Tag Archives: அத்வைதம்

நடராஜ குருவும் நானும் – 2

Standard

நடராஜ குரு ஒரு வருடம் ஐரோப்பாவிலும், ஒரு வருடம் அமெரிக்காவிலும் இருந்து விட்டுத் திரும்பிய போது எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு ‘ஹீரோ’வைப்போன்ற பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மைசூரில் வளர்ந்தவராதலால் அவரால் சரளமாக மலையாளத்தில் பேசமுடியாது.  எனவே,அவரது உரைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்காக அவருடன் நான் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.  மகான்களை தூரத்திலிருந்து மட்டுமே வழிபட முடியும் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.  1946-இல் காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருந்தன. காந்தியின் மேல் தொடக்கத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த அன்பும் மதிப்பும் என் மனதில் இருந்து நீங்கி விடாமல் இருப்பதற்காக காந்தியை விட்டு விலக வேண்டியிருந்தது. நடராஜ குருவின் குத்தல் பேச்சும் அவரது ஏளனம் என்னில் ஏற்படுத்திய ஆழமான காயங்களும் அதிநுட்பமான என் சுயத்தால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருந்தன.

ப்ரார்த்தனை செய்வது போல மென்மையாகப் பேசும் டாக்டர் மீஸுடன் பழகிய எனக்கு இது புதிதாக இருந்தது.  டச்சு அறிஞரான டாக்டர் மீஸ் ரமண மகரிஷியின் மாணவர்.  நான் 1946 முதல் 1952 வரை அவருடன் பயின்றிருக்கிறேன்.  தெளிவில்லாத அவர் உச்சரிப்பை நான் செய்து காண்பிப்பதை நடராஜ குரு வெறுத்தார்.   அதைவிட ஒரு நாய் போல என்னால் குரைக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.  அப்போது நான் திருவனந்தபுரத்தில் பல்கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நடராஜ குரு செல்லும் இடத்திற்கெல்லாம் நானும் போகாமல் தப்பிக்க முடிந்தது.  ஆனாலும் அவர் என்னைத் தன் மாணவன் போலவே நடத்தினார்.  இது எனக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.  அவரது ஞானம் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் அவரது கோமாளித்தனங்கள் மீதிருந்த எரிச்சலும் ஒன்றுடன் ஒன்று மோதி என் அகத்தை காயப்படுத்தின.  பிறகு கிட்டத்தட்ட அவரை மறந்திருந்தேன்.  ஆனால், மீறிச்செல்ல முடியாத விதியின் கைகள் என்னை மீண்டும், எங்கே அவரைச் சேர்வது என்று 1938-இல் முடிவெடுத்தேனோ, அதே ஃபெர்ன்ஹில்லுக்குச் செல்லும்படி வழிகாட்டின.

1952-இல் எனது படிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ஊர் சுற்றுவது என முடிவெடுத்தேன்.  எனது பி.ஏ. ஹானர்ஸ் படிப்பின் இறுதி ஆண்டில் பல்கலைக்கழக நூலகத்தின் வராந்தாவில் தங்கியிருந்தேன்.  எனது புத்தகங்களையும் சமையல் பாத்திரங்களையும் காவலரின் சிறிய அறையில் வைத்திருந்தேன்.  ஒரு கடிகாரத்தையும் எனது கல்லூரிக் குறிப்புகளையும் தவிர வேறெதையும் நான் இழக்கவேண்டியிருக்கவில்லை.  புத்தகங்கள் எனக்கு ஒருவேளை தேவைப்படக்கூடும் என்பதனால் அவற்றை வைத்திருக்க எனது நண்பன் ஒப்புக்கொண்டான்.  நான் ஒரு யாசகனாகி முதலில் இந்தியாவின் தென்கோடியிலிருக்கும் கன்னியாகுமரிக்குச் சென்றேன்.  அங்கிருந்து கோயில் கோயிலாகச் சென்றேன்.  ஊட்டி வழியாகச் செல்ல நேர்ந்தபோது குருகுலத்தில் தங்கினேன்.  அங்கு நடராஜ குரு இருக்கவில்லை.  சுவாமி மங்களானந்தாவும் மாதாஜி கமலாபாயும் மட்டுமே இருந்தனர்.  மங்களானந்தா சுவாமி எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தார்.  அது நான் மைசூர் செல்வதற்குப் போதுமானதாக இருந்தது.

