Category Archives: அனுபவங்கள்

நடராஜ குருவும் நானும் – 15

Standard

சென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார்.  கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர்.  தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர்.  ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின்  பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார்.  ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் திரு இஸ்ரேலை தொடர்பு கொண்டு கையெழுத்துப் பிரதியை திரும்பப் பெறும்படி என்னிடம் கூறினார் ஜான். ஒரு நாள் அவரை சென்று பார்த்தேன்.  மன்னிப்பு கோரியபடி கையெழுத்துப் பிரதியை திரும்ப அளித்தார் இஸ்ரேல்.

நடராஜ குரு அதை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.  நாற்பது வருடங்கள் அவர் செய்த ஆய்வின் பலன் அது.  அது பதிப்பாளரால் நிராகரிக்கப்பட்டது என்பதை குருவிடம் சொல்லத்தயங்கினேன்.  வாரங்கள் ஓடிச்சென்றன. ஒருநாள் திடீரென இஸ்ரேல் என்னை அழைத்தார்.  ‘கீதா’ ரசிகர் ஒருவர் அதை பார்க்க விழைவதாகக் கூறி அக்கையெழுத்துப் பிரதியை கோரினார்.  ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்க அவர் விரும்பவில்லை. அவசரமாக அப்பிரதியை அவரிடம் அளித்தேன். நான்கு நாட்கள் கழித்து ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸின் பதிப்பாளர் குழுவை பால்லார்ட் எஸ்டேடில் சந்திக்கும்படி கூறினார்.  விரிந்த புன்னகையுடன் என்னை வரவேற்ற இஸ்ரேல், “நல்ல செய்தி சுவாமிஜி!  நடராஜ குருவின் பகவத் கீதையை, எங்களது நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், பதிப்பிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார்.  அவர் அளித்த ஒப்பந்தப்படிவங்களை உடனடியாக குருவுக்கு அனுப்பினேன்.  நல்ல வேளையாக, முதலில் அவர்கள் பதிப்பிக்க மறுத்ததை குருவிடம் சொல்லாமலிருந்தோமே என எண்ணிக்கொண்டேன்.  ஒப்பந்தம் குறித்து குரு மகிழ்ந்தார் என்றாலும், புத்தகத்தின் கடைசி பிரதி தட்டச்சு செய்யப்பட்டு ஜான் ஸ்பியர்ஸால் படித்துக்காட்டப்பட்ட உடனேயே புத்தகம் தொடர்பான தன் ‘கர்மா’ முடிந்துவிட்டதாகக் கருதினார்.  ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, எழுத்துப்பிரதி தியசாஃபிகல் பதிப்பகத்தால் அச்சிடப்படுவதற்கென சென்னைக்கு அனுப்பப்பட்டது.  மிகச்சிறந்த பதிப்பாசிரியரான திரு ராமநாதன் மெய்ப்பு நோக்கி, அச்சிடலை மேற்பார்வையிட்டார்.

அக்காலகட்டத்தில், இந்தியப் பதிப்பகங்களில் மிகச்சிறந்த ஒன்றான ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸிற்கு லண்டனிலும் நியூயார்க்கிலும் அலுவலகங்கள் இருந்தன.  புத்தகம் தயாரானதும், சில பிரதிகளை பிரேம் குடீரில் இருந்த எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் திரு இஸ்ரேல்.  புத்தகம் முறையாக சென்னையில் வெளியிடப்படுவதாக இருந்தபோதும், பம்பாயிலுள்ளவர்க்கும் நூலை அறிமுகம் செய்ய எண்ணினேன்.  ஆளுநர் ஶ்ரீ பிரகாசாவை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தோம்.  அவரது தந்தை டாக்டர் பகவன்தாஸ் அன்னி பெஸன்டுடன் இணைந்து பகவத் கீதையை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.  நிகழ்ச்சியில், ஆளுநர் ஶ்ரீ பிரகாசா பிருந்தாவனைச் சேர்ந்த சுவாமி அகண்டானந்தாவிடம் புத்தகத்தை அளித்துவிட்டு, மாணவன் குருவிற்கு புத்தகப்பிரதியை அளிப்பது முறையல்ல என்பதால் சுவாமி அகண்டானந்தா ஒரு புத்தகத்தை தன்னிடம் அளித்து வெளியிட வேண்டும் என்று கோரினார்.  அன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்ததாயிருந்தது.  நிகழ்ச்சிக்கு முன்னரே ஆளுநருக்கு ஒரு பிரதி அளிக்கப்பட்டிருந்ததால், புத்தகம் குறித்த நேர்மையான மதிப்புரை ஒன்றை அவரால் அளிக்கமுடிந்தது.

சென்னையில் புத்தக வெளியீட்டின்போது குருவும் ஜான் ஸ்பியர்ஸும் இருந்தனர்.  அப்போது லயோலா கல்லூரியின் முதல்வராய் இருந்த தந்தை செக்விரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் வரவேற்புரையாற்றினேன்.  அன்று குருவின் உரை நெக்குருகச் செய்தது.  குரு இப்புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தவர் டாக்டர் தியாகராஜனின் மனைவி டாக்டர் ராமகிருஷ்ணம்மா.  அவரும் விழாவிற்கு வந்திருந்தார்.  அவரே அப்புத்தகம் எழுதப்பட காரணமாக இருந்தவர் என்று குரு எல்லோரிடமும் கூறினார்.  முன்னுரையில் குரு இப்படி எழுதியிருந்தார்: ‘அண்மையில் தத்துவப் படிப்பை முடித்து திருவிதாங்கூர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் உரைகள் ஆற்றிவிட்டு குருகுலத்தில் சேர்ந்திருக்கும் என் நண்பர் நித்ய சைதன்ய யதியும் இவ்வுரையில் சாதாரண வாசகனுக்கு புரியாமல் போகக்கூடிய பகுதிகளை சுட்டிக்காட்டி அவற்றில் சிலவற்றையேனும் நீக்குவதற்கு எனக்கு உதவியிருக்கிறார்.’

அவர் என்னை நண்பன் என குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது.  ஆனால் அவரது பெரும் நூலின் முகப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது உள்ளூர பெருமிதம் அளித்தது.  அவருக்கு என் எண்ண ஓட்டம் தெரிந்துவிட்டது போலும்.  1967-இல் அவரது ஆகச்சிறந்த நூலான An Integrated Science of the Absolute-இன் முன்னுரையில், ‘இதில் எழுதப்பட்டுள்ளவை என் மாணவனான நித்ய சைதன்ய யதிக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்’ என்று எழுதியிருந்தார்.  இதனால் நான் குருவுக்கு பெரிதும் நன்றியுடையவனாய் ஆனேன்.  இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே என் நம்பிக்கைத் துணையாக இருந்துவருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.  அதனுடனான என் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

நடராஜ குருவும் நானும் – 14

Standard

மத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார்.  தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகைய அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார்.  பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர்.  குரு வருவதைப்பற்றி அவர்களிடம் சொன்னதால் அவர்கள் ஒரு வரவேற்பு விழாவை ஒருங்குசெய்தனர்.  அதில் பேசிய குரு நாராயண குருவின் பெயரை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே பார்ப்பதோடு ஒரு பழங்குடித்தலைவராகக் கருதுவதாகவும் கடிந்துகொண்டார்.

நடராஜ குரு என்னுடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு ஒப்புக்கொண்டது பிற சன்னியாசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. ஆங்கிலம் அறியாத அவர்களுடன் ஹிந்தியில் பேசி சமாளித்தார் குரு.  பொருத்தமான ஹிந்தி சொல் தெரியாத இடங்களில் சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தினார். அவர்களின் புலமையையும் மரபான முறையில் வேதாந்தத்தைக் கற்பித்தலையும் கண்டு மகிழ்ந்த குரு அவர்களிடமிருந்து அனைத்து செவ்வியல் ஆக்கங்களையும் கற்க என்னை ஊக்குவித்தார்.

நான் தங்கியிருந்த ‘பிரேம் குடீர்’ ஆசிரமத்தில் முதலில் என்னை வரவேற்ற நண்பர், நான் நினைத்ததுபோல ஒர் மேலாளர் அல்ல; ‘தேவிதயாள் கேபிள்ஸ்’ எனும் நிறுவனத்தின் தலைவரான பெரும் செல்வந்தர். அவர் குருவால் பெரிதும் கவரப்பட்டார்.  குருவுக்கான பணிவிடைகள் அனைத்தையும் அவரே செய்தார்.  குருவுக்கு ஆங்கிலமும் ஃபிரெஞ்சும் தெரியும் என்பதால் பல இடங்களில் அவரது சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார்.  அது எனக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.  ஒவ்வொருநாளும் புதிய பொருள் குறித்து தனித்துவம் வாய்ந்த உரைகளை ஆற்றினார் குரு.  தத்துவமும் உளவியலும், நவீன அறிவியலும் தொல் ஞானமும் கச்சிதமாகக் கலந்து வழங்கப்பட்ட உரைகளைக் கேட்டவர்கள் குருவுடன் அதிக நேரம் செலவிட விரும்பினார்கள்.  பஞ்சாபியரும் குஜராத்தியரும் மராட்டியரும் வங்காளத்தவரும் கலந்த ஒரு பெருநகரத்திற்கு குருவை வரவழைத்ததில் என்பங்கு குறித்து மிகவும் மகிழ்ந்தேன்.

நான் உறுப்பினனாய் இருந்த டாடா நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் இருந்து பல நூல்களை எடுத்துவந்து குருவிடம் அளித்து, மிகக்குறுகிய நேரத்தில் ஒரு நூலின் சாரத்தைப் பெறுவது எப்படி என்பதை கற்றேன். பின்னாட்களில் லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கும் நான் பணியாற்றிய பல்கலைக்கழக நூலகங்களுக்கும் சென்றபோது இது எனக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது.  நான் பம்பாயில் தொடர்ந்திருக்க குரு என்னை அனுமதித்தார்.  விழியற்றோருக்கு சேவை செய்வதாக பசப்புவதைவிட்டு நாராயணகுருவின் கொள்கைகளைப் பரப்புவதில் கவனம் செலுத்தக்கோரினார்.  அந்நாட்களில் பம்பாயில் இருந்த பல விழியற்ற மாணவர்களுக்கு படிப்பாளனாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தேன்.  அவர்கள் எல்லோரையும் குரு மகிழ்வுடன் சந்தித்தார்.  ஆக, விழியற்றோருடனான என் உறவு அவ்வளவு மோசமாக இருக்கவில்லை.

நான் பம்பாயில் இருந்தபோது, குறுகிய காலம் திரு மங்கள்தாஸ் பக்வாஸா பம்பாயின் ஆளுநராக இருந்தார்.  அவர் ஓய்வுபெற்றபோது திரு ஶ்ரீபிரகாசா ஆளுநர் பொறுப்பேற்றார்.  அவர்கள் இருவருமே என்னிடம் பெரிதும் நட்பு பாராட்டினர்.  அப்போது நடராஜ குருவின் ‘Education Manifesto’ எனும் நூல் வெளியாகி இருந்தது. ஆளுநர் தலைமைதாங்கிய ஒரு கூட்டத்தில் நான் குருவின் கல்விக் கொள்கைகளைப் பற்றி பேசினேன். ஆளுநரை அது பெரிதும் கவர்ந்தது.  கூட்டம் முடிந்தபின் ராஜ்பவனில் தன்னுடன் விருந்துண்ண அழைத்தார் ஆளுநர்.  அப்போதும் குருவின் கொள்கைகள் பற்றி பேசினோம்.  பம்பாயில் ஒரு பள்ளியைத் தொடங்கி அதில் குருவின்  கொள்கைகளை சோதனை செய்துபார்க்க வேண்டும் என்றார்.  நான் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

பள்ளியை நடத்துவதற்காக திரு ஹரிகிஷன்தாஸ் அகர்வால் ஐந்து அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை எனக்களித்தார்.  பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளும் ஒன்றாகப் பயிலவேண்டும் என்பதே எங்கள் திட்டம்.  பம்பாயின் செல்வந்தர்கள் கட்டணம் குறைந்த பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை.  எனவே, மற்றெந்தப் பள்ளியைவிடவும் அதிகமான அளவில் கட்டணம் நிர்ணயித்தோம்.  ஆனால் ஏழை மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு நாங்கள் வடிவமைத்த சீருடையும் இலவசமாக வழங்கப்படும்.  செல்வந்தர் வீட்டு அன்னையர் ஏழை மாணவர்களுக்கான சீருடையை வழங்க ஒப்புக்கொண்டனர்.  பள்ளியைப் பற்றி விளம்பரம் அளித்தபோது ஒரு செல்வந்தரின்  – இங்கிலாந்தில் பயின்ற, பிரித்தானிய மனப்பாங்கு கொண்ட – மனைவி பள்ளியில் கற்பிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.  நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்பிய குருவின் கொள்கைகளை அவருக்கு விளங்கவைப்பது பெரிதும் சிரமமாக இருந்தது.  எனது சிக்கல்களை குருவுக்கு எழுதியபோது, கொள்கைகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்றார் குரு.  ஆசிரியை எதிர்ப்புடன் வெளியேறிய இக்கட்டுடன் பள்ளி செயல்படத் துவங்கியது.  பின்னர் ஒரு மராட்டியப் பெண்மணியையும் இளைய சிந்திப் பெண் ஒருவரையும் ஆசிரியைகளாக நியமித்தோம்.  அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர்.  மரீன் டிரைவ் பகுதியில் நல்ல பள்ளி என்ற பெயர் கிடைத்தது.

நடராஜ குருவும் நானும் – 13

Standard

சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன்.  பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது.  அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன்.  அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது.  அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார்.  அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார்.  அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் ரூமி என்னை பெரிதும் கவர்ந்தார்.  ரூமியைப் போலவே நானும் என் ஏழ்மையை பெருமையாகக் கருதினேன்;  மறைவாழ்வே என் புகலிடம் என்றெண்ணினேன்.

ஜியா-உல்-ஹக் என்ற புனைபெயரில் பல குழந்தைகளுக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்.  அவர்களெல்லாம் வளர்ந்த பின்னர், ‘யுவலோகம்’ என்ற அமைப்புக்கு என்னை தலைமைதாங்க கேட்டுக்கொண்டனர்.  மதிகெட்டுப்போன தருணத்தில் பெங்களூரில் இருந்து ஒரு இதழை பதிப்பிக்க ஒப்புக்கொண்டேன்.  இந்த ‘கர்மா’வில் நான் ஆழ்ந்துபோவதற்கு முன்பாக குரு மீண்டும் தோன்றி, சமூக-பொருளாதார வலையெதிலும் நான் சிக்கிக்கொள்வதிலிருந்து என்னை மீட்டார்.

விடுதலை என்னும் விழுமியத்தின் உயர்வை குரு சொல்லச்சொல்ல, மீண்டும் அனைத்தையும் உதறிச் செல்லும் எண்ணம் என்னுள் முகிழ்த்தது.  ஆனால் இம்முறை எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.  எனவே, பிரெய்லி முறையை கற்பதற்கு எனக்குதவும்படி கோரி பம்பாயிலிருந்த என் நண்பருக்கு எழுதினேன்.  என் நண்பர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பதைக் கேட்டபோது, இத்தகைய தந்திரங்களை தான் அறிந்தே இருப்பதாகக் கூறினார் குரு.  ஒருவிதத்தில் இது தவறான தேர்வு என்பது அவரது எண்ணமாக இருந்தபோதும் எனக்குத் தடையாக இருக்கவில்லை.  பெங்களூரிலிருந்து பாம்பே விக்டோரியா டெர்மினஸுக்குச் செல்வதற்கான கட்டணத்தை மட்டும் எனக்குத் தந்தார்.  வழியில் உண்பதற்கென மேலும் பத்து ரூபாய் கொடுத்தார்.  கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு ரூபாய் தந்தார்.  அவர் பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றபோது மேலும் 25 காசுகள் தந்தார்.

