Tag Archives: நடராஜ குரு

நடராஜ குருவும் நானும் – 15

Standard

சென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார்.  கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர்.  தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர்.  ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின்  பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார்.  ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் திரு இஸ்ரேலை தொடர்பு கொண்டு கையெழுத்துப் பிரதியை திரும்பப் பெறும்படி என்னிடம் கூறினார் ஜான். ஒரு நாள் அவரை சென்று பார்த்தேன்.  மன்னிப்பு கோரியபடி கையெழுத்துப் பிரதியை திரும்ப அளித்தார் இஸ்ரேல்.

நடராஜ குரு அதை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.  நாற்பது வருடங்கள் அவர் செய்த ஆய்வின் பலன் அது.  அது பதிப்பாளரால் நிராகரிக்கப்பட்டது என்பதை குருவிடம் சொல்லத்தயங்கினேன்.  வாரங்கள் ஓடிச்சென்றன. ஒருநாள் திடீரென இஸ்ரேல் என்னை அழைத்தார்.  ‘கீதா’ ரசிகர் ஒருவர் அதை பார்க்க விழைவதாகக் கூறி அக்கையெழுத்துப் பிரதியை கோரினார்.  ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்க அவர் விரும்பவில்லை. அவசரமாக அப்பிரதியை அவரிடம் அளித்தேன். நான்கு நாட்கள் கழித்து ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸின் பதிப்பாளர் குழுவை பால்லார்ட் எஸ்டேடில் சந்திக்கும்படி கூறினார்.  விரிந்த புன்னகையுடன் என்னை வரவேற்ற இஸ்ரேல், “நல்ல செய்தி சுவாமிஜி!  நடராஜ குருவின் பகவத் கீதையை, எங்களது நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், பதிப்பிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார்.  அவர் அளித்த ஒப்பந்தப்படிவங்களை உடனடியாக குருவுக்கு அனுப்பினேன்.  நல்ல வேளையாக, முதலில் அவர்கள் பதிப்பிக்க மறுத்ததை குருவிடம் சொல்லாமலிருந்தோமே என எண்ணிக்கொண்டேன்.  ஒப்பந்தம் குறித்து குரு மகிழ்ந்தார் என்றாலும், புத்தகத்தின் கடைசி பிரதி தட்டச்சு செய்யப்பட்டு ஜான் ஸ்பியர்ஸால் படித்துக்காட்டப்பட்ட உடனேயே புத்தகம் தொடர்பான தன் ‘கர்மா’ முடிந்துவிட்டதாகக் கருதினார்.  ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, எழுத்துப்பிரதி தியசாஃபிகல் பதிப்பகத்தால் அச்சிடப்படுவதற்கென சென்னைக்கு அனுப்பப்பட்டது.  மிகச்சிறந்த பதிப்பாசிரியரான திரு ராமநாதன் மெய்ப்பு நோக்கி, அச்சிடலை மேற்பார்வையிட்டார்.

அக்காலகட்டத்தில், இந்தியப் பதிப்பகங்களில் மிகச்சிறந்த ஒன்றான ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸிற்கு லண்டனிலும் நியூயார்க்கிலும் அலுவலகங்கள் இருந்தன.  புத்தகம் தயாரானதும், சில பிரதிகளை பிரேம் குடீரில் இருந்த எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் திரு இஸ்ரேல்.  புத்தகம் முறையாக சென்னையில் வெளியிடப்படுவதாக இருந்தபோதும், பம்பாயிலுள்ளவர்க்கும் நூலை அறிமுகம் செய்ய எண்ணினேன்.  ஆளுநர் ஶ்ரீ பிரகாசாவை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தோம்.  அவரது தந்தை டாக்டர் பகவன்தாஸ் அன்னி பெஸன்டுடன் இணைந்து பகவத் கீதையை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.  நிகழ்ச்சியில், ஆளுநர் ஶ்ரீ பிரகாசா பிருந்தாவனைச் சேர்ந்த சுவாமி அகண்டானந்தாவிடம் புத்தகத்தை அளித்துவிட்டு, மாணவன் குருவிற்கு புத்தகப்பிரதியை அளிப்பது முறையல்ல என்பதால் சுவாமி அகண்டானந்தா ஒரு புத்தகத்தை தன்னிடம் அளித்து வெளியிட வேண்டும் என்று கோரினார்.  அன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்ததாயிருந்தது.  நிகழ்ச்சிக்கு முன்னரே ஆளுநருக்கு ஒரு பிரதி அளிக்கப்பட்டிருந்ததால், புத்தகம் குறித்த நேர்மையான மதிப்புரை ஒன்றை அவரால் அளிக்கமுடிந்தது.

சென்னையில் புத்தக வெளியீட்டின்போது குருவும் ஜான் ஸ்பியர்ஸும் இருந்தனர்.  அப்போது லயோலா கல்லூரியின் முதல்வராய் இருந்த தந்தை செக்விரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் வரவேற்புரையாற்றினேன்.  அன்று குருவின் உரை நெக்குருகச் செய்தது.  குரு இப்புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தவர் டாக்டர் தியாகராஜனின் மனைவி டாக்டர் ராமகிருஷ்ணம்மா.  அவரும் விழாவிற்கு வந்திருந்தார்.  அவரே அப்புத்தகம் எழுதப்பட காரணமாக இருந்தவர் என்று குரு எல்லோரிடமும் கூறினார்.  முன்னுரையில் குரு இப்படி எழுதியிருந்தார்: ‘அண்மையில் தத்துவப் படிப்பை முடித்து திருவிதாங்கூர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் உரைகள் ஆற்றிவிட்டு குருகுலத்தில் சேர்ந்திருக்கும் என் நண்பர் நித்ய சைதன்ய யதியும் இவ்வுரையில் சாதாரண வாசகனுக்கு புரியாமல் போகக்கூடிய பகுதிகளை சுட்டிக்காட்டி அவற்றில் சிலவற்றையேனும் நீக்குவதற்கு எனக்கு உதவியிருக்கிறார்.’

அவர் என்னை நண்பன் என குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது.  ஆனால் அவரது பெரும் நூலின் முகப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது உள்ளூர பெருமிதம் அளித்தது.  அவருக்கு என் எண்ண ஓட்டம் தெரிந்துவிட்டது போலும்.  1967-இல் அவரது ஆகச்சிறந்த நூலான An Integrated Science of the Absolute-இன் முன்னுரையில், ‘இதில் எழுதப்பட்டுள்ளவை என் மாணவனான நித்ய சைதன்ய யதிக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்’ என்று எழுதியிருந்தார்.  இதனால் நான் குருவுக்கு பெரிதும் நன்றியுடையவனாய் ஆனேன்.  இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே என் நம்பிக்கைத் துணையாக இருந்துவருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.  அதனுடனான என் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

நடராஜ குருவும் நானும் – 14

Standard

மத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார்.  தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகைய அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார்.  பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர்.  குரு வருவதைப்பற்றி அவர்களிடம் சொன்னதால் அவர்கள் ஒரு வரவேற்பு விழாவை ஒருங்குசெய்தனர்.  அதில் பேசிய குரு நாராயண குருவின் பெயரை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே பார்ப்பதோடு ஒரு பழங்குடித்தலைவராகக் கருதுவதாகவும் கடிந்துகொண்டார்.

நடராஜ குரு என்னுடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு ஒப்புக்கொண்டது பிற சன்னியாசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. ஆங்கிலம் அறியாத அவர்களுடன் ஹிந்தியில் பேசி சமாளித்தார் குரு.  பொருத்தமான ஹிந்தி சொல் தெரியாத இடங்களில் சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தினார். அவர்களின் புலமையையும் மரபான முறையில் வேதாந்தத்தைக் கற்பித்தலையும் கண்டு மகிழ்ந்த குரு அவர்களிடமிருந்து அனைத்து செவ்வியல் ஆக்கங்களையும் கற்க என்னை ஊக்குவித்தார்.

நான் தங்கியிருந்த ‘பிரேம் குடீர்’ ஆசிரமத்தில் முதலில் என்னை வரவேற்ற நண்பர், நான் நினைத்ததுபோல ஒர் மேலாளர் அல்ல; ‘தேவிதயாள் கேபிள்ஸ்’ எனும் நிறுவனத்தின் தலைவரான பெரும் செல்வந்தர். அவர் குருவால் பெரிதும் கவரப்பட்டார்.  குருவுக்கான பணிவிடைகள் அனைத்தையும் அவரே செய்தார்.  குருவுக்கு ஆங்கிலமும் ஃபிரெஞ்சும் தெரியும் என்பதால் பல இடங்களில் அவரது சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார்.  அது எனக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.  ஒவ்வொருநாளும் புதிய பொருள் குறித்து தனித்துவம் வாய்ந்த உரைகளை ஆற்றினார் குரு.  தத்துவமும் உளவியலும், நவீன அறிவியலும் தொல் ஞானமும் கச்சிதமாகக் கலந்து வழங்கப்பட்ட உரைகளைக் கேட்டவர்கள் குருவுடன் அதிக நேரம் செலவிட விரும்பினார்கள்.  பஞ்சாபியரும் குஜராத்தியரும் மராட்டியரும் வங்காளத்தவரும் கலந்த ஒரு பெருநகரத்திற்கு குருவை வரவழைத்ததில் என்பங்கு குறித்து மிகவும் மகிழ்ந்தேன்.

நான் உறுப்பினனாய் இருந்த டாடா நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் இருந்து பல நூல்களை எடுத்துவந்து குருவிடம் அளித்து, மிகக்குறுகிய நேரத்தில் ஒரு நூலின் சாரத்தைப் பெறுவது எப்படி என்பதை கற்றேன். பின்னாட்களில் லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கும் நான் பணியாற்றிய பல்கலைக்கழக நூலகங்களுக்கும் சென்றபோது இது எனக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது.  நான் பம்பாயில் தொடர்ந்திருக்க குரு என்னை அனுமதித்தார்.  விழியற்றோருக்கு சேவை செய்வதாக பசப்புவதைவிட்டு நாராயணகுருவின் கொள்கைகளைப் பரப்புவதில் கவனம் செலுத்தக்கோரினார்.  அந்நாட்களில் பம்பாயில் இருந்த பல விழியற்ற மாணவர்களுக்கு படிப்பாளனாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தேன்.  அவர்கள் எல்லோரையும் குரு மகிழ்வுடன் சந்தித்தார்.  ஆக, விழியற்றோருடனான என் உறவு அவ்வளவு மோசமாக இருக்கவில்லை.

நான் பம்பாயில் இருந்தபோது, குறுகிய காலம் திரு மங்கள்தாஸ் பக்வாஸா பம்பாயின் ஆளுநராக இருந்தார்.  அவர் ஓய்வுபெற்றபோது திரு ஶ்ரீபிரகாசா ஆளுநர் பொறுப்பேற்றார்.  அவர்கள் இருவருமே என்னிடம் பெரிதும் நட்பு பாராட்டினர்.  அப்போது நடராஜ குருவின் ‘Education Manifesto’ எனும் நூல் வெளியாகி இருந்தது. ஆளுநர் தலைமைதாங்கிய ஒரு கூட்டத்தில் நான் குருவின் கல்விக் கொள்கைகளைப் பற்றி பேசினேன். ஆளுநரை அது பெரிதும் கவர்ந்தது.  கூட்டம் முடிந்தபின் ராஜ்பவனில் தன்னுடன் விருந்துண்ண அழைத்தார் ஆளுநர்.  அப்போதும் குருவின் கொள்கைகள் பற்றி பேசினோம்.  பம்பாயில் ஒரு பள்ளியைத் தொடங்கி அதில் குருவின்  கொள்கைகளை சோதனை செய்துபார்க்க வேண்டும் என்றார்.  நான் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

பள்ளியை நடத்துவதற்காக திரு ஹரிகிஷன்தாஸ் அகர்வால் ஐந்து அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை எனக்களித்தார்.  பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளும் ஒன்றாகப் பயிலவேண்டும் என்பதே எங்கள் திட்டம்.  பம்பாயின் செல்வந்தர்கள் கட்டணம் குறைந்த பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை.  எனவே, மற்றெந்தப் பள்ளியைவிடவும் அதிகமான அளவில் கட்டணம் நிர்ணயித்தோம்.  ஆனால் ஏழை மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு நாங்கள் வடிவமைத்த சீருடையும் இலவசமாக வழங்கப்படும்.  செல்வந்தர் வீட்டு அன்னையர் ஏழை மாணவர்களுக்கான சீருடையை வழங்க ஒப்புக்கொண்டனர்.  பள்ளியைப் பற்றி விளம்பரம் அளித்தபோது ஒரு செல்வந்தரின்  – இங்கிலாந்தில் பயின்ற, பிரித்தானிய மனப்பாங்கு கொண்ட – மனைவி பள்ளியில் கற்பிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.  நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்பிய குருவின் கொள்கைகளை அவருக்கு விளங்கவைப்பது பெரிதும் சிரமமாக இருந்தது.  எனது சிக்கல்களை குருவுக்கு எழுதியபோது, கொள்கைகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்றார் குரு.  ஆசிரியை எதிர்ப்புடன் வெளியேறிய இக்கட்டுடன் பள்ளி செயல்படத் துவங்கியது.  பின்னர் ஒரு மராட்டியப் பெண்மணியையும் இளைய சிந்திப் பெண் ஒருவரையும் ஆசிரியைகளாக நியமித்தோம்.  அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர்.  மரீன் டிரைவ் பகுதியில் நல்ல பள்ளி என்ற பெயர் கிடைத்தது.

