Category Archives: அறிதல்கள்

செசானின் ஓவிய உலகம்

Standard

இயற்கை கலையை அபிநயிக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொல்வது சிலவேளை முற்றும் உண்மையாகி விடுவதுண்டு.  தென் ஃப்ரான்சின் ஐசன் ப்ராவின்ஸ் பகுதியிலுள்ள எட்ரோயின் குன்றுகளிலும் சோங் விக்டோவர் மலைச் சரிவுகளிலும் நடந்து திரிபவர்களுக்கு அங்குள்ள காட்சிகளனைத்தும் பால் செசான் (Paul Cezanne) தீட்டி வைத்துள்ள நிலக்காட்சிகளோ என்று நினைக்கத் தோன்றும்.  அது மட்டுமன்று, அப்போது பார்வையாளனின் கண்ணும் மனமும் செசானுடையதாய் உருமாற்றம் பெறும்.  ஒவ்வோர் நிலக்காட்சிக்கும் அதற்கேயுரிய உயிர் இருப்பதாய் செசான் நம்பியிருக்கக் கூடும்.  செசானின் ஓவியங்கள் அவ்வுயிரின் மனக் கண்ணாடிகளாய் இருந்தன.  உருவப் படைப்பின் கலவை விவரணைகளைப் பார்வையாளனின் கற்பனைக்கே விட்டுவிடுவதில் அவர் தாராளத்தைக் காட்டினார்.  இயற்கையின் கற்பனைப் படைப்பிற்கு அவளது சரளமான வடிவ விசித்திரமும், வர்ண ரசனையும் புலப்பட்டால் போதும் இயற்கை பதுக்கி வைத்திருக்கும் ஓவிய அற்புதத்தை ஸ்தூலமாகப் பார்க்கத்தக்க உட்தோற்றத்தை செசான் திறந்து தருவார்.

Photograph of Paul Cézanne

மொழியில் பெயரும், உருவமும், ஒலியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்தகு முக்கியத்துவத்தை செசானின் ஓவிய மொழியில் வடிவமும், படைப்பாக்கத் தூண்டலும், நிறமும் பெறுகின்றன.  கலைஞன் இயற்கையோடு உறவாடும்போது அவனுள் இயற்கை விழித்தெழுகிறது.  ஒருவனின் தோற்றத்தைப் போலவும், ஆளுமையைப் போலவும் முக்கியமானதே அவனது பண்பு.  பண்பின் மிக மேம்பட்ட கண்ணாடிதான் கலையும், கவிதையும்.  நூற்றாண்டுகளாய் நாகரிகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தனது புராதனப் பண்பை பொய் முகத்தால் மறைத்து வைக்கிறார்கள்.  இதனால் ஒருவன் தன்னிடமே அந்நியமாகிப் போகிறான்.  சுய உணர்ச்சிகளிலும், சிந்தனைகளிலும், செய்கையிலும் வெட்கி பலஹீனமடைந்தவர்களுக்கு செசான் தன் கலை மாதிரிகளால் அவர்களின் இதயத்திற்குள் கடந்து செல்லத்தக்க ஒரு வாயிலைத் திறந்து வைக்கிறார்.

கிளாஸிக்கல் கலைஞர்கள் காட்சிகளின் வடிவ விசித்திரத்தை தூய்மைப்படுத்த முயன்றனர்.  ரொமாண்டிஸ்டு கலைஞர்களின் வர்ணச் சேர்க்கைக்கு முதன்மை தந்தனர்.  செசானின் போஸ்ட் இம்ப்ரஷனிஸம் இவ்விரு பாணிகளுக்கும் வழிகோலியது.  சிம்பாலிஸம், ஃபேவிஸம், க்யூபிஸம், எக்ஸ்பிரஷனிஸம் இவையெதுவும் செசானின் மாதிரிகளாக இருக்கவில்லை.  எனினும் அவற்றின் பிதாமகர்கள் நன்றியோடு செசானின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்டனர்.

குரோனாஸ் தனது குழந்தைகளை விழுங்கியதாக கிரேக்க புராணம் உரைக்கிறது.  ஸ்யூசை (Zeus} மட்டும் விழுங்கவில்லை.  இதைப் போல அநேக பெற்றோர்களில் குழந்தைகளை விழுங்கும் தந்தைகளுண்டு.  சமயத்தில் இயற்கையன்னையின் அரவணைப்பால் தப்பித்துவிடும் ஸ்யூசுகளும் உள்ளனர்.  குடும்ப பாசத்தின் வாயில் அனுசரித்துப் போகும் புதல்வன் அகப்பட்டுக் கொள்கிறான்.  பிறகு அவனது அபிலாஷைகளையும் இலட்சியத்தையும் பார்க்கும் கண்கள் தந்தைக்கில்லை.  தன் மனதில் ஒரு நிழலாக மட்டும் மகனைக் காண்கிறான்.

பால் செசானின் தந்தை லூயி ஆகஸ்ட் செசான் சுய முயற்சியால் வட்டிக்காரனானவர்.  மகன் சட்டம் பயில வேண்டும் பெரிய வட்டிக்காரன் ஆக வேண்டும் என்பது தந்தையின் ஆசை.  ஆனால் ஓர் ஓவியனாக வேண்டுமென்றே செசான் விரும்பினார்.  குடும்ப பாசம் உணர்ச்சியை அழுத்தும்போது பிராணவாயு சுவாசிப்பதற்கான விசால உலகை நோக்கி ஒரு பலகணியைத் திறந்து தர ஒரு அன்பான நண்பன் இருப்பான்.  பால் செச்சானுக்கு அத்தகைய ஒரு நண்பன் இருந்தான். எமீல் ஸோலா.  அவர்கள் விளையாடி, படித்து. வளர்ந்ததெல்லாம் ஒன்றாகத்தான்.  நம் உள் மனத்தில் குடிகொண்டிருக்கும் விசேஷ சக்திகளை நம்மைக் காட்டிலும் நமது ஆத்ம நண்பர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.  செசானின் மனக்கண்ணில் ஒளியூட்டிய தேவனையும், உணர்ச்சிகளில் அவலட்சணத்தை ஊட்டிய பிசாசையும் ஸோலா தெளிவாக அறிந்திருந்தார்.

சட்டக் கல்லூரியைப் புறக்கணித்து தன்னியல்பான ஓவியப் படைப்பில் முழுமையாய் ஈடுபட செசானுக்கு ஊக்கமூட்டினார் ஸோலா.  நட்பும், நன்றியுமுடைய செசானுக்கு அகங்காரமிக்க, சிந்தனையற்றவரான தனது தந்தையின் கட்டளைகளை மீற முடியவில்லை.  நியூரோசிஸ் (Neurosis) என்னும் மனநோய் தாக்கத்திற்குக் காரணம்,  உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உணர்ச்சிகரமான பிணைப்புதான்.  செசானின் தந்தையும், தாயும், இளைய சகோதரி மேரியும் இந்த உணர்ச்சிகரமானவரை பாசத்தின் பெயரால் இடுக்குப் பிடியில் திக்குமுக்காடச் செய்தனர்.

அழகை நேசிக்கும் செசானுக்கு அழகின் குறியீடாக கவிஞர்கள் போற்றும் பெண்கள் என்றாலே பயம்.  எனவே காடுகளிலும், நதிக்கரைகளிலும் தனிமையில் நடந்து இயற்கையன்னையின் முகச் சாயலைப் பதிவுசெய்ய மிகுந்த பிரயத்தனம் எடுத்தார்.  நிர்வாணப் பெண்களைப் பார்த்து ஓவியம் வரைந்து கற்பது ஐரோப்பாவில் வெகு சகஜமாய் நிகழ்ந்தது.  ஆனால் இவ்விஷயத்தில் செசான் ஆர்வம் காட்டவில்லை.  எனவே ஆரம்ப காலப் பயிற்சி திருப்திகரமாய் அமையவில்லை.  ஒரு சிறந்த ஓவியப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிட்டாது போயினும் கிரீக், லத்தீன், பிரெஞ்சு இலக்கியங்களில் தேர்ச்சியும், ஆழ்ந்த புலமையும், மனதைத் தொடும் கவிதைகளை ரசிக்கவும் அவரால் முடிந்தது.  கவிதை விஷயத்தில் செசான் தன்னையே வியக்க வைத்ததாக ஸோலோ சொல்கிறார்.

புலன்கள் மீதான கட்டுப்பாடு, காரணமில்லாத குழப்பம், பொறுமையின்மை, தெரிந்தெடுத்த வாழ்க்கை பற்றிய ஆவேசம் இவையனைத்தும் நிம்மதியற்ற கொந்தளிப்பை உருவாக்கும்போது, செசான் நிறக் கலவையுடன் கேன்வாஸின் முன்னமர்ந்து மனம்போன போக்கில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்து தள்ளுவார்.  அதை யாரும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.  பார்த்தவர்கள் பித்தனென்று தவறாகக் கணித்தனர்.  செசான் யாரிடமேனும் ஓரிரு வார்த்தைகளை வெகு அபூர்வமாகப் பேசுவார்.  நிரந்தர வெறுப்பை உண்டாக்க அதுவே போதுமானதாக இருக்கும்.  அவர் சுய வெறுப்பிலும், சந்தேகத்திலும் குறுகிப் போகும் வெகுளித்தனமான தூய ஆன்மா என்கிறார் ஸோலோ.  ஆரம்ப நாட்களில் செசான் வரைந்த Media, The Rape, The Orgy, The Strangled Woman, The Murder முதலிய ஓவியங்கள் ஒரு மனதின் சிதைவையும், துயரையும் பிரகடனப்படுத்துவன.

Railway Cutting, Black Clock என்னும் ஓவியங்களைத் தீட்டுவதற்குள் செசானின் மனம் ஓரளவு சமனப்பட்டிருந்தது.  இருப்பினும் மக்கள் அவரை கலையுலகில் முழந்தாளிட்டு அமர்ந்திருக்கும் முதல் காட்டாளன் என்று ஏளனம் செய்தனர்.  இவ்வேளையில் அவரது உற்ற நண்பனான எமீல் ஸோலா ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் ஸ்திர அந்தஸ்தைப் பெற்றார்.  ஃப்ரெஞ்சுக்காரனின் கலைத்திறனுக்கு அறைகூவல் விடுத்த வண்ணம் ஐஃபல் டவர் பாரிஸீல் உயர்ந்தது.  151 அடி உயரமுள்ள Statue of Liberty-யை பாரீஸில் வடிவமைத்து அமெரிக்காவுக்குக் கப்பலேற்றினர்.  இவையெல்லாம் செசானுக்கு ஊக்கம் தந்த சம்பவங்கள்.  இவையெல்லாம் செசானுக்கு ஊக்கம் தந்த சம்பவங்கள்.

பெண்களைக் கண்டு அஞ்சித் திரிந்த செசானின் வாழ்வில் ஓர்டென்சா என்னும் பெண் வந்து சேர்ந்தாள்.  அவளிடம் அழகோ, கலை ஈடுபாடோ, வசீகரமோ எதுவுமில்லை.  ஒரு பிள்ளையை ஈன்றெடுத்துத் தருவதைத் தவிர அவள் எதற்கும் தகுதியற்றவளாய் இருந்தாள்.  40 ஆண்டுகள் நீடித்து நின்ற இல்லற வாழ்வில் அவர்கள் ஒன்றாக வசித்தது சொற்ப நாட்களே.  எனினும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக நேர்ந்ததில் செசான் அகமகிழ்ந்தார்.  அது செசானின் வாழ்க்கையில் ஏதோ ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தியது.  தன் சமகாலத்தவர்களான எட்வர்ட் மானே, எட்கார் தேகா, க்ளாட் மோனே, ரென்வார், பிஸ்ஸாரோ ஆகியோர் நவீன ஓவியங்களைப் படைத்து பாரீஸைக் கிளர்த்தெழச் செய்தபோது செசான் கிராமிய வாழ்வின் இதயத்துடிப்பில் கவனம் செலுத்தினார்.  ஆனாலும் கூர்பே, பிஸ்ஸாரோ ஆகியோரிடமிருந்தும் செசான் உள்ளுயிர்ப்பைப் பெற்றார்.

File:Paul Cezanne, A Modern Olympia, c. 1873-1874.jpg

1872-இல் செசான் வரைந்த The House of the Hanged Man போஸ்ட் இம்ப்ரஷனிஸத்தின் தொடக்கமாக பிற்காலத்தில் புகழப்பட்டது.  எட்வர்ட் மானே Olympia வரைந்தபோது ஃப்ரெஞ்சு ஓவிய விமர்சகர்கள் உற்சாகத்தால் குதூகலித்தனர்.  ஆனால் செசான் Modern Olympia வரைந்ததும் அது மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதப்பட்டது.  செசான் அனைவராலும் தூற்றப்பட்டார்.  இதற்கிடையே பிஸ்ஸாரோவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இம்ப்ரஷனிஸத்திற்கு ஒரு புதிய முகத்தைப் படைத்துத் தந்தார் செசான்.  1877-இல் பிஸ்ஸாரோ தீட்டிய Orchard-ஐ செசானும் தீட்டியது இதற்கொரு சரியான முன்னுதாரணம்.  சரளமான வடிவம், தேர்ந்தெடுத்த வர்ணம். எளிய விளக்கம் இவையெல்லாம் இவ்வோவியத்தின் சிறப்பம்சங்கள்.  விக்டேர் ஷோக்கேவின் உருவ ஓவியத்தை (Portrait) ரென்வார் தீட்டியபோது ஷோக்கேவின் உருவ ஓவியங்கள் இரண்டை செசானும் வரைந்தார்.  அவ்வோவியங்கள் புத்தம் புதிய காலப்பதிவுகள் என்பதில் சற்றும் ஐயமில்லை.  வர்ணப் பூச்சிலும் விவரணைகளைத் தவிர்ப்பதிலும், வடிவ அழகிலும் செசான் ரென்வாரையே பிரமிக்கச் செய்துவிட்டார்.

இயற்கையிடம் ஒரு நிஜமுண்டு.  அவ்விதமே மனிதனிடமும்.  அந்நிஜத்தின் தத்துவம் வெறும் சமூகம் சார்ந்ததல்ல; கண்களுக்கு ஆனந்தம் தருவதும் அல்ல.  இயற்கையிடம் உள்ளீடாக ஒரு தாளகதி உள்ளது.  இடையறாது சுழலும் மாற்றங்களை அனுமதிக்கும் ஒரு நியதியும் உள்ளது.  அவளது காதலனான மனிதனிடமும் இந்தத் தாளலயம் காணக்கிடைக்கிறது.  அதைக் கண்டுபிடிக்கவும் விவரிக்கவும் வல்ல ஓர் ஊடகமே கலை.  அதைக் கண்டுபிடிக்காமல் ஓவியம் வரைவதென்பது இருட்டில் தட்டுத்தடுமாறி நடப்பதற்கு ஒப்பாகும்.

சுழற்சியோட்டமான காட்சி இன்பமும், அழகியலும் சமூக நிகழ்ச்சிப் போக்கும், குறியீட்டுத் தன்மையும் கலையின் உயிரோட்டமாய் செசானுக்கு இருந்ததில்லை.  கவிஞனைப் போல கலைஞனும் ரிஷியாக இருக்க வேண்டும்.  தன்னைப் போலவே வெளியிலும் பூடகமாய் இருக்கும் சாமான்ய சத்தியத்தை தரிசிக்கவும், காட்சிக்கு வைக்கவும் அவனுக்கு இயலுதல் அவசியம்.  வின்சென்ட் வான்கா ஆரம்பத்தில் இந்த ரகசியங்களை அறிந்திருக்கவில்லை.  எனவேதான் தன் ஆரம்பகால ஓவியங்களுடன் செசானிடம் சென்ற வான்காவை நல்லெண்ணம் படைத்த ஒரு பைத்தியக்காரன் என்றார் செசான்.  போஸ்ட் இம்ப்ரஷனிஸத்தின் குருவான செசானை வான்காவும் கோகேனும் (Gauguin) ஸ்வேராவும் (Seurat) வெகுவாக சிலாகித்தனர்.  ஓவியம் சமூக வாழ்வின் பின்புலமாக அமைய வேண்டுமென கூர்பேவும், கலைக்கு இலக்கியக் கண்ணோட்டம் அவசியமென டெலெக்ரோ (Delacroix) வும் வாதிட்டதில் செசானுக்கு உடன்பாடில்லை.  ஆனால் இந்த இருவர்தான் செசானை வெகுவாக ஈர்த்த கலைஞர்கள்.

இயற்கையில் கோடுகள் இல்லை, விளிம்புகளே உள்ளன.  வெளிச்சத்தினதும் நிழலினதும் விளிம்பு.  சிவப்பின், நீலத்தின், பச்சையின் விளிம்பு.  அதிலிருந்து புள்ளியும் கோடும் முக்கோணமும் சதுரமும் வட்டமும் உருவாக ஜியோமிதி கலைஞனுக்குரிய உலகை ரசிக்கவல்ல மனம் காத்துக்கொண்டிருக்கிறது.  எனவேதான் முடிந்தவரை இயற்கையின் அருகில் நின்று ஓவியம் தீட்டவே செசான் விழைந்தார்.  கோடுகளைக் குறைத்தார். பிரஷின் தன்மய பாவத்தை ஆதீதமாய் ஆதரித்தார்.  Mount Saint Victoria, Rocks முதலான ஓவியங்கள் அதற்கான சான்றுகள்.