அமைதி திகழும் சோமனஹள்ளியைத் துறந்து, பாம்பே எனும் பித்து நகரத்தின் அருவருக்கத்தக்க சேரிப்பகுதியான தாதரில் வாழச்சென்றது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது.  நடராஜ குருவின் பழைய மாணவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று தன் இல்லத்தில் தங்க வைத்தார்.  ஒரே ஒரு அறை கொண்டது அவர் வீடு.  அவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த ஒரே அறையில் வசித்தார்.  அறையின் ஒரு மூலையே சமையலறையாகவும் குளியலறையாகவும் இருந்தது.  அங்கிருந்த ஒரே படுக்கை என்பது ஒரு மர பெஞ்சு மட்டுமே.  பெருந்தன்மையுடன் அது எனக்கு வழங்கப்பட்டது.  அவர் மனைவி அந்த பெஞ்சின் அடியில் உறங்குவார்.  மிச்சமிருந்த இடம் அக்குழந்தைகளுக்கு மட்டும் போதுமானதாயிருந்தது.  நண்பர் வாசலில் படுத்துக்கொள்வார்.  அவர் தலை உள்ளேயும் கால் வெளியிலும் இருக்கும்.  ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம் இருந்தது.  எங்களுடையது ஒற்றைக் குடும்பம்.  பிற அறைகளில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன.  நைல் நதிக்கரையில் நிலக்குடைவில் வாழ்ந்த தன் ஞானகுருவை விட்டுச்சென்று ரோமாபுரியின் கிளர்ச்சிமிகு வாழ்வை ருசிக்கச் சென்ற ஃபிலோமினின் இக்கட்டை அப்போது நானும் உணர்ந்தேன்.  பாம்பே மக்களின் பேச்சு உளறலாகவே எனக்குக் கேட்டது.  நாள் முழுவதும் குருவின் ஒவ்வொரு சொல்லும் என் நினைவிலெழுந்துகொண்டே இருந்தது.  மீண்டும் மேய்ப்பனைப் பிரிந்த ஆடுபோலானேன் நான்.

எனது நண்பர் நடராஜ குருவின் முன்னாள் மாணவர் மட்டுமல்ல; குருவின் உயர் விழுமியங்களுடன் வாழ விரும்பியவர். ஆனால், ஒரு யோகியின் குணம் சிறிதும் கொண்டவரல்ல.  மனிதகுலம் பெரிதாகப் போற்றும் எந்த விழுமியத்தாலும் எளிதில் கவரப்படும் இளகிய நெஞ்சம் கொண்டவர்.  அவரது குணத்துடன் ஒத்துப்போகாத எந்த ஒரு சொல்லும் நடத்தையும் அவரை முரடனாக்கிவிடும்.  அன்பு என்பது அவருக்கு ஒரு பெரும் சவால்; அந்த சவாலை சந்திக்க எந்தத் தியாகத்தையும் செய்ய அவர் சித்தமாயிருந்தார்.  பெரும்சீற்றத்துடன் தன் எதிரியைத் தாக்கவும் அவரால் முடியும்.  நல்ல வாசிப்பு கொண்ட அவர் இந்திய-உலக அரசியல் இயக்கங்கள் பற்றி அறிந்திருந்தார்.  நான் கையில் காசில்லாமல் இருந்ததை அவர் அறிந்திருந்தார்.  பணம் பற்றியும் எனது தேவைகள் பற்றியும் ஒருபோதும் நான் யாருடனும் பேசியதில்லை.  நான் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதையும் சலவைசெய்த உடைகளை எனக்களிப்பதிலும் கவனம் எடுத்துக்கொண்டார்.  அந்த ஒற்றையறை வீட்டில் ஒருவர் குளிக்கும்போது மற்றவர்கள் வெளியே செல்லவேண்டும். கடைக்குச் செல்வது போன்ற சில வேலைகளை இந்த நேரத்தில் செய்துகொள்வது வழக்கம்.  ஒவ்வொரு நாளும் காலையில் சலவைவேட்டியை நான் உடுத்துவதற்குத் தரும்போது அதன் ஒரு முனையில் ஐந்து ரூபாய் முடியப்பட்டிருக்கும்.  எனக்குத்தேவைப்பட்டால் முடிச்சை அவிழ்த்து எடுத்துக்கொள்ளலாம்.  அவர் அப்போதுதான் வியாபாரம் தொடங்கியிருந்ததும் அவருக்கே பணமுடை இருந்ததும் எனக்குத் தெரியும்.  தெள்ளிச்சேரியைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு மந்திரவாதி!  மொத்த குடும்பத்திற்கும் தேவையானதை ஈட்டியவர் அவரே.  விடிகாலையில் கணித வகுப்புகள் எடுப்பார்.  நான் குளித்து சிற்றுண்டி அருந்திய பிறகு அதே அறையில் சில குழந்தைகளுக்கு மராத்தி சொல்லிக் கொடுப்பார்.  மாலைகளில் ஆங்கிலமும் இந்தியும் கற்றுத்தருவார்.  எல்லாவேளையும் குற்றவுணர்வுடனேயே அங்கே உணவருந்தினேன்.

 ஒரு நாள் காலையில் கால்போனபோக்கில் நடந்து, பாம்பே நகரின் செல்வந்தர்கள் வாழும் மெரீன் ட்ரைவை சென்றடைந்தேன்.  சில துறவியர் ஒரு மாளிகைக்குள் செல்வதைக்கண்டு, என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே என நானும் சென்றேன்.  ஆன்மீக சொற்பொழிவுக்காக மக்கள் அங்கே குழுமியிருந்தனர்.  நான்கு துறவிகள் மேடையில் படாடோபமாக அமர்ந்திருந்தனர்.  ஆண்களும் பெண்களும் தரையில் நன்றாக விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அமர்ந்திருந்தனர்.  நான் அவர்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன்.  பாம்பேயில் துறவிகள் சம்சாரிகளுடன் சேர்ந்து வாழ்வதோ அவர்களுடன் அமர்வதோ வழக்கமில்லை என்பதால், என்னருகே அமர்ந்திருந்தவர் துணுக்குற்று என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக மேடையருகே கொண்டு சென்றார்.  அமைதி தவழும் முகம்கொண்ட புனிதர்களுடன் அமர்த்தப்பட்டேன்.   யாரும் யாரையும்விட புனிதராக இருக்கமுடியாது என்பதை நான் நடராஜ குருவிடம் கற்றிருந்தேன். ஆனால் அது ஒரு பாரம்பரியமான ஆசிரமம்.  தலைமைத் துறவி தனது ‘ப்ரஹ்மாஸ்மிமாலா’ என்ற நூலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

உரை முடிந்தபின் அரங்கைவிட்டு வெளியே வந்துபார்த்தபோது என் நண்பர் புதிதாய் வாங்கிக் கொடுத்திருந்த காலணிகளை காணவில்லை.  நான் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, மரியாதைக்குரிய தோற்றம் கொண்ட ஒரு மனிதர் என்னவென்று விசாரித்தார்.  என் காலணிகளை காணவில்லை என்று நான் சொன்னதும், தன் சப்பாத்துகளை கழற்றி என்னை அணிந்துகொள்ளும்படி சொன்னார்.  வட இந்தியாவில் ஒரு துறவி ஆங்கிலத்தில் பேசுவதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  எனவே, நான் ‘Sir, I should not step into your shoes’ என்று சொன்னபோது அவருக்கு வியப்பாயிருந்தது.

கனிவுடன் என்னை ஆசிரமத்தின் அறை ஒன்றிற்கு அழைத்துச்சென்றார்.  வசதியான இருக்கையில் என்னை உட்கார வைத்து நான் மெட்ரிகுலேஷன் தேறியிருக்கிறேனா என்று கேட்டார்.  நான் ஆமென்று சொன்னதும் நான் பட்டதாரியா என்று கேட்டார்.  அதற்கும் நான் ஆம் என்று சொன்னபோது அவரது ஆவல் பெருகியது.  நான் முதுகலைப் பட்டம் பெற்றவனா என்றார்.  அதற்கும் ஆம் என்றேன்.  நான் எதற்காக பாம்பே வந்தேன் என்று கேட்டார்.  பார்வையற்றோருக்கு உதவுவதற்காக நான் பிரெய்லி முறையை கற்க விழைவதையும், முடிந்தால் சமூக உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் விருப்பத்தையும் கூறினேன்.  இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் அந்த ஆசிரமத்தின் மேலாளராக இருக்கவேண்டும் என்று தோன்றியது.  நான் அங்கேயே தங்கவேண்டும் என்றும் பார்வையற்றோருக்கான டாடா பள்ளியில் நான் பிரெய்லி கற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.  டாடா சமூகவியல் நிறுவனத்தில் முனைவர்பட்டப் படிப்புக்கும் உதவுவதாகக் கூறினார்.  ஒரு மந்திரவாதியைப் போல சொன்னதையெல்லாம் செய்தும் தந்தார்.

அந்த ஆசிரமத்தில் நான்கு துறவிகள் தங்கியிருந்தனர்.  ஒவ்வொருவருக்கும் வசதியான தனியறையும் ஏவல் செய்ய பிரம்மசாரிகளும் இருந்தனர்.  ஏழ்மையிலிருந்து செல்வச்செழிப்பிற்குச் சென்றது போலிருந்தது.  இவையெல்லாம் பற்றி குருவுக்கு எழுதியபோது அங்குள்ள அறிஞர்களிடம் வேதாந்தம் பயிலும்படி என்னை ஊக்குவித்தார்.  ஆனால், பார்வையற்றோருக்கு சேவை செய்தல் என்ற என் பெரிதுபடுத்தப்பட்ட எண்ணத்தை அவர் பாராட்டவில்லை.  எவரையும் ஏழை என்றோ பாவப்பட்டவர் என்றோ சொல்வதை அவர் விரும்பியதில்லை.  ‘நாமும் எல்லோரையும் போல ஏழைதான்; பாவப்பட்டவர்தான்’ என்பார்.  பார்வையற்றோருக்காக நான் செய்யவிருந்த தியாகத்தை குரு ஊக்குவிக்கவில்லை என்பது இரக்கமற்ற செயலாகத் தோன்றியது.  எழுத்தாளர் வேத் மேத்தா அக்காலகட்டத்தில் டாடா பார்வையற்றோர் பள்ளியின் மாணவராக இருந்திருப்பார் போலும்.  அந்நாட்களில் எத்தனை கொடுமையான முறையில் அப்பள்ளி நடத்தப்பட்டது என்பதைக் கூறும் புத்தகம் ஒன்றை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

பிரெய்லி முறையை கற்ற பின், பாஸ்டனில் ஒரு வருடப் பயிற்சி பெறுவதற்காக பெர்கின்ஸ் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தேன்.  இதை குருவுக்கு தெரிவித்தபோது, ஒரு துறவி தன் வாழ்க்கைக்கான் ஏற்பாடுகளை செய்துகொள்ளும் முறை இதுவல்ல என்றார்.  அமெரிக்காவிற்கோ பிற நாடுகளுக்கோ நான் செல்வேன் என்பது ஊழாக இருந்தால் தானாகவே அந்த வாய்ப்பு தேடி வரும் என்றும், அத்தகைய வாய்ப்புகளுக்காக நான் பாசாங்குகள் ஏதும் செய்யத்தேவையில்லை என்றும் எழுதினார்.  அவரது சொற்கள் அப்போது கடுமையானவையாக தோன்றின.  எந்த சூழ்ச்சியும் பாசாங்கும் இல்லாமலேயே உலகை குறைந்தது ஆறுமுறையாவது சுற்றிவருவேன் என்றோ மேலும் பலமுறை அரைச்சுற்றுகள் வருவேன் என்றோ அப்போது நான் அறிந்திருக்கவில்லை.   குரு வாக்கு பிழைக்காது என்பது இந்தியப் பழமொழி அல்லவா?

கலையில் ஆன்மீகம்

Standard

முதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய நான் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவிற்குப் போனேன்.  ஏன் இண்டியானாவை தேர்ந்தெடுத்தேன்?  அங்குதான் என் ஆத்ம நண்பரான டாக்டர் விஜயபிரசாந்தன் பிள்ளை வசித்து வருகிறார்.  ஏன் ஆத்ம நண்பராகக் கருதுகிறேன் என்றால் முழுவதும் பெளதீகமான  தோற்றங்களுக்கு அப்பால் ஓர் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டதுதான் காரணம்.  உயிருடன் வாழும் சில காலமேனும் சுமந்து நடக்க வேண்டிய முக்கியமான பெளதிகச் சார்புடைய செல்வமே என் முதுகெலும்பு.  அதை பிறர் கையில் எடுத்துப் போய் ஒப்படைக்க மனம் வரவில்லை.  விஜயபிரசாந்தன் எதிர்பார்ப்புகள் எதுவிமின்றி என்மீது அன்பு வைத்திருக்கிறார்.  ஆகவேதான் வார்த்தைகளால் விளக்க முடியாத என் பிரியமானவற்றையெல்லாம் அவர் மதிப்பார் என்று கருதுகிறேன்.  எனவே விஜயபிரசாந்தன் வெறும் நண்பர் மட்டுமல்ல, ஆத்ம நண்பர்.

அறுவை சிகிச்சை ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நடந்தது.  அறுவை சிகிச்சை அறையில் பிரவேசித்த பின் என்ன நிகழ்ந்ததென எனக்குத் தெரியாது.  மயக்கம் தெளிந்ததும் டாக்டர் சொன்னார், “வெளியே கிடந்த விலா எலும்புகளைத் தட்டி உள்ளே சேர்த்துள்ளேன்”.  சுத்தியலால் முதுகெலும்பைத் தட்டிச் சரியாக்குவது பெளதிகம்.  அதில் பின்னிப் பிணைந்து கிடக்கும் நாடி நரம்புகளின் பாதுகாப்பைக் குறித்து சிந்தனை புரிந்து அக்கறை காட்டுவது ஆன்மீகம்.  இப்படித்தான் ஆன்மீகத்தையும் பெளதிகத்தையும் புரிந்து வைத்துள்ளேன்.

சில நாட்கள் கழித்து சிரத்தாவும் நான்ஸியும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.  அவர்கள் ஒரு விசேஷ செய்தியுடன் வந்திருந்தனர்.  சிக்காகோ ஆர்ட் சென்டரில் க்ளாட்மோனே (Claude Monet – 1840-1926) வின் அரியதோர் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.  எல்லாமே ஒரிஜினல் கேன்வாஸ் ஓவியங்கள்.  ஒரே காட்சி காலை, மாலை, இரவு நேர வெளிச்சங்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.  பனிக்காலத்திலும், மழைக்காலத்திலும், வசந்த காலத்திலும் வரைந்த ஓவியங்களும் உள்ளன.  பொருளின் இருப்பைக் காணும்போது ஒரே ஆய்வு விஷயம்தான்.  வெளிச்சம் உண்டாக்கும் பாதிப்பைக் காணுகையில் கலையில் ஆன்மீகம்தான் அவற்றின் முகக்குறிப்பாகத் தெரியும்.   சென்று பார்க்கவேண்டுமென விரும்பினேன்.  எப்படிப் போவது?  முதுகெலும்பும், முதுகுத்தோலும் கீறி தைத்து வைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும் போய் பார்க்க வேண்டும்.