மைசூரில் ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றேன்.  அங்கு தலைவராயிருந்த சுவாமி விமலானந்தா என்னை அன்புடன் வரவேற்றார்.  மடத்தில் சேருவதற்கு என் விருப்பத்தைத் தெரிவித்தபோது, தன்னுடன் ஒரு நடை வரும்படி அழைத்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட ஆசிரமங்களின் பகட்டைப் பார்த்து நான் மயங்கிவிடக் கூடாது என அறிவுறுத்தினார்.  “காட்டில் தேன் நிறைந்த மணமுள்ள மலர்கள் கொண்ட ஒரு மரம் இருக்குமேயானால் காட்டிலுள்ள அனைத்து தேனீக்களும் அம்மரத்தை நாடி வரும்” என்றார்.  அதற்கு மேல் நான் பயணம் செய்வதில் பொருளில்லை என்றதோடு கேரளத்திற்குத் திரும்பச் சென்று நாராயண குருவின் போதனைகளைப் பரப்புவதில் என் வாழ்வைச் செல்விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஶ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்ப ஏராளமான அறிஞர்கள் இருப்பதைப் போலல்லாமல் நாராயணகுருவின் வழியில் ஆன்மீகத்தைப் பரப்ப நாலைந்து அறிஞர்களே இருக்கின்றனர் என்றார்.  நான் கேரளா திரும்ப தேவையான பணம் கொடுத்தனுப்பினார்.

திரும்பும் வழியில் ஃபெர்ன்ஹில் குருகுலத்திற்குச் சென்றேன்.  மங்களானந்தா சுவாமியும் மாதாஜியும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.  குரு தனியாக இருந்தார்.  அப்போது நான்கு மணி, தேநீர் அருந்தும் நேரம். சமையலறைக்குள் நான் நுழைந்தபோது ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தார்.  என்னைக் கண்டதும் இரண்டு கோப்பைகளில் நிரப்பி, இரண்டு தட்டுகளில் ஓரோரு லட்டை வைத்து, என்னிடம் ஒன்றை நீட்டினார்.  நான் என் கைகளில் கோப்பையையும் தட்டையும் வைத்துக் கொண்டிருந்தேன்.  “படிப்பு முடிந்ததும் திரும்பி வருவதாகச் சொன்னாய்.  என்னிடம் சேரத்தான் இப்போது வந்திருக்கிறாயா?” என்று கேட்டார் நடராஜ குரு.  இந்தத் தருணத்தைப் பற்றிய அச்சம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.  தயக்கத்துடன், “அதைப்பற்றி யோசிக்கிறேன்” என்றேன். இதைக்கேட்டு நடராஜ குரு கோபத்தில் கத்தத் தொடங்கினார்.  “குருவுக்கு யாரும் இல்லை என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு யாரும் இல்லை என்று அவரே சொன்னார்.  நீ ஆர்வத்துடன் இருந்தாய் என்று நினைத்தேன்.  ஆனால் உன்னிடம் ‘அழுத்தம்’ இல்லை.  ரனிமேட்டிலேயே நீ நின்றுவிட்டாய்” என்றார்.  ரனிமேடு என்பது மலையடிவாரத்தில் இருந்த ஒரு ரயில் நிறுத்தம்.  மலையேறுவதற்கு ரயில்வண்டிகள் அங்கே நின்று நீராவி பிடித்து வரும்.  குரு கூறியதை தனிப்பட்ட முறையில் என் மீது தொடுக்கப்பட்ட அவதூறாகக் கருதினேன்.  அவசர அவசரமாக கையிலிருந்த தேநீரையும் தட்டையும் மேசையில் வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக குருவின் காலில் விழுந்தேன்.  “என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றேன்.  அந்தக் கணம், பசித்த நரியிடம் தன்னை ஒப்புக்கொடுத்த ஆட்டுக்குட்டியைப் போல் என்னை உணர்ந்தேன்.