நிலக்காட்சிகளில் காட்டிய இந்த ஆத்ம ஈடுபாட்டை செசான் தனது ஆள் ஓவியங்களிலும் காட்டத் தொடங்கினார்.  அதற்கான உதாரணம் 1988-90-இல் அவர் தீட்டிய Boy in the Red West.  இவ்வோவியத்தை வெறும் 25 ஃப்ராங்கிற்கு மட்டுமே அவரால் விற்க முடிந்தது.  ஆனால் அதே ஓவியத்தை 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஆறு லட்சத்துப் பதினாறாயிரம் டாலருக்கு ஓர் ஓவிய வியாபாரி ஏலத்தில் விற்றான்.

மக்கள் செசானை புரிந்துகொள்ள அதிக நாட்கள் தேவைப்பட்டன.  பாரீஸிலிருந்து ஓடிப்போய் ஒளிந்து வசித்து வந்த இந்த ஏகாந்த தவமுனிவனை தேடிச் சென்று ரென்வாரும், மோனேவும், பிஸ்ஸாரோவும் சந்திக்க விருப்பம் காட்டினர்.  சிநேகத்தில் வாழ்நாள் முழுவதும் சிக்குண்டு இருத்தல், பிற்பாடு ஆத்ம தரிசனத்தால் அதனின்று முக்திபெறுதல் – இதுவே செசானின் வாழ்வில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்ச்சி.  இயற்கை என்று சொன்னால் மலையும், மேகமும், பொய்கையும், பூக்களும் மட்டுமன்று மனித இயற்கையும் அதில் உட்படும்.  விவசாயத் தொழிலாளிகளின் சீட்டாட்டம் தீட்டப்பட்டிருப்பது ஒரு இயற்கை வர்ணமாகத்தான்.  மனிதனின் புறப்பண்போடு இணங்கிச் செல்ல இயலாத செசானுக்கு பொறுமையின் உருமாதிரிகளாய் அமைந்திருந்தவை அனைத்தும் நிச்சலன வஸ்துக்களே.  எனவே அனுதினமும் ஓவியம் தீட்டுவதை வழக்கமாய் கொண்டிருந்த செசான் ‘உறைந்து போன வாழ்வு’ (Still Life)-க்கு முதன்மை நல்கியதில் வியப்பெதுவுமில்லை.  உணர்வற்ற பொருட்களிலும் உயிர்த்துடிப்புண்டு.  அது நிறங்களில் குடி கொண்டுள்ளது.  எனவேதான் செசானின் ‘உறைந்துபோன வாழ்வு’ ஜீவ உருவங்களைக் காட்டிலும் அதீத உயிர்த்துடிப்பு கொண்டதாய் திகழ்கிறது.

இருப்பும் அறிதலும் – 3

Standard

19-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாத சிந்தனையின் சிறந்த தொகுப்பாக நாம் ஹோல்பாக் (Holback) எழுதிய ‘இயற்கையின் அமைப்பு’ (System of Nature) என்ற நூலைக் கருதலாம்.  இந்நூல் இன்றுகூட ஒரு கிளாசிக் என்ற எண்ணம் எனக்குண்டு.  கருத்துமுதல் வாதத்தை கடுமையாக எதிர்க்கும் ஹோல்பாக் ‘அது ஒருவிதத்தில் அல்லது மற்றொரு விதத்தில் புலன்களுக்குச் சிக்குவது எதுவோ அதுவே பொருள்’ என்று நிர்ணயிக்கிறார்.  அடுத்த தலைமுறையின் முதன்மையான பெளதிகவாத சிந்தனையாளர் லாப்லேஸ் (Laplace) ஆவார். அவர் வழியாகவே பெளதிகவாதம் ஒரு மெய்காண் முறையாக முழுமை பெற்றது.  ‘எந்த ஒரு மனம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் அதற்கு ஆய்வுப் பொருளாக அமைந்த பொருளில் உள்ளடங்கியுள்ள இயற்கை சக்திகளைக் காணவும் அதன் கூறுகளை உரிய முறையில் இணைத்துப் புரிந்துகொள்ளவும் திராணியுள்ளதோ அந்த மனம் தான் கண்டடையும் விஷயங்களைத் தொகுத்துக் கொள்ளவும் சக்தியுடையதாக இருப்பின் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் முதல் நுண் அணு வரையிலான அனைத்தையும் துல்லியமாக அறியும் வல்லமை கொண்டதாக ஆகிறது.  அந்த மனத்திற்கு நேற்றும் நாளையும் திறந்த புத்தகம் போலத் தெரியவரும் (Laplace, Philosophical Essays on Probability) இந்த வரிகள் நவீன யந்திரவாத விஞ்ஞான அணுமுறையின் பிரகடனம் போல உள்ளதை கவனிக்கலாம்.  விஞ்ஞானத்திற்கு அனைத்தையும் அறியும் திறன் உண்டு என்று நம்பும் உற்சாகம் அன்றிருந்தது.  ‘சிறிது ஜடமும் அதற்குப் போதிய சலனமும் கொடுங்கள்.  நாங்கள் ஒரு பூமியைப் படைத்துத் தருகிறோம்’ என்றனர் பெளதிகவாதிகள்.  கான்ட் அதற்குப் பதிலடியாக ‘இதோ ஜடம் உள்ளது.  அதன் முடிவற்ற சலனம் உள்ளது.  ஒரு விட்டில் பூச்சியையாவது உண்டுபண்ணிக் காட்டுங்கள் பார்ப்போம்’ என்றார்.  நூறு வருடங்களாகப் போகிறது.  விட்டிலல்ல; ஓரு அணுவைக் கூட இன்னமும் மனிதக்கை உருவாக்கவில்லை.

19-ஆம் நூற்றாண்டில் இயந்திரவாத அணுகுமுறையின் போதாமைகள் பல வெளிப்பட ஆரம்பித்தன.  பொருண்மையின் அடிப்படைத் தத்துவங்களை இயந்திரவாத அணுகுமுறை விளக்க முடியவில்லை.  பொருண்மையின் அடிப்படை அலகு அணு (atom) என்று கூறப்பட்டது.  ஆனால் அணுக்களுக்கு இடையேயான உறவுகளை இயந்திரவாத விதிகளின்படி விளக்கமுடியவில்லை.  உதாரணமாக வெற்றிடத்தின் ஊடாக ஈதர் என்ற கற்பனைப் பொருண்மையை உருவகித்து அதில் பிரபஞ்சம் மூழ்கியிருப்பதாகக் கூறினார்கள்.  பிற்பாடு இந்தக் கருத்து கைவிடப்பட்டு மின்னூட்ட ஈர்ப்பு, மின்னூட்ட விலகல் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  இவை சார்ந்த முக்கியமான சமவாக்கியங்களை உருவாக்கியவர் மாக்ஸ்வெல்.  இயந்திரவாத விதிகளின்படி இயங்கும் ஜடம் என்ற உருவகம் அதன் இறுதிவிளிம்பை மாக்ஸ்வெல் மூலம் அடைந்தது.  20-ஆம் நூற்றாண்டில் கதிரியக்கம், நுண்துகள்கள், அணுவின் அக அமைப்பு முதலிய பல கண்டுபிடிப்புகள் வந்தன.  பொருண்மையின் இயந்திர விதிகள் மெல்ல மெல்ல கைவிடப்படத் தொடங்கின.  இவ்விவாதத்தின் தொடக்கத்தில் உருவான கருத்து முதல்வாத உற்சாகத்தைப் பார்த்து லெனின் எழுதினார், ‘பொருள் முதல்வாதம் என்றால் இயந்திரவாதம் அல்ல. இயந்திர விதிகளின்படி இயங்கும் பொருண்மையையே பொருள்முதல்வாதம் உருவகிக்கிறது என்று எவரேனும் கருதினால் அது அபத்தம்.  நாம் கூறும் பொருள்முதல்வாதம் மிக விரிவானது.  அதற்கு கதிரியக்கத்தை மட்டுமல்ல பொருண்மையின் அனைத்து உட்சிக்கல்களையும் தொகுத்துக் கொள்ளும் வல்லமை உண்டு.’ (V.I. Lenin, Collected Works, Vol.14)

ஆனால் பொருண்மைக்கும் பிரக்ஞைக்கும் இடையிலான உறவை லெனின் அங்கீகரிக்கிறார் என்பதை பல தருணங்களில் நாம் காண்கிறோம்.  ‘பொருட்களின் சாரம் என்பது சார்புநிலையான ஒன்று.  மனிதனின் அறிவில் உள்ள சார்புநிலைகள் விஞ்ஞானத்தில் பிரதிபலிக்கின்றன.  நேற்று அவனுடைய பிரக்ஞை அணுவைத் தாண்டவில்லை.  இன்று இது எலக்ட்ரானில் முட்டி நிற்கிறது.  இவ்வுருவகமும் உடையும் பொருண்மை, அவன் பிரக்ஞை விரிவடையும்தோறும் விரிவடைந்தபடியே முன்னகரும் இயற்கையின் வடிவமும் சாத்தியங்களும் முடிவின்மை கொண்டவை’ (V.I. Lenin, Collected Works, Vol.14) ‘அறியப்படாத பெரும்பகுதியை வைத்தல்ல; அறியப்பட்ட பகுதியின் இயல்புகளை வைத்தே நாம் இயற்கையை மதிப்பிட வேண்டும்’ என லெனின் கருதினார்.  அவை பெளதிகவாதத்தின் எல்லைக்கு உட்படுபவையாக, புறவயமானவையாகவே உள்ளன.

சில முரணிலைப் பொருள்முதல்வாதிகள் தரிசனம் தூய பொருளை – அதாவது பொருண்மையைப் பற்றி – ஆராய வேண்டியதில்லை என்று கருதுகிறார்கள்.  பொருள்முதல்வாதத்தின் எல்லைக்குள் வரும் பொருள் புலன்களுக்குச் சிக்கும் பொருளன்றி வேறல்ல.  பொருண்மையின் ஆதாரவிதிகளை விஞ்ஞானம் ஆராயட்டும்.  தத்துவம் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.  மெலுகின் இதை கடுமையாக மறுக்கிறார்.  அப்படியொரு நிலை எடுப்பது இயங்கியல் பொருள்முதல்வாதம் தற்கொலை செய்துகொள்வதற்கு நிகர் என்கிறார்.  அது ஓர் உலகப்பார்வை என்ற நிலையில் தொடரவேண்டும் என்றால் அது அவசியமாக இந்நூற்றாண்டின் ஆகப் பெரிய அறிவுப் பிரச்சினையாகிய பொருண்மையின் இருப்பு பற்றிப் பேசியாக வேண்டும் என்கிறார்.

ஏங்கல்ஸின் பிரபலமான சொற்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியவை.  ‘ஆயிரம் பல்லாயிரம் சொற்களை இடைவெளியின்றி பண்டிதர் கொட்டினாலும் ஜடத்தின் இருப்பை மாற்றியமைக்க முடியாது.’  பிரபஞ்சம் மானுடர் அனைவருக்கும் ஒரே அனுபவத்தை தருவதாக இருப்பது மானுடப் பிரக்ஞையின் ஒருமையினால் அல்ல.  பிரபஞ்சப் பொருண்மையின் இருப்பு, அழிவின்மை, மாறுதல் கொள்ளும் தன்மை முதலியவை தத்துவார்த்தமாக நிலைநிறுத்தப்பட்டவை அல்ல.  புறவயமான அனுபவமாகவே தங்களை நிலைநாட்டிக் கொண்டவை.  இதனடிப்படையில் உள்ள இருவிதிகள், காரிய காரண வழி (law of causality) பொருண்மையின் இருப்பு சலனம் பற்றிய விதி (law of conservation of matter and motion) ஆகியவை நமது அறிதல் முறையைத் தீர்மானிப்பவை ஆயின.  இவற்றில் பொருண்மையின் நிரந்தரத் தன்மை முதல் நிபந்தனையாகும்.  இங்கு பொருண்மை என்பது ஒரு குறிப்பிட்ட வடிவை அல்லது குண இயல்பைப் புறவயமாகத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்று குறிப்பிடப்படுகிறது.  ஐன்ஸ்டீனின் ஆற்றல் பற்றிய உலகப் புகழ் பெற்ற கோட்பாடான E = MC2 இந்தப் பொது விதியைத் தகர்த்துவிட்டது என்பது உலகறிந்த உண்மை.  இதன்படி பொருண்மை என்பது ஆற்றலின் ஒரு செயல்நிலை மட்டுமே.  அதாவது பெளத்தர்களின் மொழியில் ஆற்றலின் ஒரு ‘தர்மம்’ மட்டுமே பொருள்.  பொருண்மையாக உள்ள சக்தியை (M) ஒளி வேகம் அடையச் செய்யும்போது (C2) அதை ஃபோட்டான்களினாலான ஒளி சக்தியாக (E) மாற்றிவிட முடியும்.  இங்கு சக்தி ‘தூய’ நிலையில் இருக்க முடியுமா என்ற வினா எழுகிறது.  எடையாகவோ ஒளி சக்தியாகவோ அது இருக்கமுடியுமா? அது திகைப்பூட்டும் பெருவினாவாக விஞ்ஞானத்தில் எஞ்சுகிறது.  சக்தியின் முடிவின்மையே பெருவெளி.

ஆனால் நாமறியும் சக்தி பொருண்மையின் வடிவம் கொண்டது மட்டுமே.  அறிதல் பொருண்மையின் ஊடாகவே சாத்தியம்.  சக்தி எனும்போது நாம் நமது அறிதலின் வட்டத்திற்குள் சிக்கும் ஆற்றலையே குறிப்பிடுகிறோம்.  பொருண்மை வடிவுள்ள சக்தியே இயந்திர விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக ஆகிறது.  நிர்ணயத்தன்மை பொருண்மை வடிவுகொண்ட சக்தியின் முதல் இயல்பு.  ஆக்கத்தில் உள்ள நிர்ணயத் தன்மை, சார்பு நிலையில் உள்ள நிர்ணயத்தன்மை, காரிய காரண நிர்ணயத் தன்மை, செயல்களில் உள்ள நிர்ணயத்தன்மை, அமைப்பில் உள்ள நிர்ணயத்தன்மை என்று அதை வகுக்கலாம்.  அமைப்பு சார்ந்த நிர்ணயத்தன்மை (systemic determinacy) யின் ஒரு பகுதியே உயிரணு சார்ந்த நிர்ணயத்தன்மை (genetic determinacy).  அது உயிர் ஆக்கத்திற்குக் காரணமாகிறது.  இயற்கையாகவே தன்னை ஒருங்கமைவு செய்துகொள்ள முடியும் என்பதே ஜடத்தில் நாம் காணும் முதன்மையான குணமாகும்.

இங்கு நாமறியும் ஜடத்திலிருந்து நாம் அதன் சலன இயல்பை வகுத்திருக்கிறோம்.  அது சுயமாக இயங்குகிறது, வளர்கிறது, மாறுகிறது.  ஒரு படிப்படியான முன்னகர்வு, அப்படிகளை படிப்படியாகப் பின்னகர்ந்து முடித்தல், ஒரு முழு அமைப்பை நோக்கி நகர்ந்த பிறகு மாற்றமின்றி இருத்தல், ஒவ்வொரு கட்டத்திலும் திரும்பத் திரும்ப ஒரு மாறுதலைக் கொண்டபடி இருத்தல், சுழற்சி முறையில் மாறுதல் கொண்டபடி இருத்தல், இம்மாற்ற முறையில் அனைத்தையும் ஒன்றோடொன்று கலந்து சிக்கலான மாற்ற விதிகளைக் கொண்டிருத்தல் ஆகியவை ஜடத்தின் இயல்புகளாகும்.  கால இடத்தில் இருப்புக் கொள்ளுதல் என்பதும் ஜடத்தின் இயல்புகளன்று.  இங்குதான் முரணிலைப் பொருள்முதல்வாதத்தின் எல்லை தெளிவாகிறது.  அது கால இடத்திற்குள் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பொருண்மை பற்றியே பேச முடியும்.  இந்த சாமானிய தளத்தில் பொருண்மையின் இயங்கு முறையை அது வகுத்து விவாதிப்பதில் பொருளுண்டு.  அதற்கு மேல் விசேஷ தளத்தில் பொருண்மையை அது சக்தியின் ஒரு நிலையாகவே அங்கீகரிக்கிறது.  மெலுகினின் வரிகளில் கூறப்போனால் ‘வேகம் தடைப்பட்ட சக்திதான்’ அது.  அங்கு அதன் விதிகளும் இயங்குமுறைகளும் வேறு.  அங்கு அறிபவனும் அறிதலும் ஒன்றாகிறார்கள்.  பிரக்ஞையா பொருண்மையா என்ற பழைய விவாதம் பொருளற்றுப் போகிறது.  அவை ஒன்றாக ஒரே புள்ளியாக இயங்குகின்றன என்று கூறலாம்.  அறிதல் இருப்பை உருவாக்குகிறது அல்லது அறிதலின் விதிகளுக்குள் வரும்போதுதான் சக்தி தன் இருப்பைக் கொள்கிறது.

‘அறிவும் அறியப்படும் பொருளும்

மனிதனின் ஞானமும்

ஒரு ஆதி மஹஸ் மட்டுமேயாகும்’

என்கிறார் நாராயணகுரு.  ஞானத் தேடலின் இரு வரலாற்றுத் தரப்புகள் திகைப்பு தரும்படி ஒன்றையொன்று கண்டுகொள்ளும் இடம் இது.

