சௌந்தர்யலஹரீ – 41

தவாதா*ரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா

நவாத்மானம் மன்யே நவரஸமஹாதாண்வநடம்

பா*ப்யாமேதாப்*யாமுயவிதி*முத்திஶ்ய யயா

ஸனாதா*ப்*யாம் யஜ்னே ஜனகஜனனீமஜ்ஜகதிதம்

பாடல் – 41

லாஸ்ய நடமிடும் ஸமயத்துடனும்

தாண்டவமாடும் ஆடலரசனுடனும்

மூலாதாரத்தில் புதியதாய் அமைந்த உன்னை தியானிக்கிறேன்

ஒன்பது சுவைகளையும் வெளிப்படுத்தி

இருவரும் இணைந்து இவ்வுலகை மீண்டும் பிறப்பித்து

தாய்தந்தையரென அமைகின்றனர்

**

கன்னியொருத்தி மணமகளாகிறாள். அன்புநிறைந்த சுற்றத்தாரின் அருளும் ஆசியும் கொண்டு மணவினை கொள்கிறாள். மணவறைக்குள் நுழைந்தபின்னர் அந்நாள்வரை அவள் எதுவாக இருந்தாளோ அப்படி தன்னை அவளால் நினைத்துப்பார்க்க முடிவதில்லை. அவள் இதயத்தில் இன்னொரு ஆவி குடியேறிவிட்டது போலிருக்கிறது. இரண்டு ஆன்மாக்களில் எது தனக்கு நெருக்கமானது என்பதை அவளால் அறிய முடிவதில்லை. காதலனை எவ்வளவு விரும்புகிறாளோ அதே அளவு அவள் தன்னையும் நேசிக்கிறாள். மணமகனுக்கும் இதே நிலைதான். அதன்பின்னர் அவள் தேர்வதெல்லாம் இருவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதை மட்டுமே. இனி அவள் தனக்கென மட்டுமல்லாது அவனுக்கெனவும் சிந்திக்க வேண்டும். முடிவுகளை மேற்கொள்ள வேண்டும், முடிவுகளுக்கு ஒப்புதலும் அளிக்க வேண்டும். அவள் ஏற்பதை மட்டும் அவள் கணவன் ஏற்க வேண்டும். இது மணவுறவின் ஒரு மாயவட்டம். அன்றாட வேலைகள் பல அவளுக்கு இருக்கக் கூடும், கணவனோ நூறுவித ஏவல்களை செய்துமுடிக்க வேண்டியிருக்கும். அப்படியிருந்தும் அவனை அவள் அகல்வதே இல்லை. அவனும் ஒரு கணமும் அவளை தன் சிந்தையிலிருந்து விலக்குவதில்லை. அவர்களைச் சுற்றியுள்ள உலகு அவர்களது ஆடலுக்கென அமைக்கப்பட்ட அரங்கு போலுள்ளது. குலுங்கும் அவள் வளையல்கள் எழுப்பும் இசையில் மயங்கும் அவன் அவள் கைபற்றி சுழன்றாடுகிறான். அவ் இசையில் உலகமே நடனமிடுகிறது. அவர்களது ஆடல் நீண்டதொரு விளக்கமாக அமைவதில்லை. இதயத்தில் ஏற்படும் ஒரு அதிர்வு அது. சிலபோது அவர்கள் காற்றில் எம்புகின்றனர். அவள் தொடர்ச்சியை விரும்புகிறாள்; அவனோ, விதவிதமான ஆடல்களை வரிசையாக நிகழ்த்த விழைகிறான். அவளது நாட்டியம் லாஸ்யம், அவனது நடனம் தாண்டவம். லாஸ்யம் என்பது பாதி பின்னணியோடு இயைந்து பாதி வெளிப்படுவது. காற்று உலைக்காத விளக்கொளியின் நடனம் போன்றது அது. பகலவன் ஒளியில் மகிழ்ந்து தான் நின்றுள்ள குளத்தின் சிற்றலைகளுக்கேற்ப மெல்ல ஆடும் பாதி மலர்ந்த தாமரையை அதனோடு ஒப்பிடலாம். பிறைநிலவு முழுநிலவாய் வளர்வது போன்ற அழகு வாய்ந்தது அந்நாட்டியம். 

அவனது ஆடல் வேறுவகையானது. அவள் இன்னிசை என்றால் அவன் தாளலயம். விரைவான அடிவைப்புகளும், வன்மையுடன் கூடிய இயக்கங்களும், அரங்கில் குறுக்கும் நெடுக்குமாக குதித்தெழலும் நிரம்பியது தாண்டவம். சூறாவளியால் திசையெங்கும் சுழற்றியடிக்கப்படும் பெருந்தீ போன்றது அது. தாமரையின் தேனை அடையத்துடிக்கும் பித்தெழுந்த வண்டின் பதற்றத்தோடு அதை ஒப்பிடலாம். அவள் பொறுமை காக்கிறாள்; அவனோ  பரபரக்கிறான். இவ்வாறாக, அவர்களது இணைவு ஒன்றையொன்று முழுமை செய்தபடி முன்னேறுகிறது.