Claude Monet 1899 Nadar crop.jpg

ஒரு தைரியத்தில் போனேன்.  உடல் நலமின்மை பெளதிகம்.  அழகியல் ரசனையை நல்கிய மனதின் உந்துதல் ஆன்மீகம்.  ஓவிய மையத்தை அடைந்ததும் நான்ஸிக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது.  ஒரு சக்கர நாற்காலியை எடுத்து வந்து அதிலென்னை இருத்தி தள்ளிச் செல்வது. அவர் அப்படியே செய்தார்.  நலம் குன்றிய உடலை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிச் செல்வது பெளதிகம்.  ஆனால் ஒவ்வோர் ஓவியத்தையும் எவ்வளவு தூரத்திலிருந்து தலையை எப்படிச் சாய்த்து வைத்து, எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்ற என் நோக்கத்தைக் கணக்கிலெடுத்து நான்ஸி ஒவ்வோர் ஓவியத்தின் அருகிலும் என்னைக் கொண்டு போய் பொறுமையோடு காத்திருந்ததும் உடல் நலம் குன்றிய ஒருவர் ஓவியத்தை ரசிப்பதற்காக சக்கர நாற்காலியில் வருவதைப் பார்த்த ஆள்கூட்டம் ஒதுங்கி நின்று எனக்கு வசதியை ஏற்படுத்தித் தந்ததும் மனதை நெகிழச் செய்த அனுபவங்கள்.

வரையறுத்துச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று’ அச்சூழ்நிலையிலும் இயல்பான ஓர் உற்சாகத்தை அளித்ததை கலையில் ஆன்மீகம் என்பேன்.  அதுவரை தெரிந்ததிலிருந்து தெரிந்திராத ஓர் அந்நிய உணர்வுக்கு, காட்சிக்கு ஏதேனும் ஒரு மார்க்கம் அழைத்துச் செல்வதை நான் அனுபவித்தால் அதுவே எனக்கு ஆன்மீகம்.  ஒவ்வோர் ஓவியமும் நாக்கில்லாமலே பேசும்.  கண்களில்லாமலே ஆத்மாவால் உயிரை முத்தமிடும்.  அதையே நான் கலையில் ஆன்மீகமாக நம்புகிறேன்.

அன்றாட நிகழ்வுகளின் வெறும் சாதாரணத் தன்மையிலான குவிப்பாகக் காணப்படினும் அந்நியமான காட்சியின் ஓர் இனிய தோற்றத்தை, ஒரு தெளிவடையும் புதிர் நிலையை, வண்ணத்தை சற்று கூட்டி, அல்லது சற்று குறைத்து தூரிகையின் ஒரு சிறிய சுழிப்பால் காட்டியிருக்கும் இடத்தை இமைக்காமல் நோக்கி, முன்னேற முடியாமல் நிற்கும்போது நான் அதை கலையில் ஆன்மீகம் என்கிறேன்.

கான்டின்ஸ்கி ஒருமுறை சொன்னார், ‘கலையின் மிக மெல்லிய உயிர்ப்பை ஆழத்தில் காணநேரும்போது அது அமைதியாய் தெரிகிறது.  அவ்வமைதியை பார்வையாளனும் அனுபவிக்க முடியும்.  சற்றும் ஓசையெழுப்பாமல் அந்த ஓவியம் ஒரு சிறு புன்னகையோடு சொல்கிறது, ‘இதோ நான் இங்கிருக்கிறேன்”.  அவ்வோசைக்குள் புதைந்திருக்கும் ஆழத்தில் ஒரு கம்பீரம் உண்டு.

பிரபஞ்சம் நிறக் கலவைகளைக் கொண்டது.  கண்ணின் ஆற்றல்களில் ஒன்று அதற்கு நிறங்களை அவற்றின் எல்லா வேற்றுமைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து சுருதி இனிமையும், ராக இனிமையும் கொண்ட சப்த ஒழுங்கைப் போல ரசிக்க முடியும் என்பதாகும்.  இவ்விஷயத்தை மோனே ஆரம்பத்திலேயே அறிந்திருந்தார்.  எனவே பிரபஞ்சத்தை அதன் இயல்பான அழகால் கண்டு அதன் நிறங்களில் ஒன்றைக்கூட நிராகரிக்காமல் கேன்வாஸில் பதிவு செய்ய மோனே தீர்மானித்தார்.  ஒளி, நிழல் இவற்றிடம் நிறங்கள் தமது இதய ரகசியத்தை மொழிகின்றன.  அந்த ரகசிய உரையாடலில் ஒரு கவித்துவம் உண்டு.  அது ஈடு இணையற்றதென மோனே கருதினார்.  ஓவியக் கலையின் இந்த ஆன்மீகத்தைத்தான் மோனே மிகவும் நேசித்தார்.  நிறங்களை முத்தமிடும் ஒளித்துகள்கள் ஒரு சின்மய இனிமையை திறமையான கண்களுக்கு ரகசியமாக பரிமாறுகின்றன.  மோனேயின் தூரிகையை நம்பிக்கையோடு ஆசிர்வதிக்க அந்த ராக ஒளிர்வு என்றும் காத்துக் கொண்டிருந்தது.  அந்தப் பசுமையான இதயத்தின் பெயர்தான் ‘இம்ப்ரஷனிசம்’.

எங்கும் பேரமைதி பிரபஞ்சத்தைத் தழுவி கனவமைதியைப் புலப்படுத்தும் தருணங்களில் மட்டும் மோனே பிரபஞ்சத்தை நேசிக்கவில்லை.  காற்றும் மழையும் கடல் எழுச்சியும் கலங்கிய புரண்டு வரும் நதி நீரும் காற்றிலசைந்து ஆட்டம் போடும் பெருமரங்களும் அரிய அழகு தரிசனத்திற்கான திறவுகோலை மோனேவிடம் ஒப்படைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.  பிரபஞ்சத்திற்கு அமைதியும், அமைதியின்மையும் வேறுவேறு முகங்களும் வித்தியாசமான ஆத்மாவும் உண்டு.  அமைதியின்மையின் முகத்தையே ‘நோர்மான்டி கரை’ என்னும் ஓவியம் பிரதிபலிக்கிறது.

சாலைகளில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் தடித்த மரங்களின் மெளன அழகில் நமது அந்நியத்தன்மை வெளிப்படுகிறது.  அந்த அந்நியத்தன்மையை மோனேவின் சிறுகுழந்தை உறங்கிக் கிடப்பதைச் சித்தரிக்கும் ஓவியத்தில் காணலாம்.  அந்த பாலகனின் முகத்தில் நிறைந்திருக்கும் களங்கமின்மையும், தனிமையும் நம்மை உறைய வைக்கின்றன.  அறையின் கதவருகில் நின்று மெளனமாய் பார்ப்பதைத் தவிர ஒரு அடி முன்னேறக்கூட அவன் மெளனம் நம்மை அனுமதிப்பதில்லை.

கமீலே பிரசவித்துக் கிடக்கிறாள்.  மோனேவின் கையில் குழந்தைக்கோ, அவளுக்கோ உணவு வாங்கித் தருவதற்கு பைசா கூட இல்லை.  எவ்வளவு வேதனையோடு அந்தச் சூழ்நிலையை பிரடரிக் பஸீலிக்கு மோனே எழுதியுள்ளார்!  மோனேவின் தூரிகை முனையில் தேங்கி நிற்கும் வேதனையின் நிழலை குழந்தையின் இறுகி மூடிய உதடுகளில் காணலாம்.

சூரியன் மோனேவின் சொர்க்கக் கதவைப் பாதுகாத்து வைத்திருந்தது.  ஆனால் ஐரோப்பாவின் சூரியனை மாதக் கணக்கில் பார்க்க முடியாது.  சூரியன் வானத்தில் தென்படும் வேளையில் ஓவியன் தூரிகையையும், வர்ணத்தையும் ஆயத்தப்படுத்துவதற்குள் கார்மேகம் வந்து மறைத்துவிடும்.  அதைத் தொடர்ந்து தூறல் மழை.  குளிர் தொடங்கியவுடன் பனி கொட்டும்.  பிரபஞ்சத்திற்கு இவையனைத்தும் காரண காரியங்களற்ற ஒரு பொழுதுபோக்கு.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு துண்டு சுட்ட ரொட்டி, அரை அவுன்ஸ் வெண்ணெய், ஒரு கப் காப்பி இவற்றை உண்பதற்குப் பொருளீட்ட வேண்டுமெனில் நீரின் நீலத்தில், மரத்தின் பசுமையில், பூவின் அழகில் சூரிய கிரணங்கள் வந்து வருட வேண்டும்.  அரிய வரம் போல் சூரியன் வானில் தெரியும்போது மோனேவின் அம்பறாத் தூணியில் அம்புகள் இல்லை.  வர்ண டியூப்கள் அனைத்தும் காலியாக இருக்கும்.  அவற்றை வாங்க பணம் இருக்காது.  தனது படைப்பை யாரேனும் வாங்கி இருநூறோ, முன்னூறோ ஃப்ராங்குகள் தருவார்களேயானால்… இதையெல்லாம் மோனே நிறைந்த விழிகளோடு ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு எழுதியுள்ளார்.

1879 செப்டம்பர் ஐந்தாம் தேதி மோனே ஓரு ஓவியத்தைத் தீட்டினார்.  மரணத்தில் புதையும் அன்பு மனைவியின் ஓவியம்.  அன்று ஷோர்ஷே டி-பொல்லோய்க்கு மோனே எழுதினார்.  ‘இன்று என் அன்பு மனைவியின் துன்பத்திற்கு முடிவு வந்துவிட்டது.  காலை பத்து மணிக்கு அவளின் உயிர் பிரிந்தது.  நானும் என் ஆதரவில்லாக் குழந்தைகளும் மட்டும்.  எனக்கு வேதனையை சகிக்க முடியவில்லை.  எனக்கொரு சின்ன உதவியை செய்து தரவேண்டும்.  கமீலேவின் கழுத்துப் பதக்கத்தை அடகு வைத்துவிட்டேன்.  அவள் வாழ்க்கையின் மொத்த சம்பாத்தியம் அது மட்டுமே.  மதியத்திற்குப் பிறகு அவளின் உடல் தேவாலயத்தின் முற்றத்தை அடைந்துவிடும்.  அதற்கு முன்பாக அந்தப் பதக்கத்தை அவளது கழுத்தில் அணிவிக்க வேண்டும்.  என்மீது கருணை காட்டுங்கள்.’

உலகம் புகழும் ஓர் ஓவியன்!  எத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கும், இதயத்திற்கும் மகிழ்வைத் தந்தவன்!   இத்தகைய கணங்களையும் அவன் எதிர்கொள்ள நேர்ந்ததோ! ‘ஸாந்தே அந்த்ரஸ்ஸே கடற்காட்சிகள்’ மோனேவின் மனதை ஒருமுறை தழுவி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்.  அந்த ஓவியங்களில் நீண்ட பெருமூச்சுகளுண்டு.  பூக்களே மோனேவின் மிக நெருங்கிய நண்பர்கள்.  வாழ்வின் இறுதி நாட்களில் வறுமை நீங்கியபோது அவர் அபூர்வமான பூந்தோட்டங்களை படைத்து வர்ணங்களின் வழிபாட்டிற்கு திருவிழாக்களை நடத்தினார்.  பூக்கள் அவரது விளையாட்டுப் பொருட்களாய் இருந்ததில்லை.  அவை உற்சாகத்தோடு ஊரெங்கும் நிறைந்திருக்க வேண்டும்.  சட்டிகளில் வளர்க்கக் கூடியவையல்ல பூக்கள்.  அவை பூஞ்சோலைகளில் கனவு விழாக்களாய், சிரிப்புகளாய்  எல்லையற்ற ஐக்கியமாய் திகழ வேண்டும்.  செல்வந்தர்களின் பகட்டைக் காட்ட பூந்தோட்டங்களை வளர்க்கக் கூடாது.  அவை பூமியின் சகஜமான பூரிப்புடன் மலர வேண்டும்.  கலைஞரின் அளவற்ற அழகுணர்வுக்குப் பூக்கள் குதூகலத்தோடு தோரணம் கட்ட வேண்டும்.  விசிறி வீச வேண்டும்.  ஐரீஸும், ட்யூலிப்பும், பியோணியும் பரஸ்பரம் பார்த்தும் சிரித்தும் என்றென்றும் இணைந்தும் வர்ண ஆரவாரத்துடன் பயணிகளுக்கு பாதை காட்ட வேண்டும்.  இதுவே மோனேவின் சித்தாந்தம்.

அலைகளை பொங்கச் செய்து வெண் நுரையின் கொந்தளிப்பில் மூழ்கி எழுவது கடலின் குத்தகையாகி விடக்கூடாது.  தோட்டக்காரன் பூக்களை வளர்க்கிறான். ஓவியனோ பூக்களின் பெரும் புகழுக்கு அழிவற்ற ஒளியை ஏற்றுகிறான்.

கமீலேவின் மறைவுக்குப்பின் மோனே மனம், இதயம், சிந்தனை அனைத்தையும் தனது ஓவிய ஈடுபாட்டிற்காக தியாகம் செய்தாரெனச் சொல்லலாம்.  அதற்குப் பின் கடிதங்களின் போக்கு மாறியது.  அவரது மனித நேயம் என்றும் மனத் துயரை தருவதாகவே இருந்தது.  இருப்பினும் ஓவிய ஈடுபாட்டிற்காக ஒதுக்கி  வைக்கப்பட்டிருந்த நேரத்தை அபகரிக்க குடும்ப உறுப்பினர்களுக்கோ, நண்பர்களுக்கோ முடியவில்லை.

கமீலேவின் இடத்தை ஆலீஸ் பிடித்தாள்.  ஆலீஸ் ஆரோக்கியமும் திறமையும் உடையவளாக விளங்கினாள்.  மோனே அக வெளியிலிருந்து மலைச் சிகரங்களுக்கும் கடலோரங்களுக்கும் தன் படைப்புகளின் அரங்கை மாற்றினார்.  கடலோடு உரையாட தயாராய் வந்த தூரிகைக்கு பாய்ந்தோடும் அலைகளோடும் மேகங்களைக் கடித்து வீழ்த்துவதற்கு எம்பிக் குதிக்கிற கடல் எழுச்சியோடும் கையாள நேர்ந்ததைப் போல இருக்கவில்லை.  மலைத் தொடர்களின் முரட்டுப் பாறைகளிடமும், செங்குத்தாய் கிடக்கும் சரிவுகளிடமும் முதுகை வளைத்து நிற்கும் காய்ந்த மரங்களிடமும் தூரிகையை சமரசப்படுத்த வேண்டியதாயிற்று.  அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு 1883 பிப்ரவரியில் தீட்டிய ‘எட்ரோட்டியில் கடல் கொந்தளிப்பு’.

அக்காட்சி ஏற்கனவே கூர்வே திறமையாகப் புலப்படுத்திய ஒன்றுதான்.  மலைக்கும் கடலுக்கும் நடுவே சிக்குண்ட கலைஞனுக்கு வேறோர் உணர்ச்சியூட்டும் பிரச்சினையும் முன் நின்றது.  அது ஆலீஸை மணப்பதற்கு முன்பு நிகழ்ந்தது.  ஆலீஸை திருமணம் செய்வதற்கு முன்பு கமீலே விட்டுப்போன இடத்திற்கு ஆலீஸ் விருப்பத்துடன் வந்து சேர்ந்திருந்தாள்.  எனினும் அவளது கணவன் எர்னஸ்டேஹோஷெஸே இன்னும் ஆலீஸை அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்திருக்கவில்லை.  ஆகவே பிறன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தார்மீகமான அகக்கொந்தளிப்பு மோனேவின் மனதில் குமுறிக் கொண்டிருந்தது.  ஒருவேளை ‘எட்ரோட்டியில் கடல் எழுச்சி’யை கேன்வாஸில் தருவதற்கு புற எழுச்சியைக் காட்டிலும் அகக் கொந்தளிப்பு உதவியிருக்கக் கூடும்.  அதைப் போலவே மோனேவின் அகக் கொந்தளிப்பைப் பிரதிபலிக்கும் ஓர் ஓவியம் ‘கிவர்ன்னியில் எப்தே நதிப்பிரவாகம்’.  தடையும் அலையும் மட்டுமல்ல அந்த நதியில் பயங்கரமான ஒரு நீர்ச் சுழலும் தெரிகிறது.

