ஶ்ரீசக்ர தியானம் – 41

த*ம் ஸர்வப்ரியங்கரீ

கருணைவடிவானவளே, அன்னையே, உனது செல்வம் எங்கும் நிறைந்துள்ளது. மூன்றரைச் சுருள்கள் கொண்ட நாகமென மூலாதாரத்தில் ஒளிந்துள்ளவளாக நீ வர்ணிக்கப்படுகிறாய். முதுகெலும்பின் நுனியிலிருந்து தலைப்பகுதியிலுள்ள ஆயிரமிதழ்த் தாமரை வரை செல்லும் செங்குத்து அளபுருவில் (vertical parameter)  இடா, பிங்கலை, சுஷும்னம் என்ற மூன்று ஆற்றல்பாதைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இருதயத்திற்குக் கீழே, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்று ஒருங்கிணைவுச் செயல்பாட்டு மையங்கள் (synergic centers) உள்ளன. இங்குதான் அனைத்து நனவிலிச் செயல்பாடுகளும் உயிரியல் சார்ந்தவற்றை உளவியல் சார்ந்தவற்றோடு தொடர்புறுத்துகின்றன (all the unconscious functions relate the biological to the psychological). இந்த மையங்கள் யோகியரால் தியானிக்கப்படுகின்றன. முடிவிலாது சொல்லாற்றலை பிறப்பிக்கும் அகக் கட்டுப்பாடு (ஆஞா), பார்க்கும் விழிகளிரண்டிற்கும் நடுவே அமைந்துள்ளது. அங்கிருந்துதான் நனவோடைகள் பெருக்கெடுக்கின்றன. மனம் மயக்கும் உன் மந்திரங்களின் இன்னிசை கேட்கையில், சொற்பொருளின் இனிமையையும் சொற்களின் மாயம்நிறைந்த ஆற்றலையும் நாங்கள் உணர்கிறோம். உனது கருப்பையில் முதிர்கருக்களெனக் கிடந்து உனது கண்காணிப்பில் உனது பகுதியெனவே நாங்கள் வளர்ந்ததை கர்வத்துடன் எண்ணிப்பார்க்கிறோம்.  

எளிய உயிரிகளில் தொடங்கி மிக மேம்பட்ட உயிர்வடிவம் வரை அனைத்தையும் காமக் காய்ச்சலால் தடுமாறச் செய்வதை ஒரு ஒப்பனையாகக் கருதுகிறாய். அச்சயமத்தில் எண்ணங்கள், சொற்கள், உணர்ச்சிப் பெருக்குகள் என அனைத்தும் உள்ளுணர்வின் ஆழங்களிலிருந்து உனது தியானப் பேரின்பம் நோக்கி எழும் மறை வேட்கைகளோடு பொருந்துகின்றன. இங்கு இவ்வுலகில் எமது உள்ளார்ந்த இயல்பென எம்மை சார்ந்தவளாயிருக்கிறாய்; விண்ணில் அங்கே கடந்தநிலையின் அடையாளமாகவும் உன்னை காண்கிறோம். மூலாதாரத்தின் மறைந்துள்ள ஆழத்தில் நீ துயில்கலைந்து ஆடும் அரவென சடுதியில் எழுகிறாய். நாங்கள் திடுக்கிடுகிறோம். எமது அகங்காரம் எனும் அரக்கன் மீது உறுதியாக நின்றுகொண்டிருக்கும் இறைவன் தாண்டவத்திற்கென தன் திருவடியை தூக்குகிறானா அல்லது எமதன்பு அன்னையான நீ உனது லாஸ்ய நாட்டியத்தை ஆடியபடி அவனைச் சுற்றி வருகிறாயா என்பதை எம்மால் அறியக்கூடுவதில்லை.

எமது புரிதலை மீட்டெடுக்க, உனது மூலாதாரத்தில் உள்ள மூன்று தாமரையிதழ்களில் வரையப்பட்டுள்ள மும்மந்திரங்களை நாங்கள் தியானிக்கிறோம். நீ படைத்த உயிரினங்களைக் கவரும்படி நவரசங்களை உன் ஆடலில் சேர்த்துள்ளாய். உனது இறைவன் காதல் (சிருங்காரம்), வியப்பு (அத்புதம்), அளி (கருணை) என்ற மூன்று கவித்துவமான ரசங்களை உன்னிடமிருந்து எதிர்பார்த்தான். உனது படைப்புக் கலையால் இந்த மூன்று ரசங்களும் படைப்பின் எழிலை மேம்படுத்துகின்றன. படைப்பை நிறுத்திவிட்டு உன் இறையோடு ஆடவேண்டிய வேளை வருகையில், நீ சினம் (ரௌத்ரம்), வீரம், அச்சம் (பயானகம்) எனும் ரசங்களை வெளிப்படுத்துகிறாய்.  

