பில் இறங்கிவிட்டார்.  நான் குருகுலத்தை விட்டுச் சென்றதைப்பற்றி குரு எதுவும் கேட்காதது எனக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.

நேர்காணல் – 1

Standard

31.12.95

காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.  நாற்காலியில் அமர்ந்து கால்களை திண்டுமீது வைத்துக் கொள்கிறார்.  அருகில் சோபாவில் நான், குப்புசாமி (ஆர்.கே.), எதிரே கோபால் (சூத்ரதாரி).

 

உங்கள் தந்தையைப் பற்றிக் கூறுங்கள்!

அப்பா இளம் வயதிலேயே என் மனதைப் பெரிதும் கவர்ந்த ஆளுமையாக இருந்தார்.  தினம் என்னை நடக்க அழைத்துச் செல்வார்.  மலர்களையும் பறவைகளையும் கூழாங்கற்களையும் காட்டி ரசிக்கக் கற்றுத் தருவார்.  இளம் வயதில் அவர் ஊட்டிய இயற்கை ஈடுபாடே அவர் எனக்குத் தந்த சொத்து.  அப்பா அவர் எழுதுவதை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்.  சாக்ரடீஸ், கதே, தோரோ, பேகன், ஆதிசங்கரர், விவேகானந்தர் முதலிய பெயர்களெல்லாம் மிக இளம் வயதிலேயே எங்கள் வீட்டில் அன்றாடப் புழக்கத்தில் இருந்தன.  என் அத்தைக்கு கவிதையில் மிகுந்த ஈடுபாடு.  வள்ளத்தோள், உள்ளூர் முதலிய புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவளுக்குக் கடிதத் தொடர்பு உண்டு.  கவிஞர்களிடமிருந்து கடிதங்கள் வருவது எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி.

சிறுவயதில் உங்களை அதிகம் பாதித்த சம்பவங்கள் எவை?

என் வாழ்க்கையை நிர்ணயித்தவை என நான் கருதும் இரு சம்பவங்கள் என் இளமைக் காலத்தில் நடந்தன.  எங்களூரில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார்.  என் தந்தை அன்று அவ்வியக்கத்தின் தீவிர ஊழியர்.  தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டருகே நடந்தது.  அப்பா என்னை ஒரு மேஜைமீது ஏற்றி, பேசும்படி கூறினார்.  நான் மனப்பாடம் செய்திருந்த நாராயண குருவின் உபதேச மொழிகளை ஒப்பித்தேன்.  காந்திஜி பகவத் கீதையை என்னிடம் தந்து படிக்கும்படி கூறினார்.  சில சுலோகங்களை நான் படித்தேன்.  கீதையை புன்னகையுடன் நீட்டிய காந்திஜியின் முகம் வெகுகாலம் எனக்கு உத்வேகமூட்டிய நினைவாக இருந்தது.  இன்றும் அழியாமலிருக்கிறது.

மற்றொரு சம்பவம் நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது.  பழைய பத்திரிகையொன்றில் ஒரு மனிதரின் அழகிய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது.  அவருடைய மேனாட்டு உடையும், புன்னகையும் என்னைக் கவர்ந்திருக்கலாம்.  அதை வெட்டி என் பாடநூலில் வைத்துக் கொண்டேன்.  பல வருடங்கள் அது என்னிடம் இருந்தது.  அது நடராஜ குரு பாரீஸில் இருந்தபோது எடுத்துக்கொண்ட படம்.  பின்னர் நான் நடராஜ குருவை என் ஆதர்ச புருஷராகவும் வழிகாட்டியாகவும் கொள்ள அதுவும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

எப்போது துறவு பூண்டீர்கள்?

துறவியாக வேண்டும் என்ற எண்ணம் என் பதினைந்தாவது வயதில் உறுதியாக ஏற்பட்டது.  மிக இளம் வயதிலேயே நான் தனிமை விரும்பியாக இருந்தேன்.  காடும் மலைகளும் சூழ்ந்த ஊர் பந்தளம்.  இரவும் பகலும் சுற்றியலைவது என் வழக்கம்.  துறவு என்பது சுதந்திரம் என நான் அறிந்திருந்தேன்.  மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வந்ததும் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன்.  பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  நான் உங்களுக்குப் பயனுள்ளவனாக, மகனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருக்கமாட்டேன்; எனவே உங்கள் செலவில் மேற்கொண்டு படிக்கவோ, உங்கள் பரம்பரைச் சொத்தில் பங்குபெறவோ விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தேன்.  கொல்லம் வழியாக மதுரைவரை பயணம் செய்ய மட்டுமே என்னிடம் பணம் இருந்தது.  டிக்கெட் எடுக்காமல் நான் பயணம் செய்வதில்லை.  எனவே மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.  இடுப்பில் ஒன்றும் தோளில் ஒன்றுமாக இரு அரை வேட்டிகளே என் உடைமை.  இத்தகைய கட்டங்களில் என் வாழ்வை நான் முற்றாக நியதியின் கரங்களில் விட்டுவிடுவதுண்டு.  பின்னர் இதுபோல் உலகின் பல்வேறு மூலைகளில் அமர்ந்திருக்கிறேன்.  அன்று ஒரு ரயில்வே போலீஸ்காரர் எனக்கு சோழவந்தான் வரை டிக்கெட் எடுத்துத் தந்தார்.  அங்கிருந்து ஒரு டிக்கெட் பரிசோதகர் கோவைக்கு டிக்கெட் எடுத்துத் தந்தார்.  பின் ஊட்டிக்கு ஒரு வியாபாரி அழைத்துச் சென்றார்.  இவர்கள் அனைவருமே நான் அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரவேண்டாமென்றும், ஊர் திரும்புமாறும் அறிவுறுத்தினர்.  ஆனால் எனக்கு சஞ்சலமே இல்லை.  விடுதலையுணர்வு என்னைக் களிப்பில் ஆழ்த்தியிருந்தது.  அப்போது நடராஜ குரு ஊட்டியில் இல்லை.  எனவே நான் ஊர் ஊராக அலைய ஆரம்பித்தேன்.

உங்கள் படிப்பு என்ன ஆயிற்று?

ஒரு முறை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.  அப்போது ஒரு பாதிரியார் என்னைப் பற்றி விசாரித்தார்.  தன்னுடன் வரும்படி அழைத்தார்.  நான் மதம் மாற மாட்டேன் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடேன்.  அவர் பரவாயில்லை என்றார்.  அவருடன் ஆல்வாய் சென்றேன்.  தன் மகனின் பழைய உடைகளை எனக்குத் தந்தார்.  என் சான்றிதழ்கள் ஊரில் ஒரு நண்பனிடம் இருந்தன.  அவற்றை வரவழைத்து பணம் கட்டி என்னை எஃப்.ஏ. படிப்பிற்குச் சேர்த்தார்.  எவ்வித நோக்கமும் இன்றி என்மீது பேரன்பு காட்டினார்.  எனக்கு மாதம் நாற்பது ரூபாய் உதவிப்பணம் கிடைத்தது.  செலவுபோக மீதமும் வரும்.  திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன்.  அன்று புராதன தத்துவம், தருக்கம், ஒழுக்கவியல் முதலியவை பாடங்கள்.  உளவியல் அப்போது தத்துவத்தின் ஒரு பிரிவு.  நடராஜ குருவுடன் தொடர்பு வைத்திருந்தேன்.  ஆனால் அவர் தொடர்ந்து பயணத்திலிருந்தார்.

நடராஜ குருவுடன் உறவு வலுப்பட்டது எப்படி?

1952-இல் நான் படிப்பை முடித்ததுமே கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியில் என்னை வேலைக்கு அழைத்தார்கள்.  அங்கு உளவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.  படிப்பே என் வாழ்க்கையாக இருந்தது.  நடராஜ குரு ஒருமுறை கொல்லம் வந்தார்.  விழாக்குழு என்னை அவருக்கு உதவியாளராக நியமித்திருந்தது.  டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, ஒரு பிரிட்டிஷ் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த பகவத்கீதை உரை அன்று மிகவும் பிரசித்தம்.  அதை ஒரு பந்தாவிற்காக என் கையில் வைத்திருந்தேன்.  நடராஜ குரு நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது அந்த நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார்.  பிறகு சன்னல் வழியாகத் தூக்கி வீசி எறிந்துவிட்டார்.  நான் பதறியவாறு காரை நிறுத்தும்படி கத்தினேன்.  ஓடிப்போய் நூலை எடுத்துக்கொண்டு குருவிடம் கோபப்பட்டேன்.  தத்துவ மேதையொருவரின் நூலைத் தூக்கிவீச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டேன்.  குரு அதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டிப் படிக்கும்படி கூறினார்.  அதில் ராதாகிருஷ்ணன் கீதை ஒரு மத நூல் என்று கூறியிருந்தார்.  குரு என்னிடம் “மூன்று பேரமைப்புகள் எவை?” என்று கேட்டார்.  “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன்.  “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று.  எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்?” என்று கேட்டார் குரு.  தொடர்ந்து மதம் என்றால் என்ன, தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள இணக்கமும் பிணக்கமும் எவையெவை என்று விளக்கமாகச் சொன்னார்.  அந்த அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்தது.  ஆயினும் வீறாப்பாக “ராதாகிருஷ்ணன் சும்மா அப்படி எழுதமாட்டார்.  தகுந்த காரணங்கள் இருக்கும்” என்றேன்.  குரு சிரித்தார்.  என் கோபம் அவருக்குத் திருப்தி தந்ததாகச் சொன்னார்.  அவருடைய படிப்போ துறவி என்னும் கெளரவமோ அவருடன் மாறுபட்டு விவாதிப்பதற்கு எனக்குத் தடையாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்றார்.  சிந்தனைத் துறையில் தாழ்வுணர்ச்சியே மிக அபாயகரமானது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை அவருடைய புகழையும் பதவியையும் பொருட்படுத்தாமல் நான் ஆராயவேண்டும் என்றும் கூறினார்.  அவர் நூலை விட்டெறிந்தது என் மனதைப் புண்படுத்தியதைச் சொன்னேன்.  தானும் புத்தகங்களை நேசிப்பவன் என்றும் ஆனால் புத்தகங்கள் மீது பக்தி கொள்வதில்லை என்றும் சொன்னார்.  உள்நோக்கத்துடனும், கவனமின்றியும் எழுதப்படும் நூல்கள் மிக ஆபத்தானவை; அச்சேற்றப்பட்டதனாலேயே அவற்றை மதிப்பது தவறு என்று விளக்கினார்.

1956-இல் நான் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலை பார்த்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்திக்க நேர்ந்தது…

அதற்குமுன் ஒரு கேள்வி.  நீங்கள் அங்கு பணியில் அமர என்ன காரணம்?  பேராசிரியர் வேலையை விரும்பினீர்களா?

இல்லை.  கொல்லத்தில் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிலநாட்கள் நடராஜ குருவுடன் இருந்தேன்.  துறவியானது அப்போதுதான்.  பிறகு சுற்றியலைய ஆரம்பித்தேன்.  பொது இடங்களில் பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் போன்றவர்களுடன் தங்குவேன்.  சென்னையில் ஒரு கடைத்திண்ணையில் இரவு தங்கினேன்.  மழை. நல்ல குளிர்.  உடைகள் போதுமான அளவு இல்லை.  குளிருக்காக தெருநாய்களை ஒண்டிப் படுப்பது வழக்கம்.  அவை கதகதப்பாக இருக்கும்.  அவ்வழியாக கோயிலுக்குச் சென்ற மயிலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் என்னை அழைத்து விசாரித்தார்.  என் படிப்பு பற்றி அறிந்ததும் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரியும்படி கூறினார்.  எனக்கு விருப்பமில்லை.  ஆனால் நவீன காலத்தின் அறிவுத் துறைகளுடன் உரிய அறிமுகம் துறவிக்கு இருந்தே ஆகவேண்டும் என்றும், நான் முறைப்படி கற்கவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றும் சொன்னார்.  நான் உடன்பட்டேன்.  கொல்லம் கல்லூரியிலிருந்து என் சான்றிதழ்களை வரவழைத்து வேலை போட்டுத் தந்தார்.  ராமகிருஷ்ண மடத்தின் நூலகத்தை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன்.

டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது எப்போது?