மனதை ஒருமுகப்படுத்த மோனே கண்டடைந்த இரு வழிகள், ஆலீஸுக்கு தினமும் கடிதம் எழுதுவதும் கண்களை கடலிலும் பாறைப் பகுதியிலும் பறந்து திரிய விடுவதும்.  துயரத்தின் அடியோட்டத்திலும் அதனை சகித்துக் கொள்ளும்போது வெளிப்படும் வெதும்பலிலும் ஒளிந்திருக்கும் ஒரு சுய ஆத்மதரிசனம் உண்டு.  அது தரும் முனைப்பு கலையின் ஆன்மீகத்தை அற்புதமாக வலுப்படுத்துகிறது.  அதற்குச் சரியான உதாரணம்தான் மோனேவின் ஓவியப் படைப்புகள்.  அந்நாட்களில் அவர் அனுபவிக்க நேர்ந்த வேதனையுடன் அடக்க முடியாத ஒரு காதல் மோகத்தையும் மோனே தன்மனதில் வைத்து பராமரித்து வந்தார்.  அதுதான் ஆலீஸின் மீது அவருக்கிருந்த அனுராகம்.  இவை இரண்டும் உருவாக்கிய எட்ட முடியாத ஓர் ஆழம் மோனே வெளிப்படுத்திய அழகியல் தரிசனத்தில் நிறைந்திருக்கிறது.  அதை இனம் காண பார்வையாளனுக்கு இயலுமெனில் ஓவிய அனுபவத்தின் எதார்த்தமான இனிமையை அந்தக் கலைரசிகன் தெரிந்து கொள்வான்.

தமிழில் : நிர்மால்யா

அன்பும் ஆசிகளும்

Standard

1948-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன்.  டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன்.

திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய ஆரம்ப நாட்களில் அவர் திருவண்ணாமலையில் தங்கிய சில இடங்களைக் காண வேண்டும் என்று ஆவலெழுந்தது. மிகப்பிரபலமான திருவண்ணாமலை ஆலயத்தைக் காண முதலில் சென்றேன்.

கோவிலுக்குள் சென்று உருவவழிபாடு செய்வதில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் முன் நின்றேன். இளம் வயது ரமணர் குளிக்காமலேயே கோயிலுக்குள் நுழைந்தபோது எப்படி இருந்திருப்பார் என்றும் அவர் கோயிலுக்குள் நுழையும் தருணத்தில் எதிர்பாராத விதமாக பெய்த மழையே அவரை எவ்விதமாகக் குளிப்பாட்டியிருக்கும் என்றும் கற்பனை செய்தபடி அசையாமல் அங்கேயே நின்றிருந்தேன்.  நான் அங்கே சென்று சேர்ந்த தருணத்திலும் அப்படிப்பட்ட ஒரு மழையை எதிர்பார்த்திருந்தேன். அது நடக்கவில்லை. மாறாக, வேர்த்து வேர்த்து வழிந்ததில் என் ஆடைகள் முழுக்க முழுக்க ஈரமாகிவிட, மழையில் நனைந்தவனைப் போல நின்றிருந்தேன்.

மலைக்குச் சென்று அவர் தம் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கக் கூடிய எல்லா இடங்களையும் காணவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் எழுந்தது. ஆனாலும் கட்டுக்கடங்காமல் எனக்குள் பொங்கிக் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆசிரமத்துக்குள் நேராகச் சென்றுவிட்டேன். பாய்விரித்த ஒரு மரக்கட்டிலின் மீது சோர்வோடு மண்டியிட்ட நிலையில் உட்கார்ந்திருந்த மகரிஷியைப் பார்த்த வண்ணம் அக்கூட்டத்தில் பல பேர் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமாக அணிந்திருக்கக்கூடிய ஆடைகளை அவர் அணிந்திருக்கவில்லை. அங்குள்ள விவசாயிகளைப் போன்று இடுப்பில் அரைஞாண்கயிறு மட்டுமே இருக்க கோவணம் அணிந்திருந்தார். ஆசிரமத்துக்குள் செல்லும் முன்னாலேயே, பல இளைஞர்களும், முதியவர்களும் கோவணங்களை மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்திருந்ததால் மகரிஷியையும் அந்தக் கோலத்தில் பார்த்தபோது எனக்குள் எந்த வியப்பும் உண்டாகவில்லை.

அவருடைய கைக்கக்கத்தில் சுருட்டிய ஒரு வெள்ளைத்துண்டு இருந்தது. அவருடைய கட்டிலின் முன்னால் மூன்று பக்கங்களிலும் ஆண்களும் பெண்களும் மண்டியிட்ட நிலையில் உட்கார்ந்திருந்தார்கள்.  கட்டிலின் பின்புறம் ஒரு திரைச்சுவர் போல இருந்தது. இரவும் பகலும் பக்தியுடன் கூடும் பொதுமக்கள் எப்போதும் காணத்தக்க நிலையில் உட்கார்ந்திருந்த அந்த மகானைப் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் எப்போதும் நான் கண்டதில்லை.

மகரிஷியின் உட்காரும் இடமாகவும் படுக்கையாகவும் இருந்த அக்கட்டில் மிகப்பெரிதாக இருந்த அக்கூடத்தின் இறுதிப்பகுதியில் இருந்தது. பெரும்பாலான நேரத்தில் அந்தக் கூடம் ஆட்களால் நிறைந்தே இருந்தது. அனைவரும் ஆழ்ந்த அமைதியுடன் உட்கார்ந்திருப்பதால், உள்ளே நுழையும் வரை அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் இருப்பை நம்மால் உணரவே முடியாது.  அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்த பிறகும் கூட கூட்டத்துக்கு நடுவில் இருக்கிற உணர்வே மனத்தில் எழுவதில்லை.  அங்கே கூடியிருக்கிற ஒவ்வொருவரும் உள்முகமாக மனத்தைக் குவித்து ஆழ்ந்த அமைதியில் உட்கார்ந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

சிலர் தம் கண்களை வெறுமனே மூடிய நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். பலர் தூங்கி வழிந்தார்கள். ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் ஒரு புத்தகத்தைப் படித்தவண்ணம் உட்கார்ந்திருந்தார்.  ஒருவேளை அது பைபிளாக இருக்கலாம். கையில் ஜெபமாலையை உருட்டி மணிகளைக் கணக்கிட்டபடி ஒரு முஸ்லீம் பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய உதட்டசைவு மூலம் மிக மெதுவாக எதையோ முணுமுணுப்பதை அறிந்தேன்.  அச்சான ஒரு புத்தகத்திலிருந்து எதையோ பார்த்துப் பார்த்து தம் நோட்டு ஒன்றில் பிரதியெடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதிய பெண்மணி. சிவந்த முகம்கொண்ட ஒரு அமெரிக்கன் உருக்கமாகக் கண்ணீர் விடுவதையும் அடிக்கடி பெருமூச்சு விடுவதையும் மூக்கை உறிஞ்சிக் கொள்வதையும் பார்த்தேன்.

மகரிஷி நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்.  எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவரைப் போலக் காணப்பட்டார் அவர்.  அவர் தலை மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவரைக் கண்டதும் என் முதல் மனப்பதிவில் ஏதோ ஒரு நோயால் அவதிக்குள்ளான ஒரு முதியவராகவே அவர் தெரிந்தார்.

என் மனதுக்குகந்த மகானாக அந்தக் காலத்தில் இருந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரைப் போலவே நானும் இந்தியாவின் ஏழ்மையைப் பற்றியும் அறியாமை பற்றியும் கவலை கொண்டிருந்தேன்.  அவரைப் போலவே நானும் இந்தியாவின் சோர்வை உதறித் துடித்தெழுந்து மக்கள் கூட்டத்துக்கு நன்மை பயக்கும் பல நல்ல செயல்களை ஆற்றக்கூடியவனாக என்னைப் பற்றி கற்பனை செய்திருந்தேன். ஆகவே அந்த இடத்தில் இருந்த அமைதியைப் பற்றியும் வேகமின்மையைப் பற்றியும் வருத்தப்பட்டேன். இந்தியாவின் செயலின்மையின் மொத்தக் குறீயிடாக மகரிஷி என் முன்னால் அமர்ந்திருந்தார்.

ஒரு கணம் அவரைக் காண அங்கே நான் வந்ததைப் பற்றி வருத்தமுற்றேன். செல்வம் மிக்கதாகவும் அழகானதாகவும் இந்தியாவை மாற்றக் கடுமையான உழைப்பைச் செலுத்துமாறு மக்களைத் தூண்டுவதை விட்டுச் செயலற்று உட்கார்ந்திருக்கும் ஒருவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு பெரியபேச்சைப் பேசுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.  சூரியன் மறையப் போகும் நேரத்தில் மகரிஷி எழுந்து வழக்கமான தன் மாலைநடைக்குப் புறப்பட்டார். மலையைச் சுற்றிலும் நடப்பது அவருடைய நீண்ட நாளையப்பழக்கம் என்று ஏற்கனவே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்த வேளையில் மிகச் சிறிய தொலைவே அவர் நடந்தார்.  பிறகு ஒரு பாறையில் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

இடமாற்றம் ஒன்றைத் தவிர அவர் அப்பாறையின் மீதும் அப்படியே இருந்தார்.  கூடத்தில் செய்ததைப் போலவே, தொடர்ந்து வந்த மக்கள் அனைவரும் அங்கும் உட்கார்ந்தார்கள்.  திறந்தவெளியிலேயே ஒரு சிறிய குளியலுக்குப் பிறகு மறுபடியும் தம் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார் அவர்.  தைத்திரிய உபநிடதத்திலிருந்து பிருகுவள்ளிப் பகுதியைச் சில பிராமணர்கள் அவர் முன்னால் உட்கார்ந்து படித்தார்கள். என்னால் உடனடியாக அடையாளம் கண்டுணர முடியாத சில வேத மந்திரங்களையும் அவர்கள் படித்தார்கள்.  மொத்தச் சூழலிலும் ஒரு வாட்டம் படிந்திருந்தது. மகரிஷி ஒரு பெரிய சோம்பேறி என்கிற எண்ணம் மட்டும் என் மனத்தில் தொடர்ந்தபடி இருந்தது.

திருவண்ணாமலையில் காலைநேரம் மிகவும் புத்துணர்வு கொடுக்கக் கூடியதாவும் உயிர்த்தன்மையோடும் இருந்தது.  இரவு மிக வேகமாகக் கவிழ்வது போல இருந்தது. அதைத் தொடர்ந்து தம் தங்கக் கதிர்க்கைகளால் அனைத்தையும் தழுவியவண்ணம் சூரியன் எழுந்து வந்தான்.  கூடவே இனிமையான மந்திர கோஷம் எழுந்தது.

ஆசிரமத்துக்குள் முதல் ஆளாக நுழைந்ததும் மகரிஷியின் முன்சென்று தலைதாழ்ந்து வணங்கினேன். ஆனால் அவர் என்னை கவனிக்கவில்லை. சுயமரியாதையும் வீம்பும் மிக்க இளைஞனாக இருந்த நான் என் அழகான உச்சரிப்பால் கீதையை வாசித்து எல்லாரையும் கவர எண்ணினேன்.  சில நாட்கள் இந்தவிதமாகவே கழிந்தன.  எனக்கு மிகவும் அலுப்பாக இருந்தது.  எனவே, அந்த இடத்தைவிட்டுக் கிளம்பத் தீர்மானித்தேன். ஒரு துறவியைக் காணச்செல்லும் போதும் விடை பெறும்போதும் ஏதேனும் காணிக்கையோடு செல்வது இந்திய மக்களின் பழக்கமாகும். எனவே வெளியே சென்று, சில ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்து மகரிஷியின் முன்னால் வைத்தேன்.  அப்போதும் அவர் என்னை கவனிக்கவில்லை. உள்ளூர எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், அப்பழங்களை அவரது பாதங்களின் அருகில் வைத்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன். என்னை ஏதோ ஒரு நிழல் அல்லது செத்த பிணம் போல அவர் நடத்துவதாக நினைத்துக் கொண்டேன். அதைப்பற்றிய கடுமையான மனவருத்தம் எனக்குள் பொங்கியது.  அவருக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கையைக் கொடுத்தபிறகு உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

காரணத்தோடோ அல்லது காரணமின்றியோ, சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து செல்ல வேண்டும் என்று தோன்றியதால் உட்கார்ந்தேன்.  என்ன அதிசயம். மகரிஷியின் பார்வை என் மீது படிந்தது. என் தலைமீது அப்பார்வை பரவியது.  என் தலை குலுங்குவதைப் போலிருந்தது. அவர் என் கண்களுக்குள் நேராகப் பார்ப்பது போலத் தோன்றியது. இருவிதமான காந்தங்கள் என்னை ஒரே நேரத்தில் வலிமையாகக் கவர்ந்திழுப்பதைப் போல!  என் இதயத்தின் நடுப்பகுதியைத் தாக்குவதை உணர்ந்தேன்.  சட்டென, என்னைச் சூழ்ந்திருந்த பகுதி இருள்வதைப் போலிருந்தது.  மயக்கம் வருவது போலவும் இருந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது.  என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.  மிகவிரிந்த இருள்வெளியில் என் சுயஉணர்வென்னும் சுடர் அசையாமல் எரிவதைப் போலத் தோன்றியது.

நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்தை நோக்கிய ஒரு தாவலும் அலசலும் எனக்குள் நிகழ்ந்தது.  நான் உலுக்கி எழுப்பப்படும் வரையில் என் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் மனக்கண் முன்னால் வேகமாக அசைந்து நகர்ந்தன.  என் தாயின் கருப்பைக்குள் உறங்கும் கருவாகவும் பிறகு சட்டென ஏதோ உச்சியில் இருந்து வீசப்படும் ஒன்றாகவும் மாறிமாறி உணர்ந்தேன்.  என் தாய் ஒரு பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தபோது, சட்டென எதிர்பாராத நேரத்தில் அப்பாலம் இடிந்து விழுந்துவிட, பாலத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த ஓடைக்குள் அவள் சரிந்து விழுந்த சம்பவம் நடந்த தருணத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் என் காதில் ஒலித்தன. அவள் தன் வயிற்றில் கருவாக என்னைச் சுமந்து கொண்டிருந்த காலம் அது.

யாரோ என் முதுகில் தட்டி எழுப்பினார்கள்.  நான் எனது சுயஉணர்வை அடைந்தேன். என் முன்னால் மகரிஷியைக் காணவில்லை. கூடத்தில் இருந்த அனைவரும்கூட வெளியேறிவிட்டிருந்தனர்.  எல்லாரும் உணவுண்ணும் கூடத்துக்குச் சென்றிருந்தார்கள். நானும் மெல்ல நடந்து உணவுண்ணும் கூடத்தை அடைந்தேன்.  நான் உள்ளே நுழைந்த தருணத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் மகரிஷிக்கு வலப்புறம் இருந்த இலைக்கு அருகே இருந்த இடம் காலியாக இருந்தது. என்னை அங்கே சென்று உட்காரச் சொன்னார்கள்.  உணவு பரிமாறப்பட்டபோது மகரிஷி என் இலையைப் பார்த்தார். தமக்கு வழங்கப்பட்ட எல்லா உணவு வகைகளும் என் இலையிலும் பரிமாறப்படுகிறதா என்று கண்காணிப்பது போல இருந்தது அப்பார்வை.