நடராஜ குருவும் நானும் – 13

Standard

சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன்.  பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது.  அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன்.  அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது.  அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார்.  அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார்.  அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் ரூமி என்னை பெரிதும் கவர்ந்தார்.  ரூமியைப் போலவே நானும் என் ஏழ்மையை பெருமையாகக் கருதினேன்;  மறைவாழ்வே என் புகலிடம் என்றெண்ணினேன்.

ஜியா-உல்-ஹக் என்ற புனைபெயரில் பல குழந்தைகளுக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்.  அவர்களெல்லாம் வளர்ந்த பின்னர், ‘யுவலோகம்’ என்ற அமைப்புக்கு என்னை தலைமைதாங்க கேட்டுக்கொண்டனர்.  மதிகெட்டுப்போன தருணத்தில் பெங்களூரில் இருந்து ஒரு இதழை பதிப்பிக்க ஒப்புக்கொண்டேன்.  இந்த ‘கர்மா’வில் நான் ஆழ்ந்துபோவதற்கு முன்பாக குரு மீண்டும் தோன்றி, சமூக-பொருளாதார வலையெதிலும் நான் சிக்கிக்கொள்வதிலிருந்து என்னை மீட்டார்.

விடுதலை என்னும் விழுமியத்தின் உயர்வை குரு சொல்லச்சொல்ல, மீண்டும் அனைத்தையும் உதறிச் செல்லும் எண்ணம் என்னுள் முகிழ்த்தது.  ஆனால் இம்முறை எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.  எனவே, பிரெய்லி முறையை கற்பதற்கு எனக்குதவும்படி கோரி பம்பாயிலிருந்த என் நண்பருக்கு எழுதினேன்.  என் நண்பர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பதைக் கேட்டபோது, இத்தகைய தந்திரங்களை தான் அறிந்தே இருப்பதாகக் கூறினார் குரு.  ஒருவிதத்தில் இது தவறான தேர்வு என்பது அவரது எண்ணமாக இருந்தபோதும் எனக்குத் தடையாக இருக்கவில்லை.  பெங்களூரிலிருந்து பாம்பே விக்டோரியா டெர்மினஸுக்குச் செல்வதற்கான கட்டணத்தை மட்டும் எனக்குத் தந்தார்.  வழியில் உண்பதற்கென மேலும் பத்து ரூபாய் கொடுத்தார்.  கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு ரூபாய் தந்தார்.  அவர் பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றபோது மேலும் 25 காசுகள் தந்தார்.

அமைதி திகழும் சோமனஹள்ளியைத் துறந்து, பாம்பே எனும் பித்து நகரத்தின் அருவருக்கத்தக்க சேரிப்பகுதியான தாதரில் வாழச்சென்றது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது.  நடராஜ குருவின் பழைய மாணவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று தன் இல்லத்தில் தங்க வைத்தார்.  ஒரே ஒரு அறை கொண்டது அவர் வீடு.  அவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த ஒரே அறையில் வசித்தார்.  அறையின் ஒரு மூலையே சமையலறையாகவும் குளியலறையாகவும் இருந்தது.  அங்கிருந்த ஒரே படுக்கை என்பது ஒரு மர பெஞ்சு மட்டுமே.  பெருந்தன்மையுடன் அது எனக்கு வழங்கப்பட்டது.  அவர் மனைவி அந்த பெஞ்சின் அடியில் உறங்குவார்.  மிச்சமிருந்த இடம் அக்குழந்தைகளுக்கு மட்டும் போதுமானதாயிருந்தது.  நண்பர் வாசலில் படுத்துக்கொள்வார்.  அவர் தலை உள்ளேயும் கால் வெளியிலும் இருக்கும்.  ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம் இருந்தது.  எங்களுடையது ஒற்றைக் குடும்பம்.  பிற அறைகளில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன.  நைல் நதிக்கரையில் நிலக்குடைவில் வாழ்ந்த தன் ஞானகுருவை விட்டுச்சென்று ரோமாபுரியின் கிளர்ச்சிமிகு வாழ்வை ருசிக்கச் சென்ற ஃபிலோமினின் இக்கட்டை அப்போது நானும் உணர்ந்தேன்.  பாம்பே மக்களின் பேச்சு உளறலாகவே எனக்குக் கேட்டது.  நாள் முழுவதும் குருவின் ஒவ்வொரு சொல்லும் என் நினைவிலெழுந்துகொண்டே இருந்தது.  மீண்டும் மேய்ப்பனைப் பிரிந்த ஆடுபோலானேன் நான்.

எனது நண்பர் நடராஜ குருவின் முன்னாள் மாணவர் மட்டுமல்ல; குருவின் உயர் விழுமியங்களுடன் வாழ விரும்பியவர். ஆனால், ஒரு யோகியின் குணம் சிறிதும் கொண்டவரல்ல.  மனிதகுலம் பெரிதாகப் போற்றும் எந்த விழுமியத்தாலும் எளிதில் கவரப்படும் இளகிய நெஞ்சம் கொண்டவர்.  அவரது குணத்துடன் ஒத்துப்போகாத எந்த ஒரு சொல்லும் நடத்தையும் அவரை முரடனாக்கிவிடும்.  அன்பு என்பது அவருக்கு ஒரு பெரும் சவால்; அந்த சவாலை சந்திக்க எந்தத் தியாகத்தையும் செய்ய அவர் சித்தமாயிருந்தார்.  பெரும்சீற்றத்துடன் தன் எதிரியைத் தாக்கவும் அவரால் முடியும்.  நல்ல வாசிப்பு கொண்ட அவர் இந்திய-உலக அரசியல் இயக்கங்கள் பற்றி அறிந்திருந்தார்.  நான் கையில் காசில்லாமல் இருந்ததை அவர் அறிந்திருந்தார்.  பணம் பற்றியும் எனது தேவைகள் பற்றியும் ஒருபோதும் நான் யாருடனும் பேசியதில்லை.  நான் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதையும் சலவைசெய்த உடைகளை எனக்களிப்பதிலும் கவனம் எடுத்துக்கொண்டார்.  அந்த ஒற்றையறை வீட்டில் ஒருவர் குளிக்கும்போது மற்றவர்கள் வெளியே செல்லவேண்டும். கடைக்குச் செல்வது போன்ற சில வேலைகளை இந்த நேரத்தில் செய்துகொள்வது வழக்கம்.  ஒவ்வொரு நாளும் காலையில் சலவைவேட்டியை நான் உடுத்துவதற்குத் தரும்போது அதன் ஒரு முனையில் ஐந்து ரூபாய் முடியப்பட்டிருக்கும்.  எனக்குத்தேவைப்பட்டால் முடிச்சை அவிழ்த்து எடுத்துக்கொள்ளலாம்.  அவர் அப்போதுதான் வியாபாரம் தொடங்கியிருந்ததும் அவருக்கே பணமுடை இருந்ததும் எனக்குத் தெரியும்.  தெள்ளிச்சேரியைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு மந்திரவாதி!  மொத்த குடும்பத்திற்கும் தேவையானதை ஈட்டியவர் அவரே.  விடிகாலையில் கணித வகுப்புகள் எடுப்பார்.  நான் குளித்து சிற்றுண்டி அருந்திய பிறகு அதே அறையில் சில குழந்தைகளுக்கு மராத்தி சொல்லிக் கொடுப்பார்.  மாலைகளில் ஆங்கிலமும் இந்தியும் கற்றுத்தருவார்.  எல்லாவேளையும் குற்றவுணர்வுடனேயே அங்கே உணவருந்தினேன்.

 ஒரு நாள் காலையில் கால்போனபோக்கில் நடந்து, பாம்பே நகரின் செல்வந்தர்கள் வாழும் மெரீன் ட்ரைவை சென்றடைந்தேன்.  சில துறவியர் ஒரு மாளிகைக்குள் செல்வதைக்கண்டு, என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே என நானும் சென்றேன்.  ஆன்மீக சொற்பொழிவுக்காக மக்கள் அங்கே குழுமியிருந்தனர்.  நான்கு துறவிகள் மேடையில் படாடோபமாக அமர்ந்திருந்தனர்.  ஆண்களும் பெண்களும் தரையில் நன்றாக விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அமர்ந்திருந்தனர்.  நான் அவர்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன்.  பாம்பேயில் துறவிகள் சம்சாரிகளுடன் சேர்ந்து வாழ்வதோ அவர்களுடன் அமர்வதோ வழக்கமில்லை என்பதால், என்னருகே அமர்ந்திருந்தவர் துணுக்குற்று என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக மேடையருகே கொண்டு சென்றார்.  அமைதி தவழும் முகம்கொண்ட புனிதர்களுடன் அமர்த்தப்பட்டேன்.   யாரும் யாரையும்விட புனிதராக இருக்கமுடியாது என்பதை நான் நடராஜ குருவிடம் கற்றிருந்தேன். ஆனால் அது ஒரு பாரம்பரியமான ஆசிரமம்.  தலைமைத் துறவி தனது ‘ப்ரஹ்மாஸ்மிமாலா’ என்ற நூலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

உரை முடிந்தபின் அரங்கைவிட்டு வெளியே வந்துபார்த்தபோது என் நண்பர் புதிதாய் வாங்கிக் கொடுத்திருந்த காலணிகளை காணவில்லை.  நான் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, மரியாதைக்குரிய தோற்றம் கொண்ட ஒரு மனிதர் என்னவென்று விசாரித்தார்.  என் காலணிகளை காணவில்லை என்று நான் சொன்னதும், தன் சப்பாத்துகளை கழற்றி என்னை அணிந்துகொள்ளும்படி சொன்னார்.  வட இந்தியாவில் ஒரு துறவி ஆங்கிலத்தில் பேசுவதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  எனவே, நான் ‘Sir, I should not step into your shoes’ என்று சொன்னபோது அவருக்கு வியப்பாயிருந்தது.

கனிவுடன் என்னை ஆசிரமத்தின் அறை ஒன்றிற்கு அழைத்துச்சென்றார்.  வசதியான இருக்கையில் என்னை உட்கார வைத்து நான் மெட்ரிகுலேஷன் தேறியிருக்கிறேனா என்று கேட்டார்.  நான் ஆமென்று சொன்னதும் நான் பட்டதாரியா என்று கேட்டார்.  அதற்கும் நான் ஆம் என்று சொன்னபோது அவரது ஆவல் பெருகியது.  நான் முதுகலைப் பட்டம் பெற்றவனா என்றார்.  அதற்கும் ஆம் என்றேன்.  நான் எதற்காக பாம்பே வந்தேன் என்று கேட்டார்.  பார்வையற்றோருக்கு உதவுவதற்காக நான் பிரெய்லி முறையை கற்க விழைவதையும், முடிந்தால் சமூக உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் விருப்பத்தையும் கூறினேன்.  இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் அந்த ஆசிரமத்தின் மேலாளராக இருக்கவேண்டும் என்று தோன்றியது.  நான் அங்கேயே தங்கவேண்டும் என்றும் பார்வையற்றோருக்கான டாடா பள்ளியில் நான் பிரெய்லி கற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.  டாடா சமூகவியல் நிறுவனத்தில் முனைவர்பட்டப் படிப்புக்கும் உதவுவதாகக் கூறினார்.  ஒரு மந்திரவாதியைப் போல சொன்னதையெல்லாம் செய்தும் தந்தார்.

