Tag Archives: காந்தி

மரணத்தை எதிர்கொள்ளல் – 2

Standard

நம்முடைய எந்தப் பகுதி உண்மையில் ‘நாம்’?  அது நாம் உண்ணும் உணவா, நம்முடைய எலும்புகளின் மஜ்ஜையாக மாறும் உணவு ஊட்டமா, நம் மூளையின் செல்களா, அல்லது நம்முடைய மத்திய நரம்பு மண்டலமா, அல்லது நம்முடைய தசைகளா?  நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பெரிதாகக் குறைக்காமல் நம்முடைய சில பகுதிகளை நீக்கிவிட முடியும்; வேறு சில பகுதிகளை நீக்கினால் நாம் இறந்துவிடுவோம்.  இரண்டாவதாகச் சொன்னதை ‘நாம் யாராக இருக்கிறோம்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த வகையான ஆய்வு யாராலும் மேற்கொள்ளப்படவில்லை.  பேய்கள், ஆவிகள், ஆன்மா மற்றும் வாழ்க்கை, மரணம் ஆகியவை பற்றி மக்க்ள் பேசுகிறார்கள்.  மொத்தத்தில், மிக முக்கிய விஷயமான வாழ்க்கை மற்றும் அதனுடைய மரணம் பற்றி எந்த ஆழ்ந்த ஆய்வையும் மேற்கொள்ளாத, மூட நம்பிக்கைகள் நிரம்பிய ஒரு மக்கள் திரளின் மத்தியில் நாம் வாழ்வதாகத் தோன்றுகிறது.

நாம் அடிக்கடி, குறிப்பாக இந்தியாவில், முற்பிறவி பற்றிய நினைவுகள் மற்றும் மறுபிறவி பற்றிய உதாரணங்கள் குறித்த விசித்திரக் கதைகளைக் கேட்கிறோம்.  மறுபிறவி பற்றிய நம் ஊகங்களைப் பலவீனமடையச் செய்யும் எதிர்க்கோட்பாடுகளும் உள்ளன.  சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு வயதுள்ள ஒரு சிறுவன், இவன் தெரிந்துகொள்ள சாத்தியமில்லாத, பல வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு கொலையை விவரிப்பதை, மறுபிறவியை நம்புவதற்கான ஒரு காரணமாகக் காட்டுகிறார்கள்.  அந்தக் கொலையோடு தொடர்புடைய நபர்களை அவனால் அடையாளம் காட்டமுடியும்.  அந்தக் கொலை குறித்த விவரணையை அவனால் தரமுடிகிறது.  அதன் பிறகு, கொல்லப்பட்ட நபராகத் தன்னையே அவன் அடையாளம் காண்கிறான்.  மக்கள் இது முற்பிறவி நிகழ்வாகத்தான் இருக்கவேண்டும் என்று உறுதியாக அறிவிக்கிறார்கள்.

இதற்கு எதிரான கோட்பாடு, கூட்டு நனவிலி பற்றிய யுங்கின் கோட்பாட்டை ஒத்துள்ளது.  ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும்போது, ஒவ்வொருவருடைய மனதின் ஆழ் அடுக்குகளுக்குள் அது சென்று படிகிறது.  அன்றாட வாழ்வின் செயல்பாடுகளில் அம்மக்கள் ஈடுபட்டு கவனம் கொள்ளும்போது அப்பதிவு இன்னும் இன்னும் ஆழங்களுக்குள் தள்ளப்படுகிறது.  இது ஒரு தனித்த நினைவு இல்லை; சமூக மயமாக்கப்பட்ட ஒரு கூட்டு நினைவு.  தனித்த நிகழ்வுகள் சுற்றிச் சுழன்று மனதின் மேற்பரப்புக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புகளை அடைவதுபோல, கூட்டு நனவிலியும் சுழன்று அந்தச் சிறுவனைப் போன்ற ஒருவரின் மனம் வழியாக அதன் நினைவை வெளியே தள்ளுகிறது.  அந்தக் குழந்தை மறுபிறவி அடைந்த குழந்தையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.  கூட்டு நனவிலி கண்டடையும் வடிகாலாக அது இருக்கலாம்.  உங்கள் உடல் அமைப்பில் பாக்டீரியாவோ, வைரஸோ, அல்லது நோய் உண்டாக்கும் ஏதோ ஒரு காரணியோ இருந்தால், அது நீண்ட நாட்களுக்கு செயலற்றதாக முடங்கியிருந்து, பிறகு உடம்பின் ஏதோ ஒரு பகுதியில், எதிர்ப்பு குறைவாக இருக்கும்போது அங்கு அது மேலெழும்பி வருகிறது.  அதே போலவே இதுவும் நடக்கலாம்.  மேலும், குறி சொல்லுதல், தொலைவில் நடப்பவற்றை உணர்தல் போன்றவை பற்றியும் கோட்பாடுகள் உள்ளன.  மறுபிறவிக்கு எதிரான கோட்பாடுகளையும் மீறி பகுத்தறிவுக்குப் புறம்பான, விசித்திர விஷயங்களை மக்கள் தொடர்ந்து விரும்புகிறார்கள்.  இது நம்மிடமுள்ள தொல்கதையை உருவாக்கும் அம்சத்தைத் தொடுகிறது.

நான் ஒரு தீக்குச்சியை உரசும்போது ஒரு பிரத்யேக சத்தத்துடன் அது கொழுந்துவிட்டு எரிகிறது.  பிறகு நான் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும்போது, அதுபோன்ற சத்தத்தை அது உண்டாக்குவதில்லை.  மெழுகுவர்த்தி ஒரு யோகியைப்போல எரிகிறது.  தீக்குச்சி ஒரு ரெளடியைப் போல எரிகிறது.  இதற்கு அவற்றின் மூலக்கூறுகளே காரணம்.  இதுபோலவே நாமும் நம்மை மெழுவர்த்திகளைப்போல இருப்பதாக நினைத்துக் கொள்ளலாம்.  ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தப்படுகிறது; அந்த நாள் முதல் அது எரிகிறது.  இறுதியில் மெழுகும், திரியும் தீர்ந்து போகின்றன.  அவ்வளவுதான் அது.

‘நிர்வாணம்’ என்று பொருள்படும், ‘எரிந்து தீர்ந்து போவது’ என்பதைப் பற்றி புத்தர் பேசும் கோட்பாடு இதுதான்.  ஓர் உடல் எரிந்து தீர்ந்துபோய் இந்த அருஞ்செயலைச் செய்துவிடும் என்று அவர் நினைப்பதில்லை.  அவர் ஒரு தொடரைப் பற்றிச் சிந்திக்கிறார்.  அவருடைய கருத்துப்படி, உங்களுக்கு எண்பது அல்லது தொண்ணூறு வயது ஆகும்போது இறந்து போகிறீர்கள்; உடல்தான் மறைந்து போகிறது; உடலின் தேவை தொடர்கிறது; முன்வினைப்பயனின் திரட்சி இன்னொரு வடிவத்தை எடுப்பதால் இந்தத் தேவை தொடர்கிறது.  முன்வினைப்பயன் என்ற உந்துவிசையை நாம் ஓர் அமைப்புமுறைக்குள் செலுத்துகிறோம்.  அந்த உந்துவிசையின் ஒவ்வொரு பகுதியும் நிறுத்தப்படும்போது, அதற்கு எரிபொருள் இடப்படாதபோது அது எரிந்து தீர்ந்து போகிறது.   கர்மவினைகளின் தொடரான இந்த இறப்பு, ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு தீ எரிந்து போவதைப்போன்றது.

ஒரு தொடர் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டுமா?  தனித்தனியாக மெழுகுவர்த்திகளைப் போல் அதனதன் நறுமணத்தோடு அல்லது துர்நாற்றத்தோடு நாமும் நம்மை தனித்தனி நிகழ்வுகளாக ஏன் கருதிக் கொள்ளக்கூடாது?  ஒரு நபரின் நறுமணம் இன்னொரு நபரின் துர்நாற்றம்.  வாழ்க்கையை எரியும் மெழுகுவர்த்தியாக பாவித்தால் மரண பயம் போய்விடும்.

