ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

அவயவமொக்கெயமர்த்தியாணியாய் நி

ன்னவயவியாவியெயாவரிச்சிடுந்நு;

அவனிவனென்னதினாலவன் நினய்க்கு

ன்னவஶதயாமவிவேகமொன்னினாலே

(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 26)

ஆணிபோல் உறுப்புகளை ஒன்றிணைக்கும்
ஆவிபோன்றதை மூடியிருக்கும் உடல்கொண்டவன்
அவிவேகத்தாலே
‘அவன்’ ‘இவன்’ என எண்ணிச் சோர்கிறான்

பல உறுப்புகளால் ஆன நமது உடல், வாழும் உயிர் என்ற ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆவித்தன்மை கொண்ட மூச்சு எனும் முகமையால் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலின் தோற்றம் பிறிதொரு உடலிலிருந்து மாறுபடுவதால், அனைத்து உயிரிகளிலும் உறையும் உயிர் எனும் பொருள் ஒன்றே என்பதை நாம் உணர்வதில்லை. 

ஒரு பனிக்கட்டி இன்னொன்றைப் போலிருக்காது என்று நம்பப்படுகிறது. அதுபோலவே, ஒரேபோன்ற உடலமைப்பு கொண்டிருந்தாலும் அச்சு அசலாக ஒன்றாகத் தோன்றும் இரு மானுடரை நம்மால் காணமுடியாது. இதனால்தான், காவல்துறை மக்களின் கைரேகையை பதிவு செய்கிறது. பல்லாயிரம் கோடி மக்களின் பத்து விரல்களின் ரேகைகளில் ஒன்று கூட பிறிதொன்றைப் போல் இருக்காது. கட்டைவிரலின் தோல் மீது காணும் ரேகைகளில் காணப்படும் இந்த வேறுபாட்டை நாம் பெரிதாகக் கொண்டாடுகிறோம். தவறு செய்தவனைக் கண்டுபிடிக்க இத்தகையதொரு மேலோட்டமான வேறுபாட்டிற்கு இந்த உலகே பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், இந்த ரேகைப் பதிவுகளை நாம் என்னதான் ஆராய்ந்தாலும் சரியானதைச் செய்தது யார் என்று நம்மால் அறியவே முடியாது. கட்டைவிரல் ரேகை தவறுசெய்தவரை கண்டுபிடிக்க உதவலாம். நல்லதையோ மெய்மையையோ கண்டடைய அது ஒருபோதும் துணைபுரியாது.  

பெரிய மல்யுத்த வீரரின் உடலைப் பார்த்தால் வட்டமானதாக, தசைகள் எஃகினால் ஆனது போலிருக்கும். தன் பலத்தின் மீது அவ்வளவு நம்பிக்கையுடன் நடமாடும் அவர் இரண்டு நிமிடம் மூச்சு விடவில்லை என்றால் சுயநினைவை இழந்து, சக்தியே இல்லாதவர் போல் தரையில் மோதி விழுவார். விரைவாக சுவாசம் திரும்பவில்லை என்றால், அவரது உடல் இறுகி வீங்கி அனைத்து செல்களும் உடைந்து விடும். உடல் சிதைந்து விரைவில் பூமியின் பகுதியாக மாறும். நமக்குள் இருக்கும் அந்தச் சிறு மூச்சுதான் உடலின் அனைத்துச் செயல்பாடுகளையும் பராமரித்து வருவது பெரிய அதிசயம் அல்லவா? அதுதான் நம்மை சிந்திக்க வைக்கிறது, குருதிச் சுழற்சிக்கு உதவுகிறது. நாம் சுவாசிக்கவும், உணவை ஜீரணிக்கவும், வளரவும், மாற்றமடையவும் செய்கிறது. நம் நினைவாற்றலை வளர்த்து தக்கவைக்கவும் செய்கிறது. இவை அனைத்தும், உள்வந்து வெளிச்செல்லும் சுவாசம் எனும் ஆவித்தன்மை கொண்ட ஒன்றால் நிகழ்கின்றன.

