Category Archives: கலை

செசானின் ஓவிய உலகம்

Standard

இயற்கை கலையை அபிநயிக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொல்வது சிலவேளை முற்றும் உண்மையாகி விடுவதுண்டு.  தென் ஃப்ரான்சின் ஐசன் ப்ராவின்ஸ் பகுதியிலுள்ள எட்ரோயின் குன்றுகளிலும் சோங் விக்டோவர் மலைச் சரிவுகளிலும் நடந்து திரிபவர்களுக்கு அங்குள்ள காட்சிகளனைத்தும் பால் செசான் (Paul Cezanne) தீட்டி வைத்துள்ள நிலக்காட்சிகளோ என்று நினைக்கத் தோன்றும்.  அது மட்டுமன்று, அப்போது பார்வையாளனின் கண்ணும் மனமும் செசானுடையதாய் உருமாற்றம் பெறும்.  ஒவ்வோர் நிலக்காட்சிக்கும் அதற்கேயுரிய உயிர் இருப்பதாய் செசான் நம்பியிருக்கக் கூடும்.  செசானின் ஓவியங்கள் அவ்வுயிரின் மனக் கண்ணாடிகளாய் இருந்தன.  உருவப் படைப்பின் கலவை விவரணைகளைப் பார்வையாளனின் கற்பனைக்கே விட்டுவிடுவதில் அவர் தாராளத்தைக் காட்டினார்.  இயற்கையின் கற்பனைப் படைப்பிற்கு அவளது சரளமான வடிவ விசித்திரமும், வர்ண ரசனையும் புலப்பட்டால் போதும் இயற்கை பதுக்கி வைத்திருக்கும் ஓவிய அற்புதத்தை ஸ்தூலமாகப் பார்க்கத்தக்க உட்தோற்றத்தை செசான் திறந்து தருவார்.

Photograph of Paul Cézanne

மொழியில் பெயரும், உருவமும், ஒலியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்தகு முக்கியத்துவத்தை செசானின் ஓவிய மொழியில் வடிவமும், படைப்பாக்கத் தூண்டலும், நிறமும் பெறுகின்றன.  கலைஞன் இயற்கையோடு உறவாடும்போது அவனுள் இயற்கை விழித்தெழுகிறது.  ஒருவனின் தோற்றத்தைப் போலவும், ஆளுமையைப் போலவும் முக்கியமானதே அவனது பண்பு.  பண்பின் மிக மேம்பட்ட கண்ணாடிதான் கலையும், கவிதையும்.  நூற்றாண்டுகளாய் நாகரிகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தனது புராதனப் பண்பை பொய் முகத்தால் மறைத்து வைக்கிறார்கள்.  இதனால் ஒருவன் தன்னிடமே அந்நியமாகிப் போகிறான்.  சுய உணர்ச்சிகளிலும், சிந்தனைகளிலும், செய்கையிலும் வெட்கி பலஹீனமடைந்தவர்களுக்கு செசான் தன் கலை மாதிரிகளால் அவர்களின் இதயத்திற்குள் கடந்து செல்லத்தக்க ஒரு வாயிலைத் திறந்து வைக்கிறார்.

கிளாஸிக்கல் கலைஞர்கள் காட்சிகளின் வடிவ விசித்திரத்தை தூய்மைப்படுத்த முயன்றனர்.  ரொமாண்டிஸ்டு கலைஞர்களின் வர்ணச் சேர்க்கைக்கு முதன்மை தந்தனர்.  செசானின் போஸ்ட் இம்ப்ரஷனிஸம் இவ்விரு பாணிகளுக்கும் வழிகோலியது.  சிம்பாலிஸம், ஃபேவிஸம், க்யூபிஸம், எக்ஸ்பிரஷனிஸம் இவையெதுவும் செசானின் மாதிரிகளாக இருக்கவில்லை.  எனினும் அவற்றின் பிதாமகர்கள் நன்றியோடு செசானின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்டனர்.

குரோனாஸ் தனது குழந்தைகளை விழுங்கியதாக கிரேக்க புராணம் உரைக்கிறது.  ஸ்யூசை (Zeus} மட்டும் விழுங்கவில்லை.  இதைப் போல அநேக பெற்றோர்களில் குழந்தைகளை விழுங்கும் தந்தைகளுண்டு.  சமயத்தில் இயற்கையன்னையின் அரவணைப்பால் தப்பித்துவிடும் ஸ்யூசுகளும் உள்ளனர்.  குடும்ப பாசத்தின் வாயில் அனுசரித்துப் போகும் புதல்வன் அகப்பட்டுக் கொள்கிறான்.  பிறகு அவனது அபிலாஷைகளையும் இலட்சியத்தையும் பார்க்கும் கண்கள் தந்தைக்கில்லை.  தன் மனதில் ஒரு நிழலாக மட்டும் மகனைக் காண்கிறான்.