என்னை எப்படி பயப்படுத்த முடியும்?  நான் ஒரு மெழுகுவர்த்தி.  என்னுடைய மெழுகின் அளவு வரம்புடையது.  அது எல்லா நேரமும் எரிந்துகொண்டிருக்கிரது என்பதை நான் அறிவேன்.  ஒவ்வொரு சுவாசத்தின் போதும் கொஞ்சம் சக்தி வெளியேறுகிறது.  என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் கொஞ்சம் சக்தி தீர்ந்து போகிறது.  என் இரைப்பைக்குள் ஒவ்வொரு முறை உணவு இடப்படும்போதும் என் வயிறு உழைத்து தன் சக்தியை செலவழிக்கிறது.  காந்தி விரும்பியதைப்போலவே சிலபேர் 120 வருடங்களுக்கு உயிரோடிருக்க விரும்புகிறார்கள்.  அந்தக் காரணத்துக்காக காந்தி தன்னுடைய இரைப்பைக்கு அதிகம் வேலை கொடுக்க விரும்பவில்லை.  எப்போதாவது கொஞ்சம் நிலக்கடலை சாப்பிடுவார்.  தன்னுடைய ஜீரணமண்டலத்துக்கு அதிக வேலை கொடுக்க அவர் விரும்பவில்லை.  வாழ்நாளை அதிகரிக்க ஒருவர் மேற்கொள்ளும் ஒருவகை சிக்கனப்படுத்துதல் இது.  கத்துவதற்கும், குதிப்பதற்கும் பதிலாக ஒருவர் அமைதியாக உட்கார்ந்திருந்தால் சக்தி குறைவாகத்தான் செலவாகும்.  இது உங்கள் வாழ்வை நீடிக்கக் கூடும்.

ஆனால், முக்கிய விஷயம் என்ன?  வாழ்க்கைக்கு குறிப்பிட்ட எந்த அர்த்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  வாழ்க்கை என்ற வகுப்பறைக்குள், எந்தத் தலைமை ஆசிரியரும் வந்து ஒவ்வொரு வாழ்க்கைக்கும் நிறைவேற்றுவதற்காக ஒரு பிரத்யேக செயல் திட்டத்தைத் தருவதில்லை.  அப்படி ஒரு செயல்திட்டம் இருப்பதாக கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள்; ஆனால், அவர்கள் அப்படிச் சொல்வது தேவாலயத்தை நிலைநிறுத்தத்தான்.  அதற்காக இந்த மாதிரி நிறைய பொய்கள் சொல்லப்பட வேண்டும்.  மதத்துக்குள் இருக்கும் பல சிக்கல்கள், மரணத்தை பகுத்தறிவோடு பார்ப்பதைத் தடுக்கின்றன.  நான் ஒரு கிறிஸ்தவனாகவோ, இந்துவாகவோ இல்லாமலிருப்பதால் அக்கறை கொள்ளவேண்டிய பெரிய விஷயமாக மரணம் எனக்குப் படுவதில்லை.  மரணத்தை தெளிவாகப் பார்ப்பதற்கான தகுதியை அது எனக்குத் தருகிறது.

நமக்கு ஏற்கனவே தெரிந்ததிலிருந்து நாம் தொடங்கவேண்டும்.  எனக்கு மிகத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம், ‘முற்பிறவியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்பதுதான்.  என்னால் தெரிந்துகொள்ள இயலும் என்று நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம், ‘மரணத்துக்குப்பின் என்ன நடக்கும்’ என்பதுதான்.  மரணம், தூக்கத்தைப் போன்றதாக இருக்கலாம்.  ஆனால், தூக்கத்தில் கூட கனவில் வருவன எல்லாம் சரியா, தவறா என்று புரிந்துகொள்ள, ‘மத்திய நரம்பு மண்டலம்’ என்று அழைக்கப்படும் நுட்பத்திறம் கூட உதவும் என்பது உறுதியில்லை.  மத்திய நரம்பு மண்டலம் இல்லாமல், நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.  அப்படிச் செய்ய முற்றிலும் ஒரு புதுமுறையில் சிந்திக்க என்னை நான் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும்.  ‘சிந்திக்க’ என்ற வார்த்தைகூடப் பொருந்தவில்லை.  ஏனென்றால், மூளை செயல்படும்போதுதான் சிந்திப்பது என்பது நிகழமுடியும்.

நேற்று எனக்குத் தோன்றிய ஒரு கோட்பாட்டின்படி, விறகு அடுப்பு, சமையலறை அடுப்பு, இஸ்திரி பெட்டி, தட்டச்சுப்பொறி, கிதார் மற்றும் இவைபோன்ற, ஒருவருடைய வீட்டில் இருக்கும் சாதனங்கள் மற்றும் கருவியைப் போன்றவையே இந்த உடலும் அதனுடைய எல்லா உறுப்புகளும்.  எனக்கு இசையில் ஆர்வம் வரும்போது பியானோவை வாசிக்கிறேன்.  அந்த நேரத்தில் பியானோ என்னில் ஒரு பகுதி.  சாப்பிட ஆசை வரும்போது சமையலறைக்குச் சென்று சாப்பிடுகிறேன்.  அப்போது சாப்பிடுவது என்னில் ஒரு பகுதி.  இங்கிருக்கும் நாம் மட்டும் நாம் அல்ல, நாம் அனுபவித்துகொண்டிருப்பது எதுவோ, அதுவும் நாம்தான் என்று நாராயண குரு நமக்கு போதித்திருக்கிறார்.  இந்த உடலிலிருந்து வெளிவந்து இந்த மரமாக, இவன் மற்றும் அவனாக, நீங்கள் எல்லோருமாக, குப்பை, அழுக்கு மற்றும் கழிவறையாக, நான் காணும் எல்லாமுமாக நான் இருக்க நாராயண குரு சொன்னது எனக்கு உதவுகிறது.  தனித்த, புனித, என்ற உணர்வை அது என்னிலிருந்து நீக்கி விடுகிறது.  ‘நான் புனிதன் அல்லன்’  ஏனென்றால் மலக்குழியும் என்னில் ஒரு பகுதியே.

நான் அறிந்துகொள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் முதலில் என்னுடைய அறிவாக ஆகவேண்டும்.  இந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றிணையும் அனுபவத்தை உணர்வதே, நான் நாராயண குருவிடமிருந்து பெற்ற பெரிய உதவி.  என்னுடைய இந்தச் சிறிய உடலில் நடந்துகொண்டிருப்பது, என்னுடைய சிறிய படிப்பறையில் நான் கடிதத் தொடர்பை மேற்கொள்ளும்போது நடக்கும் என்னுடைய செயல்பாட்டை ஒத்ததே.  ஆனால், மற்ற சமயங்களில் நான் வெளியே போய் மக்களை சந்தித்தும் வருகிறேன்.

சில சமயங்களில் மக்கள் என்னிடம் வருவதில்லை, அவர்களுடைய கடிதங்கள் மட்டுமே வருகின்றன.  இருந்தும் ஒவ்வொரு கடிதமும் அதை எழுதிய நபர் அதைப் பெற்றுக்கொண்ட நபரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதுபோலவே அந்தக் கடிதத்தோடும் தொடர்பு கொள்கிறேன்.  இப்படியாக நான் பரவி விரிந்துள்ளேன்.

அப்படிப் பரவியுள்ள நபராக நான் இருக்கும் பட்சத்தில் நான் இறப்பேனா?  என்னுடைய அப்பாவி அப்பா, ‘தான் இறந்துவிட்டதாக நினைக்கிறார்.’  ஆனால், நான் அவரைப்பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  நான் அவரைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும்போது, என்னுடைய நினைவிலும், என்னுடைய சகோதரியின் நினைவிலும், மற்றும் என்னுடைய அம்மாவின் நினைவிலும் அவருடைய உருவமும், அவருடைய வார்த்தைகளும் அவருடைய நகைச்சுவைப் பேச்சுக்களும், அவருடைய பல அனுபவங்களும் வாழ்கின்றன.  ஆக, என்னுடைய அப்பாவின் எவ்வளவு பகுதி இறந்து போயுள்ளது?  ஆயிரக்கணக்கான மாணவர்களோடு பழகியிருக்கிறார்.  எங்கு நான் போனாலும், ‘ஓ, உங்களுடைய அப்பாவை எனக்குத் தெரியும்.  அவர் எனக்கு ஆசிரியர்’ என்று பலர் சொல்கிறார்கள்.  அவர்கள் எல்லோரும் அவரைப் பற்றி நினைக்கிறார்கள்.  உதாரணமாக, மகாத்மா காந்தியைப் போன்ற ஒரு நபர் எப்படி இறக்க முடியும்?

