ஶ்ரீசக்ர தியானம் – 50

ஶ்ரீம்

அருள்தருமன்னையே, தோரணவாயில் எழுப்புகையில் முதலில் மையக்கல் செங்குத்தாக வைக்கப்படுகிறது. பின் அதைத்தாங்கும் கற்களோ செங்கற்களோ முதலில் கிடைமட்டத் துவக்கத்தில் தொடங்கி ஒவ்வொன்றும் சிறிது சாய்ந்தபடி அடுக்கப்பட்டு முழுமையான வளைவு உண்டாகும்படி வைக்கப்படுகின்றன. முத்துமாலையில் முகப்பு நடுவே வைக்கப்படுகிறது. மையமாக உள்ள அருமணியின் அழகை உயர்த்திக்காட்டும்படி மற்ற மணிகள் அமைகின்றன. ஒவ்வொரு முத்தும் அருமணியும் ஒன்றையொன்று முழுமை செய்தபடி மாலையை ஆகச்சிறந்ததாக ஆக்குகின்றன.

அரசவிருந்தில் மன்னரோ, குடியரசுத் தலைவரோ அரியணையிலோ மைய இருக்கையிலோ அமர்கிறார். மற்ற விருந்தினர்கள் அவரைச் சூழ அமர்கின்றனர். மற்றவரின் ஒப்புதலோடு அரசருக்கோ தலைவருக்கோ கிடைக்கும் அரசுரிமையின் அடையாளமாக அவர்கள் இருக்கின்றனர். சூரியமண்டல அமைப்பில் சூரியனுக்கு மையமான இடத்தை அளித்திருக்கிறாய். மற்ற கோள்கள் அதை சுற்றிவருகின்றன. ஒருவரது புருவங்களுக்கு இடையே ஆன்மாவின் ஒளி என ஒரு கண்ணை வரைகிறாய். அதன் இருபுறமும் இயல் பார்வை கொண்ட கண்கள் இருக்கின்றன. மற்ற புலன்கள் அனைத்தும் அவற்றின் துணையென அமைந்திருக்கின்றன.

பிறர் ஆடிப்பாடி களிக்கையில் அமைதியான யோக சாதகர் முழுமையாக உன்னில் ஆழ்ந்து அமர்கிறார். ஞானியானவர் எவ்விதப் பற்றும் விழைவும் இன்றி, தளைகளற்றவராக, அனைத்திலும் ஒற்றை இறையைக் காண்பவராக இருக்கவேண்டும் என்பதே உன் எதிர்பார்ப்பு. ஆனால், பிறர் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட நிலைகளில் இருந்தபடி தமது கடமைகளை தவறாது ஆற்றவேண்டும் என்றெண்ணுகிறாய். அழகியல்சார் உலகில் புலனின்பங்களைக் கடந்த மந்த்ர ஞானிக்கு மேன்மைமிகு அழகை காட்டித்தருகிறாய். அதே சமயம், புலன்சார் உலகில் இசை ஓவியம் கட்டடக்கலை போன்றவற்றில் படைப்பூக்கத்தை அள்ளி வழங்குகிறாய்.

இவ்வாறாக, ஒன்று-பல என்பவற்றின் இடையிலான முரணியக்கத்தில் பல்வேறு வகைமாதிரிகளை வைத்திருக்கிறாய். நாங்கள் ‘ஒன்றை’ தேர்ந்தெடுக்கையில், ‘பல’வற்றை ஒறுக்க வேண்டியுள்ளது. ‘பல’வற்றுடன் இருக்க விழைகையில் எம்மால் ‘ஒன்றை” அடையமுடிவதே இல்லை. எம்மை ஒழுங்குபடுத்த நீ இடும் கட்டளைகளில் சிறு வருத்தத்தை தவிர்க்க முடிவதில்லை. இருத்தலியல்சார்ந்த களிப்பில், ‘பிறிது’ என்பது உன்னளவுக்கே மெய்மை கொண்டது. இசைப்பவருக்கு ரசிகரும், விளக்கம் தருபவருக்கு கேட்பவரும் உள்ளனர். ஒரு இணை கைகோத்தபடி வெளியின் இசைக்கேற்றபடி ஆடமுடிகிறது. 

முழுமுதலை சார்புடையவற்றிலிருந்து வேறுபடுத்தும் மெல்லிய கோடொன்று எப்போதும் உள்ளது. தேன்பொழியும் மலர்களைச் சுற்றி மொய்க்கும் வண்டுகளைப் போல, உலகியல் இன்பங்களில் நாட்டம் கொண்டோர் சந்தைகளில் மொய்க்கின்றனர். நீ அவர்களை ஒறுப்பதில்லை. அவர்களுக்கு வணிகத்தில் உள்ள இன்பத்தை அளிக்கிறாய். எண்ணற்ற நுகர்பொருட்கள் தயாரிக்கப்பட்டு பண்டமாற்று நிகழ்கிறது. ஆனால், கருவறையின் அமைதியில் எந்தக் கொடுக்கல்-வாங்கலும் இல்லை. அக்கருவறையில் நுழையும் அரிதான ஒருவர் எதிர்பார்ப்பது, அனைத்து விழுமியங்களையும் கடந்து நிற்கும் அமைதியை மட்டுமே.

பிரபஞ்ச விழுமியங்கள் அனைத்தும் உருவெடுத்தவளாக உன்னை நாங்கள் காண்கிறோம். எழுத்துருக்களால் ஆன ஊழ்கமணிமாலையை உருட்டியபடி, உன் வீணையின் தந்திகளை இனிமையாக மீட்டியபடி, அனைத்து எழில்களின், கலைகளின், கைத்திறன்களின் ரசிகையென அமர்ந்திருக்கிறாய். எப்போதும், பெருங்கற்பனை கொண்ட கவிகளாலும், அருந்திறன் ஓவியர்களாலும், இசையின் நுணுக்கங்களில் திளைக்கும் இசைஞர்களாலும் சூழப்பட்டிருக்கிறாய். உன் கவனத்தை அவர்களனைவருக்கும் அளிக்கிறாய். உனது இடம், வலம், எதிர் என எங்கும் சூழ்ந்திருக்கும் அவர்களை உனது ரசனையும் போற்றுதலும் நிரம்பிய பார்வை வாழ்த்திக்கொண்டே இருக்கிறது. என்றபோதும், அனைத்தும் கடந்தநிலையையே நீ ரகசியமாக போற்றுகிறாய். ஏனெனில், உனது ஞானவிழி எப்போதும் உன் இறைவன் இருக்கும் இடத்திலேயே இருக்கின்றது. முடிவின் மீதான உனது இடைவிடா கவனத்தை எதனாலும் சிறிதும் அசைக்க முடிவதில்லை. அதுவே உன் அருளின் ரகசியம். அன்னையே, தீக்கை பெற்றவர்களாலேயே இதை அறிய முடியும். தீக்கை பெறத் தகுதியானவர் யார் என்பதை நீ மட்டுமே அறிவாய். உனக்கு எமது வணக்கங்கள்.

|| ஶ்ரீம் ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s