பால் செசானின் தந்தை லூயி ஆகஸ்ட் செசான் சுய முயற்சியால் வட்டிக்காரனானவர்.  மகன் சட்டம் பயில வேண்டும் பெரிய வட்டிக்காரன் ஆக வேண்டும் என்பது தந்தையின் ஆசை.  ஆனால் ஓர் ஓவியனாக வேண்டுமென்றே செசான் விரும்பினார்.  குடும்ப பாசம் உணர்ச்சியை அழுத்தும்போது பிராணவாயு சுவாசிப்பதற்கான விசால உலகை நோக்கி ஒரு பலகணியைத் திறந்து தர ஒரு அன்பான நண்பன் இருப்பான்.  பால் செச்சானுக்கு அத்தகைய ஒரு நண்பன் இருந்தான். எமீல் ஸோலா.  அவர்கள் விளையாடி, படித்து. வளர்ந்ததெல்லாம் ஒன்றாகத்தான்.  நம் உள் மனத்தில் குடிகொண்டிருக்கும் விசேஷ சக்திகளை நம்மைக் காட்டிலும் நமது ஆத்ம நண்பர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.  செசானின் மனக்கண்ணில் ஒளியூட்டிய தேவனையும், உணர்ச்சிகளில் அவலட்சணத்தை ஊட்டிய பிசாசையும் ஸோலா தெளிவாக அறிந்திருந்தார்.

சட்டக் கல்லூரியைப் புறக்கணித்து தன்னியல்பான ஓவியப் படைப்பில் முழுமையாய் ஈடுபட செசானுக்கு ஊக்கமூட்டினார் ஸோலா.  நட்பும், நன்றியுமுடைய செசானுக்கு அகங்காரமிக்க, சிந்தனையற்றவரான தனது தந்தையின் கட்டளைகளை மீற முடியவில்லை.  நியூரோசிஸ் (Neurosis) என்னும் மனநோய் தாக்கத்திற்குக் காரணம்,  உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உணர்ச்சிகரமான பிணைப்புதான்.  செசானின் தந்தையும், தாயும், இளைய சகோதரி மேரியும் இந்த உணர்ச்சிகரமானவரை பாசத்தின் பெயரால் இடுக்குப் பிடியில் திக்குமுக்காடச் செய்தனர்.

அழகை நேசிக்கும் செசானுக்கு அழகின் குறியீடாக கவிஞர்கள் போற்றும் பெண்கள் என்றாலே பயம்.  எனவே காடுகளிலும், நதிக்கரைகளிலும் தனிமையில் நடந்து இயற்கையன்னையின் முகச் சாயலைப் பதிவுசெய்ய மிகுந்த பிரயத்தனம் எடுத்தார்.  நிர்வாணப் பெண்களைப் பார்த்து ஓவியம் வரைந்து கற்பது ஐரோப்பாவில் வெகு சகஜமாய் நிகழ்ந்தது.  ஆனால் இவ்விஷயத்தில் செசான் ஆர்வம் காட்டவில்லை.  எனவே ஆரம்ப காலப் பயிற்சி திருப்திகரமாய் அமையவில்லை.  ஒரு சிறந்த ஓவியப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிட்டாது போயினும் கிரீக், லத்தீன், பிரெஞ்சு இலக்கியங்களில் தேர்ச்சியும், ஆழ்ந்த புலமையும், மனதைத் தொடும் கவிதைகளை ரசிக்கவும் அவரால் முடிந்தது.  கவிதை விஷயத்தில் செசான் தன்னையே வியக்க வைத்ததாக ஸோலோ சொல்கிறார்.

புலன்கள் மீதான கட்டுப்பாடு, காரணமில்லாத குழப்பம், பொறுமையின்மை, தெரிந்தெடுத்த வாழ்க்கை பற்றிய ஆவேசம் இவையனைத்தும் நிம்மதியற்ற கொந்தளிப்பை உருவாக்கும்போது, செசான் நிறக் கலவையுடன் கேன்வாஸின் முன்னமர்ந்து மனம்போன போக்கில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்து தள்ளுவார்.  அதை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.  பார்த்தவர்கள் பித்தனென்று தவறாகக் கணித்தனர்.  செசான் யாரிடமேனும் ஓரிரு வார்த்தைகளை வெகு அபூர்வமாகப் பேசுவார்.  நிரந்தர வெறுப்பை உண்டாக்க அதுவே போதுமானதாக இருக்கும்.  அவர் சுய வெறுப்பிலும், சந்தேகத்திலும் குறுகிப் போகும் வெகுளித்தனமான தூய ஆன்மா என்கிறார் ஸோலோ.  ஆரம்ப நாட்களில் செசான் வரைந்த Media, The Rape, The Orgy, The Strangled Woman, The Murder முதலிய ஓவியங்கள் ஒரு மனதின் சிதைவையும், துயரையும் பிரகடனப்படுத்துவன.

Railway Cutting, Black Clock என்னும் ஓவியங்களைத் தீட்டுவதற்குள் செசானின் மனம் ஓரளவு சமனப்பட்டிருந்தது.  இருப்பினும் மக்கள் அவரை கலையுலகில் முழந்தாளிட்டு அமர்ந்திருக்கும் முதல் காட்டாளன் என்று ஏளனம் செய்தனர்.  இவ்வேளையில் அவரது உற்ற நண்பனான எமீல் ஸோலா ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் ஸ்திர அந்தஸ்தைப் பெற்றார்.  ஃப்ரெஞ்சுக்காரனின் கலைத்திறனுக்கு அறைகூவல் விடுத்த வண்ணம் ஐஃபல் டவர் பாரிஸீல் உயர்ந்தது.  151 அடி உயரமுள்ள Statue of Liberty-யை பாரீஸில் வடிவமைத்து அமெரிக்காவுக்குக் கப்பலேற்றினர்.  இவையெல்லாம் செசானுக்கு ஊக்கம் தந்த சம்பவங்கள்.  இவையெல்லாம் செசானுக்கு ஊக்கம் தந்த சம்பவங்கள்.