அந்த ஆசிரமத்தில் நான்கு துறவிகள் தங்கியிருந்தனர்.  ஒவ்வொருவருக்கும் வசதியான தனியறையும் ஏவல் செய்ய பிரம்மசாரிகளும் இருந்தனர்.  ஏழ்மையிலிருந்து செல்வச்செழிப்பிற்குச் சென்றது போலிருந்தது.  இவையெல்லாம் பற்றி குருவுக்கு எழுதியபோது அங்குள்ள அறிஞர்களிடம் வேதாந்தம் பயிலும்படி என்னை ஊக்குவித்தார்.  ஆனால், பார்வையற்றோருக்கு சேவை செய்தல் என்ற என் பெரிதுபடுத்தப்பட்ட எண்ணத்தை அவர் பாராட்டவில்லை.  எவரையும் ஏழை என்றோ பாவப்பட்டவர் என்றோ சொல்வதை அவர் விரும்பியதில்லை.  ‘நாமும் எல்லோரையும் போல ஏழைதான்; பாவப்பட்டவர்தான்’ என்பார்.  பார்வையற்றோருக்காக நான் செய்யவிருந்த தியாகத்தை குரு ஊக்குவிக்கவில்லை என்பது இரக்கமற்ற செயலாகத் தோன்றியது.  எழுத்தாளர் வேத் மேத்தா அக்காலகட்டத்தில் டாடா பார்வையற்றோர் பள்ளியின் மாணவராக இருந்திருப்பார் போலும்.  அந்நாட்களில் எத்தனை கொடுமையான முறையில் அப்பள்ளி நடத்தப்பட்டது என்பதைக் கூறும் புத்தகம் ஒன்றை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

பிரெய்லி முறையை கற்ற பின், பாஸ்டனில் ஒரு வருடப் பயிற்சி பெறுவதற்காக பெர்கின்ஸ் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தேன்.  இதை குருவுக்கு தெரிவித்தபோது, ஒரு துறவி தன் வாழ்க்கைக்கான் ஏற்பாடுகளை செய்துகொள்ளும் முறை இதுவல்ல என்றார்.  அமெரிக்காவிற்கோ பிற நாடுகளுக்கோ நான் செல்வேன் என்பது ஊழாக இருந்தால் தானாகவே அந்த வாய்ப்பு தேடி வரும் என்றும், அத்தகைய வாய்ப்புகளுக்காக நான் பாசாங்குகள் ஏதும் செய்யத்தேவையில்லை என்றும் எழுதினார்.  அவரது சொற்கள் அப்போது கடுமையானவையாக தோன்றின.  எந்த சூழ்ச்சியும் பாசாங்கும் இல்லாமலேயே உலகை குறைந்தது ஆறுமுறையாவது சுற்றிவருவேன் என்றோ மேலும் பலமுறை அரைச்சுற்றுகள் வருவேன் என்றோ அப்போது நான் அறிந்திருக்கவில்லை.   குரு வாக்கு பிழைக்காது என்பது இந்தியப் பழமொழி அல்லவா?

பொருந்தாத மகுடம்

Standard

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை.  அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை.  ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார்.  தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார்.  அதற்குப் பிறகு அவர் தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார்.

என்னாலும் அதைப் போலச் செய்யமுடியும் என்று நினைத்தேன்.  ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன்.  ரமண மகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை.  யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை.  அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதை தடுத்ததுமில்லை.  எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன்.  திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன்.  அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.

துறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன்.  என் அப்பா வீட்டில் இல்லாத நேரம்.  எப்போதும் வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார்.  என் அம்மாவிடம் நான் துறவுமேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன்.  அதைக்கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது.  புன்சிரிப்புடன் தன் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர்.  “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயண குருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்”  என்று மேலும் சொன்னார் அவர்.  என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன்.  பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.

அந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு.  அவர் பெயர் ஜெயராம்.  அதற்கு முன்னால் ஒருமுறை சென்றிருந்தபோது மற்றொருவரும் நண்பரானார்.  அவர் பெயர் ஶ்ரீராம்.  அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.  தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா.  அவர் சுவாமி ராமதாஸ் அவர்களின் சீடர்.  அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகச் சுற்றியலைந்தோம்.  ஶ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் என அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

ஜெயராம் சுவாமி ராமதேவானந்தா என்று பெயரை மாற்றிக்கொண்டார்.  ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் பெயரால் அழைத்து துறவு வழங்கவேண்டும் என்றும் சொல்லி வைத்தேன்.  பிரம்மசாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் அவர்.  சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

சுவாமி என்கிற சொல்லுக்கு பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன்.  ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார்.  ஆனால் மக்கள் என்னை சுவாமி என்கிற ஒட்டுச் சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள்.  அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள்.  உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லை பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக்கொண்டேன்.  அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது.  நான் யாரையும் சீடராக வரித்துக் கொள்ளவில்லை.  என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம்போல் என் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது.

பல்கலைக் கழகத்திலிருந்து ஆன்மீக அனுபவத்தை நோக்கி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.  என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான்.  ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாக தன்னைத் தானாக வளர்த்துக்கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜ குரு ஒருமுறை குறிப்பிட்டார்.  உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான்.  எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை.  உலக வாழ்வை எல்லோரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.

“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும்.  நாடக மேடையில் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும்.  ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜ குரு சொன்ன ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக்கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின  என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.

பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கி விட்டன.  வெறும் கல்லூரிப் பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை.  தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டி பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன்.  என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள்.  ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் அடைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழ் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை.

தேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப்போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது.  ஶ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர்.  வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.

இதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காதுகொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது.  ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர்.  மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்கு பாடங்ளை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன்.  வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டியல் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாக கவனிப்பதில்லை என்பதால் போராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர்.  இந்தியப் பல்கலைக்கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாட்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.

இந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார்.  ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார்.  ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது.  என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.

துறவிக்கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது.  என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன்.  ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளை தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தார்.

இரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச் செல்ல நினைத்திருந்தேன்.  அந்த நாட்களில் பல்கலைக்கழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய மேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கிவிடுவேன்.  அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டுகொண்டே இருந்தார்.  என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்டவண்ணம் இருந்தது.  அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.

ஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது.  என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை.  கேள்வித்தாளை ஒருமுறை பார்த்தேன்.  எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன.  ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது.  மூளையில் எதுவும் தோன்றவில்லை.  மேசை மீது தடித்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்து தூங்கிவிட்டேன்.

மாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார்.  எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர்.  அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.  முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.  அவர் என்னைப் புரிந்துகொண்டார்.  அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார்.  ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன்.

தேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இருஜோடி துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நான் வைத்திருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட நினைத்தேன்.  என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும், கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.  நேர்முகத் தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார்.  அவருடன் வேறு வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர்கள் வெளியே வந்து என்னை வாழ்த்தினர்.  நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்றும் யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார் அவர்.  அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டது.  இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலை பட்டப்படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்துகொள்ள முடியும்.

என் எதிர்காலத் திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார்.  எந்த நோக்கத்துக்காக தத்துவத்தைப் பாடமாக எடுத்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன்.  அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே தன் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார்.  கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார்.  “கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார்.  சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லோரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும்.  எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு.  இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே.  பிளேட்டோ, சங்கரர், ஹெகல் என எந்தத் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை.  அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவ ஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.

“ஒரு தத்துவஞானியின் கையில் தர்க்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும்.  ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக் கொள்ளக்கூடாது” என்றும் எச்சரித்தார்.  இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும், எனக்கு முழுக்க முழுக்க தெரிகிற விஷயத்தையே மற்றவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றும் சொன்னார்.

என்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார்.  அவர் காலில் விழுந்து வணங்கினேன்.  ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார்.  அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.

கன்னியாகுமரிக்குச் சென்று மூன்றுநாட்களில் திரும்பி வரும்படி டாக்டர் மீஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார்.  இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன்.  திரும்பிவரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன்.  என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே இருந்தன.  கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடு இருந்தது.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது.  அப்பயணத்தின்போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன.  எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது.  கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிப்புரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் வாழும் ஆசிரமம் ஆகிய இடங்களில் தங்கினேன்.

செங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன்.  அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது.  மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது.  அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்.  பல கோயில்களுக்குச் சென்றேன்.  அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றை சேகரித்தேன்.  அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் குறிப்பேட்டில் தீட்டிக்கொண்டேன்.

முடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது.  வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன்.   சிறிய கோயிலாக இருந்தாலும் சரி பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன்.  வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன்.  மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை.  ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச்சென்று உபசரித்தார்கள்.  இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை.  அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுளரின் சக்தி தொடர்பான நம்பிக்கைகள் அவர்களுக்கும் இருந்தன.

அந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது.  அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புது மனிதனை நான் சந்தித்தேன்.  ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன்.  பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது.  ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உட்செரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள்.  அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுதுண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.

(Love and Blessings : The Autobiography of Guru Niya Chaitanya Yati.  Edited by Peter Oppenheimer)

தமிழில்: பாவண்ணன்

நடராஜ குருவும் நானும் – 12

Standard

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கால் கழுதைகளைப் போலிருந்தது.  “புனித ஃப்ரான்சிஸ் தன் உடலை ‘என் சகோதரக் கழுதை’ என்று சொல்வது வழக்கம்.  அதையே நாம் நம்மைப்பற்றி இப்போது எந்த மிகையும் இல்லாமல் சொல்லிக் கொள்ளலாம்” என்றார் குரு.  சோமனஹள்ளியின் மண், களியும் மணலும் கலந்த கலவை.  ஈரமாயிருக்கும்போது தளர்ந்தும், காய்ந்துவிட்டால் உலோகம் போல் கடினமாகவும் இருக்கும்.  மேஸ்திரி இல்லாமல் ஒரு சுவர் எழுப்புவது எப்படி என்று குரு செய்து காண்பித்தார்.  தினமும் காலையிலும் மாலையிலும் ஓரிரு மணி நேரம் சமையலறை சுவர் கட்டும் வேலையை நாங்கள் செய்தோம்.  சிறிய திறப்புகளில் உடைந்த கண்ணாடியைப் பதித்து எப்படி ஜன்னல்களை அமைக்கலாம் என்பதை செய்து காட்டினார்.  ஒவ்வொரு முறையும் கல்லையும் மண்ணையும் வைக்கும்போது குமரன் ஆசானின் ‘துராவஸ்தை’யில் வரும் இவ்வரிகள் என் நினைவுக்கு வந்தன:

 குன்றின் மேல் நிற்கும் குடைசாய்ந்த குடில்

வெளிறிய நாய்க்குடை போல

அருகே செல்லச் செல்ல

கண்ணை இன்னும் உறுத்துகிறது

வட்டமாக இல்லை

கோண வடிவில் இல்லை

சதுரமாகவும் இல்லை

கட்டடக் கலையின் எந்த அம்சமும் இல்லை

சுற்றிலும் ஓரடி உயரத்தில்

கோரமான மண் சுவர்

யாருக்கும் அதை பூச வேண்டும் என்று தோன்றவில்லை

கட்டியவனின் கைரேகை கூட அதில் பதிந்திருக்கிறது

பாதி சுவரைக் கட்டி முடித்தபோது, குருவுக்கு எங்கோ செல்ல வேண்டும் என்று தோன்றியது.  அதற்குள் மண் சுவர் எழுப்புவதில் நான் தேறியிருந்தேன்.  குரு கிளம்புவதற்கு இரு நாட்களுக்கு முன்பு புஷ்பாங்கதன் என்னும் சிறுவன் வந்து சேர்ந்திருந்தான்.  வேலையை முடிப்பதற்கு எனக்குத் துணை இருந்தது.

