Category Archives: தன் வரலாறு

அன்பும் ஆசிகளும்

Standard

1948-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன்.  டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன்.

திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய ஆரம்ப நாட்களில் அவர் திருவண்ணாமலையில் தங்கிய சில இடங்களைக் காண வேண்டும் என்று ஆவலெழுந்தது. மிகப்பிரபலமான திருவண்ணாமலை ஆலயத்தைக் காண முதலில் சென்றேன்.

கோவிலுக்குள் சென்று உருவவழிபாடு செய்வதில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் முன் நின்றேன். இளம் வயது ரமணர் குளிக்காமலேயே கோயிலுக்குள் நுழைந்தபோது எப்படி இருந்திருப்பார் என்றும் அவர் கோயிலுக்குள் நுழையும் தருணத்தில் எதிர்பாராத விதமாக பெய்த மழையே அவரை எவ்விதமாகக் குளிப்பாட்டியிருக்கும் என்றும் கற்பனை செய்தபடி அசையாமல் அங்கேயே நின்றிருந்தேன்.  நான் அங்கே சென்று சேர்ந்த தருணத்திலும் அப்படிப்பட்ட ஒரு மழையை எதிர்பார்த்திருந்தேன். அது நடக்கவில்லை. மாறாக, வேர்த்து வேர்த்து வழிந்ததில் என் ஆடைகள் முழுக்க முழுக்க ஈரமாகிவிட, மழையில் நனைந்தவனைப் போல நின்றிருந்தேன்.

மலைக்குச் சென்று அவர் தம் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கக் கூடிய எல்லா இடங்களையும் காணவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் எழுந்தது. ஆனாலும் கட்டுக்கடங்காமல் எனக்குள் பொங்கிக் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆசிரமத்துக்குள் நேராகச் சென்றுவிட்டேன். பாய்விரித்த ஒரு மரக்கட்டிலின் மீது சோர்வோடு மண்டியிட்ட நிலையில் உட்கார்ந்திருந்த மகரிஷியைப் பார்த்த வண்ணம் அக்கூட்டத்தில் பல பேர் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமாக அணிந்திருக்கக்கூடிய ஆடைகளை அவர் அணிந்திருக்கவில்லை. அங்குள்ள விவசாயிகளைப் போன்று இடுப்பில் அரைஞாண்கயிறு மட்டுமே இருக்க கோவணம் அணிந்திருந்தார். ஆசிரமத்துக்குள் செல்லும் முன்னாலேயே, பல இளைஞர்களும், முதியவர்களும் கோவணங்களை மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்திருந்ததால் மகரிஷியையும் அந்தக் கோலத்தில் பார்த்தபோது எனக்குள் எந்த வியப்பும் உண்டாகவில்லை.

அவருடைய கைக்கக்கத்தில் சுருட்டிய ஒரு வெள்ளைத்துண்டு இருந்தது. அவருடைய கட்டிலின் முன்னால் மூன்று பக்கங்களிலும் ஆண்களும் பெண்களும் மண்டியிட்ட நிலையில் உட்கார்ந்திருந்தார்கள்.  கட்டிலின் பின்புறம் ஒரு திரைச்சுவர் போல இருந்தது. இரவும் பகலும் பக்தியுடன் கூடும் பொதுமக்கள் எப்போதும் காணத்தக்க நிலையில் உட்கார்ந்திருந்த அந்த மகானைப் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் எப்போதும் நான் கண்டதில்லை.

மகரிஷியின் உட்காரும் இடமாகவும் படுக்கையாகவும் இருந்த அக்கட்டில் மிகப்பெரிதாக இருந்த அக்கூடத்தின் இறுதிப்பகுதியில் இருந்தது. பெரும்பாலான நேரத்தில் அந்தக் கூடம் ஆட்களால் நிறைந்தே இருந்தது. அனைவரும் ஆழ்ந்த அமைதியுடன் உட்கார்ந்திருப்பதால், உள்ளே நுழையும் வரை அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் இருப்பை நம்மால் உணரவே முடியாது.  அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்த பிறகும் கூட கூட்டத்துக்கு நடுவில் இருக்கிற உணர்வே மனத்தில் எழுவதில்லை.  அங்கே கூடியிருக்கிற ஒவ்வொருவரும் உள்முகமாக மனத்தைக் குவித்து ஆழ்ந்த அமைதியில் உட்கார்ந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

சிலர் தம் கண்களை வெறுமனே மூடிய நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். பலர் தூங்கி வழிந்தார்கள். ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் ஒரு புத்தகத்தைப் படித்தவண்ணம் உட்கார்ந்திருந்தார்.  ஒருவேளை அது பைபிளாக இருக்கலாம். கையில் ஜெபமாலையை உருட்டி மணிகளைக் கணக்கிட்டபடி ஒரு முஸ்லீம் பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய உதட்டசைவு மூலம் மிக மெதுவாக எதையோ முணுமுணுப்பதை அறிந்தேன்.  அச்சான ஒரு புத்தகத்திலிருந்து எதையோ பார்த்துப் பார்த்து தம் நோட்டு ஒன்றில் பிரதியெடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதிய பெண்மணி. சிவந்த முகம்கொண்ட ஒரு அமெரிக்கன் உருக்கமாகக் கண்ணீர் விடுவதையும் அடிக்கடி பெருமூச்சு விடுவதையும் மூக்கை உறிஞ்சிக் கொள்வதையும் பார்த்தேன்.

மகரிஷி நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்.  எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவரைப் போலக் காணப்பட்டார் அவர்.  அவர் தலை மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவரைக் கண்டதும் என் முதல் மனப்பதிவில் ஏதோ ஒரு நோயால் அவதிக்குள்ளான ஒரு முதியவராகவே அவர் தெரிந்தார்.

என் மனதுக்குகந்த மகானாக அந்தக் காலத்தில் இருந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரைப் போலவே நானும் இந்தியாவின் ஏழ்மையைப் பற்றியும் அறியாமை பற்றியும் கவலை கொண்டிருந்தேன்.  அவரைப் போலவே நானும் இந்தியாவின் சோர்வை உதறித் துடித்தெழுந்து மக்கள் கூட்டத்துக்கு நன்மை பயக்கும் பல நல்ல செயல்களை ஆற்றக்கூடியவனாக என்னைப் பற்றி கற்பனை செய்திருந்தேன். ஆகவே அந்த இடத்தில் இருந்த அமைதியைப் பற்றியும் வேகமின்மையைப் பற்றியும் வருத்தப்பட்டேன். இந்தியாவின் செயலின்மையின் மொத்தக் குறீயிடாக மகரிஷி என் முன்னால் அமர்ந்திருந்தார்.

ஒரு கணம் அவரைக் காண அங்கே நான் வந்ததைப் பற்றி வருத்தமுற்றேன். செல்வம் மிக்கதாகவும் அழகானதாகவும் இந்தியாவை மாற்றக் கடுமையான உழைப்பைச் செலுத்துமாறு மக்களைத் தூண்டுவதை விட்டுச் செயலற்று உட்கார்ந்திருக்கும் ஒருவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு பெரியபேச்சைப் பேசுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.  சூரியன் மறையப் போகும் நேரத்தில் மகரிஷி எழுந்து வழக்கமான தன் மாலைநடைக்குப் புறப்பட்டார். மலையைச் சுற்றிலும் நடப்பது அவருடைய நீண்ட நாளையப்பழக்கம் என்று ஏற்கனவே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்த வேளையில் மிகச் சிறிய தொலைவே அவர் நடந்தார்.  பிறகு ஒரு பாறையில் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

இடமாற்றம் ஒன்றைத் தவிர அவர் அப்பாறையின் மீதும் அப்படியே இருந்தார்.  கூடத்தில் செய்ததைப் போலவே, தொடர்ந்து வந்த மக்கள் அனைவரும் அங்கும் உட்கார்ந்தார்கள்.  திறந்தவெளியிலேயே ஒரு சிறிய குளியலுக்குப் பிறகு மறுபடியும் தம் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார் அவர்.  தைத்திரிய உபநிடதத்திலிருந்து பிருகுவள்ளிப் பகுதியைச் சில பிராமணர்கள் அவர் முன்னால் உட்கார்ந்து படித்தார்கள். என்னால் உடனடியாக அடையாளம் கண்டுணர முடியாத சில வேத மந்திரங்களையும் அவர்கள் படித்தார்கள்.  மொத்தச் சூழலிலும் ஒரு வாட்டம் படிந்திருந்தது. மகரிஷி ஒரு பெரிய சோம்பேறி என்கிற எண்ணம் மட்டும் என் மனத்தில் தொடர்ந்தபடி இருந்தது.

திருவண்ணாமலையில் காலைநேரம் மிகவும் புத்துணர்வு கொடுக்கக் கூடியதாவும் உயிர்த்தன்மையோடும் இருந்தது.  இரவு மிக வேகமாகக் கவிழ்வது போல இருந்தது. அதைத் தொடர்ந்து தம் தங்கக் கதிர்க்கைகளால் அனைத்தையும் தழுவியவண்ணம் சூரியன் எழுந்து வந்தான்.  கூடவே இனிமையான மந்திர கோஷம் எழுந்தது.

ஆசிரமத்துக்குள் முதல் ஆளாக நுழைந்ததும் மகரிஷியின் முன்சென்று தலைதாழ்ந்து வணங்கினேன். ஆனால் அவர் என்னை கவனிக்கவில்லை. சுயமரியாதையும் வீம்பும் மிக்க இளைஞனாக இருந்த நான் என் அழகான உச்சரிப்பால் கீதையை வாசித்து எல்லாரையும் கவர எண்ணினேன்.  சில நாட்கள் இந்தவிதமாகவே கழிந்தன.  எனக்கு மிகவும் அலுப்பாக இருந்தது.  எனவே, அந்த இடத்தைவிட்டுக் கிளம்பத் தீர்மானித்தேன். ஒரு துறவியைக் காணச்செல்லும் போதும் விடை பெறும்போதும் ஏதேனும் காணிக்கையோடு செல்வது இந்திய மக்களின் பழக்கமாகும். எனவே வெளியே சென்று, சில ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்து மகரிஷியின் முன்னால் வைத்தேன்.  அப்போதும் அவர் என்னை கவனிக்கவில்லை. உள்ளூர எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், அப்பழங்களை அவரது பாதங்களின் அருகில் வைத்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன். என்னை ஏதோ ஒரு நிழல் அல்லது செத்த பிணம் போல அவர் நடத்துவதாக நினைத்துக் கொண்டேன். அதைப்பற்றிய கடுமையான மனவருத்தம் எனக்குள் பொங்கியது.  அவருக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கையைக் கொடுத்தபிறகு உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

காரணத்தோடோ அல்லது காரணமின்றியோ, சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து செல்ல வேண்டும் என்று தோன்றியதால் உட்கார்ந்தேன்.  என்ன அதிசயம். மகரிஷியின் பார்வை என் மீது படிந்தது. என் தலைமீது அப்பார்வை பரவியது.  என் தலை குலுங்குவதைப் போலிருந்தது. அவர் என் கண்களுக்குள் நேராகப் பார்ப்பது போலத் தோன்றியது. இருவிதமான காந்தங்கள் என்னை ஒரே நேரத்தில் வலிமையாகக் கவர்ந்திழுப்பதைப் போல!  என் இதயத்தின் நடுப்பகுதியைத் தாக்குவதை உணர்ந்தேன்.  சட்டென, என்னைச் சூழ்ந்திருந்த பகுதி இருள்வதைப் போலிருந்தது.  மயக்கம் வருவது போலவும் இருந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது.  என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.  மிகவிரிந்த இருள்வெளியில் என் சுயஉணர்வென்னும் சுடர் அசையாமல் எரிவதைப் போலத் தோன்றியது.

நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்தை நோக்கிய ஒரு தாவலும் அலசலும் எனக்குள் நிகழ்ந்தது.  நான் உலுக்கி எழுப்பப்படும் வரையில் என் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் மனக்கண் முன்னால் வேகமாக அசைந்து நகர்ந்தன.  என் தாயின் கருப்பைக்குள் உறங்கும் கருவாகவும் பிறகு சட்டென ஏதோ உச்சியில் இருந்து வீசப்படும் ஒன்றாகவும் மாறிமாறி உணர்ந்தேன்.  என் தாய் ஒரு பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தபோது, சட்டென எதிர்பாராத நேரத்தில் அப்பாலம் இடிந்து விழுந்துவிட, பாலத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த ஓடைக்குள் அவள் சரிந்து விழுந்த சம்பவம் நடந்த தருணத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் என் காதில் ஒலித்தன. அவள் தன் வயிற்றில் கருவாக என்னைச் சுமந்து கொண்டிருந்த காலம் அது.

யாரோ என் முதுகில் தட்டி எழுப்பினார்கள்.  நான் எனது சுயஉணர்வை அடைந்தேன். என் முன்னால் மகரிஷியைக் காணவில்லை. கூடத்தில் இருந்த அனைவரும்கூட வெளியேறிவிட்டிருந்தனர்.  எல்லாரும் உணவுண்ணும் கூடத்துக்குச் சென்றிருந்தார்கள். நானும் மெல்ல நடந்து உணவுண்ணும் கூடத்தை அடைந்தேன்.  நான் உள்ளே நுழைந்த தருணத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் மகரிஷிக்கு வலப்புறம் இருந்த இலைக்கு அருகே இருந்த இடம் காலியாக இருந்தது. என்னை அங்கே சென்று உட்காரச் சொன்னார்கள்.  உணவு பரிமாறப்பட்டபோது மகரிஷி என் இலையைப் பார்த்தார். தமக்கு வழங்கப்பட்ட எல்லா உணவு வகைகளும் என் இலையிலும் பரிமாறப்படுகிறதா என்று கண்காணிப்பது போல இருந்தது அப்பார்வை.

