Tag Archives: ஏசு

பொருள் (அர்த்தம்)

Standard

ௐ எனும் ப்ரணவத்தில் உச்சரிக்கப்படும் ஒலிகள் ‘அ, உ, ம்’ என்பவை மட்டுமே. நான்காவதாக வரும் தீர்க்கமான மெளனம் ஒலிக்கப்படும் எழுத்துக்களிலிருந்து விலகி நிற்கின்றது. அதுபோலவே வாழ்நோக்கங்களில் (புருஷார்த்தங்கள்) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றும் ஒன்றாய் நிற்பவை. வீடுபேறு (மோட்சம்) தனியாய் நிற்கும். இருப்பு, நனவு, இனிமை (அஸ்தி-பாதி-ப்ரியம்) என்பவை முறையே அறம் பொருள் இன்பத்தை சுட்டுகின்றன.  எல்லாவற்றிலும் உயர்ந்தது வீடுபேறுதான் (மோட்சம்). இவற்றிலெல்லாம் அடங்கியிருக்கும் ஒரு ரகசியமுண்டு. அதைக் கண்டுகொண்டோமென்றால், இறைவனும் உலகும் பிரம்மவித்தையில் நிறுவப்பட்டிருப்பது எப்படி என்பதை அறியலாம்.

பிரம்மஒலியை விரிவாக ஆராயும்போது, எல்லாவற்றிலும் அடிப்படையாய் இருக்கும் உண்மை ‘சத்’தாகவும் (நற்பொருளாகவும்), அவ்வுண்மையின் வடிவு ‘சித்’தாகவும் (அறிவாகவும்), மூலாதாரமான முடிவிலா விழுமியம் எல்லையிலா ‘ஆனந்தமா’கவும் கூறப்பட்டுள்ளதை அறியலாம்.  பிரம்மஒலியின் தொடக்கம் என்பதை அதிகரித்தல் என்ற பொருளிலேயே கொள்ளவேண்டும்.  அதிகரித்தல் அருகச்செய்தல் எல்லாம் இருத்தலிய நோக்கில் மட்டுமே உண்டு.  பிரம்மஒலியைக் கொண்டு முழுமெய்மையை துலங்கச் செய்யமுடியும்.

அறுபடாமல் வளரும் காலம் மற்றும் இடத்தின்  ஒற்றுமையை, நவீன அறிவியலாளரான ஹென்டர்சன் போன்றவர்கள், கடிகாரத்தின் ‘டிக்டிக்’ ஒலி வெளிப்படுத்தும் காலவிரிவு மற்றும் நீராவியின் துளிகள் ஒன்றுகூடி வான் நிறைக்கும் மேகம் ஆகியவற்றைக் கொண்டு விளக்குகின்றனர். அதுபோலவே, உலகம் என்பதை ஒவ்வொரு உயிரினமும் தன் காதில் வந்து விழும் முதல் ஒலி, உடலில் நிகழும் முதல்தொடுகை, கண்ணில் விழும் ஒளிக்கற்றை, உமிழ்நீரில் நனைந்து நாவில் ஏறுபடும் ருசி, சுவாசிக்கும் காற்றில் கலந்துவரும் மணம் ஆகியவற்றின் மூலமே உணர்கிறது. கட்புலன் மரணம் வரை நீளும் நிகழ் உலகின் அளவற்ற  நிகழ்வாய் தொடர்கிறது.

மேலே சொன்ன ஐந்தும் விழிகள்.  விழியில் நிறைந்திருப்பதே உலகம். வடமொழியில் கண்ணை ‘அக்ஷி’ என்பர்.  முதல் எழுத்தான ‘அ’ முதல் கடைசி எழுத்தான ‘க்ஷ’ முடிய அனைத்தையும் அறிய உதவும் அறிவே அக்ஷி.

அவ்வகையில், பொருண்மைக்கூறும் நனவுக்கூறும் கலந்து நிரந்தரமாக வளரும் ஒரு வளர்ச்சி உலகில் உண்டென்று கூறலாம்.  ப்ரம்மம் இருக்கிறதென்றால் உலகும் இருக்கின்றதென்று பொருள்.  ராமானுஜரைப் போன்ற குருக்கள் உலகை இறைவனின் உடலென்றெண்ணி உலகின் இருப்பை மெய்மையாகக் கொள்கிறார்கள்.  ஒவ்வொரு அணுவிலும் மறைந்திருக்கும் ஒழுங்கையும், ஒழுங்கமைக்கும் ஆற்றலையும் ஒன்றாகக் கண்டதனால், உலகைக் காக்கும் கடவுளை

என்றும் வெற்றி கொள்ளட்டும்
வேதங்கள் தேடிய உன் பாதங்கள்
[ஜகதீஶ ஜயிக்க ஶாஶ்வதம்
நிகமம் தேடின நின் பதாம்புஜம்]

என்று இறைஞ்சும்போது, இப்பிரபஞ்ச அமைப்பின் தோற்றமாய் இருந்து அனைத்திலும் ஒத்திசைவை ஏற்படுத்தும் தத்துவச்சிறப்பே உலகமைப்பவன் என்று சொல்லப்படுகின்றது.

