Tag Archives: சூஃபிக்கள்

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9

Standard

பூத்துக்குலுங்கும் கொடியொன்று 

ருபுறமும்  படர்ந்துயர்ந்துமேவும் 

தருவினடியில்  தவத்திலமர்ந்தோனை

நரகம்  அண்டாது – எண்ணுவாய்!

                                                              (ஆத்மோபதேச சதகம் – பாடல்  9)

இதற்கு முந்தைய பாடலிலும் மரம் பற்றிய குறிப்பு வந்தது.  அதில் ஐவகை பழங்கள் இருந்தன. ஐம்புலன்களைக் குறிக்கும் ஐந்து பறவைகள் அதைச் சுற்றிப் பறந்து கனிகளை அருந்தி மகிழ்ந்திருந்தன. அம்மரத்தைச் சார்ந்த வேடனொருவனின் கொடும்செயலால் பறவைகள் அடித்து வீழ்த்தப்பட்டன. ‘பறவைகளின் கிடைமட்ட விழைவுகளை செங்குத்தாக்குவதற்கான’ ஒரு மாற்றத்தை இது குறிக்கிறது.

இங்கே அதே சித்தரிப்பு அமைதியான, சிந்தையிலாழ்த்தும் விதத்தில் தரப்படுகிறது.  ஒட்டுமொத்த வாழ்வெனும் நிகழ்வு மீண்டும் மரத்தால் உருவகப்படுத்தப்படுகிறது.  விழிப்பு, கனவு, ஆழ்உறக்கம், கடந்தநிலை எனும் நான்கு நனவுநிலைகளை நாமறிவோம்.  விழிப்பும் கனவும் கிடைமட்டமாக பார்க்கப்படும்போது, ஆழ் உறக்கத்திலிருந்து கடந்தநிலைக்குச் செல்வதை செங்குத்தாகக் காண்கிறோம்.  ஆழ் உறக்கத்தில் நாம் எதையும் அறிவதில்லை; கடந்தநிலையோ நம் கவனத்திற்குள் வருவதேயில்லை.  விழிப்புநிலைக்கும் கனவுக்கும்  இடையே நிகழும் மாற்றங்களே எஞ்சுகின்றன.

ஆக, நம் அன்றாட வாழ்க்கை எனும் வெளி விழிப்பிலும் கனவிலும் வரும் அனுபவங்களால் நிறைந்திருக்கிறது.  புறப்பொருள்களின் பயன்மதிப்பை நம் அகத்தோடு பொருத்திப்பார்த்துக் கொள்ளாதவரை நம் விழிப்புநிலை அனுபவங்கள் பொருளற்றவையாகவே இருக்கக்கூடும். கதிரவன் எழுவதைப்பார்த்து “ஆஹா” என வியக்கிறீர்கள்.  கதிரவன் வெளியில் இருக்கும்போது வியப்பு அகத்தே நிகழ்கிறது.  பேரழகின் மீதான நம் விருப்பு நம்மில் பதியப்பட்டுள்ளது.  அழகிய பொருளெதுவும் நம் கவனத்திற்கு வராதபோதுகூட அழகுபாராட்டும் இயல்பு நம்மில் உறைகிறது. விழிப்பு நிலையில் நிகழும் எதுவும் அதற்கிணையான ஒரு வேட்கையை, ஆர்வத்தை, தரிசனத்தை ஆழ்நனவில் கொண்டிருக்கிறது.  அனுபவத்தை சாத்தியமாக்கும் இக்காரணியே சுஷுப்தி அல்லது சுப்தம் எனப்படுகிறது.

சுப்தம் என்பது நனவிலிநிலை என்றாலும் அது ஒருபோதும் வெற்றிடம் அல்ல.  விதைகள் கொண்ட காய் போல அதில் பல விதைகள் பதிக்கப்பட்டுள்ளன.  அவை மணங்கள் (வாசனா) என அழைக்கப்படுகின்றன. அவற்றில் சில சுழற்சியாய் நிகழ்பவை.  அல்லியில் சில வகைகள் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே மலர்வது போல.  அதன் கிழங்கை எப்போது வேண்டுமானாலும் தோட்டத்தில் புதைத்துவைக்கலாம். ஆனால் உரிய பருவம் வரும்வரை அது செயலற்று இருந்து பின் பூக்கத்தொடங்கும். ஆனால் வேறு சில வகைகள் எப்போதும் பூப்பவை.  பருவம் சார்ந்ததோ சாராததோ, நம் அனுபவங்கள் என்னும் எல்லா விதைகளும் நம் நனவிலி என்னும் தோட்டத்தில் புதைந்து கிடக்கின்றன.

அடுத்ததாக கனவு நிலையை பார்ப்போம்.  நாம் கனவில் காணும் படிமங்கள் எங்கிருந்து வருகின்றன? தொன்மத்தை உருவாக்க விழையும் நம் அகம் ஒரு தேவதைக் கதையின் மொழியை உருவாக்கக்கூடிய குறியீடுகளைக் கண்டறியும் திறன் கொண்டது.  விழிப்பு நிலையின் வேட்கைகள் உறையும் அதே இடத்தில்தான் இதுவும் புதைந்திருக்கிறது.  விழிப்பு நிலை வாழ்வும் கனவும் நிகழ்வதற்குத் தேவையானவற்றை இதுவே தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது. விழிப்பும் கனவும், மெய்யான அனுபவமாகவோ அது சாத்தியமாகாதபோது கனவனுபவமாகவோ நிகழ்த்தப்படுவதெற்கென காத்துநிற்கும் விதைகள் உறையும் ஆழ்நனவிலியுடன் காரணத்தொடர்புடையவை. ஃபிராய்ட் முதலானோர் கனவென்பது முடிவுறா விழிப்புநிலை அனுபவம், அவா-நிறைவு, வருவதுரைத்தல், முன்னெச்சரிக்கை என்றெல்லாம் கூறுவர்.

இவையெல்லாவற்றிலும் ஒரு ரகசியம் உண்டு. இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன?  நனவின் தனித்தன்மையில் இவை எல்லாம் நிகழ்கின்றன.  தனித்த நனவு தனிப்படுத்தப்படா நனவிலிருந்து வருகிறது.  தனிப்படுத்தப்படா நனவென்பது காலமற்றது; அகத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டின் பகுதியாக வருவதே காலமென்பது.  மனிதமனம் தொடர் உசாவல் (மனஸ்) மூலமாக மட்டுமே இயங்கக்கூடியது.  ‘மனஸை’ தொடர்பவை ‘சித்தம்’ (நினைவுடனான தொடர்பு), ‘புத்தி’ (கருத்து முடிவு), ‘அகங்காரம்’ (மதிப்பீட்டின் அடிப்படையிலான உணர்ச்சி மறிவினை) ஆகியவை.  இவையெல்லாம் சேர்ந்தது அகச்செயல்பாட்டின் ஒரு அலகாகிறது.  இதைத் தொடர்ந்து உடனடியாக அடுத்த அலகு வருகிறது.  இரு அலகுகளை நம்மால் ஒரே சமயத்தில் கையாளமுடியாது. ஒன்றிலிருந்துதான் மற்றொன்றிற்கு செல்லமுடியும்.  இதனால் மனம் ஒரு தொடராகிறது. இதனால் காலஅளவு என்னும் கருத்துருவாக்கம் நிகழ்கிறது.  அடிப்படையில் நேரம் என்பது நனவு மனத்தின் நகர்வை அவதானிப்பதற்கான ஒரு வழி.  நாம் உருவாக்கி வைத்திருக்கும் கடிகாரங்கள், நிழற்கடிகைகள் எல்லாம் கருவிகள்தானே ஒழிய நேரமல்ல.  ஒருவகையான நினைவுமுடிச்சு அல்லது மனிதமனத்தால் மட்டுமே புனையப்படும் ஒரு துணைக்கருவியே நேரம் என்பது.