அந்தத் தருணத்திலிருந்து மகரிஷி ஒரு சாதாரண ஆளாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய இருப்பு மிகப்பெரிய பேரிருப்பாகத் தோன்றியது. எங்கெங்கும் நிறைந்திருக்கக் கூடிய இருப்பாக – எதைக் காண வேண்டும் என்று நான் ஆவலுற்றிருந்தேனோ அத்தகு பேரிருப்பாக – அவர் தோன்றினார். அதற்கப்புறம் அவரைப்பற்றி நினைக்க எந்த முயற்சியும் எனக்குத் தேவைப்படவில்லை. மிகப்பெரியமனிதர் ஒருவரைப் பற்றிய நினைவுக் குறிப்போ அல்லது மறக்க முடியாத ஒருவருடன் கழித்த நெருக்கமோ அல்ல. புரிந்து கொள்பவனுக்கும் புரிந்து கொள்ளும் விஷயத்துக்கும் இடையே இருக்கும் இருமை அழிந்து ஒருமையாக மாறும் நிலையே ஆகும்.

இதுதான் முதல்முறையாக ரமணமகரிஷியை நான் சந்தித்த அனுபவம். இதற்குப் பிறகு  அவரைக்காண, அவர் சமாதிநிலையை எய்துவதற்குச் சில நாட்கள் வரை, பலமுறை சென்று வந்தேன்.

தமிழாக்கம்: பாவண்ணன்

பொருந்தாத மகுடம்

Standard

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை.  அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை.  ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார்.  தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார்.  அதற்குப் பிறகு அவர் தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார்.

என்னாலும் அதைப் போலச் செய்யமுடியும் என்று நினைத்தேன்.  ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன்.  ரமண மகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை.  யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை.  அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதை தடுத்ததுமில்லை.  எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன்.  திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன்.  அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.

துறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன்.  என் அப்பா வீட்டில் இல்லாத நேரம்.  எப்போதும் வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார்.  என் அம்மாவிடம் நான் துறவுமேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன்.  அதைக்கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது.  புன்சிரிப்புடன் தன் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர்.  “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயண குருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்”  என்று மேலும் சொன்னார் அவர்.  என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன்.  பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.

அந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு.  அவர் பெயர் ஜெயராம்.  அதற்கு முன்னால் ஒருமுறை சென்றிருந்தபோது மற்றொருவரும் நண்பரானார்.  அவர் பெயர் ஶ்ரீராம்.  அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.  தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா.  அவர் சுவாமி ராமதாஸ் அவர்களின் சீடர்.  அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகச் சுற்றியலைந்தோம்.  ஶ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் என அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

ஜெயராம் சுவாமி ராமதேவானந்தா என்று பெயரை மாற்றிக்கொண்டார்.  ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் பெயரால் அழைத்து துறவு வழங்கவேண்டும் என்றும் சொல்லி வைத்தேன்.  பிரம்மசாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் அவர்.  சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

சுவாமி என்கிற சொல்லுக்கு பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன்.  ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார்.  ஆனால் மக்கள் என்னை சுவாமி என்கிற ஒட்டுச் சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள்.  அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள்.  உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லை பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக்கொண்டேன்.  அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது.  நான் யாரையும் சீடராக வரித்துக் கொள்ளவில்லை.  என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம்போல் என் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது.

பல்கலைக் கழகத்திலிருந்து ஆன்மீக அனுபவத்தை நோக்கி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.  என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான்.  ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாக தன்னைத் தானாக வளர்த்துக்கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜ குரு ஒருமுறை குறிப்பிட்டார்.  உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான்.  எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை.  உலக வாழ்வை எல்லோரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.

“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும்.  நாடக மேடையில் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும்.  ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜ குரு சொன்ன ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக்கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின  என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.

பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கி விட்டன.  வெறும் கல்லூரிப் பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை.  தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டி பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன்.  என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள்.  ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் அடைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழ் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை.

தேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப்போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது.  ஶ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர்.  வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.

இதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காதுகொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது.  ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர்.  மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்கு பாடங்ளை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன்.  வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டியல் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாக கவனிப்பதில்லை என்பதால் போராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர்.  இந்தியப் பல்கலைக்கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாட்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.

இந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார்.  ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார்.  ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது.  என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.

துறவிக்கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது.  என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன்.  ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளை தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தார்.

இரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச் செல்ல நினைத்திருந்தேன்.  அந்த நாட்களில் பல்கலைக்கழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய மேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கிவிடுவேன்.  அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டுகொண்டே இருந்தார்.  என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்டவண்ணம் இருந்தது.  அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.

ஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது.  என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை.  கேள்வித்தாளை ஒருமுறை பார்த்தேன்.  எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன.  ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது.  மூளையில் எதுவும் தோன்றவில்லை.  மேசை மீது தடித்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்து தூங்கிவிட்டேன்.

மாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார்.  எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர்.  அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.  முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.  அவர் என்னைப் புரிந்துகொண்டார்.  அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார்.  ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன்.

தேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இருஜோடி துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நான் வைத்திருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட நினைத்தேன்.  என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும், கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.  நேர்முகத் தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார்.  அவருடன் வேறு வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர்கள் வெளியே வந்து என்னை வாழ்த்தினர்.  நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்றும் யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார் அவர்.  அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டது.  இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலை பட்டப்படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்துகொள்ள முடியும்.

என் எதிர்காலத் திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார்.  எந்த நோக்கத்துக்காக தத்துவத்தைப் பாடமாக எடுத்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன்.  அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே தன் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார்.  கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார்.  “கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார்.  சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லோரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும்.  எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு.  இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே.  பிளேட்டோ, சங்கரர், ஹெகல் என எந்தத் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை.  அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவ ஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.

“ஒரு தத்துவஞானியின் கையில் தர்க்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும்.  ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக் கொள்ளக்கூடாது” என்றும் எச்சரித்தார்.  இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும், எனக்கு முழுக்க முழுக்க தெரிகிற விஷயத்தையே மற்றவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றும் சொன்னார்.

என்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார்.  அவர் காலில் விழுந்து வணங்கினேன்.  ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார்.  அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.

கன்னியாகுமரிக்குச் சென்று மூன்றுநாட்களில் திரும்பி வரும்படி டாக்டர் மீஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார்.  இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன்.  திரும்பிவரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன்.  என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே இருந்தன.  கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடு இருந்தது.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது.  அப்பயணத்தின்போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன.  எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது.  கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிப்புரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் வாழும் ஆசிரமம் ஆகிய இடங்களில் தங்கினேன்.

செங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன்.  அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது.  மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது.  அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்.  பல கோயில்களுக்குச் சென்றேன்.  அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றை சேகரித்தேன்.  அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் குறிப்பேட்டில் தீட்டிக்கொண்டேன்.

முடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது.  வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன்.   சிறிய கோயிலாக இருந்தாலும் சரி பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன்.  வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன்.  மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை.  ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச்சென்று உபசரித்தார்கள்.  இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை.  அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுளரின் சக்தி தொடர்பான நம்பிக்கைகள் அவர்களுக்கும் இருந்தன.

அந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது.  அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புது மனிதனை நான் சந்தித்தேன்.  ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன்.  பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது.  ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உட்செரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள்.  அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுதுண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.

(Love and Blessings : The Autobiography of Guru Niya Chaitanya Yati.  Edited by Peter Oppenheimer)

தமிழில்: பாவண்ணன்

நடராஜ குருவும் நானும் – 12

Standard

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கால் கழுதைகளைப் போலிருந்தது.  “புனித ஃப்ரான்சிஸ் தன் உடலை ‘என் சகோதரக் கழுதை’ என்று சொல்வது வழக்கம்.  அதையே நாம் நம்மைப்பற்றி இப்போது எந்த மிகையும் இல்லாமல் சொல்லிக் கொள்ளலாம்” என்றார் குரு.  சோமனஹள்ளியின் மண், களியும் மணலும் கலந்த கலவை.  ஈரமாயிருக்கும்போது தளர்ந்தும், காய்ந்துவிட்டால் உலோகம் போல் கடினமாகவும் இருக்கும்.  மேஸ்திரி இல்லாமல் ஒரு சுவர் எழுப்புவது எப்படி என்று குரு செய்து காண்பித்தார்.  தினமும் காலையிலும் மாலையிலும் ஓரிரு மணி நேரம் சமையலறை சுவர் கட்டும் வேலையை நாங்கள் செய்தோம்.  சிறிய திறப்புகளில் உடைந்த கண்ணாடியைப் பதித்து எப்படி ஜன்னல்களை அமைக்கலாம் என்பதை செய்து காட்டினார்.  ஒவ்வொரு முறையும் கல்லையும் மண்ணையும் வைக்கும்போது குமரன் ஆசானின் ‘துராவஸ்தை’யில் வரும் இவ்வரிகள் என் நினைவுக்கு வந்தன:

 குன்றின் மேல் நிற்கும் குடைசாய்ந்த குடில்

வெளிறிய நாய்க்குடை போல

அருகே செல்லச் செல்ல

கண்ணை இன்னும் உறுத்துகிறது

வட்டமாக இல்லை

கோண வடிவில் இல்லை

சதுரமாகவும் இல்லை

கட்டடக் கலையின் எந்த அம்சமும் இல்லை

சுற்றிலும் ஓரடி உயரத்தில்

கோரமான மண் சுவர்

யாருக்கும் அதை பூச வேண்டும் என்று தோன்றவில்லை

கட்டியவனின் கைரேகை கூட அதில் பதிந்திருக்கிறது

பாதி சுவரைக் கட்டி முடித்தபோது, குருவுக்கு எங்கோ செல்ல வேண்டும் என்று தோன்றியது.  அதற்குள் மண் சுவர் எழுப்புவதில் நான் தேறியிருந்தேன்.  குரு கிளம்புவதற்கு இரு நாட்களுக்கு முன்பு புஷ்பாங்கதன் என்னும் சிறுவன் வந்து சேர்ந்திருந்தான்.  வேலையை முடிப்பதற்கு எனக்குத் துணை இருந்தது.

குரு என்னுடன் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு மாலைப் பொழுதும் காதலர்களின் மாலையைப் போல் அமைந்தது.   தெருவோரமாக இருந்த ஆல மரத்தினடியில் ஒரு கற்பலகை இருந்தது.  அதன்மீது இரவு ஒன்பது மணிவரை கூட அமர்ந்துகொண்டிருப்போம்.  சீரகமும் வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீர் எப்போதும் இருக்கும்.  எங்கள் சீரகத் தேநீரை சிறிது சிறிதாக இடைவிடாது பருகிக்கொண்டிருப்போம்.  ஒவ்வொரு மாலையும், குரு தான் நாராயண குருவுடன் கழித்த நாட்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார்.  நாராயண குருவின் மகத்தானதும் அதே சமயம் பரிதாபகரமானதுமான பின்புலத்தைப் புரிந்து கொள்ள அது எனக்கு மிகவும் உதவியது.

நாராயண குருவின் எழுத்துக்களில் உள்ள பல மறைபொருட்களை குரு என்னுடன் பகிர்ந்துகொண்டார்.  பிற பெரும் அறிஞர்களுடைய போதனைகளுக்கு ஈடானதும் அவற்றை விஞ்சக் கூடியதுமான அவை, குருவின் பெருமையை உணர்த்தின.  நாராயண குருவுடன் ஒட்டிக்கொண்டிருந்த சாதியினரின் முரட்டுத்தனம், கீழ்மைகள் மற்றும் முட்டாள்தனத்தைப் பறைசாற்றும் பல சம்பவங்களை குரு விவரித்தார்.  இவர்கள் நாராயண குருவின், ‘ஒரே குலம், ஒரே மதம், ஒரே தேவன்’ என்ற மந்திரத்தை அடிக்கடி சொன்னாலும், தங்களது சாதியுணர்வில் மூழ்கியவர்களாகவே இருந்தனர்.  அவர்களது சாதிப் பித்தினால் பிற சாதியினரில் எவரையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை.  மொத்த சாதியுமே ‘அடக்குமுறைப் பித்து’ கொண்டதாய் இருந்தது போலும்.  தங்கள் வாழ்வில் நிகழும் எதையும், ‘சவர்ணத்தவர்’ என்று அவர்கள் இழிவாகக் குறிப்பிடும் மக்களால் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறையாகவே கண்டனர்.  அது தீர்க்கப்படமுடியாத கூட்டு நனவிலி நோய் என்று குரு கருதினார்.  குரு தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை பெருமையுடன் நினைத்தவர்களே, கள்ளிறக்குதலும், பதநீர் காய்ச்சலும் இழிவான தொழில் என்று கருதினர்.  கேரளத்தவர்கள் எப்போதும் ‘கர்மபூமி’யைச் சேர்ந்தவர்கள்.  ஆன்மீகத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  சங்கரரே, இதனால்தான் இந்தியாவின் வடவெல்லைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

எங்களது மாலைகள் மூன்று மணிநேர இரவு வகுப்புகள் போலிருந்தன.  சமூகவியல், இந்திய கலாசார பாரம்பரியம், இந்திய குருமார்களின் சிலுவையேற்றம் – இவற்றிலெல்லாம் நான் புதிய புதிய பாடங்களை கற்றபடி இருந்தேன்.  குருமார்கள் தோற்கடிக்கப்படுவது சிலுவையில் அறையப்படுதல் மூலமல்ல; முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருவராக பீடத்தில் ஏற்றப்படுவதன் மூலம்.  நாராயண குரு மீதான பக்தி வழிபாட்டிற்கு எந்தக் குறையும் இல்லை.  ஆனால், ஒரு உண்மையான ஞானி என்ன சொல்கிறார் என்பதை அறிவுபூர்வமாக கேட்டுக்கொள்ள எவரும் இல்லை.  எஸ்.என்.டி.பி. யோகம் – அது அவரது தந்தையால் துவங்கப்பட்டதாக இருந்தபோதும் – முழுக்க முழுக்க ஒர் சாதீய நிறுவனம் என்பதை குரு எனக்கு விளங்க வைத்தார்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நாராயண குருவைப் பற்றிய என் புரிதல் விரிந்துகொண்டே சென்றது.

