Tag Archives: கலை

கலையில் ஆன்மீகம்

Standard

முதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய நான் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவிற்குப் போனேன்.  ஏன் இண்டியானாவை தேர்ந்தெடுத்தேன்?  அங்குதான் என் ஆத்ம நண்பரான டாக்டர் விஜயபிரசாந்தன் பிள்ளை வசித்து வருகிறார்.  ஏன் ஆத்ம நண்பராகக் கருதுகிறேன் என்றால் முழுவதும் பெளதீகமான  தோற்றங்களுக்கு அப்பால் ஓர் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டதுதான் காரணம்.  உயிருடன் வாழும் சில காலமேனும் சுமந்து நடக்க வேண்டிய முக்கியமான பெளதிகச் சார்புடைய செல்வமே என் முதுகெலும்பு.  அதை பிறர் கையில் எடுத்துப் போய் ஒப்படைக்க மனம் வரவில்லை.  விஜயபிரசாந்தன் எதிர்பார்ப்புகள் எதுவிமின்றி என்மீது அன்பு வைத்திருக்கிறார்.  ஆகவேதான் வார்த்தைகளால் விளக்க முடியாத என் பிரியமானவற்றையெல்லாம் அவர் மதிப்பார் என்று கருதுகிறேன்.  எனவே விஜயபிரசாந்தன் வெறும் நண்பர் மட்டுமல்ல, ஆத்ம நண்பர்.

அறுவை சிகிச்சை ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நடந்தது.  அறுவை சிகிச்சை அறையில் பிரவேசித்த பின் என்ன நிகழ்ந்ததென எனக்குத் தெரியாது.  மயக்கம் தெளிந்ததும் டாக்டர் சொன்னார், “வெளியே கிடந்த விலா எலும்புகளைத் தட்டி உள்ளே சேர்த்துள்ளேன்”.  சுத்தியலால் முதுகெலும்பைத் தட்டிச் சரியாக்குவது பெளதிகம்.  அதில் பின்னிப் பிணைந்து கிடக்கும் நாடி நரம்புகளின் பாதுகாப்பைக் குறித்து சிந்தனை புரிந்து அக்கறை காட்டுவது ஆன்மீகம்.  இப்படித்தான் ஆன்மீகத்தையும் பெளதிகத்தையும் புரிந்து வைத்துள்ளேன்.

சில நாட்கள் கழித்து சிரத்தாவும் நான்ஸியும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.  அவர்கள் ஒரு விசேஷ செய்தியுடன் வந்திருந்தனர்.  சிக்காகோ ஆர்ட் சென்டரில் க்ளாட்மோனே (Claude Monet – 1840-1926) வின் அரியதோர் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.  எல்லாமே ஒரிஜினல் கேன்வாஸ் ஓவியங்கள்.  ஒரே காட்சி காலை, மாலை, இரவு நேர வெளிச்சங்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.  பனிக்காலத்திலும், மழைக்காலத்திலும், வசந்த காலத்திலும் வரைந்த ஓவியங்களும் உள்ளன.  பொருளின் இருப்பைக் காணும்போது ஒரே ஆய்வு விஷயம்தான்.  வெளிச்சம் உண்டாக்கும் பாதிப்பைக் காணுகையில் கலையில் ஆன்மீகம்தான் அவற்றின் முகக்குறிப்பாகத் தெரியும்.   சென்று பார்க்கவேண்டுமென விரும்பினேன்.  எப்படிப் போவது?  முதுகெலும்பும், முதுகுத்தோலும் கீறி தைத்து வைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும் போய் பார்க்க வேண்டும்.

Claude Monet 1899 Nadar crop.jpg

ஒரு தைரியத்தில் போனேன்.  உடல் நலமின்மை பெளதிகம்.  அழகியல் ரசனையை நல்கிய மனதின் உந்துதல் ஆன்மீகம்.  ஓவிய மையத்தை அடைந்ததும் நான்ஸிக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது.  ஒரு சக்கர நாற்காலியை எடுத்து வந்து அதிலென்னை இருத்தி தள்ளிச் செல்வது. அவர் அப்படியே செய்தார்.  நலம் குன்றிய உடலை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிச் செல்வது பெளதிகம்.  ஆனால் ஒவ்வோர் ஓவியத்தையும் எவ்வளவு தூரத்திலிருந்து தலையை எப்படிச் சாய்த்து வைத்து, எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற என் நோக்கத்தைக் கணக்கிலெடுத்து நான்ஸி ஒவ்வோர் ஓவியத்தின் அருகிலும் என்னைக் கொண்டு போய் பொறுமையோடு காத்திருந்ததும் உடல் நலம் குன்றிய ஒருவர் ஓவியத்தை ரசிப்பதற்காக சக்கர நாற்காலியில் வருவதைப் பார்த்த ஆள்கூட்டம் ஒதுங்கி நின்று எனக்கு வசதியை ஏற்படுத்தித் தந்ததும் மனதை நெகிழச் செய்த அனுபவங்கள்.

வரையறுத்துச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று’ அச்சூழ்நிலையிலும் இயல்பான ஓர் உற்சாகத்தை அளித்ததை கலையில் ஆன்மீகம் என்பேன்.  அதுவரை தெரிந்ததிலிருந்து தெரிந்திராத ஓர் அந்நிய உணர்வுக்கு, காட்சிக்கு ஏதேனும் ஒரு மார்க்கம் அழைத்துச் செல்வதை நான் அனுபவித்தால் அதுவே எனக்கு ஆன்மீகம்.  ஒவ்வோர் ஓவியமும் நாக்கில்லாமலே பேசும்.  கண்களில்லாமலே ஆத்மாவால் உயிரை முத்தமிடும்.  அதையே நான் கலையில் ஆன்மீகமாக நம்புகிறேன்.