இந்தியர்களின் மிகச்சிறந்த ஞானச்செல்வம் ஶ்ருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் நிறைந்துள்ளது.  கேட்கப்படுவது ஶ்ருதி; நினைவில்கொண்டு செய்யப்படுவது ஸ்மிருதி. நான்மறைகளின் ஆகச்சிறந்த பயனாக உபநிடதங்கள் வேதங்களின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.  அந்த உபநிடதங்களை வேதாந்தம் என்கிறோம். வேதவேதாந்தங்களில் வேதாந்தமாய் இருக்கும் உபநிடதங்களை – வேதத்தின் முழுமையான உண்மையாகக் கருதப்படும் அப்பிரிவை – உத்தரமீமாம்சம் என்பர். சடங்குகளைப்பற்றிப் பேசும் வேதப்பகுதிகளை பூர்வமீமாம்சம் என்ற பெயரில் தொகுத்திருக்கிறார் ஜைமினி.  ஜைமினியின் உரையை பொதுவாக மீமாம்சம் என்றும் சிறப்பித்துக் கூறும்போது பூர்வமீமாம்சம் என்றும் கூறுவர்.  அனல்வளர்க்கும் இல்லறத்தவர்களுக்கு (அக்னிஹோத்ரிகள்) பூர்வமீமாம்சம் மிக முக்கியமானது. ஏனெனில், அவர்கள் ஆற்றவேண்டிய சடங்குகளுக்கான விதிகளைக் கூறுகிறது அது. யாஸ்கனின் நிருக்தத்தையும் ஶபரஸ்வாமியின் வேதபாஷ்யத்தையும் ஓதி உணர்ந்தால் மட்டுமே சடங்குகளுக்கான விதிகளை குறைவற அறியமுடியும்.  நான்கு அறங்களில் அறம் பொருள் இன்பம் ஆகியவை கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளன.  வீடுபேறு என்பது உபநிடதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பேருண்மை.

எதைக் கற்பதென்றாலும் மூன்று விஷயங்களை அறிந்திருக்க வேண்டும்.  கற்கப் போவது எதை? எப்பலனை எதிர்நோக்கி கற்கப்போகிறோம்? கற்கத் தேர்ந்தெடுத்த பொருளை எவ்வழியில் பயன்படுத்தப்போகிறோம்?  அது மட்டுமல்லாமல், கற்கும் பொருளுக்கும் அதன் பயன்பாட்டுக்குமான தொடர்பையும் அறியவேண்டும்.  இச்செயல்களெல்லாம் வாழ்வின் மிக ஆழத்திலுள்ள பொருளை முதன்மைப்படுத்துவதென்பதை கற்பவன் அறியவேண்டும்.  இங்கு கூறப்படுவது – வெறும் அறிவல்ல – கற்பவனுக்குத் தேவையான தகுதி.  ஒரு குருவை அண்டி கற்கச் செல்லும்போது இம்மூன்றுக்கும் குருவின் ஒப்புதலைப் பெறவேண்டியது மாணவனின் கடமை. தேர்ந்தெடுத்த பொருளைக் கற்பதற்கான தன் தகுதி, அதைக் கற்க தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தல், கல்வியால் ஏற்படும் பலன் என்று எதைக் கருதுகிறோம், என்ன பலனை எதிர்நோக்குகிறோம் என்பதையும் மாணவன் உணர்ந்திருக்க வேண்டும்.

உலகில் பலரும் உடலுண்மைக்கே சிறப்பிடம் அளித்து வாழ்கின்றனர். அவர்களூடையது உலகியல் வழி (லௌகீகம்). உலகியலில் அறமும், பொருளும், இன்பமும் முதலிடம் பெறுபவை.  இவ்வழியைப் பின்பற்றுபவர் எவரும், தம் மொத்த வாழ்நாளைக்கொண்டும் கூட, அனைத்திலும் சிறந்ததான வீடுபேற்றை அடைவதில்லை.  அவர்கள் உலகியலில் தோய்ந்தவர்கள். சத்வரஜதமோ குணங்களைக் கொண்ட உலகு, இயல்பில் இன்பதுன்பங்களை ஒருங்கே கொண்டது.  அதனால் உடலியலையும், உயிரியிலையும், உலகியல் அறிவு, அதிகாரம், நுகர்வு ஆகியவற்றையும் முதன்மையாகக் கருதி வாழ்பவர்களுக்கு புலனின்பங்களே முக்கியம். அவர்களுக்கு ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என எல்லாமே இன்பதுன்பங்களின் அடிப்படையில் அமைபவை.  இன்பத்தை அடையவும் துன்பத்திலிருந்து மீளவும் மட்டுமே அவர்கள் சொல், செயல், கலவி, கழிவகற்றல் என்பவற்றை தினப்படி செய்கின்றனர்.

சம்சாரம் என்றழைக்கப்படும் உலகியல் வாழ்வில் உலவுவதை தூமமார்க்கம் என்பர். புகை வாழ்க்கை என்பது பொருள்.  புகைமறைவில் வாழும் அவர்களுக்கு உண்மையில் முன்னேற்றம் என ஏதுமில்லை.  வாழ்வின் கடைசி தருணத்தில்தான் துன்பத்திற்குக் காரணமான செயல்களை விட்டொழிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் அறியத்தொடங்குகின்றனர்.  துன்பம் கலக்காத ஆன்மீக இன்பத்தை நாடுவதற்கான வழிகளை தேடிக்கண்டடைகின்றனர்.  இயற்பியலில் இருந்து விலகி, மெய்யறிவில் கரைகடந்தவர்களின் பண்பை அடையவிரும்பி அத்தகையோரை குருவாகப் பெறுவதில் நாட்டம் கொள்கின்றனர்.  பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடவும் பிறப்பறுக்கும் அறிவு பெறவும் விழைகின்றனர்.  பிறப்பறுக்கும் அறிவென்பது மெய்யறிவு – அதுவே இறையறிவு (பிரம்மஞானம்).

இதுவரை கூறியவற்றிலிருந்து, வாழ்விற்கு ஒருவன் அளிக்கக் கூடிய பொருள் என்னவாக இருக்கமுடியுமென்று நாம் ஓரளவு ஊகிக்கலாம்.  பிறப்பு முதல் இளமைப்பருவம் வரை, தூமமார்க்கத்தைச் சார்ந்திருக்கும் அம்மையப்பனோடு வாழ வேண்டியிருக்கும் மக்களால், உலகப்பிணைப்பை புகைமறைவிலேயே காணமுடிகிறது. அதனால், முன்னால் போகும் பசுவைப் பின்தொடரும் பசுக்களைப் போல, இயல்பாக நாம் போய்ச் சேர்வதும் இல்லறத்தின் தூமமார்க்கத்தில்தான்.  நம் வாழ்நெறி, உணவு, உலகியல் என எல்லாம் அதனுடன் இணங்கியதாயிருக்கும் வகையில் நாம் செய்து வைத்திருக்கிறோம்.  வாழ்வின் உண்மைப்பயன் என்பதை அறியாமல் உடல்சார் தேவைகளை நிறைவு செய்ய மட்டும் உதவுவதை ஈட்டுவதில் நாம் முழுவதுமாக ஈடுபட்டிருக்கிறோம்.