நம்முள்ளிருந்தபடி நமக்கென அனைத்தையும் இயற்றுவது, நுரையீரலை சுருக்கி விரிப்பது, இருதயத்தை துடிக்கச் செய்வது எது? நாள் முழுவதும் இவ்வுடலைச் சுமந்தபடி வளைய வருகிறோம், இதில்தான் எப்போதும் வாழ்கிறோம். என்றாலும் இதன் இயக்கங்கள் எதையும் நாமறியோம். உளவியலாளரும், நரம்பியலாளரும், உயிரியலாளரும், நியூரான்களின் இணைவு குறித்தும், உயிரணுவும் புரதமும் உருவாவது குறித்தும் அறிந்துவிட்டால் இதை புரிந்துகொள்ள முடியும் என எண்ணுகின்றனர். ஏதோ ஒன்று புரத மாற்றங்களை ஏற்படுத்துகிறது; ஏதோ ஒன்று நியூரான்களின் இணைவில் மாற்றங்களை உண்டாக்குகிறது; உயிரணுக்கள் வளர்ந்து மரிக்கின்றன என்றெல்லாம் அவர்கள் அறிவார்கள்.  ஆனால் அந்த ஒன்று எது என எவரும் அறியார். ஜான் லில்லி ‘யாரந்த நிரலாளர்?’ என்று வினவினார். மனிதன் எனும் உயிர்க்கணினியில் மாபெரும் நிரலொன்று நிகழ்ந்தபடி உள்ளது. அதை நிரலமைத்தது யார்? 

இப்பாடலில் அந்த நிரலாளர் ‘அவயவி’ எனப்படுகிறார். உடலின் தனித்தனி உறுப்புகள் அனைத்துக்கும் உரிமையாளர் அவர்; ஆவிபோன்ற பொருளை இயக்குபவர். அவரது இந்த இயக்கமே பிரித்தறியும் ஆற்றலை வலுவிழக்கச் செய்கிறது.

இங்கு அமர்ந்திருக்கும் உங்களது வாழ்வு ஏதோ ஒரு கல்லிலிருந்தோ, காற்றிலிருந்தோ உதித்ததல்ல. தாய்தந்தை எனும் இரு மானுடரிலிருந்து தோன்றியது அது. பின் நோக்கி எண்ணிப்பாருங்கள். அன்னையின் கருப்பையில் கருவெனக் கிடந்ததை பாருங்கள். அதற்கும் அப்பால், உமது பெற்றோர் இணைவதற்கு முன்னால், அவர்களில் ஒரு இயல்கையாக இருந்தீர்கள் அல்லவா? எனில், இப்போது உங்களுக்கு என்ன வயது? உங்களது பிறந்த தேதி முதல் இன்று வரை; அத்துடன் நீங்கள் கருப்பையில் வளர்ந்த காலத்தையும், உங்களது பெற்றோரின் வயதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களது பெற்றோருக்கு முன்னால் இன்னும் நால்வர் உள்ளனர் – தந்தையின் பெற்றோரும் தாயின் பெற்றோரும். அவர்களது வயதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறே இருபது தலைமுறைகள் பின்னால் போனால் இருபது லட்சத்துக்கும் மேலானவர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளும் உள்ளன. வெறும் இருபது தலைமுறைகளில், உங்களை படைத்ததில் இருபது லட்சத்துக்கும் மேலான நபர்கள் உள்ளனர். இன்னும் பின்னால், மனித இனம் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்திற்கு, பிற உயிரினங்களுக்கு சென்றால்… யார்தான் உங்களுக்கு அயலவராக இருக்கக் கூடும்?

உங்களில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதே வாழ்வுதான் அனைத்து உருவங்களிலும் உள்ள உயிரினங்களில் பரவி உள்ளது. அனைத்திலும் உள்ளது ஒரே கொள்கைதான். அதைப் பார்க்க நமக்கு கண்கள்தான் இல்லை. அப்படிப் பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் இல்லை. இதனையே குரு ‘அவஶதயாம்’ என்கிறார். அதை உணர முடியாத அளவுக்கு நாம் நலிந்தவர்களாயிருக்கிறோம். நம்மால் பிரித்தறிய முடிவதில்லை என்பதால் இந்த அமைப்புக்குள் உடனுக்குடன்  நிகழும் மாற்றங்களை மட்டுமே நம்மால் கணக்கிலெடுத்துக்கொள்ள முடிகிறது. 