பொருட்களை ஏதோவொரு பின்னணியில் பொருத்திப்பார்க்கும் இயல்பு மனதிற்கு தேவைப்படுகிறது.  நமக்கெதிரே மூன்று பொருட்கள் இருக்குமென்றால், ஒரு குறிப்பிட்ட முறையில் வைக்கப்பட்டால்தான் அவை தனித்தனியானவை என்பது நமக்குப் புலனாகிறது. கூட்டமைவு என்பது அகத்தின் மற்றுமொரு செயல்பாடு.  ஒரு ஓவியன் அசையாப் பொருட்களை வரைவதற்கு அவற்றை ஒரு ஒழுங்கில் அமைப்பது போன்றது அது.  அவன் பூச்சாடியையும், பூக்களையும் மேசைமீது பிறபொருட்களுடன் ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக்கொள்கிறான்.  அவை ஒரு குவியலாக இருந்தால் பொருட்களின் உருவரைகளை பிரித்துக்காண்பது எளிதாக இருக்காது.  எனவே ஒவ்வொன்றையும் இடம்சார்ந்து பிரித்துவைக்கவேண்டியிருக்கிறது.  ஒரு காட்டையோ அழகிய நிலக்காட்சியையோ வரைய எண்ணும்போதும் – இயற்கையே அக்காட்சியை ஒழுங்கமைத்திருக்கும் என்றாலும் – அவன் சில தெரிவுளை மேற்கொள்ள வேண்டும். குறுஞ்செடிகளையும் மரங்களையும் தவிர்த்து ஒரே ஒரு பெரிய மரத்தையும், பின்னர் வேறு இரு மரங்களையும், ஒரு அடிக்கட்டையையும், ஏரியையும், மலையின் ஒரு பகுதியையும் அவன் தேர்ந்தெடுக்கலாம்.  பல கூறுகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு சிலவற்றை தவிர்த்து தன் உணர்திறனுக்கேற்றவாறு அவன் அதை வடிவமைக்கிறான்.  இதைப்போலவே மனமும் தன் வசதிக்கேற்ப தன் புரிதலுக்கொப்ப தன்னுடைய இடம்சார்-உணர்வுசார் கூட்டமைவுகளை கட்டமைத்துக்கொள்கிறது.

இது பல மனங்களின் தொகுதிக்குள்ளும் நிகழ்கிறது.  பலமனங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான நிகழ்வாகவே உலகம் இருக்கிறது.  இவ்வுலகம் என்னும் மரத்தையே நாம் தேர்கிறோம்.  அதன் முன் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து தற்சார்புடையதும் அற்றதுமான இரு கொடிகளையும் வளர்ச்சிப்பாதையில் மரத்தைச் சுற்றி வளரவிடுகிறோம்.

ஆறு நிலைகளைப்பற்றிய குறிப்புடன் குரு பாடலை தொடங்குகிறார்.  அவை – பிறப்பிற்கு முந்தைய நிலை, பிறப்பு, வளர்ச்சி, மாற்றம் அல்லது பரிணாம வளர்ச்சி, சிதைவு, இறுதி அழிவு. ஒவ்வொன்றும் அழிவற்ற நிலையில் இருந்து வெளிவருகிறது.  தனித்ததாய் பிறக்கிறது; வளர்ந்து, மாறி, மூப்படைந்து இறுதியில் இறந்து காணாமல் மறைகிறது.  இது விழிப்புநிலையில் நிகழும் அனைத்திற்கும் பொருந்தும்.  கனவுகளுக்கும் இது பொருந்தும்.  கனவு தோன்றுவதற்கு முன் அதன் கூறுகளும் அதற்கான காரணமும் விதைநிலையில் இன்றியமையாதனவாக புதைந்திருக்கின்றன.  அவ்விதை கனவாக வெளிப்படும்போது பொருளார்ந்த பேரெழில் வடிவங்களாய் முளைவிடுகிறது.  சிறிதுநேரத்தில், இன்னொரு விதை வெளிப்படத் துடிக்கையில் முந்தையதன் மீதான ஆர்வம் குறைந்து அது காணாமலாகிறது.

நம் விழிப்புநிலையில், சாத்தியமான பல தேவைகளில் ஒரு குறிப்பிட்ட தேவை மட்டும் மேலெழுகிறது.  அது ஒரு மெய்மையை, குறிப்பிட்ட வடிவத்தை கொள்கிறது.  அந்நிலையில் அத்தேவை உறுதிபெற்று தவிர்க்கமுடியாததாகி நம்மை செயலாற்றத் தூண்டுகிறது. இறுதியில் அது நிறைவேறுகிறது. அல்லாது தன் முக்கியத்துவத்தை இழந்து மெதுவாய் கரைந்துபோய் இல்லாமலாகிறது.

இப்பாடலில் ஒரு கொடி விழிப்புநிலை-கனவுநிலை அனுபவங்களாய் இரண்டாகக் கிளைவிட்டு மலர்கிறது.  ஆழ்உறக்க நிலை என்பது பெரும் சாத்தியங்கள் கொண்ட விளைநிலமாய் நம்முள் மறைந்துள்ளது. அது ஒரு நனவிலிப் பொருண்மை.  பண்டோராவின் பெட்டி(Pandora’s Box) போல அதிலுறையும் நல்லவை அல்லவை நமக்குத் தெரிவதில்லை.  வாழ்வு செயல்படத் துவங்கிய உடனேயே கொடி விதையைவிட்டு வெளியே வருகிறது. இங்கிருக்கும் தேவாவைப் போன்ற ஒரு குழந்தை ‘இன்னும் எனக்கான நேரம் வரவில்லை.  பலதும் அதிலேயே புதைந்திருக்கட்டும். ஒவ்வொரு நாளும் சிறிதுசிறிதாக நான் வெளிப்படுத்துவேன்’ என்கிறாள்.  இரண்டு நிமிடத்துக்கு ஒரு புன்சிரிப்பை அவள் நிரலமைக்கிறாள்.   ஒரு பெரும் கூப்பாடு; மீண்டும் புன்னகை.  பின் பதினைந்து நிமிடங்களுக்கு கூச்சல்கள், பலவகையான உணர்ச்சிகளுடன் திரும்ப உறக்கம். அடுத்த வருடமோ அவள் யார் மடியிலும் அமரப்போவதில்லை.  எல்லோரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு ஆராய்ந்துகொண்டிருப்பாள்.

அகத்தை அறியும் செயலில் கடந்தநிலையை அடைவதற்கே நாம் எப்போதும் முயல்கிறோம். கடந்தநிலை அல்லது நோக்கிநிற்றல் இங்கே மரத்திலிருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது.  அதனை, நிகழ்தல் என்னும் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் ஒரு யோகியாக உருவகிக்கிறார் குரு.  அவரைச் சுற்றி பலதும் நிகழ்கின்றன.  இவையெல்லாம் நிகழ்வதை அவர் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். அவர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர் போல் வெறுமனே அமர்ந்திருக்கிறார்.  ஆனால் அவர் ஒரு பொறுப்பற்ற பயணி போல அங்கே அமர்ந்திருக்கவில்லை.  ஏனெனில் கொடிகள் எல்லா திசைகளிலும் வளர்ந்து அனைத்தையும் மூடிக்கொண்டேயிருக்கின்றன.  விலகலுடன் இருக்கும் அவர் அவரைச் சுற்றி நிகழ்வனவற்றை நன்றாகவே உணர்கிறார்.  எதனுடனும் தன்னை பிணைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்.  அங்கமர்ந்திருக்கும்போது நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால், சரியான முறையில் அமராவிட்டால் நீங்களும் மாட்டிக்கொள்வதோடு அவற்றால் மூடப்படுவீர்கள்.  ஆனாலும் அதிலிருந்து நீங்கள் தப்பித்து ஓடுவதில்லை. அதனடியிலேயே அமர்ந்து தவம் செய்கிறீர்கள்.

தவம் என்பது என்ன?  பகவத் கீதையில் தவத்திற்கு உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.  எனது இக்கையால் பெரும் அழிவுகளை ஏற்படுத்தமுடியும்.  அதைக்கொண்டு பயனுள்ளவற்றை உருவாக்கமுடியும்.  பிறருக்கு உதவமுடியும்.  எனது செயல்களெல்லாம் எதிர்மறையானவற்றை தவிர்க்கும்போது, எனது இயல்கைகள் உலக நலனுக்கென செயல்படும்போது, வாழ்வின் நித்தியமான விழுமியங்களை உயர்த்த பயன்படும்போது அது ஒரு தவமாகிறது; உடலின் தவ ஒழுக்கமாகிறது.