என் சரணாகதிக்கு முன் அவர் பேசிய கொடுஞ்சொற்களுக்குப் பரிகாரம் போல அன்று மாலை குரு என்னிடம் மிகவும் மென்மையாகப் பேசினார்.  பிரதானக் கட்டிடத்திலேயே ஒரு அறையை அவர் எனக்குக் கொடுத்தபோதும் நான் ஒரு குடிலில் தங்குவதையே விரும்பினேன்.  இரவு மிகுந்த குளிரில் தூங்க முடியாமல் பெரிதும் அவதியுற்றேன்.  ஒரு வழியாக நல்ல உறக்கம் வந்தது.  பின்னர் கடுங்காபியின் மணம் என் மூக்கைத் துளைத்தபோது அலறிப்புடைத்து எழுந்தேன்.  ஒரு தட்டில் சுடச்சுட காபியும் வர்கியும் வைத்துக்கொண்டு நடராஜ குரு நிற்பதைக் கண்டு அவமான உணர்ச்சி தோன்றியது.  “படுக்கை அறையில் வந்து சூடான காபி கொண்டு தருவது ஒன்றும் தவறானதில்லை என்று நினைக்கிறேன்” என்று குத்தலாகக் கூறினார்.  அவர் கையில் இருந்து தட்டைப் பறித்துக் கொண்டு, அவமானத்துடன் சமையலறைக்குச் சென்றேன்.

குரு என்னை எதுவுமே செய்யச் சொல்வதில்லை என்பதை விரைவில் உணர்ந்தேன்.  தொட்டிகளில் நீர் நிரப்புவது, தீ மூட்டுவது, காய்கறி நறுக்குவது, தரையைப் பெருக்குவது என எல்லாவற்றையும் தானே செய்தார்.  அவர் என்னை எதுவும் செய்யச் சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன்.  அவர் ஒன்றுமே சொல்லவில்லை.  சரி, நாமே காய்கறி நறுக்குவதில் உதவி செய்வோம் என்று நினைத்தேன். உணவு தயாரிக்கும்போது ஒரு காரட்டை எடுத்து நறுக்கப் போனேன்.  “அதை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.  “நறுக்கப் போகிறேன்” என்றேன்.  “எதற்கு?” என்று கேட்டார்.  “தெரியவில்லை” என்றேன்.  காரட் குறித்து மட்டுமல்ல, குருகுலத்தில் என் வாழ்வைப் பற்றியதும் அந்தப் பதில். “உனக்குத் தெரியவில்லை என்றால் நீ கேட்க வேண்டும்.  இங்கு நான்தான் தலைமைச் சமையல்காரன்.  நான் என்ன சமைக்கப் போகிறேன் என்று நீ தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் குரு.  ஒரு பட்டாணியை எடுத்துக்காட்டி, “இந்த அளவுக்கு சதுரத்துண்டுகளாக காரட்டை நறுக்க வேண்டும்” என்றார்.  இதைக்கேட்டு, ஒரு மருத்துவ மாணவன் அறுத்துப் பார்ப்பதற்காக பிணத்தை வைப்பதைப் போல அந்தக் காரட்டை நறுக்கும் பலகையில் வைத்தேன். லண்டன் சேம்பர் ஆஃப் காமர்ஸிலிருந்து வடிவியலில் பட்டயம் பெற்றவன் நான் என்பதால், சரியான சதுரங்கள் இருந்தால் கச்சிதமான கனசதுரத் துண்டுகள் போட எனக்குத் தெரியும்.  சரியான சதுரம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பொறுப்புடன் முதல் துண்டை வெட்டப் போனேன்.