குரு என்னுடன் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு மாலைப் பொழுதும் காதலர்களின் மாலையைப் போல் அமைந்தது.   தெருவோரமாக இருந்த ஆல மரத்தினடியில் ஒரு கற்பலகை இருந்தது.  அதன்மீது இரவு ஒன்பது மணிவரை கூட அமர்ந்துகொண்டிருப்போம்.  சீரகமும் வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீர் எப்போதும் இருக்கும்.  எங்கள் சீரகத் தேநீரை சிறிது சிறிதாக இடைவிடாது பருகிக்கொண்டிருப்போம்.  ஒவ்வொரு மாலையும், குரு தான் நாராயண குருவுடன் கழித்த நாட்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார்.  நாராயண குருவின் மகத்தானதும் அதே சமயம் பரிதாபகரமானதுமான பின்புலத்தைப் புரிந்து கொள்ள அது எனக்கு மிகவும் உதவியது.

நாராயண குருவின் எழுத்துக்களில் உள்ள பல மறைபொருட்களை குரு என்னுடன் பகிர்ந்துகொண்டார்.  பிற பெரும் அறிஞர்களுடைய போதனைகளுக்கு ஈடானதும் அவற்றை விஞ்சக் கூடியதுமான அவை, குருவின் பெருமையை உணர்த்தின.  நாராயண குருவுடன் ஒட்டிக்கொண்டிருந்த சாதியினரின் முரட்டுத்தனம், கீழ்மைகள் மற்றும் முட்டாள்தனத்தைப் பறைசாற்றும் பல சம்பவங்களை குரு விவரித்தார்.  இவர்கள் நாராயண குருவின், ‘ஒரே குலம், ஒரே மதம், ஒரே தேவன்’ என்ற மந்திரத்தை அடிக்கடி சொன்னாலும், தங்களது சாதியுணர்வில் மூழ்கியவர்களாகவே இருந்தனர்.  அவர்களது சாதிப் பித்தினால் பிற சாதியினரில் எவரையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை.  மொத்த சாதியுமே ‘அடக்குமுறைப் பித்து’ கொண்டதாய் இருந்தது போலும்.  தங்கள் வாழ்வில் நிகழும் எதையும், ‘சவர்ணத்தவர்’ என்று அவர்கள் இழிவாகக் குறிப்பிடும் மக்களால் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறையாகவே கண்டனர்.  அது தீர்க்கப்படமுடியாத கூட்டு நனவிலி நோய் என்று குரு கருதினார்.  குரு தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை பெருமையுடன் நினைத்தவர்களே, கள்ளிறக்குதலும், பதநீர் காய்ச்சலும் இழிவான தொழில் என்று கருதினர்.  கேரளத்தவர்கள் எப்போதும் ‘கர்மபூமி’யைச் சேர்ந்தவர்கள்.  ஆன்மீகத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  சங்கரரே, இதனால்தான் இந்தியாவின் வடவெல்லைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

எங்களது மாலைகள் மூன்று மணிநேர இரவு வகுப்புகள் போலிருந்தன.  சமூகவியல், இந்திய கலாசார பாரம்பரியம், இந்திய குருமார்களின் சிலுவையேற்றம் – இவற்றிலெல்லாம் நான் புதிய புதிய பாடங்களை கற்றபடி இருந்தேன்.  குருமார்கள் தோற்கடிக்கப்படுவது சிலுவையில் அறையப்படுதல் மூலமல்ல; முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருவராக பீடத்தில் ஏற்றப்படுவதன் மூலம்.  நாராயண குரு மீதான பக்தி வழிபாட்டிற்கு எந்தக் குறையும் இல்லை.  ஆனால், ஒரு உண்மையான ஞானி என்ன சொல்கிறார் என்பதை அறிவுபூர்வமாக கேட்டுக்கொள்ள எவரும் இல்லை.  எஸ்.என்.டி.பி. யோகம் – அது அவரது தந்தையால் துவங்கப்பட்டதாக இருந்தபோதும் – முழுக்க முழுக்க ஒர் சாதீய நிறுவனம் என்பதை குரு எனக்கு விளங்க வைத்தார்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நாராயண குருவைப் பற்றிய என் புரிதல் விரிந்துகொண்டே சென்றது.

நோயை எதிர்கொள்ளல்

Standard

அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு

இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன்.  மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள்.  இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம்.  ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது.  மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும்.  ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது போன்றவற்றை அவரால் தன்னுடைய நண்பர்களுக்குச் சொல்ல முடியும்.

புற்றுநோய் வந்து உடலெங்கும் பரவினால் மரணம் நிச்சயம்.  எனவே மக்கள் இந்த நோய்களைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.  இன்னொரு பெரிய உயிர்க்கொல்லி பக்கவாதம்.  ஆபத்துக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு நபரை இந்நோய் ஒரே விநாடியில் தாக்கி வீழ்த்திவிடும்.  மரணம் என்று தீர்மானிக்கப்பட்டால் அது சில கணங்களில் சம்பவிக்கலாம்.  இல்லையென்றால் அவர் சில நாட்களுக்கு வாழலாம்.  பக்கவாதத்தின் இன்னொரு அம்சம் அது வழக்கமாக மூளையை பாதிக்கிறது.  பக்கவாதத் தாக்குதலின் தீவிரம் மற்றும் அது உண்டான இடம் ஆகியவற்றைப் பொறுத்து நோயாளி முடமாகிவிடுகிறார்.  பேசமுடியாததாலும், வார்த்தைகளை ஒழுங்கமைக்க முடியாததாலும் நோய் எப்படி வந்ததென்றும், அதை அவர் எப்படி அனுபவித்தார் என்றும் பிறரிடம் விவரிக்கமுடியாமல் போய்விடலாம்.  எனவே,  மாரடைப்பு அல்லது புற்றுநோயைவிட அதிக பீதி உண்டாக்கும் நோயாக பக்கவாதம் கருதப்படுகிறது.

ஆனால் நான் பக்கவாதத்தை அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு என்றும் அது ஒரு நன்மை என்றும் கருதி அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.  தற்போது நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்.  அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்று கருதுகிறேன்.  கடவுள் நோயைக் கொடுத்து மனிதர்களை தண்டிக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.  ஆனால் அது இந்தியக் கருத்தாக்கம் கிடையாது.  நாராயண குரு துன்பத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் உண்மையான கடவுளாக (ariya) வந்து உங்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் (sayujya) கொள்கிறார் என்று சொல்கிறார்.  நீங்கள் கடவுளுடன் ஒன்றிணைந்துவிட்டபோது மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் உங்களுக்குக் கிடைக்கிறது.  ஒரே சமயத்தில் கடவுளுடனும் இவ்வுலகத்துடனும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.

நடராஜ குருவுக்கும் ஒருமுறை பக்கவாதம் வந்தது.  நான் அவருடன் உட்கார்ந்திருக்கும்போதெல்லாம் அவர் சொல்வார், “நித்யா, இது ஒரு மோசமான வியாதி, உனக்கு இது வரக்கூடாது.”  எனக்கு அந்த நோய் வரக்கூடாது என்று அவர் பிரத்யேகமாகச் சொன்னதால் அது அவருடைய ஆசி என்று நான் நினைத்தேன்.  அப்போதுகூட என்றைக்காவது ஒருநாள் அது எனக்கு வரும் என்று நான் பயந்தேன்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் தெரிந்ததும் வைத்ய மடத்தைச் சேர்ந்த சிறந்த இந்தியமுறை மருத்துவரான செறிய நாராயணன் நம்பூதிரியிடம் விரிவான ஒரு சிகிச்சையை மேற்கொண்டேன்.  சிகிச்சைக்குப் பிறகு அச்சிகிச்சைக்கு என்று ஒரு ஒழுங்கு நியதி இருக்கிறது என்று வைத்தியர் சொன்னார்.  அந்த ஒழுங்கிலிருந்து நான் விலகினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் சொன்னார்.  ஒரு ஒழுங்கை மீறினால் உண்டாகும் விளைவைப் பற்றிச் சொன்னால் நிறைய பேர் அதை ஒரு தண்டனையாகத்தான் கருதுவார்கள்.  நான் அந்த ரீதியில் எப்போதும் சிந்தித்தது கிடையாது.  பயணம் மேற்கொள்ளவோ, பேசவோ கூடாது என்பது எனக்கு இடப்பட்ட நியதி.  மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அன்றே, முதியவரும் நோயுற்றவருமான ஆர். கேசவன் வைத்தியரைப் பார்க்க விரும்பினேன்.  அங்கிருந்த அவருடைய மனைவி எனக்குக் கஞ்சி கொடுத்தார்.

அடுத்த நாள் காலை விடைபெற்றபின் ஆறுநாட்கள் விரிவான பயணம் மேற்கொண்டேன்.  கடும் வெயிலில் காரில் பிரயாணம் செய்து மூன்று குருகுலங்களுக்குப் போனேன்.  அது என்னை கடுமையாக களைப்படைய வைத்தது.  அங்கிருந்து தலைச்சேரியிலிருந்த அனந்தனுடைய இடத்துக்குப் போனேன்.  மாலை ஐந்து மணிக்கு கனகமலா குருகுலத்தின் பிரதான கட்டிடத்துக்கான பூமிபூஜை நடைபெற இருந்தது.  ஆனால் மாலை நான்கு மணிக்கு எனக்கு பக்கவாதம் வந்துவிட்டது.  ஒரே வினாடியில் வந்து முடிந்துவிட்டது.  ஆனால் அந்த ஒரே வினாடியில் எழுபத்தாறு வருடங்கள் நான் கற்ற அனைத்தும் என்னை விட்டுப் போய்விட்டது.  என்னுடைய பெயரையும், அடையாளத்தையும் கூட நான் மறந்துவிட்டேன்.  எல்லாம் போய்விட்டது.

அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.  ஒரு படுக்கையில் நான் கிடத்தப்பட்டேன்.  எனக்கு வந்தது பயங்கரமான பக்கவாதம் என்பதை நான் பிறகு தெரிந்துகொண்டேன்.  மெதுவாக நினைவு திரும்பியது.  அதன் பிறகு, சுவாசம் என்ற உயிரின் ஒரே அறிகுறியுடன் மட்டுமே இருந்த ஒரு பிணத்தைப் போலத்தான் என் உடல் இருந்தது.  சில நாட்கள் கழித்து உணர்வு திரும்ப ஆரம்பித்தது.  எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடனடியாக எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் பக்கவாதத்துக்கு மருந்தும் அனுப்பினார்.  அதற்குப் பெயர் பத்யம் (பாதை தவறாமை).  அதை நான் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.  பன்னிரண்டு நாட்களுக்கு அவர் எனக்கு மருந்தைக் கொடுத்திருந்தார்.  நோய் குறைந்த மாதிரி தெரியவில்லை.  பிறகு இன்னொரு பன்னிரண்டு நாட்களுக்கான மருந்தைக் கொடுத்தார்.  அடுத்து தன்னுடைய இடத்துக்கே வந்து என்னை சிகிச்சை மேற்கொள்ள அழைத்தார்.

எனக்கு ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலுக்கும், வழக்கமாக உண்டாகும் நோய்க்கும் வித்தியாசம் உள்ளது என்பதை இந்த இடத்தில் சொல்ல் விரும்புகிறேன்.  மருத்துவர் என்னுடைய கவனத்தை என் வலது காலின் மீது செலுத்தும்படி சொல்லி கால்விரல்களை அசைக்கச் சொன்னார்.  எவ்வளவு முயன்றும் என்னுடைய கால் விரல்களில் அசைவே இல்லை.  பிறகு அவற்றை லேசாக என்னால் அசைக்கமுடிந்தது.  உயிரின் முதல் அறிகுறி என்னிடம் உண்டானது.  ஒவ்வொரு இயக்கமும் மீண்டும் என்னிடம் திரும்பும் என்றும், பிறகு நான் என்னுடைய இயல்பான சுயத்தை அடைந்துவிடுவேன் என்றும் மருத்துவர் சொன்னார்.  அவர் சொன்னதில் நம்பிக்கை பெற்ற நான், அன்று முதல் இந்த நோய் பற்றிய பயத்தை கைவிட்டேன்.  மறுவெளிப்பாட்டின் அதிசயத்தைக் காணத் தொடங்கினேன்.  இறந்துபோன நான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுவெளிப்பாடு கொள்கிறேன்.  என்னுடைய வலது கண்ணும் வலது காதும் சரியாக இயங்கவில்லை.  பிறகு கொஞ்சம் வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.  பிறகு முன்பு போலவே என்னுடைய வலது கண்ணால் பார்க்கமுடிந்தது.  காதும் கேட்க ஆரம்பித்தது.  வாழ்வின் இந்த இரண்டு முக்கிய புலன்களும் தெளிவான மறு இயக்கம் பெற்றன.