அன்றாட நிகழ்வுகளின் வெறும் சாதாரணத் தன்மையிலான குவிப்பாகக் காணப்படினும் அந்நியமான காட்சியின் ஓர் இனிய தோற்றத்தை, ஒரு தெளிவடையும் புதிர் நிலையை, வண்ணத்தை சற்று கூட்டி, அல்லது சற்று குறைத்து தூரிகையின் ஒரு சிறிய சுழிப்பால் காட்டியிருக்கும் இடத்தை இமைக்காமல் நோக்கி, முன்னேற முடியாமல் நிற்கும்போது நான் அதை கலையில் ஆன்மீகம் என்கிறேன்.

கான்டின்ஸ்கி ஒருமுறை சொன்னார், ‘கலையின் மிக மெல்லிய உயிர்ப்பை ஆழத்தில் காணநேரும்போது அது அமைதியாய் தெரிகிறது.  அவ்வமைதியை பார்வையாளனும் அனுபவிக்க முடியும்.  சற்றும் ஓசையெழுப்பாமல் அந்த ஓவியம் ஒரு சிறு புன்னகையோடு சொல்கிறது, ‘இதோ நான் இங்கிருக்கிறேன்”.  அவ்வோசைக்குள் புதைந்திருக்கும் ஆழத்தில் ஒரு கம்பீரம் உண்டு.

பிரபஞ்சம் நிறக் கலவைகளைக் கொண்டது.  கண்ணின் ஆற்றல்களில் ஒன்று அதற்கு நிறங்களை அவற்றின் எல்லா வேற்றுமைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து சுருதி இனிமையும், ராக இனிமையும் கொண்ட சப்த ஒழுங்கைப் போல ரசிக்க முடியும் என்பதாகும்.  இவ்விஷயத்தை மோனே ஆரம்பத்திலேயே அறிந்திருந்தார்.  எனவே பிரபஞ்சத்தை அதன் இயல்பான அழகால் கண்டு அதன் நிறங்களில் ஒன்றைக்கூட நிராகரிக்காமல் கேன்வாஸில் பதிவு செய்ய மோனே தீர்மானித்தார்.  ஒளி, நிழல் இவற்றிடம் நிறங்கள் தமது இதய ரகசியத்தை மொழிகின்றன.  அந்த ரகசிய உரையாடலில் ஒரு கவித்துவம் உண்டு.  அது ஈடு இணையற்றதென மோனே கருதினார்.  ஓவியக் கலையின் இந்த ஆன்மீகத்தைத்தான் மோனே மிகவும் நேசித்தார்.  நிறங்களை முத்தமிடும் ஒளித்துகள்கள் ஒரு சின்மய இனிமையை திறமையான கண்களுக்கு ரகசியமாக பரிமாறுகின்றன.  மோனேயின் தூரிகையை நம்பிக்கையோடு ஆசிர்வதிக்க அந்த ராக ஒளிர்வு என்றும் காத்துக் கொண்டிருந்தது.  அந்தப் பசுமையான இதயத்தின் பெயர்தான் ‘இம்ப்ரஷனிசம்’.

எங்கும் பேரமைதி பிரபஞ்சத்தைத் தழுவி கனவமைதியைப் புலப்படுத்தும் தருணங்களில் மட்டும் மோனே பிரபஞ்சத்தை நேசிக்கவில்லை.  காற்றும் மழையும் கடல் எழுச்சியும் கலங்கிய புரண்டு வரும் நதி நீரும் காற்றிலசைந்து ஆட்டம் போடும் பெருமரங்களும் அரிய அழகு தரிசனத்திற்கான திறவுகோலை மோனேவிடம் ஒப்படைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.  பிரபஞ்சத்திற்கு அமைதியும், அமைதியின்மையும் வேறுவேறு முகங்களும் வித்தியாசமான ஆத்மாவும் உண்டு.  அமைதியின்மையின் முகத்தையே ‘நோர்மான்டி கரை’ என்னும் ஓவியம் பிரதிபலிக்கிறது.

சாலைகளில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் தடித்த மரங்களின் மெளன அழகில் நமது அந்நியத்தன்மை வெளிப்படுகிறது.  அந்த அந்நியத்தன்மையை மோனேவின் சிறுகுழந்தை உறங்கிக் கிடப்பதைச் சித்தரிக்கும் ஓவியத்தில் காணலாம்.  அந்த பாலகனின் முகத்தில் நிறைந்திருக்கும் களங்கமின்மையும், தனிமையும் நம்மை உறைய வைக்கின்றன.  அறையின் கதவருகில் நின்று மெளனமாய் பார்ப்பதைத் தவிர ஒரு அடி முன்னேறக்கூட அவன் மெளனம் நம்மை அனுமதிப்பதில்லை.

கமீலே பிரசவித்துக் கிடக்கிறாள்.  மோனேவின் கையில் குழந்தைக்கோ, அவளுக்கோ உணவு வாங்கித் தருவதற்கு பைசா கூட இல்லை.  எவ்வளவு வேதனையோடு அந்தச் சூழ்நிலையை பிரடரிக் பஸீலிக்கு மோனே எழுதியுள்ளார்!  மோனேவின் தூரிகை முனையில் தேங்கி நிற்கும் வேதனையின் நிழலை குழந்தையின் இறுகி மூடிய உதடுகளில் காணலாம்.

சூரியன் மோனேவின் சொர்க்கக் கதவைப் பாதுகாத்து வைத்திருந்தது.  ஆனால் ஐரோப்பாவின் சூரியனை மாதக் கணக்கில் பார்க்க முடியாது.  சூரியன் வானத்தில் தென்படும் வேளையில் ஓவியன் தூரிகையையும், வர்ணத்தையும் ஆயத்தப்படுத்துவதற்குள் கார்மேகம் வந்து மறைத்துவிடும்.  அதைத் தொடர்ந்து தூறல் மழை.  குளிர் தொடங்கியவுடன் பனி கொட்டும்.  பிரபஞ்சத்திற்கு இவையனைத்தும் காரண காரியங்களற்ற ஒரு பொழுதுபோக்கு.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு துண்டு சுட்ட ரொட்டி, அரை அவுன்ஸ் வெண்ணெய், ஒரு கப் காப்பி இவற்றை உண்பதற்குப் பொருளீட்ட வேண்டுமெனில் நீரின் நீலத்தில், மரத்தின் பசுமையில், பூவின் அழகில் சூரிய கிரணங்கள் வந்து வருட வேண்டும்.  அரிய வரம் போல் சூரியன் வானில் தெரியும்போது மோனேவின் அம்பறாத் தூணியில் அம்புகள் இல்லை.  வர்ண டியூப்கள் அனைத்தும் காலியாக இருக்கும்.  அவற்றை வாங்க பணம் இருக்காது.  தனது படைப்பை யாரேனும் வாங்கி இருநூறோ, முன்னூறோ ஃப்ராங்குகள் தருவார்களேயானால்… இதையெல்லாம் மோனே நிறைந்த விழிகளோடு ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு எழுதியுள்ளார்.