நடராஜ குருவும் நானும் – 11

Standard

சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார்.  குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன்.  இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார்.  இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது.  நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின.  ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது.  நம் தந்திரத்தை மாற்றி அவற்றை குழப்ப வேண்டும் என்றார் குரு.  அவற்றை விரட்டுவதற்கு பதிலாக, அவற்றுக்கு வேர்க்கடலை தர வேண்டும் என்றார்.  இது குரங்குகளிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்றாலும், எந்த ஒரு துன்பத்தையும் ஒருவிதமான பகடியாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன்.

யெங்டாவை குருவுக்கு மிகவும் பிடித்துப்போனது.  குரங்குகள் என் உணவை உண்டதும் அரிசியில் மூத்திரம் பெய்ததும் சரியானதா என்று அவனிடம் கேட்பார். “அவை பசித்திருந்ததால் உணவை உண்டது சரிதான்.  ஆனால் மூத்திரம் பெய்தது தவறு” என்பான் யெங்டா.   இதைக் கேட்டு குரு அடக்க மாட்டாமல் சிரிப்பார்.  ஒரே நாளில், பல முறை அவனது தீர்ப்பை சொல்ல வைத்து, மீண்டும் மீண்டும் சிரிப்பார் குரு.  ஒருவிதமாக, குரங்குகளுக்கு நான் பழகிப்போனேன்.

குரு வந்தபிறகு எங்களது மதிய உணவு கொஞ்சம் விமரிசையானது.  நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே அமர்ந்து உண்போம்.  முதல் நாள், குரு யெங்டாவிற்கு அரிசிச் சோற்றை கொடுத்தபோது யெங்டா, “அரிசிச் சோற்றை உண்ண வேண்டும் என்பது என் தலைவிதியா?” என்று கேட்டான்.  இதைக் கேட்ட குருவின் கண்கள் கலங்கிவிட்டன.  அவன் கன்னடத்தில் சொன்னதை தானும் ஒரு முறை சொல்லிவிட்டு அதை மலையாளத்தில் எனக்கு மொழிபெயர்த்தார் குரு.  “இவனுக்கு நேர்ந்த துயரைப் பார்.  இதற்கு முன் அவன் அரிசிச் சோறே தின்றதில்லை. அவனுக்குக் கிடைப்பது வெறும் கேப்பைக் களி மட்டுமே.  அரிசிச் சோறு தின்பது அவனுக்குத் துயரமாய் இருக்கிறது” என்றார்.  பின்னர் என்னிடம் “செல்வம் எங்கிருந்து வருகிறது?” என்று கேட்டார்.  நான் மெளனமாயிருந்தேன்.  குரு தொடர்ந்தார், “ஆடு மேய்க்கும் இந்த யெங்டாவிடமிருந்து வருகிறது.  பால், கம்பளி, மாமிசம், தோல் – எல்லாம் ஆட்டிடமிருந்து.  அதே போல், கம்பு, சோளம், கோதுமை, பார்லி, கேப்பை – எல்லாம் விளைவிக்கும் ஏழை விவசாயியின் கைகளிலிருந்து.  இதுவே செல்வத்தின் ஆதாரம்” என்றார்.

அடுத்த இரண்டு வாரங்களில், இவ்விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினார் குரு.  மார்க்ஸ் மேலும், மார்க்ஸியப் பொருளாதாரம் மேலும் நான் முன்னர் கொண்டிருந்த பற்றினை குரு அறிவார்.  ஒரு வாரம் கழித்து, “நீ உலகை மாற்ற விரும்பினால், முதலில் அதன் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்.  செல்வக் குவியலும் இல்லாமையும் அருகருகே இருக்க முடியாது.  இருக்கவும் கூடாது” என்றார்.  உலகப் பொதுமைப் பொருளாதாரம் குறித்து ஒரு புத்தகம் எழுதுவதென் முடிவு செய்தார் குரு.  பசியாலும் ஊட்டமின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்த யெங்டா நீண்ட நாட்கள் வாழவில்லை.  ஆனால், அவன் மூலம் நான் அடைந்த அகத்தூண்டல், வாழ்வு மீதான என் பார்வையில் அதி முக்கியமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.  நடராஜ குரு யெங்டாவை அன்புடனும் பாசத்துடனும் நடத்தியவிதம் என்னுள் இன்றும் இனிமையான நினைவாகத் தொடர்கிறது.

நடராஜ குருவும் நானும் – 9

Standard

அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன்.  அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான்.  போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு.  எனக்கு அளவில்லா கோபம் வந்தது.  என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்கு குரு, “அப்படியானால் சரி, அந்தப்  பைகளை எடுத்து உள்ளே வை” என்றார்.  யாரோ எடுத்து வைத்தார்கள்.  நான் வெளியே செல்வதைப் பார்த்து வாசலுக்கு வந்த குரு, “நீ சுத்த பைத்தியம்.  ஒரு பைத்தியக்காரனை சமூகத்தில் உலவ விடுவது ஆபத்தானது” என்றார். “சர்க்கஸ் புலியை தெருவில் விட சர்க்கஸ் முதலாளி அனுமதிப்பானா? அப்படித்தான் இதுவும், நான் சர்க்கஸ் முதலாளி, நீ முரட்டுப்புலி.  கூண்டுக்குள்ளே போ!”  இச்சொற்களை நான் ரசிக்கவில்லை.  நான் தெருவிலிறங்கி நடக்க ஆரம்பித்தேன்.  குரு பின்னாலேயே வந்து என் கையைப் பற்றி, “உண்மையாகவே நீ போகத்தான் வேண்டுமென்றால், நீ போவதற்கு முன்னால் உனக்கான தண்டனையை நான் கொடுக்க வேண்டும்” என்றார்.  “தாராளமாக” என்றேன்.  என் வலது கன்னத்தில் இரண்டு முறை அறைந்தார்.  சரியான கிறித்தவனைப் போல, எனது மறு கன்னத்தையும் காட்டினேன்.  எனது இடது கன்னத்திலும் அறைந்தார்.  பாதி கெஞ்சலாகவும் பாதி வாழ்த்தாகவும் ஒலித்த குரலில், “வேறு யாரும் உன்னை அடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் உன்னை அடிக்கிறேன்” என்றார்.  நான் தொடர்ந்து நடந்தபோது, மிகவும் மிருதுவாக என் கையைப் பற்றி, “எங்கு போனாலும் ‘அலபமாத்ர அகிலம்’ என்பதை மட்டும் மறக்காதே.  பிறர் சொல்வதாக நாம் காதில் கேட்பது காற்றில் எழும் ஒரு அதிர்வு மட்டுமே.  அது பாராட்டாகவோ குற்றச்சாட்டாகவோ ஒலிக்கலாம்.  ஒன்றுக்கொன்று முரண்பட்டதை இல்லாமலாக்கி தன் சமநிலையை இழக்காமலிருப்பதே உண்மையான ஆன்மீகம்” என்றார்.  என் கால்கள் தடுமாறின.  என் கோபம் காணாமல் போனது.  அமைதியும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வும் தோன்றியது.  ஆனால் எப்படியும் நான் போய்விடுவது என்று தீர்மானித்தேன்.

நாள் முழுவதும் இலக்கின்றி அலைந்தேன்.  அப்போது உலகப்புகழ் பெற்ற போதகர் பில்லி க்ரஹாம் என்பவரின் உரையைக் கேட்பதற்காக கோட்டயம் சென்றுகொண்டிருந்த ஒரு கிறித்தவ நண்பரைப் பார்த்தேன்.  மறுநாள், மேடையில் பில்லி க்ரஹாம் தோன்றுவதற்காகக் காத்திருந்த லட்சக்கணக்கானவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன்.  மொத்த ஏற்பாடுகளும், மேடையில் பேச்சாளர் தோன்றிய விதமும் அற்புதமான ஒரு நாடகம் போலிருந்தது.  மீண்டும் நான் ஏமாற்றப்பட்டவனாகவும் தெளிவடைந்தவனாகவும் உணர்ந்தேன்.

என் சொந்த கிராமத்திற்குச் சென்று, ஆசிரமம் போல் நான் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே என் வீட்டில் தனியாகக் கட்டப்பட்ட அறைக்குள் சென்று மெளனத்தில் ஆழ்வதற்கு என் தாயின் சம்மதத்தைக் கேட்டேன்.  இது போன்ற நேரங்களில் என் தாயார் எப்போதும் தைரியமாகச் செயல்படுவார். வார்த்தைகளை வீணாக்காமல் நான் ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தார்.  நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள அத்தனி அறையில் நுழைந்து கதவை மூடிக்கொள்வதைக் காண மிகப்பெரிய கூட்டம் ஒன்று ஆசிரமத்திற்கு வந்தது.  ஒரு மாதம் கழிந்த பின்னர் வர்க்கலையிலிருந்து இருவர் என்னைக் காண வந்தனர்.  நான் அறையிலிருந்து வெளிவராததால், நான் குருகுலத்தில் விட்டுவந்திருந்த எனது நோட்டுப் புத்தகங்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.  தனிமையில் நான் இருந்த முதல் மாதத்தில் எனது பழைய சம்ஸ்காரங்கள் அனைத்திலிருந்தும் என்னை துண்டித்துக் கொள்ள நினைத்தேன்.  ஆதலால், எதையும் படிக்கவோ எழுதவோ யார் முகத்திலும் விழிக்கவோ மறுத்தேன்.  நான் அங்கேயே தனிமையில்-மெளனத்தில் பதினெட்டு மாதங்கள் இருந்தேன்.

மக்களிடமிருந்து விலகி நான் தனிமையில் ஆழ்ந்த போது, அருகாமையில் இருந்தவர்களில் 80 சதவீதம் மக்கள் என்னை முழுப் பைத்தியம் என்று கருதினர்.  ஆனால், மக்களின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.  நான் இன்னொரு சாய்பாபா ஆகிவிடும் அபாயம் எனக்குத் தெரிந்தது.  இதனால் ஆசிரமத்தை விட்டு இமயமலைக்குச் செல்ல நினைத்தேன்.  போவதற்கு முன் மீண்டும் மெளனமாக நடராஜ குருவின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வர்க்கலைக்குச் சென்றேன்.  குரு மற்றவர்களுடன் அமர்ந்து கஞ்சி அருந்திக் கொண்டிருந்தார்.  கதவருகில் என்னைக் கண்டதும் எழுந்து ஓட்டமும் நடையுமாக வந்தார்.  விழுந்து வணங்கிய என்னைத் தூக்கி நிறுத்தி சத்தமாக “இதோ மனம் திருந்திய மைந்தன் (Prodigal Son) திரும்ப வந்துவிட்டான். இதை ஓவியமாக்க மைக்கலேஞ்சலோ இல்லையா?” என்றார்.

மறுநாள் காலை நடராஜ குருவின் பிரார்த்தனை வகுப்பில் கலந்து கொண்டேன்.  ‘ஆத்மோபதேச சதகத்தின் முதல் சுலோகத்தில் வரும் ‘கரு’வின் முக்கியத்துவம் யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டார்.  என்னை நோக்கி கேட்கப்பட்டது அந்தக் கேள்வி. ஸ்பினோசாவின் கருவைப் போன்றது அது என்பதை சொல்ல நினைத்தேன்.  ஆனால் என் மெளனத்தைக் கலைத்துக் கொள்ள விரும்பவில்லை.  எனக்குள் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தை என் கண்களில் கண்டார் போலும். குரு சொன்னார், “நித்யா பேசியிருந்தால், ‘ஸ்பினோசாவின் கரு’ என்று சொல்லியிருப்பான்.”  கருவின் அர்த்தத்தை விவரமாக சொன்ன குரு அது வைசேஷிக தத்துவத்தின் ஒரு பிரிவிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதையும் விளக்கினார்.  வகுப்பு முடிந்ததும், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, சம்பிரதாயமாக விடையேதும் பெறாமல் தெருவில் இறங்கி நடந்தேன்.