அந்தத் தருணத்திலிருந்து மகரிஷி ஒரு சாதாரண ஆளாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய இருப்பு மிகப்பெரிய பேரிருப்பாகத் தோன்றியது. எங்கெங்கும் நிறைந்திருக்கக் கூடிய இருப்பாக – எதைக் காண வேண்டும் என்று நான் ஆவலுற்றிருந்தேனோ அத்தகு பேரிருப்பாக – அவர் தோன்றினார். அதற்கப்புறம் அவரைப்பற்றி நினைக்க எந்த முயற்சியும் எனக்குத் தேவைப்படவில்லை. மிகப்பெரியமனிதர் ஒருவரைப் பற்றிய நினைவுக் குறிப்போ அல்லது மறக்க முடியாத ஒருவருடன் கழித்த நெருக்கமோ அல்ல. புரிந்து கொள்பவனுக்கும் புரிந்து கொள்ளும் விஷயத்துக்கும் இடையே இருக்கும் இருமை அழிந்து ஒருமையாக மாறும் நிலையே ஆகும்.

இதுதான் முதல்முறையாக ரமணமகரிஷியை நான் சந்தித்த அனுபவம். இதற்குப் பிறகு  அவரைக்காண, அவர் சமாதிநிலையை எய்துவதற்குச் சில நாட்கள் வரை, பலமுறை சென்று வந்தேன்.

தமிழாக்கம்: பாவண்ணன்

பொருந்தாத மகுடம்

Standard

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை.  அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை.  ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார்.  தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார்.  அதற்குப் பிறகு அவர் தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார்.

என்னாலும் அதைப் போலச் செய்யமுடியும் என்று நினைத்தேன்.  ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன்.  ரமண மகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை.  யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை.  அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதை தடுத்ததுமில்லை.  எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன்.  திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன்.  அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.

துறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன்.  என் அப்பா வீட்டில் இல்லாத நேரம்.  எப்போதும் வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார்.  என் அம்மாவிடம் நான் துறவுமேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன்.  அதைக்கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது.  புன்சிரிப்புடன் தன் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர்.  “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயண குருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்”  என்று மேலும் சொன்னார் அவர்.  என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன்.  பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.

அந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு.  அவர் பெயர் ஜெயராம்.  அதற்கு முன்னால் ஒருமுறை சென்றிருந்தபோது மற்றொருவரும் நண்பரானார்.  அவர் பெயர் ஶ்ரீராம்.  அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.  தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா.  அவர் சுவாமி ராமதாஸ் அவர்களின் சீடர்.  அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகச் சுற்றியலைந்தோம்.  ஶ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் என அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

ஜெயராம் சுவாமி ராமதேவானந்தா என்று பெயரை மாற்றிக்கொண்டார்.  ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் பெயரால் அழைத்து துறவு வழங்கவேண்டும் என்றும் சொல்லி வைத்தேன்.  பிரம்மசாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் அவர்.  சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

சுவாமி என்கிற சொல்லுக்கு பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன்.  ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார்.  ஆனால் மக்கள் என்னை சுவாமி என்கிற ஒட்டுச் சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள்.  அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள்.  உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லை பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக்கொண்டேன்.  அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது.  நான் யாரையும் சீடராக வரித்துக் கொள்ளவில்லை.  என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம்போல் என் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது.

பல்கலைக் கழகத்திலிருந்து ஆன்மீக அனுபவத்தை நோக்கி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.  என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான்.  ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாக தன்னைத் தானாக வளர்த்துக்கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜ குரு ஒருமுறை குறிப்பிட்டார்.  உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான்.  எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை.  உலக வாழ்வை எல்லோரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.

“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும்.  நாடக மேடையில் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும்.  ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜ குரு சொன்ன ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக்கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின  என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.

பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கி விட்டன.  வெறும் கல்லூரிப் பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை.  தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டி பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன்.  என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள்.  ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் அடைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழ் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை.

தேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப்போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது.  ஶ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர்.  வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.

இதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காதுகொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது.  ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர்.  மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்கு பாடங்ளை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன்.  வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டியல் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாக கவனிப்பதில்லை என்பதால் போராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர்.  இந்தியப் பல்கலைக்கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாட்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.

இந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார்.  ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார்.  ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது.  என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.

துறவிக்கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது.  என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன்.  ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளை தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தார்.

இரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச் செல்ல நினைத்திருந்தேன்.  அந்த நாட்களில் பல்கலைக்கழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய மேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கிவிடுவேன்.  அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டுகொண்டே இருந்தார்.  என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்டவண்ணம் இருந்தது.  அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.

ஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது.  என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை.  கேள்வித்தாளை ஒருமுறை பார்த்தேன்.  எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன.  ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது.  மூளையில் எதுவும் தோன்றவில்லை.  மேசை மீது தடித்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்து தூங்கிவிட்டேன்.

மாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார்.  எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர்.  அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.  முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.  அவர் என்னைப் புரிந்துகொண்டார்.  அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார்.  ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன்.

தேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இருஜோடி துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நான் வைத்திருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட நினைத்தேன்.  என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும், கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.  நேர்முகத் தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார்.  அவருடன் வேறு வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர்கள் வெளியே வந்து என்னை வாழ்த்தினர்.  நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்றும் யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார் அவர்.  அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டது.  இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலை பட்டப்படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்துகொள்ள முடியும்.

என் எதிர்காலத் திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார்.  எந்த நோக்கத்துக்காக தத்துவத்தைப் பாடமாக எடுத்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன்.  அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே தன் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார்.  கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார்.  “கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார்.  சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லோரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும்.  எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு.  இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே.  பிளேட்டோ, சங்கரர், ஹெகல் என எந்தத் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை.  அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவ ஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.

“ஒரு தத்துவஞானியின் கையில் தர்க்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும்.  ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக் கொள்ளக்கூடாது” என்றும் எச்சரித்தார்.  இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும், எனக்கு முழுக்க முழுக்க தெரிகிற விஷயத்தையே மற்றவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றும் சொன்னார்.

என்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார்.  அவர் காலில் விழுந்து வணங்கினேன்.  ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார்.  அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.

கன்னியாகுமரிக்குச் சென்று மூன்றுநாட்களில் திரும்பி வரும்படி டாக்டர் மீஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார்.  இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன்.  திரும்பிவரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன்.  என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே இருந்தன.  கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடு இருந்தது.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது.  அப்பயணத்தின்போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன.  எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது.  கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிப்புரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் வாழும் ஆசிரமம் ஆகிய இடங்களில் தங்கினேன்.

செங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன்.  அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது.  மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது.  அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்.  பல கோயில்களுக்குச் சென்றேன்.  அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றை சேகரித்தேன்.  அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் குறிப்பேட்டில் தீட்டிக்கொண்டேன்.

முடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது.  வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன்.   சிறிய கோயிலாக இருந்தாலும் சரி பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன்.  வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன்.  மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை.  ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச்சென்று உபசரித்தார்கள்.  இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை.  அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுளரின் சக்தி தொடர்பான நம்பிக்கைகள் அவர்களுக்கும் இருந்தன.

அந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது.  அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புது மனிதனை நான் சந்தித்தேன்.  ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன்.  பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது.  ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உட்செரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள்.  அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுதுண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.

(Love and Blessings : The Autobiography of Guru Niya Chaitanya Yati.  Edited by Peter Oppenheimer)

தமிழில்: பாவண்ணன்

நடராஜ குருவும் நானும் – 12

Standard

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கால் கழுதைகளைப் போலிருந்தது.  “புனித ஃப்ரான்சிஸ் தன் உடலை ‘என் சகோதரக் கழுதை’ என்று சொல்வது வழக்கம்.  அதையே நாம் நம்மைப்பற்றி இப்போது எந்த மிகையும் இல்லாமல் சொல்லிக் கொள்ளலாம்” என்றார் குரு.  சோமனஹள்ளியின் மண், களியும் மணலும் கலந்த கலவை.  ஈரமாயிருக்கும்போது தளர்ந்தும், காய்ந்துவிட்டால் உலோகம் போல் கடினமாகவும் இருக்கும்.  மேஸ்திரி இல்லாமல் ஒரு சுவர் எழுப்புவது எப்படி என்று குரு செய்து காண்பித்தார்.  தினமும் காலையிலும் மாலையிலும் ஓரிரு மணி நேரம் சமையலறை சுவர் கட்டும் வேலையை நாங்கள் செய்தோம்.  சிறிய திறப்புகளில் உடைந்த கண்ணாடியைப் பதித்து எப்படி ஜன்னல்களை அமைக்கலாம் என்பதை செய்து காட்டினார்.  ஒவ்வொரு முறையும் கல்லையும் மண்ணையும் வைக்கும்போது குமரன் ஆசானின் ‘துராவஸ்தை’யில் வரும் இவ்வரிகள் என் நினைவுக்கு வந்தன:

 குன்றின் மேல் நிற்கும் குடைசாய்ந்த குடில்

வெளிறிய நாய்க்குடை போல

அருகே செல்லச் செல்ல

கண்ணை இன்னும் உறுத்துகிறது

வட்டமாக இல்லை

கோண வடிவில் இல்லை

சதுரமாகவும் இல்லை

கட்டடக் கலையின் எந்த அம்சமும் இல்லை

சுற்றிலும் ஓரடி உயரத்தில்

கோரமான மண் சுவர்

யாருக்கும் அதை பூச வேண்டும் என்று தோன்றவில்லை

கட்டியவனின் கைரேகை கூட அதில் பதிந்திருக்கிறது

பாதி சுவரைக் கட்டி முடித்தபோது, குருவுக்கு எங்கோ செல்ல வேண்டும் என்று தோன்றியது.  அதற்குள் மண் சுவர் எழுப்புவதில் நான் தேறியிருந்தேன்.  குரு கிளம்புவதற்கு இரு நாட்களுக்கு முன்பு புஷ்பாங்கதன் என்னும் சிறுவன் வந்து சேர்ந்திருந்தான்.  வேலையை முடிப்பதற்கு எனக்குத் துணை இருந்தது.

குரு என்னுடன் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு மாலைப் பொழுதும் காதலர்களின் மாலையைப் போல் அமைந்தது.   தெருவோரமாக இருந்த ஆல மரத்தினடியில் ஒரு கற்பலகை இருந்தது.  அதன்மீது இரவு ஒன்பது மணிவரை கூட அமர்ந்துகொண்டிருப்போம்.  சீரகமும் வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீர் எப்போதும் இருக்கும்.  எங்கள் சீரகத் தேநீரை சிறிது சிறிதாக இடைவிடாது பருகிக்கொண்டிருப்போம்.  ஒவ்வொரு மாலையும், குரு தான் நாராயண குருவுடன் கழித்த நாட்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார்.  நாராயண குருவின் மகத்தானதும் அதே சமயம் பரிதாபகரமானதுமான பின்புலத்தைப் புரிந்து கொள்ள அது எனக்கு மிகவும் உதவியது.

நாராயண குருவின் எழுத்துக்களில் உள்ள பல மறைபொருட்களை குரு என்னுடன் பகிர்ந்துகொண்டார்.  பிற பெரும் அறிஞர்களுடைய போதனைகளுக்கு ஈடானதும் அவற்றை விஞ்சக் கூடியதுமான அவை, குருவின் பெருமையை உணர்த்தின.  நாராயண குருவுடன் ஒட்டிக்கொண்டிருந்த சாதியினரின் முரட்டுத்தனம், கீழ்மைகள் மற்றும் முட்டாள்தனத்தைப் பறைசாற்றும் பல சம்பவங்களை குரு விவரித்தார்.  இவர்கள் நாராயண குருவின், ‘ஒரே குலம், ஒரே மதம், ஒரே தேவன்’ என்ற மந்திரத்தை அடிக்கடி சொன்னாலும், தங்களது சாதியுணர்வில் மூழ்கியவர்களாகவே இருந்தனர்.  அவர்களது சாதிப் பித்தினால் பிற சாதியினரில் எவரையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை.  மொத்த சாதியுமே ‘அடக்குமுறைப் பித்து’ கொண்டதாய் இருந்தது போலும்.  தங்கள் வாழ்வில் நிகழும் எதையும், ‘சவர்ணத்தவர்’ என்று அவர்கள் இழிவாகக் குறிப்பிடும் மக்களால் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறையாகவே கண்டனர்.  அது தீர்க்கப்படமுடியாத கூட்டு நனவிலி நோய் என்று குரு கருதினார்.  குரு தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை பெருமையுடன் நினைத்தவர்களே, கள்ளிறக்குதலும், பதநீர் காய்ச்சலும் இழிவான தொழில் என்று கருதினர்.  கேரளத்தவர்கள் எப்போதும் ‘கர்மபூமி’யைச் சேர்ந்தவர்கள்.  ஆன்மீகத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  சங்கரரே, இதனால்தான் இந்தியாவின் வடவெல்லைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

எங்களது மாலைகள் மூன்று மணிநேர இரவு வகுப்புகள் போலிருந்தன.  சமூகவியல், இந்திய கலாசார பாரம்பரியம், இந்திய குருமார்களின் சிலுவையேற்றம் – இவற்றிலெல்லாம் நான் புதிய புதிய பாடங்களை கற்றபடி இருந்தேன்.  குருமார்கள் தோற்கடிக்கப்படுவது சிலுவையில் அறையப்படுதல் மூலமல்ல; முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருவராக பீடத்தில் ஏற்றப்படுவதன் மூலம்.  நாராயண குரு மீதான பக்தி வழிபாட்டிற்கு எந்தக் குறையும் இல்லை.  ஆனால், ஒரு உண்மையான ஞானி என்ன சொல்கிறார் என்பதை அறிவுபூர்வமாக கேட்டுக்கொள்ள எவரும் இல்லை.  எஸ்.என்.டி.பி. யோகம் – அது அவரது தந்தையால் துவங்கப்பட்டதாக இருந்தபோதும் – முழுக்க முழுக்க ஒர் சாதீய நிறுவனம் என்பதை குரு எனக்கு விளங்க வைத்தார்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நாராயண குருவைப் பற்றிய என் புரிதல் விரிந்துகொண்டே சென்றது.

விடுதலையின் மெய்யியல்

Standard

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியின் விளைவாகவே எதனுடைய தொடக்கமும் நிகழ்கிறது.  ‘அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?’ என்ற நம்முடைய கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய் சந்தர்ப்பம் எந்த நேரத்திலும் வாய்க்கலாம்.  இந்தக் கேள்வி பலரை குழப்பமடையச் செய்கிறது.  இந்தக் கேள்வியை முகங்கொள்ளும்போது, தீர்க்கப்படவேண்டிய எண்ணற்ற பிரச்சினைகளையும், சந்திக்க வேண்டிய நெருக்கடிகளையும், எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளையும் சிலர் அனுபவிக்கிறார்கள்.  மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்; ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து ஒரு உறுதியற்ற உணர்வால் அவர்களுடைய இயலாமையின் முடிவற்ற படுபாதாளத்தில் அவர்கள் மூழ்கிப்போகிறார்கள்.  ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்குத் தகுந்த விடைதேடி அவர்கள் மணிக்கணக்கில் அல்லது நாள் கணக்கில் உட்கார்ந்திருக்கக் கூடும்.