1879 செப்டம்பர் ஐந்தாம் தேதி மோனே ஓரு ஓவியத்தைத் தீட்டினார்.  மரணத்தில் புதையும் அன்பு மனைவியின் ஓவியம்.  அன்று ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு மோனே எழுதினார்.  ‘இன்று என் அன்பு மனைவியின் துன்பத்திற்கு முடிவு வந்துவிட்டது.  காலை பத்து மணிக்கு அவளின் உயிர் பிரிந்தது.  நானும் என் ஆதரவில்லாக் குழந்தைகளும் மட்டும்.  எனக்கு வேதனையை சகிக்க முடியவில்லை.  எனக்கொரு சின்ன உதவியை செய்து தரவேண்டும்.  கமீலேவின் கழுத்துப் பதக்கத்தை அடகு வைத்துவிட்டேன்.  அவள் வாழ்க்கையின் மொத்த சம்பாத்தியம் அது மட்டுமே.  மதியத்திற்குப் பிறகு அவளின் உடல் தேவாலயத்தின் முற்றத்தை அடைந்துவிடும்.  அதற்கு முன்பாக அந்தப் பதக்கத்தை அவளது கழுத்தில் அணிவிக்க வேண்டும்.  என்மீது கருணை காட்டுங்கள்.’

உலகம் புகழும் ஓர் ஓவியன்!  எத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கும், இதயத்திற்கும் மகிழ்வைத் தந்தவன்!   இத்தகைய கணங்களையும் அவன் எதிர்கொள்ள நேர்ந்ததோ! ‘ஸாந்தே அந்த்ரஸ்ஸே கடற்காட்சிகள்’ மோனேவின் மனதை ஒருமுறை தழுவி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்.  அந்த ஓவியங்களில் நீண்ட பெருமூச்சுகளுண்டு.  பூக்களே மோனேவின் மிக நெருங்கிய நண்பர்கள்.  வாழ்வின் இறுதி நாட்களில் வறுமை நீங்கியபோது அவர் அபூர்வமான பூந்தோட்டங்களை படைத்து வர்ணங்களின் வழிபாட்டிற்கு திருவிழாக்களை நடத்தினார்.  பூக்கள் அவரது விளையாட்டுப் பொருட்களாய் இருந்ததில்லை.  அவை உற்சாகத்தோடு ஊரெங்கும் நிறைந்திருக்க வேண்டும்.  சட்டிகளில் வளர்க்கக் கூடியவையல்ல பூக்கள்.  அவை பூஞ்சோலைகளில் கனவு விழாக்களாய், சிரிப்புகளாய்  எல்லையற்ற ஐக்கியமாய் திகழ வேண்டும்.  செல்வந்தர்களின் பகட்டைக் காட்ட பூந்தோட்டங்களை வளர்க்கக் கூடாது.  அவை பூமியின் சகஜமான பூரிப்புடன் மலர வேண்டும்.  கலைஞரின் அளவற்ற அழகுணர்வுக்குப் பூக்கள் குதூகலத்தோடு தோரணம் கட்ட வேண்டும்.  விசிறி வீச வேண்டும்.  ஐரீஸும், ட்யூலிப்பும், பியோணியும் பரஸ்பரம் பார்த்தும் சிரித்தும் என்றென்றும் இணைந்தும் வர்ண ஆரவாரத்துடன் பயணிகளுக்கு பாதை காட்ட வேண்டும்.  இதுவே மோனேவின் சித்தாந்தம்.

அலைகளை பொங்கச் செய்து வெண் நுரையின் கொந்தளிப்பில் மூழ்கி எழுவது கடலின் குத்தகையாகி விடக்கூடாது.  தோட்டக்காரன் பூக்களை வளர்க்கிறான். ஓவியனோ பூக்களின் பெரும் புகழுக்கு அழிவற்ற ஒளியை ஏற்றுகிறான்.

கமீலேவின் மறைவுக்குப்பின் மோனே மனம், இதயம், சிந்தனை அனைத்தையும் தனது ஓவிய ஈடுபாட்டிற்காக தியாகம் செய்தாரெனச் சொல்லலாம்.  அதற்குப் பின் கடிதங்களின் போக்கு மாறியது.  அவரது மனித நேயம் என்றும் மனத் துயரை தருவதாகவே இருந்தது.  இருப்பினும் ஓவிய ஈடுபாட்டிற்காக ஒதுக்கி  வைக்கப்பட்டிருந்த நேரத்தை அபகரிக்க குடும்ப உறுப்பினர்களுக்கோ, நண்பர்களுக்கோ முடியவில்லை.

கமீலேவின் இடத்தை ஆலீஸ் பிடித்தாள்.  ஆலீஸ் ஆரோக்கியமும் திறமையும் உடையவளாக விளங்கினாள்.  மோனே அக வெளியிலிருந்து மலைச் சிகரங்களுக்கும் கடலோரங்களுக்கும் தன் படைப்புகளின் அரங்கை மாற்றினார்.  கடலோடு உரையாட தயாராய் வந்த தூரிகைக்கு பாய்ந்தோடும் அலைகளோடும் மேகங்களைக் கடித்து வீழ்த்துவதற்கு எம்பிக் குதிக்கிற கடல் எழுச்சியோடும் கையாள நேர்ந்ததைப் போல இருக்கவில்லை.  மலைத் தொடர்களின் முரட்டுப் பாறைகளிடமும், செங்குத்தாய் கிடக்கும் சரிவுகளிடமும் முதுகை வளைத்து நிற்கும் காய்ந்த மரங்களிடமும் தூரிகையை சமரசப்படுத்த வேண்டியதாயிற்று.  அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு 1883 பிப்ரவரியில் தீட்டிய ‘எட்ரோட்டியில் கடல் கொந்தளிப்பு’.

