ௐ
இங்கு-இப்போது நாங்கள் காலூன்றி நிற்க ஒரு நிலத்தை நல்கியுள்ளாய். செயல்படுவதற்கு ஒரு களத்தையும், எய்துவதற்கு ஒரு இலக்கையும் அளித்துள்ளாய். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கென தனிப்பட்ட வடிவமும், சிறப்புப் பெயரும் கொண்ட தனி அடையாளம் ஒன்றுள்ளது. ஒரு ஆசிரியரைப் போல, எதிர்பார்ப்போடு எமது கண்களை பார்க்கிறாய். உனது கட்டளைகளை சிறிதும் பிறழாமல் நாங்கள் நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கிறாய். எமக்கு வழிகாட்டும் விண்மீனை உன் கண்ணில் காண்கிறோம். எமக்கொரு வாய்பாட்டுச் சுவடி போலிருக்கிறாய் நீ. நாங்கள் தவறிழைக்க விரும்பவில்லை. எனவே உன் கண்களை பார்க்கிறோம். நீ ஆமோதித்தால் நாங்கள் மேற்கொண்டு செல்கிறோம். நீ மறுக்கிறாய் என்று உணர்ந்தால் எங்களை திருத்திக் கொள்கிறோம். எமது செயல்பாட்டு உலகில் பணிகளை ஏவுபவராக நீயே இருக்கிறாய். எமது செயல்களை நாங்கள் விரைவாகவும் திருத்தமாகவும் செய்யவேண்டும் என நீ எதிர்பார்க்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம். உனது சக படைப்பாளிகளாக நாங்கள் செயலாற்றும்போதுதான் ஒருமைவாய்ந்த செயல்பாட்டில் நாங்கள் நிலைபெறுகிறோம். அதற்கென உன் காலடிகளை நேர்மையுடன் பின்பற்றுகிறோம். எமது இலக்கை நீ கண்டடைந்துவிட்டாய். உனது இதயத்தில்தான் உன் விழிகள் உள்ளன. உன் இதயமோ செல்வம் இருக்கும் இடத்தில் உள்ளது. எமது நிறைவு இருக்கும் இடத்தில்தான் உன் செல்வம் உள்ளது. எனவே, நாங்கள் ஏதாக வேண்டும் என நீ விழைகிறாய் என்பதை அறிய உன் விழிகளையே நோக்குகிறோம்.
செயல்படும் விழிப்புநிலையிலான உலகிலிருந்து, கனவுகள் நிரம்பிய அதிசயத் தோட்டத்திற்கு நீ எம்முடன் வருகையில், எமது செயல்திறம் கொண்ட கண்களை பறித்துவிடுகிறாய். பதிலாக, ஒரு கவியின் கண்களை, சிற்பியின் கண்களை அல்லது ஓவியனின் கண்களை எமக்களிக்கிறாய். இசைக்கென சிறப்பான செவிகளை எமக்களிக்கிறாய். விரைவுகொண்ட எமது கால்களில் நடனத்திற்கான லயம் கொண்ட அடிகளை வைக்கிறாய். விண்ணுலகில் இசைக்கப்படும் தாளலயத்துடன் எமது இதயத்துடிப்பை பொருந்தச் செய்கிறாய். உனது மந்திரக்கோல் கொண்டு, நீ உன் குழந்தைகளுடன் களிப்பதை நிலவும் விண்மீன்களும் வானிலிருந்தபடி ரசிக்கும்படி செய்கிறாய்.
அந்த அழகிய உலகில் எவரும் தவறிழைப்பதில்லை. உன்னைப் பொறுத்தவரை எல்லாமே கலைப் படைப்புகள்தான். குழந்தைகள் சுவற்றில் கிறுக்குவதையும், வீட்டையே தலைகீழாக்குவதையும் அன்னையர் அப்படித்தானே கொண்டாடுகிறார்கள்? உனது ஒப்பிலா அன்புப் பார்வையில் அல்லாமல், அத்தகைய சுதந்திரம் எமக்கு வேறெங்கு கிடைக்கும்? எமது ஆற்றல் முழுவதும் அழிந்துபோகும்படி நீ விட்டுவிடுவதில்லை. அதற்கு முன்பாக, எமது அகமெனும் சிறு கோயிலில் உன் தியானப் பாயை விரிக்கிறாய். அதில் அமரும் நீ பேரின்ப அமைதியில் மூழ்குகையில் நாங்கள் ஆழுறக்கத்துள் செல்கிறோம். உன்னைப் பொறுத்தவரை இது திரும்பத் திரும்ப நிகழும் நிரல்தான். தானுறங்கும் முன் தன் குழந்தையை தூங்க வைக்காத அன்னை இவ்வுலகில் உண்டோ? அதைத்தான் நீ எமக்குச் செய்கிறாய்.
