அதிகவிஷால மரு ப்ரதேஷமொன்னாய்
நதி பெருகுந்நதுபோலெ வன்னு நாதம்
சுருதிகளில் வீணு துரக்குமக்ஷியென்னும்
யதமியலும் யதிவர்யனாயிடேணம்
அகன்று விரிந்த பெரும் பாலையில்
ஆற்று வெள்ளம் போலே வரும் ஒலி
செவி நிறைக்க கண்கள் திறக்கும்
எதுவும் பாதிக்காத உன்னத யதியாகவேண்டும்
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 16)
மக்களில் பலருக்கும் இவ்வுலகு ஒரு பாலை போன்றது. அவர்கள் தான் சாதித்தது என்ன என்று வாழ்வை திரும்பிப் பார்க்கும்போது தாங்கள் எதையும் அடையவில்லை என்பதை அறிகிறார்கள். பெரும்துயர் அவர்களில் நிறைகிறது. என்ன கிடைக்கும் என்று சுற்றிலும் நோக்கும்போது, அவர்களுக்கு ஏதும் தென்படுவதில்லை. அவர்களின் எதிர்காலம் மழுங்கலாய் இருக்கிறது. அவர்களது எதிர் நிகழ் கழிவெனும் முக்காலமும் பொருளற்றவையாக இருக்கின்றன. பாலையில் தொலைந்தவனின் வாழ்விற்கு ஒப்பானது அவர்களுடையது. எங்கும் மணல் மட்டுமே சூழ்ந்திருக்கிறது. மேலும் மேலும் என மணல். தூரத்தில் எங்கோ நீலமான தெளிந்த நீருடனான ஒரு கால்வாய் அவர்களுக்கு தெரிகிறது. அதை நோக்கி ஓடுகின்றனர். அது காணாமலாகிறது, அது வெறும் கானல்தான் என்று தெரிகிறது. ஒன்றிலிருந்து இன்னொரு கானலுக்கென ஒடி ஓடி சலித்து பயனற்ற தமது துரத்தல்களை கைவிட்டு நம்பிக்கையிழந்து சாய்கின்றனர்.
சிலர் இதனை தம் வாழ்வின் இறுதியில், மரணத்தறுவாயில்தான் உணர்கின்றனர். மரணப்படுக்கையில் கைவிடப்பட்டவர்களாய் கிடக்கும்போது, அவர்கள் வாழ்ந்த மொத்த வாழ்வும் பயனற்றதாய் தோன்றுகிறது. துயர் அவர்களை ஆட்கொள்கிறது. அந்நிலையில் செய்வதற்கேதுமில்லை. ஆனால் சிலர் வாழ்வில் முன்னதாகவே இதை உணர்கின்றனர். வாழ்த்தப்பட்ட அவர்களுக்கு சிறுவயதிலேயே தம்மைச் சுற்றியுள்ள உலகின் விழுமியங்களில் ஏதோ தவறிருக்கிறதென்பது தெரிந்துவிடுகிறது. அறிவுகூர்ந்த இவர்களுக்கு விழுமியங்களாகத் தோன்றுவனவற்றின் மதிப்பு குறித்து ஐயம் தோன்றுகிறது.
விழிகள் வெளிப்புறமாக திரும்பும்போது பலவிதமான கவர்ச்சிகள் கண்ணில் படுகின்றன. இயல்பாக நாம் அவற்றால் ஈர்க்கப்படுகிறோம். இக்கவர்ச்சிகளை அடைவதற்கான செல்வழியை கண்டடையவே நாம் நம் செவிகளை பயன்படுத்துகிறோம். கண்ணின் தேவைக்கேற்ப பயன்படும் கருவியாகவே நம் காது ஆகிவிடுகிறது. ஆனால், வாழ்த்தப்பட்ட ஒருவரின் காலடியில் நாம் கண்மூடி அமர்வோமேயானால், சான்றோர் அனைவரும் தரும் ரகசியத் திறவுகோலை அவரும் நமக்களிக்கக்கூடும் – யேசு சொல்வதைப்போல இறைவனின் ராஜ்யத்திற்கான திறவுகோலை; கிருஷ்ணன் தானுறைவதாகக் கூறும் மனக்குகைக்கான திறவுகோலை.
