ஶ்ரீசக்ர தியானம் – 43

த*ம் ஸர்வகாமப்ரதா

ஆடலில் திளைக்கும் அன்னையே, உன் லீலையில் நீ மகிழ்கிறாய். இருளை இத்துணை ஈர்ப்புடையதாக நீ ஏன் படைத்துள்ளாய் என்பதை யாமறியோம். இரவின் இருள்திரையில் உலகு மூடப்படுகையில் மினுங்கும் மீன்களைக் கொணர்ந்து இருளின் மாறுபாட்டை மேலும் கவர்ச்சிகரமானதாக்குகிறாய். எம்மை நீ உறங்கவைக்கையில், பகலின் பெருமையை, குருமார்களின் காலடியில் அமர்ந்து நாங்கள் தேடும் ஞானத்தின் மெய்மையை மறந்துபோகிறோம். எங்கும் நிறைந்திருக்கும் உனது கரிய புரிகுழல்கள் எம்மை மேலும் மேலும் ஆழுறக்க நிலைக்கு கொண்டுசெல்கின்றன. அப்போது கனவுகளில் திளைப்பது மட்டுமே எமக்கு களிப்பூட்டுவதாக இருக்கிறது. அத்தகைய கனவுகள் வெறுக்கத்தக்க வேட்கையெனும் இருளுக்குள்தான் (பத்ரகாளி) எம்மை தள்ளும் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். ஒலியிலிருந்து மௌனத்திற்கும், காட்சியிலிருந்து ஆழுறக்கத்திற்கும் செல்கையில் எம் மனதில் எதுவும் எழுவதில்லை. அங்கே இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. அதனால் நாங்கள் மெய்யுணர்வு பெற்றுவிடுகிறோமா? ஐயம்தான். மடிமையும் சோம்பலும், உறக்கமும் எம் மனதை ஆக்ரமிக்கின்றன. தற்காலிகமாகவேனும் வாழ்வின் பொறுப்புகளிலிருந்து விடுபட்டதாக உணர்கிறோம். உணர்விழத்தல் கூட முழு ஈடுபாடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது (Even the catatonia of a depression is accepted as a state of absorption). வேட்கைகளும் பிணைப்புகளும் எம்மை தளைக்கையில், வாழ்வின் கடமைகளிலிருந்து விடுபட்ட நிலை அது என மகிழ்ந்துபோகிறோம். எதையும் எய்தமுடியாமலாகும்போது, அது பேரின்ப நிலையென மயங்குகிறோம்.

உனது குழலில் புனித மணம் ஒன்றை கொண்டிருக்கிறாய். அரம்பையரும் அது கண்டு வெதும்புகின்றனர். நிலத்தின் மணத்தை சிலபோது புனிதம் என்று சொல்லலாம். ஆனால் இந்திரனின் துறக்கத்திலிருந்து எழும் மயக்கும் மணங்கள்  எமது புலன்களில் நுழைகின்றன. நாங்கள் ஊழ்வழிப்படுகிறோம். நன்மை பயக்கும் ஞானச் சொற்களைக் கேட்கவே எமக்கு காதுகளை படைத்திருக்கிறாய். எமது போதாமை காரணமாக, போதையூட்டும் குரல்களில் நாங்கள் மகிழ்ந்துபோகிறோம். ஞானத்தின் மெய்மையை செவிகொள்ளாது வம்புகளைக் கேட்டு எமது பிதற்றல்களையும் அதில் சேர்க்கிறோம். 

மேன்மைமிகு எழில் வடிவங்களைக் காண்பதற்கென இக்கண்களை நீ எமக்களித்திருக்கிறாய். உன் நோக்கத்தை மறந்து, மோகம் கொண்டவர்களாக காமத்தைத் தூண்டும் வடிவுகளையே தேடுகிறோம். முழுமுதலின் இருப்பை நாங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே நீ எமக்கு தொடுவுணர்ச்சியை கொடுத்திருக்கிறாய். நாங்களோ கீழ்மையானவற்றால், தூய்மையற்றவற்றால் தழுவப்படவேண்டும் என விரும்புகிறோம். இனிமையை ருசிப்பதற்கென நீ படைத்த உறுப்பிலேயே இன்னிசை பாடவும் முழுமுதலைப் போற்றவும் தேவையான திறனை வைத்திருக்கிறாய். நாங்களோ பெருந்தீனியராய், நயமற்றதை ருசிப்பவர்களாக ஆகிவிட்டோம்.

துறக்கம் தரும் இன்பத்தின் மணத்தில் மயங்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விழைவது உன் அருள்மணத்தின் தூய்மையை. எமது முந்தைய வினைகளின் சாரத்தால், ‘வாசனை’யால், ஒரு வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து இன்னொன்றுக்குள் செலுத்தப்படுகிறோம். உலக இன்பங்களின் தேட்டத்தை ஊட்டி வளர்ப்பது எமக்கு நல்லதல்ல. நாங்கள் அறியாப் பிள்ளைகளெனவே இருக்கிறோம். நன்மை தீமையை பிரித்தறிய முடியாதவர்கள் நாங்கள்.  

அன்னையே, எங்களுக்குப் பிடித்தமானதை அருள்வதற்கு பதிலாக எம்மை கூரறிவுடையவர்களாக ஆக்குவாயாக! விரும்பத்தக்கதை (ஹிதம்) மட்டுமே எமக்களிப்பாயாக! தாயே, இருளிலிருந்து ஒளிக்கு, மெய்யற்றதிலிருந்து மெய்மைக்கு, மரணத்திலிருந்து நிலைபேற்றுக்கு எம்மை இட்டுச் செல்வாயாக! இது ஒன்றே எமது வேண்டுதல். 

|| தம் ஸர்வகாமப்ரதா ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s