1956-இல் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார்.  தத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.  என் மாணவர்களுடன் நானும் சென்றிருந்தேன்.  அங்கு அவருடன் நடந்த உரையாடலில் கீதையை அவர் மத நூல் என்று குறிப்பிட்டது ஏன் என்று கேட்டேன்.  ராதாகிருஷ்ணன் சிரித்தபடி “பிரசுரகர்த்தர் மிகவும் அவசரப்படுத்தினார்.  அவசரமாக எழுதிய நூல் அது.  அதை நான் மீண்டும் சரிபார்க்க வேண்டும்” என்றார்.  பிறகு என் மாணவர்களிடம் திரும்பி, “உங்கள் ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்ளுங்கள்.  யார் கூறினாலும் ஆராயாமல் அதை ஏற்கலாகாது” என்றார்.  மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை.  அப்போது உடனிருந்த பி.கே.ராவ் என்பவர் பெங்களூரிலிருந்து வெளிவந்த தத்துவ இதழொன்றில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நழுவாமல் பதிலளிக்கவேண்டும் என்று கண்டித்திருந்தார்.  இந்தச் சம்பவம் சென்னையிலுள்ள பிராமணப் பிரமுகர்களைக் கோபமடையச் செய்தது.  அக்கோபத்திற்குக் காரணம் இதற்கு ஒரு வருடம் முன்பு பெரியார் கூட்டிய மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டதும், எங்களுக்குள் பரஸ்பரம் இருந்த நல்லெண்ணமும்தான்.  அவர்கள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  கல்கத்தாவிற்கு புகார் அனுப்பப்பட்டது.  அங்கிருந்த ஒரு துறவி வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்.  பிறகு என் தரப்பே சரியானது என்றும் என்னுடன் முற்றிலும் உடன்படுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  ஆனால் மயிலை மடத்தின் புரவலர்களாக இப்பிராமணப் பிரமுகர்களே இருந்தனர்.  அவர்களைப் பகைத்துக் கொள்ள நிர்வாகத்தால் முடியவில்லை.  விடுமுறை எடுத்தது சம்பந்தமாக எனக்கு மெமோ தந்தார்கள்.  ராஜினாமா செய்துவிட்டு ஊட்டிக்குப் போய்விட்டேன்.  டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனக்குறைவாக எழுதவில்லை என்பது இன்று உறுதியாகத் தெரிகிறது.  பழைய நூல்களின் உள் முரண்களைத் தவிர்த்து பொது அம்சங்களை மட்டும் தொகுத்து அவற்றின் அடிப்படையில் (இந்து) மதத் தத்துவம் ஒன்றை உருவாக்கவே அவர் முயன்றார்.  நேரடி விவாதங்களுக்குப் பதிலாக நழுவும் உத்திகளே அவருடைய வழிமுறைகளாக இருந்தன.  அவை பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளன.  இன்று அவருடைய எதிர்தரப்பினர்கூட இந்தியச் சிந்தனை என்பது (இந்து) மதச் சிந்தனையே என்று நம்புகிறார்கள்.  நடராஜ குரு நடந்துகொண்ட முறை எனக்கு இப்போது புரிகிறது.  பிறகு நாற்பது வருடம் நான் ஆற்றிய பணிகள் குருவின் இச்செயலில் இருந்த மறைமுக உத்தரவை நிறைவேற்ற முயன்றதன் விளைவே என்று கூறலாம்.

பம்பாயில் ஆய்வு மாணவராக இருந்தீர்களல்லவா?

ஆம்.  சில வருடங்கள் குருவுடன் ஊட்டியில் தங்கினேன்.  தொடர்ந்து கற்ற நாட்கள் அவை.  குரு என்னை ஐந்துமணிக்கு வந்து கதவைத் தட்டச் சொல்வார்.  பழைய பெஞ்சுமீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.  நான் பென்சில் தாளுடன் இருப்பேன்.  சரளமாகச் சொல்லிக்கொண்டே போவார்.  பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன்.  ஒவ்வொரு துறையிலும் அத்துறையின் முறைமை சார்ந்த கல்வி குருவிற்கு இருந்தது.  அது அவர் பெர்க்ஸனிடம் பெற்ற பயிற்சி.  முறைமையில்லாத மனப் பாய்ச்சல்களை அவர் ஏற்பதில்லை.  பிறகு நாங்கள் நடக்கச் செல்வோம்.  சமைப்போம்.  நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு!  விரும்பிச் சாப்பிடுவார்.  ஆனால் எங்களிடம் பணம் குறைவு.  பலசமயம் பட்டினி கிடப்போம்.  பணத்துடன் யாரேனும் வரும்வரை பேசியபடி இருப்போம்.

ஒருநாள் சார்லஸ் கிங்ஸ்லியின் நூல் ஒன்றில் ஃபிலாமின் எனும் கதாபாத்திரம் தன் குருவைவிட்டுப் பிரிந்து செல்லும் இடத்தைப் படித்தேன்.  எனக்கு உடனே கிளம்பிவிட வேண்டும் என்றுபட்டது.  குருவிடம் கூறினேன்.  “எங்கே போக உத்தேசம்?” என்றார்.  “பம்பாய்” என்றேன்.  பம்பாய்க்கு ரயில் கட்டணம் ஐம்பது ரூபாய்.  அவர் ஐம்பது ரூபாய் தந்தார்.  பிறகு ஒரு ஐந்து ரூபாய்.  விடைபெறும்போது ஒரு ரூபாய்.  பம்பாயில் என் நண்பர் தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.  ஒரே அறை உள்ள வீடு.  அதிலேயே சமையல், குளியல், படுக்கை.  இரவில் கால்களை வெளிவராண்டாவில் நீட்டியபடிதான் தூங்குவார்.  ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்.  எனக்கு செருப்பு வாங்கித் தந்தார்.  பகலில் அருகேயுள்ள மடத்திற்குப் போவேன்.  அங்கு துறவிகளுக்கு உணவும், ஒரு அணாவும் தருவார்கள்.  ஒருமுறை வெளியேவந்து பார்த்தபோது என் செருப்பு தொலைந்துவிட்டது.  நண்பரை எண்ணி மனம் கலங்கினேன்.  ஒரு பணக்கார வியாபாரி தன் செருப்புகளைத் தர முன்வந்தார்.  நான் விளையாட்டாக ‘இன்னொருவர் ஷுவிற்குள் கால் நுழைப்பது’ என்றால் என்ன தெரியுமா என்று கேட்டேன்.  நான் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு அவருக்கு வியப்பு.  என்னை அவருடன் தங்க வைத்தார்.  படிக்க ஏற்பாடு செய்து தந்தார்.  டாடா இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.  பார்வையற்றோரின் உளவியல் பற்றி மூன்று வருடம் ஆய்வு செய்தேன்.  மகத்தான அனுபவம் அது.

பார்வையற்றோரின் உலகம் வித்தியாசமானது அல்லவா?

தவறான புரிதல் இது.  அதை உணர நேர்ந்ததையே நான் மகத்தான அனுபவம் என்றேன்.  உலகை நாம் புலன்களால் அறிவதில்லை.  மனதால்தான் அறிகிறோம்.  உதாரணமாக நான் ஓர் இளைஞனை பேட்டி கண்டேன்.  அவன் தன் எதிர்கால மனைவி பற்றிச் சொன்னான்.  முதல் தகுதி அழகு.  ஆம்; உடலழகுதான்.  எப்படி அவன் அழகை அறிகிறான்?  அவன் தன் மீதி நான்கு புலன்களால் பெண்களின் அழகை அறிகிறான்.  மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது.  எப்படி?  நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என அவன் அறிவதில்லையே, அதுபோல நாமும் அறியமுடியாது.  நாம் அவர்களை வேறுவகையான மனம் உடையவர்களாக எண்ணுவது மிகவும் தவறானது.

எப்படி நாராயண குருகுலத்தின் தலைவர் ஆனீர்கள்?

1980-இல் குரு இறப்பதற்கு முன் ஒருநாள் என்னை அழைத்தார்.  என்னிடம் குருகுலத்தின் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொன்னார்.  சுதந்திரம் தடைபடலாகாது என்று என் பரம்பரைப் பெரும் சொத்தை உதறியவன் நான்.  மறுத்துவிட்டேன்.  பிறகு ஒருநாள் குரு என்னிடம் ஒரு பேனாவைத் தந்தார்.  சில நாள் கழித்து அதை திரும்பக் கேட்டார்.  திரும்ப வாங்கியதும் சிரித்தபடி, “இதைப் போல குருகுலத்தை உன்னிடம் தற்காலிகமாக ஒப்படைக்கிறேன்” என்றார்.  என்னால் மறுக்க முடியவில்லை.  என் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றுவது என் வழக்கம்.  குருவின் உத்தரவுகள் அனைத்தையும் நான் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.  இறுக்கமற்ற நடைமுறை கொண்ட ஒரு ஞானத்தேடலுக்கான அமைப்பாகவே இக்குருகுலத்தை குரு உருவகித்திருந்தார்.  அப்படியே இன்றுவரை தொடர்கிறது.  பல உலகநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.  ‘ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிடி’ என்ற அமைப்பு பிரம்ம ஞானம் பெற விரும்புகிறவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கிறது.  ஆய்வு நூலகங்கள் பல செயல்படுகின்றன.  இச்செயல்களுக்கப்பால் என் வாழ்க்கை ஒரு தேடலாகவும் அழகனுபவமாகவும் உள்ளது.

(1995-96-இல் ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி ஆகியோர் பதிவு செய்த நித்ய சைதன்ய யதியுடனான நேர்காணல்)

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

Standard

குருகுலம் வெளியிட்டு வந்த இதழில் ‘பாலர் உலகம்’ என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தேன்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் பலவகைப்பட்ட ஊர்களுக்கும் சென்று சிறுவர் குழுக்களை ஒழுங்கமைத்தேன்.  ஒவ்வொரு குழுவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் குழந்தைகளுடன் தொடர்பை விடாமல் இருந்தேன்.

1954 வாக்கில் என்னோடு தொடர்பு வைத்திருந்த சிலர் இன்னும் என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுடைய வளர்ச்சி, கல்வி, திருமணம், பணி, பிறகு அவர்களின் குழந்தைகள் என்று எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.  நான் என்னுடைய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கவில்லை என்றாலுங்கூட குருகுலத்துடன் என்னால் தொடர்பு கொண்ட குடும்பங்கள் எனக்கு ஒரு வகையான ஒருமை உணர்வைக் கொடுத்தன.  அவர்கள் இப்போது உலகம் முழுக்க இருக்கிறார்கள்.  ஆரம்பத்தில் மனிதக்குடும்பம் என்பது ஒரு லட்சியக் கனவாகத்தான் இருந்தது.  இப்போது அது சாதிக்கப்பட்டுவிட்ட ஒரு நடைமுறையாக ஆகிவிட்டது.

நான் வர்க்கலையில் இருந்தபோது சிவகிரி உயர்நிலைப் பள்ளியிலிருந்து சிறுவர் சிறுமியர் பகல் உணவு இடைவேளையின்போது குருகுலத்துக்கு வந்து மாமரங்களின் நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பார்கள்.  திரும்ப பள்ளி மணி அடிக்கும் வரை அவர்களுக்கு செய்வதற்கு ஏதுமில்லாததால் நான் அவர்களுக்குக் கதைகள் சொல்ல ஆரம்பித்தேன்.

வெகு விரைவில் அது ஒரு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக மாறியது.  ஒவ்வொரு நாளும் அரைமணி நேரத்துக்கு குழந்தைகளை ஈர்க்கும் விதமாக ஒரு கதையை நான் சொல்லவேண்டியிருந்தது.  இதற்காக நான் க்ரிம் என்பவருடைய தேவதைக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இந்தியக் கதைகளின் தொகுப்பான கதா சரித சாகரா என்ற புத்தகத்தையும் விக்ரமாதித்தன் கதைகளையும், ஆயிரத்து ஒரு இரவு அராபியக் கதைகளையும் மகாபாரதம் மற்றும் உபநிடதங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில கதைகளையும் படித்தேன்.