உடல் வலிமை கொண்டவன், வலுவற்றவனைத் துன்புறுத்தி தன் கட்டுக்குள் வைத்திருப்பதைக் காணும்போது, நாம் நாடவேண்டியது உடல் வலிமையையே என்று பலரும் நினைக்கின்றனர்.  உணவே மனிதனின் அடிப்படைத் தேவை.  ஆகவே அதிக உணவை ஈட்டுபவனே செல்வந்தன் என்று கருதுவது இயல்பே.  (தான்யமுள்ளவன் தனவான்)  நுகர்வுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இயந்திரங்களும் பெருகும்போது உலகியல் ரீதியான செல்வமும் பெருகுகிறது.  எனவே, நிலஉடைமையும், நிறுவனங்களின் உடைமையும் பெற உதவும் வழிகளையே உலகியலோர் தேடுகின்றனர்.  நாளடைவில் பயன்மதிப்பை பண்டமாற்று மதிப்பாக்குவதற்கென பணம் என்பதை கண்டுபிடித்தனர் உலகியலோர்.  அதற்கு அடிப்படையாக பொன்னை வைத்துக் கொள்வதெனக் கற்றனர்.  இன்று ஒருவன் மருத்துவத்தில் சிறந்தவனாக விளங்கவேண்டும் என நினைப்பது சக உயிரிகளின் துன்பம் போக்குவதற்கென்ற, பண்டுமுதல் இருந்து வரும், பயன்மதிப்புக்காக அல்ல. பண்டமாற்று மதிப்பு கொண்ட பணத்தை நோயாளிகளிடமிருந்து பறிப்பதற்கே.  மனிதனின் உடலுழைப்பைக் குறைக்கவேண்டி அற்வியல் ரீதியில் வாழ்விற்குதவும் பொருட்களைத் தயாரிக்க உதவும் பொறியியல் என்பது பயன்மதிப்பு கொண்டதாயிருந்தது.  இன்று பொறியியல் கல்வி, மிகப்பெரிய அளவிலான சமூகப் பயன்பாடு என்ற பேரில், ஒப்பந்தக்காரர்கள் முதல் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் வரை மக்களைச் சுரண்டுவதற்கான பண்டமாற்று மதிப்பையே தருகிறது.  எல்லோருக்கும் நீதி கிடைக்கவேண்டுமென்ற நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கும் ஜனநாயகம், மக்களாட்சி என்பவையெல்லாம் அரசியல் என்னும் பேரில் வெறும் ஏமாற்று வேலையாகிப்போனது. சிறுபான்மை, பெரும்பான்மை என்றெல்லாம் இல்லாத ஒன்றை நடித்து ஆளும்கட்சிகளாகிவிடுவது பயன்மதிப்பை சவைத்துத் துப்பும் பண்டமாற்றுமதிப்பிற்கு எடுத்துக்காட்டு.   உற்பத்தியாளன், விவசாயி என்ற மதிப்பெல்லாம் யாருக்கும் தேவையில்லை. பண்டமாற்று மதிப்புள்ள பணம் தன் கணக்கில் சேர்ந்தால் போதும் என்றெண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியாளன் பூமியை விளைநிலமாக்கி உணவு முதலான அடிப்படைச் செல்வங்களை ஈட்டுகிறான்.  இயந்திரங்கள் மானுட அறிவுடன் இணைந்து மனிதனின் உடல் வருத்தத்தைப் போக்க உதவுகின்றன. எல்லா பயன்மதிப்புகளையும் பண்டமாற்று மதிப்புகளாக மாற்றும் அதிநவீன பொருளியல் என்னும் புதிய சுரண்டல் உலகம் முழுவதும் மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது.  நவீனக்கல்வி இதற்காகவே உருவாகியிருக்கிறது.  பஞ்சு, கம்பளி, எண்ணெய்கள், உப்புகள், மரம் இவற்றையெல்லாம் இயற்கையிலிருந்து எடுத்து பயன்படுத்த அதிக மனித முயற்சி தேவைப்படுகிறது.   மனித முயற்சி என்பது அவனிலிருக்கும் உடலாற்றலில் இருந்து பிழிந்தெடுக்க வேண்டியது. அதனால், அறிவின்மையாலும், மூட நம்பிக்கையாலும், அச்சத்தாலும் தளர்ந்திருக்கும் ஒரு மக்கள்திரள் எப்போதும் எந்தச் சலுகையுமில்லாத அடிமை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.  மனிதனை பயன்படுபொருளாக்கி, மனிதனை மனிதன் விலைபேசும் பண்டமாற்று முறைக்கு இது பெரும் வசதியாக இருக்கிறது.  இன்று செயல்திறன் கொண்ட தொழிலாளியின் பணி ஒரு நுகர்வுப்பொருளாக ஆகியிருக்கிறது.

ஒரு நவீன வணிகன் நியூயார்க்கிலோ, மன்செஸ்டரிலோ, டோக்கியோவிலோ, ஆம்ஸ்டர்டாமிலோ, ஹைடன்பெர்கிலோ, ம்யூனிக்கிலோ இருந்துகொண்டு கணினிமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மாற்றங்கள் செய்யும் நிலை இன்று இருக்கிறது.  கணினி உதவியுடன் உலகத்தின் நாணயமதிப்பில் புதிய புரட்சிகளை அவனால் நிகழ்த்த முடியும்.  பணம் விதைத்து பணம் அறுப்பவர்கள் வணிகர்கள்.