அறிவு அல்லது விழிப்புணர்வு என்பது என்ன? அறிவியலாளர் கருத்துப்படி, நமது மூளையில் நிகழும் குறிப்பிட்ட வேதி மாற்றம் மட்டுமே அது. நியூரான்களின் இணைவு குறித்து அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளில், கற்றலின்போது அவை, வடிவமும் அளவும் சார்ந்த ஒரு நெகிழ் மாற்றத்திற்கு (plastic change of shape and size) உள்ளாகி பின்னர் அணுத்திரண்ம செயல்பாட்டின் (molecular function) வழியே அந்த மாற்றத்தை அவை தக்கவைத்துக் கொள்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, நரம்புகளின் அதிர்வுகள் உண்டாக்கும் இன்ப-துன்ப அனுபவத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு எனும்போதும், முள் தைக்கும்போதும் இதுவே நிகழ்கிறது. ‘நான் கடவுளை எண்ணுகிறேன்’ எனும்போது கூட நிகழ்வது இதுவே. ஆக, முழுமுதலை நீங்கள் அறிய முயல்வதற்கும், முள் தைப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு ஏதுமில்லை. நரம்பளவில் இவை எல்லாமே பயனற்ற, மேலோட்டமான அதிர்வு மட்டுமே. இத்தகைய புரிதல் நம்மை பெரும் சோர்வில் ஆழ்த்தக்கூடும்.

இந்த அதிர்வு எப்படி உண்டாகிறது என்ற ரகசியத்தை ஊடுருவ முடியாமல் ஒரு இருட்டறையின் வாயில் முன் நிற்கிறோம். இதை ஒழுங்குபடுத்துவது யார்? ஒரு கருத்தின் அடையாளமாக, எவ்விதமான நெகிழ் மாற்றம் ஏற்பட வேண்டும் என முடிவெடுப்பது எவர்? எவ்விதமான புரதம் எப்போது உருவாக வேண்டும் என நிர்ணயிப்பது யார்? நமது அலங்கோலமான ஆய்வுகள், இருபதுக்கும் மேற்பட்ட புரத வகைகளை கண்டறிந்துள்ளன. ஆனால் அதற்குப் பின்னால் உள்ளது என்ன என்பது எவரும் அறியாதது. மேற்பரப்பை ஊடுருவ இயலாமல் நமது அறிவு இந்த அதிசயத்தின் முன் முட்டி நிற்கிறது. அப்பால் உள்ளது பேரிருள். பெரும் ஞானமும், பேரறிவும் அவ்வாயிலுக்குப் பின்னால் அவ்விருளில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. அதுவே இந்த அண்டத்தைப் படைத்து முடிவிலாது பல்கிப் பெருகச்செய்துகொண்டுள்ளது. பேரதிசயம் அல்லவா இது! 

இதனை இவ்வாறு நோக்கினோமென்றால், நாம் இயங்கும் இவ்வுலகே அனைத்தையும் உருவாக்கிய பேரன்னை என்பதை உணரலாம். இவையெல்லாம் வெறும் தூசிலிருந்து உண்டானது என்பதற்கு நாம் எத்துணை நன்றியோடிருக்க வேண்டும்! இறைவன் மனிதனை தூசிலிருந்து படைத்தான் என்று சொல்வது மூட நம்பிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அதுவே மெய். விருப்பமில்லை என்றால் நீங்கள் கடவுளை மறந்துவிடலாம். ஆனால், இங்கமர்ந்திருக்கும் நீங்கள் எல்லோரும் பூமியின் பூழியிலிருந்து வந்தவர்களே என்பதையும், இன்னொரு மண்கட்டி பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நிச்சயம் உணரலாம். இவ்வாறு அகத்திலிருந்து பார்த்தால், நாம் எப்படி வேறு வேறானவர்களாக இருக்க முடியும்? என்றாலும் நமது சிறு சிறு துன்பங்கள் எல்லாம் நமக்கு மிக முக்கியமானவை. நமது வாழ்வு ஞானத்தால் அல்ல, சின்னஞ்சிறு துயரங்களால், அதிர்வுகளால் வழிநடத்தப்படுகிறது.

நமது சோர்வால், நம்மால் இருளைத்தாண்டி அதிசயத்தைக் காண முடியவில்லையே என இரங்குகிறார் நாராயண குரு. அடுத்த பாடலில் அகம் என்பதன் வரையறையை அளிக்கும் அவர் நம் மனங்களை அதற்கு தயார்ப்படுத்துகிறார். விவாதித்தோ, பகுத்தறிவின் வழியாகவோ நீங்கள் இதை அறியமுடியாது. உங்களது கருவிகளை எல்லாம் கைவிட்டு சற்று நேரம் அமைதியான சாட்சியென ஆடலை பார்க்க வேண்டியதுதான்.  