அப்போது, “உன் முதுகலைப் பட்டப்படிப்பில் உன் சிறப்புப் பாடம் என்ன?” என்று கேட்டார் குரு.  நான் சிறிது கர்வத்துடன், “அசாதாரண உளவியலும், அத்வைத வேதாந்தமும்” என்றேன். குரு என்னையே ஒரு அசாதாரணமானவனைப் போல் பார்த்துவிட்டு, “அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.  எனது ஹானர்ஸ் படிப்பிற்கான சிறப்புப் பாடம் சங்கரரின் அத்வைதம் என்றாலும் எனக்குக் கற்பித்தவர் சுத்த விசிஷ்ட வேதாந்த விசிஷ்டாத்வைதியான ஒரு ஐயங்கார்.  இரு தத்துவங்களுக்குமிடையேயான வேறுபாட்டை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.  அந்த முக்கியமான கேள்வியைக் கேட்டதும் காரட்டை ஒதுக்கி வைத்துவிட்டு கத்தியையும் மெதுவாகக் கீழே வைத்தேன்.  எதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதைப் போல என்னைப் பார்த்த குரு, “நீ என்ன உன் கையினாலா சிந்திப்பாய்?” என்று கேட்டார்.  இரண்டு வயதுக் குழந்தையொன்றைப் போல நடத்தப்பட்டதை நான் விரும்பவில்லை.  பொதுவாகவே நான் முன்கோபி.  கோபத்தில் என் முகம் சிவந்தபோதும் என்னை அடக்கிக்கொண்டு, “இல்லை, நான் என் தலையால் சிந்திப்பேன்” என்றேன்.  குரு அதை நம்பாதவர் போல, தொடர்ந்து, “அப்படியானால் நீ அதை நறுக்கிக்கொண்டே என் கேள்விக்கு பதிலளிக்கலாம்.  காரட் நறுக்குவது அறிவுத் திறம் தேவையில்லாத (மெகானிகல்) செயல், அறிவுபூர்வமாகப் பேசுவது சிந்திக்கும் செயல்” என்றார்.  இது எனக்குப் புதிதாக இருந்தது.   அதுவரை இப்படி நான் சிந்தித்ததேயில்லை. ஒரு சமயத்தில் ஒருவரால் ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியுமென்று நினைத்திருந்தேன். மனிதனின் ‘எளிய’ சுயத்தையும் ‘மேல்’ சுயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க இந்தப் பாடம் எனக்குப் பேருதவியாய் இருந்தது. பின்னர், நடைமுறை உலகில் எந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதும் ஒருவரால் தன்னுடைய ‘மேல்’ சுயத்துடனான உரையாடலில் முழுவதுமாக ஈடுபடமுடியும் என்பதை அறிந்து பெரிதும் வியந்தேன்.

ஹானர்ஸ் இறுதித் தேர்வில் நான் பல்கலையில் முதல் மாணவனாகத் தேறியிருந்தேன்.  ஆனால், அத்வைத வேதாந்தம் குறித்து நடராஜ குருவுடன் நடந்த அரைமணிநேர உரையாடலுக்குப் பின், நான் வகுப்பறையில் கற்றது எதுவும் பயனற்றது என்றும், நான் முதலிலிருந்து தொடங்கவேண்டும் என்றும் ஐயமற உணர்ந்தேன்.  நான் சீராக தத்துவம் கற்பதற்கு முன் என்னுடைய ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குரு நினைத்தார். நான் ஜான் ஸ்பியர்ஸுடன் தங்கி இருந்து ஆங்கிலம் கற்கலாம் என்று ஆலோசனை கூறினார். குருகுலத்திலேயே இருந்தாலும் நான் நடராஜ குருவின் அண்மையைத் தவிர்க்க முடியும் என்பதால், அது ஒரு நல்ல ஆலோசனையாகத் தோன்றியது.