அதேபோல எனது நாவினைக்கொண்டு பல பொய்களை உருவாக்கலாம்; மனிதமனங்களை திரிபடையச் செய்யலாம்; இன்னல்தரும் சூழல்களை உருவாக்கலாம்; பிறருக்கு துன்பம் விளைவிக்கலாம்; இருவரிடையே சண்டை மூளச் செய்யலாம்; குழுக்களிடையே பூசலை உண்டாக்கலாம்.  தெருக்களின் கல்வியாளனாகலாம்; பேரியக்கங்களை தோற்றுவிக்கலாம், புரட்சிகளையும் ரத்தப்பெருக்கையும் ஏற்படுத்தலாம், இரு நாடுகள் தம்மிடையே போரிடச் செய்யலாம், உலகப்போரை துவக்கலாம்.

பலர் பலியான மகாபாரதப் பெரும்போர் ஒரு தனி மனிதனால் தொடங்கப்பட்டது.  யுதிஷ்டிரன். அவன் சூதாட்டத்திற்கு அறைகூவி அழைக்கப்பட்டான்.  ‘நான் சூதாடப்போவதில்லை’ என்ற சரியான நிலைப்பாட்டை அவன் மேற்கொண்டிருக்கலாம்.  ஆனால் அவன் ‘சரி’ என்றான்.  அச்சிறு துவக்கத்தில் போர் தொடங்கியது.  ஒரு பெண் சூதாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டாள்.  தன் கொழுநன் அர்ஜுனனிடம் ‘என்னைப் பழித்தவனின் குருதியை நீ அள்ளிப் பூசும்வரை என் கூந்தல் முடியேன்’ என்றாள்.  அவன் அவளுக்கு சொல்லளித்தான்.   அச்சொல்லுக்காக அந்தப் பெரும்போர் நடந்தது.

ராமாயணம் இதே போன்றது.  ஒரு பொன்மானை ராமனிடம் வேண்டினாள் சீதை.  அவளைப் பாதுகாத்து நின்றிருந்த இலக்குவனை அவள் அவமதித்து துரத்தினாள்.  ராவணன் வந்து அவளை கடத்திச் சென்றான்.  பெருங்காவியம் நிகழ்ந்தது.

சொற்கள் ஏற்படுத்திய பிழைபுரிதல்களுக்கும் பெரும் சோகங்களுக்கும் இவை எடுத்துக்காட்டுகள். மறுபுறம் ஞானத்தின் கடவுளாய் சோஃபியாவும் சொல்லின் செல்வியாய் வாக்தேவி என்னும் சரஸ்வதியும் உண்டு.  அவர்கள் துணையுடன் சொற்கள் பயன்படுத்தப்படுவது எப்போதாவதுதான் நிகழ்கிறது.  ஆதரவாக, தூண்டலாக, நற்கருத்தை விளக்க, அழகான ஒன்றைக் கொணர, நட்பார்ந்த உறுதிமொழிக்கு, துணிவுகொள்ளும்படி ஊக்குவிப்பதற்கு என பலவகையில் சொல் பயன்படுகிறது. இவற்றிற்கென மட்டும் சொற்களை பயன்படுத்தி பிறபொழுதுகளில் மௌனமாய் இருப்பதன்மூலம் நாம் நம் நாவினைக்கொண்டு நம் சொல்லால் தவம் செய்பவர்களாகிறோம்.

வாழ்வின் கிடைநிலைகளிலிருந்து விலகி, உயர் மீயுண்மையை அவதானிக்கவும் அதன் அழகை உணரவும் செய்யும்போது நம் மனம் கொண்டு நாம் தவம் புரிகிறோம்.  மரத்தடியில் அமைதியாய் அமர்ந்திருக்கும் யோகி தன் பொழுதை வீணடிக்கவில்லை.  கவலையற்றவராய் தோற்றமளித்தாலும் அவர் எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் நல்லன விழைகிறார். இயல்பூக்கத்துடன் இருக்கிறார்.  அன்பும் கருணையும் நிறைந்தவர் அவர்.  கொடியால் பிணைக்கப்படாமலிருந்தால் – தன்னை விலக்கிகொண்டார் என்றால் மட்டுமே அவரால் பிறரை உய்விக்க முடியும்.

மூழ்கிக்கொண்டிருக்கும் மூவரை காப்பாற்ற விழையும் நாலாமவன் நீந்தி அம்மூவர் நடுவே சென்றானானால் மூவரும் அவனைப் பிடித்திழுக்க நால்வரும் மூழ்கவேண்டியதுதான்.  எனவே, அவன் அறிவுபூர்வமாக சிந்தித்து, முதலில் ஒருவனை கரைசேர்த்து அடுத்தவனை காப்பதற்குச் செல்லவேண்டும்.  மூவரையும் அவனால் காப்பாற்ற முடியும் என்பது உறுதியில்லை என்றாலும் அவர்களோடு சேர்ந்து அவனும் மூழ்க நேராது.

கருணை என்ற பேரில் நீங்கள் ஒரு வலையில் போய் சிக்கிவிடக்கூடாது.  உங்களை நீங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும்.  நீங்கள் உயிரையும் துறக்க சித்தமாயிருக்கும் ஒரு காரணம் பற்றி மார்டின் லூதர் கிங் பேசினார்.  நாம் அதை உயிர்வாழ்வதற்கான காரணமாக மாற்ற விரும்புகிறோம். இறப்பது என்பது போற்றத்தக்க விழுமியமன்று.  வாழ்வதே – இப்போது மட்டுமல்ல; என்றென்றுக்குமாய் வாழ்வதே – பெரும் விழுமியம்.

கனவு காணும்போது நீங்கள் கனவுகாண்கிறீர்கள் என்பதை உணர்ந்தே இருக்கும் கணங்களை கவனித்திருக்கிறீர்களா? ஆனால் அந்த உணர்வு கனவு நிகழ்வதை தடுப்பதில்லை.  கனவு முடியும் வரை,  நீங்கள் காண்பது கனவு என்று நீங்கள் உணர்ந்தாலும், அதிலிருந்து நீங்கள் வெளியே வர முடியாது. கனவு கவர்ச்சிகரமானதாய் இருக்கலாம்; அல்லது இயல்புக்கு மாறானதாய் இருக்கலாம்.  அதில் எதுவும் நிகழலாம்.  ஆனால் அது நம்மை அயரச் செய்வதில்லை.  ஏனெனில், நாம் விழித்ததும் அது மறைந்துவிடும் என நாமறிந்திருக்கிறோம்.  நம் விழிப்புநிலை வாழ்வும் இதேபோலிருக்கும்.  பலவும் முக்கியம் வாய்ந்தவையாய் தோன்றும்.  ஆனால் மற்றொரு நனவு ‘இதுதான் உலகம், இதுவும் கடந்துபோகும், நம்மால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை’ என்று சொல்லும்.

நனவு என்னும் கூறு மரத்தினடியில் அமர்ந்திருக்கும் மனிதனாக உருவகிக்கப்பட்டுள்ளது.  நாமே மரம், பிறிதொன்றில்லை.  இம்மரத்தில் காலமும் இடமும் ஒருபுறம் நம் விழிப்புநிலை அனுபவத்தாலும் மற்றொருபுறம் கனவுகளாலும் நிரப்பப்படுகின்றன. இரண்டுமே நம் ஆழ் நனவிலியிலிருந்தே தோன்றுகின்றன.  இது நிகழும்போதே, நனவின் அவதானிக்கும் கூறு அதிலிருந்து பிரிக்கப்பட்டு அதே மரத்தினடியில் சிந்தையில் ஆழ்த்தப்பட்டு வாழ்வின் பல நிகழ்வுகளையும் அவதானிக்கும்படி செய்யப்படுகிறது.