(கட்டுரை சுருக்கப்பட்டு சுதந்திர மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.  மலையாள நூல் ‘சக்தி நடனம்’ என்பதன் முதற்பகுதி இது)

தமிழில்: ஜெயமோகன்

இருப்பும் அறிதலும் – 1

இருப்பும் அறிதலும் – 2

இருப்பும் அறிதலும் – 2

Standard

மீண்டும் நுண் அலகு இயந்திரவியலுக்கு வருவோம்.  1927-இல் இயற்பியலறிஞர்கள் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸல்ஸ் நகரில் வைத்து ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடத்தினார்கள்.  இங்கு நுண்ணலகு இயந்திரவியலின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன. பிற்பாடு இது கோபன் ஹேகன் விளக்கம் (Copenhagen Theory) என்று அறியப்பட்டது.  பல்வேறு விளக்கங்கள் பிற்பாடு வந்துவிட்டன என்றாலும் இவ்விளக்கமே பொதுவான அங்கீகாரம் உடையதாக உள்ளது.  இதை ஐன்ஸ்டீன் தொடர்ந்து எதிர்த்தார்.  அறியமுடியாமை என்ற முடிவை விஞ்ஞானத்தின் மீது அது சுமத்துகிறது என்றார்.  முற்றிலும் புரியாததாக உள்ள இப்பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகளில் மிக அற்புதமான உண்மை அது புரிந்துகொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்பதே என்றார் (Albert Einstein on Physical Reality, Franklin Institute Journal, 1963).

நீண்ட காலமாக விஞ்ஞானமும் தத்துவமும் வெளியே எங்கோ, எதனுடனும் தொடர்பின்றி, தன் தனித்துவத்தால் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிற ஒரு இறுதி உண்மையின், மெய்மையின், வெளிப்பாடுகளாகவே அனைத்து பிற உண்மைகளையும் கண்டுவந்தன.  இறுதி உண்மைக்கு அருகே வரும்தோறும் ஓர் உண்மையின் மதிப்பு அதிகரிக்கிறது என்று கருதப்பட்டது.  இறுதி உண்மையின் முழுமையான நேரடி அறிதல் சாத்தியமில்லை என்றாலும் உண்மைகளின் ஒன்றொடொன்று இணையும் தன்மை வழியாக அதன் தோற்றம் வெளிப்படுகிறது என்றும் நம்பப்பட்டது.  இதிலிருந்து பல வகையிலும் உபயோகமான தரிசனமொன்று முளைத்தது. பிரயோசனவாதம் (Pragmatism) என்று அது பெயரிடப்பட்டது.  மனம் என்பது கருத்துகளை உருவாக்கும் ஓர் இயந்திரம் மட்டும்.  அது கருத்துகளுடன் மட்டுமே தொடர்புகொள்ள முடியும்.  எனவே உண்மையை நிரூபித்துக்கொள்ள மனம் மட்டும் போதுமானதல்ல.  மனம் ஊகிக்கும் உண்மை உண்மைதானா என்று நிரூபிக்க வேண்டிய கடமை பிறவகையான புறவய அறிதல் முறைகளுக்கு உண்டு.  அவை அவ்வுண்மையின் பயன் அல்லது விளைவின் அடிப்படையிலேயே அதை மதிப்பிடுகின்றன.  இவ்வாறு வாதிடும் பிரயோசனவாதிகள் அறிவின் பயனே அதை அளக்கப் பயன்படுத்தப்பட வேண்டிய அளவுகோல் என்கிறார்கள்.  நீண்ட காலமாகவே பிரயோசனவாதம் விஞ்ஞானத்தால் இறுதி உண்மையை ஒருபோதும் அறிய முடியாது என்று வாதிட்டு வருகிறது.  கோபன் ஹேகன் விளக்கம் அறிவியலை மீண்டும் இந்த இடத்தை நோக்கி நகர்த்த முயன்றது.

ஹென்றி பியர்ஸ் ஸ்டப் என்ற பிரபலமான இயற்பியலாளரின் கூற்று இது.  ‘நுண் அலகு விஞ்ஞானத்தின் கோபன் ஹேகன் விளக்கம் மூலம் நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.  கால இடத்துடன் இணைந்து கற்பிதம் செய்யப்படும் அடிப்படைத் தத்துவங்களை வைத்து இயற்கையை விளக்க முனைவது சாத்தியமல்ல.  இயற்பியலின்படி இயற்கை என்பது நுண்துகள்களின் இணையும் பிரியும் இயக்கமும் ஆகும்.  அங்கு கால இட நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் பொருண்மைகள் ஏதுமில்லை.  பொருண்மையான புலனறிதல்களின் விதிகளினால் நுண் பொருண்மைகளைத் தீர்மானிக்க நாம் சமூக வாழ்வின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டுள்ள பொதுவான ஒப்புதல்களினாலான விதிகளின் மூலம் பொருண்மையை விளக்க முயல்கிறோம்.’

நுண்ணலகு இயந்திரவியலின் ஸ்தாபகர்களாகக் கருதப்படும் இயற்பியலாளர்களை சோவியத் இயற்பியலாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்தார்கள்.  அவர்களை பூர்ஷ்வா இயற்பியலாளர்கள் என்றும் முத்திரை குத்தினர்.  இவர்களில் முதன்மையானவர் எஸ்.டி. மெலுகின்.  இவர் தனது அணுகுமுறையை முரணிலைப் பொருள் முதல்வாத நோக்கு சார்ந்தது என்று அடையாளப்படுத்துகிறார்.  ஐசன்பாக், மாக்ஸ் பிளாஸ், டி.போக்லி முதலிய இயற்பியலாளர்களின் பார்வையை விமர்சிக்கிறார்.  எனினும் பொருள் என்பது ஒரு குறிப்பிட்ட களத்தினுள் நிலைத்திருப்பதாக உருவகிக்கப்படும் ஒரு நிகழ்வு மட்டுமே என்று ஒப்புக் கொள்கிறார் (S.T. Melukin, Philosophy in the USSR – Problem of Dialectical Materialism – The Systemic Organisation of Matter). இதுவே முரணிலைப் பொருள் முதல்வாதத்தின் (Dialectical Materialism) அடிப்படைகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதாகும்.

வரலாற்று ரீதியான முரணிலைப் பொருள்முதல்வாதம் என்று மார்க்ஸியம் குறிப்பிடப்படுகிறது.  முரணிலை இயக்கம் (Dialectics) மேற்கத்திய சிந்தனையின் உதய காலம் முதல் இருந்துவரும் ஒரு அணுகுமுறை, இந்திய மரபில் ‘யோக மீமாம்சை’ என்று அதை முன்பு குறிப்பிட்டனர்.  பெளத்த தரிசனத்தின் ‘ஊஹாபோக’ தர்க்க முறை இதன் மிக விரிவான ஒரு தளமாகும்.  இவ்வணுகுமுறையுடன் பெளதிகவாத அணுகுமுறையும் இணையும்போதுதான் முரணிலை பெளதிகவாதம் உருவாகிறது.  பெளதிகவாதம் பிரக்ஞைக்கு அப்பால் தனித்துவத்துடன் இருக்கும் பொருள் (அல்லது ஜடம்) பற்றி உருவகிக்கிறது.  அது தொடர்ந்து இயங்கியபடி இருப்பது.  அது விதிகளுக்கு ஏற்ப இயங்குவது.  சுயமாக விரிவடைவதும் மாறுதல் கொள்வதுமாகும்.  உலகில் அல்லது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பொருளின் ஏதாவது ஒரு நிலையின் தோற்றமேயாகும்.  இந்த அடிப்படை தரிசனத்தின் அடிப்படையில் ஞானம், வரலாறு, மனம் என அனைத்தையும் தொகுத்து வகுக்க முயல்கிறது பெளதிக வாதம் அல்லது பொருள்முதல் வாதம்.

மனித குலத்தின் சமூக ரீதியான வளர்ச்சியின் விளைவாக, அவ்வளர்ச்சிக்கு இணையாக, தத்துவ தரிசனத்தில் ஏற்பட்ட மாற்றமே முரணிலைப் பொருள்முதல் வாதத்தை உருவாக்கியது.  மனித குலத்தின் (மனிதப் பிரக்ஞையின்) இயங்கியலையே அது தன் ஆதாரமாகக் கொண்டது.  ஜடம், அதன் சலனம், அதன் இடம், அதன் காலம், அதன் திட்டமுறைமை முதலிய அனைத்தையும் திடமான விதிகளின் அடிப்படையில் விளக்க முயல்கிறது இத்தரிசனம்.  இதில் ஜடத்திற்கும் அதன் உள்ளார்ந்த இயல்புக்கும் மிக அதிக முக்கியத்துவம் உண்டு.  இத்தரிசனத்தின் பெயரே இது சலனவடிவமான ஜடத்தை தன் அடிப்படைப் பேசுபொருளாகக் கொண்டுள்ளது என்பதைக் காட்டும்.  அதன் சலனம் முரணிலைகளினூடாக நடைபெறுகிறது என அது விளக்க முயல்கிறது.  பொருளின் இயல்புகளும் செயல்களும், அவற்றில் அடங்கியுள்ள விதிகள், அதன் மூலம் உருவாகும் நிகழ்வுகள் – இவ்வாறு அது வரலாற்றை விளக்க முயல்கிறது.  இவ்வரலாற்றுப் பார்வை மனிதனில் வரலாறு மூலம் உருவாகும் அறிவு, அதன் படைப்பாக்கம் மூலம் வரலாற்றில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை மிகுந்த முக்கியத்துவம் தந்து பேசுகிறது.  மனிதப் பிரக்ஞை உலக அமைப்பில் உருவாக்கக்கூடும் என அது நம்பும் மாற்றமே அதன் இலட்சியவாத அம்சத்தினைத் தீர்மானிக்கிறது.

பெளதிகவாதத்தின் மெய்காண்முறையை இங்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.  பொருண்மையின் அடிப்படை இயல்புகளாகவும் அனைத்து மானுடர்களுக்கும் பொதுவானவையாகவும் முதலில் உருவகிக்கப்பட்ட விஷயங்களையே அது தன் அறிதல் முறையின் ஆதார விதிகளாகக் கொண்டது.  இவ்விதிகளின் அடிப்படையில்தான் அது பிற்பாடு கண்டடையப்பட்ட அனைத்து விஷயங்களையும் வகுத்துரைக்க முற்பட்டது.  இவ்வாறு முன்னகர்ந்து போகுந்தோறும் தேவையானவற்றை எல்லாம் தொகுத்துக் கொள்ளவும், சாத்தியங்களை ஊகித்தறியவும், விஞ்ஞானத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைக்கவும் இவ்வறிதல் முறையால் சாத்தியமாயிற்று.  இந்தப் புதிய தரிசனத்தால் வாழ்வின் சாரமென்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ளவும், அச்சாரத்தை நிலைநிறுத்தும் தர்மங்களை உருவகிக்கவும், அதற்கேற்ப எதிர்காலத்தைக் கற்பனை செய்யவும் முடிந்தது.

முற்றிலும் பொருள்முதல்வாதம் சார்ந்த இத்தரிசனத்தை வளர்த்து நிறுவ அதன் சித்தாந்திகள் மதங்களுடனும், பல்வேறு கருத்து முதல்வாத மரபுகளுடனும் வேறுபல இலட்சியவாதங்களுடனும் போரிட நேர்ந்தது.  எனவே ஜடத்தின் தத்துவ நிர்ணயத்தை முரணிலைப் பொருள் முதல்வாதம் எவ்வாறு நிகழ்த்துகிறது என்று அறிவதற்கு முன் அத்தரிசனத்தின் வரலாற்று ரீதியான பரிணாமகதிகளை எப்போதும் கணக்கில் கொள்ளவேண்டும்.

பல்வேறு இயல்புகள் கொண்ட பல கோடி தனிப்பொருட்களாக நம்மைச் சுற்றி நிரம்பியுள்ள இந்த உலகை பொதுமைப்படுத்தி ஒற்றையான ஓர் இருப்பாகக் காண்பதற்காக வரலாற்றில் ஏதோ ஒரு தருணத்தில் நாம் முயன்றோம்.  அதற்கான வாழ்வியல் ரீதியான அவசியம் ஏற்பட்டது போலும்.  இவ்வாறுதான் ஜடம் என்ற கற்பிதம் நமக்குக் கிடைத்தது.  பொருண்மை என்ற பொது இயல்பு ஜடப் பொருட்கள் அனைத்திலும் கண்டடையப்பட்டது.  பொருட்களின் இயல்புகளில் அடிப்படையாக உள்ள ஒரு விஷயம் பிற்பாடு பொருண்மை மீதும் போடப்பட்டது.  பொருட்கள் அனைத்தும் காரண காரிய உறவுக்குக் கட்டுப்பட்டவை என ஆதி சிந்தனையாளர் அறிந்தனர்.  ஒரு பொருள் இன்னொன்றிலிருந்து பிறக்கிறது.  இன்னொன்றாக ஆகிறது.  இன்மையிலிருந்து எப்பொழுதும் உதிப்பதில்லை.  உருமாற்றம் மட்டுமே பொருட்களில் நிகழும் மாற்றம்.  எனவே பொருண்மையும் அப்படித்தான் என ஆதி சிந்தனையாளர்களில் ஒரு பகுதியினர் நிறுவினர்.  இந்திய மரபுச் சிந்தனையாளர்களில் சாங்கியம், வைசேஷிகம், நியாயம், யோகம் ஆகிய நான்கு தரிசனங்களும், பொருண்மையின் நிரந்தரத் தன்மையை ஏற்பவை.  தொடக்ககால பெளத்தமும் அவ்வாறு கருதியது.  மெலுகின் தனது நூலில் ஆரம்ப காலம் முதல் பொருண்மையை அழிவற்றதாகவும், காலத்தில் நிரந்தரத்தன்மை கொண்டதாகவும் காணும் தத்துவார்த்த மரபு எவ்வாறு பரிணாம மாற்றம் பெற்று வருகிறது என்று விரிவாக விளக்குகிறார்.  இது பொதுவாக தத்துவப் பயிற்சி உடையவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கக்கூடியதுதான்.  இத்தரிசனத்தின் சாரம் பொருண்மை அகாலத்தில் உள்ளது என்பதே.  பொருட்களே காலத்தை தங்கள் உருமாற்றம் வழியாக நிகழ்த்துகின்றன.

பெளதிகவாதம் மேற்கே நியூட்டனின் கண்டுபிடிப்புகளினூடாக திட்டவட்டமாக தர்க்க முறைமையைப் பெற்றது.  ஈர்ப்பு விதிகளின் மூலமும், முடிவின்றி அகாலத்தில் நிறுத்தப்பட்ட பொருண்மையின் பெருந்தரிசனம் பல நூற்றாண்டுகளுக்கு மேற்கை ஆண்டது.  இறை நம்பிக்கையாளர்கள் இந்தப் பொருண்மையை ‘வெளியே நின்று’ இயக்கும் கருத்தாக கடவுளைக் கண்டனர்.  நியூட்டனும் அவ்வாறே கருதினார்.  டெகார்ட் போன்ற இறை நம்பிக்கையாளர்கள் இரண்டு இருப்புகளை உருவகம் செய்தனர்.  ஒன்று பெளதிகமானது அல்லது ஜடம்.  வாழ்வில் நாம் காணும் தத்துவங்கள் எல்லாம் நுட்பமாக ஒன்றோடொன்று முரண்படுபவையும் இறுதியில் இறைமையும் ஜடமும் சந்திக்கும் இடத்தில் முரணின்றி அணைபவையும் ஆகும் என்று இவர்கள் கருதினர்.  இவ்வாறு கருத்து x பொருண்மை என்ற இருநிலை தத்துவத்தில் வேரூன்றியது.  கருத்து அல்லது கடவுள் பொருண்மையின் சிருஷ்டிகர்த்தர் ஆகி இருக்கிறார் என்று ஒரு கட்சியும், பொருண்மையின் ஒரு விளைவே பிரக்ஞை ஆதலால் பொருளே கருத்தின் காரணம் என மறுகட்சியும் வாதாடின.  கருத்துமுதல்வாதமும், பொருள்முதல்வாதமும் இருநூறு வருடம் போராடின.