நம்மனைவருள்ளும் இடையறாமல் தொடர்ந்து இசைத்துக்கொண்டிருக்கும் இன்னிசை ஒன்றுண்டு. ஆனால் நாம் அதற்கு செவி கொடுப்பதில்லை. அதை கேட்பதொன்றும் செயற்கரியதல்ல. நாம் வெறுமனே கேட்க வேண்டியதுதான். நம் உடல் செயலற்ற பொருண்மை அல்ல, அது ஒரு பெரு நகரம் போன்றது. நகரத்தின் போக்குவரத்து போன்றது அதன் இசை. அதற்கு காதுகொடுக்கும்போதுதான் – வேறொன்றிலும் நம் கவனம் செல்லாதபோதுதான் – நாம் அதை கேட்கிறோம் எப்போதும் நம்முள் பலவும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு அணுத்துகளும் வேகமாய் சுற்றி வரும்போது ஒரு ஸ்வரத்தை எழுப்புகிறது. ஒவ்வொரு உறுப்பும் தனக்கேயுரித்தான் ஒரு இன்னிசை வரியை கொண்டுள்ளது. ஆக, இலட்சக்கணக்கான ஸ்வரங்கள் நம்முள் எழுந்து முடிவிலா ஒரு மகத்தான இசைக்கோவையில் கலக்கின்றன. நம் அகம் நோக்கி நாம் திரும்புவோமென்றால் நம்மால் இந்த இசையை கேட்க முடியும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஒலிப்பது. எனக்கு யாரோ தம்பூராவில் சுருதிசேர்ப்பது போல், யாரோ யாழிசைப்பது போல் கேட்கும். இந்த உள்ளொலி நாதம் எனப்படுகிறது. குருவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்கேட்கும்போது இந்த நாதம் மேலும் பன்மடங்கு பொருள்கொள்கிறது.
யேசு சொலவதைக் கேட்க மக்கள்திரள் மலைக்குச் சென்ற்போது அவர் ஆற்றிய நல்லுரை கேட்டவர்களின் வாழ்வை மாற்றியது. இரண்டாயிரமாண்டுகள் கழித்தும் அவர் அருளியது இன்றும் நம் நெஞ்சில் நுழைந்து நம்மை தீண்டுகிறது. நம்மால் கேட்கப்படுவது சுருதி எனப்படும். மாணவன் பக்தியோடு குருவின் காலடியில் அமர்ந்து கோருவது காதால் கேட்கப்படும் சுருதி என்பதால் உபநிஷத்துகள் சுருதி எனப்படுகின்றன. சுருதி என்பது மொத்தப் பிரபஞ்சத்தின் இசை, அதன் படைப்பின், இருப்பின், இறுதியில் ஒருமையில் கரைதலின் இசைக்கோவை.
‘அதுவே நீ’ என்கிறார் குரு. இதை கேட்கும் மாணவன் ‘அது நானே’ என்று புரிந்துகொள்கிறான். இந்தப்புரிதலை அடைவதற்கு முன் மாணவன் ‘நான்’ என்னும் கருதுகோளை துறக்க வேண்டும். ‘நான் என்பது இவ்வுடல், இந்த மனம், இந்தப் புலன்கள், நான் இன்ன பெயரால் அறியப்படுகிறேன், இன்ன நாட்டை, குடும்பத்தை சேர்ந்தவன் நான்’ – இதுதான் தற்போதைய கருதுகோள். இவை எல்லோமே ‘நான்’ என்பதன் வரம்பிடும் நிலைமையாக்கங்கள். அவை ஒவ்வொன்றாக கைவிடப்படவேண்டும். இப்பிழையான அடையாளம் நம்மை ஏமாற்றிவிட்டது. குரு நமக்கு அசலான அடையாளத்தை தருகிறார் – “அதுவே நீ”. இது ‘உபதேச வாக்கியம்’ எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் ஸ்வேதகேது என்னும் இளைஞன் இருந்தான். பழங்காலத்தைய கானக குருகுலத்திற்கு கல்விக்கென அனுப்பப்பட்டான். பன்னிரு ஆண்டுகள் கல்வி கற்றான். கற்ற கல்வியின் மீது இறுமாப்புடன் வீடு திரும்பியதும் தன் தந்தையிடம் தன் அறிவை பறைசாற்றிக்கொள்வதற்காக சென்றான். “வானவியலோ, பொருளாதாரமோ, விற்கலையோ எதுபற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் தந்தையே. எல்லாம் இப்போது நானறிவேன்” என்றான்.
தந்தை சொன்னார் “அன்பு மகனே, நம் குலத்தில் உனக்கு முன்பு பலரும் குருகுலத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் யாருமே இத்தகைய செருக்குடன் திரும்பியதில்லை. என்னவாயிற்று உனக்கு? சொல், எதை அறிவதன் மூலம் நீ எல்லாவற்றையும் அறிவாய்? எதை அறியாததனால் எதையுமே அறிய மாட்டாய்?”