இதுவே இப்பாடலின் படிமம்.  உங்கள் அகத்தில் விழிப்புநிலை வாழ்வாய் கணம்தோறும் மலரும் கொடியை கவனியுங்கள்.  மற்றொரு திசையில் மலரும் உங்கள் பகற்கனவுக் கூறை நோக்குங்கள். உங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் இவற்றின் வேர்களை, விதைகளை கவனியுங்கள். இவ்விரு செயல்பாடுகளிலும் எத்துணையளவு நீங்கள் பங்கெடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் ஈடுபாடு அளவுக்கதிகமானால் அது உங்களை துன்புறுத்தும்.  அத்துன்பமே இங்கே நரகம் எனப்படுகிறது.

இப்போது அகம்நோக்கித் திரும்பி நனவிலியின் மௌனமான ஆழத்தை கவனியுங்கள்.  நம்மால் துளைக்கமுடியாத அந்த ஆழத்திலிருந்து, எண்ணங்கள் எப்படி எழுகின்றன, கருத்துகள் எப்படி உளக்காட்சிகளாக விரிகின்றன என்பதை நோக்குங்கள்.  நாம் எவ்வளவு முயன்றாலும் இவை தோன்றும் ஆழத்தை ஒரு எல்லைக்கு மேல் நம்மால் தாண்ட முடியாது. அந்நனவிலியின் ஆழத்தைப்போலவே, உடலில் தன்னிச்சையாய் நிகழும் செயல்பாடுகள் பற்றியும் நாம் ஏதும் அறியோம்.  அறிவியலறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிறுநீரகம், கணையம் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகள் என்று கருதுவதையே நாம் பாடநூல்களிலிருந்து அறிகிறோம்.  அச்செயல்பாடுகள் குறித்து நாம் உண்மையில் ஏதும் அறியாதவர்களாகவே இருக்கிறோம்.

ஆனால் நாம் நம் சுவாசம் குறித்த நனவுடையவர்களாக இருக்கிறோம்.  நம்மையறியாமலே சுவாசம் பெரும்பாலும் நடந்தேறுகிறது என்றாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு நம்மால் சுவாசிக்க முடியும்.  ஆனால் நீண்ட நேரம் நம்மால் மூச்சை அடக்க முடியாது.  நம் நனவைக் கடந்த ஏதோ ஒன்று அம்முயற்சியை கைவிடுமாறு வற்புறுத்துகிறது.  வாழ்வா சாவா என்ற போராட்டம் நிகழ்கிறது – நாம் வாழும்படி நிர்பந்திக்கப்படுகிறோம்.

நம்முள் உள்ள நனவிலியுடன் அறியாதனவற்றை சேர்க்கும்போது அவற்றின் மொத்தம் காரணமூலத்தில் அமைகிறது.  நமது நனவுநிலை அனுபவங்களும் நடத்தைக்கூறுகளும் அதன் இணைப்பகுதியாக உள்ளன.  மேலும் அகமெய் உயிரியின் (psychophysical organism) கூறுகளும், நனவுநிலை தர்க்கமும், உணர்ச்சியும், அறிதல் திறனும் உள்ளன.  நனவையும்  அறிந்தவற்றையும் நனவிலியுடனும் அறியப்படாதனவற்றுடனும் இணைக்கும்போது நம் தனித்தன்மை (individuation) குறித்த ஒரு முழுமைச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

இன்னும் ஒரு படி மேலே செல்வோம்.  உங்கள் வாழ்வை திரும்பி நோக்குங்கள். உங்களது பெற்றோருடையதைப் போன்றதேயான உங்களது சில உணர்ச்சி வகைமைகளை, நம்பிக்கைகளை, வாழ்வு குறித்த நோக்குகளை கவனியுங்கள்.  அவர்களிடமிருந்து நீங்கள் கற்ற திறன்களை எண்ணுங்கள். பின்னர், உங்கள் பெற்றோரின் உடலமைப்புகள், குரல்கள், தனிப்பட்ட உடலசைவுகள் மற்றும் திறன்களை நினைவுகூருங்கள். உங்களுக்கு பொருள்படாத அவர்களது நடத்தை வகைமைகள், நம்பிக்கைகள், முன்முடிவுகள் சிலவற்றை எண்ணிப்பாருங்கள்.  அவர்கள் வேறு விதமாக நடந்துகொள்ளவேண்டும், சிந்திக்கவேண்டும், வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கவேண்டும் என்று நாம் எண்ணுகிறோம்.  ஆனால் நாம் பொருட்படுத்தும் வகையில் அவர்கள் நடந்துகொள்வதில்லை.  அவர்களைத் தூண்டுவது எது என்றும் அவர்களின் உள்ளே நிகழ்வதென்ன என்றும் நாமறியோம். நம் மூதாதையருக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள மரபொற்றுமை குறித்தும் நாமேதுமறியோம்.

இங்கு நம் பெற்றோரின் வாழ்வு நம்மில் தொடர்வது குறித்த ஒரு நனவுச் சித்திரம் நமக்கு கிடைக்கிறது. இவையெல்லாம் ஒன்றாக இணைக்கப்படும்போது உங்களில் உள்ள நனவிலிக் காரணிகளின் நீட்சியொன்றை நீங்கள் காணலாம்.  காலவெளியில், பல்லாயிரம் ஆண்டுகால பரிணாமவளர்ச்சியில்  அந்நனவிலியின் ஆழத்தை நீங்கள் காணலாம்.  இங்கு இப்போது நம் அகத்தில் நாம் உணரும் நனவிலியின் ஆழம் குறித்து நாமறிய இது உதவும்.

அடுத்ததாக, உலகம்பற்றிய ஒரு சித்திரத்தை எண்ணுங்கள்.  நாம் உலகு என்று எதை சொல்கிறோம்?  உலகவரைபடம் நினைவில் எழலாம்.  விண்கலம் அண்மையில் எடுத்த உலகின் புகைப்படம்  தோன்றலாம்.  வானவியல் புத்தகத்தில் பார்த்த நெபுலாக்களின் அமைப்பு, பால்வீதியில் உள்ள பல்வேறு விண்மீன்கூட்டங்கள், நமது சூரியமண்டலம், கோள்களமைப்பு இவற்றின் படங்களை நினைவில் மீட்டெடுக்கலாம்.  ஆழிகளும், மலைகளும், அரசியல்-தேச எல்லைகளுடன் கூடிய உலகை கருத்தில் கொள்ளலாம்.  பண்பாடுகள், பேரரசுகள், நாகரிகங்கள் ஆகியவற்றின் வரலாற்று எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் எண்ணலாம்.

நமது நிகழ்கணம் இவற்றால் எல்லாம் வடிவமைக்கப்பட்டது.  ஆனால், கருதுகோள்களைத் தாண்டி இப்படிமங்களின், சித்திரங்களின் பின்னால் உள்ள மெய்மையை நாம் அறிவதில்லை.

நாம் முதலில் நம் நனவிலியின் ஆழத்தை அறிந்தோம்.  இப்போது வரலாறு, புவியியல், தொன்மம் மற்றும் மரபுசார் கிடைநிலை அகலத்தின் புறநோக்கு நமக்குக் கிடைக்கிறது. நாம் கவிதையும் அழகியலும் கொண்டு நலம்பாராட்டுவதும், விரும்புவதும் வெறுப்பதும், அழிக்கவும் மாற்றவும் சீர்திருத்தவும் விழைவதும் இவ்வுலகையே. நம் வேர்களை உணர்வதும் இவ்வுலகிலேதான்.