நாராயண குருவின் ‘தெய்வ தசக’த்திலிருந்து இரண்டு செய்யுள்கள் என்னுடைய நினைவுக்கு வந்தன.

பரம்பொருளே, படைப்புச் செயல் நீயே,

படைப்பின் பலவகையும் நீயே,

கடவுளே, உன்னிலிருந்தன்றோ

எல்லாம் படைக்கப்பட்டன!

நீதானே மாயை, மாயையை இயக்குபவன் நீதானே?

மாயையை மகிழ்ந்து கொண்டாடுபவனும் நீதானே?

உண்மையானவனும் நீதானே?

மாயையை விலக்கி

தூய இணைப்பை வழங்குபவனும் நீதானே?

Sayujya என்கிற அந்த திவ்ய இணைப்புக்காக ஒவ்வொரு கணமும் நான் காத்துக் கொண்டிருந்தேன்.  நான் இந்த மூன்று விஷயங்களுக்கு சுருதி சேர்க்கப்பட்டிருந்தேன்.

பரம்பொருள், படைப்பு மற்றும் படைக்கப்பட்ட உயிர்கள்

கடந்தநிலை (Transcendence) என்கிற உயரிய இரக்க குணம் கொண்ட கடவுள் ஒருவர் உண்டு என்பது உண்மைதான்.  அந்த கடந்தநிலையில் ஒருவருடைய ஆன்மாவின் உண்மையான வெளிப்பாடு நிகழ்கிறது.  அந்த மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டால் அதன்பின் காலதாமதம் என்பதே கிடையாது.  நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது இருமினால்கூட என் உடலின் எல்லா முக்கிய உறுப்புகளும் ஒரு புதிய வாழ்வை அனுபவிக்கின்றன.  இப்படியாக ஒரு முதிய இறந்த உடலிலிருந்து மறைக்கப்பட்டிருந்த ஒரு உயிர் வெளிவருகிறது.  அது ஓர் அதிசயமாக மாறுகிறது.

என்னுடைய உடலில் நடக்கும் ஒரு சிறிய அசைவுக்காக காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது பயன்தரும் செயல்தான்.  ஏனென்றால் அந்த உயிர் மீண்டும் திரும்பிவிட்டது.  எனக்கு சிரமத்தைக் கொடுத்த மொழியும் அனேகமாக மீண்டுவிட்டது.  பக்கவாதம் வந்த சில நாட்களிலேயே என்னால் பேசமுடிந்தது.  ஆரம்பத்தில் நான் நினைவுகூர முயன்ற வார்த்தைகள் வரவில்லை.  ஆனால் இப்போது அந்த நிலையிலிருந்து விடுபட்டு நான் விரும்பும் வார்த்தைகளை என்னால் நினைவுகூர முடிகிறது.

இப்போது என்னுடைய இடதுகால் உயிர் இயக்கத்துடன் இருக்கிறது.  ஒருவகையில் இறந்துபோய்விட்ட என்னுடைய வலதுகால் மெதுவாக என்னுடைய இடதுகாலுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளது.  அதே போல, என்னுடைய வலதுகை இயக்கமற்று இருந்தது.  நான் ஓவியம் வரையத் தொடங்கினேன்.  ஆனால் என்னுடைய வலதுகை விரல்களால் எதையும் பிடிக்கமுடியவில்லை.  அதனால் என்னுடைய வலதுகைக்கு துணைபுரியும்படி இடதுகையைப் பயன்படுத்தி கோடுகளை வரைந்தேன்.  இந்த முறையில் கனகமலாவில் நான் இருபத்து ஒன்பது சூர்யோதயங்களை வரைந்தேன்.  நான்கு அல்லது ஐந்து ஓவியங்களை மட்டுமே இடது கையாலேயே வரைந்தேன்.  இடது கையின் உதவியால் தூரிகையை வலதுகையில் வைத்து அதை இடது கையால் பிடித்துக் கொண்டேன்.  நான் பார்த்த வண்ணக் காட்சிகளை வரைந்தேன்.  அதை நீங்கள் பார்த்தால் எனக்கு நடந்த எதையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது.  என்னுடைய அழகியல் உணர்வு, நிறங்களின் கூட்டு மற்றும் அமைப்பு முறை – இவையெல்லாம் சரியாக இருக்கும்.   கனகமலாவை விட்டுச் செல்லத்தயங்கினேன்.  ஆனால் இங்கும் அழகான சூர்யோதயங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டேன்.

சில நாட்கள் நான் உள்ளேயே இருந்தேன்.  நேற்றுதான் முதன்முதலாக காலை ஆறுமணிக்கு கிழக்குப் பக்கம் போய் வரைந்தேன்.  இன்று இன்னும் கொஞ்சம் தாமதமாக எழுந்து அந்த இடத்துக்குப் போய் அமைதியாக உட்கார்ந்து வரைந்தேன்.  எல்லாம் எளிமையாக நடந்தது.

நாராயண குரு ariya (உண்மையான ஒன்று) என்று அழைப்பது நாம் உள்ளார்ந்த ஆற்றல் (potential) என்று சொல்வதில் இருக்கிறது.  நீங்கள் ஒரு முட்டையை எடுத்து அதற்குள் கோழிக்குஞ்சைத் தேடினால் உங்களால் அதைக் காணமுடியாது.  அதேபோல பொருண்மையின் முதல் உருவாக்கம் உயிரின் எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை.  ஆனால் முட்டையை ஒரு பெட்டைக்கோழி இருபத்தோரு நாட்களுக்கு அடைகாத்தால் அந்த முட்டைக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது.  உயிருள்ள ஒரு கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவருகிறது  அதுபோல என்னுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டுள்ளது.  எனவே, பக்கவாதம் என்ற நோய் எனக்கு வந்துவிட்டது என்று புலம்புவதற்கு பதிலாக “எனக்கு இந்த நோய் வந்தது அதிர்ஷ்டவசமானது” என்று நான் சொல்கிறேன்.  கடவுளின் அதிசயச் செயலை அறிய அது எனக்கு உதவுகிறது.  பொருண்மையின் உள்ளார்ந்த ஆற்றலிலிருந்து எப்படி உயிர் பரிணமித்து, அது ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தோற்றத்தைப் பெறுகிறது என்பதையும், அந்த வளர்ச்சி ஓர் அதிசய உணர்வுடன் இணைந்து உருப்பெறுகிறது என்பதையும் நான் அறிகிறேன்.  இறந்துபோன என்னுடைய உடலின் ஒரு பகுதி இழந்த வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு மீண்டும் அழகிலும், மகிழ்ச்சியிலும் வாழ விரும்புகிறது.

எனவே கடவுள் எனக்கு இட்ட சவாலை அவருடைய அதிசயத்தின் மூலமே ஏற்றுக்கொண்டேன்.  கடவுள் அக்கறையற்றவர் அல்லர்.  மாறாக இவ்வுலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் எல்லாக் கூறுகளைப் பற்றியும் பொறுப்புணர்வு கொண்ட புத்திசாலி அவர்.  பொறுமையை கைக்கொண்டால் எப்படி வாழ்வு திரும்பிவந்து வாழ்க்கையின் எல்லா சாத்தியங்கள் வழியாகவும் கடந்து சொல்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டோம்.  வளர்ச்சியும் மாற்றமுமே வாழ்க்கை என்றுதான் நாம் முன்பு புரிந்துகொண்டிருந்தோம். ஆனால் நாம் இப்போது அதை வேறு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.  எனவே பக்கவாதம் மரணத்திற்கு எதிரானது.  எதை வாழ்க்கை அடைகிறதோ அது இறந்துபோனது.  கடவுள் உண்டாக்கும் படைப்பின் பெரு மகிழ்ச்சியை அது நமக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.  கடவுளைப் பற்றியும் நோயைப் பற்றியும் அதுதான் என் கருத்து.  நோய் என்பது கடவுளின் படைப்புமொழி.

தமிழில் – ஆர் சிவகுமார்

(‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து)

நடராஜ குருவும் நானும் – 11

Standard

சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார்.  குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன்.  இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார்.  இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது.  நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின.  ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது.  நம் தந்திரத்தை மாற்றி அவற்றை குழப்ப வேண்டும் என்றார் குரு.  அவற்றை விரட்டுவதற்கு பதிலாக, அவற்றுக்கு வேர்க்கடலை தர வேண்டும் என்றார்.  இது குரங்குகளிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்றாலும், எந்த ஒரு துன்பத்தையும் ஒருவிதமான பகடியாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன்.

யெங்டாவை குருவுக்கு மிகவும் பிடித்துப்போனது.  குரங்குகள் என் உணவை உண்டதும் அரிசியில் மூத்திரம் பெய்ததும் சரியானதா என்று அவனிடம் கேட்பார். “அவை பசித்திருந்ததால் உணவை உண்டது சரிதான்.  ஆனால் மூத்திரம் பெய்தது தவறு” என்பான் யெங்டா.   இதைக் கேட்டு குரு அடக்க மாட்டாமல் சிரிப்பார்.  ஒரே நாளில், பல முறை அவனது தீர்ப்பை சொல்ல வைத்து, மீண்டும் மீண்டும் சிரிப்பார் குரு.  ஒருவிதமாக, குரங்குகளுக்கு நான் பழகிப்போனேன்.

குரு வந்தபிறகு எங்களது மதிய உணவு கொஞ்சம் விமரிசையானது.  நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே அமர்ந்து உண்போம்.  முதல் நாள், குரு யெங்டாவிற்கு அரிசிச் சோற்றை கொடுத்தபோது யெங்டா, “அரிசிச் சோற்றை உண்ண வேண்டும் என்பது என் தலைவிதியா?” என்று கேட்டான்.  இதைக் கேட்ட குருவின் கண்கள் கலங்கிவிட்டன.  அவன் கன்னடத்தில் சொன்னதை தானும் ஒரு முறை சொல்லிவிட்டு அதை மலையாளத்தில் எனக்கு மொழிபெயர்த்தார் குரு.  “இவனுக்கு நேர்ந்த துயரைப் பார்.  இதற்கு முன் அவன் அரிசிச் சோறே தின்றதில்லை. அவனுக்குக் கிடைப்பது வெறும் கேப்பைக் களி மட்டுமே.  அரிசிச் சோறு தின்பது அவனுக்குத் துயரமாய் இருக்கிறது” என்றார்.  பின்னர் என்னிடம் “செல்வம் எங்கிருந்து வருகிறது?” என்று கேட்டார்.  நான் மெளனமாயிருந்தேன்.  குரு தொடர்ந்தார், “ஆடு மேய்க்கும் இந்த யெங்டாவிடமிருந்து வருகிறது.  பால், கம்பளி, மாமிசம், தோல் – எல்லாம் ஆட்டிடமிருந்து.  அதே போல், கம்பு, சோளம், கோதுமை, பார்லி, கேப்பை – எல்லாம் விளைவிக்கும் ஏழை விவசாயியின் கைகளிலிருந்து.  இதுவே செல்வத்தின் ஆதாரம்” என்றார்.

