[சங்கரர் எழுதிய ‘சௌந்தர்யலஹரீ’ நூறு பாடல்களைக் கொண்டது. இதில் முதல் நாற்பத்தியோரு பாடல்கள் அடங்கிய ‘ஆனந்தலஹரீ’ எனும் பகுதிக்கு குரு நித்ய சைதன்ய யதி எழுதிய உரை]
அறிமுகம்
வேதாந்தத்தின் மரபார்ந்த உளவியலின்படி முழுமுதல் என்பது அறிவெல்லைகடந்த ‘பரா’வாகவும் உள்ளார்ந்த ‘அபரா’வாகவும் கருதப்படுகிறது. தாந்திரீகம் சற்று வேறுவகையில் இவற்றை முறையே சிவன் என்றும் சக்தி என்றும் கூறும். புராணங்கள் சிவனை முப்புரம் எரித்த திரிபுராந்தகன் என்று வர்ணிக்கும். புரம் அல்லது நகரம் என்பது மானுடம் சார்ந்த பல்வகைக் கட்டுமானங்கள் கொண்ட அமைப்பு. இயலுலகு, இன அல்லது சமூகப் பண்பாட்டுலகு, அக உலகு என்ற மூன்றுமே இங்கு மூன்று நகரங்களாக சுட்டப்படுவன.
மனிதன் தான் வாழும் இயலுலகு குறித்து ஆர்வம் கொண்டவனாயிருக்கிறான். இயலுலகெனும் நகரத்தில், ஒண்மீன்படலம் தொடங்கி உயிரியல் அமைப்பு வரை பற்பல அமைப்புகளை கரந்து வைத்திருக்கும் விண்மீன்கள் நிறைந்த வானம் உள்ளது. மனிதன் தனது கோளின் சுழற்சிப் பாதைக்குள் தன் வாழ்க்கை நிகழ்வுகளை எல்லாம் கோள்களின் சுழற்சிகளோடும் நிலவின் தேய்வு-வளர்ச்சியோடும், ஞாயிறு நிலநடுக்கோட்டை கடக்கும் காலங்களோடும், பருவநிலை மாற்றங்களோடும், அவனது நிலையின்மையை உணர்த்தும் கடலின் கொந்தளிப்புகளோடும், புயல்களோடும், நிலநடுக்கங்களோடும் தொடர்புறுத்திக்கொள்கிறான். மானுடனது இயலுலகு அவனது தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவின்மேல் ஒளிரும் பனித்துளியில் தொடங்கி இன்னும் தன் ஒளியால் இந்த பூமியைத் தொடாத மிகச் சேய்மையில் உள்ள விண்மீன் வரை விரிந்துள்ளது. இந்த நகரம் வியப்பாலும், பேரளவினதாலும், உயர்வாலும் நிரம்பியுள்ளது. தனது பேரளவாலும் பெரும்பண்பாலும் இந்த இயலுலகு மனிதனை அதிர்ச்சியுறச் செய்துகொண்டே இருக்கிறது. தனது சிறுமையோடு ஒப்பிட்டு அவன் வேதனையுறும்படி செய்கிறது. அதே சமயம் தனது அற உணர்வின் பெருமையை எண்ணி இறும்பூதெய்தும்படியும் செய்கிறது. Immanuel Kant சொல்வதைப் போல அந்த அற உணர்வு “புற உலகுகளின் பெருமைகள் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்தது”.
அடுத்தபடியாக, புன்னகைகளையும் கண்ணீர்த் துளிகளையும் தோரணங்களெனக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட “அற உலகு” மனிதனின் இரண்டாவது நகரமாகத் திகழ்கிறது. இங்குதான் அவன் தன் உற்றார் உறவினரோடு காதலும் வெறுப்பும் கொண்டு, மணம்புரிந்து, பிள்ளைபெற்று, நிலம் திருத்தி கால்நடை வளர்த்து வாழ்கிறான். இங்குதான் அவன் அனைத்தையும் – போரையும்-அமைதியையும், அறத்தையும்-நீதியையும் கூட – வாங்கி-விற்றுப் பிழைக்கிறான். சமூகவியல், வணிகம், பொருளியல், அரசியல் என்பவை எல்லாம் இந்நகரத்து பொழுதுபோக்குகள். இதில் பள்ளிகளையும், சட்டமன்றங்களையும், சிறைச்சாலைகளையும், அகதி முகாம்களையும், கோயில்களையும், கலைக்கூடங்களையும் எழுப்புகிறான். ஆடல், பாடல், நாடகங்களில் களிக்கிறான். இந்நகரத்தில் இருந்தபடி பிற கோள்களுக்கு விண்கலங்களை அனுப்புகிறான். அருமையான மனித உயிரைக் காக்க மருத்துவத்திலும் அறுவை சிகிச்சையிலும் பல அற்புதங்களை இயற்றுகிறான். அதே உளச்சான்றுடன் தான் அஞ்சுபவரை மின் நாற்காலியிலிட்டு அழித்தொழிக்கிறான். பொருளில்லாதவற்றிற்கு பதட்டம் கொண்டபடி ‘சம்சாரம்’ எனப்படும் இந்த இரண்டாம் நகரில் வாழும் மனிதன் அழகின், மெய்மையின், நன்மையின் தரிசனங்களையும் பெறுகிறான்.