ஏசு சொன்ன விவசாயி அல்ல இன்றைய விவசாயி.  விவசாயி வட்டிப்பணக்காரன் ஆவதைக் கண்டுதான் ஏசு ஜெருசலேம் தேவாலயத்தில் ஏறி ‘செல் வெளியே!’ என்று சாட்டையாலடித்து விரட்டினார்.  இன்றைய பெரும் வணிகவளாகங்கள் எல்லாம் ஜெருசலேம் தேவாலயத்தை விட கொடியதான வட்டிப்பண மையங்கள்.

அச்சமூட்டும் ஒரு நீர்வாழ் உயிரினம் நீராளி (Octopus).  கொடிகள் போன்ற அதன் கால்களைப் பயன்படுத்தி எட்டு திசைகளிலும் அதனால் செல்லமுடியும்.  பெரும் நீர்ப்பரப்பை அது தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க முடியும்.  அது போன்ற ஒன்றுதான்  மனிதன் கண்டுபிடித்த வங்கி என்பது.  சிறிய நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு பெரிய நாட்டு வங்கிகள் பணத்தை கடனாகக் கொடுத்து வட்டி வாங்கும்.  அவற்றைவிடப் பெரிய நாடுகள் இடைப்பட்ட நாடுகளுக்கு கடன் கொடுக்கும்.

தொடக்கத்தில் பணம் என்றால் பொன் என்றே பொருள்.  பொன் போய் நாணயம் வந்தது. பின்னர் நாணயம் கரன்சி தாளானது.  கரன்சி போய் ‘I promise you’ என்ற வாக்கு மட்டுமானது. இப்போது அதுவும் இல்லாமல் சட்டைப்பையில் போட்டுச் செல்லக்கூடிய ப்ளாஸ்டிக் அட்டையாகிப் போனது பணம்.  அதாவது வாழ்வின் பொருள் என்பது பணம் தொடர்பான ஒரு வாக்கு மட்டுமே என சுருங்கியிருக்கிறது.  அந்த வாக்கு மெய்யானதா என்று உணர்ந்தறிய முயற்சிக்கும்போது வாழ்விற்கு பொருள் கிடைக்கிறது.

இவ்வாறாக, நவீன உலகியல் வாழ்வு பணமே எல்லாம் என்ற நம்பிக்கையில் அமைந்திருக்கிறது.  ஒரு நாட்டின் அறத்தை நிலைநிறுத்துவதற்கு, மக்களால் தங்களது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருக்கும் ஒருவர் தன் கட்டிலின்கீழ் அரசுக்கருவூலத்தின் பணத்தை I promise you என்றெழுதியிருக்கும் கோடானுகோடி தாள்களாக்கி பதுக்கி வைத்துக்கொண்டே அரசை நடத்திச்செல்லும் பதவியிலும் இருப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை என்பதை இப்போது நாம் காண்கிறோம்.

பொருள் என்பது அதர்மத்திற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகியல் வாழ்வின் கூட்டுக்குள் மூழ்கிய மக்களின் காமமும் வெறியுமே பொருளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நாட்டில் மானுடப்பிறவியின் உயர்ந்த இலக்கு என்ற இடத்தை இன்று மோசமான துரோகம் கைப்பற்றியிருக்கிறது.