இவ்விவாதத்தின் ஒரு முக்கியமான சந்திப்புப் புள்ளி ஹெகல்.  ஹெகலின் தத்துவார்த்த முன்னோடி ‘ஸ்பினோசா’ எனலாம்.  ஸ்பினோசா ஜடத்தை பிரபஞ்சப் பொதுமையாக உருவகித்தபோது, பிரபஞ்சத்தின் ஆத்மாவையும் ஒரு பெரும் பொதுமையாக உருவகித்து பிரபஞ்ச தேவதை வாதம் (Pantheism) என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.  ‘ஒரு பொருள் என்பது வேறு ஒன்றில் அல்லாமல் தன்னில் தன் இருப்பைக் கொண்டுள்ள ஒன்று’ என்று ஸ்பினோசா கூறுகிறார்.  ஒரு பொருளை அவர் பொருண்மையும் ஆன்மீக சாரமும் உள்ள ஓர் இருப்பாகவே கண்டார்.  இதனடிப்படையில் பிரபஞ்சமும் இறைமையும் ஒன்றே என்று எண்ணினார்.   சாராம்சமான பிரக்ஞை எல்லா ஜடங்களிலும் இல்லையே என்ற கேள்வி ஸ்பினோசாவிற்கு எதிராகத் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறது.  ஹெகலின் லட்சியவாதம் (Idealism) இப்பார்வையில் வரலாற்று ரீதியான விரிவாக்கம் எனலாம்.  உண்மை என்பதும் ஞானம் என்பதும் ஒன்றே என்கிறார் ஹெகல்.  எனவே பொருண்மை, பிரபஞ்ச பிரக்ஞை (அல்லது பிரபஞ்ச மையம்) இரண்டும் வேறு வேறல்ல.  பிரபஞ்சத்தின் சாரமாக ஹெகல் இறுதியான முழுமுதல் கருத்தை (idea) உருவகித்தார்.  சமூகம், மனித மனம் அனைத்தையும் இயற்கை உருவாக்குகிறது.  இந்தக் கருத்துதான் இயற்கைக்கு – பொருண்மைக்கு – தானாகவே வளரவோ மாறவோ முடியாது.  பிரபஞ்ச சாரமான பெரும் பிரக்ஞையிலேயே அது நிகழ வேண்டும்.  ‘இயற்கை என்பது முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முறைமையின் பல்வேறு கூறுகளினால் ஆனதாகும்.  அதன் ஒவ்வொரு கூறும் பிறவற்றுடன் நுட்பமாகவும் விரிவாகவும் தொடர்பு கொண்டுள்ளது.  அத்தொடர்பு காரணகாரிய உறவுகளினால் ஆனது.  நமக்கு மிக அருகேயுள்ள உண்மையிலிருந்து அடுத்த உண்மை பிறப்பது இயற்கையின் உள்ளார்ந்த மையக் கருத்தில் ஏற்படும் எண்ண மாற்றங்களினால்தான்.  அக்கருத்தும் அப்பொருண்மையும் உண்மையில் வேறுவேறல்ல.  அக்கருத்தின் பரிணாமமே வளர்ச்சி என்று கொள்ளப்படுகிறது.’ (CWF Hegel, Santhichewerice)

ஹெகலின் கூற்றுப்படி தனக்குத் தானே பரிணாமம் கொள்ளும் திட்டம் உடைய முழுமுதல் கருத்தின் நடைமுறை வெளிப்பாடே நாம் காணும் பிரபஞ்சம்.  இதிலிருந்து நாம் அறிய வேண்டியது வரலாற்றை விட தர்க்கத்தின் ஒத்திசைவுக்கே நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதே.  வரலாறு விஞ்ஞானம் முதலியவற்றின் தர்க்கங்கள் எல்லாமுமே ஒன்றோடொன்று பூரணம் செய்து முழுமையை உருவாக்கும் தன்மை உடையவை.  அம்முழுமை முழுமுதல் கருத்தை மேலும் மேலும் தெளிவுபடுத்தக்கூடியதாக இருக்கும்.  இவ்விதிகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஜடத்திற்கு உள்ளார்ந்த இச்சையும் திட்டமும் உண்டு என்றாகிறது.  ஹெகல் இதனால் தன் சிந்தனையை வரலாற்று பெளதிகவாதம் என்று குறிப்பிடத் தயங்கவில்லை.  18-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாதச் சிந்தனையில் ஹோல்பக், ஹெல்வற்றியஸ், டிடெரோட் முதலிய பிரெஞ்சு சிந்தனையாளர்களின் பங்களிப்பு விரிவானது.  பொருட்களின் பரஸ்பர உறவு, மாற்றமின்மை அகாலத்தில் அவற்றின் இருப்பு முதலியவற்றைப் பற்றி அவர்கள் கூறியவற்றை கான்ட், ஹெகல், ஷெல்லிங் முதலிய சிந்தனையாளர்களால் நிராகரிக்க முடியவில்லை.  கருத்துமுதல்வாத சிந்தனை அவற்றை உள்ளடக்கியபடியே தன் தர்க்கத்தை உண்டுபண்ண வேண்டியிருந்தது.  ஹெகலின் ‘இச்சையும் திடமும் உடைய’ பொருண்மை பற்றிய கருத்து இவ்வாறு உருவானதே.

இருப்பும் அறிதலும் – 1

இருப்பும் அறிதலும் – 3

இருப்பும் அறிதலும் – 1

Standard

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை சிந்தனை மரபில் இருந்து வந்துள்ளது.

விஞ்ஞானமானாலும் தத்துவமானாலும் ஒவ்வொரு தரிசனமும் சில தனி மனிதர்களின் கண்டுபிடிப்புகளாகவே வெகுகாலமாக இருந்து வந்துள்ளன.  அவை சமூகத்தை மிகவும் மறைமுகமாகவே பாதிக்கின்றன.  பல சமயம் குறியீட்டு ரீதியாகவும் ஆழ்மன ரீதியாகவுமே இப்பாதிப்பு உள்ளது.  அத்தரிசனங்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவுத்தளத்தையோ எதிர்ப்பு இயக்கத்தையோ உருவாக்குவதும், அதன் மூலம் அவற்றை சமூகத்தில் நிலைநாட்டவோ தகர்த்தழிக்கவோ முனைவதும் கம்யூனிஸ்டு சிந்தனை முறையின் விளைவாக உருவான வழிமுறையாகும்.  சோவியத் ருஷ்யாவில் ஒரு தத்துவ தரிசனத்தின் உடனடியான நேரடி விளைவாக ஒரு அரசமைப்பும், சமூக அமைப்பும் உருவாகிறவரை இது சாத்தியமென்ற நம்பிக்கையே பரவலாக உலகில் இருந்ததில்லை.

மார்க்ஸும் எங்கல்ஸும் விஞ்ஞான ரீதியான அறிதல் முறைகளில் உள்ள வர்க்கக் கண்ணோட்டங்களுக்கு அழுத்தம் தந்ததன் வழியாக ‘அறிதல்’ என்ற செயலில் இருப்பதாக நம்பப்பட்டு வந்த புறவயத் தன்மையை கேள்விக்குரியதாக்கினர்.  விஞ்ஞானத்தை ஒரு முதலாளி அணுகுவதும் ஒரு பாட்டாளி அணுகுவதும் வேறுவேறு அடிப்படைகளை வைத்தேயாகும் என்றனர்.  எனவே அவ்விஞ்ஞானத்தின் மூலம் உருவாகும் வழிகளும் கண்டுபிடிப்புகளும்கூட அதற்கேற்ப மாறுபடும் என்றனர்.  முதலாளித்துவ அறிவியலுக்கு எதிராக, பாட்டாளி வர்க்க அறிவியலை உருவாக்க வேண்டியதன் அவசியம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது.  இயந்திரவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் கூட இவ்வாறு வர்க்க ரீதியான நோக்கங்கள் உள்ளுறைந்துள்ளன என்பது சோவியத் விஞ்ஞானிகளின் எண்ணம்.  அப்படியிருக்கையில் விஞ்ஞானத்தின் தூய தர்க்கம் சார்ந்த தளங்களில் கேட்கவே வேண்டாம்.  இவ்விவாதம் நுண் அலகு இயற்பியலில் (Quantum Physics) பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி வருகிறது.  சொல்லப்போனால் இருப்புக்கும் அறிதலுக்கும் இடையிலான ஆகப் பெரிய பிரச்சினைகளும் இந்நூற்றாண்டில் இங்குதான் உருவாகின்றன.

ஐன்ஸ்டீன் வழியாகவே விஞ்ஞானமும் கவிதையும் தழுவிக்கொண்டன.  1933-இல் ஓர் உரையில் அவர் கூறினார், “பிரபஞ்சப் பேரியக்கம் சார்ந்து உருவாக்கப்படும் எல்லா கண்டுபிடிப்புகளும் உண்மையில் மனித மனதின் சாத்தியங்களுக்கு உட்பட்ட கற்பனைகள் மட்டுமே.  அவை மானுட மனதிற்கு வெளியே உள்ள பொருண்மை வெளியின் இயங்கு முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டவை மட்டுமே என்று கருதலாகாது.  கடிகாரத்தின் இயங்குமுறையை அறிய ஆவல் கொண்ட குழந்தையைப் போன்றவர்கள் நாம்.  இக்கடிகாரத்தை திறந்து பார்க்க நம்மால் முடியாது.  அதன் ஓரிரு சலனங்கள் மட்டுமே நமது கண்ணில் படுகின்றன.  அவற்றை கூர்ந்து கவனித்து அவற்றின் இயங்குமுறையை உருவகித்துக் கொள்கிறோம்.  அதன் அடிப்படையில் நாம் ஒருபோதும் காண முடியாதவையும், நாம் காணும் இயக்கங்களுக்கு முன்னும் பின்னும் விரிந்து கிடப்பவையுமான பிற இயக்கங்களின் இயங்குமுறையை கற்பனை செய்து கொள்கிறோம்.  இக்கற்பனையை ஒருபோதும் முழுமையாக சரிபார்த்துவிட முடியாது.  ஆனால் கற்பனையும் பொருண்மையின் அடிப்படையில் அதை சரிபார்த்துக் கொள்ள இயல்தலும் இரு இணை கோடுகளாக வெளியின் முடிவுவரை நீண்டு செல்கின்றன.  அறிதல் சாத்தியங்களின் தொடுவானையே எல்லையெனக் கொண்டுள்ளது.  ஐன்ஸ்டீன் இதை அறிதலின் இலட்சியப் புள்ளி (ideal limit of knowledge) என்கிறார். (Albert Einstein and Leopold Infield – The Evolution of Physics)

இங்கு நுண் அலகு இயற்பியல் பற்றி மிக எளிய ஓர் அறிமுகம் செய்து விவாதிப்பது உதவியாக இருக்கும்.  பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்ற வினாவுக்கு இன்றைய இயற்பியலாளர் தரும் இறுதிக்கட்ட விடை – கற்பனை – நுண் அலகு இயற்பியலில் உள்ளது.  பருப்பொருட்கள் என்பவை அணுக்களினாலானவை.  அணுக்கள் பல்வேறு வகையான மின்னூட்டம் கொண்ட துகள்களினாலானவை.  துகள்கள் அதிநுண்துகள்களினாலானவை.  இத்துகள்கள் ஒரே சமயம் துகள்களாகவும் சக்தியாகவும் நமக்குக் காட்சி தருபவை.  இதை இரட்டை நிலை இருப்பு (dual existence) என்கிறார்கள்.  ஆகவே சக்தி துகளாக மாறுவதன் மூலமே பிரபஞ்ச ஆக்கம் நிகழ்கிறது.  எப்பொருளும் ஒளி வேகம் பெறும்போது சக்தியாகிவிடும் என்பது ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு.  எனவே சக்தி துகளாக ஆகும் மாற்றம் என்பது வேகத்தைப் பொறுத்த விஷயம் அன்றி வேறல்ல.  இவ்வேக மாற்றம் நிகழும் மிக நுண்ணிய அலகையே குவாண்டம் என்கிறார்கள்.  இவ்வலகுகள் நிகழும் வேக மாற்ற இயக்கங்களைப் பற்றிய அறிவுத் துறையையே பொதுவாக நுண் அலகு இயந்திரவியல் (Quantum Mechanics) என்கிறார்கள்.

நுண் அலகு இயந்திரவியலின் விரிவான விவாதங்களுக்குள் புக இது இடமல்ல.  ஆனால் நாம் சகஜ வாழ்வில் பிரபஞ்சத்தின் இயங்கு முறையை அறியவும் அளக்கவும் பயன்படுத்தும் எந்த விதியும் அங்கு செல்லுபடியாகாது என்று மட்டும் புரிந்துகொள்ளவேண்டும்.  நுண் அலகு இயந்திரவியலின் வடிவமைப்பாளர்களில் ஒருவரான வெர்னர் ஐசன்பர்க் கூறுகிறார்: நுண் அலகு இயந்திரவியலின் இயங்கு முறைகளை கூர்ந்து கவனிக்கும்போது ஒன்று தெரியும், நாம் சாதாரணமாகக் கண்டறிந்து நனவிலி மனதின் இயல்பாக மாறியுள்ள இயங்குமுறைகள் எதுவும் அங்கு இல்லை.  பொருட்களை நாம் சாதாரணமாக அறியும் வழிமுறைகளான இடம், எடை, வேகம், நிறம், அளவுகள் முதலிய எவையுமே நுண் துகள்களின் விஷயத்தில் பொருந்தி வராது.  அங்குள்ள பிரச்சினைகளே வேறு (Werner Heisenberg – Across the Frontiers).

மிக எளிய அளவில் இதை மீண்டும் தெளிவுபடுத்தியபடி முன்னகரலாம்.  நாம் அறியும் புற உலகு பற்றிய பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட விதிகளை உருவாக்கியவர் சர் ஐசக் நியூட்டன் என நாம் அறிவோம்.  ஆற்றல், ஈர்ப்பு விசை, இயக்க நிலைகள் பற்றிய நியூட்டனின் விதிகள் எவையுமே நுண்ணலகு இயந்திரவியலில் செல்லுபடியாகாது.  ஒரு நுண்துகள் நகரும்போது ஒரு குறிப்பிட்ட இயங்குவிதியை உருவகித்து அது எங்கிருக்கும் என ஊகிப்பது சாத்தியமேயல்ல.  அதன் எடை, வேகம், மின்னூட்டம் உட்பட எதைப் பற்றியும் பொதுவிதிகளின் அடிப்படையிலான கணிப்புகளைச் செய்ய முடியாது.  நியூட்டனின் ‘பிரபஞ்ச இயங்குமுறை தரிசனம்’ பிரபஞ்சத்தைக் கட்டிப்போட முயன்றது.  அந்த விதிகளின் அனைத்துக் கட்டுகளிலுமிருந்து நுண்துகள் இயந்திரவியல் பிரபஞ்சத்தை விடுவித்துவிடுகிறது.  ‘ஒரு எலக்ட்ரானின் இடம் மாறாதிருக்கிறதா என்று கேட்டால், அதற்கு பதிலாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.  ஒரு எலக்ட்ரான் அசைவற்றிருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்’ என்கிறார் ஃபிஜோ காப்ரா (Fritjof Capra – Tao of Physics) இதுவே ஐசன்பர்க்கின் நிச்சயமின்மைக் கொள்கை (Uncertainty Principle) என்ற பெயரில் அறியப்படுகிறது.  இவ்விடத்தை வந்தடைந்ததும் நுண் அலகு இயந்திரவியல் பெளத்த மதத்தின் பிரதீத சமுத்பாதம் (அனைத்தும் ஒரே சமயம் பிறந்தபடியும் இறந்தபடியும் உள்ளன) இந்து மரபின் மாயாவாதம் (அனைத்தும் பார்ப்பவனின் உருவகங்களே) ஆகியவற்றைப் பெரிதும் நெருங்கி வருகிறது.

என்றென்றும் மனித குலத்தின் அடிப்படைத் தேடலாக உள்ளது ‘அறிதல் என்றால் என்ன?’ என்ற வினா அல்லது ‘அறிதலுக்கு அப்பாலுள்ளது என்ன?’ என்ற வினா.  இன்று வெவ்வேறு தளங்களில் இயற்பியலிலும் மொழியியலிலும் அவ்வினா முதன்மைப்பட்டுள்ளது.  ஜைன மதத்தின் சியாத்வாதம் (ஆனால் வாதம்) இன்றைய நுண் அலகு இயந்திரவியலின் இயங்கு முறைகளுடன் பெரிதும் பொருந்துகிறது.  இங்கு முதன்மைப்பட்டு வரும் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  இன்றைய நுண் அலகு இயந்திரவியல் பொருண்மையைப் பற்றி ஆராயும்போது ‘பார்ப்பவனின்’ பார்வைக்கு வெளியே பொருண்மை என்ற ஒன்று உண்டா என்ற வினாவை எதிர்கொள்ள நேர்கிறது.  பார்ப்பவனின் பார்வைக்கு ஏற்ப மாறுபாடு அடையாது எதுவும் காட்சிப்படுவதில்லை.  ஒரு நுண்துகள் அப்படி ஒரு தோற்றத்தை நமது ஆய்வின் வழிமுறைகளுக்கு ஏற்பதான் மேற்கொள்கிறது என ஏன் கூறலாகாது?  நமது ஆய்வு உபகரணங்களுக்கு அப்பால் அது சக்தியா இல்லை துகளா என்று எப்படி நிர்ணயிப்பது? பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிபுணரான ஜான் வீலர் எழுதுகிறார் ‘இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தில் பங்கு வகிக்கும் ஒரு தரப்பால் உருவகிக்கப்பட்டதுதானா இப்பிரபஞ்சமே?  இங்கு நடக்கும் முக்கியமான செயல் அனுபவத்தின் பங்கு பெறுதல் ஆகும்.  நுண் அலகு இயற்பியல் மூலமே தெரியவரும் ஓர் உண்மை ‘ஆய்வாளன் ஆக்கத்தில் பங்கு பெறுபவன்’ என்பதாகும்.  செல்லியல் இயற்பியல் கூறும் வெற்றுப் பார்வையாளன் இங்கு இல்லை.  பெரியதோர் கண்ணாடிச் சுவருக்கு அப்பால் அமர்ந்து அவன் அனைத்தையும் பார்த்து மதிப்பிடுவதில்லை.  அனைத்திலும் அவன் பங்கு பெறுகிறான்.  அவன் பங்கு அனைத்தையும் மாற்றுகிறது.  அவன் இல்லாதபோது அங்கு என்ன நடக்கிறது என்று அறிவது சாத்தியமே அல்ல” (J.A. Wheeler, K.S. Thorne C.Minor – Gravitation) பழைய இயற்பியலாளர் மனிதப் பிரக்ஞைக்கு வெளியே பிரபஞ்சம் சுதந்திரமாக தன் பிரம்மாண்டத்துடன் இருக்கிறது என்று நம்பினர்.  அதில் ஒரு சிறு அணுத்துளியான மானுடன் அதற்கு ஒரு பொருட்டேயல்ல என்றனர்.  அந்த நம்பிக்கையை நுண் அலகு இயற்பியல் தகர்த்து விட்டிருக்கிறது.  மனிதனை ‘நான் உண்டு’ என அது உணர வைத்திருக்கிறது.