இப்போது, பல கருத்துப்படிமங்களின் புற வடிவமும், உங்களில் தொடங்கி பிரபஞ்சத்தின் தொடக்கம் வரை நீளும் நனவிலியின் பெரும் ஆழமும் கொண்ட அவ்வுலகில் உங்களை ஒரு தனியனாக நிறுத்துங்கள்.  இப்போது நீங்கள் செய்வது அவதானிப்பது.  அமைதியாய், தேர்வுகளின்றி இந்த நனவுநிலையை அனுபவியுங்கள்.  வெறுமனே கவனியுங்கள்.  இச்சமநிலையை எதையாவது செய்யத்துடிக்கும் உங்கள் நனவுநிலையோடு ஒப்பிடுங்கள்.  அந்நனவு நிலையில் உங்களில் கூடும் ஆர்வத்தை, அதற்கு நீங்கள் அளிக்கும் ஆற்றலின் அளவை, உங்கள் அனைத்து அமைப்புகளும் எப்படி துடிப்பு பெறுகின்றன என்பதை நோக்குங்கள்.  நோக்கிநிற்கும் நனவிலிருந்து இதை பிரித்தறியவேண்டும்.  நாம் தன்னிரக்கம் கொள்ளும்போதும் மாறிக்கொண்டிருக்கும் மனநிலைகளை துய்க்கும்போதும் இந்நனவு எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறது.  அது ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.  நம்மில் உள்ள பிற கூறு பாதிக்கப்படுகிறது, நாம் எப்படி பாதிக்கப்படுகிறோம் என்பதை நோக்கிநிற்கும் அகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் பூக்கும் இரு கொடிகள் படரும் ஒரு மரத்தின் மூலம் விளக்கப்படுகின்றன.  ஒரு கொடி நம் நனவின் உய்த்துணர் நிலையை, விழிப்புநிலையில் நடைபெறும் செயல்பாடுகளை குறிக்கிறது.  மற்றொன்று நம் அகவயப்பட்ட மாயங்களை, கற்பனைகளை குறிக்கிறது. நாம் இங்கு குறிப்பிடும் ஆழம் என்பது கொடியின் விதையாகிறது.  நிரந்தர வெளிப்பாடுகளாகிவிட்ட நம் தனியனுபவங்கள், வரலாறு, கலை, இலக்கியம், மனிதனின் கைவண்ணங்களான நகரமைப்புகள், நினைவிடங்கள் போன்ற பதிவுசெய்யப்பட்ட மானுட அனுபவங்களிலிருந்து நாம் எடுத்துக்கொள்பவை – இவையெல்லாம் அக்கொடியின் மலர்கள்.

தன்னைச்சுற்றி மலரும் வாழ்வை நோக்கி நிற்கும் நனவில் ஒரு சிறிய கூறாக மரத்தினடியில் அமர்ந்திருக்கும் நபர் குறிப்பிடப்படுகிறார்.  அவற்றுடன் ஒப்பிடப்படும்போது, நோக்கிக்கொண்டிருக்கும் நனவு என்பது பிரபஞ்ச ஆழியில் தன்னை இழந்த ஒரு ஒளிவிடும் தாரகையாக இருக்கிறது எனலாம்.  அதை எந்நேரமும் நாம் தவறவிடக்கூடும்.  முக்கியமற்றதாகத் தோன்றினாலும், நம் வாழ்வின் அனைத்து செயல்பாடுகளுக்குமான நிலமாகவும் அவற்றிற்கு தூண்டுகோலாகவும் அது இருக்கிறது.

பண்டைநாட்களில் இந்திய கிராமப்புறங்களில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்பவர்களை காணமுடியும்.  இன்றோ இது ஆதர்சமான சூழல்களில் மட்டுமே நிகழமுடியும்.  அமைதிதவழும் அத்தகைய  இடத்தை நாம் தேடும்போது, நம்மைச்சுற்றி நிகழும் பேரோலத்தையும் அமைதியின்மையையும் உணர்கிறோம்.  நம் புலன்களிலும் மனதிலும் இத்தகைய தேவை உணரப்படும்போது, அது நம்முள் உறையும் ஆற்றல்களோடும் துவக்கநிலை நினைவுகளோடும் பிணைக்கப்பட்ட பல அதீத உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.  நம் ஆவல் தூண்டப்படுகிறது. நம் கவனம் சிதறுகிறது.  நம் சமன் குலையாமல் மையத்தின் மோனநிலையுடன் இயைதல் ஒரு போராட்டமாகவே இருக்கிறது.  ஐந்து நிமிடங்கள் நாம் அமர்ந்திருந்து ஓசையடங்குவதற்காக காத்திருக்கிறோம்.  நம் பொறுமை நம்மை கைவிடுகிறது.  எழுந்து விசாரணையில் இறங்குகிறோம், நிகழ்வனவற்றுடன் பிணைக்கப்படுகிறோம்.  ஆனால் அகத்தின் மெய்மைக்குள் இறங்க விழைபவன் இதனை ஒரு சவாலாக ஏற்கவேண்டும்.  உங்களால் எத்துணை பொறுமை காக்கமுடியும்?  சூழல் எதுவாயினும் சலனமில்லாமல் எப்படி இருக்க முடியும்?

ஏழாவது பாடலில் கவனச்சிதறல் ஏற்படுத்தும் ஆயாசம் குறித்து பார்த்தோம்.  அங்கே தூங்குதல், விழித்தல், உண்ணல், புணர்தல் போன்ற இயற்கைத் தேவைகள் நம்மை அணுகியவண்ணம் உள்ளன. இவற்றின் பெருக்கு அனைத்து மாற்றங்களையும் பிரதிபலிக்கும் மாற்றமில்லா மெய்மையை நாம் அறியமுடியாமல் செய்கிறது. புற உலகின் பல அதிர்வுகளால் நிரப்பப்பட்டாலும் ஆடி ஒரு போதும் பாதிப்புக்குள்ளாவதில்லை.  அதேபோல், தூய சாட்சியாய் இருக்கும் நனவு, மாற்றத்திற்குள்ளாவதாகத் தோன்றினாலும் உண்மையில் அதில் எந்த மாறுதலும் நிகழ்வதில்லை.  இப்பாடலில் வரும் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல ஒரு பெரும் நிலைத்தன்மையை தரக்கூடிய ஒரு கடுமையான மனப்பாங்கை குரு எட்டாவது பாடலில் பரிந்துரைத்தார்.

இங்குள்ள சவால் மெய்யானது, அதே சமயத்தில் பொய்யானதும் கூட.  வந்து பின் மறைவதால் பொய்யானது. ஆனால் தனியர்களாய் நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்குக் காரணமான மரபியல்கைகளைக் (genetic potentialities) கொண்டது என்பதால் மெய்யானது.  அறியப்படாததால் ஒரு கருவியாக பாவிக்கப்படும் அகமெய் உயிரி நிச்சயமாக மாற்றத்திற்குள்ளாகிறது.  தனியனின் வாழ்நாளைத் தாண்டியும் எஞ்சுகிறது.    உயிரியல் ரீதியாக அது தலைமுறை தலைமுறையாக கையளிக்கப்படுகிறது.  இதனால்தான், “அகத்தின் மாற்றமில்லாத நிலையை அறிய யாருளர்?” என்கிறார் குரு.

பின்னர் நம்மை இரண்டு உறுதியான மாற்றுகள் கொண்ட புதிர்நிலைக்கு இட்டுவந்தார் குரு.  மாறிக்கொண்டே இருக்கும் இவற்றைத் தாண்டி மாற்றமில்லா அறிவாகவே மாறவேண்டும்.  ஏழாவது பாடலில் சொன்னதுபோல, நம்மில் பெரும்பான்மையோருக்கு இது எளிதே அல்ல.  நம்மால் முடியாதபோது, அதில் வெற்றிபெற்றவர்களிடம் இருமுனைப் பிணைப்பை (bipolarity) ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் மாற்றமில்லா நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்.

