பம் ஸர்வாங்கஸுந்தரீ
நிலையழியச் செய்யும் அழகன்னையே, சூரியன் உலகின் கண் எனப்படுகிறது. கண் ஆன்மாவின் சூரியன் எனப்படுகிறது. உன் படைப்புகளிலெல்லாம், காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில், அகத்திற்கும் புறத்திற்கும் இடையில் எதிரிடையான இருதுருவத் தன்மையை வைத்திருக்கிறாய். பார்க்கப்படும் பொருளில் கண்ணுக்குப் புலனாகும் புள்ளிகள் அனைத்தையும் நோக்கி எய்யப்படும் அம்பைப் போலவே நோக்கும் செயலில் கவனம் எனும் அம்பு கண்களில் இருந்து எய்யப்படுகிறது. வில்லாளனின் கவனமே அவன் எய்யும் அம்பின் துல்லியத்தை குறிக்கிறது. தற்காத்துக் கொள்ளலில் வில்லும் அம்பும் அவசியமானவை. உலகின் பேரன்னையான நீ, மிகமிகச் சிறிய பூச்சியில் தொடங்கி மாபெரும் வான்மண்டலங்கள் வரை அனைத்துக்கும் நன்மை பயப்பதில் கவனம் செலுத்துகிறாய். உனது கட்புலன் எல்லையற்ற விரிவு கொண்டது. உனது இரு புருவங்களையும் அம்பெய்யத் தயாராக இருக்கும் வில்லின் இருபகுதிகளாகவே கவிகள் காண்கின்றனர். வலம் இடமாகச் செல்லும் உன் மின்னல்பார்வைகள் கருவண்டுகளால் ஆன ஒரு கோடென, வில்லின் நாண் என மனமயக்கை ஏற்படுத்துகின்றன.
மிகுந்த கவனம் கொண்ட ஓவியன் எந்த ஒரு நுணுக்கத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை. உயிர்ப்பு கொண்டதையும், உயிர்ப்பற்றதையும் படைக்கும் படைப்பாளி மட்டுமல்ல நீ; அழகை உருவாக்கும் மாபெரும் சிற்பி நீ. ஒவ்வொரு வடிவத்திலும் அழகின் மாதிரியைப் படைக்கும் ஆழ்படிமக் கலைஞராக உன்னை கருதுவதே பொருத்தமானது. அதனால்தான், அழகின் ஒவ்வொரு பாகத்தைப் படைக்கவும் நீ அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறாய். விழிப்புடன் இருக்கும் உன் விழியின் அழகே ஒரு சிறந்த உதாரணம். ஓவியத்தில் உயிர்ப்பளிக்கும் கண்ணை வரையாமல் விட்டுவிட்டால் அதை யாராவது ரசிப்பார்களா? இறந்தவனின் உயிர்ப்பற்ற முகம்போலாகிவிடுகிறது அது. கருவிழியில் ஒரு ஒளித்தீற்றலை வரைந்ததும் அதில் பெரும் மாறுதல் ஏற்படுகிறது. விண்ணில் ஒளிர்வனவற்றையும் அவற்றைக் காணும் கண்ணையும் நீ அதே தொல்படிம மாதிரி கொண்டே படைத்துள்ளாய். ஒரு எறும்பின் கண்ணிற்கும் அதேயளவு அக்கறை காட்டப்படும்போது, மானின் விழிகளையும், அறியாச் சிறுகுழந்தையின் கண்களையும் என்ன சொல்ல?
ஒவ்வொரு விழிக்கும் ஒரு மறை ஆழம் உண்டு. தெளிந்த நீர்நிலையில் துள்ளி விழுந்து எழும் மீன்கள் போல கனவுகள் எழும் விண்ணக ஏரி ஒன்று உண்டு. ஒரு விழியில் இருந்து எழும் அருள்நிறை பார்வை பயங்கொள்ளியை அச்சமற்றவராக, மிரட்டி அடக்கப்பட்ட ஒருவரை வீரராக ஆக்கக்கூடும். ஒருவர் அகத்தைக் கவர்வதற்கு ஆகச்சிறந்த வழி பேச்சுதான். ஆனாலும், காதலரின் நோக்கின் முன் நாநயம் தோற்றுப்போகிறது.