அக்காட்சி ஏற்கனவே கூர்வே திறமையாகப் புலப்படுத்திய ஒன்றுதான்.  மலைக்கும் கடலுக்கும் நடுவே சிக்குண்ட கலைஞனுக்கு வேறோர் உணர்ச்சியூட்டும் பிரச்சினையும் முன் நின்றது.  அது ஆலீஸை மணப்பதற்கு முன்பு நிகழ்ந்தது.  ஆலீஸை திருமணம் செய்வதற்கு முன்பு கமீலே விட்டுப்போன இடத்திற்கு ஆலீஸ் விருப்பத்துடன் வந்து சேர்ந்திருந்தாள்.  எனினும் அவளது கணவன் எர்னஸ்டேஹோஷெஸே இன்னும் ஆலீஸை அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்திருக்கவில்லை.  ஆகவே பிறன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தார்மீகமான அகக்கொந்தளிப்பு மோனேவின் மனதில் குமுறிக் கொண்டிருந்தது.  ஒருவேளை ‘எட்ரோட்டியில் கடல் எழுச்சி’யை கேன்வாஸில் தருவதற்கு புற எழுச்சியைக் காட்டிலும் அகக் கொந்தளிப்பு உதவியிருக்கக் கூடும்.  அதைப் போலவே மோனேவின் அகக் கொந்தளிப்பைப் பிரதிபலிக்கும் ஓர் ஓவியம் ‘கிவர்ன்னியில் எப்தே நதிப்பிரவாகம்’.  தடையும் அலையும் மட்டுமல்ல அந்த நதியில் பயங்கரமான ஒரு நீர்ச் சுழலும் தெரிகிறது.

மனதை ஒருமுகப்படுத்த மோனே கண்டடைந்த இரு வழிகள், ஆலீஸுக்கு தினமும் கடிதம் எழுதுவதும் கண்களை கடலிலும் பாறைப் பகுதியிலும் பறந்து திரிய விடுவதும்.  துயரத்தின் அடியோட்டத்திலும் அதனை சகித்துக் கொள்ளும்போது வெளிப்படும் வெதும்பலிலும் ஒளிந்திருக்கும் ஒரு சுய ஆத்மதரிசனம் உண்டு.  அது தரும் முனைப்பு கலையின் ஆன்மீகத்தை அற்புதமாக வலுப்படுத்துகிறது.  அதற்குச் சரியான உதாரணம்தான் மோனேவின் ஓவியப் படைப்புகள்.  அந்நாட்களில் அவர் அனுபவிக்க நேர்ந்த வேதனையுடன் அடக்க முடியாத ஒரு காதல் மோகத்தையும் மோனே தன்மனதில் வைத்து பராமரித்து வந்தார்.  அதுதான் ஆலீஸின் மீது அவருக்கிருந்த அனுராகம்.  இவை இரண்டும் உருவாக்கிய எட்ட முடியாத ஓர் ஆழம் மோனே வெளிப்படுத்திய அழகியல் தரிசனத்தில் நிறைந்திருக்கிறது.  அதை இனம் காண பார்வையாளனுக்கு இயலுமெனில் ஓவிய அனுபவத்தின் எதார்த்தமான இனிமையை அந்தக் கலைரசிகன் தெரிந்து கொள்வான்.

தமிழில் : நிர்மால்யா

நேர்காணல் – 7

Standard

நான் அழகிற்காக இறந்தேன்

கல்லறையில் வைக்கப்பட்டேன்

உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர்

என்னருகே படுக்கவைக்கப்பட்டபோது

அஞ்சினேன்

நான் ஏன் இறந்தேன் என்று

அவர் கேட்டார்

‘அழகிற்காக’ என்றேன்.

‘நான் உண்மைக்காக.  நாமிருவரும்

சகோதரர்கள்’ என்றார் அவர்

அவ்வாறாக உறவினர்களைப் போல

இரவு முழுக்க உரையாடினோம்

புல் வளர்ந்து பரவி

எங்கள் உதடுகளை மூடி

எங்கள் பெயர்களை மறைக்கும் வரை

–    எமிலி டிக்கன்சன்

16.3.1996

இந்தக் கவிதையில் அழகும் உண்மையும் இரண்டல்ல,  ஒன்றுதான் என்ற தரிசனம் உள்ளது.  ஆனால் காலம்காலமாக படைப்பிலக்கியவாதிகளிடம் அழகும் உண்மையும் ஏதோ ஓர் இடத்தில் பரஸ்பரம் முரண்படக்கூடியவை என்ற எண்ணம் உள்ளது.  அசிங்கமான உண்மை, அழகான பொய் போன்ற சொற்கள் சாதாரணமாக இவ்விஷயத்தையே குறிப்பிடுகின்றன.  டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சொற்றொடர் கூட உண்டு: ‘அழகானவை எல்லாம் சிறந்தவை என்று எண்ணுவதே மனித குலத்தின் ஆகப் பெரிய மாயை.’  உங்கள் கருத்து என்ன?