எட்டாவது பாடல் ஒரு கடும் மனப்பாங்கை கைக்கொள்ளும்படி கூறுகிறது. தெருவில் அலையும் நாயைப்போல உங்கள் மனதை விடக்கூடாது.  அதன் தலைவனாக நீங்கள் ஆக வேண்டும். வெறுமனே நோக்குதல் என்னும் இந்தச் சிறு விழிப்புணர்வில் அனைத்துமறிதலுக்கான இயல்கை உள்ளது.  நம்மில் பலரில் உள்ள இந்த அனைத்தறிதல் என்னும் நோக்கும் கூறு ஐ.நா.வைப் (United Nations) போல் உள்ளது. ஐ.நா. உலகம் முழுவதிலும் நிகழ்வனவற்றை நோக்குகிறது.  ஆனால் எந்த நாடும் மடமையில் ஈடுபடும்போது அதைத் தடுக்கும் அதிகாரம் எதுவும் அதற்கிருப்பதில்லை. ‘செய்யாதே’ என அறிவுரை மட்டுமே அதனால் வழங்கமுடியும்.  நம்மில் உள்ள அனைத்தறி நோக்கிலும் (omniscient witness) எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு ஐ.நா. உள்ளது.  அதை சரியாக வளர்த்தெடுப்போமென்றால் – அதன் இச்சைப்படி நடக்க அதிகாரம் அளித்தோமென்றால் – அது உலகில் உள்ள அனைத்துப் படைகளையும் ஐ.நா.-விடம் ஒப்படைத்து தனி நாடுகளின் இறையாண்மையை காக்கும்படி கூறுவதற்கு ஒப்பாகும்.  அதனால் கொடுமைகளை தடுக்க இயலும்.

இது நடக்கக்கூடும்.  ஆனால் இப்போது நிகழவில்லை.  அதை பயிலும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.  அவர்கள் தங்களது நோக்கிநிற்கும் நனவை தமது இச்சை நனவுடன் இணைத்துக்கொள்கின்றனர்.  நோக்கிநிற்கும் நனவானது அனைவருக்கும் நலம் நாடல், உன்னத அழகு, பேருண்மை, எல்லையற்ற உறுதிப்பாடு இவற்றிற்கான நெறியில் செல்லுமேயானால் இது பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும்.

முன்தீர்மானங்களோடு கூடிய வடிவமைக்கப்பட்ட வாழ்வை எதிர்கொள்ளும்போது அதில் போலித்தனமும் ஏமாற்றலும் இருக்கிறது.  அதன் உண்மைத்தன்மையை அது மறைக்கிறது. சூழலும் மனிதர்களும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது வேடமணிகின்றனர் என்றும் நாம் முழுதாக வாழவிரும்பினால் அவற்றை கிழித்தெறிய வேண்டும் என்றும் கூறிய ஃபிராய்ட் போன்றோர் மனிதகுலத்துக்கே பெரும் நன்மை செய்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  நோக்கிநிற்கும் நனவில் நீங்கள் மையம்கொள்ளும்போது மக்களும் நிகழ்வுகளும் அணியும் முகத்திரைகளை நீங்கள் நன்றாக பார்க்கலாம்.  அவற்றின் பின்னால் உள்ள உண்மையின் தன்மையை வெகு சிலரே அறிகின்றனர்.

முகத்திரைகளுக்குப் பின்னால் உள்ளதை அறியவே நாம் இங்கு கூடியிருக்கிறோம்.  வாசனைகள் எனப்படும் துவக்கநிலை நினைவுகள் எனும் பல வேட்கைகள் அவற்றின் பின்னால் உள்ளன. இவ்வாற்றல்களுக்கும் தற்காப்பு மிகவும் தேவையான ஒன்று.  முகத்திரையே தற்காப்புக் கவசம். துரதிருஷ்டவசமாக, இத்திரைகள் சமூகத்தைக் காக்கும் அதே சமயத்தில் தனியன் தன்னுடைய மெய்மையையே நோக்கமுடியாமல் செய்துவிடுகிறது.

இந்த ஏமாற்றுச் சூழல்களிலிருந்து வெளியேறி அமர்ந்து ஆடலை அவதானிக்கும்படி நம்மிடம் மன்றாடுகிறார் குரு. உங்களது முகத்திரை அகன்றபின், நோக்கிநிற்கும் நனவால் பிரபஞ்ச உண்மை, பிரபஞ்ச நன்மை, பிரபஞ்ச அழகு போன்ற முழுமுற்றான நிலையில் தன்னை நிலத்தில் நிறுவிக்கொள்ள முடிகிறது. அதனால்தான் அச்சம்தரும்  அம்மரத்தின் கீழமர்ந்தவரால் தவம் செய்ய முடிகிறது என்கிறார் குரு.  ஏற்கெனவே, எட்டாவது பாடலில் சிக்கனத்தின் அவசியம் குறிப்புணர்த்தப்பட்டது.  இங்கே அச்சிக்கனம் ஒரு தனிப்பட்ட செயலாக இல்லாமல் நிரந்தரமான ஒன்றாக ஆக்கப்படுகிறது.  பறவைகளை வீழ்த்தும் ஒரு தனிச்செயல் வழமையான தவச்செயலாக வளர்கிறது.

அச்சுறுத்தும் கொடிகளிலிருந்து விலகிநிற்கவும், மீமெய்மைக்கும், நலனுக்கும், அழகுக்கும் உதவுபவனாய் தனியனை மாற்ற உதவும் முழுமுற்றான தரிசனத்தை வளர்த்தெடுக்கவும் பல வழிகளை சான்றோர் கற்பித்துச் சென்றுள்ளனர்.  பார்வை, சித்தம், பேச்சு, நடத்தை, உணர்ச்சி என அனைத்திலும் நாம் சரியான நிலையை மேற்கொள்ளவேண்டும் என்றார் புத்தர்.  எது சரியென எப்படி அறிவது? புத்தனை, நால்நிலை மெய்மையை சரணடைந்து ஐந்து விழுமியங்களை வளர்த்துக்கொள்வது மூலம்  அறியலாம்.  ஒரு புத்தபிட்சுவானவர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து ‘நான் புத்தனை சரணடைகிறேன்; தர்மத்தை சரணடைகிறேன்; சங்கத்தை சரணடைகிறேன்’ என மும்முறை ஓதுகிறார்.   பின்னர் ஐந்து உறுதிமொழிகளை மேற்கொள்கிறார்;

இக்கைகளால் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யேன்

இயற்கை கருணையுடன் எனகென தரும் பங்கையன்றி எதையும் பறிக்கேன்

பொருளில்லா பேச்சிலும் வம்பிலும் ஒரு கணத்தையும் நான் வீணாக்கேன்

அவாக்கள் என்னை நல்வழியிலிருந்து விலக்க ஒப்பேன்;

போதைப்பொருட்கள் என் அறிதிறனை மாசுபடுத்த விடேன்

பின்னர் தன் சக பிட்சுக்களுடன் அமர்ந்து சமயநூல்களை கற்கிறார்.  புத்தரின் வாழ்வையும் சொற்களையும் ஆழ்ந்து ஆய்கிறார்.  உலகப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு விடுதலை பெற இது ஒரு வழி.  இதுபோல் பலவழிகள் உள்ளன.

இயேசு கிறிஸ்துவின் விரிந்த கைகளுக்குள் அடைக்கலம் புகுந்து அவரது அன்பின் கதகதப்பை உணர்வது இன்னொரு வழி.  என் பிதாவின் சொற்களை கேளுங்கள், ஆறுதலளித்துக்காக்கும் சொற்களை கேளுங்கள் என்கிறார் இயேசு.  கடவுளின் அரசாங்கம் எப்படிப்பட்டது என்றும் அதை அடைய ஒருவன் தகுதிபெறுவது எங்ஙனம் என்பதையும் விளக்குகிறார்.  வழியையும் இலக்கையும், ஒளியையும் வாழ்வையும், இறப்பையும் புத்துயிர்ப்பையும் நான் காட்டுகிறேன் என்று வாக்களிக்கிறார்.

சூஃபிக்கள் சொல்லியிருப்பதைப் போல அல்லாவை நம் பிரியத்துக்குரியவனாக ஆக்கிக்கொள்ளும் இஸ்லாத்தின் வழியை மேற்கொள்ளலாம்.  நடுநிலை பூஜ்யத்தில் இருக்கும் நோக்கிநிற்கும் அகத்தினை விளக்குகிறார் லாவோட்சு.  வாழ்வின் முரண்களை ஆராய்ந்து அவற்றின் உள்ளுறையும் இணக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்வது ஒரு அருமையான வழி.