ரயிலேறி திருவனந்தபுரம் சென்று, மருத்துவக் கல்லூரியில் பயிற்சி (residency) மேற்கொண்டிருந்த என் சகோதரியைப் பார்த்தேன்.  நான் மெளனமாக இருந்தது அவருக்கு வருத்தமளித்திருக்கும் போலும்.  அவரும் எதுவும் பேசவில்லை. நாராயணகுரு எழுதிய புத்தகங்கள், எனது நோட்டுப் புத்தகம், பைபிள், கீதை மற்றும் Altar Flowers – இவை கொண்ட என் தோள் பையில் ஒரு காகித உறையை வைத்தார் என் சகோதரி.  மருத்துவக் கல்லூரியிலிருந்து மீண்டும் ரயில் நிலையத்திற்கு நடந்தேன்.  மிகவும் களைப்பாக இருந்த்து.  நோய்வாய்பட்டிருந்த திரு குஞ்ஞிகிருஷ்ணனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கடக்காவூர் செல்ல இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்க நினைத்தேன்.  கேரளாவிற்கு இனி திரும்பப் போவதில்லை என்று என் மனதிற்குத் தோன்றியது.  போவதற்கு முன் அந்த நல்ல மனிதரைப் பார்க்க வேண்டும் என எண்ணினேன்.  ரயில்பெட்டியில் ஏறும்போதே மிகவும் சோர்ந்திருந்தேன்.  சகோதரி கொடுத்த உறையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டேன்.  மீதம் 29 ரூபாய் இருந்தது.  ரயில் கடக்காவூரை அடைந்தபோது நான் நன்றாகத் தூங்கிவிட்டேன்.  அடுத்த நிறுத்தத்தில் பெரும் உலுக்கலோடு வண்டி நின்றபோது, விழித்துக் கொண்டு வெளியே பார்த்தேன் – அது வர்க்கலை!

செய்வதறியாமல் குழம்பி உட்கார்ந்து ரயிலில் ஏறுவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.  நான் கண்டது யாரை!  நடராஜ குருவல்லவா!  தன் தடி, பை, மேலங்கி, ஃப்ரெஞ்ச் வட்டத் தொப்பி இவற்றுடன் என் எதிரே வந்து நின்றார்.  என்னைப் பார்த்துவிட்டு என்னருகே வந்து அமர்ந்தார்.  நான் பேசுவதில்லை  என்பதால் அவரும் பேச விரும்பவில்லை.  “நீ என்னுடன் வருகிறாயா?” என்பதுபோல் கைகளால் சைகை செய்தார்.  நான் மிகவும் குழம்பிப்போய் தர்மசங்கடமாக உணர்ந்தேன்.  Hound of Heaven கவிதை என் நினைவுக்கு வந்தது.  “இதோ மீண்டும் அந்த வேட்டைக்காரன். இவரிடமிருந்து என்னால் தப்பவே முடியாது” என்று எண்ணிக் கொண்டேன்.  அவரிடம் முழுமுற்றாக என்னை ஒப்புக்கொடுப்பதே சிறந்தது என்று தோன்றியது.  டிக்கட் பரிசோதகர் அவ்வழியே வந்தபோது குரு அவரை அழைத்தார்.  பெங்களூர் கன்டோன்மென்ட் செல்ல எனக்கொரு டிக்கட் கொடுக்கும்படி அவரிடம் சொன்னார் குரு.  என்னைப்பார்த்து என்னிடம் பணம் உள்ளதா என்று சைகையில் கேட்டார்.  பயணக்கட்டணம் 29 ரூபாய் – சரியாக என்னிடம் மீதமிருந்த பணம்!  கொட்டாரக்கராவில் ரயில் நின்றபோது சுவாமி சங்கராரண்யா எங்களை சந்தித்தார்.  அவர் வாழைப்பழங்கள் கொண்டு வந்திருந்தார்.  அப்போது எனக்கு மிகவும் பசியாயிருந்தது.  நான் சாப்பிட்டேனா என்று குரு கேட்கவில்லை – நான் சாப்பிட்டிருக்க மாட்டேன் என சரியாக ஊகித்திருந்தார்.  பெரும் கருணையுடன் ஐந்து வாழைப்பழங்களை என்னிடம் தந்தார்.  வழக்கமாக ஒன்றே ஒன்றுதான் தருவார்.  வாழைப்பழங்களைத் தின்றுவிட்டு நான் உறங்கப் போனேன்.  ரயில் ஜோலார்பேட்டையை அடைந்தபோது குரு இரண்டு சிற்றுண்டிகள் வாங்கினார்.  மீண்டும் நான் குருவுடன் உண்ணத்தொடங்கினேன்.

நடராஜ குருவும் நானும் – 8

Standard

நான் சென்னைக்குத் திரும்பியபோது, விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி மாணவர்களை எதிர்ப்பில் ஈடுபடச் செய்த்து.  மொத்த கல்லூரியும் வேலை நிறுத்தத்தில் இறங்கியது.  சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு செல்லப்பெயர்கள் உண்டு – மாநிலக் கல்லூரியின் இளவரசர்கள் (Princes of Presidency College), ராணி மேரி கல்லூரியின் ராணிகள் (Queens of Queen Mary), பச்சையப்பாவின் ரெளடிகள் (Rowdies of Pachayappa), கிறித்தவக் கல்லூரியின் கனவான்கள் (Gentlemen of Christian College), விவேகானந்தா கல்லூரியின் சாம்பார்கள் (Sambars of Vivekananda College).  விவேகானந்தா கல்லூரியில் பயிலும், அமைதியை விரும்பும் சாதுவான பிராமண மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குபவர்களல்ல என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.  கல்லூரி நிர்வாகம் ஆடிப்போனது.  ராமகிருஷ்ண மடத்தின் பொதுச் செயலர் மாதவானந்த சுவாமி நேரடியாக பார்வையிட வந்தார்.  என்னிடம் பயின்ற தத்துவ மாணவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதைக் கண்டார். “இவ்வளவு சிறிய வகுப்பின் ஆசிரியர் ஒருவர் முழு கல்லூரியையும் பாதிப்பார் என்றால் அவர் நிச்சயம் தகுதி உடையவராகத்தான் இருப்பார்.  அவரை நிர்வாகம் வெளியில் அனுப்பக் கூடாது” என்றார் சுவாமி.  சுவாமி நியாயத்தின் பக்கம் நின்றது பெரும் ஆறுதலாக இருந்தது.  ஆனாலும், கோடை விடுமுறைக்குப் பின் நான் கல்லூரியில் இருந்து விலகிக் கொள்வதாக முதல்வரிடம் வாக்களித்தேன்.  அதன் பின் வேலை நிறுத்தம் இருக்கமுடியாது.

மீண்டும் வர்க்கலைக்குத் திரும்பிய நான் குருகுலத்தின் பன்முக வளர்ச்சிக்காக புத்தார்வத்துடன் பணியாற்றத் தொடங்கினேன்.  அப்போது, சிங்கப்பூரில் சர்வேயராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு குஞ்ஞுகிருஷ்ணன் என்பவர் இந்தியா திரும்பியிருந்தார்.  அவர் குருவைப் பார்க்க வந்தார்.  சிவகிரி மடத்திற்கும் சிவகிரி உயர்நிலைப் பள்ளிக்கும் இடையில் இருந்த அவருக்கு சொந்தமான ஒரு சிறு குன்றில் ‘ப்ரஹ்மவித்யா மந்திரை’ அமைக்க வேண்டும் என்று குரு விரும்பினார்.  தன்னுடைய மாணவர்கள் சிலரை அனுப்பி அளவுகள் எடுத்து எல்லைகளைக் குறிக்க ஏற்பாடு செய்தார் குஞ்ஞுகிருஷ்ணன்.  அதில் ஒரு துடிப்பான இளைஞன் எம்.என்.பிரசாத்.  பின்னொரு காலத்தில் நிர்வாகத் தலைவராகி வர்க்கலை குருகுலத்தை தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போகிறவர் அவர் என அன்று யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் மாலை இளைஞர்கள் எல்லோரும் சென்ற பிறகு, அவரும் நானும் அன்றிரவு அந்தக் குன்றில் தங்கலாம் என்றார் குரு. மலையின் முகடு செம்மண் பாறையால் ஆனது.  அகன்ற முந்திரி மரம் ஒன்று நிழல் பரப்பியிருந்தது.  எங்கள் பாய், தலையணை, போர்வைகளை எடுத்துக்கொண்டு அப்பாறை மீது உறங்கச் சென்றோம்.  அன்றிரவு, நாராயண குருவுக்கும் தனக்கும் இடையில் இருந்த மிக அந்தரங்கமான அனுபவங்களைப் பற்றிப் பேசினார் குரு.  கண்ணீர் பொங்க அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.  கடற்காற்றின் லயத்தில் நாங்கள் உறங்கிப்போனோம்.  காலையில் நாங்கள் கண்விழித்தபோது எங்களது பாய்களை வெள்ளெறும்புகள் தின்றிருந்தன.  போர்வைகளிலும் பெரிய துளைகள்!

கன்வ ஆசிரமத்தில் டாக்டர் மீஸுடன் தங்கியிருந்தபோது, டான் கோபா முகர்ஜியின் Face of Silence, மகேந்திரநாத் குப்தாவின் Gospel of Sri Ramakrishna, The Life of Sadhu Sunder Singh போன்ற பல புத்தகங்களைப் படித்தேன்.  அவை எல்லாம் என்னைப் பெரிதும் பாதித்தவை.  “உண்மையான குரு”, “உண்மையான சீடன்” பற்றிய வரையறை என் மனதில் இருந்த்து.  டாக்டர் மீஸை என் பிரியமான குருவாக வரித்தபோது என் அன்பு, இதயம், ஆன்மா அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்தேன்.  அவரைப் பற்றிய நினைவு எனக்கு மிகவும் புனிதமான ஒன்றாக இருந்த்து.  நடராஜ குருவுடன் இணைந்து அவரை என் குருவாக வரித்தபோது, அதேபோன்ற ஒரு வழிபாட்டு மனநிலையில் இருந்தேன்.  மகேந்திரநாத் குப்தாவைப் போலவே, நடராஜ குருவின் ஒவ்வொரு சொல்லையும் நான் பதிவு செய்துவந்தேன்.  இயேசு கிறிஸ்துவின் தூதர்களில் ஒருவன் போல் இருந்தேன்.  ஆனால் நடராஜ குருவுக்கு அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுதல் பிடிக்காது.  என்னைச் சீண்டி என்னிடமிருந்த அதிகப்படியான பக்தியை ஒழிக்க நினைத்தார்.  ப்ரார்த்தனை அறையில் குருவை தரையில் விழுந்து வணங்குவது என் வழக்கம்.  ஒரு நாளில் முதல் முறை சந்திக்கும்போதும் அவரோ நானோ எங்காவது செல்வதற்கு விடைபெறும்போதும் மட்டும் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினால் போதும் என்றார் குரு.

ஐரோப்பிய உயர்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் குறைகாணும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மீஸ் குடும்பத்தினரின் சொந்த ஊர்களான ராட்டர்டாம், ஆம்ஸ்டர்டாம் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசுவார் குரு. என்னைத் துன்புறுத்த டாக்டர் மீஸின் பெயரை இழுத்து, குருவைப் பற்றி நான் கொண்டிருந்த லட்சிய பிம்பத்தை உடைக்க முயல்வார்.  உண்மையில் குரு என்ன செய்ய நினைத்தார் என்பது எனக்குப் புரியாது.  அத்தகைய உரையாடல்களின் முடிவில் நான் கண்ணீர் சிந்துவதோ, என் இதயம் சுக்குநூறாக வெடித்து விடுமோ என்ற எண்ணத்துடன் அவ்விடத்தைவிட்டு அகலுவதோ நிகழும்.  நான் எப்போதும் அடக்கமாக, பணிவோடு இருப்பதை குரு விரும்பவில்லை.  அது வெறும் பாசாங்கு என்றே சொல்வார்.

சமையலறையில் உதவி செய்ய, பக்கத்திலிருந்த குடியிருப்புகளிலிருந்து சில இளம் பெண்கள் குருகுலத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.  ஒரு நாள் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.  விசாரித்தபோது குருகுலத்தில் இருந்த ஒரு பையன் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக புகார் கூறினாள்.  பிரம்மசரியமே உயர்ந்த லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு அது பேரிடியாக இருந்த்து.  நேராக குருவிடம் சென்று விஷயத்தை சொன்னேன். என் புகாரைக் கேட்ட குரு சிரித்துவிட்டு, “சுவாரசியமான விஷயம்.  நம் குருகுலத்தில் ஒரு கீசகன்!” என்று சர்வசாதாரணமாகக் கூறினார்.  பொதுவாக இத்தகைய விஷயங்கள் பிரார்த்தனைக்குப் பிறகு விவாதிக்கப்படும்.  குரு அன்று மாலை அவனைக் கண்டித்து குருகுலத்தில் இருந்து நீக்கி விடுவார் என நினைத்தேன். ஆனால், குரு காதலர் இருவரிடையே நிகழ்ந்த போராட்டம் பற்றிப் பேசினார்.  பெர்க்ஸனின் Two Sources of Morality and Religion பற்றியும் ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார். அன்றிரவு நான் மிகுந்த எரிச்சலடைந்தவனாக இருந்தேன்.  குரு பொறுமையிழந்து கூறினார், “ஒடுக்கப்பட்ட ஒரு பள்ளியாசிரியர் மகன்தானே நீ!  உன்னால் எப்படி பாலுணர்ச்சி பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்?  அதைப்பற்றிய ஆராக்கியமான பார்வையை வளர்த்துக்கொள்ள முடியும்?  மொத்த கேரளமுமே பாலியல் பற்றிய மீயுணர்ச்சி கொண்ட ஒரு சமூகம்.  ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவரால் மட்டுமே பாலியலை சரியாகப் புரிந்துகொள்ளவும் அதுபற்றி பெருமிதம் கொள்ளவும் முடியும்.”  குருவின் இந்த போதனை எனக்கு முற்போக்காகத் தோன்றவில்லை, இயல்முரணாகத் தோன்றியது.  எனவே அவ்விடத்தை விட்டு உடனடியாக விலக நினைத்தேன்.  என் தரப்பை எவ்வளவு நியாயப்படுத்த நான் முயன்றபோதும், குரு என்னை நம்ப மறுத்தார்.  ‘குருவுக்குக் கூட உண்மையை உணர்த்த முடியவில்லை என்றால் சொற்களால் என்ன பயன்?’ என எனக்குத் தோன்றியது.