கேரளாவின் அந்தப் பகுதியிலிருந்து உருவான சில மிகச் சிறந்த நாவலாசிரியர்களும் சிறுகதையாசிரியர்களும் சிவகிரி உயர்நிலைப் பள்ளியில் படித்து என்னிடம் தவறாமல் கதைகள் கேட்டு வந்ததாக பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் சொன்னார்கள்.  எந்த நோக்கமும் இல்லாமல் நான் தெளித்த விதைகள் வளமான மண்ணில் விழுந்து நல்ல விளைச்சலைத் தந்ததை அறிந்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.  ஒவ்வொரு மாதமும் குருகுல இதழில் சுவாரஸ்யமான கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிடவேண்டி இருந்ததால் எனக்கே அது ஒரு நல்ல கல்விப் பயிற்சியாக இருந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் என்மீது உண்டாக்கிய செல்வாக்காலும் இந்திய ஒழுக்கப்பண்பும் ஆன்மீகமும் ஏற்படுத்திய தாக்கத்தாலும் பிரம்மசர்யம் சன்னியாசிகளின் புனிதக் கட்டுப்பாடு என்று நான் கருதி வந்தேன்.  அதனாலேயே பெண்களுடன் பழகுவதைத் தவிர்த்துவிட்டு எப்போதும் குழந்தைகள் மத்தியில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

என்னுடைய நேர்மையையும். நோக்கத்தையும் சந்தேகிக்கும் விதமாக எழும் கற்பனையான ஆதாரமற்ற வம்புப் பேச்சுகூட என்னைப் பல நாட்களுக்கு வருத்தி நிம்மதி இழக்கச் செய்துவிடும்.  கழுவி, துடைக்க என்று பக்கத்துப் பகுதியிலிருந்து நான்கு பெண்கள் குருகுலத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு பெண்ணைப் பற்றி யாரோ ஒருவர் ஒரு கதையைக் கிளப்பினார்.  அம்மாதிரி விஷயங்களில் எளிதில் புண்பட்டுவிடும் உணர்ச்சி கொண்ட நான், குருகுலத்துக்கு அவர்களை வராமல் இருக்கச் செய்வதன் மூலம் சந்தேகத்துக்கு இடம் அளிக்காமல் இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ஊட்டியிலிருந்து வந்த நடராஜ குரு, குருகுலத்துக்கு பையன்கள் மட்டும் வந்துகொண்டிருப்பதையும், ஒரு பெண்கூட கண்ணில் படாததையும் பார்த்துவிட்டு, “ஏன் பெண்கள் வருவதில்லை?” என்று என்னைக் கேட்டார்.  பெண்கள் குருகுலத்துக்கு வருவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு பக்குவம் இல்லையென்றும் அதனால் பெண்கள் யாரும் குருகுலத்துக்கு வரக்கூடாது என்று தடை விதித்துள்ளேன் என்றும் அவரிடம் சொன்னேன்.

குரு சொன்னார், “மக்கள் தொகையில் பாதிப்பேர் பெண்கள்.  இங்கு வருவதற்கு ஆண்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அந்த அளவு பெண்களுக்கும் இருக்கிறது.”  பிறகு, நம் உடம்புக்கு என்ன நேர்கிறது என்பதைப் பற்றியோ, புத்தகங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியோ, பிறருடைய வம்புப் பேச்சு பற்றியோ பொருட்படுத்தவேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

வம்புப் பேச்சுக்கு ஆளான பெண்ணைக் கூட்டி வரச்சொன்னார்.  அந்தப் பெண்ணிடம் குரு சொன்னார், “இந்த உலகம் ஆண்கள் தங்கள் செளகரியத்துக்காக உருவாக்கிக்கொண்ட ஒன்று.  இந்த உலகத்தில் பெண்கள் பலவகையான ஒடுக்குமுறைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள்.”  ஒரு குரு என்ற முறையிலும், தந்தை ஸ்தானத்தில் இருந்ததாலும், அந்தப் பெண் தன்னுடைய கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நல்லதும் அழகானதுமான பொய்களைச் சொல்ல அவளுக்கு அனுமதி கொடுத்தார்.  “உண்மையைக் காதுகொடுத்துக் கேட்கவோ, அல்லது இயல்பான உறவுகளை மரியாதையுடன் பார்க்கவோ தைரியம் இல்லாத கோழைகளும் பூதங்களும்தான் ஆண்கள்.”

பொய்கள் சொல்ல பெண்களுக்கு உரிமை உண்டு என்று குரு சொன்னதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பிறகு குரு என்னிடம் சொன்னார், “இந்தப் பெண்கள் அவர்கள் குடும்பங்களுக்குப் போகும்போது மனைவிகளாகவோ அல்லது அம்மாக்களாகவோ இருக்கப் போகிறவர்கள்.  குடும்பம் என்பது பலவிதமான மனோபாவங்களும், மதிப்பீடுகளும் உடையவர்களால் ஆன ஒன்று.  குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே சிலர் சாதாரணத்தை மீறியும் சிலர் சாதாரணத்துக்குக் கீழுமாக இருப்பார்கள்.   குடும்ப இணக்கத்தைப் பேண மனைவியோ அல்லது அம்மாவோ பல பொய்களைச் சொல்ல வேண்டும்.   அதன் விளைவாக, கொடுங்கோன்மை நிரம்பிய ஒரு தந்தை தன் மகனையோ அல்லது மகளையோ கொல்வதும், சந்தேகம் கொண்ட ஒரு கணவன் குடும்பத்தை விட்டு வெளியேறுவதும் நிகழாமல் தடுக்கப்படலாம்.  கோபம், பொறாமை, பழிவாங்கல் ஆகியவற்றிலிருந்து குடும்ப உறுப்பினர்களை நீங்கியிருக்கச் செய்வது ஒரு அம்மா அல்லது மனைவியின் கடமை.”  ஒரு புத்திசாலியான பெண் சரியான முறையில் பயன்படுத்தும் ஒரு ஆக்கபூர்வமான பொய்யே குரு பரிந்துரைத்த தீர்வு.  இவ்வாறாக ஆண்களும் பெண்களும் கூடும் இடமாக குருகுலம் மீண்டும் மாறியது.

பாலியல் விவகாரங்களில் எனக்கிருந்த சமநிலையற்ற நோக்கைக் கண்டுகொள்ள இந்தச் சம்பவம் குருவுக்கு உதவியது.  குருவுடன் சேர்ந்து ஒரு வீட்டுக்குப் போனேன்.  அந்த வீட்டின் கூடத்தில் நிறையப் பெண்கள் இருந்தார்கள்.  குருவைப் பார்ப்பதற்காகவே முக்கியமாக அவர்கள் கூடியிருந்தார்கள்.  எனவே நான் தனியாக வெளியே உட்கார்ந்துவிட்டேன்.  நான் கூடத்திற்கு வராததை குரு கவனித்துவிட்டார்.  அவரே தாழ்வாரத்துக்கு வந்து என் கையைப் பிடித்து, அந்தப் பெண்கள் பகட்டாகச் சிரித்துக் கொண்டிருந்த அறைக்குள் இட்டுச் சென்றார்.  அவர்கள் ஒவ்வொருவராக தங்களுடைய பெயரைச் சொல்லி என்னிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார்.  அவர்களைத் தொடுவது எனக்கு பயத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது.  பெரும்பாலான கைகள் வியர்வையால் சில்லென்றிருந்ததை கவனித்தேன்.  அவர்களுடைய கண்களைப் பார்க்கும் அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை.  சிரிப்பலைகளும் தடுமாற்றமும் அங்கிருந்தன.

பிறகு குரு ஒரு நாற்காலியில் என்னை உட்காரச் சொல்லி அந்தப் பெண்களிடம் பேசச் சொன்னார்.  அவர்களில் சிலர் என்னருகே நெருங்கி வந்து உட்கார்ந்தார்கள்.  என்மீது அவர்களுக்கு ஈர்ப்பு உண்டாகியிருந்ததையும் கவனித்தேன்.  அவர்கள் பக்கம் திரும்பிய குரு, “அவன் இளைஞன்.  அவனை நம்பாதீர்கள்.  உங்களைக் கூட்டிக்கொண்டு ஓடினாலும் ஓடிவிடுவான்” என்று சொன்னார்.  அவர் சொன்னது மீண்டும் சிரிப்பை உண்டாக்கியது.  ஆனால் அப்படியான சங்கடமான நகைச்சுவைப் பேச்சுக்களை குரு பேசியது எனக்கு நயமற்றுத் தோன்றியது.

ராமகிருஷ்ணா மிஷனைச் சார்ந்த ஒரு சுவாமியைப் பற்றிய ஒரு கதையை குரு எனக்கு பிறகு சொன்னார்.  அந்த சுவாமி இளமையும் அழகும் நிரம்பியவராம்.  பெண்களை முற்றாகத் தவிர்த்து வாழ்ந்து வந்தவராம்.  அவர் ஒருமுறை பாரீசில் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது அவருடைய அழகால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் திடீரென்று அவரை அணைத்து முத்தமிட்டுவிட்டாளாம்.  அந்தச் சங்கடமும் அதிர்ச்சியும் சுவாமியால் தாங்கமுடியாததாக இருந்ததால் அவருக்கு அந்த இடத்தில் பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது.  அவரை பிறகு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்ததாம்.

பக்குவமில்லாத பிரம்மசரியம் வெடித்துவிடும் கொதிகலனைப் போல ஆகிவிடும் என்று அங்கிருந்த இளவயதினரை குரு எச்சரித்தார்.  இளவயதினர் எவ்வாறு தங்களுடைய பாலியல் உணர்ச்சிகளை தங்களுடைய அறவொழுக்கத்தை மீறாமலேயே வெளியிடலாம் என்பதை விளக்குவது அவருக்கு சிரமமாகவே இருந்தது.

இந்தச் சிக்கலான விஷயத்தை நான் பரிசீலிப்பதற்கு அது ஒரு தொடக்கமாக இருந்தது.  ஃப்ராய்டு மற்றும் ஹேவ்லாக் எல்லீஸ் ஆகியோரின் பாலியல் கோட்பாடுகளைக் கற்கச் சொல்லி குரு என்னை அறிவுறுத்தினார்.  அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லையென்றாலும் ஹேவ்லாக் எல்லீஸைப் படிக்கத் தொடங்கியபோது ஒவ்வொரு அத்தியாயமும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

என்னுடைய வளர் இளம் பருவத்திலும், இளமையிலும் இந்திய சமூகத்தின் மூலமாக நான் பெற்றதை இப்போது ஆராயும்போது பாலியல் ஒடுக்குமுறையைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு நோயுற்ற சமூகம் அது என்பதை நான் உணர்கிறேன்.  பாலியல் என்பது ஒருவகை தீட்டு என்று கருதப்பட்டதால் பாலியல் கல்வியே தரப்படவில்லை.  இயற்கையான உணர்ச்சிகளை நம் இளமைக்காலத்தின் மிக அழகான அனுபவங்களாக மாற்றி எப்படி அவற்றை உயர்வுபடுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர்களுக்கு அப்போது வழியே இல்லை.  கொஞசம் கொஞ்சமாக இந்த சிரமங்களைக் கடப்பதற்கு குரு எப்படி எனக்கு உதவினார் என்பதை நினைக்கும்போது வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பெரும் நன்றியுணர்வு என் நெஞ்சில் நிறைகிறது.

–    தமிழில் ஆர். சிவகுமார்

நடராஜ குருவும் நானும் – 4

Standard

நாராயண குருவுக்குப் பின் சிவகிரி மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருந்த சுவாமி போதானந்தருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது நடராஜ குருவுக்கு நாராயண குரு இட்ட கடைசி பணிகளில் ஒன்று.  ஆனால், நாராயண குருவின் மகாசமாதிக்குப் பின் மூன்றே நாட்களில் சுவாமி போதானந்தா மறைந்தார்.  அவரது இடத்திற்கு சுவாமி அச்யுதானந்தா வந்தார். இதெல்லாம் நிகழ்ந்தபோது நடராஜ குரு ஐரோப்பாவில் இருந்தார். ஐந்து வருடங்கள் அங்கிருந்த அவர், 1933-இல் வர்க்கலைக்குத் திரும்பினார்.  சிவகிரி உயர்நிலைப்பள்ளியில் அவரது பதவி வேறொருவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.  மடாதிபதியின் ஆலோசகர் என்ற வகையில் மட்டுமே சிவகிரி மடத்துடனான அவரது தொடர்பு இருந்தது.  ஆண்டுதோறும் மாநாடுகளும் அனைத்திந்திய பொருட்காட்சியும் நடத்துவதன் மூலம் ஆசிரமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்று நினைத்தார் நடராஜ குரு.  சுவாமி அச்யுதானந்தாவின் ஒப்புதலுடனும் ஒத்துழைப்புடனும் ஆறு மாதங்கள் அதற்காகக் கடுமையாக உழைத்தார்.  ஆனால் வழக்குப் போடுவதையே தொழிலாகக் கொண்ட சுவாமி தர்மதீர்த்தா, மாநாடும் பொருட்காட்சியும் நடத்தினால் ஆசிரமத்தின் அமைதி கெடும் என்றும், சன்னியாசிகளின் தியானத்திற்கு இடையூறு ஏற்படும் என்றும் கூறி, ஆற்றிங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அதற்கு ஒரு தடையுத்தரவு பெற்றார்.  இதனால் நடராஜ குரு திட்டத்தை அப்படியே கைவிட நேர்ந்தது.  அதோடல்லாமல், ஆலோசகர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகக் கூறி சிவகிரி மடத்திலிருந்து ஒரு அறிவிப்பும் பதிவுத்தபாலில் அவருக்கு வந்து சேர்ந்தது.