ரிஷிகள் கற்பித்த வழியும் ஒன்றுண்டு.  பண்டைக்காலம் தொடங்கி நம் காலத்தில் ரமணர் வரை அவர்கள் எல்லோருமே ‘நான் யார்?’ என்ற கேள்வியை தளர்வில்லாது பின்தொடர்ந்தனர். அந்தப்பாதை மேலோட்டமான தடைகளிலிருந்து அவர்களை விடுவித்து இப்போது நாம் மரத்தடியில் வைத்திருக்கும் தியானத்திலமர்ந்த சாட்சியான தூய ஒளிக்கு அவர்களை இட்டு வந்தது.  திரைகளிலும் மேலோட்டமானவைகளிலும் கவனம் செலுத்துபவர்கள் அத்தகை ரிஷியை கடமை தவறியவர் எனலாம்.  ஆனால் ஒருபோதும் அது உண்மையாகாது.  பயன்மதிப்பு ரீதியாக நோக்கினால், மிகுவேலை கொண்டவர்களைவிட அவருடையது கடுமையான – அதிகம் பயன்தரக்கூடிய – உழைப்பு.  மாபெரும் தூய்மையாக்கத்தை அவர் பயில்கிறார், அனுபவிக்கிறார்.

விழிப்பு, கனவு, நனவிலி என்ற மூன்று நிலைகளே மெய்யானவை.  நோக்கிநிற்றல் தன்னளவில் ஒரு நிலை (அவஸ்தை) கிடையாது.  பிற நிலைகளைக் காணும் ஒன்று அது.  அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு வினையூக்கி எனலாம்.  இனி, நனவின் மூன்று கூறுகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தூயதாய் எஞ்சுகின்ற நோக்கிநிற்கும் அகத்தைப்பற்றி நன்கு அறிவதில் நாம் நம் கவனத்தை செலுத்துவோம்.

நடராஜ குருவும் நானும் – 13

Standard

சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன்.  பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது.  அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன்.  அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது.  அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார்.  அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார்.  அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் ரூமி என்னை பெரிதும் கவர்ந்தார்.  ரூமியைப் போலவே நானும் என் ஏழ்மையை பெருமையாகக் கருதினேன்;  மறைவாழ்வே என் புகலிடம் என்றெண்ணினேன்.

ஜியா-உல்-ஹக் என்ற புனைபெயரில் பல குழந்தைகளுக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்.  அவர்களெல்லாம் வளர்ந்த பின்னர், ‘யுவலோகம்’ என்ற அமைப்புக்கு என்னை தலைமைதாங்க கேட்டுக்கொண்டனர்.  மதிகெட்டுப்போன தருணத்தில் பெங்களூரில் இருந்து ஒரு இதழை பதிப்பிக்க ஒப்புக்கொண்டேன்.  இந்த ‘கர்மா’வில் நான் ஆழ்ந்துபோவதற்கு முன்பாக குரு மீண்டும் தோன்றி, சமூக-பொருளாதார வலையெதிலும் நான் சிக்கிக்கொள்வதிலிருந்து என்னை மீட்டார்.

விடுதலை என்னும் விழுமியத்தின் உயர்வை குரு சொல்லச்சொல்ல, மீண்டும் அனைத்தையும் உதறிச் செல்லும் எண்ணம் என்னுள் முகிழ்த்தது.  ஆனால் இம்முறை எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.  எனவே, பிரெய்லி முறையை கற்பதற்கு எனக்குதவும்படி கோரி பம்பாயிலிருந்த என் நண்பருக்கு எழுதினேன்.  என் நண்பர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பதைக் கேட்டபோது, இத்தகைய தந்திரங்களை தான் அறிந்தே இருப்பதாகக் கூறினார் குரு.  ஒருவிதத்தில் இது தவறான தேர்வு என்பது அவரது எண்ணமாக இருந்தபோதும் எனக்குத் தடையாக இருக்கவில்லை.  பெங்களூரிலிருந்து பாம்பே விக்டோரியா டெர்மினஸுக்குச் செல்வதற்கான கட்டணத்தை மட்டும் எனக்குத் தந்தார்.  வழியில் உண்பதற்கென மேலும் பத்து ரூபாய் கொடுத்தார்.  கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு ரூபாய் தந்தார்.  அவர் பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றபோது மேலும் 25 காசுகள் தந்தார்.

அமைதி திகழும் சோமனஹள்ளியைத் துறந்து, பாம்பே எனும் பித்து நகரத்தின் அருவருக்கத்தக்க சேரிப்பகுதியான தாதரில் வாழச்சென்றது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது.  நடராஜ குருவின் பழைய மாணவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று தன் இல்லத்தில் தங்க வைத்தார்.  ஒரே ஒரு அறை கொண்டது அவர் வீடு.  அவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த ஒரே அறையில் வசித்தார்.  அறையின் ஒரு மூலையே சமையலறையாகவும் குளியலறையாகவும் இருந்தது.  அங்கிருந்த ஒரே படுக்கை என்பது ஒரு மர பெஞ்சு மட்டுமே.  பெருந்தன்மையுடன் அது எனக்கு வழங்கப்பட்டது.  அவர் மனைவி அந்த பெஞ்சின் அடியில் உறங்குவார்.  மிச்சமிருந்த இடம் அக்குழந்தைகளுக்கு மட்டும் போதுமானதாயிருந்தது.  நண்பர் வாசலில் படுத்துக்கொள்வார்.  அவர் தலை உள்ளேயும் கால் வெளியிலும் இருக்கும்.  ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம் இருந்தது.  எங்களுடையது ஒற்றைக் குடும்பம்.  பிற அறைகளில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன.  நைல் நதிக்கரையில் நிலக்குடைவில் வாழ்ந்த தன் ஞானகுருவை விட்டுச்சென்று ரோமாபுரியின் கிளர்ச்சிமிகு வாழ்வை ருசிக்கச் சென்ற ஃபிலோமினின் இக்கட்டை அப்போது நானும் உணர்ந்தேன்.  பாம்பே மக்களின் பேச்சு உளறலாகவே எனக்குக் கேட்டது.  நாள் முழுவதும் குருவின் ஒவ்வொரு சொல்லும் என் நினைவிலெழுந்துகொண்டே இருந்தது.  மீண்டும் மேய்ப்பனைப் பிரிந்த ஆடுபோலானேன் நான்.

எனது நண்பர் நடராஜ குருவின் முன்னாள் மாணவர் மட்டுமல்ல; குருவின் உயர் விழுமியங்களுடன் வாழ விரும்பியவர். ஆனால், ஒரு யோகியின் குணம் சிறிதும் கொண்டவரல்ல.  மனிதகுலம் பெரிதாகப் போற்றும் எந்த விழுமியத்தாலும் எளிதில் கவரப்படும் இளகிய நெஞ்சம் கொண்டவர்.  அவரது குணத்துடன் ஒத்துப்போகாத எந்த ஒரு சொல்லும் நடத்தையும் அவரை முரடனாக்கிவிடும்.  அன்பு என்பது அவருக்கு ஒரு பெரும் சவால்; அந்த சவாலை சந்திக்க எந்தத் தியாகத்தையும் செய்ய அவர் சித்தமாயிருந்தார்.  பெரும்சீற்றத்துடன் தன் எதிரியைத் தாக்கவும் அவரால் முடியும்.  நல்ல வாசிப்பு கொண்ட அவர் இந்திய-உலக அரசியல் இயக்கங்கள் பற்றி அறிந்திருந்தார்.  நான் கையில் காசில்லாமல் இருந்ததை அவர் அறிந்திருந்தார்.  பணம் பற்றியும் எனது தேவைகள் பற்றியும் ஒருபோதும் நான் யாருடனும் பேசியதில்லை.  நான் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதையும் சலவைசெய்த உடைகளை எனக்களிப்பதிலும் கவனம் எடுத்துக்கொண்டார்.  அந்த ஒற்றையறை வீட்டில் ஒருவர் குளிக்கும்போது மற்றவர்கள் வெளியே செல்லவேண்டும். கடைக்குச் செல்வது போன்ற சில வேலைகளை இந்த நேரத்தில் செய்துகொள்வது வழக்கம்.  ஒவ்வொரு நாளும் காலையில் சலவைவேட்டியை நான் உடுத்துவதற்குத் தரும்போது அதன் ஒரு முனையில் ஐந்து ரூபாய் முடியப்பட்டிருக்கும்.  எனக்குத்தேவைப்பட்டால் முடிச்சை அவிழ்த்து எடுத்துக்கொள்ளலாம்.  அவர் அப்போதுதான் வியாபாரம் தொடங்கியிருந்ததும் அவருக்கே பணமுடை இருந்ததும் எனக்குத் தெரியும்.  தெள்ளிச்சேரியைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு மந்திரவாதி!  மொத்த குடும்பத்திற்கும் தேவையானதை ஈட்டியவர் அவரே.  விடிகாலையில் கணித வகுப்புகள் எடுப்பார்.  நான் குளித்து சிற்றுண்டி அருந்திய பிறகு அதே அறையில் சில குழந்தைகளுக்கு மராத்தி சொல்லிக் கொடுப்பார்.  மாலைகளில் ஆங்கிலமும் இந்தியும் கற்றுத்தருவார்.  எல்லாவேளையும் குற்றவுணர்வுடனேயே அங்கே உணவருந்தினேன்.