நடராஜ குருவும் நானும் – 7

Standard

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும் அழிந்தது.  இரண்டாவது வருடம், துறைத்தலைவர் ஓய்வு பெற்றதால் மூத்த பேராசிரியராக இருந்தவர் தலைவராவதாக இருந்தது.  இதனால் நான் மூத்த பேராசிரியராகும் வாய்ப்பு வந்தது.  குழுவின் செயலர் என்னைத் தனியாக அழைத்து நான் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.  இதனால் நான் பணிமூப்பு கோரமுடியாத நிலை ஏற்படும்.  குருவிடம் இதுபற்றி கேட்டபோது, இரண்டு வருடம் நான் பணியாற்றிய நிறுவனத்தின் மீது சேற்றை வாரி இரைக்காமல், உடனடியாக வேலையிலிருந்து விலகும்படி கூறினார்.  இந்த வழியை குரு எனக்குக் காட்டியிருக்கவில்லையென்றால் நான் மிகவும் எரிச்சலடைந்திருப்பேன்.  ஒரு ஏணியை விட்டு இன்னொன்றில் ஏறுவதைப் போன்றதுதான் இது என்றார் குரு.  ஒருவன் மனதளவில் தன் பழைய நிலையை உதறிவிட்டு தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுதல் போன்றது இது என்பது குருவின் எண்ணம்.  கல்விசார் வாழ்க்கையிலிருந்து நான் விலகியது இறைவனின் பெரிய வரம் என்பது எனக்குப் பின்னாளில் புரிந்தது.  இருபது வருடங்கள் கழித்து நான் விவேகானந்தா கல்லூரிக்குச் சென்றபோது, தத்துவத் துறையில் என் பழைய நண்பர்கள் புழுதி படிந்த நாற்காலிகளில் உயிரியல் ஆய்வகத்தில் காட்சிக்கு வைத்திருக்கும் புதைபடிவங்கள் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே, நடராஜ குரு, நாராயண குருவின் 60-ஆவது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடியது என் நினைவுக்கு வந்தது.  அந்நிகழ்ச்சியில் பங்குபெற நாராயண குரு சம்மதித்திருந்தார்.  ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் போன்ற பிரபலமான ஆன்மீகவாதிகளும் பல முக்கிய பிரமுகர்களும் அக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.  18 ஃபிப்ரவரி 1954-இல் தன் அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடராஜ குருவுக்கும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அவரை கெளரவிப்பது என் கடமை என நான் கருதினேன்.

சென்னையில் இருந்த நாராயண குருவின் பக்தர்களான என் சக பணியாளர்களும் நண்பர்களும் நடராஜ குருவின் ஷஷ்டியப்தபூர்த்தியை கொண்டாடுவதில் எனக்கு உதவ ஒப்புக்கொண்டனர்.  இந்திய சிலோன் மஹாபதி குழுவின் தலைமை பிக்கு தங்களது இடத்தை நிகழ்ச்சிக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.  குருவின் பழைய வகுப்புத்தோழர்களான சந்தானகிருஷ்ணன் நாயுடு, திரு என்.சி.குமரன், டாக்டர் தியாகராஜன் மற்றும் டாக்டர் கோபால மேனன் ஆகியோர் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதைப்பற்றி குருவுக்குத் தெரிவித்தபோது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார்.  சபரிவாஸ் தையலகத்தின் கே.என்.எஸ். பணிக்கரிடம் இதைச் சொன்னபோது ஸாடின் துணியில் ஒரு பர்ஸ் தைத்து அதில் நூற்றியோரு ரூபாய் வைத்து என்னிடம் கொடுத்தார்.  பிறரிடமும் பணம் வசூலித்து பணமுடிப்பாக குருவுக்கு அளிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.  திரு சந்தானகிருஷ்ணன் நாயுடுவின் உதவியுடன் வெகு எளிதில் இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்க முடிந்தது.  தொகை சிறிதாக இருந்தாலும் அது நல்ல செயலாக எங்களுக்குத் தோன்றியது.  எனது முன்னாள் சகபணியாளரும், கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியின் முன்னாள் துணைத் தலைவருமான மாதவ ராவ் பணமுடிப்பை குருவுக்கு அளிக்க ஒப்புக்கொண்டார்.  தேநீருக்கும் சிற்றுண்டிக்கும் மகாபதி சொஸைடி ஏற்பாடு செய்தது.  நடராஜ குருவின் பிற வகுப்புத் தோழர்கள் சிலரையும் திரு நாயுடு அழைத்திருந்தார்.  அந்நிகழ்ச்சி பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாய் அமைந்தது.  ஒரு வகையில், பாரம்பரியத்தைக் காப்பாற்றிய திருப்தி எனக்கு.  நடராஜ குரு தன் குருவிடம் காண்பித்த அர்ப்பணிப்பும் அன்பும் அவரது சீடர்களால் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  குருகுலத்திற்கும் சென்னைக்குமான தொடர்பில் பின்னாளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு அந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டது காரணமாயிருந்தது.  அதன் பின்னர், அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோரின் இல்லங்களுக்கு பல முறை வந்து தங்கி வகுப்புகள் நடத்தினார் குரு.

வர்க்கலையில் 1953-54-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டிற்கு நான் சென்ற போது குருகுலத்திற்கே உரிய வகையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று குரு கூறினார். அதற்கென, உபநிடதங்கள், காளிதாசனின் காவியம், பிளேடோவின் ‘டயலாக்ஸ்’ இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றைத் தொடுத்து ‘தர்சன மாலையை’ குரு உருவாக்கினார்.  இதில் முதல் காட்சி சகுந்தலை கன்வ ஆசிரமத்திலிருந்து வெளியேறுதல்.  சங்கராரண்ய சுவாமி கன்வராகவும், மாதாஜி கமலாபாய் தாதியாகவும் ஜெயந்தி சகுந்தலையாகவும் நடித்தனர்.  அருகாமையில் குடியிருந்த இரு பெண்கள் அனசூயா மற்றும் ப்ரியம்வதாவாக நடித்தனர்.  ஜி.என்.தாஸ் சரத்வதாவாகவும் நான் சாரங்கதாராவாகவும் பங்கேற்றோம்.  அக்காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக குரு மிகவும் உழைத்தார்.  பார்வையாளர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்காட்சி.  இரண்டாவது காட்சி ‘அபாலஜி’யில் இருந்து எடுக்கப்பட்டது.  மூல நூலில் பிளேடோவின் பங்கு குறைவு என்பதால் பலவிதங்களிலும் அக்காட்சியை மேம்படுத்தி எழுதினார் குரு. குருவுக்கும் சாக்ரடீஸுக்கும் இருந்த ஒற்றுமை என்னை வியப்பிலாழ்த்தியது. மூன்றாவது, யாக்ஞவல்கியர் தனது சொத்துக்களை காத்யாயனிக்கும் மைத்ரேயிக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டு, மைத்ரேயிக்கு (இறுதி) ஞானத்தை அளித்த பிறகு சந்நியாசம் புகுதல்.  சங்கராரண்ய சுவாமி யாக்ஞவல்கியராகவும் மாதாஜி கமலாபாய் மைத்ரேயியாகவும் நடித்தனர்.  காத்யாயனி மேடையில் தோன்றவில்லை.  நான்காவது, ஆனந்தருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு பின்னர் புத்தரின் முன் மாதாஜி தோன்றுவது.  ஆனந்தரும் புத்தரும் கூறுவனவற்றை மங்களானந்தா சுவாமி பாடினார்.  அதுபோன்ற ஒரு அழகிய மாலைப்பொழுது குருகுலத்தில் பின்னெப்போதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது எனது சகோதரி சுபாஷிணி குருகுலத்தில் சேர்ந்து குரு சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.  ஆனால் மாநாடு முடிந்த சில மாதங்களில் ஒரு இளைஞனை சந்தித்து அவரை மணந்துகொள்ள முடிவுசெய்தார்.  குரு தன் சம்மதத்தை உடனே அளித்ததுடன், வாகையாறுக்குச் சென்று திருமணத்தை நடத்தி வைக்கவும் ஒப்புக்கொண்டார்.  குரு திருமணத்திற்கு வந்தபோது என் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.  நாராயண குருவைப் பற்றி தான் எழுதிய ஒரு சிறு நூலை தன்னிடம் வைத்திருந்தார்.  தன் இருதய நோயை மறக்கவே அந்த நூலை எழுதியிருந்தார் தந்தை.  அவருடைய இருதயம் பாதிக்கப்பட்டிருந்தது.  அந்நூலை தான் முடிக்கும் தினத்தன்று தான் இறந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார்.  என் தங்கை சுமங்களா நடராஜ குருவுக்கு அப்புத்தகத்தைப் படித்துக் காண்பித்தார்.  என் தந்தை எப்போதும் மிகவும் கவனத்துடன் கவிதை எழுதுவார். தன் கலையில் தவறு நேரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த மருந்துகளால் அவரது சமநிலை குலைந்திருந்தது.  கவிதை மோசமாக இருந்தது.  பொதுவாக இலக்கியத்திலும் தத்துவத்திலும் தரக்குறைவானதை நடராஜ குரு கருணையில்லாமல் நிராகரிப்பார்.  ஆனால் என் தந்தையின் மோசமான உடல்நிலையை கருத்தில்கொண்டு, எந்தக் குறையும் சொல்லவில்லை.  அப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதித் தரவும் இசைந்தார்.  ஏப்ரல் 14, 1954 அன்று என் சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் குரு.  அதற்கு மறுநாள், குரு என் தந்தையின் அருகில் கட்டிலில் அமர்ந்திருக்க, சுமங்களா குருவின் முன்னுரையை என் தந்தைக்குப் படித்துக் காட்டினார்.  பத்து மணி வாக்கில் குரு எர்ணாகுளத்திற்குக் கிளம்பினார்.  பதினோரு மணிக்கு, முந்தைய நாள் குரு என் சகோதரியின் திருமணத்தை நடத்திவைத்த அதே நேரம், என் தந்தை மறைந்தார்.  அந்தச் செய்தியை எர்ணாகுளத்தில் செய்தித் தாளில் படித்த குரு உடனடியாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  என் வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒன்றை ஒன்று சமன்செய்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து எப்போதும் சமநிலை குலையாமலிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.  நிறை குறை இல்லாத வெறுமையாலும், இன்பியல் துன்பியல் என்ற இருமையாலும் நான் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நடராஜ குருவும் நானும் – 6

Standard

அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது.  உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது.  குரு மிகவும் மகிழ்ந்துபோனார்.  இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார்.  சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன்.  பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார்.  ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம் இருக்கவில்லை.  நான் சென்னையை அடைந்தபோது என் உடல் முழுக்க கரி அப்பியிருந்தது.  தலைமுடி சிடுக்கடைந்து போயிருந்தது.  இயக்குநர் குழுவில் உறுப்பினர்களாயிருந்த சென்னையின் மிகப்பெரிய கனவான்களின் முன்னால் என்னை ஒரு நாகரிக மனிதனாகக் காட்டிக்கொள்ள விரும்பினேன்.  இரு நாட்கள் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன்.  அரை அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன்.  எண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு குளித்துவிட்டு என்னிடம் இருந்த உள்ளதிலேயே நல்ல உடையை அணிந்துகொண்டேன்.  அந்த எண்ணெய் வாசனை கலக்கப்பட்டது. மயிலாப்பூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தபோது வாசனை தாங்கமுடியாதபடி அடித்தது.  என் தலைமுடியிலிருந்து வரும் வாசம் தெரியாதபடி குழு உறுப்பினர்களுக்கு மூக்கடைப்பு இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது.  மின்விசிறிக்குக் கீழ் என் தலை இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தேன்.  நல்ல வேளையாக, என்னைப் பணியிலமர்த்துவது என்று ஏற்கனவே இயக்குநர் குழு முடிவெடுத்திருந்தது.  விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதோடல்லாமல் விவேகானந்தா கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளராகவும் நான் நியமிக்கப்பட்டதால் என்னை அதிர்ஷடக்காரனாக உணர்ந்தேன்.