நேர்காணல் – 1

Standard

31.12.95

காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.  நாற்காலியில் அமர்ந்து கால்களை திண்டுமீது வைத்துக் கொள்கிறார்.  அருகில் சோபாவில் நான், குப்புசாமி (ஆர்.கே.), எதிரே கோபால் (சூத்ரதாரி).

 

உங்கள் தந்தையைப் பற்றிக் கூறுங்கள்!

அப்பா இளம் வயதிலேயே என் மனதைப் பெரிதும் கவர்ந்த ஆளுமையாக இருந்தார்.  தினம் என்னை நடக்க அழைத்துச் செல்வார்.  மலர்களையும் பறவைகளையும் கூழாங்கற்களையும் காட்டி ரசிக்கக் கற்றுத் தருவார்.  இளம் வயதில் அவர் ஊட்டிய இயற்கை ஈடுபாடே அவர் எனக்குத் தந்த சொத்து.  அப்பா அவர் எழுதுவதை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்.  சாக்ரடீஸ், கதே, தோரோ, பேகன், ஆதிசங்கரர், விவேகானந்தர் முதலிய பெயர்களெல்லாம் மிக இளம் வயதிலேயே எங்கள் வீட்டில் அன்றாடப் புழக்கத்தில் இருந்தன.  என் அத்தைக்கு கவிதையில் மிகுந்த ஈடுபாடு.  வள்ளத்தோள், உள்ளூர் முதலிய புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவளுக்குக் கடிதத் தொடர்பு உண்டு.  கவிஞர்களிடமிருந்து கடிதங்கள் வருவது எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி.

சிறுவயதில் உங்களை அதிகம் பாதித்த சம்பவங்கள் எவை?

என் வாழ்க்கையை நிர்ணயித்தவை என நான் கருதும் இரு சம்பவங்கள் என் இளமைக் காலத்தில் நடந்தன.  எங்களூரில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார்.  என் தந்தை அன்று அவ்வியக்கத்தின் தீவிர ஊழியர்.  தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டருகே நடந்தது.  அப்பா என்னை ஒரு மேஜைமீது ஏற்றி, பேசும்படி கூறினார்.  நான் மனப்பாடம் செய்திருந்த நாராயண குருவின் உபதேச மொழிகளை ஒப்பித்தேன்.  காந்திஜி பகவத் கீதையை என்னிடம் தந்து படிக்கும்படி கூறினார்.  சில சுலோகங்களை நான் படித்தேன்.  கீதையை புன்னகையுடன் நீட்டிய காந்திஜியின் முகம் வெகுகாலம் எனக்கு உத்வேகமூட்டிய நினைவாக இருந்தது.  இன்றும் அழியாமலிருக்கிறது.

மற்றொரு சம்பவம் நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது.  பழைய பத்திரிகையொன்றில் ஒரு மனிதரின் அழகிய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது.  அவருடைய மேனாட்டு உடையும், புன்னகையும் என்னைக் கவர்ந்திருக்கலாம்.  அதை வெட்டி என் பாடநூலில் வைத்துக் கொண்டேன்.  பல வருடங்கள் அது என்னிடம் இருந்தது.  அது நடராஜ குரு பாரீஸில் இருந்தபோது எடுத்துக்கொண்ட படம்.  பின்னர் நான் நடராஜ குருவை என் ஆதர்ச புருஷராகவும் வழிகாட்டியாகவும் கொள்ள அதுவும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

எப்போது துறவு பூண்டீர்கள்?

துறவியாக வேண்டும் என்ற எண்ணம் என் பதினைந்தாவது வயதில் உறுதியாக ஏற்பட்டது.  மிக இளம் வயதிலேயே நான் தனிமை விரும்பியாக இருந்தேன்.  காடும் மலைகளும் சூழ்ந்த ஊர் பந்தளம்.  இரவும் பகலும் சுற்றியலைவது என் வழக்கம்.  துறவு என்பது சுதந்திரம் என நான் அறிந்திருந்தேன்.  மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வந்ததும் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன்.  பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  நான் உங்களுக்குப் பயனுள்ளவனாக, மகனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருக்கமாட்டேன்; எனவே உங்கள் செலவில் மேற்கொண்டு படிக்கவோ, உங்கள் பரம்பரைச் சொத்தில் பங்குபெறவோ விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தேன்.  கொல்லம் வழியாக மதுரைவரை பயணம் செய்ய மட்டுமே என்னிடம் பணம் இருந்தது.  டிக்கெட் எடுக்காமல் நான் பயணம் செய்வதில்லை.  எனவே மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.  இடுப்பில் ஒன்றும் தோளில் ஒன்றுமாக இரு அரை வேட்டிகளே என் உடைமை.  இத்தகைய கட்டங்களில் என் வாழ்வை நான் முற்றாக நியதியின் கரங்களில் விட்டுவிடுவதுண்டு.  பின்னர் இதுபோல் உலகின் பல்வேறு மூலைகளில் அமர்ந்திருக்கிறேன்.  அன்று ஒரு ரயில்வே போலீஸ்காரர் எனக்கு சோழவந்தான் வரை டிக்கெட் எடுத்துத் தந்தார்.  அங்கிருந்து ஒரு டிக்கெட் பரிசோதகர் கோவைக்கு டிக்கெட் எடுத்துத் தந்தார்.  பின் ஊட்டிக்கு ஒரு வியாபாரி அழைத்துச் சென்றார்.  இவர்கள் அனைவருமே நான் அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரவேண்டாமென்றும், ஊர் திரும்புமாறும் அறிவுறுத்தினர்.  ஆனால் எனக்கு சஞ்சலமே இல்லை.  விடுதலையுணர்வு என்னைக் களிப்பில் ஆழ்த்தியிருந்தது.  அப்போது நடராஜ குரு ஊட்டியில் இல்லை.  எனவே நான் ஊர் ஊராக அலைய ஆரம்பித்தேன்.

உங்கள் படிப்பு என்ன ஆயிற்று?

ஒரு முறை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.  அப்போது ஒரு பாதிரியார் என்னைப் பற்றி விசாரித்தார்.  தன்னுடன் வரும்படி அழைத்தார்.  நான் மதம் மாற மாட்டேன் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடேன்.  அவர் பரவாயில்லை என்றார்.  அவருடன் ஆல்வாய் சென்றேன்.  தன் மகனின் பழைய உடைகளை எனக்குத் தந்தார்.  என் சான்றிதழ்கள் ஊரில் ஒரு நண்பனிடம் இருந்தன.  அவற்றை வரவழைத்து பணம் கட்டி என்னை எஃப்.ஏ. படிப்பிற்குச் சேர்த்தார்.  எவ்வித நோக்கமும் இன்றி என்மீது பேரன்பு காட்டினார்.  எனக்கு மாதம் நாற்பது ரூபாய் உதவிப்பணம் கிடைத்தது.  செலவுபோக மீதமும் வரும்.  திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன்.  அன்று புராதன தத்துவம், தருக்கம், ஒழுக்கவியல் முதலியவை பாடங்கள்.  உளவியல் அப்போது தத்துவத்தின் ஒரு பிரிவு.  நடராஜ குருவுடன் தொடர்பு வைத்திருந்தேன்.  ஆனால் அவர் தொடர்ந்து பயணத்திலிருந்தார்.

நடராஜ குருவுடன் உறவு வலுப்பட்டது எப்படி?