பெண்களைக் கண்டு அஞ்சித் திரிந்த செசானின் வாழ்வில் ஓர்டென்சா என்னும் பெண் வந்து சேர்ந்தாள்.  அவளிடம் அழகோ, கலை ஈடுபாடோ, வசீகரமோ எதுவுமில்லை.  ஒரு பிள்ளையை ஈன்றெடுத்துத் தருவதைத் தவிர அவள் எதற்கும் தகுதியற்றவளாய் இருந்தாள்.  40 ஆண்டுகள் நீடித்து நின்ற இல்லற வாழ்வில் அவர்கள் ஒன்றாக வசித்தது சொற்ப நாட்களே.  எனினும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக நேர்ந்ததில் செசான் அகமகிழ்ந்தார்.  அது செசானின் வாழ்க்கையில் ஏதோ ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தியது.  தன் சமகாலத்தவர்களான எட்வர்ட் மானே, எட்கார் தேகா, க்ளாட் மோனே, ரென்வார், பிஸ்ஸாரோ ஆகியோர் நவீன ஓவியங்களைப் படைத்து பாரீஸைக் கிளர்த்தெழச் செய்தபோது செசான் கிராமிய வாழ்வின் இதயத்துடிப்பில் கவனம் செலுத்தினார்.  ஆனாலும் கூர்பே, பிஸ்ஸாரோ ஆகியோரிடமிருந்தும் செசான் உள்ளுயிர்ப்பைப் பெற்றார்.

File:Paul Cezanne, A Modern Olympia, c. 1873-1874.jpg

1872-இல் செசான் வரைந்த The House of the Hanged Man போஸ்ட் இம்ப்ரஷனிஸத்தின் தொடக்கமாக பிற்காலத்தில் புகழப்பட்டது.  எட்வர்ட் மானே Olympia வரைந்தபோது ஃப்ரெஞ்சு ஓவிய விமர்சகர்கள் உற்சாகத்தால் குதூகலித்தனர்.  ஆனால் செசான் Modern Olympia வரைந்ததும் அது மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதப்பட்டது.  செசான் அனைவராலும் தூற்றப்பட்டார்.  இதற்கிடையே பிஸ்ஸாரோவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இம்ப்ரஷனிஸத்திற்கு ஒரு புதிய முகத்தைப் படைத்துத் தந்தார் செசான்.  1877-இல் பிஸ்ஸாரோ தீட்டிய Orchard-ஐ செசானும் தீட்டியது இதற்கொரு சரியான முன்னுதாரணம்.  சரளமான வடிவம், தேர்ந்தெடுத்த வர்ணம். எளிய விளக்கம் இவையெல்லாம் இவ்வோவியத்தின் சிறப்பம்சங்கள்.  விக்டேர் ஷோக்கேவின் உருவ ஓவியத்தை (Portrait) ரென்வார் தீட்டியபோது ஷோக்கேவின் உருவ ஓவியங்கள் இரண்டை செசானும் வரைந்தார்.  அவ்வோவியங்கள் புத்தம் புதிய காலப்பதிவுகள் என்பதில் சற்றும் ஐயமில்லை.  வர்ணப் பூச்சிலும் விவரணைகளைத் தவிர்ப்பதிலும், வடிவ அழகிலும் செசான் ரென்வாரையே பிரமிக்கச் செய்துவிட்டார்.

இயற்கையிடம் ஒரு நிஜமுண்டு.  அவ்விதமே மனிதனிடமும்.  அந்நிஜத்தின் தத்துவம் வெறும் சமூகம் சார்ந்ததல்ல; கண்களுக்கு ஆனந்தம் தருவதும் அல்ல.  இயற்கையிடம் உள்ளீடாக ஒரு தாளகதி உள்ளது.  இடையறாது சுழலும் மாற்றங்களை அனுமதிக்கும் ஒரு நியதியும் உள்ளது.  அவளது காதலனான மனிதனிடமும் இந்தத் தாளலயம் காணக்கிடைக்கிறது.  அதைக் கண்டுபிடிக்கவும் விவரிக்கவும் வல்ல ஓர் ஊடகமே கலை.  அதைக் கண்டுபிடிக்காமல் ஓவியம் வரைவதென்பது இருட்டில் தட்டுத்தடுமாறி நடப்பதற்கு ஒப்பாகும்.