அடுத்த இரண்டு வாரங்களில், இவ்விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினார் குரு.  மார்க்ஸ் மேலும், மார்க்ஸியப் பொருளாதாரம் மேலும் நான் முன்னர் கொண்டிருந்த பற்றினை குரு அறிவார்.  ஒரு வாரம் கழித்து, “நீ உலகை மாற்ற விரும்பினால், முதலில் அதன் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்.  செல்வக் குவியலும் இல்லாமையும் அருகருகே இருக்க முடியாது.  இருக்கவும் கூடாது” என்றார்.  உலகப் பொதுமைப் பொருளாதாரம் குறித்து ஒரு புத்தகம் எழுதுவதென் முடிவு செய்தார் குரு.  பசியாலும் ஊட்டமின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்த யெங்டா நீண்ட நாட்கள் வாழவில்லை.  ஆனால், அவன் மூலம் நான் அடைந்த அகத்தூண்டல், வாழ்வு மீதான என் பார்வையில் அதி முக்கியமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.  நடராஜ குரு யெங்டாவை அன்புடனும் பாசத்துடனும் நடத்தியவிதம் என்னுள் இன்றும் இனிமையான நினைவாகத் தொடர்கிறது.

நடராஜ குருவும் நானும் – 9

Standard

அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன்.  அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான்.  போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு.  எனக்கு அளவில்லா கோபம் வந்தது.  என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்கு குரு, “அப்படியானால் சரி, அந்தப்  பைகளை எடுத்து உள்ளே வை” என்றார்.  யாரோ எடுத்து வைத்தார்கள்.  நான் வெளியே செல்வதைப் பார்த்து வாசலுக்கு வந்த குரு, “நீ சுத்த பைத்தியம்.  ஒரு பைத்தியக்காரனை சமூகத்தில் உலவ விடுவது ஆபத்தானது” என்றார். “சர்க்கஸ் புலியை தெருவில் விட சர்க்கஸ் முதலாளி அனுமதிப்பானா? அப்படித்தான் இதுவும், நான் சர்க்கஸ் முதலாளி, நீ முரட்டுப்புலி.  கூண்டுக்குள்ளே போ!”  இச்சொற்களை நான் ரசிக்கவில்லை.  நான் தெருவிலிறங்கி நடக்க ஆரம்பித்தேன்.  குரு பின்னாலேயே வந்து என் கையைப் பற்றி, “உண்மையாகவே நீ போகத்தான் வேண்டுமென்றால், நீ போவதற்கு முன்னால் உனக்கான தண்டனையை நான் கொடுக்க வேண்டும்” என்றார்.  “தாராளமாக” என்றேன்.  என் வலது கன்னத்தில் இரண்டு முறை அறைந்தார்.  சரியான கிறித்தவனைப் போல, எனது மறு கன்னத்தையும் காட்டினேன்.  எனது இடது கன்னத்திலும் அறைந்தார்.  பாதி கெஞ்சலாகவும் பாதி வாழ்த்தாகவும் ஒலித்த குரலில், “வேறு யாரும் உன்னை அடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் உன்னை அடிக்கிறேன்” என்றார்.  நான் தொடர்ந்து நடந்தபோது, மிகவும் மிருதுவாக என் கையைப் பற்றி, “எங்கு போனாலும் ‘அலபமாத்ர அகிலம்’ என்பதை மட்டும் மறக்காதே.  பிறர் சொல்வதாக நாம் காதில் கேட்பது காற்றில் எழும் ஒரு அதிர்வு மட்டுமே.  அது பாராட்டாகவோ குற்றச்சாட்டாகவோ ஒலிக்கலாம்.  ஒன்றுக்கொன்று முரண்பட்டதை இல்லாமலாக்கி தன் சமநிலையை இழக்காமலிருப்பதே உண்மையான ஆன்மீகம்” என்றார்.  என் கால்கள் தடுமாறின.  என் கோபம் காணாமல் போனது.  அமைதியும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வும் தோன்றியது.  ஆனால் எப்படியும் நான் போய்விடுவது என்று தீர்மானித்தேன்.

நாள் முழுவதும் இலக்கின்றி அலைந்தேன்.  அப்போது உலகப்புகழ் பெற்ற போதகர் பில்லி க்ரஹாம் என்பவரின் உரையைக் கேட்பதற்காக கோட்டயம் சென்றுகொண்டிருந்த ஒரு கிறித்தவ நண்பரைப் பார்த்தேன்.  மறுநாள், மேடையில் பில்லி க்ரஹாம் தோன்றுவதற்காகக் காத்திருந்த லட்சக்கணக்கானவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன்.  மொத்த ஏற்பாடுகளும், மேடையில் பேச்சாளர் தோன்றிய விதமும் அற்புதமான ஒரு நாடகம் போலிருந்தது.  மீண்டும் நான் ஏமாற்றப்பட்டவனாகவும் தெளிவடைந்தவனாகவும் உணர்ந்தேன்.

என் சொந்த கிராமத்திற்குச் சென்று, ஆசிரமம் போல் நான் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே என் வீட்டில் தனியாகக் கட்டப்பட்ட அறைக்குள் சென்று மெளனத்தில் ஆழ்வதற்கு என் தாயின் சம்மதத்தைக் கேட்டேன்.  இது போன்ற நேரங்களில் என் தாயார் எப்போதும் தைரியமாகச் செயல்படுவார். வார்த்தைகளை வீணாக்காமல் நான் ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தார்.  நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள அத்தனி அறையில் நுழைந்து கதவை மூடிக்கொள்வதைக் காண மிகப்பெரிய கூட்டம் ஒன்று ஆசிரமத்திற்கு வந்தது.  ஒரு மாதம் கழிந்த பின்னர் வர்க்கலையிலிருந்து இருவர் என்னைக் காண வந்தனர்.  நான் அறையிலிருந்து வெளிவராததால், நான் குருகுலத்தில் விட்டுவந்திருந்த எனது நோட்டுப் புத்தகங்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.  தனிமையில் நான் இருந்த முதல் மாதத்தில் எனது பழைய சம்ஸ்காரங்கள் அனைத்திலிருந்தும் என்னை துண்டித்துக் கொள்ள நினைத்தேன்.  ஆதலால், எதையும் படிக்கவோ எழுதவோ யார் முகத்திலும் விழிக்கவோ மறுத்தேன்.  நான் அங்கேயே தனிமையில்-மெளனத்தில் பதினெட்டு மாதங்கள் இருந்தேன்.

மக்களிடமிருந்து விலகி நான் தனிமையில் ஆழ்ந்த போது, அருகாமையில் இருந்தவர்களில் 80 சதவீதம் மக்கள் என்னை முழுப் பைத்தியம் என்று கருதினர்.  ஆனால், மக்களின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.  நான் இன்னொரு சாய்பாபா ஆகிவிடும் அபாயம் எனக்குத் தெரிந்தது.  இதனால் ஆசிரமத்தை விட்டு இமயமலைக்குச் செல்ல நினைத்தேன்.  போவதற்கு முன் மீண்டும் மெளனமாக நடராஜ குருவின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வர்க்கலைக்குச் சென்றேன்.  குரு மற்றவர்களுடன் அமர்ந்து கஞ்சி அருந்திக் கொண்டிருந்தார்.  கதவருகில் என்னைக் கண்டதும் எழுந்து ஓட்டமும் நடையுமாக வந்தார்.  விழுந்து வணங்கிய என்னைத் தூக்கி நிறுத்தி சத்தமாக “இதோ மனம் திருந்திய மைந்தன் (Prodigal Son) திரும்ப வந்துவிட்டான். இதை ஓவியமாக்க மைக்கலேஞ்சலோ இல்லையா?” என்றார்.

மறுநாள் காலை நடராஜ குருவின் பிரார்த்தனை வகுப்பில் கலந்து கொண்டேன்.  ‘ஆத்மோபதேச சதகத்தின் முதல் சுலோகத்தில் வரும் ‘கரு’வின் முக்கியத்துவம் யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டார்.  என்னை நோக்கி கேட்கப்பட்டது அந்தக் கேள்வி. ஸ்பினோசாவின் கருவைப் போன்றது அது என்பதை சொல்ல நினைத்தேன்.  ஆனால் என் மெளனத்தைக் கலைத்துக் கொள்ள விரும்பவில்லை.  எனக்குள் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தை என் கண்களில் கண்டார் போலும். குரு சொன்னார், “நித்யா பேசியிருந்தால், ‘ஸ்பினோசாவின் கரு’ என்று சொல்லியிருப்பான்.”  கருவின் அர்த்தத்தை விவரமாக சொன்ன குரு அது வைசேஷிக தத்துவத்தின் ஒரு பிரிவிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதையும் விளக்கினார்.  வகுப்பு முடிந்ததும், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, சம்பிரதாயமாக விடையேதும் பெறாமல் தெருவில் இறங்கி நடந்தேன்.

ரயிலேறி திருவனந்தபுரம் சென்று, மருத்துவக் கல்லூரியில் பயிற்சி (residency) மேற்கொண்டிருந்த என் சகோதரியைப் பார்த்தேன்.  நான் மெளனமாக இருந்தது அவருக்கு வருத்தமளித்திருக்கும் போலும்.  அவரும் எதுவும் பேசவில்லை. நாராயணகுரு எழுதிய புத்தகங்கள், எனது நோட்டுப் புத்தகம், பைபிள், கீதை மற்றும் Altar Flowers – இவை கொண்ட என் தோள் பையில் ஒரு காகித உறையை வைத்தார் என் சகோதரி.  மருத்துவக் கல்லூரியிலிருந்து மீண்டும் ரயில் நிலையத்திற்கு நடந்தேன்.  மிகவும் களைப்பாக இருந்த்து.  நோய்வாய்பட்டிருந்த திரு குஞ்ஞிகிருஷ்ணனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கடக்காவூர் செல்ல இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்க நினைத்தேன்.  கேரளாவிற்கு இனி திரும்பப் போவதில்லை என்று என் மனதிற்குத் தோன்றியது.  போவதற்கு முன் அந்த நல்ல மனிதரைப் பார்க்க வேண்டும் என எண்ணினேன்.  ரயில்பெட்டியில் ஏறும்போதே மிகவும் சோர்ந்திருந்தேன்.  சகோதரி கொடுத்த உறையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டேன்.  மீதம் 29 ரூபாய் இருந்தது.  ரயில் கடக்காவூரை அடைந்தபோது நான் நன்றாகத் தூங்கிவிட்டேன்.  அடுத்த நிறுத்தத்தில் பெரும் உலுக்கலோடு வண்டி நின்றபோது, விழித்துக் கொண்டு வெளியே பார்த்தேன் – அது வர்க்கலை!

செய்வதறியாமல் குழம்பி உட்கார்ந்து ரயிலில் ஏறுவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.  நான் கண்டது யாரை!  நடராஜ குருவல்லவா!  தன் தடி, பை, மேலங்கி, ஃப்ரெஞ்ச் வட்டத் தொப்பி இவற்றுடன் என் எதிரே வந்து நின்றார்.  என்னைப் பார்த்துவிட்டு என்னருகே வந்து அமர்ந்தார்.  நான் பேசுவதில்லை  என்பதால் அவரும் பேச விரும்பவில்லை.  “நீ என்னுடன் வருகிறாயா?” என்பதுபோல் கைகளால் சைகை செய்தார்.  நான் மிகவும் குழம்பிப்போய் தர்மசங்கடமாக உணர்ந்தேன்.  Hound of Heaven கவிதை என் நினைவுக்கு வந்தது.  “இதோ மீண்டும் அந்த வேட்டைக்காரன். இவரிடமிருந்து என்னால் தப்பவே முடியாது” என்று எண்ணிக் கொண்டேன்.  அவரிடம் முழுமுற்றாக என்னை ஒப்புக்கொடுப்பதே சிறந்தது என்று தோன்றியது.  டிக்கட் பரிசோதகர் அவ்வழியே வந்தபோது குரு அவரை அழைத்தார்.  பெங்களூர் கன்டோன்மென்ட் செல்ல எனக்கொரு டிக்கட் கொடுக்கும்படி அவரிடம் சொன்னார் குரு.  என்னைப்பார்த்து என்னிடம் பணம் உள்ளதா என்று சைகையில் கேட்டார்.  பயணக்கட்டணம் 29 ரூபாய் – சரியாக என்னிடம் மீதமிருந்த பணம்!  கொட்டாரக்கராவில் ரயில் நின்றபோது சுவாமி சங்கராரண்யா எங்களை சந்தித்தார்.  அவர் வாழைப்பழங்கள் கொண்டு வந்திருந்தார்.  அப்போது எனக்கு மிகவும் பசியாயிருந்தது.  நான் சாப்பிட்டேனா என்று குரு கேட்கவில்லை – நான் சாப்பிட்டிருக்க மாட்டேன் என சரியாக ஊகித்திருந்தார்.  பெரும் கருணையுடன் ஐந்து வாழைப்பழங்களை என்னிடம் தந்தார்.  வழக்கமாக ஒன்றே ஒன்றுதான் தருவார்.  வாழைப்பழங்களைத் தின்றுவிட்டு நான் உறங்கப் போனேன்.  ரயில் ஜோலார்பேட்டையை அடைந்தபோது குரு இரண்டு சிற்றுண்டிகள் வாங்கினார்.  மீண்டும் நான் குருவுடன் உண்ணத்தொடங்கினேன்.

