Category Archives: கவிதை

புதிரான மௌனம்

Standard

மென்மையைவிட மென்மையானவன் நீ

என்றாலும்

என் இருதயத்தை ரணமாக்குகிறாய்

அன்பெனும் புனிதப்பயணத்தில்

சோர்வில்லாமல்

உன் அகக் கோட்டை நோக்கி வந்துகொண்டே இருக்கிறேன்

பேச்சற்று

சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்

உன்னை காணும்போது

குழம்பிப்போகிறேன்

அறிவிழந்து நிற்கிறேன்

பதிலில்லா மௌனத்தில் உறைந்த உன் பிம்பம்

என்னை அறியமுடியா துயரத்தில் ஆழ்த்துகிறது

“என் ஆன்மாவின் பேச்சற்ற தனிமையில்

கிடப்பதுதான் உன் ஊழா” என்ற குரலில்லா எண்ணம்

என் அகத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது

 

பதிலாக வசீகரமான புன்னகையை நீ அளிக்கிறாய்

நாணக்கேட்டில் குனிகிறது என் தலை.

வேண்டுதல்கள் – 9

Standard

காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை

நீ ஒரு மலர்

வண்டெதுவும் முத்தமிடாத  மலர்

நீ ஒரு பாடல்

மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்

என் அகத்தை தூய்மையாக்கும்

இறைகூறும் இரகசியம் நீ

பேரின்பப் பரவசம் நல்கும்

இன்னிசைப் பாடல் நீ

நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை

காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை

உன்னை என் கனவுகளில் காண்பதும்

நிலைபேற்றின் இன்னிசையை என

உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய

வேறொன்றையும் நான் விழையவில்லை

 

கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்

மண்ணில் நடக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான்

 

வேண்டுதல்கள் – 8

Standard

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி

 

தானாடாமல் ஆட்டுவிப்பவன் இறைவன்

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி

படைப்புச் செயல்களில் எல்லாம்

நளினமாய் இருப்பவன்

என்றாலும்

என் அகத்தை சுழற்றி முறுக்கும்

நீயே எனை ஆட்டுவிப்பவன்

பொல்லாத கற்பனைகளைத் தூண்டும்

கண்ணுக்குத் தெரியாத ஒளி நீ

வாழ்வின் மணத்தை நுகர்வதற்கு 

ஒரே காரணம் நீ

எவ்வகையிலும் எங்கும் இருந்துகொண்டே

எல்லாவற்றிலிருந்தும்

விலகியிருக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்துதான் நான் கற்க வேண்டும்

 

வேண்டுதல்கள் – 7

Standard

பற்றின்மை தரும் மெய்யறிவு

என்னகத்தை அலைக்கழிக்கும் காதலின் கங்கு
கசப்பின் உச்சத்தில் தாக்கும் காழ்ப்பின் சூறாவளி –
என் விருப்புவெறுப்பெதையும் கவனியாமல்
முரண்களின் முன் மௌனமாய் அமர்ந்திருக்கிறாய்!
 
உன் சமநிலையின் ரகசியத்தை
கற்கவிழைகிறேன் நான்!

வேண்டுதல்கள் – 6

Standard

அன்புகலந்த நம்பிக்கை

இவ்வுலகெனும்
பயங்கரப் பள்ளத்தாக்கில்
விழிவிரிந்த வியப்புடன்
சுற்றிவருகிறாய்!
பேரரசர்கள்கூட 
பாதுகாப்புணர்வில்லாமல்
மனச்சிதைவில் நெளியும்போது
எளிய நம்பிக்கையுடன்
சுகமாய் உறங்குகிறாய்!
 
அன்புகலந்த நம்பிக்கையின் ரகசியத்தை
உன்னிடமிருந்து கற்கவேண்டும்!

வேண்டுதல்கள் – 5

Standard

இருத்தலில் இல்லாமை

புகழப்படும்போது
உன் விழிகள் ஒளிர்வதில்லை
நிந்திக்கப்படும்போது
உன்கன்னங்கள் இருள்வதில்லை
நான் இதயத்தை திறக்கும்போது
உன்னுள் மூழ்கி அமர்ந்திருக்கிறாய்
அக்கறையின்றி நானிருக்கும்போது
சேவை  புரிவதில் கவனமாய் இருக்கிறாய்
 
இரக்கமே உருவான உன் இருப்பில்கூட
யாரும் தடுக்கிக்கொள்ளாவண்ணம்
அமைதியுடன்
தன்முனைப்பை அழித்தொழிக்கும் ரகசியத்தை
உன்னிடம் பயிலவேண்டும்
 
 

வேண்டுதல்கள் – 4

Standard

மௌனத்தின் ஆற்றல்

புகழ்மிகு பீடத்தையே
எப்போதும் எனக்களித்தாய்
என்கால்கள் இளைப்பாற
உன் கனிவென்னும் கம்பளத்தை விரித்தாய்
இனியதும் மென்மையானதுமான பார்வையால்
என்னை நீ தூய்மையாக்குவது எங்ஙனம்?
உன் மௌனத்தில் பிறந்த ஞானமே
என் நாவிலெழும் சொற்களானது எவ்வாறு?
 
அடக்கமே உருவான உன் அழகிய நெற்றியில்
வெகு இயல்பாய் அமர்ந்திருக்கும்
மௌனத்தின் ஆற்றலை
உன்னிடமிருந்து கற்க வேண்டும்.