சுழற்சியோட்டமான காட்சி இன்பமும், அழகியலும் சமூக நிகழ்ச்சிப் போக்கும், குறியீட்டுத் தன்மையும் கலையின் உயிரோட்டமாய் செசானுக்கு இருந்ததில்லை.  கவிஞனைப் போல கலைஞனும் ரிஷியாக இருக்க வேண்டும்.  தன்னைப் போலவே வெளியிலும் பூடகமாய் இருக்கும் சாமான்ய சத்தியத்தை தரிசிக்கவும், காட்சிக்கு வைக்கவும் அவனுக்கு இயலுதல் அவசியம்.  வின்சென்ட் வான்கா ஆரம்பத்தில் இந்த ரகசியங்களை அறிந்திருக்கவில்லை.  எனவேதான் தன் ஆரம்பகால ஓவியங்களுடன் செசானிடம் சென்ற வான்காவை நல்லெண்ணம் படைத்த ஒரு பைத்தியக்காரன் என்றார் செசான்.  போஸ்ட் இம்ப்ரஷனிஸத்தின் குருவான செசானை வான்காவும் கோகேனும் (Gauguin) ஸ்வேராவும் (Seurat) வெகுவாக சிலாகித்தனர்.  ஓவியம் சமூக வாழ்வின் பின்புலமாக அமைய வேண்டுமென கூர்பேவும், கலைக்கு இலக்கியக் கண்ணோட்டம் அவசியமென டெலெக்ரோ (Delacroix) வும் வாதிட்டதில் செசானுக்கு உடன்பாடில்லை.  ஆனால் இந்த இருவர்தான் செசானை வெகுவாக ஈர்த்த கலைஞர்கள்.

இயற்கையில் கோடுகள் இல்லை, விளிம்புகளே உள்ளன.  வெளிச்சத்தினதும் நிழலினதும் விளிம்பு.  சிவப்பின், நீலத்தின், பச்சையின் விளிம்பு.  அதிலிருந்து புள்ளியும் கோடும் முக்கோணமும் சதுரமும் வட்டமும் உருவாக ஜியோமிதி கலைஞனுக்குரிய உலகை ரசிக்கவல்ல மனம் காத்துக்கொண்டிருக்கிறது.  எனவேதான் முடிந்தவரை இயற்கையின் அருகில் நின்று ஓவியம் தீட்டவே செசான் விழைந்தார்.  கோடுகளைக் குறைத்தார். பிரஷின் தன்மய பாவத்தை ஆதீதமாய் ஆதரித்தார்.  Mount Saint Victoria, Rocks முதலான ஓவியங்கள் அதற்கான சான்றுகள்.

நிலக்காட்சிகளில் காட்டிய இந்த ஆத்ம ஈடுபாட்டை செசான் தனது ஆள் ஓவியங்களிலும் காட்டத் தொடங்கினார்.  அதற்கான உதாரணம் 1988-90-இல் அவர் தீட்டிய Boy in the Red West.  இவ்வோவியத்தை வெறும் 25 ஃப்ராங்கிற்கு மட்டுமே அவரால் விற்க முடிந்தது.  ஆனால் அதே ஓவியத்தை 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஆறு லட்சத்துப் பதினாறாயிரம் டாலருக்கு ஓர் ஓவிய வியாபாரி ஏலத்தில் விற்றான்.

மக்கள் செசானை புரிந்துகொள்ள அதிக நாட்கள் தேவைப்பட்டன.  பாரீஸிலிருந்து ஓடிப்போய் ஒளிந்து வசித்து வந்த இந்த ஏகாந்த தவமுனிவனை தேடிச் சென்று ரென்வாரும், மோனேவும், பிஸ்ஸாரோவும் சந்திக்க விருப்பம் காட்டினர்.  சிநேகத்தில் வாழ்நாள் முழுவதும் சிக்குண்டு இருத்தல், பிற்பாடு ஆத்ம தரிசனத்தால் அதனின்று முக்திபெறுதல் – இதுவே செசானின் வாழ்வில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்ச்சி.  இயற்கை என்று சொன்னால் மலையும், மேகமும், பொய்கையும், பூக்களும் மட்டுமன்று மனித இயற்கையும் அதில் உட்படும்.  விவசாயத் தொழிலாளிகளின் சீட்டாட்டம் தீட்டப்பட்டிருப்பது ஒரு இயற்கை வர்ணமாகத்தான்.  மனிதனின் புறப்பண்போடு இணங்கிச் செல்ல இயலாத செசானுக்கு பொறுமையின் உருமாதிரிகளாய் அமைந்திருந்தவை அனைத்தும் நிச்சலன வஸ்துக்களே.  எனவே அனுதினமும் ஓவியம் தீட்டுவதை வழக்கமாய் கொண்டிருந்த செசான் ‘உறைந்து போன வாழ்வு’ (Still Life)-க்கு முதன்மை நல்கியதில் வியப்பெதுவுமில்லை.  உணர்வற்ற பொருட்களிலும் உயிர்த்துடிப்புண்டு.  அது நிறங்களில் குடி கொண்டுள்ளது.  எனவேதான் செசானின் ‘உறைந்துபோன வாழ்வு’ ஜீவ உருவங்களைக் காட்டிலும் அதீத உயிர்த்துடிப்பு கொண்டதாய் திகழ்கிறது.

Advertisements

கலையில் ஆன்மீகம்

Standard

முதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய நான் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவிற்குப் போனேன்.  ஏன் இண்டியானாவை தேர்ந்தெடுத்தேன்?  அங்குதான் என் ஆத்ம நண்பரான டாக்டர் விஜயபிரசாந்தன் பிள்ளை வசித்து வருகிறார்.  ஏன் ஆத்ம நண்பராகக் கருதுகிறேன் என்றால் முழுவதும் பெளதீகமான  தோற்றங்களுக்கு அப்பால் ஓர் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டதுதான் காரணம்.  உயிருடன் வாழும் சில காலமேனும் சுமந்து நடக்க வேண்டிய முக்கியமான பெளதிகச் சார்புடைய செல்வமே என் முதுகெலும்பு.  அதை பிறர் கையில் எடுத்துப் போய் ஒப்படைக்க மனம் வரவில்லை.  விஜயபிரசாந்தன் எதிர்பார்ப்புகள் எதுவிமின்றி என்மீது அன்பு வைத்திருக்கிறார்.  ஆகவேதான் வார்த்தைகளால் விளக்க முடியாத என் பிரியமானவற்றையெல்லாம் அவர் மதிப்பார் என்று கருதுகிறேன்.  எனவே விஜயபிரசாந்தன் வெறும் நண்பர் மட்டுமல்ல, ஆத்ம நண்பர்.