“எதிரியிடம் அன்பு காட்டு” என்பதே பெரும் ஆசிரியர்கள் சொல்வது. உண்மையில் உனக்கு எதிரிகள் என எவரும் இல்லை. அனைவரையும் இணக்கமும் தோழமையும் கொண்டவர்களாக ஆக்குகிறாய். சிலரை அடிமைகளாகவும் கைதிகள் போலவும் ஆக்கி, நீ உலகை எவ்விதம் காண்கிறாய், ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாய் என்பதை உலகுக்கு உணர்த்துகிறாய். “உன் பார்வை எப்படியோ, உன் படைப்பும் அப்படியே” (யதா திருஷ்டி ததா சிருஷ்டி) என்றொரு பழஞ்சொல் உண்டு. பகைமையும் அச்சமும் நிறைந்த உலகில் சிங்கம் தன் எதிரியை வலிமைகொண்ட கைமுட்டியாலும் நகங்களாலும் எதிர்கொள்கிறது. கூரிய பற்களைக் காட்டி இளிக்கிறது. எருது தன் வலிமையான இரும்புபோன்ற கொம்பை பயன்படுத்துகிறது. ஆனால், அதே சிங்கம் தன் இணையிடம் வருகையில் அதன் கூருகிர்க் காலடி மெத்தென்றாகிறது. அன்றலர்ந்த மலர் போன்ற மென்மை அதன் கண்களில் குடிகொள்கிறது. அன்புடன் நக்கிக்கொடுக்கிறது. ஆக, உலகில் பகைமைக்கென ஒரு ஆயுதம் உள்ளது; அன்பிற்கென ஐயமில்லா கருவியும் உள்ளது.
எருதரக்கனை அழித்த மஹிஷாசுரமர்த்தினியாகவும் நீ வழிபடப்படுகிறாய். அழிப்பதற்கு நீ கைக்கொள்ளும் கருவி ஏதென்று எவரும் அறிவதில்லை. நாங்கள் அனைவருமே மாக்களாகத்தான் பிறக்கிறோம். வெறிகொள்கையில் மேலும் முரடர்களாகிறோம். ஒவ்வொரு அன்னையிலும் நீ திகழ்கிறாய், விலங்கை அடக்குவது எப்படி என நீ அறிவாய். உனதன்புப் பார்வை கொண்டு எங்களை அடக்கி அணைத்துக்கொள்கிறாய். தொட்டிலிலிட்டு தாலிசைக்கிறாய். எம்மில் இருக்கும் எருது உறங்கவைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரவும் உனது கருணையைக் காணும்போது எம்மில் உள்ள அரக்கன் அன்பு தேவதையாக மாறுகிறான். அன்னையே, அவ்வாறுதான் நீ அழிக்கிறாய்; எருதரக்கனை தடியால் அடிப்பது போல் அல்ல. வசப்படுத்துவதில் வல்லவள் நீ. சர்க்கஸில் பதினேழு வயதுப் பெண்ணொருத்தி சிங்கத்தையோ புலியையோ செல்லநாய்க்குட்டி போல சுற்றிவரச் செய்வதைக் காண்கையில் இந்த மாயம் எங்களுக்கு புரிகிறது. தனது அழகிய தலையை அந்த வெறிகொள்ளும் விலங்கின் வாய்க்குள் விடவும் அவள் தயங்குவதில்லை. அதுவும் அவளை நக்கிக் கொடுக்கிறது, முத்தமிடுகிறது.
காதலர் இதயங்களைத் துளைப்பதற்கென, நஞ்சூட்டப்பட்ட அம்புகளையல்லாமல் மலரரும்புகளையே மன்மதனிடம் கொடுத்துள்ளாய் என்பதில் எந்த வியப்பும் இல்லை. இந்த நோக்கத்திற்காகத்தான் அரும்புகளையெல்லாம் அம்புகளைப் போலவே படைத்திருக்கின்றாயோ? புண்படுதல் சிறிதுமின்றி தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை நாங்கள் உன்னிடம் கற்கமுடிந்தால் எங்களது இந்நிலவுலக வாழ்வே முற்றமைதி கொண்டதாகிவிடும். உன் இறைவன் இவ்வுலகை அழிக்கிறான். சிறிய இடைவெளிக்குப் பின் நீ அதை மீட்டெடுக்கிறாய். காமதேவனை அவன் எரித்து சாம்பலாக்குகிறான். ஒரு புன்னகை கொண்டு அவனை உயிர்ப்பித்து காதலர் இதயத்தில் அவன் நடனமிடும்படி செய்கிறாய் நீ.
அன்னையே, மனம் மயக்கும் புன்னகையொன்றின் மூலம் இவ்வுலகை வெல்ல, காதல் பார்வையொன்றின் வழியே இவ்வுலகை வசப்படுத்த எமக்குக் கற்பிப்பாயாக! எம்மை உனக்கு முழுதளிக்கிறோம். ஏனெனில், அன்புசெலுத்துவதே உயிர்வாழ்வது என்று நாங்கள் நம்புகிறோம்.
|| பம் ஸர்வாங்கஸுந்தரீ ||