ஸ்வேதகேது திகைத்து நின்றான். “தந்தையே, அருள்கூர்ந்து கேள்வியை மீண்டும் சொல்லுங்கள். இதுபோன்றதொரு கேள்வியை நான் இதற்கு முன் அறிந்ததில்லை. தயவு செய்து எனக்குக் கூறுங்கள் – எதை அறிவதன் மூலம் எல்லாவற்றையும் அறியலாம்? எதை அறியாததனால் எதையுமே அறிய முடியாமல் போகும்? அன்புத் தந்தையே, என் குருமாருக்கும் இது தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் எனக்கு கற்பித்திருப்பார்கள். தங்கள் பாதம் பணிகிறேன். என்னை உங்கள் மாணவனாக ஏற்று எனக்கு கற்பிப்பீராக!”
“ஆகட்டும். நான் கற்பிக்கிறேன். சென்று ஒரு அத்திப்பழத்தை எடுத்து வா!” என்றார் தந்தை. அவன் சென்று எடுத்து வந்தான். “அதை நறுக்கிப் பார். என்ன தெரிகிறது?”
“மிகச்சிறிய விதைகளை காண்கிறேன். எள்ளினும் சிறிய விதைகள்.”
“அதை நறுக்கு.” அதை நறுக்கினான். “என்ன தெரிகிறது”
”ஏதுமில்லை எனலாம். வெள்ளையாய் ஏதோ மிகவும் கொஞ்சமாக…”
“அத்தி மரம் எங்கிருந்து வருகிறது மகனே?”
“அதிலிருந்துதான்.”
“எனில் இதுதான் அத்தி மரமாகிறதா?”
“ஆம்.”
“தத்வமஸி, ஸ்வேதகேது. அதுவே நீ என் மகனே. எது கண்ணுக்குப் புலப்படாததோ, ஆயினும் இதெல்லாமாக ஆவதோ, அதுவே நீ.”
தொடர்ந்து சிறிது உப்புப் பரல்களை நீருள்ள ஒரு பாத்திரத்தில் இட்டு எடுத்துக்கொண்டு வரும்படி கோரப்பட்டான் ஸ்வேதகேது. “உப்பு எங்கே?” என்றார் அவன் தந்தை.
”கரைந்துவிட்டது தந்தையே.”
“அதன் மேல்பரப்பைத் தொட்டு சுவைத்துப்பார்.”
அவன் சுவைத்தான். “உப்பாயிருக்கிறது.”
“ஒரு ஓரத்தில் தொட்டு சுவைத்துப் பார்.”
“உப்பாய் இருக்கிறது.”
”உன் விரலை ஆழத்தில் தொட்டு சுவைத்துப் பார்.”
“உப்பு கரிக்கிறது.”
“கண்ணுக்குத் தெரியாதது, ஆயினும் ஒவ்வொரு துளி நீரிலும் பரவிய அந்த உப்பு – அதுதான் நீ மகனே. தத்வமஸி, ஸ்வேதகேது.”
தந்தை மேலும் மேலும் பல உவமைகள் மூலம் ஒரே மெய்மைதான் எல்லாவற்றிலும் உறைகிறது என்பதையும் அதுவே பலவாகத் தெரிகிறது என்பதையும் விளக்கினார். அத்தி விதை முளையாகும்போது அதிலிருந்து இலைகள் முளைக்கின்றன; அவை சிறிதும் வேர்கள் போலிருப்பதில்லை, விதைபோலும் அவை இல்லை. பின்னர் இலையிலிருந்து வேறுபட்ட மலர்கள் தோன்றுகின்றன. கனிகளும் வேறுவிதமாக இருக்கின்றன. ஒரு மூலப் பொருளிலிருந்து பல்வகையான வடிவவேறுபாடுகள் தோன்றுகின்றன; ஆனால் அவை எல்லாம் ஒன்றே.
இதுவே உபதேச வாக்கியம். இந்த அருள் வாக்கை தியானிக்க இரண்டு மந்திரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மனன வாக்கியங்கள். இதில் ஒன்று ‘பிரக்ஞானம் பிரஹ்மா’. நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும்போது, அகவயம் புறவயம் என இரண்டில்லா நிலையை நனவு நிறைத்திருக்கிறது. ஆயினும் அது கனவாகவோ அல்லது சிறியவொரு தூண்டலால் விழிப்புநிலையாகவோ மாறக்கூடியது. ‘பிரக்ஞா’ – இம் முழுப்பிரபஞ்சத்தின் விதைநிலம் – உங்களுள்ளே நனவின் அடித்தளமாய் உள்ளது. கனவில் எல்லா வடிவத்திலும் அது திறந்துகொள்கிறது, புறவுலகில் காணப்படும் அனைத்தையும் விரியச் செய்கிறது. இதை அறியும் நீங்கள், “நான் காணும் இவ்வேறுபாடுகளெல்லாம் என்னுடையதேயான பிரக்ஞையின் மாறுபாடுகள்தான்” என்கிறீர்கள். பிரக்ஞானம் பிரஹ்மா: அண்டமெனும் இப்பிரபஞ்சமென நான் காணும் வேறுபாடுகளெல்லாம் முழுமுதலன்றி பிறிதொன்றில்லை.