1952-இல் நான் படிப்பை முடித்ததுமே கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியில் என்னை வேலைக்கு அழைத்தார்கள்.  அங்கு உளவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.  படிப்பே என் வாழ்க்கையாக இருந்தது.  நடராஜ குரு ஒருமுறை கொல்லம் வந்தார்.  விழாக்குழு என்னை அவருக்கு உதவியாளராக நியமித்திருந்தது.  டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, ஒரு பிரிட்டிஷ் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த பகவத்கீதை உரை அன்று மிகவும் பிரசித்தம்.  அதை ஒரு பந்தாவிற்காக என் கையில் வைத்திருந்தேன்.  நடராஜ குரு நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது அந்த நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார்.  பிறகு சன்னல் வழியாகத் தூக்கி வீசி எறிந்துவிட்டார்.  நான் பதறியவாறு காரை நிறுத்தும்படி கத்தினேன்.  ஓடிப்போய் நூலை எடுத்துக்கொண்டு குருவிடம் கோபப்பட்டேன்.  தத்துவ மேதையொருவரின் நூலைத் தூக்கிவீச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டேன்.  குரு அதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டிப் படிக்கும்படி கூறினார்.  அதில் ராதாகிருஷ்ணன் கீதை ஒரு மத நூல் என்று கூறியிருந்தார்.  குரு என்னிடம் “மூன்று பேரமைப்புகள் எவை?” என்று கேட்டார்.  “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன்.  “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று.  எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்?” என்று கேட்டார் குரு.  தொடர்ந்து மதம் என்றால் என்ன, தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள இணக்கமும் பிணக்கமும் எவையெவை என்று விளக்கமாகச் சொன்னார்.  அந்த அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்தது.  ஆயினும் வீறாப்பாக “ராதாகிருஷ்ணன் சும்மா அப்படி எழுதமாட்டார்.  தகுந்த காரணங்கள் இருக்கும்” என்றேன்.  குரு சிரித்தார்.  என் கோபம் அவருக்குத் திருப்தி தந்ததாகச் சொன்னார்.  அவருடைய படிப்போ துறவி என்னும் கெளரவமோ அவருடன் மாறுபட்டு விவாதிப்பதற்கு எனக்குத் தடையாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்றார்.  சிந்தனைத் துறையில் தாழ்வுணர்ச்சியே மிக அபாயகரமானது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை அவருடைய புகழையும் பதவியையும் பொருட்படுத்தாமல் நான் ஆராயவேண்டும் என்றும் கூறினார்.  அவர் நூலை விட்டெறிந்தது என் மனதைப் புண்படுத்தியதைச் சொன்னேன்.  தானும் புத்தகங்களை நேசிப்பவன் என்றும் ஆனால் புத்தகங்கள் மீது பக்தி கொள்வதில்லை என்றும் சொன்னார்.  உள்நோக்கத்துடனும், கவனமின்றியும் எழுதப்படும் நூல்கள் மிக ஆபத்தானவை; அச்சேற்றப்பட்டதனாலேயே அவற்றை மதிப்பது தவறு என்று விளக்கினார்.

1956-இல் நான் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலை பார்த்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்திக்க நேர்ந்தது…

அதற்குமுன் ஒரு கேள்வி.  நீங்கள் அங்கு பணியில் அமர என்ன காரணம்?  பேராசிரியர் வேலையை விரும்பினீர்களா?

இல்லை.  கொல்லத்தில் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிலநாட்கள் நடராஜ குருவுடன் இருந்தேன்.  துறவியானது அப்போதுதான்.  பிறகு சுற்றியலைய ஆரம்பித்தேன்.  பொது இடங்களில் பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் போன்றவர்களுடன் தங்குவேன்.  சென்னையில் ஒரு கடைத்திண்ணையில் இரவு தங்கினேன்.  மழை. நல்ல குளிர்.  உடைகள் போதுமான அளவு இல்லை.  குளிருக்காக தெருநாய்களை ஒண்டிப் படுப்பது வழக்கம்.  அவை கதகதப்பாக இருக்கும்.  அவ்வழியாக கோயிலுக்குச் சென்ற மயிலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் என்னை அழைத்து விசாரித்தார்.  என் படிப்பு பற்றி அறிந்ததும் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரியும்படி கூறினார்.  எனக்கு விருப்பமில்லை.  ஆனால் நவீன காலத்தின் அறிவுத் துறைகளுடன் உரிய அறிமுகம் துறவிக்கு இருந்தே ஆகவேண்டும் என்றும், நான் முறைப்படி கற்கவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றும் சொன்னார்.  நான் உடன்பட்டேன்.  கொல்லம் கல்லூரியிலிருந்து என் சான்றிதழ்களை வரவழைத்து வேலை போட்டுத் தந்தார்.  ராமகிருஷ்ண மடத்தின் நூலகத்தை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன்.

டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது எப்போது?

1956-இல் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார்.  தத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.  என் மாணவர்களுடன் நானும் சென்றிருந்தேன்.  அங்கு அவருடன் நடந்த உரையாடலில் கீதையை அவர் மத நூல் என்று குறிப்பிட்டது ஏன் என்று கேட்டேன்.  ராதாகிருஷ்ணன் சிரித்தபடி “பிரசுரகர்த்தர் மிகவும் அவசரப்படுத்தினார்.  அவசரமாக எழுதிய நூல் அது.  அதை நான் மீண்டும் சரிபார்க்க வேண்டும்” என்றார்.  பிறகு என் மாணவர்களிடம் திரும்பி, “உங்கள் ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்ளுங்கள்.  யார் கூறினாலும் ஆராயாமல் அதை ஏற்கலாகாது” என்றார்.  மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை.  அப்போது உடனிருந்த பி.கே.ராவ் என்பவர் பெங்களூரிலிருந்து வெளிவந்த தத்துவ இதழொன்றில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நழுவாமல் பதிலளிக்கவேண்டும் என்று கண்டித்திருந்தார்.  இந்தச் சம்பவம் சென்னையிலுள்ள பிராமணப் பிரமுகர்களைக் கோபமடையச் செய்தது.  அக்கோபத்திற்குக் காரணம் இதற்கு ஒரு வருடம் முன்பு பெரியார் கூட்டிய மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டதும், எங்களுக்குள் பரஸ்பரம் இருந்த நல்லெண்ணமும்தான்.  அவர்கள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  கல்கத்தாவிற்கு புகார் அனுப்பப்பட்டது.  அங்கிருந்த ஒரு துறவி வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்.  பிறகு என் தரப்பே சரியானது என்றும் என்னுடன் முற்றிலும் உடன்படுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  ஆனால் மயிலை மடத்தின் புரவலர்களாக இப்பிராமணப் பிரமுகர்களே இருந்தனர்.  அவர்களைப் பகைத்துக் கொள்ள நிர்வாகத்தால் முடியவில்லை.  விடுமுறை எடுத்தது சம்பந்தமாக எனக்கு மெமோ தந்தார்கள்.  ராஜினாமா செய்துவிட்டு ஊட்டிக்குப் போய்விட்டேன்.  டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனக்குறைவாக எழுதவில்லை என்பது இன்று உறுதியாகத் தெரிகிறது.  பழைய நூல்களின் உள் முரண்களைத் தவிர்த்து பொது அம்சங்களை மட்டும் தொகுத்து அவற்றின் அடிப்படையில் (இந்து) மதத் தத்துவம் ஒன்றை உருவாக்கவே அவர் முயன்றார்.  நேரடி விவாதங்களுக்குப் பதிலாக நழுவும் உத்திகளே அவருடைய வழிமுறைகளாக இருந்தன.  அவை பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளன.  இன்று அவருடைய எதிர்தரப்பினர்கூட இந்தியச் சிந்தனை என்பது (இந்து) மதச் சிந்தனையே என்று நம்புகிறார்கள்.  நடராஜ குரு நடந்துகொண்ட முறை எனக்கு இப்போது புரிகிறது.  பிறகு நாற்பது வருடம் நான் ஆற்றிய பணிகள் குருவின் இச்செயலில் இருந்த மறைமுக உத்தரவை நிறைவேற்ற முயன்றதன் விளைவே என்று கூறலாம்.

பம்பாயில் ஆய்வு மாணவராக இருந்தீர்களல்லவா?

ஆம்.  சில வருடங்கள் குருவுடன் ஊட்டியில் தங்கினேன்.  தொடர்ந்து கற்ற நாட்கள் அவை.  குரு என்னை ஐந்துமணிக்கு வந்து கதவைத் தட்டச் சொல்வார்.  பழைய பெஞ்சுமீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.  நான் பென்சில் தாளுடன் இருப்பேன்.  சரளமாகச் சொல்லிக்கொண்டே போவார்.  பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன்.  ஒவ்வொரு துறையிலும் அத்துறையின் முறைமை சார்ந்த கல்வி குருவிற்கு இருந்தது.  அது அவர் பெர்க்ஸனிடம் பெற்ற பயிற்சி.  முறைமையில்லாத மனப் பாய்ச்சல்களை அவர் ஏற்பதில்லை.  பிறகு நாங்கள் நடக்கச் செல்வோம்.  சமைப்போம்.  நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு!  விரும்பிச் சாப்பிடுவார்.  ஆனால் எங்களிடம் பணம் குறைவு.  பலசமயம் பட்டினி கிடப்போம்.  பணத்துடன் யாரேனும் வரும்வரை பேசியபடி இருப்போம்.