ஆழமான இந்த சுயப் பிரக்ஞை அறிவின் அனைத்துத் துறைகளிலும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது.  உளவியலில் நிகழ்ந்த மாறுதல்களை நான் விரிவாக அறிவேன்.  உளவியல் அறிஞர் யுங்கும், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரான வுல்ப்காங் பெளலியும் இணைந்து எழுதிய நூல் ஒன்றில் அறிதல் பற்றிய விஷயங்களில் இயற்பியலும் உளவியலும் சந்திக்கும் புள்ளிகள் பற்றிய அநேக குறிப்புகள் வருகின்றன.  ஆழ்மனத்தில் உள்ள ஒரு விஷயத்தை நனவு மனதிற்கு மேலெழுப்பிக் கொண்டுவந்து தெளிவடையச் செய்ய முடியாது போனால் அவ்விஷயம் புற உலகில் ஒரு நிகழ்வாக மாறிவிடும் என்பது உளவியல் ரீதியான ஓர் அறிதலாகும்.  ஒருவன் தன்னுள் அழுத்தமாக மோதிக்கொள்ளும் முரண்களைப் பற்றி ஏதுமே அறியாமல் தூய்மையான மேல்மனத்துடன் இருப்பானானால் அவனுடைய புற உலகம் இரண்டாகப் பிளந்து பரஸ்பரம் மோதி பல்வேறு சிதைவுகளுக்கு ஆளாவதைக் காணலாம்’ என்கிறார் யுங்.  அதே நூலில் பெளலி ‘அகப்பிரக்ஞையில் பிறக்கும் தோற்றம் மெல்ல புற விஷயங்களில் பரவி வெளியுலகமாக மாறித் தெரிகிறது’ என்கிறார். (Carl G. Jung and Wolfgang Pauli – The Interpretation of Nature and Psyche)

அனைத்து வகையிலும் விஞ்ஞானத்தை மனிதனின் பிரக்ஞையே வடிவமைக்கிறது.  மனிதனின் அகப்பிரக்ஞை திட்டவட்டமான காரண காரிய உறவு உடையதோ, தெளிவான இயங்கு விதிகள் உடையதோ அல்ல என நாம் அறிவோம்.  உள்ளுணர்வுகள், சந்தர்ப்பங்கள், சூழலின் படிம ரீதியான அகப்பதிவுகள் இப்படி எத்தனையோ கூறுகள் அதைத் தீர்மானிக்கின்றன.  அறியப்படுவதும் அறிவதும் அதுவேயாகும்.  ஐசக் நியூட்டன் ‘இயற்கையின் கணித தத்துவங்கள்’ (Philosophiae Naturalis Principia Mathematica) என்ற நூலில் தனது கண்டுபிடிப்புகள் எந்தவிதமான முன் ஊகங்களும் இன்றி இயற்கையை எதிர்கொண்டதன் மூலம் உருவானவை என்கிறார்.   ‘நான் எந்த ஊகமும் செய்யவில்லை’ (hypotheses non fingo) என்ற அவருடைய கூற்று பிரபலமானது.  ஆனால் உண்மையில் அது சாத்தியம்தானா?  விஞ்ஞானத்தைப் பற்றிய நவீன தத்துவ ஆய்வுகள் அது சாத்தியமேயில்லை என்கின்றன.  ஊகங்கள் மானுடப் பிரக்ஞையின் இயல்புகள்.  முதலில் வினா, பிறகு ஊகங்கள், அவ்வூகங்களில் ஒன்றுக்குப் பொருண்மை ரீதியான நிரூபணமோ தர்க்கரீதியான அங்கீகாரமோ உருவாக்கப்படுதல்.  இதுவே விஞ்ஞானத்தின் இயங்குமுறையாக உள்ளது.  இவற்றில் ஊகங்கள் (hypotheses) மானுடக் கற்பனையின் எல்லையையும், சாத்தியங்களையும் சார்ந்தவை.  இதைப் பற்றிய ஆய்வையே விஞ்ஞானத்தின் தத்துவ வாதம் (Philosophism in Science) என்கிறார்கள்.  கார்ல் பாப்பரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் தருக்கம் (Karl R. Popper – The Logic of Scientific Discovery) என்னும் நூல் இது பற்றிய விரிவான ஆய்வாகும்.  ஊகங்கள் வலைகள். வீசுபவர்களே பிடித்துவிடுகிறார்கள் என்கிறார் நோவாலிஸ் (Hypotheses are nets.  Only he who casts will catch – Novalis).

இருப்பும் அறிதலும் – 2

இருப்பும் அறிதலும் – 3

மொழியும் பிரபஞ்சமும் – 3

Standard

நமது சொற்புலனில் ஒலி – ஆனந்தத்தை ஆக்கும் மையம் நம்மில் உள்ள விசுத்தி சக்கரம் ஆகும்.  (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரம், அனாகரம், விசுத்தி, ஆக்ஞை, நாதம், பிந்து, சகஸ்ரம் என்று ஒன்பது சக்தி மையங்கள் நம் உடலில் உள்ளன என்று யோக – தாந்திரீக மரபு உருவகித்துள்ளது).  இந்த விசுத்தி சக்கரம் ஆக்ஞை, அனாகதம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளது.  நம் உயிர்மூச்சின் சொல்லுக்குரிய மையம் அது. அதன் ஒலி ‘ஹ’ என்பதாகும்.  தாந்திரீக முறைப்படி பிராணன் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சலனம் கொள்கிறது.  உயிர்மூச்சு பலவகைப்படும் (முக்கிய பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன்) இந்த ஐந்து வகை உயிர்மூச்சுகளைப் பற்றி மாண்டூக உபநிடதம் குறிப்பிடுகிறது.  முதல் வகை மூச்சான முக்கிய பிராணன் மையமானது.  அது பிற நான்கு மூச்சுகளை அரசன் மந்திரிகளை நியமிப்பதுபோல நியமிக்கிறது.  பிராணன் இதயத்தில் உள்ளது.  அபானன் ஜீரண உறுப்புகளில், சமானன் நுரையீரலில், உதானன் உடலில் உயிரை நிலைநிறுத்துகிறது.  வியானன் பிரக்ஞையை கட்டுப்படுத்துகிறது).  சொல்லுக்கு சக்தியளிப்பது வியானன்.  முக்கியப் பிராணன் வியானனில் சொல்லுக்குரிய சக்தியை நிலைநிறுத்துகிறது.  அதுவே முதல் மெய்யெழுத்தை உருவாக்குகிறது.  பதினாறு மெய்யெழுத்துக்களினால் விசுத்தியெனும் தாமரையின் பதினாறு இதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இம்மெய்யெழுத்துகளுக்குரிய பதினாறு ஸ்வரங்களையும் இவ்விதழ்களுடன் சம்பந்தப்படுத்தியுள்ளனர்.  இவ்வாறு இசையும் மொழியும் விசுத்தி சக்கரத்தில் இணைந்து இயங்குகின்றன.  இந்திய இசையில் ஏழு ஸ்வரங்கள் உண்டு (ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்) இவை ஏழு சிகரங்கள்.  இவற்றின் உச்சியில் உள்ளது விசுத்தி சக்கரம்.  ஒலியுடன் இணையும் மொழி வைகரி எனப்படுகிறது.  (பிரக்ஞையின் ஏழு நிலைகளான சூனியாதீதம், சூனியம், நிர்வாணம், துரியம், சுஷுப்தி, ஸ்வப்னம், ஜாகரம் ஆகியவற்றுடன் இணைந்தவையாக மொழிக்கும் ஏழு நிலைகள் உள்ளன.  சம்ரதீகம்,சாக்‌ஷிகி, சம்வர்த்திகம், பரா, பஸ்பந்த், மத்யமம், மவகரி.  ஜாகரம் விழிப்புநிலை.  வைகரி அதன் கேட்கும்-அறியும் மொழி.  பிற ஆழ்மனங்களில் ஆழ்நிலை மொழிகள் இயங்குகின்றன.  ஒன்றிலிருந்து ஒன்றாக அவை முளைத்தெழுகின்றன.  இவற்றுடன் வைகுண்டம், பிரம்மலோகம், தபோலோகம், ஜனர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம், ஜடலோகம் எனும் ஏழு உலகங்களையும் சதானந்த கோசம், சின்மய கோசம், ஆனந்தமய கோசம், சுத்த மனோமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் எனும் ஏழு உடல்களையும் இணைத்து அன்று புரிந்துகொண்டிருந்தனர்.  இன்றைய போதம், நனவிலி போல இவையும் பொது உருவகங்களே).  வைகரி எழுவதற்கு பேசுபவனுக்குள் விசுத்தி சக்கரத்தில் வியானன் குவிய வேண்டும்.  இதற்கு உள்முயற்சி (அப்யந்தர பிரயத்னம்) என்று பெயர்.  சொல்லை தனித்துவ அடையாளம் தந்து கூற உரிய ஒலிவடிவுடன், சுவரத்துடன் அதைப் பிணைத்தாக வேண்டும்.  அதை ஜனித ஸ்வரம் எனலாம்.  அப்போது சொல் குறிப்புணர்த்தும் தன்மை உடையதாகிறது (அபிவியஞ்கம்).

எழுத்துக்களைப் பிணைத்தும் பிரித்தும் சொற்களை உருவாக்குவது அட்சர வின்யாசம்.  சொற்களைப் பிரித்து அர்த்தங்களை உருவாக்குவது விஸ்லேஷணம்.  சொற்களைப் பிணைப்பது விகர்ஷணம்.  சொற்களை முடிவிற்குக் கொண்டுவருவது விராமம்.  இவற்றை நிகழ்த்தும் பொருட்டு சொல்லின் ஒலிகளில் மாத்திரைகளை ஏற்றியிறக்க வேண்டும்.  இது ஸ்தோபம் எனப்படும். இசைக்காக உருவாக்கப்படும் ஒலி மாறுபாடு வர்ணஸ்தோபம்.  சொற்களில் அர்த்தத்தின் பொருட்டு உருவாக்கப்படும் ஒலிமாறுபாடு பதஸ்தோபம்.  இவ்வாறு சொல்லையும் ஒலியையும் இணைக்கும் எண்ணற்ற இலக்கண முறைகள் உள்ளன.

இந்த பிராணன்

உத்கீதம் ஆகிறது

உத் என்றால் இது

இவையெல்லாம் பிராணனால்

தாங்கி நிறுத்தப்படுபவை

சொல்லே கீதம்

உத் என்பதும் கீதமென்பதும் இணைந்து

உத்கீதமாகிறது.

உத்கீதம் என்பது பிரணவம் (ஓம்).  மேற்கத்திய தத்துவ மரபில் தெகார்தேயின் இணைவுச் சித்தாந்தம் (கார்டிஷியன் கோ-ஆர்டினேட்) பல்வேறு பிரபஞ்ச தரிசனங்களை இணைத்து முழுமைப்படுத்தும் ஓர் அடிப்படை தரிசனமாகக் கருதப்படுகிறது.  இந்திய மரபில் இந்த இடம் பிரணவ சித்தாந்தத்திற்கு உண்டு.  நாம் பிரபஞ்சத்தை காரியம் காரணம் என இரண்டாகப் பிரித்து நிற்கும் ஓர் அறிதலாகக் காண்கிறோம்.  இவ்வறிதலைக் கடந்து நிற்கும் முழுமுதல் உண்மையெனவும் குறிப்பிடுகிறோம்.  அறியமுடியாத ஒன்றை முழு முதல் உண்மையாகவும் அறியப்படுவதை அல்லது அறியக்கூடுவதை ஆய்படு பொருளாகவும் யதார்த்தமாகவும் காண்கிறோம்.  அனுபவ அறிதல்கள் எல்லாமே அனுபவத்திற்குக் கட்டுப்பட்டவை.  ஆகவே திரிபடைந்தவை, சார்பு நிலையுள்ளவை, நிபந்தனைக்குட்பட்டவை.  (இவ்வறிதலை பெளத்த மரபு விகல்பம் என்றது)  திரிபற்ற முழு முதலான காரணம் ஒன்று பிரபஞ்சத்திற்கு உள்ளது.  அது விஹாரி (ஆடுபவன்).  அது உருவாக்கும் தோற்றமே விஹாரம் (ஆட்டம்).  (பெளத்தம் மகாதர்ம காய புத்தனை விஹாரி என்கிறது).

விஹாரம் இரண்டு நிலைகளில் உள்ளது.  ஸ்தூலம்,  சூட்சுமம் இவ்விரண்டுக்கும் அடியில் காரணம் உள்ளது. அதற்கு அடியில் இம்மூன்றுக்கும் அடிப்படையான துரியம்.  துரியமே காரணமாகவும் சூட்சுமமாகவும் இறுதியில் ஸ்தூலமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது.  அதாவது ஸ்தூலம் சூட்சுமம் காரணம் ஆகிய மூன்று வெளிப்பாடுகளினால் பரம் தன்னை மறைத்துக் கொண்டுள்ளது; அல்லது வெளிப்படுத்துகிறது.  (பரத்தின் நடுவில் ஒரு முரண் பதுங்கியுள்ளது. There is a lurking paradox in the heart of the absolute – நடராஜ குருவின் ஆப்தவாக்கியம்)  இவ்வியப்பைக் குறியீட்டு ரீதியாகச் சுட்டுவதே பிரணவம்.  அதில் உள்ள அகாரம் பிரபஞ்சத்தின் பேரண்டத் தோற்றம் எனலாம்.  அது பிற அக ஒளிகளினால் துலக்கம் பெறுவது.  செயற்புலன்களிலும் (கர்ம இந்திரியங்கள்) ஞானப் புலன்களிலும் (ஞான இந்திரியங்கள்) அது உயிர் கொள்கிறது.  உயிர் தன்னையும் தன் சூழலையும் அறிகிறது.  செயலுக்கான உத்வேகத்தை அடைகிறது.  எந்தப் புலனில் தூண்டுதல் ஏற்பட்டாலும் அதை சித்தம் (பிரக்ஞை) ஏற்றுக்கொண்டு அதை விரிவுபடுத்த வேண்டும்.  ஒவ்வொரு புலனறிதல் உருவாகும்போதும் சித்தத்தின் ஆழத்திலிருந்து உள்ளுணர்வு, முன்னனுபவம், பிறவி இயல்பு, கலாசாரம் ஆகியவை சார்ந்த அக வினைகள் நீருக்கடியில் சேற்றில் வேரூன்றிய தாமரை மெல்ல மேலெழுந்து இதழ் விரிப்பதுபோல மலர்கின்றன.  அப்போது நம் மனம் உலகை அறிகிறது.  அறிதல் காலம், இடம், பரு, அறியும் தன்னிலை, அனுபவிக்கும் தன்னிலை, செயல்படும் தன்னிலை (காலம், தேசம், பிண்டம், ஞாத்ருத்துவம், போக்த்ருத்துவம், கர்த்ருத்துவம்) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு முழு அனுபவமாக மாற்றுகிறது.  இவ்வனுபவம் மீண்டும் ஆழங்களுக்குச் சென்று விதை வடிவம் கொண்டு காத்திருக்கிறது.  பிறகு எப்போது வேண்டுமானாலும் சுஷுப்தியிலிருந்து (ஆழ்மனத்திலிருந்து) ஸ்வப்னத்திற்கும் (உபமனதிற்கும்) அங்கிருந்து ஜாக்ரத்திற்கும் (பிரக்ஞைக்கும்) அதை முளைக்க வைத்து திருப்பிஎடுக்க நம்மால் முடிகிறது.

நம் புலனறிதல்களை நாம் ஆழத்தில் குறியீட்டு வடிவில் சேமிக்கிறோம்.  இவை அந்தரங்கமான படிமங்கள்.  அவற்றின் ஒலியடையாளமே ‘உ’ ஆகும்.  உ என்ற ஒலி பிரதிபாவின் குறியீடு எனலாம்.  புற உலகம் போலவே முடிவற்றது அவ்வுலகம்.  மனித கற்பனை பிரதிபாவின் விளைவே. கலைகள், இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய அனைத்திற்கும் அடிப்படையான அக இயக்கம் இங்குதான் நிகழ்கிறது.  புலன் மூலமும் மனம் மூலமும் கிடைக்கப் பெறும் அறிவையெல்லாம் அது தனக்குரிய விதத்தில் மாற்றியமைத்து தொகுத்துக்கொள்கிறது.

இவ்வாறு இவ்விரு அமைப்புகளும் இடைவிடாது இயங்குவதனூடாக இவற்றின் அடிப்படையான பிரம்மாண்டங்களை மறைத்து விடுகின்றன.  இவையிரண்டுக்கும் காரணம் உள்ளே தனித்திருக்கிறது.  எவ்வாறு ஸ்வப்னத்திலிருந்து ஜாக்ரத் தாமரைபோல எழுந்து இதழ் விரிக்கிறதோ அதைப்போல இவையனைத்தும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மூல காரணத்திலிருந்து முளைத்தெழுகின்றன.  இவ்வியக்கத்திற்கான ஓர் இயக்க வரைபடமே பிரணவம்.  ஒன்றிலிருந்து ஒன்றாக எழுந்து முரண்பட்டு இயங்கக் கூடிய இம்மனப் பிரபஞ்சங்களின் இயல்புகளை பெருமளவு சரியாக ஊகிக்கும் ஃப்ராய்டு, யுங் முதலியவர்கள் இவற்றின் இயக்கங்களின் முரண்பாடுகளை ஒருங்கிணைத்து விளக்கும் பொது சித்தாந்தம் ஒன்றை உருவாக்க முடியாமல் பெரிதும் குழம்புகிறார்கள்.