மனித உணர்வுநிலை ஒரு நீர்க்கோட்டைப் போன்றது; ஓர் ஓடையைப் போன்றது.  ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான செயலை ஒரு நபர் செய்யாதபோது மேலும் மேலும் எண்ணங்கள் ஒன்றுகூடி அந்த நபரின் குழப்பம் இயக்கமற்ற தேங்கிப்போதலில் முடியும்.  சிந்தனைத் தேக்கம் விரிந்து பெருகும் நிச்சயமற்ற தன்மையை விளைவிக்கிறது.  அது கிடைமட்டப் பரப்பை மட்டும் அல்லாமல், கணந்தோறும் அதிகரிக்கும் இருளின் ஆழத்தையும் கொண்டிருக்கும்.  இதன் தொடர்ச்சியாக மன அழுத்தம் வருகிறது.  மன அழுத்தத்துக்கு ஆளான் நபர் எண்ணெயிலோ அல்லது அடர்த்தியான தேன்பாகிலோ விழுந்துவிட்ட ஒரு ஈக்கு ஒப்பானவர்.  எண்ணெயும் தேனும் அவையளவில் ஆபத்தில்லாதவைதான்; ஆனால், அப்படிப்பட்ட பொருளில் ஒரு ஈ விழுந்துவிடும்போது அதனுடைய சிறகுகள் ஊறி நனைந்து போவதால் மேலே எழ முடியாது.

‘மாண்டூக உபநிடதம்’ என்று அழைக்கப்படும் விடுதலை பற்றிய உபநிடதம் ஒன்று உள்ளது.  அதில் தவளை (மாண்டூகம்) கட்டுண்டிருத்தலுக்கும் விடுதலைக்குமான உருவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.  ஒரு தவளை முட்டைகள் இடும்போது, ஒவ்வொரு முட்டையும் அடுத்த முட்டையோடு இணைந்தே இருக்கும்.  வாழ்வதற்காகப் பிறந்த முட்டை தன்னுடைய அண்டை முட்டைகளோடு ஏற்படும் பிணைப்பால் ஏற்கனவே சிறைப்பட்டுள்ளது.  முட்டையிலிருந்து வாழத் தகுதி பெற தவளையை யார் விடுவிப்பார்கள்?  அடுத்தவர் வாழ்வும் மேன்மை பெற உதவுவது தங்கள் கடமை என்ற ரீதியிலேயே மனிதர்கள் எப்போதும் சிந்திக்கிறார்கள்.  இயற்கையிலிருந்து நாம் பெறுவது இந்த வகையான பாடம் அல்ல.  ஒரு விதை முளைவிடும்போது, தோட்டத்திலுள்ள வெறெந்தச் செடியோ, மரமோ புதிதாக அரும்பும் செடியைப் பேணி வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.  தன் வழியில் வரும் எவ்வகையான தடையிலிருந்தும் தன்னைத் தானே காத்துக்கொள்வதும், விடுதலை செய்துகொள்வதும் முழுக்க முழுக்க அந்த உயிரின் சொந்தக் கடமையாகும்.  விநாயகர் சிலைக்கு முன்னால் தேங்காய் உடைத்து தன்னுடைய விடுதலைக்காக எந்தத் தாவரமும் பிரார்த்திப்பதில்லை.

சில சமயங்களில் முளைவிடும் விதையின் மீது ஒரு பெரிய பாறை ஒன்று உட்கார்ந்திருக்கலாம்.  ஆனால் அது இருளில் அமர்ந்தபடி தன் விடுதலை பற்றிய கனவை கண்டுகொண்டிருக்கிறது.  தன்னுடைய முதல் இலையை இறுகப் பற்றிக்கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து வரும் மங்கலான ஒளியை வழிகாட்டியாகக்கொண்டு அது பாறையின் அடியிலிருந்து ரகசியமாகவும் மெதுவாகவும் வெளியே வர முயல்கிறது.  இறுதியில் தன் தலையை வெளியே கொண்டுவருகிறது.  அது தன்னை விடுவித்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டது.  வெளியேறும் வழியைக் கண்டறிய நம்மால் இயலாது என்று நாம் நினைக்கக்கூடாது.  கருப்பையின் இருண்ட அறையில் சிறைப்பட்டிருந்த நாம் நம்பிக்கையுடன் நம்முடைய வலிமையைத் திரட்டி, நம்முடைய பல்வேறு புலன் நுட்பங்களுக்கு உருக்கொடுத்து, ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குப் பிறகு கருவறைச் சுவர்களை உதைத்துக்கொண்டிருந்ததை நாம் மறந்து போயிருக்கலாம்.  பிரார்த்தனை செய்துகொள்ள கடவுளும் இல்லை, பிரார்த்தனை செய்ய வார்தைகளும் அப்போது நமக்கு இல்லை.  ஆனால், நமக்கு விடுதலை தேவைப்பட்டது.  தொப்புள் கொடியின் மூலம் நம் தாயின் சுவாசமே நமக்கு உணவாயிற்று; அதிர்ஷ்டவசமாக, கருப்பையிலிருந்து வெளியே வர நம்மைச் சூழ்ந்திருந்த பனிக்குட நீர்ப்பரப்பு உதவியது.  யாரையும் சாராமல் ஒரு சிறு விதைக்கன்று முதல் வளரும் சிசு வரை எல்லோருமே விடுதலையைத் தேடுகிறார்கள்.  சூழலில் உள்ள எல்லா ஆற்றல்களும் ஒரு பரிவிரக்கத்தோடு விடுதலையை செயல்படுத்துகின்றன.

நம்முடைய பிறப்புடன் நம் முழு வாழ்வின் விடுதலையும் முடிவடைந்து விடுகிறது.  மத நம்பிக்கை உள்ள ஒரு நபரின் குடும்பத்தில் பிறப்பது வேதனைக்குரியது.  கோயில் மணி ஒலிக்கிறது; மாதா கோயில் மணி முழங்குகிறது; மசூதியிலிருந்து சமயவாதிகளின் அழைப்பு வருகிறது; குழந்தையின் நெற்றியில் குறியிட யூதக்கோவில் அல்லது சீக்கியக் கோவில் அல்லது புத்த மடம்.  அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்து மேரி என்றோ தாமஸ் என்றோ பெயரிட்டுவிட்டால் கிறிஸ்தவ மதத்தின் தாங்க முடியாத சுமையை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கழுத்தில் சுமக்க வேண்டி வருகிறது.  இன்னொரு குடும்பத்தில் அந்தக் குழந்தை ராமனாகவோ, சீதையாகவோ இருக்கலாம்.  இந்தப் பெயர்களிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.  இந்து மரபோடு அவர்கள் கட்டுண்டு போவார்கள்.  முஸ்லீம் குழந்தைகள் தூக்கிக் திரியும் பெரும் சுமைகளாக முகம்மது அல்லது ஆமினா என்ற பெயர்கள் இருக்கலாம்.  புனித ஜான் சொல்கிறார், “தொடக்கத்தில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தையே கடவுள்.”  ஆனால், மத அடிப்படைவாதத்தில் ஏவல் ஆணைகளாக அந்த வார்த்தை மாறுகிறது.  பிறந்த குழந்தை அதை சிலுவையாகச் சுமக்க வேண்டிவருகிறது.  இவ்வாறாக பிறந்த கணத்தில் தொடங்கும் அடிமைத்தனம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.

தவளை முட்டைகள் குஞ்சு பொரிக்கும்போது தலைப்பிரட்டைகள் வெளிவருகின்றன; அவை மேல்நோக்கியும் கீழ்நோக்கியும், பக்கவாட்டிலுமாக சுதந்திரமாக நீந்துகின்றன.  தலைப்பிரட்டைகளிடம் காணப்படுவதைப்போல சமூக இணக்கம் அத்தனை பிணைப்புடன் வேறு எந்தப் பிறவிகளிடமும் இல்லை.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவை ஏதோ ஒரே உடல்போல் வாரக்கணக்கில் ஒன்றாகவே சுற்றித்திரியும்.  தலைப்பிரட்டைகளைப் பற்றிச் சொல்வது மனித குடும்பங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கும் பொருந்தும்.  நேசம், வெறுப்பு என்ற மனப்பான்மைகளின் பிரத்தியேக பசையால் உங்களுடைய குடும்பத்தின் அல்லது இனக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் உங்கள் மீது ஒட்டப்பட்டுள்ளார்கள்.  குடும்ப வட்டாரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய சகோதர சகோதரிகளிடம் அக்கறை காட்டுகிறீர்களோ அந்த் அளவுக்கு நீங்கள் வெறுக்கப்படுவீர்கள்.  எந்த அளவுக்கு விலக விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு அன்பின் பெயரால் உங்கள்மீது அவர்கள் தொற்றிக்கொள்கிறார்கள்.  வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது.  அப்போதுதான் விடுதலை தேவைப்படுகிறது.

யார் உங்களை இப்போது விடுவிப்பார்கள்?  மதவாதிகள் உங்களைச் சுற்றி உட்கார்ந்து விடுதலைக்காக பிரார்த்திப்பார்கள்; விடுதலை பற்றிய அவர்களுடைய விளக்கமோ கோரமாக இருக்கிறது.  பயமுறுத்தி மக்களை அடிமைத்தனத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும், ஆன்ம பலவீனத்துக்கும் ஆட்படுத்துவது மதத்தின் கடவுளே.  நீட்ஷே இதைச் சொன்னபோது அவரை பைத்தியக்காரன் என்று அழைத்தார்கள்.  எல்லா பொறாமையை விடவும் அதிக பொறாமை நிரம்பியவரும், கோபக் கடவுளுமான ஜெஹோவாவிடமிருந்து மக்களை விடுவிக்க ஏசு முயன்ற போது, யூதத் தலைமை குருக்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.  சிலுவையில் அறையப்பட்டது ஏசு மட்டுமல்ல, விடுதலை பற்றிய மலைப் பிரசங்கமும்தான்.  புதிய குருமார்கள் ஏசுவைக்கொண்டு ஒரு புதிய பிசாசைப் படைத்தார்கள்; அது ஒரு பயமுறுத்தும் பிசாசு.  உங்களுடைய பாவத்தின் நாற்றமடிக்கும் சவத்தை அது உங்கள் முன்னால் எப்போதும் பிடித்துக்கொண்டு, நீங்கள் தெய்வீகம் அற்றவரென்றும், நீங்கள் தூய்மையற்றவரென்றும், அதெ ஜெஹோவாவின் முன்னால் விசாரணைக்கு நிற்கும் ஒரு பாவி என்றும் உங்களுடைய காதில் கிசுகிசுக்கும்.  ஏசுவை அவர்கள் இன்னொரு ஜெஹோவாவாக மாற்றிவிட்டார்கள்.

அண்மையில் ஓர் இளம் பாதிரி என்னிடம் வந்தார்; சுதந்திரமும், வெளிப்படை உணர்வும், அன்பும் உடையவராயிருந்தார்.  புனித திருச்சபையின் பதின்மூன்று ஆண்டுகால மூளைச் சலவையையும் மீறி அவரால் இன்னும் உண்மையைப் பேச முடிந்தது.  “பாவமன்னிப்பு கோருபவர்களை கேட்பவராக எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?” என்று அவரைக் கேட்டேன்.  “இருந்திருக்கிறேன்” என்றார் அவர்.  “எதற்கெல்லாம் மக்கள் உங்களிடம் பாவமன்னிப்பு கேட்பார்கள்?”  “கொடிய பாவங்களுக்காக”  “உதாரணமாக…?”  “இன்னொருவனின் உயிரைப் பறிக்க சதி செய்தல், பிறன்மனை நயத்தல், தடை விதிக்கப்பட்ட உறவினரிடையே புணர்ச்சி, அநேகமாக அன்றாடம் இழைக்கும் நம்பிக்கை துரோகம் போன்றவற்றிற்காக..”  “அவர்கள் பாவங்களை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”  “அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறேன்.”  “எப்படி?”  “அவர்களுக்காக இப்படி பிரார்த்திப்பேன்.  புனிதத் திருச்சபை எனக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தால் பாவம் நிரம்பிய உங்களுடைய தீய நோக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கிறேன்.”  “உங்களுக்குக் கொடுப்பதற்காக அந்த அதிகாரத்தை திருச்சபை எங்கிருந்து பெறுகிறது?”  “ஏசு அந்த அதிகாரத்தை திருச்சபைக்குக் கொடுத்தார்.”  “ஏசு கிறிஸ்துவின் காலத்தில் திருச்சபை இருந்ததா?”  “இல்லை.  ஆனால், அதன்பிறகு அது நிறுவப்பட்டது.”  “எனவே நீங்கள் விடுவித்த பிறகு பாவி என்பவன் பாவி இல்லை, அப்படித்தானே?”  “ஆமாம்.  அவன் திரும்பிப் போய் அதே பாவத்தை செய்துவிட்டு வந்து பாவமன்னிப்பு கேட்பான்.  நான் அவனை மீண்டும் பாவத்திலிருந்து விடுவிக்கிறேன்.”  “இதற்காக அவன் உங்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டி உள்ளதா?”  அவர் கொஞ்சம் தயங்கினார்.  பிறகு சொன்னார், “எனக்கில்லை, திருச்சபைக்கு.”  “ஆக நீங்கள் கடவுளை வணிகப்பொருளாக்கி, மூலதனத்திற்கு மாற்றாக பாவத்தை முதலீடு செய்து திருச்சபையின் செயல்பாடுகளை நடத்துகிறீர்கள்.”  அவரால் பேச முடியவில்லை.  அவருடைய திருச்சபைக்கு எதிராக பாவம் செய்ய அவர் பயந்தார்.