ஒருநாள் சார்லஸ் கிங்ஸ்லியின் நூல் ஒன்றில் ஃபிலாமின் எனும் கதாபாத்திரம் தன் குருவைவிட்டுப் பிரிந்து செல்லும் இடத்தைப் படித்தேன்.  எனக்கு உடனே கிளம்பிவிட வேண்டும் என்றுபட்டது.  குருவிடம் கூறினேன்.  “எங்கே போக உத்தேசம்?” என்றார்.  “பம்பாய்” என்றேன்.  பம்பாய்க்கு ரயில் கட்டணம் ஐம்பது ரூபாய்.  அவர் ஐம்பது ரூபாய் தந்தார்.  பிறகு ஒரு ஐந்து ரூபாய்.  விடைபெறும்போது ஒரு ரூபாய்.  பம்பாயில் என் நண்பர் தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.  ஒரே அறை உள்ள வீடு.  அதிலேயே சமையல், குளியல், படுக்கை.  இரவில் கால்களை வெளிவராண்டாவில் நீட்டியபடிதான் தூங்குவார்.  ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்.  எனக்கு செருப்பு வாங்கித் தந்தார்.  பகலில் அருகேயுள்ள மடத்திற்குப் போவேன்.  அங்கு துறவிகளுக்கு உணவும், ஒரு அணாவும் தருவார்கள்.  ஒருமுறை வெளியேவந்து பார்த்தபோது என் செருப்பு தொலைந்துவிட்டது.  நண்பரை எண்ணி மனம் கலங்கினேன்.  ஒரு பணக்கார வியாபாரி தன் செருப்புகளைத் தர முன்வந்தார்.  நான் விளையாட்டாக ‘இன்னொருவர் ஷுவிற்குள் கால் நுழைப்பது’ என்றால் என்ன தெரியுமா என்று கேட்டேன்.  நான் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு அவருக்கு வியப்பு.  என்னை அவருடன் தங்க வைத்தார்.  படிக்க ஏற்பாடு செய்து தந்தார்.  டாடா இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.  பார்வையற்றோரின் உளவியல் பற்றி மூன்று வருடம் ஆய்வு செய்தேன்.  மகத்தான அனுபவம் அது.

பார்வையற்றோரின் உலகம் வித்தியாசமானது அல்லவா?

தவறான புரிதல் இது.  அதை உணர நேர்ந்ததையே நான் மகத்தான அனுபவம் என்றேன்.  உலகை நாம் புலன்களால் அறிவதில்லை.  மனதால்தான் அறிகிறோம்.  உதாரணமாக நான் ஓர் இளைஞனை பேட்டி கண்டேன்.  அவன் தன் எதிர்கால மனைவி பற்றிச் சொன்னான்.  முதல் தகுதி அழகு.  ஆம்; உடலழகுதான்.  எப்படி அவன் அழகை அறிகிறான்?  அவன் தன் மீதி நான்கு புலன்களால் பெண்களின் அழகை அறிகிறான்.  மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது.  எப்படி?  நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என அவன் அறிவதில்லையே, அதுபோல நாமும் அறியமுடியாது.  நாம் அவர்களை வேறுவகையான மனம் உடையவர்களாக எண்ணுவது மிகவும் தவறானது.

எப்படி நாராயண குருகுலத்தின் தலைவர் ஆனீர்கள்?

1980-இல் குரு இறப்பதற்கு முன் ஒருநாள் என்னை அழைத்தார்.  என்னிடம் குருகுலத்தின் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொன்னார்.  சுதந்திரம் தடைபடலாகாது என்று என் பரம்பரைப் பெரும் சொத்தை உதறியவன் நான்.  மறுத்துவிட்டேன்.  பிறகு ஒருநாள் குரு என்னிடம் ஒரு பேனாவைத் தந்தார்.  சில நாள் கழித்து அதை திரும்பக் கேட்டார்.  திரும்ப வாங்கியதும் சிரித்தபடி, “இதைப் போல குருகுலத்தை உன்னிடம் தற்காலிகமாக ஒப்படைக்கிறேன்” என்றார்.  என்னால் மறுக்க முடியவில்லை.  என் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றுவது என் வழக்கம்.  குருவின் உத்தரவுகள் அனைத்தையும் நான் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.  இறுக்கமற்ற நடைமுறை கொண்ட ஒரு ஞானத்தேடலுக்கான அமைப்பாகவே இக்குருகுலத்தை குரு உருவகித்திருந்தார்.  அப்படியே இன்றுவரை தொடர்கிறது.  பல உலகநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.  ‘ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிடி’ என்ற அமைப்பு பிரம்ம ஞானம் பெற விரும்புகிறவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கிறது.  ஆய்வு நூலகங்கள் பல செயல்படுகின்றன.  இச்செயல்களுக்கப்பால் என் வாழ்க்கை ஒரு தேடலாகவும் அழகனுபவமாகவும் உள்ளது.

(1995-96-இல் ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி ஆகியோர் பதிவு செய்த நித்ய சைதன்ய யதியுடனான நேர்காணல்)

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2

Standard

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில் விடுதலை செய்தது.  சிறையிலிருந்து வெளியே வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப் போனார்.  அங்கு அவரை நான் சந்தித்துப் பேசிய அனுபவம் இது.

காலை 4 மணிக்கு மணிபவனத்திற்குப் போனேன்.  காலை பிரார்த்தனைக்கு அவர் 5 மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  வழக்கமான ‘ஶ்ரீராம் ஜெய்ராம், ஜெய்ராம்’க்குப் பிறகு கீதையின்  இரண்டாவது அத்தியாயத்தின் ஐம்பத்தைந்தாவது செய்யுளிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினார்.  அறுபத்து இரண்டாவது செய்யுளுக்கு வந்தபோது அவருடைய குரலில் ஒரு கனிவு உண்டானது.  அவருடைய பாராயணத்தில் முழுமையான உண்மையுணர்ச்சி ஒலித்தது.  முதன் முறையாக நான் அந்த செய்யுள்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவற்றின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை என்றாலும் மகாத்மாவின் வாயிலிருந்து நேரிடையாகக் கேட்டதால் அவற்றைப் பாராயணம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.  இப்படியாகத்தான் அதன்பிறகு என் வாழ்க்கைப் பாதையாக இருந்த கீதையை நோக்கி நான் திருப்பப்பட்டேன்.

பிரார்த்தனை முடிந்தவுடன் மகாத்மாவைச் சுற்றி ஒரு தடுப்பு வளையம் அமைக்கப்பட்டதைப் பார்த்தேன்.  சுற்றியிருந்தவர்கள் தங்களுடைய கையெழுத்துப் புத்தகத்தில் காந்திஜியிடம் கையெழுத்து வாங்கினார்கள்.  அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக அவர்கள் முன்கூட்டியே ஒரு பெரிய கூடையில் ஐந்து ரூபாய் நோட்டுக்களைப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.  ஒரு பெரிய ஞானி மக்களிடம் இந்த முறையில் தொடர்பு கொண்டிருந்தது எனக்கு முதலில் ஒரு குறையாகப் பட்டது.  ஒரு கையெழுத்துக்கு ஐந்து ரூபாய் என்பது மிகப் பெரிய விலையாக எனக்குத் தோன்றியது.  காந்தியின் புனித பிம்பமும் ஒரு வணிக வகுப்பைச் சார்ந்தவருக்கு இருக்கும் இயல்பான உணர்வான பணம் சார்ந்த நடவடிக்கையும் ஒன்றோடொன்று முரண்பட்டன.

பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் பிறகு 6.30 மணி வாக்கில் காந்திஜி அவருடைய அறைக்குச் சென்றுவிட்டார்.  மீண்டும் 11 மணிக்கு ஒரு அறையின் பளபளப்பான தரையில் பத்துப் பதினைந்து பேர் சுற்றியிருக்க அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.  அழைக்கப்படாமல் நுழைவது என் சுபாவம் இல்லை.  தயக்கமும் வெட்கமும் மேலிட நான் மெதுவாக அறைக்குள் நடந்துபோய் சாத்தியமான அளவு காந்திஜிக்கு அருகாக உட்கார்ந்தேன்.  அவர் என்னைப் பார்த்தார்.  அந்தக் குழுவிலேயே நான்தான் வயதில் மிக இளையவன்.

அவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்.  விமானப்படையிலும் பிறகு ராணுவத்திலும் சிறிது காலம் இருந்ததால் என்னால் இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியும்.  ஆனாலும் பால் வேறுபாடு காட்டும் வார்த்தைகளோடு வினைச்சொற்களை இணைப்பதில் எனக்கு சிரமம் இருந்தது.  எனவே பேசுவதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து நான் வருகிறேன் என்று காந்திஜி என்னைக் கேட்டார்.  “நான் கேரளாவிலிருந்து வருகிறேன்” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். “கேரள மக்களுக்கு ஆங்கிலம்தான் தாய்மொழியா?” என்று அவர் மீண்டும் இந்தியில் கேட்டார்.  மலையாளி அல்லாதவர்களோடு பேசும்போது கேரள மக்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக நான் ஆங்கிலத்திலேயே சொன்னேன்.

நான் என்னுடைய தாய்மொழியில்தான் பேசவேண்டும் என்று காந்திஜி வலியுறுத்தினார்.  நான் சொன்னேன், “பாபுஜி, நீங்கள் இங்கிலாந்தில் படித்தவரென்றும், ஆங்கிலத்தில் பேசுபவரென்றும் எனக்குத் தெரியும்.  எந்த மொழியிலும் என்னுடைய சரளத்தைக் காட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை.  நான் இங்கு எண்ணப் பரிமாற்றத்திற்காக வந்திருக்கிறேன்.  ஆங்கிலம்தான் இந்தியாவில் இணைப்பு மொழி.  நாம் பேசுவதால் தீங்கில்லை.”  பிறகு அவர் கேட்டார், “இந்தியாவின் தேசிய மொழியில் நீ ஏன் பேசவில்லை?”  இளமையும் தன்முனைப்பும் ஏற்படுத்திய கோபத்தில், “இந்தி என்னுடைய தாய்மொழியுமல்ல, தந்தை மொழியுமல்ல” என்று ஆவேசத்துடன் சொன்னேன்.

பிறகு மென்மையான குரலில் காந்திஜி பதில் சொன்னார்.  “பிரிட்டிஷாருக்கு நீ அடிமைப்பட்டிருக்கிறாய்.  எஜமானனின் மொழியில் பேசுவதில் ஒரு அடிமை கர்வம் கொள்வான்.  நீ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும்வரை உன்னால் உன் தாய்மொழியில் பாண்டித்தியம் பெறமுடியாது.  உன்னுடைய தேசிய மொழியிலும் பேசமுடியாது.”

நான் வருத்தமும் அவமானமும் அடைந்தாலும் அமைதியாக அங்கிருந்து போகத் தீர்மானித்தேன்.  துயரம் நிரம்பிய இதயத்தோடும் காயம்பட்ட சுயத்தோடும் நான் என்னுடைய அறைக்குத் திரும்பினேன்.  பிற்பகல் 3 மணிக்கு மார்க்ஸியம் பற்றி மகாத்மா காந்தியிடம் ஒரு முழுப்போரை நிகழ்த்தும் திட்டத்துடன் அதே அறைக்கு திரும்பிப் போனேன்.  மார்க்ஸியம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றமுடியும் என்று அந்நாளில் நான் முழுதாக நம்பியிருந்தேன்.  காந்திஜியின் ராமராஜ்யக் கோட்பாடு அரசியல் விடுதலையை பிற்போக்குத்தனமாகப் பார்க்கிறது என்றும் நான் நினைத்திருந்தேன்.

ஒவ்வொரு முறை நான் காந்திஜியைப் பார்த்தபோதெல்லாம் என் மனதில் இருப்பதைப் பேசுவதைத் தடுப்பது போல அவர் இரண்டு விரல்களை உயர்த்தியது என்னை எச்சரிப்பதுபோல இருந்தது.  ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய கண்களை நான் நேராகப் பார்த்தபோது அவர் நான் சொல்வதைக் கேட்க விரும்புவதுபோலத் தோன்றியது.  என்னுடைய வார்த்தைகள் ஒரேவீச்சில் பீரிட்டன. “பாபுஜி, உங்களுடைய ராம்ராஜ்யம் இந்தியாவை ஒருபோதும் காப்பாற்றாது.  வர்க்கப்போர் மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான விடுதலையைத் தரும்.  இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன, பணக்காரர்கள், ஏழைகள்.  இருப்பவர்கள் சுரண்டுகிறவர்கள்.  இல்லாதவர்கள் சுரண்டப்படுகிறவர்கள்.  இந்த இரண்டு வர்க்கங்களின் அக்கறைகளும் நேர் எதிரானவை.  அவர்களிடையே ஒரு வர்க்கப்போர் தவிர்க்க இயலாதது.  சுரண்டப்படுபவர்களின் உரிமைகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.”

இதைக் கேட்ட காந்திஜி கருணையுடன் என்னைப் பார்த்துச் சொன்னார், “கார்ல் மார்க்ஸைப் படித்து விடுதலை குறித்த அவருடைய கோட்பாட்டைப் பரிசீலிக்க என் வாழ்க்கையில் சந்தர்ப்பமே நேரவில்லை என்று நீ நினைக்கிறாயா?”  அவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன்.  குரலைத் தாழ்த்திக் கொண்டு, “நீங்கள் அதைப் படித்திருக்கலாம்.  ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.  பிறகு அவர் சொன்னார், “உன்னுடைய நம்பிக்கைகளில் நீ உறுதியாக இருப்பதுபோலத் தெரிகிறது.  மார்க்ஸ் சொல்வது சரி என்றால் நான் சொல்வது தவறா?”  உடனடியாக நான், “ஆமாம், அப்படித்தான்” என்று பதில் சொன்னேன்.

ஒரு கணத்துக்குப் பின், குணப்படுத்தவே முடியாத ஒரு நோயாளியை ஒரு டாக்டர் பார்ப்பதுபோல என்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்துவிட்டு, “நீ உன்னுடைய சுய சிந்தனையைப் புறக்கணித்துவிட்டு, மார்க்ஸின் சிந்தனைக் கோணத்திலிருந்து உண்மையைப் பார்க்கிறாய்.  என்னிடமும் தாராள மனதுடன் நீ நடந்துகொள்ளக் கூடாதா?  என்னுடைய கருத்தைப் புரிந்துகொள்ள சிரமம் எடுத்துக்கொள்வாயா? உண்மைக்கு எத்தனை பரிமாணங்கள் உள்ளன?” என்றார்.  “ஒன்று” என்று நான் துடுக்காகச் சொன்னேன்.  காந்திஜி சொன்னார், “இல்லை, உண்மை வைரத்தைப் போன்றது.  அது பல பட்டைகளைக் கொண்டது.”

முதல்முறையாக அப்படி ஒரு சாத்தியத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.  மனதால் பேச்சற்றுப் போனேன்.  “உண்மை பல தோற்றங்களைக் கொண்டது.  பின் எது உண்மையைப் பார்ப்பதில் சரியான பார்வை?” என்று எனக்கு நானே முணுமுணுத்துக் கொண்டேன்.  என்னுடைய குழப்பத்தைக் கண்ட மகாத்மா, பகுத்தறிவுப் பார்வை என்பது எப்போதும் அரைகுறைப் பரிசீலனைக்கு சார்பானது என்று எனக்கு விளக்கிச் சொன்னார்.  அவர் அதிகம் பேசப்பேச அவருடைய பேச்சு நயமும் அதிகரித்தது.  என்னுடைய முந்தைய நம்பிக்கைகளெல்லாம் நொறுங்கிப் போயின.  கடைசியில் என்னால் வாயைத் திறக்கக்கூட முடியவில்லை.  என்னை அவருக்கு ஒப்புக் கொடுத்துவிடவேண்டும் என்று திடீரென்று உணர்ந்தேன்.  கழுவாயும், அடக்கமும் நிறைந்த வார்த்தைகளில் அவரிடம், “பாபுஜி, ஹரிஜன சேவாதளத்தில் சேர்வதன் மூலம் உங்களுக்கு சேவை செய்ய என்னை அனுமதிப்பீர்களா?” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.