முதலில் இரு சொற்களையும் இந்த விவாதச் சூழலில் வைத்து நிர்ணயித்துக் கொள்ள முயல்வோம்.  அழகு என்பது என்ன?  உண்மை என்பது என்ன?  இவ்வாறு விவாதக் களத்தையும் சந்தர்ப்பத்தையும் சார்ந்து நிர்ணயங்களை உருவாக்கிக் கொள்ளாமல் அடிப்படைகளைப் பற்றிய விவாதங்களுக்குள் புகுவது மிகவும் பிழையானது.  ஏனெனில் இச்சொற்கள் மிகவும் பரந்துபட்ட முறையில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அடிப்படைக் கருதுகோள்கள் பலவற்றை நிரந்தரமாக நிர்ணயிக்க முடியாது.  அது அந்தரங்கமான அறிதல்களைப் பொதுமைப்படுத்தி, உலகை அதன் அடிப்படையில் தவறாகப் புரிந்துகொள்வதில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.  அடிப்படைக் கருதுகோள்கள் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றை நிர்ணயிக்க முயலும்போது அவை அன்றாடத் தளத்தைத் தாண்டியவை என்பதை உணர முடியும்.   அழகு, உண்மை இரண்டுமே அப்படி அதீத தளத்தில் ஊன்றி நிற்பவை.  ஆகவே முழுமுற்றான நிர்ணயம் ஒருபோதும் சாத்தியமல்ல.  ஆனால் புழக்க தளத்தில் நாம் அனைத்தையும் நிர்ணயித்தேயாக வேண்டும்.  இல்லையேல் உலகில் வாழமுடியாது.

அடிப்படை விஷயங்களை நிர்ணயிக்க முயலக்கூடாது என்று மகாயான பெளத்தம் கருதுகிறதே?

விவாதிக்கக் கூடாது என்றுதான் பெளத்தம் கருதுகிறது.  அடிப்படை நிர்ணயங்களிலிருந்துதான் பிற நிர்ணயங்களெல்லாம் உருவாகின்றன.  அறங்கள், மதிப்பீடுகள், ஒழுக்கம் எல்லாம் உருவாகின்றன.  அவை இல்லாமல் சமூக வாழ்வே சாத்தியமல்ல.

ஆக மூன்று நிலைகளில் சொற்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.  அதீத நிலை, புழக்க நிலை, அந்தரங்க நிலை.  ஒவ்வொரு நிர்ணயமும் ஒரே சமயத்தில் இம்மூன்று நிலைகளிலும் இருப்பதைக் காணலாம்.  இரண்டாவது தளத்தில் மட்டுமே தெளிவான நிர்ணயம் சாத்தியம்.

அழகு என்பது என்ன?  சாக்ரடீஸ் கேட்டார்.  பெண் அழகு.  பானை அழகு.  குதிரைக்குட்டி அழகு.  இவையனைத்திலும் பொதுவாக உள்ள அழகு என்ன?  அதைத் தனியாகப் பிரித்துக்கூற முடியுமா?  முடியாது.  அந்தரங்க அனுபவம் சார்ந்தே பேச முடிகிறது.  அந்தரங்கமான ஒன்றுக்கு புழக்கதளத்தில் மதிப்பு இல்லை.  ஆகவே நாம் ஏகதேசப்படுத்தலாம்.  அடிப்படைக் கருதுகோள்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு பொதுமைப்படுத்தப்பட்ட தனியனுபவங்களே.  அழகு என்பது ஒரு பொதுவான ஒப்புதலின் அடிப்படையிலான ஏகதேசப்படுத்தல் (Beauty is an approximation of a general agreement). அந்தப் பொது வட்டத்திற்குள் இல்லாதவர்களுக்கு அதில் எந்தப் பொருளும் இல்லை.

தாஜ்மகால் அழகு அல்லவா?  நான் பலமுறை ஆக்ரா போனதுண்டு.  ஏனோ தாஜ்மகாலைப் பார்க்கத் தோன்றவில்லை.  ஒருமுறை  நண்பர் ஒருவர் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.  அன்று நல்ல வெயில்.  கட்டிடத்தின் வெண்ணிறம் கண்களைக் குத்தியது.  வியர்வை வாடை.  சாம்பிராணி வாடை.  எனக்குத் தலை சுற்றியது.  அப்போது எனக்கு விசித்திரமான பார்வையுணர்வு ஒன்று ஏற்பட்டது.  அது ஒரு பேரழகியின் பார்வையல்ல.  பன்னிரெண்டு குழந்தைக்குத் தாயான பெண்மணி ஒருத்தியின் பார்வை.  அவ்வனுபவத்தை வைத்து நான் ஒரு கதை எழுதினேன்.  அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பது மும்தாஜ் அல்ல.  மும்தாஜ் நிரந்தரப் புகழ் பெறுவதை ஒளரங்கசீப் வெறுத்தார்.  அவள் உடலை அகற்ற விரும்பினார்.  ஆகவே தாஜ்மகாலில் காவலனாக இருந்த ஒருவன் மும்தாஜின் உடலை பாதுகாப்பாக வேறு ஓர் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு தன் தாயின் உடலை அங்கு வைத்துவிட்டான்.  அது அரண்மனைத் தாதியான ஒரு முதிய பெண்மணி.  பிற்பாடு ஷாஜகான் இறந்து அவரும் தாஜ்மகாலில் அடக்கம் செய்யப்பட்டார்.  ஒருநாள் இரவில் ஷாஜகான் தன் மனைவியை நோக்கி கை நீட்டினார்.  உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.  ‘மகனே, நான் மும்தாஜல்ல.  உன் செவிலித்தாய்.  உனக்கு முலைப்பால் ஊட்டியவள்.’  ஷாஜகான் அதிர்ச்சி அடைந்தார்.  முழுநிலவு நாள் ஒன்றில் மும்தாஜ் நிலவைத் தொட்ட வெண்பளிங்கு முகடு வழியாக இறங்கி வந்தாள்.  வெண்ணிற ஒளியாலான விரல்களால் கபர் பெட்டியைத் திறந்து ஷாஜகானைத் தொட்டு அவனையும் நிலவொளியாக மாற்றி எழுப்பினாள்.  இருவரும் தாஜ்மகாலின் வெண் மேகம் போன்ற கும்மட்டங்கள் மீது தவழ்ந்தபடியும் பரஸ்பரம் ரசித்தபடியும் இரவைக் கழித்தனர்   நிலவு சரிந்ததும் மும்தாஜ் வானில் ஏறி மறைந்தாள்.  ஷாஜகான் தானும் உடன் வருவதாகக் கூறினான்.  சிரித்தபடி மும்தாஜ் கூறினாள்: “முகலாயர்களால் பல்லாயிரம் பேர் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.  அந்தப் பாவமே ஆயிரம் பேர் தினம் மிதித்துச் செல்லும் தரைக்கு அடியில் காலம் முழுக்க படுத்திருக்கும்படி உன்னைக் கிடத்தியுள்ளது.”  தன் வாழ்நாள் முழுக்க அவன் அன்பிற்காக ஏங்குபவனாக, தனியனாக இருந்தான்.  ஆகவே பாசமுள்ள தாய் அவனுக்குத் துணையாகப் படுத்திருக்கிறாள்.  அவளோ மரக் கூட்டங்கள்மீது பரவும் நிலவொளி போல எப்போதும் எல்லோரிடமும் பிரியமாக இருந்தாள்.  அவளிருக்க வேண்டிய இடம் நிலவுதான்.