1952-இல் சிவகிரி யாத்திரை முடியும் தறுவாயில், குரு தன் மனதுக்கு மிக நெருக்கமான ஒரு இடத்திலிருந்து விலக நேர்ந்ததற்குக் காரணமான நிகழ்ச்சிகளை என்னிடம் கூறினார். அதை ஒரு பேரிழப்பாகக் கருதினார் குரு.  அப்பொழுதும் தர்ம சங்கத்தின் உறுப்பினராக இருந்தார் அவர்.  நீதிமன்ற ஆணையால் நடத்த முடியாமல் போன மாநாட்டையும் பொருட்காட்சியையும் இப்போது நடத்த எண்ணினார் குரு.  மூங்கிலும் தென்னையோலைகளும் கொண்டு வேயப்பட்ட குடிசைகளை அமைத்து அவற்றை பொருட்காட்சிக்கான அரங்குகளாகவும் யாத்ரீகர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்துவது பற்றி என்னிடம் விளக்கினார்.  அந்நாட்களில் வர்க்கலை குருகுலத்தில், தற்போது நுழைவாயிலின் அருகே இடதுபுறம் இருக்கும் கட்டிடத்தைத் தவிர, வேறெந்தக் கட்டிடமும் கிடையாது.  சுற்றுச்சுவர் கூட இல்லாத இடமது.  நாராயண குருவின் சிலையும் அப்போது கிடையாது.  மாமரங்கள் செழிப்பான இளங்கன்றுகளாக இருந்தன.  எல்லா ஏற்பாடுகளையும் நானும் சுவாமி மங்களானந்தாவுமே செய்ய வேண்டியிருந்தது.

நாங்கள் செய்யும் ஏற்பாடுகளை கவனித்த உள்ளூர் மக்கள், யாத்ரீகர்களை தங்கள் வணிகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தனர்.  சாலையோரமாக டீக்கடை போட தற்காலிக ‘ஷெட்’களை அமைத்தனர்.  மாநாடு சிறப்பாக அமையவேண்டும் என்று குரு நினைத்ததால் நாடகங்கள், இசைக் கச்சேரி, குழு நடனங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு எங்களை அனுமதித்தார்.   நிகழ்ச்சி செலவுகளை ஈடுசெய்ய, நாங்களே தயார் செய்த அனுமதிச்சீட்டுகளை விற்க எண்ணினோம்.  முதல் வகுப்புக்கு ஒரு ரூபாய், இரண்டாம் வகுப்புக்கு ஐம்பது காசுகள், மூன்றாம் வகுப்புக்கு பத்து காசுகள், மிகவும் ஏழ்மைப்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம்.  இந்தப் பாகுபாட்டை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று எனக்குக் தெரியவில்லை.  நான்கு கோடுகள் கிழித்து இரு முனைகளிலும் எந்த வகுப்பு என்று எழுதி வைக்கச் சொன்னார் குரு.  இது பாரிஸ் அல்ல வர்க்கலை என்று குருவுக்கு நினைவுறுத்தத் தவறவில்லை நான்.  நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு மிகவும் முன்பாகவே மேடையின் அருகே பெருங்கூட்டம் கூடிவிட்டது.  நான்காகப் பகுக்கப்பட்ட பிரிவுகள் சடுதியில் மறைந்து ஒரு பிரிவினையில்லா சமூகம் உருவாகிவிட்டது.  வர்க்கலையின் ஏழைகள் அறிவிப்புப் பலகைகளை மதிக்கும் அளவுக்கு நுட்பமானவர்களாக இருப்பார்கள் என்று தான் எதிர்பார்த்தது தவறு என்பதை குரு ஒப்புக்கொண்டார்.  ஒரு சன்னியாசியின் குழப்பமடைந்த மூளை இம்மாதிரி விஷயங்களுக்குப் பொருந்தாதது என்பதை விரைவில் உணர்ந்தோம்.  சன்னியாசிகள் பழங்காலந்தொட்டே செய்து வரும் வித்தையைக் கையாண்டு என் பிச்சைப்பாத்திரத்துடன் வாயிலில் நிற்பதென்று முடிவெடுத்தேன்.  பலரும் ஐந்து பைசாவும் பத்து பைசாவும் கொடுத்து என்னைக் காப்பாற்றினர்.

ஒரு பெரிய சினிமா காட்சியும் எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருந்தது.  உண்மையில் சில ஸ்லைடுகளைத் திரையிடுவதுதான் அது.  அதற்கான புரொஜக்டரையும் ஸ்லைடுகளையும் கொடுத்தது, நிகழ்ச்சி எதுவும் நடத்தக்கூடாது என்று சொன்ன அதே தர்மதீர்த்தா என்பது ஒரு முரண்நகை.  கீழ் எது மேல் எது என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருபது வருடங்களுக்கும் மேல் பழமையானவை அந்த ஸ்லைடுகள்.  திரையில் தெரிவது என்ன படம் என்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை.  காட்சி என்ன என்பதை நானும் மங்களானந்தாவும் மாறி மாறி அறிவித்தோம்.  இந்தக் கூத்து நடந்துகொண்டிருந்தபோது குரு தன் அறையில், நாராயண குருவை சமூக சீர்திருத்தவாதி என்று சொன்னவரிடம் பெரிதாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.  திரைக் காட்சி தோல்வி அடைந்தபோது சுவாமி மங்களானந்தா கம்பீரமாக மைக்கின் முன் நின்றுகொண்டு புத்தர்-சண்டாளி கதையைக் கூறத்தொடங்குவார்.  நான்கு மணி நேரம் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  சில நாட்களுக்குப் பிறகு, இனிமையான பாடல்களுடன் கலந்த சுவாமிஜியின் உரைகள் நிகழ்ச்சிகளின் முக்கியமான பகுதியானது.  குருவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

மாநாடு தொடங்கிய இரண்டாம் நாளிலிருந்து முதலமைச்சர் திரு சி. கேசவன் குருகுலத்திற்கு வந்து எங்களை பெருமைப்படுத்தினார்.  மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அவர்.  மார்க்ஸியக் கொள்கையில் பற்றுடையவராக இருந்தபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முற்றிலும் எதிரானவர்.  பொருட்காட்சி மைதானத்தில் இரண்டு புத்தகக் கடைகள் வைத்திருந்தோம்.  ஒன்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடையது, இன்னொன்று கம்யூனிஸ்ட் கட்சியுடையது.  சுத்தியலும் அரிவாளும் கொண்ட செங்கொடியைப் பார்த்த முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டு காளையைப் போல் சீற்றம் கொண்டார்.  அமைப்பாளன் நான் என்பது அவருக்குத் தெரியும்.  என்னைத்திரும்பிப் பார்த்து அந்தக் கொடியை நீக்கச் சொன்னார்.  அது முடியாது என்று பணிவுடன் அவரிடம் சொன்னேன்.  தான் மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை எனக்கு நினைவூட்டினார் அவர்.  அதற்கு நான், குருகுலம் உலகப்பொதுமையானது என்பதால் மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல; எங்களுக்கென உள்ள தலைவருக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்; குருகுல வளாகத்தைப் பொறுத்தவரை ஜான் ஸ்பியர்ஸ்தான் எங்கள் முதலமைச்சர் என்று பதில் சொன்னேன்.  உடனே, தான் நடராஜ குருவைப் பார்க்கவேண்டும் என்றார் திரு கேசவன்.  குருவும் எரிச்சலடைவார் என நினைத்தேன்.  ஆனால் அவரோ சாந்தமான முகத்துடன் முதலமைச்சருக்கு ஒரு கதை சொல்லத் துவங்கினார்.  சான்டர்ஸன் என்னும் தலைமயாசிரியர் பள்ளி வளாகத்தின் தன்னாட்சியில் இங்கிலாந்தின் அரசர் தலையிடுவதை எதிர்த்த கதை அது. நான் கொடுத்த சூடான டீயை அருந்திக்கொண்டே அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் முதலமைச்சர்.   சமநிலைக்கு வந்தபின்னர் அவர் கிளம்பிச் சென்றார்.  நடராஜ குருவின் இந்த தனித்தன்மை என் மனதில் ஆழப் பதிந்தது.  சுற்றியுள்ள அனைவரும் எரிச்சலடையும் போது அவர் அமைதியாக இருப்பார்; மற்றவர்கள் ஏன் என்றே அறியமுடியாத வகையில் சில சமயங்களில் பெரிதும் எரிச்சலடைவார்.

அந்நாட்களில் மாநாட்டின் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது ஒரு ஹோமத்துடன் நிகழ்ச்சிகளைத் தொடங்குவதை ஒரு வழக்கமாக அமைத்தார் குரு.  அப்போது உபநிடதங்களைப் பாடுவது குருகுலத்தில் வழக்கமில்லை.  விவேகானந்தா கல்லூரியைப் பார்த்து பின்னாட்களில் குருகுலத்திலும் அது மேற்கொள்ளப்பட்டது.  ஹோமத்திற்குப் பிறகு குரு ஒரு பிரவசனம் நிகழ்த்துவார்.  பின்னர் நாள் முழுவதும் குரு தன் அறையில் அமர்ந்திருக்க நூற்றுக்கணக்கான மக்கள் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி அவரிடம் ஆசி பெறுவர்.  ஜான் ஸ்பியர்ஸ், சுவாமி மங்களானந்தா, மாதாஜி கமலாபாய் மற்றும் நான் எங்களுக்குள் காலையும் மாலையும் மணிக்கணக்கில் த்ததுவ விவாதங்களில் ஈடுபடுவோம்.  சிவகிரியில் இருப்போர் எங்களை எப்போதும் பழித்துக் கொண்டிருப்பதை வதந்தி பரப்புவோர் எங்களிடம் கொண்டு வருவர்.  அதை எதிர்த்து எங்கள் பேச்சு நகரும்போது சிந்தனையில் முகிழ்க்கும் பேச்சு தரம் குறையும்.  சில சமயங்களில் எங்கள் கோபம் எல்லை மீறும்.  அச்சமயங்களில் குரு எங்களைக் கடிந்து பார்த்துக்கொண்டே கடந்துசெல்வார்.  சில சமயங்களில் அவரது கடுஞ்சொற்களை விட அவரது மெளனம் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்.  நாங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பொறுமையாகக் கேட்பார்.  உரை முடிந்த பின்னர் அவரது அறைக்குச் செல்லும்போது, ரசனையின்மை, தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தியது, மாநாடு சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும் என்பதை நாங்கள் மறந்துபோவது போன்று பல தவறுகளை சுட்டிக் காட்டுவார் குரு.  நாம் பேசுவது பொதுமக்களிடமல்ல, நமது உயர் ‘சுயத்’திடம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார் அவர்.  குருவின் இருப்பை எப்போதும் உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என எண்ணினார். நடராஜ குரு மட்டுமல்ல, நாராயண குருவும், இதுவரை இருந்த அனைத்து குருக்களும், ஏன் கடவுளே கூட நாம் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பார்.

சிவகிரியில் இருந்ததைப் போல மக்கள் கலந்து கொள்ளும் வழிபாடுகள் எதுவும் குருகுலத்தில் இருக்கவில்லை.   தாங்கள் குருகுலத்திற்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை தங்களுக்குத் தாங்களே மெய்ப்பித்துக் கொள்ள மக்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது.   இதற்காக, குருகுலத்தின் உறுப்பினர்களாக அவர்களது பெயர்களைப் பதிவு செய்யச் சொன்னார் குரு.  இதற்கு அவர் வைத்த பெயர் ‘Yellow Fellowship’.  அந்த வருடம், நாராயண குரு, சிவகிரி மடம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புறுத்தி, குருகுலத்தின் ஆன்மீக, சமூக, சட்ட மற்றும் அற நிலைப்பாட்டை விளக்கி நான்கு கையேடுகளை எழுதி பதிப்பித்தார் குரு.

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3

Standard

யதி சென்னை விவேகானந்தா கல்லூரியில்  

தத்துவ ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிறகு கல்லூரி விடுதியில் 

அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்:

விவேகானந்தா கல்லூரி விடுதியின் தலைவராக இருந்த சுவாமி நிஷ்ரேயசானந்தா துணிச்சலான மனநிலையும், உயரிய கொள்கைகளும் உடையவர்.  ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் மற்றும் ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை உடையவர்.  எல்லோருக்கும் உதவும் அன்பான நண்பர்.  அவருடைய உடலும் மனமும் மிகுந்த ஒழுங்குக்கு உட்பட்டிருந்ததால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுத் தருவதில் அவர் நம்பிக்கைக்குரிய ஆசிரியராக இருந்தார்.   என்னை அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் என்னை சக ஊழியராகப் பெற்றதில் திருப்தி அடைந்தார்.  ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய ஒரு தொண்டர் குழு மூலம் ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு அதிகபட்ச சேவையை அளிக்க விரும்பினார்.