புலனறிதலின் உலகில் இயற்கையின் பருவடிவச் சிறப்பியல்புகள் (வடிவம் முதலியவை) முதன்மையாக உள்ளன.  ஆனால் பிரதிபாவின் உலகில் அவற்றின் கணங்களே முதன்மைப்படுகின்றன.  ஆகவேதான் கனவில் நாம் காண்பவை எல்லாம் உணர்ச்சிகளினால் தீவிரமாக அடையாளப்படுத்தப்பட்டவையாக உள்ளன.  இவ்வாறு இரு பிரபஞ்சங்களும் மாறிமாறி ஆக்கி இயக்குகின்றன.  புலன்களுக்கு சக்தி தருவதற்காக ஸ்வப்னத்தை உருவாக்குகிறது.  சாமானிய மன இயக்கத்தில் இவ்விரு தளங்களுக்கும் மாறிமாறி உயிர்சக்தி சுழன்றபடி உள்ளது.  அடுத்த கட்டம் பற்றி அறிய பொதுவாக அனைவரும் விரும்புவதோ முயல்வதோ இல்லை.  காரணமும், காரணத்திற்கு காரணமான துரியமுமோ ‘ம்’ என்ற அரை எழுத்தால் சுட்டப்படுகின்றன. அது மெளனத்திற்குரிய எழுத்து.  இவ்வாறு மொழியின் இயல்பை பிரகதாரண்யகம் விளக்குகிறது.  பிராணனில் இருந்து வருவது சொல்.  தன் முழுமை நிலையில் பிரணவம் ஆகிறது.  பிராணனில் உரு அலையாகப் பிறந்து பிரபஞ்ச முழுமையில் நிறைவு பெறுகிறது சொல் எனலாம்.  இதுவே மொழி பற்றிய நமது மரபு சார்ந்த பிரக்ஞை ஆகும்.

(அவ்வெனும் எழுத்தினால் அகண்டமாகி நின்றனை

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து வந்தனை

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அகர உகர மகாரமாய் நின்றதே சிவாயமே

எனும் சிவவாக்கியர் பாடலில் மொத்த பிரபஞ்ச சிருஷ்டி இயக்கத்தையும் தொகுக்க முயலும் நோக்கு உள்ளதை இங்கு நினைவு கூறலாம்)

(நித்ய சைதன்ய யதி பிரகதாரண்யக உபநிடதத்திற்கு எழுதிய உரை மூன்று பாகங்களாக ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வெளியாகியுள்ளது.  இங்கு அதிலுள்ள ஒரு பகுதி எளிமைப்படுத்தப்பட்டு மொழிபெயர்ப்பாகியுள்ளது.  அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை மொழிபெயர்ப்பாளரின் விளக்கக் குறிப்புகள்.  அத்வைத மரபு தன் ஆதார தரிசனங்களை உபநிடதங்களிலிருந்தும் தருக்க முறையை பெளத்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டது.  சில இடங்களில் பெளத்த ஞான மரபின் இணைக் கூறுகள் இதை விளக்கும் பொருட்டு சுட்டப்பட்டுள்ளன.)

மொழியாக்கம் : ஜெயமோகன்

மொழியும் பிரபஞ்சமும் – 2

Standard

வேதத்தினூடாக அடையும் நன்மைகள் உலகியல் சார்ந்தவை.  அவற்றை சம்சாரம் என்று கூறுகிறோம்.  இவை சார்பு நிலையானவை.  இவற்றையெல்லாம் வார்த்தைகளினூடாக மானுடன் அறிகிறான்.  ஆனால் வார்த்தையில் அடங்கியுள்ள வேறு ஒரு ரகசியம் உண்டு.  அதை நாதம் எனலாம்.  மூதாதையர் சொல்லை இணைத்து செய்யுள் உருவாக்கினர்.  வேத மந்திரங்கள் நான்கு வரிகளினாலானவை.  அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் அவை நான்கு நான்கு எழுத்துக்களாகும்.  அதை ‘அனுஷ்டுப்பு சந்தம்’ என்பர்.  சொல் இவ்வாறு பற்பல சந்தங்களில் நிறுவப்பட்டுள்ளது.  சந்தமொன்றில் நிறுவப்படாத சொல் இல்லை.  இந்த ஒலியொழுங்கு மூலமே சொல் முழுமையடைய முடியும்.  சொல்லுக்கு அது பரவச நிலையை (sublime) அளிக்கிறது.  அதனூடாகவே நாம் மொழியின் உச்சங்களை அடைய முடியும்.

உலகியலின் மூலம் உருவாகும் சிறப்பம்சங்கள் ஏதுமில்லாத மெய்மையின் சாரத்தில் நம் பிரக்ஞை திரும்பிச் சென்று அங்கு தங்கி நிற்பதை பிரக்ஞையின் முழுமை எனலாம்.  அப்போது வேறுபாடுகளின் மூலம் கற்பிதம் செய்யப்பட்டுள்ள இவ்வுலகிலிருந்து மீண்டு ஒருமையின் உலகினை அடைகிறோம்.  அவ்வாறு அடைபவனை யோகாரூடன் என்று தியான மரபு குறிப்பிடுகிறது (புத்தர் அமர்ந்திருக்கும் தோற்றமே யோகாரூடம்.  அது யோகாரூட புத்தன்) அந்நிலையில் முக்குண விளையாட்டு அவனைத் தொடுவதில்லை.  எனவே எதற்கும் சிறப்பியல்புகள் இல்லை.  எனவே அவனுக்கு வெளியுலகாக விரிந்துள்ள பிரம்மாண்டம் இல்லை.  (அதாவது பாஸம், பாஸ்யம் என்ற இருவகை மயக்கங்களும் இல்லை.  பாஸம் புற உலகத்தோற்றம்.  பாஸ்யம் அகத்தில் அதன் பிரதிபலிப்பு – மொழிபெயர்ப்பாளர்)  அதை கேவலம் (முதல் நிலை எளிமை) என்று குறிப்பிடுகிறோம்.  அந்நிலையே கைவல்யம்.

இந்த உயிரே

பிராமணஸ்பதியும் ஆகிறது

சொல்லே பிரம்மம்

அதற்கு இவன் அதிபன்

எனவே இவன்

பிராமணஸ்பதியும் ஆகிறான்

நாம் ஒன்றை அறிய மூன்றுவிதமான திண்ணங்கள் தேவை என்று மேற்கு மரபு வகுக்கிறது.  அறிபடு பொருள் அல்லது ஆய்படு பொருள் முதல் திண்ணம்.  இதை அறிவுக் கூறு (Epistime) என்றும் இதை வகுத்துக் கொள்வதை அறிவுக்கூறியல் (Epistomology) என்றும் கூறுகிறார்கள்.  அவ்வறிதலினூடாக நாம் அடைவது என்ன, அது எதற்குப் பயன்படும் என்பது சார மதிப்பீடு (axiom) எனப்படும்.  அந்த ஆய்வுமுறை மதிப்பீட்டியல் அல்லது சாராம்சவியல் (axiology).  படிப்படியாகத் தொகுத்தும் பகுத்தும் தியானித்தும் அறியும் முறைமை (metodology) மூன்றாவது திண்ணம்.  இவ்வுபநிடத வரிகளில் சொல்லும் பிரபஞ்சமும் ஆய்படு பொருளாகவும் அவற்றின் உறவை அறிவதனூடாக நாம் அறியும் ஒருமைநிலை சாரமதிப்பீடாகவும் இருக்கிறது.  படிப்படியாக ஆய்வுமுறை விரிவடைந்து செல்கிறது.

சொல் ஒரு வாகனம்.  அது ஒலியலையில் நகரும்.  ஒலியலை வாயுவில் நகர்வது.  வாயுவே உயிர்களில் பிராணன்.  நாம் கேட்பது உயிரின் அலைகளை.  உயிரின் சலனமே சொற்களாக காற்றில் நகர்கிறது.  எல்லா அனுபவங்களிலும் சம்பந்தப்பட்ட புலன்கள் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதைக் காணலாம்.  உயிர் புலன்களை ஆள்கிறது.  புலன்களினூடாக அது தன்னை வெளியில் சாத்தியப்படுத்திக் கொள்கிறது.  ஒரு காக்கை நம்முன் வந்தமர்ந்து ‘கா’ எனும்போது காதால் கேட்டு கண்ணால் கண்டு அதை அறிகிறோம்.  மனதில் அதன் படிமம் ஒன்று எஞ்சுகிறது.  அது காகமெனும் புலனறிதலின் தொகுப்பாகும்.  காகம் பறந்துபோன பிற்பாடு மனதில் அந்த பிம்பம் எஞ்சுகிறது.  அந்த பிம்பத்திற்குத்தான் நாம் ஒலியடையாளம் தருகிறோம்.  அந்தப் பெயர் பிறகு காகத்தின் பதிலியாகிறது.  அப்பெயரே காகமெனும் அனுபவத்தைத் தரமுடியும்.  இவ்வாறு உள்ளூர ஒரு பிரதியுலகம் உருவாகிறது.  அகப்படிமங்களினாலான இவ்வுலகம் மரபில் ‘பிரதிபா’ எனப்படுகிறது.  அது பொருண்மையற்றது.  ஆனால் பொருளின் அனுபவத்தைத் தருகிறது.  உடலால் நாமறியும் அனுபவம் பிரத்யம்.  அவ்வனுபவத்தை நாம் அறியும் முன்பே அறியப்பட்டு பிரதிபாவில் தொகுக்கப்பட்டுள்ள முன்னறிதல் தேவையாகிறது.  (இதை பெளத்த மரபிலிருந்து வேதாந்த மரபு பெற்றுக் கொண்டது.  அறிதல் என்பது பிரத்யம்.  முன்னறிதல் சமாந்தர பூர்வ பிரத்யம்.  முன்னறிதல் இன்றி அறிதல் சாத்தியமல்ல – மொழிபெயர்ப்பாளர்)  இவ்வாறு நிகழும் அறிதலெனும் நிகழ்வை நாம் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

நாமறியும் பொருளுக்குரிய விசேஷத் தன்மையை (அல்லது சிறப்பியல்புகளை) மட்டுமே சார்ந்து பிரதிபா உருவாகிறது.  அதாவது அறிதல் என்பதே சாராம்சப்படுத்தி அறிதல்தான்.  சொற்களினூடாக நாம் உண்மையில் குறிப்பிடுவது பிரதிபாவையே (உதாரணமாக பசு என நாம் குறிப்பிடுவது அம்மிருகத்தையல்ல.  அதை உணர்வு ரீதியாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் நாம் சாராம்சப்படுத்தி வைத்திருக்கும் உள்ளறிவையேயாகும்.  பசு என்ற அந்தரங்கப் படிமம் குறிப்பிடப்படுகிறது.  பசு என்ற கலாசாரப் படிமம் தொடர்புறுத்தப்படுகிறது என்று நவீன குறியியல் கூறும் பசுவின் பல்லாயிரம் இயல்புகள் வெளியே உள்ளன – மொழிபெயர்ப்பாளர்) இந்த சாராம்சம் தனித்துத் தன்னை அறிய வைத்துக் கொள்ள் இயலாது.  எனவே இணையான பிற சாராம்சங்களுடன் அதைத் தொடர்புபடுத்துகிறோம்.  ஓடும் நீரில் ஆணியடிக்க முடியுமா?  இன்னொரு திரவத்தையே கலக்க முடியும்.  அதாவது பொதுத்தன்மை உடைய பிற அறிதல்களுடன் இணைத்துதான் ஒரு தனியறிதலை நாம் புரிந்து கொள்ளவும் புரியவைக்கவும் முடியும்.  இவ்வாறு பிரதிபா இயங்குவதில் ஒரு நியதி உள்ளது.  அதுவே மொழியின் நியதி ஆகிறது.  (ஒவ்வொரு சொல்லும் பிற சொற்கள் அனைத்தாலும்தான் அர்த்தப்படுத்தப்படுகிறது என நவீன மொழியியல் குறிப்பிடுகிறது – மொழிபெயர்ப்பாளர்)

மொழி பலவகைப்பட்டது.  நாவால் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல; குறியீடுகளினால் கூறப்படுவதும் மொழியே.  ஓவியம் நடனம் குறிகள் முதலியவையும் மொழிகளே.  நடராஜ நடனத்தில் சிவன் தன் உடலையே மொழியாக்கி நிற்கிறான்.  108 தாண்டவ முறைகள் உள்ளன என்பது சாஸ்திரம்.  மொழியின் பரிமாணங்களைக் கூறி முடிக்க முடியாது.  மொழியினூடாக இயங்கும் நாதம் இன்னொரு மொழி.  ஒரே சமயத்தில் பல்வேறு மொழியமைப்புகள் சேர்ந்து இயங்குகின்றன.  இவற்றின் இசைவைத் தீர்மானிப்பது எது?  அதை ஸ்தாபிக்கும் ஞானம் என ஒன்றை உருவகித்து அதற்கு ‘பிராமணஸ்பதி’ என்று உபநிடதம் பெயரிடுகிறது.  உயிர்கள் பிறப்பதற்கு முன்பு கருவறையில் இருந்தபடியே தன் உடலை இயற்கையிலிருந்து உருவாக்கியெடுத்துக் கொள்கின்றன.  அதுபோல நாம் கூறும் சொற்கள் ஒலி வடிவமோ வரி வடிவமோ பெற்று வெளி வருவதற்கு முன்னரே உள்ளூர கரு வடிவில் உள்ளன.  வெளிமொழியை உருவாக்கும் விளைநிலமாக இந்த கருப்பரப்பு நம்முன் உள்ளது.  சொல் வெளியே இருக்கிறது.  குறிப்பு உள்ளே உள்ளது.  இவையிரண்டும் இணையும் தருணத்தில் அடையாளமாக்குகையில் எழுத்துகள் உருவாகின்றன.  அதைப் பேசலாம் – உள்ளூர வைத்திருந்து அதனூடாக பிரக்ஞையை பிரவாகமெடுக்கச் செய்யலாம்.  வெளிவரும் ஒலியை நியதிகளில் நிறுத்தவும், உச்சப்படுத்திக் காட்டவும், மெளனப்படுத்திக் காட்டவும் தேவை எழுகிறது.  அதற்கு இலக்கணமும் ஒலியிலக்கணமும் தேவையாகிறது (வியாகரணம், சந்தஸ் சாஸ்திரம்).

ஒருவர் தன்னைப் பிறருக்கு உணர்த்தும் மொழியானது தருணம் சார்ந்தும் பொதுச் சூழல் சார்ந்தும் தர்க்கத் தன்மை (logical relevancy) உடையதாக உள்ளது.  இந்தத் தர்க்கத்தை உதறிவிட்டு மனம் காரிய காரண உறவுடன் ஒரு கருத்திலிருந்து அடுத்ததற்கு நகர்ந்து ஓர் இலக்கு நோக்கிச் செல்வது சிந்தனை.  மொழியின் புறவய இயக்கத்திலிருந்து விலகி அடுத்த தளத்திற்கு நகர்ந்து சொற்களின் குறிப்புத் தளங்களை அறிய முயல்வது மனனம்.  மனனத்தின் இறுதியில் அறிபவனுக்கும் அறிபடு பொருளுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமலிருக்கிறது.  லயம் கைகூடுகிறது.  இதுவே தியானம்.  தியானம் என்பது ஒரு பயிற்சி அல்ல  மாறாக பயிற்சிகளின் இறுதியில் கைகூடும் முழுமை நிலையாகும்.

இந்த பிராணனே ஸாமம்

ஸா என்பது சொல்

ஆமம் மூச்சு

ஸா என்பதும் ஆமம் என்பதும்

இணைந்ததே ஸாமம்

எதனால் இது

கரையானுக்கு சமானமாகவும்

கொசுவுக்கு சமானமாகவும்

யானைக்கு சமானமாகவும்

மூவுலகுக்கு சமானமாகவும்

இவையனைத்துடனும் இணைந்தும்

உள்ளதோ அதுவே சாமத்துவம்

யார் இவ்வாறு

இதை அறிகிறானோ

அவனே சாமத்தின் முழுமையையும்

சாமத்தின் தனியுலகையும்

அடைகிறான்

பிராணனே சாமம் என்கிறது உபநிடதம்.  பிராணனும் சொல்லும் இரண்டறக் கலந்து உருவாகும் தருணமே சாமம்.  அது மூவுலகங்களுக்கும் அதில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் சமமானது.  சமம் என்பதால் அது சாமம்.  இந்த சமானத்தன்மையை உணர்பவரே சாமத்தை அறிகிறார்.

அக வார்த்தையை புறவார்த்தையாக ஆக்குவது.  பிராணனை ஆணாகவும் கூறுவதுண்டு.  அவர்கள் இணையும்போது பிறப்பதே மொழி.  பிராணன் வார்த்தையின் கருவில் விழுந்து முளைத்தெழுகிறது.  அந்தக் கூடலில் பிரிவினையுணர்வுக்கு இடமில்லை.  சாமம் என்னும் இது பிரபஞ்சத்திற்கு சமமானது.  அதில் உள்ள ஓர் அணுவிற்கும் சமமானது.  இந்த பேதமின்மையையே ரிஷிகள் ஆதிமகஸ் என்றார்கள் (அறிவும் அறியும் பொருளும் அறிபவனும் ஓர் ஆதிமகஸ் மட்டுமே – நாராயண குரு – ஆத்மோபதேச சதகம்)  இந்த ஒருமையில் உள்ள எந்த ஒரு துளியை எடுத்துக்கொண்டாலும் அது முடிவற்ற ஆனந்தத்தைத் தன்னுள் கொண்ட ஒரு முழுமையாகும்.  அதற்கு முடிவற்ற தனித்தன்மைகள் உண்டு.  அவற்றைப் பிரித்தறிந்து வியந்து துதிக்கும்போது பிரக்ஞை ரிக் ஆகும்.  அவற்றுடன் பரிபூரண சமானத் தன்மையை உணர்கையில் அப்பிரக்ஞை சாமம் ஆகிறது.  ரிக்கும் சாமமும் ஒன்றையொன்று பூரணப்படுத்துகின்றன.  இது எவ்வாறு மொழியும் அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பிரம்மாண்ட பதியாகிறது என்பதை விளக்குகிறது.