இக்கதை ஒரு தில்லிப் பத்திரிக்கையில் பிரசுரம் பெற்றது.  மும்தாஜ் உண்மையில் தாஜ்மகாலில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.  பல வருடங்கள் கழித்து இக்கதையை ஒரு வரலாற்று ஐதீகமாகக் கருதி ஒருவர் எழுதியதைப் படித்தேன்.  பிறகு ஒரு நாள் கஜல் பாடகர் ஒருவருடன் யமுனைக்கரையில் நிலவின் ஒளியில் தாஜ்மகாலைப் பார்த்தேன்.  ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸின் வரிகளும் நிலவும் தாஜ்மகாலும் ஷாஜகானின் அன்பும் ஒன்றாயின.

என் கதை தகவல் ரீதியாகப் பிழையானது.  ஆனால் நிச்சயமாக அது பொய்யல்ல.  பொய் நம்மை தவறான திசைக்குக் கொண்டு செல்வது.  என் கதையோ மேலும் நுட்பமான உண்மையை நோக்கிக் கொண்டு செல்வது.  ஆகவேதான் இதையே பெரும்போலோனார் நம்ப விழைந்தார்கள்.  ஐதீகங்கள் உருவாவது இப்படித்தான்.  இதை ‘அதி உண்மை’ அல்லது ‘செறிவுபட்ட உண்மை’ என்று அரவிந்தர் கூறுகிறார்.  இதை நாம் ‘கவித்துவ உண்மை’ எனலாம்.  ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னார்:  ‘நீங்கள் என்னை நம்பியாக வேண்டும்.  ஏனெனில் நான் கவிஞன்.’

உண்மைகள் பலவிதமானவை என்று கொள்ளலாமா?

ஆம்.  ஒவ்வொரு தத்துவ அணுகுமுறையும் தங்களுக்குரிய உண்மைகளை உருவகித்துக் கொள்கின்றன. விஞ்ஞான உண்மை என்பது நிரூபணவாத உண்மையாக இருக்கலாம் அல்லது சாரவாத உண்மையாக இருக்கலாம்.

எந்த உண்மை அழகுடன் முரண்படுகிறது?

உண்மையை சித்தாந்த உண்மை என்றும் பொது உண்மை என்றும் உருவகித்தவர்கள் அதை அழகற்றது என்றோ அழகானது என்றோ மேலும் உருவகித்துக் கொள்ளலாம்.  அப்படியானால் இங்கு பிரச்சினை அழகுக்கும் உண்மைக்கும் இடையேயான முரண்பாடல்ல.  மாறாக உருவகித்துக் கொள்வதன் பிரச்சினையேயாகும்.  அப்படி உருவகிப்பதற்கான தேவை  அச்சூழலில் அப்போது அவர்களுக்கு உள்ளது என்றே பொருள்.  அது தத்துவப் பிரச்சினையல்ல.  உளவியலோ சமூகவியலோதான் அதற்கு பதில் கூறவேண்டும்.  மேற்கைப் பொறுத்தவரை வெகு காலம் தத்துவச் சிந்தனை நிறுவன மதமாகிய கிறித்தவத்திற்கு எதிரான ஒன்றாகவே இயங்கியது.  கிறித்தவம் எதிரெதிர் நிலைகளை திட்டவட்டமாக வகுத்து வைத்திருந்தது.  அசிங்கம் என அது நிறுவியுள்ள ஒன்றை உண்மை என அறியும் மேற்குமனம் ‘அசிங்கமான உண்மை’யை உருவகிக்கிறது.