நடராஜ குருவும் நானும் – 7

Standard

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும் அழிந்தது.  இரண்டாவது வருடம், துறைத்தலைவர் ஓய்வு பெற்றதால் மூத்த பேராசிரியராக இருந்தவர் தலைவராவதாக இருந்தது.  இதனால் நான் மூத்த பேராசிரியராகும் வாய்ப்பு வந்தது.  குழுவின் செயலர் என்னைத் தனியாக அழைத்து நான் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.  இதனால் நான் பணிமூப்பு கோரமுடியாத நிலை ஏற்படும்.  குருவிடம் இதுபற்றி கேட்டபோது, இரண்டு வருடம் நான் பணியாற்றிய நிறுவனத்தின் மீது சேற்றை வாரி இரைக்காமல், உடனடியாக வேலையிலிருந்து விலகும்படி கூறினார்.  இந்த வழியை குரு எனக்குக் காட்டியிருக்கவில்லையென்றால் நான் மிகவும் எரிச்சலடைந்திருப்பேன்.  ஒரு ஏணியை விட்டு இன்னொன்றில் ஏறுவதைப் போன்றதுதான் இது என்றார் குரு.  ஒருவன் மனதளவில் தன் பழைய நிலையை உதறிவிட்டு தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுதல் போன்றது இது என்பது குருவின் எண்ணம்.  கல்விசார் வாழ்க்கையிலிருந்து நான் விலகியது இறைவனின் பெரிய வரம் என்பது எனக்குப் பின்னாளில் புரிந்தது.  இருபது வருடங்கள் கழித்து நான் விவேகானந்தா கல்லூரிக்குச் சென்றபோது, தத்துவத் துறையில் என் பழைய நண்பர்கள் புழுதி படிந்த நாற்காலிகளில் உயிரியல் ஆய்வகத்தில் காட்சிக்கு வைத்திருக்கும் புதைபடிவங்கள் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே, நடராஜ குரு, நாராயண குருவின் 60-ஆவது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடியது என் நினைவுக்கு வந்தது.  அந்நிகழ்ச்சியில் பங்குபெற நாராயண குரு சம்மதித்திருந்தார்.  ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் போன்ற பிரபலமான ஆன்மீகவாதிகளும் பல முக்கிய பிரமுகர்களும் அக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.  18 ஃபிப்ரவரி 1954-இல் தன் அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடராஜ குருவுக்கும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அவரை கெளரவிப்பது என் கடமை என நான் கருதினேன்.

சென்னையில் இருந்த நாராயண குருவின் பக்தர்களான என் சக பணியாளர்களும் நண்பர்களும் நடராஜ குருவின் ஷஷ்டியப்தபூர்த்தியை கொண்டாடுவதில் எனக்கு உதவ ஒப்புக்கொண்டனர்.  இந்திய சிலோன் மஹாபதி குழுவின் தலைமை பிக்கு தங்களது இடத்தை நிகழ்ச்சிக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.  குருவின் பழைய வகுப்புத்தோழர்களான சந்தானகிருஷ்ணன் நாயுடு, திரு என்.சி.குமரன், டாக்டர் தியாகராஜன் மற்றும் டாக்டர் கோபால மேனன் ஆகியோர் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதைப்பற்றி குருவுக்குத் தெரிவித்தபோது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார்.  சபரிவாஸ் தையலகத்தின் கே.என்.எஸ். பணிக்கரிடம் இதைச் சொன்னபோது ஸாடின் துணியில் ஒரு பர்ஸ் தைத்து அதில் நூற்றியோரு ரூபாய் வைத்து என்னிடம் கொடுத்தார்.  பிறரிடமும் பணம் வசூலித்து பணமுடிப்பாக குருவுக்கு அளிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.  திரு சந்தானகிருஷ்ணன் நாயுடுவின் உதவியுடன் வெகு எளிதில் இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்க முடிந்தது.  தொகை சிறிதாக இருந்தாலும் அது நல்ல செயலாக எங்களுக்குத் தோன்றியது.  எனது முன்னாள் சகபணியாளரும், கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியின் முன்னாள் துணைத் தலைவருமான மாதவ ராவ் பணமுடிப்பை குருவுக்கு அளிக்க ஒப்புக்கொண்டார்.  தேநீருக்கும் சிற்றுண்டிக்கும் மகாபதி சொஸைடி ஏற்பாடு செய்தது.  நடராஜ குருவின் பிற வகுப்புத் தோழர்கள் சிலரையும் திரு நாயுடு அழைத்திருந்தார்.  அந்நிகழ்ச்சி பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாய் அமைந்தது.  ஒரு வகையில், பாரம்பரியத்தைக் காப்பாற்றிய திருப்தி எனக்கு.  நடராஜ குரு தன் குருவிடம் காண்பித்த அர்ப்பணிப்பும் அன்பும் அவரது சீடர்களால் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  குருகுலத்திற்கும் சென்னைக்குமான தொடர்பில் பின்னாளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு அந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டது காரணமாயிருந்தது.  அதன் பின்னர், அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோரின் இல்லங்களுக்கு பல முறை வந்து தங்கி வகுப்புகள் நடத்தினார் குரு.

வர்க்கலையில் 1953-54-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டிற்கு நான் சென்ற போது குருகுலத்திற்கே உரிய வகையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று குரு கூறினார். அதற்கென, உபநிடதங்கள், காளிதாசனின் காவியம், பிளேடோவின் ‘டயலாக்ஸ்’ இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றைத் தொடுத்து ‘தர்சன மாலையை’ குரு உருவாக்கினார்.  இதில் முதல் காட்சி சகுந்தலை கன்வ ஆசிரமத்திலிருந்து வெளியேறுதல்.  சங்கராரண்ய சுவாமி கன்வராகவும், மாதாஜி கமலாபாய் தாதியாகவும் ஜெயந்தி சகுந்தலையாகவும் நடித்தனர்.  அருகாமையில் குடியிருந்த இரு பெண்கள் அனசூயா மற்றும் ப்ரியம்வதாவாக நடித்தனர்.  ஜி.என்.தாஸ் சரத்வதாவாகவும் நான் சாரங்கதாராவாகவும் பங்கேற்றோம்.  அக்காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக குரு மிகவும் உழைத்தார்.  பார்வையாளர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்காட்சி.  இரண்டாவது காட்சி ‘அபாலஜி’யில் இருந்து எடுக்கப்பட்டது.  மூல நூலில் பிளேடோவின் பங்கு குறைவு என்பதால் பலவிதங்களிலும் அக்காட்சியை மேம்படுத்தி எழுதினார் குரு. குருவுக்கும் சாக்ரடீஸுக்கும் இருந்த ஒற்றுமை என்னை வியப்பிலாழ்த்தியது. மூன்றாவது, யாக்ஞவல்கியர் தனது சொத்துக்களை காத்யாயனிக்கும் மைத்ரேயிக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டு, மைத்ரேயிக்கு (இறுதி) ஞானத்தை அளித்த பிறகு சந்நியாசம் புகுதல்.  சங்கராரண்ய சுவாமி யாக்ஞவல்கியராகவும் மாதாஜி கமலாபாய் மைத்ரேயியாகவும் நடித்தனர்.  காத்யாயனி மேடையில் தோன்றவில்லை.  நான்காவது, ஆனந்தருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு பின்னர் புத்தரின் முன் மாதாஜி தோன்றுவது.  ஆனந்தரும் புத்தரும் கூறுவனவற்றை மங்களானந்தா சுவாமி பாடினார்.  அதுபோன்ற ஒரு அழகிய மாலைப்பொழுது குருகுலத்தில் பின்னெப்போதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது எனது சகோதரி சுபாஷிணி குருகுலத்தில் சேர்ந்து குரு சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.  ஆனால் மாநாடு முடிந்த சில மாதங்களில் ஒரு இளைஞனை சந்தித்து அவரை மணந்துகொள்ள முடிவுசெய்தார்.  குரு தன் சம்மதத்தை உடனே அளித்ததுடன், வாகையாறுக்குச் சென்று திருமணத்தை நடத்தி வைக்கவும் ஒப்புக்கொண்டார்.  குரு திருமணத்திற்கு வந்தபோது என் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.  நாராயண குருவைப் பற்றி தான் எழுதிய ஒரு சிறு நூலை தன்னிடம் வைத்திருந்தார்.  தன் இருதய நோயை மறக்கவே அந்த நூலை எழுதியிருந்தார் தந்தை.  அவருடைய இருதயம் பாதிக்கப்பட்டிருந்தது.  அந்நூலை தான் முடிக்கும் தினத்தன்று தான் இறந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார்.  என் தங்கை சுமங்களா நடராஜ குருவுக்கு அப்புத்தகத்தைப் படித்துக் காண்பித்தார்.  என் தந்தை எப்போதும் மிகவும் கவனத்துடன் கவிதை எழுதுவார். தன் கலையில் தவறு நேரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த மருந்துகளால் அவரது சமநிலை குலைந்திருந்தது.  கவிதை மோசமாக இருந்தது.  பொதுவாக இலக்கியத்திலும் தத்துவத்திலும் தரக்குறைவானதை நடராஜ குரு கருணையில்லாமல் நிராகரிப்பார்.  ஆனால் என் தந்தையின் மோசமான உடல்நிலையை கருத்தில்கொண்டு, எந்தக் குறையும் சொல்லவில்லை.  அப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதித் தரவும் இசைந்தார்.  ஏப்ரல் 14, 1954 அன்று என் சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் குரு.  அதற்கு மறுநாள், குரு என் தந்தையின் அருகில் கட்டிலில் அமர்ந்திருக்க, சுமங்களா குருவின் முன்னுரையை என் தந்தைக்குப் படித்துக் காட்டினார்.  பத்து மணி வாக்கில் குரு எர்ணாகுளத்திற்குக் கிளம்பினார்.  பதினோரு மணிக்கு, முந்தைய நாள் குரு என் சகோதரியின் திருமணத்தை நடத்திவைத்த அதே நேரம், என் தந்தை மறைந்தார்.  அந்தச் செய்தியை எர்ணாகுளத்தில் செய்தித் தாளில் படித்த குரு உடனடியாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  என் வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒன்றை ஒன்று சமன்செய்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து எப்போதும் சமநிலை குலையாமலிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.  நிறை குறை இல்லாத வெறுமையாலும், இன்பியல் துன்பியல் என்ற இருமையாலும் நான் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நேர்காணல் – 5

Standard

3.2.1996

சென்ற முறை வந்தபோது இந்தியச் சிந்தனை முறையின் தனித்தன்மை பற்றிச் சொன்னீர்கள்.  நமது தத்துவ மரபிற்கும் மேற்கின் தத்துவ மரபிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

பிலாசபி என்ற சொல்லையோ அதன் உட்பிரிவுகளையோ அடிப்படையாகக் கொண்டு நாம் நமது சிந்தனைகளை ஆராயக்கூடாது.  கீழைச் சிந்தனை முறை அடிப்படையில் வேறு.  துரதிர்ஷ்டவசமாக நமது கல்வித்துறை அடிப்படையில் மேற்கத்தியத் தன்மை கொண்டது.  ஆகவே இன்று மேற்குடனான வித்தியாசம் என்ற அளவிலேயே நாம் நமது சிந்தனையைப் பார்க்க வேண்டும்.

