பம் ஸர்வம்ருத்யுப்ரஶமனீ
அழகிற்சிறந்த அன்னையே! ஞானியர் உன் இறைவனை மெய்யென்றும், பேரின்ப அமைதி என்றும், அழகென்றும் (சத்யம், சிவம், சுந்தரம்) வர்ணிக்கின்றனர். உன்னை அவனிடமிருந்து பிரிக்கவியலாது என்பதால்தான் அவனது பரிமாணத்தின் உச்சமாக அழகு சேர்க்கப்பட்டுள்ளதோ? மெய்யியலாளர், நம்பகத்தன்மை கூடிய உண்மையை தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஊழ்கத்தில் அமைவோர் பேரானந்தத்தில் கரைந்துபோகும்படி தம்மை ஒழுங்கமைத்துக் கொள்கின்றனர். ஆனாலும், அழகின் தரிசனம் தரும் இன்பத்தை இவ்வுலகில் உள்ள எதுவும் அளிப்பதில்லை. பேரானந்தமும் மெய்மையும் அழகில் உறைகின்றன என்பதுதானே இதன் பொருள்?
ஒன்று மட்டும் தெளிவாகிறது. மெய்யற்றது மெய்மைக்கு எதிரியாக இருக்கிறது; சிறிய இசைகேடும் பேரானந்தத்தைக் கெடுத்து அண்டக் குலைவை ஏற்படுத்துகிறது. இத்தகைய சார்புக் கூறுகள் அழகில் இருப்பதால்தான், பல மாயைகளும் கண்ணுக்கு இனியனவாகிய முகப்புகளால் மறைக்கப்பட்டுள்ளனவோ? புலன்கள் பாதிக்கப்படுபவர்கள் அழகை வர்ணிக்க கவி புனையவும், தூரிகையை எடுத்து வண்ணச்சாயத்தில் குழைக்கவும் முற்படுகின்றனர். ஏதோ அழகிய கலைப்பொருளை தாம் படைத்துவிடப்போவதாக மயங்குகின்றனர். தாயே, அழகை புரிந்துகொள்ளவும் மதிப்பீடு செய்யவும் நம்பகம் வாய்ந்த அளவுகோல் எதையும் நீ வைத்திருக்கிறாயா? அதைக்கொண்டு மாயையிலிருந்து நாங்கள் விடுபடமுடியுமா? நாங்கள் தேடும் வரையறையே நீதானோ?
எங்கும் எப்போது போற்றத் தக்கவையாகவே மலர்களை படைத்துள்ளாய் நீ. இதழ்களின் வண்ணத்திற்கு வானவில்லின் நிறங்களை எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறாய். இலைகளையும், நிலங்களையும், புல்வெளிகளையும் பச்சைவண்ணம் கொண்டு தீட்டியுள்ளதால்தான் உனது மலர்களுக்கு பிற வண்ணங்களை நீ தேர்ந்தெடுக்கிறாய் போலும். எங்கோ மறைந்துள்ள காடுகளில் கூட அனைத்து வகையான வண்ணங்களும் வடிவுகளும் கொண்ட மலர்களை படைப்பதற்கு உன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறாய். மானுடராகிய நாங்கள் மகிழவே நீ அனைத்தையும் படைக்கிறாய் எனும் அகந்தைகொண்ட எமது பார்வைக்கென நீ அவற்றை படைப்பதில்லை என்பது நிச்சயம். சிறகுகொண்ட பூச்சிகளும், வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்தான் நீ படைக்கும் எழில் மலர்களுக்கு உரிமைகொண்டவை. மானுடர் பூக்களை ரசிக்கத் தகுதியற்றவர் என்பது கற்பனைகொண்ட சிலருக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் பகலில் பூக்களின் மெல்லிதழ்களில் நடனமிடும் தேவதைகளையும், இரவில் மலர்ப் படுகைகளில் உறங்கும் தேவர்களையும் அவர்கள் கற்பனையில் படைத்துள்ளனர். உனது மலர்களின் அழகைக் காண்பதன் மூலமே நாங்கள் அழகுணர்ச்சியைப் பெறுகிறோம் போலும்.
நீ எமைநோக்கி வீசும் மர்மப் புன்னகையை நாங்களறிவோம். சிவந்த வானும், சூரியனின் பொற்கதிர்களும், சோலையின் வண்ண மலர்களும், வண்ணத்துப்பூச்சிகளின், பறவைகளின் ஒளியூட்டப்பட்ட சிறகுகளும், மினுங்கும் விண்மீன்களும் எல்லாம், அழகென்றாலே ஒளியுடன் தொடர்புடையது என்பதை எமக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கின்றன. நீ எல்லோரையும், எல்லாவற்றையும் பெரிதும் நேசிக்கிறாய் என்பதை யாமறிவோம். என்றாலும், சிவப்பையும் பொன்வண்ணத்தையும் நீ அதிகம் விரும்புகிறாய் என்பதை நீ மறைக்கவில்லை. வானவெளியில் திகழ்பவற்றை முக்கோணங்களாகவும் கனசதுரங்களாகவும் இல்லாமல் கோளவடிவில் படைத்ததற்கு நாங்கள் உனக்கு நன்றியுடையவர்களாகிறோம். மூங்கில் கழிகளைப் போல் எம்மை நீ படைத்திருந்தால் நாங்கள் எவ்வளவு கோரமாக இருந்திருப்போம்? பாம்பு போன்ற வளைவுகளே மிக அழகாகத் தோன்றும் என்று முடிவெடுத்தாய். நீயும் ஒரு பெண் என்பதால்தான் பெண்களுக்கு மட்டும் வளைவுகளை அதிகமாக வைத்துவிட்டாயோ?