நீங்கள் விரும்பினால், இருபது தலைமுறைகளைச் சேர்ந்த உமது மூதாதையரான இருபது லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நூற்றைம்பது பேரை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். உங்களுக்குப் பின் அவர்களை நிரலாக வைத்து அவர்கள் ஒவ்வொருவரது முகத்தையும் பாருங்கள். நேரடியாக நீங்கள் அவர்களது விதைப்பையிலிருந்தும் கருப்பையிலிருந்தும் வந்துள்ளதை கவனியுங்கள். அவர்கள் எவருக்கும் தாங்கள் ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளோம் என்பது தெரிந்திருக்கவில்லை. பெண்ணானவள் வாயுமிழ்ந்தபோதும் வலியில் துடிக்கும்போதும்தான் அவளுக்கு ஏதோ நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்தார்கள். நீங்களும் நானும் ரகசியத்திலும் அறியாமையிலும் பிறந்தவர்கள். எவரும் அறிந்திராதபோதும், இத்தனை வருடங்களாக இதுவே நிகழ்ந்தது. ஒரு துறவியான என்னில் புகுந்த தீயூழ் கொண்ட மரபணுக்கள் என்னோடு மடியக்கூடும். ஆனால் அதனால் உலக இயக்கம் நின்றுபோய் விடாது. எனது பங்கை மட்டுமே நான் தடுக்க முட்டியும். பல்லாயிரம் ஆண்டுகள் திகழ்வதற்கென உருவாகி என் விதைப்பையை அடைந்த உயிரை முடித்து வைத்து அமைதியடையச் செய்ய மட்டுமே என்னால் இயலும். ஆனால், இதற்குள் எத்தனையோ பேர் உயிரின் தொடர்ச்சிக்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர். அவர்களின் குழந்தைகளைத் தொடர்ந்து இன்னொரு இருபது தலைமுறைகள் உண்டாகும். இருபது லட்சம் மக்கள் தோன்றியிருப்பார்கள்.  

நமக்குப் பின்னால் நாம் காண்பது மனிதர்களை மட்டுமல்ல. கார்ல் சகன் (Carl Sagan) சொன்னதுபோல, ட்ராகன்களும் டைனோசார்களும் நமது மூதாதைகளே. இதில் சம்பந்தப்பட்ட உயிரினங்கள் எவை எவை என்று கூட நானறியேன்; எனது மூதாதையை நான் மறந்தே விட்டேன் என்பதுதான் உண்மை. சிறியதோ பெரியதோ உருவம் கொண்ட எல்லா உயிரினங்களின் மரபணுக்களும் ஒரே அளவு கொண்டவை என்பதால்,  ஒரு ஒலுங்கு ஒட்டகச் சிவிங்கியைப் புணர்ந்து நெருப்புக்கோழியாக ஆகியிருக்கக் கூடும் என்று சகன் கூறுகிறார். 

Thomas a Kempis, தனது ‘கிறிஸ்துவின் போலி’ எனும் நூலில், ‘நீங்கள் கற்றதும் பெற்றதும் எல்லாம் உங்களது தற்பெருமையைத்தான் வீங்கச் செய்துள்ளன. மீண்டும் நீங்கள் நல்லறிவு பெறுவது எப்படி நிகழும்? ‘மும்மை’ (Trinity) குறித்த இறை தத்துவத்தை எல்லாம் அறிந்து நீங்கள் புலமை பெற்றுவிட்டீர்கள். ஆனால் உங்களது பணிவை இழந்துவிட்டீர்கள்’ என்கிறார். தருக்குவதற்கு ஏதும் இல்லை என்றறிகையில் நாம் அடக்கம் கொள்கிறோம். நாம் எவர் என்பதை இன்னும் நாமறியோம். ‘நானறியேன்’ என்று நீங்கள் சொல்கையில் உங்களது மெய்யான இருப்பு திகழும் கோவில் அது. அந்த அறியாமையின் வாயில் திறக்க வேண்டும். இருட்டறையில் எவரோ இருந்தபடி ‘நானறிவேன்’ என்கிறார். அந்த ஒலி வெளியே வருகையில் ‘நானறியேன்’ என்று மாறுகிறது. ஏனென்றால், ‘நானறியேன்’ என்பதைச் சொல்வது ‘அறிந்த’ ஒருவர். அறிந்தவர் ஒருவர் பின்னால் அமர்ந்து ‘நானறியேன்’ எனச் சொல்வது ஓர் அற்புதம்தான்!

‘அறிந்தேன் என்று சொல்பவன் அறிவதில்லை; அறிந்தவன் மௌனம் காக்கிறான்’ என்கிறது கேனோபநிடதம். அறிந்தவன் அடையும் வியப்பு ‘நான் அறிந்தேன்’ என்று அவனை எண்ண விடுவதில்லை. 