பிலாசபி என்ற சொல். ‘பிலாசை சோபியா’ என்று பிரிக்கப்பட்டு உண்மையைக் காதலித்தல் (சோபியா உண்மையின் தேவதை) என்று பொருள்படுகிறது.  தருக்கமே உண்மைக்கான ஒரே பாதையாக இங்கு காணப்படுகிறது.  யார் வேண்டுமானாலும் தன் விருப்பத்திற்கேற்ப வாதிடலாம்.  தருக்கத்தின் சமரசப் புள்ளிதான் (equilibrium) உண்மை என்பது.  நமது நீதிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும் இன்று இம்முறையே உள்ளது.  ஒரு விவாதத்தை பொதுவானதாக ஆக்குவதற்கு இன்றும் இதுவே சிறந்த முறை.  ஆனால் அடிப்படை விவாதங்களில் தருக்கம் முதன்மைப்படுவது தவறாக ஆகிவிடும்.  மேற்கத்திய மரபில் தத்துவம் என்றால் எல்லாத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பேயாகும்.

நாம் தத்துவம் என்கிறோம்.  தத் + து என்று அது பிரிவுபடும்.  அது + நீ என்ற இரு அமைப்புகள்.  தத் (அது) அனைவருக்கும் பொதுவான அறிவுக்கூறு (epistome).  நீ என்பது அதை அறியும் உனது பிரக்ஞை.  இரண்டும் பிளவுபடாமலேயே இயங்க முடியும்.  இதையே நமது அறிவியங்கியல் (epistemology) எனலாம்.  உபநிடதங்கள் சார்பற்ற உண்மை – அறிவுநிலை – ஒன்றை உருவகித்து, அதை நிர்ணயிப்பது எப்படி என்றே பேசுகின்றன.  விஞ்ஞானத்தில் இத்தகைய பொதுவான அறிவுநிலை மிகவும் முக்கியமானது.  அதுவே ஆய்வுப் பொருளாக முடியும்.  ஆகவே அது மானுடப் பொதுமையாக இருந்தாக வேண்டும்.  ஆனால் விஞ்ஞானத்தில் பொது அளவுகோல்கள் உள்ளன.  தத்துவத்தில் இல்லை.  ஆகவே அடுத்த கட்டமாக அளவுகோல்களைப் பற்றி யோசித்தார்கள்.  நம் மரபில் அறிவுக்கூறு ‘விஷயம்’ என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டது.

மேற்கே தெகார்த்தே பொது அளவுகோல் ஒன்றை உருவகித்தார்.  அது கணிதம்.  பின்பு ரஸ்ஸல் ‘தகவல் உண்மை-தருக்க உண்மை’ என அதைப் பிரித்தார்.  பொதுவாக மேற்குலகு புலன்களை முதன்மைப்படுத்துகிறது.  ஓர் எல்லைவரை அது பயன்தரக்கூடிய அளவுகோலே.  ஆனால் புலன்கள் தங்கள் எல்லைகளுக்குள்தான் இயங்கமுடியும்.  புலனறிவு கருத்து நிலையிலிருந்து அமைப்பை தீர்மானிக்கிறது.  மூளையை மரபணுக்களின் அமைப்பு தீர்மானிக்கிறது.  மரபணு அமைப்பு என்பது காலத்தில் நீளும் ஒரு தொடர்.  அதன் நோக்கம் என்ன?  அந்நோக்கத்தை நாம் எப்படி அறிவது?  இல்லை, அறியாமலேயே அதற்கு ஆட்படுவதா?  ஆக புலனறிவுகள் அவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு சிலவற்றுக்கு கட்டுப்பட்டவை.

இத்தகைய உள்ளார்ந்த பேரமைப்பை நம் மரபு சித் என்று பெயரிட்டு குறிப்பிட்டது.  மனம் என்பது ஒரு செயல்பாடே.  அது ஓர் அமைப்பு அல்ல.  சித் மனம் வழியாக நம்மை இயக்குகிறது.  நாம் அதைப் பற்றி அறிவது சொற்பம்.  ஆகவே அதன் மூலம் உருவாகும் வாழ்க்கையே முக்கியமானது.  இங்கு வாழ்வின் இயக்கத்தை உற்று கவனித்தார்கள்.  வாழ்க்கை என்றால் மேற்கு உருவகிப்பதுபோல மனித வாழ்க்கையையும் அறங்களையும் உருவகித்தார்கள்.  ஆகவே இங்கு அறிவியங்கியல் எதற்காக என்றால், அறிவியலை நிறுவுவதற்காகவே.  நமது அறிவு நம்மை நன்மைக்கும் ஆனந்தத்திற்கும் இட்டுச் செல்ல வேண்டும்.  அறிவு, நன்மை, அழகு (சத்தியம், சிவம், சுந்தரம்) மூன்றும் வேறு வேறல்ல.  அறிவியங்கியல், வழியாக அறவியலுக்கு வரும் வழியையே நமது முறைமை என்கிறோம்.  அது சூழலுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது.  பொதுவாக இங்கு மூன்று வகையான முறைமைகள் உள்ளன.  நேர்க்காட்சி, ஊகம், முன்னறிவு (பிரத்யட்சம், அனுமானம், சப்தம்).  வேதாந்தம் நேர்க்காட்சியையே முதன்மைப்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஊகத்தைக் கொள்கிறது.  அங்கு இது ஐன்ஸ்டீனோடு முடிந்தது.  நமக்கும் மேற்குக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.  நாம் அளவுகோல்கள் எதையும் மானுடப் பொதுவாக உருவகிக்கவில்லை.  அறவியலையே அப்படி உருவகித்தோம்.  அறவியலே அளவுகோல்களைத் தீர்மானிக்க முடியும் என்று நம்பினோம்.  காரணம் கருத்திலிருந்து விடுபட்ட அளவுகோல் ஏதுமில்லை.  இதுவே சரியான நிலைப்பாடு என்று அதிநவீன மேற்கத்திய தத்துவச் சிந்தனை ஏற்கவும் தொடங்கியுள்ளது.

அறவியல் எப்படி நமது மரபின் அடிப்படை ஆகிறது?

அறவியலில் இரு பிரிவு: இல்லறம், துறவறம்.  இல்லறம் என்றால் இயல்பான வாழ்வை சமூக இயக்கத்துடன் பிணைத்துக்கொண்டு, அதிகபட்ச ஒத்திசைவுடன் வாழ்தல்.  துறவறம், வாழ்வை அறியும் பொருட்டு தன்னை முன்நிபந்தனைகள் இல்லாதவனாக வைத்துக்கொள்ளுதல்.  இவ்வாறு வாழ்வைச் சார்ந்து நமது தத்துவம் இயங்குகிறது.  மேற்கின் தத்துவம் ஒருவித அறிவுப் பயிற்சி.  வாழ்வுடனான அதன் உறவு மறைமுகமானது.  அறவியலை அவர்கள் ஒழுக்கவியலாகச் சுருக்கி, தத்துவத்தின் ஐந்து உட்பிரிவுகளில் ஒன்றாகப் பார்க்கிறார்கள்.  பிற பிரிவுகள்: தருக்கம், அழகியல், அரசியல், ஆன்மீகம்.  ஒவ்வொன்றும் குறுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  குறிப்பாக ஆன்மீகம் அங்கு ‘அவ்வுலகு’ சார்ந்த சிந்தனைகளாகவே கருதப்படுகிறது.

மேற்கத்திய சிந்தனையில் அறவியல் அம்சம் வலுப்பட்டது எப்படி?

வளர்ச்சியின் போக்கில் விஞ்ஞானம் உள்ளே நுழைந்தது.  டார்வினின் காலகட்டத்தில் எல்லாமே பெளதிக ரசாயன சட்டங்களால் நிர்ணயிக்கப்பட்டன.  டார்வினுக்குப் பிறகு உயிரியல் வலுப்பட்டது.  பின்பு உளவியல்.  விஞ்ஞானத்திற்கு பொதுமை அவசியம்.  மனதிற்கு பொதுமை இல்லை.  பொதுவாக இருந்தது மனிதப் பழக்கவழக்கம்.  ஆகவே பழக்கவியல் உளவியல் (Behavioral Psychology) உருவாயிற்று.  பிறகு ஃப்ராய்ட் வந்தார்; மனதை பல அமைப்புகளின் தொகுப்பாகக் கண்டார்.  ஆழம்சார் உளவியல் (Depth Psychology) உருவாயிற்று.  பின்பு யுங்கின் ஆய்வுமுறை உளவியல் (Analytical Psychology) வந்தது.  மனம் பற்பல அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பு அல்லது பற்பல உள்ளியக்கங்கள் கொண்ட ஒரு பேரியக்கம் என்று கருதப்பட்டது.  உளவியல், அறத்தைப் பார்த்துத் திரும்பியது இங்குதான்.  தத்துவத்தில் உளவியலம்சம் இணைந்தது (Psychologism in Philosophy).  பெர்க்ஸன், ரஸ்ஸல் முதலியோரின் இடம் இங்குதான்.

தத்துவஞானம் எப்படி விஞ்ஞானத்தை பாதித்தது?

இவ்வளர்ச்சிப் போக்கின் ஒரு கட்டத்தில் தத்துவம் விஞ்ஞானத்தை பாதிக்க ஆரம்பித்தது.  இதன் விளைவாக விஞ்ஞானத்தின் தத்துவ அடிப்படை என்ன என்ற கேள்வி எழுந்தது.  பெர்க்ஸன், நடராஜ குரு முதலியோரின் ஆய்வின் களம் அது.  கார்ல் பாப்பரின் ஆய்வும் அதுவே.  விஞ்ஞானத்தில் செயல்படும் தத்துவவாதம் (Philosophism) பற்றி பாப்பர் பேசுகிறார்.

டார்வின் சிந்தனையின் அடிப்படை என்ன?  உயிர் மேலும் சிறப்பாக மாறியபடி உள்ளது என்பதுதானே?  உலகில் உள்ள அனைத்தும், அவ்வாறு மேம்படுகின்றன.  அப்பயணத்தின் பின்னால் உள்ள அறியமுடியாத நோக்கம் பற்றிய உருவகத்தில்தான் அதன் ஆன்மீக நிலைப்பாடு வருகிறது.  டார்வினின் தொடர்ச்சி லாமார்க்.  பிறகு ஹென்றி பெர்க்ஸனின் ‘படைப்பாக்கப் பரிணாமம் (Creative Evolution).  அரவிந்தரை அது வந்தடையும்போது ஆதிமுழுமையும் (Absolute) பிரபஞ்ச மனமும் (Cosmic mind) உள்ளே வந்துவிடுகின்றன.  பரிணாமம் நடப்பதை யாரும் நிரூபிக்க முடியாது.  பல்லாயிரம் வருட நீட்சி உடைய செயல் அது.  ஆகவே இது ஒரு ஊகமே.  பரிணாம விதி (Theory of evolution) அது. ஆகவே அதில் உள்ள அறமையங்களே முக்கியமானவை.  அவற்றுக்கு வாழ்வுடன் உள்ள தொடர்பே முக்கியமானது.  அனைத்து விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக உள்ளவை அக்கண்டுபிடிப்பை நிகழ்த்தும் பொருட்டு பல்வேறு திசைகளை நோக்கி வீசப்படும் ஊகங்கள்தான்.  அவையனைத்தும் மானுட மனதில் எல்லைகளுக்குட்பட்டவை; தேவைகள் சார்ந்தவை.  அவற்றில்தான் அடிப்படை அறங்கள், மதிப்பீடுகள் செயல்படுகின்றன.  அவை செயல்படாத அறிதல் முறை இல்லை.  ஆகவேதான் இன்றைய நவீனத் தத்துவம் அற மையங்களை நோக்கி அழுத்தமாகத் திரும்பியுள்ளது.  நமது மரபு எப்போதும் அறமையங்களையே வலியுறுத்தி வருகிறது.  பெர்க்ஸன் இவ்வகையில் முக்கியமானவர்.  ரஸ்ஸலும் கார்ல் பாப்பரும் அடுத்தபடியாக.  ரஸ்ஸல் தன்னை சமரச ஒருமைவாதி (Neutral Monist) என்றார்.  சித்தும் அல்ல ஜடமும் அல்ல பிரபஞ்சம் (neither spirit nor body), இரண்டின் சமரசப் புள்ளியே அது என்றார்.  அது நமது மரபார்ந்த பார்வை.  சித்ஜடக் கலவை என்று அதை நாம் கூறுகிறோம்.