இப்பிரபஞ்சம் என்பது ஒரு தனிப்பொருளல்ல, நமது நீட்சியே அது. அதை நம்மால் மறுக்க இயலாது. அது நம் அன்பிற்கினியதாக வேண்டும். இவ்வுலகு என்பதே நம் அகம்.
இங்குள்ள அனைவரையும் என் அகமாக நான் பார்க்கும்போது, எனது பொறுப்பு பன்மடங்கு கூடுதலாகிறது. எனது பொறுப்பு என்பது எல்லையற்ற கடப்பாடு; நான் ஒவ்வொருவருக்கும் கடன்பட்டுள்ளேன். என் சகோதரனின் பாதுகாவலன் மட்டும் அல்ல நான்; இப்பிரபஞ்சத்தின் மெய்மைக்கும், நீதிநிலைநாட்டலுக்கும், லயத்துக்கும் நானே பொறுப்பு. நான் என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறேன். அகவயமாய் திரும்பி நான் தியானிக்கிறேன். சூரியனோ, நிலவோ, பசுமையோ, மனிதரோ, பறவைகளோ, விலங்குகளோ எதையும் நான் காணவில்லை. தூய எண்ணங்களும் உணர்வுகளும் கொண்ட ஒரு அகவய உலகு இது.
என்னுள் உள்ள நில்லா ஊற்று போல், நனவோடை பெருகும் நீரூற்று போன்ற ஒளியிலிருந்து இதெல்லாம் வருகிறது. இது என் ஆன்மா. இன்னொரு மனன வாக்கியம் : ‘அயம் ஆத்ம பிரஹ்மா’ – அகமே பிரம்மம், முழுமுதல். நீங்கள் கண்களைத் திறந்து பார்க்கும் உலகு உங்களுடையது; நீங்களே ‘அது’; ‘அது’வே பிரம்மம். கண்களை மூடிக்கொள்வீர்களென்றால் அப்போதும் நீங்கள் அறிவது பிரம்மமே. உள்ளும் புறமும், எப்போதும் நீங்கள் காண்பது அதுவே. அது மனதில் ஒலிக்கிறது: “என் குரு சொன்னார்: ‘அது நீயே; அதுவே நீ’.” இடையறா தியானம் மூலம், பிரக்ஞானம் பிரஹ்மா என்ற தியானத்துடன் உலகில் பங்குகொண்டு, அல்லது அயம் ஆத்ம பிரஹ்மா என்ற தியானத்துடன் உலகிலிருந்து விலகி ஒருவர் அனைத்தின் ஒருமை குறித்த மறைபொருளை அடைகிறார்.
பதினான்காவது பாடலில், புறத்தோற்றத்திற்கு மட்டுமே முனியாகத் தோன்றுபவருக்கு தெரியாத ரகசியம் எனப்பட்டது இம்மறைபொருளே. அவருக்கு இந்த ரகசியம் பிடிகிடைப்பதில்லை என்பதால் புற உலகானது வானுலகு, வளியுலகு, மண்ணுலகு என மூன்று மடிப்புகள் கொண்டதாய் தெரிகிறது. எதிர் நிகழ் கழிவெனும் மூன்றாக பகுக்கப்பட்டிருக்கிறது. அவரது அகமோ அறிபவன், அறிவு, அறியப்படுவது என மூன்றாக உடைந்திருக்கும். ஆனால் ஒருவருக்கு இந்த அக மறை புலப்பட்டுவிடும்போது அவர் கபட யதியாய், புறத்தோற்றத்தில்மட்டும் முனியாய் இருப்பதில்லை. அவர் யதிவர்யனாகிறார் – கட்டுப்பாடுகளுடன் வாழும் தவசீலராகிறார்.
ஒருவர் தன் உடலுக்குள் கேட்கும் இடையறா இசைக்கோவையும், எல்லாம் ஒன்றே என்ற குருவின் வாக்கு தரும் புதிய திறப்பும் மூவுலகும் பெரும் ஒத்திசைவால் நிறையும் வரை பாடலை நீட்டிக்கின்றன. ஆழியின் ஓசை போன்றது அது. இவ்வொரு இசையால் நிரம்பிய உங்கள் அக உலகை நீங்கள் கேட்கிறீர்கள்.