நம்பியார்மகராஜ் என்று மற்ற துறவிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி நிஷ்ரேயசானந்தா கல்லூரியின் தலைவராக இருந்தார்.  ராமகிருஷ்ண மடத் துறவிகளின் பெயருடன் அவர்களின் ஜாதிப் பெயர் ஒட்டிக்கொண்டேயிருந்தது.  மிகச் சிறந்த இந்தியத் துறவிகளுக்கு எடுத்துக்காட்டானவர் சுவாமி நிஷ்ரேயசானந்தா.  குறைவில்லா அறிவும் சுத்தமான பழக்கவழக்கங்களும் கொண்டவர்.  அவர் என்னை விடுதிக்கு வரவேற்றார்.  அந்நாட்களில், கல்லூரி விடுதியில் அரிஜன மாணவர்களுக்கென்று சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பெரும் பிரிவினை இருந்தது.  இந்தப் பிரிவினையை திறமையாகக் கையாண்டு ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று நிஷ்ரேயசானந்தா சுவாமி என்னிடம் கேட்டுக்கொண்டார்.  தவறாக நடந்துகொள்ளும் மாணவனை அரிஜன மாணவர்கள் அறைக்கு மாற்றிவிடுவேன்.  அதைத் தொடர்ந்து ஒரு அரிஜன மாணவனை மற்றவர்கள் அறைக்கு மாற்றுவேன்.  புத்திசாலித்தனமாக இப்படி மாறுதல்கள் செய்ததில் ஒரு வாரத்திற்குப் பிறகு அரிஜன மாணவர்களுக்கென தனி அறையே இல்லாமல் போனது.  முழுக்க முழுக்க பிராமண சார்புடைய நிர்வாகம் இதற்கான பழியை நம்பியார்மகராஜ் மீது போட்டது. இதை நான் குருவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் அரசியல் எதுவும் எனக்குத் தெரியாததுபோல் இருந்துவிடும்படி கூறினார்.

பின்னர் குரு வந்து என்னுடன் தங்கினார். குருவின் மொத்த நேரத்தையும் நானே எடுத்துக்கொள்ளலாம் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது.  ஒருநாள் பிற்பகலில், இரவுணவுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டபோது வர்க்கலையில் செய்வது போல கஞ்சி தயாரிக்கச் சொன்னார் குரு.  கஞ்சி தயாரித்துவிட்டு கறி செய்யத் துவங்கும்போது, குருவின் பழைய நண்பரான டாக்டர் ஏ. தியாகராஜன், இரவுணவுக்கு குருவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார்.  நானும் அவருடன் வர வேண்டும் என்று குரு கட்டாயப்படுத்தினார்.  செய்திருந்த கஞ்சியை பத்திரமாக வைத்துவிட்டு வரச்சொன்னார்.  டாக்டர் தியாகராஜனின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.  அவரைப் பார்ப்பவர்கள் இருபதாம் நூற்றாண்டின் கார்கி என்றே அவரைக் கருதுவார்கள். அவர் குருவிடம் பகவத் கீதையைப் பற்றி குறைந்தது நூறு கேள்விகளாவது கேட்டிருப்பார்.  அடுத்த இரண்டு வருடங்களில் குரு சென்னைக்குப் பலமுறை வந்து சென்றார்.  திருமதி தியாகராஜனுடனான சொற்போர் அடிக்கடி நிகழும்.  உண்மையில் அந்த அம்மையாருக்குப் பதில் அளிக்கும் முகமாகவே கீதை உரையை குரு எழுதினார்.  அன்றிரவு, உணவும் விவாதமும் முடிந்த பின் என் அறைக்குத் திரும்பிய குருவும் நானும் நன்றாக உறங்கினோம்.

காலை நான்கு மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொள்வது குருவின் வழக்கம்.  குரு விழித்திருக்கும்போது நாம் உறங்குவது நாகரிகமல்ல என்பதால் நானும் எழுந்துவிடுவேன்.  பகவத் கீதைக்கான அறிமுகத்தை குரு ஏற்கனவே தன் மனதில் உருவாக்கி வைத்திருந்தார்.  அதைச் சொல்ல ஆரம்பித்தார்; நான் பதிவு செய்தேன்.  குருவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இப்படித்தான் தொடங்கின.  சொல்லி முடித்த பிறகு, நேற்றிரவு தயாரித்த கஞ்சியை நான் என்ன செய்யப்போகிறேன் என்று கேட்டார் குரு.  யாராவது ஏழை ரிக்‌ஷாக்காரனுக்குக் கொடுத்துவிடுவேன் என்றேன்.  “எந்த ரிக்‌ஷாக்காரனாவது உப்பும் வெங்காயமும் இல்லாமல் அதை அப்படியே சாப்பிடுவானா?” என்று கேட்டார் குரு. “உப்பும் வெங்காயமும் சேர்த்துக் கொடுப்பேன்” என்றேன்.  அவற்றைக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்ட குரு உப்பைத்தூவி வெங்காயத்தை கஞ்சியில் கலக்கினார்.  “நான்தான் அந்த ரிக்‌ஷாக்காரன்” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கஞ்சியைக் குடித்தார்.  பெரும் துயரத்துடன் பார்த்துக் கொண்டே நின்றேன் நான்.  அவருக்காக நான் தயாரித்த கஞ்சியை வீணாக்கினால் நான் வருத்தப்படுவேன் என்று குரு நினைத்தார் போலும்.  இம்மாதிரி மறக்கமுடியாத பாடங்களைக் கற்பிக்கும் குருவை நான் வேறெங்கு கண்டடைவேன்?

அந்நாட்களில் நான் இன்டர்மீடியட் வகுப்பிற்கு தர்க்கமும், இளங்கலை மாணவர்களுக்கு காண்டின் (Kant) தத்துவமும், முதுகலை மாணவர்களுக்கு எஃப்.ஹெச்.ப்ராட்லியும் கற்பித்தேன்.  நான் நடத்த வேண்டிய பாடப்பகுதிகளை என்னைப் படிக்கச் செய்து அவற்றில் பல கேள்விகளைக் கேட்பார் குரு.  இது அப்பாடங்களில் எனது ஆர்வத்தை மேலும் வளர்த்தது.  குருவுடன் விவாதம் முடிந்தபின்னர், உடனே, அப்புதிய பாடங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பொறுமையின்றித் தவிப்பேன்.

குருவுடன் படித்தவர் ஒருவர் பேராசிரியராக இருந்தார்.  அவர், குரு விவேகானந்தா கல்லூரிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். குரு மாநிலக் கல்லூரியில் படித்தபோது G.D.G.D. (“Get Drunk and Go to the Dogs”) Club என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை தான் தொடங்கியது பற்றி என்னிடம் கூறியிருந்தார்.  எனது மூத்த பேராசிரியரும் அதில் ஒரு உறுப்பினர்.  குரு ‘அண்ணா’ என்றழைத்த அப்பேராசிரியர் மூலமாக தன்னுடன் படித்தவர்களை எல்லாம் குரு கண்டுபிடித்தார்.  சென்னையில் மூத்த வக்கீலாக இருந்த திரு கோபாலசுவாமி, சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியின் முதல்வராக இருந்த  திரு டி.பி. சந்தானகிருஷ்ணன நாயுடு ஆகியோர் அதில் அடங்குவர்.  அவர்களையெல்லாம் குரு அவ்வப்போது சிறு கூட்டங்களுக்கு அழைப்பார்.  கூட்டம் டாக்டர் தியாகுவின் வீட்டிலோ எனது அறையிலோ நடைபெறும்.  குருவின் மாணவப் பருவக் கதைகள் பலவற்றையும் நாராயண குரு அவரைப் பார்க்க வந்த நிகழ்ச்சிகளையும் அறிய இந்தக் கூட்டங்கள் எனக்குப் பெரிதும் உதவின.

ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சித்தேஶ்வரானந்தாவும் சுவாமி சித்பவானந்தாவும் மாணவப் பருவத்தில் குருவின் நெருங்கிய தோழர்களாக இருந்தவர்கள்.  இவ்விரு துறவியரும் நாராயண குருவின் பக்தர்கள்.  ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டதிலிருந்தே குரு அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார்.  குருவும் நானும் அம்மடத்திற்குச் சென்றோம்.  சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் வசிக்கத் தேவையான நிதியைத் திரட்டியவர்கள் பெயரையெல்லாம் குரு எனக்குச் சொன்னார்.  தன் பன்னிரண்டு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ முகவரி தனக்கு மனப்பாடம் என்றார் குரு.  இதுபோல் பலவிதங்களில் ராமகிருஷ்ண மடத்துடன் நெருக்கமாக இருந்தபோதும், அம்மடத்தில் இருந்த சாதிப் பாகுபாடுகள் அதற்கு ஒருவிதமான மேட்டிமை உணர்வை அளிப்பதாக நடராஜ குரு எண்ணினார்.  மடத்தை அவர் அணுகிய விதம் எனக்குப் புரிய ஆரம்பித்தபோது, நான் வெகு நாட்கள் அங்கு இருக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரிந்தது.

நடராஜ குருவும் நானும் – 5

Standard

அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார்.  ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர்.  ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும்.  ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன்.  ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார்.  ஜானுக்கும் குருவுக்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதல்கள் எங்களுக்கு வரமாகவே அமைந்தன.  அவ்வாறில்லையென்றால், எங்களிடையே அவ்வளவு ஆழமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.  குரு சொல்லத்தயங்கும் உன்னத ஞான வாக்குகளை அவரிடமிருந்து வரவழைப்பதில் ஜானுக்கு இருந்த திறமை எப்போதும் என்னை வியப்பிலாழ்த்தும்.  மாதம் தவறாமல் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை குருவுக்கு உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ‘வால்யூஸ்’ மாத இதழைத் தொடங்கி தொடர்ந்து நடத்தினார் ஜான். அவ்விதழில் பதினெட்டு வருடங்கள் குரு எழுதியவை இன்று நம் முன்னே பெரும் ஞானக் களஞ்சியமாக உள்ளன.

நல்ல வேளையாக நடராஜ குருவுக்கு பன்னிரண்டு சீடர்களில்லை.  ஆயினும், அவர் தேர்ந்தெடுத்த மூவரும் வெவ்வேறு வகையானவர்கள்.  மங்களானந்தா சுவாமி அச்சு அசலாக ஒரு இந்திய குருவின் இந்திய சீடர்; முழு முற்றாக தன்னை குருவுக்கு அர்ப்பணம் செய்துகொண்டவர்;  குரு சொல்வதை இம்மி பிசகாமல் பின்பற்றுபவர்.  இன்னொரு புறம் ஜான் ஸ்பியர்ஸ் – எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பவராக, கருத்துக்களை மறுப்பவராக, ஆணைகளைத் திருத்துபவராக.  ஒரு பெரிய நாடகத்திற்குப் பிறகே பிரச்சினை தீரும்.  மழுப்பலாக இருந்துவிடுவதே என் தந்திரம்.  பின்னணியில் மறைந்துகொண்டு, இயற்கை எனக்கு வாரி வழங்கியிருந்த தற்காப்பு முறைகளை எல்லாம் பயன்படுத்துவது என் வழி.  நான் தொட்டாற்சுருங்கி என்பது குருவுக்குத் தெரியும்.  எனவே, பொதுவில் என்னைச் சீண்டுவதைப் பொதுவாகத் தவிர்த்துவிடுவார்.

பொதுமக்கள் எனக்கு எதிராக இருந்தால், குரு என் பக்கமே நிற்பார்.  சிவகிரி உயர்நிலைப் பள்ளி குருகுலத்திற்கு எதிரில் இருக்கிறது.  மதிய இடைவேளையில் பெரும்பாலான மாணவியர் குருகுலத்திற்கு வந்து என்னைச் சூழ்ந்து அமர்ந்து கதை கேட்பது வழக்கம்.  மாணவியரைச் சுற்றி மாணவர்களும் அமர்வார்கள்.  அவர்களில் சிலர் கதையும் கேட்பார்கள்.  ஒன்றிரண்டு மாணவிகள் தேவைக்கு அதிகமாக நெருக்கமாக அமர்ந்து பிறரை பொறாமை அடையச் செய்வர்.  எப்படியோ, சிவகிரி பள்ளியின் ஆசிரியர்கள் ஒரு மாணவிக்கும் எனக்கும் தொடர்பிருப்பதாகக் கதைகட்டிவிட்டார்கள்.  இதன்பின் பள்ளி மாணவியர் குருகுலம் பக்கமே வராமல் தடுக்கப்பட்டனர்.  இது என்னை அவமானத்திற்குள்ளாக்கியது. குருவுக்கு இது தெரிந்தபோது, என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்.  மாணவியர் குருகுலத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதற்கு நாங்கள் எந்த விதத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டோம் என்று நிரூபிக்கும்படி தலைமையாசிரியருக்கு சவால் விடுத்தார்.  குரு தலைமையாசிரிடம் கத்திக்கொண்டிருக்கும்போதே எல்லா ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் அங்கு குழுமிவிட்டனர்.  வம்பிற்கு ஆளான அந்த மாணவியும் அதிலிருந்தாள்.  அவளை தன்னை நோக்கி இழுத்து, “உனக்கு இவன் மேல் காதலா? எதுவாயிருந்தாலும் அதை எல்லாருக்கும் தெரியும்படி சொல்!” என்றார்.  தைரியமான அந்தப் பெண், மற்றவர்களைப் போல தானும் குருகுலத்தின் அழகான சூழலை விரும்பியே அங்கு சென்றதாகவும், பொறாமை கொண்ட ஒரு ஆசிரியர்தான் அந்தக் கதையைக் கட்டிவிட்டவர் என்றும் சொன்னாள்.  (இரண்டு மாதங்களுக்குப் பிறகு அப்பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.)  குருவின் துணிச்சலான இந்த நடவடிக்கையையும் முழு ஆதரவையும் கண்ட தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் திகைத்துப் போயினர்.  பின்னர் அவர்கள் குருகுலத்திற்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்லத் துணியவில்லை.  தனி மனிதர்களை மட்டுமல்ல, குழுக்களையும் ஒழுங்குபடுத்துவது குருவுக்கு கைவந்த கலை.