குண்டலினி எனும் நாகம் எழுகையில் என்ன நடக்கிறது? அகம் தனது பேரின்ப நிலையில் தானே மகிழ்கிறது. அக் களிகொண்ட கணத்தில் உன் இறைவன் ஆனந்தபைரவன் என உருக்கொள்கிறான். அவனது தாண்டவம் அதன் உச்சத்தை அடைகையில் ஊழிநெருப்பு கடந்தகாலத்தின் தடங்களையும், இங்கு-இப்போது எனும் நிகழ்காலத்தையும், நாளை எனும் நம்பிக்கையையும் கூட விழுங்கிவிடுகிறது. அறுதியாக அனைத்தும் தனிமை (கைவல்யம்) எனும் சாம்பலாக்கப்பட்டபின், அச்சாம்பலிலிருந்து புதிய காலத்தை எடுத்து இப்போது வாழ்பவற்றின் அனைத்து நுண்விவரங்களும் அடங்கிய உருவை தோற்றுவிக்கிறாய். ஒண்சிவப்பழகு கொண்ட புதிய சூரியனை ஒவ்வொரு நாளும் எழுப்புகிறாய். இரவின் முகத்திரை அகற்றப்படுகையில், லட்சக்கணக்கான புதிய தாமரைகள் இதழ் விரித்து சூரியனை வரவேற்கின்றன. ஒவ்வொரு மாதமும் முழுநிலவையும் புதுநிலவையும் பரிசென மாறிமாறி அளிக்கிறாய். நீ கொணரும் மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல. இன்னொரு அர்த்தத்தை நோக்கி உன் விரலை நீட்டும் அரைப்புள்ளி அது. உனது முடிபு புதிய ஒன்றின் அறிமுகத்தையே சுட்டி நிற்கிறது. 

உனக்கும் உன் இறைவனுக்கும் தனி அடையாளம் எதுவும் இல்லை. ஆணெருதும்-பெண்ணெருதுமெனவும், ஆண்சிட்டும்-பெண்சிட்டுமெனவும் நீங்கள் இருவரும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் ஒரு சேவலென பகலவன் எழுகையை அறிவிக்கிறான். ஒரு கோழிப்பெடை என நீ நோக்கி நிற்கிறாய். விரைவில் நீ இடவிருக்கும் முட்டையை எண்ணி மகிழ்கிறாய். அவன் உன் உனது மூச்சு (ப்ராணநாதன்). நீ அவனது உயிர்மூச்சு (ப்ராணேஶ்வரி). ஒவ்வொரு உயிரினத்தையும், படைக்கும் இணைகளாக (ஜனகன்-ஜனனீ) உண்டாக்கியிருக்கிறாய். நீ சிலையுருக் கொள்ளும்போது முறைமைசார் வடிவு கொள்கிறாய். உயிரியல் உலகில் விலங்குகளின் உருக்கொள்கிறாய். கோடுகளாலும் கோணங்களாலும் ஆன உலகில் வடிவியல் உருக்கொள்கிறாய் (geometrical forms). மறை உவமைகளால் ஆன உலகில் நீ கணக்கியல் உருமானங்களாகிறாய்  (in the world of secret similes, you become algebraic notations).

நீ ஓரிடம்விட்டு இன்னொன்றிற்கு நகர்கையில், உனது அதிர்வுடன் தொடர்புறுத்திக் கொள்கிறேன்; இவ்வுலகின் எண்ணிலடங்கா மையங்களாக உன்னை தியானிக்கிறேன். ஊகிக்கவியலாத இயக்கம் கொண்ட விண்மீன் தொகுதிகளாக இப்பிரபஞ்சத்தை நிறைத்தபடி இருக்கிறாய் நீ. உனது பிரபஞ்ச முழுமையை தியானிக்கும் நான் அதனை எனது நனவு மையத்துடன் தொடர்புறுத்திக் கொள்கிறேன். மொத்த வடிவமும் ஒரு ஓவியத்திரையாக நெய்யப்படுகையில், விண்ணிலும் மண்ணிலும் இசைக்கும் கோளங்களின் சேர்ந்திசையை நான் கற்றுக்கொள்கிறேன். மூவுலகிலும் உன் உருவம் பரந்திருந்தபோதும், மாறிக்கொண்டே இருக்கும் மையம் கொண்ட வெறும் ஒரு கணக்கியல் புள்ளி (mathematical point) மட்டுமே நீ என்பதை நான் அறிவேன். உனக்கு வேறு பரிமாணம் எதுவும் கிடையாது. உனது மறைக் குறியீடான ஶ்ரீசக்ரத்தை அவ்வாறே நாள்தோறும் தியானிக்கிறேன். அன்னையே, சொல்லுக்கும், பார்வைக்கும், எண்ணத்திற்கும் அப்பாற்பட்டதன் உரைக்கப்படாத மறைக்குள் என்னை செலுத்துவாயாக! உறுதியுடன் ‘இதுவே, இதுவே’ என்று நான் உணர்வேனாக!

|| தம் ஸர்வப்ரியங்கரீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s