அறுவை சிகிச்சை ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நடந்தது.  அறுவை சிகிச்சை அறையில் பிரவேசித்த பின் என்ன நிகழ்ந்ததென எனக்குத் தெரியாது.  மயக்கம் தெளிந்ததும் டாக்டர் சொன்னார், “வெளியே கிடந்த விலா எலும்புகளைத் தட்டி உள்ளே சேர்த்துள்ளேன்”.  சுத்தியலால் முதுகெலும்பைத் தட்டிச் சரியாக்குவது பெளதிகம்.  அதில் பின்னிப் பிணைந்து கிடக்கும் நாடி நரம்புகளின் பாதுகாப்பைக் குறித்து சிந்தனை புரிந்து அக்கறை காட்டுவது ஆன்மீகம்.  இப்படித்தான் ஆன்மீகத்தையும் பெளதிகத்தையும் புரிந்து வைத்துள்ளேன்.

சில நாட்கள் கழித்து சிரத்தாவும் நான்ஸியும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.  அவர்கள் ஒரு விசேஷ செய்தியுடன் வந்திருந்தனர்.  சிக்காகோ ஆர்ட் சென்டரில் க்ளாட்மோனே (Claude Monet – 1840-1926) வின் அரியதோர் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.  எல்லாமே ஒரிஜினல் கேன்வாஸ் ஓவியங்கள்.  ஒரே காட்சி காலை, மாலை, இரவு நேர வெளிச்சங்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.  பனிக்காலத்திலும், மழைக்காலத்திலும், வசந்த காலத்திலும் வரைந்த ஓவியங்களும் உள்ளன.  பொருளின் இருப்பைக் காணும்போது ஒரே ஆய்வு விஷயம்தான்.  வெளிச்சம் உண்டாக்கும் பாதிப்பைக் காணுகையில் கலையில் ஆன்மீகம்தான் அவற்றின் முகக்குறிப்பாகத் தெரியும்.   சென்று பார்க்கவேண்டுமென விரும்பினேன்.  எப்படிப் போவது?  முதுகெலும்பும், முதுகுத்தோலும் கீறி தைத்து வைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும் போய் பார்க்க வேண்டும்.

Claude Monet 1899 Nadar crop.jpg

ஒரு தைரியத்தில் போனேன்.  உடல் நலமின்மை பெளதிகம்.  அழகியல் ரசனையை நல்கிய மனதின் உந்துதல் ஆன்மீகம்.  ஓவிய மையத்தை அடைந்ததும் நான்ஸிக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது.  ஒரு சக்கர நாற்காலியை எடுத்து வந்து அதிலென்னை இருத்தி தள்ளிச் செல்வது. அவர் அப்படியே செய்தார்.  நலம் குன்றிய உடலை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிச் செல்வது பெளதிகம்.  ஆனால் ஒவ்வோர் ஓவியத்தையும் எவ்வளவு தூரத்திலிருந்து தலையை எப்படிச் சாய்த்து வைத்து, எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற என் நோக்கத்தைக் கணக்கிலெடுத்து நான்ஸி ஒவ்வோர் ஓவியத்தின் அருகிலும் என்னைக் கொண்டு போய் பொறுமையோடு காத்திருந்ததும் உடல் நலம் குன்றிய ஒருவர் ஓவியத்தை ரசிப்பதற்காக சக்கர நாற்காலியில் வருவதைப் பார்த்த ஆள்கூட்டம் ஒதுங்கி நின்று எனக்கு வசதியை ஏற்படுத்தித் தந்ததும் மனதை நெகிழச் செய்த அனுபவங்கள்.

வரையறுத்துச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று’ அச்சூழ்நிலையிலும் இயல்பான ஓர் உற்சாகத்தை அளித்ததை கலையில் ஆன்மீகம் என்பேன்.  அதுவரை தெரிந்ததிலிருந்து தெரிந்திராத ஓர் அந்நிய உணர்வுக்கு, காட்சிக்கு ஏதேனும் ஒரு மார்க்கம் அழைத்துச் செல்வதை நான் அனுபவித்தால் அதுவே எனக்கு ஆன்மீகம்.  ஒவ்வோர் ஓவியமும் நாக்கில்லாமலே பேசும்.  கண்களில்லாமலே ஆத்மாவால் உயிரை முத்தமிடும்.  அதையே நான் கலையில் ஆன்மீகமாக நம்புகிறேன்.