எனக்குப் பிறகு சில நாட்களில் கல்லூரியின் தமிழ்த்துறையில் ராமன் என்பவர் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.   தமிழ் இலக்கியத்தில் அபாரத் தேர்ச்சி கொண்ட அவர் என்னுடன் நட்புகொண்டு விடுதிக்கு வர ஆரம்பித்தார்.  அவரை சுவாமிஜிக்கு அறிமுகப்படுத்தினேன்.  என்னை விடுதியின் காப்பாளராகவும் அவரைத் துணைக் காப்பாளராகவும் சுவாமிஜி நியமித்தார்.

விடுதி மாணவர்களிடையே காட்டப்பட்ட ஜாதி வேறுபாட்டைக் கண்டு ராமன் மிகுந்த மனவருத்தம் கொண்டார்.  அரசின் நிதி உதவி பெறும் விடுதிகள் இருபது சதவீதம் ஹரிஜன மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என்பது அரசின் உத்தரவாக இருந்ததால் நிர்வாகம் இருபது சத ஹரிஜன மாணவர்களைச் சேர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது.  அதே சமயம் விடுதியில் அந்த மாணவர்கள் இருப்பது சகித்துக் கொள்ளப்படவில்லை.

நிஷ்ரேயசானந்தா ஒரு பிராமணர் அல்லாத சுவாமிஜி.  வேதத்தைப் பாராயணம் செய்வதைக் கேட்பதனின்றும் பிராமணர்களால் அவர் தடுக்கப்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள் அவருக்கிருந்தன.  வேத பாராயணத்தை எல்லா மாணவர்களுக்கும் சொல்லித்தருவதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ள நிலையில் இப்போது அவர் இருந்ததால், வகுப்புகள் தொடங்கும் முன்பாக வேத உபநிடத பாராயணத்தையும் பயிற்றுவிக்க இரண்டு சாஸ்திரிகளை நியமித்தார்.

வேதமந்திரங்களை பிராமணர் அல்லாதவர்கள் கற்பதற்கு இருந்த காலங்காலமான தடையை இந்த ஏற்பாடு புதுப்பித்து எழுப்பியது.  மாணவர்களிடையே பிராமணர் அல்லாதவர்கள் இருந்தது மட்டுமல்லாமல் சில ஹரிஜன மாணவர்களும் இருப்பது தெரிய வந்ததும் சாஸ்திரிகள் சொல்லித்தர மறுத்துவிட்டனர்.  பிராமணர்களின் எதிப்புகளைக் கண்டு மனந்தளராத சுவாமிஜி தானே உபநிடதங்களை எங்களுக்கு நேரிடையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்.   சில நாட்களுக்குப் பிறகு சாஸ்திரிகள் திரும்பி வந்தனர்.

வேத பாரயணத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு அது மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது.  பிறகு வர்க்கலை குருகுலத்தில் இளைஞர்களுக்கு உபநிடதங்களைக் கற்றுக்கொடுத்தேன்.  குருகுலத்தின் எல்லாக் கிளைகளிலும் வேதபாராயண முறை இன்றும் வழக்கிலுள்ளது.  குருகுலம் பெற்ற இந்தப் பரிமாணத்துக்கு நாம் சுவாமி நிஷ்ரேயசானந்தாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

பிராமண ஆசிரியர்களும் பிராமண மாணவர்களும் ஹரிஜன மாணவர்கள் மீது காட்டிய துவேஷத்தைக் கண்டு சுவாமிஜி வருந்தினார்.  பிராமண மாணவர்களும், ஹரிஜன மற்றும் பிராமணர் அல்லாத மாணவர்களும் இணக்கமாகப் பழக ஏதுவாக இருக்கும்பொருட்டு அவர்களுடைய படுக்கைகளைக் கலந்து போடச் சொல்லி சுவாமிஜி என்னைக் கேட்டுக் கொண்டார்.  மாணவர்களை ஒழுங்குக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக நான் அதைச் செய்தேன்.  பத்து நாட்களில் விடுதியிலிருந்து ஹரிஜனப் பிரிவு மறைந்துபோனது.

நிர்வாகத்துக்குள் இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  சுவாமிக்கு எதிராக முடிவு எடுக்க நிர்வாகக் குழு பலமுறை கூடியது.  இறுதியில் கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகத்துக்கு முறையீடு செய்தார்கள்.  சுவாமி அப்போதைய பதவியிலிருந்து மாற்றப்பட்டு ஆப்ரிக்காவில் ஒரு புது மையம் தொடங்குவதற்காக அனுப்பப்பட்டார்.  அவருடைய பணியைச் செய்ய என்னையாவது அங்கே தொடர அனுமதித்தார்களே என்று அவர் திருப்தியடைந்தார்.

நான் விடுதியில் தங்கியிருந்தபோது என்னைப் பார்க்க நடராஜ குரு இரண்டு தடவை வந்தார்.  அவருடைய வகுப்புத் தோழர்கள் சிலர் அங்கே ஆசிரியர்களாக இருந்தார்கள்.  அவரை வரவேற்பதில் அந்தப் பேராசிரியர்கள் வெளிப்படையாக நயமாக நடந்துகொண்டாலும், அவருடைய நோக்கம் குறித்து அவர்கள் மனதிற்குள் பயந்து போயிருந்தார்கள்.  பிராமணர்களின் எதிரியாக நியாயமற்ற வகையில் அவர் பார்க்கப்பட்டார்.  அவர் எந்தப் பிரிவினருக்கும் எதிரி அல்ல.  அதேசமயம், பிறரை விட தான் உயர்ந்தவர் என்று வீறாப்பாகக் கருதிக் கொள்ளும் யாரையும் அவர் சகித்துக்கொள்ள மாட்டார்.

சங்கரரைப் பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் அவருடைய முதல் சொற்பொழிவு அமைந்தது.  இந்தப் பேச்சு, என்னுடைய பேராசிரியர் சங்கரநாராயணாவுடன் ஒரு பெரும் மோதலுக்கு இட்டுச் சென்றது.  கோபம் கொள்ளாமலும், வருத்தம் தொனிக்கும் குரலிலும் என்னுடைய பேராசிரியர் அப்போதைக்குப் பேசினாலும் நடராஜ குரு போன பிறகு என்மீது அவருடைய கோபத்தைக் காட்டுவார் என்பது தெரிந்ததால் நான் விடுதியைவிட்டு வெளியேறுவது புத்திசாலித்தனம் என முடிவு செய்தேன்.

அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இருந்தார்.  காந்திக்கு அடுத்து அவர்தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஆன்மீகத் தலைவர் என அறியப்பட்டவர்.   எங்கள் கல்லூரிக்கு வந்த அவர், பேராசிரியர்கள் தங்களுடைய ஆடம்பரமான இருப்பிடங்களை விட்டு நீங்கி கீழ்நிலையில் வாழும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்குச் சென்று சேவை செய்யவேண்டும் என்று தூண்டும் விதமாகப் பேசினார்.

கல்லூரி விடுதியை விட்டு நீங்குவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன்.  அடையாறுக்கு அருகில் சென்னையில் மிக மோசமான சேரிகளில் ஒன்றில் இரண்டு ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசையை அமர்த்திக்கொண்டேன்.  அது ஒரு தாழ்வான, சகதி நிரம்பிய, மலேரியாவை உண்டுபண்ணும் கொசுக்கள் மொய்த்துக்கொண்டிருந்த இடம்.  நிறையக் குடிசைகள் நெருக்கமாக இருந்தன.  சேரியின் நடுவில் என்னுடைய குடிசை இருந்தது.  அந்தச் சூழலுக்கு ஈடுகொடுத்து வாழ்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது.  ஒவ்வொரு நாள் இரவும் யாராவது ஒருவர் காலராவால் இறந்துகொண்டிருந்தார்கள்.  டாக்டர் ஒருவரை அழைத்துவர நான் முயன்றேன்.  ஆனால் பறையர்களின் சேரிக்கு எந்த டாக்டரும் வரத் தயாராக இல்லை.  இறந்துகொண்டிருந்தவர்களின் அருகில் இப்படியாக கையாலாகாதவனாக நிற்க வேண்டியிருந்தது.

சேரி மக்களின் ஒரே ஆறுதல் சாராயம்தான்.  பெண்களின் நடத்தையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  மிட்டாய் மூலம் குழந்தைகளை ஈர்த்து அவர்களுக்கு மாலைநேர பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தேன்.  கொஞ்சம் கொஞ்சமாக சேரியில் ஒழுங்குணர்வையும், அமைதியின்பால் விருப்பத்தையும் உண்டாக்கினேன்.  கல்லூரியிலிருந்து நான் திரும்பியபோதெல்லாம் கூச்சலால் நிரம்பியிருக்கும் சேரி திடீரென்று அமைதியாகிவிடும்.  சச்சரவு இல்லாமல் அவர்கள் அமைதியாக இருக்க என்னுடைய வருகை ஒரு தூண்டுதலாக இருந்தது.

நல்ல குடிநீரை அவர்களுக்கு வழங்கினாலொழிய காலராவை முற்றிலுமாக நிறுத்தமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன்.  அதைச் செய்ய நகராட்சியின் குடிநீர்க்குழாய் கோயில் நிலத்தின் குறுக்காக வரவேண்டியிருந்தது.  பறைச்சேரி மக்களின் உபயோகத்திற்காக குடிநீர்க் குழாய் தங்கள் நிலத்தின் வழியாகப் போவதை அனுமதிக்க கோயில் நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள்.

புனிதராக மதிக்கப்பட்ட முதலமைச்சர் ராஜாஜியிடம் போனேன்.  அவருடைய உணர்வுகளை மதிக்கத்தான் கல்லூரி விடுதியை விட்டு நீங்கி சேவை செய்வதற்காக நான் சேரிக்குப் போனதாக அவரிடம் சொன்னேன்.  ஒரு பிரஜை என்ற முறையிலும் முதல் அமைச்சர் என்ற முறையிலும் ஏழை மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவது அவருடைய பொறுப்பு என்பதைத்தான் நான் வேறுவிதமாக அப்படி வலியுறுத்திச் சொன்னேன்.  என்னை முகத்துக்கு நேராகப் பார்த்துவிட்டு மழுப்பாமல் நேரிடையாகச் சொன்னார்,  “மேடையில் ஒரு அரசியல்வாதி ஆவேசமாகப் பேசுவதை ஒரு முட்டாள்தான் நம்புவான்.  இன்றைக்கே சேரியைவிட்டு விடுதிக்குத் திரும்பிப் போய்விடு.  இல்லையென்றால் காலராவுக்கு அடுத்த இரையாக நீதான் இருப்பாய்.”  ராஜாஜியின் ஆளுமையில் ஒரு புனிதரும் ஒரு அரசியல்வாதியும் ஒன்றிணைந்து இருக்கமுடியும் என்று நான் நம்பியது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்துகொண்டேன்.

விடுதிக்குத் திரும்பிப் போக எனக்கு விருப்பமில்லை.  கல்லூரிக்கு அருகிலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியதோடு என்னுடைய உணவையும் நானே சமைத்துக் கொண்டேன். நடராஜ குரு மீண்டும் ஒருமுறை வந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க எனக்கென்று ஓர் இடம் இருந்தது நல்லதாகப் போயிற்று.   கல்லூரியில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக அப்போது சென்னை மாகாணத்தின் மின்சாரத் துறை தலைமைப் பொறியாளராக இருந்த என்னுடைய நண்பரான என்.சி. குமாரனின் வீட்டில் கூடினோம்.  கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒருவரான டாக்டர் ராமகிருஷ்ணம்மா என்ற பெண்மணி நிறையக் கேள்விகளையும், உண்மையை அறியும் தீவிர வேட்கையும் கொண்டிருந்தார்.  அவர் நடராஜ குருவோடு நீண்ட சர்ச்சைகளில் ஈடுபட்டார்.  அப்படியாகத்தான் அவர் தன்னுடைய புகழ்பெற்ற பகவத் கீதை பற்றிய விளக்கத்தை எழுதத் தூண்டப்பட்டார்.