அன்னியர்களின் ஆதிக்கத்தில் பிரமித்து, நாம் நம்மிடமிருந்த அனைத்து உன்னதங்களையும் தூர எறிந்துவிட்டோம். மாலைப்பொழுதுகளில் மங்கள தீபங்களை ஏற்றி வைத்து ஒளிநிறைத்து இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டிருந்தது போக, இன்று மாளிகைகளை எழுப்பி மின்விளக்கின் கண்கூசும் ஒளியில் மதுவிலும் போதைப் பொருட்களிலும் திளைக்கும் கலாச்சாரத்தை அடைந்துள்ளோம்.  வாழ்வின் பொருள் என்பது போய், அது பொருளற்றதாகியிருக்கிறது.  இது எவ்வாறு நிகழ்ந்தது.  இதை நாம் தொடக்கத்திலிருந்து கவனிக்க வேண்டும்.  அறம்பொருளின்பத்தில் இன்பத்தின் அபாயகரமான ஈர்ப்பை நாம் அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.  எனவே, இனி இன்பத்தைப் பற்றி பேசுவோம்.

~~~

‘விடுதலைக்கான சமூகவியல்’ (ஒரு விமோசன சாமூஹ்ய ஶாஸ்த்ரம்)  என்னும் நூலில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்க்கைப் பேறுகளைப் (புருஷார்த்தங்களை) பற்றிப் பேசுகிறார் குரு.  அதில் “அர்த்தம்” என்னும் தலைப்பிலான கட்டுரை.

விடுதலையின் மெய்யியல்

Standard

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியின் விளைவாகவே எதனுடைய தொடக்கமும் நிகழ்கிறது.  ‘அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?’ என்ற நம்முடைய கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய் சந்தர்ப்பம் எந்த நேரத்திலும் வாய்க்கலாம்.  இந்தக் கேள்வி பலரை குழப்பமடையச் செய்கிறது.  இந்தக் கேள்வியை முகங்கொள்ளும்போது, தீர்க்கப்படவேண்டிய எண்ணற்ற பிரச்சினைகளையும், சந்திக்க வேண்டிய நெருக்கடிகளையும், எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளையும் சிலர் அனுபவிக்கிறார்கள்.  மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்; ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து ஒரு உறுதியற்ற உணர்வால் அவர்களுடைய இயலாமையின் முடிவற்ற படுபாதாளத்தில் அவர்கள் மூழ்கிப்போகிறார்கள்.  ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்குத் தகுந்த விடைதேடி அவர்கள் மணிக்கணக்கில் அல்லது நாள் கணக்கில் உட்கார்ந்திருக்கக் கூடும்.

மனித உணர்வுநிலை ஒரு நீர்க்கோட்டைப் போன்றது; ஓர் ஓடையைப் போன்றது.  ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான செயலை ஒரு நபர் செய்யாதபோது மேலும் மேலும் எண்ணங்கள் ஒன்றுகூடி அந்த நபரின் குழப்பம் இயக்கமற்ற தேங்கிப்போதலில் முடியும்.  சிந்தனைத் தேக்கம் விரிந்து பெருகும் நிச்சயமற்ற தன்மையை விளைவிக்கிறது.  அது கிடைமட்டப் பரப்பை மட்டும் அல்லாமல், கணந்தோறும் அதிகரிக்கும் இருளின் ஆழத்தையும் கொண்டிருக்கும்.  இதன் தொடர்ச்சியாக மன அழுத்தம் வருகிறது.  மன அழுத்தத்துக்கு ஆளான் நபர் எண்ணெயிலோ அல்லது அடர்த்தியான தேன்பாகிலோ விழுந்துவிட்ட ஒரு ஈக்கு ஒப்பானவர்.  எண்ணெயும் தேனும் அவையளவில் ஆபத்தில்லாதவைதான்; ஆனால், அப்படிப்பட்ட பொருளில் ஒரு ஈ விழுந்துவிடும்போது அதனுடைய சிறகுகள் ஊறி நனைந்து போவதால் மேலே எழ முடியாது.

‘மாண்டூக உபநிடதம்’ என்று அழைக்கப்படும் விடுதலை பற்றிய உபநிடதம் ஒன்று உள்ளது.  அதில் தவளை (மாண்டூகம்) கட்டுண்டிருத்தலுக்கும் விடுதலைக்குமான உருவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.  ஒரு தவளை முட்டைகள் இடும்போது, ஒவ்வொரு முட்டையும் அடுத்த முட்டையோடு இணைந்தே இருக்கும்.  வாழ்வதற்காகப் பிறந்த முட்டை தன்னுடைய அண்டை முட்டைகளோடு ஏற்படும் பிணைப்பால் ஏற்கனவே சிறைப்பட்டுள்ளது.  முட்டையிலிருந்து வாழத் தகுதி பெற தவளையை யார் விடுவிப்பார்கள்?  அடுத்தவர் வாழ்வும் மேன்மை பெற உதவுவது தங்கள் கடமை என்ற ரீதியிலேயே மனிதர்கள் எப்போதும் சிந்திக்கிறார்கள்.  இயற்கையிலிருந்து நாம் பெறுவது இந்த வகையான பாடம் அல்ல.  ஒரு விதை முளைவிடும்போது, தோட்டத்திலுள்ள வெறெந்தச் செடியோ, மரமோ புதிதாக அரும்பும் செடியைப் பேணி வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.  தன் வழியில் வரும் எவ்வகையான தடையிலிருந்தும் தன்னைத் தானே காத்துக்கொள்வதும், விடுதலை செய்துகொள்வதும் முழுக்க முழுக்க அந்த உயிரின் சொந்தக் கடமையாகும்.  விநாயகர் சிலைக்கு முன்னால் தேங்காய் உடைத்து தன்னுடைய விடுதலைக்காக எந்தத் தாவரமும் பிரார்த்திப்பதில்லை.