மாநாடு முடிந்தபின் குரு ஊட்டிக்குத் திரும்பினார்.  மங்களானந்தா சுவாமி தொடர்ந்து பயணத்தில் இருந்தார்.  ஆகவே, வர்க்கலையில் ஜி.என்.தாஸுடன் தனியாக இருக்கவேண்டி வந்தது.   எப்போதும் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார் அவர். பெரும் உற்சாகத்துடன் இருப்பவர் திடீரென்று சோர்ந்து போவார்.  தென்னிந்தியக் கோயில்கள் பற்றி நாராயண குரு அறிந்திருந்தவற்றைப் படித்தபின் சுற்றியலையும் ஆர்வம் என்னுள் மீண்டும் தோன்றியது.  பழையபடி யாசகனாகி ஒவ்வொரு கோயில் நகராக அலைந்தேன்.

கடைசியில் சென்னைக்குச் சென்றேன்.  அங்கு உணவும் படுக்க இடமும் கிடைப்பது அரிது.  இரவில் நடைபாதைகளில் உறங்கினேன்.  உணவில்லாமல் இறக்கப் போகிறோம் என்று தோன்றியது.  ஒரு நாள் காலை நல்ல பசியுடன், தெம்பில்லாமல் குறிக்கோளின்றி நகரில் சுற்றியலைந்தேன்.  ஒரு சிலையைப் பார்த்து அது விவேகானந்தருடையது என்றெண்ணி அருகில் சென்றால், அது வேறு மனிதருடையதாக இருந்தது.  சோர்ந்து போய் சுற்றிலும் பார்த்தபோது பெரிய எழுத்துக்களில் “விவேகானந்தா கல்லூரி” கண்ணில் பட்டது.  அதில் ஏன் நாம் ஆசிரியராகக் கூடாது? என்று தோன்றியது.  யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பின்னாலிருந்து யாரோ அழைத்தார்கள்.  அழைத்தது ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி.  அவர் நான் யாரென்றறிவதில் ஆர்வமாயிருந்தார்.  பொய் கலவாமல், நான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றேன்.  நான் அவதியுற்றிருப்பதை சுவாமி எளிதில் கண்டுகொண்டார்.  ஒரு புறம் நல்ல பசி.  அதே சமயம் கழிவறை செல்ல வேண்டிய அவசரம்.  என்னிடம் அழுக்கான ஒரு வேட்டியும் துண்டும் மட்டுமே இருந்தன. சுவாமி என்னை வலிய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, சுத்தமான துண்டு, எண்ணெய், சோப்பு, கொஞ்சம் பற்பொடி எல்லாம் தந்தார்.  கழிவறையையும், குளியலறையையும் காண்பித்து நான் குளித்து, துணி துவைத்த பின்பு உடுக்க வெள்ளை வேட்டியும் துண்டும் கொடுத்தார்.  கடவுளிடமிருந்து சுவாமியிடம் அடைக்கலமானேன்.  மைசூரிலிருந்து என்னை கேரளத்திற்கு அனுப்பிய சுவாமி விமலானந்தரைப் போலவே, இவரும் என்னை வர்க்கலைக்குத் திரும்பிச் செல்லத் தூண்டினார்.  திருவல்லவாழில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் நான் சேரலாம் என்று கூறினார்.  சிரமம் பாராது என்னுடன் ரயில்நிலையத்திற்கு வந்து வர்க்கலைக்குப் பயணச்சீட்டு வாங்கித்தந்து என்னை ரயிலேற்றினார்.

நான் குருகுலத்திற்குத் திரும்பியபோது குரு அங்கிருந்தார்.  பிரார்த்தனை முடிந்த பின்னர் தன் இரவுணவான கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தார்.  அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் குருகுலத்தை விட்டுச் சென்று யாசகனாய் அலைந்ததற்கு என்னிடம் கோபம் கொள்வார் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால், நான் எங்கு போனேன் என்றெல்லாம் கேட்காமல், இன்னொரு பாத்திரத்தில் கஞ்சி கொண்டுவரும்படி தாஸிடம் கூறினார்.  நான் குருகுலத்திற்கு முதன்முறை வந்தபோது குரு சொன்னது என் நினைவுக்கு வந்தது.  கற்றலைப் பொறுத்தவரை அவர் குரு நான் மாணவன்; சமூக தளத்தில் அவர் சுதந்திரமானவர்; எனக்கு எதையும் செய்யக் கடன்பட்டவர் அல்ல; அதே போல் நானும் சுதந்திரமானவன் என்று அப்போதே கூறியிருந்தார்.  சுதந்திரம் என்று அவர் சொன்னதென்ன என்பதை அன்றிரவு நான் உணர்ந்தேன்.  எடுத்த எடுப்பில், நாராயண குருவின் சுப்ரமணிய கீர்த்தனையில் தான் கண்டடைந்த நுணுக்கங்களைப் பற்றிய தத்துவ விவரிப்பில் இறங்கிவிட்டார்.  நான் குருகுலத்தை விட்டுச் சென்றதைப்பற்றி குரு எதுவும் கேட்காதது எனக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.

நேர்காணல் – 1

Standard

31.12.95

காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.  நாற்காலியில் அமர்ந்து கால்களை திண்டுமீது வைத்துக் கொள்கிறார்.  அருகில் சோபாவில் நான், குப்புசாமி (ஆர்.கே.), எதிரே கோபால் (சூத்ரதாரி).

 

உங்கள் தந்தையைப் பற்றிக் கூறுங்கள்!

அப்பா இளம் வயதிலேயே என் மனதைப் பெரிதும் கவர்ந்த ஆளுமையாக இருந்தார்.  தினம் என்னை நடக்க அழைத்துச் செல்வார்.  மலர்களையும் பறவைகளையும் கூழாங்கற்களையும் காட்டி ரசிக்கக் கற்றுத் தருவார்.  இளம் வயதில் அவர் ஊட்டிய இயற்கை ஈடுபாடே அவர் எனக்குத் தந்த சொத்து.  அப்பா அவர் எழுதுவதை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்.  சாக்ரடீஸ், கதே, தோரோ, பேகன், ஆதிசங்கரர், விவேகானந்தர் முதலிய பெயர்களெல்லாம் மிக இளம் வயதிலேயே எங்கள் வீட்டில் அன்றாடப் புழக்கத்தில் இருந்தன.  என் அத்தைக்கு கவிதையில் மிகுந்த ஈடுபாடு.  வள்ளத்தோள், உள்ளூர் முதலிய புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவளுக்குக் கடிதத் தொடர்பு உண்டு.  கவிஞர்களிடமிருந்து கடிதங்கள் வருவது எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி.

சிறுவயதில் உங்களை அதிகம் பாதித்த சம்பவங்கள் எவை?

என் வாழ்க்கையை நிர்ணயித்தவை என நான் கருதும் இரு சம்பவங்கள் என் இளமைக் காலத்தில் நடந்தன.  எங்களூரில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார்.  என் தந்தை அன்று அவ்வியக்கத்தின் தீவிர ஊழியர்.  தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டருகே நடந்தது.  அப்பா என்னை ஒரு மேஜைமீது ஏற்றி, பேசும்படி கூறினார்.  நான் மனப்பாடம் செய்திருந்த நாராயண குருவின் உபதேச மொழிகளை ஒப்பித்தேன்.  காந்திஜி பகவத் கீதையை என்னிடம் தந்து படிக்கும்படி கூறினார்.  சில சுலோகங்களை நான் படித்தேன்.  கீதையை புன்னகையுடன் நீட்டிய காந்திஜியின் முகம் வெகுகாலம் எனக்கு உத்வேகமூட்டிய நினைவாக இருந்தது.  இன்றும் அழியாமலிருக்கிறது.

மற்றொரு சம்பவம் நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது.  பழைய பத்திரிகையொன்றில் ஒரு மனிதரின் அழகிய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது.  அவருடைய மேனாட்டு உடையும், புன்னகையும் என்னைக் கவர்ந்திருக்கலாம்.  அதை வெட்டி என் பாடநூலில் வைத்துக் கொண்டேன்.  பல வருடங்கள் அது என்னிடம் இருந்தது.  அது நடராஜ குரு பாரீஸில் இருந்தபோது எடுத்துக்கொண்ட படம்.  பின்னர் நான் நடராஜ குருவை என் ஆதர்ச புருஷராகவும் வழிகாட்டியாகவும் கொள்ள அதுவும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

எப்போது துறவு பூண்டீர்கள்?

துறவியாக வேண்டும் என்ற எண்ணம் என் பதினைந்தாவது வயதில் உறுதியாக ஏற்பட்டது.  மிக இளம் வயதிலேயே நான் தனிமை விரும்பியாக இருந்தேன்.  காடும் மலைகளும் சூழ்ந்த ஊர் பந்தளம்.  இரவும் பகலும் சுற்றியலைவது என் வழக்கம்.  துறவு என்பது சுதந்திரம் என நான் அறிந்திருந்தேன்.  மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வந்ததும் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன்.  பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  நான் உங்களுக்குப் பயனுள்ளவனாக, மகனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருக்கமாட்டேன்; எனவே உங்கள் செலவில் மேற்கொண்டு படிக்கவோ, உங்கள் பரம்பரைச் சொத்தில் பங்குபெறவோ விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தேன்.  கொல்லம் வழியாக மதுரைவரை பயணம் செய்ய மட்டுமே என்னிடம் பணம் இருந்தது.  டிக்கெட் எடுக்காமல் நான் பயணம் செய்வதில்லை.  எனவே மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.  இடுப்பில் ஒன்றும் தோளில் ஒன்றுமாக இரு அரை வேட்டிகளே என் உடைமை.  இத்தகைய கட்டங்களில் என் வாழ்வை நான் முற்றாக நியதியின் கரங்களில் விட்டுவிடுவதுண்டு.  பின்னர் இதுபோல் உலகின் பல்வேறு மூலைகளில் அமர்ந்திருக்கிறேன்.  அன்று ஒரு ரயில்வே போலீஸ்காரர் எனக்கு சோழவந்தான் வரை டிக்கெட் எடுத்துத் தந்தார்.  அங்கிருந்து ஒரு டிக்கெட் பரிசோதகர் கோவைக்கு டிக்கெட் எடுத்துத் தந்தார்.  பின் ஊட்டிக்கு ஒரு வியாபாரி அழைத்துச் சென்றார்.  இவர்கள் அனைவருமே நான் அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரவேண்டாமென்றும், ஊர் திரும்புமாறும் அறிவுறுத்தினர்.  ஆனால் எனக்கு சஞ்சலமே இல்லை.  விடுதலையுணர்வு என்னைக் களிப்பில் ஆழ்த்தியிருந்தது.  அப்போது நடராஜ குரு ஊட்டியில் இல்லை.  எனவே நான் ஊர் ஊராக அலைய ஆரம்பித்தேன்.

உங்கள் படிப்பு என்ன ஆயிற்று?

ஒரு முறை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.  அப்போது ஒரு பாதிரியார் என்னைப் பற்றி விசாரித்தார்.  தன்னுடன் வரும்படி அழைத்தார்.  நான் மதம் மாற மாட்டேன் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடேன்.  அவர் பரவாயில்லை என்றார்.  அவருடன் ஆல்வாய் சென்றேன்.  தன் மகனின் பழைய உடைகளை எனக்குத் தந்தார்.  என் சான்றிதழ்கள் ஊரில் ஒரு நண்பனிடம் இருந்தன.  அவற்றை வரவழைத்து பணம் கட்டி என்னை எஃப்.ஏ. படிப்பிற்குச் சேர்த்தார்.  எவ்வித நோக்கமும் இன்றி என்மீது பேரன்பு காட்டினார்.  எனக்கு மாதம் நாற்பது ரூபாய் உதவிப்பணம் கிடைத்தது.  செலவுபோக மீதமும் வரும்.  திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன்.  அன்று புராதன தத்துவம், தருக்கம், ஒழுக்கவியல் முதலியவை பாடங்கள்.  உளவியல் அப்போது தத்துவத்தின் ஒரு பிரிவு.  நடராஜ குருவுடன் தொடர்பு வைத்திருந்தேன்.  ஆனால் அவர் தொடர்ந்து பயணத்திலிருந்தார்.

நடராஜ குருவுடன் உறவு வலுப்பட்டது எப்படி?