– தமிழில் ஆர். சிவகுமார்

நடராஜ குருவும் நானும் – 3

Standard

கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரி மேலாளர் திரு ஆர். சங்கரிடமிருந்து  எனக்கு ஒரு கடிதம் வந்தது.  அக்கடிதத்தில், உளவியல் துறையில் விரிவுரையாளர் பதவி எனக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேலையை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் என்னிடம் அணிவதற்கு சட்டையே இருக்கவில்லை.  எனக்கு வேலை கிடைத்த அன்றே குரு வந்தார்.  தன்னிடமிருந்த இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைத்தார்.  அந்நாட்களில் நான் பருமனாக இருக்கவில்லை.  ஆனால் குரு பருமனாக இருந்தார்.  அவர் குள்ளம், நான் உயரம்.  எனவே, அவரது சட்டையை அணிந்த நான் மாறுவேடப் போட்டியில் பங்குபெறுபவனைப் போல இருந்தேன்.  ரவுடிகள் என்று பெயர் பெற்ற எஸ்.என். கல்லூரியின் மாணவர்கள் என்னை “மாஸ்டராக” ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கிருந்தது.

உளவியல் துறையில் நான் ஒருவன் மட்டுமே ஆசிரியர் என்பதால், அங்கே துறைத்தலைவர், மூத்த பேராசிரியர், இளைய விரிவுரையாளர், என் ‘பியூன்’ எல்லாம் நானே.  ஒரு காலத்தில் நாராயண குருவின் பெரும் பக்தராக இருந்த திரு. சங்கர் பின்னர் அவரது பெயரையே எந்த இடத்திலும் சொல்வதைத் தவிர்த்தார்.  சிவகிரி யாத்திரையின்போது குருகுலத்தின் நடவடிக்கைகள் இரு எதிர்க்கட்சிகளின் இயக்கம் போன்ற தோற்றத்தைப் பெற்றது.  குரு புதிய ‘letterhead’-ஐ வடிவமைத்தார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஓரிரு கையேடுகள் தயாரித்தார்.  அவற்றில் குருகுலத்தின் செயலாளர் என என் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்நேரத்தில், சிவகிரி மடத்திற்கும் எஸ்.என்.டி.பி. தலைவர்களுக்கும் எதிரான எவரும் கல்லூரியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டியிருந்தது. நடராஜ குரு ஏற்கனவே வெளியேற்றப்பட்டவர்.  ஆனால், நான் குழிபறிக்கும் தொழிலின் துவக்க நிலையில் இருந்தேன்.  திரு. சங்கர் என்னை பதவியிலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ நீக்கவில்லை.  ஆனால் ஶ்ரீ நாராயண கல்லூரியில் இனி உளவியல் துறை என்று ஒன்று இயங்காது என்று எல்லோரும் அறியச்செய்தார்.  அதற்கு பதிலாக அரசியல் துறை இயங்கும். இது நடந்தது 1954-இல், நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு.  இந்த முடிவை நான் நடராஜ குருவிடம் சொன்னபோது, “என்ன புத்திசாலித்தனம்!  நீச்சல் குளத்தில் ஒன்றுக்கிருப்பது போலிருக்கிறது!” என்றார்.  நான் முழு நேரமும் குருகுல வேலையில் ஈடுபடமுடியும் என்பதால், இதுவும் நன்மைக்கே என்று குரு நினைத்தார்.

மங்களானந்தா சுவாமியை ஆசிரியராகக் கொண்டு குருகுலத்தின் மலையாள இதழ் தொடங்கப்பட்டது.  ஆனால், அது தொடர்பான எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது.  குரு ஒரு கட்டுரை அளிப்பார். அதை நான் மொழிபெயர்ப்பேன்.  என்னை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு இது மிகவும் உதவிகரமாக இருந்தது.  கடந்த முப்பதாண்டுகளில் குருகுலத்திலிருந்து பிறந்த எழுத்துக்கள் தமக்கென ஒரு தனித்தன்மை உடையனவாய், கேரளத்தில் பிற எவருடைய சிந்தனைகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாய் அமைந்துள்ளன.  வருடந்தோறும் விரிவுபடுத்தப்படுவதாய் பாடங்களை வடிவமைத்த குருவின் ஞானத்திற்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.  1952-இல் பெங்களூரில் தொடங்கப்பட்ட Values, வர்க்கலையில் தொடங்கப்பட்ட இதழ் போன்றவை இன்றும் தொடரும் ஒரு ஞானப் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டுகள்.  இந்நேரத்தில், நடராஜ குருவின் Word of the Guru  என்ற நூல் பெங்களூரில் பதிப்பிக்கப்பட்டது.  இதுவே, நாராயண குருவைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசிக்கத் தகுதியான முதல் நூல் என்பேன்.  விற்பதற்காக பை நிறைய புத்தகங்களுடன் கேரளத்தின் அனைத்து நகரங்களுக்கும் சென்றேன்.  அச்சகத்திற்குப் பணம் தர வேண்டும் என்பதோடு, குருகுலத்திலும் அடுப்பெரிய வேண்டுமே!  படிக்கும் எண்ணமே இல்லாதவர்களுக்கு அப்புத்தகங்களை விற்றதற்காக நான் பிற்காலத்தில் வருந்தியதுண்டு. ஆனால் குரு என்னை நம்பிக்கையிழக்கச் செய்ததில்லை.

புத்தகம் விற்று சிறிது லாபம் ஈட்டியபோது, கொல்லத்திற்குச் சென்று நல்ல வார்னிஷும் பெயிண்டும் வாங்கி வந்தேன்.  சிறிய குருகுலக் கட்டிடம் வெள்ளையடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.  கதவுகளும் ஜன்னல்களும் வார்னிஷ் பூசப்பட்டன.  மூன்று மாதங்கள் ஊட்டியில் தங்கிவிட்டு வர்க்கலைக்கு வரும்போது குரு எனது அபாரமான பணியைப் பாராட்டுவார் என நினைத்திருந்தேன்.  சிறிது நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, சமையலறையில் பொருட்களைப் பார்த்தார் குரு. அங்கே அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி எதுவுமில்லை.  குரு என்னிடம் கேட்டார், “அவசியமானவை எவை அநாவசியமானவை எவை என்று உன்னால் பிரித்துப் பார்க்க முடியுமா?”   வீரத்தில் விவேகமே சிறந்தது என்பதால் நான் பதில் பேசாமல் இருந்தேன்.  தொடர்ந்து அவர் கேட்டார், “வெள்ளையடிக்கப்படாத கட்டிடத்தில் இருந்துகொண்டு சூடாகக் கொஞ்சம் கஞ்சி குடிப்பதா?  அல்லது அலங்கரிக்கப்பட்ட அறையில் பட்டினி கிடப்பதா? எது சிறந்தது?”  இது மிகவும் அல்பமானதாகத் தோன்றலாம்.  ஆனால் இந்த எளிய நிகழ்ச்சி, விழுமியங்களின் படிநிலையை மதிப்பிடுவதில் என்னுடைய கொள்கையை மாற்றியமைத்தது.

அன்று மாலை, அரிசியும் மளிகை சாமான்களும் வாங்குவதற்கு யாரிடமாவது கடன் வாங்கலாம் என்று நினைத்தேன்.  ஆனால் குரு என்னை போக விடவில்லை.  குருகுலத்தின் இதழ்களின் அட்டையை ஒட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த கோதுமை மாவு மட்டுமே கொஞ்சம் இருந்தது.  அதை வைத்து நான் ஒரு சப்பாத்தி செய்தேன்.  பிரார்த்தனைக்குப் பிறகு சப்பாத்தியை குருவின் முன் வைத்தேன்.  சீரகமும் வெந்தயமும் போட்டுக் காய்ச்சிய நீரும்.  அவர் எரிச்சலடைவார் என நான் நினைத்ததற்கு மாறாக அவர் மகிழ்ந்தது தெரிந்தது.  சப்பாத்தியை நான்கு துண்டாக்கினார்.  கால் பாகத்தை தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை எங்கள் மூவருக்கும் கொடுத்தார்.  பிறகு, “ஒரு மாற்றத்திற்கு, காலி வயிறுடன் இருப்பது நல்லது” என்றார்.  நாளை எப்படி உண்போம் என்ற சிந்தனையில் இரவு முழுதும் படுக்கையில் அமர்ந்திருந்தேன்.  யாரிடமும் கடன் வாங்குவதை குரு விரும்பவில்லை.  காலை ஐந்துமணிக்கு வாசலில் இரைச்சல் கேட்டு வெளியே வந்தேன்.  ஒரு மாட்டு வண்டி வந்திருந்தது.  யாரோ ஒருவர் வாழைக்காய், தேங்காய், அரை மூட்டை அரிசி, அனைத்து வகையான காய்கறிகள் இவற்றை எடுத்துவந்தார்.  பிற்காலத்தில் குருகுலம் நடத்தப்பட எந்தப் பொருளியல் அடிப்படையை நடராஜ குரு பின்பற்றினார் என்பதை, முன்பின் அறியாத ஒரு பரோபகாரியின் இந்தத் திடீர் பரிசு எனக்கு விளக்கியது.  பொதுவாழ்வில் மறைந்துள்ள இயற்கையான கருணை எந்தவொரு வெற்றிடத்தையும் மாயமாய் நிரப்பவல்லது என்பதை நான் ஐயமற உணர்ந்த தருணமது.  மறுநாள், நான் குருவின் கவனத்திற்கு இதைக் கொண்டுபோனபோது, “நீ வெற்றிடத்தை உருவாக்கும் அளவுக்கு தைரியமுடையவனாய் இருந்தால், இயற்கை அதை வெறுக்கிறது.  வெற்றிடம் உடனடியாக மூடப்படுகிறது.” எனது கடந்த முப்பதாண்டு கால வாழ்க்கை இதற்கு சாட்சி.  இதை நான் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டே இருக்கிறேன்.  குருவின் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அவரைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பவன், கடலில் இருந்து ஒரு புட்டி நீரை அள்ளி அதில் கடலைக் கண்டடைய எண்ணுபவன்.

நடராஜ குருவும் நானும் – 2

Standard

நடராஜ குரு ஒரு வருடம் ஐரோப்பாவிலும், ஒரு வருடம் அமெரிக்காவிலும் இருந்து விட்டுத் திரும்பிய போது எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு ‘ஹீரோ’வைப்போன்ற பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மைசூரில் வளர்ந்தவராதலால் அவரால் சரளமாக மலையாளத்தில் பேசமுடியாது.  எனவே,அவரது உரைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்காக அவருடன் நான் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.  மகான்களை தூரத்திலிருந்து மட்டுமே வழிபட முடியும் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.  1946-இல் காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருந்தன. காந்தியின் மேல் தொடக்கத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த அன்பும் மதிப்பும் என் மனதில் இருந்து நீங்கி விடாமல் இருப்பதற்காக காந்தியை விட்டு விலக வேண்டியிருந்தது. நடராஜ குருவின் குத்தல் பேச்சும் அவரது ஏளனம் என்னில் ஏற்படுத்திய ஆழமான காயங்களும் அதிநுட்பமான என் சுயத்தால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருந்தன.

ப்ரார்த்தனை செய்வது போல மென்மையாகப் பேசும் டாக்டர் மீஸுடன் பழகிய எனக்கு இது புதிதாக இருந்தது.  டச்சு அறிஞரான டாக்டர் மீஸ் ரமண மகரிஷியின் மாணவர்.  நான் 1946 முதல் 1952 வரை அவருடன் பயின்றிருக்கிறேன்.  தெளிவில்லாத அவர் உச்சரிப்பை நான் செய்து காண்பிப்பதை நடராஜ குரு வெறுத்தார்.   அதைவிட ஒரு நாய் போல என்னால் குரைக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.  அப்போது நான் திருவனந்தபுரத்தில் பல்கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நடராஜ குரு செல்லும் இடத்திற்கெல்லாம் நானும் போகாமல் தப்பிக்க முடிந்தது.  ஆனாலும் அவர் என்னைத் தன் மாணவன் போலவே நடத்தினார்.  இது எனக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.  அவரது ஞானம் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் அவரது கோமாளித்தனங்கள் மீதிருந்த எரிச்சலும் ஒன்றுடன் ஒன்று மோதி என் அகத்தை காயப்படுத்தின.  பிறகு கிட்டத்தட்ட அவரை மறந்திருந்தேன்.  ஆனால், மீறிச்செல்ல முடியாத விதியின் கைகள் என்னை மீண்டும், எங்கே அவரைச் சேர்வது என்று 1938-இல் முடிவெடுத்தேனோ, அதே ஃபெர்ன்ஹில்லுக்குச் செல்லும்படி வழிகாட்டின.

