Tag Archives: தெரிதா

நேர்காணல் – 4

Standard

1.1.1996

நவீனத்துவம் பற்றிக் கூறுங்கள்…

ரோமன் கத்தோலிக்க மரபிற்குள் எழுந்த ஒரு சிந்தனை முறையே மாடர்னிசம் என்பது.  வாழ்க்கையில் விஞ்ஞானத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது என்று நவீனத்துவர்கள் நம்பினார்கள்.  விஞ்ஞானரீதியான ஆய்வு முறை என்பது புறவயமானது, சார்பற்றது, தருக்க முழுமை உடையது என்று எண்ணினார்கள்.  பைபிளை விஞ்ஞான அடிப்படையில் மறுபரிசீலனை செய்து தொகுக்க வேண்டும் என்றார்கள்.  விஞ்ஞானப் பார்வை என்று இவர்கள் குறிப்பிட்டது நிரூபணவாதப் பார்வையையே.  ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரான்ஸில் ஏனெஸ்ட் ரெனான், இங்கிலாந்தில் பிரடரிக் ஹோன் ஹ்யூகல், இத்தாலியில் அன்டோனியா போகஸ்டா ரோமலோ என்று ஏககாலத்தில் ஐரோப்பா முழுக்க இந்த அலை எழுந்தது.  இதற்கான பின்னணிக் காரணிகள் பல.  பிரான்ஸில் பேகனின் யாந்திரிக விஞ்ஞானத்தின் வளர்ச்சி.  அதன் விளைவாக உருவான எந்திரக் கண்டுபிடிப்புகள்.  அதன் விளைவாக வலுப்பெற்ற பெளதீகவாதம்.  இக்கண்ணோட்டம் காலத்தையும் வெளியையும் கேள்விகளின்றி நிதர்சனமாக எடுத்துக்கொண்டு பிரபஞ்சத்தை ஆராய்கிறது.  லாய்ஸி என்பவர் அறுபத்தைந்து கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்டதுதான் நவீனத்துவத்தின் முதல் அடிப்படை எழுத்து வடிவம்.  அதை போப் பத்தாம் பயஸ் நிராகரித்தார்.  1898-இல் ஆமி-டி-க்ளெர்ஜெ எனும் வார இதழில் நவீனத்துவம் என்ற சொல் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.

கார்லைல், மில் முதலிய அறிஞர்கள் கிறித்தவ மதத்தை சீர்திருத்தக் கோரி நடத்திய அறிவுப் போராட்டங்களை நாம் இதனுடன் சேர்த்து யோசிக்க வேன்டும்.  மில் கிறிஸ்துவத்தின் ஆன்மிக அடிப்படையை ஏற்றவர்.  கார்லைல் நாத்திகர்.  இவ்வியக்கங்களின் விளைவாக புரட்டஸ்டண்ட் மதத்திற்குள் மெதடிஸ்டுகள் உருவானார்கள்.  நவீனத்துவத்தின் இலக்கிய பாதிப்பு ஜான் ஹென்றி நியூமான் தொடங்கிய ஆக்ஸ்போர்டு இயக்கம் மூலம் நடந்தது.  நியூமான் முதல்தரமான மேடைப் பேச்சாளர்.  அவர் கத்தோலிக்க மதத்தின் பழமைவாதத்தையும் புரட்டஸ்டண்டுகளின் அதீத தனிநபர்வாதத்தையும் நிராகரித்தார்.  பேகனையும் அதீத லெளகீகவாதி என்று கூறி நிராகரித்தார்.   ஆனால் ‘விஞ்ஞான ரீதியான அணுகுமுறை’யை ஏற்றார்.  அவருடைய The Idea of a University (1852) என்ற சிறுநூல் மிக முக்கியமானது. மதரீதியாக இலக்கியத்தில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள், படைப்பாளியின் சுதந்திரம், குறியீட்டுத்தன்மை முதலியவை பற்றிப் பேசிய முக்கியமான நூல் அது.

ஆக்ஸ்போர்ட் இயக்கத்தின் ஆதரவாளராக தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர் டி.எஸ். எலியட்.  அத்துடன் கார்லைல், ரஸ்கின் முதலியவர்களின் கலைக் கொள்கைகள், யுங்கின் உளவியலாய்வு ஆகியவையும் எலியட்டில் ஒருங்கிணைந்தன.  எஸ்ரா பவுண்ட், டி.இ. ஹ்யூம் ஆகியோரின் பாதிப்பு பற்றி நாம் அறிவோம்.  மெல்ல இலக்கிய நவீனத்துவம் பற்றிய நிர்ணயங்கள் உருவாயின.  எலியட்டின் விமரிசனக் கொள்கைகளை படைப்புகளே – குறிப்பாக ‘தரிசு நிலம்’ – இத்தகைய நிர்ணயங்களை உருவாக்கின.

கலையில் ஜான் ரஸ்கினின் ‘நவீன ஓவியர்கள்’ என்ற பெரிய நூல் நவீனத்துவத்தை அடையாளம் காட்டியது.  டெர்னர் வரைந்த புதுவகை நிலக்காட்சி சித்திரங்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளானபோது அவரை ஆதரித்துத்தான் ரஸ்கின் எழுதப் புகுந்தார்.  ஓவியம் மனதின் வெளிப்பாடே என்று வலியுறுத்தி, குறியீட்டு அம்சத்திற்கும் படைப்பாளியின் தனியடையாளத்திற்கும் முக்கியத்துவம் தந்து வாதிட்டார்.  ஆனால் ஓவியத்துறையில் தொடர்ந்து வந்த பற்பல இயக்கங்கள் இச்சொல்லை அர்த்தமிழக்கச் செய்துவிட்டன.  மிகப் பொதுப்படையாகவே கலையில் நவீனத்துவம் என்று கூறமுடியும்.