1952-இல் நான் படிப்பை முடித்ததுமே கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியில் என்னை வேலைக்கு அழைத்தார்கள்.  அங்கு உளவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.  படிப்பே என் வாழ்க்கையாக இருந்தது.  நடராஜ குரு ஒருமுறை கொல்லம் வந்தார்.  விழாக்குழு என்னை அவருக்கு உதவியாளராக நியமித்திருந்தது.  டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, ஒரு பிரிட்டிஷ் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த பகவத்கீதை உரை அன்று மிகவும் பிரசித்தம்.  அதை ஒரு பந்தாவிற்காக என் கையில் வைத்திருந்தேன்.  நடராஜ குரு நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது அந்த நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார்.  பிறகு சன்னல் வழியாகத் தூக்கி வீசி எறிந்துவிட்டார்.  நான் பதறியவாறு காரை நிறுத்தும்படி கத்தினேன்.  ஓடிப்போய் நூலை எடுத்துக்கொண்டு குருவிடம் கோபப்பட்டேன்.  தத்துவ மேதையொருவரின் நூலைத் தூக்கிவீச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டேன்.  குரு அதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டிப் படிக்கும்படி கூறினார்.  அதில் ராதாகிருஷ்ணன் கீதை ஒரு மத நூல் என்று கூறியிருந்தார்.  குரு என்னிடம் “மூன்று பேரமைப்புகள் எவை?” என்று கேட்டார்.  “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன்.  “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று.  எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்?” என்று கேட்டார் குரு.  தொடர்ந்து மதம் என்றால் என்ன, தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள இணக்கமும் பிணக்கமும் எவையெவை என்று விளக்கமாகச் சொன்னார்.  அந்த அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்தது.  ஆயினும் வீறாப்பாக “ராதாகிருஷ்ணன் சும்மா அப்படி எழுதமாட்டார்.  தகுந்த காரணங்கள் இருக்கும்” என்றேன்.  குரு சிரித்தார்.  என் கோபம் அவருக்குத் திருப்தி தந்ததாகச் சொன்னார்.  அவருடைய படிப்போ துறவி என்னும் கெளரவமோ அவருடன் மாறுபட்டு விவாதிப்பதற்கு எனக்குத் தடையாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்றார்.  சிந்தனைத் துறையில் தாழ்வுணர்ச்சியே மிக அபாயகரமானது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை அவருடைய புகழையும் பதவியையும் பொருட்படுத்தாமல் நான் ஆராயவேண்டும் என்றும் கூறினார்.  அவர் நூலை விட்டெறிந்தது என் மனதைப் புண்படுத்தியதைச் சொன்னேன்.  தானும் புத்தகங்களை நேசிப்பவன் என்றும் ஆனால் புத்தகங்கள் மீது பக்தி கொள்வதில்லை என்றும் சொன்னார்.  உள்நோக்கத்துடனும், கவனமின்றியும் எழுதப்படும் நூல்கள் மிக ஆபத்தானவை; அச்சேற்றப்பட்டதனாலேயே அவற்றை மதிப்பது தவறு என்று விளக்கினார்.

1956-இல் நான் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலை பார்த்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்திக்க நேர்ந்தது…

அதற்குமுன் ஒரு கேள்வி.  நீங்கள் அங்கு பணியில் அமர என்ன காரணம்?  பேராசிரியர் வேலையை விரும்பினீர்களா?

இல்லை.  கொல்லத்தில் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிலநாட்கள் நடராஜ குருவுடன் இருந்தேன்.  துறவியானது அப்போதுதான்.  பிறகு சுற்றியலைய ஆரம்பித்தேன்.  பொது இடங்களில் பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் போன்றவர்களுடன் தங்குவேன்.  சென்னையில் ஒரு கடைத்திண்ணையில் இரவு தங்கினேன்.  மழை. நல்ல குளிர்.  உடைகள் போதுமான அளவு இல்லை.  குளிருக்காக தெருநாய்களை ஒண்டிப் படுப்பது வழக்கம்.  அவை கதகதப்பாக இருக்கும்.  அவ்வழியாக கோயிலுக்குச் சென்ற மயிலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் என்னை அழைத்து விசாரித்தார்.  என் படிப்பு பற்றி அறிந்ததும் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரியும்படி கூறினார்.  எனக்கு விருப்பமில்லை.  ஆனால் நவீன காலத்தின் அறிவுத் துறைகளுடன் உரிய அறிமுகம் துறவிக்கு இருந்தே ஆகவேண்டும் என்றும், நான் முறைப்படி கற்கவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றும் சொன்னார்.  நான் உடன்பட்டேன்.  கொல்லம் கல்லூரியிலிருந்து என் சான்றிதழ்களை வரவழைத்து வேலை போட்டுத் தந்தார்.  ராமகிருஷ்ண மடத்தின் நூலகத்தை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன்.

டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது எப்போது?

1956-இல் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார்.  தத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.  என் மாணவர்களுடன் நானும் சென்றிருந்தேன்.  அங்கு அவருடன் நடந்த உரையாடலில் கீதையை அவர் மத நூல் என்று குறிப்பிட்டது ஏன் என்று கேட்டேன்.  ராதாகிருஷ்ணன் சிரித்தபடி “பிரசுரகர்த்தர் மிகவும் அவசரப்படுத்தினார்.  அவசரமாக எழுதிய நூல் அது.  அதை நான் மீண்டும் சரிபார்க்க வேண்டும்” என்றார்.  பிறகு என் மாணவர்களிடம் திரும்பி, “உங்கள் ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்ளுங்கள்.  யார் கூறினாலும் ஆராயாமல் அதை ஏற்கலாகாது” என்றார்.  மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை.  அப்போது உடனிருந்த பி.கே.ராவ் என்பவர் பெங்களூரிலிருந்து வெளிவந்த தத்துவ இதழொன்றில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நழுவாமல் பதிலளிக்கவேண்டும் என்று கண்டித்திருந்தார்.  இந்தச் சம்பவம் சென்னையிலுள்ள பிராமணப் பிரமுகர்களைக் கோபமடையச் செய்தது.  அக்கோபத்திற்குக் காரணம் இதற்கு ஒரு வருடம் முன்பு பெரியார் கூட்டிய மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டதும், எங்களுக்குள் பரஸ்பரம் இருந்த நல்லெண்ணமும்தான்.  அவர்கள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  கல்கத்தாவிற்கு புகார் அனுப்பப்பட்டது.  அங்கிருந்த ஒரு துறவி வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்.  பிறகு என் தரப்பே சரியானது என்றும் என்னுடன் முற்றிலும் உடன்படுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  ஆனால் மயிலை மடத்தின் புரவலர்களாக இப்பிராமணப் பிரமுகர்களே இருந்தனர்.  அவர்களைப் பகைத்துக் கொள்ள நிர்வாகத்தால் முடியவில்லை.  விடுமுறை எடுத்தது சம்பந்தமாக எனக்கு மெமோ தந்தார்கள்.  ராஜினாமா செய்துவிட்டு ஊட்டிக்குப் போய்விட்டேன்.  டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனக்குறைவாக எழுதவில்லை என்பது இன்று உறுதியாகத் தெரிகிறது.  பழைய நூல்களின் உள் முரண்களைத் தவிர்த்து பொது அம்சங்களை மட்டும் தொகுத்து அவற்றின் அடிப்படையில் (இந்து) மதத் தத்துவம் ஒன்றை உருவாக்கவே அவர் முயன்றார்.  நேரடி விவாதங்களுக்குப் பதிலாக நழுவும் உத்திகளே அவருடைய வழிமுறைகளாக இருந்தன.  அவை பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளன.  இன்று அவருடைய எதிர்தரப்பினர்கூட இந்தியச் சிந்தனை என்பது (இந்து) மதச் சிந்தனையே என்று நம்புகிறார்கள்.  நடராஜ குரு நடந்துகொண்ட முறை எனக்கு இப்போது புரிகிறது.  பிறகு நாற்பது வருடம் நான் ஆற்றிய பணிகள் குருவின் இச்செயலில் இருந்த மறைமுக உத்தரவை நிறைவேற்ற முயன்றதன் விளைவே என்று கூறலாம்.

பம்பாயில் ஆய்வு மாணவராக இருந்தீர்களல்லவா?

ஆம்.  சில வருடங்கள் குருவுடன் ஊட்டியில் தங்கினேன்.  தொடர்ந்து கற்ற நாட்கள் அவை.  குரு என்னை ஐந்துமணிக்கு வந்து கதவைத் தட்டச் சொல்வார்.  பழைய பெஞ்சுமீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.  நான் பென்சில் தாளுடன் இருப்பேன்.  சரளமாகச் சொல்லிக்கொண்டே போவார்.  பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன்.  ஒவ்வொரு துறையிலும் அத்துறையின் முறைமை சார்ந்த கல்வி குருவிற்கு இருந்தது.  அது அவர் பெர்க்ஸனிடம் பெற்ற பயிற்சி.  முறைமையில்லாத மனப் பாய்ச்சல்களை அவர் ஏற்பதில்லை.  பிறகு நாங்கள் நடக்கச் செல்வோம்.  சமைப்போம்.  நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு!  விரும்பிச் சாப்பிடுவார்.  ஆனால் எங்களிடம் பணம் குறைவு.  பலசமயம் பட்டினி கிடப்போம்.  பணத்துடன் யாரேனும் வரும்வரை பேசியபடி இருப்போம்.

ஒருநாள் சார்லஸ் கிங்ஸ்லியின் நூல் ஒன்றில் ஃபிலாமின் எனும் கதாபாத்திரம் தன் குருவைவிட்டுப் பிரிந்து செல்லும் இடத்தைப் படித்தேன்.  எனக்கு உடனே கிளம்பிவிட வேண்டும் என்றுபட்டது.  குருவிடம் கூறினேன்.  “எங்கே போக உத்தேசம்?” என்றார்.  “பம்பாய்” என்றேன்.  பம்பாய்க்கு ரயில் கட்டணம் ஐம்பது ரூபாய்.  அவர் ஐம்பது ரூபாய் தந்தார்.  பிறகு ஒரு ஐந்து ரூபாய்.  விடைபெறும்போது ஒரு ரூபாய்.  பம்பாயில் என் நண்பர் தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.  ஒரே அறை உள்ள வீடு.  அதிலேயே சமையல், குளியல், படுக்கை.  இரவில் கால்களை வெளிவராண்டாவில் நீட்டியபடிதான் தூங்குவார்.  ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்.  எனக்கு செருப்பு வாங்கித் தந்தார்.  பகலில் அருகேயுள்ள மடத்திற்குப் போவேன்.  அங்கு துறவிகளுக்கு உணவும், ஒரு அணாவும் தருவார்கள்.  ஒருமுறை வெளியேவந்து பார்த்தபோது என் செருப்பு தொலைந்துவிட்டது.  நண்பரை எண்ணி மனம் கலங்கினேன்.  ஒரு பணக்கார வியாபாரி தன் செருப்புகளைத் தர முன்வந்தார்.  நான் விளையாட்டாக ‘இன்னொருவர் ஷுவிற்குள் கால் நுழைப்பது’ என்றால் என்ன தெரியுமா என்று கேட்டேன்.  நான் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு அவருக்கு வியப்பு.  என்னை அவருடன் தங்க வைத்தார்.  படிக்க ஏற்பாடு செய்து தந்தார்.  டாடா இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.  பார்வையற்றோரின் உளவியல் பற்றி மூன்று வருடம் ஆய்வு செய்தேன்.  மகத்தான அனுபவம் அது.

பார்வையற்றோரின் உலகம் வித்தியாசமானது அல்லவா?

தவறான புரிதல் இது.  அதை உணர நேர்ந்ததையே நான் மகத்தான அனுபவம் என்றேன்.  உலகை நாம் புலன்களால் அறிவதில்லை.  மனதால்தான் அறிகிறோம்.  உதாரணமாக நான் ஓர் இளைஞனை பேட்டி கண்டேன்.  அவன் தன் எதிர்கால மனைவி பற்றிச் சொன்னான்.  முதல் தகுதி அழகு.  ஆம்; உடலழகுதான்.  எப்படி அவன் அழகை அறிகிறான்?  அவன் தன் மீதி நான்கு புலன்களால் பெண்களின் அழகை அறிகிறான்.  மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது.  எப்படி?  நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என அவன் அறிவதில்லையே, அதுபோல நாமும் அறியமுடியாது.  நாம் அவர்களை வேறுவகையான மனம் உடையவர்களாக எண்ணுவது மிகவும் தவறானது.

எப்படி நாராயண குருகுலத்தின் தலைவர் ஆனீர்கள்?

1980-இல் குரு இறப்பதற்கு முன் ஒருநாள் என்னை அழைத்தார்.  என்னிடம் குருகுலத்தின் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொன்னார்.  சுதந்திரம் தடைபடலாகாது என்று என் பரம்பரைப் பெரும் சொத்தை உதறியவன் நான்.  மறுத்துவிட்டேன்.  பிறகு ஒருநாள் குரு என்னிடம் ஒரு பேனாவைத் தந்தார்.  சில நாள் கழித்து அதை திரும்பக் கேட்டார்.  திரும்ப வாங்கியதும் சிரித்தபடி, “இதைப் போல குருகுலத்தை உன்னிடம் தற்காலிகமாக ஒப்படைக்கிறேன்” என்றார்.  என்னால் மறுக்க முடியவில்லை.  என் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றுவது என் வழக்கம்.  குருவின் உத்தரவுகள் அனைத்தையும் நான் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.  இறுக்கமற்ற நடைமுறை கொண்ட ஒரு ஞானத்தேடலுக்கான அமைப்பாகவே இக்குருகுலத்தை குரு உருவகித்திருந்தார்.  அப்படியே இன்றுவரை தொடர்கிறது.  பல உலகநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.  ‘ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிடி’ என்ற அமைப்பு பிரம்ம ஞானம் பெற விரும்புகிறவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கிறது.  ஆய்வு நூலகங்கள் பல செயல்படுகின்றன.  இச்செயல்களுக்கப்பால் என் வாழ்க்கை ஒரு தேடலாகவும் அழகனுபவமாகவும் உள்ளது.

(1995-96-இல் ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி ஆகியோர் பதிவு செய்த நித்ய சைதன்ய யதியுடனான நேர்காணல்)

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து