Tag Archives: இலக்கியம்

நேர்காணல் – 2

Standard

1.1.1996

நீங்கள் இலக்கியத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும் இல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி.  முன்தீர்மானங்களும், சூழல் சார்ந்த மன மயக்கங்களும், நிர்பந்தங்களும், அச்சமும், சுயநலமும் படைப்பாளியை தன் அக உண்மையை நீர்த்துப்போக விடும்படி வற்புறுத்துகின்றன.  கோட்பாடுகள், தத்துவச் சட்டகங்கள் அவனுக்குத் தடைகளாகின்றன.  தன் சொந்த அனுபவங்களின் விளைவான முன் தீர்மானங்களும், தன் முந்தைய படைப்பு வழியாக அடைந்த அறிவின் பாரமும் பெரிய படைப்பாளிகளைக்கூட வழி தவறச் செய்துள்ளன.  குமாரன் ஆசான் இளம் துறவியாக நாராயண குருவின் முதல் சீடராக இருந்தபோது ‘நளினி’ என்ற குறுங்காவியத்தை எழுதினார்.  அன்று ஆசானுக்கு பிரம்மசரியம் மீது அபாரமான பற்று இருந்தது.  அவரை நாரயண குருவின் வாரிசாக பிறர் எண்ணுவதை அவர் மறுக்கவுமில்லை.  ஆயினும் அதில் நளினி, திவாகரன் மீது கொண்ட ஈடுபாட்டை தீவிரமான காதலாகவே அவர் சித்தரிக்கிறார்.  திவாகரனின் துறவை முதன்மைப்படுத்துவதே அன்றைய அவர் மனநிலையில் அதிக திருப்தியைத் தரக்கூடியதாக இருக்கும்.  அவருடைய ஆதரவாளர்களுக்கும் உவப்பு தரும்.  ஆனால் ஆசான் படைப்புக் கணத்தில் தன் அக மனதின் தூண்டலுக்கே முக்கியத்துவம் தந்தார்.  திவாகரனின் மார்பில் விழுந்து நளினி உயிர் துறக்கும்போது காதல் துறவைத் தோற்கடிக்கிறது.  ‘நளினியின் சிந்தனைகள் மூலம் நான் சுத்திகரிக்கப்பட்டேன்’ என்றார் ஆசான்.  மிக முக்கியமான வரி இது.  அக்காவியம் ஆசானை அவருக்கே காட்டியது.  படைப்பு படைப்பாளியை மேம்படுத்துகிறது.  ‘அன்பே உலகின் சாரம்’ என்று அவர் அப்படைப்பு வழியாகக் கண்டடைந்தார்.

 

இலக்கியம் என்பது என்ன?

நாம் அறியாத ஒத்திசைவுள்ள பிரபஞ்சத்திலிருந்து அறிந்த ஒத்திசைவு ஒன்றை உருவாக்குவது.  இலக்கியம் என்பது சொற்களையே அலகுகளாகக் கொண்டது.  ஒலிக்குறிப்பான்களே சொற்கள்.  அவற்றின் மீது படிமங்களின் ஆடும் நிழல்வெளி.  அம்மா என்ற சொல்லின் உருவாக்கத்தில் அன்பு, தியாகம் என பல படிமங்கள்.  சொற்களின் இசைவு மூலம் படிமங்களின் இசைவு உருவாகிறது.  படிமங்களின் மாறும் தன்மை காரணமாக முடிவற்ற சாத்தியங்கள் உருவாகின்றன.  இலக்கியம் சாத்தியங்களின் பிரவாகம்.  எனவே அது நேற்று இன்று என அறுபடாததாகும்.

 

அதன் முன்னோக்கிய நகர்வின் சாத்தியங்கள் எப்படி கண்டடையப்படுகின்றன?