மிகச் சுருக்கமான ஒரு சித்திரம் நான் தந்திருப்பது.  ஐரோப்பியச் சிந்தனை மரபு இரு அம்சங்கள் கொண்டது.  செமிடிக் மரபு ஒன்று.  அதுவே கிறித்தவம்.  கிரேக்க (pagan) பாகன் மரபு அடுத்தது.  உலகியல் தன்மையும் அழகு வழிபாடும் கொண்ட கிரேக்க மரபை கிறித்தவம் அழுத்திவிட்டது.  ஆயினும் அது அவ்வப்போது கிறித்தவத்திற்குள் பீரிட்டுக் கிளம்பும்.  மறுமலர்ச்சிக் காலம் அப்படிப்பட்ட ஒரு எழுச்சி.  நவீனத்துவமும் அப்படிப்பட்டதுதான்.  நவீன விஞ்ஞானம் என்பது கிரேக்க மரபின் தொடர்ச்சியேயாகும்.  எலியட் முதலிய நவீனத்துவப் படைப்பாளிகள் கிரேக்க மரபை ஓர் உச்சமாகக் கண்டனர்.  அதன் சமநிலை, முழுமை ஆகியவற்றை சமகாலத்தில் மீண்டும் சாதிக்க முயன்றனர்.  நவீனத்துவத்தின் இலக்கியத் தனித்தன்மைகள் பல இப்படி உருவானவை.

ஐம்பதுகளில் விஞ்ஞானப் பார்வை என்ற கருதுகோள் உடைபடத் தொடங்கியதும் நவீனத்துவம் சரியத் தொடங்கியது.

அச்சரிவை மொழியியலாளர்கள்தான் நிகழ்த்தினார்களா?

இல்லை.  நுண்பெளதிகத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் முதற் காரணம்.  காலவெளியை முதன்மைப்படுத்தும் பார்வைகள்.  பொருள் என்ற கருதுகோள் கேள்விக்குரியதாக்கப்பட்டது.  பொருண்மையை அடிப்படைத் தருக்கமாகக் கொண்ட நிரூபணவாதப் பார்வை உயர் தத்துவ விவாதத்தில் நிற்க முடியாது போயிற்று.  கார்ல் பப்பர் முதலிய தத்துவ ஆசிரியர்கள் இந்த மாற்றத்தை தத்துவ தளத்தில் நிகழ்த்தினர்.  கூடவே மொழியியலாளர்களும்.

தத்துவம், மொழியியல், உளவியல், மானுடவியல் ஆகியவற்றுக்கு இணையாக இலக்கியத்தில் ஏற்பட்ட மாறுதல்களினால் நவீனத்துவம் சற்று பின்வாங்கியது.  பின்நவீனத்துவம் உருவாயிற்று.  ஆனால் பின்நவீனத்துவத்தை நாம் இன்றும் விமரிசகர்களின் நூல்களை அடியொற்றியே தீர்மானிக்க வேண்டியுள்ளது.  படைப்பு ரீதியாக அது தெளிவு பெறவில்லை.  பின்நவீனத்துவத்தின் உதயத்திற்கான காரணங்களில் முதன்மையானது தருக்கம் எனும் பொது அமைப்பின்மீது ஏற்பட்ட அவநம்பிக்கை.  இவ்விஷயத்தி ஃபிலிப் லூயிஸின் பின்நவீனத்துவச் சூழல் (Post Structuralist Condition) எனும் நூல் பலவகைகளில் முக்கியமானது.   பெகி காமுஃப் (Peggy Kamuf) எழுதிய தெரிதா தொகுப்பு (A Derrida Reader) என்ற நூலும் உதவிகரமானது.  பின்நவீனத்துவக் கருத்துகள் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை.  அவை மிகக் குழப்பமான தொடர் விவாதங்களாகவே உள்ளன.  அவற்றின் கல்வித்துறை சார்ந்த சம்பிரதாயத்தன்மை மேலும் அலுப்பூட்டுகிறது.  பொதுவாக நவீனத்துவ மரபில் உள்ள சில அம்சங்கள் – கிறித்துவத்தின் உலகளாவிய மனிதாபிமானம், சீர்திருத்தப் பார்வை, அடிப்படையான அறம் ஒன்று உண்டு என்ற நம்பிக்கை முதலியவை – பின்நவீனத்துவத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.  மொழியின் சாத்தியங்களை மட்டும் நம்பி, தருக்கத்தை உதறி இயங்கும் முயற்சியும் உள்ளது.

நாம் இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இவையனைத்திலும் கிறித்துவம் வலுவான ஒரு தரப்பு.  ஒரு பின்நவீன விமரிசகன், பின்நவீன எழுத்து அத்தியாவசியமான ஆபாசத்தன்மை உடையது (essentially vulgar) என்று கூறினான்.  எது ஆபாசம் என்று தீர்மானிக்கும் கிறித்தவ ஒழுக்கவியலை அவன் ஏற்றுக் கொண்டிருப்பது தெரிகிறது.  நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம்.  ஆனால் கல்வித்துறை விவாதங்களுள் நுழைந்தால் வாழ்க்கை வீணாகிவிடும்.  அவசியத்தை முன்னிறுத்தி கற்பதே உசிதம்.  இது பின்நவீனத்துவ உலகம் என்று ‘துரை’ கூறுவது அவனது அகங்காரத்தைக் காட்டுகிறது.  அதை நாம் ஏற்பது நமது தாழ்வுணர்ச்சியைக் காட்டுகிறது.