சிரித்துவிட்டு அவர் சொன்னார், “சரி, இந்த நிமிடம் முதலே.”  என் மனதில் இருந்த கொந்தளிப்பு திடீரென்று சாந்தமான அமைதியாக மாறிப்போனது.  மறுகரையை அடைந்ததுபோல இருந்தது.  அலுவலகத்திற்குச் சென்று ஹரிஜன சேவா தளத்தில் என்னை ஒரு தொண்டனாகப் பதிவுசெய்துகொண்டேன்.

மாலையில் மகாத்மாவின் பிரார்த்தனைக் கூடத்திற்குப் போனபோது கீதையின் ஒரு பிரதியை வாங்கி அவர் பாராயணம் செய்யும் வரிகளைப் பின்தொடர்ந்தேன்.  அடுத்த மூன்று நாட்களும் எல்லா விவாதங்களையும் கைவிட்டு ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தேன்.  முதல்முறையாக எதிர் சிந்தனைகளையும் எதிர் விவாதங்களையும் மனதில் உருவாக்கிக் கொள்ளாமல், பிறர் சொல்வதை கவனிக்கத் தொடங்கினேன்.  விவேகம் நிரம்பிய வார்த்தையை யார் சொன்னாலும் அதை கவனிக்கும் தகுதி வாய்ந்த மாணவனாக நான் என்னை இப்படியாகத்தான் உருவாக்கிக் கொண்டேன்.

தமிழில் – ஆர். சிவகுமார்

நடராஜ குருவும் நானும் – 2

Standard

நடராஜ குரு ஒரு வருடம் ஐரோப்பாவிலும், ஒரு வருடம் அமெரிக்காவிலும் இருந்து விட்டுத் திரும்பிய போது எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு ‘ஹீரோ’வைப்போன்ற பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மைசூரில் வளர்ந்தவராதலால் அவரால் சரளமாக மலையாளத்தில் பேசமுடியாது.  எனவே,அவரது உரைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்காக அவருடன் நான் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.  மகான்களை தூரத்திலிருந்து மட்டுமே வழிபட முடியும் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.  1946-இல் காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருந்தன. காந்தியின் மேல் தொடக்கத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த அன்பும் மதிப்பும் என் மனதில் இருந்து நீங்கி விடாமல் இருப்பதற்காக காந்தியை விட்டு விலக வேண்டியிருந்தது. நடராஜ குருவின் குத்தல் பேச்சும் அவரது ஏளனம் என்னில் ஏற்படுத்திய ஆழமான காயங்களும் அதிநுட்பமான என் சுயத்தால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருந்தன.

ப்ரார்த்தனை செய்வது போல மென்மையாகப் பேசும் டாக்டர் மீஸுடன் பழகிய எனக்கு இது புதிதாக இருந்தது.  டச்சு அறிஞரான டாக்டர் மீஸ் ரமண மகரிஷியின் மாணவர்.  நான் 1946 முதல் 1952 வரை அவருடன் பயின்றிருக்கிறேன்.  தெளிவில்லாத அவர் உச்சரிப்பை நான் செய்து காண்பிப்பதை நடராஜ குரு வெறுத்தார்.   அதைவிட ஒரு நாய் போல என்னால் குரைக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.  அப்போது நான் திருவனந்தபுரத்தில் பல்கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நடராஜ குரு செல்லும் இடத்திற்கெல்லாம் நானும் போகாமல் தப்பிக்க முடிந்தது.  ஆனாலும் அவர் என்னைத் தன் மாணவன் போலவே நடத்தினார்.  இது எனக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.  அவரது ஞானம் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் அவரது கோமாளித்தனங்கள் மீதிருந்த எரிச்சலும் ஒன்றுடன் ஒன்று மோதி என் அகத்தை காயப்படுத்தின.  பிறகு கிட்டத்தட்ட அவரை மறந்திருந்தேன்.  ஆனால், மீறிச்செல்ல முடியாத விதியின் கைகள் என்னை மீண்டும், எங்கே அவரைச் சேர்வது என்று 1938-இல் முடிவெடுத்தேனோ, அதே ஃபெர்ன்ஹில்லுக்குச் செல்லும்படி வழிகாட்டின.

1952-இல் எனது படிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ஊர் சுற்றுவது என முடிவெடுத்தேன்.  எனது பி.ஏ. ஹானர்ஸ் படிப்பின் இறுதி ஆண்டில் பல்கலைக்கழக நூலகத்தின் வராந்தாவில் தங்கியிருந்தேன்.  எனது புத்தகங்களையும் சமையல் பாத்திரங்களையும் காவலரின் சிறிய அறையில் வைத்திருந்தேன்.  ஒரு கடிகாரத்தையும் எனது கல்லூரிக் குறிப்புகளையும் தவிர வேறெதையும் நான் இழக்கவேண்டியிருக்கவில்லை.  புத்தகங்கள் எனக்கு ஒருவேளை தேவைப்படக்கூடும் என்பதனால் அவற்றை வைத்திருக்க எனது நண்பன் ஒப்புக்கொண்டான்.  நான் ஒரு யாசகனாகி முதலில் இந்தியாவின் தென்கோடியிலிருக்கும் கன்னியாகுமரிக்குச் சென்றேன்.  அங்கிருந்து கோயில் கோயிலாகச் சென்றேன்.  ஊட்டி வழியாகச் செல்ல நேர்ந்தபோது குருகுலத்தில் தங்கினேன்.  அங்கு நடராஜ குரு இருக்கவில்லை.  சுவாமி மங்களானந்தாவும் மாதாஜி கமலாபாயும் மட்டுமே இருந்தனர்.  மங்களானந்தா சுவாமி எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தார்.  அது நான் மைசூர் செல்வதற்குப் போதுமானதாக இருந்தது.

மைசூரில் ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றேன்.  அங்கு தலைவராயிருந்த சுவாமி விமலானந்தா என்னை அன்புடன் வரவேற்றார்.  மடத்தில் சேருவதற்கு என் விருப்பத்தைத் தெரிவித்தபோது, தன்னுடன் ஒரு நடை வரும்படி அழைத்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட ஆசிரமங்களின் பகட்டைப் பார்த்து நான் மயங்கிவிடக் கூடாது என அறிவுறுத்தினார்.  “காட்டில் தேன் நிறைந்த மணமுள்ள மலர்கள் கொண்ட ஒரு மரம் இருக்குமேயானால் காட்டிலுள்ள அனைத்து தேனீக்களும் அம்மரத்தை நாடி வரும்” என்றார்.  அதற்கு மேல் நான் பயணம் செய்வதில் பொருளில்லை என்றதோடு கேரளத்திற்குத் திரும்பச் சென்று நாராயண குருவின் போதனைகளைப் பரப்புவதில் என் வாழ்வைச் செல்விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஶ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்ப ஏராளமான அறிஞர்கள் இருப்பதைப் போலல்லாமல் நாராயணகுருவின் வழியில் ஆன்மீகத்தைப் பரப்ப நாலைந்து அறிஞர்களே இருக்கின்றனர் என்றார்.  நான் கேரளா திரும்ப தேவையான பணம் கொடுத்தனுப்பினார்.

திரும்பும் வழியில் ஃபெர்ன்ஹில் குருகுலத்திற்குச் சென்றேன்.  மங்களானந்தா சுவாமியும் மாதாஜியும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.  குரு தனியாக இருந்தார்.  அப்போது நான்கு மணி, தேநீர் அருந்தும் நேரம். சமையலறைக்குள் நான் நுழைந்தபோது ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தார்.  என்னைக் கண்டதும் இரண்டு கோப்பைகளில் நிரப்பி, இரண்டு தட்டுகளில் ஓரோரு லட்டை வைத்து, என்னிடம் ஒன்றை நீட்டினார்.  நான் என் கைகளில் கோப்பையையும் தட்டையும் வைத்துக் கொண்டிருந்தேன்.  “படிப்பு முடிந்ததும் திரும்பி வருவதாகச் சொன்னாய்.  என்னிடம் சேரத்தான் இப்போது வந்திருக்கிறாயா?” என்று கேட்டார் நடராஜ குரு.  இந்தத் தருணத்தைப் பற்றிய அச்சம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.  தயக்கத்துடன், “அதைப்பற்றி யோசிக்கிறேன்” என்றேன். இதைக்கேட்டு நடராஜ குரு கோபத்தில் கத்தத் தொடங்கினார்.  “குருவுக்கு யாரும் இல்லை என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு யாரும் இல்லை என்று அவரே சொன்னார்.  நீ ஆர்வத்துடன் இருந்தாய் என்று நினைத்தேன்.  ஆனால் உன்னிடம் ‘அழுத்தம்’ இல்லை.  ரனிமேட்டிலேயே நீ நின்றுவிட்டாய்” என்றார்.  ரனிமேடு என்பது மலையடிவாரத்தில் இருந்த ஒரு ரயில் நிறுத்தம்.  மலையேறுவதற்கு ரயில்வண்டிகள் அங்கே நின்று நீராவி பிடித்து வரும்.  குரு கூறியதை தனிப்பட்ட முறையில் என் மீது தொடுக்கப்பட்ட அவதூறாகக் கருதினேன்.  அவசர அவசரமாக கையிலிருந்த தேநீரையும் தட்டையும் மேசையில் வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக குருவின் காலில் விழுந்தேன்.  “என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றேன்.  அந்தக் கணம், பசித்த நரியிடம் தன்னை ஒப்புக்கொடுத்த ஆட்டுக்குட்டியைப் போல் என்னை உணர்ந்தேன்.