அவள் கருவுறுகிறாள். இப்போது அவள் காதலன் இருமடங்காக அவளுள் திகழ்கிறான். தன்னுள் வளரும் குழந்தைக்கு தன் கணவனது தோற்றம், மனப்பாங்கு, ரசனை, குரல், திறமை, விழுமியங்கள் என அனைத்தையும் ஊட்டுகிறாள். கணவன் இப்போது புறத்தே ஒரு உடல்கொண்ட இணையாகவும், அகத்தே அளப்பறிய தூய மகிழ்வின் ஊற்றுமுகமாகவும் இருக்கிறான். கருவுற்ற கணம் முதல் தன் கண்காணிப்பை துவங்கிவிடுகிறாள் அவள். அவளில் மூன்றாவது பரிமாணம் ஒன்று கூடுகிறது. முதல் பரிமாணம் அவள் கன்னியாக இருந்தது, இரண்டாவது பரிமாணம் மனைவியென இருப்பது, மூன்றாவது அன்னையென்ற பரிமாணம். ஏதோ ஊழ்கத்திலிருப்பதுபோல் அவள் தனக்குள் ஆழ்ந்துகிடக்கிறாள். இளம் மனைவியின் விலக்கம் தெரியும் கண்களையும் உற்சாகமற்ற மனநிலையையும் காணும் கணவன் அவள் தன்னுடைய சாரம் நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் தான் அவளுள் வளர்வதையும் உணர்கிறான்.  

பிறந்த குழந்தையை பெற்றோர் இருவரும் பெருவியப்புடனும் ஏதிர்பார்ப்புடனும் நோக்குகின்றனர். தமக்குத் தாமென இருந்த இருவர், தாம் ஒன்றாக இணைந்ததையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், அவர்களைப் போலவேயும், அதே சமயம் வேறுமாதிரியும் தென்படும் மூன்றாவது நபர் ஒருவர் தம்மோடு படுக்கையில் கிடப்பதை நம்பமுடியாமல் திணறுகின்றனர். குழந்தைக்கு அதற்கேயென தனி அடையாளமும் ஆளுமையும் அமைகிறது. வெற்றிடத்திலிருந்து மூன்றாவது நபர் தோன்றியிருக்கிறார். அண்டத்தைப் படைக்கும் கடவுளுக்கும் முழுமையான மனித உயிர் ஒன்றை ஈன்றெடுத்த இக்கடவுளருக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்க முடியும்? பசுவும் காளையும் இதை செய்கின்றன. கோழியும் சேவலும் கூட. அனைத்து உயிரிகளும் படைப்பெனும் முடிவிலா ஆடலை எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன.   

(பகுப்பெண்ணில்) எப்போதும் ‘அவன்’ எனும் மேல்கூறும் ‘அவள்’ எனும் கீழ்க்கூறும் உண்டு.  அமைதியான அல்லது வன்மையான செயலோ தியானம் போல் மெல்லிய அல்லது தீவிரம் நிறைந்த எண்ணமோ உண்டு. வாழ்வின் ஊற்றுமுகமான மூலாதாரத்தில் சிவ-சக்தி இணையின் நடனம் பல்லாயிரம் உயிர் வடிவங்களில் எதிரொளிப்பதை காணமுடிகிறது. பேரானந்தமே ஆடலின் ஆன்மாவென திகழ்கிறது. கண்ணொடு கண் நோக்கும் காதல் இணையர் புலப்படுத்தவியலா மகிழ்ச்சியில் மயங்குகின்றனர். அவர்களது உவகையை பெருக்கும் வண்ணமாக ஒருவரை நெருங்கி அணைத்துக் கொள்கின்றனர். அந்த அணைப்பு ஆனந்தபைரவன்-ஆனந்தபைரவி இணைப்பு எனப்படுகிறது. அவர்களுக்கு பல வடிவங்கள் உண்டு. மரக்கிளையில் அமர்ந்து அலகொடு அலகுரசும் பறவைகளென மகிழ்ச்சிக் குரலெழுப்புகின்றனர். இலையட்டைகளென, மூட்டுப்பூச்சிகளென, காற்றில், மண்ணில், நீரில் வாழும் மிருகங்களெனத் தோன்றுகின்றனர். 

இந்த ஆடல் எப்போது துவங்கியது? உயிர் தோன்றியபோதே இதுவும் தோன்றிவிட்டது. பலப் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இதே தந்தையும் தாயும் தம் சந்ததி எனப் பெருகினர். இன்றும் அவர்களோடு அமர்ந்து அதேபோல் பேணுகின்றனர். உடல்கொண்ட நம் பெற்றோர் இறக்கக் கூடும். ஆனால் இறைவடிவான தந்தையும் தாயும் எப்போதும் நம்மை நோக்கியபடி, நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மைப் பேணியபடி இருக்கின்றனர். அன்பே இறை எனும்போது இதில் வியப்பேது?

ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s