மொழியும் பிரபஞ்சமும் – 1

Standard

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும்.

பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி உருவானான். (உடல் வடிவான மானுடம்)  அந்த பிரஜாபதி பிறகு பிராணஸ்பதியானான் (உயிர் வடிவான மானுடம்).  பிராணஸ்பதி பிறகு பிராமணஸ்பதி – பிரபஞ்சத்தின் மகத்தான ஒருமையை உணர்ந்து சாமத்திற்குரியவன் – ஆனான்.  சம பாவனையே சாமம்.  பிரகதாரண்யக உபநிடதத்தில் ஒன்றாம் அத்தியாயத்தில் மூன்றாம் பிராம்மணத்தில் இருபத்துமூன்று வரையிலான நான்கு மந்திரங்களில் இந்தப் பரிணாமத்தின் சித்திரம் உள்ளது.

இதுவே பிரஹஸ்பதி

சொல்லே பிரம்மாண்டம்

அதற்கு இதுவே அதிபதி

எனவே இது பிரஹஸ்பதி

மானுடத்திற்குள் பிராணன் இயங்குகிறது.  பிராணன் என்றால் உயிர் மூச்சு.  அந்த பிராணனே பிரம்மாண்டத்திற்கு அதிபன்.  அந்த பிராணனே சொல்லாகவும் ஆகிறது.  எனவே சொல்லே பிரம்மாண்டத்தை ஆளும் பிருஹஸ்பதியாகும் (பிருஹத் என்றால் பிரம்மாண்டம்.  பதி என்றால் அதிபன்).

பிறப்பெடுப்பதை ‘பிரஜனம் செய்தல்’ என்று கூறுவோம்.  பிறப்பவன் பிரஜை.  ஆணின் விந்து முதல் பெண்ணின் கருவறை வரை விந்துவில் உள்ள உயிர்த்துளி நகர்ந்தாக வேண்டும்.  அதற்கு வழிகாட்டிகள் இல்லை.  துணை இல்லை.  தடைகள் உண்டு.  அவற்றைத் தாண்டி அது தன் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கண்டடைய வேண்டும்.  வாழ்க்கை பூரணமான தனிமையில் தொடங்குகிறது, முடிகிறது.  பிறந்தெழும் உயிரில் அதன் சிருஷ்டிகர்த்தனும் உள்ளடங்கியுள்ளான்.  அவனே பிரபஞ்சத்தின் பருப்பொருட்களிலிருந்து தன் சுய இச்சையினால் தன்னை பிறக்கச் செய்தான் என்கிறது உபநிடதம்.

பிரபஞ்சத்தில் நிரம்பியுள்ள உயிர் நிகழ்வில் மூன்று அம்சங்கள் உள்ளன.  ஒன்று, படைப்பாக்கம்.  இரண்டு, அதனூடாக தன்னைப் படைத்துக்கொள்ளும் பிரஜாபதி.  மூன்று, படைப்புக்கும் பிறகு உருவாகும் அனைத்து உயிர்ச்சிக்கலுக்கும் அடிப்படையாக அமையும் சிருஷ்டியின் விளையாட்டு (லீலை).  பிரஜாபதி தன் உள்ளார்ந்த இச்சையால் பிறந்தவன்.  ஆனால் மாறாதவன் அல்ல.  முடிவடையாதிருக்க வேண்டுமெனில் அவன் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கவும் வேண்டும்.  மரணமும் பிறப்புமாக ஒரு தொடரை அவன் உருவாக்க வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் பிரஜாபதியில் மாறாதிருப்பது பிராணன்.  அதை அங்கிரீசன் என்று உபநிடதம் குறிப்பிடுகிறது.  உடல் எனும் விளக்கிலெரியும் சுடர் அன்னத்தை (பருப்பொருளை) ஆக்கி உண்டு அவன் வாழ்கிறான்.  அவனே பிராணஸ்பதி.

இவ்வாறு பூமியில் நிரம்பியுள்ள பிராணஸ்பதி தன்னையும் உணர்வது எண்ணங்களின் மூலமே.  எண்ணங்களுக்கு சொற்கள் தேவை.  இவ்வாறு மொழி உருவாயிற்று.  பிராணஸ்பதிக்கு காரணமாகிய சாரமே சொல்லுக்கும் மூலம்.  எனவே சொல்லை பிரஹஸ்பதி என்று கூறலாம்.  பிரக்ஞையின் செயல்பாட்டில் ஆகச் சிறிய அலகு ‘வேறுபடுத்தியறிதல்’ ஆகும்.  இதை துண்டுபடுத்தியறிதல் (De-limitation) என்று மேற்கு குறிப்பிடும்.  வேறுபடுத்தியறிந்ததை அடையாளப்படுத்துதல் அடுத்த கட்டம்.  ‘இது இன்னது – ஆனால் இன்னதல்ல’ என்று பிரக்ஞை பிரபஞ்சத்தை அறிந்து அளக்கத் தொடங்குகிறது.  ஐம்புலன்களும் மனமும் உயிரும் இணைந்த ஓர் ஆளுமையாக தன்னை உணரும்போது பிரஜாபதி தன்னைச் சுற்றி வடிவங்களைக் காண்கிறது.  உடல்கள், பிற பருவடிவங்கள், தோற்றங்கள் என பலவகை வடிவங்கள்.  ஒவ்வொரு வடிவத்திற்கும் அது ஓர் ஒலியடையாளத்தை அளிக்கிறது.  அது நாமம் (அல்லது பெயர்).  ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விசேஷம் (அல்லது சிறப்பியல்பு) உள்ளது.  அவ்வியல்பு நேர்நிலையானதோ எதிர்மறையானதோ ஆகலாம்.  ஆகவே பெயர்களுக்கிடையில் சிறப்புக் குறிப்பும், வேறுபடுத்தும் குறிப்பும் தேவை.  இரண்டு பெயர்கள் எதிர்எதிராக நிற்கையில் தன்னிலையும் படர்க்கையும் உருவாகிறது.  இப்பெயர்களிலிருந்து செயல்கள் தனித்தறியப்படுகின்றன.  செல்களையும் இருப்புகளையும் இணைக்கும் பொருட்டு இணைப்புச் சொற்களும் வினைச்சொற்களும் பிறக்கின்றன.  இவ்வாறு பற்பல கூறுகளுடன் மொழி விரிந்து வருகிறது.  மொழியை அனைவருக்கும் பொதுவாக ஆக்கும்பொருட்டு இலக்கணம் உருவாகிறது.

குழந்தை மொழியினூடாக உலகை அடையாளப்படுத்துகிறது.  மொழியினூடாக வியவகார (புழக்க) உலகிற்குள் வருகிறது.  இந்தப் பரிணாமத்தின் விளைவாக அதன் சித்தம் மூன்று தளங்கள் உடையதாக ஆகிறது.  அவை ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ் மனநிலை).  விழியும் மனமும் திறந்திருக்கும் நிலையே விழிப்பு நிலை.  இதை ‘அ’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தலாம்.  கனவு நிலையில் தூல உலகம் சூட்சுமம் ஆகிவிடுகிறது.  அதற்கு ‘உ’ என்ற சொல்லை குறிப்பிடலாம்.  ஆழ்மனநிலையில் நாமறிந்தவையெல்லாமே உட்சுருங்கி எங்கோ மறைகின்றன.  அவை தங்கள் விதை வடிவுக்குத் திரும்புகின்றன.  மெளன வடிவமான ‘ம்’ எனும் அரைச் சொல் இதைக் குறிக்கும்.  இந்நிலையில் உலகம் அதன் காரண நிலையில் உள்ளது.  அந்தக் காரணம் தன்னுள் முடிவற்ற சாத்தியங்களை உள்ளடக்கியுள்ளது.  அதில் ஒரேயொரு சாத்தியமே நாமறியும் தூலப் பிரபஞ்சமாக ஆகியுள்ளது.  நமது மன இயக்கம் முதலிரு தளங்களில் மாறிமாறி அலைவதாக உள்ளது.  மூன்றாவது தளம் மெளனமாக கூடவே உள்ளது.  இதையே ‘ஓம்’காரம் சுட்டுகிறது – விரிவாக இதை மறுபடியும் பேசலாம்.

இவ்வாறு பிரக்ஞை இயங்குவதற்கு பருவடிவ சக்தியும், ரசாயன சக்தியும், உயிர்சக்தியும் இணையவேண்டியுள்ளது.  அந்த இணைவு ஐந்து பருக்களும் உருமாற்றம் கொள்வதனூடாக நிகழ்கிறது. இவ்வகை மாற்றம் மூன்று குணங்களின் இணைவு விகிதங்களில் ஏற்படும் பற்பல சாத்தியங்களினூடாக நிகழ்கிறது.  அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.  (அமைதி நிலை, செயலூக்கநிலை, எதிர்இயக்க நிலை) இந்த மூன்று குணங்களின் அமைதியின்மையிலிருந்து அறிவின் தன்மைகளும் மாறிமாறி ஏற்படுகின்றன.

ஒருவனை நாம் அறிஞனாகவும் திடமானவனாகவும் உத்தரவிடும் வல்லமை கொண்டவனாகவும் அறியும்போது அவன்மீது மதிப்பு ஏற்பட்டு தலைவனாக ஆக்குகிறோம்.  அவனை துதிக்கவும் வழிபடவும் முற்படுகிறோம்.  அவ்வாறு வணக்கத்திற்கும் வியப்பிற்கும் உரிய மகிமைகளை மனம் திறந்து துதிப்பதே ரிக் வேதம்.  தன்னிடமிருக்கும் எளிய உடைமைகளை அம்மகிமைகளுக்கு முன் பூர்ண சமர்ப்பணம் செய்யவும் வணங்குபவன் முற்படுகிறான்.  எப்படி அந்த சமர்ப்பணத்தைச் செய்வது என்று விளக்குவதே யஜுர்வேதம்.  வணங்குபவனும் வணங்கப்படுபவனும் மகிழ்ந்து சமானமாக உணர்ந்து சேர்ந்திசைக்கும் ஆனந்த கீதமே சாம வேதம்.  அது ஒருமையின் லயத்தின் வேதமாகும்.

மூன்று வேதங்களினூடாக நாம் அடைபவை உலகியல் ரீதியான நன்மைகளும் ஆன்மீக ரீதியான சிறப்புகளும் மட்டுமேயாகும்.  இவற்றை சிரேயஸ், பிரேயஸ் என்று கூறுகிறார்கள். (செல்வமும் புகழும்)  இவையிரண்டுமே அழியக்கூடியவை.  மாறாததும் அழியாததுமான நன்மையானது ஞானத்தினூடாக இவ்விரு நாட்டங்களையும் ஒருவன் கடந்து செல்வதேயாகும்.  இதை நிஸ்ரேயஸ் (துறவு நிலை) என்கிறது உபநிடத மரபு.  அதை அளிக்கும் ஞானமே வேதாந்தம்.  அது வேதத்தின் இறுதியுண்மை.  அதைக் கூறுபவை உபநிடதங்கள்.  வேதாந்தம் வார்த்தையின் முடிவு.  எங்கு வார்த்தையும் பிரக்ஞையும் எதையும் கூறமுடியாது திரும்பி விடுகின்றனவோ அதற்கு அப்பால் வேதாந்த அனுபவம்.

விடுதலையின் மெய்யியல்

Standard

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியின் விளைவாகவே எதனுடைய தொடக்கமும் நிகழ்கிறது.  ‘அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?’ என்ற நம்முடைய கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய் சந்தர்ப்பம் எந்த நேரத்திலும் வாய்க்கலாம்.  இந்தக் கேள்வி பலரை குழப்பமடையச் செய்கிறது.  இந்தக் கேள்வியை முகங்கொள்ளும்போது, தீர்க்கப்படவேண்டிய எண்ணற்ற பிரச்சினைகளையும், சந்திக்க வேண்டிய நெருக்கடிகளையும், எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளையும் சிலர் அனுபவிக்கிறார்கள்.  மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்; ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து ஒரு உறுதியற்ற உணர்வால் அவர்களுடைய இயலாமையின் முடிவற்ற படுபாதாளத்தில் அவர்கள் மூழ்கிப்போகிறார்கள்.  ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்குத் தகுந்த விடைதேடி அவர்கள் மணிக்கணக்கில் அல்லது நாள் கணக்கில் உட்கார்ந்திருக்கக் கூடும்.

மனித உணர்வுநிலை ஒரு நீர்க்கோட்டைப் போன்றது; ஓர் ஓடையைப் போன்றது.  ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான செயலை ஒரு நபர் செய்யாதபோது மேலும் மேலும் எண்ணங்கள் ஒன்றுகூடி அந்த நபரின் குழப்பம் இயக்கமற்ற தேங்கிப்போதலில் முடியும்.  சிந்தனைத் தேக்கம் விரிந்து பெருகும் நிச்சயமற்ற தன்மையை விளைவிக்கிறது.  அது கிடைமட்டப் பரப்பை மட்டும் அல்லாமல், கணந்தோறும் அதிகரிக்கும் இருளின் ஆழத்தையும் கொண்டிருக்கும்.  இதன் தொடர்ச்சியாக மன அழுத்தம் வருகிறது.  மன அழுத்தத்துக்கு ஆளான் நபர் எண்ணெயிலோ அல்லது அடர்த்தியான தேன்பாகிலோ விழுந்துவிட்ட ஒரு ஈக்கு ஒப்பானவர்.  எண்ணெயும் தேனும் அவையளவில் ஆபத்தில்லாதவைதான்; ஆனால், அப்படிப்பட்ட பொருளில் ஒரு ஈ விழுந்துவிடும்போது அதனுடைய சிறகுகள் ஊறி நனைந்து போவதால் மேலே எழ முடியாது.

‘மாண்டூக உபநிடதம்’ என்று அழைக்கப்படும் விடுதலை பற்றிய உபநிடதம் ஒன்று உள்ளது.  அதில் தவளை (மாண்டூகம்) கட்டுண்டிருத்தலுக்கும் விடுதலைக்குமான உருவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.  ஒரு தவளை முட்டைகள் இடும்போது, ஒவ்வொரு முட்டையும் அடுத்த முட்டையோடு இணைந்தே இருக்கும்.  வாழ்வதற்காகப் பிறந்த முட்டை தன்னுடைய அண்டை முட்டைகளோடு ஏற்படும் பிணைப்பால் ஏற்கனவே சிறைப்பட்டுள்ளது.  முட்டையிலிருந்து வாழத் தகுதி பெற தவளையை யார் விடுவிப்பார்கள்?  அடுத்தவர் வாழ்வும் மேன்மை பெற உதவுவது தங்கள் கடமை என்ற ரீதியிலேயே மனிதர்கள் எப்போதும் சிந்திக்கிறார்கள்.  இயற்கையிலிருந்து நாம் பெறுவது இந்த வகையான பாடம் அல்ல.  ஒரு விதை முளைவிடும்போது, தோட்டத்திலுள்ள வெறெந்தச் செடியோ, மரமோ புதிதாக அரும்பும் செடியைப் பேணி வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.  தன் வழியில் வரும் எவ்வகையான தடையிலிருந்தும் தன்னைத் தானே காத்துக்கொள்வதும், விடுதலை செய்துகொள்வதும் முழுக்க முழுக்க அந்த உயிரின் சொந்தக் கடமையாகும்.  விநாயகர் சிலைக்கு முன்னால் தேங்காய் உடைத்து தன்னுடைய விடுதலைக்காக எந்தத் தாவரமும் பிரார்த்திப்பதில்லை.

சில சமயங்களில் முளைவிடும் விதையின் மீது ஒரு பெரிய பாறை ஒன்று உட்கார்ந்திருக்கலாம்.  ஆனால் அது இருளில் அமர்ந்தபடி தன் விடுதலை பற்றிய கனவை கண்டுகொண்டிருக்கிறது.  தன்னுடைய முதல் இலையை இறுகப் பற்றிக்கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து வரும் மங்கலான ஒளியை வழிகாட்டியாகக்கொண்டு அது பாறையின் அடியிலிருந்து ரகசியமாகவும் மெதுவாகவும் வெளியே வர முயல்கிறது.  இறுதியில் தன் தலையை வெளியே கொண்டுவருகிறது.  அது தன்னை விடுவித்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டது.  வெளியேறும் வழியைக் கண்டறிய நம்மால் இயலாது என்று நாம் நினைக்கக்கூடாது.  கருப்பையின் இருண்ட அறையில் சிறைப்பட்டிருந்த நாம் நம்பிக்கையுடன் நம்முடைய வலிமையைத் திரட்டி, நம்முடைய பல்வேறு புலன் நுட்பங்களுக்கு உருக்கொடுத்து, ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குப் பிறகு கருவறைச் சுவர்களை உதைத்துக்கொண்டிருந்ததை நாம் மறந்து போயிருக்கலாம்.  பிரார்த்தனை செய்துகொள்ள கடவுளும் இல்லை, பிரார்த்தனை செய்ய வார்தைகளும் அப்போது நமக்கு இல்லை.  ஆனால், நமக்கு விடுதலை தேவைப்பட்டது.  தொப்புள் கொடியின் மூலம் நம் தாயின் சுவாசமே நமக்கு உணவாயிற்று; அதிர்ஷ்டவசமாக, கருப்பையிலிருந்து வெளியே வர நம்மைச் சூழ்ந்திருந்த பனிக்குட நீர்ப்பரப்பு உதவியது.  யாரையும் சாராமல் ஒரு சிறு விதைக்கன்று முதல் வளரும் சிசு வரை எல்லோருமே விடுதலையைத் தேடுகிறார்கள்.  சூழலில் உள்ள எல்லா ஆற்றல்களும் ஒரு பரிவிரக்கத்தோடு விடுதலையை செயல்படுத்துகின்றன.