1952-இல் எனது படிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ஊர் சுற்றுவது என முடிவெடுத்தேன்.  எனது பி.ஏ. ஹானர்ஸ் படிப்பின் இறுதி ஆண்டில் பல்கலைக்கழக நூலகத்தின் வராந்தாவில் தங்கியிருந்தேன்.  எனது புத்தகங்களையும் சமையல் பாத்திரங்களையும் காவலரின் சிறிய அறையில் வைத்திருந்தேன்.  ஒரு கடிகாரத்தையும் எனது கல்லூரிக் குறிப்புகளையும் தவிர வேறெதையும் நான் இழக்கவேண்டியிருக்கவில்லை.  புத்தகங்கள் எனக்கு ஒருவேளை தேவைப்படக்கூடும் என்பதனால் அவற்றை வைத்திருக்க எனது நண்பன் ஒப்புக்கொண்டான்.  நான் ஒரு யாசகனாகி முதலில் இந்தியாவின் தென்கோடியிலிருக்கும் கன்னியாகுமரிக்குச் சென்றேன்.  அங்கிருந்து கோயில் கோயிலாகச் சென்றேன்.  ஊட்டி வழியாகச் செல்ல நேர்ந்தபோது குருகுலத்தில் தங்கினேன்.  அங்கு நடராஜ குரு இருக்கவில்லை.  சுவாமி மங்களானந்தாவும் மாதாஜி கமலாபாயும் மட்டுமே இருந்தனர்.  மங்களானந்தா சுவாமி எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தார்.  அது நான் மைசூர் செல்வதற்குப் போதுமானதாக இருந்தது.

மைசூரில் ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றேன்.  அங்கு தலைவராயிருந்த சுவாமி விமலானந்தா என்னை அன்புடன் வரவேற்றார்.  மடத்தில் சேருவதற்கு என் விருப்பத்தைத் தெரிவித்தபோது, தன்னுடன் ஒரு நடை வரும்படி அழைத்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட ஆசிரமங்களின் பகட்டைப் பார்த்து நான் மயங்கிவிடக் கூடாது என அறிவுறுத்தினார்.  “காட்டில் தேன் நிறைந்த மணமுள்ள மலர்கள் கொண்ட ஒரு மரம் இருக்குமேயானால் காட்டிலுள்ள அனைத்து தேனீக்களும் அம்மரத்தை நாடி வரும்” என்றார்.  அதற்கு மேல் நான் பயணம் செய்வதில் பொருளில்லை என்றதோடு கேரளத்திற்குத் திரும்பச் சென்று நாராயண குருவின் போதனைகளைப் பரப்புவதில் என் வாழ்வைச் செல்விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஶ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்ப ஏராளமான அறிஞர்கள் இருப்பதைப் போலல்லாமல் நாராயணகுருவின் வழியில் ஆன்மீகத்தைப் பரப்ப நாலைந்து அறிஞர்களே இருக்கின்றனர் என்றார்.  நான் கேரளா திரும்ப தேவையான பணம் கொடுத்தனுப்பினார்.

திரும்பும் வழியில் ஃபெர்ன்ஹில் குருகுலத்திற்குச் சென்றேன்.  மங்களானந்தா சுவாமியும் மாதாஜியும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.  குரு தனியாக இருந்தார்.  அப்போது நான்கு மணி, தேநீர் அருந்தும் நேரம். சமையலறைக்குள் நான் நுழைந்தபோது ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தார்.  என்னைக் கண்டதும் இரண்டு கோப்பைகளில் நிரப்பி, இரண்டு தட்டுகளில் ஓரோரு லட்டை வைத்து, என்னிடம் ஒன்றை நீட்டினார்.  நான் என் கைகளில் கோப்பையையும் தட்டையும் வைத்துக் கொண்டிருந்தேன்.  “படிப்பு முடிந்ததும் திரும்பி வருவதாகச் சொன்னாய்.  என்னிடம் சேரத்தான் இப்போது வந்திருக்கிறாயா?” என்று கேட்டார் நடராஜ குரு.  இந்தத் தருணத்தைப் பற்றிய அச்சம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.  தயக்கத்துடன், “அதைப்பற்றி யோசிக்கிறேன்” என்றேன். இதைக்கேட்டு நடராஜ குரு கோபத்தில் கத்தத் தொடங்கினார்.  “குருவுக்கு யாரும் இல்லை என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு யாரும் இல்லை என்று அவரே சொன்னார்.  நீ ஆர்வத்துடன் இருந்தாய் என்று நினைத்தேன்.  ஆனால் உன்னிடம் ‘அழுத்தம்’ இல்லை.  ரனிமேட்டிலேயே நீ நின்றுவிட்டாய்” என்றார்.  ரனிமேடு என்பது மலையடிவாரத்தில் இருந்த ஒரு ரயில் நிறுத்தம்.  மலையேறுவதற்கு ரயில்வண்டிகள் அங்கே நின்று நீராவி பிடித்து வரும்.  குரு கூறியதை தனிப்பட்ட முறையில் என் மீது தொடுக்கப்பட்ட அவதூறாகக் கருதினேன்.  அவசர அவசரமாக கையிலிருந்த தேநீரையும் தட்டையும் மேசையில் வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக குருவின் காலில் விழுந்தேன்.  “என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றேன்.  அந்தக் கணம், பசித்த நரியிடம் தன்னை ஒப்புக்கொடுத்த ஆட்டுக்குட்டியைப் போல் என்னை உணர்ந்தேன்.

என் சரணாகதிக்கு முன் அவர் பேசிய கொடுஞ்சொற்களுக்குப் பரிகாரம் போல அன்று மாலை குரு என்னிடம் மிகவும் மென்மையாகப் பேசினார்.  பிரதானக் கட்டிடத்திலேயே ஒரு அறையை அவர் எனக்குக் கொடுத்தபோதும் நான் ஒரு குடிலில் தங்குவதையே விரும்பினேன்.  இரவு மிகுந்த குளிரில் தூங்க முடியாமல் பெரிதும் அவதியுற்றேன்.  ஒரு வழியாக நல்ல உறக்கம் வந்தது.  பின்னர் கடுங்காபியின் மணம் என் மூக்கைத் துளைத்தபோது அலறிப்புடைத்து எழுந்தேன்.  ஒரு தட்டில் சுடச்சுட காபியும் வர்கியும் வைத்துக்கொண்டு நடராஜ குரு நிற்பதைக் கண்டு அவமான உணர்ச்சி தோன்றியது.  “படுக்கை அறையில் வந்து சூடான காபி கொண்டு தருவது ஒன்றும் தவறானதில்லை என்று நினைக்கிறேன்” என்று குத்தலாகக் கூறினார்.  அவர் கையில் இருந்து தட்டைப் பறித்துக் கொண்டு, அவமானத்துடன் சமையலறைக்குச் சென்றேன்.

குரு என்னை எதுவுமே செய்யச் சொல்வதில்லை என்பதை விரைவில் உணர்ந்தேன்.  தொட்டிகளில் நீர் நிரப்புவது, தீ மூட்டுவது, காய்கறி நறுக்குவது, தரையைப் பெருக்குவது என எல்லாவற்றையும் தானே செய்தார்.  அவர் என்னை எதுவும் செய்யச் சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன்.  அவர் ஒன்றுமே சொல்லவில்லை.  சரி, நாமே காய்கறி நறுக்குவதில் உதவி செய்வோம் என்று நினைத்தேன். உணவு தயாரிக்கும்போது ஒரு காரட்டை எடுத்து நறுக்கப் போனேன்.  “அதை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.  “நறுக்கப் போகிறேன்” என்றேன்.  “எதற்கு?” என்று கேட்டார்.  “தெரியவில்லை” என்றேன்.  காரட் குறித்து மட்டுமல்ல, குருகுலத்தில் என் வாழ்வைப் பற்றியதும் அந்தப் பதில். “உனக்குத் தெரியவில்லை என்றால் நீ கேட்க வேண்டும்.  இங்கு நான்தான் தலைமைச் சமையல்காரன்.  நான் என்ன சமைக்கப் போகிறேன் என்று நீ தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் குரு.  ஒரு பட்டாணியை எடுத்துக்காட்டி, “இந்த அளவுக்கு சதுரத்துண்டுகளாக காரட்டை நறுக்க வேண்டும்” என்றார்.  இதைக்கேட்டு, ஒரு மருத்துவ மாணவன் அறுத்துப் பார்ப்பதற்காக பிணத்தை வைப்பதைப் போல அந்தக் காரட்டை நறுக்கும் பலகையில் வைத்தேன். லண்டன் சேம்பர் ஆஃப் காமர்ஸிலிருந்து வடிவியலில் பட்டயம் பெற்றவன் நான் என்பதால், சரியான சதுரங்கள் இருந்தால் கச்சிதமான கனசதுரத் துண்டுகள் போட எனக்குத் தெரியும்.  சரியான சதுரம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பொறுப்புடன் முதல் துண்டை வெட்டப் போனேன்.

அப்போது, “உன் முதுகலைப் பட்டப்படிப்பில் உன் சிறப்புப் பாடம் என்ன?” என்று கேட்டார் குரு.  நான் சிறிது கர்வத்துடன், “அசாதாரண உளவியலும், அத்வைத வேதாந்தமும்” என்றேன். குரு என்னையே ஒரு அசாதாரணமானவனைப் போல் பார்த்துவிட்டு, “அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.  எனது ஹானர்ஸ் படிப்பிற்கான சிறப்புப் பாடம் சங்கரரின் அத்வைதம் என்றாலும் எனக்குக் கற்பித்தவர் சுத்த விசிஷ்ட வேதாந்த விசிஷ்டாத்வைதியான ஒரு ஐயங்கார்.  இரு தத்துவங்களுக்குமிடையேயான வேறுபாட்டை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.  அந்த முக்கியமான கேள்வியைக் கேட்டதும் காரட்டை ஒதுக்கி வைத்துவிட்டு கத்தியையும் மெதுவாகக் கீழே வைத்தேன்.  எதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதைப் போல என்னைப் பார்த்த குரு, “நீ என்ன உன் கையினாலா சிந்திப்பாய்?” என்று கேட்டார்.  இரண்டு வயதுக் குழந்தையொன்றைப் போல நடத்தப்பட்டதை நான் விரும்பவில்லை.  பொதுவாகவே நான் முன்கோபி.  கோபத்தில் என் முகம் சிவந்தபோதும் என்னை அடக்கிக்கொண்டு, “இல்லை, நான் என் தலையால் சிந்திப்பேன்” என்றேன்.  குரு அதை நம்பாதவர் போல, தொடர்ந்து, “அப்படியானால் நீ அதை நறுக்கிக்கொண்டே என் கேள்விக்கு பதிலளிக்கலாம்.  காரட் நறுக்குவது அறிவுத் திறம் தேவையில்லாத (மெகானிகல்) செயல், அறிவுபூர்வமாகப் பேசுவது சிந்திக்கும் செயல்” என்றார்.  இது எனக்குப் புதிதாக இருந்தது.   அதுவரை இப்படி நான் சிந்தித்ததேயில்லை. ஒரு சமயத்தில் ஒருவரால் ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியுமென்று நினைத்திருந்தேன். மனிதனின் ‘எளிய’ சுயத்தையும் ‘மேல்’ சுயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க இந்தப் பாடம் எனக்குப் பேருதவியாய் இருந்தது. பின்னர், நடைமுறை உலகில் எந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதும் ஒருவரால் தன்னுடைய ‘மேல்’ சுயத்துடனான உரையாடலில் முழுவதுமாக ஈடுபடமுடியும் என்பதை அறிந்து பெரிதும் வியந்தேன்.

ஹானர்ஸ் இறுதித் தேர்வில் நான் பல்கலையில் முதல் மாணவனாகத் தேறியிருந்தேன்.  ஆனால், அத்வைத வேதாந்தம் குறித்து நடராஜ குருவுடன் நடந்த அரைமணிநேர உரையாடலுக்குப் பின், நான் வகுப்பறையில் கற்றது எதுவும் பயனற்றது என்றும், நான் முதலிலிருந்து தொடங்கவேண்டும் என்றும் ஐயமற உணர்ந்தேன்.  நான் சீராக தத்துவம் கற்பதற்கு முன் என்னுடைய ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குரு நினைத்தார். நான் ஜான் ஸ்பியர்ஸுடன் தங்கி இருந்து ஆங்கிலம் கற்கலாம் என்று ஆலோசனை கூறினார். குருகுலத்திலேயே இருந்தாலும் நான் நடராஜ குருவின் அண்மையைத் தவிர்க்க முடியும் என்பதால், அது ஒரு நல்ல ஆலோசனையாகத் தோன்றியது.