நான் இங்கே உங்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், எண்ணற்ற நுண்ணியிரிகள் என் நுரையீரல்களிலும் இருதயத்திலும் தங்கள் காலை உணவை உண்டுகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தவை, தமக்கென ஒரு ஆளுமையைக் கொண்டவை. உமிழ்நீரை நுண்ணோக்கியில் வைத்துப்பார்த்தால், ஒவ்வொரு நுண்ணுயிரியும் தனக்கேயான நிரலோடு வளைய வருவதை காணலாம். சில மேல்சட்டையோ கால்சட்டையோ அணிந்திருக்கும், சில மழிக்கப்பட்டிருக்கும், சில தாடியோடு காணப்படும். எனக்குள் இத்தனையும் இருக்கையில் நான் ஒரே ஒருவன் என்பது போல் நான் நடந்துகொள்கிறேன். ஆக, நான் என்பது பல்லாயிரம் மக்கள்; அல்லது நாம் எல்லோரும் ஒரே ஒருவர்.

இப்போது, உடலுக்குள் உள்ள இவற்றையெல்லாம் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் ஆணியை எண்ணிப்பாருங்கள். அதனை தியானியுங்கள். மொத்த உடலையும் ஒன்றெனப் பிணைத்து வைத்திருப்பது எது? உடல் ஏன் உதிர்ந்து விழாமல் இருக்கிறது?

ஒருமுறை ஆஸ்திரேலியாவில் நண்பர் ஒருவர் என்னைக் காண வந்தார். என்னை சந்திக்கப் போகும் பேரவாவில் தாறுமாறாக காரை ஓட்டி வந்து ஒரு விளக்குத்தூணில் மோதிக் கொண்டார். பெரும் அதிர்ச்சிக்குப் பின், ஏதோ குறைவதுபோல் தோன்றியது. ஒரு கை மட்டுமே இருப்பதை பார்த்தார். மற்றொரு கை கழன்று தனியே அருகில் கிடந்தது. அப்படி ஒரு கை கழன்று வரக்கூடும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. மக்கள் அவருக்கு உதவ வந்தபோது அவர் தெளிவாகவே இருந்தார். தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தேவையில்லை என்று அவர்களிடம் சொன்னார். ‘என் நண்பர் வெறும் தொடுகை மூலமே இதை குணப்படுத்திவிடுவார்’ என்று சொன்னவர், அதை பொருத்தும் வர்மக் கலை பயில்பவரிடம் தன்னை அழைத்துச் செல்லும்படி கூறினார். பின்னர் அவர் என்னிடம் அழைத்துவரப்பட்டார். ‘ஒன்றுமில்லை, என்னை தொடுங்கள், போதும்’ என்றார். இது எப்படி நிகழ்ந்தது என்று எங்கள் யாருக்கும் தெரியாது. சிறிது நேரத்தில் அவர் குணமாகிவிட்டார். கழன்றது போலவே அந்தக் கை மீண்டும் சேர்ந்துவிட்டது. அதை குணப்படுத்தியவர் யார்?  அவ்வளவு எளிதாக அது தன்னைத் தானே எப்படி சரிசெய்துகொண்டது? நாமறியோம்.

இந்த ஆணி எங்கே இருக்கிறது? உண்மையில் புரிவட்டு-ஆணி என ஏதுமில்லை. ஒரு பாவனைதான் அனைத்தையும் பிணைத்திருப்பது. இரண்டு கால்களைக் கொண்டு நடக்கையில் நீங்கள் செய்வது ஒரு பெரும் உடல்வித்தை என்பதை நீங்கள் உணர்வதில்லை. வாழ்வெனும் இந்த அதிசயத்தைத்தான் நீங்கள் தியானிக்க வேண்டும்.

உங்களில் உள்ள அதே அதிசயம்தான் ஒரு அட்டைப்பூச்சியிலும் உள்ளது என்பதை கவனியுங்கள். தியானத்திற்கென இங்கு வருகையில் அப்பாவி அட்டைகளை மிதித்துவிட வேண்டாம். அவற்றால் விரைவாக நடக்க முடியாது. உங்களைப் போலவே அவையும் இங்கே திகழ விழைபவை. மெல்ல மெல்ல படியேறி அவை வருகின்றன. தியான அறைக்கு வந்து சேர்வதற்குள் ஒரு தீவிர சிந்தனையாளர் அவற்றை மிதித்துவிடுகிறார். அதோ மூலையில் அமர்ந்தபடி நம்முடன் தியானத்தில் ஈடுபட்டுள்ளது ஒரு சிலந்தி. எளிய இச்சிறு உயிர்கள் எல்லாமே நாம் சார்ந்துள்ள அதே வாழ்வெனும் வலையின் ஒரு பகுதியே. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s