மொழியின் பிரவாகம் எதைத் தேடுகிறது என்ற பிரக்ஞைதான்.  இங்கு தமிழ்ப் புதுக்கவிதை படிக்கப்பட்டதைக் கேட்டேன்.  அணி இலக்கணங்களை முற்றிலும் சுமையாகப் பார்க்கிறீர்கள் என்று புரிந்தது.  ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான ஒலி நியதிகள் உண்டு.  சில நியதிகள் அதன் கட்டமைப்பு சம்பந்தப்பட்டவை.  அவை சிதறுவது தொடர்பை பாதிக்கும்.  வேறு சில, காலத்தோடு இணைந்தவை.  தொடர்ந்து செம்மைப்படுத்தப்படுபவை.  தேவார திருவாசகங்களைக் கேட்கும்போது இம்மொழி எவ்வளவு தூரம் ஒலிரீதியாக பண்படுத்தப்பட்டுள்ளது என்று புரிகிறது.  அந்த விளிம்பிலிருந்து புதிய சாத்தியங்களை நோக்கி முன்நகர்வதே உண்மையான சவால்.

 

ஆனால் கச்சிதத் தன்மையை அடையும் பொருட்டே புதுக்கவிதை வடிவம் பிறந்தது.

அது முக்கியம்.  அத்துடன் ஒலிரீதியான முழுமையும் முக்கியம்.  நீங்கள் உங்கள் மொழி அடைந்த ஒலியிசைவில் போதிய பயிற்சியில்லாமையினாலேயே அதைக் கோட்டை விட்டுவிட்டீர்கள் என்று படுகிறது.

 

இலக்கியப் படைப்பில் வடிவம் என்பது எந்த அளவுக்கு முக்கியம்?

போஜராஜனின் ‘சிருங்காரப் பிரகாசம்’ குறிப்பிடும் கவிதைக்குணங்கள் ஒலி, இனிமை, எழுச்சி, தெளிவு, உள்வலிமை.  இவை வடிவ நிர்ணயங்களா இல்லை தேவைகளா?  இவை அகவயமான இயல்புகளா இல்லை புறவயமான இயல்புகளா?  எந்திரத்தனமாக கருத்துக்களை தொகுப்பதும் சரி, அலங்காரங்களைக் கோர்ப்பதும் சரி, வேறு வேறானவையல்ல.  இலக்கியம் சத்திய தரிசனத்தையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும்.  பிற அனைத்தும் அதன் விளைவுகளே.  இலக்கிய தரிசனம் வேறு, வெளிப்பாடு வேறு அல்ல, இரண்டும் ஒரே கணத்தில் நிகழ்பவை.  விமரிசன ரீதியாக முன்வைக்கப்படும் கொள்கைகளும் வடிவ நிர்ணயங்களும் முற்றிலும் புறவயமானவையாகவும் பொதுவானவையாகவும் இருக்க முடியாது.  பரஸ்பர புரிதலின் தளத்தில்தான் அகவயமான சில உருவகங்கள் வடிவங்களாகவும், சில அக அனுபவங்கள் கொள்கைகளாகவும் மாற்றப்படுகின்றன.  புறவயமானதாக மாற்றப்படும்தோறும் இலக்கியக் கொள்கைகளும் வடிவங்களும் வறட்டு விதிகளாக மாறி இலக்கியத்துக்கு எதிரானவை ஆகிவிடும்.  முதல்தர விமரிசகனின் முதல்தர விமரிசனக் கொள்கையை நாலந்தர விமரிசகன், அபத்தமான படைப்பை வியந்து பாராட்டுவதற்குப் பிழையின்றிப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம்.  நான் கூறும் எல்லா விமரிசனக் கொள்கைகளும் என் அந்தரங்கமான வாசிப்பனுபவத்தின் விளைவுகளேயாகும்.