பின் தூங்கி முன் எழும் நீ, உன் குழந்தைகள் எழுவதற்கு முன்பாக விடியலை தயார் செய்கிறாய். சூரியன் எழுவதற்கு முன்பாக பூக்களெல்லாம் மலர்ந்திருக்க வேண்டும். புட்கள் காலையின் புகழ்பாட வேண்டும்; ஒவ்வொரு சோலைக்கும் தென்றல் அனுப்பிவைக்கப்பட வேண்டும். தேனை எங்கு வைத்திருக்கிறாய் என்பதை தேனீக்களுக்குச் சொல்ல உன் தூதர்களை தேன்கூடுகளுக்கு அனுப்புகிறாய். சிறகுகொண்ட தேவதைகளான உன் வண்ணத்துப் பூச்சிகள் கருவண்டுகளுடனான போட்டியில் தோற்றுவிடக்கூடாது என எண்ணுகிறாய். தாயானவள் தன் சின்னஞ்சிறு மகவை காப்பதுபோல், உன் எண்ணத்தை அனுப்பி தேன்சிட்டுகளை எழுப்புகிறாய். பனிமூட்டத்திற்கு தான் செய்யவேண்டியது என்ன என்பது தெரிந்திருக்கிறது. சோலையில் தவழ்ந்தபடி புல்லின் இதழ்கள் ஒவ்வொன்றின் நுனியிலும் முத்துபோன்ற பனித்துளியை வைத்துச் செல்கிறது. அத்துளிகள் ஒவ்வொன்றையும் தன் பொற்கிரணங்களால் வாழ்த்தும்படி சூரியனுக்கு நீ கட்டளையிடுகிறாய். எமக்கான உலகை எழிலூட்டுவதில் நீ எத்துணை கவனம் செலுத்துகிறாய்! அந்தி வெயிலுக்கும் விடியலின் வெயிலொளிக்கும் இடையில் உள்ள மாறுபாடுதான் எத்தகையது! பொற்தகடென மின்னும் அலைகள் கொண்ட ஆழியில் அமைதியாக சூரியன் மறைகையில் வேறொருவிதமான அழகை படைக்கிறாய். மேகங்கள் அந்தியொளியை மேற்குவானில் தொடங்கி கீழ்வானம் வரை கொண்டு செல்கின்றன. வானும் அதன் மேகங்களும் தீட்டும் வண்ணங்கள், ஆகச் சிறந்த ஓவியனாலும் எண்ணிப்பார்க்க முடியாதவை.
ஒவ்வொருவரையும் தனித்துவம் கொண்டவர்களாகவும், பொதுத்தன்மைகள் கொண்டவர்களாகவும் படைத்துள்ளதைப்போலவே, நாகரிகம் செழிக்கக்கூடிய பல்வகையான குடிநிலங்கள் கொண்டதாக இவ்வுலகை படைத்தருளியிருக்கிறாய். ஒவ்வொரு காட்டிற்கும் அதற்கேயான மாண்பும் ஆளுமையும் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு நகரத்திற்கும் அதற்கேயான வெற்றியை அளிக்கிறாய். விரிந்த பெருநகரங்கள் எல்லாம் மானுட குலத்தின் சாதனைகளாகவே பார்க்கப்படுகின்றன. அங்கெல்லாம், பரந்துவிரிந்த நோக்கு கொண்ட விசாலாக்ஷியாக நீ வணங்கப்படுகிறாய். ஒரு நகரம் செல்வச் செழிப்படைகையில் அதற்கென ஒரு மாண்பு உருவாகிறது. அங்கு வளம் கொழிப்பதால், காந்தம் போல, உலகின் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் மக்களை அது ஈர்க்கிறது. அந்நகரத்தை நீ சிறப்பாக வாழ்த்தியுள்ளதாக அம்மக்கள் கருதுகின்றனர். விழித்தெழுந்ததும் நினைவுகூரத் தக்க இடமாக அது ஆகிறது. அந்நகரத்தை ஆளும் கல்யாணியாக, நன்மை கொணர்பவளாக, நீ வணங்கப்படுகிறாய். பலரும் நாடுவது பாதுகாப்பும் காவலுமே. ஒருவருக்கொருவர் உதவுபவர்களாக, அண்டை அயலாரை நம்புபவர்களாக உள்ள மக்கள் வாழும் இடங்களை அவர்கள் நாடுகிறார்கள். அத்தகைய நகரம் அயோத்தி எனப்படுகிறது. அன்னையே, நீ இருக்கும் இடமே அயோத்தி. அதன் சிறப்புகளை பகிர்ந்துகொள்ள மக்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ள நகரமே நல்ல நகரம். அங்கிருந்து மக்கள் பல இடங்களுக்கு சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஆக, அங்கு எப்போதுமே பெருந்திரள் இருக்கும். அத்தகைய நகரம் ‘தரா’ எனப்படுகிறது. பண்பாட்டின் மெக்கா என்றழைக்கப்படும் நகரங்களும் உள்ளன. விவேகியர், பெருங்கலைஞர்கள், இசைக்கோயில்கள், தத்துவப் பள்ளிகள் எல்லாம் அங்குண்டு. அவற்றை மக்கள் இனியவையாகக் கருதுகின்றனர். அவை ‘மதுரை’கள். களி இன்பம் நாடுவோர் நகரத்தில் கேளிக்கைகளை தேடுகின்றனர். அவர்களுக்கென ‘போகவதி’களை நீ அளிக்கிறாய். இறையின் அருகாமையை நாடுவோர், பாவங்களை தொலைக்க நினைப்போர் செல்ல விழையும் புனித நகரங்களும் உள்ளன. பேரன்பு காட்டும் உன் குழந்தைகளை வாழ்த்துவதற்கென நீ அங்கே வீற்றிருக்கிறாய். அந்நகரங்கள் ‘அவந்தி’ எனப்படுகின்றன.
வெற்றிகொள் அன்னையே, உலகின் நாடுகள் அனைத்திலும் இத்தகைய பல்வித நகரங்களை நீ சமைத்திருக்கிறாய். உன் வெற்றிக்கொடி பறக்கும் நகரம் ‘விஜய’நகரம் எனப்படுகிறது. பெரும்புதிர் நீ. உன்னை நாடி நாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; அதே சமயம் எங்கும் செல்ல வேண்டியதும் இல்லை. நீ எமக்களிக்கும் கவனக்குலைவுகள் கூட உன் இதயத்தோடு எம்மை பிணைக்கும் கவர்ச்சிகளாகவே உள்ளன. உனக்கே எம் போற்றுதல்கள் எல்லாம்!
|| ௐ ||