ஶ்ரீசக்ரம் என்பது பிரபஞ்ச அமைப்புக்குள் ஒருவரது இயக்கத்தை ஆதிமொழி வழியே விளக்குவது. இந்த வரைபடத்தில் (யந்த்ரம்) உள்ள மேற்சுட்டி நிற்கும் நான்கு முக்கோணங்கள் முழுமுதல் ஆன்மாவை அல்லது பிரபஞ்ச நனவை (புருஷன்) குறிப்பன. கீழ்சுட்டி நிற்கும் ஐந்து முக்கோணங்கள் ஐம்பெரும் மூலப்பொருட்களால் ஆன இயற்கையை (ப்ரக்ருதி) குறிப்பவை. மெய்மையின் எந்தக் கூறையும் முழுக்க முழுக்க உடல்சார்ந்ததாகவோ, முழுமையாக ஆன்மா சார்ந்ததாகவோ பார்க்க முடியாது எனும்படி அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இதழ்களால் அமைந்த இரண்டு வட்டங்கள் முழுமையாக மலர்ந்த தாமரைகளை குறிப்பன. அவை, அண்டமும் பிண்டமும் ஒரு பூவென மலர்பவை என்பதை சுட்டி நிற்கின்றன.
தியானத்திற்கு உதவும் ஒரு கருவியாக அமைந்துள்ள ஶ்ரீசக்ரம், யோகசாதகர் தனது செயல் மற்றும் சாரத்தின் ஒருமையை முழுமுதலுடன் அடையாளம் காண்கையில் தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. தொடக்கப் புள்ளியில் உள்ள இதழிலிருந்து தியானம் தொடங்குகிறது. புறவட்டத்தில் உள்ள இதழ்களில் இடம்வலமாகச் சென்று பின்னர் உள்வட்டத்தில் உள்ள இதழ்களில் தொடர்கிறது. அடுத்ததாக, தொடக்கப் புள்ளியில் உள்ள முக்கோணத்தில் ஆரம்பித்து வலமிடமாக முக்கோணங்களின் புறக்கோடிப் புள்ளிகளைச் சுற்றி இறுதியாக செங்குத்தான அச்சில் வைக்கப்பட்டுள்ள கடைசி நான்கு முக்கோணங்களில் சென்று முடிகிறது. ஒவ்வொரு இதழுக்கும், ஒவ்வொரு புள்ளிக்கும் என அதனுடன் தொடர்புடைய ஒரு பீஜமந்திரமும், பேரன்னையின் இறைமைக் கூறு ஒன்றும் உண்டு. ஒவ்வொரு தியானமும் அழகின் அறிவெல்லைகடந்த ஆற்றலை எதிரொளித்து நம்மை மெய்மையின் ஒருமைக்கு இட்டுச்செல்கிறது.