மானுடனின் மூன்றாவது நகரம் அவனது மூளைப் பிளவிலும் அவனது இருதயம் எனும் குகையிலும் திகழ்கிறது. அது அவனது அக மண்டலம். மனிதனின் மேலோட்ட நனவே இந்நகரத்தின் முகமென அமைந்துள்ளது. அது தன் வண்ணங்களை காலைநேர இளஞ்சிவப்பிலிருந்து அச்சம்தரும் இரவுகளின் கருமைக்கு மாற்றிக்கொள்கிறது. இந்த உலகில்தான் மனிதன் காமம் கொள்கிறான், வசைபாடுகிறான், கருணை கொள்கிறான், அழிக்கிறான், வீரம் கொள்கிறான், அஞ்சுகிறான். மறைபொருட்களும் அற்புதங்களும் இந்நகரத்தை நிறைத்திருக்கின்றன. அவற்றின் மீதான வியப்பும் அச்சமும் மனிதனுக்கு விளங்காத ரகசியமாகவே உள்ளது. மிகமிக ஆழத்தில் அமைந்த இந்த அக நகரில்தான் முழுமுதலின் அழைப்பை மனிதன் செவியுறுகிறான்; விடுதலைக்காக, மீட்புக்காக ஏங்குகிறான். இங்குதான் முப்புரம் எரித்த திரிபுராந்தகனின் நெற்றிக் கண்ணின் அனைத்தையும் அழிக்கும் ஒளியை அவன் பெறுகிறான்.
தனியரில்ர உறையும் நனவெனும் சிறுபொறியை, அனைத்தையும் விழுங்கும் பெருந்தீயாக எரிய வைக்கிறான் சிவன். அந்தத் தீயானது, பிரம்மாண்டம், சம்சாரம், அஹம்காரம் எனும் மூன்று நகரங்களுக்கும் பொருளும் வடிவும் அளிக்கும் காலம்-இடம், பெயர்-வடிவம் என அனைத்தையும் எரித்தழிக்கிறது. திரிபுராந்தகனின் எதிரிணையாக திரிபுரசுந்தரி அமைந்திருக்கிறாள். மானுடனது மேற்சொன்ன நகரங்கள் மூன்றையும் தன் அழிவிலா ஒளியாலும் திரையெனும் மாயையாலும் எழிலூட்டுகிறாள் அவள். வான்மண்டலமும் இயற்கையும் அமைந்த நகரம், தனியரிடையேயான உறவுகளால் ஆன நகரம், பாலுணர்ச்சியும் உயர்வான அகமும் அடங்கிய நகரம் என இம்மூன்று நகரங்களிலும் திரிபுரசுந்தரியின் எழிலைக் காணும் மனிதன் சொல்லிழந்து நிற்கிறான். அவளது ஞானத்தின் மெய்மையால் அவன் ஒளிர்வு பெறுகிறான். மாறாத அவளது விதிகளாலும், அமைப்பு குறித்த அவளது மேதைமையாலும், இணையில்லா அவளது நன்மையாலும் ஊக்கம் பெறுகிறான். மாற்றமில்லாத சிவனது கீழ்வானில் படைப்பின் பொன்வண்ணத்தையும், ஒண்சிவப்பையும் பூசுகிறாள் திரிபுரசுந்தரி. அவனது நண்பகல் வானில் கர்ம சக்கரம் எனும் செயல் கடிகாரத்தை நிறுவுகிறாள்; அது சம்சாரம் எனும் சக்கரத்தை லயங்களில் சுழல வைக்கிறது. அவனது மாலை வானத்தில் மறையும் சூரியனின் ஒண்சிவப்புத் திரைக்குப் பின்னால் அனைத்தும் மறையும் அழிவை வரைகிறாள் அவள்.