சில சமயங்களில் முளைவிடும் விதையின் மீது ஒரு பெரிய பாறை ஒன்று உட்கார்ந்திருக்கலாம்.  ஆனால் அது இருளில் அமர்ந்தபடி தன் விடுதலை பற்றிய கனவை கண்டுகொண்டிருக்கிறது.  தன்னுடைய முதல் இலையை இறுகப் பற்றிக்கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து வரும் மங்கலான ஒளியை வழிகாட்டியாகக்கொண்டு அது பாறையின் அடியிலிருந்து ரகசியமாகவும் மெதுவாகவும் வெளியே வர முயல்கிறது.  இறுதியில் தன் தலையை வெளியே கொண்டுவருகிறது.  அது தன்னை விடுவித்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டது.  வெளியேறும் வழியைக் கண்டறிய நம்மால் இயலாது என்று நாம் நினைக்கக்கூடாது.  கருப்பையின் இருண்ட அறையில் சிறைப்பட்டிருந்த நாம் நம்பிக்கையுடன் நம்முடைய வலிமையைத் திரட்டி, நம்முடைய பல்வேறு புலன் நுட்பங்களுக்கு உருக்கொடுத்து, ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குப் பிறகு கருவறைச் சுவர்களை உதைத்துக்கொண்டிருந்ததை நாம் மறந்து போயிருக்கலாம்.  பிரார்த்தனை செய்துகொள்ள கடவுளும் இல்லை, பிரார்த்தனை செய்ய வார்தைகளும் அப்போது நமக்கு இல்லை.  ஆனால், நமக்கு விடுதலை தேவைப்பட்டது.  தொப்புள் கொடியின் மூலம் நம் தாயின் சுவாசமே நமக்கு உணவாயிற்று; அதிர்ஷ்டவசமாக, கருப்பையிலிருந்து வெளியே வர நம்மைச் சூழ்ந்திருந்த பனிக்குட நீர்ப்பரப்பு உதவியது.  யாரையும் சாராமல் ஒரு சிறு விதைக்கன்று முதல் வளரும் சிசு வரை எல்லோருமே விடுதலையைத் தேடுகிறார்கள்.  சூழலில் உள்ள எல்லா ஆற்றல்களும் ஒரு பரிவிரக்கத்தோடு விடுதலையை செயல்படுத்துகின்றன.

நம்முடைய பிறப்புடன் நம் முழு வாழ்வின் விடுதலையும் முடிவடைந்து விடுகிறது.  மத நம்பிக்கை உள்ள ஒரு நபரின் குடும்பத்தில் பிறப்பது வேதனைக்குரியது.  கோயில் மணி ஒலிக்கிறது; மாதா கோயில் மணி முழங்குகிறது; மசூதியிலிருந்து சமயவாதிகளின் அழைப்பு வருகிறது; குழந்தையின் நெற்றியில் குறியிட யூதக்கோவில் அல்லது சீக்கியக் கோவில் அல்லது புத்த மடம்.  அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்து மேரி என்றோ தாமஸ் என்றோ பெயரிட்டுவிட்டால் கிறிஸ்தவ மதத்தின் தாங்க முடியாத சுமையை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கழுத்தில் சுமக்க வேண்டி வருகிறது.  இன்னொரு குடும்பத்தில் அந்தக் குழந்தை ராமனாகவோ, சீதையாகவோ இருக்கலாம்.  இந்தப் பெயர்களிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.  இந்து மரபோடு அவர்கள் கட்டுண்டு போவார்கள்.  முஸ்லீம் குழந்தைகள் தூக்கிக் திரியும் பெரும் சுமைகளாக முகம்மது அல்லது ஆமினா என்ற பெயர்கள் இருக்கலாம்.  புனித ஜான் சொல்கிறார், “தொடக்கத்தில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தையே கடவுள்.”  ஆனால், மத அடிப்படைவாதத்தில் ஏவல் ஆணைகளாக அந்த வார்த்தை மாறுகிறது.  பிறந்த குழந்தை அதை சிலுவையாகச் சுமக்க வேண்டிவருகிறது.  இவ்வாறாக பிறந்த கணத்தில் தொடங்கும் அடிமைத்தனம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.

தவளை முட்டைகள் குஞ்சு பொரிக்கும்போது தலைப்பிரட்டைகள் வெளிவருகின்றன; அவை மேல்நோக்கியும் கீழ்நோக்கியும், பக்கவாட்டிலுமாக சுதந்திரமாக நீந்துகின்றன.  தலைப்பிரட்டைகளிடம் காணப்படுவதைப்போல சமூக இணக்கம் அத்தனை பிணைப்புடன் வேறு எந்தப் பிறவிகளிடமும் இல்லை.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவை ஏதோ ஒரே உடல்போல் வாரக்கணக்கில் ஒன்றாகவே சுற்றித்திரியும்.  தலைப்பிரட்டைகளைப் பற்றிச் சொல்வது மனித குடும்பங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கும் பொருந்தும்.  நேசம், வெறுப்பு என்ற மனப்பான்மைகளின் பிரத்தியேக பசையால் உங்களுடைய குடும்பத்தின் அல்லது இனக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் உங்கள் மீது ஒட்டப்பட்டுள்ளார்கள்.  குடும்ப வட்டாரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய சகோதர சகோதரிகளிடம் அக்கறை காட்டுகிறீர்களோ அந்த் அளவுக்கு நீங்கள் வெறுக்கப்படுவீர்கள்.  எந்த அளவுக்கு விலக விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு அன்பின் பெயரால் உங்கள்மீது அவர்கள் தொற்றிக்கொள்கிறார்கள்.  வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது.  அப்போதுதான் விடுதலை தேவைப்படுகிறது.

யார் உங்களை இப்போது விடுவிப்பார்கள்?  மதவாதிகள் உங்களைச் சுற்றி உட்கார்ந்து விடுதலைக்காக பிரார்த்திப்பார்கள்; விடுதலை பற்றிய அவர்களுடைய விளக்கமோ கோரமாக இருக்கிறது.  பயமுறுத்தி மக்களை அடிமைத்தனத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும், ஆன்ம பலவீனத்துக்கும் ஆட்படுத்துவது மதத்தின் கடவுளே.  நீட்ஷே இதைச் சொன்னபோது அவரை பைத்தியக்காரன் என்று அழைத்தார்கள்.  எல்லா பொறாமையை விடவும் அதிக பொறாமை நிரம்பியவரும், கோபக் கடவுளுமான ஜெஹோவாவிடமிருந்து மக்களை விடுவிக்க ஏசு முயன்ற போது, யூதத் தலைமை குருக்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.  சிலுவையில் அறையப்பட்டது ஏசு மட்டுமல்ல, விடுதலை பற்றிய மலைப் பிரசங்கமும்தான்.  புதிய குருமார்கள் ஏசுவைக்கொண்டு ஒரு புதிய பிசாசைப் படைத்தார்கள்; அது ஒரு பயமுறுத்தும் பிசாசு.  உங்களுடைய பாவத்தின் நாற்றமடிக்கும் சவத்தை அது உங்கள் முன்னால் எப்போதும் பிடித்துக்கொண்டு, நீங்கள் தெய்வீகம் அற்றவரென்றும், நீங்கள் தூய்மையற்றவரென்றும், அதெ ஜெஹோவாவின் முன்னால் விசாரணைக்கு நிற்கும் ஒரு பாவி என்றும் உங்களுடைய காதில் கிசுகிசுக்கும்.  ஏசுவை அவர்கள் இன்னொரு ஜெஹோவாவாக மாற்றிவிட்டார்கள்.