மலர்களை பெரிதும் விரும்புபவை வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும்தான். ஆனால் பழம்புலவர்கள், வட்டமாகவும் உருளையாகவும் இருப்பதே அழகு என்ற உன் எண்ணத்திற்கேற்றவாறுள்ள பெருவண்டுகளையே தேர்ந்தனர். பெருவண்டுகளை தம் முகங்களைச் சுற்றிலும் வைத்துக்கொள்ள முடியாது என்பதால்தான் பெண்கள் தங்கள் குழல்களை முடிந்த அளவு சுருள வைத்துக்கொள்கின்றனர். உன் இறைவன் ரசித்து மகிழ்வதற்கென உன் புரிகுழல்களை அமைத்துக்கொள்ள நீ ஒப்பனையாளர் எவரிடமும் செல்ல வேண்டியதில்லை. தென்றல் வீசி உன் குழலைக் கலைப்பதை அவன் பொருட்படுத்துவதில்லை. அவன் அதை ரசிக்கவே கூடும்.
இருண்ட வானின் நடுவே சூரியனெனும் பொற்தகடை வைத்திருக்கிறாய். வெண்ணிலவின் முழுமுகத்தை இரவுநேர வானிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது கொள்ளையழகாய் உள்ளது. இதிலிருந்து நாங்கள் அழகைப் படைப்பதற்கு மாறுபாடு (contrast) கட்டாயம் தேவை என்பதை கற்றுக்கொள்கிறோம். அழகிற்கு மற்றுமொரு இலக்கணமாக தூய்மையை வைத்து அதில் நீ எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை. கடந்தநிலையின் ரகசியத்தை அறிந்திருக்கிறது என்பதால்தான் சேற்றில் மலரும் தாமரைக்கு (பங்கஜம்) நீ அத்துணை சிறப்பை அளித்துள்ளாய் போலும். தண்ணீரிலேயே வாழ்ந்தாலும் தாமரையின் இலைகள்கூட நீரால் நனைவதில்லை. பெரும் ஞானியர் இதனை வியப்புடன் நோக்குகின்றனர். உலகில் வாழ்ந்தாலும் உலகைச் சாராதிருப்பவனே விவேகி என்பது அவர்தம் கருத்து.
நீ மலர்களை படைக்கையிலே அவற்றில் மறைந்திருக்கும் ரகசியங்களை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விழைகிறாய் போலும். கண்ணுக்குப் புலனாகாத மணமொன்றை மலரிதழ்களில் வைத்திருக்கிறாய். மல்லிகையையோ ரோஜாவையோ செண்பகத்தையோ கண்ணால் பார்க்காவிட்டாலும் அவற்றிற்கென உள்ள தனி மணத்தைக்கொண்டே அவற்றின் இருப்பை எங்களால் அறிந்துவிடமுடியும். மானுடர் இருவர் ஒன்றேபோல் இருக்கக்கூடும்; என்றாலும் அவர்களது பண்பில் வெவ்வேறு மணங்கள் இருக்கின்றன. நறுமணத்தின் எதிர்மறையை முடைநாற்றத்தைக் கொண்டு குறிக்கும் உன் படைப்பை யார் விஞ்ச இயலும்? கவிஞர் தன் சொற்களிலோ ஓவியர் தன் ஓவியத்திலோ நறுமணத்தை சேர்க்க முடியுமா? எப்படியோ அதை அவர்கள் எய்திவிடுகின்றனர். பெருங்கலைஞர் ஒருவரது பாணியின் நறுமணமே அவரை கற்றுக்குட்டியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒரு மலரின் அழகைப் பற்றி சொல்வதற்கு இன்னும் ஏராளம் உண்டு. வண்ணத்தை பார்க்க முடிகிறது, மணத்தை முகர முடிகிறது. மேலும் அரிதான ஒன்றை நீ மலரில் வைத்திருக்கிறாய். இனிய தேன் அதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. மலரின் உண்மையான காதலர் ஒருவரால் மட்டுமே அதனை கிளர்ச்சியுறச் செய்து அதன் தேனை பெற முடியும். தேனை முழுதுமாக உறிஞ்சி எடுக்கும் வரை ஒரு மலர் மீது பறந்தபடி இருப்பதற்கேற்றவாறு தனிப்பட்ட சிறகுகளை தேன்சிட்டுக்கு அளித்திருக்கிறாய். மலரின் மிக மெல்லிய இதழ்களை சேதப்படுத்திவிடாமல் அதற்குள் நுழைக்கும்படியான அற்புதமான அலகை அந்த எழில்கொண்ட உயிரிக்கு அளித்திருக்கும் உன்னை என்ன சொல்லி பாராட்ட?