நடராஜ குருவும் நானும் – 1

Standard

நடராஜ குருவுடன் நித்யா

நடராஜ குருவைப் பற்றி எண்ணும்போதெல்லாம், 1938-இல் ஊட்டி ஃபெர்ன்ஹில் குருகுலத்தில் குருவை நான் முதலில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. அவர் ஏகாந்தமாய் இருந்தார். காலை ப்ரார்த்தனைக்குப் பின்னர் என்னையும் என்னை அழைத்துச் சென்றிருந்த நண்பரையும் மதிய உணவுக்கு அழைத்திருந்தார். மிகவும் எளிய உணவு. பின்னர், வெங்காயத்தோல் தாளில் அச்சிடப்பட்டிருந்த நாராயண குருகுலம் பற்றிய கையேட்டை எனக்களித்தார். அப்போது குருகுலத்தில் ஒரு வகுப்பை நடத்தி வந்தார் அவர். பத்து ரூபாய் மாதக் கட்டணம். தங்குவதற்கும் உணவுக்குமான கட்டணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அங்கே அவர் தனியாக இருப்பது எனக்கு வேதனையளிப்பதாக இருந்தது. அதற்காகவே அவரது வகுப்பில் சேரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது பதினான்கு வயது நிரம்பியிருந்த நான் எனது பெற்றோருக்கு முழுமுற்றாகக் கட்டுப்பட்டவனாக இருக்க விரும்பினேன். எனவே, நடராஜன் மாஸ்டர் என்று அப்போது அறியப்பட்ட நடராஜ குருவிடம் சேர்வதாக வாக்களிப்பதற்கு முன் என் தந்தையின் அனுமதியைப் பெறவேண்டும் என நினைத்தேன். மிகுந்த வருத்தத்துடன் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

நானும் என் நண்பரும் ஊட்டி பேருந்து நிலையத்திற்கு நடந்தோம். ரயில் பாதை வழியாகச் சென்றபோது ஃபெர்ன்ஹில் டனலைக் கடந்து சென்றோம். குகைக்குள் நுழைந்ததும் சொல்லொணாத் தனிமை உணர்வு என்னைச் சூழ்ந்தது. ஆனால் அது தனியனாய் உணரச் செய்யவில்லை, சுயத்தை எதிர்கொள்வதாய், சடுதியில் தனது இருப்பை முதல்முதலாகக் கண்டு கொள்ளும் அனுபவமாக இருந்தது. குகையின் மைய இருளை நோக்கிச் செல்லச்செல்ல மனதில் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு வினோதமான குரல், “உன் வாழ்வில் என்ன செய்யப் போகிறாய்” என மீண்டும் மீண்டும் கேட்டது. “நடராஜன் மாஸ்டருடன் வாழப் போகிறேன்” என்ற பதில் தானாக எழுந்தது.

அப்போது நான் தேவரசோலாவில் சேலாஸ் ஃபாக்டரியில் டீ மேக்கராக இருந்த என் ஒன்றுவிட்ட சகோதரனுடன் தங்கியிருந்தேன். ஃபெர்ன்ஹில்லில் நடராஜன் மாஸ்டருடன் வசிப்பதற்கு என் தந்தையின் அனுமதியைப் பெறுவதற்காக அவசர அவசரமாகக் கிளம்பி கேரளாவுக்குச் சென்றேன். பொதுவாக அமைதியாய் இருக்கும் என் தந்தை நான் பேசப்பேச கடுப்பாவது தெரிந்தது. விதி என்னை துயரப்பேரிருளில் ஆழ்த்துகிறது என்று மிகவும் மனம் நொந்தார். நடராஜன் மாஸ்டரின் தந்தையான டாக்டர் பல்புவின் மீது அவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பொருத்தவரை டாக்டர் பல்பு ஏழைகளின் உயர்வுக்காகப் போராடிய வீரர். என் தந்தை உழைப்பில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி. கற்பனாவாத லட்சியங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. அவர் பேசுவதைக் கேட்கும்போது என்னை முதலை வாயில் அகப்பட்டு தப்பிக்கத் துடிக்கும் மனிதனைப் போல உணர்ந்தேன். அக்கணமே என் வீட்டை விட்டு ஓடிவிடத் துடித்தேன். ஆனால் துணிவு வரவில்லை. கொல்லத்திற்குச் சென்று என் மாமனுடன் தங்கி வணிகவியல், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்குப் பதிவியல் படிக்கும்படி என் தாயார் அறிவுறுத்தினார். வீட்டை விட்டுச் செல்ல அது ஒரு சாக்கு என்பதால் உடனே அதற்கு ஒப்புக்கொண்டேன்.

இந்தக் காலகட்டத்தில், ஹிட்லரும் முசோலினியும் நேசமாகி, உலகம் முழுவதும் தொற்றுநோய் போலப் பரவிய, இரண்டாம் உலகப் போரைத் துவங்கியிருந்தார்கள். 1942-இல் விநோதமான சூழலில் விமானப் படையில் நான் சேர்க்கப்பட்டேன். போர் முடிந்து விதிவசத்தால் எங்கெங்கோ அலைக்கழிந்து இறுதியில் ஆலப்புழை கிறித்தவக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தேன். இது நடந்தது 1947-இல். அப்போது நாராயண குருவின் அத்வைத ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். ஒரு நாள், நாராயண குருவின் பக்தர் ஒருவர் நாராயண குரு 1924-இல் நடத்திய உலக மதங்கள் மாநாட்டைப் பற்றி மிகவும் உற்சாகத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். 1924 நான் பிறந்த வருடம் என்பதால், உலக மதங்கள் மாநாடு குறித்த ஒரு பெருமிதம் எனக்கு ஏற்பட்ட்து. அதே அத்வைத ஆசிரமத்தில் இரண்டாவது மாநாட்டை நடத்த விரும்பினேன். அத்வைத ஆசிரமப் பள்ளியின் தலைமையாசிரியராய் இருந்த திரு எம்.கே. கோவிந்தன், மாநாட்டிற்குத் தலைமை தாங்க நடராஜ குருவை நான் அழைக்கலாம் என்றார். நடராஜ குருவுக்கு மாநாட்டைப் பற்றி நான் எழுதியதற்கு அவர் மிகவும் பரிவுடன் பதிலளித்திருந்தார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த திரு ஜான் ஸ்பியர்ஸ் என்னும் அவரது நண்பருடன் வருவதற்கு ஒப்புக் கொண்டார். முடிந்துபோன ஃபெர்ன்ஹில் அத்தியாயம் அங்கே மீண்டும் துவங்கியது. பல்வேறு மதங்களைச் சார்ந்த பேரறிஞர்கள் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.

அனகாரிக புத்தரக்ஷித் மற்றும் அனகாரிக தர்மரக்ஷித் எனும் இரு புத்த பிட்சுக்களின் தாக்கத்தால் நான் சன்னியாசம் கொள்வதில் பேரார்வம் கொண்டிருந்த காலம் அது. பல வருடங்களுக்கு முன், உயர்நிலைப்பள்ளி மாணவனாய் இருந்தபோது அவர்கள் இருவரையும் முதலில் சந்தித்தபோது என்னில் உணர்ச்சிகரமான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அப்போது அவர்களது பெயர் புத்தப்பிரியா, தர்மப்பிரியா. புத்தப்பிரியா இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர். தர்மப்பிரியா வங்காளத்தைச் சேர்ந்தவர். என் கண்ணுக்கு அவர்கள் ஏதோவொரு ஆன்மீகப் பேரொளியுடன் கூடிய பேரழகர்களாகத் தோன்றினர். அவ்விருவரும், நடராஜ குரு தலைமை தாங்கிய மாநாட்டில் உரையாற்ற வந்திருந்தனர். அந்நாட்களில் நான் புத்த சரிதத்தின் முதல் இரண்டு காண்டங்களையும், குமாரன் ஆசானின் சண்டால பிக்ஷுகி முழுவதையும் மனப்பாடமாக ஒப்பிப்பேன். அனகாரிக தர்மரக்ஷித் ரவீந்திரநாத் தாகூரின் சண்டாலிக கதையை வழங்கினார். வங்காள பிட்சுவைவிட நன்றாகவே ஆசானின் சண்டாலிக-வை மலையாளிகள் அறிவார்கள் என்பதால் பிட்சுவின் முயற்சி ‘கொல்லன் பட்டறையில் ஊசி விற்றல்’ (bringing coals to Newcastle) என்று நடராஜ குருவுக்குத் தோன்றியது. எனவே, பிட்சு சொன்னதை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, பெருங்கவிஞர் ஆசானின் சண்டால பிக்ஷுகியைப் பாடும்படி என்னைப் பணித்தார் குரு. அவரது பேச்சை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, நான் பாடத் தொடங்கியதைக் கண்ட பிட்சுவுக்கு வியப்பு. இந்த நகைச்சுவையை நான் ரசித்தேன். இச்சிறு விஷயங்கள் நடராஜ குருவுக்கு என் மேல இதமான அன்பு ஏற்படக் காரணமாயின. அடுத்த சில நாட்கள் என்னிடம் மிகவும் கனிவுடன் பேசிக்கொண்டிருந்தவர், எனது தத்துவ முதுகலைப் படிப்பு முடிந்தவுடன் அவரிடம் சென்று சேர்வேன் என்ற வாக்குறுதியை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மறைந்த குமாரன் ஆசானின் மனைவி பானுமதி அம்மா அம்மாநாட்டை நடத்துவதற்கு பெரிதும் உதவி செய்திருந்தார். அவர் நடராஜ குருவிடம் பேரன்பு கொண்டவர். அவரை ‘தம்பியண்ணன்’ என்று விளிப்பார். ஒருவரை தம்பி என்றும் அண்ணன் என்றும் ஒரே சமயத்தில் அழைப்பதை குரு கிண்டல் செய்வார். மாநாடு முடிந்த பின்னர் அறிஞர்கள் அனைவரையும் தன் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார் பானுமதி அம்மா. நடராஜ குரு வந்ததிலிருந்து அவரை நிழல்போலத் தொடர்ந்திருந்த நான் விருந்தின்போது அவருக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தேன். இன்னும் ஒரு வாரத்தில் தான் மார்ஸே-க்கு (Marsailles) கப்பலேறப் போவதாகச் சொன்னார் குரு. எனக்குள்ளிருந்த அலைந்துதிரியும் மோகத்தை அது கிளறியிருக்க வேண்டும். அவரது வெளிநாட்டுப் பயண விவரங்களை தூண்டித் தூண்டி கேட்கத் தொடங்கினேன். பயணச் சீட்டைத் தவிர எல்லாம் தயார் என்றார் குரு. ‘பயணச் சீட்டு வாங்கக் கூட காசில்லாதபோது எதற்காகப் பயணம்?’ என்றேன் அவரிடம். அதற்கு அவர், “மரத்தில் இலையொன்று துளிர்க்கும்போது அது தனக்கான இடம் இருக்குமா என்று கவலை கொள்ளுமா என்ன?” என்றார். வழமைக்கு மாறான பதில் அது. அதை அவர் மிகவும் தீவிரத்துடன் கூறியதால், அதை என்னால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் மேசைக்கு பானுமதி அம்மா வந்தபோது, குரு கூறியதை அவரிடம் சொன்னேன். வாய்விட்டு சிரித்த அவர், கட்டணம் எவ்வளவு என்று கேட்டார். எந்த ஆர்வமுமில்லாமல் தொகையைக் கூறினார் குரு. தனது அறைக்குள் மறைந்த பானுமதி அம்மா பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய உறையுடன் திரும்ப வந்தார். அதை நடராஜ குருவிடம் கொடுத்துவிட்டு “உங்கள் பயணத்துக்கான பணம்” என்றார். எந்த பாவனையும் இல்லாமல் அவர் பணத்தைக் கொடுத்த விதமும் குரு அதை எந்த ஒரு சலனமுமில்லாமல் வாங்கி தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்ட விதமும் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின. “விநோதமான மனிதர்கள்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். “வானத்துப் பறவைகளைப் பார், அவை விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை, குதிரில் சேமிப்பதில்லை, ஆயினும் தேவபிதா அவற்றை ரட்சிக்கிறார்” – என்னைக் கவர்ந்த பைபிள் வரிகள் நினைவில் எழுந்தன. இம்முறை நடராஜ குருவும் ஜான் ஸ்பியர்ஸும் ஃபெர்ன்ஹில்லுக்கு ரயிலேறிய போது பிரிவுக்காக நான் வருந்தவில்லை. என் எண்ணத்தில் நடராஜ குரு ஏற்கனவே ஃப்ரான்சிற்குச் சென்றிருந்தார். அவரைக் குறித்து பெருமிதமாய் உணர்ந்தேன். இது நிகழ்ந்தது 1948-இல். மீண்டும் ஃபெர்ன்ஹில்லையும் குருவையும் மறந்தேன்.

– நடராஜ குருவின் நூற்றாண்டைக் (1895-1995) கொண்டாடும் வகையில் பதிப்பிக்கப்பட்ட “Nataraja Guru and I” என்னும் சிறு நூலில் இருந்து