 

இன்றைய நவீன விமரிசனக் கருத்துகள் இக்கூற்றை மறுப்பவை என்று அறிகிறேன்…

நீ எதன் அடிப்படையில் அவற்றை ஏற்கிறாய்?  பால்சாக்கின் நூலை பார்த் கட்டவிழ்த்து எழுதிய கட்டுரையைப் படித்து அவர் கூறும் கொள்கைகளை நீ நம்புவாய்.  நீ பால்சாகின் நூலைப் படித்ததுண்டா?  ஹ்யூகோவைப் போல எளிமையான படைப்பாளி அல்ல அவர்.  மொழியில் நுட்பமாகச் செயல்படுபவர்.  உன் வாசிப்பனுபவத்தில் அக்கொள்கைகள் எப்படிச் செயல்படுகின்றன என்றே நீ பார்க்க வேண்டும்.  உனக்கு உதவாதபோது நிராகரிக்கவும் வேண்டும்.  உலகம் சொல்கிறது என்பதெல்லாம் மடமை.  இவையொன்றும் நிரூபணவாதக் கருத்துக்களல்ல.  எந்தப் புறவயமான விமரிசனமும் ஒரு நுனியில் அகவயமான அனுபவத்தில் ஊன்றியிருக்க வேண்டும்.  எந்த உண்மையையும் நாம் புறவயமான முறைமை வழியாக அறிவதில்லை.  அகமனதின் ஒரு சிறு அசைவு மூலமே அறிகிறோம்.  அதருக்கத்தால் அறிகிறோம்.  அதைக் காலத்துடனும் இடத்துடனும் சம்பந்தப்படுத்துகிறோம்.  அப்போது அது சித்தாந்த உண்மை ஆகிறது.  சித்தாந்த உண்மைகள் அனைத்துமே அரை உண்மைகள்தாம்.  இதை அறியாத நுண்ணிய மனம் கிடையாது.  ஏன் நாம் சித்தாந்தப் படுத்துகிறோம்?  நாம் காலத்திலும்/இடத்திலும் நம்மை உணர்கிறோம்.  நம்மை முதன்மைப்படுத்தும் நமது அகங்காரமே சித்தாந்த உண்மையைக் கோருகிறது.  முன்தீர்மானங்களிலிருந்து தப்ப முடியாமையின் பலவீனம், எதிர்கால அச்சம், நிலையின்மை பற்றிய உள்ளார்ந்த எச்சரிக்கை உணர்வு.  மானுட பலவீனமே உண்மையை நீர்க்கச் செய்கிறது.  ஆனால் நமக்குத் தெரியும் உண்மை என்ன என்று.  இந்த அந்தரங்கமான அறிதலே இன்றும் இலக்கியப் படைப்புகளை மதிப்பிட்டு வருகிறது.  நவீன விமரிசன முறைகள் புறவயமான அளவுகோல்களை உருவாக்கி விமரிசனத்தை ‘விஞ்ஞான’மாக மாற்ற முயல்கின்றன என்பதை நான் அறிவேன்.  மேற்கத்திய சிந்தனையுலகம் இன்று பெரிதும் கல்வித்துறை சார்ந்தது.  எதையும் சித்தாந்தப்படுத்தி, முறைமைப்படுத்தி, துறை சார்ந்து அறிவமைப்பாக அவர்கள் மாற்றியாக வேண்டும்.  வேறு வழியில்லை.  அவற்றை நாம் கற்கலாம்.  ஆனால் ஒருபோதும் நமது அந்தரங்கத் தன்மையை கைவிடக்கூடாது.  நமது படைப்புகளை வைத்தே நாம் பேசவேண்டும்.

 

படைப்புச் செயல் என்பது என்ன?  அது ஒருவகை ‘உற்பத்தி’ எனலாமா?

சொல்லை மாற்றுவதன் மூலம் என்ன நடக்கிறது?  சில சிறு அதிர்ச்சிகள் தவிர?  உற்பத்தி என்பதில் அந்த முன்வடிவம் முன்கூட்டியே திட்டவட்டமாக உள்ளது.  அதைத் தொழில்நுட்பத் திறன் மூலம் வடிவமாக மாற்றுகிறோம்.  படைப்பில் ஒரு சொல் அடுத்த சொல்லை நிகழ்த்துகிறது.  உயிர்ப் பொருளின் உருவாக்கத்தில் ஒரு உயிரணுவின் கருவிலிருந்து அடுத்த உயிரணு பிறப்பது போல.  ஆகவே அதற்குப் படைப்பு என்று பெயர் சூட்டுகிறோம்.