இந்த ஓவியத்தைப் பாருங்கள் – நான் இன்று வரைந்தது.  இது ஒரு முட்செடி.  பூக்களை அழகானவை என்று கூறும் எவரும் இதை அழகானது என்று கூறமுடியாது.  வின்சென்ட் வான்கா வரைந்த ஓவியத்தைப் பார்த்து இதை வரைந்தேன்.  வான்கா தந்த ஒரே சிறப்பம்சமான வண்ணத்தையும் நான் விலக்கிவிட்டேன்.  வான்கா வரைந்த இந்த ஓவியம் உலகின் அழகிய ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  ஆம்ஸ்டர்டாம் மியூசியத்தில், அவன் வரைந்த ‘உருளைக்கிழங்கு தின்பவர்கள்’ என்ற ஓவியத்தின் முன் வெகுநேரம் நான் நின்றதுண்டு.  ஏழைச் சுரங்கத் தொழிலாளர்கள், கரிபடிந்த முகம்.  இருண்ட அறை.  உருளைக்கிழங்குடன் அமர்ந்திருந்தவன் கேட்டான்: ‘நாங்கள் ஏழைக் குரூபிகள்; எங்களைப் போய் ஏன் வரைந்தான் வான்கா?’  வான்காவின் ஓர் ஓவியத்தில் பயனிழந்த பிய்ந்த செருப்புகள் மட்டும் உள்ளன.  ஏதோ ஒரு ஏழை விவசாயியின் செருப்புகள்.  பலமுறை தைத்து உபயோகப்படுத்தியவை.  இன்று இவற்றை கலைக்கூடத்தில் மக்கள் வரிசையாக நின்று பார்த்து மகிழ்கிறார்கள்.  வான்கா செய்தது என்ன?  அவற்றை அடையாளப் படுத்துகிறான். தன் கலையின் மூலம் அவற்றின் அக உண்மையைத் துலங்கச் செய்தான்.  சாலையோரம் கிடக்கும் பழைய செருப்பு ஒரு குப்பை.  வான்கா அதில் ஓர் ஏழையின் விடாப்பிடியான, துயரம் தோய்ந்த, உழைப்பு நிரம்பிய, வாழ்வைக் காட்டினான்.  கரிச்சுரங்கத் தொழிலாளிகள் அமர்ந்திருக்கும் விதத்தில் ‘கிறிஸ்துவின் கடைசி உணவு’ எனும் புராதன ஓவியத்தை பிரதிபலிக்க வைத்த மானுடத் துயரத்தின் தொடர்ச்சியைக் காட்டினான்.  நமது அன்றாட வாழ்வில் நாம் தவறவிடும் உண்மையை கலைஞன் அழுத்திக் காட்டியதும் நாம் அறிந்து பரவசமடைகிறோம்.  அப்பரவசமே அதை அழகுடையதாக ஆக்குகிறது.  பிரியம் தருவது அழகு. உவப்பு தருவது அழகு.  மனதின் பழக்கம் உண்மையை விரும்பாதபோது உண்மை அழகற்றதாக ஆகிவிடுகிறது.

ஆகவே நாம் நமது கேள்விக்கான பதிலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று மட்டும் கூறிவிடுகிறேன்.  நமது மரபில் ‘சத்யம்-சிவம்-சுந்தரம்’ என்று ஒரு விஷயத்தின் மூன்று முகங்களாகவே உண்மையையும், நன்மையையும் அழகையும் காண்கிறோம்.  இங்கு உண்மை என்பது என்ன?  எது மறுக்கப்பட முடியாததோ அது உண்மை (Truth is that which cannot be refuted).  இந்தக் கோப்பையில் தேநீர் உள்ளது.  இது மறுக்கப்படாத உண்மை.  தேநீரும் இல்லை, கோப்பையுமில்லை.  இதுவும் மறுக்கப்பட முடியாத உண்மையே; வேறு வேறு தளத்தில்.  உண்மை என்பது நலம் தருவது.  நன்மை என்பது ஒழுங்கு.  ஒழுங்கு என்பதே லயம்.  அதுவே அழகு.  உண்மையும் அழகும் பிரதிபாகங்கள் (Concepts).  எஞ்சுவது சிவம்.  அதாவது லயம்.  நாம் அறிவது அதை மட்டுமே.  முழுக்க அறிய முடியாத மகத்தான இசைவையே.  நம் மனதை மீறிய முழுமையையே.  எல்லா விஞ்ஞானங்களுக்கும் அடிப்படையானது அது அளிக்கும் வியப்பே.  அங்கிருந்து தொடங்குவோம்.

நேர்காணல் – 6

Standard

4.2.1996

காலையில் எட்டுமணிக்கு யதி நடக்கக் கிளம்புவதை ஒரு பிரம்மசாரி தட்டி எழுப்பிச் சொன்னார்.  அவசரமாக முகம் மட்டும் கழுவிவிட்டு ஓடிச்சென்றோம்.  கோட்டும் தொப்பியும் கைத்தடியுமாக யதி நின்று கொண்டிருந்தார்.  யதி காலை ஐந்துமணிக்கு எழுந்திருப்பார்.  இசை கேட்பார்.  பிறகு தியானம்.  பிறகு கடிதங்கள்.  குருகுல முகப்பில் பெரிய சைப்ரஸ் மரங்களின் இலைகளில் பனித்துளிகள் மணிகள் போல ஒளிவிட்டன.  கிழக்குப் பக்கமாகத் திரும்பி நடந்தார்.  எதிரே வரும் குழந்தைகள் ‘குரு’ என்று கீச்சுக் குரலில் கூவியபடி ஓடிவந்தன.  பெயர்களைக் கூறிச் சிரித்தபடி நடந்தார்.  சிவப்புநிற திரவத்தில் மிதப்பதுபோல கிழக்கே சூரியன்.  யதி உதயத்தைப் பார்த்தபடி நின்றார்.  முகமும் தாடியும் கண்ணாடிச் சில்லும் சிவப்பாக ஒளிவிட்டன.

வழக்கமாக துறவிகள் கலையிலக்கியங்களை இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றனர்.  உலகப்பற்று, போகம் சார்ந்தவை என்று அவற்றைக் கருதுபவர்களும் உண்டு.  உங்களுக்கு இவற்றில் உள்ள தீவிரமான ஈடுபாட்டிற்கு என்ன காரணம்?

துறவிகளைப் பற்றிய இந்த மனப்பதிவே தவறானதுதான்.  துறவிகளைச் சுற்றியுள்ளவர்கள் அப்படிப்பட்ட ஒரு சித்திரத்தை உருவாக்கி விடுகிறார்கள்.  விரக்தியும் நிராகரிப்பும் நிரம்பிய இறுக்கமான மனிதராக ஒரு துறவியைக் காட்டுவது அவரை மையமாக்கி நிறுவனத்தைக் கட்டியெழுப்ப உதவியாக உள்ளது.  நகைச்சுவை உணர்வு மிகுந்த காந்திஜிகூட நமக்கு ஒரு அழுமூஞ்சி வடிவம்தானே?  ராமகிருஷ்ணரும், அரவிந்தரும், ரமணரும், நாராயண குருவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்.  ஆழ்ந்த கலைத்தேர்ச்சியும் இலக்கிய ரசனையும் உடையவர்கள்.

கலை என்றால் என்ன?