அன்றாட நிகழ்வுகளின் வெறும் சாதாரணத் தன்மையிலான குவிப்பாகக் காணப்படினும் அந்நியமான காட்சியின் ஓர் இனிய தோற்றத்தை, ஒரு தெளிவடையும் புதிர் நிலையை, வண்ணத்தை சற்று கூட்டி, அல்லது சற்று குறைத்து தூரிகையின் ஒரு சிறிய சுழிப்பால் காட்டியிருக்கும் இடத்தை இமைக்காமல் நோக்கி, முன்னேற முடியாமல் நிற்கும்போது நான் அதை கலையில் ஆன்மீகம் என்கிறேன்.

கான்டின்ஸ்கி ஒருமுறை சொன்னார், ‘கலையின் மிக மெல்லிய உயிர்ப்பை ஆழத்தில் காணநேரும்போது அது அமைதியாய் தெரிகிறது.  அவ்வமைதியை பார்வையாளனும் அனுபவிக்க முடியும்.  சற்றும் ஓசையெழுப்பாமல் அந்த ஓவியம் ஒரு சிறு புன்னகையோடு சொல்கிறது, ‘இதோ நான் இங்கிருக்கிறேன்”.  அவ்வோசைக்குள் புதைந்திருக்கும் ஆழத்தில் ஒரு கம்பீரம் உண்டு.

பிரபஞ்சம் நிறக் கலவைகளைக் கொண்டது.  கண்ணின் ஆற்றல்களில் ஒன்று அதற்கு நிறங்களை அவற்றின் எல்லா வேற்றுமைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து சுருதி இனிமையும், ராக இனிமையும் கொண்ட சப்த ஒழுங்கைப் போல ரசிக்க முடியும் என்பதாகும்.  இவ்விஷயத்தை மோனே ஆரம்பத்திலேயே அறிந்திருந்தார்.  எனவே பிரபஞ்சத்தை அதன் இயல்பான அழகால் கண்டு அதன் நிறங்களில் ஒன்றைக்கூட நிராகரிக்காமல் கேன்வாஸில் பதிவு செய்ய மோனே தீர்மானித்தார்.  ஒளி, நிழல் இவற்றிடம் நிறங்கள் தமது இதய ரகசியத்தை மொழிகின்றன.  அந்த ரகசிய உரையாடலில் ஒரு கவித்துவம் உண்டு.  அது ஈடு இணையற்றதென மோனே கருதினார்.  ஓவியக் கலையின் இந்த ஆன்மீகத்தைத்தான் மோனே மிகவும் நேசித்தார்.  நிறங்களை முத்தமிடும் ஒளித்துகள்கள் ஒரு சின்மய இனிமையை திறமையான கண்களுக்கு ரகசியமாக பரிமாறுகின்றன.  மோனேயின் தூரிகையை நம்பிக்கையோடு ஆசிர்வதிக்க அந்த ராக ஒளிர்வு என்றும் காத்துக் கொண்டிருந்தது.  அந்தப் பசுமையான இதயத்தின் பெயர்தான் ‘இம்ப்ரஷனிசம்’.

எங்கும் பேரமைதி பிரபஞ்சத்தைத் தழுவி கனவமைதியைப் புலப்படுத்தும் தருணங்களில் மட்டும் மோனே பிரபஞ்சத்தை நேசிக்கவில்லை.  காற்றும் மழையும் கடல் எழுச்சியும் கலங்கிய புரண்டு வரும் நதி நீரும் காற்றிலசைந்து ஆட்டம் போடும் பெருமரங்களும் அரிய அழகு தரிசனத்திற்கான திறவுகோலை மோனேவிடம் ஒப்படைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.  பிரபஞ்சத்திற்கு அமைதியும், அமைதியின்மையும் வேறுவேறு முகங்களும் வித்தியாசமான ஆத்மாவும் உண்டு.  அமைதியின்மையின் முகத்தையே ‘நோர்மான்டி கரை’ என்னும் ஓவியம் பிரதிபலிக்கிறது.

சாலைகளில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் தடித்த மரங்களின் மெளன அழகில் நமது அந்நியத்தன்மை வெளிப்படுகிறது.  அந்த அந்நியத்தன்மையை மோனேவின் சிறுகுழந்தை உறங்கிக் கிடப்பதைச் சித்தரிக்கும் ஓவியத்தில் காணலாம்.  அந்த பாலகனின் முகத்தில் நிறைந்திருக்கும் களங்கமின்மையும், தனிமையும் நம்மை உறைய வைக்கின்றன.  அறையின் கதவருகில் நின்று மெளனமாய் பார்ப்பதைத் தவிர ஒரு அடி முன்னேறக்கூட அவன் மெளனம் நம்மை அனுமதிப்பதில்லை.

கமீலே பிரசவித்துக் கிடக்கிறாள்.  மோனேவின் கையில் குழந்தைக்கோ, அவளுக்கோ உணவு வாங்கித் தருவதற்கு பைசா கூட இல்லை.  எவ்வளவு வேதனையோடு அந்தச் சூழ்நிலையை பிரடரிக் பஸீலிக்கு மோனே எழுதியுள்ளார்!  மோனேவின் தூரிகை முனையில் தேங்கி நிற்கும் வேதனையின் நிழலை குழந்தையின் இறுகி மூடிய உதடுகளில் காணலாம்.