என் சரணாகதிக்கு முன் அவர் பேசிய கொடுஞ்சொற்களுக்குப் பரிகாரம் போல அன்று மாலை குரு என்னிடம் மிகவும் மென்மையாகப் பேசினார்.  பிரதானக் கட்டிடத்திலேயே ஒரு அறையை அவர் எனக்குக் கொடுத்தபோதும் நான் ஒரு குடிலில் தங்குவதையே விரும்பினேன்.  இரவு மிகுந்த குளிரில் தூங்க முடியாமல் பெரிதும் அவதியுற்றேன்.  ஒரு வழியாக நல்ல உறக்கம் வந்தது.  பின்னர் கடுங்காபியின் மணம் என் மூக்கைத் துளைத்தபோது அலறிப்புடைத்து எழுந்தேன்.  ஒரு தட்டில் சுடச்சுட காபியும் வர்கியும் வைத்துக்கொண்டு நடராஜ குரு நிற்பதைக் கண்டு அவமான உணர்ச்சி தோன்றியது.  “படுக்கை அறையில் வந்து சூடான காபி கொண்டு தருவது ஒன்றும் தவறானதில்லை என்று நினைக்கிறேன்” என்று குத்தலாகக் கூறினார்.  அவர் கையில் இருந்து தட்டைப் பறித்துக் கொண்டு, அவமானத்துடன் சமையலறைக்குச் சென்றேன்.

குரு என்னை எதுவுமே செய்யச் சொல்வதில்லை என்பதை விரைவில் உணர்ந்தேன்.  தொட்டிகளில் நீர் நிரப்புவது, தீ மூட்டுவது, காய்கறி நறுக்குவது, தரையைப் பெருக்குவது என எல்லாவற்றையும் தானே செய்தார்.  அவர் என்னை எதுவும் செய்யச் சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன்.  அவர் ஒன்றுமே சொல்லவில்லை.  சரி, நாமே காய்கறி நறுக்குவதில் உதவி செய்வோம் என்று நினைத்தேன். உணவு தயாரிக்கும்போது ஒரு காரட்டை எடுத்து நறுக்கப் போனேன்.  “அதை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.  “நறுக்கப் போகிறேன்” என்றேன்.  “எதற்கு?” என்று கேட்டார்.  “தெரியவில்லை” என்றேன்.  காரட் குறித்து மட்டுமல்ல, குருகுலத்தில் என் வாழ்வைப் பற்றியதும் அந்தப் பதில். “உனக்குத் தெரியவில்லை என்றால் நீ கேட்க வேண்டும்.  இங்கு நான்தான் தலைமைச் சமையல்காரன்.  நான் என்ன சமைக்கப் போகிறேன் என்று நீ தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் குரு.  ஒரு பட்டாணியை எடுத்துக்காட்டி, “இந்த அளவுக்கு சதுரத்துண்டுகளாக காரட்டை நறுக்க வேண்டும்” என்றார்.  இதைக்கேட்டு, ஒரு மருத்துவ மாணவன் அறுத்துப் பார்ப்பதற்காக பிணத்தை வைப்பதைப் போல அந்தக் காரட்டை நறுக்கும் பலகையில் வைத்தேன். லண்டன் சேம்பர் ஆஃப் காமர்ஸிலிருந்து வடிவியலில் பட்டயம் பெற்றவன் நான் என்பதால், சரியான சதுரங்கள் இருந்தால் கச்சிதமான கனசதுரத் துண்டுகள் போட எனக்குத் தெரியும்.  சரியான சதுரம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பொறுப்புடன் முதல் துண்டை வெட்டப் போனேன்.

அப்போது, “உன் முதுகலைப் பட்டப்படிப்பில் உன் சிறப்புப் பாடம் என்ன?” என்று கேட்டார் குரு.  நான் சிறிது கர்வத்துடன், “அசாதாரண உளவியலும், அத்வைத வேதாந்தமும்” என்றேன். குரு என்னையே ஒரு அசாதாரணமானவனைப் போல் பார்த்துவிட்டு, “அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.  எனது ஹானர்ஸ் படிப்பிற்கான சிறப்புப் பாடம் சங்கரரின் அத்வைதம் என்றாலும் எனக்குக் கற்பித்தவர் சுத்த விசிஷ்ட வேதாந்த விசிஷ்டாத்வைதியான ஒரு ஐயங்கார்.  இரு தத்துவங்களுக்குமிடையேயான வேறுபாட்டை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.  அந்த முக்கியமான கேள்வியைக் கேட்டதும் காரட்டை ஒதுக்கி வைத்துவிட்டு கத்தியையும் மெதுவாகக் கீழே வைத்தேன்.  எதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதைப் போல என்னைப் பார்த்த குரு, “நீ என்ன உன் கையினாலா சிந்திப்பாய்?” என்று கேட்டார்.  இரண்டு வயதுக் குழந்தையொன்றைப் போல நடத்தப்பட்டதை நான் விரும்பவில்லை.  பொதுவாகவே நான் முன்கோபி.  கோபத்தில் என் முகம் சிவந்தபோதும் என்னை அடக்கிக்கொண்டு, “இல்லை, நான் என் தலையால் சிந்திப்பேன்” என்றேன்.  குரு அதை நம்பாதவர் போல, தொடர்ந்து, “அப்படியானால் நீ அதை நறுக்கிக்கொண்டே என் கேள்விக்கு பதிலளிக்கலாம்.  காரட் நறுக்குவது அறிவுத் திறம் தேவையில்லாத (மெகானிகல்) செயல், அறிவுபூர்வமாகப் பேசுவது சிந்திக்கும் செயல்” என்றார்.  இது எனக்குப் புதிதாக இருந்தது.   அதுவரை இப்படி நான் சிந்தித்ததேயில்லை. ஒரு சமயத்தில் ஒருவரால் ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியுமென்று நினைத்திருந்தேன். மனிதனின் ‘எளிய’ சுயத்தையும் ‘மேல்’ சுயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க இந்தப் பாடம் எனக்குப் பேருதவியாய் இருந்தது. பின்னர், நடைமுறை உலகில் எந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதும் ஒருவரால் தன்னுடைய ‘மேல்’ சுயத்துடனான உரையாடலில் முழுவதுமாக ஈடுபடமுடியும் என்பதை அறிந்து பெரிதும் வியந்தேன்.

ஹானர்ஸ் இறுதித் தேர்வில் நான் பல்கலையில் முதல் மாணவனாகத் தேறியிருந்தேன்.  ஆனால், அத்வைத வேதாந்தம் குறித்து நடராஜ குருவுடன் நடந்த அரைமணிநேர உரையாடலுக்குப் பின், நான் வகுப்பறையில் கற்றது எதுவும் பயனற்றது என்றும், நான் முதலிலிருந்து தொடங்கவேண்டும் என்றும் ஐயமற உணர்ந்தேன்.  நான் சீராக தத்துவம் கற்பதற்கு முன் என்னுடைய ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குரு நினைத்தார். நான் ஜான் ஸ்பியர்ஸுடன் தங்கி இருந்து ஆங்கிலம் கற்கலாம் என்று ஆலோசனை கூறினார். குருகுலத்திலேயே இருந்தாலும் நான் நடராஜ குருவின் அண்மையைத் தவிர்க்க முடியும் என்பதால், அது ஒரு நல்ல ஆலோசனையாகத் தோன்றியது.