தூண்டப்படாத, ஏற்றப்படாத ஒரு ஒளியைப் பற்றி முன்னர் கூறப்பட்டது. நீங்கள் உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும், பல எண்ணங்களில் மூழ்கியிருக்கும்போதும் இந்த ஒளி அனைத்தையும் கூர்ந்து நோக்கிக்கொண்டு, அனைத்தையும் ஒளிபெறச்செய்துகொண்டு இருக்கிறது. விழி எப்போதும் உங்கள் உள்ளேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் பாலையில் கானலைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும்போது அது வேறு புறம் திருப்பப்படுகிறது. அக விழிக்கு பதிலாக கவனம் சிதறச் செய்யும் இரு புற விழிகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மெய்மறக்கச் செய்யும் அனைத்தையும் நிறைக்கும் இவ்விசையை நீங்கள் கேட்கும்போது மெய்யறிவு கண்விழிக்கிறது. அப்போது அனைத்தையும் அதன் வழியாக காண்கிறீர்கள். இப்போது உங்களது அனைத்து விருப்புகளும் நீங்குகின்றன. எதனோடும் ஒப்பிடமுடியாத ஒரு மகிழ்ச்சி உங்களில் கூடுகிறது. இதைவிடச் சிறந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை. அத்தகைய முனியே நம் மனதிற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
முந்தைய பதினைந்து பாடல்களின் சாரமும் இப்பதினாறாவது பாடலில் உள்ளது.
அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம்என நாம் தொடங்கினோம். விழிகளை விலக்கிக் கொள்பவரே யதி எனப்படுகிறார். முதல் பாடலிலேயே கட்டுப்பாடுடைய முனி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
இப்பாடலில் சாதாரண அறிவு என்பதே பாலைவனம் எனப்படுகிறது. சாதாரண அறிவைக் கடந்து நீங்கள் செல்லும்போது மட்டுமே பிரபஞ்ச உலகென்றும் அக உலகென்றும் ஒரே நேரத்தில் அகமும் புறமும் ஒளிரும் ஒற்றை மெய்மையை நீங்கள் காண்கிறீர்கள்.
இரண்டாவது பாடலில் இவையெல்லாமாக வானில் காணப்படுவது ஒரு சூரியனே என்று சொல்லப்பட்டது. ‘சொல்’லை கேட்டு நீங்கள் தியானிக்கும்போது, அது உங்கள் கண்ணை – நீங்கள் காண்பதற்குப் பயன்படுத்துவதாக உள்ளதோடு மட்டுமல்லாமல் இவையனைத்தையும் உங்களுக்காக படைத்தளித்த கண்ணை – திறக்கிறது. “எது கண்ணோ அது உலகம்” என்கின்றன உபநிடதங்கள். நீங்கள் காண்பது எதுவோ அதுவே உங்களது உலகம். “எதை நாம் காண்கிறோமோ அதையே நாம் நம்புகிறோம்” என்கிறது பிரித்தானிய அறிவியலாளர் சங்கம். உண்மையில், நாம் எதை நம்புகிறோமோ அதையே காண்கிறோம். நம் நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்காகவே நாம் எப்போதும் பார்க்க முயல்கிறோம். ஆக, முழுமுதலுடன் நீங்கள் ஒன்றும்போது எங்கும் முழுமுதலையே காண்கிறீர்கள்.
அதன் பின்னர் ஆழியின் மேற்பரப்பு பற்றியும் அதன் ஆழத்தில் உள்ள விழுமியங்களின் பெரும்செல்வம் பற்றியும் கூறப்பட்டது. இங்கே, மெய்யறிவு வெள்ளமாய் பெருகுகையில் உங்கள் வாழ்வெனும் பாழ்நிலம் ஆழியின் பெருஞ்செல்வமாகிறது. வெறும் மணல்துகள்களாய் இருந்தவை இப்போது விலைமதிக்கமுடியாத முத்துக்களாய் மாறிவிட்டன. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும், நிகழ்பவை ஒவ்வொன்றும் – மணல்துகளாய் இருந்தது இப்போது பெருமதிப்புடைய முத்தாகிவிட்டது. நம் மனப்பாங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் நம் தரிசனத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் வாழ்வே செழிப்பாகிறது. இதைவிட வியப்புக்குரியது, அழகானது எதுவாக இருக்க முடியும்?