ஐம்
வாழ்வெனும் நாடகத்தை ஆட்டுவிக்கும் அன்னையே! உலக நாடகம் எனும் உனது பேராடலின் ரகசியத்தை புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதன் கருத்தாக்கம், நடிகர்களின் பங்கு, பங்குகொள்வோரில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்ற மூன்று நிலைகளையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். ஒரு புள்ளியிலிருந்து (பிந்து) பெரும் அண்டத்தை உண்டாக்கும் உனது பிரபஞ்ச லீலையை ஆடுகிறாய். இவ்வுலகே வாழ்வெனும் நாடகம் (கலை) நிகழும் அரங்காக அமைகிறது. முளைவிடும் இலையின் ஊட்டத்தை பகிர்ந்துகொள்ளும் இரு விதைக்கதுப்புகளை போல உனக்கும் உன் இறைவனுக்கும் இடையிலான முதல் துடிப்பு அல்லது முதல் அதிர்வு நிகழ்கிறது. அதுவே ஆன்மாவுக்கும் படைப்பியல்புக்கும் இடையிலான பிணைப்பாக (சிவ-சக்தி யோகம்) போற்றப்படுகிறது. வாழ்வெனும் நாடகத்தின் முதல் காட்சியாக அமையும் அதுவே பழம்பெரும் மறைகளில் எல்லாம் படைப்பூக்கமென வர்ணிக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டத்தில் ஆடலுக்கான முகமைகள் தோன்றிப் பெருகுகின்றன. ஒரு நாடகத்தில் நடிக-நடிகையருக்கு அவரவருக்கான பாத்திரங்களை ஒதுக்குவது போன்றது இது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பண்பும் முழுமையாக வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையை தவறாது கடைபிடிக்கும்படி நடிகர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நடிகரும் தான் ஏற்ற பாத்திரத்தோடு முழுமையாக ஒன்றிவிட்டார் என்று பார்ப்போர் நம்பும்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, வசனங்களைப் பேசி நடிக்க வேண்டியிருக்கிறது.
நடிகருக்குப் பொருத்தமான ஆடை அணிகலன்கள் ஒப்பனை அறையில் வழங்கப்படுகின்றன. உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன; அல்லது முகமும் உடலும் கவர்ச்சிகரமாக சாயம் பூசப்படுகின்றன. நடிகர்களின் அழகை ஒரு அழகுப் போட்டியில் கைக்கொள்ளப்படும் வரையறைகளைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. பார்ப்பவரின் கற்பனையில் கதாபாத்திரம் குறித்து சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதே அழகெனக் கொள்ளப்பட வேண்டும். வில்லனை கதாநாயகனிலிருந்து பிரித்தறியும்படி ஒப்பனை அமைய வேண்டும். இயக்குநர் நடிக-நடிகையர் ஒவ்வொருவருக்கும் நுட்பங்களை கற்றுத்தருகிறார்.
இத்தருணத்தில் நீயே மேலாளர், நீயே இயக்குநர், நீயே நாடகாசிரியர். நடிகர் ஒவ்வொருவரும் தமது பங்கை கச்சிதமாக ஆற்றும்படி அவர்களை நீ இயக்குவதில்தான் நாடகத்தின் வெற்றி அமைகிறது. ஒரு நாடகம் நடிக்கப்படுவதில் பாதி ஒப்பனை அறையில் வழங்கப்படும் அறிவுரையைப் பொறுத்து அமைகிறது. மீதி அரங்கில் ஒவ்வொரு காட்சிக்குமான அமைப்பு, சூழலை கட்டமைத்தல், ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. இதை வாழ்வின் தருணங்களிலும் காண முடிகிறது. நுண்ணியிரிகளை ஒரு நிமிடத்திற்குள்ளாக பல்லாயிரக்கணக்கில் பெருகச் செய்யும் நீ, மிக அரிதாக யானை கன்றீனுவதற்கு பல காலம் காத்திருக்கிறாய். உனது ஆடலமைப்பை முடிவு செய்த பின் உன்னால் கற்பிக்கப்பட்ட நடிகர்கள் தமது நடிப்பை உரிய வரிசையில் நிகழ்த்தும்படி செய்கிறாய்.
இந்நாடகம் பார்வையாளர்களை முழுமையாக மகிழச் செய்யவேண்டும் என நீ எண்ணுகிறாய். அதற்கென ஒரு விதியை வைத்திருக்கிறாய் – புறவயமாக நிகழ்த்தப்பெறும் நாடகத்தில் பார்வையாளர்களும் அகவயமாய் பங்குபெறவேண்டும் என்பதே அது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு நடிகரால் நடிக்கப்பெற்று பார்வையாளர் ஒவ்வொருவரும் அக்கதாபாத்திரத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, நடிகருக்கும் பார்வையாளருக்கும் இடையே ஒரு அகவயமான உணர்ச்சிப் பரிவர்த்தனை நிகழ்கிறது.