சூரியன் மோனேவின் சொர்க்கக் கதவைப் பாதுகாத்து வைத்திருந்தது.  ஆனால் ஐரோப்பாவின் சூரியனை மாதக் கணக்கில் பார்க்க முடியாது.  சூரியன் வானத்தில் தென்படும் வேளையில் ஓவியன் தூரிகையையும், வர்ணத்தையும் ஆயத்தப்படுத்துவதற்குள் கார்மேகம் வந்து மறைத்துவிடும்.  அதைத் தொடர்ந்து தூறல் மழை.  குளிர் தொடங்கியவுடன் பனி கொட்டும்.  பிரபஞ்சத்திற்கு இவையனைத்தும் காரண காரியங்களற்ற ஒரு பொழுதுபோக்கு.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு துண்டு சுட்ட ரொட்டி, அரை அவுன்ஸ் வெண்ணெய், ஒரு கப் காப்பி இவற்றை உண்பதற்குப் பொருளீட்ட வேண்டுமெனில் நீரின் நீலத்தில், மரத்தின் பசுமையில், பூவின் அழகில் சூரிய கிரணங்கள் வந்து வருட வேண்டும்.  அரிய வரம் போல் சூரியன் வானில் தெரியும்போது மோனேவின் அம்பறாத் தூணியில் அம்புகள் இல்லை.  வர்ண டியூப்கள் அனைத்தும் காலியாக இருக்கும்.  அவற்றை வாங்க பணம் இருக்காது.  தனது படைப்பை யாரேனும் வாங்கி இருநூறோ, முன்னூறோ ஃப்ராங்குகள் தருவார்களேயானால்… இதையெல்லாம் மோனே நிறைந்த விழிகளோடு ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு எழுதியுள்ளார்.

1879 செப்டம்பர் ஐந்தாம் தேதி மோனே ஓரு ஓவியத்தைத் தீட்டினார்.  மரணத்தில் புதையும் அன்பு மனைவியின் ஓவியம்.  அன்று ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு மோனே எழுதினார்.  ‘இன்று என் அன்பு மனைவியின் துன்பத்திற்கு முடிவு வந்துவிட்டது.  காலை பத்து மணிக்கு அவளின் உயிர் பிரிந்தது.  நானும் என் ஆதரவில்லாக் குழந்தைகளும் மட்டும்.  எனக்கு வேதனையை சகிக்க முடியவில்லை.  எனக்கொரு சின்ன உதவியை செய்து தரவேண்டும்.  கமீலேவின் கழுத்துப் பதக்கத்தை அடகு வைத்துவிட்டேன்.  அவள் வாழ்க்கையின் மொத்த சம்பாத்தியம் அது மட்டுமே.  மதியத்திற்குப் பிறகு அவளின் உடல் தேவாலயத்தின் முற்றத்தை அடைந்துவிடும்.  அதற்கு முன்பாக அந்தப் பதக்கத்தை அவளது கழுத்தில் அணிவிக்க வேண்டும்.  என்மீது கருணை காட்டுங்கள்.’

உலகம் புகழும் ஓர் ஓவியன்!  எத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கும், இதயத்திற்கும் மகிழ்வைத் தந்தவன்!   இத்தகைய கணங்களையும் அவன் எதிர்கொள்ள நேர்ந்ததோ! ‘ஸாந்தே அந்த்ரஸ்ஸே கடற்காட்சிகள்’ மோனேவின் மனதை ஒருமுறை தழுவி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்.  அந்த ஓவியங்களில் நீண்ட பெருமூச்சுகளுண்டு.  பூக்களே மோனேவின் மிக நெருங்கிய நண்பர்கள்.  வாழ்வின் இறுதி நாட்களில் வறுமை நீங்கியபோது அவர் அபூர்வமான பூந்தோட்டங்களை படைத்து வர்ணங்களின் வழிபாட்டிற்கு திருவிழாக்களை நடத்தினார்.  பூக்கள் அவரது விளையாட்டுப் பொருட்களாய் இருந்ததில்லை.  அவை உற்சாகத்தோடு ஊரெங்கும் நிறைந்திருக்க வேண்டும்.  சட்டிகளில் வளர்க்கக் கூடியவையல்ல பூக்கள்.  அவை பூஞ்சோலைகளில் கனவு விழாக்களாய், சிரிப்புகளாய்  எல்லையற்ற ஐக்கியமாய் திகழ வேண்டும்.  செல்வந்தர்களின் பகட்டைக் காட்ட பூந்தோட்டங்களை வளர்க்கக் கூடாது.  அவை பூமியின் சகஜமான பூரிப்புடன் மலர வேண்டும்.  கலைஞரின் அளவற்ற அழகுணர்வுக்குப் பூக்கள் குதூகலத்தோடு தோரணம் கட்ட வேண்டும்.  விசிறி வீச வேண்டும்.  ஐரீஸும், ட்யூலிப்பும், பியோணியும் பரஸ்பரம் பார்த்தும் சிரித்தும் என்றென்றும் இணைந்தும் வர்ண ஆரவாரத்துடன் பயணிகளுக்கு பாதை காட்ட வேண்டும்.  இதுவே மோனேவின் சித்தாந்தம்.

அலைகளை பொங்கச் செய்து வெண் நுரையின் கொந்தளிப்பில் மூழ்கி எழுவது கடலின் குத்தகையாகி விடக்கூடாது.  தோட்டக்காரன் பூக்களை வளர்க்கிறான். ஓவியனோ பூக்களின் பெரும் புகழுக்கு அழிவற்ற ஒளியை ஏற்றுகிறான்.

