ஶ்ரீசக்ர தியானம் – 44

னம் ஸர்வது:க*விமோசனீ

எமக்கு உறுதிப்பாடளிப்பதில் மகிழும் அன்னையே! முழுமுதல் என்பது புதிர்களாலும் முரண்களாலும் நிரம்பியிருப்பதாகத் தோன்றுகிறது. நீயும் உன் இறைவனும் உனது லாஸ்ய நாட்டியத்தையும் அவனது அழிவாடலான தாண்டவ நடனத்தையும் ஆடுவதற்கென இங்கு-இப்போது எனும் ஒளிவட்டம் பாய்ச்சப்படும் எல்லையிலா கால-இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உனது படைப்பின் விரிவு எல்லையற்றது; எமது பார்வையோ குறுகியது. தொடுவானத்தின் எல்லைக்கப்பால், நீலவான் கூரை மறைத்திருக்கும் எதையும் எம்மால் காண முடிவதில்லை. 

நிகழ்காலம் என்பது ஒருபோதும் கண்ணிமைப்பை விட நீண்டதல்ல. கடந்துசெல்லும் ஒவ்வொரு கணமும் இறந்தகாலம் எனும் திரையால் மூடப்படுகிறது. எமக்கு நேர்ந்தவற்றில் எமது நினைவுப் புலம், சாரமாக எதை பதிவு செய்துகொள்கிறதோ அதை மட்டுமே எம்மால் மீட்டெடுக்க முடிகிறது. காலத்தின் வாயிலில் கனத்த பனிமூட்டத்தை நீ ஏற்படுத்தியிருப்பதால் எதிர்காலத்தில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதை காலத்தை ஊடுருவும் தரிசனம் கொண்ட அவதூதரின் கூரிய விழிகளும் காணமுடிவதில்லை. பகலும் இரவும் மாறி மாறி வரும்படி நீ அமைத்துள்ளதால் ஒன்றையொன்று துடைத்தழிக்கின்றன. பகலும் இரவும் முடிகையில் எமது மனத்திலிருந்து செயல்சார்ந்தவையும் உடல்சார்ந்தவையும் மறைகின்றன.

துன்பம் தரும் நினைவுகளை நாங்கள் சுமக்குபடி நீ செய்வதில்லை என்பதால் உனக்கு நன்றியுடையவர்களாய் இருக்கிறோம். என்றாலும், நாங்கள் எப்போதும் அறியாமையிலேயே மூழ்கியிருக்கிறோம். எமதழகன்னையே, உனது கருங்குழல் உன் அழகை கூட்டவே செய்கிறது. எமது மனங்களை மழுங்கச் செய்வதால், எம்மை குழப்புவதால் இருளை எப்போதும் நாங்கள் விரும்புவதில்லை. எமதன்னையரின் கருப்பையில் கருவாகத் தோன்றுவதற்கு முன், தந்தையரின் விதைப்பையில் துயில்நடைகொண்ட விந்தணுக்களாக உருவாவதற்கு முன், உயிர்த்தோற்றம் எனும் ஓடையில் எத்தனை காலம் நாங்கள் இருந்தோம் என்பதை யாரறிவார்? சிறையிடப்பட்ட ஒளியைப் பற்றி கவிகள் பாடுகின்றனர். கருப்பையின் இருளில் நான் சிறையிடப்பட்டிருந்ததை நானறிவேன். உள்ளுறையும் மறைஞானம் இருந்தபோதும், மங்கலான, வலிமிகுந்த குழந்தை உருவாக்கப்படும் பட்டறையில் நான் எவ்வாறு பராமரிக்கப்பட்டேன் என்பதை நான் சிறிதும் அறியேன். ஆக, வாழ்வென்பது இருளில்தான் தொடங்குகிறது.

இருளெனும் இப் பரந்த அண்டத்தில் ஒரு சில ஒளிக்குமிழிகளை மட்டுமே வைத்துள்ளாய். எனவே, நானிருக்கும் இருளில்தான் நீயும் இருக்கிறாய். எனது மங்கலான பார்வைக்கும் குறைவுபட்ட புரிதலுக்கும் நான் எப்படி குறைபட்டுக்கொள்ள முடியும்? அறிபவனாக, செயலாற்றுபவனாக, இன்ப துன்பங்களை அனுபவிப்பனாக எனது தன்முனைப்புடன் கூடிய பொறுப்பை நான் அடைந்தேன். தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் எனது குழந்தைப் பருவத்தையும், வளரிளம் பருவத்தையும், இளமையையும் ஒரு அடிமையென இருந்து கற்றலில் செலவழித்தேன். பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம்பெற்ற பின்பும் மானுடராகிய நாங்கள் அடிப்படையில் அறியாதவர்களாகவே இருக்கிறோம். எமது உடல்களின் இயக்கம் கூட எமக்கு புரிவதில்லை. நூறுவயதுக் கிழவர்களுக்கும் கூட இதயம் எப்படி எதற்காக துடிக்கிறது என்பது பற்றிய அறிதல் இருப்பதில்லை. எனில், சிறுநீரகம், கணையங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் பற்றி அவர்கள் என்ன அறிந்திருக்க முடியும்?

இருண்ட இரவில் ஆழுறக்கத்தில் இருக்கையில் எவ்வளவு நேரமாக தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்றோ, எப்போது விழித்தெழுவேன் என்றோ நான் கவலைப்படுவதில்லை. ஆனால், தூக்கம் கலைகையில், தூக்கமின்மை என்னை பித்தனாக்குகையில், சூரிய ஒளிக்காக ஏங்கத் துவங்குகிறேன். கிழக்கில் ஒருவழியாக ஒண்சிவப்பு தோன்றுகையில் மகிழ்ந்துபோகிறேன். அதே போல், அன்னையே, உன் மணாளனுக்கு உன்னை ஒப்புக்கொடுத்ததன் சின்னமாக நீ அணிந்திருக்கும் செந்தூரத்தைக் காண்கையில் என் மனதில் நம்பிக்கை எழுகிறது. அது மிக எளிய ஒரு குறியீடுதான். என்றபோதும், உனது மகவுகளாகிய எமக்கு, உனது இருப்பு குறித்த மிகச்சிறிய சாடைக்குறிப்பு கூட பெரும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. உனது அருட்பார்வை எம்மை நோக்கி திரும்பும் என்றும், எம்மனைவரையும் எமது அச்சம் நீக்கும் இருக்கையான உன் மடியில் உறங்கச்செய்வாய் என்றும் நாங்கள் உறுதிப்பாடடைகிறோம். 

எம்மை அடிக்கடி நிலைகுலையச் செய்யும் இவ்வுலகில், எமது இருண்ட கனவுகளில் நீ விதைத்த நம்பிக்கையே எம்மை பிழைக்க வைக்கிறது. சாத்தியம் உள்ள இடத்தில் மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. உனது நாட்களை நீ மறுசுழற்சி செய்து, இரவுக்குப் பின் பகலென, அழித்தலுக்குப் பின் படைத்தல் என இப்பிரபஞ்சத்தை மீட்டுருவாக்கம் செய்வதைக் காண்கையில் எம்மில் நம்பிக்கை நிறைகிறது. எமது உறுதிப்பாட்டை தக்கவைப்பதற்காக, உன்னிடம் மனமார்ந்த நன்றிகொள்கிறோம். ‘நாளை’கள் எப்போதும் இருக்கட்டும்! இந்நாள் மீண்டும் மீண்டும் இனிதாக துவங்கட்டும்! ௐ

|| னம் ஸர்வது:கவிமோசனீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s