இந்தப் பங்கீடு மூன்றுவிதமாக நிகழ்கிறது. முதலாவதாக, நாடகத் தருணம் காரண காரியத்தோடு விளக்கப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் குழப்படியான எண்ணத்திற்குக் கூட பகுத்தறிவின் அடிப்படியிலான ஒரு விளக்கம் இருக்க வேண்டும். இரண்டாவது, நவீன ஓவியத்தில் கருப்பொருளின் இயல்பைத் திரித்து கலைச்சுவையோடு வேறொரு ஒழுங்கில் முன்வைப்பது போன்றது. நற்பண்பாளனாக இருக்க வேண்டிய கதைநாயகன் நேரான சிந்தனையும் உயர் விழுமியங்களும் கொண்டவனாக சித்தரிக்கப்படுகிறான். எதிர்மறையான விழுமியங்களைக் கொண்ட அவனது எதிரியான வில்லன் மூலமாக முரணிசைவு நயம் கட்டி எழுப்பப்படுகிறது. மூன்றாவது, உயர் விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாத மடமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுவது. பழங்காலத்தில் இத்தகைய பாத்திரங்கள் கோமாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இவற்றோடு வெளிப்படையான செயல்பாடும் இயங்குகிறது. கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி, பொருத்தமான செயல், திறம் மிகுந்த நடிப்பு ஆகியவை முதலாவது வகைமையில் அடங்குவன. அடுத்ததாக, நல்லவர் ஒருவரின் செயல்பாடுகள் தீயவரது செயல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. இவ்விரண்டு செயல்பாடுகளும், தாழ்ந்தவர் ஒருவரின் அருவருக்கத்தக்க செயல்பாடு மூலம் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. இம்மூன்றும் நாடகத்தின் இயக்காற்றலிலும், கதாபாத்திரங்களுக்குத் தேவையான ஆற்றலை தொடக்கம் முதல் இறுதிவரை ஒருசீராக அளிப்பதிலும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுவதற்கான உறுதிப்பாட்டிலும் இயங்குகின்றன.
அன்னையே, இவ்வகைமைகள் உனது முக்குணங்களைப் போலுள்ளன – சத்வ குணத்தின் தூய தெளிமை, ரஜோ குணத்தால் வரும் கலக்கம், தமோ குணத்தால் வரும் செயலற்ற குழப்பம். டெபுஸி போன்ற இசைக்கலைஞரால் திட்டமிட்டு சேர்க்கப்படும் இசைகேடு கூட இசையின் இனிமையை கூட்டவே செய்கிறது. அதே போல், முக்குணங்களையும் பொருத்தமான முறையில் சமச்சீராக்குகையில் உனது நாடகத்தின் எழில் கூடுகிறது. ரசிகனில் எத்தகைய உணர்ச்சியை தூண்ட வேண்டும் என்று விழைகிறாரோ அதற்கேற்றபடி வண்ணங்களையும் தூரிகையையும் கையாளத் தெரிந்தவரே ஓவியர். வாழ்வெனும் நாடகத்திற்கு நீ தேர்ந்தெடுக்கும் கருப்பொருள்களும் அத்தகையவை. அனைத்தும் ஒரு நாடகமே என்பதை நீ நன்கறிவாய். அதனால்தான் கவிகள் உன்னை மாயக் கலையின் சூத்ரதாரி என்கின்றனர்.
முக்குணங்களுக்கேற்ப விதவிதமான மனநிலைகளை உன் கதாபாத்திரங்களில் நீ உருவாக்குகிறாய். சத்வ குணத்தை நீ அருள்கையில் அங்கு வியப்பும் (அத்புதம்), கருணையும், அமைதியும் (சாந்தி) ஏற்படுகிறது. காமத்திலும் (சிருங்காரம்), சினத்திலும் (ரௌத்ரம்), வீரத்திலும் நீ ரஜோ குணத்தை வைக்கிறாய். அருவருப்பிலும் (பீபத்ஸம்), அச்சத்திலும் (பயம்), நகைச்சுவையிலும் (ஹாஸ்யம்) உனது தேர்வு தமோ குணம். ஆக, நவரசங்களிலும் உனது ஒருங்கிணைக்கும் திறன் நடிகர்களை வழிநடத்துகிறது.
தாயே, உண்மையில் மொத்த நாடகமும் உனது கனவுதான். இல்லையெனில், அன்னையரிலேயே கருணைமிக்கவளான உன்னிடம் மறைக்கப்பட்ட பொய்யான பொறாமையையும், சினத்தையும், பகைமையையும், அச்சத்தையும் விகாரத்தையும் யார் எதிர்பார்க்கமுடியும்? வாழ்வென்பதே எங்களால் நடிக்கப்பட வேண்டிய ஒரு நகைச்சுவை நாடகம்தான் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டால் எத்துணை சிறப்பாக இருக்கும்! எங்களால் எப்போதும் சமநிலையில் இருக்க முடியும். சிறைகளுக்கோ புகலிடங்களுக்கோ நாங்கள் செல்லவேண்டியிருக்காது. அன்னையே, லீலா என்பதுதான் உனக்கு மிகப்பொருத்தான பெயர். உனக்கு வெற்றி உண்டாகட்டும்!
|| ஐம் ||