இந்த வகையான மோசடி ஒரு மதத்துக்கு மட்டும் உரித்தானதல்ல.  நமக்கு மிக அண்மையிலுள்ள ஓர் இந்துக் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் வாழ்க்கையின் கொடிய சிக்கல்களிலிருந்து விடுதலை பெற இந்தக் கடவுளுக்கோ அல்லது அந்தக் கடவுளுக்கோ லஞ்சம் கொடுப்பதற்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் மற்றும் பூஜைகளின் நீண்ட பட்டியலைக் காணலாம்.  இங்கு தவறு செய்வது கிறிஸ்தவ மதமோ அல்லது இந்து மதமோ அல்ல.  ஒருவரிடமிருந்து முழுக்கவும் நீக்கப்பட முடியாத பயம்தான் காரணம்.  எங்குதான் விடுதலை இருக்கிறது?  மீட்சியை உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்டால்தான் அது கிடைக்கும்.  ‘மோட்சம்’ என்ற பிரத்யேகப் பெயரை இந்துக்கள் அதற்கு வைத்திருக்கிறார்கள்.  மோட்சம் என்பது என்ன?  ஒரு நபரின் உடல் உறுப்பு ஒன்றிலோ அல்லது புலன் ஒன்றிலோ செயலின்மை அல்லது செயல்குறைபாடு ஏற்பட்டு ஒரு வகை அசெளகரிய உணர்வு உண்டானால் அந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமென்ற ஒரு அவசரத் தேவையை அந்த நபர் உணர்கிறார்.  உடலின் இயக்கத்தை முறைப்படுத்துவது மூலமோ, உணவு முறையை மாற்றுவதன் மூலமோ அல்லது சுத்தமான காற்று, நல்ல நீர், சூரிய ஒளி ஆகியவை உள்ள இடத்துக்குப் போய் தங்குவதன் மூலமோ நோய் தணியலாம்.  உடல் ரீதியான அசெளகரியத்திலிருந்து அது மீட்சியைத் தரலாம்.  அதுதான் மோட்சம்.  அசெளகரியத்திலிருந்து செளகரியத்திற்கு ஒருவரை இட்டுச் செல்வது.  பிற உயிரினங்களுக்கு உள்ளதுபோலவே மனிதர்களின் உடல்களும் துல்லியமான வேதியியல் விதிகளால் நெறிப்படுத்தப்படுகின்றன.  இரண்டு தவறான வேதிப் பொருட்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் வினையாற்றிக் கொண்டால் உணர்ச்சிரீதியான அமைதியின்மை உண்டாகலாம்.  ‘உணர்ச்சி’  என்பது, பாதி உடம்பில் இருக்கிறது; பாதி ஒரு எண்ணமாகவோ  அல்லது கருத்தாகவோ தன்னுணர்வு சார்ந்து வெளிப்பாடு கொள்ளும்.  மனம் மற்றும் உடற்கூறு சார்ந்த ஒரு நோயாக அது ஆகும்போது இரண்டு தோற்றுவாய்களை அது கொண்டிருக்கக் கூடும் – உடல் வலி ஒன்று ஒரு கருத்தாக மாறுதல் பெறுவது அல்லது ஒரு தவறான கருத்து உடல்நோய், உடம்பில் நிலை கொண்டுவிடுவது. இவ்வாறாக மனம் மற்றும் உடல் சார்ந்த நோயாக மனம் அல்லது உடல் ரீதியான செயல்பாட்டுக் குறைகளினால் உண்டாகின்றன.  மன அமைப்பிலும் உடல் இயங்கு முறையிலும் ஒருசேர நுண்ணிய அறிவுடைய ஒருவரோடு செயல்பூர்வமான உரையாடலை ஏற்படுத்திக் கொண்டால் மனோவியல் தொடர்பான தவறான புரிந்து கொள்ளலையும், உடல் ரீதியான பார்வைக் குழப்பத்தையும் நீக்கிவிடலாம்.  இப்படியான உரையாடலை மேற்கொண்ட நபர் விடுதலை பெற்று உடல் மற்றும் மனம் ஆகியவை எளிதாகவும், இயல்பாகவும் இயங்கும் நிலையை அடைகிறார்.  ஆனால், இதற்கு மாறாக உடல் மற்றும் மனதின் இயங்கு முறை அதிக விஷம் நிரம்பிய மருந்துகளால் அடிக்கடி  கேட்டிற்கு உள்ளாக்கப்படுகிறது; இவ்வகை மருந்துகள் நேரிடையாக ஹைபோதலமஸுக்கும் (உடலின் வெப்பநிலை, பசி, தாகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி), மூளையின் மேலுறைக்கும் போய் உயிர்வேதியியல் வினைகளை உண்டுபண்ணுகின்றன; இவ்வினைகள் மூளையிலிருந்து நேரடியாக கலக்கமடைந்துள்ள தசைகளுக்குச் சென்று அவற்றை செயலற்றவையாக்கி விடுகின்றன.  பிறகு நோய்க்கான நிவாரணம் இன்னொரு நோயைப் பெறுவதில் முடிகிறது.  மனச் செயல்பாட்டுக்குறைவு அல்லது மூச்சுச் திணறல் ஆகியவையுடன் வரும் தசைச் செயல்பாட்டின்மையிலிருந்து விடுதலை தேடும் பலருக்கு, ரட்சகர்கள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் கல்லறைக்கான வழியைத்தான் காட்டுகிறார்கள்.

மருத்துவர்களுடைய இடத்தை மதப்போலிகளும் சூனியக்கார சாமியார்களும் எடுத்துக் கொள்ளும்போது ஒருவனின் பீதியை அதிகமாக்கி அதைத் தீர்க்கவே முடியாத ஒரு நோயாக மாற்றிவிடுவதில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கடவுள் என்ற ஒரு வார்த்தை மட்டும்தான்.  மன மற்றும் நரம்பு மண்டல நோய்களைக் குறிக்கும் anxiety neurosis, compulsive mania, schizophrenia போன்ற வார்த்தைகளை உண்டாக்குவதன் மூலம் இந்த பூமிமேல் நரகத்தை எளிதில் நிறுவிவிடலாம்.  தானியத்தையும் பதரையும் ஒன்றாக வெயிலில் உலர்த்தினால் பதரை தானியத்திலிருந்து எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம்.  அவ்வகையான வேறுபடுத்தல்களை உண்டாக்க நமது அறிவின் ஒளிக்கு பயிற்சி தரவேண்டியிருக்கிறது.  இல்லையென்றால், சாதாரண பயத்தை முழு வாழ்வுக்குமான பீதியாக மாற்றுபவர்கள் (இது தற்போது சமூக, பொருளாதார ஆய்வுப் பொருள்களிலேயே மிகச் சிக்கலானதாக ஆகியுள்ளது) நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள்.  சாதாரண நோய்களை உயிர் பறிக்கும் நோய்களாக மாற்றும் வழிமுறைகளுக்கு காப்புரிமை பதிவு செய்வது உலகின் புதிய கலாசாரமாக மாறியுள்ளது.

மனித குலத்தின் எல்லாப் பிரிவுகளும் இந்தக் கேடான செயலில் ஈடுபட்டுள்ளன.  மருத்துவம், விஞ்ஞானம், ஆரோக்கிய உணவு, இயற்கை மருத்துவம், அரசியல், மதம், எல்லாமும்.  நகரும் நட்சத்திரங்கள் அறிகுறி தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட நடு இரவில் பிறக்கும் கிறிஸ்துவோ அல்லது கிருஷ்ணனோ நம்மை இந்த பயங்கர உலகளாவிய அழிவிலிருந்து விடுவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நமக்கு அழகல்ல.  மதத்தைப் பற்றிய எல்லா குழந்தைத்தனமான பேச்சுக்களையும் நாம் நிறுத்த வேண்டும்; அதைவிட, நோக்கமற்ற விஞ்ஞானத்தின் வெற்றுச் சொற்களை சொல்பவர்களிடமிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.

விடுதலை நம் ஒவ்வொருவருடைய கையிலும்தான் இருக்கிறது.  குறுகிய, ஆழமான கிணற்றில் பிறந்து மாட்டிக்கொள்ளும் தவளையைப் பொறுத்தமட்டில், முதலில் அதனுடைய வால் உதிர்ந்து போகிறது.  ஒரு படியிலிருந்து மற்றொரு படிக்குத் தாவி, இறுதியில் கிணற்றுக்கு வெளியே பரந்த உலகில் தன்னுடைய விடுதலையை கண்டடைகிறது.

ஒற்றை உடலாக தனித்துவமின்றி வாழ்ந்த கடந்த கால நினைவுகளின் சேமிப்புக் கிடங்குதான் அதனுடைய வால்.  தவறான நினைவுகள், கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களால் நாம் கட்டுண்டிருக்கிறோம்.  தவளையைப் போல நாமும் அந்த வாலை விட்டு விடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவிச் செல்லும் சுதந்திரமான தவளைகளாக ஆகிவிடலாம்.

விடுதலை பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும் என்றால், நம் குடும்பங்கள், நம் மரபுகள், நம் பள்ளிக்கூடங்கள், நம் நாடுகள் என்ற குறுகிய சிறைகளை விட்டு வெளியேற வேண்டும்.  அதுதான் உண்மையான மோட்சம்.  அதை விளம்பரப்படுத்தவோ, காப்புரிமைக்குள்ளாக்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாது.  அடுத்தவனை விடுதலை செய்வது நம்முடைய கையில் இல்லை.  ஒவ்வொரு நபரின் விடுதலையும் எப்போதும் அவன் கையில்தான் உள்ளது.

தமிழில் : ஜெயமோகன்

–    ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து

மரணத்தை எதிர்கொள்ளல் – 5

Standard

மரணத்தைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் ‘கதா உபநிஷத்’.  அந்த அற்புதக் கதையில் ஒரு சிறுவன் மரணத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறான்.  ஒரு புறம், இடைவிடாத ஆக்கம், வாழ்க்கையின் இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியான அச்சிறுவன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கண்ணுறுகிறான்.  திடீரென்று இந்தப் புலன் சார்ந்த விளையாட்டு சுவாரஸ்யமற்று இருப்பதாக அவன் கருதுகிறான்.  இதற்கு மாறாக அவன் புலன்களைக் கடந்த நிலையைப் பற்றி சிந்திக்கிறான்.  எனவே, வாழ்வும் மரணமும் ஒரு பக்கம், கடந்த நிலைக்கான சாத்தியம் இன்னொரு பக்கம்.  கடந்த நிலை பற்றிய விஞ்ஞானம் (மோட்ச வித்யா) உபநிஷத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  ‘மோட்சம்’ என்பதற்கு வாழ்க்கை, மரணம் என்ற இரட்டை நிலையிலிருந்து ‘விடுதலை’ என்று பொருள்.  நீங்கள் பெளதீக இறப்பைப் பெறமாட்டீர்கள் என்று இதற்கு அர்த்தமல்ல.  சரியாகச் சொன்னால், நீங்கள் உடல் ரீதியாக இறக்கிறீர்களா, இலலையா என்பதே ஒரு பொருட்டாக இருக்காது.  மரணம் பற்றிய பயமும், அது தரும் துன்பமும் மறைந்துவிடும்.  இந்த நிலையை நீங்கள் அடையும்போது நீங்கள் உயிருடன் இருக்கும்போதேகூட, நீங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதைப் போலத்தான்.

வாழ்க்கையையும், மரணத்தையும் கடந்துவிட்ட ஒருவருக்கு, வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நபர் விரும்பும் உடல் ரீதியான வாழ்க்கை, சக்தி, பெளதீக அமைப்பு முறைகள் மற்றும் நுட்பத்திறமைகள் ஆகியவற்றால் எந்தப் பயனும் இல்லை.  இருந்தாலும் அவற்றைக் குழந்தைகள் விளையாடுவதைப்போல ஒருவர் பயன்படுத்த விரும்புகிறார்.  வாழ்க்கை ஒரு லீலையாக, அதாவது தெய்வீக விளையாட்டாக மாறுகிறது.  அங்கு உலகத்தைப் படைத்தவர் யாராக இருந்தாலும் அவரோடு இந்த மகத்தான லீலையைப் பங்கிட்டுக் கொள்கிறார்.  மணல் வீடுகள் கட்டி அவற்றை அழித்து மீண்டும் கட்டும் ஒரு குழந்தையின் மனநிலைக்கு ஒப்பான மனநிலையை உடையவரே இந்த உலகைப் படைத்தவரும்.  வாழ்க்கையையும், மரணத்தையும் கடந்தவரும் ஒரு குழந்தையைப் போல ஆகிறார்.  ‘நீங்கள் ஒரு குழந்தையைப் போல ஆகாவிடில் தேவனின் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது’ என்று ஏசு சொன்னது இந்த அர்த்தத்திலாகத்தான் இருக்கும்.

இந்தக் கருத்தே உங்களுக்கு விடுதலையை அளிக்கும்.  நான் ஆல்வாய் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது, என்னுடைய தர்க்கவியல் பேராசிரியர் ஒருநாள் “என்னிடம் ஒரு பெரிய ரகசியம் உள்ளது.  இன்று என்னுடன் பகலுணவு சாப்பிட வருகிறாயா?” என்று கேட்டார்.  நான் போய் அவருடன் பகலுணவு சாப்பிட்டேன்; பிறகு அவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டு சொன்னார், “இந்த உலகம் ஒரு லீலை, ஒரு விளையாட்டு என்று இந்துக்கள் சொல்வதுதான் இந்த உலகத்திலேயே மிக அற்புதமான விஷயம்.”

எல்லாமே நாம் விளையாடும் ஒரு விளையாட்டின் பகுதிதான் என்று ஒத்துக்கொள்வதே, ‘கடந்த நிலை’ என்பதன் அர்த்தம்.  அது உங்களுக்குத் தெரிந்து விட்டால், வாழ்க்கையையும் மரணத்தையும் வெல்வதற்கு கடந்த நிலை உதவி புரிவது மட்டுமன்றி, எல்லா மக்களுடனான எல்லா உறவுகளையும் தாண்டிப் போகவும் அது உதவும்.  உடனடியாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கிறீர்கள்.  யாரோ ஒருவர் ஒழுக்கக் கேடானவர் என்று தோன்றுகிறது.  யார் கவலைப்படப் போகிறார்கள்?  நீங்கள் ஒழுக்கமுள்ளவராக இருந்தாலும் சரி, ஒழுக்கக் கேடானவராக இருந்தாலும் சரி, இது ஒரு விளையாட்டுதான்.  விளையாட்டு தொடர்ந்து நடைபெறுகிறது.  நீங்கள் விரக்தி அடைவதில்லை.  துயரம் இங்கே இருக்கிறது; என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள் சிலர், “இன்னார் ஒரு நயவஞ்சகச் செயலைச் செய்கிறார்; என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள்.  ஆனால், நீங்கள் விடுதலை அடைந்தவராக இருந்தால் இது ஒரு விளையாட்டு என்பதை ஏற்றுகொண்டவராக இருந்தால், வெறுமனே ‘ம்’ என்று சொல்வீர்கள்.

இது ஒரு விளையாட்டு என்று நான் சொல்லும்போது, அமெரிக்காவில் விளையாட்டுகள் விளையாடப்படும் அர்த்தத்தில் சொல்வதில்லை.  அமெரிக்காவில் விளையாட்டுகளைக்கூட மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  ஒரு சிறு குழந்தையோடு ஒருவர் விளையாடும் விளையாட்டை நான் சொல்கிறேன்.  சில சமயங்களில் ஒரு பெண் குழந்தையோடு நான் சீட்டு விளையாடி இருக்கிறேன்; அவளுக்கான சட்டங்கள் அவளுக்கு, எனக்கான சட்டங்கள் எனக்கு. அவள் சொன்னாள், “நீங்கள் அதை இழந்துவிட்டீர்கள்.” அதை எடுத்துக்கொண்டு “மீண்டும் போடுங்கள்” என்றாள்.  நான் போட்டேன்.  “அது உங்களுக்கு” என்றாள்.  அது எப்படி என்னுடையது ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை.  அவள் சொன்னாள், “நான் ஜெயித்து விட்டேன்.”  நீங்கள் மரணத்தைக் கடந்திருந்தால்தான், இப்படி ஒரு மனப்பான்மை வாழ்க்கையில் சாத்தியம்.  என்னுடைய விளையாட்டுத் தோழிக்கு மரணமும் தெரியாது, வாழ்க்கையும் தெரியாது.  இரண்டையும் கடக்கும் அப்பாவித்தனம் அவளிடம் உள்ளது.  “இந்த உலகின் எல்லா முட்டாள்தனமான அறிவுக்கும் நீங்கள் பரிச்சயப்பட்ட பிறகுதான், மீண்டும் நீங்கள் மறுபக்கத்தின் விளையாட்டுக்கு வந்து மீண்டும் ஒரு குழந்தையாக ஆக முடியும்.”

மரணத்தை முழுமையாக அறிந்து அதனுடன் தோழமை கொள்வதுதான் இந்த உலகத்திலேயே மிக இனிமையான அற்புதமான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது.  அது நம்முடன் எப்போதும் இருக்கிறது.  அதனுடன் இணக்கத்துக்கு வந்து அதைக் கடந்து சொல்லும் ரகசியத்தையும் அறிய வேண்டும்.  அதற்கு பயப்படுவதன் மூலம் நாம் அதைக் கடக்க முடியாது.  மாறாக அது ஒரு நகைச்சுவை என்பதை அறிவதன் மூலம்தான் அதைக் கடக்க முடியும்.  மரணம் மக்களுக்கு ஒரு நகைச்சுவை போலத்தான் வருகிறது.  பல மண்டை ஓடுகளையும், இன்ன பிறவும் போட்டு, மரணம் குறித்து பல பீதியூட்டும் மிகையான படங்களை வரைந்துள்ள கிறிஸ்தவர்கள் மீது எனக்கு நிறைய கோபம் உண்டு.  மண்டை ஓட்டை தூக்கி எறிந்த பிறகுதான் நீங்கள் இறந்துபோனவர்கள் ஆகிறீர்கள்.  அதன்பிறகு, நீங்கள் எப்படி ஒரு மண்டை ஓடாக இருக்க முடியும்?  மரணத்தில், மண்டை ஓடு கிடையவே கிடையாது.  கண்கள் இல்லாத, பற்கள் தெரியும் மண்டை ஓட்டை ‘மரணம்’ என்று காட்டும் படம் தவறான எண்ணத்தை உண்டாக்குகிறது.  மரணத்துக்குப் பற்கள் கிடையாது.  “நான் மரணத்தைப் பார்த்திருக்கிறேன், அதற்குப் பற்கள் கிடையாது. அது மிக அழகானது.  அது மல்லிகையின் நறுமணம்” என்று கூட நீங்கள் சொல்லலாம்.