அண்மையில் ஓர் இளம் பாதிரி என்னிடம் வந்தார்; சுதந்திரமும், வெளிப்படை உணர்வும், அன்பும் உடையவராயிருந்தார்.  புனித திருச்சபையின் பதின்மூன்று ஆண்டுகால மூளைச் சலவையையும் மீறி அவரால் இன்னும் உண்மையைப் பேச முடிந்தது.  “பாவமன்னிப்பு கோருபவர்களை கேட்பவராக எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?” என்று அவரைக் கேட்டேன்.  “இருந்திருக்கிறேன்” என்றார் அவர்.  “எதற்கெல்லாம் மக்கள் உங்களிடம் பாவமன்னிப்பு கேட்பார்கள்?”  “கொடிய பாவங்களுக்காக”  “உதாரணமாக…?”  “இன்னொருவனின் உயிரைப் பறிக்க சதி செய்தல், பிறன்மனை நயத்தல், தடை விதிக்கப்பட்ட உறவினரிடையே புணர்ச்சி, அநேகமாக அன்றாடம் இழைக்கும் நம்பிக்கை துரோகம் போன்றவற்றிற்காக..”  “அவர்கள் பாவங்களை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”  “அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறேன்.”  “எப்படி?”  “அவர்களுக்காக இப்படி பிரார்த்திப்பேன்.  புனிதத் திருச்சபை எனக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தால் பாவம் நிரம்பிய உங்களுடைய தீய நோக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கிறேன்.”  “உங்களுக்குக் கொடுப்பதற்காக அந்த அதிகாரத்தை திருச்சபை எங்கிருந்து பெறுகிறது?”  “ஏசு அந்த அதிகாரத்தை திருச்சபைக்குக் கொடுத்தார்.”  “ஏசு கிறிஸ்துவின் காலத்தில் திருச்சபை இருந்ததா?”  “இல்லை.  ஆனால், அதன்பிறகு அது நிறுவப்பட்டது.”  “எனவே நீங்கள் விடுவித்த பிறகு பாவி என்பவன் பாவி இல்லை, அப்படித்தானே?”  “ஆமாம்.  அவன் திரும்பிப் போய் அதே பாவத்தை செய்துவிட்டு வந்து பாவமன்னிப்பு கேட்பான்.  நான் அவனை மீண்டும் பாவத்திலிருந்து விடுவிக்கிறேன்.”  “இதற்காக அவன் உங்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டி உள்ளதா?”  அவர் கொஞ்சம் தயங்கினார்.  பிறகு சொன்னார், “எனக்கில்லை, திருச்சபைக்கு.”  “ஆக நீங்கள் கடவுளை வணிகப்பொருளாக்கி, மூலதனத்திற்கு மாற்றாக பாவத்தை முதலீடு செய்து திருச்சபையின் செயல்பாடுகளை நடத்துகிறீர்கள்.”  அவரால் பேச முடியவில்லை.  அவருடைய திருச்சபைக்கு எதிராக பாவம் செய்ய அவர் பயந்தார்.

இந்த வகையான மோசடி ஒரு மதத்துக்கு மட்டும் உரித்தானதல்ல.  நமக்கு மிக அண்மையிலுள்ள ஓர் இந்துக் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் வாழ்க்கையின் கொடிய சிக்கல்களிலிருந்து விடுதலை பெற இந்தக் கடவுளுக்கோ அல்லது அந்தக் கடவுளுக்கோ லஞ்சம் கொடுப்பதற்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் மற்றும் பூஜைகளின் நீண்ட பட்டியலைக் காணலாம்.  இங்கு தவறு செய்வது கிறிஸ்தவ மதமோ அல்லது இந்து மதமோ அல்ல.  ஒருவரிடமிருந்து முழுக்கவும் நீக்கப்பட முடியாத பயம்தான் காரணம்.  எங்குதான் விடுதலை இருக்கிறது?  மீட்சியை உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்டால்தான் அது கிடைக்கும்.  ‘மோட்சம்’ என்ற பிரத்யேகப் பெயரை இந்துக்கள் அதற்கு வைத்திருக்கிறார்கள்.  மோட்சம் என்பது என்ன?  ஒரு நபரின் உடல் உறுப்பு ஒன்றிலோ அல்லது புலன் ஒன்றிலோ செயலின்மை அல்லது செயல்குறைபாடு ஏற்பட்டு ஒரு வகை அசெளகரிய உணர்வு உண்டானால் அந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமென்ற ஒரு அவசரத் தேவையை அந்த நபர் உணர்கிறார்.  உடலின் இயக்கத்தை முறைப்படுத்துவது மூலமோ, உணவு முறையை மாற்றுவதன் மூலமோ அல்லது சுத்தமான காற்று, நல்ல நீர், சூரிய ஒளி ஆகியவை உள்ள இடத்துக்குப் போய் தங்குவதன் மூலமோ நோய் தணியலாம்.  உடல் ரீதியான அசெளகரியத்திலிருந்து அது மீட்சியைத் தரலாம்.  அதுதான் மோட்சம்.  அசெளகரியத்திலிருந்து செளகரியத்திற்கு ஒருவரை இட்டுச் செல்வது.  பிற உயிரினங்களுக்கு உள்ளதுபோலவே மனிதர்களின் உடல்களும் துல்லியமான வேதியியல் விதிகளால் நெறிப்படுத்தப்படுகின்றன.  இரண்டு தவறான வேதிப் பொருட்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் வினையாற்றிக் கொண்டால் உணர்ச்சிரீதியான அமைதியின்மை உண்டாகலாம்.  ‘உணர்ச்சி’  என்பது, பாதி உடம்பில் இருக்கிறது; பாதி ஒரு எண்ணமாகவோ  அல்லது கருத்தாகவோ தன்னுணர்வு சார்ந்து வெளிப்பாடு கொள்ளும்.  மனம் மற்றும் உடற்கூறு சார்ந்த ஒரு நோயாக அது ஆகும்போது இரண்டு தோற்றுவாய்களை அது கொண்டிருக்கக் கூடும் – உடல் வலி ஒன்று ஒரு கருத்தாக மாறுதல் பெறுவது அல்லது ஒரு தவறான கருத்து உடல்நோய், உடம்பில் நிலை கொண்டுவிடுவது. இவ்வாறாக மனம் மற்றும் உடல் சார்ந்த நோயாக மனம் அல்லது உடல் ரீதியான செயல்பாட்டுக் குறைகளினால் உண்டாகின்றன.  