ப*ம் ஸர்வவிக்*னநிவாரிணீ
எங்கும் நிறை அன்னையே, சிவனையும் சக்தியையும் விரும்புவோர் தம் இதயத்தில் நாடுவது உன்னையே. உடல்கள் பல என்றாலும், அனைத்திலும் சிவன் உறைகிறான். உயிர்கொண்ட அனைத்து ஜீவராசிகளும் தம் கைகால்களை அசைக்கவும் சுவாசிக்கவும் தேவையான ஆற்றலில் நீ திகழ்கிறாய். பிறைநிலவைச் சூடியதால் உன் இறைவன் கலாதரன் எனப்படுகிறான். நிலத்தில் அமர்ந்த சிவனின் சடைமுடி பிறைநிலவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒரு புதிர்தான். அவன் முழுவதும் அவனல்லன், நீயும் அவனில் திகழ்கிறாய். உனது நெற்றியே பிறைநிலவைப்போல் ஒளிவீசுகிறது. இறையுருவை முழுமைபெறச் செய்யும் கடந்தநிலையையே இது குறிக்கிறது.
இறைவனின் மூன்றாவது விழி முப்புரங்களை எரிப்பதால், இவ்வுலகு அதனை அஞ்சுகிறது. பொதுவாக அது இறைவனின் நெற்றியில் விளங்குவதாகக் கருதப்படுகிறது. நெற்றிக்கண்ணின் நெருப்புக்கு பதிலாக, உன் நெற்றியில் நிலவின் குளிரொளியைக் காண்கையில் எமக்கு வியப்பும் ஆறுதலும் ஏற்படுகிறது. உன்னைப் பொறுத்தவரை, ஞாயிறும் திங்களும் மாறிமாறி நிகழும் நனவுநிலைகள். பகலில், அவரவர் தன்னறத்திலிருந்து இயல்பாக எழும் செயல்களில் அனைவரும் ஈடுபட்டிருக்கும்படி செய்கிறாய். இரவில் கனவுக்கான நேரமெழுகையில், அனைவர் மனத்திலும் வீற்றிருந்து அவர்களின் எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் கவித்துவத்தை அளிக்கிறாய்.
சிவ-சக்தி எனும் கருத்தாக்கத்தில் பல புதிர்களை காணலாம். அவை ஒவ்வொன்றும் எம் வாழ்வை இசைவுகொண்டதாக ஆக்குகின்றன. நாங்கள் மெய்மை, அமைதி, அழகு என்ற மூன்றிற்கும் ஆகச்சிறந்த மாதிரிகளாகத் திகழும் சிவனுக்கும் சக்திக்கும் உண்மையான பக்தர்களாகிறோம். சுடுகாட்டில் திரிவதையே உன் இறைவன் விரும்புகிறான். அங்கு அவன், எரிக்கப்பட்ட சடலங்களின் நீறுபூசி ஆனந்தபைரவனாக தாண்டவமாடுகிறான். காண்பவரை அச்சுறுத்துகிறான். அத்தகையதொரு துன்பத்தை நீக்குவதற்கெனவே, உனது லாஸ்ய நடனத்தை ஆடியபடி ஆனந்தபைரவியாக அவனருகில் எப்போதும் நீ திகழ்கிறாய். உன்னைக் கண்டதும் மக்கள் நிம்மதியடைகின்றனர். காதலர்கள் பிறைநிலவின் தண்ணொளியை நாடுகின்றன்னர்.. இங்கு நிலவுக்கும் உன் நெற்றிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. உன் நெற்றியும், அன்பும் அரவணைப்பும் நிறைந்த உன் எண்ணங்களும் ஒன்றே.
ஆடும் சிவனெனும் குறியீட்டிலும் நிலவுமுகம் கொண்ட எமதன்னையான உன்னிலும் ஒரு ரகசியம் உறைகிறது. வாழ்விற்கும் மரணத்திற்கும் அப்பால் சிவன் ஆடுகிறான். பொருளேதும் இல்லா வானத்தின் தெளிமையை (transparency of the substanceless sky) ஆடையென அவன் உடுத்தியுள்ளான். அவன் திகம்பரன். அதே சமயம், உறுதியான அவனடிக்கீழ் இசிவுநோயெனும் அரக்கனான அபஸ்மாரனை நிலத்தில் அழுத்தியபடி நின்றிருக்கிறான். தொடக்கப் புள்ளியில் நாங்கள் எல்லோரும் அரக்கரைப் போல முரடர்களாய் குழம்பியவர்களாய் இருக்கிறோம். மேன்மை பெறவும், மெய்ப்பொருள் சார்ந்த எமது நிகழ்காலத்தை இயல்திட்டம் சார்ந்த எதிர்காலமாக மாற்றவும் (transform our ontologic present into a teleologic future) இறைவன் எமக்கு உதவுகிறான். அவனது பிறை முழுமையடையும் நிலவைச் சுட்டி நிற்கிறது. அதன் குறையும், மேன்மையும் முரட்டுத்தனம் வாய்ந்த அரக்கருடன் மாறுபட்டு நிற்கிறது.
நீ உனதருமை மகவுகளுக்குக் கொணர்வது பருண்மைகொண்ட நிலவையும் அதன் ஒளியையும் அல்ல. ஒரு மலையின் மகள் நீ. என்னதான் நீ நிலத்தில் நிலைபெற்றிருந்தாலும், உனது முடி மேகங்களுக்கு மேலே உள்ளது. உனது உயர்வான எண்ணங்கள், ஒளிரும் அரை நிலவைப் போல மேன்மையும் எழிலும் கொண்டவையாக உள்ளன. ஆக, நீயும் உன் இறைவனும், நிலவுலக இயல்பிலிருந்து, தோற்றங்களுக்கு மேலாக எங்கோ அப்பாலுள்ள ஆனந்த நிலையை அடைவது எப்படி என எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்.
உனது மேன்மையிலிருந்து நாங்கள் பெறும் அழகின் பேரானந்தம் எங்களை உணர்ச்சிவசப்படச் செய்வதோ மயக்குவதோ அல்ல. காதலர் நிலவொளியில் நடக்கையில் பெறும் தண்ணிய அமைதி போன்றது அது. உனது இந்த மென்மையான சைகை உனது கருணையாகவும் அரவணைப்பாகவும் எப்போதும் எம் நினைவில் திகழும். உனக்கு எமது வணக்கங்கள்.
|| பம் ஸர்வவிக்னநிவாரிணீ ||