கலை என்று இரு ஒலிகள்.  இரு கேள்விகள் அவை.  ‘இது எங்கிருந்து வந்தது?’ ‘இது எங்கு லயிக்கிறது?’ கலை என்பது இவ்விரு கேள்விகளின் இடையேயான ஒரு வியப்பு.  கலை என்ற சொல்லை ‘அடையாளம்’ என்று அர்த்தப்படுத்துவதுண்டு.  ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்துக் காட்டும் பொருட்டு, தரப்படும் அடையாளம் அது.  அன்றாட வாழ்வில் ஒன்றை அடையாளப்படுத்தும் பொருட்டு ஒரு புள்ளியை வைப்போம்.  அதை விரிவடையச் செய்து ஓவியமாக மாற்றலாம்.  குறியீட்டுத்தன்மையை அளித்து கவிதையாக மாற்றலாம்.  பொதுமையிலிருந்து தனித்துவத்தைப் பிரித்தறியும் அடையாளம்தான் அது.  இவ்வாறு இலக்கணம் உருவாகிறது.  ஒன்றைப் பிறிதிலிருந்து பிரித்துக்காட்டுவதே இலக்கணம்.  இலக்கணங்கள் விதிமுறைகள்.  கலை மாறிக்கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு.

அறிதல் எனும் செயல் நடக்கும்போது இரு அமைப்புகள் பரஸ்பரம் உரசுகின்றன.  ஒன்று அகம், இன்னொன்று புறம்.  இவற்றின் கலவையே அனுபவம் என்பது.  இரு உலகுகளுக்கு நடுவே இவற்றின் கலவையாக உள்ளது உயிர்.  புது அனுபவம் ஒவ்வொன்றும் அதை பீதியடையச் செய்கிறது.  மேனாட்டு உளவியலில் இதற்கு உள நிகழ்வு (psychic phenomenon) என்று பெயர்.  நம் மரபில் அதை நாம் அந்தகரண விருத்தி என்கிறோம்.  எந்த அனுபவமும் முதலில் துன்பத்தையே தருகிறது.  சிறு குழந்தைகளை கவனித்தால் இது தெரியும்.  அனுபவம் என்பது ஒருவித சமன்குலைவு என்பதே இதற்குக் காரணம்.  தொடர்ந்து அனுபவம் நிகழ்ந்தால் அதை உயிர் ‘அறிகிறது’.  பின்பு துன்பமில்லை.  மெல்ல அதுவே இன்பமாகிறது.  இவ்வாறு அனுபவத்தை ‘அறிய’ மனிதன் மூன்று அமைப்புகளை உருவாக்கியுள்ளான்.  கலை, விஞ்ஞானம், ஆன்மீகம்.  இவ்வமைப்புகள் மூலம் மனிதன் பரஸ்பரத் தொடர்பு கொள்கிறான்.  ஞானத்தைப் பெருக்கி தொகுக்கிறான்.  இவ்வாறாக ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய குறியீட்டு மொழி உருவாகிறது.  ஆன்மீகத்தின் மொழி பிற இரண்டிலிருந்தும் சற்று மாறுபட்டது.  பெரிதும் அந்தரங்கமான, உருவக மொழி அது.  ஒவ்வொரு அனுபவத்திலும் உள்ள விளக்கமுடியாத ஆச்சரியத்திலிருந்து ஆன்மீகம் அதை அடைகிறது.  விஞ்ஞானம் ஒரு எல்லையில் திண்ணம் உடைய மொழியில் பேசுகிறது.  ஆன்மீகம் மறு எல்லையில் முற்றிலும் திண்ணமற்ற மொழியில் பேசுகிறது.  நடுவே ஒரு பாலம் போல கலை உள்ளது.

அடையாளம் மூன்று அடிப்படைகளினால் ஆனது.  பெயர், வடிவம், எண்ணிக்கை.  ஒரு பொருளுக்கும் வானத்திற்கும் இடையேயான எல்லைக்கோடே அதன் அமைப்பைத் தீர்மானிக்கும் வடிவம் ஆகும்.  அவ்வடிவத்திற்கு ஓர் ஒலியடையாளம் தரப்படும்போது அது பெயர் உடையதாகிறது.  அவை வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படும்போது அது எண்ணிக்கை.  இம்மூன்றும் பரஸ்பரம் பின்னிப் பிணைந்து நாம் காணும் இப்பிரபஞ்சத் தோற்றம் உருவாகிறது.  மேற்கத்திய மனோதத்துவ ஆய்வின்படி நாம் அறிபவை எல்லாமே அர்த்தப்படுத்தப்பட்ட சித்திரங்கள்தாம்.  இவற்றை ஜெர்மனில் Gestalt என்கிறார்கள்.  ஓர் அடையாளத்துடன் இன்னொன்றைக் கலந்தால் இரண்டும் சிக்கலாகின்றன.  இவ்வாறு சிக்கலான பல்வேறு அமைப்புகளால் நம் அறிவு கட்டப்படுகிறது.

இந்த அமைப்புகளில் எல்லாம் அடிப்படையாக ஒன்று உள்ளது.  இவற்றையெல்லாம் சார்பு நிலையில்தான் நாம் உருவகிக்கிறோம்.  ஏதோ ஒன்று மறுக்க முடியாததாக இருக்கும் நிலையிலேயே அறிதல் சாத்தியமாகிறது.  ஒரு கத்தரிக்கோல் தன்னையே வெட்டிக்கொள்ள முடியாது.  கண்களால் கண்களைப் பார்க்கமுடியாது.  அறிவின் அடிப்படையான அளவுகோல் எதுவோ அது மாறாததாகவே இருக்கும்.  மறுக்கமுடியாத ஒன்றே அளவுகோல் ஆகும்.  கலையிலக்கிய, விஞ்ஞான, தியான முறைகளின் ஊடே நாம் இந்த மறுக்க முடியாமையை உணர்கிறோம்.  ஒவ்வொரு தளத்திலும் ஒரு மாறாத அடிப்படையும், அதையொட்டி ஒரு தருக்கமும் உள்ளது.  எந்த அறிதலும் தருக்கம் வழியாக அந்த மாற்றமின்மையை வந்தடைகிறது.