மரணத்தின் இனிமையான, நறுமணத்தை, மரணத்தின் அழகான பாடலை, மரணத்தின் ஆன்மீகக் குரலை குறிப்பிட்டுப் பேசுவது இயல்பாகத் தெரியும் அளவுக்கு, மரணம் பற்றிய கருத்தை நாம் திருத்தி அமைக்க வேண்டும்.  அதை நீங்கள் ஆன்மீகமயமாக்கிவிட்டால் அது பற்றிய நோயுற்ற, கீழ்த்தரமான படிமம் மறைந்துவிடும்; அதன் தனிச்சிறப்பு நறுமணமாகப் பரவும்.  மரணம் இங்கு ஒரு சம்பவம் அல்ல.  நாம் மெதுவாகக் கலந்து, மறைந்து, ஒன்றாக ஐக்கியமாகிவிடும் ஒரு பெரும் பரப்பு அது.  அந்தக் கருத்தே நமக்கு ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது.  இந்தப் பெரும்பரப்பில் ஐக்கியமாவதும், இந்தக் கரைதலும்தான் உங்களுக்கு விளையும் வெகுமதியும், பயனும்.  கண்ணுக்குப் புலப்படாத ஒளிபோல நீங்கள் மாறுகிறீர்கள்.  எல்லா ஒளிகளுக்குமான ஒளி.

அறியப்படாததிலிருந்து

உதயசூரியன்போல

வாழ்க்கை வருகிறது.

பகலின் பன்னிரண்டு மணி நேரத்தின்

எல்லா வண்ணங்களையும் அது கொண்டுள்ளது.

 

மரணம் நம்மிடம் வருவதில்லை

நாம்தான் அதனுடன் கலக்கிறோம்.

ஆன்மாவின் அழிவுறாத் தோட்டத்தின்

மிக அண்மைத் தோட்டப்பகுதிக்கு

அது ஒரு சிறிய வீடு திரும்பல்.

 

(தமிழில் : ஆர்.சிவகுமார்)

-‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து

 

மரணத்தை எதிர்கொள்ளல் – 4

Standard

என்னுடைய மரணத்தின்போது நான் வலியுறுத்திச் சொல்லும் முதல் விஷயம், எந்தவித மந்திர உச்சாடனமோ அல்லது வேறு வகையான சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கூச்சலோ இருக்கக்கூடாது என்பதுதான்.  மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.  சடலத்தை அப்படியே கிடக்கவிட்டால் கொஞ்ச நேரத்தில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்.  எனவே, அதை உரிய வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.  இதில் பலமுறைகளைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.  அதை எரித்துவிடுவது ஒருவகை.  ஆனால், ‘நான் இறந்துவிடும்போது நான் முழுமையாக இறந்திருக்கிறேனா?’ என்ற கேள்வி என் முன்னால் தோன்றுகிறது.  என்னில் ஒரு பகுதி இன்னும் உயிரோடிருக்கிறது.  உதாரணமாக, என்னுடைய எலும்புகள்.  அப்படி என்றால், எரிப்பது சோகமயமானது.  புதை குழிக்குள், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், ஒவ்வொரு மாதமாக என்னுடைய மரண நடைமுறையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்வேன்.  ஆனால், அதன்பிறகு புழுக்கள் வரும்; என்னுடைய வாயிலும் குடல்களிலும் புழுக்கள் இருப்பதை யோசிப்பதில் எனக்கு விருப்பமில்லை.  அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், என்னால் அதை உணரமுடியாது.  அந்த வகையிலாவது நான் உயிர்த்தன்மைக்கு என்னுடைய பங்கை அளிப்பேன்.  என்னுடைய உடலைத் தின்னும் 10,000 புழுக்கள் சாந்தோக்ய உபநிஷத்தும் பிறவும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய மூளைப்பகுதிக்கு வந்து சேர்வதை யோசித்துப் பாருங்கள்.  ஒரு வேளை அந்தப் புழுக்கள் விவேகமானவையாக மாறலாம்.  என்னுடைய மூளையிலிருந்து ஏதாவது இயற்கை மருந்து தயாரிக்கப்படலாம்.  அல்லது ரொட்டியின் மீது தடவப்படும் ‘ஜாம்’ போன்ற ஒன்று தயாரிக்கப்படலாம்.  ஆனால், சட்டம் இம்மாதிரியான விஷயங்களை அனுமதிக்காது; ஏனென்றால் மக்கள் முட்டாள்தனமானவர்கள்.  இந்தச் சூழ்நிலைகளில் ஓர் எளிமையான அடக்கத்தையே நான் கோருகிறேன்.  ஆனால், ஆன்மா என்று அழைக்கப்படுவது ஒன்று இருந்து அதுவும் என்னுடன் புதைகுழிக்குள் வந்தால் அது தப்பிக்க ஒரு சுலபமான வழி இருக்க வேண்டும்.  மேலும், சன்னியாசிகள் பெரும்பாலும் உட்கார்ந்த நிலையிலேயே புதைக்கப்படுகிறார்கள்.  எனக்கு அது பிடிக்கவில்லை.  இப்போதே எனக்கு முதுகு வலி.  ஒருக்களித்து படுத்துக்கொள்ள விரும்புகிறேன்.  ஒரு சிறு தலையணை மேலும் செளகரியத்தைக் கொடுக்கும்.  ஒரு சிறு குறிப்பேடும் ஒரு பென்சிலும் அங்கு வைக்கப்பட வேண்டும்; நான் எதிர்கொள்ள நேரும் சுவாரஸ்யமான பூதங்களை, நான் வரைய அவை உதவியாயிருக்கும்.  இந்த மாதிரியான சிந்தனைதான் ‘பிரமிடுகள்’ கட்டப்படுவதற்கு இட்டுச் சென்றிருக்கும்.  மரணம் விவாதிக்கப்படும்போது, மனித மனத்தில் இருக்கும் ஓர் ஆதி தொன்மம் தூண்டப்படுகிறது.

மரணம் தொடர்பான தத்துவம் மற்றும் பிறவிகள், விதி சார்ந்த உள்ளார்ந்த விஷயங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போக விரும்புகிறேன்.  மரணத்தின் இரண்டு அம்சங்களை வேறுபடுத்தி ஆராய வேண்டியுள்ளது.  ஒன்று பிறவி மற்றும் விதி தொடர்பானது; மற்றொன்று தத்துவ ரீதியானது.  முன்னதைப் பொறுத்தவரை, இந்த பெளதீக பூமி மட்டுமே இந்தப் படைப்பின் ஒரே எல்லை ஆகாது.  இந்தியக் கருத்தியல்படி, மேலே ஏழு உலகங்களும், கீழே ஏழு உலகங்களும் உள்ளன.  இறப்புக்குப் பின் இந்த முழு அமைப்புமுறையிலிருந்து நாம் விலகுவதில்லை.  இந்த பெளதீக உலகில் மட்டும்தான் நாம் பெளதீக உடலைக் கொண்டிருக்கிறோம்.  இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.  நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.  மரணத்தின்போது இந்த ஐந்தும் சிதைவுற்று மறைகின்றன.  நிலம், நிலத்திற்குப் போய்ச் சேருகிறது;  நீர், நீருக்குப் போய்ச் சேருகிறது; மற்றவையும் இப்படியே.

பெளதீக இறப்பை ‘முதல் இறப்பு’ என்று சொல்லலாம்.  பெற்றோராக இருக்கும் எவரும் தங்களுடைய ஒரு சிறு பகுதியைத் தங்களுடைய உயிர்வீரியம் மூலம் தங்களுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.  ஒருவருடைய இறப்புக்குப் பிறகும்கூட அவருடைய ஒரு பகுதி, அவருடைய உற்றார் உறவினர்களில் வாழ்கிறது.  ஒருவருடைய குழந்தைகள் சந்ததியை உண்டாக்காமல் இறந்துவிட்டால், அதை ‘இரண்டாம் இறப்பு’ என்று கருதலாம்.  ‘மூன்றாம் இறப்பு’ ஒருவருடைய புகழ் உலகில் நிகழ்கிறது.  நிறையப்பேர் அவர்களுடைய புகழால் வாழ்கிறார்கள்,  ஒருவருடைய புகழ் சில காலம் வாழ்கிறது.   ஆரம்பத்தில் மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நினைவுகூரப்படுகிறார்கள்; அந்தச் சமத்தில் அந்த நபர் அடுத்த உலகிற்கு விடுவிக்கப்படுகிறார்; அங்கு அவர், மக்கள் மீது ஒரு நனவிலி மனோவியல் தாக்கமாக நீடிக்கிறார்.

இது ஒருவகையான ஊடாடி வரும் தாக்கமாக இருக்கலாம்.  இந்தியச் சிந்தனை முறைப்படி, இதற்கு அடுத்த பரப்பாக உள்ளத்தில் உலகின் பாதுகாவலராக நீங்கள் ஆகிறீர்கள்.  இங்கு உங்களுக்கென்று சொந்தமாக எந்த ஆளுமையும் கிடையாது.  இந்த மட்டத்திலுள்ள சக்திகளின் பங்களிப்பால் இந்தப் பிரபஞ்சத்தின் தாளலயம் உயிர்ப்புடன் தொடர்கிறது.  அதற்கு அப்பால் நீங்கள் ஒரு சட்டத்தின் வெறும் ஒரு பகுதிதான்.  பிரபஞ்சத்தின் கணித, உடலியல் மற்றும் நீதி நெறிச்சட்டம்.  அதன் பிறகு இந்தப் பிரபஞ்சத்தோடு முடிவற்ற பகுதியாக நீங்கள் மாறும் பிரம்ம லோகத்திற்கு வருகிறீர்கள்.  பிரம்மலோகத்தைத் தவிர வேறு எந்த உலகிலிருந்தும் நீங்கள் பெளதிக உலகிற்கு வரலாம்.  மற்ற எல்லா உலகங்களும் கொஞ்சம் புலன்களால் ஆன மேலுறையைக் கொண்டுள்ளன; இம்மேலுறையால் ஈர்க்கப்படும் சக்திகள் மேன்மேலும் செறிவானவையும், மெய்யானவையுமான வெளிப்பாட்டு நிலைகளுக்கு உருமாறி, இறுதியில் இந்த உலகில் மறுபிறப்பை அடைகின்றன.

இன்னொரு கோட்பாடு, குறிப்பாக புத்தமதவாதிகளால் கைக்கொள்ளப்பட்டு வருவது.  இதன்படி, ஒரு நபர் இறக்கும்போது, அவர் இந்தப் பூமியிலேயே திரிந்து துன்பம் விளைவிக்காமல் இருக்கும் பொருட்டு இங்கேயே இருக்கும் ஒருவர், அடுத்த அடுத்த உலகுக்கு அவர் போக உதவ வேண்டும்.  இந்தத் தளத்தில் புத்தமதவாதிகள் ஒரு விரிவான அமைப்பு முறையை வளர்த்தெடுத்த அளவுக்கு இந்துக்கள் செய்யவில்லை.  பெரும்பான்மையான இந்துக்கள் வேதாந்தத்துக்கு உடன்படுகிறவர்கள்.  வேதாந்தத்தின்படி, பெயர் மற்றும் தோற்றத்தின் உலகம் மாயையானது.  வாழ்வும், மரணமும் புலன்கள் சார்ந்த அந்தஸ்தை மட்டுமே உடையவை; அவற்றை உண்மை என்று கருதக்கூடாது.  இப்படியாக இந்துக்கள் மரணம் தொடர்பான இயலை கொன்றுவிட்டார்கள்.

புத்தமதவாதிகள் இந்தியாவின் மிக உயரிய மனோதத்துவவாதிகள்.  அவர்கள் மனத்தை பெளதீக உடலைவிட மேலான ஒன்றாகக் கருதினார்கள்.  அவர்கள் பல படைப்பு மூலவர்களையும், அதீத தெய்வ நிலையுடைய உயிர்களையும் உண்டாக்கினார்கள்; இவர்களால் பறக்கவும், வளிமண்டலத்தில் ஒளிந்து வாழவும், அல்லது ஒரு பெளதீக உடலில் வெளிப்பட்டு மீண்டும் தூய சக்திக்குத் திரும்பவும் முடியும்.  கிறிஸ்துவம் அல்லது இஸ்லாம் போன்ற, வருவதை உணர்த்தும் மதங்களின் கோட்பாடுகளிலிருந்து புத்தமதத்தின் கோட்பாடுகள் மிகுந்த வேறுபாடு கொண்டவை.  ‘ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ பிறப்பது மிகவும் சலிப்பூட்டக்கூடியது’ என்று நினைக்கிறேன்.  மரணத்துக்குப்பின் இறுதித் தீர்ப்பு சொல்லும் நாளுக்காக நீங்கள் முடிவற்றுக் காத்திருக்க வேண்டும்.  கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இறந்தவர்கள் எல்லாம் இன்னும் தீர்ப்புக்கு அழைக்கப்படவே இல்லை.

புத்தமதக் கருத்துக்கள் அன்றி, மரணம் மற்றும் விதி தொடர்பான ஆய்வியலுக்கு, இந்தியாவின் பெரும் பங்களிப்பு மரணத்துக்கும் காலத்துக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியது.  மரணத்தின் கடவுள் ‘காலன்’ என்று அழைக்கப்படுகிறார்.  காலன் என்றால், காலத்தோடு தொடர்புடையவன்.  காலம் கொல்கிறது.  ஆனால், இந்தியக் காலம் உண்மையில் கொல்வதில்லை, அது நிறுத்தித்தான் வைக்கிறது.  அது வாழ்க்கைக்கு ஒரு கால்புள்ளியையோ அல்லது அரைப்புள்ளியையோதான் வைக்கிறது.  ஒருபோதும் முற்றுப்புள்ளியை வைப்பதில்லை.  காலனுக்கு இன்னொரு பெயர் ‘எமன்’  யமா என்றால், இடைநிறுத்தம் என்று பொருள்.  நாம் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் விதத்திலிருந்து ஓர் இடைநிறுத்தம் கொடுக்கும் ஒன்றாக மரணம் கருதப்படுகிறது.  இந்த இடை நிறுத்தம் ஒவ்வொரு இரவிலும் கூட நமக்குக் கொடுக்கப்படுகிறது.  ஒவ்வொரு இரவிலும் நாம் மரணத்தை சுவைக்கிறோம்.  எந்தச் செயலிலிருந்து நமக்கு ஓர் இடைநிறுத்தம் ஏற்பட்டாலும், எமன் நம்முடன் இருக்கிறான்.  எமனைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை; அவன் நம்முடைய நிலையான தோழன்.  நாம் பேசும்போதுகூட இடைநிறுத்தங்கள் உண்டாகின்றன.  நம்மைப் பற்றி அக்கறைகொண்ட, நமக்குப் போதுமான ஓய்வு தருகிற ‘அற்புத நண்பன்’ எமன்.  இல்லையென்றால், பிரபஞ்ச இயங்கு சக்தியின் குறைபாடு நம்மை வெகுகாலத்துக்கு முன்பே அழித்திருக்கும்.  உலகம், முழுக்குழப்பத்துக்கு கீழிறிங்கிப் போகாமல் காப்பாற்றும் இயங்கு சக்தியே எமன்.