மன அமைப்பிலும் உடல் இயங்கு முறையிலும் ஒருசேர நுண்ணிய அறிவுடைய ஒருவரோடு செயல்பூர்வமான உரையாடலை ஏற்படுத்திக் கொண்டால் மனோவியல் தொடர்பான தவறான புரிந்து கொள்ளலையும், உடல் ரீதியான பார்வைக் குழப்பத்தையும் நீக்கிவிடலாம்.  இப்படியான உரையாடலை மேற்கொண்ட நபர் விடுதலை பெற்று உடல் மற்றும் மனம் ஆகியவை எளிதாகவும், இயல்பாகவும் இயங்கும் நிலையை அடைகிறார்.  ஆனால், இதற்கு மாறாக உடல் மற்றும் மனதின் இயங்கு முறை அதிக விஷம் நிரம்பிய மருந்துகளால் அடிக்கடி  கேட்டிற்கு உள்ளாக்கப்படுகிறது; இவ்வகை மருந்துகள் நேரிடையாக ஹைபோதலமஸுக்கும் (உடலின் வெப்பநிலை, பசி, தாகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி), மூளையின் மேலுறைக்கும் போய் உயிர்வேதியியல் வினைகளை உண்டுபண்ணுகின்றன; இவ்வினைகள் மூளையிலிருந்து நேரடியாக கலக்கமடைந்துள்ள தசைகளுக்குச் சென்று அவற்றை செயலற்றவையாக்கி விடுகின்றன.  பிறகு நோய்க்கான நிவாரணம் இன்னொரு நோயைப் பெறுவதில் முடிகிறது.  மனச் செயல்பாட்டுக்குறைவு அல்லது மூச்சுச் திணறல் ஆகியவையுடன் வரும் தசைச் செயல்பாட்டின்மையிலிருந்து விடுதலை தேடும் பலருக்கு, ரட்சகர்கள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் கல்லறைக்கான வழியைத்தான் காட்டுகிறார்கள்.

மருத்துவர்களுடைய இடத்தை மதப்போலிகளும் சூனியக்கார சாமியார்களும் எடுத்துக் கொள்ளும்போது ஒருவனின் பீதியை அதிகமாக்கி அதைத் தீர்க்கவே முடியாத ஒரு நோயாக மாற்றிவிடுவதில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கடவுள் என்ற ஒரு வார்த்தை மட்டும்தான்.  மன மற்றும் நரம்பு மண்டல நோய்களைக் குறிக்கும் anxiety neurosis, compulsive mania, schizophrenia போன்ற வார்த்தைகளை உண்டாக்குவதன் மூலம் இந்த பூமிமேல் நரகத்தை எளிதில் நிறுவிவிடலாம்.  தானியத்தையும் பதரையும் ஒன்றாக வெயிலில் உலர்த்தினால் பதரை தானியத்திலிருந்து எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம்.  அவ்வகையான வேறுபடுத்தல்களை உண்டாக்க நமது அறிவின் ஒளிக்கு பயிற்சி தரவேண்டியிருக்கிறது.  இல்லையென்றால், சாதாரண பயத்தை முழு வாழ்வுக்குமான பீதியாக மாற்றுபவர்கள் (இது தற்போது சமூக, பொருளாதார ஆய்வுப் பொருள்களிலேயே மிகச் சிக்கலானதாக ஆகியுள்ளது) நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள்.  சாதாரண நோய்களை உயிர் பறிக்கும் நோய்களாக மாற்றும் வழிமுறைகளுக்கு காப்புரிமை பதிவு செய்வது உலகின் புதிய கலாசாரமாக மாறியுள்ளது.

மனித குலத்தின் எல்லாப் பிரிவுகளும் இந்தக் கேடான செயலில் ஈடுபட்டுள்ளன.  மருத்துவம், விஞ்ஞானம், ஆரோக்கிய உணவு, இயற்கை மருத்துவம், அரசியல், மதம், எல்லாமும்.  நகரும் நட்சத்திரங்கள் அறிகுறி தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட நடு இரவில் பிறக்கும் கிறிஸ்துவோ அல்லது கிருஷ்ணனோ நம்மை இந்த பயங்கர உலகளாவிய அழிவிலிருந்து விடுவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நமக்கு அழகல்ல.  மதத்தைப் பற்றிய எல்லா குழந்தைத்தனமான பேச்சுக்களையும் நாம் நிறுத்த வேண்டும்; அதைவிட, நோக்கமற்ற விஞ்ஞானத்தின் வெற்றுச் சொற்களை சொல்பவர்களிடமிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.

விடுதலை நம் ஒவ்வொருவருடைய கையிலும்தான் இருக்கிறது.  குறுகிய, ஆழமான கிணற்றில் பிறந்து மாட்டிக்கொள்ளும் தவளையைப் பொறுத்தமட்டில், முதலில் அதனுடைய வால் உதிர்ந்து போகிறது.  ஒரு படியிலிருந்து மற்றொரு படிக்குத் தாவி, இறுதியில் கிணற்றுக்கு வெளியே பரந்த உலகில் தன்னுடைய விடுதலையை கண்டடைகிறது.

ஒற்றை உடலாக தனித்துவமின்றி வாழ்ந்த கடந்த கால நினைவுகளின் சேமிப்புக் கிடங்குதான் அதனுடைய வால்.  தவறான நினைவுகள், கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களால் நாம் கட்டுண்டிருக்கிறோம்.  தவளையைப் போல நாமும் அந்த வாலை விட்டு விடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவிச் செல்லும் சுதந்திரமான தவளைகளாக ஆகிவிடலாம்.

விடுதலை பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும் என்றால், நம் குடும்பங்கள், நம் மரபுகள், நம் பள்ளிக்கூடங்கள், நம் நாடுகள் என்ற குறுகிய சிறைகளை விட்டு வெளியேற வேண்டும்.  அதுதான் உண்மையான மோட்சம்.  அதை விளம்பரப்படுத்தவோ, காப்புரிமைக்குள்ளாக்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாது.  அடுத்தவனை விடுதலை செய்வது நம்முடைய கையில் இல்லை.  ஒவ்வொரு நபரின் விடுதலையும் எப்போதும் அவன் கையில்தான் உள்ளது.

தமிழில் : ஜெயமோகன்

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து