கமீலேவின் மறைவுக்குப்பின் மோனே மனம், இதயம், சிந்தனை அனைத்தையும் தனது ஓவிய ஈடுபாட்டிற்காக தியாகம் செய்தாரெனச் சொல்லலாம்.  அதற்குப் பின் கடிதங்களின் போக்கு மாறியது.  அவரது மனித நேயம் என்றும் மனத் துயரை தருவதாகவே இருந்தது.  இருப்பினும் ஓவிய ஈடுபாட்டிற்காக ஒதுக்கி  வைக்கப்பட்டிருந்த நேரத்தை அபகரிக்க குடும்ப உறுப்பினர்களுக்கோ, நண்பர்களுக்கோ முடியவில்லை.

கமீலேவின் இடத்தை ஆலீஸ் பிடித்தாள்.  ஆலீஸ் ஆரோக்கியமும் திறமையும் உடையவளாக விளங்கினாள்.  மோனே அக வெளியிலிருந்து மலைச் சிகரங்களுக்கும் கடலோரங்களுக்கும் தன் படைப்புகளின் அரங்கை மாற்றினார்.  கடலோடு உரையாட தயாராய் வந்த தூரிகைக்கு பாய்ந்தோடும் அலைகளோடும் மேகங்களைக் கடித்து வீழ்த்துவதற்கு எம்பிக் குதிக்கிற கடல் எழுச்சியோடும் கையாள நேர்ந்ததைப் போல இருக்கவில்லை.  மலைத் தொடர்களின் முரட்டுப் பாறைகளிடமும், செங்குத்தாய் கிடக்கும் சரிவுகளிடமும் முதுகை வளைத்து நிற்கும் காய்ந்த மரங்களிடமும் தூரிகையை சமரசப்படுத்த வேண்டியதாயிற்று.  அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு 1883 பிப்ரவரியில் தீட்டிய ‘எட்ரோட்டியில் கடல் கொந்தளிப்பு’.

அக்காட்சி ஏற்கனவே கூர்வே திறமையாகப் புலப்படுத்திய ஒன்றுதான்.  மலைக்கும் கடலுக்கும் நடுவே சிக்குண்ட கலைஞனுக்கு வேறோர் உணர்ச்சியூட்டும் பிரச்சினையும் முன் நின்றது.  அது ஆலீஸை மணப்பதற்கு முன்பு நிகழ்ந்தது.  ஆலீஸை திருமணம் செய்வதற்கு முன்பு கமீலே விட்டுப்போன இடத்திற்கு ஆலீஸ் விருப்பத்துடன் வந்து சேர்ந்திருந்தாள்.  எனினும் அவளது கணவன் எர்னஸ்டேஹோஷெஸே இன்னும் ஆலீஸை அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்திருக்கவில்லை.  ஆகவே பிறன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தார்மீகமான அகக்கொந்தளிப்பு மோனேவின் மனதில் குமுறிக் கொண்டிருந்தது.  ஒருவேளை ‘எட்ரோட்டியில் கடல் எழுச்சி’யை கேன்வாஸில் தருவதற்கு புற எழுச்சியைக் காட்டிலும் அகக் கொந்தளிப்பு உதவியிருக்கக் கூடும்.  அதைப் போலவே மோனேவின் அகக் கொந்தளிப்பைப் பிரதிபலிக்கும் ஓர் ஓவியம் ‘கிவர்ன்னியில் எப்தே நதிப்பிரவாகம்’.  தடையும் அலையும் மட்டுமல்ல அந்த நதியில் பயங்கரமான ஒரு நீர்ச் சுழலும் தெரிகிறது.

மனதை ஒருமுகப்படுத்த மோனே கண்டடைந்த இரு வழிகள், ஆலீஸுக்கு தினமும் கடிதம் எழுதுவதும் கண்களை கடலிலும் பாறைப் பகுதியிலும் பறந்து திரிய விடுவதும்.  துயரத்தின் அடியோட்டத்திலும் அதனை சகித்துக் கொள்ளும்போது வெளிப்படும் வெதும்பலிலும் ஒளிந்திருக்கும் ஒரு சுய ஆத்மதரிசனம் உண்டு.  அது தரும் முனைப்பு கலையின் ஆன்மீகத்தை அற்புதமாக வலுப்படுத்துகிறது.  அதற்குச் சரியான உதாரணம்தான் மோனேவின் ஓவியப் படைப்புகள்.  அந்நாட்களில் அவர் அனுபவிக்க நேர்ந்த வேதனையுடன் அடக்க முடியாத ஒரு காதல் மோகத்தையும் மோனே தன்மனதில் வைத்து பராமரித்து வந்தார்.  அதுதான் ஆலீஸின் மீது அவருக்கிருந்த அனுராகம்.  இவை இரண்டும் உருவாக்கிய எட்ட முடியாத ஓர் ஆழம் மோனே வெளிப்படுத்திய அழகியல் தரிசனத்தில் நிறைந்திருக்கிறது.  அதை இனம் காண பார்வையாளனுக்கு இயலுமெனில் ஓவிய அனுபவத்தின் எதார்த்தமான இனிமையை அந்தக் கலைரசிகன் தெரிந்து கொள்வான்.

தமிழில் : நிர்மால்யா