நம்முடைய பிறப்புடன் நம் முழு வாழ்வின் விடுதலையும் முடிவடைந்து விடுகிறது.  மத நம்பிக்கை உள்ள ஒரு நபரின் குடும்பத்தில் பிறப்பது வேதனைக்குரியது.  கோயில் மணி ஒலிக்கிறது; மாதா கோயில் மணி முழங்குகிறது; மசூதியிலிருந்து சமயவாதிகளின் அழைப்பு வருகிறது; குழந்தையின் நெற்றியில் குறியிட யூதக்கோவில் அல்லது சீக்கியக் கோவில் அல்லது புத்த மடம்.  அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்து மேரி என்றோ தாமஸ் என்றோ பெயரிட்டுவிட்டால் கிறிஸ்தவ மதத்தின் தாங்க முடியாத சுமையை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கழுத்தில் சுமக்க வேண்டி வருகிறது.  இன்னொரு குடும்பத்தில் அந்தக் குழந்தை ராமனாகவோ, சீதையாகவோ இருக்கலாம்.  இந்தப் பெயர்களிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.  இந்து மரபோடு அவர்கள் கட்டுண்டு போவார்கள்.  முஸ்லீம் குழந்தைகள் தூக்கிக் திரியும் பெரும் சுமைகளாக முகம்மது அல்லது ஆமினா என்ற பெயர்கள் இருக்கலாம்.  புனித ஜான் சொல்கிறார், “தொடக்கத்தில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தையே கடவுள்.”  ஆனால், மத அடிப்படைவாதத்தில் ஏவல் ஆணைகளாக அந்த வார்த்தை மாறுகிறது.  பிறந்த குழந்தை அதை சிலுவையாகச் சுமக்க வேண்டிவருகிறது.  இவ்வாறாக பிறந்த கணத்தில் தொடங்கும் அடிமைத்தனம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.

தவளை முட்டைகள் குஞ்சு பொரிக்கும்போது தலைப்பிரட்டைகள் வெளிவருகின்றன; அவை மேல்நோக்கியும் கீழ்நோக்கியும், பக்கவாட்டிலுமாக சுதந்திரமாக நீந்துகின்றன.  தலைப்பிரட்டைகளிடம் காணப்படுவதைப்போல சமூக இணக்கம் அத்தனை பிணைப்புடன் வேறு எந்தப் பிறவிகளிடமும் இல்லை.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவை ஏதோ ஒரே உடல்போல் வாரக்கணக்கில் ஒன்றாகவே சுற்றித்திரியும்.  தலைப்பிரட்டைகளைப் பற்றிச் சொல்வது மனித குடும்பங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கும் பொருந்தும்.  நேசம், வெறுப்பு என்ற மனப்பான்மைகளின் பிரத்தியேக பசையால் உங்களுடைய குடும்பத்தின் அல்லது இனக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் உங்கள் மீது ஒட்டப்பட்டுள்ளார்கள்.  குடும்ப வட்டாரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய சகோதர சகோதரிகளிடம் அக்கறை காட்டுகிறீர்களோ அந்த் அளவுக்கு நீங்கள் வெறுக்கப்படுவீர்கள்.  எந்த அளவுக்கு விலக விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு அன்பின் பெயரால் உங்கள்மீது அவர்கள் தொற்றிக்கொள்கிறார்கள்.  வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது.  அப்போதுதான் விடுதலை தேவைப்படுகிறது.

யார் உங்களை இப்போது விடுவிப்பார்கள்?  மதவாதிகள் உங்களைச் சுற்றி உட்கார்ந்து விடுதலைக்காக பிரார்த்திப்பார்கள்; விடுதலை பற்றிய அவர்களுடைய விளக்கமோ கோரமாக இருக்கிறது.  பயமுறுத்தி மக்களை அடிமைத்தனத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும், ஆன்ம பலவீனத்துக்கும் ஆட்படுத்துவது மதத்தின் கடவுளே.  நீட்ஷே இதைச் சொன்னபோது அவரை பைத்தியக்காரன் என்று அழைத்தார்கள்.  எல்லா பொறாமையை விடவும் அதிக பொறாமை நிரம்பியவரும், கோபக் கடவுளுமான ஜெஹோவாவிடமிருந்து மக்களை விடுவிக்க ஏசு முயன்ற போது, யூதத் தலைமை குருக்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.  சிலுவையில் அறையப்பட்டது ஏசு மட்டுமல்ல, விடுதலை பற்றிய மலைப் பிரசங்கமும்தான்.  புதிய குருமார்கள் ஏசுவைக்கொண்டு ஒரு புதிய பிசாசைப் படைத்தார்கள்; அது ஒரு பயமுறுத்தும் பிசாசு.  உங்களுடைய பாவத்தின் நாற்றமடிக்கும் சவத்தை அது உங்கள் முன்னால் எப்போதும் பிடித்துக்கொண்டு, நீங்கள் தெய்வீகம் அற்றவரென்றும், நீங்கள் தூய்மையற்றவரென்றும், அதெ ஜெஹோவாவின் முன்னால் விசாரணைக்கு நிற்கும் ஒரு பாவி என்றும் உங்களுடைய காதில் கிசுகிசுக்கும்.  ஏசுவை அவர்கள் இன்னொரு ஜெஹோவாவாக மாற்றிவிட்டார்கள்.

அண்மையில் ஓர் இளம் பாதிரி என்னிடம் வந்தார்; சுதந்திரமும், வெளிப்படை உணர்வும், அன்பும் உடையவராயிருந்தார்.  புனித திருச்சபையின் பதின்மூன்று ஆண்டுகால மூளைச் சலவையையும் மீறி அவரால் இன்னும் உண்மையைப் பேச முடிந்தது.  “பாவமன்னிப்பு கோருபவர்களை கேட்பவராக எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?” என்று அவரைக் கேட்டேன்.  “இருந்திருக்கிறேன்” என்றார் அவர்.  “எதற்கெல்லாம் மக்கள் உங்களிடம் பாவமன்னிப்பு கேட்பார்கள்?”  “கொடிய பாவங்களுக்காக”  “உதாரணமாக…?”  “இன்னொருவனின் உயிரைப் பறிக்க சதி செய்தல், பிறன்மனை நயத்தல், தடை விதிக்கப்பட்ட உறவினரிடையே புணர்ச்சி, அநேகமாக அன்றாடம் இழைக்கும் நம்பிக்கை துரோகம் போன்றவற்றிற்காக..”  “அவர்கள் பாவங்களை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”  “அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறேன்.”  “எப்படி?”  “அவர்களுக்காக இப்படி பிரார்த்திப்பேன்.  புனிதத் திருச்சபை எனக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தால் பாவம் நிரம்பிய உங்களுடைய தீய நோக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கிறேன்.”  “உங்களுக்குக் கொடுப்பதற்காக அந்த அதிகாரத்தை திருச்சபை எங்கிருந்து பெறுகிறது?”  “ஏசு அந்த அதிகாரத்தை திருச்சபைக்குக் கொடுத்தார்.”  “ஏசு கிறிஸ்துவின் காலத்தில் திருச்சபை இருந்ததா?”  “இல்லை.  ஆனால், அதன்பிறகு அது நிறுவப்பட்டது.”  “எனவே நீங்கள் விடுவித்த பிறகு பாவி என்பவன் பாவி இல்லை, அப்படித்தானே?”  “ஆமாம்.  அவன் திரும்பிப் போய் அதே பாவத்தை செய்துவிட்டு வந்து பாவமன்னிப்பு கேட்பான்.  நான் அவனை மீண்டும் பாவத்திலிருந்து விடுவிக்கிறேன்.”  “இதற்காக அவன் உங்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டி உள்ளதா?”  அவர் கொஞ்சம் தயங்கினார்.  பிறகு சொன்னார், “எனக்கில்லை, திருச்சபைக்கு.”  “ஆக நீங்கள் கடவுளை வணிகப்பொருளாக்கி, மூலதனத்திற்கு மாற்றாக பாவத்தை முதலீடு செய்து திருச்சபையின் செயல்பாடுகளை நடத்துகிறீர்கள்.”  அவரால் பேச முடியவில்லை.  அவருடைய திருச்சபைக்கு எதிராக பாவம் செய்ய அவர் பயந்தார்.

இந்த வகையான மோசடி ஒரு மதத்துக்கு மட்டும் உரித்தானதல்ல.  நமக்கு மிக அண்மையிலுள்ள ஓர் இந்துக் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் வாழ்க்கையின் கொடிய சிக்கல்களிலிருந்து விடுதலை பெற இந்தக் கடவுளுக்கோ அல்லது அந்தக் கடவுளுக்கோ லஞ்சம் கொடுப்பதற்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் மற்றும் பூஜைகளின் நீண்ட பட்டியலைக் காணலாம்.  இங்கு தவறு செய்வது கிறிஸ்தவ மதமோ அல்லது இந்து மதமோ அல்ல.  ஒருவரிடமிருந்து முழுக்கவும் நீக்கப்பட முடியாத பயம்தான் காரணம்.  எங்குதான் விடுதலை இருக்கிறது?  மீட்சியை உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்டால்தான் அது கிடைக்கும்.  ‘மோட்சம்’ என்ற பிரத்யேகப் பெயரை இந்துக்கள் அதற்கு வைத்திருக்கிறார்கள்.  மோட்சம் என்பது என்ன?  ஒரு நபரின் உடல் உறுப்பு ஒன்றிலோ அல்லது புலன் ஒன்றிலோ செயலின்மை அல்லது செயல்குறைபாடு ஏற்பட்டு ஒரு வகை அசெளகரிய உணர்வு உண்டானால் அந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமென்ற ஒரு அவசரத் தேவையை அந்த நபர் உணர்கிறார்.  உடலின் இயக்கத்தை முறைப்படுத்துவது மூலமோ, உணவு முறையை மாற்றுவதன் மூலமோ அல்லது சுத்தமான காற்று, நல்ல நீர், சூரிய ஒளி ஆகியவை உள்ள இடத்துக்குப் போய் தங்குவதன் மூலமோ நோய் தணியலாம்.  உடல் ரீதியான அசெளகரியத்திலிருந்து அது மீட்சியைத் தரலாம்.  அதுதான் மோட்சம்.  அசெளகரியத்திலிருந்து செளகரியத்திற்கு ஒருவரை இட்டுச் செல்வது.  பிற உயிரினங்களுக்கு உள்ளதுபோலவே மனிதர்களின் உடல்களும் துல்லியமான வேதியியல் விதிகளால் நெறிப்படுத்தப்படுகின்றன.  இரண்டு தவறான வேதிப் பொருட்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் வினையாற்றிக் கொண்டால் உணர்ச்சிரீதியான அமைதியின்மை உண்டாகலாம்.  ‘உணர்ச்சி’  என்பது, பாதி உடம்பில் இருக்கிறது; பாதி ஒரு எண்ணமாகவோ  அல்லது கருத்தாகவோ தன்னுணர்வு சார்ந்து வெளிப்பாடு கொள்ளும்.  மனம் மற்றும் உடற்கூறு சார்ந்த ஒரு நோயாக அது ஆகும்போது இரண்டு தோற்றுவாய்களை அது கொண்டிருக்கக் கூடும் – உடல் வலி ஒன்று ஒரு கருத்தாக மாறுதல் பெறுவது அல்லது ஒரு தவறான கருத்து உடல்நோய், உடம்பில் நிலை கொண்டுவிடுவது. இவ்வாறாக மனம் மற்றும் உடல் சார்ந்த நோயாக மனம் அல்லது உடல் ரீதியான செயல்பாட்டுக் குறைகளினால் உண்டாகின்றன.  மன அமைப்பிலும் உடல் இயங்கு முறையிலும் ஒருசேர நுண்ணிய அறிவுடைய ஒருவரோடு செயல்பூர்வமான உரையாடலை ஏற்படுத்திக் கொண்டால் மனோவியல் தொடர்பான தவறான புரிந்து கொள்ளலையும், உடல் ரீதியான பார்வைக் குழப்பத்தையும் நீக்கிவிடலாம்.  இப்படியான உரையாடலை மேற்கொண்ட நபர் விடுதலை பெற்று உடல் மற்றும் மனம் ஆகியவை எளிதாகவும், இயல்பாகவும் இயங்கும் நிலையை அடைகிறார்.  ஆனால், இதற்கு மாறாக உடல் மற்றும் மனதின் இயங்கு முறை அதிக விஷம் நிரம்பிய மருந்துகளால் அடிக்கடி  கேட்டிற்கு உள்ளாக்கப்படுகிறது; இவ்வகை மருந்துகள் நேரிடையாக ஹைபோதலமஸுக்கும் (உடலின் வெப்பநிலை, பசி, தாகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி), மூளையின் மேலுறைக்கும் போய் உயிர்வேதியியல் வினைகளை உண்டுபண்ணுகின்றன; இவ்வினைகள் மூளையிலிருந்து நேரடியாக கலக்கமடைந்துள்ள தசைகளுக்குச் சென்று அவற்றை செயலற்றவையாக்கி விடுகின்றன.  பிறகு நோய்க்கான நிவாரணம் இன்னொரு நோயைப் பெறுவதில் முடிகிறது.  மனச் செயல்பாட்டுக்குறைவு அல்லது மூச்சுச் திணறல் ஆகியவையுடன் வரும் தசைச் செயல்பாட்டின்மையிலிருந்து விடுதலை தேடும் பலருக்கு, ரட்சகர்கள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் கல்லறைக்கான வழியைத்தான் காட்டுகிறார்கள்.

மருத்துவர்களுடைய இடத்தை மதப்போலிகளும் சூனியக்கார சாமியார்களும் எடுத்துக் கொள்ளும்போது ஒருவனின் பீதியை அதிகமாக்கி அதைத் தீர்க்கவே முடியாத ஒரு நோயாக மாற்றிவிடுவதில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கடவுள் என்ற ஒரு வார்த்தை மட்டும்தான்.  மன மற்றும் நரம்பு மண்டல நோய்களைக் குறிக்கும் anxiety neurosis, compulsive mania, schizophrenia போன்ற வார்த்தைகளை உண்டாக்குவதன் மூலம் இந்த பூமிமேல் நரகத்தை எளிதில் நிறுவிவிடலாம்.  தானியத்தையும் பதரையும் ஒன்றாக வெயிலில் உலர்த்தினால் பதரை தானியத்திலிருந்து எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம்.  அவ்வகையான வேறுபடுத்தல்களை உண்டாக்க நமது அறிவின் ஒளிக்கு பயிற்சி தரவேண்டியிருக்கிறது.  இல்லையென்றால், சாதாரண பயத்தை முழு வாழ்வுக்குமான பீதியாக மாற்றுபவர்கள் (இது தற்போது சமூக, பொருளாதார ஆய்வுப் பொருள்களிலேயே மிகச் சிக்கலானதாக ஆகியுள்ளது) நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள்.  சாதாரண நோய்களை உயிர் பறிக்கும் நோய்களாக மாற்றும் வழிமுறைகளுக்கு காப்புரிமை பதிவு செய்வது உலகின் புதிய கலாசாரமாக மாறியுள்ளது.

மனித குலத்தின் எல்லாப் பிரிவுகளும் இந்தக் கேடான செயலில் ஈடுபட்டுள்ளன.  மருத்துவம், விஞ்ஞானம், ஆரோக்கிய உணவு, இயற்கை மருத்துவம், அரசியல், மதம், எல்லாமும்.  நகரும் நட்சத்திரங்கள் அறிகுறி தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட நடு இரவில் பிறக்கும் கிறிஸ்துவோ அல்லது கிருஷ்ணனோ நம்மை இந்த பயங்கர உலகளாவிய அழிவிலிருந்து விடுவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நமக்கு அழகல்ல.  மதத்தைப் பற்றிய எல்லா குழந்தைத்தனமான பேச்சுக்களையும் நாம் நிறுத்த வேண்டும்; அதைவிட, நோக்கமற்ற விஞ்ஞானத்தின் வெற்றுச் சொற்களை சொல்பவர்களிடமிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.

விடுதலை நம் ஒவ்வொருவருடைய கையிலும்தான் இருக்கிறது.  குறுகிய, ஆழமான கிணற்றில் பிறந்து மாட்டிக்கொள்ளும் தவளையைப் பொறுத்தமட்டில், முதலில் அதனுடைய வால் உதிர்ந்து போகிறது.  ஒரு படியிலிருந்து மற்றொரு படிக்குத் தாவி, இறுதியில் கிணற்றுக்கு வெளியே பரந்த உலகில் தன்னுடைய விடுதலையை கண்டடைகிறது.

ஒற்றை உடலாக தனித்துவமின்றி வாழ்ந்த கடந்த கால நினைவுகளின் சேமிப்புக் கிடங்குதான் அதனுடைய வால்.  தவறான நினைவுகள், கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களால் நாம் கட்டுண்டிருக்கிறோம்.  தவளையைப் போல நாமும் அந்த வாலை விட்டு விடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவிச் செல்லும் சுதந்திரமான தவளைகளாக ஆகிவிடலாம்.

விடுதலை பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும் என்றால், நம் குடும்பங்கள், நம் மரபுகள், நம் பள்ளிக்கூடங்கள், நம் நாடுகள் என்ற குறுகிய சிறைகளை விட்டு வெளியேற வேண்டும்.  அதுதான் உண்மையான மோட்சம்.  அதை விளம்பரப்படுத்தவோ, காப்புரிமைக்குள்ளாக்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாது.  அடுத்தவனை விடுதலை செய்வது நம்முடைய கையில் இல்லை.  ஒவ்வொரு நபரின் விடுதலையும் எப்போதும் அவன் கையில்தான் உள்ளது.

தமிழில் : ஜெயமோகன்

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து