அழகின் ரகசியத்தை எம்முடன் பகிர்ந்துகொள்ள உன்னைவிடச் சிறந்த அழகியல் நிபுணரை நாங்கள் மூவுலகிலும் காணப்பெறுவோமோ? இச்சிறு உயிரிகளைக் காண்கையில் எமது காதலரின் சாரமென மறைந்திருக்கும் அழகெனும் தேனைப் பருகும் தாகம் கொண்டவர்களாகிறோம் நாங்கள். அதற்கென சிறுகுறிப்பொன்றை நீ எமக்களிக்கிறாய். எமது கருவிழிகள் கருவண்டையே பெரிதும் ஒத்துள்ளன. எமது விழிகள் இமைகளைத் தாண்டிச் செல்வதில்லை. ஆனாலும் அவற்றின் படபடக்கும் நோக்கு எமது இணையரின் அழகிய விழிகளைச் சென்றடைய முடியும். பார்வைகள் பின்னிக்கொள்கையில் காதல் மனதின் அழகெனும் மர்மம் எங்களுக்கு புரியத் துவங்குகிறது. நாணம் கொண்டோர், கன்னம் சிவக்க விழிதாழ்த்தியே நடப்பர். என்றபோதும் அவர்களது ஆன்மா தீண்டப்படுகையில் தாங்களும் திரும்பிப் பார்க்க விழைவர். கருமேகத்திற்குப் பின்னால் நெடுநேரம் மறைத்துவைக்க முடியாத மின்னலைப் போல, மிகமெல்லிய புன்முறுவல் தோன்றும். அழகின் அணை திறந்து மடைவெள்ளம் பெருகத் தயாராகும். முல்லை அரும்பு போன்ற பற்களின் ஒளி காதலரின் கண்களில் படும். அக்கணம் சொல்லெதுவும் தேவைப்படுவதில்லை. உறுதிமொழிகளுக்கு அவசியமில்லை. வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு மெல்லிய புன்னகை இதயத்தின் மெய்யான உணர்ச்சியை அறிவிக்கும். இணைவின் அழகு பருகப்படுவதற்கு இன்னும் எஞ்சியிருக்கும்.
வகுப்பெதுவும் எடுக்காமல் மிகத்திறமையாக அழகின் மறைபொருளை எமக்கு நீ உணர்த்துகிறாய். எளிய மலரான தாமரையை எம்முன் வைத்து கருவண்டை அதில் ஊரச் செய்கிறாய். பேரின்பத்தில் மூழ்கியபடி அது சிறகடிப்பதை எமக்குக் காட்டுகிறாய். அவ்வளவுதான்! கவிஞர் பல்லாயிரம் செய்யுள்கள் எழுதியபின்னரும் நிறைவடைவதில்லை. எந்த ஓவியராவது தன் ஓவியத்தை தீட்டி முடித்தபின் பெருமகிழ்ச்சியில் திளைத்ததை இவ்வுலகம் கண்டுள்ளதா? ஒருபோதும் இல்லை. இசைக்கலைஞர் இசைத்து முடித்து நிம்மதியாக தூங்க முடியுமா? அன்னையே, உன்னை விஞ்சவேண்டும் என எவரும் கனவுகூட காண்பதில்லை.
நீ படைத்தவற்றின் எழிலைக் கண்டு நீ பொறாமை கொள்கிறாயோ என ஐயுறுபவன் நல்ல கவியாக இருக்க வாய்ப்பில்லை. கடுகின் பளபளப்பையும் கரும்புள்ளி வண்டின் புள்ளிகளையும்கூட நீ கர்வத்துடன்தான் நோக்குகிறாய். ஒரு ஜென் ஆசானோ, தாவோ ஞானியோதான் உன்னை சரியாக ரசிக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில், ஒவ்வொன்றிலும் நீ வைத்திருக்கும் யதேச்சையான எளிமையே அழகிற்கு இலக்கணமாக உள்ளது. இன்றுவரை, ஒரு புல்லிதழையோ, அனைத்தையும் எதிரொளிக்கும் ஒரு பனித்துளியையோ படைப்பது எப்படி என்று இவ்வுலகத்தோர் கற்கவில்லை. எமதினிய அன்னையே, உனது எளிய புன்னகை ஒன்றால் உன் இறைவனை மயங்கச்செய்து முழுமுதலின் மறைஞானத்தை அவனிலிருந்து பெற்றுக்கொண்டாய் என்பதில் எந்த வியப்பும் இல்லை. உனக்கு என் வணக்கங்கள்!
|| பம் ஸர்வம்ருத்யுப்ரஶமனீ ||