 ஒரு நாள் காலையில் கால்போனபோக்கில் நடந்து, பாம்பே நகரின் செல்வந்தர்கள் வாழும் மெரீன் ட்ரைவை சென்றடைந்தேன்.  சில துறவியர் ஒரு மாளிகைக்குள் செல்வதைக்கண்டு, என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே என நானும் சென்றேன்.  ஆன்மீக சொற்பொழிவுக்காக மக்கள் அங்கே குழுமியிருந்தனர்.  நான்கு துறவிகள் மேடையில் படாடோபமாக அமர்ந்திருந்தனர்.  ஆண்களும் பெண்களும் தரையில் நன்றாக விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அமர்ந்திருந்தனர்.  நான் அவர்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன்.  பாம்பேயில் துறவிகள் சம்சாரிகளுடன் சேர்ந்து வாழ்வதோ அவர்களுடன் அமர்வதோ வழக்கமில்லை என்பதால், என்னருகே அமர்ந்திருந்தவர் துணுக்குற்று என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக மேடையருகே கொண்டு சென்றார்.  அமைதி தவழும் முகம்கொண்ட புனிதர்களுடன் அமர்த்தப்பட்டேன்.   யாரும் யாரையும்விட புனிதராக இருக்கமுடியாது என்பதை நான் நடராஜ குருவிடம் கற்றிருந்தேன். ஆனால் அது ஒரு பாரம்பரியமான ஆசிரமம்.  தலைமைத் துறவி தனது ‘ப்ரஹ்மாஸ்மிமாலா’ என்ற நூலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

உரை முடிந்தபின் அரங்கைவிட்டு வெளியே வந்துபார்த்தபோது என் நண்பர் புதிதாய் வாங்கிக் கொடுத்திருந்த காலணிகளை காணவில்லை.  நான் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, மரியாதைக்குரிய தோற்றம் கொண்ட ஒரு மனிதர் என்னவென்று விசாரித்தார்.  என் காலணிகளை காணவில்லை என்று நான் சொன்னதும், தன் சப்பாத்துகளை கழற்றி என்னை அணிந்துகொள்ளும்படி சொன்னார்.  வட இந்தியாவில் ஒரு துறவி ஆங்கிலத்தில் பேசுவதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  எனவே, நான் ‘Sir, I should not step into your shoes’ என்று சொன்னபோது அவருக்கு வியப்பாயிருந்தது.

கனிவுடன் என்னை ஆசிரமத்தின் அறை ஒன்றிற்கு அழைத்துச்சென்றார்.  வசதியான இருக்கையில் என்னை உட்கார வைத்து நான் மெட்ரிகுலேஷன் தேறியிருக்கிறேனா என்று கேட்டார்.  நான் ஆமென்று சொன்னதும் நான் பட்டதாரியா என்று கேட்டார்.  அதற்கும் நான் ஆம் என்று சொன்னபோது அவரது ஆவல் பெருகியது.  நான் முதுகலைப் பட்டம் பெற்றவனா என்றார்.  அதற்கும் ஆம் என்றேன்.  நான் எதற்காக பாம்பே வந்தேன் என்று கேட்டார்.  பார்வையற்றோருக்கு உதவுவதற்காக நான் பிரெய்லி முறையை கற்க விழைவதையும், முடிந்தால் சமூக உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் விருப்பத்தையும் கூறினேன்.  இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் அந்த ஆசிரமத்தின் மேலாளராக இருக்கவேண்டும் என்று தோன்றியது.  நான் அங்கேயே தங்கவேண்டும் என்றும் பார்வையற்றோருக்கான டாடா பள்ளியில் நான் பிரெய்லி கற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.  டாடா சமூகவியல் நிறுவனத்தில் முனைவர்பட்டப் படிப்புக்கும் உதவுவதாகக் கூறினார்.  ஒரு மந்திரவாதியைப் போல சொன்னதையெல்லாம் செய்தும் தந்தார்.

அந்த ஆசிரமத்தில் நான்கு துறவிகள் தங்கியிருந்தனர்.  ஒவ்வொருவருக்கும் வசதியான தனியறையும் ஏவல் செய்ய பிரம்மசாரிகளும் இருந்தனர்.  ஏழ்மையிலிருந்து செல்வச்செழிப்பிற்குச் சென்றது போலிருந்தது.  இவையெல்லாம் பற்றி குருவுக்கு எழுதியபோது அங்குள்ள அறிஞர்களிடம் வேதாந்தம் பயிலும்படி என்னை ஊக்குவித்தார்.  ஆனால், பார்வையற்றோருக்கு சேவை செய்தல் என்ற என் பெரிதுபடுத்தப்பட்ட எண்ணத்தை அவர் பாராட்டவில்லை.  எவரையும் ஏழை என்றோ பாவப்பட்டவர் என்றோ சொல்வதை அவர் விரும்பியதில்லை.  ‘நாமும் எல்லோரையும் போல ஏழைதான்; பாவப்பட்டவர்தான்’ என்பார்.  பார்வையற்றோருக்காக நான் செய்யவிருந்த தியாகத்தை குரு ஊக்குவிக்கவில்லை என்பது இரக்கமற்ற செயலாகத் தோன்றியது.  எழுத்தாளர் வேத் மேத்தா அக்காலகட்டத்தில் டாடா பார்வையற்றோர் பள்ளியின் மாணவராக இருந்திருப்பார் போலும்.  அந்நாட்களில் எத்தனை கொடுமையான முறையில் அப்பள்ளி நடத்தப்பட்டது என்பதைக் கூறும் புத்தகம் ஒன்றை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

பிரெய்லி முறையை கற்ற பின், பாஸ்டனில் ஒரு வருடப் பயிற்சி பெறுவதற்காக பெர்கின்ஸ் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தேன்.  இதை குருவுக்கு தெரிவித்தபோது, ஒரு துறவி தன் வாழ்க்கைக்கான் ஏற்பாடுகளை செய்துகொள்ளும் முறை இதுவல்ல என்றார்.  அமெரிக்காவிற்கோ பிற நாடுகளுக்கோ நான் செல்வேன் என்பது ஊழாக இருந்தால் தானாகவே அந்த வாய்ப்பு தேடி வரும் என்றும், அத்தகைய வாய்ப்புகளுக்காக நான் பாசாங்குகள் ஏதும் செய்யத்தேவையில்லை என்றும் எழுதினார்.  அவரது சொற்கள் அப்போது கடுமையானவையாக தோன்றின.  எந்த சூழ்ச்சியும் பாசாங்கும் இல்லாமலேயே உலகை குறைந்தது ஆறுமுறையாவது சுற்றிவருவேன் என்றோ மேலும் பலமுறை அரைச்சுற்றுகள் வருவேன் என்றோ அப்போது நான் அறிந்திருக்கவில்லை.   குரு வாக்கு பிழைக்காது என்பது இந்தியப் பழமொழி அல்லவா?